நெடுஞ்சாலை

2 comments

அப்பன் பரதனிடம் சொல்லி அவர் ஓனர் செட்டியிடம் இட்டுக்கொண்டு போனார். உள்ளே நுழையும்போது செட்டில் மேனேஜர் இருந்தார். கம்பெனியின் பாதிக் கணக்குவழக்கு ரகசியங்கள் எல்லாம் அவருக்கு அத்துபடி. அரை முதலாளிதான் மேனேஜர். “உள்ள பெரியவரு இருக்காரா?” உச்சந்தலையை சொட்டையாக வட்டமிட்டுக்காட்டி சைகையால் பரதன் கேட்டார்.

“இருக்கறாரு…” ஊமையாய் தலையை மட்டும் ஆட்டி  ஆமோதித்தபடி, பரதனுடன் வந்த தமிழரசனை மேலும்கீழுமாய்ப் பார்வையை ஓட்டி அளவெடுத்துக்கொண்டிருந்தார் மேனேஜர்.

உள்ளே பெருஞ்சத்தமாகக் கேட்டது. கதவைத் திறந்ததும் சத்தம் இன்னும் கூடுதலாக பளீரென்று அறைந்தது. எதிரே ஒரு கண்டக்டர் தலைகுனிந்தபடி நின்றுகொண்டிருந்தான். பரதனைக் கண்டதும் சுதி கூடி கண்டபடி காய்காய் என்று ஓனர் செட்டி காய்ந்தார்.

“என்னடா பரதா, என்னா மயிரு செக் பண்ற? கடைசி சீட்ல குந்திக்கிட்டு எவ சூத்தாம்பட்டையிலியாவது மூஞ்சிய தேச்சிக்கிட்டு குந்திக் கெடக்கிறியா? போன டூட்டிக்கு இவனாட்டம் கண்டக்டர்தான் போனான். சும்மா அய்யாயிரத்த ஆலம் எலையாட்டம் உருவிக் குடுத்துட்டுப் போறான். இவன் என்னாடான்னா டீசல் செலவுக்கே இழுத்துப் புடிக்க வேண்டிதா இருக்கு. மூவாயிரம் ரூவாய முக்கித் தூக்கமுடியாத தூக்கிக்கொண்டாந்து கட்றதுக்கு நிக்கிறான். பரதா, ஓம் பேர்லியே எனக்கு சந்தேகமா இருக்கு. நீனு, டிரைவரு, இவன்… ஆக எல்லாருமே சேந்து பங்கு போட்டுக்கிட்டு இருக்கீங்க போல்ருக்கு.” ஓனர் செட்டி உரிஉரி என உரித்தார்.

எதிரில் குனிந்து நின்ற கண்டக்டர் எதுவும் பேசவில்லை. பரதன்தான் தயங்கித்தயங்கிப் பேசினார். “இல்லிங்க, அந்த பெரியார்க்காரன்தான் நம்ப டைம்ல கொஞ்சம் இழுக்கறான்…”

“பெரியார்க்காரன் நம்ம டைம்ல எப்பியும் வரவேமாட்டான். சும்மா பெரியார்க்காரன், பெரியார்க்காரன்னு அவனையே காரணஞ் சொல்லிக்கிட்டு நிக்காதிங்க. கம்மனாட்டி பயலுவளா. திருடுங்கடா திருட வேணான்னு சொல்லுல. திட்டமா திருடுங்க. திருடிட்டு அவன் இவன்னு கையக்காட்டாதீங்க.” கடந்து பாட்டுவிட்டு அடித்துக்கொண்டிருந்தவர், திடுமென கறாராக அந்த கண்டக்டரிடம் பேசினார். “ஊகும். ஏந் தலைகடையில இனிமே நிக்காத. ஒன்னை திரும்பவும் வேலைக்கு சேத்துக்கிட்டா நானும் ஒன்னைமாதிரி கூலி வேலைக்குத்தான் வேற ஒருத்தங்கிட்ட பைய எடுத்துக்கிட்டு போயி நிக்கணும். ஓடிப்போய்டு.”

அதற்குமேல் அந்த கண்டக்டர் ஒன்றும் சொல்லாமல் வெளியேறினான். நடந்த காரசார விளாசலில் தமிழரசன் அரண்டுபோய் நின்றிருந்தான். அங்கு நிற்கவோ, வேலையைக் கற்றுக்கொள்ள அங்கு சேரவேண்டுமென்கிற எண்ணமெல்லாம் பொசுக்கென்று போன இடம் தெரியாமல் போய்விட்டது.

ஒன்றும் பேசாமல் தலைகுனிந்து கொண்டு நின்றிருந்த பரதனைப் பார்த்து சூடு குறையாமல் பேசினார். “என்னடா பரதா, மறுபடியும் சொல்றன். ஓம் போக்கு சரியில்ல. கண்டக்டருவுள கையில் போட்டுக்கிட்டு ரொம்ப நக்கற போல்ருக்கு. நாளுக்குநாளு வசூல் கொறையிது. கிழிஞ்ச கைலியும் நைஞ்ச சட்டையுமா ஆரம்பத்துல வந்து வாசல்ல நின்னத நெனச்சிப்பாத்து வேலய செய்யி.”

ஒன்றும் கிச்சாராமா என வாயைத் திறக்காமல் பரதன் நின்றுகொண்டிருந்தார். திருநாளில் திருடியவனாய் பின்னால் நின்றிருந்த தமிழரசன் பக்கம் பட்டென்று திரும்பிவிட்டார் ஓனர் செட்டி. “யார்ரா… நீ எதுக்குடா இங்க நிக்கற?”

தமிழரசனுக்கு திடுமென மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. பரதன்தான் மெல்ல சொன்னார். “முத்தனக்குப்பத்து பையன். தெரிஞ்சவன் நல்ல பையன். போல்டா ஓடறதுக்கு…” இழுத்தார்.

“வர்றவன்லாம் நெல்லவனாதான் வர்றானுவோ. நம்பகிட்ட வந்தப்பறந்தான் வேப்பூர் திருடனா பூடறானுவோ. ஆனா திருட்டு ராஸ்கோலுவோ விடிவானுவோங்கற… ஆத்துல எவ கிட்டயாச்சும் கொண்டுபோயி குடுத்துட்டு கடைசியில அழுவிப் போயிதான் நிப்பானுவோ…”

அவன் பக்கம் திரும்பிக் கேட்டார். “ஓம் பேரு என்னாடா?” 

“தமிழரசன்.” 

“ஒப்பம் பேரு…” 

“முத்தாஞ் செட்டிங்க”

“க்கும். செட்டிய மின்ன சொல்லிடு. செட்டின்னா அப்பிடியே பீரோ சாவிய ஓங்கிட்ட எடுத்து குடுத்துருவம் பாரு. ஒண்ணாம் நெம்பரு பயலுவோ. மத்தவன்னா பொறங்கைய மட்டும்தான் நக்குவானுவோ, செட்டிவோ கையையே மொன்னு முழுங்கிடுவானுவோ திருட்டுப் பயலுவோ. ஒப்பங் கட வைச்சிருக்கானா?”

“ஆமாங்க. ஆலடியில மளிக கடை வைச்சிருக்காரு” தலையாட்டியபடி சொன்னான்.

“கடைக்கி வந்த எடத்துல இவுருகிட்ட நீ கேட்டதும் நாந்தான் ராஜேஸ்வரிக்கே ஓனரு. நாளைக்கே போல்ட்டு செக்கரா ஏத்திவுட்டு கையோட நாள மறாநாளே கண்டக்டரா பைய்ய மாட்டிவுடறன்னு ஒன்னை இங்க இட்டாந்துட்டாரா?”

கொஞ்சநேரம் கழித்து சற்று தளர்வாகத் திரும்பவும் அவனிடம் பேசினார். “சரி சரி, உள்ளே போயி பாத்ரூமுக்கு தண்ணி மொண்டு ஊத்து. மோட்ரு வேல செய்லியாம்”

கயிறு இழுத்து இழுத்து, கையில் நெருப்பைக் கொட்டியது மாதிரி எரிந்தது. ஆனாலும் அந்த எரிச்சலையெல்லாம் கொஞ்சம் அடக்குகிறமாதிரி அவள் இருந்தாள். லேசாய் மண்ணை நாலு கொத்துக்கொத்தி, ரெண்டு கை புண்ணாக்குத் தூள் போட்டு தண்ணீர் விட்டால் புதுத்துளிரில் பொன்நிறம் காட்டும் செடியைப் போல்… கொஞ்சம் நல்ல சாப்பாடு போட்டு, நல்ல துணிமணி கொடுத்துக் கட்டிக்கச் சொல்லி தலைவாரிக் காதோரம் ஒரு ரோசாவை செருகிவிட்டால் தேவதைதான் அவள். இவன் இழுத்துக் கொடுக்கக்கொடுக்க அவள் வாங்கிவாங்கி ஊற்றிக்கொண்டிருந்தாள். நிச்சயம் வேலைக்காரிதான். நம்மைப்போல் லைசன்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு போல்ட்டுசெக்கராக வேலைகேட்டு வந்து தண்ணீர் மொண்டு ஊற்றுகிறவளாக இருக்கமாட்டாள்.

பத்தாவது குடத்தை இழுத்துக் கொடுக்கும்போது தைரியம் வந்திருந்தது. “ஒம் பேரு என்னா…”

“சித்ரா”. சில்லென்றிருந்தது குரல். 

“என்னா ஊரு?” 

“இங்கதான். நாச்சியார்பேட்டை.”

அவளது பேச்சு மிகவும் இயல்பாக இருந்தாலும் ஊரைக் கேட்டதும் கொஞ்சம் உதைப்பாகிவிட்டது. விருத்தாசலத்தை ஒட்டிய புறநகர் பகுதி. டெப்போ பின்புறம். எப்போதும் வெட்டுக்குத்துகள் சரசமாய் நடக்கும் சூராதிசூரர்கள் இருக்கும் பகுதி. 

இவன் குடத்தில் நீரை ஊற்றியபோது சிரித்துக்கொண்டே சொன்னாள். “நீ ஒரு அசப்புல பாத்தா ஆசை படத்துல வர்ற அஜித் மாதிரியே இருக்க…”

உற்சாகமாகச் சொன்னான். “மின்னியெ பல பேரு இத சொல்லிட்டாங்க…”

தண்ணீர் இழுத்து நைந்து நொந்துபோய் கிடைத்த இடைவெளியில் தமிழரசன் வெளியே வந்தபோது பரதன் நின்றுகொண்டிருந்தவர் ஆச்சரியமாய் சொன்னார். “ஒன்னோட நெல்லநேரம் ஒடனே ஒத்துக்கிட்டார்டா. என்னாதான் இருந்தாலும் சாதிக்கிச் சாதி பட்டுன்னு வேல செய்ய ஆரம்பிச்சிடுது.”

“எதுக்கு தண்ணி இழுத்து ஊத்தறதுக்கா பட்டுன்னு ஒத்துக்கிட்டாரு…” கடுப்பாகக் கேட்டான்.

இவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே தலையில் புல்லுக்கட்டுடன் ஒருவன் வீட்டோர சந்துப்பாதை வழியாக தோட்டத்துப்பக்கம் போனான். பரதன் அவனைக் காட்டிச் சொன்னார். “தே பில்லுக்கட்டோட போறாம் பாரு. இவன் திருக்கோயிலூர் கடல்புறா கண்டக்டரு. டிரைவரு தவுடுதீவனம் வாங்கப் போயிருக்கான். கக்கூஸ் கழுவ வுட்டாலும் பரவாயில்ல டூட்டி குடுத்தாப்போதும்னு அவனவன் நிக்கிறான். நீ என்னடான்னா…”

மறாவது நாளும் மோட்டார் வேலை செய்யவில்லை. செட்டி இருக்கிற வசதிக்கு புதிதாய் போர்போட்டு புது மோட்டாரையே இறக்கி தண்ணீரைக் கிளப்பிவிடலாம்தான். பத்து வண்டிக்கு மேல் ஓடுகிற இடத்தில் எவனையாவது மொண்டுஊற்று என்றால் ஊற்றிவிட்டுப் போகப்போகிறான். இதற்குப்போய் எதற்கு வீண்செலவு. இரண்டு நாளில் மோட்டார் காயில் கட்டி வந்துவிடும்.

மருமகள்கள் வெயில்படாத தேகத்தை நிழலில் இறுத்தியவாறு இவன் தண்ணீர் இழுப்பதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இப்படியெல்லாம் இவர்கள் வேடிக்கை பார்க்கமாதிரி இந்த ஏதாலங்கெட்ட எடுபிடி வேலைகளைச் செய்துதான் இந்த கண்டக்டர் தொழிலைக் கற்றுக்கொள்ளவேண்டுமா? உள்ளுக்குள் ஒருபக்கம் குடைந்து கொண்டுதானிருந்தது.

சித்ராவை ஓரக்கண்ணால் பார்த்தான். ஓயாது இடுப்பில் குடத்தைச் சுமந்துகொண்டு போனதில் உடுக்கையைப் போன்று இடுப்பு அழகாக ஒடுக்கு நெளிவு பாய்ந்திருந்தது. தாவணி, பாவாடை ஜாக்கெட் யாவும் வேர்வையும் தண்ணீருமாய் நனைந்திருந்தது. வாளியை இழுத்து ஊற்றும்போதுதான் எதேச்சையாய் கவனித்தான். மாராப்பு கோடாய் ஒதுங்கி வெள்ளை நிற ஜாக்கெட்டும் தொப்பரையாய் நனைந்து கண்ணாடி போலாகி கூர்நுனிகள் இவன் கண்களில் குத்தின.

“ஏய்… குட்டி, மாராப்பு துணிய பரப்பிவைச்சி அங்காண்டையும் இங்காண்டையும் ஆணி அடிக்கணுமா? ஒடம்புல சூடுசொரண இருக்கிறதில்ல!” திடுமென சாட்டையாய் விசிறுகிற குரல்.

சித்ராவுக்கு பயத்தில் கால்கள் தடதடவென நடுங்கி படாரென்று கைவிரல்கள் மாராப்பை இழுத்து மூடின. இவனுக்கு ஆட்டம் கண்டுவிட்டது. மருமகள்கள் அவசரமாய் அவரவர் மாராப்பைச் சரிசெய்தபடி உள்ளே மறைந்து போனார்கள்.

“டேய் என்னடா வேடிக்க…” திரும்பவும் ஓனர் செட்டி அதட்டியதும் சரசரவென வாளியை கிணற்றுக்குள் விட்டான். ‘இந்த ஆளு, எதுக்கு இப்ப இங்க வந்தான்…’ தலையைக் குனிந்தபடி குடத்தை வளைத்தபடி ஒரு கையும், மாராப்பை பிடித்தபடி ஒரு கையுமாகப் போய்க்கொண்டிருந்தாள்.

பெரியவர் ஓனர் செட்டிக்கு இன்னார் இனியார் என்று இல்லை. எல்லோருக்கும் திட்டு திட்டுதான். ஆனால், யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததாக சரித்திரம் இல்லை. டிரைவர்கள் கண்டக்டர்கள் திருடுகிறார்கள் என்பது தெரியும். திருடாமல் எவனும் இந்தத் தொழிலைச் செய்யமாட்டான் என்கிற நம்பிக்கை அவருக்கு. தொடர்ந்து திட்டினால் திருட்டு அளவு கூடாமல் இருக்கும் என்பது அவர் கணக்கு. அதேமாதிரி இந்த வண்டிக்கு இவந்தான் என்கிற கணக்கும் இல்லை. எவனாவது இறங்குகிற நேரத்தில் போனால் டூட்டிக்கு ஏறிக்கொள்ள வேண்டியதுதான். ஆதலால் குறுக்கநெடுக்க செட்டு பக்கம் அடிக்கடி போய் தலைகாட்டிவிட்டு அடையாளத்திற்காக கடைக்குப் போவது, கரண்டுபில் கட்டுவது போன்ற வேலைகளைச் செய்துவிட்டு வரவேண்டியதுதான். அதேபோன்று எவனாவது திருட்டில் மாட்டிவிட்டால், “இனிமே இந்த பக்கம் வராத ஓடிப்போ…” என்பார். எவனும் ஓடிவிட மாட்டான். இரண்டுநாள் கழித்துப்போய் தலையைச் சொறிந்துகொண்டு நின்றால், “அந்த கம்னேட்டி பயல கடலூர் நீலக்குயில போயி மாத்திக்கச் சொல்லு…” என்பார். செட்டியார் போக்கே பெரும்போக்கு என்று விருத்தாசலத்து பேருந்து முதலாளிகள்கூட பேசிக்கொள்வார்கள்.

நல்லவேளை, மூன்றாம் நாள் இந்த தண்ணீர் இழுக்கிற வேலையிலிருந்து தமிழரசனுக்கு ஓய்வு கிடைத்தது. கடைக்குப் போய் மளிகை, காய்கறிகளை வாங்கிவந்து கொடுத்தான். ஈரநெற்றியில் விழுந்து ஒட்டிக்கிடந்த முடிகளை விரலால் ஒதுக்கியபடி சித்ரா கிரைண்டரில் மாவு வழித்துக்கொண்டிருந்தாள். தண்ணீர் மொள்கிற மாதிரியான நனைந்து சுமக்கிற வேலையாக மாவு அரைப்பது இல்லாதிருந்ததால் முகம் கொஞ்சம் பூத்து பொலிவாக இருந்தாள். கிட்டப்போய் கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் குடித்தபடி அவளைப் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டான். ஆனால், திடுமென எந்த மூலையிலிருந்தாவது செட்டி முளைத்துவிட்டால்… ஆவலை மூட்டைகட்டி வைத்துவிட்டு வெளியே வந்தான்.

இரண்டு மூன்று நாளாய் பார்த்த எடுபிடி வேலையினால் செட்டிக்கு இரக்கம் சுரந்து நாலாம் நாள் பாலக்கொல்லை ‘மின்னல் குயிலில்’ இசைவு கிடைத்தது. கண்டியங்குப்பத்து அய்யனார் கோயிலில் கும்பிட்டு உண்டியலில் சில்லறை போட்டுவிட்டுவந்து பின்படியில் நின்றபடி விசில் கொடுத்தான். ‘ரைட் ரைட்…’ “கண்டியங்குப்பம் அஞ்சி, வீராரெட்டிக்குப்பம் ரெண்டு, பாலக் கொல்லை பத்து…” பணத்தை நீளவசத்தில் மடித்து விரலிடுக்கில் வைத்துக்கொண்டு கத்தியபடி சொன்னான். டிக்கெட் வாங்கி விநியோகம் செய்தான். போல்ட்டு செக்கராய் ஓடிக்கொண்டிருந்தான்.

சில நேரங்களில் காசு வாங்கிக் கொடுத்துவிட்டு எவ்வளவு கேட்டாலும் கண்டக்டர் டிக்கெட் கொடுத்துவிட மாட்டான். பயணிகளும் கேட்டுக்கேட்டுப் பார்த்துவிட்டு இறங்குகிற இடம் வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் இறங்கிப் போய்விடுவார்கள். இந்தமாதிரி காசு வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்காத படலம், செக்கர் இருக்கும்போதும் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்த இவனுக்கு பக்கென்றது.

உளுந்தூர்பேட்டையில் மதிய சாப்பாடு. முட்டை ஆம்லெட்டோடு திருப்தியாக சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள். மனங்கேட்காமல் கண்டக்டரிடம் பேசினான். “காசி குடுத்தவங்க வண்டியில நெறையா பேரு டிக்கெட்டு டிக்கெட்டுங்கறாங்க அண்ண…”

கண்டக்டர் இவனுக்கும் தெரிந்தவன்தான், களர்குப்பத்துக்காரன். “இப்ப மூக்கப்புடிக்க தின்னம… இந்த மாதிரி இன்னம் ரெண்டு வேள சாப்பாட்டு செலவு இருக்கு. இதுலாம் ஏது? எல்லாம் டிக்கெட்ட குடுக்காம வாங்கிப்போடறதுதான். டிக்கெட்ட கேட்டான்னா வருது வருதுன்னு சொல்லிக்கிட்டியே நாலு தப்பிடி ஸ்டேஜ தாண்டி எறக்கிவுடு. வுட்டது போதும்னு எறங்கிப் போய்க்கிட்டியே இருப்பான்.”

நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொண்டான். பலநேரங்களில் காசு கொடுத்தவர்களுக்கு இவனே டிக்கெட் தராதபடி தாமதப்படுத்தினான். இறங்கியவர்களின் டிக்கெட்டை வாங்கி ஏறியவர்களிடம் கொடுத்து ரெட்டைவசூல் செய்தான். ஆனால் ஒரு நயாபைசாவைக்கூட இவன் மறைத்ததில்லை. கைச்சுத்தமாய் எல்லாவற்றையும் துடைத்தெடுத்து கண்டக்டரிடம் கொடுத்துவிடுவான். இவன் தொழில் சுத்தத்தைப் பார்த்து ஒரு வாரத்திற்குள்ளாகவே எந்த வண்டிக்குப் போனாலும் கண்டக்டர்கள் புக்கைக் கொடுத்து டிக்கெட் கிழிக்கச் சொன்னார்கள். இன்வாய்ஸ் எழுத வைத்தார்கள். பையையே இவனிடம் கொடுத்துவிட்டு பள்ளிக்கூடம் போகிற பிள்ளைகளிடம், கண்டக்டர்கள் பல்லைக் காட்டிக்கொண்டு குந்தியிருந்தார்கள்.

வேப்பூர் போகிற ‘பள்ளிச்சிட்டு’வுக்கு மெயின் உடைந்துவிட்டது. பணம் கட்டப்போகிறபோது டிரைவர் உதைப்போடு வந்து நின்றான். நிறைவாய்த் தொழில் கற்றுக்கொண்ட திருப்தியில் தமிழரசனும் கண்டக்டரோடு வந்திருந்தான். ஏற்கெனவே செட்டிக்கு சேதி போயிருந்தது. “டேய், நீன்லாம் இதுக்கு மின்ன மாட்டு வண்டியாடா ஓட்ன…? பள்ளம் படுகுழி பாத்து ஓட்றதில்ல. புது மெயினுடா. ஆயிரத்திஐநூறு ரூபாய்க்கி ராயல் கடகாரன் சல்லிக்காசு கொறைக்க மாட்டன்னுட்டான். எவந் தாலிய அறுக்கறதுக்கு முருங்க கௌய முறிக்கிறமாதிரி முறிச்சித்தள்ளிட்டு வந்து நிக்கற…”

டிரைவர் நொந்துபோனான். இங்காண்ட கண்டக்டரிடம் செட்டி திரும்பினார். “இவன் மெயின முறிச்சாந்து தள்ளிட்டான். நீ கலக்ஷன்ல என்னா புடுங்கியாந்துருக்க…”

ராஜேஸ்வரியில் ஓடுகிற கண்டக்டர்கள் எல்லோருமே தொழில் தெரிந்தவர்கள்தான். இதுபோன்ற பெருஞ்செலவு வைக்கும்படியான பழுதுநாட்களில் அன்று சாப்பாட்டுச் செலவுக்கு மட்டும் நறுக்காய் எடுத்துக்கொண்டு கை வைக்காமல் வழக்கத்திற்கு மாறாக ஆயிரம் ஐநூறை கலக்‌ஷனில் கூட்டிக் காட்டுவார்கள். செலவு ஆனதற்குக் கூடுதலாய் பத்து ரூபாய் வசூல் என்றால் செட்டி மனம் கொஞ்சம் கொதிப்படங்கி சமாதானமாகும்.

போலியாய் நடுங்கியபடி கண்டக்டர் சொன்னான், “அய்யாயிரத்து ஆறு நூறுங்க…”

“எலேய், விஜயமாநகரத்தான்! நீ கில்லாடிடா. நேத்தைய டூட்டிக்கு நாலாயிரத்து ஐநூறக் கட்ற. இன்னைக்கி மெயின் ஒடைஞ்சதும் ஆயிரம் ரூவாய கூட்டிக்காட்ற. கூட்டம் அதிகமா இருந்ததால மெயின் ஒடைஞ்சிபோச்சிங்கறது ஓங் கணக்கு. இன்னிக்கி வவுத்துப்பாட்டுக்கு மேல கைய வைக்கல போல்ருக்கு. சரி இன்னக்கி ஒருநாளு மட்டும் வெறுங்கையை வீசிக்கிட்டு போங்க. நாளப்பின்ன அள்ளி மடியில சொருவிக்கலாம்…” புள்ளடித்தமாதிரி செட்டி சொன்னார்.

கொஞ்சம்நேரம் கழித்து சாந்தமாக கண்டக்டரை கூப்பிட்டு தமிழரசனைக் காட்டிக்கேட்டார். “டேய், விஜயமாகரத்தான்… இந்தப் பய போல்டுசெக்கரு எதாவது தேறுவானா…?”

தமிழரசனுக்கு திக்கென்றது. கண்டக்டர் திருப்திகரமாய், “தேறிட்டாங்க. டிக்கெட்டு போட, இன்வாய்ஸ் எழுத… ஸ்டேஜ் பாத்து விசில் குடுக்க…” அவன் சொல்லச்சொல்ல தமிழரசனுக்கு ஆறுதலாக இருந்தது.

பட்டென்று பேச்சை வெட்டியது மாதிரி மறித்துக் கேட்டார். “நாந் தேறுவானான்னு கேட்டது, திருடறதுல…”

கண்டக்டர் முழிபிதுங்கி நின்றான். தமிழரசன் பிசுக்கா பிசுக்காவென முழித்தான். பிறகு அவரே பேசினார். “சரி, நீ சொல்றதப் பாத்தா திருடறதுலயும் தேறிட்டாங்கற. அவனப் பாரன், அவன் திருட்டுமுழியே தொழில் கத்தக்கிட்டங்குது…”

வக்குசிக்கு இல்லாமல் சிதம்பரம் போகிற ‘நாட்டியக் குதிரை’ ஆள் இல்லாமல் நின்றுகொண்டிருந்தது. ஏறிய இரண்டாம் நாளே பொண்டாட்டிக்கு ‘வாயாலயும் வவுத்தாலயும்’ போய் ‘ஆச்சிபோச்சி’ எனக் கிடப்பதாய் சேதிவந்து போகவேண்டும் என்று வண்டியை நிறுத்திவிட்டு கண்டக்டர் நின்றுகொண்டிருந்தான். மாற்றிவிடுவதற்கு யாரும் இல்லை.

ஓனர் செட்டி அதற்குமேல் ஒன்றும் யோசிக்கவில்லை. தொழுதூர் ‘தேன்சிட்டு’வில் போல்டாய் ஓடிக்கொண்டிருந்த தமிழரசனை இறக்கி கண்டக்டராய் பையை மாட்டிவிட்டு வண்டி ஏறச் சொன்னார். செட்டியாரின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வண்டியேறினான்.

“வந்துசேந்த ஒரு மாசத்துக்குள்ள பைய்ய மாட்டிட்டான்டா. செட்டிக்கி செட்டின்னதும் எப்படி அரவணைச்சி போறானுவோ பாரு…” எல்லோரையும் பேச வைத்துவிட்டான்.

நாலு சிங்கிளும் நல்ல வலுவான வசூல். பையை மாட்டிக்கொண்டு படியில் நின்று சாய்ந்தபடி, “கம்மாபுரம், வளையமாதேவி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம்…” கத்திக் கூப்பிட்டான். விருத்தாசலத்து உள்ளூர் பையன் ஒருவன் இவனுக்கு போல்ட்டு செக்கர். அவனும் கூட சேர்ந்து கத்தினான். “சிதம்பரம் சிதம்பரம்…”

“சிதம்பரம் சிதம்பரம்…” என்று கூப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே பார்த்தான். தெய்வம் மருத்துவமனை பக்கமிருந்து சித்ரா இவனைப் பார்த்துவிட்டு சிரிப்பாய் வந்துகொண்டிருந்தாள். பார்த்த இவனுக்குள் மின்னல் ஓடியது. கிட்டே வந்ததும் இறங்கி நின்றான். வரும்போதுதான் வாங்கிச் செருகியிருக்க வேண்டும், மல்லிகை வாசம் கமழ்ந்தது. வாசத்தை வெட்டியபடி இவர்களை ஒதுக்கிவிட்டு ஒன்றிரண்டு பேர் வண்டியில் ஏறினார்கள்.

ரொம்பவும் ஆர்வமாகக் கேட்டான், “எப்படியிருக்க சித்ரா…”

அலுத்துக்கொண்டாள், “ம். என்னலாம் மறந்துட்ட. நாலு நாளு வூட்டு வேலையிலேயே பட்டுன்னு வண்டி ஏறனவராச்ச! பத்து நாளு பாஞ்ச நாளுன்னு ஏங்கூட பத்துபாத்திரம் தேய்ச்சிருந்தினா ஒனக்கு ஏம் பேர்ல ஓசன ஓடும்…” பெருமூச்சுவிட்டபடி சொன்னாள்.

“சும்மா எதுக்கு அதியும்இதியும் சொல்லிகிட்டு சித்ரா. இப்ப ஒனக்கு என்னா வேணும்? டீ குடிக்கிறியா…” ரொம்ப பாசமாகக் கேட்டான்.

“இல்ல. ஒரு அம்பது ரூவா பணம் வேணும்.” தலைகுனிந்து காலால் கோலம் போட்டபடி கேட்டாள். காங்கிரிட் தரையாக இருந்ததால் கோலம் தெரியவில்லை

“இதானா…” ஐம்பது ரூபாய் புதுத்தாள் ஒன்றை எடுத்துக்கொடுத்தான்.

“நேரமாயிட்டுது அண்ண…” போல்ட்டு செக்கர் இருவரையும் ஈவுபிரித்துவிட்டு சித்ராவை அனுப்பிவைத்தான்.

அன்று நல்ல வசூல்தான். ஆனால் பணம் கட்டுகிறபோது ஓனர் செட்டிக்கு முகத்தில் சிரிப்பு இல்லை. பணம் கட்டி முடித்தபோது மேனேஜர்தான் சொன்னான். “செதம்பரம் வண்டிக்கு ஆள் வந்துட்டுது. ஒன்ன பாலக்கொல்ல வண்டிக்கு போவச் சொன்னாரு பெரியவரு…”

சிதம்பரம் வண்டியிலிருந்து வலிந்து இறக்கப்பட்டது போல் தமிழரசனுக்குத் தெரிந்தது. அரிஓம் என்று முதல்நாள் வேலை என்பதால், ஒரு நயாபைசாகூட கைவைக்காமல் டிரைவர், போல்டு செக்கருக்கு தன் சொந்தக்காசில் சாப்பாடு வாங்கிப்போட்டு கலெக்ஷனை கூட்டிக்காட்டினான். அப்படியிருந்தும் பாலக்கொல்லை உள்காட்டு வண்டிக்குப் போகச் சொன்னதில் கொஞ்சம்கூட மனம் ஒத்துக்கொள்ளவில்லை.

இருந்தாலும் பாலக்கொல்லை வண்டியில் ஒரே ஒரு ஆறுதல். அந்த வண்டி அவன் ஊர் வழியாகப் போவதுதான். தெரிந்த முகங்கள் சொந்தங்கள் மிகுந்த ரூட்டில் போவது அவனுக்கு லேசான உற்சாகத்தை கொடுத்தது. ஆலடியில் வண்டியைக் கடை முன்னால் நிறுத்திவிட்டு இறங்கியபோது இவனைவிட அப்பன் செட்டிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. கடையில் நின்றுகொண்டிருந்தவர்களும் பேருந்தில் குந்தியிருந்தவர்களும் ஒருசேரப் பார்க்கையில் அப்பன் செட்டிக்கு ஒரு யோசனை. பையனுக்கும் தனக்கும் ஒரு பெருமையாய் இருக்குமென்று நூறு ரூபாய் தாள் ஒன்றைக் கொடுத்து சில்லறை கேட்டார். பையை நெஞ்சுக்கு நேராய்த் தூக்கிப்பிடித்து பத்து, பத்துரூபாய் தாள்களை எடுத்துக் கொடுத்தான். பணத்தைக் கொடுக்கும்போது போல்ட்டுசெக்கர் வந்து நிஜாம்பாக்கு வாங்க நின்றான்.

இரண்டாம் நாள் சுமாரான வசூல்தான். ஓனர் செட்டி பிடித்துக்கொண்டார். “தெரியுண்டா எனக்கு. நீ அன்னைக்கி எடுத்த எடுப்புல ஏங் காலத்தொட்டுக் கும்புடுறப்பையே நெனைச்சேன். அந்தக் குட்டி தண்ணி மொள்றப்ப மாராப்பு ஒதுக்கிவுட்டு காட்டும்போதே ஊகம் பண்ணினேன். அது சரியாதாம் பூட்டுது. போன டூட்டியில் அவ பஸ்டாண்டுல பல்லக் காட்னதும் அம்பது ரூபாய தூக்கிக் குடுக்குறிய… எவம் வூட்டு நோட்டுடா அது? கண்டும்காணாததுக்கு இன்னைக்கி டூட்டியில் இருக்கிறப்பையே ஒப்பன்கிட்ட பணத்த தளர்த்தற போல்ருக்கு! நீ வேணாண்டா. ஓடிப் போ! ஏங் கண்ணு மின்னாலேய நிக்காத. கொறநாளும் ஒன்னை வேலைக்கி வைச்சிருந்தா, ஒப்பன் ஓனராப் பூடுவான். நாம் போயி அவங்கிட்ட கடுவுசீரவம் மடிச்சிக் குடுக்கிறதுக்கு வேலைக்கு நிக்கணும்.”

“இல்லிங்க… அந்த பணம்…” விக்கித்துப் போய் வாயைத் திறந்தான்.

“போயன் கம்னேட்டி… பண்றத பண்ணிட்டு இல்லநொள்ளன்னு. செருப்பக் கைட்னன்னா பிச்சிடுவன்…” உள்ளே போய்விட்டார்.

மேனேஜரிடம் பணத்தைக் கட்டிவிட்டு வெளியே வந்தான். உள்ளே நடந்த கண்காட்சியைக் கேட்டிருப்பார் போலும் பரதன். சிரித்துக்கொண்டே சொன்னார். “என்னாடா தமிழு… பயிந்திட்டியா. சும்மாடா அது. நீ வேண்ணா ரெண்டு நாளு கழிச்சி வாயன். போயி வண்டிய மாத்து முண்டம்பாரு…”

அவனுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. “என்னா அண்ண, இப்படியா மூஞ்சியில காறித்துப்பாத கொறையா…?”

“அட நீ வேறடா… இதவிடலாம் ஆத்தா பொண்டாட்டின்னுகூட செல சமயம் பேசுவாரு. ஆனா நெல்ல மனுசன்டா. நா கெடுத்தகேடா நாளைக்கே நீ வந்து அவுர பாரன். எதையும் மனசுல வைச்சிக்காம வண்டி மாத்திவுடறாரா இல்லியானனு அப்பறமா சொல்லு…” பரதன் அனுபவங்களைப் பாடமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“ஆமா… நெல்ல மனுசன் கெடக்கறாம் போ. ஆயிரந்தான் நாம கூலிக்காரனா அவங்கிட்ட கைகட்டிக்கிட்டு சேவகம் பண்ணனாலும், இப்பிடியா மூஞ்சியில முழிக்காதமாதிரி செருப்புக் கிருப்புன்னா பேசுவான்…”

பையைக் கொண்டுவந்து ஆணியில் மாட்டியவன் மாட்டியவன்தான். ‘இனிமேல்பட்டு எந்த தனியார்க்கார பயலவோகிட்டயும் போவக்கூடாது. போனா பெரியாருக்குத்தான்.’

*

நெடுஞ்சாலை நாவலிலிருந்து ஒரு பகுதி, தமிழினி வெளியீடு

2 comments

லெட்சுமி நாராயணன் பி February 21, 2021 - 4:28 pm

சிறப்பு. நாவலை வாசிக்க வேண்டும் என்கிற ஆவலைக் கூட்டுகிறது. வெளியிட்ட தமிழினிக்கு நன்றி.

Kasturi G November 21, 2021 - 9:20 pm

Beautiful narration from the diary of a conductor in local transport company. That is how all the local transport companies millionaires are still becoming rich at the cost of Public transport corporation going down under.
salutations to the author.
Good luck
Thanks

Comments are closed.