குகைவாய் கழுகு

by ப.தெய்வீகன்
0 comment

சுபத்ரா நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறாள். முடிவெடுக்கும் திசை தெரியாமல் குழம்பியிருக்கிறாள். ஆனால், ஒருபோதும் வாழ்வை நினைத்து அச்சப்பட்டதில்லை. அடுத்த கணத்தை எண்ணி பீதியடைந்ததில்லை. இன்று மிருதுளா விடயத்தில்தான் பாம்பொன்றின் தொண்டைக்குள் அகப்பட்டிருப்பதுபோல அவள் உணர்ந்தாள்.

வருணின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்குள், உருட்டிச்செல்லும் வேகத்தில் வாகனத்தை மெதுவாக ஓட்டியபடியிருந்தாள். தரிப்பிடமொன்றினைத் தனது பதற்றம் மிகுந்த விழிகளினால் துழாவித் தேடினாள். வசதியான இடத்தைக் கண்டுபிடித்து, அதில் வாகனத்தை நிறுத்தும்போது, மெல்பேர்ன் “ரோஹினி ஸ்பைஸஸ்” உரிமையாளரும் மனைவியும் சுபத்ராவுக்கு கை காட்டியடி, மண்டபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

சுபத்ராவின் கைகள் வியர்த்திருந்தன. வாகனத்துக்குள் குளிரூட்டி போட்டிருந்தாலும், உள்ளே மேலாடை நனைந்திருப்பதை அவள் உணர்ந்தாள். காரின் நடுக்கண்ணாடியில் முகத்தை எட்டிப்பார்த்தாள். ஒப்பனை போடும்போது எதிர்பார்த்திருந்த எந்த அழகும் கூடிவரவில்லை. கண்கள் வெளுத்துப்போய், பயத்தின் ரேகைகள் அவளை மீறிய பதற்றத்தை காண்பித்தபடியிருந்தன. இப்படியே எப்படி உள்ளே போவது? மெல்பேர்னில் அரங்கேற்ற நிகழ்வுகள் என்றால், சிம்பிளாக நடைபெறுபவையா? இல்லையே… திருவிழாக்களாயிற்றே!

உள்ளே போனால், நிகழ்வின் நாயகன் வருணின் வருங்கால மாமியார் என்று சுபத்ராவின் மீது எல்லோரது கண்களும் மொய்க்கும். ஆயிரம்பேரைக் கொள்ளக்கூடிய அந்த மண்டபத்தின் முன்வரிசையில் கொண்டுபோய் இருத்துவார்கள். நிகழ்வுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டால், ‘காந்தி வீடியோ’ நேசன் அண்ணன் எப்போதும் குதூகலமாகிவிடுவார். முன்னே வந்து நின்று, வளைந்து – நெளிந்து – தவழ்ந்துகூட வீடியோ எடுத்து விசுவாசம் காட்டுவார். அது அப்படியே மேடையின் பின்னாலிருக்கும் பெருந்திரையில் விழுந்துகொண்டிருக்கும். அருகில் வராதவர்களுக்கும் ஆட்களைப் பார்ப்பதற்கு அது வசதியாக இருக்கும்.

எல்லாவற்றையும் எண்ணியபோது பயம்தான் புரையேறியது. தண்ணீர்ப் போத்தலை எடுத்து அரைவாசியை குடித்துத் தீர்த்தாள். உள்ளே குளிர்மை பரவுவதைப் போலிருந்தாலும், நினைவுகள் காட்டுத்தீ கண்ட காங்காருகள் போல திசைதெரியாமல் ஓடிக்கொண்டிருந்தன.

மண்டபத்திற்குள் போவதற்கு முன்னர், இந்த ‘யு.எஸ்.பி.’ ஸ்டிக்கையும் அதிலிருந்து எடுத்த நான்கு ‘பிரிண்ட்’ பிரதிகளையும் மிருதுளாவிடம் கொடுக்கவேண்டும். வீட்டிலிருந்து வரும் முன்னர், கடைசி நேரத்தில் மிருதுளா அழைத்துச் சொல்லியிருந்தாள். இந்த யூ.எஸ்.பி. ஸ்டிக்கினால்தான் இந்த தாமதம், இந்தப் பதற்றம், இந்த நடுக்கம். மிருதுளாவின் அந்தத் தொலைபேசி அழைப்பு மாத்திரம் வந்திராவிட்டால், சுபத்ரா இப்படி உடைந்திருக்கமாட்டாள்.

சொல்லப்போனால், யூ.எஸ்.பியிலிருந்த அந்த வீடியோக்களை அவள் பார்த்திருக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. வருணின் அந்த ‘யு.எஸ்.பி.’ ஸ்டிக்கிலிருந்த ஒரேயொரு வேர்ட் பைலைத்தான் நான்கு ‘பிரிண்ட்’ எடுத்துவரும்படி மிருதுளா சொல்லியிருந்தாள். ஆனாலும், சுபத்ராவின் விடுப்பு மனம் தேவையில்லாமல் அருகிலிருந்த காணொளிகளைத் திறந்து பார்த்தது. 

அந்த நான்கு வீடியோக்களையும் பார்த்தவுடன், சுபத்ராவுக்கு வயிறு முறுக்கியது. கழிவறைக்கு ஓடினாள். இரண்டாம் தரமும் போய் வந்தாள். வீட்டைப் பூட்டிக்கொண்டு காரில் ஏறும்போது இன்னொரு தடவையும் பயம் அடிவயிற்றைப் பிசைய, மீண்டுமொரு தடவை போனாள். காருக்குள் ஏறியதிலிருந்து போட்டிருந்த ஒப்பனைகளை மீறி முகம் எரிந்தது. காது மடல்கள் கொதித்தபடியிருந்தன. செருகி வைத்திருந்த மல்லிகையை மீறி அவ்வப்போது தலை கடித்தது. அவளால் மனம் ஒன்றித்து எதையும் சிந்திக்கவோ செயல்படவோ முடியவில்லை. வீடியோவில் கண்ட அந்தப் பெண்ணின் முகம்தான் மீண்டும் மீண்டும் முன்னே வந்து தொந்தரவு செய்தது.

மேசையொன்றில் நிர்வாணமாக குப்புறக் கிடத்தப்பட்டு, கைகள் இரண்டும் முன்பாக இழுத்துக் கட்டப்பட்டிருந்த அந்தப் பெண்ணை, அவளது பிருஷ்டத்தில் ஈவிரக்கமின்றி ஒருவன் சிறிய கரிய சவுக்கினால் அடித்துக்கொண்டிருக்கும் காட்சியைத்தான் சுபத்ரா முதலில் கண்டாள். யாரோ பிடரியில் அடித்தது போலிருந்தது. அதனைப் பார்த்த அதிர்ச்சியில் வீடியோவை எப்படி நிறுத்துவது என்பதையே அவள் மறந்துவிட்டாள். ஏற்கனவே முற்றாக ஒலி குறைக்கப்பட்டிருந்த அந்த வீடியோவில், கதறியபடி அடிவாங்கிக்கொண்டிருந்தவளின் சத்தம் நல்ல காலம் வெளியில் கேட்கவில்லை. ஆனால், அந்த ஒலி சுபத்ராவினால் உணரக்கூடியதாயிருந்தது. ஒவ்வொரு தடவையும் அடிவாங்கிய அந்தப் பெண், அவன் அடிப்பதை நிறுத்திக்கொள்ளும் ஓரிரு நொடிகளில், இயன்றளவு தன் தலையைத் திருப்பி, அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவனது அடிகளை களிப்பதுபோல அவனுக்கு முகம் காட்டினாள். அப்போது, கைகளில் சிறிய கறுப்புநிறச் சவுக்கு போன்ற பொருளோடு நிர்வாணமாக நின்றுகொண்டிருந்த அந்தச் சித்திரவதையாளன், திடீரென்று வேகமாக அவளைப் பின்னிருந்து புணரத்தொடங்கினான். அப்போதும்கூட அவளின் முதுகில் ஓங்கி அடித்தான். தனது நீண்ட கைகளினால் அவளது முகத்தை கொத்தாகப் பிடித்தான். அதைத் திருகி தன்னை நோக்கித் திருப்பினான். பிறகு, அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

சிவப்புக்குறியைத் தேடிப் பிடித்துவிட்ட சுபத்ரா, இப்போது வீடியோவின் இடப்பக்க மேல்மூலையில் சென்று, நடுங்கிக்கொண்டிருந்த தனது விரல்களில் ஒன்றினால் ஓங்கிக் குத்தி அணைத்தாள். 

அவளுக்குள் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் சத்தம் ஓய்ந்தது. ஆனால், மெல்லிதாக எதிரொலிப்பது போலவுமிருந்தது. இப்போது அவள் வேகமாக மூச்சுவிடுகின்ற சத்தம் மாத்திரம் கேட்டது. வெளித்தாழ்வாரத்தில் காயப்போட்டிருந்த உடுப்புகள் காற்றுக்கு அடித்துக்கொண்டிருந்தன. 

சுபத்ரா அசைய மறுத்த தனது உடலை மிகுந்த பிரயத்தனத்துடன் சமையலறைக்குத் தூக்கிச்சென்றாள். கையில் அகப்பட்ட குவளையொன்றை எடுத்து, குழாயில் தண்ணீரைப் பிடித்தாள். சத்தமாக மொண்டு தீர்த்தாள். தாகமாக இருந்ததா என்றுகூட அவளுக்கு உண்மையில் தெரியவில்லை. ஏதோ செய்யவேண்டும் என்ற நினைப்பில், குழாய்நீரைப் பருகி முடித்தாள். இதயம் சற்று சீராகத் தொடங்கியிருப்பதாக நம்பினாள்.

சுபத்ரா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானபோது ‘பகிடி வதை’ என்ற ஒற்றை அச்சத்தைக் காரணம் காண்பித்து மேற்படிப்பை கைவிட்டவள். லோஜனுடைய பேச்சு சம்பந்தம் வந்தபோது, ஒரு வருடமாக இருவரும் தொலைபேசியிலேயே பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பேசிக்கொண்டிருப்பதையே திருமணம் என்று சமூகம் அங்கீகரித்துவிட்டால் எவ்வளவு நல்லது என்றுகூட எண்ணியிருக்கிறாள். தனக்குச் சம்பந்தமே இல்லாத ஒருவரை கணவராக ஏற்றுக்கொள்வது என்ற ஒவ்வாமையிலிருந்து மீண்டு, தாலியேற்று மெல்பேர்ன் வந்ததென்பது சுபத்ராவைப் பொறுத்தவரை அவளது வாழ்வில் மிகப்பெரிய சாதனை. பேசத்தொடங்கிய நாள் முதல், அவள் மிகுந்த உள்ளொடுங்கிய சீவன் என்பதை லோஜன் முழுவதுமாக அறிந்திருந்தான். சுபத்ராவின் சிந்தனைகள், வாழ்க்கை தொடர்பான புரிதல்கள் அனைத்தும் எவ்வளவுதான் இரசிக்கும்படியாக இருந்தாலும், அநேகமாக எல்லா விஷயங்களிலும் அவள் முன்முடிவுகளால் ஆனவள். அவற்றிலிருந்து அவளை என்றைக்கும் மீட்கமுடியாது என்பது லோஜனுக்குத் தெரிந்திருந்தது. அவற்றை அவளது அழகுகளில் ஒன்றாக அவன் இரசித்திருந்தான்.

மிருதுளாவின் சுபாவம் தாய்க்கு நேர்மாறு. ஒரே மகளென்ற செல்லம் வீட்டிலிருந்தது என்று சொல்லிவிட முடியாது. இருந்தாலும், அவளது இயல்பான குணங்களில் சுபத்ராவிலிருந்து அதிக தூரத்திலிருந்தாள். லோஜனைப் போலவே அவளும் சுபத்ராவை நன்றாகப் புரிந்துகொண்டிருந்தாள். வருணை காதலிப்பதாக முதலில் அவள் சுபத்ராவிடம் சொன்னபோது, அவன் வருங்கால மருத்துவன் என்ற காரணத்துக்காக மாத்திரமல்லாமல், அவனைத் தெரிவு செய்வதற்கு மிருதுளாவுக்கு சகல உரிமையும் உள்ளது என்ற அடிப்படையை சுபத்ரா ஏற்றுக்கொண்டிருந்தாள்.

வருண் மெல்பேர்னில் பல பெண்களின் கனவு நாயகன். ஓரிரு மாதங்களாவது அவனுடன் ‘டேட்டிங்’ போய்வர வேண்டும் என்று பேஸ்புக், இன்ஸ்டக்ராம் உள்பெட்டிகளில் வந்து உரிமைகொள்ள முயன்ற பட்டியல் மிகவும் நீண்டது. மெல்பேர்னின் அநேக தாய்மார், எப்படியாவது அவனை மருமகனாக்கிவிடுவதில்தான் தங்களது தாய்மை முழுமைபெறும் என்பதுபோல விரதமிருந்தார்கள்.

விக்டோரிய உயர்கல்வி பரீட்சையில் மருத்துவத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட நாள் முதற்கொண்டு, மெல்பேர்னில் அறியப்பட்ட பெயர் வருண். மிருதங்கம், வாய்ப்பாட்டு என்று மெல்பேர்ன் மக்களுக்கு அவனை எந்நேரமும் மேடைகளிலேயேதான் காண வேண்டியிருந்தது. அவன் தனது பேஸ்புக்கில் அவ்வப்போது பதிவேற்றும் படங்களுக்கு தாய் – மகள் என்று ஒரே வீட்டிலிருந்து இரண்டு மூன்று லைக்ஸ் விழும். வருண் ‘மொடல’ போல காட்சி கொடுக்கும் இன்ஸ்டா படங்கள், பெண்களின் இரகசிய வட்ஸ்-அப் குழுமங்களில் பிரபலம். மேலாடை அணியாமல் சுவர்களில் சாய்ந்தபடி மேலே – கீழே என்று பார்த்தபடி அவன் எடுத்துப்போடும் ‘கேண்டிட்’ படங்களுக்கு இதயக்குறிகளாக குவியும். அடர்ந்த இமைமுடி, குறுணிக்கண்கள், அதிகம் விரியாத உதடுகளினால் எப்போதும் உதிர்க்கும் வசீகர புன்னகை, அதன்மீது சிம்பிளான மீசை, தாடையில் கீறிவிட்டது போல படர்ந்த தாடி. நெஞ்சில் முடி மழித்து கறுத்த முலைக்காம்புகள் இருபுறமும் காவலிருக்கும். தட்டையான வயிற்றில் ஜிம் உபயமளித்த மூன்று நான்கு படிகள், ஆழமான தொப்புள். 

இப்படிப்பட்டவனை இந்த நாட்டுக்கு வந்த பயனாக, எப்படியாவது தங்கள் மகளுக்கு வளைத்துப் போட்டுவிட வேண்டும் என்று எத்தனையோ தாய்மார் கைபிசைந்து நின்றார்கள். கோயிலில் வருணின் அம்மா சொல்லுகின்ற சாதாரண பகடிகளுக்கே விழுந்து விழுந்து சிரித்து, ஒரே குடும்பத்தவர்களாக பாவனை செய்தார்கள். வருணைக் கண்டால், பாய்ந்து சென்று சீவிவிட்ட ஆங்கிலத்தினால் பேசி தங்களைத் தர நிர்ணயம் செய்துகாட்டினார்கள்.

“ரோஹினி ஸ்பைஸஸ்” அனுசரணையுடன் மெல்பேர்னில் நடைபெற்ற பாடகர் ஹரிஹரனின் “கானமழை” நிகழ்வில் மிருதுளாவை முதன்முதலாக கண்டு, இன்ஸ்டக்ராமில் பின்தொடர ஆரம்பித்த வருணுக்கு இரண்டே வாரங்களில் அவளைப் பிடித்துப்போனது. சொல்லப்போனால், அவளோ அவளது குடும்பமோ வருணை நோக்கி எந்தப் பிரத்யேக எத்தனமும் செய்யாத இயல்பானவர்கள். வருணின் ‘இன்ஸ்டக்ராம்’ அழைப்பைக்கூட இரண்டு நாட்களின் பின்னர்தான் மிருதுளா ஏற்றிருந்தாள். அவர்களுக்கு இடையிலான உறவு இயல்பாக முகிழ்ந்தது. பின்னர், மலர்ந்தது. பிறகுதான், தகவல் வீட்டாரைச் சென்றடைந்தது. ஒரே மகள் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு வெருளாமல், லோஜனும் சுபத்ராவும் மகளின் காதலை ஏற்றுக்கொண்டது போலவே வருணையும் மனப்பூர்வமான மருமகனாக அரவணைத்துக்கொண்டார்கள். லோஜனுக்கு நல்ல பிடி என்று ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

இப்படி எல்லாம் நிறைந்த தனது மருமகன் நீலப்படம் பார்ப்பதில் சபலம் கொண்ட ஒருவன் என்பதை சுபத்ராவினால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதுவும், எப்படிப்பட்ட நீலப்படத்தில் அவன் நாட்டம் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்த்ததிலிருந்து சுபத்ராவுக்கு அடிவயிறு உருகி வடிந்தது. ஒரு பெண்ணை குரூரமாக வதைசெய்து புணர்கின்ற மனநிலை படைத்தவனிடம்தான் தனது மகளை கையளிக்கப் போகிறோமா? இருண்ட கிணற்றின் விளிம்பில் வைத்து யாரோ தள்ளிவிடுவது போலிருந்தது. நினைக்க நினைக்க சுபத்ராவுக்குள் அச்சம் அடர்ந்துகொண்டு போனது. ஒரு கணம் அந்த மேசையில் மிருதுளா நிர்வாணமாக குப்புறக் கிடப்பதுபோல ஒரு காட்சி அவளது மனதில் மின்னல் போல வெட்டிச்சென்றது. ஸ்டியரிங்கை இறுக்கிப்பிடித்துக்கொண்டு, ஆசனத்திலிருந்து துள்ளி முன்னே வந்தாள். அச்சமும் ஆற்றாமையும் மனதில் பொங்கியபடியிருந்தது. வேறெதையுமே அவளால் சிந்திக்க முடியவில்லை.

அரங்கேற்ற நிகழ்வுக்குப் போகத்தான் வேண்டுமா? லோஜனை வெளியே அழைத்து உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாமா? விஷயத்தைப் பெரிதுபடுத்தி நாடகமாடுவது போலிருந்தது. திரும்பவும் நடுக்கண்ணாடியில் முகத்தை சரிசெய்துகொண்டு மண்டபத்துக்குள் சென்றாள் சுபத்ரா. 

முத்துசாமி தீட்சிதரின் “பால கோபாலா” – கீர்த்தனை அப்போதுதான் ஆரம்பித்தது. வயலின்காரர் ஆலாபனை செய்துகொண்டிருந்தார். தவிர்க்க முடியாத அந்த உருவத்தை நோக்கி சுபத்ரா அச்சத்தோடு பார்வையை நிமிர்த்தினாள். நெற்றியில் திருநீறுழுத்து, மிருதங்கத்தினை கால்களுக்கு இடையில் வைத்தபடி, தனது நீண்ட விரல்களினால் நாதம் சேர்க்கத்தொடங்கிய வருணுக்கு அரங்கமே கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தது. சுபத்ராவுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. லோஜன் அருகில் வந்து அமர்ந்ததும் கொஞ்சம் தைரியம் வந்ததது. மிருதுளா எடுத்துவரச் சொன்ன பிரிண்ட் பிரதிகளை அவனிடம் கொடுத்தாள். சிறிது நேரத்தில், அவற்றை மிருதுளாவிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்தான் லோஜன்.

நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடலாக உருளத்தொடங்கியது. எதிர்பார்த்தது போல, நேசன் அண்ணன் குறுக்கும் மறுக்கும் ஓடிவந்து ‘க்ளோஸ் அப்’ வைத்து லோஜன் தம்பதிகளை வீடியோ எடுத்தார். சுபத்ரா இது தனக்குரிய பெரியதொரு சோதனை காலம் என்பதுபோல, சின்னதாக சிரித்து வைத்தாள். அது மேடையின் பின்னாலிருந்த திரையில் பெரிதாக வந்துபோனது.

[2]

அரங்கேற்றம் முடிந்து இரண்டு நாட்களாகிவிட்டன. ஆனால், ஆழ்மனதில் உருண்டபடி கிடக்கும் பாரத்தை வார்த்தைகளில் செருகி யாரோடும் பகிர்ந்துகொள்வதற்கு சுபத்ராவுக்கு இன்னமும் உதடுகளில் சொற்களின் வேர்முளைக்கவில்லை. எத்தனையோ விடயங்களைப் பேசுமளவில் மிருதுளாவின் பதின்மம் முதிர்ச்சியோடு செழித்திருந்தாலும், இது கிட்டத்தட்ட அவளின் குடும்ப விவகாரம் போன்ற கட்டத்தை அடைந்துவிட்ட ஒன்று. அவளது வருங்காலக் கணவரை பலிபீடத்தில் தூக்கிவைப்பது போன்ற காரியம். அவளுக்குரிய வாழ்வுக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, திரும்பவும் மகள் என்ற உரிமையோடு உள்ளே நுழையும் செயல். என்ன நினைப்பாள்? அவள் கொடுத்த யு.எஸ்.பி. ஸ்டிக்கில் தேவையில்லாமல் ஒரு வீடியோவை திறந்து பார்த்ததே தவறு. அதை வைத்துக்கொண்டு நியாயம் வேறு கேட்டுப்போய் நின்றால் அவள் என்ன நினைப்பாள்?

மிருதுளா சார்பிலான சமாதானங்களை மனதில் எவ்வளவுதான் அடுக்கி சமரசம் செய்ய முற்பட்டாலும், தனது மகளை, ஒரு விகார மனம் கொண்டவனிடம் தெரிந்துகொண்டே ஒப்படைப்பதை சுபத்ராவினால் ஏற்க முடியவில்லை. இவ்வளவு சபல புத்தியும் கேவலமான உள் அழுக்கையும் கொண்டவன், எத்தனை பேருடன் இப்படி இருந்திருப்பான்? எதிர்காலத்திலும்கூட, மிருதுளா மாத்திரம் வருணுக்குப் போதுமானவள் என்று சுபத்ராவினால் நம்பமுடியவில்லை. வருண் அவளுக்குள் சுக்குநூறாகி உடைந்து கொட்டிக்கிடந்தான். அவனை அவளால் எந்த வழியிலும் சமரசம் செய்து கடந்துபோக முடியவில்லை. வருண் ஒரு மருத்துவன். நாளைக்கு திருமணம் நடைபெற்ற பிறகு, மிருதுளாவுக்கு நடைபெறும் எதையும் தனது தொழிலால் மறைத்துவிடக்கூடும். மிருதுளாவும் அதனை மறைக்கக்கூடும். தான் காதலித்தவன்தானே என்ற குற்றவுணர்ச்சியில் தன்னிடம்கூட அவளது துயரத்தைப் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கக்கூடும்.

மிருதுளாவின் கார் கராஜூக்குள் வருகின்ற சத்தம் கேட்டது. வருண் வீட்டுக்குப் போய்விட்டுத்தான் வருவதாக சொல்லிச் சென்றிருந்தாள். சுபத்ரா அன்று வேலைக்குப் போயிருக்கவில்லை. வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக வருணுடன் இரண்டு நாள் “காம்பிங்” போவதாக மிருதுளா தகவல் சொன்னாள். 

கடந்த வாரம் வரைக்கும் அது சுபத்ராவுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஆனால், இப்போது? மிருதுளா சொல்லி முடித்தபோது, மேசையில் நிர்வாணமாக குப்புறக்கிடந்த பெண்ணின் முகம் மின்னல் போல சுபத்ராவின் மனதில் தோன்றி மறைந்தது. அவள் தலையை நிமிர்த்தி கதறிய சத்தம், அடிவயிற்றில் ஒருகணம் அலறி அடங்கியது. மிருதுளாவினை தனது விறைத்த கண்களினால் பார்த்த சுபத்ரா, அதை மறைப்பதற்காக கேத்தல் ஆழியை அழுத்தி, தேநீர் தயார்செய்வதற்கு சமையலறைக்குள் நகர்ந்தாள்.

“உங்களுக்கு என்னம்மா நடந்தது? வேலைக்கும் போகயில்லை. இரண்டு நாளா உடம்பு சரியில்லையாம், அப்பா சொன்னார்.”

பாய்ந்து சென்று அவளைக் கட்டியணைத்து அழவேண்டும் போலிருந்தது சுபத்ராவுக்கு. அவளது கால்களில் விழுந்து இந்தத் திருமணம் வேண்டாம் என்று கெஞ்சிவிடலாமா என்றிருந்தது. விழிகளின் விளிம்புகள் எந்நேரமும் கண்ணீர்த்துளிகளை நெட்டித்தள்ளிவிடத் துடித்தது. 

“இப்பத்தானே அரங்கேற்ற வேலைகளோட பிஸியாக ஓடித்திரிஞ்சனீங்கள். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே”. எதையோ சொல்ல எண்ணிய சுபத்ராவின் மனம், வேறெதையோ புலம்பியது. வருணுடன் தனியாகப் போக வேண்டாம் என்பதை எடுத்துக்கூறுவதற்கு எந்தச் சொற்களும் அவளுக்குள் அகப்படவில்லை. அதைக்கூட மிருதுளாவின் முகத்தைப் பார்த்துப் பேச அவளால் முடியவில்லை. 

“ரெஸ்ட் எடுக்கத்தான் ‘காம்பிங்’ போறம். வருணும் இந்த அரங்கேற்றத்தோட பயங்கரமாக களைச்சுப் போனான். இரண்டு நாளைக்காவது…” – மிருதுளா பேசிக்கொண்டே போனாள். ‘இரண்டு நாள்’ என்பதுதான் சுபத்ராவுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டேயிருந்தது.

மெல்பேர்னிலிருந்து ஒன்றரை மணிநேரம் சென்றால் அல்பைன் தேசியப்பூங்கா. தூய காற்று, அமைதியான பிரதேசம். மனதுக்கு நிம்மதி வேண்டுபவர்கள் இரண்டு நாட்கள் இதைச் சூழ்ந்த ‘காம்பிங்’ பிரதேசங்களுக்குச் சென்று, பிளாஸ்திக் கூடாரம் அமைத்து, தங்கிவருவது வழக்கம். சுபத்ரா இரண்டொரு தடவை லோஜன், மிருதுளா சகிதம் போய்வந்திருக்கிறாள். கூடாரம் அமைத்துத் தங்கும் சாகசங்கள் அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. வாடகைக்கு அறையெடுத்து, குடும்பமாக தங்கி வந்தார்கள். சிறிய அறைதான். மூவர் தங்கிக்கொள்ளும் வசதிகள் தாராளமாக இருந்தன. பெரிய கட்டிலுடன் இணைந்த இன்னொரு சிறிய கட்டில், கேத்தல், தேனீருக்கான பொருட்கள் வைக்கும் மேசை, ஜன்னலுடன் அமைக்கப்பட்ட உல்லாசக் கதிரைகள், வெளியிலுள்ள அடர்ந்த மரங்களுக்குக் கீழே இரும்பு ஊஞ்சல். அங்கிருந்தும் உல்லாசமாக மலைவெளிகளைப் பார்க்கலாம். மரங்கள் உமிழ்ந்துவிடும் மகரந்தக் காற்றினை குடித்து மகிழலாம்.

இவ்வளவு வசதிகள் அங்கிருந்தும், மிருதுளா ‘காம்பிங்’ போகப் போவதாகச் சொன்னவுடன், அந்த அறையிலிருந்த மேசைதான் சுபத்ராவின் நினைவில் தொப்பென்று வந்து விழுந்தது. எச்சிலை விழுங்கினாள். தான் கொஞ்சம் கொஞ்சமாக பைத்தியமாக மாறிக்கொண்டிருப்பது அவளுக்கே புரிந்தது. ஆனால், தனது மகளுக்காக உள்ளே சுரக்கும் வலியின் குமிழ்களை விழுங்கிச் செரித்தாள். அதுவே தனது தேவை என்றும் நம்பினாள். அடிவயிறு முறுக்கியது.

மிருதுளா இதற்கு முன்னர் வருணோடு தனியாக ‘காம்பிங்’ போனதில்லை. ஆக, இது வருண், தான் நினைத்ததைச் செய்து தீர்த்துக்கொள்வதற்கு அவளை அழைத்துச்செல்கின்ற திட்டமிட்ட பயணமா? அல்லது, உண்மையிலேயே அரங்கேற்றத்தினால் அவன் களைத்துப் போய்விட்டானா? தான் ஒரு யாழ்ப்பாணத் தாயாக இவ்வளவு சிந்தித்தால், அவன் தனது மெல்பேர்ன் மருத்துவ மூளையால் எவ்வளவு திட்டம்போட்டிருப்பான்? மிருதுளா விடயத்தில், வருணுக்கும் தனக்குமான போட்டியில், தான் இன்னமும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சுபத்ரா உணர்ந்தாள். அதற்கு தனது தரப்பினை இப்போதைக்கு இரகசியமாகப் பேணுவது தனக்கான பெரும்பலம் என்று நம்பினாள்.

மிருதுளா நீராடச் சென்றுவிட, தனது அறைக்குள் சென்று அல்பைன் தேசியப் பூங்கா பகுதியிலுள்ள ‘காம்பிங்’ பகுதிகளை கூகிளில் தேடினாள். அவற்றைச் சுற்றிலுமுள்ள பொலீஸ் நிலையப் பெயர்கள், வைத்திய சாலைகள், உணவகங்கள் போன்றவற்றை ‘க்ளிக்’ செய்து பார்த்தாள். பிறகு, எதேச்சையாக தனது ‘பேஸ்புக்’ பக்கத்துக்குப் போனபோது, வருணின் அரங்கேற்ற படங்கள், மேடைக்குப் பின்னால் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட ‘செல்பிகள்’ என்று ஏகப்பட்ட காட்சிகள் நிறைந்துகிடந்தன. அநேகமாக ஒவ்வொரு படத்திலும் வருணுக்கு அருகில் மிருதுளா நின்றிருந்தாள். எல்லாப் படங்களிலும் அவனது கைகள் மிருதுளாவை அணைத்திருந்தன. ஒரு கோழிக்குஞ்சு போல அவனது அணைப்புக்குள் அப்பாவியாக மிருதுளா அடைக்கலமாகி இருப்பதைப் பார்த்தபோது, சுபத்ராவுக்கு கணினியில் அடித்து அடித்து அழவேண்டும் போலிருந்தது. அவளை அறியாமல், கன்னத்தில் வழிந்த கண்ணீர் மடியில் விழுந்துகொண்டிருந்தது. கண்களைத் துடைத்தாள்.

படங்களை மூடுவதற்கு அவள் மனம் கேட்கவில்லை. வருணின் கைகள் எங்கெல்லாம் மிருதுளாவை அணைத்திருக்கிறது என்று படங்களைப் பெரிதாக்கிப் பார்த்தாள். மிருதுளாவின் தோளில், இடுப்பில் என்று மிகுந்த அன்போடு அரவணைத்திருப்பது போலத்தான் தெரிந்தது. ஆனால், அதனை அன்புதான் என்று சுபத்ராவினால் நம்பமுடியவில்லை. அந்த வீடியோவில் மேசையின் மீது நிர்வாணமாக கிடந்த பெண்ணையும் யாரோ ஒருவன் இவ்வாறுதானே அன்போடு அணைத்திருப்பான்? அவளும் அந்த அன்பை – அரவணைப்பை நம்பித்தானே அவனோடு சென்றிருப்பாள்? மிருதுளா குளித்து முடிந்து, தலைக்கு ‘ஹீட்டர்’ பிடிக்கும் சத்தம் கேட்டது. சுபத்ரா கணினியை மூடிவிட்டுப் போய் படுத்தாள்.

[3]

தாய்மையின் இயலாமையும், குழந்தையின் காதலும் வெற்றிகொள்கின்ற புள்ளியில் மிருதுளாவை கொஞ்சம் கொஞ்சமாக தான் இழந்துகொண்டிருப்பதை சுபத்ரா உணர்ந்தாள். அதனை மீட்பதற்கு லோஜனை ஒரு துணையாக அழைத்துச்சென்றும் எந்த வெற்றியும் கிட்டப்போவதில்லை என்பதை தீர்க்கமாக தனக்குள் கண்டுகொண்டாள். இனி இதிலிருந்து மிருதுளாவே வென்று வருவாள் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதுதான் ஒரேவழியென்று சுபத்ராவின் புத்தி அவளுக்குள் நொடி ஓயாமல் ஓதியது. ஆனால், உணர்வுகளால் குமிழ்விட்டுக் கொதித்துக்கொண்டிருந்த இதயம் மறுத்தோடியது. ஒவ்வொரு கணமும் அவளுக்குள் வீசியபடியிருந்த தாய்மையின் அனல், மிருதுளாவைச் சுற்றி வளையமாக சுழன்றுகொண்டிருந்தது. அவளை அணைத்தபடி தூங்கவேண்டும் என்பது போலிருந்தது.

அடுத்தநாள் காலை, படுக்கைப்பொதி, காம்பிங்கிற்கு தேவையான உணவுப்பொருட்கள், மாற்றுடுப்புகள் அனைத்தையும் காரில் ஏற்றிக்கொண்டிருந்தாள் மிருதுளா. வெளியில் சென்று பார்த்தபோது இருள் விலகாதது போலிருந்தது. பிரிட்ஜிலிருந்த தண்ணீரை எடுப்பதற்கு வரும்போது “திருநீறு பூசிவிட மறந்திட்டிங்களா?” என்று தானாகவே ஞாபகமூட்டினாள் மிருதுளா. தூர இடங்களுக்கு மிருதுளா தனியாகப் போகும்போது, சிறு வயதிலிருந்து திருநீறைப் பூசிவிடுகின்ற வழக்கத்தைக்கொண்டிருந்த சுபத்ரா, அன்று இயல்பாகவே அதனை மறந்திருந்தாள். மிருதுளா தானாக வந்து அதனைக் கேட்டபோது, எதுவுமே பேசாமல் பூஜை அறைக்குச் சென்று, திருநீறை எடுத்து வந்தாள். தன்னுடம்பு கனன்றுகொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.

மிருதுளாவிற்கு முன்னே வந்து நின்றபோது, அவளின் அருகாமை அவளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. அவளை ஓங்கி அறைந்து அறைக்குள் இழுத்துச்சென்று பூட்டி வைத்துவிடலாமா என்றெண்ணினாள். எல்லாவற்றுக்கும் இன்றொரு முடிவு கட்டிவிடலாமா என்று பார்த்தாள். ஒரு கணம், தான் எவ்வளவு முரண்பாடானவள் என்பதை உணர்ந்தாள். பிறகு, மென்மையான அவள் நெற்றியில், மெல்லிய திருநீற்றுக்குறியை வரைந்தாள். அவளது இமைகளின் மீது உள்ளங்கையை குடைபோலப் பிடித்து, திருநீறை ஊதிவிட்டாள். தன் காற்றுபட்டால் அவளைச் சூழும் தீய சக்திகள் கலையும் என்பதைத் தாண்டி எந்த நம்பிக்கையும் அப்போது சுபத்ராவின் வசமிருக்கவில்லை.

“போன் சார்ஜர் எடுத்தனியா அம்மா?”

“யெஸ்.” – அந்த வார்த்தை ஏதோ நம்பிக்கையாக இருந்தது.

புறப்பட்டுச்சென்ற மிருதுளாவின் கார் ஒரு சிறு பொட்டுபோல தெருமுனையில் மறையும்வரை பார்த்துநின்ற சுபத்ரா, சூனியம் சூழ்ந்திருந்த வீட்டிற்குள் எடையிழந்து நடந்தாள். நேராக பூஜையறைக்குச் சென்று நிலத்தில் அமர்ந்தாள். தன் வயிற்றை வருடினாள். அதனைக் கிழித்து மிருதுளாவை மீண்டும் உள்ளே வைத்துக்கொள்வதற்கு மாத்திரம் ஒரு வழியிருந்தால், தன் குழந்தைக்கு எவ்வளவு பாதுகாப்பு என்பதுபோல வரிசையாக வைக்கப்பட்டிருந்த சுவாமிப் படங்களைப் பார்த்து விம்மினாள். இறுகிய உதடுகள் வெடித்து வாய் நீர் வடிந்தது. தொண்டையில் சிக்கியிருந்த வார்த்தைகளை வெளியில் இழுத்தெடுத்து அழ முடியாமல், அவளது கேவல் அந்த அறையை நிறைத்துக்கொண்டேயிருந்தது. 

“என் பிள்ளைக்கு ஒன்றுமே நடக்கக்கூடாது ஆண்டவா… அவளாக உணர்ந்து அவனிடமிருந்து என்னட்ட திரும்பி வந்திர வேணும்…” 

நனைந்திருந்த தரையில் கண்களை ஒற்றி வழிபட்டாள். வெளியில், சம்பந்தமே இல்லாமல் இராக்குருவியொன்று கத்தியபடி பெட்டூளா மரத்தில் தாவியோடியது.

அடுத்தநாள், மெல்பேர்ன் விநாயகர் ஆலயத்துக்கு பகல்நேரப் பொழுதொன்றில் போன சுபத்ரா, மிருதுளாவின் மீன ராசி, ரேவதி நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தாள். திருநீறை கையில் கொடுக்கும்போது, “பிள்ளைக்கு கல்யாண யோகங்கள் தீர்க்கமாக இருக்கும்” என்றார் விளாத்திகுளம் ஐயர். விநாயகர் ஆலய விளாத்திகுள ஐயருக்கு அங்கு வருகின்ற அத்தனை பேரின் குடும்ப விடுப்புகளும் தெரியும். அவை எல்லாவற்றையும் கூட்டியெடுத்து, அர்ச்சனைகள் – ஆசீர்வாதங்கள் என்று வரும்போது அடித்துவிடுவார். அவற்றை ஆண்டவன் வாக்காக அநேகம்பேர் நம்பி, கோபுரத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வர்.

[4]

‘காம்பிங்’ போய்வந்த மிருதுளா படுக்கையில் வீழ்ந்தாள். உடல் கொதித்தபடியிருந்தது. கொதிநீரில் தலைமுழுகிப் படுத்தவள் முதல்நாள் முழுவதும் நன்கு குறட்டைவிட்டுத் தூங்கினாள். இடையில் மூன்று தடவைகள் சுபத்ராவை தொலைபேசியில் அழைத்திருந்தான் வருண். மிருதுளா நித்திரையால் எழுந்து அழைக்கட்டும் என்று சுபத்ரா தொலைபேசியை எடுக்கவேயில்லை. கடைசியில் வருணின் தாயார் அழைத்தபோது, மிருதுளாவுக்கு ‘பயங்கர காய்ச்சல்’ என்ற தகவலை உடைந்த குரலில் சொன்னாள் சுபத்ரா. வரும்போதே சற்று சுகவீனமாக இருந்தாள் என்றும் தனது மகன் மாத்திரைகள் கொடுத்திருந்தான் என்பதையும் வருணின் தாயார் சொன்னாள். “உன்ர மகன் என்ர பிள்ளையக் கொண்டுபோய் என்னவோ செய்துபோட்டு, குளிசையும் குடுத்து அனுப்பியிருக்கிறான். அதைக் கேக்கிறதுக்கு உனக்கு லாயக்கில்லை. எடுத்து வச்சு விளக்கமோடி தாறாய் வேசை…” என்பதுதான் சுபத்ராவின் இடத்திலிருந்து பேசக்கூடிய எந்தத் தாயினதும் தரமான பதிலாக இருந்திருக்கும். ஆனால், தொலைபேசியில் நடுக்கத்தோடு பதில் சொல்லவும், அந்த உரையாடல் முடிந்தபிறகு, மிருதுளாவுக்கு கேட்டுவிடக்கூடாது என்று பூஜை அறைக்குச் சென்று விம்மல்களை விழுங்கிக்கொள்ளவும் மாத்திரமே சுபத்ராவினால் முடிந்தது.

இரவு இடியப்பமும் சொதியும் வைத்துக்கொண்டு பனடோலுடன் மிருதுளாவின் கட்டிலருகே சென்றாள் சுபத்ரா. குறட்டையொலியில் மிருதுளாவின் உடல் சீராக ஏறி இறங்கியபடியிருந்தது. நெற்றியில் புறங்கையை வைத்துப்பார்த்தாள். கணச்சூடு தெரிந்தது.

சிப்பி போன்ற கண்கள் மிகவும் சோர்ந்து மடிந்திருந்தன. உலர்ந்த உதடுகள் சாதுவாக திறந்திருக்க, மெல்பேர்ன் மொனாஷ் வைத்திய சாலையில் பிறந்தவுடன் பார்த்தது போலவே இன்றைக்கும் தூய உறக்கத்தில் இலயித்திருந்தாள் மிருதுளா. அந்தச் சிறிய கண்களுக்குப் பின்னால் எத்தனை கனவிருந்திருக்கும்? அந்தக் கனவுக்குள் எத்தனை எத்தனை ஆசைகளிருந்திருக்கும்? எல்லாவற்றையும் அவள் நினைத்த திசையில் கைகாட்டி அழித்துவிட்டோமோ என்று சுபத்ரா மீண்டும் மீண்டும் வருந்தினாள். என்ன நடந்துவிட்டது என் பிள்ளைக்கு? கண்ணீரைத் துடைத்தபடி சற்று நிதானமாக சிந்தித்தாள். மிருதுளாவுக்கு உண்மையில் என்னதான் நடந்திருக்கும் என்பதை தானறியாவிட்டால், வேறு யாராலும் அறிய முடியாது என்றெண்ணினாள். சற்றுநேரம் கண்களை மூடி யோசித்தாள். 

‘இவள் என் கைகளில் நான் வளர்த்த குழந்தை. என் கைப்பட உடலெங்கும் அழுக்கெடுத்து குளிப்பாட்டி விடப்பட்டவள். உடலின் ஒவ்வொரு இடத்திலும் எங்கு மடிப்பிருக்கிறது, எங்கு மச்சமிருக்கிறது என்பதை எண்ணி எண்ணி, ஒப்பனையிட்டு அழகுபார்த்த ஆச்சரியம் இவள். இவளுக்காகவே இனி வேறு குழந்தை வேண்டாம் என்று ஒற்றைச் சித்திரமாக வரைந்தெடுத்த அதிசயம் இவள். பருவமடையும் வரைக்கும் ஏன் இப்போதும் அவ்வப்போது என் முன்னாலேயே உடை மாற்றுபவள்.’

எண்ணங்கள் அருவியாக கண்ணீரோடு சேர்ந்து கரைந்தோடிக்கொண்டிருந்தன. 

மெதுவாக மிருதுளாவின் அருகில் சரிந்து படுத்த சுபத்ரா, அவளது ரீசேர்ட்டை மெதுவாக உயர்த்தினாள். உள்ளாடை அணியாத மார்பகங்களை நியோன் மேசை விளக்கு வெளிச்சத்தில் தன் கண்களை அருகில் கொண்டுசென்று பார்த்தாள். குறட்டையில் அவளுடல் தொடர்ந்து ஏறி இறங்கியபடியிருந்தது. மெதுவாக முலைக்காம்புகளை விலத்தி நெஞ்சின் நடுவில் ஏதாவது அடையாளங்கள் தெரிகிறதா என்று நெற்றியைச் சுருக்கிப் பார்த்தாள். சுபத்ராவின் நெற்றித்திருநீறு சொரிந்து அவளுடலில் விழுந்தது. நெஞ்சு தொடர்ந்து அதிர்ந்தபடியிருந்தது. சற்றுகீழே இறங்கியவள், பிஜாமாவை மெதுவாக கீழே தள்ளினாள். தொடைகளுக்கு கைகளை ஆழமாக கொண்டுசென்று தடித்திருக்கிறதா என்று தடவிப் பார்த்தாள். தன் விரல்களுக்கு அவளுடலிலுள்ள எந்த மாற்றமும் தெரிந்துவிடும் என்ற ஆழமான நம்பிக்கை சுபத்ராவுக்கு இருந்தது. குழப்பத்தோடு பிஜாமாவை மேலிழுத்துவிட்டாள். 

மிருதுளாவின் குறட்டை சீராக ஒலித்தபடியிருந்தது. சுபத்ராவுக்கு அந்த மேசை விளக்கின்மீது அவ்வளவாக நம்பிக்கையில்லாவிட்டாலும் தனது கைகளை நம்பியிருந்தாள்.

பக்கத்து மேசையிலிருந்த அவளது தொலைபேசிக்கு வருண் அழைத்துக்கொண்டிருந்தான். ஆனால், தொலைபேசி சைலண்டிலிருந்த காரணத்தினால், திரை வெளிச்சத்தில் அவனது புகைப்படம் சிரித்தபடி தெரிந்தது. தான் செய்தது எதையும் சுபத்ரா கண்டுபிடிக்கவில்லையே என்பதுபோல தொலைபேசியில் தெரிந்த வருணின் புகைப்படம் சுபத்ராவைப் பார்த்துச் சிரித்தது. கோபம் பொங்கி வந்தது. வேகமாக எழுந்து சென்று தொலைபேசியை கவிழ்த்து வைத்தாள்.

வேலையிலிருந்து வந்த லோஜன் அப்போதுதான் குளித்து முடித்துவிட்டு சாப்பாட்டு மேசைக்கு வருவது வெளியில் கேட்டது. 

பரிமாறுவதற்காக மிருதுளாவின் அறையிலிருந்து வெளியில் வந்த சுபத்ராவிடம் “மகள் நித்திரையா?” என்றான். உள்ளே செய்துவிட்டு வந்த காரியத்தின் குற்றவுணர்ச்சி, சுபத்ராவுக்கு லோஜனை ஏறெடுத்துப் பார்க்கத் தடுத்தது. என்ன பதிலளிப்பது என்று யோசிப்பதற்குள் – 

“அண்டைக்கு பிரிண்ட் எடுக்கிறதுக்கென்று என்ர யு.எஸ்.பி. ஸ்டிக் ஒண்டை மிருதுளா வாங்கினவள், உன்னட்ட தந்தவளா?” என்றான் லோஜன்.

தன்னைச் சுற்றி இருள் படர்வதைப் போலுணர்ந்த சுபத்ரா, நிலைகுலைந்து லோஜனை நோக்கித் தடுமாறி விழ, இடியப்பத் தட்டில் கைவைத்த லோஜன், அப்படியே சுபத்ராவை நோக்கி ஓடிவந்தான். அவ்வளவுதான் சுபத்ராவுக்கு ஞாபகம். 

கண்விழித்தபோது, மிருதுளாவின் மடியில் கிடந்த சுபத்ராவுக்கு திருநீறைப் பூசிவிட்டபடி “அம்மா…” என்றாள். 

அன்றிரவு மிருதுளாவின் அறையில் தூங்கச்சென்ற சுபத்ராவுக்கு, பக்கத்து அறையில் கேட்டபடியிருந்த லோஜனின் குறட்டை இருபது வருடங்களில் முதன்முதலாக வித்தியாசமாக ஒலித்தது. அந்தச் சத்தத்தின் அலைவரிசையில் லோஜன் எழுந்து, அந்தரத்தில் சுபத்ராவை நோக்கி மிதந்து வருவது போலவுமிருந்தது. சிரிப்பிலும் உருவத்திலும் முற்றிலும் வித்தியாசமானவனாகத் தெரிந்தான். அச்சமூட்டினான். அணைப்பதற்காக விரிந்த அவன் கரங்களிலிருந்து தப்பியோட முடியாமல், சுபத்ரா தரையோடு தன்னை வேகமாகப் பின்தள்ளியபடி விம்மினாள். மிருதுளாவின் குறட்டைச் சத்தத்தையும் மீறி தனது இதயம் அதிரும் சத்தத்தைக் கேட்டாள்.

வருணை மாத்திரமல்ல, லோஜனையும்கூட தான் இவ்வளவு காலத்தில் புரிந்திருக்கவில்லை என்பதை இந்த இரவு எப்படி தன்னை நம்பச்சொல்கிறது என்று இருளில் விழிபிதுங்கிக் கிடந்தாள். தன்னைத்தானே ஒரு பொய்யான பிறப்பென்று நம்பவேண்டும் போலிருந்தது அவளுக்கு. தன் உடல் வெறும் உதிரத்தை நிரப்பிய தசைத்தொகுதி மட்டும்தானா என்ற கேள்வி புழுக்களாக கால் வழியாக ஏறிக்கொண்டிருந்தது. இருபது வருடங்களாக குடும்பம் நடத்தியவனின் ஒரு சிறு ஸ்பரிஸத்தில்கூட அவனது உள்மன வேட்கையைப் புரிந்திருக்கவில்லை என்பதை எண்ணும்போது, இப்போதே ஓடிச்சென்று வருணின் கால்களில் விழுந்து கதற வேண்டும் என்பது போலிருந்தது. குறிப்பறிந்த இராக்குருவியொன்று இப்போதும் வெளியில் சடசடத்தபடி பறப்பது இருளின் அச்சத்தை இன்னமும் கூட்டியது. உடலின் அத்தனை புலன்களிலிருந்தும் விலகி, இதயம் தனித்து துடித்துக்கொண்டிருந்தது. 

அவளை அறியாமலேயே அவள் விரல்கள் அவளது மார்பின் மீது வருடியபடி எதையோ தேடின.