கடந்த ஐம்பது நாட்களாக தில்லியின் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு, உழவர்கள் நடத்திவரும் போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதற்கு முன்பு, மராத்திய மாநிலத்தில் நடந்த 150 கிலோமீட்டர் தூரம் மக்கள் கால்நடையாகச் சென்ற பேரணியும் முக்கியமான ஒன்று எனினும், அது சில நாட்களில் நடந்து முடிந்துவிட்டது.
இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடக்க முக்கியக் காரணம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள உழவர்களும், உழவர் சங்கங்களும் ஒன்றிணைந்து, 3-4 மாத போராட்டத்துக்கான மனநிலையுடனும், உணவு, படுக்கை போன்ற முன்னேற்பாடுகளுடனும் வந்ததுதான். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாப், ஹரியானா உழவர்கள் ஓரளவு வசதியானவர்கள் என்பதும், இந்தச் சட்டங்கள் அவர்களை நேரிடையாக பாதிக்கலாம் என்னும் அச்சமும் இதர காரணங்கள்.
ஆனால், இந்தப் போராட்டங்கள் இந்த மூன்று சட்டங்களை மட்டுமே எதிர்த்து நடக்கிறதா என்றால் ‘ஆம்’ என ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாது. இதன் உண்மையான காரணங்கள், இந்தச் சட்டங்கள் பேசும் தளத்திற்கும் அப்பாற்பட்டவை. இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் வேளாண்துறை எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் அவை. அரசின் மூன்று சட்டங்களும், ஏற்கனவே நீறுபூத்த நெருப்பாக இருந்த பிரச்சினையை ஊதி, கொளுந்துவிட்டு எரியச் செய்துவிட்டன.
வேளாண் துறையின் அடிப்படைச் சிக்கல்கள்:
தேவேந்தர் ஷர்மா என்னும் வேளாண் பொருளியல் நிபுணர் பசுமை விகடனுக்கு சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், வேளாண்துறை, குறிப்பாக இந்திய வேளாண்துறை, சந்திக்கும் சிக்கல்களை மிக விரிவாக ஆராய்ந்து முன்வைத்தார்.
அவர் வைக்கும் முதல் வாதம் – மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், பொருளியல் பரிவர்த்தனைகளில் (terms of trade) வேளாண்துறை பின்தங்கி விட்டது. எடுத்துக்காட்டாக, 1970ஆம் ஆண்டு துவங்கி, அடுத்த 45 ஆண்டுகளில் வேளாண் வருமானமும் மற்ற துறை வருமானங்களும் எப்படி உயர்ந்தன என்னும் ஒப்பீட்டை தேவேந்தர் முன்வைக்கிறார்.
1970ஆம் ஆண்டு, கோதுமையின் அடிப்படை விலை குவிண்டாலுக்கு 76 ரூபாய். 2015ல், அது 1450 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 19 மடங்கு உயர்வாகும். இதே காலகட்டத்தில், அரசு ஊழியர்களின் ஊதியம் 120-150 மடங்கு உயர்ந்துள்ளது. கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் 170 மடங்கும், பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 320 மடங்கும் உயர்ந்திருக்கிறது. 40-50 ஆண்டு கால வெளியில் உழவர்கள் ஒப்பீட்டளவில் வருமானம் மிகக் குறைந்து. இன்று எண்பது சதவீதத்திற்கும் அதிகமான உழவர்கள் நட்டத்தில் வேளாண்மை செய்துவருகிறார்கள். இதுதான் ஆதாரப் பிரச்சினை என்கிறார் தேவேந்தர்.
இந்தப் புள்ளிவிவரத்தைச் சொன்னவுடனேயே மரபார்ந்த வேளாண் பொருளியல் நிபுணர்கள் ஓடிவந்து முன்வைக்கும் தீர்வுகள் என்ன? இந்தியாவின் வேளாண் அலகுகள் மிகச் சிறியவை. அதனால் உழவர்களால் உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை. அதனால், வேளாண்மை இலாபகரமாக இல்லை. எனவே, வேளாண் வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பெரும் வேளாண் பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும். அதை அரசு செய்ய முடியாது. எனவே தனியார் இதில் அனுமதிக்கப்பட்டு, முதலீடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தி பெருகும். வேளாண்மை இலாபகரமாக மாறும் என்பது அவர்கள் தீர்வு.
இந்தத் தீர்வு எவ்வளவு உண்மை என்பதை, உலகின் மிகப்பெரும் முதலாளித்துவ நாடான அமெரிக்கா இதே கொள்கையை 50 ஆண்டுகளுக்கு முன்பு முன்னெடுத்ததை வைத்து புரிந்துகொள்ள முயல்வோம்.
1970-களின் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் வேளாண்துறை ஆலோசகர் எர்ல் பட்ஸ், அமெரிக்க வேளாண் பண்ணைகள் பெரியதாக வேண்டும் – ‘பெரிதாகு, இல்லையே வெளியேறு’ என்னும் கருதுகோளை முவைத்தார். அப்போதுதான், தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரித்து, உற்பத்தி பெருகி இலாபம் அதிகரிக்கும் என்பதே அந்தக் கருதுகோளின் அடிப்படை. அதன் விளைவுகளைக் காண்போம்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 60 இலட்சம் பண்ணைகள் இருந்தன. சராசரி வேளாண் அலகு, 200 ஏக்கராக இருந்தது. 60-களுக்குப் பின்பு, இந்த அலகுகள் பெரிதாகி, இன்று 440 ஏக்கர் என உயர்ந்திருக்கிறது. 60 இலட்சம் பண்ணைகள் என்னும் எண்ணிக்கை இன்று 15 இலட்சமாக குறைந்திருக்கிறது.
வேளாண் பொருள் உற்பத்தி 4-5 மடங்கு பெருகியிருக்கிறது. உலகின் மிகப்பெரும் மக்காச் சோளம், சோயா பீன்ஸ் உற்பத்தியாளர் அமெரிக்கா.
ஆனால், வேளாண் வருமானம் பெருகவில்லை. இன்றைய அமெரிக்க வேளாண் வருமானத்தை, பண வீக்க அளவை நீக்கிப் பார்க்கையில், 1970-களில் இருந்து தொடர்ச்சியாக வருமானம் வீழ்ந்துகொண்டேயிருக்கிறது. 2006-க்குப் பின் வருமானம் உயர்ந்தது என்றாலும் 1970-களின் அளவை இன்னும் அடையவில்லை.
1970-களில், அமெரிக்காவில் 6.5 இலட்சம் பால் பண்ணைகள் இருந்தன. 1980-களில், சராசரியாக 90 மாடுகள் இருந்த பால்பண்ணை, இன்று 900 மாடுகளாக உயர்ந்துள்ளது. இன்று 75 ஆயிரம் பால் பண்ணைகள் உள்ளன. அவற்றுள் 40 ஆயிரம் பண்ணைகள் நஷ்டத்தினால் மூடப்பட்டுவிட, இன்று இயங்கிக்கொண்டிருப்பவை 35 ஆயிரம் மட்டுமே.
2013ஆம் ஆண்டுக்குப் பின்பு, 50% வேளாண் பண்ணைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் வேளாண்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் 26 இலட்சம் பேர் (மக்கள் தொகையில் 0.8%). அமெரிக்காவின் சராசரி வேளாண் பண்ணையின் அளவு 440 ஏக்கர்கள். அமெரிக்காவில் வேளாண்மை, அதன் பொருளாதாரத்தில் 0.6% மட்டுமே பங்களிக்கிறது. அமெரிக்கா உழவருக்கு வழங்கும் மானியம்- ஒருவருக்கு வருடம் 44 இலட்ச ரூபாய் (62,000 டாலர்).
இந்தியாவின் சராசரி வேளாண் அலகு 2.5 ஏக்கர். இதில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தொகை கிட்டத்தட்ட 65 கோடி (மக்கள் தொகையில் 50%). இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு 15%. 1950களில் இந்திய தானிய உற்பத்தி 51 மில்லியன் டன். இந்த ஆண்டு உற்பத்தி 300 மில்லியன் டன். சராசரி இந்திய உழவர் பெறும் மானியம் வருடம் 20 ஆயிரம் ரூபாய். இந்திய உழவர்களில் 80% பேர் நஷ்டத்தில் இயங்கிவருகிறார்கள்.
அமெரிக்காவில் ‘பெரிதாகு, இல்லையேல் வெளியேறு’ என்னும் முழக்கத்துடன் பெரும் வேளாண்/பால் பண்ணைகள் உருவாகி வந்த அதே காலகட்டத்தில், வால் மார்ட் போன்ற சில்லறை விற்பனை வணிகச் சங்கிலிகள் உருவாகிவந்தன. இவை பெரும் அளவில் வேளாண் பொருட்களை உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும். இதனால், உற்பத்தி சரியான உணவுத் தொடர்புச் சங்கிலிகள் வழியாக நுகர்வோரை அடையும். பெரும் அளவிலான கொள்முதல், பெரும் பொருளியல் அலகுகள் ஆகியவை இணையும் போது உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்னும் கருத்தியல் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அந்தப் பெரும் சில்லறை வணிகக் குழுமங்கள், பெரும் அலகு கொள்முதல் என்னும் அதிகாரத்தை உபயோகித்து, கொள்முதல் விலைகளைக் குறைத்து, தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொண்டன. உற்பத்தியாளர் வேறு, கொள்முதலாளர் வேறு என்னும் நிலையில், யாரிடம் பொருளைக் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு அளிக்கும் தொடர்புச் சங்கிலி உள்ளதோ, அவரே, அந்தப் பலத்தை முன்னிறுத்தி, பொருளாதார பேர மேசையில் இலாபத்தை அடைவார் என்பதே உண்மை. அதுவே நடந்தது.
இந்த சமநிலையில்லாப் பேரக் கட்டமைப்பில், நுகர்வோர் பொருட்களை வாங்கும் விலையில், மிகக் குறைவான சதவீதத்தையே உற்பத்தியாளர்கள் பெற முடிந்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், பால் பொருட்களுக்கு நுகர்வோர் வாங்கும் விலையில், 28-30% வரையே உற்பத்தியாளர்களைச் சென்றடைகிறது.
இந்தியாவில் ஒப்பீட்டளவில் அரசின் தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க தனியார்கள் மூலமாகச் சந்தைப்படுத்தப்படும் பொருட்களில் இந்தப் பிரச்சினை உள்ளது. எடுத்துக்காட்டாக மஞ்சள் போன்ற வர்த்தகப் பொருட்களில், நுகர்வோர் வாங்கும் விலையில் 30-32% மட்டுமே உற்பத்தியாளருக்குச் செல்கிறது.
1939ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசம், பிரார் பிராந்தியத் தொழிற்துறைப் பொருளியல் ஆய்வறிக்கையில், பணம் என்னும் பொருள் பொருளாதாரத்தின் எல்லாப் பரிமாற்றங்களின் அடையாளமாக மாறுவதன் எதிர்மறை விளைவுகளை குமரப்பா எடுத்துரைக்கிறார். ஒரு கச்சாப் பொருள், பல தேசங்களைக் கடந்து, உற்பத்தித் தொழிற்சாலைகளை அடையும் ஒரு தொழில்முறையில், ஒரு இன்றியமையாத கண்ணியாகிவிடுகிறது பணம். கச்சாப் பொருள் ஒரு நாட்டில் உற்பத்தியாகி, பல நாடுகள் கடந்துசெல்லும் தொழில்முறையில், உள்ளூர் உற்பத்தியாளர் என்பவர், வெளிநாட்டு நிறுவனத்துக்காக கொள்முதல் செய்யும் வணிகரின் தயவில் வாழ நேரிடுகிறது. கொள்முதல் செய்பவரிடம் இருக்கும் பணமும், உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பும் ஒரே அளவாக இருந்தாலும், பேர மேசையில், கொள்முதல் செய்பவரின் பணம், அதிக அதிகாரம் கொண்டதாக இருக்கிறது என்கிறார் குமரப்பா. இந்த நிலை, உள்ளூரில் உற்பத்தியாகி, வணிகர்கள் மூலமாக சந்தையையும் நுகர்வோரையும் அடையும் இந்தியத் தொழிற்கண்ணிகளிலும் உள்ளதுதான்.
குமரப்பாவின் இந்தக் கருதுகோள் மிக முக்கியமான ஒன்றாகும். மரபார்ந்த பொருளியல் அறிஞர்கள், இதுபோன்ற புள்ளிகளில் இருந்து தேற்றங்களையும் தொழில்திட்டங்களையும் பொதுவெளியில் விவாதிப்பதில்லை. இந்தப் புள்ளியில் இருந்து, சமீபத்தில் அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்கள் வழியாக, தனியார் துறை பெரும் நிதியின் பலத்தோடு வேளாண் தொழிற்சங்கிலியில் பங்குபெறுவதை நோக்கினால், பேர மேசையில் யார் கை ஓங்கியிருக்கும் என்பதையும் ஏன் உழவர்கள் இதைச் சந்தேகப்படுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
கொற்கை நாவலில், துவக்கத்தில், தலைச்சுமையாக கருவாட்டைக் கொள்முதல் செய்ய வணிகர்கள் (நாடார்கள்) வருகிறார்கள். மீனவர்களின் தயவினால், தொழிலை நிலைநிறுத்திக்கொண்டு, காலப்போக்கில், மீனவர்களின் உற்பத்தியைக் கொள்முதல் செய்யும் அதிகாரத்தினால், வணிகர்கள் செல்வந்தர்களாக மாறுகையில், மீனவர்கள் பொருளாதாரப் பலம் குறைந்து கீழே சென்ற சரித்திரத்தை மிக அழகாக ஜோ டி குரூஸ் சொல்லியிருப்பார்
குமரப்பா முன்வைத்த இன்னொரு முக்கியமான குறிக்கோள்- உற்பத்தியாகும் பொருள், நுகர்வோரை அடையும் வணிகச் சங்கிலியில், மிக அதிகமாகப் பொருளியல் மதிப்புக்கூட்டும், நுகர்வோருக்கு மிக அருகில் இருக்கும் கண்ணிதான் மிக அதிகப் பொருளாதாரப் பயனை அடையும் என்பதாகும்.
இதன் பின்னணியில், இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வரும் கூட்டுறவுப் பால் உற்பத்தி முறையை அணுகினால் சில புதிய திறப்புகள் கிடைக்கும். இன்று இந்தியாவில் நுகர்வோர் பால் பொருட்களை வாங்கும் விலையில் 70% உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கிறது. அதுவும் சீராக, வாரா வாரம் அவர்கள் வங்கிக் கணக்கைச் சென்றடைகிறது. இந்திய விவசாய விளைபொருட்களில், பாலில் மட்டும்தான் ஓரளவு கட்டுபடியாகும் விலை உற்பத்தியாளருக்குக் கிடைக்கிறது. இந்தத் துறைக்கு அரசாங்கம் மானியமாகச் செலவழிக்கும் நிதியும் உணவு தானியங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவு. கூட்டுறவுப் பால் தொழில்முறை, உற்பத்தியாளருக்கு மேம்பட்ட வகையில் பலனளிக்கும் அதே சமயத்தில் அரசுக்கும் மானிய பாரத்தைக் குறைக்கிறது. இந்த முறையில், உற்பத்தியிலிருந்து நுகர்வோர் இல்லம் அடையும்வரை எல்லாத் தொடர்புச்சங்கிலிக் கண்ணிகளையும், உற்பத்திசெய்யும் நிறுவனமே உருவாக்கி நிர்வகிக்கிறது.
வழக்கமான வணிகத் தொடர்புச்சங்கிலிகளில், ஒவ்வொரு கண்ணியும், தான் செய்யும் செயலுக்கான இலாபத்தையும், பொருளின் விலையில் சேர்த்துக்கொள்ளும். ஆனால், பால் வணிகத் தொடர்புச்சங்கிலியின் எல்லாக் கண்ணிகளுமே ஒரே நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கையில், இடைத்தரகர்கள் இலாபம் விலக்கப்பட்டு, உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒரு நியாயமான விலைப் புள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவுகள் மூலமாக, இந்தியாவில், பால் தொழிலில் வெற்றிகரமாக நிகழ்ந்தது இதுதான்.
இந்தப் பால் கூட்டுறவு இருந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் குளிர் காலத்தில், நுகர்வோருக்கு, பால் மிக மலிவாகவும், உற்பத்தி குறைவாக இருக்கும் கோடை காலத்தில், அதீத விலையிலும் கிடைத்திருக்கும். தன் பொருளை விற்க முடியாமல், குளிர்காலத்தில், உற்பத்தியாளர் உற்பத்திக்கு மிகக் குறைவான விலையைப் பெறுவார். கோடை காலத்தில், நல்ல விலை கிடைக்கும் சூழல் இருந்தும், உற்பத்தி குறைவாக இருப்பதால் அப்போதும் அவருக்குப் பெரிதாக நன்மை கிடைக்காது. தக்காளி போன்ற காய்கறிகளில் நிகழ்வதை நாம் கண் முன்னே பார்க்கிறோம் அல்லவா?
இந்தப் பிரச்சினையை பால் உற்பத்திக் கூட்டுறவுகள் எப்படித் தவிர்க்கின்றன? அதிக பால் உற்பத்திக் காலங்களில், உபரிப் பாலை, பால் பொடியாக மாற்றி வைத்துக்கொள்கின்றன. உற்பத்தி குறைவான காலத்தில், பொடியை மீண்டும் பாலாக்கி விற்கின்றன. எனவே பால் கொள்முதல் விலையும் சரி, விற்பனை விலையும் சரி, வருடம் முழுதும் சீராக இருக்கின்றது.
இந்திய வேளாண்மையின் மிக முக்கியமான பகுதி உணவுப் பொருள் உற்பத்தியும் இறையாண்மையுமாகும். அதில் 50% மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். பெரும்பாலானவர்கள் (80%) சிறு உற்பத்தியாளர்கள். எனவே, இந்தச் சிறு உற்பத்தியாளர்கள், பொருளாதார ரீதியில் நலமாக இயங்குதல் இந்திய நாட்டின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புக்கு இன்றியமையாதது.
இன்று சட்டங்கள் மூலமாக இந்திய அரசு முன்னெடுக்க விரும்பும் தனியார்துறை முறை, கடந்த 50-60 ஆண்டுகளாக, அமெரிக்கா போன்ற முதலாளித்துவப் (சுதந்திரச் சந்தை?) பொருளியல் அமைப்பிலும் தோல்வியைத்தான் கண்டுள்ளது.
அதே சமயத்தில், சிறு உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோரின் நலனையும் ஓரளவு சமநிலையில் நிறுத்தி வெற்றி பெற்றுள்ள, இடைத்தரகர் இல்லாத, உற்பத்தியாளர் வயலிலிருந்து நுகர்வோர் உணவு மேசைக்குச் செல்லும் பால் உற்பத்திக் கூட்டுறவு என்னும் முழுமையான இந்தியத் தொழில்முறையும் நம் முன்னே உள்ளது.
அங்கும் இங்கும் பாதை உண்டு. இன்று நாம் எந்தப் பக்கம்?
*
இந்தக் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் தமிழ் இந்துவில் வெளியானது.
1 comment
விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போவதற்கு முக்கிய காரணம் சரக்கு கட்டணம்தான். காய்கறிகள் போன்ற குறைந்த விலையுள்ள, கெட்டுப்போக அதிக வாய்ப்புள்ள பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு விலை கிடைப்பதில்லை. உபயோகிப்பாளர்களுக்கு பொருளே கிடைப்பதில்லை.
இந்தியா முழுவதும் குறைந்தபட்சம் பத்தாயிரம் கிலோமீட்டர்களுக்கு நான்குதடங்கள் இருப்புப்பாதைகளும் , அதிஉயர்சக்தி கொண்ட இரயில் என்ஜின்களும் இருந்தால் மட்டுமே விவசாயிகள் நட்டமடைய மாட்டார்கள்.
Comments are closed.