காமம் குறித்து நுட்பமாக எழுதியவராக கு.அழகிரிசாமியைக் குறித்து பல விமர்சகர்களுக்குத் தோன்றாமலிருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றுண்டு. அவர், தான் முனைந்து உருவாக்கிய டார்ச் கொண்டு எந்தக் கதாபாத்திரத்தின் மீதும் அடித்து, அவர்களின் காமத்தைப் பகிரங்கமாகச் சொல்ல வைத்தவர் அல்ல. சொல்லப்போனால், அவரே அது குறித்து விரிவாகப் பேசுவதில்லை. சம்பவங்களுக்கும் உரையாடல்களுக்கும் இடையிலான நுண்இடைவெளியில் நாமே கண்டறிய வேண்டிய மறைபொருளாகவே காமம் குறித்த அவரது பார்வை ஒளிந்திருக்கிறது. இதையும்கூட கண்ணி வெடியாக நினைத்து சம்பவங்களுக்குள் அவர் புதைத்து வைப்பதுமில்லை. கு.ப.ரா, தி.ஜானகிராமன் போன்ற பிராமணர்களின் கதைகளைப் போல் காமம் குற்றவுணர்வின் ஆங்காரமாகவோ வைணவ சம்பிரதாயத்தின் கண்ணன் – ராதை குறியீட்டை வெளிப்படுத்தும் வாழ்வின் ஆதார சக்தியாகவோ, ஜெயமோகன் கதைகளில் வருவதைப் போல் ஞானத்தின் அடியில் மறைந்திருக்கும் கரிய நிழலாகவோ வெளிப்படுவதில்லை. ஜி.நாகராஜன் போல் அவர் வாழ்வின் கசப்பை காமத்தின்வழி திரைவிரித்துக் காட்டுவதுமில்லை.
அவரிடம் காமம் குறித்து எந்த மயக்கமும் இல்லை. அதைப் பிசாசாகவோ தேவதையாகவோ கருதி சுடுகாட்டிலோ கருவறையிலோ நின்று பிலாக்கணமோ சௌந்தர்ய லஹரியோ அவர் பாடுவதுமில்லை. அடைத்திருக்கும் வீட்டில் போர்வைக்குள் பதுங்கியிருக்கும் இரு உடல்களைக் கையும் களவுமாகப் பிடித்துவந்து, ‘பார்த்தீரா இவர்கள் இலட்சணத்தை?’ என்று வீதியில் நிற்க வைத்து ஷோ காட்டும் உத்தேசமும் அவரிடம் இல்லை. அவரிடம் காமம் குறித்த எந்த அறிவுரைகளுமில்லை. புணர்ந்துகொண்டிருக்கும் உடல்களின் மீது ‘சிறிது வெளிச்சம்’ படுகிறபோது நம் முன்னால் ஒரு கண்ணாடியைத் தள்ளிவிட்டு ‘நீதான் அது’ என்று எக்களித்தபடி தாடியை நீவிவிட்டுக்கொள்கிற அறிவுஜீவித்தனத்தின் எந்தத் தன்முனைப்பையும் அவர் கதைகளில் காண முடியாது. ஆதவனின் சைக்கோ அனலிசிஸோ சுடுகாட்டில் அமர்ந்த பத்மாசனத்திலிருந்து வெளிப்படும் ஜெயகாந்தனின் ஓங்காரச் சிரிப்போ அவரிடம் மருந்துக்குக்கூட இல்லை.
அவர் மனித மனங்களில், செயல்களில், உரையாடல்களில் படிந்திருக்கும் காமத்தை அட்ரஸ் விசாரிப்பதைப் போல நம்மிடம் நெருங்கிக் காட்டிவிட்டு அடுத்த விநாடியே நடக்க ஆரம்பித்துவிடுகிறார். திகைத்து நிற்பது வாசகர் பாடு என்றாலும் அவருடைய நோக்கம் அதுகூட இல்லை. கலைடாஸ்கோப்பில் விதவிதமான சித்திரங்களை ஒரு முதிராச் சிறுவனுக்குக் காட்டிவிட்டு அவன் நிமிர்ந்தவுடன் எந்தக் குறிப்புமில்லாமல் புன்னகைக்கும் ஒரு முதியவரின் புன்னகையே காமம் குறித்த அவருடைய சித்திரிப்பில் ஒளிந்திருக்கிறது. கள்ளன் போலீஸ் விளையாட்டைப் போல மனிதர்களின் காமத்தை இண்டு இடுக்கெல்லாம் தேடி ‘ஐஸ் ஒன்’ என்று முதுகில் சாத்துகிற நவீனத்துவ விளையாட்டோ மனித உடல்களின் மச்ச சாஸ்திரம், தன சாஸ்திரம், குறி சாஸ்திரம் என்று சகலத்தையும் காட்டிவிட்டு பலகையின்முன் சோழி சுழற்றிப்போடும் தற்காலக் கூறுமுறையோ அவருடைய எழுத்து பாணி அன்று. அந்த வகையில் காமத்தின் பாதையில் அவர் பாதம் படித்தவர் என்று சு.வேணுகோபாலை மட்டுமே சொல்ல முடியும்.
காமம் என்பது பாவனைகள் வழியாகவே தன்னை மனித உடல்களில் நிகழ்த்திக்கொள்ள யத்தனிக்கும் விசித்திரமான வஸ்து. கு.அழகிரிசாமி இந்தப் பாவனைகளையே கேள்வி கேட்கிறார். தாய் உடலின் சூட்டுக்கு ஏங்கிய குஞ்சுகள் கண் தெரியாமல் சர்ப்பத்தின் நிழலில் சரணடைவதன் சித்திரமே அவர் கதைகளில் விரிந்துகிடக்கின்றது. காமத்தை வேறொன்றாக உருமாற்றிக்கொண்டபின் அதைத் தொடவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவிக்கும் மனித மனங்களின் துயரத்திலேயே அவர் கவனம் படிகிறது. ‘இந்த விஷத்தைத் துப்பிடு.. இல்லாட்டி தின்னுடு’ என்பதே அவர் கட்சி. துப்பவும் விடாமல் விழுங்கவும் விடாமல் தொண்டையைப் பிடித்துவிட்டு ‘இவன் நீலகண்டனாக்கும்’ என்று ஊருக்குத் தமுக்கடித்துச் சொல்லும் சக்தியின் ‘மகா வல்லமை’ மீது அவருக்குத் தாங்கமுடியாத கசப்பு உண்டு. அந்தக் கசப்பின் நுண்சித்திரங்களாகவும் காமம் குறித்த அவர் கதைகளை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
அவர் எழுதிய மிகச்சிறந்த உருவகக் கதை ‘சொல்லும் பொருளும்‘. அந்தத் தலைப்பே கதையின் மையத்தைச் சொல்லிவிடுகிறது. மனிதப் பாவனைகளின் மிக முக்கியமான வெளிப்பாடாக சொற்களே நிறைந்திருக்கின்றன. உண்மையில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பது சொற்களின் உலகத்தில்தான். இந்த உலகத்தின் ஆதி உணர்வாகிய காமம் அதே இடத்தில் நின்றிருக்க, சொல் நம் கையைப் பிடித்து பல ஒளியாண்டுகள் முன்னே இழுத்து வந்துவிட்டது. இன்னொரு ஆதி உணர்வான பசி எப்போது வேண்டுமானாலும் ஒரு சிறகாக விரிந்து இங்கிருந்து ஏந்தி நம்மை மீண்டும் ஏதேன் தோட்டத்தில் போட்டுவிடுகிறது. ‘பசிக்கிறது’ என்பதை இந்த உலகத்தில் சொல்ல வேண்டியதே இல்லை. அப்படிச் சொல்லாமலேயே அதை இந்த உலகம் புரிந்துகொள்கிறது. உண்மையில் இந்த உலகத்தின் போலித்தனமான நீதியை அசைத்துப்பார்க்கும் மாபெரும் சக்தியாக பசியே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஒவ்வொருவரும் அதற்கு அஞ்சுகிறோம். அதைக் கண்டிப்பாக நாம் மொழிக்குள் சிறைவைக்கவில்லை. ஆனால் காமம் பசியைப் போலன்றி இரு மனிதர்களுக்கு இடையிலானது என்பதால் சொல்லே அவர்களுக்கு நடுவில் பெருஞ்சுவரென விரிந்திருக்கிறது. அதை அழகாகச் சொல்கிற கதையாகவே ‘சொல்லும் பொருளும்’ கதையை நான் உணர்கிறேன்.
மூர்த்தியை தொடர்ந்து அவமானம் செய்கிற டாக்டர் வீட்டில் இருக்கிற அழகான பெண் பிருந்தா. அவளை நிராகரிக்கவே அவன் முயல்கிறான். ஆனால் அவள் அழகு அவனை இழுத்துக்கொண்டே இருக்கிறது. இப்போது அவள் மட்டுமே அவனுடைய ஒரே தொந்தரவாக இருக்கிறாள். அவன் மேல்படிப்பிற்காக இங்கிலாந்து செல்கிறான். இங்கு அவளை நிமிர்ந்துகூடப் பார்க்காத மூர்த்தி, அங்கு சென்றபிறகு அவளுக்குக் கடிதம் எழுதுகிறான். ‘உன் முகத்தைப் பார்த்து தேம்பியழ வேண்டும். இந்த உலகத்தில் நீ எங்காவது இரு. எனக்கு வேண்டியது அது ஒன்றுதான்’ என்பதுதான் கடிதத்தின் சாரம். இந்தக் கடிதத்தை ஒரு கோழையின் அற்பத்தனமான செயலாகக் கருதி கோபப்படும் பிருந்தா யாரிடமும் சொல்லாமல் அக்கடிதத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டுகிறாள். அவன் மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறான். முதல் கடிதத்திற்காக மன்னிப்பு கேட்டுவிட்டு, ‘இந்த இரண்டுமே காதல் கடிதங்கள் அல்ல. என் நாட்டமெல்லாம் பிருந்தா என்கிற உண்மையே தவிர பிருந்தாவின் காதல் அல்ல’ என்று குறிப்பிடுகிறான். இந்தக் கடிதத்தையும் தீராத கோழைத்தனமாகவே கருதி கோபப்படுவதற்குப் பதிலாக இப்போது பிருந்தா சிரிக்கிறாள். சில நாட்களில், ‘அவன் இங்கிலாந்தில் உடம்பு சரியில்லாமல் இருக்கிறான்’ என்பதை அவன் தந்தை வழியாக அறிந்து பரிவுகொள்கிறாள். அவன் ஊருக்கு வந்தபிறகும் பழைய கதையே மீண்டும் தொடர்கிறது.
ஒருவரையொருவர் அலட்சியப்படுத்துகிறார்கள். அவளுக்காகவே ஊரை மாற்றிக்கொண்டு போகும் மூர்த்தி வேறொருத்தியை மணக்கத் தீர்மானிக்கிறான். அதைத் தெரிந்துகொண்ட பிருந்தா அவனுக்கு முதல்முறையாக கடிதம் எழுதுகிறாள். ‘பேய் பிசாசுக்குப் பயப்படுவது போல் இப்போது சொற்களுக்குப் பயப்படுகிறேன். என் சொல் என்னை மோசம் செய்துவிட்டது. என்னை மன்னிக்காதீர்கள்’ என்று கடிதத்தை முடிக்கிறாள். இந்தக் கதையைப் படித்ததும் எனக்குச் சம்பந்தமே இல்லாமல் சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய இரு கடிதங்கள் நினைவுக்கு வந்தன. இரு கடிதங்களையுமே அவன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதே என் பார்வை. கோவலனுக்கும் மாதவிக்கும் நடுவேகூட மணிமேகலை அன்று, சொல்லே படுத்திருந்திருக்கலாம்.
இந்தக் கதையில் இருவருக்கும் இடையே எந்தவிதமான உரையாடல்களும் இல்லை. அவள் அழகும் அதன் மீதான அவன் வழிபாட்டுணர்வும் மட்டுமே இருவருக்கும் இடையிலான மையப்புள்ளியாக இருக்கிறது. இருவருக்குமே ஒருவரைப் பற்றி இன்னொருவருக்குத் தெரியாது. மற்றவரின் சுக துக்கங்களோ குணாதிசயங்களோ தெரியாது. சொல்லப்போனால், மீண்டும் மீண்டும் அடித்துத் துவைக்கப்பட்ட அத்தனை ரொமாண்டிஸிச நாவல்கள், திரைப்படங்களின் தொடக்கக் காட்சிதான் அவர்களுக்கு நடுவிலும் இருக்கிறது. ஆனால் அந்த நாவல்களிலும் திரைப்படங்களிலும் காதல் உரையாடல்கள், நாடகீயமான சம்பவங்கள், வாக்குறுதிகள், ஆறுதல்கள், அழுகைகள் யாவும் நிறைந்திருக்கும். அப்படி எதுவுமே நிகழவில்லை என்றாலும் இங்கும் அதே உணர்வுதான் வளர்த்தெடுக்கப்படுகிறது. ஒருவேளை மூர்த்திக்கும் பிருந்தாவுக்கும் இன்னும் கொஞ்சம் தைரியமும் மரபின் மீதான அசட்டையும் இருந்திருந்தால் அவனிடமும் பிருந்தா தி.ஜா.வின் யமுனாவைப் போல ‘இதற்குத்தானா?’ என்று கேட்டிருப்பாள். ஆனால் கு.அழகிரிசாமி சுட்டிக்காட்டுவதே இந்தப் பாவனைகளைத்தான். காமத்தையல்ல, காமத்தின் பெயரால் சமூகத்தில் உருவாகிவிட்ட பாவனைகளையே அவர் கேள்விக்குள்ளாக்குகிறார்.
‘காதல் போட்டி’ கதையை இதன் நீட்சி என்றே சொல்லலாம். ராகவன், பாமாவின் அண்ணன் இருவரும் நண்பர்கள். அந்த உரிமையில் பாமாவும் அவனோடு நெருக்கமாகப் பழகுகிறாள். ஆனால் சூழலால் உருவாகும் ஒரு பொய்யான வதந்தி அவர்களை ஆண் – பெண்ணாக உணரச்செய்கிறது. அதன்பிறகு ஒருவரையொருவர் வெறுக்கத் தொடங்குகிறார்கள். அந்த வெறுப்பே அவர்களை மேலும் மேலும் நெருங்கிவர வைக்கிறது. கதையின் தொடக்கத்தில் அவன் நாற்காலியில் விழப்போகும் போது அவள் தாங்கிப் பிடிப்பதற்கும் முடிவில் அவன் பக்கத்தில் இருப்பதைத் தாங்கமுடியாமல் அவள் பொய்யாக டிராயரில் எதையோ தேடுவதற்கும் இடையில் பல நாட்களாக இருவரின் மனவெளியில் மாறி மாறி எழுந்த அத்தனை உணர்வுகளும் பொய்க்கோலங்களே. ‘ராகவனுக்கு கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. பாமாவுக்கோ உடம்பு முழுவதும் நடுங்கியது’ என்று கதையை நிறைவுசெய்கிறார் கு.அழகிரிசாமி. இரண்டு வன விலங்குகளை அடையாளம் கண்டு கதவைச் சாத்தும் சர்க்கஸ் காவலனின் நுட்பம் அந்த எழுத்தில் இருக்கிறது.
‘சொல்லும் பொருளும்’ கதையைப் போல கானல் நீரிலேயே தாகம் தணிந்துவிடாமலோ, ‘காதல் போட்டி’ கதையைப் போல் துணிந்து குடத்தைக் கவிழ்த்துவிடாமலோ பல தருணங்களில் மனிதர்கள் ஆண் – பெண் உறவை சிலந்தி வலையெனப் பின்னி தங்களையே பல்லிகளாக்கி விழுங்குகிறார்கள். அப்படியொரு நுட்பமான வலைப்பின்னலைச் சொல்கிற கதைதான் ‘விட்டகுறை தொட்டகுறை’. இந்தக் கதையைப் படித்ததும் எனக்கு ‘அவள் ஒரு தொடர்கதை’ சுஜாதா கதாபாத்திரம் நினைவுக்கு வந்தது (அந்தப் படமே ரித்விக் கட்டக் படத்தின் காப்பி என்பது வேறு விஷயம். பாலச்சந்தர் இந்தக் கதையைப் படித்துவிட்டு அதுகுறித்து வெளியில் பேசாமல் இருந்திருப்பதற்கும்கூட வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் கதை எழுதப்பட்ட ஆண்டு 1965)
கதையில் சுந்தரம் – நீலா இருவரும் நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட கோட்டில் பழகி வருகின்றனர். தகப்பனில்லாத குடும்பத்தில் ஆண்மகனைப் போல் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் கம்பீரமாக நடிக்கத்தெரிந்த நீலா, தன் குறைவான சம்பாத்தியத்தில் மூன்று தங்கைகளையும் தாயையும் காப்பாற்றி வருகிறாள். சுந்தரத்திற்கு அவள்மீது காதல் இருந்தாலும் தன் குடும்பச் சூழ்நிலையாலும் ‘இப்போதைய நிலையில் அவளைக் கல்யாணம் செய்துகொள்பவனே அவள் தாய்க்கும் தங்கைகளுக்கும் எமன்’ என்கிற மேனேஜரின் எச்சரிக்கையாலும் அந்தக் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால் நீலாவின் மனம் என்னவென்பதை அப்போது அவனாலும் முழுமையாக உணர முடியவில்லை (‘என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்’ என்ற கண்ணதாசன் வரிகள் படத்திற்கு மட்டுமல்ல கதைக்கும் பொருந்திப்போகின்றன) சுந்தரம் பம்பாயில் நல்ல வேலை கிடைத்து விலகிச்செல்கிறான். அப்போது அவனுக்கு நல்ல சம்பந்தத்தில் திருமணம் நிச்சயமாகிறது. மணப்பெண்ணும் புகைப்படத்தில் அழகாக இருக்கிறாள்.
திருமணத்திற்காக ஊருக்குப் போகையில் அவனுக்குள் ஏதோவோர் உணர்வு எட்டிப்பார்க்க நீலாவின் வீட்டிற்குப் போகிறான். நீலா வழக்கம்போல இப்போதும் புதிராகவே இருக்கிறாள். அவனுக்குத் திருமணம் என்று சொல்லி புகைப்படத்தை எல்லோரிடமும் காட்டியதும் சடாரென்று எழுந்து அறைக்குள் போகிறாள். அவளுடைய செய்கையால் அவமானப்பட்ட சுந்தரம் கிளம்ப யத்தனிக்கிறான். அவனைத் தடுத்து தேநீர் சாப்பிட்டுவிட்டுப் போகும்படி கூறுகிறாள். அவள் அவனிடம் புதிராகவே பேசுகிறாள். தனிமை தந்த தைரியத்தில் சுந்தரம் அவள் கையைப் பிடிக்க, அதை முரட்டுத்தனமாக உதறி, ‘நீ அயோக்கியன்.. எழுந்து போ’ என்று கத்துகிறாள். தன்னிடம் அன்போடு பேசிவிட்டு இந்தச் சின்ன விஷயத்திற்காக தன்னை அவமானப்படுத்தி விரட்டியதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. சில நாட்கள் கழித்து அவன் தொலைபேசி வழியாக, ‘இப்போதும் என்னை அயோக்கியன் என்று நினைக்கிறாயா?’ எனக் கேட்கும்போது ‘சந்தேகமில்லாமல்’ என்று தீர்க்கமாகப் பதில் சொல்கிறாள். இந்த இடத்திலேயே கதை முடிந்துவிடுகிறது.
‘அவள் ஏன் அவ்வளவு கோபம் கொள்கிறாள்?’ என்கிற கேள்வியைப் பிடித்தபடி பயணிப்பதன் மூலமாகவே இந்தக் கதையின் மையத்தை நாம் அடைய முடியும். அவர்களுக்கிடையில் எந்த வாக்குறுதியும் இல்லை. அவ்வாறிருக்க திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகும்கூட அவன் அவளைத் தேடிவந்தது வெறுமனே திருமணம் பற்றிக் கூறுவதற்காக அல்ல. சுந்தரத்தின் ஆழ்மனதிற்குள் அவள்மீது தீராத ஆசை இருக்கிறது. அதை அவன் கண்கள் வழி அவளும் உணர்கிறாள். அதே ஆசை தனக்குள்ளும் எழுவது அவளைக் குழப்புகிறது. இந்தக் குழப்பத்தை அவள் உடல்மொழி வாயிலாக உணர்ந்துகொண்டதால்தான் சுந்தரம் தைரியமாக அவள் கைகளைப் பற்றுகிறான். அவள் ஒருவேளை ‘அயோக்கியன்’ என்று கத்தாமல் இருந்திருந்தால் வேறொரு இரகசிய உறவுக்கான விதை அங்கே விதைக்கப்பட்டிருக்கும்.
ஏனென்றால் சுந்தரம் தன்னைத் திருமணம் செய்யவும் முன்வர மாட்டான் என்பதை அவள் நன்றாக அறிந்தவள். அவனது குணச்சித்திரம் அவளுக்கு அத்துப்படி. அவள் அவனைக் குற்றவுணர்வில் ஆழ்த்துவதன் வாயிலாகவே அதிலிருந்து மீள்கிறாள். இந்தக் கதையிலும்கூட அவள் உடல்மொழிக்கும் அவனுடைய ஆசைக்கும் நடுவே சில பாவனைகள் சொல்லாகிவந்து படுத்திருக்கின்றன. ‘அவன் அயோக்கியன்’ என்பதற்கான காரணங்களை வரிசையாய் மனதிற்குள் அடுக்கிக்கொண்டால் மட்டுமே அதிலிருந்து தான் மீள முடியும் என்று அவளுக்குத் தெரியும். அதனால்தான் அவன் தொலைபேசியில் மன்னிப்பு கேட்டு பேசுகிறபோது அவளே தன் பாவனைகளை முழுமையாக நம்பிவிட்ட இடத்திற்கு வந்துசேர்கிறாள். இந்தக் கதையில் இருவரின் உளவியல் குறித்து கு.அழகிரிசாமி எந்த வர்ணனையும் செய்யவில்லை. நாமே இந்த இடத்தை வந்தடைவோம் என்கிற கனிவே அவர் கதைகளின் பெரும்பலம்.
இதனுடைய உச்சமாக ‘காதல்’ என்ற சொல்லையே தூக்கிப்போட்டு மிதித்து அதன் பாவனைகளைத் தோலுரித்த கதையாக ‘அழகின் விலை‘யைச் சொல்லலாம்.
சினிமா நடிகனைப் போன்ற அழகுகொண்ட ஹோட்டல் சர்வர் ராஜன்மீது ஸ்கூல் டீச்சர் லலிதா கண்டதும் காதல்கொள்கிறாள். தன்னோடு டிபன் சாப்பிட உடன்வரும் தோழியைக்கூட அவனுக்காக வெறுக்கிறாள். அவள் அவனைக் கைப்பற்றிவிடுவாளோ என்கிற பயத்தில் ராஜனுடன் உரையாடலே நிகழாதபோதும் அவனோடு ஓடிவிட எண்ணுகிறாள். பிறகு தன் மனதின் அபத்தத்தை உணர்ந்து அவனோடு பழக முயல்கிறாள். தன் வாழ்க்கை குறித்து அவன் கூறும் கதைகளின் வழியாக தனக்குள் இரக்கத்தையும் அனுதாபத்தையும் பரப்பி அந்த அடித்தளத்தில் காதலெனும் செங்கல் நட்டு ‘இது தெய்வீகமான உறவு’ என்று தன்னையே நம்ப வைக்கிறாள். நகைகளோடு ஓடிப்போய் சகலத்தையும் தொலைத்து கர்ப்பமான பிறகே அவனுக்கு ஏற்கனவே மனைவி இருப்பதும் அவன் பயங்கரமான அயோக்கியன் என்கிற விஷயமும் தெரிய வருகிறது. அவன் சட்டையைப் பிடித்து தன் இழப்பைச் சொல்லி அழும்போது, ‘நீ உன் வாழ்க்கையை எனக்கு அர்ப்பணிக்கவில்லை. என் அழகுக்கு அர்ப்பணித்தாய். உன் வாழ்க்கை, என் அழகை அனுபவிக்க நீ கொடுத்த விலை. தப்பு.. வாடகை. உன் வாடகை ஏழெட்டு மாதங்களில் கழிந்துவிட்டது. இனி என் அழகை நீ உபயோகிக்க முடியாது’ என்று பதில் கூறுகிறான். இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் வசனம் வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். ஆனால் அறுபதுகளில் இந்த வசனமே அதிர்ச்சியூட்டியிருக்கும். தனக்குள் எழும் இயல்பான காமத்தை தன் மனதிலும் ஆணின் பார்வையிலும் பாவனைகளாகவே பெருக்கி அதனை ‘தெய்வீகக் காதல்’ என்று அர்த்தப்படுத்திக்கொள்ளும் பெண் அதற்கே இரையாகி வீழ்வதை உண்மையின் மூர்க்கத்தோடு கதையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பசி X காமம் என்பதை ‘கவந்தனும் காமனும்’ கதையின் வழி விவாதித்திருப்பார் புதுமைப்பித்தன். அந்த விவாதத்தை உச்சத்திற்கு எடுத்துச்சென்ற கதையாக கு.அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ கதையை மதிப்பிட முடியும். முப்புரங்களை எரித்தவனே ஆதி யோகியாகிறான். ‘கன்மம், மாயை, ஆணவம்’ என்று முப்புரங்களுக்கு குறியீட்டு விளக்கம் தருவார்கள். வாழ்க்கையில் எரிக்க வேண்டிய ஒரே முப்புரமாக ‘பசி’ பிரம்மாண்டமாக நின்றபடி சகலரையும் சமர் புரிய அழைக்கிறது. முப்புரங்களை எரித்தால் ஞானம் கிட்டுமென்றால் இங்கே பசியை எரித்த உடனேயே மனித உடலுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமாய் காமம் அமர்ந்துகொள்கிறது.
ஆந்திராவிலிருந்து கோவில்பட்டிக்கு பஞ்சம் பிழைக்க வரும் நரசம்மா, பசி தாளமுடியாமல் தன் மகள் வெங்கிடம்மாளை முன்பின் தெரியாத இருவருக்குக் கூட்டிக்கொடுப்பதுதான் கதை. அந்தக் கதையில் வேறொரு நுட்பமும் உண்டு. ஊருக்கு வரும் வழியில் கீழே கிடந்த பாதி கடித்த வெள்ளரியை பசி தாளாமல் எடுத்த நரசம்மாள், மகளின் கேலியால் வேறு வழியில்லாமல் தூக்கி எறிகிறாள். பிறகு மகளை வெட்டவெளியில் தனியே நிறுத்திவிட்டு அதை மீண்டும் தேடிப் போகிறாள். அப்போது மனிதக் கால்களில் மிதிபட்டு இன்னும் அழுக்காக மாறிவிட்டாலும், பசி வெறியில் அதையெடுத்து உண்கிறாள். அப்போது சிலர் அவளை அசூயையோடு பார்க்கின்றனர். அவள் அந்தப் பார்வையை அலட்சியப்படுத்துகிறாள். ‘அவள் வெட்கப்படுவது வெங்கிடம்மாளின் முன்னிலையில்தானே ஒழிய உலகத்தின் முன்னிலையில் அல்ல’ என்று நரசம்மாவின் மனநிலையை கு.அழகிரிசாமி படைத்துக்காட்டுகிறார்.
அன்றிரவு தாயின் முன்னிலையிலேயே மகளின் உடலை யாரோ இருவர் அனுபவிக்கப் போவதற்கான குறியீடாகவும் தாயும் மகளும் சகலத்தையும் துறந்து ‘நிர்வாணம்’ அடையப் போவதற்கான முன்னறிவிப்பாகவும்கூட பழத்தைத் தின்னும் இந்தக் காட்சியைப் பார்க்க முடியும். அந்த இருவரும் தன்னைக் காமத்தோடு நெருங்கும் போதுகூட ‘பசிக்கிறது’ என்று சாப்பாடு கேட்கும் குழந்தையான வெங்கிடம்மாள் ஒரே இரவில் வேறொரு ஆளாக உருவெடுக்கிறாள். மறுநாள் காலை ரயில்வே ஸ்டேசனில் அவர்களிடம் தன் உடலுக்கான கூலியாகப் பெற்ற பணத்தை இரு கைகளிலும் மாற்றி மாற்றி குலுக்கியபடி உலகத்தைப் பார்த்துச் சிரிக்கும் பசிதீர்ந்த வெங்கிடம்மாளின் சிரிப்பிற்குள் அவள் நேற்றிரவு புதிதாய் உணர்ந்த காமமும் ஒளிந்திருப்பதை மறுவாசிப்பில் உணர முடியும். அப்படியொரு புரிதலை நோக்கி நகர்கிறபோது அந்தச் சிரிப்பிற்கும் வேறொரு பொருளை மீட்டெடுக்க முடியும். காமத்தை வெறுமனே உடல்களின் இயக்கமாகச் சித்திரிக்காமல் ஆழ்ந்த நுண்ணுணர்வோடு படைத்துக் காட்டியிருப்பதாலேயே கு.அழகிரிசாமி அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மட்டுமல்ல, இன்றும் தனித்துத் தெரிகிறார்.
-தொடரும்.
1 comment
Excellent article
Comments are closed.