‘Rotten crazy bastards’: டிசிகாவின் ‘Two Women’

by எம்.கே.மணி
0 comment

டிசிகாவின் படங்களைப் பார்ப்பதென்பது உலகை விரிவான பார்வையில் பார்க்கிற ஒரு நல்ல மனிதருடன் உட்கார்ந்து பேசுவது போல. 

இயக்குநரைப் பற்றின அறிமுகம் எதுவுமில்லாமல் நான் முதன்முறையாக படம் பார்த்துத் திகைக்கும்போது, பை சைக்கிள் தீவ்சில் போர்வையை அடகுவைக்கிற காட்சியை ஒருபோதும் மறக்க முடியாதபடிக்கு தனியாக எடுத்துக்கொண்டு வந்தேன். அந்தப் போர்வையை கடையிலிருக்கும் ஆள் ஒரு அடுக்கில் வைக்கப்போகும் போது, பிரம்மாண்டமான அக்கடையின் எல்லா அடுக்குகளிலும் போர்வைகளாக குவிந்திருக்கும். இது தன்னுடைய கதாபாத்திரமான ஒரு தனி ஆளுக்குச் சூழ்ந்த துயர் அல்ல என்கிற தனித்த அரசியல் பார்வையைச் சொல்லுவதோடு, அவர் மனிதராகப் பிறந்த யாருக்குமே அனுதாபம் கொள்கிறார். அருமையான பாங்கில் கதையைச் சொல்லி வந்தாலும், அவரது எல்லாப் படங்களிலும் மிளிருவது மானிடம்தான். நம்மை அவரோடு பொருத்திக்கொள்ள முடியும். இத்தாலி மொழியை எல்லாம் ஒதுக்கிவிட்டு நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அப்படி அவர் நமக்காகவே உரையாடுகிறார் என்கிற தனிப்பட்ட சுதந்திரத்தை அவரிடம் நாம் எடுத்துக்கொள்கிறோம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். அது அப்படத்தை நாம் வேட்கையுடன் உட்கொள்வதை வைத்துச் சொல்கிறேன்.

https://silverscreenings.files.wordpress.com/2019/05/sophie-loren-two-women-1960.jpg

Two women போர்சூழலில் சொல்லப்படுகிற படம். ‘Cesira’ என்கிற கதாபாத்திரத்தில் சோபியா லாரன் நடித்திருந்தார்.

சோபியா கணவனை இழந்தவர். கொண்டாடிக்கொள்ளும்படி மணவாழ்வு எவ்வளவு பாந்தமாக இருந்திருக்க முடியும் என்பதில் பல ஐயங்கள் இருந்தபோதிலும், உற்ற துணையோடு இருந்திருக்கக்கூடிய ஒரு முழுமையான தாம்பத்யம் தவறிப்போயிற்று என்பதில் மாற்றில்லை. சோபியா கண்ணுக்குத் தெரியாத ஒரு இடைவெளியில் தத்தளிக்கிறார். மனிதர்களை விரும்பியும் வெறுத்தும் தன்னுடைய சமநிலையைப் பேணிக்கொள்கிறார். தன்னைக் காதலிக்க வருகிறவர்களிடம்கூட அவருக்கு ஒருவிதமான அனுதாபம் இருக்கிறது. சொல்லப்போனால், ஓர் ஓரத்தில் ஆசையுமே இருக்கிறது. பொதுவாக, திரிசங்கு சொர்க்கத்தில் கண்டிப்புடன் புழங்குகிற பெண்களைக் கையாளும்போது ஏதாவது ஒரு பக்கத்துக்குத் தள்ளி நிறுத்தி, தீர்ப்பு சொல்லிவிடுகிற அரும்பணிதான் நடக்கும். இதில் அப்படியில்லை. மிகவும் நுட்பமாக சோபியாவை நம்முடைய மனதோடு அறிய வைக்கிற காரியத்தை திரைக்கதை சீரிய முறையில் செய்திருக்கிறது. அவள் தனக்கு எந்த மாதிரி அன்பு கிடைக்காமலிருந்து ஏங்கியிருந்தாலும், அதைத் தன்னளவில் கண்டடைந்து தனது மகளுக்குப் பகிர்ந்தவாறு இருந்திருக்கிறாள் என்பது கண்கூடு.

அதற்கென்று திரும்பி வருகிற எதிர்வினையில் வாழ்க்கையை ஏறிட்டுப் போவது எந்த இடர்ப்பொழுதிலும் சுலபமாக இருக்கிறது. அவ்வப்போது வாய்விட்டுச் சிரிக்க முடிவதெல்லாம் சாதாரண காரியமா? இதெல்லாம் உண்மையில் நாம் அன்பு என்று சொல்லிக்கொள்வதன் கொடையாகும். மிகவும் சிக்கலான இந்த வார்த்தையை யோசித்துப் பார்க்கிற வேளைகளில் மனிதனின் எந்த வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பால் இருக்கிற பிரகடனம் செய்துகொள்ள முடியாத ஆற்றாமை அது. இறுதியாக மனிதனுக்கு எஞ்சுகிற பெருமூச்சு அது. சோபியா தனது மகளோடு இருக்கிறாள் என்பது, அவள் உயிரோடு இருக்க ஆசைப்படுகிறாள் என்பதற்குச் சமமாகும். மகளாக இருக்கிறவளுக்கும் இதைக் கடந்ததொரு போக்கிடமில்லை என்பது மேலும் வருகிற மற்றொரு உண்மை. இவர்களை போர் துரத்துகிறது. இடம்பெயரச் செய்கிறது. 

https://www.raicultura.it/dl/img/2019/06/10/1560171020575_Loren_Belmondo.jpg

இரண்டு பெண்களின் பயணத்தினூடே நிகழ்ந்தவாறிருக்கும் போரின் குரூரங்களைச் சொல்லுகிறார் டிசிகா. கட்டமைப்புகள் விழுந்து, கட்டுப்பாடுகள் தளர்ந்து, எதிர்காலத்தை அறியாத தேசத்தின் கையறுநிலையைச் சொல்கிறார். ஒரு குழந்தை, அதைக் காட்டும் போதெல்லாம் ‘ரொட்டி இருக்கிறதா?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்த மண்ணில் எவ்வளவோ அந்நியர்கள் துப்பாக்கிகளைச் சுட்டுக்கொண்டு பறக்கிறார்கள். விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. இந்த நிமிடம் பேசிவிட்டு சைக்கிளில் நகர்ந்த ஆள், அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பக்கமாக இறந்துகிடக்கிறான். ஓரளவு படிப்பும் விவரமும்கொண்ட, விடாப்பிடியான தனித்தன்மையைக்கொண்ட, அம்மாவிற்கும் மகளுக்கும் வெவ்வேறு கோணங்களில் பிடித்தமான ஓர் இளைஞன் வேற்று இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னாளில் கொலை செய்யப்படுகிறான். இவ்வாறு, இவ்வாறு தாண்டிச்செல்லுகிற நிலங்கள்தோறும் எவ்வளவு அபத்தங்கள்?

எதற்காக இந்தப் போர்?

அதை விவரிக்கிற அவசியம் டிசிகாவிற்கு இல்லை. என்னவோ ஒரு அரசியல். அதில் நூறு காரணங்கள் உருட்டப்படலாம். அது யார் யாருக்கோ நன்மை பயப்பதாக இருக்கும். அதில் யார் யாருக்கோ என்னென்னமோ கிடைத்துக்கொண்டிருக்கும். அதைப் பயன்படுத்திக்கொண்டு யார் யாரோ என்னவெல்லாமோ செய்துகொண்டிருப்பார்கள்.

https://www.raicultura.it/dl/img/2019/06/10/1560171020575_Brown_Loren_Belmondo.jpg

படத்தின் துவக்கத்திலேயே வானிலிருந்து குண்டுமழை பொழிந்துகொண்டிருக்கும் போது, இது எதற்கு என்று மகள் கேட்டிருப்பாள். அம்மா, ‘யாருக்குத் தெரியும்?’ என்பாள். பொதுமக்களில் யார் ஒருவராலுமே கேட்கப்படாமல்தான் அவர்களின்மீது போர் திணிக்கப்படுகிறது. போரின் விளைவுகள் வெறும் உயிர் இழப்புகள், பொருள் நஷ்டம் மட்டுமல்ல. போர், அதில் சிக்கிக்கொண்டிருக்கிறவர்களின் வாழ்வுப் பார்வைகளையும் மனோபாவங்களையும் சீரழிக்கிறது. காரணங்கள் ஊட்டி சுயநலத்தை வளர்க்கிறது. குரூரங்களின் தடிமன் குறைந்து அதை யாருமே தூக்கி நடக்கிற சகஜத்தைக் கொண்டுவருகிறது. அடுத்த கணத்தில் மரணம் காத்திருக்கும்போது ஒரு மனிதப் பிறவி எதையெல்லாம் செய்துவிட முடியாது?

படத்தில் இரண்டு பெண்களுக்கும் ஒன்று நடக்கிறது. எல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். நிகழ்த்தப்பட்டுக்கொண்டு வருவதுதான்.

மனிதர்கள் தங்களுக்கு மிஞ்சிய காரியங்களைச் செய்யத்தலைப்பட்டு, தங்களுடைய எல்லாம் வல்ல அதிகாரங்களில் திளைக்கும்போது அதன் பாதகங்களினால் விரட்டப்படுவோர் எளியோரே. அதனால் நசுங்குவோர் அவர்களே. மகளும் தாயும் ஒரு கூட்டத்தினரால் வன்புணர்வு செய்யப்பட்டார்கள் என்பது யாரோ கொஞ்சம் நபர்களின் கவனத்திற்குமே செல்லக்கூடிய விஷயமல்ல. எவை எல்லாமோ பற்றி எரிந்துகொண்டிருக்க, யாரோ இரண்டு பெண்கள் சிதைக்கப்பட்டதுதானா பிரமாதம்? ஆனால், அந்தக் குழந்தையின் மனம் பழுதுபட்டுவிட்டது என்று சொன்னால் போதுமல்லவா?

https://www.open-live.org/it/wp-content/uploads/2017/08/ciociara.jpg

படத்தின் திரைக்கதை, கதையை மட்டுமே சொல்வதில் குறியாக இல்லாமல், இன்னபிற கதாபாத்திரங்களிலும் நிதானம்கொண்டிருக்கின்றது. அவர்களின் மேன்மைகளையும் சலனங்களையும் பலத்தையும் பலவீனங்களையும் சொல்லுகின்றது. உயிராசையை விட்டுவிட முடியாத முதியவர்களின் பீதியை அறியும்போது வாழ்வின் வீரியம் புரியவருகிறது. எவ்வளவு கூட்டம்? முகங்கள்? அவர்களுடைய தளர்வில்லாத இயக்கம் காரணமாக ஓர் ஊரைக் கைவிட்டு மற்றொரு இடத்துக்கு நடந்தே சென்றுகொண்டிருக்கிறார்கள். மக்களைக் குறித்துப் பேசுகிற இந்தப் படத்தில், மக்களோடு மக்களாக இருந்த சோபியாவும் அவளுடைய மகளும் வாழ்வை வெறுக்கும் இடத்திற்கு வந்துசேருகிறார்கள் என்பது முக்கியம். தீராத பழியுணர்வுடன் மௌனத்தில் உறைகிற மகள் யாரையெல்லாமோ பழிவாங்கியிருக்க வேண்டும். அவள் தன்னைத்தானே பழிவாங்கும் விதமாக ஒரு வேசியாகவும் தெருவில் இறங்கத் துடிக்கிறாள். அவளை கவனித்துக்கொண்டு, பயந்திருந்து, அழுது முடித்து, அதே நேரம்- உலகு பற்றி அறிந்த அம்மா- தன் மகளின் தீயை அணைக்க முயன்றுகொண்டு, அவளைத் தணியச் செய்துகொண்டிருக்கும் போது படம் முடிகிறது.   

இப்போது நான் மறுபடியும் பை சைக்கிள் தீவ்சின் போர்வைகள் நிரம்பியிருந்த அந்த அடகுக்கடையை நினைத்துக்கொள்கிறேன்.

போர்களை விரும்பி அழைக்கிற பிரமுகர்களையும் பெரிய மனிதர்களையும் பார்க்கிறோம். அவர்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய தேசப்பற்றின் பெருமையால் மார்பு விரிய எதிரி நாடுகளைப் பழிவாங்க வேண்டியதன் அவசியங்களைச் சொல்லுகிறார்கள். ‘வெற்றிவேல், வீரவேல்’ என்று தம்முடைய சார்பைப் பாடுகிறார்கள். நாட்டின் இளைஞர்களின் நரம்பில் புது இரத்தம் பாய்ச்சுகிறார்கள். ஒரு கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போல அல்லது கால்பந்து போட்டியைப் பார்ப்பது போல சேனல்களுக்கு முன்னால் அவர்கள் விறுவிறுப்படைவது சரிதான். இன்னும் கொஞ்சம் சரியாகச் சொல்லுவது என்றால் வயதான காலத்தில் நீலப்படம் பார்ப்பது போலவுமே அவர்கள் பதட்டம்கொண்டு விடுகிறார்கள். எதிரி நாட்டின் பிணங்களைக் கண்ணாற காண முடியும் இல்லையா? அது தார்மீகமான சரியும் பெருமையும் அல்லவா? அந்த வெடிச்சத்தங்களின் பிரதேசங்களில்தான் சோபியாவும் அவளுடைய மகளும் விதும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

https://c.files.bbci.co.uk/2624/production/_111146790_239ac03f-57b6-42ee-b390-684830fb4fa4.jpg

படம் முடிவதற்கு முன்பே ஒரு கட்டத்தில் எல்லோரையும் பிரிந்து தாயும் மகளும் நடக்க ஆரம்பிக்கிறார்கள். இரவு வந்து அணையக்கூடிய நேரம். ஓய்வெடுக்க ஒரு தேவாலயம் இருக்கிறது. சரியான கூரைகளில்லாத, தூசும் மண்ணும் மண்டிய அந்தத் தேவாலயத்தில் அவர்கள் இருவரும் இளைப்பாறும்போதுதான், மேலே சொன்ன சம்பவம் நடந்து முடிந்தது. நடக்க முடியாதபோதும் இரு பெண்களும் நடக்கிறார்கள். ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் நடந்துகொண்டிருக்கும்போது சாலையில் பறந்து வருகிற ஒரு இராணுவ ஜீப்பின்முன் பாய்ந்து, அதைத் தடுத்து நிறுத்தி, ஆவேசமாக நியாயம் கேட்கிறாள் சோபியா. அவர்களுக்கு இதொன்றும் புதிய காட்சியாக இருக்காது. யாரோ இரண்டு பைத்தியக்காரப் பெண்கள் என்று கடந்துபோவதாக இருந்தால் எந்தக் குற்றவுணர்ச்சியும்கூட இருக்காது. அவள் தனக்குத் தோன்றுவதை எல்லாம் கேட்க, அவர்கள் அப்படியே இப்பெண்களைக் கடந்துபோகவும் செய்கிறார்கள். 

சோபியா அவர்கள் போன திசையில் கல்லையும் மண்ணையும் பொறுக்கி எறிகிறாள். எந்தப் போருக்கும் சம்பந்தமில்லாத நாம் சொல்லக் கூடியதைத்தான் அவளும் ஆவேசமாக கூக்குரலிடுகிறாள். 

“Rotten crazy bastards!”