தல்ஸ்தோய் மறைந்து சரியாக நூற்றிப்பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் உலக அரங்கில் மானுட குலத்தின் மீது அவரது பாதிப்பு என்னவென்று ஆராய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். 2010-இல் உலகம் முழுவதும் அவர் மறைந்து நூறாண்டுகள் சென்றதையொட்டி அவரது படைப்புகள் குறித்து மீண்டுமொரு பெரிய கவனம் எழுந்தது. அவரது வாழ்க்கையின் கடைசி நாட்களைக் காட்சிப்படுத்தும் ‘The Last Station’ என்கிற திரைப்படமும் வெளிவந்தது.
1910ஆம் ஆண்டு ருஷ்யாவின் நல்ல பனிக்காலத்தில் வயோதிகர் ஒருவர் தனது வீட்டிலிருந்து வெளியேறி ஒரு சிறிய ரயில் நிலையத்தில் காத்திருந்தார். நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதும் தந்திகள் மூலம் அவரது உடல்நிலையைப் பற்றி தங்கள் செய்தி நிறுவனங்களுக்கு அறிவித்துக்கொண்டிருக்க, இன்னொரு புறம் ஒரு படப்பிடிப்புக் குழு எங்கிருந்தோ வந்து தங்களது சிறிய காமிராவில் அங்கு நடப்பவற்றையெல்லாம் படம் பிடித்துக்கொண்டிருக்க, ஒருவரது மரணத்துக்குப் பிறகு எஞ்சுவது என்ன என்று தனது வாழ்க்கையின் பெரும்பகுதியும் சிந்தித்துக்கொண்டிருந்த ஒருவர் இறந்துபோனார். விஷயம் கேட்டு விரைந்துவந்த மனைவியை அவர்கள் அவரைப் பார்க்கவிடவில்லை. கண்ணாடிச் சன்னலின் மீது படிந்த பனிப்புகையைத் துடைத்தபடி உள்ளே கிடத்தப்பட்டிருக்கும் தனது கணவரை அவர் பார்க்க முயலும் காட்சி காமிராவில் பதிவாகியிருக்கிறது.
தல்ஸ்தோயின் மகன் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டும் ருஷ்ய திருச்சபை அவரது உடல் அடக்கத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆனால் அவர்களது அங்கீகாரம் தன் வாழ்நாளின் போது அவருக்குத் தேவைப்படாதது போலவே இறப்பிலும் தேவைப்படவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் பின்தொடர அவரது உடல் அவரும் அவரது சகோதரர்களும் இளமையில் விளையாடிய தோட்டத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புதைக்கப்பட்டது. அவரது சவ ஊர்வலம் சென்ற வழியில் நின்றிருந்த காவலர்கள்கூட மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்கள் என்று நேரில் கண்டவர்கள் சொல்கிறார்கள். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என ஒரு பெரிய கூட்டமே ருஷ்யாவில் இறுதி ஊர்வலங்களில் பாடப்படும் ‘eternal memory‘ என்ற பாடலைப் பாடியபடி சென்றது. அவர்களைக் கட்டுப்படுத்த வந்த சார் மன்னரின் படைகளையும் அதட்டிப் பாட வைத்தது.
ஆனால் இதன் பிறகோ இதற்கு முன்போ அவரது மனைவி சோபியா தல்ஸ்தோயின் சீடர் ஒருவரிடம், “நீங்கள் எல்லாம் அவர் ஒரு கிறிஸ்து என்று நினைக்கிறீர்கள் இல்லையா? இல்லை” என்று சொன்னதும் பதிவாகியிருக்கிறது.
நான் மேற்சொன்ன தல்ஸ்தோய் நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் மெளனமாக இருந்த ஒரே நாடு அவர் பிறந்த நாடான ருஷ்யா. இன்றைக்கு ருஷ்யா அவரைச் சலிப்புடன் நினைவுகொள்கிறது அல்லது நினைவுகொள்வதே இல்லை. இன்றைக்கு அவரை அதிகம் நினைத்துக்கொள்கிறவர்கள் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் இந்தியர்களுமே. அமெரிக்க செனேட்டர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டுகிற நபராக தல்ஸ்தோய் இருக்கிறார். சமீபத்தில் ருஷ்யா சென்ற இந்தியப் பிரதமர் மோதிகூட தல்ஸ்தோய் – காந்தி தொடர்பு பற்றிப் பேசினார். ஆனால் புதினின் பேச்சில் தல்ஸ்தோய் பெரும்பாலும் இடம்பெற்றதே இல்லை. தன் அரசியல் வாழ்வின் பின்பகுதியில்தான் மிகத் தயக்கத்துடன் அவர் தல்ஸ்தோயின் நினைவு இல்லத்துக்குச் சென்றார். ருஷ்யத் தனித்துவம் பற்றியும் மேன்மை பற்றியும் பேசிய தாஸ்தாவ்யெஸ்கியை நினைவுகூர்வதில் அவருக்குப் பிரச்சனை அதிகமில்லை. ஏனெனில், தல்ஸ்தோய் பேசிய உலகளாவிய மானுட நேயத்துக்கான சிறந்த இடமாக ருஷ்யா இப்போது இல்லை.
ருஷ்ய இளைய தலைமுறையும் தல்ஸ்தோயைவிட தாஸ்தாவ்யெஸ்கியைத்தான் சிறந்த எழுத்தாளராக நினைக்கிறது. அங்கு மட்டுமில்லாது உலகம் முழுக்க உள்ள தீவிர இலக்கிய வாசிப்பாளர்களிடம் தாஸ்தாவ்யெஸ்கியே நுட்பமானவர் என்கிற கருத்து உண்டு. நபகோவ் மட்டும் விதிவிலக்கு. தல்ஸ்தோய், இலக்கியமல்லாத வேறு காரணங்களால் தாஸ்தாவ்யெஸ்கியை மறைத்துவிட்டார் என்கிறார் ஃபிரெஞ்சு எழுத்தாளரான André Gide.
ஆனால், அவரது வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களில் ஒருவர், தல்ஸ்தோய் இல்லையேல் மகாத்மா காந்தியோ மார்ட்டின் லூதர் கிங்கோ நெல்சன் மண்டேலாவோ ஆர்ச் பிஷப் டூட்டுவோ சரித்திரத்தில் நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை என்கிறார். அது ஒருவகையில் உண்மைதான். தாஸ்தாவ்யெஸ்கியின் இலக்கியம் இலக்கியத்தின் சிறிய எல்லைக்கு வெளியே இருக்கும் பெரிய உலகில் எந்தப் பாதிப்பையும் செலுத்தவில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் யாரையும் நேர்மறையான செயலுக்கு ஊக்குவிக்கக் கூடியதாக இல்லை. அரசு எதிர்ப்புப் பிரசுரங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தன்னை நான்கு வருடம் சைபீரிய கொடுஞ்சிறைக்குத் தள்ளி மரண தண்டனைக்கும் உத்தரவிட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்த சார் மன்னருக்கும் ருஷ்ய திருச்சபைக்கும் ஆதரவாக கடைசிவரை அவர் இருந்தார். ருஷ்யாவில் அப்போது நடந்துவந்த பல்வேறு சீர்திருத்தங்களுக்கான எதிர்ப்புக் குரல்களைக் கடுமையாக கேலிசெய்து அவர் தனது பத்திரிகையில் எழுதியது அவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் போலவே விளங்கிக்கொள்ளவே முடியாத புதிர்களில் ஒன்றாகும்.
தல்ஸ்தோயைப் போலல்லாது அவர் ஒரு முழுக்கலைஞன் என்பதை நினைவுகொண்டால் ஒருவேளை சார் மன்னருக்கு அவர் தொடர்ந்து மன்னிப்புக் கடிதங்களாக எழுதிக்கொண்டிருந்தது ஏன் என்றும் புரியலாம். அவரது அகம் பல கலைஞர்களைப் போலவே மெல்லிய வலிக்கும் குழைவது. அவரால் அவரது புறச்சூழல்களிலிருந்து மேலெழ முடியவில்லை. அதற்கான பழியை அவர் மீது முற்றிலும் சுமத்திவிடவும் முடியாது. அவர் மீது விடாது கவிந்துகொண்டிருந்த சுமைகளும் பொறுப்புகளும் துயரங்களும் நோய்மைகளும் அதற்கான ஆற்றலை அவர் அடைந்துவிடாமல் பார்த்துக்கொண்டன. அடிக்கிற கையிடமே சரணடந்துவிடுவது போல அவர் தன்னை ஒடுக்கிக்கொண்டிருந்த விசைகளின் காலடியிலேயே சென்று வீழ்ந்தார். மானுடர்களில் பெருந்திரள் அப்படித்தான் செய்கிறது. ஆனால் ஒரு கலைஞன் அவ்வாறு செய்கிறபோது மண்ணிலும் விண்ணிலும் ஒரு நீண்ட பெருமூச்சு எழுகிறது. ஆனால் அதைத் தவிர அவர் போன்றவர்களால் செய்யக்கூடியது என்ன? சரணாகதி அல்லது குற்றம் இரண்டில் ஒரு வழி மூலமே அடித்தள மக்கள் வாழ்வை நேரிட முடியும் அல்லது முடிவற்ற போதை. தாஸ்தாவ்யெஸ்கியின் குற்றமும் தண்டனையும் இதன் வெளிப்பாடுதான். இந்த நாவலை எழுதும் முன்பு தாஸ்தாவ்யெஸ்கி தனது பதிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில் அவரது இந்தப் பகுதி வெளிப்படுகிறது. “தன்னைச் சார்ந்தோரை இரக்கமின்றி சுரண்டி, தனக்கும் யாருக்கும் எந்தப் பலனுமின்றி வாழும் ஒரு கிழவியை, பணத்திற்காக கொல்லவேண்டி வரும் நுண்ணுணர்வு மிகுந்த ஒரு ஏழை இளைஞன்…”
தல்ஸ்தோயால் இதைப் புரிந்துகொண்டிருக்க முடியாது. “உண்மையும் கிறித்துவும் ஒன்றுதான் என்று நான் திடமாக நம்புகிறேன். ஆனால் ஒருவேளை இரண்டும் வேறு வேறாக இருக்குமானால் நான் கிறித்து பக்கம்தான் நிற்பேன்” என்று தாஸ்தாவ்யெஸ்கி சொன்னதையும். ஏழைக் குடியானவர்கள் தங்களது அத்தனை துயரங்கள் நடுவிலும் பரிசுத்தமாக இருக்கிறார்கள் என்று தல்ஸ்தோய் நம்பினார். நம்ப விரும்பினார். ஆனாலும் அவருள் இருந்த கலைஞனின் கூருணர்வு அவரது இந்த விருப்பத்தை மறுத்து ‘The power of darkness‘ போன்ற ஐந்தங்க நாடகங்களையும் எழுத வைத்தது. அதில் நிகிட்டா என்கிற குடியானவன் ஒரு அனாதைப் பெண்ணை ஏமாற்றி, கலவி செய்துவிட்டு, கைவிட்டு விடுகிறான். பிறகு அனிஷ்யா என்கிற ஒரு பெண் நிகிட்டாவைக் கல்யாணம் செய்துகொள்வதற்காக தனது கொடுமைக்காரக் கணவனைக் கொன்றுவிடுகிறாள். நிகிட்டா இப்போது தனது காது கேட்காத வளர்ப்பு மகளையும் கெடுத்து கர்ப்பமாக்கி விடுகிறான். குழந்தை பிறந்த போது தனது தாயின் தூண்டுதலாலும் மனைவியின் தூண்டுதலாலும் குழந்தை இறந்துவிட்டது என்று அவர்கள் சொன்னதை நம்பி புதைக்கச் செல்கிறான். அப்போது திடீரென்று அது வீறிட்டு அழுகிறது. பதற்றமடைந்த நிகிட்டா அதன் தலையை நொறுக்கிக் கொன்றுவிடுகிறான். இவை எல்லாவற்றையும் மறைத்து வளர்ப்பு மகளுக்குத் திருமணம் செய்ய அனிஷ்யா முற்பட, திடீரென்று குற்றவுணர்வு மேலிட்டு பகிரங்கமாக குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீஸில் சரணடந்துவிடுகிறான்.
இந்த நாடகத்தை எழுதியதும் தல்ஸ்தோய் மனம் கசந்து அழுதார் என்று சொல்லப்படுகிறது. அவரது உடல் நலமும் சீர்கெட்டது. ஏறக்குறைய மரண தண்டனைத் தீர்ப்பு எழுதிவிட்டு பேனாவை ஒடித்துவிடும் ஒரு நீதிபதியின் மனநிலை. இங்கு தாஸ்தாவ்யெஸ்கியின் கருணையும் தல்ஸ்தோயின் கருணையும் வேறு வேறு கோணங்களில் செயல்படுவதைக் காணலாம். இந்தக் கதையிலும் தல்ஸ்தோய் ஆண்கள் பெண்களைவிட வாய்ப்பினாலும் சூழலினாலும் இயல்பினாலும் உண்மைக்கும் கடவுளுக்கும் ஓரடி அருகில் இருப்பதாகக் கருதுவதைக் காணலாம். நாடகத்தில் வரும் மிட்ரிச் என்கிற பாத்திரம் இதை வெளிப்படையாகவே சொல்கிறது.
தாஸ்தாவ்யெஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ரஸ்கோல்நிகாவுக்கும் நிக்கிட்டாவுக்கும் உள்ள ஒப்புமைகளும் விலகல்களும் விவாதிக்கத்தக்கவை. தாஸ்தாவ்யெஸ்கி ரஸ்கோல்நிகாவை ஏறக்குறைய நல்லவனாக சித்தரிக்க முயல்கிறார். அவன் குற்றத்தை நோக்கி சமூகத்தாலும் அவனது அடிப்படைத் தேவைகளாலும் தள்ளப்படுகிறான். நிகிட்டாவை குற்றம் நோக்கித் தள்ளுவது அவனுக்குள் இருக்கும் காமம். அதுவே அவனை அனிஷ்யா என்கிற தீய பெண்மணியின் ஆளுகைக்குள்ளும் அவனைக் கொண்டுவருகிறது. இறுதியில் ரஸ்கோல்நிகாவைப் போலவே நிகிட்டாவுக்குள்ளும் இருக்கும் நன்மை மேலெழுந்து குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்கிறது.
ஆனால் தல்ஸ்தோய் ஒரு கலைஞன் மாத்திரமல்ல அல்லது அவர் அவ்விதம் மாத்திரம் இருக்க விரும்பவில்லை என்பதே இருவருக்குமிடையே இருந்த வேறுபாடு. ஒரு கட்டத்தில் அவர் தனது எழுத்தாளர் என்கிற அடையாளத்தையே வெறுப்புடன் பார்க்கிறார். ஆன்னா காரனீனா எழுதிய உடனேயே அவர் மனம் தனது கலையின் பயன்தான் என்ன என்கிற சலிப்புக்குள் போய்விடுகிறது. இந்தச் சிந்தனைகளை அவரது Confessions நூலில் காணலாம். அகிம்சையான எதிர்ப்பு, வன்முறையை எந்தச் சூழலிலும் கைக்கொள்ள மறுத்தல், பூமியில் தோன்றி மறையும் பௌதீக அரசுகளுக்குக் கட்டுப்படாமை போன்ற சிந்தனைகளை நவீன யுகத்தில் முதல்முறையாக அவரே கோர்வையாக முன்வைத்தார். அத்தோடு அவற்றைக் களத்திலும் நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையையும் தனது எழுத்துகள் மூலமும் செயல்பாடுகள் மூலமும் தன்னைப் பின்பற்றியவர்களிடம் அவர் தோற்றுவித்தார்.
அவரது அராஜக அல்லது அரசின்மைவாதம் ஒன்றும் புதிதல்ல. கிறித்துவத்தின் துவக்கக் காலகட்டத்தில் விண்ணக அரசுக்கு மட்டுமே பணிவது என்கிற முழக்கம் கிறித்துவத்தை வழிநடத்தும் கோஷமாகவும் பௌதீக அரசுகளுக்குப் பெரிய தலைவலியாகவும் இருந்தது. ஆனால் கிறித்துவமே அரசவை மதமாகவும் அரசாகவும் ஆன பொழுது அந்தக் கோஷம் வசதியாக மறக்கப்பட்டது. அரசனுக்குப் பணியாதவர்களை திருச்சபை கட்டளைகள் மூலமாக ஆண்டவரும் சேர்ந்து தண்டித்தார். விண்ணகத்திலிருந்தும் விலக்கி வைத்தார். இதற்கு எதிர்ப்பு ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்குப் பிறகு அன்று பொஹிமியா என்றும் இன்று செக்கோஸ்லோவாக்கியா என்றும் அழைக்கப்படும் பிரதேசத்தில் தோன்றிய Petr Chelčický என்ற ஆன்மீகத் தலைவர்- எழுத்தாளர் மூலம் எழுந்தது. அவர் அரசும் திருச்சபையும் கலப்பதையும் இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புகொண்டிருப்பதையும் எதிர்த்தார். கெட்டதை எதிர்க்கிறேன் என்கிற பெயரில்கூட போரிலும் வன்முறையிலும் ஈடுபடுவதை கிறித்துவர்கள் செய்யக்கூடாது என்று உபதேசித்தார். தல்ஸ்தோய் இவரால் மிகவும் கவரப்பட்டார். தல்ஸ்தோயின் ‘Kingdom of God is within you’ நூலில் இவரது சிந்தனைகளின் பாதிப்பை அதிகம் காணலாம்.
ருஷ்யாவில் தல்ஸ்தோயின் காலத்திலேயே பௌதீக அரசுகளை அங்கீகரிக்காத கிறித்துவ அராஜக குறுங்குழுக்கள் இருந்தன. சார் அரசர்கள் இவர்களைக் கடுமையாக ஒடுக்கினார்கள். அதற்கு ருஷ்யப் பரம்பரியத் திருச்சபை துணை நின்றது. அவற்றுள் ஒரு குழுவை ருஷ்ய அரசர்களின் கொடுமையிலிருந்து தப்புவித்து வேறு நாடுகளுக்கு அனுப்பிவைக்க தல்ஸ்தோய் தனது சொத்திலிருந்து பெரும் தொகையைச் செலவழித்தார். பின்னர் தோரோ போன்றவர்கள் அரசுக்கு வரி கொடுப்பதை மறுத்தது கிறித்துவத்தின் வழிவந்தது அல்ல எனினும் ஒப்புநோக்கத்தக்கது. இது பின்னால் மலர்களின் குழந்தைகள் எனப்படும் ஹிப்பி இயக்கம் வரை பரிணாமம் அடைந்தது.
தல்ஸ்தோயை மிகவும் அசலான சிந்தனையாளர் என்று சொல்ல முடியாது. ஆனால் அசலான செயல்பாட்டாளர். காந்தியைப் போலவே. தன் சிந்தனைகளுக்கு எதிராக ஒருபோதும் அவர் செயல்பட்டதில்லை. அவை பல நேரங்களில் முதிர்ச்சியற்றவையாக இருப்பதாகத் தோன்றினாலும் அவர் இறுதிவரை தன் அக வாழ்க்கையும் புற வாழ்க்கையும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று படாதபாடுபட்டார். அதற்காக அவர் சென்ற தூரம் மிக அதிகமானது.
அவருடைய குணக்குறைபாடுகளாக இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் சுட்டிக்காட்டப்பட்ட விஷயங்களுக்கும் அவருக்கு முன்பே ருஷ்ய வரலாற்றில் முன்னுதாரணங்கள் உண்டு. உதாரணமாக தல்ஸ்தோய் ஷேக்ஸ்பியரை ஒரு சாதாரணமான கவிஞர் என்றது. இதைப் போன்ற சிந்தனைகள் ருஷ்யாவில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்தவைதான். குறிப்பாக, ருஷ்யாவின் மிக முக்கியமான இலக்கிய விமர்சகர் என்று கருதப்படும் Vissarion Belinsky, தல்ஸ்தோய்க்கும் முன்பாகவே, ஷேக்ஸ்பியரைவிட James Fenimore Cooper சிறந்த எழுத்தாளர் என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார். (The Last of the Mohicans போன்ற நாவல்களை எழுதிய அமெரிக்க எழுத்தாளர்) தாந்தே ஒரு கவிஞரே அல்ல என்றும் ‘Othello’ ஒரு காட்டுமிராண்டிக் காலத்தின் படைப்பு என்றும்கூட சொல்லியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை கலாப்பூர்வமாக மோசமாகச் செய்யப்பட்ட ஒரு படைப்பை மன்னித்துவிடலாம். ஆனால், அற நோக்கில்லாத நூல்களை, அவை எவ்வளவு நுட்பமாகச் செய்யப்பட்ட படைப்பாக இருந்தாலும், ஏற்றுக்கொள்ளக்கூடாது. இது தல்ஸ்தோய் பின்னாளில் வந்துசேர்ந்த கருத்துப்பாட்டின் அச்சொட்டு நிலை என்பதை நாம் காண முடியும்.
இதுபோன்ற தல்ஸ்தோயின் ‘கோட்டிக்காரத்தனங்களைப்’ புரிந்துகொள்ள அன்றைய ருஷ்ய வரலாறையும் நாம் சற்று விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மகா பீட்டர் ஆட்சிக்கு வரும்வரை ருஷ்யா அதன் ஐரோப்பிய அண்டை வீட்டார்களோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருந்தது. அதன் சமூகப் பொருளாதார கலாச்சாரம் எல்லாமே ஒரு மூன்றாம் உலக ஏழை நாட்டுடன் இணை வைக்கத்தக்க வகையில்தான் இருந்தது. ஐரோப்பாவில் எப்போதோ வந்துவிட்ட தொழிற்புரட்சி, பேரரசன் பீட்டர் வருகிற வரையில் ருஷ்யாவில் நிகழவே இல்லை. அவன் அதை உணர்ந்து தன் நாட்டிலிருந்து அவனுக்கு விசுவாசமான பலரை அந்த நாடுகளுக்கு ஒரு கல்விச் சுற்றுலா போல அனுப்பி வைத்தான். அவர்கள் திரும்பிவந்து அதுவரை கெட்டிதட்டிப் போயிருந்த ருஷ்ய அரசு நிர்வாகத்தையும் சமூகத்தையும் மாற்றியமைக்க ஆரம்பித்தார்கள். இது அதற்கே உரிய பிரச்சனைகளைக் கொண்டுவந்தது. குறிப்பாக, ஐரோப்பியத் தொழிற்புரட்சி ஒரே சமயத்தில் தொழில் முதலாளிகள்- தொழிலாளிகள் என்ற இரண்டு புதிய வர்க்கங்களை உருவாக்கியது. ருஷ்யாவில் அதுவரை அரச குடும்பத்தினர், நில உடைமையாளப் பிரபுக்கள், அவர்களுக்கு அடிமைகளாக இருந்த குடியானவர்கள் என்ற மூன்று வகுப்புகள் மட்டுமே இருந்தன. பெரும்பான்மையும் அடிமைகள். முதலாளித்துவம் ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தை ஆரம்பத்தில் மக்களுக்கு அளிக்கும். அளித்தே தீரவேண்டும். அதன் தேவைகளில் அதுவும் ஒன்று. அதைப் பின்னால் வேறு வழிகளில் நைச்சியமாகப் பிடுங்கிவிடும் என்பதும் உண்மை. இது ருஷ்ய சமூகத்தில் நிறைய குழப்பங்களைத் தோற்றுவித்தது.
நிலவுடைமை உறவுகள் தவிர முதலாளித்துவம் கொண்டுவருகிற லிபரலிசம் ருஷ்யப் பாரம்பரிய மத நிறுவனங்களோடு மோதியது. அது இயல்பாக நிகழ்வதே. அதுவரை ருஷ்யப் பாரம்பரிய திருச்சபையின் உபயதாரர்கள் அரச குடும்பத்தாரும் பிரபுக்களும். அவர்களின் நலனுக்காக கட்டமைக்கப்பட்ட மத போதனைகளை மாற்றியமைத்தால்தான் ஐரோப்பியத் தொழிற்புரட்சி உள்ளே நுழைய முடியும். இனி முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் ஆதரவான ஒரே கடவுள் வேண்டும். முன்புபோல் ‘வானகத்தில் எல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும். அதுவரை உங்கள் குதிரையை வெட்டிச் சாப்பிட்டுக்கொண்டு இருங்கள்’ என்று சொல்லமுடியாது.
இந்தப் புரட்சிக்கு எதிர்பார்த்தது போலவே எதிர்வினைகள் தோன்றின. இந்த மாற்றங்கள் அனைத்துமே மேற்கிலிருந்து வந்ததால் அதற்கு எதிர்வினையாக தேசியவாதிகள் தோன்றினார்கள். மேற்கத்திய சிந்தனையாளர்களால் பாதிக்கப்பட்டவர்கள், எல்லா ருஷ்ய மதிப்பீடுகளையும் நிராகரிப்பதால், நிராகரிப்பாளர்கள் nihilists என்று அழைக்கப்பட்டார்கள். பழமைவாதிகள் slavophiles என்று அழைக்கப்பட்டார்கள். மேற்கத்தியவாதிகளிலும் ஃபிரான்சை விரும்புகிறவர்கள், ஜெர்மானிய சிந்தனைப் பள்ளியை விரும்புகிறவர்கள் என்று இரண்டு பிரிவுகள் இருந்தார்கள். வால்டேர், ஹெகல் போன்றவர்களை இவர்களின் முதன்மையான ஆசிரியர்கள் எனக் கொள்ளலாம். வால்டேரின் எல்லையற்ற தனிமனிதச் சுதந்திரத்துக்கான வாதங்கள் ஒருபக்கம் எனில், ஹெகல் போன்றவர்களின் வரலாற்றின் விசைகள்- திரள்வாதத் தீர்வுகள் இன்னொரு பக்கம் என்று ருஷ்யர்கள் இழுபட்டார்கள். ஃபிரெஞ்சு சிந்தனைகள் பிரதிபலித்த மத நிராகரிப்பு, கட்டற்ற பாலுறவுச் சுதந்திரம் போன்ற கருத்துகள் ருஷ்யப் பழமைவாதிகளிடம் மட்டுமில்லாமல் அறிவுஜீவிகளிடம்கூட அதிர்ச்சியை ஏற்படுத்தின. Marquis de Sade போன்ற எழுத்தாளர்களின் நாவல்கள் தல்ஸ்தோய் போன்றவர்களிடம் ஏற்படுத்தியிருக்கக்கூடிய அதிர்ச்சியை யூகிக்க முடிகிறது. அவர் மாப்பசானின் கதைகளுக்கான ருஷ்ய மொழிபெயர்ப்புக்கு எழுதிய முன்னுரையில் இந்தக் கசப்பை வெளிப்படுத்துகிறார். அவர் மாப்பசானை ஒரு மாஸ்டர் என்று ஒத்துக்கொள்கிறார். ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அறவுணர்வு மாப்பசானுக்கு இல்லை என்கிறார். போரும் அமைதியும் நாவலிலும் அவரது ஃபிரெஞ்சு வெறுப்பைக் காணலாம்.
தல்ஸ்தோயின் இந்த நிலைப்பாட்டுக்கும் ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு. சார் மன்னர்கள் காலத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவை கடுமையாக ஒடுக்கப்பட்டிருந்தன. கடுமையாக கண்காணிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியை பின்னால் வந்த கம்யூனிச அரசும் பின்பற்றியது. இன்னும் சொன்னால் மேலும் கடுமையாக. ஆனால் சார் மன்னர்கள் காலத்தில் புனைவுகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. அந்தப் புனைவுகளில் ஒளிந்திருக்கும் அராஜகக் கருத்துகளை அடையாளம் கண்டுகொள்ளும் அறிவுக்கூர்மை அவர்களது தணிக்கையாளர்களிடம் இல்லை. ஆகவே எல்லா விதமான சீர்திருத்தப் புரட்சிக் கருத்துகளையும் புனைவு வடிவிலேயே ருஷ்யச் சிந்தனையாளர்கள் முன்வைத்தார்கள். ஆகவே புனைவு எழுத்தையே புதிய சிந்தனைகளுக்காக மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
எனவே, ஒரு புனைவு எழுத்தாளனின் வேலை கதை சொல்வது மட்டுமன்று. ஒரு ஆசிரியரின் ஸ்தானம் அல்லது பலிபீடத்திலிருந்து ஒழுக்கம் போதிக்கும் பாதிரியாரின் இடம். இதை நிறைவேற்றாத எழுத்தாளர்களை தேசியவாதிகள், நிகிலிஸ்டுகள் இருவருமே நிராகரித்தார்கள். எழுத்து வாசிப்பவனிடம் ஒரு மேல்நோக்கிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். மேலான மனிதனாக்க வேண்டும். மனிதனையும் மனித வாழ்வையும் அப்படியே பச்சையாகச் சித்தரிக்கும் யதார்த்தவாதம் தேவையில்லை. இந்தப் பிளவில் மாட்டிக்கொண்டவர் என்று ருஷ்ய எழுத்தாளர் இவான் துர்க்கனேவைச் சொல்லலாம். அவருக்கு கலை நுட்பமும் வேண்டியிருந்தது. ஆகவே, அவர் இரண்டு தரப்பாலும் கடுமையாக வசைபாடப்பட்டார். இவ்வளவுக்கும் அன்றைய ருஷ்ய சமூகத்தை வாட்டிக்கொண்டிருந்த எல்லா விஷயங்களைக் குறித்தும் எழுதியிருக்கிறார். ஆனால் அவர் இது சரி, அது சரி என்ற எந்தத் தீர்வையும் வலியுறுத்தவில்லை. ருஷ்ய அறிவுஜீவி வர்க்கமோ ஒரு கடப்பாட்டை எதிர்பார்த்தது.
தல்ஸ்தோயும் முதலில் அப்படியொரு கருத்தைக் கொண்டிருந்தவர்தான். சமூகப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கொடுப்பது இலக்கியத்தின் வேலையல்ல என்று அவர் சொல்லியிருக்கிறார். ஒரு கலைஞனால் செய்யக்கூடிய அதிகபட்ச வேலை மானுட வாழ்வின் அத்தனை சாத்தியங்களையும் காட்டுவதே என்று அவர் சொன்னார்.
ஆனால் ருஷ்யாவின் மீதான நெப்போலியனின் படையெடுப்புக்குப் பிறகு, இயல்பாகவே ருஷ்யப் பொதுமனத்தில் ஃபிரெஞ்சு சிந்தனைகள் மீது ஒவ்வாமை உருவாகியது. ஒருபுறம் தேசியவாதம் பலப்பட்டது என்றால் அறிவுஜீவிகள் ஜெர்மானியச் சிந்தனைகள் பக்கம் சாய்ந்தார்கள். குறிப்பாக, ஹெகல் போன்றவர்களின் செல்வாக்கு ருஷ்யாவில் வளரத் தொடங்கியது. மார்க்சியத்தின் தொடக்கமும் அதுதான். அது வளர்ந்து வலிதாகி, ஒரு அக்டோபர் மாதம் ஜெர்மனியிலிருந்து புறப்பட்ட மூடிய கவச ரயில் பெட்டிக்குள் ஒளிந்திருந்த ஒரு மனிதன், ருஷ்யாவுக்குள் நுழைந்து கம்யூனிச ஆட்சியை அமைப்பதில் முடிந்தது. அந்த மனிதனின் பெயர் லெனின்.
ஆனால் தல்ஸ்தோய்க்கு ஜெர்மானியத் தத்துவவாதிகள் சொல்லிக்கொண்டிருந்த திரள்வாதம், வரலாற்று விசைகள், வரலாறு தானாக திரும்பிப் படுக்காவிட்டால் நாம் அதைக் குண்டியில் அடித்து எழுப்ப வேண்டும் போன்ற விஷயங்களிலும் கடும் எதிர்ப்புணர்வு இருந்தது. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற கோஷத்துடன் தொடங்கிய ஃபிரெஞ்சுப் புரட்சி, இரத்தக் களறியாக எப்படி மாறியது என்பதை அவர் அறிந்திருந்தார். அந்த வன்முறை மூலமாக அடைந்த ஜனநாயகம், இறுதியில் நெப்போலியன் என்கிற இன்னொரு சர்வாதிகாரியைத்தான் கொண்டுவந்தது என்பதை அவர் கவனித்து எச்சரித்திருக்கிறார். அதுவே பின்னால் சோவியத் ருஷ்யாவிலும் நிகழ்ந்தது என்பது வரலாறு.
மேலும் இந்தப் புரட்சி புதிதாக உருவாகிவந்த ஒரு மத்திய வர்க்க எலைட் அறிவுஜீவிக் கூட்டத்தாலேயே வழிநடத்தப்படுவதையும் அவர் கவனித்தார். அவரது கதைகளில் இந்த வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரின் வாழ்க்கையைக்கூட அவர் சித்தரிக்கவில்லை என்பதைக் கவனித்தால் அவர்கள் மீதிருந்த அவரது ஒவ்வாமை விளங்கும். தனது படைப்புகளில் பிரபுக்களையும் குடியானவர்களையும்தான் அவர் சித்தரித்துக்கொண்டே இருந்தார். இருவர் வாழ்க்கையையும் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தார். உண்மையில் அவர் கடைசிவரை ஒரு குடியானவனாக மாற முயன்றுகொண்டே இருந்த நிலப்பிரபு. தனது ஆடை, நடை, உடை, ரசனை பாவனைகளில்கூட அவர் ஒரு குடியானவனாக மாற முயற்சித்தது குறித்த கேலியான குறிப்புகளை அவரது சமகால எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். காந்தியைப் பற்றி சரோஜினி நாயுடு சொன்ன கருத்து போல.
ஒரு இலக்கியப் படைப்பு அடிப்படையில் நீதிபோதனை செய்யும் பிரதியாக இருக்கவேண்டும் என்ற அவரது கருத்துகூட புதிதல்ல. அரிஸ்டாட்டிலிலிருந்து தல்ஸ்தோய்க்கு மிக பின்னால் வந்த John Gardner வரை சொல்லி வந்ததுதான். ஜான் கார்ட்னர் எழுபதுகளில் Grendel போன்ற முக்கியமான நாவல்களை எழுதியவர். படைப்பாக்கக் கலை பற்றி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் போதித்தவர். அவரது On becoming a novelist, The art of fiction போன்ற புத்தகங்கள், நாவல் எழுத விரும்புகிற நபர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகங்களாகும். ஒரு கட்டத்தில் அவர் அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்படுகிற நாவலாசிரியராக இருந்தார். ஆனால் அவரது புகழ் அவர் எழுதிய ‘On moral fiction’ என்கிற ஒரே புத்தகத்தின் மூலம் சரிந்தது. அந்தப் புத்தகத்தில் தல்ஸ்தோயைப் போலவே அவர் இலக்கியத்தின் அடிப்படையாக நீதியும் அறவுணர்வும் இருக்கவேண்டும் என்றும் பின்நவீனத்துவ இலக்கியம் எப்படி அதை முற்றிலுமாகப் புறக்கணித்து தீமையின் கொண்டாட்டமாக- வெறும் ஜால வித்தையாக மட்டுமே இருக்கிறது என்று அன்றைய சமகால எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளை ஒப்பிட்டு எழுதியிருந்தார்.
அதற்கு மிகக் கடுமையான எதிர்வினை இருந்தது. ஜான் அப்டைக், ஜான் பார்த், வில்ல்லியம் காஸ் போன்ற எழுத்தாளர்கள் அந்தப் புத்தகத்தை மலம் என்றே விமர்சித்தார்கள். நியூ யார்க் டைம்ஸ் அவரது புத்தகத்தை மிகக் கடுமையாகத் தாக்கியது. அதன்பிறகும் அவர் பல நாவல்கள் எழுதினாலும் அவரை அறிவுலகம் கண்டுகொள்ளவே இல்லை. இன்றைக்கு அவரது புத்தகங்களைப் படிக்கிறவர்கள் மிகக் குறைவு. தல்ஸ்தோய் அவரது காலகட்டத்தின் காரணமாக இந்த விதியிலிருந்து தப்பித்தார். ஜான் கார்ட்னர் இறுதியில் மனமுடைந்து குடிகாரராகி ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்துபோனார்.
ஆனால் தல்ஸ்தோயின் வாட்டர் லூ இதுவல்ல. இறுதியில் அவரை வீழ்த்தியது பெண்களுடனும் அவரது மனைவியுடனுமான உறவும் வெறுப்பும்தான். இன்று நாம் அவரைக் குற்றம்சாட்டி ஒரு விஷயத்தைச் சொல்ல முடியும் எனில் பெண்கள் பற்றி இறுதிவரை அவர் கொண்டிருந்த எதிர்மதிப்பீட்டைத்தான் சொல்லவேண்டும். ஆனால் இந்த வெறுப்பைத் தாண்டியும் அவர் ஆன்னா போன்ற மிக அற்புதமான பெண் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார். அவரது கலை மனம் அவரது வெறுப்பை அவர் படைப்புகளுக்குள் அனுமதிக்கவில்லை. இந்த விஷயத்தில் அவருக்குள் இருந்த போதகனைவிட கலைஞனே அறத்தின் பக்கம் நிற்கிற ஆளாக இருந்தான்.
இதைப் பற்றி எழுதுகையில், பெண்களைக் குறித்த பார்வையை ஒரு ஆண் மாற்றிக்கொள்வதென்பது தல்ஸ்தோய் போன்ற ஒழுக்கவாதிகள் அளவுக்கே அவருக்குப் பின்னால் வந்த கம்யூனிஸ்டுகளுக்கும் சிரமமாக இருந்தது எனப் புலனாகிறது. இது குறித்து சமகாலத்தில் பின்காலனியம் குறித்தும் பெண்ணியம் குறித்தும் காத்திரமாக எழுதிவரும் பேராசிரியர் Ania Loomba தனது ‘Revolutionary desires’ என்கிற புத்தகத்தில் விவரித்திருக்கிறார். அவர் 1930களிலிருந்து 70கள் வரை கம்யூனிசப் புரட்சிகர இயக்கங்களில் ஈடுபட்ட பெண்களின் வாழ்க்கைகளைப் பற்றி ஆய்வுசெய்யும் போது ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கிறார். இவர்கள் குறித்து எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகள், தன் வரலாறுகள், புனைவுகள், நினைவுகளில் இவர்களுக்கு இந்த இயக்கங்களில் இருந்த ஆண்களுடன் இருந்த உறவுகள் பற்றிச் சொல்லப்படவே இல்லை. பெரிய மௌனம்.
இவர்களில் உயிரோடு இருந்தவர்களை அவர் தேடிப் போகும்போது இந்தப் புரட்சிகர இயக்கங்களில் இந்தப் பெண்கள் சமூகப் போராளி என்கிற பாத்திரத்துக்குள் அனுமதிக்கப்பட்டாலும் இன்னொருபுறம் மரபான பெண் பாத்திரங்களைத்தான் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது என்று கண்டுபிடிக்கிறார். அவர்கள் பாலற்றவர்களாகவோ தங்கள் பாலுணர்வைச் சொந்தம் கொண்டாட அனுமதிக்கப்படாதவர்களாகவோ இருந்திருக்கிறார்கள். பல நேரங்களில் பெண்களே இதற்கு எதிராக இருந்தார்கள் என்று சுட்டிக் காண்பிக்கிறார். உதாரணமாக, கம்யூனிசத்துக்கு வெளியே பெண்களை அரசியல் வெளிக்குள் கொண்டுவந்ததில் காந்தி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறார். அவரது ஒத்துழையாமை இயக்க அறைகூவலை எதர்கொண்டு ஏராளமான பெண்கள் ஆண்களோடு சேர்ந்து வீதிக்கு வந்தார்கள். அதற்கு முதல் எதிர்வினை, வழக்கம் போல, இவ்விதம் வெளியே வருவதன் மூலமாக ஆணும் பெண்ணும் மிக எளிதாக விபச்சாரத்துக்குள் இறங்கிவிடுகிறார்கள், அவர்கள் ஒழுக்கம் கெட்டுவிடுகிறது என்பதாகவே இருந்தது. இதைச் சொன்னது Cornelia Sorabji என்கிற பெண் சமூகப் போராளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் இந்தியாவின் முதல் பெண் வக்கீல்!காந்தி இதன் அபாயத்தை உணர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் துறவியைப் போல எப்படி வாழவேண்டும் என்று நீண்ட கடிதங்கள் நவ இந்தியாவில் எழுத வேண்டியிருந்தது. கம்யூனிச இயக்கங்களும் இப்படித்தான் இருந்தன.
இந்தச் சூழலில் தல்ஸ்தோய்க்கும் அவரது மனைவிக்கும் இருந்த பிரச்சனைகளைக் கவனிக்கையில் தல்ஸ்தோயின் பெண்கள் குறித்த மதிப்பீடுகள், கருத்தடை, விவாகரத்து போன்ற விஷயங்களில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகள் வேறுவிதமாய் இருந்திருந்தால் மிக எளிதாகத் தீர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அவரது கிறித்துவப் பின்புலம் அதை அனுமதிக்கவில்லை. அவர் சோபியாவிடம் பாரதி சொல்வது போல ‘காரியம் யாவிலும் கை கொடுத்து’ என்பது போன்ற துணையை எதிர்பார்த்தார். சோபியாவின் அக்கறைகள் வேறு மாதிரி இருந்தன என்பதை அவரால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை.
அவர் ஏதோவொரு தருணத்தில் உலகத்தின் மிகப்பெரிய துயரங்களுள் மகத்தான துயரமாக ஒருவரது படுக்கையறைக்குள் நிகழும் துயரம்தான் இருக்கும் என்று எழுதியிருக்கிறார். (“Man survives earthquakes, epidemics, the horrors of disease, and agonies of the soul, but all the time his most tormenting tragedy has been, is, and will always be, the tragedy of the bedroom” – The Kreutzer Sonata, Leo Tolstoy)
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. உலகில் பல பிரச்சனைகள், அநீதிகள் உள்ளன. அதில் தீர்க்கவே முடியாததாக அல்லது மிகக் கடைசியாகத் தீர்க்க முடிவதாக ஆண் பெண் உறவுப் பிரச்சனைதான் இருக்கும். அப்படி தீர்க்கப்பட்டாலும் அது ஆணும் பெண்ணும் ஆணியம்- பெண்ணியம் என்று உரையாடிக்கொள்வதன் மூலமாக இருப்பதைவிட கருத்தடை மாத்திரைகள், மொபைல் போன்கள் போன்ற தொழில்நுட்பங்கள், ஆணும் பெண்ணும் சேர்ந்து பொருளீட்ட வேண்டிய வாழ்வியல் நிர்ப்பந்தங்கள் மூலமாகவே இருக்கும் என்றே தோன்றுகிறது.