தொ.ப எனும் பெருசு

by மானசீகன்
1 comment

தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் சிறு வட்டத்துக்குள் சுடரும் தீக்குச்சி நெருப்பைப் போன்றவர்கள். அவர்கள் தாரகைகளாக உருமாற வேண்டும் என்றால் சினிமாவுக்குப் போய் பாட்டெழுதி கதாநாயகிகளை வார்த்தைகளால் துகிலுரிய வேண்டும். குறைந்தபட்சம் அரசியல்வாதிகள் தலைமையேற்கும் நிகழ்ச்சிகளில் போய் உட்கார்ந்துகொண்டு ‘நீ உன் மானத்தால் வானத்தை நாண வைத்தவன்’ என்று சிரிக்காமல் கயிறு திரிப்பதற்குக் கற்றிருக்க வேண்டும். மற்றவர்களையெல்லாம் ‘எழுத்தாளர்கள்’ என்று அவர்கள் குடும்பத்திற்கே தெரியாது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. முகநூல் வந்த பிறகு சுயமி படத்தை பதிவேற்றம் செய்து விருப்பக்குறிகளை அள்ளுவதற்காகவாவது அவர்களின் குடும்பம் புத்தகங்களைத் தூக்கிப்போட்டு ஏறி நின்றபடி பட்டும் படாமல் எழுத்தாளர்களுக்கு மட்டும் கை கொடுக்கிறது.

ஆனால் இலக்கியமெனும் சிறுவட்டத்தைத் தாண்டி அபூர்வமாக சிலர் வெளியிலும் சிறிய அளவில் கவனிக்கப்படுகிறார்கள். அந்த கவனமும்கூட பேசத் துணையில்லாத இரவின் வெறுமையில் பக்கத்தில் இருக்கும் சிலையைப் பார்க்கும் பொருளற்ற கவனம்தான். இங்கு சூப்பர் ஸ்டாராக இருப்பவர்கள்கூட இந்த வட்டத்திற்கு வெளியில் சீரியலில் மருமகளின் முதலிரவைக் கெடுக்கும் ஒரு பாடாவதி மாமியாருக்கும் கீழேதான்‌. மூவாயிரம் ஆண்டுகால கலாச்சாரப் பின்னணி கொண்ட செம்மொழியின் நிகழ்கால யதார்த்தம் இதுதான்.

தொ.ப. என்கிற பெயர் சில ஆயிரம் மனிதர்களுக்கு தெரிந்ததும் இப்படித்தான். அவர்களில் சில நூறுபேர் மட்டுமே அவர் புத்தகங்களை ஒழுங்காக வாசித்திருப்பார்கள். மற்றவர்களுக்கு தொ.ப ஒரு பெரிய ஆள். அவ்வளவுதான். தேனியில் பேருந்து ஏறிய அழகிய பெண்ணை முகம் மாற்றாமல் முறைத்துக்கொண்டே வீரபாண்டி வந்ததும் கௌமாரியம்மனுக்கு கும்பிடு போடுகிற பக்தர்களின்(!) பாவனையே இங்கும் வேலை செய்கிறது.

தொ.ப.வை சரியாக மதிப்பிடுவது மிகவும் சிரமம். அவர் அடிப்படையில் தன் வீட்டுத் திண்ணையில் சம்மணம் போட்டு உட்கார்ந்து சகலத்தையும் சுவாரஸ்யமாக சொல்லத் தெரிந்த கை தேர்ந்த பெருசு. படைப்பாளிகளில் ‘கதைசொல்லி’ மாதிரி ஆய்வுலகில் அவர் ‘கருத்துசொல்லி’. ஜெயகாந்தனின் ‘மொட்டை மாடி சபை’, பிரபஞ்சனின் ‘மேன்சன் சந்திப்பு’ ஆகியவற்றைப் போல புகழ்மிக்கது தொ.ப.வுடனான அறிஞர்களின் சந்திப்பு. ஜெயகாந்தனின் சபை ஒருவகையில் தன்னகங்காரத்தால் நிரம்பி வழியும் சுய நிகழ்த்துக் கலை. அதற்கு அவர் ஞானம், பித்துநிலை, கலைத்தவம் என்றெல்லாம் பெயரிட்டுக் கொள்வார். பிரபஞ்சனின் மேன்சன் அன்றாடங்களின் சுவாரஸ்யங்களாலும் அவர் அறிந்து நாமறியா ஊடக உலகின், அரசியல் உலகின் கோமாளித்தனங்களாலும் நம்மைக் களிகொள்ள வைக்கிற அறைக்கூத்து.

சிற்பி சந்திரசேகரன் வடிவமைத்திருக்கும் தொ.பரமசிவனின் சிலை

ஆனால் தொ.ப.வின் வீடோ பேராசிரியர்களும் எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் கற்றுக்கொள்கிற வகுப்பறையாகவே இருந்திருக்கிறது. கமல்ஹாசன் போன்றோர் வந்துசென்ற பிறகு அந்த இடத்திற்கு கூடுதலான ஊடக கவனம் கிடைக்க ஆரம்பித்தது. உண்மையில் தொ.ப .வின் மிக முக்கியமான பங்களிப்பு இதுதான். தமிழின் பிற ஆய்வாளர்களிடம் இருந்து அவர் வேறுபடும் இடமும் இதுதான். தொ.ப. மிகச்சிறந்த வாய்மொழிக் கலைஞர் என்பதே அவருடைய பலம் மற்றும் பலவீனமாக இருக்கிறது. அவருக்குப் பேச்சு வெகு இயல்பாக வரும். ஆனால் மொழி அலங்காரம், சுய பெருமிதம், அதீதமான உணர்ச்சி ஆகியவற்றில் சிக்கிக்கொள்ளாமல் சமநிலையோடு கருத்துகள் அருவியாகக் கொட்டுவதே அவருடைய பெரும்பலம். தமிழிலக்கியங்களில் பலரும் கவனிக்க மறந்த வரிகளை நுட்பமாக அடையாளம் கண்டு எந்தத் தருணத்திலும்  அவற்றை மனப்பாடமாகச் சொல்கிற ஆற்றலும் சிறு தெய்வங்கள்,  கோவில்கள் பற்றிய பரந்த அறிவும், தொன்மங்கள், வரலாறுகளை சுய சிந்தனையுடன் உரசிப் பார்த்துச் சொல்கிற தெளிவும், பிற ஆய்வாளர்கள் பயணிக்காத பாதையை அடையாளம் காட்டும் மைக்ரோ லெவல் அணுகுமுறையும் அவருடைய பேச்சின் பெரும்பலங்கள்.

கூடுதலாக, அவருக்குள் எப்போதும் ஒளிந்திருக்கும் கிராமத்துப் பெருசின் சமத்காரமான கூறுமுறை அவருடைய உரையாடலை, பேச்சை, கலையாக உருமாற்றி விடுகின்றது. மிக முக்கியமான கருத்தரங்குகளிலும்கூட அவர் இதே பாணியையே பின்பற்றினார். அவர் எந்தக் கட்டுரையையும் எழுதி வைத்து வாசிப்பதில்லை. கல்யாண பத்திரிக்கை வைக்க வந்தவன் சம்பந்தி வீட்டைப் பற்றிப் பேசுவது போல அவர் பாட்டுக்கு சுவாரஸ்மாகப் பேசிக்கொண்டே இருப்பார். ஆய்வுலகில் அவருக்கான இடத்தை உறுதிசெய்வது இந்தத் தனித்த அணுகுமுறைதான்.

அவர் பல நூல்களை எழுதியிருந்தாலும் என்னுடைய பார்வையில் நான்கு நூல்கள் மிக முக்கியமானவை.

1. அழகர் கோவில் பற்றிய முனைவர் பட்ட ஆய்வேடு
2. அறியப்படாத தமிழகம்
3. தெய்வங்களும் சமூக மரபுகளும்
4 . சமயங்களின் அரசியல்

இந்த நூல்களை ஆழமாக வாசிக்கிற ஒருவனுக்கு தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, சமயங்களின் அரசியல் குறித்த சில எளிய திறப்புகள் கிடைக்கும். அந்தத் திறப்பை அனுபவமாக வைத்துக்கொண்டு நாம்தான் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.

சிறுதெய்வத்தைக் கொண்டாடும் பெரியாரிஸ்ட்:

தொ.ப. தன்னை ஒரு பெரியாரியவாதியாகவே அடையாளப்படுத்திக்கொள்கிறார். ஆனால் அவருடைய ஆய்வியல் அணுகுமுறை இடதுசாரிப் பார்வை கொண்ட நா.வானமாமலை, ஆ.சிவசுப்ரமணியன் ஆகியோரின் சாயல்கள் கொண்டது. சிறுதெய்வ வழிபாட்டை அதன் பண்பாட்டுக் கூறுகளுக்காக கொண்டாடுகிற, சிறுபத்திரிகை உலகில் பெரியாரிய அறிவுஜீவியாக தன் கருத்துகளை முன்வைக்கிற ஒரே பெரியாரிஸ்ட் அவராகவே இருக்க முடியும். இந்த முரணே அவருடைய ஆய்வுப் பார்வையை சுவாரஸ்யமான தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கக்கூடும். அந்த முரணுக்கான சமாதானத்தை ‘சாணத்தையும் செம்மண்ணையும் பெரியார் எதிர்க்கவில்லை. பிள்ளையாரைத்தான் எதிர்த்தார். காரணம் பிள்ளையாரை வைத்து உருவாக்கப்பட்ட பண்பாட்டு- அரசியல் அதிகாரம்தான். பெரியார் எப்போதும் அதிகாரத்தின் எதிரி’ என்று அவரே ‘புதிய காற்று’ நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

பொங்கலை தீபாவளிக்கு மாற்றாக முன்வைக்கும் திராவிட இயக்கங்களின் பார்வையை அவர் இன்னும் கூர்மையாக வழிபாட்டு மரபில் நின்றபடி பேசுகிறார். தீபாவளியில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற வழக்கத்தை ‘நீத்தாருக்கான சடங்கு’ என்று சுட்டிக்காட்டி நரகாசுரன் கதையை கேள்விக்குள்ளாக்கும் தொ.ப, பரிபாடலில் இடம்பெற்றிருக்கும் தை நீராடலை இணைத்துப்பேசி பொங்கலின் தொன்மையை உயர்த்திப் பிடிக்கிறார். தைப்பூசத்திற்கு சாவுத் தீட்டுகூட கிடையாது என்பதையும் பார்ப்பனர்கள் பயன்படுத்தாத கிழங்கு படையலாக வைக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டி பொங்கலை சாக்காக வைத்து அ-பிராமண அரசியலை பண்பாட்டு மரபுக்கு நகர்த்தி வருகிறார். தமிழர் திருமணங்களில் மருத்துவர், வள்ளுவர், பண்டாரம், பறையர் ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்களே திருமணம் நடத்திவைக்கிற உரிமை பெற்றிருந்த செய்திகளை பல கள ஆய்வுகள் மூலம் நிரூபணம் செய்கிறார். ‘உன் திருமணத்தன்றும் இதே உடைதான் அணிந்திருந்தாயா?’ என்று சிவனை உரிமையோடு கிண்டல் செய்யும் நாவுக்கரசரின் பாடலை போகிறபோக்கில் சொல்லி, தீவிர விமர்சனமாக முன்வைக்காமல் நட்பு முறையில் நாத்திகவாதத்தை அறிமுகம் செய்கிறார். குலதெய்வ வழிபாட்டைக் கொண்டாடுவதே பிராமணத் தொடர்பையும் ஆதிக்கத்தையும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அரசியலிலிருந்து அகற்றுவதற்கான வழி என்பதை உணர்ந்த பெரியாரியராகவே தொ.ப. தன் கருத்துகளை முன்வைக்கிறார்.

https://s3.ap-south-1.amazonaws.com/storage.commonfolks.in/docs/products/images_full/ariyappadaatha-tamizhagam_FrontImage_319.jpg

‘பார்ப்பு’ என்கிற சொல்லை தொல்காப்பியர் ‘இளமை’ என்கிற பொருளில் பயன்படுத்துகிறார். அதை அடிப்படையாக வைத்து அவர்களின் வழிபாட்டு உரிமையை தொ.ப. கேள்விக்குள்ளாக்குகிறார். பார்ப்பனர்கள் கோவிலில் வழிபாடு நிகழ்த்துவதில் இளையவர்கள். அவர்களுக்கு முன்பே வேறு சாதியினர் அந்த உரிமையைப் பெற்றிருந்தனர் என்று அறுதியிட்டுக் கூறும் தொ.ப., பனம்பழத்தின் மேல் கீழ் முனைகளை பறையன் முனை, பார்ப்பான் முனை என்று பெயரிட்டு அழைப்பதையும் ‘பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன். கேட்பார் இல்லாம கீழ்சாதியாயிட்டான்’ என்கிற வாய்மொழி வழக்கையும் தன் கருத்துக்கு வலுசேர்க்கும் செய்திகளாக இணைத்துக்கொள்கிறார். வசைச்சொல்லாக இல்லாத ‘பார்ப்பனர்’ என்கிற சொல்லால் தாம் அழைக்கப்படுவதற்கு அவர்கள் ஏன் இவ்வளவு எரிச்சல்பட வேண்டும் என்று யோசிக்கிற போது நாமும் தொ.ப.வின் ஆய்வுப் பார்வையை ஏற்க வேண்டியிருக்கிறது..

மீனாட்சி அம்மன் ஆலயப் பிரவேசத்தை காந்தி மற்றும் காங்கிரஸின் சாதனையாகவும் முத்துராமலிங்கரின் பரந்த மனமாகவும் மட்டுமே அடையாளம் காண்கிற ஆய்வாளர்கள் உண்டு. தமிழ்ச் சமூகத்தில் சுயமரியாதை இயக்கம் உருவாக்கிய பாதிப்பாகவும் அதனை அடையாளம் காண முடியும். ஆலயப் பிரவேசம் திட்டமிடப்பட்டவுடன் அதைக் கண்டித்து இரு பார்ப்பனப் பெண்கள் அதற்கு எதிராக பாட்டுப் புத்தகம் வெளியிட்ட அபூர்வமான நிகழ்வை தொ.ப. ஆய்வுசெய்திருக்கிறார். அந்த ஆய்வில் வைதீக மனப்பான்மை கொண்ட பார்ப்பனர்கள் மீனாட்சி அம்மன் ஆலயம் தீட்டாகி விட்டதாகக் கருதி புதிய அம்மன் கோவில் கட்டியதையும் காலப்போக்கில் அது தன் செல்வாக்கை இழந்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.‌ ஆனால் மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்தை அம்பேத்கருக்கு எதிரான காந்தியின் சதியாகக் கருதுகிற மரபான பெரியாரியப் பார்வை தொ.ப.விடமும் தொடர்வதை அந்தக் கட்டுரை அடையாளம் காட்டுகிறது.

வெறுப்பில்லாத தமிழ்த்தேசியன்:

அதிதீவிரமாக தமிழ்த் தேசியம் பேசுகிற சிலருடைய கருத்துகளைப் படிக்கிற போது நமக்கு அதிலிருக்கிற நியாயமான வரலாற்றுக் காரணிகள் மீது ஈர்ப்பு வந்தாலும்கூட, ஏதோவோர் இடம் அங்கே நெருடலாகவே இருக்கும். தொ.ப.வை வாசித்தால் அந்த நெருடலுக்கான காரணங்கள் விளங்கிவிடும்.

சீமானே தொ.ப.வின் நேரடி மாணவர்தான். அவரைப் பற்றி பேசும் போது ‘வழி தப்பிய ஆடு’ என்றே தொ.ப. குறிப்பிடுகிறார்.‌ தொ.ப.வுக்கு விஜயநகர ஆட்சியின் மீது நிறைய விமர்சனங்கள் உண்டு. ‘கறுப்பு’ உள்ளிட்ட பல கட்டுரைகளிலும் சாதி குறித்து பேசும் இடங்களிலும் தமிழ்ச் சமயங்களில் புகுந்துவிட்ட வைதீகத் தன்மை பற்றி விமர்சிக்கிற போதும் இதனை நன்றாகவே உணர முடியும். ஆனால் அதுவரை தமிழர் ஆட்சியில் இல்லாத கேடுகள் அனைத்தும் தெலுங்கர்களால்தான் இந்த மண்ணில் நிலைகொண்டன என்கிற இனவாதப் பார்வையை அவர் ஏற்கவில்லை. மேலும் தமிழ்த் தேசியம் அதிகாரம் சார்ந்து உருவான பார்ப்பன எதிர்ப்பை தமிழர் X தெலுங்கர் என்று உருமாற்றி விடுவதை அவர் நிராகரிக்கிறார். வழிபாடு, பண்பாடு, மொழி சார்ந்த விஷயங்களில் தமிழ்த் தேசியராகவே சிந்திக்கும் தொ.ப. இந்த மூன்று தளங்களிலும் அதிகார மையமாக நிலைகொண்டுவிட்ட பார்ப்பனரை எதிர்க்கிற விஷயத்தில் முழுமையான பெரியாரியராகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால் வழிபாடு சார்ந்த விஷயங்களில் வறட்டு நாத்திகம் பேசாமல் வெகுஜன மக்களின் பண்பாட்டு உளவியலை கவனத்தில்கொண்டே தன் பார்வையை முன்வைத்திருக்கிறார். அதனால்தான் சைவம், வைணவம் ஆகியவற்றை வைதீகத்திற்கு மாற்றான தமிழர் மதங்களாக அடையாளம் கண்டாலும் தமிழ்ச் சமணத்தையே பெரிதும் கொண்டாடுகிறார்.

https://gumlet.assettype.com/vikatan%2F2019-05%2Fc6457ae6-69c7-4c85-9710-e76e4add536e%2Fp102a.jpg?auto=format%2Ccompress&format=webp&w=360&dpr=2.6

‘நைனார்’ என்கிற பெயரே சமணத்தின் கொடையாக இருப்பதையும் ஞானதானம், அன்னதானம், ஔஷத தானம், அபய தானம் ஆகிய நான்கு சமணக் கொடைகளால்தான் பண்டைய தமிழ்ச் சமூகம் எழுந்து நின்றது என்பதையும் பெண்களை ஆசிரியராக்கி அழகுபார்த்த முதல் மதமாக சமணம் இருந்ததையும் சந்நியாசம் என்கிற வைதீக மரபிலிருந்து சமணத்தின் துறவு வேறுபட்டிருப்பதையும் ‘நிர்வாணம்’ என்கிற சொல்லாடலை சமணம் உள்வாங்கிய விதத்தையும் ஸ்வேதம்பர சமணர்களின் வெள்ளுடையே சரஸ்வதியின் வெள்ளுடையாக உருமாற்றம் அடைந்ததையும் இசக்கி, ஐயனார், முனீஸ்வரன் ஆகிய தெய்வங்களின் சமணப் பின்னணியையும் பள்ளி, மாணாக்கி ஆகிய சொற்களை முன்வைத்து தமிழகத்தின் பொதுக்கல்வியில் சமணம் ஏற்படுத்திய தாக்கத்தையும் அவர் நேர்ப்பார்வையோடு விரிவாக ஆராய்ந்திருக்கிறார். இன்னொரு புறத்தில் சமணத்திற்கு எதிரான தமிழர் பெரு மதங்களின் தாக்குதலையும் விருப்பு வெறுப்பின்றி பதிவுசெய்திருக்கிறார்.‌ தமிழ்ப் பொது அடையாளமாக உலகத்தால் கொண்டாடப்படும் வள்ளுவரை ‘சமணராகவே’ ஏற்கும் தொ.ப., ‘கள் உண்ணாமை, புலால் மறுப்பு, துறவு’ ஆகிய மூன்றையும் வெகுமக்கள் கலாச்சாரமாக உருமாற்ற முடியாமல் போய்விட்டதை சமணத்தின் தோல்வியாக மட்டுமின்றி வள்ளுவத்தின் தோல்வியாகவும் அடையாளம் காண்கிறார்.

வழிபாட்டு மரபுகளில் தொ.ப.விடம் இருக்கிற சமநிலைத் தன்மை மருத்துவம், சுற்றுச் சூழல், அறிவியல் என்று வருகிறபோது தமிழர்ப் பெருமிதமாக மட்டுமே சுருங்கிவிடுகிறது. பெரியார் ஒரு எல்லையில் நின்றால் இவர் நம்மாழ்வாரைப் போல் இன்னொரு எல்லையில் நின்றுவிடுகிறார். அவருடைய சில யூ டியூப் உரைகள் எனக்கு வாசிக்காமலே பரப்பப்படும் புலனத்தின் பகிர்வுச் செய்திகளை நினைவூட்டியிருக்கின்றன. ஆனால் எந்த இடத்திலும் அவரிடம் பிற மத, இன, மொழி, பண்பாட்டு வெறுப்புகள் இல்லையென்பதே அவரைப் பெரியாரியத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் நடுவில் நிற்கிற மானுடவியல் ஆய்வாளராக அடையாளம் காட்டுகிறது.

நாட்டுப்புறத் தமிழ் வைணவம்:

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீதிக்கட்சி, திராவிட இயக்கம் ஆகியவை பிராமண எதிர்ப்பை முன்னெடுத்த போது சைவமும் ஒரு புள்ளியில் அவற்றோடு கை கோர்த்தது. நெற்றியில் நீறுபூசிய சைவர்களும் கறுப்புச் சட்டைக்காரர்களும் வைதீக எதிர்ப்பு, பிராமண அதிகார அரசியல் எதிர்ப்பு, தமிழ் உணர்வு, தமிழர் பண்பாட்டு மீட்டுருவாக்கம் ஆகிய புள்ளிகளில் ஒன்றுபட்டனர். இருபதாம் நூற்றாண்டு தமிழ் மறுமலர்ச்சி அறிஞர்களோடும் முற்போக்கான சைவ மடாதிபதிகள் சிலரோடும் பெரியாருக்கு இருந்த உறவை யோசித்தால் இந்த உண்மை புரியும். வட இந்தியக் கடவுளான பிள்ளையாரை உடைத்தும் ராமரை செருப்பால் அடித்தும் கலகம் செய்த பெரியார், தென்னாடுடைய சிவனையும் ஈசனோடு ஞானமொழி பேசிய முருகனையும் பெரிய அளவில் கட்டுடைக்கவில்லை. ஆனால் சைவத்தோடு இருந்த அளவுக்கு நெருக்கமான உறவு திராவிட இயக்கங்களுக்கு வைணவத்தோடு இல்லை. இத்தனைக்கும் திராவிட இயக்கங்களின் சாதி எதிர்ப்பு, வழிபாட்டு சமத்துவம், தீட்டுக்கு எதிரான சிந்தனை ஆகியவற்றுக்கான பழைய குறியீடாக வைணவத்தில் ராமானுஜர் இருந்திருக்கிறார்.

காலங்கடந்து கலைஞர் இந்த விஷயத்தை முன்னெடுத்தார். வடகலை வைணவத்திலிருந்து விலகிய தென்கலை வைணவம் தமிழையும் பிரபந்தத்தையுமே முன்னிறுத்தியது. பைந்தமிழில் பாசுரம் பாடி அடியார்கள் முன்செல்ல, நடுவில் திருமாலும் அதற்குப்பின் சமஸ்கிருதம் ஓதும் பிராமணர்களும் நடந்து வருகிற வழிபாட்டு மரபிலிருந்து தமிழ் வைணவத்தை நாம் கண்டடைய முடியும். சமீபத்தில்கூட ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ என்கிற திராவிட இயக்கங்களின் கோரிக்கைக்கு ஆதரவாக தென்கலை வைணவத்தைப் பின்பற்றுகிற ஐயங்கார்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ராமானுஜர் வழிவந்த மரபு இன்றும் தொடர்வதற்கான சாட்சி அது. ஆனால் பெரியாரியரான தொ.ப தன்னுடைய நாட்டுப்புறக் கள ஆய்வின் துணைகொண்டு அனைவரையும் உள்ளடக்கும் தன்மைகொண்ட நாட்டுப்புற வைணவத்தை நோக்கி நகர்கிறார். ராமானுஜர் முன்வைத்த முற்போக்கான வைணவத்தை பெரியாருடன் இணைத்துப் பார்த்து கலவை சாதம் தயாரிக்கும் கமல்ஹாசனுக்கு இந்தக் காரணத்தால்தான் தொ.ப. மிகவும் பிடித்தவராக இருந்திருக்கக்கூடும்.

தமிழகத்தில் சைவத்தைப் போல் நிலவுடைமை மதமாகவோ அரசு ஆதரவு பெற்ற மதமாகவோ வைணவம் இருந்ததில்லை. அது அடித்தட்டு மக்களை ஈர்க்க ராமானுஜரின் சாதி கடந்த சமரசப் பார்வையைப் பின்பற்றியதை தொ.ப. தன் கள ஆய்வின் வழி உறுதிப்படுத்துகிறார்.

தஞ்சை பட்டினஞ்சேரியில் வசிக்கும் மீனவர்கள் திருமாலை சப்பரத்தில் சுமந்து ‘மாப்ள’ என்றழைப்பதையும் மீனவப் பெண்கள் சொளகு கொண்டு மறைந்துநின்று பார்ப்பதையும் தொ.ப. ஆவணப்படுத்தியிருக்கிறார். பாற்கடலில் லட்சுமி பிறந்த தொன்மக் கதையை அடிப்படையாக வைத்து அடித்தட்டு மக்களான மீனவர்கள் திருமாலை ‘மருமகன்’ என்று உறவுகொண்டாடுவதாக இதன் பின்னணியை அவர் நுட்பமாக குறிப்பிடுகிறார். திருமாலின் கைகளில் இருக்கும் சங்கு பற்றி குறிப்பிட்டு இங்கு ‘சங்குச்சாமி’ என்ற பெயரில் அவர் கடற்கரை கிராமங்களில் வழிபடப்படுவதையும் வைணவம் வளர்ந்த வட இந்தியப் பகுதிகளில் கடற்கரைகள் இல்லை என்பதையும் சுட்டி, தமிழ் வைணவத்தில் உறைந்திருக்கும் அடித்தள மக்களின் பண்பாட்டுச் செல்வாக்கினை அடையாளம் காட்டுகிறார்.

https://m.media-amazon.com/images/I/51GySPXbvDL.jpg

அழகர்கோவில் திருவிழாவில் அடித்தள மக்கள் தோல் பையில் நீரெடுத்து சாமி மீது பீய்ச்சியடிக்கிற நிகழ்வையும் காரமடை ரங்கநாதர் கோவிலில் போயர், மாதாரி, படுகர், இருளர் ஆகிய சாதியினர் பெருமாளுக்கு பழங்களைச் சேர்த்துப் பிசைந்த ‘காவாளம்’ என்ற உணவினை ஊட்டுவதையும் தன் கள ஆய்வின் வழி எடுத்துரைக்கிறார். வியாசர் மீனவப் பெண்ணான மச்சகந்தியின் மகன் என்பதையும் இடையில் நினைவூட்டுகிறார். வைதீக மரபில் கறாராகப் பின்பற்றப்படும் தீட்டு, ஆச்சாரம், சாதியடுக்கு ஆகியவை தமிழ் வைணவத்தில் கலந்த நாட்டுப்புறச் செல்வாக்கால் தலைகீழாக்கப்பட்டிருப்பதை தொ.ப. சுட்டுகிறார்.

வைணவ இலக்கியங்கள், தல புராண வரலாறுகளையும்கூட அவர் இதே பார்வையோடு ஆய்வுசெய்கிறார். ஆண்டாள் ‘நூறு அண்டா வெண்ணெயும் அக்கார அடிசிலும்’ கண்ணனுக்கு நேர்ந்துகொண்டு நிறைவேற்றாமல் செத்துப்போக அவருக்கு மூன்று நூற்றாண்டுகள் பின்னால் பிறந்த ராமானுஜர் அதை நிறைவேற்றி ‘கோவில் அண்ணன்’ எனப் பெயர் பெற்றார் என்பது வைணவ நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அண்ணன்-தங்கை உறவின் கொடுக்கல் வாங்கல் சார்ந்த திராவிட மரபாக தொ.ப. அடையாளம் கண்டு வைணவ சமயத்திற்குள் திராவிடப் பண்பாட்டின் சாயலைக் கண்டடைகிறார்.

‘பேடை மயிற்சாயல் பிள்ளை மணவாளா
நீராட்டமைத்து வைத்தேன்
ஆடியமுது செய்; அப்பனும் உண்டிலன்
உன்னோடு உண்பான்.’

என்கிற ஆழ்வார் பாடலை புதிய பார்வையில் தொ.ப. மீளுருவாக்கம் செய்கிறார். உழைக்கும் மக்கள் பகலெல்லாம் வயலிலோ காட்டிலோ வேலை பார்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்த பிறகே குளிப்பார்கள். அந்த மரபைச் சேர்ந்தவனாக தொ.ப கண்ணனை அடையாளம் காண்கிறார். கோனார் சமூகத்தில் பிறந்த தொ.ப.வின் ஆழ்மனம் இயல்பாகவே இந்தப் புள்ளியில்தான் கண்ணனை நெருக்கமாக உணர்ந்திருக்க முடியும்.

இந்திரன் என்பது மருத நிலத்தின் கடவுளாக இருந்தாலும் அவன் விவசாயிகளின் கடவுள் அல்ல. ஆரியர்கள் அவர்கள் மீது வலிந்து திணித்த கடவுள் என்பதே அவருடைய பார்வை. சிலப்பதிகாரத்தில் இந்திர விழா விமரிசையாக நிகழ்ந்தாலும்கூட அது அரசர்களின் விழாவாகவே இருந்தது என்று தொ.ப. குறிப்பிடுகிறார். இந்திரனைக் காலி செய்வதற்காக மேய்ச்சல் கடவுளான கண்ணனோடு இணைத்துப் பேசப்பட்ட உழவுக் கடவுளாகவே அவர் பலராமனை மதிப்பிடுகிறார். இந்திரனுக்கும் கண்ணனுக்கும் இடையிலான புராணப் பகையையினனை (மழை – கோவர்த்தனக் குடைபிடித்தல்) ஆகியவற்றை அவர் இந்த நோக்கிலேயே மதிப்பிடுகிறார். உழவர் குடிகளைக் கவர்ந்து இந்திரனை முழுமையாக தமிழ்நாட்டில் காலி செய்தபிறகு இங்கு பலராமனும் தேவைப்படவில்லை என்று தொ.ப.  குறிப்பிடுகிறார். இந்தக் கருதுகோளை அவர் விரிவான ஆய்வாகச் செய்யவில்லை. ஆனால் இந்தப் பார்வை புதுமையான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சிறுபான்மையோரை உள்ளடக்கிய தமிழ்ப்பண்பாடு:

தொ.ப. தன்னுடைய  ஆய்வுகளில் சிறுபான்மை சமூகத்தவர்களையும் உள்ளடக்கியே தமிழ் பண்பாட்டைக் கட்டமைக்கிறார். குறிப்பாக தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் குறித்து அதிகம் பேசியிருக்கிறார். அவர் இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் தன் பணி அனுபவத்தைத் தொடங்கியதுகூட இதற்கான காரணமாக இருக்கலாம். பொதுவாக பெரியாரியவாதிகள் இஸ்லாமிய சமூகத்தோடு அரசியல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் நெருக்கமாக இருந்தாலும் அவர்களின் வழிபாட்டு மரபுகளை பொருட்படுத்துவதில்லை. குறிப்பாக பல பெரியாரியவாதிகள் அடித்தள மக்கள் பின்பற்றும் தர்ஹா சியாரத்தை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி தங்களை அறியாமல் வஹாபிகளோடு ஓரணியில் நின்றுவிடுகின்றனர். அவர்களுள் சிலரின் வறட்டு நாத்திகவாதம்  தத்துவ நோக்கில் வஹாபியத்துடன் ஒத்துப்போய்விடுகிறது. பெரும்பாலான பெரியாரியவாதிகள் சூஃபி மரபு இங்கு நிகழ்த்திய பல்சமய உரையாடலை கவனத்தில் கொள்வதே இல்லை. தொ.ப. இதிலும்கூட விதிவிலக்காகவே இருந்திருக்கிறார். அவர் பேராசிரியராக இருந்த காலத்தில் இஸ்லாமிய இலக்கியம் சார்ந்து பல ஆய்வுகளை நிகழ்த்தியிருந்தாலும் பின்னர் தர்ஹாக்கள் குறித்தும் எழுதியிருக்கிறார்.

பலரும் அறியாத ‘பக்கீர்கள்’ என்றழைக்கப்படும் இஸ்லாமியப் பாணர்கள் குறித்த தொ.ப.வின் கட்டுரை மிக முக்கியமான ஒன்றாகும். ரிபாய் பிரிவினர்  நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து, உடல் மயிரை முழுமையாக நீக்கி, இறந்து போனவர்களுக்கான சடங்குகளில் தம்மை ஆட்படுத்திக்கொண்டு பானகம் அருந்தி குரு தீட்சை பெறுவதை அவர் கள ஆய்வுசெய்து வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்களே பின்னர் தாஹிரா ஒலிக்க மெய்ஞானப் பாடல்களைப் பாடி இரந்துண்டு வாழ்வர். அவர்கள் பெண்கள் மட்டுமே அணிகிற குறுமத்தங்காயை அதற்குப் பின்னர் அணிந்துகொள்வதை தொ.ப. சுட்டிக்காட்டுகிறார். மயிர் நீக்குதல், பெண்கள் அணிகிற குறுமத்தங்காயை கட்டிக்கொள்ளுதல் ஆகியவற்றை வைத்து தீட்சைக்குப் பிறகு தங்களைப் பெண்ணாக உருவகித்துக்கொள்ளும் மரபாக அதனை தொ.ப. அடையாளம் காண்கிறார். ஆனால் இது அவருடைய வைணவப் பார்வையால் உருவான கருதுகோளே ஆகும். வைணவ மரபில் நாயகனாக கடவுள் பேசப்படுகிறார் என்றால், சூஃபி மரபில் நாயகியாகப் பேசப்படுகிறார்.

‘என்னை விட்டால் மாப்பிள்ளை மார்
எத்தனையோ உன்றனுக்கே
உன்னை விட்டால் பெண்ணெனக்கு
உண்டோ மனோண்மணியே’

என்று மஸ்தான் சாகிபு கடவுளைப் பெண்ணாக்கி பாடியிருக்கிறார். என்றாலும்கூட, தொ.ப இதுவரை வந்திருப்பதே தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மரபில் மிக முக்கியமான விஷயம். வைணவக் கோவில்களில் பூ விற்கும் பண்டாரங்களாக இஸ்லாமியர்கள் இருப்பதையும் கள ஆய்வில் கண்டு சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அழகர்கோவில் ஆய்வேடு:

தொ.ப.வின் முழுமையான ஆய்வு என்று இதை மட்டுமே கூற முடியும். பிற விஷயங்களில் அவர் அடிப்படையான கருதுகோளை மட்டுமே முன்வைக்கிறார். முழுமையாக இறங்கி ஆராய்வதில்லை. அவருடைய மன அமைப்புக்கு அதுவே சரியானதாக இருந்திருக்கலாம். இந்த ஆய்வையும்கூட அவர் தன் முனைவர் பட்டத்திற்காகவே இந்த அளவுக்கு விரிவாகச் செய்திருக்கிறார்.

‘அழகர் எப்படி கள்ளழகராக உருமாறினார்?’ என்கிற கேள்வியே அவரை இந்த ஆய்வுக்குள் இழுத்துச் சென்றிருக்க முடியும். பாசுரங்களில் இந்தப் பெயர் இல்லை. நாயக்கர் ஆட்சியில் கள்ளர்களுடன் செய்துகொண்ட சமரசமே வழிபாட்டு மரபை மாற்றியிருக்கிறது என்பதை தொ.ப. தன் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்.

அழகர் குறிப்பிட்ட இடத்தில் கள்ளர்களைப் போல் கொண்டை அணிந்து வளரி ஆயுதம் ஏந்துவது, வழி மறிக்கப்படுதல், மீண்டும் பழைய உடைக்கு மாறுதல் ஆகிய சடங்குகளை அவர் நுட்பமாக ஆராய்ந்திருக்கிறார். தங்கச்சி திருமணத்திற்காக வரும் அழகர் அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குகிற போது இஸ்லாமியனைப் போல் லுங்கிக்கு மாறுவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். (சமீபகாலமாக இந்த வழக்கம் இந்துத்துவவாதிகளால் இல்லாமல் ஆகியிருக்கிறது)

இன்னொரு இடத்தில் சில நாட்டுப்புறப் பாடல்களில் சொக்கனுக்கு பரத்தையரோடு இருக்கிற தொடர்பை அவர் மருத நிலத்தின் நிலவுடைமை சார்ந்த பார்வையிலேயே மதிப்பிடுகிறார். மீனாட்சி -அழகர் உறவை திராவிட மரபின் அடையாளமாகச் சுட்டுகிறார்.

காலங்காலமாக இருந்துவரும் நிலவுடைமை மதிப்பீடுகளால் உருவாகி வந்த வழிபாட்டு மரபுகள் வெளியிலிருந்து வரும் புதிய அரசுகளோடு செய்துகொள்கிற சமரசத்தையும் குறிப்பிட்ட பிரிவினருக்கு கிடைக்கிற பண்பாட்டு மரியாதையையும் வழிபாட்டு மரபுகளின் துணைகொண்டு விளங்கிய புதுமையான ஆய்வேடு அது. பல வழிபாட்டு மரபுகளில் நிகழ்ந்திருக்கிற மாற்றத்தின் பின்னணியை ஆராய்வதற்கு இந்த ஆய்வேடே மிகச்சிறந்த முன்னுதாரணமாக இன்றுவரை திகழ்கிறது.

தொ.ப.வின் ஆய்வு எல்லைகள்:

தொ.ப.வுக்கு சில எல்லைகள் உண்டு. அழகர் கோவில் ஆய்வேடு தவிர அவருடைய பிற நூல்கள் அனைத்துமே புதிய கருதுகோள்களை மட்டுமே முன்வைக்கின்றன. அவரே அதில் இறங்கி விரிவாக ஆராயவில்லை. ஊருக்கு வெளியே மனிதக்கால் படாமல் பாழடைந்து கிடக்கும் கோட்டைக் கதவுகளைத் திறந்து டார்ச் தருகிற ஆளாக மட்டுமே அவர் தன்னை உணர்ந்திருக்கிறார். தன் எல்லை எதுவென்பதை வேறு எவரையும்விட நன்குணர்ந்தவர் தொ.ப. நானறிந்து பண்பாட்டு ஆய்வாளர், பெரியாரிய உணர்வாளர், தமிழ்ப் பேராசிரியர் என்கிற எல்லைகளைத் தாண்டி அவர் எந்தக் கருத்தையும் அதிகப்பிரசங்கித்தனமாகவோ சட்டாம்பிள்ளைத்தனமாகவோ முன்வைத்ததில்லை. அவருடைய கருதுகோள்களில் சில போதாமைகள் இருக்கலாம். சங்க காலத்தில் தென்னை மரம் இல்லை, ஐயனார் மட்டுமே பலி ஏற்காத ஒரே சிறுதெய்வம், சம்பளம் குறித்த சொல் ஆராய்ச்சி என்று சில தகவல் பிழைகள் அவருடைய நூல்களில் இருந்திருக்கலாம். (நாஞ்சில் நாடன் அதை மறுத்து கட்டுரை எழுதியிருக்கிறார்) ஆனால், அவருடைய கருதுகோள்களின் நேர்மையை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை. அவர் புகழ் வெளிச்சத்தையோ பண வெளிச்சத்தையோ தேடித் திரிந்தவர் அல்ல. தன் மீது வெளிச்சம்பட்ட பிறகும் துளியளவும் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாதவர். கண்டிப்பாக அவருக்கு திராவிடச் சார்பு உண்டு. ஆனால் தன் அரசியல் சார்பை அவர் ஒருபோதும் முதுகுச் சுமையாக தூக்கித் திரிந்தவர் அல்ல. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்கிற அண்ணாவின் பார்வையை (திருமூலர்தான் அசல்) ‘பண்பாட்டு ரீதியாக இந்தச் சொற்றொடர் மாபெரும் அபத்தம்’ என்று விமர்சித்தவர் தொ.ப. ‘கரன்சி நோட்டு மாற்றம்’ முதல் கரண்டியின் கைப்பிடி வரை சகல விஷயங்கள் குறித்தும் பக்கம் பக்கமாய் எழுதி தீர்ப்பு சொல்கிறவர்கள் ‘தொ.ப. தன் எல்லைகளை உணராமல் செயல்பட்டார்’ என்று சொல்வதுதான் மாபெரும் அபத்தம்.

பெரியாருடன் தொ.பரமசிவன்

அவர் எழுத்துமுறை ஆய்வாளர் அல்லர். அவருடைய ஆய்வேட்டைத் தவிர மற்ற முக்கியமான நூல்கள் அனைத்துமே ஆ.இரா.வேங்கடாசலபதி போன்றவர்களால் அவரை மீறி நிகழ்ந்தவைதான். அவருக்கு சொல்லத்தான் பிடிக்கும். எதிர்காலத்தில் அவரோடிருந்தவர்கள் அவர் சொன்ன விஷயங்களை நூல்களாகவோ கட்டுரைகளாகவோ ஆக்கித் தந்தால் அவற்றை முழுமையாகத் தொகுத்த பிறகே ஆய்வுலகில் அவருக்குரிய சரியான இடத்தை நாம் முடிவுசெய்ய முடியும். அது நிகழும்வரை தொ.ப. பலருக்கு விளக்காகவும் சிலருக்கு புதிராகவும் நீடித்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

1 comment

Tamilselvan January 29, 2021 - 10:18 pm

அருமையான, சரியான சித்தரிப்பு

Comments are closed.