கமல் பெருமூச்சுடன் விலகியபோது மின்வெட்டு நிகழ்ந்தது போலிருந்தது காயாவுக்கு. குழந்தையின் கையிலிருக்கும் பொம்மையை வெடுக்கெனப் பறித்த மாதிரி இருந்தது.

அவளை அதிகம் யோசிக்கவிடாமல் தலையணைக்கடியிலிருந்த செல்பேசி கனைத்தது.

அகாலத்தில் ஒலிக்கும் தொலைபேசிகள் அச்சமூட்டத்தான் செய்கின்றன. காயா தயங்கி எடுத்துப் பார்த்த‌போது திரையில் அம்மாவின் நிழற்படம் அந்த இருளில் கூடுதலாக ஒளிர்ந்தது.

கமல் பெர்முடாஸ் அணிந்து, நாடா இறுக்காமல் படுத்து, கண்களை மூடிக்கொண்டான். காயா பச்சை வட்டத்தில் பெருவிரலிட்டு இடமிருந்து வலம் தடவி அழைப்பை எடுத்தாள்.

“ஹலோ, சொல்லும்மா…”

“அம்மா இல்லங்க. நான் பக்கத்து வீட்ல இருந்து பேசறேன். உங்க அம்மாவுக்கு ரொம்ப முடியல. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம். கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர்றீங்களா?”

“ஐயோ, என்ன ஆச்சு?”

“நைட் திடீர்னு கத்தினாங்க. அப்பார்ட்மெண்ட் முழுக்க முழிச்சுக்கிச்சு. வந்து பார்த்தா வலி தாங்க முடியலன்னு சொல்றாங்க. இவுங்களுக்கு என்ன? யுடிரஸ்ல‌ பிராப்ளமா?”

“ம்ம்ம். அம்மாகிட்ட கொடுக்கறீங்களா?”

“அவுங்க முன்னாடி ஆம்புலன்ஸ்ல‌ போறாங்க. பேசற நிலைல இல்ல. என் வைஃப் அவுங்க கூட இருக்கா. உங்க நம்பர் தேடறதுக்கு சிரமம் ஆகிடுச்சு. அதான் லேட்.”

“எங்கே கூட்டிட்டு போறீங்க?”

“அம்மா அடையார் கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்தான் போகச் சொன்னாங்க.”

“ம். நல்லா இருக்காங்கல்ல?”

“அப்படித்தான் நினைக்கிறேன். நீங்க‌ உடனே வந்துடுங்க.”

அவரது அவசரத்திலேயே அம்மாவின் நிலை பற்றிய ஒரு குறிப்பு இருந்ததாய்ப் பட்டது.

“வந்திடறேன். நான் பெங்களூர். காலை ஆகிடும்.”

துண்டித்துத் திரும்பிய போது கமல் மெலிசாய்க் குறட்டைவிட்டான். எழுப்பலாமா என ஒருகணம் தயங்கி, பின் அவனுக்குக் கலவி தந்தது நினைவுக்குவர, சமாதானமாகி எழுப்பினாள்.

*

கமல் காயாவுக்கு டாக்ஸி ஏற்பாடு செய்தான். தனக்கு அலுவலக வேலை இருப்பதாகவும் அவசியப்பட்டால் வார இறுதியில் கிளம்பி வருவதாகவும் சொல்லி அனுப்பிவைத்தான்.

தான் தனியாக வாடகைக் காரில் முந்நூற்றைம்பது கிலோமீட்டர்கள் பயணிப்பது பற்றி முகத்தில் ஏதேனும் கவலை இருக்கிறதா என கமல் வாசல் கேட்டைப் பிடித்து நின்றபடி கையசைத்து வழியனுப்புகையில் தேடினாள். இல்லை. மாறாக இலேசான மகிழ்ச்சிகூட இருந்ததாய்ப் பட்டது. நாளை இரவு நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மது அருந்துவான்.

இப்போது அப்பா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என நினைத்தாள்.

அப்பா வீட்டை விட்டு ஓடிப்போன போது காயாவுக்கு ஏழ‌ரை வயது. இந்த‌த் தீபாவளி வந்தால் அவர் போய் முழுதாய் இருபதாண்டுகள் ஆகிவிடும். எதற்குப் போனார் என்றே தெரியாமல் ஒரு குளிர் விடியலில் மொத்தமாய் அவர்கள் வாழ்வே மாறிவிட்டிருந்தது.

அம்மா அதன்பிறகு ஒருபோதும் அவரைப் பற்றிப் பேசியதே இல்லை. காயா ஏதேனும் பேசினாலும் மௌனமாகிவிடுவாள். பின் நாட்கணக்கில் பேசாமல் இருப்பாள். அதற்கு அஞ்சியே ஒரு கட்டத்திற்குப்பின் காயா அவர் பேச்சை எடுப்பதைத் தவிர்த்துவிட்டாள்.

அப்பா நினைவாய் அவர்கள் வீட்டிலிருக்கும் ஒரே வஸ்து அவரது வெள்ளை வேட்டிதான்.

*

காயா நேராய் மருத்துவமனையில் போயிறங்கினாள். அவள் போனபோது ஐசியூவில் அம்மா தூங்கிக்கொண்டிருந்தாள். இரவெல்லாம் ஒரு துளியும் உறங்காமல் வலியில் கத்திக்கொண்டே இருந்து அதிகாலையில்தான் தூங்கிப்போனாள் என இரவுப் பணி முடிந்து கிளம்ப ஆயத்தமான வெள்ளுடைச் செவிலி சொன்னாள். அம்மாவின் வாய் திறந்திருந்தது. அந்தக் காட்சியே அச்சமும் தொந்தரவும் ஊட்டக்கூடியதாய் இருந்தது.

அம்மாவின் நெற்றியில் வெறுமை. கைப்பையிலிருந்து ஸ்டிக்கர் பொட்டெடுத்து ஒட்டினாள்.

இப்படி அம்மாவைப் பார்க்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. முந்தைய தினம்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் பகிருங்கள் எனக் கருணாநிதி கேட்டிருந்தார். இந்த மாதிரியான‌ கோலத்தில் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள எவருக்கு விருப்பமிருக்கும் எனத் தோன்றியது காயாவுக்கு.

அங்கிருந்த மார்த்தாண்டம் நர்ஸிடம் வீடுபோய் குளித்துச் சாப்பிட்டு, அம்மாவிற்குத் தேவையான பொருட்கள் எடுத்து வருவதாகச் சொல்லிவிட்டு, டாக்டர் எப்போது வருவார் எனக்கேட்டு, நேரம் கணக்கிட்டுக் கிளம்பினாள். அம்மாவுக்கு அங்கேயே உணவு உண்டு.

*

அம்மாவுக்கு யோனிப் புற்றுநோய். Vaginal Cancer என்று சொல்லச் சங்கடமாய் இருந்தால் Squamous Cell Carcinoma என்று நுனிநாவில் சொல்லலாம். பொதுவாய் அறுபது வயதுக்கு மேல்தான் இந்நோய் வரும் என்றார்கள். அம்மாவுக்குப் பத்து வருடங்கள் முன்கூட்டியே வந்துவிட்டிருந்தது. டாக்டர் இன்னொன்று சொன்னார். பல ஆண்டுகளாய் உடம்பிலேயே சத்தமில்லாமல் இருந்திருக்கவும் வாய்ப்புண்டு என. அதாவது பத்திருபதாண்டுகள்கூட.

கருப்பைவாய்ப் புற்றுநோயிலிருந்து இது வேறுபட்டது. இது நேராகப் பிறப்புறுப்பிலேயே வருவது. அதைவிட அரிதானது. HPV எனப்படும் வைரஸின் மூலம் வந்திருக்கலாம் என ஆரூடம் சொன்னார் டாக்டர். உடலுறவின் மூலம் வந்திருக்கலாம் அல்லது மது, புகை, அல்லது பேறுகாலத்தில் எடுத்த சில மருந்துகளும் காரணமாய் இருக்கலாம் என்றார்.

அம்மா இரண்டு ஆண்டுகளாய் இதற்குத் தொடர்சிகிச்சை எடுத்துக்கொள்கிறாள். கீமோதெரபியும், ரேடியோதெரபியும் அவள் உடலைப் பிய்த்துப் போட்டிருந்தன. 

ஒவ்வொரு மாதமும் நான்கைந்து நாள் மருத்துவமனையில் போய்த் தங்கவேண்டும்.

கூந்தல் உதிர்ந்தது, எடை குறைந்தது, இடுப்பும் அடி வயிறும் தொடையும் கதிர்வீச்சில் கறுத்தது. மனதிலும் உடலிலும் வலி நிரம்பி வழிந்தது. அம்மா யாரோ மாதிரி ஆனாள்.

முதல் சில மாதங்களுக்கு காயா பெங்களூலிருந்து சென்னை வந்து போய்க்கொண்டிருந்தாள். பிறகு கமல் மெல்ல முணுமுணுக்கத் தொடங்க, ஒரு பெண்ணைப் பணிக்கு அமர்த்திப் பார்த்துக்கொண்டார்கள். பகல் முழுக்க அவள் அம்மாவுடனிருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் பேசினார்கள். அதுபோக, மதிய வேளை உணவு, இரண்டு வேளை தேநீர், பேருந்துப் பயணப்படி. நெற்றி, தோள்பட்டைகளில் சிலுவைக் குறியிட்டு ஒப்புக்கொண்டாள். இரவு உணவு கொடுத்துவிட்டுக் கிளம்பினால் மீண்டும் காலையில் கழிவறை அழைத்துப்போக வந்து விடுவாள். ஆனால் இரவு தனிமைதான்.

வயோதிகத்தில் ஒவ்வொரு தனிமை இரவும் இரண்டாய்க் கணக்காகி ஆயுள் அழியும்.

*

காயா அவசரமாய் மருத்துவமனை மீண்டபோது சரியாக‌ டாக்டர் பார்க்க வந்திருந்தார். 

கடைசி நேரத்தில் ஓலா ஒத்துழைக்காததால் ஆட்டோவில் ஏறி வந்திருந்தாள். அவளுக்கு வியர்த்துக்கொட்டி மூச்சு வாங்கியது. டாக்டர்முன் நின்றபடி சீராக்கிட‌ முனைந்தாள்.

“ஒன்னுமில்ல. சரியாகிடும், சரிங்களா?”

அம்மாவிடம் சிரித்தபடி சொல்லிவிட்டு மெல்ல நகர்ந்து காயாவிடம் வந்தார். முந்தைய இரவு எடுத்த‌ PET ஸ்கேன் ரிப்போர்ட்டை நிதானமாய்ப் பார்த்து இறுக்கமாய்ப் பேசினார்.

“புற்று நுரையீரலுக்கும், கல்லீரலுக்கும், எலும்புகளுக்கும் பரவிடுச்சு. இனி கஷ்டம்தான்.”

“இப்ப என்ன பண்ணலாம், டாக்டர்?

“இனி ட்ரீட்மெண்ட் பார்ப்பதேகூடப் பயனில்ல. அவுங்களுக்கும் அனாவசிய சிரமம்.”

“…”

“என் சஜஷன் வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடுங்க. பிடிச்ச மாதிரி இருக்கட்டும்.”

“வேற வழியே இல்லையா?”

“இருந்தா நானே சொல்லி இருப்பேனே?”

“டாக்டர்…”

“சொல்லும்மா.”

“இன்னும் எவ்ளோ காலம்…?”

“அதிகமில்ல. சில நாள்.”

காயா அதிர்ந்தாள். கண்களில் நீர் துளிர்த்த‌து. அம்மா அவளைப் புரியாமல் பார்த்தாள்.

*

அப்பா வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்பதே அம்மாவுக்கு இரண்டு நாட்கள் கழித்துதான் உறைத்தது. அவர் துண்டு, லுங்கி, விரிப்பு போன்ற துணிகளை வாங்கி விற்கும் மொத்த வியாபாரத்தில் இருந்தார். அதன் பொருட்டு அவ்வப்போது வெளியூர்கள் பயணமாவதும், ஓரிரு நாட்களுக்குப்பின் திரும்புவதும் இயல்புதான். இம்முறை ஒரே வித்தியாசம் அப்பா சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிப்போயிருந்தார். அதனால் முதல் நாளிலிருந்தே அம்மா பதற்றமாய் இருந்தாள். ஆனால் வந்துவிடுவார் என்கிற நப்பாசையுடன் காத்திருந்தாள்.

அதுவோர் அசட்டு நம்பிக்கை. மூன்றாம் நாள் ஏதோ புரிந்து அவரைத் தேட ஆரம்பித்தாள். 

அப்பா தொலைபேசி எண்கள் எழுதி வைத்திருந்த கையகல டைரி எடுத்துக்கொண்டு காயாவையும் அழைத்துக்கொண்டு பொதுத் தொலைபேசி நிலையத்துக்குப் போனாள்.

பொதுவாக நலம் விசாரிப்பதுபோல அல்லது காசு கொடுக்கல் வாங்கல் பற்றிய ஓர் உரையாடலாகத் தொடங்கினாள். “முரளி நல்லா இருக்காரா?” என அவர்கள் கேட்டதும் “நலம்” என்று சொல்லித் துண்டித்தாள். எங்கும் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

தொலைபேசி நிலையக்காரர் பற்கடிச் சப்தத்துடன் அச்சடித்த நீளத் துண்டுக் காகிதம் நீட்டினார். கையிலிருந்த‌து போக மீதம் செலுத்த வேண்டிய தொகைக்கு கடன்சொல்லி வந்தாள். தொலைபேசியகத்தில் எவரும் கடன் சொல்வதில்லை. அவர் அம்மாவை ஒரு மாதிரி பார்த்தார். அம்மா தலை குனிந்துகொண்டாள். அன்று குனிந்த தலை, பிறகு ஓர் உடல் ஊனம்போல் எவ்வளவு முன்னேறியும் இருபதாண்டுகளில் சரியாகவே இல்லை.

அம்மா அதன் பிறகும் காத்திருந்தாள். அக்கம்பக்கத்தில் அப்பா சிலோனுக்கு வியாபார நிமித்தம் போயிருப்பதாய்ச் சொன்னாள். அது புதிதில்லை என்பதால் நம்பினார்கள்.

ஒரு நாள். ஒரு வாரம். ஒரு மாதம். அப்பா வரவில்லை. அம்மாவின் நம்பிக்கை ஒடிந்தது.

இடையே வாடகைத் தேதி வந்தபோது வீட்டு உரிமையாளரிடம் ஒரு மாதம் அவகாசம் கேட்டாள். அடுத்த மாதம் வாடகைத் தேதி வந்தபோது உரிமையாளர் வந்து இளித்தார்.

“வெச்சுக்கிட்டே வஞ்சனை பண்ணினா எப்படிம்மா?”

“இல்லிங்க. நிஜமாவே காசு இல்ல. அவர் அனுப்பினாத்தான்.”

“நீயே ஒரு வழி சொல்லும்மா.”

“கொஞ்சம் டைம் கொடுங்க.”

“ஒரு மாசம் கொடுத்தேனே?”

“இன்னும் ஒரு வாரம்…”

“என்ன மாறிடும், முல்லை?”

அம்மா அவரைச் சட்டென நிமிர்ந்து பார்த்தாள். இதுவரை அவர் அப்படிப் பெயர்சொல்லி அழைத்ததில்லை. திரும்பி காயாவைப் பார்த்தாள். அவள் ஏதும் புரியாமல் விழித்தாள்.

“பாப்பா, நீ உள்ளே போ.”

அவர் அப்படிச் சொன்னதையும் அம்மா ஏதும் பேசாமல் நின்றதையும் கண்டு தயங்கிக்கொண்டே காயா படுக்கை அறைக்குள் போய் கதவைச் சாத்தினாள். பேச்சு கேட்டது.

“காசாத்தான் கொடுக்கணும்னு, இல்ல.”

அது புரிந்தபோது முல்லை அவரை அதிர்ச்சியாய்ப் பார்த்தாள். அப்போதுதான் அவர் தலைக்கு டை அடித்திருப்பதை முல்லை கவனித்தாள். சிரித்தபடி அவளை அளந்தார்.

முல்லை ஏதும் பதில் சொல்லவில்லை. அதற்கு அவளுக்குத் தெம்பில்லை. ஏழு வயதுப் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு துடைத்துவிட்டது போல் வீட்டை வைத்துக்கொண்டு அவளால் சமாளிக்க‌ முடியவில்லை. டிவி, சைக்கிளை விற்றதில்தான் கடந்த ஒன்றரை மாதத்தையே ஓட்டி இருந்தாள். இனி விற்பதற்கு அந்த வீட்டில் ஒன்றுமில்லை.

“யோசிச்சு சொல்லு. வர்றேன்.”

அம்மா அடுத்த‌ மூன்று நாட்களில் வீட்டைக் காலிசெய்தாள். துணி மணிகள், சமையல் பாத்திரங்கள், காயா பள்ளியில் வாங்கிய பரிசுகள், குத்து விளக்கு முதலிய சாமான்கள் என‌ விற்று வாடகை பாக்கியை நீட்டிய‌ போது வீட்டு உரிமையாளருக்கு முகமே இல்லை.

“நீ எங்கே ஓடினாலும் இது துரத்தும், முல்லை. யார்கிட்டயாவது சரின்னு சொல்லித்தானே ஆகணும்? அது என்கிட்டயே முடிச்சிருக்கலாம். பரவால்ல… எப்ப மனசு மாறினாலும் வா.”

சொல்லிக்கொண்டே முரளி அந்த வீட்டுக்கு வந்தபோது கொடுத்த‌ அட்வான்ஸில் பல்ப் ஃப்யூஸ், சுவரில் கிறுக்கல் எனக் கணக்கிட்டு மீதம் என்று நூறு ரூபாயைக் கொடுத்தார்.

அம்மா அந்த ஒற்றை நூறு ரூபாய்த் தாளில்தான் தனது மறுஜென்மத்தைத் துவக்கினாள்.

*

சென்னை அம்மாவை வரவேற்றது. அவளது பள்ளித் தோழி ஒருத்தி – திருமணம் செய்துகொள்ளாதவள் – அதிகம் கேள்வி கேட்காமல் அவர்களை வீட்டில் சேர்த்துக்கொண்டாள்.

அம்மா காதலித்துத் திருமணம் செய்தவள். அதனால் அவர்களை இரு வீடுகளும் ஒதுக்கிவிட்டன. ஒருவ‌ர் சாதியைக் காரணம் காட்ட, மற்றவ‌ர் பணத்தைக் காட்டினார். கசப்பே எஞ்சியது. இருபது வயதில் வீட்டைவிட்டு வெளியேறியவள் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தொடர்பே இல்லாமல் இருந்துவிட்டாள். ஒருவேளை இப்போது அவர்கள் சமாதானமாகி இருக்கலாம்தான். ஆனாலும் அப்பா இன்றி அவர்களிடம் போக அவள் விரும்பவில்லை.  

‘அடிப்பாவி, என் மகனைத் துரத்திட்டியா?’ என்று ஒரு தரப்பு கேட்கும். ‘நாங்க அப்பவே சொன்னோம் கேட்டியா?’ என மற்றது சொல்லும். எல்லாச் சொற்களும் நாராசம்தான்.

அம்மா பன்னிரண்டாவது முடித்தவள். கிண்டர் கார்டன் மட்டும் கொண்டிருந்த சிறிய, புதிய பள்ளியில் அம்மா எல்.கே.ஜி ஆசிரியையாகச் சேர்ந்தாள். ஆயிரம் ரூபாய் சம்பளம், காயாவுக்கு இலவசப் படிப்பு என்ற பேரத்திற்குச் சம்மதித்தாள். அவளது பொறுமைக்கும் இனிமைக்கும் அது பொருந்தியது. தலைமை ஆசிரியைக்குப் பிடித்தவளாகிப் போனாள்.

சரியாக ஒன்பதாம் மாதத்தில் அட்வான்ஸுக்குப் போதிய தொகை சம்பளச் சேமிப்பில் சேர்ந்ததும் தோழிக்குக் கண்ணீர்மல்க நன்றி சொல்லி பள்ளிக்கருகே வேளச்சேரியில் சின்னதாய் ஒரு வீடு வாடகைக்குப் பிடித்தாள். காயாவுக்குப் புதுத்துணி வாங்கினாள்.

தலைமை ஆசிரியை ஆலோசனையின் பேரில் தொலைதூரக் கல்வியில் பி.ஏ.வும், பின் எம்.ஏ.வும் முடித்தாள். உடனே அவளே அம்மாவை வேறொரு பெரிய பள்ளிக்குச் சிபாரிசு செய்தாள். கூடுதல் பொறுப்பு, கூடுதல் சம்பளம். சில மாதங்களில் வீடு மாறினார்கள்.

முதல் பத்து ஆண்டுகள் எத்தனையோ ஆண்களை அவள் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆறுதல் சொல்லி ஆரம்பிப்பார்கள். சில தினங்களில் தவறாமல் “கை தவறி” ஒரு ஏ ஜோக் அனுப்புவார்கள். கொஞ்சல், கெஞ்சல், மிரட்டல் என எத்தனை வித‌மான‌ உபாயங்கள்!

ஒரு கட்டத்தில் அந்தத் தெரு, அவள் பள்ளி என எல்லா இடங்களிலும் என்ன செய்தாலும் மசிய மாட்டாள் எனப் பரவி இருந்தது. அதனால் ஏமாந்து, சோர்ந்து அமைதியானார்கள்.

அப்பாவின் வெள்ளை வேட்டியைத் தரையில் விரித்துப் படுத்துக்கொள்வாள் அம்மா. நெடுநேரம் தூங்க மாட்டாள். காயா அப்படியே பார்த்துக்கொண்டிருந்து விட்டு, பின் தூங்கிப்போவாள். இடையில் கண்விழிக்கும் போது அவளோடு மெத்தையில் அவளை அணைத்துத் தூங்கிக்கொண்டிருப்பாள். அப்போது அவளிடமிருந்து வினோத வாசனை ஒன்று வீசுவதுபோல் தோன்றும். அது அவளிடமிருந்து வருகிறதா அந்த வேட்டியிலிருந்து ஒட்டிக்கொண்டதா எனக் குழம்புவாள். அச்சமயம் அவளைப் பார்க்கையில் இலேசாய் பயமாகக்கூட‌ இருக்கும். அப்படி மனதில் தோன்றுவதே காயாவுக்குக் குற்றவுணர்வு அளிக்கும். சட்டென அம்மாவை மேலும் இறுகக் கட்டிக்கொள்வாள். காயா ருதுவாகும் வரையிலும் அப்படித்தான் அம்மாவை அணைத்தபடியே தூங்கிக்கொண்டிருந்தாள்.

அம்மா மெல்ல மெல்ல‌ மேலேறி அந்தப் பள்ளியிலேயே முதல்வராக ஆகிவிட்டிருந்தாள்.

பதினெட்டு ஆண்டு. நிறைய உழைத்து, நிறைய‌ போராடி காயாவை வளர்த்து, படிக்க வைத்து, கட்டிக்கொடுத்து, அவள் புருஷனுடன் பெங்களூர் கிளம்பிய மறுநாள்தான் அம்மாவுக்கு உடம்பில் புற்று வந்து குடியேறியிருப்பதன் முதல் அறிகுறி தென்பட்டது.

*

காயாவுக்கு முதலிரவு முடிந்திருக்கும் என்பதைத்தான் காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் நினைத்துக்கொண்டாள் முல்லை. வெப்பப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது. அது அவளுக்கே கசப்பை அளித்தது. சிங்க்கில் காறித் துப்பி கண்ணாடி பார்த்தாள்.

அத்தனை அழகியில்ல முல்லை. முரளி ஓடிப்போன பின் வந்த அழைப்புகள் எதுவும் அவள் அழகை உத்தேசித்ததில்லை. அவர்களுக்குத் தேவையான ஒரு துவாரம் அவளிடம் இருந்தது தவிர அதற்குப் பெரிய காரணமேதும் இருக்க முடியாது என நன்கறிந்திருந்தாள்.

கழிவறையில் அமர்ந்து காத்திருந்த‌ போது யோனியிலிருந்து சொட்டுச் சொட்டாய்க் குருதி கசிந்தது. நீரில் கலந்து நீர்த்த‌ கறுப்புச் சிவப்பை உற்றுப்பார்த்து மிரண்டாள்.

முல்லைக்கு மாதவிலக்கு நின்று சுமார் இரண்டாண்டுகள் ஆகியிருந்தன. தொடர்பான பக்க விளைவுகள் ஏதும் இருக்குமோ எனத் தோன்றியது. அவள் வயதிலிருந்த சிலருக்கு கருப்பையில் சிக்கலெனக் கேள்விப்பட்டிருந்தாள். சிலருக்கு நீக்கவும் செய்திருந்தனர்.

சில தினங்களாகவே சிறுநீர் கழிக்கையில் வலி இருந்தது முல்லைக்கு. தவிர நிறைய சிறுநீர் கழிப்பதுபோல் தோன்றியது. முதலில் நீரிழிவு நோயோ என யோசித்து அவளே பரிசோதனையகம் சென்று வெறும் வ‌யிற்றில் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தாள். சர்க்கரை 99 இருந்தது. அதில்லை. சில தினங்களில் மலச்சிக்கலும் சேர்ந்துகொண்டது.

முல்லை தீர்மானித்து மகப்பேறு மருத்துவரிடம் போனாள். அவள் பரிசோதித்து சில மாத்திரைகள் எழுதினாள். இரு மாதங்கள் கடந்தும் சரியாகவில்லை. சந்தேகம் வந்து ஒருநாள் குளிக்கையில் தன் யோனியை அழுத்திப் பார்த்தாள் முல்லை. கட்டி போல் தென்பட்டது. பயம் வந்தது. அடுத்து வந்த ஞாயிறு பிற்பகலில் கறி சோறுக்குப்பின் கதவு ஜன்னலடைத்து ஆடை அவிழ்த்து ட்யூப் லைட் போட்டு காலிடையே கீழே நிலைக்கண்ணாடி வைத்து தெளிவாய்ப் பார்த்தாள். இதுவரை அதை அப்படிப் பார்த்ததே இல்லை. பயமாய் இருந்தது. திரும்ப டாக்டரிடம் போய்க் காட்டிய போதுதான் அந்த கைனகாலஜிஸ்ட் திடுக்கிட்டு நகரின் புதிய பல்துறை மருத்துவமனைக்கு எழுதினாள்.

அங்கே கூடுதலாய் நோட்டுகள் வாங்கிவிட்டு பேப் ஸ்மியர் எடுத்தார்கள். மேசையில் மல்லாக்கப்படுத்து கால்களை அகட்டி நெகிழியாலான‌ ஸ்பெகுலம் நுழைத்து வாகாக விரிந்து கொடுத்ததும் அங்கிருந்த செல்களைச் சேகரித்து ஏற்கனவே ஏதோ திரவம் பாதி நிரம்பியிருந்த குழாயில் போட்டாள் அந்த டாக்டர். அதைச் செய்வதற்கு முன் வலிக்காது, இலேசாகக் குத்துவது போலிருக்கும் என்றாள். முல்லைக்கு குத்த‌வில்லை. ஆனால் கூசியது.

மூன்று நாட்களில் அவளுக்கு யோனியில் புற்று வைத்திருக்கிறது என அறிக்கை வந்தது.

*

அம்மா பதற்றமாகி காயாவுக்கு அலைபேசி அழுதாள். அவள் உடனே கிளம்பி வந்தாள்.

அம்மாவின் கரம் பற்றி நம்பிக்கை சொல்லிவிட்டு அவளை வீட்டிலேயே விடுத்து, தான் மட்டும் பணமும் டெட்டாலும் கலந்து வீசிய அந்த மருத்துவமனைக்குப் போனாள் காயா. 

மருத்துவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு எழுதிக்கொடுத்தார். WIA என்ற Women’s Indian Association அமைப்பு நடத்தும் அந்த மருத்துவமனையில் கூட்டம் வழிந்தது. நகரத்தில் இத்தனை பேருக்கா இந்த உயிர் தின்னும் நோய் இருக்கிறது என வியந்தாள்.

அது ஒரு பக்கம் ஆறுதலையே அளித்தது. நமக்கு மட்டுமே வந்தால்தானே அது கஷ்டம்!

காயா விவரங்கள் கேட்டுக்கொண்டு அப்பாயின்மெண்ட் வாங்கி மறுநாள் அம்மாவை அழைத்துப் போனபோது மருத்துவர் பரிசோதித்துவிட்டு மிக‌ ஏமாற்றமாய்ப் பார்த்தார்.

அம்மாவை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு காயாவிடம் உறவு விசாரித்துப்பேசினார்.

“ஸ்டேஜ் த்ரீ. ரொம்ப முத்திடுச்சு.”

“இப்பத்தானே கண்டுபிடிச்சோம்?”

“ஆமா, இந்த வஜைனல் கேன்சர் உடம்பில் சத்தமே இல்லாம பல வருஷமா இருக்கும்.”

“என்ன பண்ணலாம், டாக்டர்?”

அம்மாவின் யோனியை அறுவை சிகிச்சை மூலம் மொத்தமாக நீக்க வேண்டும் என்றார்.

*

அம்மாவிடம் மெல்லத் தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னாள் காயா. அவள் முகம் இருண்டது. அப்படியே பார்வை நிலைகுத்தி சிறிதுநேரம் மௌனமாய் அமர்ந்திருந்தாள்.

“எவ்வளவு பெர்சண்ட் சக்சஸ் ரேட்?”

“ம்…. ஃபிப்டி – ஃபிப்டினு டாக்டர் சொல்றார்மா.”

“ம்.”

“ஆனா, இப்படியே விட்டாலும் இன்னும் நிலைமை மோசமாத்தான் ஆகுமாம்.”

“ம்.”

“எனக்கு பண்ணிடலாம்னு தோனுதும்மா.”

“சரி, யோசிச்சு காலைல சொல்றேன்.”

காயா தலையாட்டினாள். தனக்குச் சற்று தனிமை வேண்டும் என காயாவை வெளியே அனுப்பிவிட்டு அறைக்கதவைத் தாழிட்டாள் முல்லை. காயா தயங்கி வெளியேறினாள்.

மறுநாள் தாமதமாகவே எழுந்தாள் அம்மா. சிரித்த முகத்துடன் காயாவிடம் அறுவை சிகிச்சைக்கான தன் சம்மதத்தைச் சொன்னாள். காயாவுக்கு நிம்மதியாய் இருந்தது.

“வலிக்குமா, காயா?”

“இருக்காதும்மா. மயக்க மருந்து கொடுத்துடுவாங்க.”

அறையைச் சுத்தம் செய்ய உள்ளே நுழைந்தாள் காயா. நீண்ட காலம் கழித்து அந்த வினோத வாசனையை உணர்ந்தாள். அப்பாவின் வேட்டி தரையில் சுருண்டிருந்தது.

*

சிலபல‌ பொறுப்புத் துறப்புப் படிவங்களில் அம்மாவிடமும் காயாவிடமும் கையெழுத்து வாங்கினார்கள். அதிகபட்சம் அரை மணி நேரம்தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கும். அனஸ்தீஸியாவின் அரவணைப்பிலிருந்த அம்மாவை அறைக்கு அழைத்து வந்தார்கள்.

மூன்றாம் நாளே மருத்துவமனையிலிருந்து விடுவித்து வீட்டுக்குப் போக‌லாம் என்றார்கள். கிளம்பும் முன் அங்கிருந்த‌ நர்ஸ், அம்மா மேற்கொள்ள வேண்டிய பத்தியங்களையும் பாதுகாப்பு விஷயங்களையும் பட்டியலிட்டுக்கொண்டிருந்தாள். கடைசியாய்த் தயங்கிச் சொன்னாள்.

“கடைசியா இன்னொண்ணு.”

“சொல்லுங்க.”

“செக்ஸுவல் இண்டர்கோர்ஸ் கூடாது.”

“…”

“இன்ஃபெக்ஷன் ஆகிடும். ப்ளீடிங் வரும். ஸ்ட்ரெய்னாகி கிழியலாம்.”

அம்மா நர்ஸை வெறித்தாள். வீட்டுக்கு வந்தார்கள். அம்மா கதவடைத்துக் கேவினாள்.

*

பகை மாதிரிதான் புற்று நோயும். மிச்சம் வைக்காமல் அழித்துவிட வேண்டும். ஓரமாய் ஒன்று விடுபட்டாலும் பிறிதொரு நாள் விசுவரூபமெடுக்கும். நான்கு மாதங்கள் அமைதி காத்தபின் வலியெடுக்க, பரிசோதித்ததில் மீண்டும் புற்று பரவியிருந்தது அம்மாவுக்கு.

இப்போது மருத்துவர் உதட்டைப் பிதுக்கியபடி கீமோதெரபி, ரேடியேஷன் இரண்டையும் மாத இடைவெளியில் தொடர்ந்து கலந்துகொடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார்.

அம்மாவுக்குப் பள்ளியில் மருத்துவக் காப்பீட்டில் தொகை கொடுக்கப்பட்டது. அதனால் அவள் உடல் நிலையை உத்தேசித்து ராஜினாமா செய்ய முன்வந்த போது மறுத்து நீண்ட விடுப்பில் செல்ல அனுமதி அளித்தது பள்ளி நிர்வாகம். காயாவுக்கும் நிம்மதியளித்தது.

காயா வேலைக்குப் ‍போவதில்லை. திருமணத்துக்கு முன் ஜிஎன் செட்டி சாலையில் ஒரு ஐடி நிறுவனத்திற்கு வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். நிறுவனம் பெங்களூரில் இல்லை என்பதால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. ராஜினாமா செய்து தாலி கட்டிக்கொண்டாள். பெங்களூரில் புதிய‌ வேலை ஏற்பாடு செய்துகொள்ளலாம் என்றான் கமல்.

ஆனால் பெங்களூர் அழைத்துச் சென்றபின் அவனதில் அதிக அக்கறை காட்டவில்லை. ஆரம்ப தின‌ங்களின் மயக்கத்தில் காயாவும் அதைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை.

பிறகு மெல்லக் கேட்க ஆரம்பித்தபோது தனக்கு அவள் வேலைக்குப் போவதில் விருப்பம் இல்லை என்றான். குழந்தைப் பேறு என வரும்போது அதெல்லாம் சரிப்படாது என்றான்.

காயா அம்மாவுக்குச் சொல்லிய‌போது அவளும் அதிர்ச்சியுற்றாள். ஆனால் கணவனைப் பகைக்க வேண்டாம். வீட்டிலிருந்தே ஏதாவது சம்பாதிக்க வழிக‌ள் பார்க்கச் சொன்னாள்.

கன்சல்டண்ட்டாக சில‌ வேலைகள் எடுத்துச்செய்தாள். தனக்கு அதில் போதிய திறமை இல்லை என்று உணர்ந்தாள். அவள் திறமைக்கேற்ப வரும் வேலைகள் மிகச் சொற்பத் தொகை தருவனவாக இருந்தன. மெல்ல மெல்ல அவையும் குறைந்து இல்லாமலானது.

இடையில் அம்மாவைக் கவனிக்க வேண்டியிருந்ததும் அதற்கு முக்கியக் காரணம்.

அதை அம்மாவும் உணர்ந்தே இருந்தாள். அது அவளுக்குக் குற்றவுணர்வை அளித்தது. அதனால் முடிந்தளவு அவள் வேலைக்கு வரும் பெண்ணை வைத்தே சமாளிக்கப் பார்த்தாள். இக்கட்டான சூழல்களில் மட்டுமே அழைப்பது என வைத்துக்கொண்டாள்.

இப்போது இத்தனை நாள் காயா அவளுடன் இருப்பதே அவளுக்குச் சந்தேகத்தையும், பயத்தையும் தருவதாக இருந்தது. அந்த‌ மருத்துவர் தனக்கு நாள் குறித்து விட்டாரோ?

ஆனால் காயாவிடம் அதைக் கேட்டு அவளைச் சங்கடப்படுத்த அவள் விரும்பவில்லை. எதுவாகினும் வரத்தான் போகிறது. அறிவதால் மட்டும் அது மாறப்போகிறதா என்ன!

காயாவும் அம்மா ஏதும் அது பற்றிக் கேட்டுவிடுவாளோ என அஞ்சிக்கொண்டிருந்தாள்.

அவள் அம்மாவிடம் பொய் சொன்னதில்லை. எதையும் மறைத்ததுமில்லை. பள்ளிக்கு அழைத்துப் போகும் ஆட்டோ ட்ரைவர் அவளது பையை எடுத்துக்கொடுக்கும் சாக்கில் தன் மார்பை அழுத்துவதையும், ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி நன்றாகப் பேசிக்கொண்டிருந்த நண்பர் திடீரென ஒரு நாள் ஆண்குறி புகைப்படங்களை அனுப்பியதையும் அம்மாவிடம் தயங்காமல் சொல்லி எப்படிக் கையாள்வதென அவளது ஆலோசனை கேட்டிருக்கிறாள்.

அப்பா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென அப்போது மறுபடி காயாவுக்குத் தோன்றியது. இந்த நூதனச் சிக்கலை எல்லாம் அவர் பார்த்துக்கொண்டிருப்பார். தான் மண்டை உடைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் வக்கிரமானவர்!

காயா அப்படி அலுத்துக்கொண்டிருந்த ஒரு நன்னாளின் இரவு அப்பா வீடு திரும்பினார்.

*

முரளி இருளில் சைக்கிள் மிதித்துக்கொண்டிருந்தான். குளிர்க்காற்று இரக்கமின்றி முகத்தில் அடித்தது. காயா முன்னால் கேரியரில் இணைக்கப்பட்ட ஒரு கூடைச் சேரில் அமர்ந்திருந்தாள். இரவுக் காட்சி முடிந்து திரையரங்கிலிருந்து கிளம்பும்போது “பனி பெய்யும்” என்று சொல்லி அம்மா அவள் காதைச் சுற்றிக் கட்டிவிட்டிருந்த கைக்குட்டை காயாவுக்குத் தொந்தரவூட்டியது. கொட்டாவி வந்தது. கண்சொக்கி காட்சி இருண்டது.

“ஒத்தைக்கு மூனு விலை கொடுத்துப் பார்க்க வேண்டியதாகிடுச்சு, முல்லை.”

“தீபாவளி, பொங்கல்னாலே ஆனூர்ல அப்படித்தானாம்ங்க.”

அபிராமியில் அவ்வை சண்முகிக்கு சீட்டு கிடைக்கவில்லை. தேவி அபிராமியில் கல்கி. கூட்டமில்லை என்றாலும் பாலச்சந்தர் படம் தப்புத் தப்பாய் இருக்கும் என்று சொல்லி ஆனூருக்கு சைக்கிள் மிதித்தான். அங்கே ஓடும் படம் நன்றாக இருக்கிறது எனப் பரவி, கூட்டம் பெருத்திருந்தது. அதனால் வேறுவழியின்றி ப்ளாக்கில் டிக்கெட் வாங்கினான்.

“நீங்க வேண்டாம்னு சொல்லிட்டு கிளம்பிடுவீங்கன்னு நினைச்சேன்.”

“காயா பொக்குனு போயிடுவான்னுதான். ஒரு முறைதானே? இருக்கட்டும்.”

“அப்ப எனக்காகச் செலவு செய்யலயா?”

“காயா வேற, நீ வேறயா? அவளைச் சொல்றது ஒரு சாக்குதான்.”

“எதாவது சொல்லி சமாளிங்க.”

“படம் பிடிச்சுதா?”

“ஓ! ரொம்ப. உங்களுக்கு?”

“பிடிக்கல.”

“அப்படியா! ஏன்?”

“கரண் எவ்வளவு நல்லவனா இருக்கான். அவனை விட்டுட்டு பொம்பளப் பொறுக்கிய லவ் பண்றா அந்த‌ ஆகாவழி ஹீரோயின். நல்லவங்களுக்கு இப்பலாம் மதிப்பே இல்ல.”

“ச்சே. என்ன ஆம்பிள அவன்! பொறுக்கினாலும் கார்த்திக்தானே மனசைத் தொடறான்!”

“என்ன இழவோ”

“பொம்பளைக்கு ஆம்பிளயத்தான் பிடிக்கும். நல்லவனை இல்ல.”

“ம்ம்ம்.”

“கோகுலத்தில் கண்ணா கண்ணா…”

முல்லை மெல்ல குரலெடுத்துப் பாடினாள். அதைக் கேட்டு முரளி உற்சாகமானான்.

“ஆனா அவ… அந்த ஹீரோயின் கண்ல ஒத்திக்கற மாதிரி அழகு.”

“ஓஹோ.”

“அவுத்துப் போட்டுட்டு ஆடற நடிகைங்க மத்தில இவ‌ ரொம்பப் பாந்தமா இருக்கா.”

“ஏன் இவ அவுத்துப் போட்டு ஆடினா பாக்க மாட்டீங்களா?”

“ச்சே. இவளப் பார்த்தா அப்படித் தெரில.”

“பார்ப்போம்.”

“ம்ம்ம்.”

“பெங்கால்காரியாம். வாரமலர்ல‌ போட்ருந்தான்.”

“பேரென்ன?”

“சுவலட்சுமி”

வீடு வந்து சேர்ந்தபோது ஆங்காங்கே வாண வேடிக்கைகள் தொலைவில் ஒளிர்ந்தன.

*

வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் காயா திறந்து பார்த்தபோது அவளுக்கு யாரென்று அடையாளம் தெரியவில்லை. வந்தவர் தலை நரைத்து தாடி வைத்து தடித்த கண்ணாடி அணிந்திருந்தார். அவர் ஒன்றும் பேசாமல் அவளைப் பார்த்தார். குழப்பமாய் நின்றாள்.

“யாருங்க? என்ன வேணும்?”

“அப்பாம்மா…”

“புரியலைங்க.”

“நான் முரளி…”

“…”

“உன் அப்பா…”

காயா திடுக்கிட்டு நின்றாள். நம்ப முடியாமல் அவர் முகத்தில் அடையாளம் தேடினாள். அப்பாதான் என்றுறைத்ததும் அவசர அவ‌சரமாய் கதவை அகலத் திறந்து அழைத்தாள்.

“அப்பா… வாங்க…”

அம்மா தூங்கிக்கொண்டிருந்தாள். அப்பா பக்கத்தில் போய் நின்று பார்த்தார். அவர் கண்களில் நீர் சுரந்து நின்றது. காயாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. காத்திருந்தாள்.

அப்பா நிறைய அழுதார். அது அவர் குற்றவுணர்ச்சியோ என காயாவுக்குத் தோன்றியது.

அவர் கண்ணீர் உகுத்து அப்போதுதான் பார்க்கிறாள். அப்பா வீட்டைவிட்டுப் போவதற்கு ஐந்தாறு மாதம் முன்புதான் அவரது அம்மா இறந்திருந்தாள். அப்பா, அம்மா, காயா என எல்லோரும் போய் துக்கம் கண்டு வந்தார்கள். அப்பா அப்போது ஒரு துளி அழவில்லை என காயா கவனித்திருந்தாள். இன்று அழுகிறார். மொத்தத்துக்கும் சேர்த்து அழுகிறார்.

“சாப்பிட்டீங்களாப்பா?”

தலையாட்டி மறுத்தார். அவசரமாய்த் தேடி கோதுமை உப்புமா கிண்டித் தட்டிலிட்டாள்.

“திடீர்னு இதுதான்பா முடிஞ்சது.”

“அம்மா கை மணம் உனக்கும் இருக்கு. உப்புமாகூட அத்தனை டேஸ்டா பண்ணுவா.”

அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே முழுக்கதையையும் சொல்லி முடித்தாள் காயா.

அவரிடம் சொல்வதற்கென்றே எல்லாவற்றையும் நினைவினில் சேமித்து வைத்ததுபோல் தேர்ந்த சொற்களில் கோர்த்து ஒவ்வொன்றாய்ச் சொன்னாள். எவருடைய‌ வாழ்வையோ வேடிக்கைப் பார்ப்பது போல் அவ‌ர் அவளை இடைமறிக்காது கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்பா கைகழுவி, பூத்துவாலை மறுத்து, தன் கசங்கிய கைக்குட்டையில் துடைத்துவந்து சோஃபாவில் யோசனையாய் அமர்ந்தபோது காயா அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“ஏம்ப்பா எங்கள விட்டுட்டு போனீங்க?”

“ம்.”

“சொல்லுங்கப்பா.”

“அம்மா சொல்லலியா?”

“இல்ல. ஏதுமே தெரில. திடீர்னு ஒரு நாள் எழுந்து பார்த்தா உங்களைக் காணோம்.”

“ம்.”

“இத்தனை வருஷமும் அம்மா சொன்னதில்ல.”

“அன்னிக்கு ராத்திரி நம்ம வீட்டில் திருடன் பூந்துட்டான்.”

“ஓ!”

“ஆமா. மொத்தமா நகை, பணம்னு சுருட்டிட்டு போயிட்டான்.”

“…”

“என்னையும் அம்மாவையும் வாயில் துணியடைச்சு பாத்ரூமில் பூட்டிட்டு.”

“…”

“கழுத்தில் இருக்கும் இந்த வெட்டுக்காயம் அவன் அப்ப போட்டதுதான்.”

“அப்படியா!”

“ஆமா. ஒரே ராத்திரியில் மொத்தமும் பூஜ்யம் ஆகிடுச்சு. என் வியாபாரம் அந்த சமயம் அவ்வளவு நல்லா இல்ல. என்ன செய்யறதுன்னே தெரில. நடுத்தெருவில்தான் நிக்கனும்.”

“ம்.”

“குடும்பத்தோடு தற்கொலை பண்ணிக்கலாம்னு எனக்கு எண்ணம் வந்திடுச்சு.”

“அப்பா…”

“ஆமா. அப்புறம் யோசிச்சா அது எவ்வளவு கொடூரமான யோசனைனு புரிஞ்சுது.”

“ம்.”

“ஆனா திரும்பத் திரும்ப அந்த எண்ணம் மேலெழுந்து வந்துச்சு. பயம் வந்திடுச்சு. இங்க இருந்தா உங்களையும் பலி கொடுத்துடுவேனோன்னு தோனுச்சு. அதான் நான் மட்டும் செத்துடலாம்னு தீர்மானிச்சேன். சத்தமில்லாம நைட் வீட்டை விட்டு வெளியேறினேன்.”

“…”

“ஆனா அதுக்கு தைரியமே வரல. எங்கெங்கயோ ஊர் ஊரா சுத்தினேன். பணமில்ல‌. பசி, பட்டினி. ஒரு நாள் பிச்சைகூட எடுத்தேன். அப்புறம் மதுரைல ஓட்டல் வேலை தந்தாங்க.”

“…”

“அப்படியே அங்கயே இருந்துட்டேன். வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் வரல‌.”

“…”

“அப்பத்தான் எனக்குப் புரிஞ்சுது. இவ இல்லாம நான் ஒன்னுமே இல்லன்னு.”

“ம்.”

“எவ்வளவோ முறை ஊருக்கு வந்திடலாம்னு பார்த்தேன். ஆனா அம்மாவோட கண்களைப் பார்க்கற திராணி இல்ல. துரோகம் பண்ணின பிறகு நிம்மதியா வாழவே முடியாதுடா.”

“அப்ப, திரும்ப எங்களைத் தேடி வரவே இல்லையா?”

“இல்ல. ஒருக்கா சமாதானமாகி நம்ம ஊருக்கு வந்தேன். நீங்க ஒரு வருஷம் முன்னயே வீட்டை காலி பண்ணிட்டதா சொன்னாங்க. யாருக்குமே எங்கே போனீங்கனு தெரில.”

“அம்மா வேணும்னேதான் சொல்லாம வந்தாங்க‌.”

“நம்ம வீட்டு ஓனர் ஆறுதலாப் பேசி எல்லோரும் இங்கேயே வந்திடுங்கன்னு சொன்னார்.”

“ஓ!”

“அப்புறம் உங்கள இத்தனை வருஷமும் தேடிட்டுதான் இருக்கேன். கிடைக்கவே இல்ல.”

“ம்.”

“போன வாரம் என் பழைய பிஸுனஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர் அம்மாவை மெட்ராஸ்ல ஒரு ஸ்கூலில் பார்த்த‌தா சொன்னார். ஸ்கூல்ல கேட்டு வீட்டு அட்ரஸ் வாங்கிட்டு வர்றேன்.”

“இப்பவாவது வந்தீங்களேன்னு எனக்கு சந்தோஷமாத்தான் இருக்கு.”

“நீ சௌக்கியமா இருக்கியா, காயா?”

“ரொம்ப‌ நல்லா இருக்கேன்பா.”

“ம். கல்யாணம், குழந்தை?”

“கல்யாணம் ஆகிடுச்சுப்பா. பெங்களூர்ல இருக்கேன். அவர் பேர் கமல். ஒரு மொபைல் ஃபோன் கம்பெனில சீனியர் ஆர்க்கிடெக்ட். குழந்தை கொஞ்சம் தள்ளிப்போட்ருக்கோம்”

“காலத்துல பெத்துக்கறது நல்லது. இப்ப நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் சொல்றாங்க.”

“புரியுதுப்பா.”

“ம்.”

“ஒரு சங்கடமான கேள்விப்பா. கேட்கவா?”

“ம்.”

“அப்பா உங்களுக்கு ஏதாவது செக்ஸுவலி ட்ரான்ஸ்மிட்டட் டிசீஸ் இருந்தாதா?”

“காயா…”

“இந்த கேன்சருக்கு அதுவும் ஒரு காரணம். அதனாலதான்பா கேட்டேன்.”

“இல்லம்மா. உங்களை விட்டுட்டுப் போன அப்புறம்கூட‌ வேறு கல்யாணம் செய்துக்கல. மத்த‌ வழிக‌ள் தேடல. அதனால எனக்கு அந்த வியாதிலாம் வர வாய்ப்பே இல்லம்மா.”

“ஸாரிப்பா. கேட்கனும்னு தோனுச்சு.”

“பரவால்லமா. விதி எனக்குத் தரும் பதிலடிதான் எல்லாம்.”

“சரியாகும்பா எல்லாம்.”

“ம்.”

“தூங்குங்கப்பா. காலைல பேசிக்கலாம்.”

விளக்கணைத்து விட்டு, பாத்திரம் கழுவி வைத்துவிட்டு, சோஃபாவில் படுத்தாள்.

*

சென்னிமலை போகும் சாலையில் முதல்வர் பெயரில் புதிதாக உருவாகியிருந்த நகர் அது. தூரதூரமாய் வீடுகளுடைய‌ அரசுக் குடியிருப்பு. முரளியின் நினைவில் மிச்சமிருந்த கிராமத்துப் பால்யம் ஏங்கிய ஒரு வெட்டவெளித்தன்மையைக் கொண்டிருந்ததால் அங்கு வீட்டை வாடகைக்கு எடுத்தான். புறநகரானதால் வாடகை குறைவு என்பது உபகாரணம். 

சிறிய வீடு. வரவேற்பறை. ஒரு படுக்கையறை, ஒரு சமையலறை, ஒரு கழிவறை, அங்கே குளியலும் முடித்துக்கொள்ள வேண்டும். அதிகமானால் நானூறு சதுர அடி இருக்கலாம்.

ஓர் அரசு ஊழியர் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டைத்தான் இரு மடங்கு வாடகைக்கு அவர்களுக்குத் தந்திருந்தார். ஏழாம் தேதி தவறாமல் வாடகை வாங்க‌ வந்துவிடுவார்.

முரளி இருந்தால்தான் உள்ளே வருவார். இல்லை என்றால் வெளியே நின்றவாறே பேசிப் போய்விடுவார். அவரைப் பார்த்தால் முல்லைக்கு அவள் அப்பா ஞாபகம் வரும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அரசு வேலையிலிருந்து ஓய்வு பெறப்போகிறார். அதற்குப்பின் அந்த வீடு யாருக்கு அலாட் ஆகுமோ, அவர் இதே போல் வாடகைக்கு விடுவாரோ என முரளிக்குக் கவலை இருந்தது. யார் வந்தாலும் தான் பேசி வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தார்.

தூங்கிக்கொண்டிருந்த காயாவை அலுங்காமல் வாங்கிக்கொண்ட முல்லை வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தாள். நேராய்ப் படுக்கையில் போட்டாள். இன்னும் வெடிச்சத்தம் அடங்கவில்லை. முல்லை புடவை மாற்றிக்கொண்டிருந்த போது முரளி லுங்கிக்கு மாறி படுக்கையறைக்கு வந்தான். காயா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். குட்டித் தெய்வம் போல் தோன்றிய அவளைக் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓரமாய்த் தள்ளிப்போட்டான்.

“முல்லை…”

முரளியின் அழைப்பு முல்லைக்குப் புரிந்தது. புன்னகைத்தபடி மெல்ல அறைக்கு வந்தாள். 

சினிமாவுக்குக் கிளம்புகையில் வைத்த மல்லிச்சரம் வாடத் துவங்கியிருந்தாலும் மணம் சாகவில்லை. முல்லையின் கழுத்தோரம் முகம் புதைத்து மலரை முகர்ந்தான்.

முல்லை கூசி வெட்டி வெட்கிச் சிரித்தாள். சில முத்தங்களில் ஈரமாகத் தொடங்கினாள். முரளி முல்லையின் ஜாக்கெட் ஹூக் தேடிக்கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது. 

“இந்த நேரத்துல யாரு?”

முரளி முல்லையின் கேள்விக்குப் பதில் அளிக்காமல் லுங்கியைச் சரிசெய்து விட்டு, படுக்கை அறையைவிட்டு வெளியேறி ஹாலுக்கு வந்து, கதவருகே போய் நின்றுகேட்டான்.

“யாரு?”

“போலீஸ்.”

“யாருங்க?”

“நீ உள்ளயே இரு, முல்லை.”

முரளி குழப்பமும் பத‌ற்றமுமாய் கதவைத் திறந்தான். சட்டென முகமூடி எடுத்தணிந்துகொண்ட ஒருவன் உள்ளே வர முயன்றான். சுதாரித்த‌ முரளி கதவை மூடப்போன போது அவன் வலுவாய் நெட்டித் தள்ளித்திறந்து முரளியின் முகத்தில் பொக்கெனக் குத்தினான்.

“அம்மா…”

மின்னலைத் தொடர்ந்த வானிடி மாதிரி முரளிக்குச் சில்லி மூக்குடைந்து இரத்தம் சிந்தியது.

*

அப்பாவிடம் அம்மா பேச மறுத்துவிட்டாள். அவர் அம்மா படுத்திருந்த கட்டிலின்முன் மண்டியிட்டு அழுதார். அவள் முகத்தை அந்தப்புறம் திருப்பிப் படுத்துக்கொண்டாள்.

காலை, மதியம், மாலை என அப்பா திரும்பத் திரும்ப அவளிடம் பேச முயன்றார். அவள் பிடிகொடுக்கவே இல்லை. ஒரு சொல் உதிர்க்கவில்லை. முகம் இறுக்கிக்கொண்டாள்.

அப்பா திகைத்துப் போனார். இரவு உணவுக்குப்பின் காயா வந்து அவளிடம் பேசினாள்.

“அம்மா, எல்லோரும் தப்பு பண்றதுதானே?”

“ஓஹோ!”

“அதையே நினைச்சிட்டு வருந்திட்டு இருந்தா எப்படி?”

“அப்படினா இப்ப நான் பேசாம இருக்கறதையும் என் தப்புனு நினைச்சு விட்றேன்.”

“பிடிவாதம் பிடிக்காதம்மா.”

“என்ன, காயா? மறந்துட்டியா எல்லாம்?”

“…”

“சொல்லாம கொள்ளாம நம்மைத் தனியா விட்டுட்டுப் போனார்.”

“எதையும் மறுக்கல‌ம்மா.”

“நான் கொஞ்சம் வலுவில்லாமா இருந்திருந்தா இந்நேரம் ப்ராத்தல்ல இருந்திருக்கனும்.”

“அம்மா…”

“கத்தாதே, காயா..”

“பாவமா இருக்கும்மா, அப்பாவைப் பார்த்தா..”

“நீ என் மகளா இங்கே இருக்கறதுன்னா இரு காயா. அவர் மகள்னா வெளியே போயிடு.”

அதன்பிறகு காயா ஏதும் பேச முயலவில்லை. அம்மாவை அவளுக்குத் தெரியும்.

மெல்ல நடந்து விளக்கணைத்துவிட்டு அப்பாவிடம் சென்று தலைகுனிந்தபடி பேசினாள்.

“நீங்க இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம்பா.”

“…”

“அதை அம்மா ஈஸியா மறக்கனும்னு எதிர்பார்க்க முடியுமா?”

“…”

“அவ டைம் எடுத்துக்கட்டும். காத்திருப்போம்.”

“என்னவோ எனக்கு நம்பிக்கையே இல்லம்மா.”

“ம்.”

“அப்போலாம் என் சொல்லுக்கு மறுபேச்சு இருந்ததில்ல‌.”

“இன்னிக்கு இருக்கும் அம்மா வேறப்பா. அவ ஒரு ஸ்கூல் ப்ரின்சிபால்.”

“ம். எல்லாம் மாறிடுச்சு.”

“ஆனா அம்மாவுக்கு உங்க மேல் இருக்கற‌ பிரியம் மாறல.”

“இப்படி நடந்துக்கறதுதான் பிரியமா, காயா?”

“இல்லப்பா. அம்மா மறைக்கறா.”

“…”

“கோபத்தைச் சொல்றா. நீங்க தப்பை உணரனும்னு விரும்பறா.”

“தப்புதான்.”

“நீங்க போன பிறகு எவ்வளவோ வாய்ப்பு இருந்தது. ஆபாசமா கேட்டவங்கள விடுங்க. கல்யாணம் பண்ணி வாழறதுக்கே கூப்பிட்டாங்க. எல்லாத்தையும் மறுத்துட்டாங்க.”

“ம்.”

“நீங்க திரும்பி வருவீங்கன்னு எதிர்பார்த்துட்டே இருந்தாங்கன்னுதான் நினைச்சுக்கிட்டேன்.”

“அவ சாமி.”

“அம்மா உங்க வெள்ளை வேட்டி ஒன்னை இன்னும் பத்திரமா வெச்சிருக்காங்க.”

“அப்படியா?”

காயா மெதுவாய் எழுந்து சென்று பார்த்தபோது அம்மா தூங்கியிருந்தாள். சத்தமின்றி அவளது பீரோவைத் திறந்து அந்த வேட்டியைத் துழாவி எடுத்தாள். அரவமின்றி மூடி, அப்பாவிடம் வந்து காட்டினாள். அப்பா அதையே வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு கண்களில் நீர் கோர்த்தது. மறுநாள் எழுந்து பார்த்தபோது அப்பா இல்லை.

*

அவன் பீரோவைத் திறந்து எல்லாவற்றையும் கலைத்து வெளியே போட்டான். துணிகள், சான்றிதழ்கள், புகைப்படங்கள், அந்துருண்டை எனச் சலிப்பூட்டும் பொருட்கள் வெளியே வந்துகொண்டிருந்தன. பீரோவின் சன்ன‌ உள்ளறை பூட்டப்பட்டிருப்பதைக் கவனித்தான்.

அவன் சைகையில் சாவியைக் கேட்டான். முல்லை முரளியைப் பார்த்தாள். அவன் கைக்குட்டையால் மூக்கைப் பொத்தியபடி அதைச் சிவப்பாக்குவதில் மும்முரமாய் இருந்தான்.

முல்லைக்கு வேறு வழி இருக்கவில்லை. சத்தம் போடலாமா என ஒருகணம் தோன்றிய எண்ணத்தை அடக்கினாள். சாதாரணமாகவே அங்கிருந்து சத்தம் போட்டால் அருகே இருக்கும் வீடுகளுக்குக் கேட்காது. இப்போது வெடிச்சத்தங்களில் சுத்தம். தயங்கி சாமி படத்துக்குப்பின் வைத்திருந்த சாவியை எடுத்து நீட்டினாள். பிடுங்கிக்கொண்டான்.

இரும்பு பீரோவின் அந்தச் சன்ன அறை திறந்துகொண்ட போது உள்ளே தங்க மஞ்சள் மின்னியது. பணக்கட்டுகளும் தென்பட்டன. அவன் கண்கள் பேராசையில் மினுங்கின.

கொண்டுவந்திருந்த முதுகுப் பையில் அவை எல்லாவற்றையும் துடைத்து எடுத்துப்போட்டான். முரளியும் முல்லையும் அணிந்திருந்த நகைகளைக் கழற்றச்சொன்னான். கழற்றிக் கொடுத்தார்கள். தாலியைக் கழற்ற முல்லை தயங்கியபோது முரளிக்கு அறை விழுந்தது. மூக்கொழுக அழுதபடி முல்லை தாலிக்கொடியையும் கழற்றி நீட்டினாள்.

படுக்கை அறைக்குள் நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த காயாவின் தோடு, சங்கிலி, மோதிரத்தையும் கழற்றி எடுத்துக்கொண்டான். மொத்த வீட்டையும் ஒருமுறை சுற்றி எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்தாயிற்று என்று உறுதிசெய்து திருப்திகொண்டான். அத்தனையையும் அடைத்து பையை முதுகில் மாட்டிக்கொண்டு கதவருகே சென்றான்.

சட்டென திரும்பி நின்று அறைக் காற்றை கண்க‌ள் மூடி இரசித்துச் சுவாசித்து இழுத்தான்.

*

அம்மாவுக்குப் படுக்கையில் காலை உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள் காயா. கடந்த சில மாதங்களாகவே வேலைக்கு வரும் பெண்தான் அதை எல்லாம் செய்கிறாள். ஊட்டிவிட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் தட்டில் எடுத்து வைத்துக்கொடுத்துவிட்டால் படுக்கையிலேயே அமர்ந்தவாக்கில் சாப்பிட்டு முடிப்பாள். அதன்பின் பாத்திரத்தில் நீர் நிறைத்து நீட்டினால் அதிலேயே கை கழுவி, வாயைத் துடைத்துக்கொள்வாள். காயா இப்போது இருப்பதால் அவள் அவ்வேலையை எடுத்துக்கொள்கிறாள். எத்தனை முறை தனக்குச் சோறூட்டி இருப்பாள். இப்போது தன் முறை என நினைத்துக்கொண்டாள்.

தவிர, இதைவிட்டால் இனி இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமலாகி விடும் என்பதாலும்.

“அப்பா எங்கோ கிளம்பிப் போயிருக்கார்.”

“ம்.”

“என்கிட்ட ஒன்னும் சொல்லல.”

“ம்.”

“இன்னும் உனக்குக் கோபம் போகலியாம்மா?”

“இல்ல. போகாது.”

“ஆனா நீ அப்பா மேல உள்ளூரப் பிரியம் வெச்சிருக்கேன்னு தெரியும்மா.”

“…”

“அப்பாவோட அந்த வெள்ளை வேட்டிய இன்னும் நீ பத்திரமா வெச்சிருக்கே.”

“…”

“அதை நான் அப்பாகிட்ட சொல்லிச் சமாதானப்படுத்தினேன்.”

அம்மா திடுக்கிட்டு நிமிர்ந்து காயாவைப் பார்த்தாள். அவள் கண்களில் ஈரமிருந்தது.

“ஓ! அதுக்கு என்ன சொன்னார்.”

“ஒன்னும் பேசலம்மா.”

“அப்பா ஏன் நம்மை விட்டுட்டுப் போனேன்னு சொன்னாரா?”

“இதை நீயே அவர்கிட்ட கேட்ருக்கலாம்ல? நீ பேசின சந்தோசமாவது கிடைச்சிருக்கும்.”

“எனக்குத் தெரியும் ஏன் போனார்னு. உனக்குத் தெரியுமான்னு கேட்டேன்.”

“ம். சொன்னார். எவனோ வந்து மொத்த பணம் நகையையும் திருடிட்டு போயிட்டான்னு.”

“ம்.”

“அதனால தற்கொலை பண்ணிக்கப் போயி தைரியமில்லாம ஊர் ஊரா திரிஞ்சதா.”

“ம்.”

“இது பெரிய இழப்புனாலும் தப்பா ஒன்னும் இல்லயே?”

“ம்.”

“அப்புறம் இதை ஏன் எல்லோர்கிட்டயும் மறைச்சீங்க?”

“ம்.”

“திருட்டுக் கொடுக்கறது அவ்வளவு கேவலமா?”

“அவர் சொல்றதுல பாதிதான் உண்மை.”

“…”

“அன்னிக்கு திருட்டு மட்டும் நடக்கல.”

“பிறகு?”

“அந்தத் திருடன் என்னை… என்னை…”

“அம்மா…”

“எந்தப் பொம்பள அதை வெளிய சொல்வா? அதும் அந்தக் காலத்துல‌.”

காயா அம்மாவின் கைபற்றி மென்மையாய் ஆதரவாய் அழுத்தினாள். கீமோதெரபிக்கு வென்ஃப்ளான் செருகிச்செருகி இளைத்து மெலிந்த, பச்சைநரம்பு வெளித்தெரியும் கரம்.

“திருட்டு பத்திப் பேசுனா இதுவும் சொல்ல வேண்டி வரலாம்னுதான் ஏதுமே சொல்லல.”

“ம்.”

“உங்கப்பா என்னை விட்டுட்டுப் போனது அதனால்தான்.”

“…”

“அவருக்கு நான் அசுத்தமாகிட்டேன். எச்சில் பண்டம்.”

“…”

“அதை அவர் திரும்பத் தொட விரும்பல.”

“…”

“ஆனா அந்தக் கடவுளே நான் அசுத்தம்னு நினைச்சாரோ என்னவோ அந்த இடத்துலயே எனக்குப் புற்றுநோய் கொடுத்துட்டார், பாரு. வலிச்சு வலிச்சு அந்த இடமே மரத்துடுச்சு.”

அம்மா தேம்பி அழுதாள். காயா அவள்மீது சாய்ந்து அழுந்த‌ அணைத்துக்கொண்டாள்.

“இதென்னம்மா அர்த்தமில்லாத‌ பேச்சு?”

அம்மா காயாவை சற்று நகர்த்திவிட்டு புடவை முந்தானையில் மூக்கைச் சிந்தினாள்.

“எனக்கு ஏதாவது அப்படி நடந்தாலும் இந்த மாதிரிதான் சொல்வியா?”

“வாயை மூடு. இது உனக்குனு இல்ல, எந்தப் பெண்ணுக்குமே நடக்கக்கூடாது.”

“கரெக்ட். எவனோ தன் வெறியை உன் மேல தீர்த்ததுக்கு நீ என்ன செய்வேம்மா?”

“ம்.”

“இது ஆம்பிளைக உலகம்மா. நம்ம‌ உடம்பு அவுங்க சொத்து. அதுதாண்டி ஒன்னுமில்ல.”

“ம்.”

“கைபடாம பார்த்துக்குவாங்க. அதுக்கு அடிச்சுக்குவாங்க. மீறிக் கைபட்டா அழுக்கு.”

“ம்.”

“அந்த பிற்போக்கு புத்திதான் அப்பாவுக்கும் இருந்திருக்கு.”

“அது பிரச்சனை இல்லை காயா. ஒருவகையில் அது நியாயம்னு கூடச் சொல்வேன்.”

“…”

“ஆனா உன்னைப் பத்தி ஒரு நிமிஷமாவது நினைச்சாரா?

“நான் அவரிடம் கேட்கிறேன்.”

“அவர் வர மாட்டார்.”

“ஏன்மா அப்படிச் சொல்ற?”

“உனக்கு உறைக்கலயா?”

“ம்… இல்ல…”

“அவர் திரும்ப ஓடிப்போயிட்டார், காயா.”

*

அவனை இழுத்தி நிறுத்தியது முல்லை தலைசூடியிருந்த மல்லிகையின் பரிசுத்த‌ மணம்.

அவளை நெருங்கிவந்து அதை முகர்ந்தான். முரளி அவனைத் தடுக்கப் பாய்ந்தபோது அவனை அடித்து வீழ்த்தி இழுத்துப் போய் கழிவறையில் அடைத்துத் தாழ்போட்டான்.

முல்லைக்கு உடம்பெல்லாம் வியர்த்து நின்றது. ஜாக்கெட் நனைந்து அக்குள் கசகசத்தது. அவளது வெளிறிய‌ வதனத்தில் பயமும் அருவருப்பும் குழப்பமும் மாறி மாறி ஒளிர்ந்தன.

கையில் கத்தியுடன் முல்லைக்கு எதிரே அவன் நின்றிருந்தான். முரளியைவிட உயரம்.

அவன் நின்ற‌ தொனியில் ஒரு மாதிரியான‌ நாடகத்தனம் இருந்தது. குரங்குக் குல்லாயை நீட்டித்த மாதிரி ஒரு முகமூடியில் அவன் கண்களும் வாயும் மட்டும் வெளித்தெரிந்தன.

அந்தப் பின்னிரவில் அவ்வ‌றையில் நாற்பது வாட்ஸ் பல்பின் அசட்டு வெளிச்சம் வீசியது. அதிகம் பொருட்களற்ற வரவேற்ப‌றை. ‘வரவேற்பறை’ என்பது ஒருவித சொகுசுத்தனம் கொண்டிருக்கிறது. ஹால் எனும்போது சரியாய் இருக்கிறது. அந்த ஹாலின் மூலையில் ஒரு தொலைக்காட்சியும் அதற்குப் பக்கவாட்டு மூலையில் மூன்று இரும்பு நாற்காலிகளும் இருந்தன. வெறுக்க வைக்குமளவு அத்தனை சுத்தமாய்க் கூட்டிப்பெருக்கப்பட்ட அறை.

அவன் அறையைச் சுற்றிப் பார்த்தான். ஓரத்தில் ஒரு கொடியில் துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவன் அதைச் சுட்டி பின் தரையைக் காட்டி சைகை காட்டினான்.

முல்லைக்குப் புரிந்துவிட்டது. அவன் கொடியில் தொங்கிக்கொண்டிருந்த வேட்டியைத் தரையில் விரிக்கச் சொல்கிறான். முரளி எப்போதேனும் கட்டுகிற வெண்ணிற வேட்டி.

அவள் தயங்கி நின்றாள். அவன் வேகமாகச் சென்று கழிவறையின் தாழை நீக்கினான். உள்ளே முரளி இருளில் வாயில் துணி அடைக்கப்பட்டு கை கால்கள் கட்டப்பட்டு கீழே உட்கார்ந்திருந்தான். அவன் ஒவ்வொரு ஸ்விட்ச்சாய் முயன்று விளக்கைப் போட்டான். 

முல்லை பின்னாலேயே ஓடி வந்தாள். அவன் தன் கையிலிருந்த கத்தியை முரளியின் கழுத்தின் பக்கவாட்டில் வைத்து மெல்லிசாய் ஒரு கோடிழுத்தான். புது ரத்தம் எட்டிப் பார்த்தது. அது உயிருக்குச் சேதாரமற்ற நேக்கான வெட்டு. முரளி கதற முயன்றான்.

வாயில் திணிக்கப்பட்ட துணி தடுத்தது. கண்களில் நீர் பொங்க, அப்படியே சரிந்தான்.

முல்லை அலறியபடி முரளியின் மீது பாய்ந்தாள். அவளைத் தடுத்து வெளியே இழுத்து கழிவறைக் கதவைச் சாத்தித் தாழிட்டான். மெல்ல நடந்து வரவேற்பறைக்கு வந்தான்.

அடுத்து காயா தூங்கிக்கொண்டிருந்த அறையையும் இழுத்துச் சாத்தித் தாழிட்டான்.

முல்லை சற்று நேரம் கழிவறை முன்னால் உட்கார்ந்து அழுதுவிட்டு ஹாலுக்கு வந்தாள்.

இப்போது அவன் முன்புசெய்த அதே சைகையைக் காட்டினான். முல்லை கண்ணீருடன் கொடியிலிருந்த முரளியின் பதினாறு முழ வேட்டியை விரித்துத் தரையில் பரப்பினாள்.

அடுத்து அவன் சைகையில் அவளைப் படுக்கச் சொன்னான். அவள் போய் அமர்ந்தாள்.

அவன் சட்டையைக் கழற்றி, பின் பேண்ட்டைக் கழற்றி, ஜட்டி முகமூடியுடன் நின்று அவளைப் பார்த்தான். அவன் புன்னகைப்பது அவன் கண்களில் தெரிந்தது. அவள் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள். உட்கார்ந்தபடி அவனைப் பார்த்து கையெடுத்தாள்.

அவன் அருகே வந்து அவளைக் கன்னத்தில் அறைந்தான். அவள் வேட்டியில் சரிந்தாள்.

அவன் அவளை ஆக்கிரமித்தான். அவள் கண்களை இறுக‌ மூடிக்கொண்டாள். அதை மீறிச் சுரந்த நீர் பக்கவாட்டில் வழிந்தோடிக்கொண்டே இருந்தது. பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் காயா இடையே விழித்துக்கொள்ளலாகா என வேண்டினாள் முல்லை.

கீழிருந்த‌ வேட்டியை இரு கைகளிலும் பற்றிக்கொண்டாள். முரளி நினைவில் வந்தான்.

*

முல்லை உயிரைவிட்ட போது வாசலில் ஒரு காகம் வெறியுடன் கரைந்தது. அதற்கு ஐந்து நிமிடம் முன்தான் காயா அவளுக்குத் தேக்கரண்டியில் அரிசிக் கஞ்சி புகட்டியிருந்தாள்.

கமலுக்கு முதலில் சொன்னாள். பிறகு யாருக்குச் சொல்வதெனத் தெரியவில்லை. பின் நினைவு வந்து பள்ளியின் துணை முதல்வருக்கு அலைபேசினாள். அதிக நபர்கள் இன்றி வாழ்ந்து செத்துவிட்டாள் அம்மா எனத் தோன்றியது. அதற்கே எத்தனை வலி அவளுக்கு!

ஏனோ காயாவுக்கு அழுகை வரவில்லை. கடந்த சில நாட்களாகவே அந்த மரணத்தை எதிர்பார்த்திருந்தாள் என்பது ஒரு காரணம். அம்மாவுக்கு அது ஒருவித விடுதலைதான்.

கமல் இறுதிக் காரியங்களில் உடனிருந்து பொறுப்பெடுத்துச் செய்துகொடுத்தான்.

காயா வீட்டிலிருந்து சில பாத்திரங்களை எடுத்துக்கொண்டாள். மற்ற யாவற்றையும் விற்க ஏற்பாடு செய்தாள். பக்கத்து வீட்டுக்காரர்கள் சில‌பல பொருட்களை அடிமாட்டு விலைக்குக் கேட்டார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம். அத்தனை காலமும் மேம்போக்காகவேனும் கூட இருந்தது அவர்கள்தாம். அவளால் மறுக்க முடியவில்லை.

சிலரிடம் சிறுபொருட்களுக்குப் பணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். அவர்கள் அம்மா பற்றி நல்வார்த்தை சொல்லி – “நல்ல மனுஷி” என இழப்பிற்கு வருந்தினார்கள்.

அம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணுக்குச் சம்பளம் தாண்டி மேலும் பணம் கொடுத்து நன்றி சொன்னாள். கர்த்தர் காயாவை ஆசீர்வதிப்பார் என்றாள் அப்பெண்.

பதினைந்து ஆண்டுகளாக வசித்த வீடு. வீட்டு உரிமையாளரிடம் சாவியைக் கொடுத்து தேய்மானக் கழிவுபோக‌ மீதி முன்பணமான‌ சொற்பத் தொகையைப் பெற்றுக்கொண்டாள்.

வீடு காலியானது. அவள் கிளம்பும்போதே வெள்ளையடிக்க ஆரம்பித்திருந்தார்கள். சுண்ணாம்பில் கண்ணீரை, புன்னகையை மறைக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.

நோய் கண்டு இறந்ததால் – அதுவும் புற்று – சுற்றத்தின் ஆலோசனைப்படி அம்மாவின் உடைகள், மெத்தை, விரிப்பு, போர்வை உள்ளிட்டவற்றை எரிக்க ஏற்பாடு செய்தாள். அம்மாவுக்குப் பிடித்த ஒரு புடவையை மட்டும் ஞாபகத்துக்கு எடுத்துக்கொண்டாள். 

மறக்காமல் அப்பாவின் வெள்ளை வேட்டியை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டாள்.

*

இராத்திரி எதற்காகவோ காத்திருந்தது. தாய் கங்காரு போல், முத்துச் சிப்பி போல் இரவின் மடியில் பொதித்துவைத்திருக்கும் இரகசியங்கள்தாம் எத்தனை கோடி! அவற்றில் சில ஒருபோதும் வெளிவராதவை. அப்படி இருப்பதுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்லதும்கூட என இரவு நினைத்திருக்கலாம். ஓர் அன்னைபோல் இலோகத்தை இரட்சிக்கிறது இரவு.

காயா தூங்க முயன்றுகொண்டிருந்தாள். தரையில் பரப்பிய பால்ரஸ் குண்டின் மீது செருப்புப் போட்டு நடப்பதுபோல உறக்கம் வழுக்கிக்கொண்டே போனது. நேற்று இரவு தீபாவளிக்குப் பட்டாசு வெடித்து, சினிமாவுக்குப் போய்வந்த சந்தோஷத்துக்கும் இன்று நிலவும் இறுக்கத்துக்கும் தொடர்பே இல்லை. காயாவுக்குச் சரியாகப் புரியவில்லை.

அப்பாவுக்குக் கழுத்தில் ஒரு புதிய‌ காயமிருந்தது. அந்தக் கட்டில் இரத்தமேறி இருந்தது.

எதுவுமே சரி இல்லை. காலையிலிருந்து அம்மாவும் அப்பாவும் சந்தோஷமாக இல்லை. அம்மா ஒரு வார்த்தையும் பேசவில்லை. அப்பா தொடர்ந்து அவளிடம் ஏதோ சமாதானம் செய்துகொண்டிருந்தார். ஆனால் அவள் ஏதும் பதில் பேசாமல் அழுதபடியே இருந்தாள்.

அவர்கள் மெல்லிய குரலில் பேசிக்கொள்வது தனக்குத் தெரியாமலிருக்கவே என்பதும் காயாவுக்குப் புரிந்தது. அவர்களின் சொற்கள்வழி ஒருசித்திரம் உருவாக்க முனைந்தாள்.

யாமத்தின் நிசப்தம் வரவேற்பறையில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்க உதவியது.

“விடு முல்லை. தெருவில் நடக்கறப்ப நாய் கடிக்குது. அதுக்காக அதையே நினைச்சிட்டு இருக்க முடியுமா? ஒரு விபத்து நடந்த‌ மாதிரி நினைச்சுக்க. நாம இதை மறந்துடுவோம்.”

“…”

“அது சம்பந்தமா நினைவிருக்கும் ஏதும் வேண்டாம், முல்லை.”

“…”

“இந்த வீட்டில் இனி இருக்க வேண்டாம். சீக்கிரம் வேறு வீடு பார்த்துக்கலாம்.”

“…”

“நாளைக்கு சீக்கிரம் எழுந்து முதல் வேலையா அந்த வேட்டியை எரிச்சிடுவோம்.”

“…”

“ஒன்னுமில்லடா.”

அப்பா அம்மாவை அணைத்துக்கொண்டிருக்க வேண்டும். அம்மா விசும்புவது கேட்டது.

“ஏன் அழற? இதில் உன் தப்பு என்ன இருக்கு? உன் இஷ்டமில்லாம பலவந்தமா நடந்தது.”

“ம்.”

நேற்றைய இரவிலிருந்து அம்மா பேசும் முதல் சொல் அதுதான். காயாவுக்கு நிம்மதியாக இருந்தது. இனிமேல் அம்மா பேசாமலே போய்விடுவாளோ என அஞ்சி இருந்தாள் காயா.

“ஏன் அப்படிச் சத்தம் போட்டே முல்லை?”

“எப்பங்க?”

“அவன் உன்னை… கடைசியா…”

“ம்.”

“ரொம்ப வலிச்சுதா?”

“ம். ஆமா…”

“என் மேல சத்தியமா?”

“…”

“சொல்லு.”

“வலி இல்லங்க‌.”

“அப்புறம்?”

“அது மாதிரி இருந்ததே இல்ல எனக்கு.”

“ம்.”

அதற்குப் பிறகு அப்பா ஏதும் பேசவில்லை. அது சரியாய்ப் புரியவில்லை காயாவுக்கு.

ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த ‘ம்’தான் அப்பா பேசிக்கேட்ட கடைசி வார்த்தை. அன்றைய‌ இரவுதான் அப்பா காணாமல் போனார்.

*

புதிதாய்ப் பெண்ணாகி நின்ற நாயை முன்னிட்டு அத்தெருவில் குரைப்புக் கும்மாளம்.

கமல் அன்றைய இராத்திரி தன்னை நாடுவான் என காயாவுக்குத் தெரியும். அம்மாவைப் பார்க்கப் போனதிலிருந்து பதினாறாம் நாள் காரியம் முடிந்து மாலையில் வீடு திரும்பும்வரை கிட்டத்தட்ட ஒரு மாதம் அவர்கள் தனித்திருக்கும் சூழலே கிட்ட‌வில்லை.

அவளுக்கும் அவன் சூடு வேண்டியிருந்தது. காத்திருப்பின் ஆவேசம் கமலிடம் கனன்றது.

ஆனால் கமல் மேலே ஏறிப்பரவிய போது காயா யோசனையாகவே இருந்தாள். கவனம் குவியவில்லை. ஊக்குகளை, நாடாவை அவனவிழ்க்க பொம்மை போல் ஒத்துழைத்தாள்.

கண்களைத் திறந்துகொண்டே இருந்தாள். அது வழக்கமில்லை. கமலுக்குத் தெரிந்தால் அதிர்ந்துபோவான். விளக்கணைத்துப் புணர்வது எத்தனை வசதியானது என எண்ணிக்கொண்டாள். இடையில் ஒருமுறை வலித்தபோது மட்டும் அவளது சிந்தனை அறுந்தது.

சில நிமிடங்களில் கமல் கீழே இறங்கிக்கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்ட போது சுமையொன்றை இறக்கி வைத்தது போல் ஆசுவாசமாய் உணர்ந்தாள். பதிலுக்கு ஓர் இயந்திரம் போல் அவளும் அவனை நெற்றியில் முத்தமிட்டாள். அவன் அவளுக்குள்ளே இருந்ததற்கும் இந்தக் கணத்துக்கும் அவளுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

தெரு நாய்களின் சப்தங்கள் மெல்ல மெல்ல உயர்ந்து அதன் உச்சத்தை எட்டியிருந்தது.

கமல் எழுந்து கழிவறைக்குள் நுழைந்தான். அவன் சிறுநீர் கழிக்கும் சப்தமும், இடையே வாயு பிரிக்கும் சப்தமும், பின் டாய்லெட் ஃப்ள்ஷ் அழுத்தி நீரிறைக்கும் சப்தமும் அவள் காதுகளில் பாய்ந்தன‌. திரும்பி வந்து கட்டிலின் ஓரம் சுருண்டு கிடந்த‌ ட்ராக் பேண்ட்டை அணிந்துகொண்டு படுக்கையில் விழுந்தான். அப்படியே மல்லாக்கக் கிடந்தாள் காயா.

“ட்ரெஸ்ஸைப் போட்டுட்டுப் படு.”

“…”

“காலைல ஏழு மணிக்கு எழுப்பு.”

“…”

அவள் பதிலுக்குக் காத்திராமல், அவளுக்கு முதுகு காட்டிப் படுத்து, கண்கள் மூடினான். அவளது தொடையிடுக்கில் வழிந்த‌ அவனது உயிர்த்திரவம் உலரத்தொடங்கி இருந்தது.

அம்மாவின் முகம் மனதில் மேலேறி வந்துகொண்டே இருந்தது. வியர்த்த, கனிந்த முகம். இந்தச் சமூகத்தை, தன் புருஷனை வென்ற முகம். களிப்புச் சுவையும், குற்றவுணர்வும் கலந்து மண்டிய முகம். அன்று அவளுக்குத் திறந்துகொண்ட இரகசியம் எது? அதுவரை அவள் கண்டிராத அப்புதிய‌ மலை முகடு எது? நூதனமாய்த் தொடப்பட்ட‌ ஜி-புள்ளி எது?

தான் இதுவரை அதை அனுபவித்திருக்கிறேனா எனக் குழம்பினாள் காயா. ஒருவிதச் சுகத்தை உண‌ர்ந்திருக்கிறாள். ஆனால் ஏதோவொன்று போதாமலும் இருந்திருக்கிறது.

கானகம் புகுந்தபின் வழிதவறி வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி அலையுமொரு யாத்ரீகன் போல் மிச்ச‌ இரவு நித்திரையின்றி முள்ளாய்க் குத்தியிருக்கிறது காயாவுக்கு.

மணமான புதிதில் அவன் பின்னந்தலை மயிர் பற்றி நாசூக்காக காதில் கிசுகிசுத்தாள்.

“இன்னும் கொஞ்சம் நேரம் பண்ணேன்.”

கமல் திடுக்கிட்டுத் தலையுயர்த்தி காயாவின் முகத்தை உற்றுப்பார்த்துச் சொன்னான்.

“என்ன அனுபவசாலி மாதிரி பேசற?”

அதோடு அவள் விட்டுவிட்டாள். எவரிடமும் சொன்னதில்லை. அம்மாவே இறுதிவேளை கூட உண்மையைச் சொல்லாமல்தானே செத்துப்போனாள் என எண்ணிக்கொண்டாள்.

அம்மாவின் அதீத‌ முனகல் காதுகளில் ஒலித்தது. உடல் சிலிர்த்தது. ஒலித்துணுக்குகளாய் அந்த‌ இரவு அவளுணர்ந்தவை யாவும் மெல்ல மெல்ல நினைவில் மங்கிவிட்டது. ஆனால் அந்தக் குரல் மட்டும் மறக்கவே இல்லை. காயா அப்படி ஒருபோதும் கத்தியதே இல்லை.

பரம்பரையாக முதலிரவு நிகழும் கட்டில் பற்றிய‌ ஏதோ படக்காட்சி நினைவுக்கு வந்தது.

அவள் எழுந்து துகிலற்ற சுதந்திரத்துடன் மெல்ல நடந்து வார்ட்ரோபைத் திறந்தாள். தன் உடைகளுக்கடியே வைத்திருந்ததைக் கையிலெடுத்தாள். பெட்டை நாய் ஊளையிட்டது.

காயா வெள்ளை வேட்டியைத் தரையில் விரித்துப் பரப்பினாள். படுத்துக்கொண்டாள்.

அறை முழுக்க‌வும் அந்த‌ வினோத வாசனை கமழத் தொடங்கியது. நாய்கள் ஓய்ந்தன.