ஷோஷா – ஐசக் பாஷவிஸ் சிங்கர்

0 comment

என் பாத அடிகளின் எதிரொலியை நானே கேட்கும் வண்ணம் வார்சா கடும் மெளனத்தில் இருந்தது. மெழுகுகள் இன்னும் சாளரங்களில் எரிந்தன. லெஸ்னோ தெருவில் இருந்த வீட்டின் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது. நான் விரைவிலேயே மீண்டும் கிளம்பும் நோக்கத்துடன் இருந்ததை அறிந்திருந்தவர் போல காவலாளி முனகலுடன் குறைபட்டுக்கொண்டே மெல்ல அதைத் திறக்கும் பொருட்டு நடந்து வந்தார். என்னிடம் தூக்கிக்கான சாவிகள் இருந்தபோதும், இருண்ட படிக்கட்டுகளில் நடந்தேன்.

நான் வசிப்பிடத்தின் கதவைத் தட்டியதும் டெக்லா அதைத் திறந்தாள். ’இன்று உங்களுக்காக நூறு முறையாவது தொலைபேசி அடித்திருக்கும், செல்வி பெட்டியிடமிருந்து’ என்று அவள் சொன்னாள்.

’நன்றி, டெக்லா.’

’இத்தகைய நன்னாளில்கூட நீங்கள் ஜபதலத்திற்குப் போவதில்லையா?’ என்று கண்டிக்கும் தொனியில் கேட்டாள்.

அவளுக்கு எப்படிப் பதிலளிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. நான் என் அறைக்குச் சென்றேன். விளக்குகளை ஏற்றாமலேயே என் உடைகளைக் களைந்து படுத்தேன். களைப்புற்றிருந்த போதும் என்னால் உறங்க முடியவில்லை. என்னிடம் மிச்சமிருக்கும் சில சிலோட்டிகள் தீர்ந்துபோன பிறகு நான் என்ன செய்யப் போகிறேன்? பணம் சம்பாதிப்பதற்கான எந்தவொரு வாய்ப்பும் எனக்கிருப்பதாகத் தோன்றவில்லை. என் நிலைமையை எண்ணி பயத்துடன் அங்கு படுத்திருந்தேன். ஃபிடில்சோனுக்காவது தனது சொற்பொழிவுகளால் சம்பாதித்துக்கொண்டிருக்கும் தோற்றமாவது இருக்கிறது. அவர் சிலியாவிடமிருந்தும் மற்ற பெண்களிடமிருந்தும் பணம் பெற்றுக்கொள்கிறார். முறையாக வாடகை நிர்ணயிக்கப்பட்ட ஒரு வசிப்பிடம் அவருக்கு இருக்கிறது. அதற்கு அவர் மாதத்திற்கு முப்பது சிலோட்டிகளுக்கு மேல் தருவதில்லை. ஒரு நோய்மையுற்ற பெண்ணுக்கு வேறு நான் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறேன்.

நான் உறக்கத்தில் விழுந்து ஒரு திடுக்கிடலால் விழிப்படைந்தேன். திண்ணையில் தொலைபேசி அடித்தது. என் கைக்கடிகாரத்தில் ஒளிரும் முட்கள் இரண்டே கால் என்று காட்டின. நான் வெறுங்கால்களின் சத்தத்தைக் கேட்டேன். டெக்லா பதிலளிக்க ஓடிக்கொண்டிருந்தாள். நான் அவள் இரகசியக் குரலில் பேசுவதைக் கேட்டேன். எனது அறையின் கதவு திறக்கப்பட்டது. ’உங்களுக்குத்தான்!’ அவளது குரல் தனது புனித தினம் வலுக்கட்டாயமாகச் சிதைக்கப்படுவதன் எரிச்சலை வெளிப்படுத்துவதாக இருந்தது. 

நான் எனது படுக்கையில் இருந்து எழுகையில் அவளை மோதிவிடப் பார்த்தேன். அவள் தனது இரவுடையிலேயே இருந்தாள். கூடத்தில் நான் பேசியை எடுத்து பெட்டியின் குரலைச் செவிமடுத்தேன். அது ஏதோ சண்டையில் இருப்பதைப் போல கரடுமுரடான உராய்வொலியுடன் இருந்தது. அவள், ‘நீ உடனே விடுதிக்கு வந்தாக வேண்டும்!’ என்று சொன்னாள். ‘நான் உன்னை யோம் கிப்பூர் நாளின் மத்தியில் அழைக்கிறேன் எனில் அது ஏதோவொரு அற்ப காரணத்திற்காக இருக்காது.’

’என்ன ஆயிற்று?’

‘நான் உன்னை நாள் முழுக்க அழைத்துக்கொண்டிருந்தேன். யோம் கிப்பூர் முன்னந்தியும் அதுவுமாக நீ எங்கே அலைந்துகொண்டிருக்கிறாய்? நேற்றிரவு ஒரு நொடிகூட நான் உறங்கவில்லை. இன்றும் நான் இன்னும் கண்களை மூடவில்லை. சாமிற்கு உடல்நிலை மிகவும் சரியில்லை. அவருக்கு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். நான் அவரிடம் நம்மைப் பற்றியும் சொல்லிவிட்டேன்.’

’அவருக்கு என்ன ஆயிற்று? நீ அவரிடம் சொல்லியாக வேண்டிய தேவை என்ன?’

’நேற்றிரவு அவர் கழிவறைக்குச் செல்ல எழுந்தபோது அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. அவருக்கு கடும் வலி ஏற்பட்டதால் நான் முதலுதவியை அழைக்க வேண்டியதாயிற்று. இப்போதைக்கு அவர்கள் அவருக்குச் சிறுநீர் வடிகுழாய் பொருத்திவிட்டாலும், அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அவர் இங்கிருக்கும் மருத்துவமனைகளுக்குச் செல்ல மறுத்து அமெரிக்காவில் இருக்கும் தனது சிறப்பு மருத்துவரிடம் போக வேண்டுமென அடம்பிடித்தார். அவரை இன்று பார்த்த மருத்துவர் அவருக்கு இதயம் பலவீனமாக இருப்பதாகவும் அவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகுகூட குணமடைவது கடினமென்றும் தெரிவித்தார். என் அன்பே, எனக்கென்னவோ அவர் பிழைக்கமாட்டார் என்று தோன்றுகிறது. அவர் என்னை அவரருகே அழைத்து, ”பெட்டி, எனது பங்குகளை நான் பணமாக்கிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவற்றை உனக்கே தர விரும்புகிறேன்” என்று சொன்னார். அவர் என்னிடம் பேசிய பிறகு என்னால் எதையும் அவரிடமிருந்து மறைத்து வைக்க முடியாத அளவிற்கு இருந்தது. நான் அவரிடம் முழு உண்மையையும் சொல்லிவிட்டேன். அவர் உன்னிடம் பேச விரும்புகிறார். ஒரு உந்துவண்டியைப் பிடித்து உடனே இங்கே வா. அவர் என்னிடம் ஒரு தந்தையைப் போல, தந்தையைவிட ஒரு படி மேலாக நடந்துகொள்கிறார். யோம் கிப்பூர் என்பது புரிகிறது. இருந்தாலும் இது அதனினும் முக்கியம். வருவாய் அல்லவா?’

’ஆம், கண்டிப்பாக. ஆனால் நீ அவரிடம் சொல்லியிருக்கக்கூடாது.’

’நான் பிறந்தே இருக்கக்கூடாது! சீக்கிரம் வா!’  என்று சொல்லி பேசியை வைத்துவிட்டாள். 

பதற்றத்தில் நான் உடைகளை அணிய முயன்றபோது நடுங்கிய விரல்களிலிருந்து அவை நழுவின. கழுத்துப் பட்டையிலிருந்து பொத்தான் கீழே விழுந்து படுக்கையடியில் உருண்டோடியது. அதை எடுக்கக் குனிந்தபோது எனது நெற்றியைப் படுக்கை விளிம்பில் மோதிக்கொண்டேன். அறை கதகதப்பாக இருந்தபோதும் நான் குளிரை உணர்ந்தேன். கதவைச் சாத்தி வெளியேறி விளக்கேற்றப்படாத படிக்கட்டுகளில் விரைந்தோடினேன். அன்றிரவே இரண்டாவது முறையாக அழைப்புமணியை அடித்துவிட்டு காவலாளி வாயிற்கதவைத் திறந்துவிடுவதற்காக காத்திருந்தேன். புறத்தில் இருந்த பாதை ஈரமாக இருந்தது – மழைபெய்திருக்க வேண்டும். தெரு ஆள் நடமாட்டமின்றி இருந்தது. ஒரு நடைபாதைக் கல்லில் ஏறிநின்று ஒரு வாடகை உந்தினை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நான் திடீரென்று அங்கே இரவெல்லாம் நின்றாலும் ஒன்றுகூட வராது என்பதை உணர்ந்தேன். நான் அப்படியே பைலான்ஸ்கா தெருவின் திசையில் நடந்து க்ராகொவ் துணைநகரத்தின் வழியே போனேன். தென்பட்ட ஒரேயொரு உந்து வண்டியும் எதிர்திசையில் சென்றுகொண்டிருந்தது. நான் நடக்காமல் ஓடினேன். நான் விடுதிக்கு வந்தேன். தேன்கூடுகள் என இருந்த சாவிக் கூண்டுகளுக்கு முன்பாக பதிவர் தூங்கி வழிந்துகொண்டிருந்தான்.

நான் பெட்டியின் கதவைத் தட்டினேன். ஒருவரும் பதிலளிக்கவில்லை. மீண்டும் தட்டினேன், இம்முறை சாம் ட்ரைமேனின் அறைக்கதவை. பெட்டி திறந்து என்னை உள்ளே அழைத்தாள். அவள் பைஜாமாவும் காலணியும் அணிந்திருந்தாள். உள்ளே விளக்கு நள்ளிரவின் அடர்வில் கண்கூசும்படி ஒளிர்ந்தது. தலை இரண்டு தலையணைகளின் மீதிருக்க, உறங்குவது போன்ற தோற்றத்துடன் சாம் கண்களை மூடிய நிலையில் கிடந்தார். படுக்கை விரிப்பின் கீழிருந்து குழாய் ஒன்று மூத்திர சேமிப்புப் பைக்கு ஓடியது. பெட்டியின் முகம் வெளிர்மஞ்சளாக வரைந்தது போலிருந்தது. கூந்தல் கலைந்திருந்தது. ‘ஏன் இத்தனை தாமதம்?’ என்று அழுகையை மறைக்கும் கேவலொலியில் கேட்டாள். 

’எனக்கு உந்துவண்டி கிடைக்காததால், ஓடியே வரவேண்டியதாயிற்று.’

’அப்படியா? அவர் இப்போதுதான் உறங்கினார். மாத்திரை விழுங்கியிருக்கிறார்.’

’ஏன் இந்த அறை இத்தனை பளிச்சென்று இருக்கிறது?’

’எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் விளக்குகளை அமர்த்துகிறேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதை என்னாலேயே அறிந்துகொள்ள முடியவில்லை. ஒரு நாசத்திற்குப் பின் மற்றொன்று. என் கண்களைப் பார். அருகே வா!’

அவள் என் கைகளைப் பிடித்து இழுத்து அறையின் இன்னொரு மூலைக்கு சாளரத்தின் அருகே கொண்டுசென்று என்னை அமைதி காக்குமாறு சைகை செய்தாள். மென்னொலியில் அவள் பேசத் தொடங்கினாலும் இடையிடையே வந்த கீச்சிடல்கள், அவள் அழுத்திக் கட்டுப்படுத்தி வைக்க முடியாத அளவிற்கு நிறைய வார்த்தைகள் குவிந்திருப்பதாகத் தோன்றியது.

’நான் இன்று காலை பத்து மணியிலிருந்து உன்னை அழைக்க முயன்று இரவுவரை அழைத்துக்கொண்டிருக்கிறேன். எங்கே இருந்தாய்? இவ்வளவு நேரமும் அந்த ஷோஷாவுடனா? சுட்சிக், இங்கே எனக்கென உன்னைவிட்டால் யாருமில்லை. நான் சொல்கிறேன், சாம்  ஒழுக்கமானவர். இப்படியொரு மேன்மையான ஆன்மா அவர் என்பதை நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அய்யோ, ஒருவேளை இது முன்பே தெரிந்திருந்தால் நான் இன்னும் இனிமையாக அவரிடம் இருந்திருப்பேன். நம்பிக்கைக்கு உகந்தவளாக இருந்திருப்பேன். ஆனால் அதற்கெல்லாம் காலம் கடந்துவிட்டதென்றே அஞ்சுகிறேன். அவருக்கு மூக்கிலிருந்து இரத்த ஒழுக்கு ஏற்பட்டது. நாளை இங்கு மருத்துவ ஆலோசனை நடத்தவிருக்கிறார்கள். நான் அமெரிக்கத் தூதரகத்தை அழைத்தேன். அவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் மேற்கொண்டு விட்டார்கள். அவர்கள் இவரை இங்கிருக்கும் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட தனியார் மருத்துவகத்தில் சேர்க்கவே விரும்பினார்கள். ஆனால் இவரோ அமெரிக்காவில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போவதாக வலியுறுத்தினார். இந்தக் குழப்பத்தின் நடுவே அவர் என்னை அழைத்து ”பெட்டி, நீ சுட்சிக்கை நேசிக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். அதை நீ மறுப்பதில் எந்தப் பயனுமில்லை” என்று சொன்னார். அது எனக்குப் பேரிடியாக இறங்கியது. நான் எல்லாவற்றையும் சொல்லி ஒப்புக்கொண்டு விட்டேன். நான் அழத்தொடங்கியதும் அவர் என்னை முத்தமிட்டு “மகளே” என்றழைத்தார். அவருக்கு குழந்தைகள் இருக்கின்ற போதும், அவரைப் பற்றிய வெறுப்பைக் கொண்டு அந்தப் பிள்ளைகளை நிரப்பியிருக்கிறார் அவர்களது தாய். உயிரோடிருக்கையிலேயே சொத்தினைப் பிடுங்கிக்கொள்ளும் பொருட்டு அவர்கள் அவரை நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கின்றனர். பொறு, அவர் விழித்தெழுகிறார்.’

சுண்டித் தள்ளுவதும் புலம்புவதுமான சத்தத்தைக் கேட்டேன். 

‘பெட்டி, எங்கே இருக்கிறாய்? ஏன் அறை இவ்வளவு இருண்டிருகிறது?’

அவள் படுக்கையை நோக்கி ஓடி, ‘அன்பே சாம்! நீங்கள் இன்னும் கொஞ்சம் தூங்குவீர்கள் என்று நினைத்தேன். சுட்சிக் வந்திருக்கிறார்’ என்றாள்.

’வா சுட்சிக். பெட்டி, விளக்குகளை ஏற்று. கடைசி மூச்சிழுக்கும்வரை நான் இருட்டில் இருக்க விரும்பவில்லை. சுட்சிக் நீயே பார்க்கலாம், நானொரு நோயாளி. நான் ஒரு தந்தையைப் போல உன்னிடம் பேச விரும்புகிறேன். எனக்கு இரு மகன்கள், இருவருமே வழக்கறிஞர்கள். அவர்கள் ஒருபோதும் என்னைத் தந்தையாக பாவித்ததில்லை. மாறாக அந்நியனைவிட மோசமாகத்தான் என் வாழ்க்கை முழுவதும் நடத்தினார்கள். எனக்கு ஒரு மருமகன் இருக்கிறான், அவனும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அவனுடன் வாழ்வது எனது மகளை ஒரு சனியனாக மாற்றிவிட்டது. நான் நெடுங்காலமாக மகிழ்வாக உணர்ந்ததே இல்லை. முதுமை என்னை திடீரென – தலையில், வயிற்றில், கால்களில் எல்லாம் – சுற்றிப் பற்றிக்கொண்டது. நாளுக்கு இருபது முறை நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் கழிவறையை நோக்கி – மன்னிக்க வேண்டும் – ஆனாலும் எனது சிறுநீர்ப்பையில் அடைப்பு இருக்கிறது. நியூயார்க்கில் என்னைக் கவனிக்கும் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் மூன்று மாதங்களுக்கொரு முறை என்னை ஆய்வுசெய்வதும் எனக்கு நைச்சியம் செய்வதுமாக இருப்பார். எனது இதயம் குரங்குச் சேட்டைகள் செய்வதால் எனக்கு அறுவை சிகிச்சையே செய்ய வேண்டாமென்பது அவர் விருப்பம். வார்சாவில் எனக்கென ஒரு மருத்துவர் இல்லை. அதுமட்டுமின்றி, நாம் நாடகத்தில் அதீத பரபரப்புடன் இயங்கி வந்ததால் நான் எல்லாவற்றையும் கவனிக்காமல் இருந்துவிட்டேன். விஸ்கி குடித்தால் ப்ராஸ்டேட்டில் அழற்சி ஏற்படுத்தும், மேலும் சிறுநீர்ப்பைக்கும் கேடு என்பதால், எனது மருத்துவர் என்னைக் குடிக்கக்கூடாதென்று ஆணையிட்டிருந்தார். ஆனால் நாம் வீணாய்ப் போகிறோம் என்பதை மனம் ஏற்றுக்கொள்வதில்லை. நாற்காலியில் உட்கார், அப்படித்தான். நீயும் கூடத்தான், அன்பே பெட்டி. நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ம்… கடவுள் என்னை அவனோடு மேலே வைத்திருக்க விரும்புகிறான் என்று எண்ணுகிறேன். ஒருவேளை அவன் மனை வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதால் சாம் ட்ரைமேனின் அறிவுரை தேவைப்படுகிறது போல. நேரம் வந்தால் ஒருவர் போய்த்தான் ஆக வேண்டும். ஒருவேளை அறுவை சிகிச்சையில் நான் பிழைத்தாலும் நெடுங்காலம் வாழ்ந்திட முடியாது. நான் இங்கிருக்கையில் எடை குறைந்திருக்க வேண்டும். ஆனால் இருபது பவுண்டுகள் அதிகமாகி இருக்கிறேன். வீட்டை விட்டு வெளியே இருக்கும்போது எப்படி உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற முடியும்? எனக்கு உங்கள் வார்சாவின் பதார்த்தங்கள் மிகவும் பிடித்திருக்கிறது – அவை வீட்டுச்சுவையுடன் இருக்கின்றன. சரி…’

சாம் ட்ரைமேன் தன் கண்களை மூடி, தன்னை ஒரு உலுக்கு உலுக்கி மீண்டும் திறந்தார். ‘சுட்சிக், இன்று யோம் கிப்பூர் தினம். இன்று பிரார்த்தனைத் தலத்திற்குப் போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். த்லோமாகா தெருவில் இருந்த ஒன்றுக்கும் நலிவ்கியில் இருக்கின்ற ஹசிதிமிற்கும் செல்ல வேண்டுமென நினைத்திருந்தேன். அனுமதிச் சீட்டுகள்கூட வாங்கிவிட்டேன். ஆனால் மனிதன் ஒன்று நினைக்க கடவுள் வேறொன்று நினைக்கிறான். நான் உன்னிடம் வெளிப்படையாக இருக்க நினைக்கிறேன் – நான் இறந்து போனால் நான் பெட்டியை விதியின் கைகளில் விட்டுவிட விரும்பவில்லை. எனக்கு உங்கள் உறவைப் பற்றித் தெரியும். அவள் அனைத்தையும் சொல்லிவிட்டாள். அதற்கு முன்பேகூட அதைப் பற்றி நான் அறிவேன். என்னதான் இருப்பினும் அவள் யுவதி, நான் வயதான கிழம். நான் மகத்தான காதலனாக இருந்ததுண்டு, அதில் சிறந்தவர்களுக்கே தண்ணீர் காட்டியதுண்டு. ஆனால் எழுபதுகளுக்குள் நுழைந்த பிறகு, உயர் இரத்த அழுத்தம் வந்த பிறகு, நீங்கள் முன்பிருந்த நாயகனாக இனியும் இருப்பதென்பது இயலாத காரியம். அவள் உன்னைத் தொடர்ந்து புகழ்ந்துகொண்டே இருக்கிறாள். உனக்கு தீயூழைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டதாக தன்னையே குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறாள். நான் இந்த நாடகம் வெற்றிபெற வேண்டுமென விரும்பினேன். ஆனால் விதி விடவில்லை. நாங்கள் நிறையவே பேசிக்கொண்டிருந்தோம். நான் சொல்வதைக் கவனி, தயவுசெய்து குறுக்கீடு செய்யாதே, நான் சொல்லப்போவதைப் பற்றி சிந்தனை செய். ஏனெனில் நான் எதையுமே தெளிந்த எண்ணத்துடன்தான் யோசிப்பேன். நீயொரு ஏழை இளைஞன். உனக்குத் திறமை இருக்கிறது. எனினும் திறமை என்பது வைரம் போல. அது பட்டை தீட்டப்பட வேண்டும். பலவீனமான வளர்ச்சியற்ற ஒரு பெண்ணுடன் நீ பழகி வருகிறாய் என்று கேள்விப்பட்டேன். அவளும் ஏழைதானே. சொலவடை இருக்கிறதல்லவா? இரண்டு பிணங்கள் ஒன்றுகூடி நடனமாடப் போகின்றன. போலந்தில் விவகாரங்கள் சுபமாக முடிவடையப் போவதில்லை. அந்த மிருகம் ஹிட்லர் நாஸிக்களுடன் விரைவில் வந்தடைவான். ஒரு மகா யுத்தம் நிகழும். போன யுத்தத்தில் செய்தது போலவே இப்போதும் அமெரிக்கா ஒரு கை தந்து தாங்கும். ஆனாலும் அதற்குள் நாஸிக்கள் யூதர்களை எல்லாம் தாக்குவார்கள். உனக்கு இங்கு துயரத்தைத் தவிர ஒன்றுமே எஞ்சாது. இத்திய நாளேடுகள் இப்போதே பிரச்சனைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன, அச்சகங்கள் என்று எதுவும் இல்லை. மேடைக்கலைகளின் நிலைமையும் வெறுக்கத்தக்கதாக இருக்கிறது. நீ எப்படி சமாளித்து வாழ்வாய்? எழுத்தாளரும் உண்டுதானே வாழ்ந்தாக வேண்டும்? அந்த மோசேவாக இருந்தாலும்கூட சாப்பிட்டாக வேண்டுமே? அதைத்தான் புனித நூலும் சொல்கிறது.

‘சுட்சிக், பெட்டி உன்னை நேசிக்கிறாள். நீயும் அவளை வெறுக்கவில்லை என்பதை அறிகிறேன். நான் அவளுக்கெனப் பெரிய தொகையினை விட்டுச் செல்வேன் – அது எவ்வளவு என்பதை சரியாக அடுத்த முறை பேசும்போது உனக்குத் தெரிவிக்கிறேன். நான் உன்னுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள நினைக்கிறேன். வழக்கம்போல ஒரு வணிகப் பரிவர்த்தனை. எனக்கு என்னவாகப் போகிறது என்பதைப் பற்றி இன்னமும் எனக்கே தெளிவில்லை. கடவுள் விரும்பினால் நான் விரைவிலேயே இந்த உலகை விட்டுச் சென்றுவிடுவேன். இல்லை இன்னும் சில வருடங்கள் இங்கே இருக்கவும் கூடும். எனது ப்ராஸ்டேட்டை அவர்கள் அகற்றினால் உலகின் பார்வையில் நான் முழுமையான மனிதனாக இல்லாமல் போய்விடுவேன். இதுதான் எனது திட்டம்- நீங்கள் இருவரும் மணந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். நான் ஒரு அறக்கட்டளை நிதியத்தை அமைப்பேன். ஒரு வழக்கறிஞர் அதன் விபரங்களை உங்களுக்கு விளக்குவார். நீ உன் மனைவியை அண்டி வாழும் ஒட்டுண்ணியாக இருக்கமாட்டாய், மாறாக அதற்கு நேர்மாறாய் நீ அவளுக்கு உதவும் துணையாக இருப்பாய். நான் உன்னிடம் இருந்து ஒரேயொரு வாக்குறுதியை மட்டுமே எதிர்பார்க்கிறேன் – நான் வாழும்வரை அவள் எனக்குத் தோழியாக இருக்க வேண்டும். நான் உனது பதிப்பாளராகவும், உனது மேலாளராகவும் அல்லது நீ விரும்பும் எதுவாகவும் இருக்க எனக்குச் சம்மதமே. நீ ஒரு நல்ல நாடகத்தை எழுதினால் நான் அதைத் தயாரிப்பேன். ஒரு நூலுடன் நீ தயாராக இருந்தால் நான் அதை பிரசுரிப்பேன் அல்லது இன்னொரு பதிப்பாளரிடம் தருவேன். அமெரிக்காவில் எழுத்தாளர்களை பிரதிநித்துவம் செய்யும் தரகர்கள் இருக்கிறார்கள். அப்படியொருவராக உனக்கு நானிருப்பேன். நீ எனக்கு மகனாகவும் நானுனக்குத் தந்தையென்றும் இருப்பேன். சிலரை நான் பணிக்கு அமர்த்தி எல்லாம் ஒழுங்காக இருக்கும் வண்ணம் உறுதிப்படுத்துவேன்.’

’திரு. ட்ரைமேன்…’

’தெரியும், நீ என்ன சொல்லப் போகிறாய் என்று எனக்குத் தெரியும். அந்தப் பெண்ணின் பெயரென்ன, ஷோஷா, ஆம் அவளுக்கு என்ன நிலைமை ஏற்படும் என்று அறிய விரும்புகிறாய், அதுதானே? அவள் வார்சாவிலேயே இருந்து பட்டினி கிடக்கட்டும் என்று கடவுளின் கைகளில் விட்டுவிடப் போகிறேன் என்று நினைக்காதே. சாம் ட்ரைமேன் அத்தகைய வேலைகளைச் செய்பவனில்லை. அவளை நாம் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வோம். அவள் சுகமின்றி இருப்பதால் ஒருவேளை உளவியல் சிகிச்சைகள் தேவைப்படக்கூடும். தூதரக அதிகாரி எனது நண்பர்தான், இருந்தாலும் அவரால் நிரந்தரமான விசா தர முடியாது. ஒரு இடஒதுக்கீடு இருக்கிறது. அதிபர் நினைத்தாலும் அதைக் கோர முடியாது. ஆனால் நான் எப்படிச் சமாளிப்பது என்பதைத் திட்டமிட்டு வைத்திருக்கிறேன். அவளை நமக்குக் குற்றேவல் புரிபவள் என்ற பெயரில் அழைத்துச் செல்வோம். அவள் யாருக்கும் வேலைக்காரியாக இருக்கப் போவதில்லை, ஆனால் அப்படிச் சொல்லி விசாவைப் பெறப் போகிறோம். அவள் ஒருவேளை அங்கே நலமடைந்தால் இங்கிருந்து கொண்டு உன்னைத் திருமணம் செய்து பட்டினிச் சாவு சாவதைவிட நூறுமடங்கு மேலானதாக அது இருக்கும். நீ செய்ய வேண்டியதெல்லாம் பெட்டியை எனக்குத் தோழியாக இருக்க அனுமதிப்பதும், வயதான காலத்தில் நோயுற்றிருக்கையில் என்னைத் தனித்து விட்டுவிடாமல் வைத்திருப்பதும்தான். அவளும் உனதருமை ஷோஷாவை நீ முத்தமிடுவதற்காகவோ அல்லது வேறேதும் செய்வதற்காகவோ நிச்சயம் உன்னை நீதிமன்றத்திற்கு இழுக்கப் போவதில்லை. சரிதானே பெட்டி?’

’ஆம், சாம் செல்லமே. நீங்கள் சொல்லும் எதுவுமே எனக்கு உடன்பாடே.’

’கேட்டாயா? ஆக, இதுவே எனது திட்டம். இது அவளது திட்டமும்தான். நாங்கள் வெளிப்படையாகப் பேசிவிட்டோம். இன்னும் ஒரு விஷயம் – எல்லா ஏற்பாடுகளையும் சரிவரச் செய்வதற்காக நான் விரைவிலேயே அமெரிக்கா சென்றாக வேண்டும். நீ சரி என்று சொன்னால் உடனடியாக நீ திருமணம் செய்தாக வேண்டும். இல்லை என்று சொன்னால், நாங்கள் பிரியாவிடை கொடுத்து கடவுள் உன்னைப் பார்த்துக்கொள்வார் என்று நாங்கள் கிளம்புவோம்.’

சாம் ட்ரைமேன் தன் விழிகளை மூடினார். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவற்றைத் திறந்து, ‘பெட்டி, இவனை உன் அறைக்கு அழைத்துப் போ, நான் கொஞ்சம்….’ என்று சொன்னார். அவர் ஆங்கிலத்தில் முணுமுணுத்த சில சொற்கள் எனக்குப் புரியவில்லை.

*

அவளது அறைக்கும் சாமின் அறைக்கும் இடைநாழியில் பெட்டி என்னை முத்தமிடத் தொடங்கினாள். அழுததால் அவள் முகம் ஈரமாகி இருந்தது, கொஞ்ச நேரத்திலேயே எனது முகமும் நனைந்து போனது. அவள் இரகசியக் குரலில், ‘நீ எனது கணவன், அப்படித்தான் கடவுள் விரும்பி இருக்கிறார்!’ என்றாள்.

எனக்காக தனது அறைக்கதவைத் திறந்துவிட்டு உடனடியாக சாமின் அருகாமைக்குத் திரும்பிச் சென்றாள். அவள் விளக்கை ஏற்றாமல் இருந்ததால் நான் இருளிலேயே நின்றிருந்தேன். கொஞ்ச நேரத்தில் எனது காலியான மனதுடன் சோஃபாவில் விழுந்தேன். விரைவிலேயே பெட்டி திரும்ப வருவாள் என்று நான் நினைத்திருந்த போதும், அவள் வர வெகு தாமதமானது. சாளரத்தின் மேல் நிழல் விழத் தொடங்கியிருந்தது. எனக்கு நாள் விடிந்துவிட்டது போலத் தோன்றியது. மெல்ல எனக்குச் சூழ்நிலையின் விபரங்கள் புரியத் தொடங்கின. நான் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்ட பின்னர் நான் கனவிலும் காணத் துணியாத ஒரு கோணத்தில் வாய்ப்பு உருவாகி இருக்கிறது -அமெரிக்காவிற்கான விசாவைப் பெற்றுக்கொண்டு பணத்தைப் பற்றிய கவலையேதுமின்றி எழுதுவதற்கான வாய்ப்பு! நான் ஷோஷாவையும்கூட அழைத்துச் செல்ல முடியும். எனக்குள் இருந்த ஏதோவொன்று சிரிக்கவும் வியக்கவும் செய்தது.

நான் ஆணான காலம் முதல், என் தாயைப் போலவே இருக்கும் ஒரு ஒழுக்கமான யூதப் பெண்ணையே நான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக  என்னிடம் நானே சொல்லிக்கொள்வதுண்டு. நெறிதவறும் மனைவிகளை உடைய கணவன்களைக் கண்டு நான் எப்போதுமே பரிதாபம் கொள்வதுண்டு. அவர்கள் வாழ்வதோ வேசிகளுடன், அவர்களால் ஒருபோதும் தன் பிள்ளைகள் தனக்குத்தான் பிறந்தவையா என்று உறுதிபடச் சொல்ல முடியாது. இந்தப் பெண்கள் தனது குடும்பங்களுக்கு களங்கம் ஏற்றியவர்கள். இப்போது நானோ இதே வகையான பெண்களுள் ஒருத்தியை மணமுடிப்பது குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறேன். அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் தான் செய்த கூத்துக்களை என்னிடம் பெட்டி சொன்னதெல்லாம் என் மனத்தில் அப்படியே இருக்கின்றன. புரட்சியின் போது செம்படைச் சிப்பாய் ஒருவனுடன் போனது, ஏதோவொரு மாலுமியுடன் இருந்தது, பயணிக்கும் ஒரு நடிப்பு அணியின் இயக்குநர் ஒருவருடன் இருந்தது. அவள் தன்னையே சாம் ட்ரைமேனுக்கு விற்றுக்கொண்டதே பணத்திற்காகத்தான். அவளுக்குக் கேவலமான இறந்தகாலம் இருந்தது மட்டுமின்றி, சாம் ட்ரைமேன் தற்போது தான் வாழும்வரை அவளைத் தனக்கு தோழியாக – காதலி என்று சொல்வதற்கு இன்னொரு பெயர் – நான் அனுமதித்தாக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். 

‘ஓடிவிடு!’ எனக்குள் ஒரு குரல் கேட்டது. ‘ஒருபோதும் வெளியேற முடியாத ஒரு சேற்றுக்குள் விழுந்து அமிழ்ந்திடுவாய். அவர்கள் உன்னைப் படுகுழியில் தள்ளிவிடுவார்கள்!’ இது எனது தந்தையின் குரல். விடியலின் ஒளியில் அவரது உயர்ந்த புருவங்களையும் துளைக்கும் விழிகளையும் கண்டேன். ’என்னையும் உன் தாயையும் நமது புனிதமான மூதாதையர்களையும் அசிங்கப்படுத்திடாதே! உன்னுடைய எல்லாச் செய்கைகளும் சொர்க்கத்தில் குறித்து வைக்கப்பட்டுகின்றன.’ பிறகு அந்தக் குரல் என்னை வைய ஆரம்பித்தது. ‘கீழினத்தவனே! இஸ்ரேலை துரோகித்தவனே! இறைவனை மறுத்த உனக்கு என்ன நிகழப்போகிறது என்று பார்த்துக்கொண்டேயிரு! நீ சத்தியமாய் இதை வெறுக்கவும், சத்தியமாய் இதை மறுக்கவும் வேண்டும். ஏனெனில் இது சபிக்கப்பட்டது!’

நான் உடைந்துபோய் படுத்திருந்தேன். எனது தந்தை இறந்துவிட்டதால், எனக்கு அவரது முகத்தை நினைவுபடுத்திக் காண்பதில் சிரமம் இருந்தது. அவர் எனது கனவுகளில் ஒருபோதும் தோன்றியதில்லை. அவரது இறப்புகூட ஒரு விதமான மறதி நோயுடனேயே வந்திருந்தது. அடிக்கடி நான் உறங்குவதற்கு முன்பு அவர் எங்கிருந்தாலும் எனக்குத் தன்னைக் காட்டிட வேண்டுமென்று வேண்டிவிட்டு உறங்கியதுண்டு. ஆனால் ஒருபோதும் அவர் எனது மன்றாடல்களுக்குச் செவி சாய்த்ததில்லை. ஆனால் இங்கு திடீரென பெட்டியின் சோஃபாவில் தீர்ப்பு தினத்தைப் போல வந்து காட்சி தருகிறார். தனது சுய வெளிச்சத்தில் ஒளிர்ந்து அழகாக இருக்கிறார். நான் மிட்ராஷில் யோசேப்பைப் பற்றி சொல்லப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்தேன்- அவன் போதிப்பவரின் மனைவியுடன் பாவம் புரிய இருந்த கணத்தில் அவனது தந்தை யாக்கோபு அவன் முன் தோன்றுவார். இத்தகைய ஆவியுடல்கள் மனவழுத்தத்தின் உச்சத்தில்தான் தோன்றுகின்றன. 

நான் விரிவிழிகளுடன் எழுந்தமர்ந்தேன். ‘தந்தையே, என்னைக் காத்தருளுங்கள்!’ நான் மன்றாடிக்கொண்டிருக்கையிலேயே எனது தந்தையின் வடிவம் காற்றில் கரைந்து மறைந்தது.

கதவு திறந்தது. ’நீ தூங்கிவிட்டாயா?’ என வினவினாள் பெட்டி.

அவளுக்குப் பதில் தர கொஞ்ச நேரமானது எனக்கு. ‘இல்லை.’

’நான் விளக்கினை ஏற்றட்டுமா?’

’வேண்டாம் வேண்டாம்.’

’உனக்கென்னதான் பிரச்சனை? இன்று எனக்கு யோம் கிப்புரைவிட முக்கியமான நாள். நீ வருவதற்கு முன்பு நான் சோஃபாவில் ஒரு குட்டித் தூக்கமிட்ட போது, எனது தந்தை எனது கனவில் தோன்றினார். நான் நேரில் பார்த்தது போலவே, சற்று கூடுதல் அழகுடன் அவர் இருந்தார். அவரது விழிகள் மினுமினுத்தன. கொலைகாரர்கள் அவரைத் தலையில் சுட்டு அவரது மண்டையோட்டை சிதறடித்திருந்த போதும், அவர் எந்தவிதக் காயமுமின்றி என் முன் நின்றார். சரி, உனது பதில் என்ன?’

’இப்போது வேண்டாம்’ என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

’நீ என்னை விரும்பாவிடில், நானே உன்மீது வந்து விழப்போவதில்லை. என்னிடம் இன்னமும் கொஞ்சம் சுயமரியாதை மிச்சமிருக்கிறது. சாம் ட்ரைமேன் தருவதாகச் சொல்வது… அதைச் சொல்வதற்கு ஒருவர் மேன்மையானவராக இருக்க வேண்டும். ஆனால் உனக்கு ஒருவேளை என் கணவனாக இருக்கப் போவது அவமானமாக இருந்தால் சொல்லிவிடு. என்னை ஊசலாட்டத்தில் வைக்காதே. நான் மிக மோசமான காரியங்களை முன்பு செய்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் எனக்கென்று யாருமே இல்லை. அதனால் நான் யாருக்கும் கடன்பட்டிருக்கவுமில்லை. எனது இரத்தம் தீ போலக் கொதித்தது. அந்த ஆட்களெல்லாம் எனக்கு நிஜம்கூட இல்லை. அவர்கள் அனைவரையும் மறந்துவிட்டேன் என்பதை மட்டும் உனக்கு உறுதியுடன் சொல்கிறேன். இப்போது அவர்களுள் ஒருவரைத் தெருவில் பார்த்தால்கூட எனக்கு அடையாளம் தெரியாது. இதையெல்லாம் உன்னிடம் போய் சொல்லுமளவிற்கு ஏன் முட்டாளாய் இருக்கிறேன்? எப்போதுமே எனக்கு நானேதான் மோசமான பகைவனாக இருந்திருக்கிறேன்.’

‘பெட்டி, இதைச் செய்தால் ஷோஷா இறந்தே போவாள்’ என்று சொன்னேன்.

’ஓஹோ? அவள் அமெரிக்காவில் குணமடைவாள். இங்கிருந்தாலோ பட்டினி கிடந்து சாவாள் என்பதுதான் நிஜம். ஏற்கெனவே அவளது வீட்டில் அழிவின் வாடை வீசுகிறது. அவள் பிணக்குழிக்குத் தயாரானவள் போல தோற்றமளிக்கிறாள். எத்தனை காலம்தான் அவள் இப்படியே இருக்க முடியும்? எனக்குத் திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை – உன்னுடனோ யாருடனோ கூட. அது முழுக்கவே சாமின் யோசனையே. நிஜமான தந்தைகூட அவரைப் போல என்னிடம் நடந்துகொள்ள மாட்டார். அவரை விட்டு விலகுவதற்குப் பதில் எனது கைகளை நானே வெட்டிக்கொள்வேன். நான் ஏற்கெனவே உன்னிடம் சொன்னேன். அவர் இப்போது ஆண் என்ற நிலையிலேயே இல்லை. அவருக்குத் தேவையெல்லாம் ஒரு முத்தம், அரவணைப்பு, கனிவான வார்த்தை அவ்வளவே. அதைக்கூட அவர் அனுபவிப்பதில் உனக்குப் பிரச்சனை இருந்தால், நீ உன் பாதையில் போகலாம். எனது வீட்டிற்குள் ஷோஷா என்ற அந்த மடச்சியை நான் ஏற்றுக்கொள்ளத் தயாரென்றால் நீ சாமின் மீது அத்தனை விலகலுடன் நடந்துகொள்ளத் தேவையில்லை. உனது முழு உடம்பில் இருக்கும் மொத்த அறிவையும்விடவும் கூடுதலான தெளிவு அவரது விரல் நுனியிலேயே இருக்கிறது, அறிவுகெட்ட முண்டமே!’

அவள் வெளியேறி கதவினை இழுத்துச் சாத்தினாள். கொஞ்ச நேரத்தில் மீண்டும் வந்தாள். ‘சரி, சாமிடம் நான் என்ன சொல்வது? நேரடியான பதிலைச் சொல்.’

’ம், சரிதான். நாம் மணந்துகொள்ளலாம்’ என்றேன்.

ஒருகணம் பெட்டி அமைதி காத்தாள். ‘இதுதான் உனது முடிவா அல்லது என்னை முட்டாளாக்க முயற்சி ஏதும் செய்கிறாயா? எப்போதும் என்னை வேசி என்று நினைத்துக்கொண்டு உள்ளுக்குள் பொறாமையும் எரிச்சலும் கொண்டு திரியப் போகிறாய் என்றால் இவை அனைத்தையும் நிறுத்திக்கொள்ளலாம்.’

’பெட்டி, என்னால் ஷோஷாவைப் பார்த்துக்கொள்ள முடியும் என்றால் நீயும் சாமோடு இருக்கலாம்.’

’என்ன நினைக்கிறாய் நீ? ஆயிரத்தொரு இரவுகள் கதைகளில் வரும் சுல்தானைப் போல ஒரு ஆளை நியமித்து உனது படுக்கையறையை கவனித்துக்கொண்டிருப்பேன் என்று எண்ணுகிறாயா? நீ அவளோடு கொண்டிருக்கும் நெருக்கத்தை என்னால் உணர முடிகிறது. அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் அதையே நான் உன்னிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். மனைவியை அடிமையாக வைத்தபடி தான் மட்டும் பன்றியாக ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டு ஆண்கள் வாழ்ந்துவந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. சாம் வாழும்வரை – இறைவன் அவருக்கான காலத்தை வழங்கட்டும் – நாம் அனைவரும் ஒன்றாகவே வாழ வேண்டும். அவரை எனது தந்தையின் நிலையில் வைத்துப் பார்க்க முயற்சி செய். அவரும் அப்படித்தான் ஆகிவிட்டார். நான் மேடை நாடகத்தை இன்னும் முற்றிலும் கைவிட்டுவிடவில்லை – இன்னொரு முயற்சி ஒன்று செய்யலாம் என்ற திட்டம் எனக்கு இருக்கிறது. அமெரிக்காவில் இந்த நாடகத்தையே மீளச் செய்து பார்க்கலாம். அங்கு யாரும் நம்மைக் கேலி செய்யவோ இம்சிக்கவோ மாட்டார்கள். உண்மையில் உன்னுடைய ஷோஷாவின் பின்னே நீ சுற்றித் திரியப் போவது குறித்து நான் சென்ற ஆண்டு உறைபனியை நினைத்து இப்போது எப்படிக் கவலைப்படுவேனோ அந்த அளவில்தான் கவலை கொள்வேன். எனக்கு அவளால் ஒரு பெண்ணாக இருக்க முடியுமா என்பதிலேயே சந்தேகம் இருக்கிறது. இதுவரை அவளிடம் நீ கலந்திருக்கிறாயா என்ன?’

’இல்லை, இல்லை.’

’சரி, ஒரு சிம்மம் ஈயைப் பார்த்து பொறாமைகொள்ள முடியாது. உனக்குச் சொல்ல நினைப்பதெல்லாம் ஒன்றுதான், இன்னும் நூறாயுள் கடந்து சாம் இல்லாமல் போகும்போது நான் வேறெவரையும் ஏறெடுத்துப் பார்க்கப் போவதில்லை. எல்லாக் கருமெழுகளின் மேலும் இவற்றைச் சத்தியமடித்து என்னால் சொல்ல முடியும்.’

’நீ சத்தியம் செய்ய வேண்டியதில்லை.’

’நாம் உடனடியாகத் திருமணம் செய்தாக வேண்டும். என்ன ஆனாலும் சாம் அங்கிருந்தாக வேண்டும் என நான் விரும்புகிறேன்.’

’ஆம்.’

’உனக்கு அம்மாவும் சகோதரரும் இருப்பதை நான் அறிவேன், ஆனால் இதை ஒத்திப்போடவும் முடியாது. எல்லாம் சரியாக நடந்தால் உனது குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வோம்.’

’நன்றி பெட்டி, நன்றி.’

’சுட்சிக், நான் நீ எதிர்பார்ப்பதைவிட உனக்கானவளாய் சிறந்த முறையில் இருப்பேன். நான் என் வாழ்வில் ஏற்கெனவே போதுமான அளவு அசுத்தத்தில் உழன்றுவிட்டேன். அதையெல்லாம் துடைத்தழித்துவிட்டு காலி ஸ்லேட்டில் புதிய ஆரம்பம் ஒன்றை நான் விழைகிறேன். உன்னிடம் நான் எதைக் கண்டேன் என்பது எனக்கே தெளிவாகத் தெரியவில்லை. உன்னிடம் ஆயிரம் குறைகள் இருக்கின்றன. ஆனால் ஏதோவொன்று என்னை உன்னிடம் ஈர்ப்பு கொள்ள வைக்கிறது. அது என்ன? நீயே சொல்லேன்.’

’எனக்குத் தெரியாது பெட்டி.’

’நான் உன்னோடு இருக்கையில் எல்லா விஷயங்களும் ஆர்வமூட்டுபவையாக இருக்கின்றன. நீ இல்லாதிருக்கையில் நான் துயரத்திலும் சலிப்பிலும் வீழ்கிறேன். வா, வந்து எனக்கு மசேல் தொவ் சொல்!’

*

பெட்டியின் சோஃபாவிலேயே நான் ஆழுறக்கத்தில் விழுந்திருந்தேன். நான் கண்விழித்தபோது அவள் என்னருகே நின்றிருந்தாள். அது பகலாக இருந்தது. அவள் நிலைகுலைந்து கவலையுடன் காணப்பட்டாள். ’சுட்சிக், எழுந்திரு!’ 

நான் தலைவலியால் பலவீனம் அடைந்திருந்தேன். நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று உணர்ந்துகொள்ள சில நொடிகள் எடுத்தது.

தாய்மைக் கனிவுடன் பெட்டி என் மேல் குனிந்தாள். ‘அவர்கள் சாமை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கின்றனர். நான் அவரோடு செல்கிறேன்.’

’என்ன ஆயிற்று?’

’அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்! நான் உன்னை எங்கே பிடிப்பது? இந்த அறையிலேயே தங்கிக்கொள்ளேன், உன்னை அழைக்க வசதியாக இருக்கும்.’

’கண்டிப்பாக, பெட்டி.’

’நம் ஒப்பந்தத்தை நீ நினைவில் வைத்திருக்கிறாய்தானே?’

’ஆமாம்.’

’அவருக்காக கடவுளை வேண்டிக்கொள்! நான் அவரை இழக்க விரும்பவில்லை. கடவுள் சாட்சியாக ஏதாவது ஆகிவிட்டால் நான் தனிமையில் தள்ளப்பட்டுவிடுவேன்.’ அவள் குனிந்து என் வாயில் முத்தமிட்டாள். ’மருத்துவ ஊர்தி கீழே வந்துவிட்டது. நீ வெளியே போக வேண்டுமெனில் சாவியைப் பதிவாளரிடம் வரவேற்பகத்தில் கொடுத்துவிட்டுச் செல். ஷோஷாவைப் பார்க்க விரும்பினால் நீ போகலாம், ஆனால் உடனடியாக சிலியாவுடனான தொடர்பினை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள். என்னால் வண்டியில் ஐந்தாவது சக்கரத்தினை சமாளித்துக்கொண்டிருக்க முடியாது. நீ சாமிற்கு விடையளிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனாலும் நீ இங்கு இரவைக் கழித்தது அவருக்குத் தெரிய வேண்டாம். நீ சென்று விட்டதாகச் சொல்லிவிட்டேன். கடவுளிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்!’

அவள் கிளம்பினாள். நான் சோஃபாவிலேயே கிடந்தேன். எனது கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அது நான்கு மணியில் நின்று போயிருந்தது. எனது கண்களை மீண்டும் மூடினேன். பெட்டி சொன்னதை வைத்து சாம் ஏற்கெனவே உயிலை எழுதிவிட்டாரா இல்லையா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படியே அவர் எழுதி இருந்தாலும் அவரது குடும்பம் அதை அழித்துவிடும். என் எண்ணங்கள் என்னை அழைத்துச் செல்லும் இடங்களைக் கண்டு நான் திகைப்புற்றேன். பண விவகாரங்கள் எப்போதுமே எனக்கு அந்நியமானவையாகவே இருந்திருக்கின்றன. பணத்திற்காகவோ வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டோ எவரையேனும் திருமணம் செய்துகொள்வது என்பது நான் கனவில்கூடக் கண்டறியாதது. இது விசாவிற்காகத்தான் – நாஸிக்களின் கைகளில் சிக்கி அழியப்போவது குறித்த பயத்திற்காகத்தான் – அன்றி திருமணத்திற்காக அல்ல என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன்.

சடுதியில் ஏதோவொன்று என்னைக் கடித்துவிட்டது போல உணர்ந்தேன். சிலியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டுமா? சாமின் ஆசைநாயகியாகவே இருந்து கொண்டிருக்கும்போதே இத்தகைய ஆணைகளைச் சொல்ல பெட்டிக்கு எந்தவித உரிமையும் இல்லை. நான் நேரடியாக சிலியா வீட்டிற்குத்தான் போகப் போகிறேன்! என் தாடையைத் தேய்த்தேன், அதில் சொரசொரப்பான குறுந்தாடி முளைவிட்டிருந்தது. நான் எழுந்தேன். எனது கால்கள் உறங்கி எழுந்ததால் தளர்வுற்றிருந்தன. கழுவுத் தொட்டியின் முன்பு ஒரு கண்ணாடி தொங்கியது. சாளரத் திரையை உயர்த்தி என் முகத்தை ஒருகணம் பார்த்தேன். அதில் ஒரு வெளிறிய முகமும், சிவந்த கண்களும், சுருங்கிய கழுத்துப் பட்டையும் தெரிந்தன. நான் சாளரத்தருகே சென்று எட்டிப் பார்த்தேன். விடுதியின் முகப்பில் எந்தவித வாகனங்களும் இல்லை. மருத்துவ ஊர்தி ஏற்கெனவே அவரை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். பெட்டி அதன் பெயரைக்கூட என்னிடம் தெரிவிக்காமல் சென்றுவிட்டாள். பரிதியின் சாய்கதிர்களை வைத்து இது இன்னும் விடியற்காலையாக இல்லை என்பதைக் கணக்கிட்டேன். 

’நான் ஷோஷாவிடம் என்ன சொல்வது?’ என்னை நானே கேட்டுக்கொண்டேன். ‘அவளுக்கு நான் வேறொருத்தியை மணம் செய்துகொண்டேன் என்பது மட்டுமே புரியும். அவளால் அதைத் தாங்கிக்கொண்டு வாழ முடியாது.’ தெருவில் சென்ற காலியான வாடகை உந்துகளையும் ட்ரோஷ்கிகளையும் பார்த்துக்கொண்டு நின்றேன். யூதரல்லாதோரின் தெருக்களும்கூட யோம் கிப்பூரை முன்னிட்டு ஆளரவமின்றி இருந்தன. எனது மேற்சட்டையைக் கழற்றி, புனித தினத்தன்று செய்யக்கூடாது என்றபோதும் என் முகத்தைக் கழுவினேன். நான் வெளியேறினேன். படிப்படியாய் கீழிறங்கினேன். அவசரப்பட எந்த முகாந்திரமும் இருக்கவில்லை. முதல்முறையாக நான் சாமுடன் நெருக்கமாக உணர்ந்தேன். அவரும் என்னைப் போலவே சாத்தியமின்மையை விரும்பினார்.

நான் ஒரு சவரக்கடையைக் கடக்கையில் அதன் உள்ளே நுழைந்தேன். நான் ஒரேயொருத்தன்தான் வாடிக்கையாளராக இருந்தமையால் மழிப்பவன் என்னைச் சிறப்பான மரியாதையுடன் கவனித்தான். பிணத்தை வெண்சீலையைக் கொண்டு சுற்றிவிடுவதுபோல ஒரு வெண்ணுறையை என்மீது போர்த்தினான். நுரை பூசுவதற்கு முன்பாக அவன் என்னுடைய குறுந்தாடியைத் தடவிப் பார்த்தான். ’இந்த வார்சா என்ன மாதிரியான நகரமோ?’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து, ‘இது ஷீனிக் யூதர்களுடைய யோம் கிப்பூர் தினம். ஆனால் முழுநகரமுமே வெறிச்சோடிப் போய்விட்டிருக்கிறது. இதில் இது தேசத் தலைநகரம் வேறு, போலந்தின் கிரீடம். ஒரே சிரிப்புதான்!’ என்றான்.

அவன் என்னை ஒரு யூதரல்லாதவன் என்று தவறாக நினைத்துக்கொண்டான். அவனுக்குப் பதிலளிக்க நினைத்தேன். இருந்தாலும் நான் பேசத் தொடங்கி ஓரிரு வார்த்தைகளிலேயே அவனுக்கு நான் யாரென்பது தெரிந்துவிடும். நான் தலையசைத்துவிட்டு நான் யாரென்று காட்டிக்கொடுத்து விடாதவாறு ஆம் என்ற பொருள்தரும் ஒற்றை போலிஷ் வார்த்தையை மட்டும் சொன்னேன்- ‘தக்.’

அவன் தொடர்ந்தான். ’அவர்கள் போலந்தையே ஆக்கிரமித்து விட்டனர். நகரங்கள் எல்லாம் அவர்களால் நிறைந்து வழிகின்றன. முன்பு அவர்கள் நலேவ்கி, க்ரைபோவ்ஸ்கா, குரோச்மால்னா ஆகிய இடங்களை மட்டுமே நாறடித்து வைத்திருந்தனர். ஆனால் இப்போதோ அவர்கள் புழுக்களைப் போல எங்கும் திரண்டு பரவி இருக்கின்றனர். வில்லானாவ் வரையிலும்கூட அவர்கள் தவழ்ந்து சென்றிருக்கின்றனர். இதில் ஒரேயொரு ஆறுதல் மட்டும் இருக்கிறது – ஹிட்லர் அவர்களை மூட்டைப்பூச்சிகளைப் போல நசுக்கிவிடுவார்.’

நான் நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன். என் தொண்டையின் மேல் தனது சவரக்கத்தியின் கூர்முனையை வைத்திருந்தான். நான் மேலே பார்த்தபோது அவனது பசுங்கண்கள் என் விழிகளை ஒரு கணம் பற்றின. நான் யூதன் என்று அவன் சந்தேகிக்கின்றானோ?

’மரியாதைக்குரிய ஐயா, நான் ஒன்று சொல்கிறேன். தாடியை மழித்துவிட்டு, தெளிவாக போலீஷ் மொழி பேசிக்கொண்டு, போல்களைப் போல பாவனை செய்து வாழும் இந்த நவீன யூதர்கள் இருக்கிறார்களே.. அவர்கள் நீண்ட கபர்டைன்கள் அணிந்து, கரடுமுரடான தாடியை நீட்டிக்கொண்டு காதை மூடுமளவிற்கு முடி வளர்த்த பண்டைய கால ஹீப்புக்களைவிட மிகவும் மோசமானவர்கள். அவர்கள் குறைந்தபட்சம் தானம் தேவைப்படாத இடங்களுக்குப் போகாமலேனும் இருந்தனர். அவர்கள் தங்களது கடைகளில் நீண்ட மேலங்கிகளை அணிந்து அமர்ந்து தல்மூத்தை ஒரு அரேபிய நாடோடி போலப் புரட்டிக்கொண்டிருந்தனர். தம் குழுமொழியை உளறிக்கொண்டு தம் கைகளில் சிக்கிய கிறித்துவர்களிடமிருந்து ஓரிரு குரோஷன்களைப் பிடுங்கி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் குறைந்தது அரங்குகளுக்கும் காஃபியகங்களுக்கும் ஆப்பெராக்களுக்குமேனும் செல்லாதிருந்தனர். ஆனால் நன்கு மழித்து நவீன உடையணியும் யூதர்கள்தான் நிஜத்தில் ஆபத்தானவர்கள். அவர்கள் நமது செஜெமிலேயே அமர்ந்துகொண்டு நமது ஜன்ம விரோதிகளான ருதீனியர்கள், வெண் ரஷ்யர்கள், லிதுவேனியர்கள் போன்றோரிடம் உடன்படிக்கை செய்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் இரகசிய கம்யூனிஸ்டாக இருக்கும் சோவியத் உளவாளிகள். அவர்களுக்கு ஒரேயொரு நோக்கம்தானிருக்கிறது – கிறித்துவர்களை வேரறுத்து அதிகாரத்தை போல்ஷ்விக்குகள், மேசன்கள், புரட்சிக்காரர்களிடம் ஒப்படைத்துவிடுவதே. உங்களுக்கு இதை நம்புவது கடினமாக இருக்கலாம். ஆனால் அவர்களுள் பல கோடீஸ்வரர்கள் ஹிட்லருடன் இரகசிய உடன்படிக்கை செய்துகொண்டுள்ளனர். ரோத்செல்ட்கள் அதற்கு நிதியளிக்க, ரூஸ்வெல்ட் அதற்குத் தரகு வேலை செய்கிறார். அவரது நிஜப்பெயர் ரூஸ்வெல்ட்டே அல்ல, ரோஷன்ஃபெல்ட், ஒரு மதமாறிய யூதர். அவர்கள் கிறித்துவர்களாக மதம் மாறிக்கொண்டு உள்ளே இருந்தவாறே அனைத்தையும் அனைவரையும் நலிவடையச் செய்யவேண்டும் என்பதே அவர்களது ஒரே குறிக்கோள். சிரிப்பாக இருக்கிறது. இல்லையா?’

நான் அரைச் சிரிப்பையும் பெருமூச்சையும் வெளிவிட்டேன்.

‘அவர்கள் இன்று ஒருநாளைத் தவிர ஆண்டு முழுக்க இங்கு மழிக்கவும் முடிதிருத்தவும் வருகிறார்கள். யோம் கிப்பூர் செல்வத்துடனும் நவீனமாகவும் மாறிவிட்டவர்களுக்கும்கூட ஒரு புனித தினமாகவே இருக்கிறது. இங்கும் மார்சல்ஹோவ்ஸ்கா தெருவிலும் பாதிக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. மென்மயிர் வைத்த தொப்பிகளையும் ஜபசால்வைகளையும் போட்டுக்கொண்டு, அந்தக் கால ஷீனிக் யூதர்களைப் போல அவர்கள் தற்போது ஹசிதிய பிரார்த்தனைகளுக்குச் செல்வதில்லை. சிறப்பு உந்துகளில் நவீன தொப்பிகளை அணிந்துகொண்டு மிடுக்காக த்லோமோகா தெருவில் உள்ள ஜபதலத்திற்குத்தான் இப்போதெல்லாம் செல்கின்றனர். ஆனால் இவர்களை எல்லாம் ஹிட்லர் நிச்சயம் சுத்தமாக அழித்துவிடுவார். அவர்களின் கோடீஸ்வர்களுக்கு இந்தத் தலைநகரைக் காப்பதாக உறுதி அளித்திருந்தாலும், நாஸிக்களுக்குப் போதுமான பலம் வந்ததும் அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுப்பார். ஹா ஹா ஹா! அவர் நம் தேசத்தை தாக்கப் போகிறார் என்பது ரொம்ப கெட்ட செய்திதான் என்றாலும் இந்த அசுத்தத்தை நீக்குவதற்கான தைரியம் நமக்கில்லை என்பதால் நமது பகைவனை நமக்காக அதைச் செய்யத்தான் விட்டாக வேண்டும். பிறகென்ன ஆகும்  என்பது எவருக்கும் தெரியாது. இதற்கெல்லாம் காரணம் தனது ஆத்மாக்களை சாத்தானிடம் விற்றுவிட்ட, அந்தத் துரோகிகளான எதிர்திருச்சபையினர்தான். அவர்கள்தான் போப்பின் மிகக் கொடூரமான பகைவர்கள். ஐயா, தாங்கள் லூதர் ஒரு இரகசிய யூதர் என்பதை அறிவீர்களா?’

’இல்லை.’

’இது நிரூபிக்கப்பட்ட உண்மை.’

அவன் இருமுறை தனது கத்தியால் என் முகத்தை மழித்துவிட்ட பிறகு, நறுமண நீரை என் முகத்தில் தெளித்து, வெண்பொடி பூசினான். எனது ஆடையின் மீது தூசுத் துடைப்பானால் தட்டிவிட்டு, எனது தோள்பட்டையில் இருந்த விட்டுப்போன முடிகளை தனது இரு விரல்களால் நீக்கினான். அவனுக்குப் பணமளித்துவிட்டு அவ்விடத்தை நீங்கினேன். நான் கடையின் கதவினை மூடிய நேரத்தில் எனது சட்டை முழுதும் வியர்வையில் நனைந்து போயிருந்தது. எத்திசையில் செல்கிறோம் என்பது தெரியாமலேயே நான் விரைந்தேன். இல்லை, நான் போலந்தில் தங்கப் போவதில்லை! எவ்வளவு விலை கொடுத்தேனும் இங்கிருந்து கிளம்பிடுவேன்! நான் தெருவைக் குறுக்கே கடக்கையில் கிட்டத்தட்ட ஒரு மகிழுந்து என் மீது இடிக்க வந்துவிட்டது. இதுதான் என் வாழ்விலேயே மிகவும் துயரமான நாள். நானும்கூட எனது ஆத்மாவைச் சாத்தானிடம் விற்றுவிட்டேன். ஜப தலத்திற்குப் போகலாமா?  இல்லை, நான் அதன் புனிதத்திற்கு களங்கம் விளைவித்து விடுவேன். எனது வயிறு உந்தி சிறுநீர் கழிக்கும் உணர்வேற்பட்டது. வியர்வை வழிந்தது. எனது சிறுநீர்ப்பையில் வலி குத்தி எடுத்தது. உடனே நான் போகாவிடில் கால்களை ஈரமாக்கி விடுவேன் எனத் தோன்றியது. ஒரு உணவு விடுதிக்கு வந்து உள்ளே நுழைய முயன்றால், அதன் கண்ணாடிக் கதவைத் திறக்கவே முடியவில்லை. அது பூட்டி இருக்கிறதா? இருக்க முடியாது, உள்ளே அமர்ந்து உண்பவரையும் தட்டுகளில் உணவெடுத்துச் செல்பவர்களையும் பார்க்க முடிகிறதே.

நாயின் தோல்வாரைக் கையில் பிடித்தபடியும் வந்த ஒரு மனிதன், ‘இழுக்காதே, தள்ளு’ என்று சொன்னார்.

’ஓஹோ, மிகவும் நன்றி!’

நான் பரிசாரகனிடம் கழிவறைக்கு வழி கேட்க அவன் கதவைச் சுட்டிக் காட்டினான். நான் அத்திசையை நோக்கிப் போகையிலோ திடீரென மாயமாகக் கதவு மறைந்திருந்தது. காலை உணவுகளிலிருந்து தம் தலைகளை உயர்த்தி ஆட்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். ஒரு பெண்மணி சத்தமாகச் சிரித்தே விட்டாள்.

பரிசாரகன் ’இங்கே!’  என்று எனக்காக கதவைத் திறந்துவிட்டார்.

நான் சிறுநீர் கழிப்பிடத்திற்கு ஓடினேன். ஆனால் சாம் ட்ரைமேனுக்கு ஏற்பட்டிருந்ததைப் போலவே எனக்குள்ளும் சிறுநீர்க் குழாய் அடைத்துக்கொண்டிருந்தது.

*

நான் சிலியா வீட்டிற்குப் போகவில்லை. யோம் கிப்பூரை ஷோஷாவுடன் கழித்தேன். பஷிலி ஆலயத்திற்குப் போயிருந்தாள். அவள் முந்தைய நாள் ஏற்றிவைத்திருந்த பெரிய நினைவு மெழுகு வெளிச்சம் ஏதுமின்றி இன்னும் எரிந்துகொண்டிருந்தது. உறக்கமற்ற இரவினால் அயர்வுற்றவனாக, உடை களையாமலேயே ஷோஷாவின் அருகில் படுக்கையில் கிடந்தேன். என்னை அறியாமலேயே உறங்கிப் போனேன், கனவு கண்டேன், பிறகு விழித்தேன். ஷோஷா என்னிடம் பேசினாள், அவளது குரலை நான் கேட்டபோதும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் போர், டைபஸ் காய்ச்சல் தொற்று, பசி, இப்பியின் மரணம் என்று ஏதேதோ பேசினாள். ஷோஷா தனது குழந்தைக் கைகளை எனது இடுப்பின் கீழே வைத்திருந்தாள். நாங்கள் இருவருமே விரதமிருந்தோம்.

அவ்வப்போது நான் விழிதிறந்து எதிரில் இருந்த சுவரில் பரிதியின் கிரணங்கள் எப்படி மேல்நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கின்றன என்பதைக் கவனித்தேன். வெளியே, யோம் கிப்பூர் நாளின் விழாக்கோலம் கொண்டிருந்தது. என்னால் பறவையின் கீச்சொலியினைக் கேட்க முடிந்தது. நான் எடுத்த முடிவைப் பின்பற்றப் போகிறேன். ஆனால் நான் ஏன் அத்தகைய முடிவினை எடுத்தேன் என்பது குறித்து யாருக்கும், ஏன் எனக்கேகூட என்னால் விவரிக்க முடியாது. அதற்கு தரிசனம் – அதாவது உளமயக்கக் காட்சி – அல்லது எனது தந்தையின் அசரீரி ஏதேனும் காரணமாக இருந்திருக்கலாமோ? மழிப்பவன் தனது நச்சுச் சொற்களால் என்னைத் தூண்டிவிட்டு விட்டானோ? உழைக்கும் வேட்கை கொண்ட, திறமையான, என்னை வளமான அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லக்கூடிய சாத்தியம் கொண்ட ஒரு பெண்ணை மறுத்துவிட்டு என்னை நானே ஏழ்மைக்கும் ஹிட்லரின் துப்பாக்கி ரவையால் வரும் சாவிற்கும் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறேன். இதற்கு சாம் ட்ரைமேனின் மீதிருக்கும் பொறாமையுணர்வே காரணமா? ஷோஷாவின் மீது அத்தனை தீவிரக் காதல் கொண்டிருக்கிறேனா? பஷிலியை ஏமாற்றுவதற்கான தைரியம் எனக்கில்லையா?

என் உள்ளத்திற்கும் ஆழ்மனத்திற்கும் இந்த கேள்விகளைத் தொடுத்தும் பதில் கிடைக்கவில்லை. இதுதான் தற்கொலை செய்துகொள்பவர்களின் நிலைமையும்கூட என்று எனக்கு நானே சொன்னேன். அவர்கள் உத்திரத்தில் ஒரு கொக்கியைக் கண்டடைவார்கள், அழகான முடிச்சிடுவார்கள், கீழேயொரு நாற்காலியை வைப்பார்கள், ஆனாலும் கடைசி நொடிவரை இவற்றையெல்லாம் ஏன் செய்தோமென்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. இயற்கையின் மனித இயல்பின் அத்தனை முகங்களையும் வார்த்தைகளாலும் நோக்கங்களின் அடிப்படையிலும் வெளிப்படுத்திட முடியும் என்று எவர் சொன்னது?இலக்கியத்தால் உண்மைகளை எடுத்துக்கூறவோ அல்லது கதாபாத்திரங்கள் வழியாக அவற்றின் நடத்தைகளுக்குப் புதிதுபுதிதாக சாக்குபோக்கு கண்டறிந்து சொல்லவோ மட்டுமே முடியும் என்பதை நான் நெடுங்காலமாக அறிந்திருக்கிறேன். புனைவுக்கதைகளில் வரும் உள்நோக்கங்கள் அனைத்துமே வெளிப்படையானவை அல்லது தவறானவை.

நான் உறக்கத்தில் ஆழ்ந்தேன். நான் எழுந்தபோது அந்தி சாய்ந்திருந்தது. பரிதியின் இறுதிக் கிரணக்கற்றைகள் மடக்குச் சாளரத்தின் மேல் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ஷோஷா ‘அரெலி, நீ நன்றாக தூங்கிவிட்டாய்’ என்று சொன்னாள்.

’நீயுமா ஷோஷா?’

’ஓ, நானும் தூங்கினேன்.’

அறை முழுவதும் நிழல் நிரம்பியிருந்தது. மேசையில் வழிபாட்டு மெழுகுவர்த்திச் சுடர் படபடத்தது. ஒருமுறை நன்கு மேலெழுந்து எரிந்து பின்னர் அது திரியைக்கூடத் தொட்டிருப்பதாகத் தோன்றாதபடி சிறியதாகிப் போனது. ஷோஷா ‘சென்ற வருடம் யோம் கிப்பூருக்கு நான் அம்மாவுடன் ஆலயம் சென்றிருந்தேன். வெள்ளைத் தாடி வைத்திருந்த ஒரு ஆள் ஆட்டுக்கிடாவின் கொம்பை ஊதினான்’ என்றாள்.

’ஆம், நான் அறிவேன்.’

’வானில் மூன்று விண்மீன்கள் தெரிந்ததும், நாம் சாப்பிட வேண்டும்.’

’உனக்குப் பசிக்கிறதா?’

’நீ என்னுடன் இருப்பது, உண்பதைவிடச் சிறப்பானது.’

‘ஷோஷா, நாமிருவரும் விரைவில் கணவன் மனைவியாகப் போகிறோம், புனித நாளிற்குப் பிறகு.’ 

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இதைப் பற்றி எதுவும் அவளது தாயிடம் சொல்லிவிட வேண்டாம் என்று எச்சரிக்க நினைத்தேன். ஆனால் சரியாக கதவு திறக்கப்பட்டு பஷிலி உள்ளே வர அவளை நோக்கி ஷோஷா ஓடினாள். ‘அம்மா, குடிசைவிழாவுக்குப் பிறகு அரெலி என்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்!’ நான் இதுவரை கேட்டதிலேயே இப்போதுதான் அதிகமான கத்தல் கத்தி இதைச் சொன்னாள். அவள் தனது தாயைக் கட்டியணைத்து முத்தமிட்டாள். பஷிலி விரைந்து தனது இரண்டு நூல்களையும் கீழே வைத்துவிட்டு சந்தோஷம் நிரம்பிய திகைப்புடன் என் மீது கேள்வி தொடுக்கும் பாவனையில் பார்வையை வீசினாள்.

‘ஆம், அது நிஜம்தான்’ என்றேன்.

பஷிலி கைகளைத் தட்டினாள். ‘கடவுளே கருணாமூர்த்தியே! எனது பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்த்துவிட்டார். நான் நாளெல்லாம் கால் நோக நின்று உனக்காகத்தான் ஜபித்தேன் மகளே, உனக்காகவும்தான் அரெலி, என் மகனே. உங்கள் இருவருக்குமாக நான் எத்தனை கண்ணீர் வடித்திருப்பேன் என்பது விண்ணுலகில் இருக்கும் கடவுளுக்கு மட்டுமே தெரியும். மகளே, என் கண்மணியே, வாழ்த்துகள்!’ 

அவர்கள் இருவரும் பிரிக்கவே முடியாதபடி முத்தமிட்டவாறு கட்டியணைத்து அசைந்தாடிக்கொண்டிருந்தனர். பிறகு பஷிலி தனது கைகளை என்னிடம் நீட்டினாள். அவளிடமிருந்து விரதத்தின் மணமும், ஆண்டு முழுவதும் அவளது ஆடைகளைச் சூழ்ந்திருந்த அந்துருண்டையின் மணமும் எழுந்தன. அந்த மணம் விழாவையும் பெண்மையையும் நினைவூட்டும் வண்ணம் இருந்தது – என் குழந்தைப் பருவத்திலிருந்தே, புனித நாட்களில் எங்கள் வீட்டுக்கூடம் பெண்களின் வழிபாட்டுத்தலமாக மாறிவிட்டிருக்கும் போதிருந்தே எனக்குப் பழக்கப்பட்டிருந்தது அந்த நறுமணம். பஷிலியின் குரலும்கூட வலிமையாகவும் சத்தமாகவும் மாறிவிட்டிருந்தது. அவள் இத்திய மொழியில் இரந்து மன்றாடும் நூலின் தொனியில் பேசத் தொடங்கினாள்- ‘இவை எல்லாமே பரலோகத்தில் இருந்து வந்திருக்கின்றன, பரலோகத்திலிருந்து. கடவுள் என் துயரை, எனது உடைந்த ஆத்மாவைப் பார்த்திருக்கிறார். விண்ணகத் தந்தையே, எனது கந்தலான வாழ்வில் இன்றுதான் மிகவும் மகிழ்வான தினம். நாங்கள் பெருந்துன்பத்தில் உழன்று விட்டோம், எங்களுக்கு உதவிடும் ஆண்டவரே. எனது தலைமகளை நான் திருமண உடையில் அழைத்துச் செல்லும்வரை என்னை உயிரோடு இருக்க அனுமதியும் ஆண்டவரே!’ அவள் தன் கைகளை உயர்த்தினாள். அவள் விழிகளில் ஒரு தாய்மையின் மகிழ்வு மிளிர்ந்தது. ஷோஷா கண்ணீராய் வெடித்தாள். பிறகு பஷிலி ஆச்சர்யத்துடன், ‘எனக்கு என்னதான் பிரச்சனை? அவன் நாளெல்லாம் விரதம் இருந்திருக்கிறான், எனது செல்வமே, எனது விலைமதிப்பற்ற வாரிசே, இதோ விரைந்து உனக்கு உணவு சமைக்கிறேன்’ என்று சொன்னாள். 

அவள் அலமாரிக்கு விரைந்தோடி ஒரு குவளை செர்ரி பிராந்தியுடன் திரும்பி வந்தாள். அந்த பானம் ஏதோவொரு மகிழ்வான காரியத்தை எதிர்பார்த்து வெகு காலமாகவே அங்கு காத்திருந்திருக்கிறது. ஷோஷாவிற்கும் அதே பகிர்வு கிடைத்தது. நாங்கள் வணங்கிக் குடித்து முத்தமிட்டுக்கொண்டோம். ஷோஷாவின் உதடுகள் குழந்தையினதைப் போலன்றி கனிந்த பெண்ணுடையதைப் போலிருந்தன. 

கதவு திறந்ததும் தெய்பிலி அதுவரை நான் கண்டிராத புத்துடையில் அழகானவளாய் உள்ளே வந்தாள். விடுமுறையை தனது தாயுடனும் அக்காவுடனும் கழிப்பதற்காக ரோஷ் ஹசானாவிற்கு வந்திருந்தபோது அவளைக் கடைசியாகப் பார்த்தது. தெய்பிலி உயரமாக நிமிர்வுடன் இருந்தாள். கருங்கூந்தலும் பழுப்பு விழிகளுமாக அவளது தந்தையை ஒத்த தோற்றத்திலிருந்தாள். அவளது குடும்பம் எண் 10லிருந்து எண் 7க்குக் குடி மாறியபோது அவளுக்கு மூன்று வயதே ஆகியிருந்தது என்றாலும் என்னை நினைவு வைத்திருந்து அரெலி என்றே அழைத்தாள். ரோஷ் ஹசானா தினத்தன்று புத்தாண்டுப் புனிதமாக்கலுக்காக வேண்டி அவள் அன்னாசித் துண்டுகளைத் தன்னுடன் கொண்டுவந்திருந்தாள். திருமணத்தைக் கேள்வியுற்றதுமே களிப்பும் சிரிப்பும் கலந்த விழிகளுடன், ‘அரெலி, இது நிஜமா?’ என்று கேட்டாள்.

நான் பதில் சொல்வதற்கு முன்பே அவள் என்னைக் கட்டித் தழுவியவாறு நெருக்கி முத்தமிடத் தொடங்கினாள். ‘வாழ்த்துகள், வாழ்த்துகள். இது நிர்ணயிக்கப்பட்ட விதி! அதுவும் யோம் கிப்பூர் தினத்தில்! எனது உள்ளம் சொல்லிக்கொண்டே இருந்தது – அரெலி, எனக்கு சகோதர பாக்கியமே இல்லாதிருந்தது. ஆனால் இப்போதிலிருந்து நீதான் எனக்கு அண்ணன், அதை விடவும் நெருக்கமானவன். தந்தை இதைக் கேட்டால் நிச்சயம்…’ என்றபடியே கதவை நோக்கி தனது உயர்குதிச் செருப்பில் ஓட்டமெடுத்தாள். 

‘இத்தனை அவசரமாக நீ எங்கே ஓடுகிறாய்?’ என்று பஷிலி கேட்டாள்.

’அப்பாவிற்குத் தொலைபேசி செய்ய’ என்று வெளிக்கூடத்திலிருந்து பதிலிறுத்தாள்.

’அவருக்கு எதற்கு? இந்த சுக காரியத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு உள்ளது?’ என்று அவளிடம் பஷிலி கத்தினாள். ‘அவர் நம்மைத் தனிமையிலும் நோயிலும் கைவிட்டு விட்டு ஒரு வேசியோடு வசிக்கப் போனவர் – நரகத்தீ அவரை அள்ளிக்கொண்டு போகட்டும்! அவர் அப்பா இல்லை, கொலைகாரன். அவரிடம் இருந்திருந்தீர்கள் என்றால் நீங்கள் இன்னேரம் பட்டினி கிடந்தே இறந்திருப்பீர்கள். நான்தான் உங்களுக்குச் சோறு போட்டு கடைசி மூச்சையும்கூட நீங்கள் வாழ்வதற்கென்றே கொடுத்தவள். மேலே இருக்கும் ஆண்டவரே! நீர் அனைத்தையும் அறிவீர். அந்தக் கொடுமைக்காரனாலும் அவனது தீய வழிகளாலும்தான் நாம் இப்பியையே இழந்தோம் – அவள் தூய ஆவிகளுடன் சொர்க்கத்தில் சமாதானமாய் வாழட்டும்.’

தெய்பிலி கதவை அடித்துச் சாத்திவிட்டுப் போய்விட்டிருந்ததால், பஷிலி இவையனைத்தையும் தனக்கும் ஷோஷாவிற்கும் எனக்கும் சொல்லிக்கொண்டிருந்தாள். 

’அவள் எங்கே இருந்து அவருக்குத் தொலைபேசி அழைப்பு செய்வாள்? சிறப்புணவுக் கடை திறந்திருக்குமா என்ன?’ என்று ஷோஷா கேட்டாள்.

‘அவள் பேசட்டும். அந்தக் கிழட்டு வேசிப் பொறுக்கியிடமே அவள் போய்ச்சேர்ந்து தொலையட்டும். என்னைப் பொறுத்தவரை அந்தத் தகுதியில்லாத ஆள் பன்றிவிட்டைக்குச் சமம். அவனது முகத்தில் மீண்டும் விழிக்க நான் விரும்பவில்லை. நாம் பசித்தும், பிணியுற்று ஈரல்குலை வெளிவந்து கிடந்தபோதெல்லாம் அப்பனாக இருக்காதவன் இப்போது அதிர்ஷ்டம் வருகையில் மட்டும் ஏன் அப்பனாக இருக்க வேண்டும்? அது நம்முடன் மட்டுமே இருந்துவிடட்டும். ஷோஷா, நீ ஏன் மடச்சி மாதிரி நின்றுகொண்டிருக்கிறாய்? அவனை முத்தமிடு, பற்றிக்கொள்! ஏற்கெனவே அவன் உனக்கு நல்ல கணவனாக மாறிவிட்டிருக்கிறான். எனக்கோ எனது அன்பிற்குரிய சொந்தப் பிள்ளையானவன். நாம் ஒருபோதும் அவனை மறக்கமாட்டோம். நாம் அவனைப் பற்றி நினைக்காமல் ஒருநாள்கூடக் கழிந்ததில்லை. பல இளைஞர்கள் கொடுமைகளில் எரிந்து போயிருந்த நிலையில் இவன் எங்கே இருக்கிறான் என்றோ உயிருடன்தான் இருக்கிறானோ என்ற விபரம் கூட நாமறியவில்லை. லெய்சர்தான் இவன் உயிருடன் இருக்கிறான் என்றும் நாளேடுகளுக்காக எழுதிவருகிறான் என்றும் நற்செய்திகளைத் தாங்கி வந்தார். அன்று நம் குடும்பமே விழாக்கோலம் போல இருந்தது. அது நடந்து எவ்வளவு நாள் ஆகிறது? எப்போது என்று என்று எனக்குத் தெரியாத அளவிற்கு எனது தலை குழம்பிப் போயிருக்கிறது. நான்தான் திருமண மேடைக்கு உன்னை அழைத்துச் செல்வேன் எனதருமை மகளே, உனது கொடூரத் தந்தையல்ல. அரெலி, என் குழந்தையே, இன்றிரவு நீ எங்களுக்கு வழங்கியிருக்கும் மகிழ்வின் அளவிற்கு ஆண்டவர் உனக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும்.’ பஷிலி அழத் தொடங்கியதும் ஷோஷாவும் அவளுடன் சேர்ந்து அழுதாள்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு பஷிலி மேற்துணியைக் கட்டிக்கொண்டு பானைகள், தட்டுகள், பாத்திரங்கள் சலசலக்க சமைக்க ஆரம்பித்துவிட்டாள். யோம் கிப்பூர் முன்னந்தியில் பலிதானம் கொடுக்கப்பட்ட இரண்டு கோழிகள் ஏற்கெனவே வெந்திருந்தன. பஷிலி அதைத் துண்டங்களிட்டு அத்தோடு சல்லாவையும் குதிரை முள்ளங்கியையும் சேர்த்து பரிமாறினாள். பின்னர் பஷிலி முதலில் யெஃபில்டி மீனுணவைப் பரிமாறாமல் விட்டுவிட்டதற்காக தன்னைத்தானே கடிந்துகொண்டாள்.

அவள் என்னையே சுற்றிச் சுற்றி வந்தாள். ’சாப்பிடு, என் மகனே. அநேகமாய் உனக்கு விரதமிருந்து சத்து குன்றியிருக்கும். என்னைப் பொறுத்தவரை நான் விரதமிருப்பதையே உணரமுடியாத அளவிற்கு என் உள்ளம் துக்கத்தில் உழல்கிறது. எனக்கு விரதமிருப்பது ஒன்றும் புதிதல்ல. பல இரவுகள் என் குழந்தைகள் உண்ண வேண்டும் என்பதற்காக நான் எடுக்கும் சிறிய கவளங்களைக்கூட தவிர்த்துவிட்டு காலி வயிறுடனேயே படுக்கச் சென்றதுண்டு. ஷோஷா, எனது செல்ல மணப்பெண்ணே, உண்! உன்னுடைய நீண்டநாள் ஏக்கத்தை கடவுள் கவனித்திருக்கிறார். தகைசான்ற முன்னோர்கள் உனக்கென அருளியிருக்கிறார்கள். உன்னைப் பொறுத்தவரை இன்று யோம் கிப்பூரின் முடிவன்று, மாறாக புது வாழ்வின் தொடக்கமான சிம்சா தோரா. தெய்பிலிக்கு என்னவாயிற்று? ஏன் இவ்வளவு நேரமாக வராமலேயே இருக்கிறாள்? அவளை அந்த ஆள் தூக்கி எறிந்துவிட்ட பின்னரும், அவ்வப்போது சில்லறை போல நகைகளை வாங்கித் தருவதற்காகவும், நல்ல வசிப்பிடத்தில் அவர் இருப்பதாலும், அவரோடு இவள் நெருக்கம் பாராட்டுகிறாள். அவமானம், அசிங்கம்! கடவுளின் முன் செய்யும் பாவம்!’

பஷிலி உண்பதற்கு அமர்ந்திருந்தாலும் ஒவ்வொரு நொடியும் கதவின் பக்கமாகத் திரும்பிப் பார்த்தவண்ணமாக இருந்தாள். ஒருவழியாக தெய்பிலி திரும்பி வந்தாள். ’அம்மா, உங்களுக்கு ஒரு நற்செய்தி கொண்டுவந்திருக்கிறேன். ஆனால் முதலில் உணவை விழுங்குங்கள். ஏனென்றால் இதைக் கேட்டு நீங்கள் சிலிர்ப்பு அடைந்தால் உணவு தொண்டையடைத்துக் கொள்ளும்.’

’என்ன செய்தி? நான் அவரிடமிருந்து எந்தச் செய்தியையும் விரும்பவில்லை.’

’அம்மா, என்னைப் பாருங்கள்! ஷோஷா அரெலி திருமணத்தைக் கேட்டதும் தந்தை வேறொருவராக மாறிவிட்டார். அவர் அந்தச் செம்பட்டச்சியிடம் காதலில் விழுந்தார். காதல் ஒருவரைப் பைத்தியமாக்கும்தான். அப்பா, என்னிடம் இரு விஷயங்களைச் சொன்னார். நீ அதைக் கவனமாக கேட்க வேண்டும். ஏனென்றால் அவர் உரிய பதிலுக்காக காத்திருக்கிறார். முதலில், அவர் ஷோஷாவின் திருமணத்திற்கான ஆடையணிகளையும் அவளது திருமணத் தட்சணையாக ஓராயிரம் சிலோட்டி பணமும் தரவிருக்கிறார். இது அதிகமொன்றும் இல்லைதான், ஆனால் ஒன்றுமே இல்லாமலிருப்பதற்கு கொஞ்சம் பணத்தை வைத்து தொடங்குவது சிறப்பானதுதான். இரண்டாவது, உன்னிடம் சொல்கிறார் அம்மா, நீ விவாகரத்திற்கு ஒப்புக்கொண்டால் அவர் உனக்கு இன்னுமொரு ஆயிரம் சிலோட்டிகளை தருவாராம். அப்பாடி! இத்தனை ஆண்டுகள் துன்பத்தை அனுபவித்த உனக்கு இது எத்தனை சொற்பமானது என்பது எனக்குப் புரிகிறது. எனினும் நீங்கள் இருவரும் ஒன்றாக இனி வாழப் போவதில்லை என்கிற நிலையில், ஒருவரையொருவர் குதறிக்கொண்டே வாழவேண்டியதன் அவசியம்தான் என்ன? உனக்கு இன்னும் அத்தனை வயதாகிவிடவில்லை. அழகாக உடையணிந்தால் உனக்கேற்ற ஒருவரைக் கண்டடைய முடியும். இது அவர் வாயால் சொன்னது, என் கூற்றல்ல. எனது அறிவுரை என்னவென்றால், பழையவற்றை, தீமைகளை மறந்துவிட்டு ஒரேயடியாக ஒரு ஒப்பந்தத்திற்குள் வருவதுதான் நல்லது.’

தெய்பிலி பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம், பஷிலியின் முகம் பொறுமையின்றி வெவ்வேறு உணர்ச்சி மாற்றங்களால் திருகிக்கொண்டிருந்தது. ‘இப்போதுதான் என்னை அவன் விவாகரத்து செய்யப் போகிறான் – என் இரத்தம் சுண்டி எலும்பு உலர்ந்து போன பிறகு? எனக்கு இனி துணை தேவையில்லை. நான் யாரையும் இனி மகிழ்விக்க வேண்டிய அவசியமுமில்லை. என் வாழ்க்கை முழுவதுமே என் குழந்தைகள் உங்களுக்காகவே வாழ்ந்து வருகிறேன். இப்போது ஷோஷா தனக்குகந்த ஒருவரைக் கண்டறிந்துவிட்ட நிலையில், எனக்கிருப்பதெல்லாம் – உனக்கும் அப்படி நிகழ்ந்திட வேண்டும் என்ற ஒரேயொரு விழைவுதான் தெய்பிலி. அவன் எழுத்தாளராகவோ பண்டிதனாகவோ இருக்க வேண்டியதில்லை. எழுத்தாளர்கள் என்ன பெரிதாக சம்பாதித்துவிடப் போகிறார்கள்? ஒன்றுமில்லை என்பதோடு சேர்த்து ஒன்றுமில்லை. ஒரு வணிகனாகவோ, கணக்கனாகவோ, வியாபாரியாகவோ இருந்தால் நான் நிம்மதி அடைவேன். கணவனது வேலையைப் பொறுத்து என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? முக்கியமான ஒன்று, அவன் ஒழுக்கமானவனாக, ஒரே கடவுள், ஒரே மனைவி கொண்டவனாக இருக்க வேண்டும். அது இல்லாமல்…’

’அம்மா, ஒழுக்கம் மட்டுமே போதாது. ஒருத்தி கணவன் மீது காதல் இருக்க வேண்டும். அவனுடன் எதையும் பேச முடிய வேண்டும். ஒரு தையற்காரனையோ, கணக்கனையோ கட்டிக்கொண்டு சமையல் செய்ய ஆரம்பித்து, துணி துவைத்துப் போட என்னால் முடியாது. சரி, அதைப் பற்றிப் பேசி ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்? நான் சொன்னதைப் பற்றி யோசியுங்கள். அப்பாவுக்கு பதில் தருவதாக வாக்கு தந்திருக்கிறேன்.’

’அதற்கு பதில் ஒரு கேடு. நான் அவருக்காக இன்னுமா காத்திருக்கிறேன். அடடடா! எத்தனை அருமையான அல்லக்கையாக வாய்த்திருக்கிறாய் அவருக்கு! இத்தனை தினவெடுத்து அவர் திரிவதற்கு ஒரேயொரு காரணம் அவரிடம் காசிருக்கிறது. நாமோ ஏழ்மையில் இருக்கிறோம் என்பதே. இன்றைக்கு அந்தாளுக்கு எந்தப் பதிலும் கிடைக்காது. எங்களோடு அமர்ந்து உண். இந்த வீட்டில் இன்று இரட்டைக் கொண்டாட்ட நாள். நாம் ஏழைதான், ஆனால் அசிங்கத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. நம் குடும்பத்தில் ஒரு போதகரே இருந்தார்- ரெப் செகிலீ போதகர் என்றுதான் அவரை அழைப்பார்கள். உன்னப்பன், பாவாடை பொறுக்கி, காத்திருக்கத்தான் வேண்டும்.’

‘அம்மா, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றொரு பழமொழி உண்டு. உனக்கு அப்பாவைத் தெரியும் – எப்படி மனநிலை மாறிக்கொண்டே இருக்குமென. நாளைக்கே அவருக்கு மனம் மாறிவிடக்கூடும். அப்போது உன்னால் என்ன செய்ய முடியும்?

‘இத்தனை வருடங்களாக நான் என்ன செய்தேனோ அதையே செய்வேன் – அல்லற்பட்டுக்கொண்டே இறைவனின் மீது நம்பிக்கை வைப்பேன். அரெலி ஷோஷாவைத்தான் விரும்புகிறானே அன்றி அவள் உடைகளை அல்ல. ஒரு பொம்மையின் மீது கூடத்தான் நீங்கள் உடைகளை அணிவிக்கலாம். கல்வி கற்ற ஒருவருக்கு உள்ளம்தான் முதன்மை. உண்மைதானே, அரெலி?’

’ஆம், பஷிலி.’

’ஓ, தயவுசெய்து என்னை அம்மா என்று அழை. உன் அன்னைக்கு நூறாயுள் வாய்க்கட்டும்! ஆனால் இந்த உலகிலேயே உன்னைவிட எனக்கு உற்ற நட்பு யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. யாரேனும் வந்து என்னிடம் உனது சின்னஞ்சிறு நகத்திற்காக எனது உயிரைத் தரச் சொன்னால் போதும், கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன், நான் மறுக்க மாட்டேன்.’ பஷிலி இருமத் தொடங்கினாள்.

’அரெலி, நாங்கள் அனைவரும் உன்னை எத்தனை விரும்புகிறோம் என்பதைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை’ என்று ஷோஷா சொன்னாள்.

’சரிதான், நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள். என்னை ஏதோவொரு கணக்கனிடம் தள்ளிவிட முயற்சி செய்யாதீர்கள்’ என்ற தெய்பிலி ‘எனக்கும் காதலிக்க வேண்டும், சரியான ஆளை நான் பார்க்கையில் எனது இதயம் அவனுக்காக உடனடியாகத் திறந்துகொள்ளும்’ என்று சொல்லி முடித்தாள்.

அன்றிரவே பஷிலி, ஹனுக்கா வாரத்தில் திருமணத்திற்கான நாளைக் குறித்தாள். எனது தந்தையின் இடத்தில் தற்போது ராபியாக இருக்கும் எனது தம்பி மொய்ஷி இருந்த பழைய ஸ்டைகோவ்விற்கு என் அம்மாவிற்குத் தெரிவித்து கடிதமெழுதச் சொன்னாள் பஷிலி. 

தெய்பிலி வழக்கம்போல நடைமுறை அறிந்தவளாக, ‘புதுமணத் தம்பதியர் எங்கே வசிப்பார்கள்? இந்நாட்களில் வசிப்பிடங்கள் தங்கத்திற்கு இணையான விலைக்குப் போகிறது’ என்றாள்.

’அவர்கள் இங்கே என்னுடன் வசிப்பார்கள்’ என்று பதிலளித்தாள் பஷிலி. ‘அது மட்டுமில்லை, நான் இருவருக்குச் சமைக்கும் பொழுதெல்லாம் அது மூவருக்கும் போதுமானதாக இருக்கும்.’