ஆர் இருள் துணையாகி அசைவளி அலைக்குமே

1 comment

வெகு அண்மையில் எதிரே கண்பார்வையில் கடல். பக்கத்து வீட்டுக்காரர் அவ்வப்போது மரத்தில் தங்கும் கொக்குகளைச் சுட்டுவிடுவார். எத்தனையோ தரம் சொல்லியும் கேட்காது துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அலைவார். ‘பியூடி வித்தவுட் குருவெல்டி’ சுவரொட்டிகளையும் ஸ்டிக்கர்களையும் அவரது வீட்டுச் சுவரில் ஒட்டி வைத்தேன். கோபமடைந்தார். புறநகர்ப் பகுதிகளின் நீர்த்தேக்கங்களில் காடை கௌதாரி கொக்குகளென கைத்துப்பாக்கியால் சுட்டுத் தின்னும் குறவர்களை சில சமயம் போலீஸ் பிடித்து மிரட்டும். உணவுக்கென்பதால் அவர்களைத் தண்டிப்பது நியாயமாகப்படாது. ஆனால் இதுபோன்றவர்களை என்ன செய்வது? எஸ்பிசிஏ எனும் விலங்குகளுக்கெதிரான கொடுமைகளைத் தடுக்கும் மையத்தின் மூலம் சில ஆண்டுகள் விலங்கு நல்வாழ்வு அலுவலராகக் கௌரவப்பணி ஆற்றிவந்தேன். அலுவலகம் வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு எதிரில் இருந்தது. அம்மையம் பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. நூற்றாண்டுப் பழமைகொண்ட விதிமுறைகளையே இன்னமும் வைத்திருக்கின்றனர். 

காட்டுவாசியான மனிதர்கள் நாகரீகம் அடைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆய்வகத்தில் சூழல் பாதுகாப்பிற்கும் மனித நோய்த்தடுப்பிற்கும் ஆயிரக்கணக்கில் ஆய்வக விலங்குகள், வெண்சுண்டெலி முதல் நாய் குரங்குவரை வேதிப்பொருள் ஊட்டப்பட்டு, கொல்லப்பட்டு, அறுபட்டு, நோய்க்கூறு கண்டறியப்பட்டு தினமும் ஆய்வுக்காகக் கண்காணிப்புக் குழுவின் வழிகாட்டுதலோடு பலியாக்கப்படுகின்றன. அதுவே அத்துமீறல் என்றாலும் வேடிக்கைக்காகக் கொல்வது மேலும் கொடுமைதான். மீண்டும் ஆயுதமேந்திய காட்டு வாழ்க்கையா என்றிருந்தது. மடகாஸ்கரில் ‘டோடோ’ பறவைகூட அப்படித்தான் அடியோடு மடிந்து இப்புவியைவிட்டு வேட்டை மனிதர்களால் அழித்தொழிக்கப்பட்டது. அப்பறவை அழிந்த சில ஆண்டுகளில் உள்ளூர் பனை வகையொன்றும் அழிந்தது. அப்பறவை உண்ட எச்சத்திலிருந்து மட்டுமே அப்பனை விதைகள் முளைத்து வளரும்.  

செல்வம் மிகவும் கலங்கிப் போயிருந்தான். வாழ்க்கையில் நிகழ்ந்த முதன்முறையான பெண் உறவின் உணர்ச்சிக் கொந்தளிப்பால் அவனால் அவ்வப்போது எங்களின் அலுவலக ஆய்வுப்பணிகள் தடைப்படத்தான் செய்தன. கொஞ்சநாள் திருவான்மியூர் வீட்டில் என்னுடன் தங்கியிருந்தான். சக பணியாளரான கல்பனாவுடனான உறவுக்குப் பின் பிரிந்து திருமணம் செய்துகொள்ளாமல் தனியே இப்படியே கழித்து விடுவேன் என்றான். அவனால் அவளின் வாழ்வு மேலும் வதைபடுவதாக உணர்ந்து கலங்கினான். 

ஏதோ கோபத்தில் பின்னர் திருமணத்திற்குச் சரியென்று வீட்டாரிடம் சொல்லிவிட்டான். வீட்டாரின்மேல் அவனுக்கிருந்த நம்பிக்கையில்தான் பெண்ணைப் பார்க்கவேண்டிய அவசியமேதுமில்லை என்று உறுதி கொடுத்துவிட்டான், ஏதோவொரு வெறுப்பில். இப்போது திரிசங்காகிக் குழம்பித் தவித்தான். அப்போதும் என் வீட்டில்தான் தங்கியிருந்தான். 

அன்று மாலை நண்பர் ஞானராஜ் வீட்டிற்கு வந்தார். செல்வத்தைக் கண்டதும் தயங்கினார். நெருங்கிய நண்பன்தான் என்றதும் மௌனமாக இருக்கையில் அமர்ந்தார். முகம் வாடியிருந்தது. உள்ளங்கைகளை உற்றுப் பார்த்திருந்தார் சற்று நேரம். மருந்தீஸ்வரர் திருக்கோவிலுக்குப் பின்புறமுள்ள தெருவில் கிறிஸ்துவ ஊழியரான ஞானராஜ் ‘காக்கும் கரங்கள்’ எனும் விடுதியொன்றைத் தொடங்கினார். அநாதரவான சிறுவர்கள், முதியோர், மனநிலை பிறழ்ந்தவருக்கான விடுதியது. ஆரம்பத்தில் உதவி செய்யப்போக அவரது நட்பு கிடைத்தது. அங்கு தொலைபேசி வசதி இல்லாததால் எனது எண்மூலம் பொதுத்தொடர்புக்கு, குறிப்பாக அன்பளிப்பு, உணவளிப்பு போன்றவற்றிற்கு உதவ முடிந்தது. கூடவே என்ஜிஓ நண்பனிடம் பெற்ற புராதன தட்டச்சு இயந்திரமும் வீட்டிலிருந்தது. கடிதங்களைத் தட்டச்சிட்டுத் தருவேன். ஆராய்ச்சியின் வேலைப்பளு நிமித்தம் அவருக்கு அதற்குமேல் உதவ முடியவில்லை. அச்சமயம் ஞானராஜுடன் சுறுசுறுப்பும் ஊக்கமுமான ஓரிளைஞன் இணைந்தான். கோபால். ஆங்கிலம் தெரிந்தவன். தானும் ஓர் அநாதை என்றும் கதியற்று எப்படியோ தட்டுத்தடுமாறி அங்கு வந்திருப்பதாகவும் சொன்னான். ஒருநாள் அதுபோன்றதொரு விடுதியை அமைப்பதே தனது லட்சியம் என்றான். ஞானராஜ் தனது விடுதியையே அவனுடையதாகப் பாவித்துப் பணியாற்றுமாறு வேண்டினார். அவன் துரிதமாக வேலையில் இறங்கினான். திருவான்மியூர் நகராட்சிப் பள்ளியில் சிறுவர்களைச் சேர்த்தான். அவ்வப்போது ஆம்புலன்ஸ் வேனில் போய் தெருவோரம் கேட்பாரற்றுக் கிடப்போரைக் குளிப்பாட்டி, ஆடைகள் அணிவித்து சவரம் செய்து அந்தந்த இடத்திலேயே வைத்து குழுவாகப் பராமரித்தும் வந்தனர். 

கோபால் எங்களுடன் நெருங்கிப் பழகினான். தொலைபேசிக்கெனவும் தட்டச்சு செய்யவுமென கிட்டத்தட்ட தினமும் மாலை வீட்டிற்கு வந்துபோனான். மைலாப்பூர், சாந்தோம், ஈஞ்சம்பாக்கம் எனப் பிறகு கிளைகள் முளைத்தன. கோபால் முழுதாகச் சேவையில் இறங்கினான். நன்கொடைகள் சேகரித்தான். ஞானராஜ் திருவான்மியூர் கிளையைக் கோபாலிடமே முற்றிலும் நம்பி ஒப்படைத்திருந்தார். 

அந்த முதியோர் இல்லத்தில் சில பாட்டிகளும் தாத்தாக்களும் அன்புருகப் பேசுவார்கள். சந்திக்கப் போனால் ஏதாவது சாப்பிடுகிறீர்களாவெனக் கேட்பார்கள். உற்சாகமாக ஒருசிலர்தான் இருப்பார்கள் என்றாலும் இவர்கள் எப்படி இங்கு வந்தனர் என்று ஆச்சரியமாக இருக்கும். ஒருவேளை அவர்களுக்குப் பிள்ளைகளும் சொந்தங்களும் இருந்தால் இப்படி அனுசரணையும் உபசரிப்புமான முதியவர்களை ஏன் இங்கு சேர்த்துவிட்டுப் போயினர் என்று வருத்தமாக இருக்கும். என்னதான் வறுமை என்றாலும் இப்படிக் கைவிடமுடியுமா என்று கேள்வி எழும். மனங்கலங்கிப் போன முதியவரொருவர் தனது படுக்கையிலேயே அமர்ந்திருப்பார். யாரிடமும் பேசமாட்டார். அம்மச்சிகூட இறுதிக்காலத்தில் எங்களோடேயே வாழ்ந்தாள். தோட்டம், குளம், ஆறு என இறக்கும் தறுவாயில் ஏதேதோ பிதற்றுவாள். சென்னையில் மேட்டுத்தெருவில் இருந்தாலும் அவள் கடைசிவரை நாகையில்தான் மனத்தளவில் வாழ்ந்தாள். இவர்களாவது தேவலை. ஜெமினி பாலத்தினை ஒட்டி அமைந்துள்ள புலன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான லிட்டில் பிளவர் பள்ளிக்காக நன்கொடை சேகரித்து வழங்கப் போனபோதில் அங்குள்ள கன்னியஸ்திரிகளின் விடுதிக்குச் செல்ல நேர்ந்தது. முதிய வெளிநாட்டுக் கன்னியர் நிறைய இருந்தனர். மூப்பெய்தி நோயாலும் இயலாமையாலும் வெளிச்சொல்லவியலா அல்லல்களுடன் வாழ்வதைப் பார்க்கத் திகைப்பாய் இருந்தது. மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு வெளியுதவிக்குக் காத்திருந்தனர். தியாகம், துறவு என்று தேர்வுசெய்து வந்தோருக்கும் வாழ்வின் உபாதைகள் கடைசிக் காலத்தில் பெருஞ்சங்கடம்தான். அரும்பு இதழ் சம்பந்தமாக பாதர், கவிஞர் அமிர்தராஜைச் சந்திக்க சலேசிய சபைக்குப் போனபோது தொன் போஸ்கோ பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரான நூறு வயது தாண்டிய பாதர் பவுட் அங்கு இருந்தார். கண்பார்வை மட்டும் நன்றாய் இருந்தது. பேசவில்லை. காது கேட்கவில்லை. ஒரு எந்திரம்போல் மெல்ல நடந்துபோனார். தன்னுணர்வும் குன்றிப் போயிருந்தார். 

அவரைப் பார்க்கையில் பழைய ஏற்பாட்டின் இஸ்ரேல் அரசன் தாவீது நினைவுக்கு வந்தான். அவனுக்கு எட்டு மனைவிமார்கள், பத்சேபாளையும் சேர்த்து. அவன் வயோதிக காலத்தில் உடலியக்கம் குன்றிய நிலையில் இருந்தான். அவன் தேகம் அடிக்கடி சில்லிட்டுப் போனது. கணப்பு மூட்டி மூட்டி அவனைச் சூடுபடுத்தினர் பணியாளர்கள். கடைசியில் அபிஷாக் எனும் ஓர் அழகிய இளம்பெண்ணை அழைத்து வந்தனர் எட்டாவது மனைவியாக. அவளின் அண்மையில் தாவிதின் உடல் சூடேறும் என்று சிலர் கருதியதின் விளைவாக அவள் உடனே அழைத்துவரப்பட்டாள். அவள் உண்மையிலேயே பேரழகி. நற்குணமும் பண்பும் மிக்கவளாயிருந்தாள். அரசர் என்றபடியால் கூடுதல் மரியாதையும் பயமும் கொண்டிருந்தாள். தாவிது அவளை அருகழைத்தான். அவள் பயந்து நடுங்கித் தரையிலமர்ந்தாள். அவனின் தளர்ந்த வயோதிகத்தில் நடுக்ககுற்ற விரல்களால் அவள் தலையை வருடினான். எள்ளளவும் அதில் இச்சை இல்லை. அவள் குனிந்தபடியே அமர்ந்திருந்தாள். தாவிது அமைதியுடன் கண்ணை மூடிக்கொண்டான். அவள் அவ்வரண்மனையின் சிறப்பு அங்கத்தினரானாள். யாரும் அவள் மேல் பொறாமை கொள்ளவில்லை. அவள் இன்னும் குழந்தைத்தனத்தோடேயே திரிந்தாள். சில காலத்திற்குப் பிறகு தாவிது அரசன் மரித்தான். அபிஷாக் ஒரு கன்னியாகவே திரிந்துற்றாள். தாவிது அவளை இம்மியும் அறியாதிருந்தான் என்கிறது பைபிள். காமமும் இச்சையும் முடிவுற்ற இடத்தில் மேலான உறவும் உன்னதமும் பெருகும் போல. 

லிட்டில் பிளவர் பள்ளியில் வாழ்நாள் முழுதும் சேவைசெய்து வாழ்ந்த கன்னியாஸ்திரிகளில் தமது இறுதிக்காலத்தைக் கழிக்கத் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பினர். தள்ளாவயதில் பெரியவர்களை அவரவர் வாழ்ந்த இடத்திலேயே வைத்துப் பராமரிப்பதுதான் நல்லது எனத் தோன்றியது. காலமெல்லாம் பரிச்சயமான சூழலும் வீடுகளும் தெருக்களும் மக்களும் அவர்களுக்கு ஒருவித தைரியம் தருகிறது. அதுவே அவர்களது உலகம். புதிய இடங்களுக்குத் தேவையின் நிமித்தம் மாறும் முதியோர் சங்கடங்களுக்கு ஆளாகின்றனர். அவற்றைத் தன்னுள்ளேயே மறைத்துக்கொள்கின்றனர். இயலாமை, மரணத்தின் அண்மையோடு பரிச்சயமற்ற இடங்களின் வேற்றுத்தன்மையில் மனமயக்கம் அடைகின்றனர். பிறழ்வுண்டாகிறது. அறிவு பொதுவானதென்றாலும் வாழ்வைப் புரிந்துகொள்ளும் விதம் மனிதர்க்கு மனிதர் வேறானதாய் இருக்கிறது. தனிப்பட்டவரின் எதிர்பார்ப்புகளும் உறவை எதிர்கொள்வதும் வித்தியாசப்படுகிறது. நமக்குத் பிடித்தது எல்லோருக்கும் பிடிப்பதாக இருக்குமென எண்ணவியலாது. இவ்வுயிர்வாழ்வு வெளிப்படையாகத்தான் இருக்கிறது, எந்த ஒளிவுமறைவுமற்று. பிறப்பும் இறப்பும், உறவும் பிரிவும், வெற்றியும் தோல்வியும் என. மனித மனம்தான் கூறுபட்டு, இருளடைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் அந்த இல்லங்களுக்குச் சென்றால் புதிதாக வேறு பலர் இருப்பார்கள். அங்கே ஏற்கெனவே இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாது. அவர்களும் இதுபோன்ற இல்லங்களுக்கு வந்து போய்விடுகிறார்கள். வேறு வேறு இல்லங்களுக்கு மாறிப் பார்க்கிறார்களோ என்று தோன்றும். அவர்களின் அல்லல்களை தனிமைத் துயரங்களை மூப்பின் இயலாமையைப் போக்கவல்லதொரு உபாயம் கிட்டினால் எத்துணை நலமாயிருக்கும் இம்மனித வாழ்வு! வெறும் நன்கொடைகளால் நிரப்ப இயன்றது வயிற்றைத்தானே. மனத்திற்கான கொடை எது?

‘தம்பி, அந்தப் பய இப்படி பண்ணிட்டானேப்பா’ என்றார். ஒன்றும் புரியாது விழித்தேன். ‘எல்லா நன்கொடைப் பணத்தையும் எடுத்துக்கிட்டு மாயமாயிட்டானேப்பா’ என்றதும் அதிர்ந்தேன். கோபால் அப்படிச் செய்வானென எள்ளளவேனும் நினைக்கவில்லை. அப்படியானதொரு அறிகுறி கிஞ்சித்தும் தென்படவில்லை. மௌனம் வியாபித்தது அறையில். ‘போகட்டும், ஆண்டவர் பார்த்து நடத்துவார். என் விசுவாசம் வீண் போகாது’ என்றபடி கிளம்பிப் போனார்.  

செல்வம் சன்னலின் வழியே தெரியும் கடலைப் பார்த்திருந்தான். முனைவர் பட்டத்திற்கென வேலைக்குச் சேர்ந்திருந்தான். பணப்பற்றாக்குறையால் ஆரம்பத்தில் வாரக்கூலிக்கு பிரெடெரிக் ஆய்வகத்தில் பணியாற்றி வந்தான். படப்பையில் ஒரு கோழிக்கடையும் நடத்திவந்தான். அங்கே முதல்முறையாக ஒரு கிலோ கோழிக்கு இரண்டு முட்டைகளெனக் கொசுறு வழங்கியது அவன்தான்.

கல்பனாவின் உறவு அவனைக் கொன்றுவிட்டிருந்தது. என்னதான் உறுதியாக முடிவெடுத்தாலும் ஒரு பார்வையில் ஸ்பரிசத்தில் அரவணைப்பில் மதிமயங்கிப் போய்விடுகிறது. காதலா காமமா இரண்டுமா, எதுவென்பது? 

தொடர்புகள் நீள, உறவு கிளைக்க, இன்னும் இன்னும் எனத் தேவைப்படும் தேக விதைகளின் தேட்டைகள். நேரம், இடம் என்ற ஆதாரமற்று அவள் பற்றிய எண்ணங்களின்போது காமமே வந்தழுத்துகிறது. காமக் கடும்புனலில் தன்னைப் பற்றிய மேலான வரைவெனும் புணை அடித்துச் செல்லப்படுகிறது. நீந்திக் கரை காணக் கூடுதில்லை. அவ்வளவு எளிதாகவுமில்லை. இரவு நேரங்களிலோ பல்கிப் பெருகுகிறது. மாரூபம் எடுத்து மிதித்து வதைக்கிறது. யாரிடமும் சொல்லக்கூடியதாயில்லை, இச்சையின் தாங்கொணாக் கனவுகளை. 

வாசற்கதவைத் திறந்து வைத்துவிட்டு முன்கூடத்தில் உடல் கிடத்தியிருந்தோம். பக்கத்தில் சில புத்தகங்கள். எதிரே தொலைக்காட்சி ஓடுகிறது. இரவு ஒன்றரை. ஏதோவோர் பூச்சி மேலே வந்து விழுந்தது. அண்மைக் கடலின் அலைவீசும் ஓசையைக் காற்று அவ்வப்போது வாரியிறைத்து வீட்டிற்குள் அனுப்புகிறது. ஒய் குரோமோசோம்கள் தூக்கமற்றுத் திரிந்தன இந்த இராத்திரியில், எக்ஸ் குரோமோசோம்கள் ஆழ் நித்திரையிலிருந்தாலும்.

எப்போது திசைமாற்றம் கொள்கிறதென்பது காற்றுக்கே கூடத் தெரியுமா? திசைகாட்டி முள் வெறுமனே திரும்ப மட்டுமே செய்கிறது. திரும்புவதுகூட இல்லை. திரும்புதல் இயல்பாய் நிகழ்கிறது. அவ்வளவே. கடற்புறம் நோக்கிக் கால்கள் நடக்க எதிரெதிர் சோடியம் விளக்கின் உச்சி வெளிச்சத்தில் தரையில் நிழல் கூறுபடுகிறது. தெருவோர மணலில் நாய்கள் உறங்குகின்றன. சில செவிசாய்க்க, ஒன்றேயொன்று எழுந்து நின்றது; யாரிவர்கள் இந்நேரத்தில் என்பதாய்ப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது. அலையொலி அதிகரித்துக்கொண்டே வந்தது. காற்றில் குளிரூட்டம். யாருமற்றிருந்தது கடல் சில கட்டுமரங்களுடன். நிலவற்ற இரவது. தூரத்தில் வெளிச்சத்துளிகள் மிதந்தன. வானமெது கடலெது எனும் எல்லை குழைந்திணைந்து இருட்புணர்ச்சியில் இரைச்சலுடன் திகழ்ந்தது கடற்புரம். 

சில வாரங்களுக்குமுன் செல்வம் கல்பனா அணிந்திருந்த உயர்ரக வெளிநாட்டுப் புடவையை மாற்றி வரச்சொன்னான். காலையில் ஆய்வகம் செல்லும் வழியிலேயே அவளைப் பார்த்ததும் கோபம் உச்சிமண்டைக்கு ஏறிற்று. ’ஒடனடியா, இப்போவே மாத்திட்டு வா’ வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுகையில் இரகசியமாக ஆத்திரம் அடக்கிக் கூறினான். மதிய உணவுக்குச் சென்று திரும்பி வருகையில் அப்புடவையையும், துபாயிலிருந்து அவள் கணவன் வாங்கிவந்த நறுமணத் திரவக்குமிழ்கள், இன்னும் இரு புடவைகள், சில நாகரீக ஆடைகள், அனைத்தையும் பையில் வைத்து கொண்டுவரச் சொன்னான். 

அவள் தயங்கித் தயங்கி வீட்டிற்குச் சென்றாள். அம்மா கேட்டால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. போகிற வழியில் கிடந்த சேற்றில் காலை விட்டு புடவையைக் கறைப்படுத்தினாள். ‘கறைப்படுவது எத்தனை எளிதாய் உள்ளது. சுத்தப்படுத்துவதுதான் கடினம்’ என்று நினைத்தாள்.

ஆய்வகத்தின் கொல்லைப்புறமிருக்கும் தூரத்து களப்பரிசோதனைத் தோட்டத்திற்கு அவள் கொடுத்த பையை வேகவேகமாக எடுத்துச் சென்றான். அவள் தூரத்திலிருந்து பார்த்திருந்தாள். அதையறிந்து இன்னும் வேகமாகச் சென்றான். தென்னந்தோப்பினூடே உள்ள வெற்றிலைப் பந்தலுக்கருகில் மறைவாக அப்பையைக் கொளுத்தினான். பாலியஸ்டர் என்பதால் உடன் பிடித்த செந்தீ நொடிகளில் ஆடைகளைப் பொசுக்கிப் போட்டது. நறுமணக் குமிழ்கள் வேதித்திரவத்தால் வெடித்துச் சிதறிப் பற்றியெரிந்தன. கொத்தெனத் தீப்பிழம்பு அவனது சட்டையில் பட்டு நெஞ்சுப்பகுதி சுடர்ந்தது. சற்றே எரியட்டுமென விட்டு, பின் எரிச்சல் தாங்காது நெஞ்சைப் பொத்தினான். நெருப்பணைந்தது. உள்ளே நெஞ்சு தகித்து மெல்ல அடங்கிற்று. ஆனாலும் அவள்மேல் தீராக் கொதிப்படைந்தான்.    

என்னதான் இருந்தாலும் இவன் இப்படிச் செய்திருக்க வேண்டாமென்று அவள் குமைந்தாள். கணவனிடமும் அம்மாவிடமும் என்னவென்று சொல்வது. கண்காணாது தொலைந்து போய்விடத் தோன்றிற்று. ஆறு வயது மகன் பிரின்ஸ் நினைவில் வந்து நின்றான். அவனுக்காக மேலும் துக்கித்தாள். அவன் டிஸ்லெக்சியா காரணமாக கற்பதில் சிரமம்கொண்டிருந்தான். ஆய்வகத்திற்கு கல்பனாவுடன் மகனும் ஒரு விடுமுறை நாளில் வந்திருக்கையில் நுண்ணுயிரிகள், புற்றுநோய் சம்பந்தமான உடலணு வளர்த்தெடுப்பில் ஆய்வுசெய்துகொண்டிருந்தோம். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் ஆர்வம் காட்டினான். நுண்ணோக்கி மூலம் உடலணுக்களைக் காட்டினோம்.

‘இதுதான் செல்லா’ என்று கேட்டான். ஆமென்றதும், ‘அத எங்கேயிருந்து எடுத்தீங்க’ என்றான். உடம்பிலிருந்து என்றதும் கேட்டான், ‘எங்க டீச்சர்கூட சொன்னாங்க செல் பத்தி. ஆனா ஒடம்புல எங்கே இருந்து எடுப்பாங்க?’ அவனுடைய உடம்பே செல்தான் என்றதும் ஆச்சரியமாகத் தன்னைப் பார்த்துக்கொண்டான். எங்களை சந்தேகத்துடன் கண்ணுற்றான். நம்முடைய கண், முகம், கை, கால், உள்ளே உள்ள இரத்தம், மூளை, குடல், எலும்பு என அனைத்துமே செல்தான் என்றோம். மீண்டும் மீண்டும் தன்னையும் எங்களையும் நுண்ணோக்கியையும் பார்த்தான். ‘இதுல வேற மாதிரி இருக்கே’ என்றான். ஒரு கதை சொல்ல வேண்டியிருந்தது.

பெருங்கடலில் தன் நண்பனான டால்பின் குட்டியுடன் ஒரு குட்டி மீன் விளையாடிக்கொண்டிருந்தது. ‘எனக்கொரு சந்தேகம். பக்கத்துப் பாறையிலிருக்கும் இன்னொரு குட்டிப் பெண் மீன் சொன்னது: எங்கோ பெரிய சமுத்திரம் இருக்கிறதாம். மிக மிகப் பெரியதாம், ஆழமும் நீளமும் காண முடியாதாம். எல்லையின்றித் தொடருமாம். உனக்கு அதுபற்றி தெரியுமா?’ என்று குட்டிமீன் கேட்டது. ‘ஓ தெரியுமே’ என்று டால்பின் சொன்னதும், ‘கொஞ்சம் எனக்கும் காட்டேன்’ என்றது. ‘இப்போதே காட்டுகிறேன், கிட்டே வா’ எனக் கூற, குட்டிமீன் எதிர்பார்ப்புடன் துள்ளிவந்தது. மகத்தான சமுத்திரத்தைக் காணும் பேராவலுடன் நின்றது. தன் மூக்கால் அம்மீனைக் காற்றில் மேலே தூக்கிப்போட்டது டால்பின். சுற்றிப் பார்ப்பதற்குள் மீண்டும் அது கடலில் விழுந்தது. ஏமாற்றம் கொண்டது. ‘என்னை நீ ஏமாற்றி விட்டாய்’ என்று முகம் சுளித்தது. டால்பின் சொன்னது, ‘நீ விளையாடி நீந்திக்கொண்டிருக்கும் இதுதான் அந்தச் சமுத்திரம். அது வேறெங்குமில்லை. இதோ இங்கே உன்னோடு சூழ்ந்து ஒன்றாய்க் கலந்து நீயும் அதுவும் வேறாகயின்றி இங்கிருக்கிறது.’ டால்பினை வியப்புடன் பார்த்தது அக்குட்டிமீன். ‘அதிலேயே நீ இருப்பதால் உனக்கது தெரியாதிருக்கிறது. மொத்தத்தில் நீதான் அது.’ அந்தக் குட்டிமீனுக்கு சட்டென தானிருக்கும் கடலின் பௌதீக அழுத்தமும் நீர்மையும் உப்புச்சுவையும் அடர்வும் மிதவைப்பண்பும் அலை நெளிவும் உள்ளூர உணர, துள்ளியொருமுறை விண்ணெழுந்து சமுத்திரத்தைக் கணநேரம் கண்டுணர்ந்து கடல்நீரில் மீண்டும் விழுந்து தன் போக்கில் புத்துணர்வுடன் நீந்திற்று. டால்பினை முட்டித் திரும்பிற்று. 

பிரின்ஸிடம் கதையைச் சொல்ல அவனுக்கும் ஏதோ புரிந்ததாய் மீண்டும் தன் கைகால்களைச் சிலிர்ப்புடன் பார்த்துக்கொண்டான். இன்னுமொரு தரம் நுண்ணோக்கியில் உடலணுக்களைக் கூர்ந்து பார்த்தான். கல்பனா பூரித்தாள். பெரியவன் ஆனதும் நீயும் விஞ்ஞானி ஆகலாம் என்று ஊக்குவித்தாள். அவனைத் தேற்றுவதே தன் பணியாகக்கொண்டாள். 

கல்பனாவின் எல்லாக் கோபமும் தீயிட்ட செல்வத்தின்மேல் திரும்பிற்று. ஒருமணிநேரம் ஓய்வுகேட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டாள். எதிர்ப்பட்ட அவனை ‘என்ன இது இப்பிடி பண்ணிட்டீங்க’ என்று கேட்டு முடிப்பதற்குள் காதணி கழண்டு விழும்படிக்கு அறையொன்று விழுந்தது.  காதைப் பிடித்துக் கொண்டாள். சைக்கிள் தெருவில் விழுந்தது. வலியேற சட்டென்று அவனது சட்டையைப் பிடித்திழுத்தாள். பொத்தான் அறுந்து எகிறியது. அவன் திடுக்குற்றான். அக்கம்பக்கம் யாரும் பார்க்கிறார்களா என்று இருவருமே சட்டென அச்சம் கொண்டனர். நெஞ்சில் தீப்புண் சிவந்திருந்தது. இருவரும் பிரக்ஞை அடைந்தவர்களாக சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு எதிரெதிராக நடந்து பிரிந்தனர். இவ்வுறவை எப்படித் தொடர்வது அல்லது விடுவதெனத் தெரியவில்லை இருவருக்கும்.

அவளது கணவன் துபாய்க்கு மீண்டும் திரும்ப இன்னும் ஒரு வாரம் இருந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்தது. கணவன் சென்றபின் ஒருநாள் அவள் பையனுக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்தது. முனகினான். நெற்றியில் ஈரத்துணியால் பற்றிட்டாள். மூன்று முறை வாந்தியெடுத்துவிட்டான். வயிறு ஒட்டியிருந்தது. அவள் அழுதாள். இந்த இருட்டு வேளையில் யாரைக் கூப்பிடுவது என்று தெரியவில்லை. புடவையை எரித்து, காதிலறைந்த அன்றிலிருந்து செல்வத்துடன் பேசவில்லை. கணவன் சென்று மூன்று நாட்களாகி இருந்தது. வீட்டின் பின்பக்கம் குடியிருக்கும் அவனிடம் போக மனமில்லை. போதும் இந்த அவமானம். எல்லாம் இந்த மனுஷன் வெளிநாட்டுக்குச் சென்று வேலைபார்த்து வருவதால் வந்த வினை. அந்த இளக்காரத்தில்தானே இவன் அடிக்கிறான். இவனுக்கும் கணவனுக்கும் என்ன வித்தியாசம்? சந்தர்ப்பம் வாய்த்தால் எல்லா ஆண்களும் இப்படித்தான் போல.

பையன் மீண்டும் முனகினான். ‘டாக்டர்கிட்டே கூட்டிப்போ’ என்றாள் அம்மா. ‘அவரிடம் சொன்னாயா? சொல்லியிருந்தால் இந்நேரம் ஓடிவந்திருப்பாரே’ என்றாள்.

‘அதெல்லாம் வேண்டாம்’ எனச் சொல்ல நினைத்து அமைதியாய் இருந்தாள். சென்னை நகரின் ஒதுக்குப்புறமான அச்சிறு கிராமத்தில் ஒரேயொரு டாக்டர்தான். அவரும் கிளினிக்கை ஒன்பது மணிக்கெல்லாம் மூடிவிடுவார். மணி பத்தாகிவிட்டது. அவர் குடித்துவிட்டுத் தூங்கும் நேரம். ஆண் துணையற்று டாக்டர் வீடு தேடிச் செல்வது நல்லதல்ல என்று பட்டது. அம்மா எழுந்து வீட்டின் பின்பக்கம் செல்வத்தைக் கூப்பிடச் சென்றாள்.

பையன் முனகி அழுது மெல்ல அவனது தோளில் தூங்கிப் போயிருந்தான். ஊசி போட்டார்கள். வீடு திரும்பி ‘இதோ மருந்து’ என்று அம்மாவிடம் கொடுத்தான். கல்பனாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆய்வகத்திலும் அப்படித்தான் நடந்துகொண்டான். வேலை சம்பந்தமாகப் பேச வேண்டிவரும் வேளைகளில் இருவரும் வேறு வேறு திசையைப் பார்த்தவாறு பேசிக்கொண்டனர். மதிய உணவிற்குத் தினமும் இன்னும் சிலரோடு ஒன்றாகச் செல்வது வழக்கம். ஒரு கூட்டமே இருக்கும். இப்போதோ இடைவெளிவிட்டு முன்னும் பின்னுமாகச் சென்றனர். சண்டையென்பதை யாருக்கும் காட்டிக் கொள்ளாமல் ஏதோ அலுவல் நிமித்தம் சீக்கிரம் முன்னே செல்வதாய் அவன் செல்வான். இவளும் உடல்நலம் சரியில்லை என்றபடி மெதுவாகப் பின்னால் நடப்பாள். சில நாட்களுக்கு இந்நாடகம் நீடித்தது. 

வீட்டின் உள்ளறையில் மகனைச் சாய்த்துப் படுக்க வைத்துவிட்டு ’போய் வருகிறேன்’ என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தான். காசு வாங்கவில்லை. கொடுக்கவும் காசும் இல்லை. ஒவ்வொரு முறை கணவன் வந்து திரும்பி வெளிநாடு செல்கையில் சொற்பமான பணமே அவளுக்கு மிஞ்சும். அதுவரை சேர்த்து வைத்ததையெல்லாம் செலவழித்துவிட்டுச் செல்வான். இவள் தனித்துத் தலையெடுத்து மீண்டுவிடக் கூடாதென்பதில் மிகக் கவனமும் வன்மமும் கொண்டிருந்தான். கடல் தாண்டியிருக்கும் அவனை அண்டியே எப்போதும் அவளிருக்க வேண்டுமென்பதில் குறியாயிருந்தான். சுங்க வரி ஏதும் கட்டவேண்டியிருக்கும் என்கிற பெயரில் இருந்த காசையெல்லாம் அவன் எடுத்துச் சென்றுவிட, வீடு வந்துசேர்ந்ததும் வாடகைக் காருக்குக் கொடுத்து முடிக்கவே பணம் சரியாயிருந்தது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான், சம்பளம் வரும்வரை திண்டாட வேண்டியதுதான். 

இம்முறை கணவன் வந்தபோது ஒரு பழைய வீட்டை வேறு கடனில் வாங்கியாயிற்று. துபாய் போய் மாதாமாதம் பணம் அனுப்பினால்தான் கடனடைக்க முடியும். தவறாமல் இதுவரை பணமனுப்பியதாக சரித்திரமில்லை. மறுத்தும் பேசமுடியாது. எதிர்த்தால் அடுத்த நான்கு நாட்களுக்கு அடியும் உதையுமாக கழியும். மகன் பள்ளி கிளம்பிச் செல்லவெனக் காத்திருந்து அடிப்பதும் வன்புணர்வுக்கு ஆளாக்குவதும்தான் அவனது ஒரே வேலை. பிள்ளைக்காக உறவைத் துண்டித்தும் விடமுடியவில்லை. 

நட்பாக வந்த புதிய உறவும் அதன் அர்த்தத்தை இழந்து வேறெங்கோ சென்றுகொண்டிருந்தது. செல்வத்தின் கோபம் நியாயமானதாய்ப் பட்டது. அவனிடம் பேச வேண்டும் போலிருந்தது. அப்போதே அந்த இரவிலேயே அவனைப் பார்த்துக் கட்டியணைத்து அழவேண்டும் போலிருந்தது. பிள்ளைக்குக் காய்ச்சல் குறைந்திருந்தது. அழுதபடியே படுத்தாள். ‘பிள்ளைதான் சுகமாகிட்டானே, நீயெதுக்கு அழுற’ என்றபடி அம்மாவும் படுத்தாள். 

அவளை நினைக்க நினைக்க செல்வத்துக்குப் பாவமாயிருந்தது. இருப்பினும் கணவன் வாங்கிவந்த அப்புடவையை அவள் கட்டியதை நினைத்ததும் மீண்டும் கோபம் மூண்டது. சட்டையைப் பிடிக்குமளவிற்கு வந்துவிட்டாள். எல்லாம் நான் செய்த பாவம் என்று நொந்துகொண்டான். எனினும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த இரவில், அவளைப் பார்க்கக் கிடைத்ததற்காக மகிழ்ந்தான். அவள் எதுவுமே பேசாததும், ‘நன்றி’ என்று ஒற்றை வார்த்தைகூடச் சொல்லாததையும் நினைத்து மீண்டும் வெகுண்டான். ‘வரட்டும் நாளைக்கு’ என்று படுத்துத் தூங்கிப்போனான்.

அவள் ஆய்வகம் செல்லாமல் வீட்டிலேயே விடுப்பெடுத்துக்கொண்டு படுத்திருந்தாள். அது ஒரு தற்காலிக முயற்சி, அவனைத் தவிர்ப்பதற்கு. வேறு வழி புலப்படும் வரையில் இதுவே உசிதம். கட்டாயம் அவனை மறக்க வேண்டும், இல்லாவிட்டால் கடவுள் தன்னை மன்னிக்கவே மாட்டார் என்று பிரார்த்தனை செய்தாள். 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘என் மனதிற்கினியவன்’ எனக் கடவுளால் பெயர் சூட்டப்பட்ட இஸ்ரேலின் அரசன் தாவீது பாவத்தின் பளு தாங்காது புலம்பி வான் நோக்கி இறைஞ்சினான். தன் மாளிகையின் உப்பரிகையில் உலவிக்கொண்டிருந்தவன் அண்மைக் குடிசையில் அவள் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அதிசயித்தான். வேட்கை துளிர்த்தது. திரண்டது. பெருவெள்ளமாகி அவனை இழுத்துப்போனது. இரகசியமாய் அவளை அதிகாரமாய் அழைத்து வரச்செய்து இன்புற்றான். அச்சமயம் அங்கே போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. தளபதி ஜோயம் எதிரிகளை வீழ்த்திக்கொண்டிருந்தான். பத்சேபாவின் கணவன் உரியா தன் ராஜாவான தாவீதிற்காகவும், தாய்நாடான இஸ்ரேலுக்காகவும் உயிரைத் துச்சமெனப் பணயம் வைத்து வாள் வீசிக்கொண்டிருந்தான். தாவீதோ கடமையும் வீரமும் செறிந்த தன் போர்வீரனின் உரிமை மனைவியைக் கள்ளத்தனமாய் ருசித்து வந்தான். அவள் கர்ப்பம் தரித்தாள், கணவனில்லாத வேளையில்.

தாவீது கடவுளுக்குப் பயந்தவன். நீதிமான். மாவீரன். மேலும் அவனொரு கலைஞன். யாழிசையில் கைதேர்ந்தவன். கவிஞனும்கூட. பயமும் குற்றவுணர்வும் அவனை வாட்டத் தொடங்கின. ஊருக்குத் தெரிந்தால் எத்தனை கேவலம், அவமானம். தனக்காகப் போர் செய்யப்போனவனின் ஒரே மதிப்புமிகு மனைவியை இத்தனை அசிங்கமாய் கேவலமாய்த் திருடித் தின்றது அவனை வெகுவாய் உறுத்திற்று. குறுக்குவழி உதித்தது. ஏதோவொரு காரணம் கூறி அக்கணவனைப் போர்முனையிலிருந்து அரண்மனைக்கு வரப் பணித்தான். பத்சேபாவின் கணவனோ கடமை தவறாதவன். அரசருக்கு அடிபணிந்தவன். நாட்டுநலனில் அக்கறை உள்ளவன். தாவீது எவ்வளவோ வற்புறுத்தியும் அரண்மனை வாசலிலேயே அவன் படுத்துக் கிடந்தான். பாளையத்தவர் அங்கே போரிட்டு மாண்டுகொண்டிருக்க, நான் உல்லாசம் காண்பது எப்படி என்று பிடிவாதமாய்த் தெருவோரம் மூன்றிரவுகளைக் கழித்தான், தன் அழகிய மனைவியைப் பார்க்கவோ அவளுடனிருக்கவோ விருப்பமின்றி. 

தாவீது மருண்டான். திட்டம் கைகூடவில்லை. அவமானமாய் உணர்ந்தான். குன்றிப்போனான். இப்படியொரு மனிதனா? இப்படிப்பட்ட அற்புதமானவனுக்கா துரோகமிழைத்தோம்? எனினும் அவப்பெயரும் பெரும் பழியும் சூழ்வதை உடனே தடுத்தாக வேண்டும். தற்பற்றின் மிகுதியாலும் ஊர்ப்பழியைத் தவிர்க்கும் அவசரத்திலும் தவிப்பிலும் இன்னும் கேடாகச் சிந்தித்தான். சதி உருவாகிற்று. அவனிடமே கொடுத்து தளபதிக்கு ஓர் அரசோலை அனுப்பித் தந்தான். ‘படையின் முன்வரிசையில் நிறுத்தி எதிரிகளின் வளையத்திற்குள் அவனைத் தனியே விட்டுவிட்டு வந்துவிடு. அவன் சாகத்தான் வேண்டும்’ என்று எழுதியிருந்த சேதியின் விபரமறியாது போர்முனைக்கு அரசனின் ஆணையை எடுத்துக்கொண்டு ஓடினான் உரியா. போரின்போது எத்தனை முக்கியமானது அரசாணை என்று அவசரமாய் ஓடியவன் ஒருபோதும் ஊருக்குத் திரும்பவேயில்லை.

சமூகம் தறிகெட்டுப் போகும்போது இது நாடா அல்லது காடா என்று வினவுவது வழக்கம். அது தவறான பார்வை என்கிறார் டெஸ்மாண்ட் மோரிஸ் எனும் விலங்கியல்பு ஆய்வாளர். காட்டில் அனைத்தும் முறையாகக் கட்டமைக்கப்பட்டு உள்ளன. கட்டுக்கோப்புடன் திகழ்கின்றன. குழப்பமெல்லாம் நாட்டில்தான். ஒரு விலங்கு காட்டில் மனம் பிறழ்வதில்லை. உயிரியல் பூங்காவில் கிடக்கும் விலங்குகள் மனக்குழப்பம் கொள்கின்றன. தன்னினத்தையே அடித்துண்கின்றன. தன்பால் விலங்குகளைப் புணர முனைகின்றன. சுயமைதுனம் செய்கின்றன. காட்டில் இது நிகழ்வதில்லை. ஏனெனில் காடு இயற்கையானது, நாடோ செயற்கையானது என்கிறார். 

உயிரின மீட்சியானது இச்சைக்குள்தான் அடக்கம். இச்சையைத் தகாதது என்பதற்கில்லைதான். ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றியதொரு வரைவு உண்டு. அது தகர்ந்து போகும்போது அதிர்ச்சியும் குற்றவுணர்வுமாய்க் குமைகிறது. உலகில் மிக அற்புதமான தியான ஆசிரியர்கள் இருந்துள்ளனர். ஸோக்யால் ரின்போசே, துருங்பா ரின்போசே போன்ற திபெத்திய தியான ஆசிரியர்கள், மெசுமி ரோஷி எனும் ஜப்பானிய ஜென் ஆசிரியர் எல்லோருமே இச்சைக்குள்ளாகித் தமது சீடர்களையே சீரழித்தவர்களென நிரூபணமானவர்கள். இறந்தபிறகும் தொடர்கிறது அவர்களைப் பற்றிய சர்ச்சை. ஆனால் மிக அற்புதமான ஆசான்கள். என்ன செய்வது, உயிர்வழி இச்சையது. 

நினைத்திருக்கும் நம் வரைவுக்கும் இயல் உலகுக்கும் அதலபாதாளமாய் ஒரு பள்ளத்தாக்கு. எப்படிப் பாலமைப்பது? வாலிப வயதில் பிறழ்வுகளால் களவாடப்பட்ட பரிசுத்தமெனும் கோட்பாடு பாவக்கோட்பாடுகளால் நெறிகெட்டவை என்றாயிற்று. அதையே வைத்துக்கொண்டு மதம் மானுட வாழ்வில், உளவியல்ரீதியாக விளையாடுகிறது. பாவம் என்று பகரும் பாதிரிமார்களும் துறவிகளும் முனிகளும் அவ்விளையாட்டிற்கு விதிவிலக்கல்ல. அதே போல விலங்குகள் உள்ளுணர்வுடன் செயல்படுகின்றன, மனிதனோ பகுத்தறிவுடன் திகழ்கிறான் என்பதை மறுக்கிறார் வில்லியம் ஜேம்ஸ் எனும் பதினெட்டாம் நூற்றாண்டின் தலைசிறந்த உளவியல் மேதை. காட்டிலிருந்து வெளியேறித் தொலைவாய் வாழ்ந்தாலும் விலங்குகளைவிட மனிதகுலம்தான் அதீத உள்ளுணர்வுடன் வாழ்கிறது. அவர் ஆன்மிகம் சார்ந்த மனிதர்களின் தேடல்களை, அரூப அனுபவங்களை மெய்யானவையென நிறுவுகிறார்.

பத்சேபா புலம்பினாள். தாவீது தேற்றினான். அநாதரவான அவளுக்குத் தஞ்சமானான். தாவீதின் அந்தப்புரத்தில் ஓர் அங்கத்தினரானாள். திருட்டுத்தனமாய்க் கவர்ந்து வந்த ஆட்டுக்குட்டி உள்ளே கதறியது. ஆட்டிடையனும் கதறினான். தேவன் ஆடு மேய்க்கும் கோலால் தாவீதை இரவெல்லாம் துரத்தினான்.  தூக்கமின்றி உயிருக்கு ஊழிக்குப் பயந்து தாவீது ஓடிக்கொண்டேயிருந்தான். தன்னை மிகவும் நேசித்த தேவனைத் தேடினான். பெயரிட்டு அலறியழைத்தான். பதிலேதுமின்றிப் போனதால் மேலும் கதறினான். ‘தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மேலான இரக்கத்தின்படி என் மீறல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அத்துமீறல்களை நான் அறிந்துள்ளேன். என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. இதோ நான் துர்குணத்தில் உருவானேன். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள். நான் நிவாரணமும் மகிழ்ச்சியும் அடையும்படி செய்யும். அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும்.’ தனித்து அழுதான். வான் நோக்கி இறைஞ்சினான். கொடுங்குற்றவுணர்வும் ஊழித் தண்டனைக்கான பேரச்சமும் எலும்புவரை ஊடுருவிப் பாய்கிறது. அதன் நீளிருள் வலியிலிருந்து மீள்வதே மெய்யான விடுதலையும் நன்மீட்சியுமாகும்.   

திருமணத்திற்கு முன் கல்பனா கும்மிடிப்பூண்டியில் குடியிருந்தாள். அவளது விதவை அம்மாவின் உதவியுடன் கல்பனாவை அண்டை வீட்டில் குடியிருந்த அவளது கணவன் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்திருந்தான். நிர்பந்தித்து அவளை கிறிஸ்துவத்திற்கு மாற்றினான். மகனுக்கு ஞானஸ்நானம் செய்வித்தான். தெலுங்கு தாய்மொழி என்பதாலும் தமிழ் தெரியாததாலும் அந்த அம்மாவுக்கு நிகழ்வது எதுவும் தெளிவாகப் புரியாது போயிற்று. கையறுநிலை வேறு. இளங்கலை கணக்குப் படிப்பை வைத்து அவளுக்கு பிரெடெரிக் ஆய்வகத்தில் வேலை கிடைத்தது. அம்மா தனது குலமூர்த்தியான ஏழுமலையானை வேண்டிக்கொள்ள, மகள் ஏதோவொரு துயரகதியில் ஏசுவையே ஆதாரத் துணையாகப் பற்றியாயிற்று.

வீசிச்சாடும் அலைக்கரையில் கட்டுமரமொன்றில் அமர்ந்திருந்தோம். துக்க கணங்களில் சில சமயம் என்னைப் பாடக் கேட்பான். அவன் விரும்பியுருகும் ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ எனும் பாடலை அவனுக்குக் கேட்கும் அளவில் பாடினேன். மெல்ல உடல் குலுங்கிற்று. ‘எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும், யாரோ வருவார் யாரோ இருப்பார்’ வரிகளில் அப்படியே மணலில் விழுந்து அழுதான். அலையின் இரைச்சலில் முதலில் அவனது அழுகை கேட்கவில்லை. மெல்ல உடல் குலுங்கிற்று. நள்ளிரவின் கடற்புற வளியெங்கும் செறிந்திருந்த ஈரிப்பில் அவனது விழிவழிக் கசிந்தூறும் கண்ணீரும் கலந்தது. கடலும் இருட்பிழம்பாய் மிதந்தது. அலைகள் மட்டுமே வெண்சிறகுகளாய்க் கரையை நோக்கித் திரண்டு திரண்டு தாவிவந்தன.  

செல்வம் விடுப்பில் கடலூர் அருகில் உள்ள சொந்த ஊரான மனவேடு கிராமத்திற்குப் போய்விட்டான். விடுப்பு முடிந்து சென்னை திரும்புகையிலும் குழப்பமே மிஞ்சிற்று. எம்முடிவுக்கும் வரமுடியாதவனாய்த் தவித்தான். ஏமாற்றத்திற்குள்ளானதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளைப்பற்றி எல்லாமும் நன்றாகவே தெரிந்திருந்தான். என்றாலும், கணவன் கொண்டுவந்த புடவையை அவள் கட்டுமளவிற்கு அவனிடம் அவளுக்கு ஈடுபாடிருப்பதாய் எண்ணியழுதான். ஊரினூடே நடந்தான். ஒருகாலத்தில் செறிந்தோடிய தென்பெண்ணை மணலாறாய் எஞ்சியிருந்தது. அதன் விலாவில் நுழைந்து, குறுக்காக நீந்தி, கரைகடக்கும் எருமைகளின் மேலேறி அமர்ந்து விளையாடியது. நெல்லும் கரும்பும் செழித்து வளர்ந்தாடின. கழனிகளில் ஆழ்துளைக் குழாய்கள் போடப்பட்டிருந்தன. பள்ளிக்குச் சென்றது எல்லாம் நினைவுக்கு வந்தது. படிக்கவேண்டுமென்ற ஆசையில் எப்போது ஐந்து வயது முடியுமென்று காத்திருக்க, தான் குட்டையாய் இருப்பதால் தலைக்குமேல் இடக்கையால் வலது காதைத் தொடும் பயிற்சியைத் தினமும் செய்துவந்தான். யாரோ அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அரசு உதவித்தொகையில் மாணவர் விடுதியில் தங்கி எங்கெங்கோ படித்து வளர்ந்தான். அந்த ஊரிலேயே, பரம்பரையிலேயே, முதலாமவனாக பட்டம் முடித்து முனைவர்பட்ட ஆராய்ச்சியைப் பணியிலிருந்தபடியே தொடர்ந்துவந்தான். இன்று இப்படிக் கலங்கித் தவிக்கிறான். இதற்கொரு முடிவுகட்ட வேண்டுமென உறுதிகொண்டான். அவன் தவிப்பை உணர்ந்ததாய் முப்பத்தைந்து வயதானவனுக்கு உடனே மணமுடித்து வைக்க அவனது அம்மாவும் சகோதரர்களும் பெண் தேடினர். வாரம் முழுக்க யோசித்து அதுவே நல்லதென எண்ணி வீட்டாருக்குத் தலையசைத்தான். எவ்வளவு சீக்கிரத்தில் என்றாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டுப் படப்பையிலுள்ள ஆராய்ச்சி நிறுவனத்திற்குக் கிளம்பினான்.

அந்த ஆய்வகத்தில் இருந்தபடியே வெகுவிரைவில் வேறு நிறுவனத்தில் புதிய வேலைக்கு முயல கல்பனாவும் திட்டமிட்டாள். இரண்டு நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தாள். ஒரே வாரத்தில் தற்போது வேலையில்லை என்று பதில் வந்தது. அவனைப் பார்க்காமலிருக்க ஏதாவது செய்ய வேண்டும். மதியம் ஒன்றாக உண்பதைத் தவிர்த்தாள். தேநீருக்கும் தனியாகச் சென்றாள். எல்லா எதிர்முயற்சிகளின் முடிவில் அவனைப் பார்க்கத் தேடும் விழைவே எஞ்சி நின்றது. அவனுடைய மேசையை அவ்வப்போது தொட்டுப் பார்த்தாள். சாதாரணமாகக் கேட்பதுபோல் எப்போது வருவார் என ஆய்வகப் பணியாளர்களை விசாரித்தாள். தெரியாதென்று கூறிவிட்டனர். மேசையில் கிடந்த அவனுடைய பேனாவை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு எடுத்துச்சென்றாள். 

ஆண்களுக்கு ‘ஒய்’ குரோமோசோம்கள் கைகளிலும் தோளிலும் வெளிப்படுகின்றன. பெண்களுக்கோ மார்பிலும் அரையிலும் சில அசைவுகளிலும் ‘எக்ஸ்’ குரோமோசோம்கள் பெருகி வளமூட்டுகின்றன. இருவர் தேகம் முழுவதும் குரோமோசோம்கள் திரிந்து கொண்டுதானிருக்கின்றன. அவை தம்மைத் தாமே புதுப்பித்துக்கொள்கின்றன. ஆணின் ‘ஒய்’ குரோமோசோமும் பெண்ணின் ‘எக்ஸ்’ குரோமோசோமும் உணர்ச்சியில் சந்திக்கும்போது ஒரு ஆண்குழந்தையாக உருவெடுக்கிறது. அணுவுக்குள் இருக்கும் இன்னொரு எக்ஸ் குரோமோசோமுடன் பெண்ணின் குரோமோசோம் சேரும்போது பெண்குழந்தை பிறக்கிறது. ஒரு ‘ஒய்’ குரோமோசோமும் ‘எக்ஸ்’ குரோமோசோமும் சேர்வதே கலவியின் குறிக்கோள். ஒரு பெண்ணைப் பார்த்ததும் ‘ஒய்’ குரோமோசோம் துடிக்கிறது. அதேபோல் ஒரு ஆணைப் பார்த்ததும் ‘எக்ஸ்’ குரோமோசோம் துடிக்கிறது. இத்துடிப்பே காதலாக, காமமாக, வேட்கையாக, இச்சையாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது. உடலெங்கும் வியாபித்துத் திரியும் குரோமோசோம்கள் தன்னுள்ளே பிரிந்து பிரிந்து புதிய குரோமோசோம்களை பிறப்பிக்கின்றன. தக்க பருவத்தில் தன்னை வேறு பாலின குரோமோசோமுடன் இணைத்து புதிய வம்சாவழிகளை மாறுபட்ட மரபுக்கூறுகளைக் கொண்டு திறம்பட்ட சாத்தியங்களை உருவாக்குகின்றன. புதிய உடல்கள், புதிய வம்சங்கள், புதிய குணங்கள் தோன்ற இக்குரோமோசோம்களே வித்திடுகின்றன. அவை பாவமறியாது. அவற்றுக்குத் தராதரம் தெரியாது. ஒழுக்கம் உணராது. நெறிமுறைகள் புரியாது. ஆண் பெண் ‘ஒய்’, ‘எக்ஸ்’ என்ற வேறுபாடு மட்டுமே தெரியும். வேறெதுவும் தெரியாது. உலகைத் தெரிந்திருக்கும் மனமோ இச்சை மேலிட்டாலும் சமூகத்துக்குப் பணிந்து கிடக்கும். மீறுகையில் தகாத உறவுகளும் தடம் மாற்றும் வழிகளுமே மிஞ்சும். பின்னர் கதறும். மன்னிப்பு கோரும். உள்ளொன்று மறைத்து புறம் வேறொன்று காட்டும். மாயை என்பது பார்க்கும் பொருளிலோ தோற்றத்திலோ அல்ல. நம்மின் உள்ளார்ந்த பார்வையிலேயே எண்ண உற்பவிப்பிலேயே மாயை இருப்பது பிறகே புரியும், அதில் அடங்கியிருக்கும் டார்வினின் இயற்கைத் தேர்வெனும் கோட்பாடு. 

பருக்களின் பொறுக்குகளைக் கிள்ளி எறிவது போல் ஊனோடுறையும் வேட்கையையும் தாங்கவியலாத் துயரத்தையும் தீராப் பழியையும் குற்றவுணர்வையும் கொணர்ந்துவரும் இத்தாகத்தைத் தவிர்ப்பது எங்ஙனம்? கழற்றிவிடுவது எப்படி? பார்த்தால் மேலிடுகிறது. கண்ணை மூடினால் பாகம் பாகமாக, வடிவங்களாக வந்து வதைக்கிறது. பேசினால் தழைக்கிறது. பேச்சறுத்தால் மோகிக்கிறது. யாருமற்ற வெளியில் தூரத்தில் வருவது யாராயிருப்பினும் ஆணா பெண்ணா என்கிற அடையாளப்படுத்துதலே முதல் மன இயல்பாக இருக்கிறது. தேகமது பொய்யென வெறுமனே போகுதல் இயலுமா? தேகங்கள் பொய்யாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் இச்சை நிஜமாக உட்குடைந்து குளவியைப் போல் தம்மின் வளைக்குள்ளே உடலுக்குள்ளேதான் உறங்குகிறது.

அவளுக்கும் உடலும் உள்ளமும் குடைச்சல்கொண்டது. கையோடு எடுத்துச்சென்ற பேனாவைக்கொண்டு தனது தனியறையில் செல்வத்தின் பெயரை உள்ளங்கையில் எழுதினாள். தயக்கத்தோடு அப்பெயரின் முன்னால் தன் பெயரை எழுதினாள். படித்துப் பார்த்தாள். இரண்டு மூன்றுமுறை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தாள். பின்னர் சட்டென்று அப்பெயரின்மேல் கிறுக்கினாள். படிக்க முடியாதபடிக்கு கிறுக்கினாள். ‘சே, என்ன இது. எத்தனை பெரிய பாவம். கடவுள் என்னை மன்னிக்கட்டும்’ என்று வாய்க்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். சாப்பிடாமல் படுத்துவிட்டாள்.

செல்வம் ஊரிலிருந்து படப்பைக்குத் திரும்பினான். நள்ளிரவில் அவள் வீட்டைத் தாண்டிப் போனான். அவளது அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. என்ன செய்துகொண்டிருப்பாள், தன்னை நினைத்திருப்பாளோ! நேரே போய்ப் பார்க்க அவாவுற்றது. தெருநாயொன்று நட்புறவாடி மகிழ்ந்தது. திடுமென மனவெழுச்சி கொண்டு அவள் வீட்டுக் கதவண்டை போய் நின்றான். ஓங்கித் தட்டப் பார்த்துத் தயங்கி மெல்ல கதவைத் தட்டினான். அவனுக்கென்றே காத்திருந்ததாய் அவளே கதவைத் திறந்தாள். சட்டெனக் கட்டியணைத்தாள். மெளனமாக அழுதாள். சமாளிக்க முடியாமல் அவன் கரங்கள் அவளை வளைத்து அணைத்தன. தாகமும் நேசமும் ஒருசேரத் தழுவின. உணர்வெழுச்சிகள் புரண்டோடின. அடுத்த அறையிலிருந்த அவளது அம்மா, யாரெனத் தூக்கத்தோடு கேட்டுவிட்டு மெல்லப் புரண்டு படுத்தாள். வழக்கம்போல அவ்விரவிலும் நிகழ்ந்துகொண்டிருப்பதை அறிந்திருப்பாள். மௌனமாக மனம் குமைந்திருப்பாள்.

இவ்வுறவை எப்படி எடுத்துக்கொள்வதென அவளுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. கண்ணின் மணியாய் வளர்த்த தன் ஒரே மகளை என்னவென்று ஆற்றுப்படுத்துவது? ஏற்கெனவே குலைந்துபோன அவளது உடலும் உள்ளமும் தற்காலிகமாய் சின்னதாய் சில சந்தோஷங்களை அனுபவிப்பதில் தாய்க்கென்ன மறுப்பு? முழுதாய்க் கைவிடப்பட்ட அவளது இளமை இப்படித் தனக்கென ஒரு வடிகாலை, நிறைவைத் தேடிக்கொள்வதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்? மகளின் மகிழ்ச்சிதான் அவளதும்கூட. 

செல்வம் வியர்வையும் கண்ணீருமாய் விடுபட்டுப் பின்வாங்கி வீடு திரும்பினான். 

அவளுக்காக அவளின் அண்மைக்காக எத்தனை நாள் ஏங்கியிருக்கிறான். எத்தனை இராத்திரிகள் கிளர்ந்தபடியே கரைந்திருக்கின்றன. எத்தனை விடுமுறை நாட்களின் பகல் வேளைகள் கிளர்ச்சித் தவிப்போடும் கூடிமுயங்க வேறு உடலற்றும் வெறும்தரையில் கிடந்தபடி கழிந்திருக்கின்றன. எல்லா ஒழுக்கநெறிகளையும் சேர்த்துக்கட்டி தலையணைக்கடியில் பொதிந்து வைத்து எப்போது உறக்கம் மேவியதென்ற பிரக்ஞையற்று வெறுமனே படுத்துக்கிடக்க தனிமையின் அவஸ்தை நீடித்து நாட்கள் சாரமற்று சோர்வுற்று நகரும். நகர்ந்திருந்தன. ஆனால், எல்லா உறுதிப்பாடும் தகர்ந்து போயிற்று. ஒரேயொரு அணைப்பில் கதிகலங்கிற்று.

குரோமோசோம்களுக்குத் தெரிந்ததெல்லாம் வேறொரு தேகத்தின் குரோமோசோமுடன் கலந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்வதே. இதில் மனிதர் மட்டுமல்ல, ஒரு செல் உயிரெனப்படும் தாவரத்திற்கும் அது குறித்த மறைமுகப் பாதிப்புகளுண்டு. ஒருவகையான தாவரத்தின் பூக்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தின் பெண் பூச்சியைப் போன்றே காணப்படும். அதன் மணமும் பெண் பூச்சியை ஒத்ததாகவே இருக்கும். ஆண் பூச்சிகள் தன்னினத்தின் பெண் பூச்சிகள் என்று ஏமாந்து புணர்ந்துசெல்லும். பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடந்தேறும். இனத்தைப் பெருக்கிக்கொள்ளும் அத்தாவரம். இப்படியாக அந்த ஆண் பூச்சிகளோ இழந்தது ஒரு நிஜ பெண் பூச்சியுடன் கூடமுடியாமல் போனதுதான். இச்சையும் வேட்கையும் இத்தனை ஆழமும் தீவிரமும் கொண்டிருக்கையில், அவ்வுணர்வுகள் மிக இயற்கையானவை என்றால் அதைத் தடுக்கவோ தவிர்க்கவோ என்னயிருக்கிறது?

இயற்கையில் இனப்பெருக்கத்தில்தான் எத்தனை வகை? தன்னைத்தானே வகிர்ந்துகொள்ளும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள், ஓருடலிலிருந்து பிரிந்துபோகும் பவளங்கள், கிளைத்துப் பிரியும் ஹைட்ராக்கள், கடல் நட்சத்திரங்கள், புணர்வின்றி முட்டையிடும் பார்த்தெனோஜெனசிஸ், தன்னிலே ஆண் பெண் பெருக்க உறுப்புகள் கொண்டு தன்னையே புணர்ந்து பெருகும் ஹெர்மாபுராடைட் மண்புழுக்கள் எனப் பல வகைகளுண்டே! அப்படியாக மனிதவுயிர்கள் இருந்திருக்கக்கூடாதா? அத்துடன் கொஞ்சம் பச்சையமும் ரோமங்களில் இருந்திருந்தால் ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவும் கிடைத்திருக்குமே? சுலப உணவும் தற்புணர்வுமாயிருந்திருந்தால் இம்மனிதக்கூட்டம் எப்படி இருந்திருக்கும்? அப்படி இருந்திருந்தால் அன்பு, கருணை, நட்புறவு, தியாகம் அல்லது கடவுளுக்கான தேவை இருந்திருக்குமா? அன்பும் பரஸ்பர நட்புறவும் இல்லையெனில் என்ன மாதிரியான வாழ்விதமாய் இருந்திருக்கும்? உறவுகளில்தான் அர்த்தமும் வாழ்வும் உள்ளதோ?   

அடுக்ககத்தின் கீழே வாகனம் நிறுத்துமிடத்தில் குப்பன் வாட்ச்மேன் இருமிக்கொண்டிருந்தார். மழை பெய்திருந்ததால் இருமல் அதிகமாகி இருந்தது. பீச் ரோடு கடலைத் தொடும் முனையில் அவரது குப்பம் இருந்தது. ஐம்பது வருடங்களுக்கு மேலாக கட்டுமரத்தில் கடலேறிப் போன உடம்பது. வாழ்வுக்கும் வறுமைக்கும் உப்புக்கும் வெயிலுக்கும் மழைக்கும் புயலுக்கும் ஈடுகொடுத்த ஐந்து கட்டுகளாலான அவ்வுடல் சாதாரண மழைத்தூறலுக்கு நடுங்கிப் போகிறது. பார்வை குறைந்து, பல் விழுந்துபோன பின்னும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் காவலெனக் கிடந்து தவிக்கிறது. வீட்டண்மையில் ஓர் அடுக்ககம் உருவாகிக்கொண்டிருந்தது. அங்கும் இவரைப் போல ஒரு வயதானவர் வாட்ச்மேனாய் இருந்தார். போன மழைக்காலத்தில் அவரது குடிசையின் வாசலில் வழுக்கி விழுந்து இறந்துகிடந்தார். இரவே இறந்திருக்கிறார். உடல் விறைத்துப்போயிருந்தது. குப்பன் வாட்ச்மேனின் அப்போதைய தேவைகளென்ன? அவரது உலகம் எப்படிப்பட்டது? மரணம் குறித்த அவரது புரிதல்தான் என்ன? மரணத்தை விடுவோம். இம்மனித வாழ்வு, உறவு பற்றிய அவரது பார்வை என்ன? எது கேட்டாலும் ஏதோ புரிந்ததாய் களுக்கெனச் சிரிப்பார். பின் அவரது முண்டாசுத்தலை குனிந்து வெறும் தரையையும் உள்ளங்கையையும் பார்த்திருக்கும். அவரது மௌனத்தின் அர்த்தம்தான் என்ன? அவருக்கு இருமலை நிறுத்த மருந்துபாட்டில் ஒன்றை எடுத்து வந்து கொடுத்துவிட்டுப் போனோம். 

செல்வமும் நானும் கடலண்டை வந்தடைந்தோம். 

முந்தையநாள் மாலை அங்கே வந்தபோது மீனவச் சிறுவர்கள் கடலலையில் நீந்தி விளையாடிக்கொண்டிருந்தனர். கரை சற்றே பின்னுக்குப் போயிருந்தது.  தரை சமதளமாய்ச் சரிந்து நீண்டு கடலுக்குள் அடங்கியது. அலைவந்து கழுவித் திரும்ப பளிங்கு போல மின்னிற்று. அப்படியே இன்னும் இருபதடி நடக்கலாம் கடலுக்குள். அப்புறம் மெல்ல ஓரடி இறங்கும். மீண்டும் கொஞ்சம் போனால்தான் ஆழம் மிகும். வலதிலொரு குழியிருக்கும். அதில் இறங்கினால் இடுப்பளவு நீர் ததும்பும். சுற்றிலும் கடலும் பின்னே கரையும் எனத் திகிலூட்டும். தரையடி மண்துகள்கள் பாதங்களை என்னவோ முணுமுணுவெனப் பண்ணும். பாதமிறங்கும் ஆழமாய். அவ்வப்போது கால் தூக்கினால் குழியை மணல்துகள்கள் மேவ கடல்நீர் நிரப்பிப் போகும். அப்படியே கண்மூடி நிற்கலாம். புரளும் நீரலை அழுத்தம் உடலை அசைத்துப்பார்க்கும். குளிராய் வீசுங்காற்று உடலைப் பதப்படுத்தும். 

நாய்கள் ஒன்றோடொன்று விளையாட்டாய்க் கடித்து உரசியோடின. கடல்வெளியென்றால் பிராணிகளும் உற்சாகமாகின்றன. ஒரு நாய் காகங்களை விரட்டியோடியது. கரை ஒதுங்குபவற்றைக் கொத்தித் தின்னவென்றே சில காகங்கள் கடலலையின் பின்வாங்கலுக்குக் காத்திருந்தன. மனிதர்களைப் போல தன் ஜீவிதத்தை தன்னிருப்பிட வசதிக்கேற்பக் காகங்களும் அமைத்துக்கொள்கின்றன. கடலோர நண்டுகளுக்குச் சில காத்திருக்கின்றன. சில மீன் வலைகளில் சிக்கியவற்றையும், சில மீன் அங்காடிகளையும், காயவைத்த கருவாடுகளையும், சில அண்மைச் சந்தையிலுள்ள சின்ன உணவகத்தின் எச்சில் இலைகளுக்குமென தத்தமக்குக் கிடைக்கப் பெறுவதை நம்பிப் பறந்தலைகின்றன. 

தற்சமயம் கரை வெறுமையாய் இருந்தது வெற்றுப் படகுகளுடன். ஒரேயொரு கும்பல் கொஞ்சம் தள்ளியிருந்த ஏலம் விடும் மேடையில் அமர்ந்திருந்தது. அந்தி இருண்டது. சிகரெட் பற்ற வைக்கும் சிற்றொளி எழுந்து எழுந்து அடங்கிற்று. காற்றுக்கு அணைந்துவிடுகிறது போல. இருள் கவியும் வெளியில் அச்சிற்றொளி எதற்கும் பயனற்றுப்போகும்.  

உலக கானுயிர் நிதி அமைப்பின் சூழியல் ஆர்வலர்கள் ‘டர்டில் வாக்’ எனும் பெயரில் கடலோர ஆமை முட்டைகளைத் தேடிச் சேகரித்துக்கொண்டிருந்தனர். இக்கடற்கரையின் மணல்வெளியில் ஆலிவ் சிற்றாமைகள் பிப்ரவரி மார்ச்சில் குழிதோண்டி முட்டையிட்டுப் போகின்றன. அவ்வினம் அழிவுறும் ஆபத்தில் உள்ளது. வனத்துறையின் உதவியுடன் சேகரித்த முட்டைகளைப் பொரிக்கச்செய்து குஞ்சுகளைக் கடலில் பாதுகாப்பாக அறிமுகப்படுத்தும் திட்டமது. இருள்வெளியில் உருகியோடும் கரிய உலோகமாய் கடலின் மேற்பரப்பு தளும்பியிருக்க, உள்ளே ஆழத்தில் அழுத்தமும் இருளும் நிரம்பிக் கிடக்கிறது. மேற்பரப்பில் துள்ளுகின்றன மின்னும் மீன்கள். பாசிகள் மிதக்கின்றன. காற்றின், ஞாயிறின் சாரத்தை உள்வாங்கி உயிரோட்டத்துடன் திரள்கிறது திரைகடல். கடலின் ஆழப்பகுதியில் முற்றிலும் வேறுவகையான மீன்கள், பிற உயிரினங்கள் உலவுகின்றன. அவை அவ்வப்போது மேற்புறம் வந்துபோகும் காற்றின் சாரத்தைக் கிரகித்துக்கொள்ள, அழுத்தமும் வெப்பமும் வேறுபட்டிருக்கும். நீரோட்டமும்கூட. வெளிச்சம் அரையிருட்டில் படர்ந்திருக்கும். உள்ளே அடியாழத்தில் தரைமட்டத்தில் இருள் நீரோடு கரைந்திருக்கும். அதிசயமான அபாயகரமான பெருமீன்களும் வசிக்கும். குரூரத் தோற்றங்களும் வன்பற்களும் கொண்டு திரியும். மணற் சகதியில் துர்நாற்றமடிக்கும். சகதியைக் கோதித் தின்னும் இலகுவான உடலமைப்பும் வாயமைப்பும் கொண்ட உயிரினங்கள் பதுங்கித் திரியும். கருக்கிருட்டு என்றபடியால் சில மீன்களுக்கு மட்டும் கண்களில் ஒளி துலங்கும். சிலவற்றுக்கு உடல் முழுவதும் இயற்கையான ஒளியூட்டம் இருக்கும். 

கடலடியில் ஆழத்தில் இன்னும் அடையாளப்படாத, உயிரியலில் பட்டியலிடப்படாத ஏராளமான உயிரினங்கள் சுற்றியலைகின்றன. நச்சுமிக்கவை, உயிர் குடிப்பவை, அச்சுறுத்துபவை என. மனதடியில் அலைவுறும் எண்ணங்கள் மட்டும் அறியப்பட்டுள்ளனவா? இதோ இவ்வானின் விண்மீன்களும் கோள்களும் வலசைப் பறவைகளும் கடல் மீன்களும் மனுக்குலத்திற்கு வழிகாட்டி இருக்கின்றன. நிலத்தைவிடவும் கடல்வழி மனித நகர்வு புவிக்கோளம் முழுவதும் மனிதக்கூட்டங்களை பரவ வைத்திருக்கிறது. காலத்திற்கேற்ப குறிக்கோள் வேறாக இருந்திருந்தாலும் மனிதர்க்குப் பயணம் இன்றியமையாததாய் இருந்திருக்கிறது. 

கடலுக்கு அப்பால் உள்ளதை அறியப் பயணிக்க வளங்களும் தொழில்நுட்பங்களும் மட்டுமே போதா. மனத்துணிவு வேண்டும். அதையும் மீறி அறியாதவற்றைப் புலனுக்கப்பாற்பட்டதை அனுபவிக்கவும் உய்த்துணரவும் உள்ளூர ஓர் அவா, விழைவு, உத்வேகம் வேண்டும். அறிவியலாதவற்றை அறிவுக்கு அப்பாற்பட்டதை அறிவுறத் தேடும் ஊக்கம் வேண்டும். ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் புரிபடுவதில்லை. மனிதனுக்கு மனிதன் அறியாதவோர் உலகமாகவே இருக்கின்றனர். அதனாலேயே அவாவும் விழைவும் மீதுறுகிறது. உன் திசையினித் திரும்பேன் என்று எதிர்த்திசையில் பயணித்து புதிய உலகத்தையும் உயிரையும் கண்டறிகிறது. விழைவு மனிதக்குலத்தை ஆட்டிப்படைக்கிறது. 

பயணத் துணையாக ஆணும் பெண்ணுமாய்க் கலந்து ஊடாடி புதிய நாடுகளிலும் கண்டங்களிலும் தீவுகளிலும் மேன்மேலும் சுற்றித் திரிந்துற்று புதிய புதிய இனப்பிரிவுகளாய் உருவாகி இருக்கின்றனர். புதிய புதிய ஊர்களும் நகரங்களும் பண்பாடுகளும் உருப்பெற்று அழிந்து சிதைந்து அதில் மேலும் பல உருவாகிப் பல்கிப் பெருகிக்கொண்டே போகின்றன. விலங்கோ மனிதரோ இருபாலினமும் ஒன்றறக் கலந்துபோக வேண்டியிருக்கிறது. இதில்தான் எத்துணை எத்துணை துயரங்களும் வலிகளும் துர்பாக்கியங்களும்! இது எப்போது நலம் பெறும், நட்பும் புரிதலும் கொண்டு பாங்குறச் செல்லும்? 

‘உள்ளே ஊன்றிப் பார். உணர்வின் வேட்கைத் தொகுப்பின் ஒவ்வொரு இழையையும் நுணுகிப்பார். அதற்குத்தான் ஊடுருவும் உட்பார்வையாம் தியானம். உள்ளதை உள்ளபடி உற்று நோக்க, உட்பார்வையும் அதன்பாற்பட்ட தீர்மானமும் கிடைக்கும்’ என்கிறார் நயனபோனிக தேரா. ‘நேரடியாக உணர்வைப் பார்க்கலாம். பற்றைத் தளர்த்தி, போகட்டுமென்று விட்டுவிடலாம். அவ்வாறான உணர்வுகள் ஒவ்வொன்றையும் அடையாளம் கண்டுகொள். அவை தற்காலிகமானவை. அவற்றின் தற்காலிகப் பண்பறிய இருப்பின் நிரந்தரமற்ற கால்களின் நடுக்கங்கள் புரியும். அழுக்காறுகள் இருக்குமிடத்தில் புதிய நல்லெண்ணங்களை மாற்றியமைக்கலாம். இவ்வாறு வேறுபட்ட வழிமுறைகளைக் கணங்களின் தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப் பயன்படுத்தி, தொடர்ந்து பயிற்சி செய். நிர்வாணமடைவாய்’ என்கிறார். இயலுமா? இயலும்தான் போலும்!

காமத்தில் பித்து, வெறி, வன்மம் இருக்கிறது. வாழ்தலுக்கான வேகத்தையும் தீவிரத்தையும் தருவதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் வலிகளும் துயரங்களும் மிகுதியாகவே உள்ளன. மிருகங்களிலிருந்து வேறுபட்ட சமூக உறவு நெறிகளைக் கொண்டுள்ளதால் குற்றமற்ற மேலான மனநிலைக்கு, ஆன்ம தரிசனத்திற்கு அது பங்கம் விளைவிப்பதாகத் தோன்றுகிறது.

உறவாலான உலகின், வாழ்வின் விழைவில் அவை பற்றிய மேலான அறிதலுக்கு உதவும் பிரதானமான அம்சமாக காமம் உள்ளது.

அயனாவரம் மார்க்கெட் பக்கம் மனம் பேதலித்த ஒரு பெண்மணி திரிவாள். பெரும்பாலும் மௌனமாய்த் திரியும் அவள் அவ்வப்போது தனக்குள் பேசிக்கொள்வாள். அத்தனை அமைதியும் சௌந்தரியமுமான முகத்தை அப்படியொரு பெண்ணிடம் காண்பதரிது. நிஜத்திலேயே மோனாலிசாவின் சோகச் சாயல் கொண்டிருந்தாள். அவளின் நிறமும் சாயலும் ஆந்திரப் பெண் போலிருந்தது. வீட்டில் வைத்திருக்க மனமோ பொருளோ இன்றி இப்படி வீட்டாரேகூட ரயிலேற்றி அனுப்பியிருக்கலாம். அல்லது அவளே வழிதப்பி வந்திருக்கலாம். எந்தவொரு பொருளையோ மூட்டையையோ உடன்வைத்திருக்க மாட்டாள். எங்கு சுற்றினாலும் இரவில் மார்க்கெட் பக்கம் போய் படுத்துக்கொள்வாள். அந்த இடம் பாதுகாப்பானதென நினைத்திருந்தாள் போல. சிலகாலம் கழித்து அவள் கர்ப்பமானாள். அவளுக்கு அது தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. அவள் எப்போதும் போலவே மௌனமாய் இருந்தாள். அண்மை மாநகராட்சி சுகாதார மருத்துவமனையில் துப்புரவுப் பெண்கள் சேர்க்க, அவளுக்குப் பெண்குழந்தை பிறந்தது. அக்குழந்தையுடன் கொஞ்ச நாள் சுற்றித் திரிந்தாள். பிறகு காணாமல் போனாள். இப்படியொரு நிலையை அப்படியொரு பெண்ணுக்கு யாரால் கொடுக்க முடிந்தது? அந்த ஆணின் மனம் எப்படிப்பட்டதாய் இருந்திருக்கும்? என்ன மாதிரியான தருணம் அப்படி ஒரு வெறிக்குத் தூண்டியிருக்கும்? அவளுக்கான பொறுப்பை யார் ஏற்றிருக்க வேண்டும்? அந்த ஆண்களில் நானும் ஒருவனாய் இருக்க அவமானமாய் உணர்த்தியது. இன்னும்கூட அவளது முகம் நினைவைத் தழுவிப்போகும். கீழ்மையாய் உணரச் செய்யும். உயிரியல் ரீதியில் ஆணும் பெண்ணும் ஒரே இடத்தில் வாழவேண்டிய இரு மானிடப் பாலினங்கள். தேவைகளின் பொருட்டே இணைவுகளும் பிரிவுகளும். அம்மட்டுந்தானா? 

ஒரு பெண் தனது உள்ளார்ந்த பெண்மையின் வடிவில், திறனில், பாங்கில், அசைவில், இயல்பில், விருப்பில், குரலில், வசீகரத்தில் அதை அகப்பொருளாக அடையாளங்கண்டு அதில் உற்சாகமும் குதூகலமும் கொள்கிறாள். அதைப்போன்றே ஒரு ஆண் தனது உள்ளார்ந்த ஆண்மையின் வடிவில், திறனில், பாங்கில், அசைவில், இயல்பில், விருப்பில், குரலில், வசீகரத்தில் அடையாளங்கண்டு அதில் உற்சாகமும் குதூகலமும் கொள்கிறான். அதில்தான் ஒரு பெண்ணுக்கு ஆணிலும் ஒரு ஆணுக்குப் பெண்ணிலும் புறப்பொருளாகப் பற்று உண்டாகிறது. பற்றறுக்க வேண்டுமெனில் அவ்வாறு ஆணும் பெண்ணும் தன்னுள் அடையாளம் கொண்டுவிடாதிருந்தால் அப்பற்றுகள் அகலக்கூடும் என அங்குத்தர நிகாயத்தில் புத்தர் உரைக்கிறார். அம்பை ‘பொய்கை’ கதையில் ‘பெண்ணுடல் ஆணுடல் இவற்றின் வரையறைகள் பெளதீக ரீதியாக மட்டுமே தீர்க்கமானவை. மனத்தளவில் அவை ஒன்றில் இன்னொன்று புகும் வகையில் இருப்பவை… மற்றபடி பெண் ஆண் என்பது கோடிட்டு வகுக்க முடியாத ஓடும் நதி போன்றதுதான்’ என்கிறார். எனில் அவ்வாறு அடையாளப்படாதிருப்பது எங்ஙனம்? வாழ்ந்தபடியே வாழ்க்கையிலிருந்து பிரிந்திருத்தல் இயலுமா? அதன்பாற்பட்டுதான் வாழ்வுமில்லை மரணமுமில்லை, தொடக்கமுமில்லை முடிவுமில்லை, வரவுமில்லை மறைவுமில்லை, சுயமுமில்லை சுயமற்றுமில்லை என்கிறதா பெளத்தம்? அதைத்தான் இன்னொரு விதமாக மரணமில்லாப் பெருவாழ்வு என்கின்றனவா சித்த மரபுகளும்?    

உலகின் எல்லாச் சமூகங்களிலும், மேலோட்டமான வித்தியாசங்கள் காணப்பட்டாலும், தனிமனித ஆளுமை, சமூக அந்தஸ்து தேவைப்படுகிறது. பிற குணக்கூறுகளைப் போலவே குற்றவுணர்வும் எதிர்வன்முறையும் காணப்படுகிறது. பரிணாம உளவியல் கூறுகளின் ஊடேறல்களாக அப்பண்புகள் சந்ததியாக எடுத்துச்செல்லப்படுகின்றன. டார்வின் கோட்பாட்டின்படி பரிணாம இயற்கைத் தேர்வு மனிதரின் உண்மைச் சொரூபத்தை மறைத்து வைத்துள்ளது. மனிதரின் ஆழ்ந்த உள்நோக்கானது மனித விழிப்புநிலைக்கு அப்பால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. 

பாலியல் பொறாமை, தந்தை மேல் பிள்ளைகளின் பாசம், பிள்ளைகள் மேல் தந்தையின் பாசம் போன்றவை மனிதப் பண்புகளில் இயல்பானதாய் இருக்கவில்லை. ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தாலும் சூழல்களாலும் இயல்புக்குள்ளாகிறது என்கிறது பரிணாம உளவியல். மனம் ஒரு கொள்கலனாகத் திகழ்கிறது. மரபணுவியல், சூழல், பண்பாடு ஆகியவற்றின் சாராம்சங்கள் கொட்டி நிறைக்கப்படுகின்றன. அதனாலேயே மனிதர்கள் சீரிய அறம், ஒழுக்கம் சார்ந்த விதிமுறைகளை வகுத்தாலும் அவர்களே அறிந்தும் அறியாமலும் அவற்றை மீறுகின்றனர். தன்னலம், ஒழுக்கப் பண்பிற்கான சோடனையால் அவ்விதிமுறைகள் உருவாக்கியவர்களாலேயே பரிதாபத்திற்குரிய வகையில் தளர்வுக்குள்ளாகின்றன.  

தாங்கருங் காமம் என்கிறது கலித்தொகை. காமம் இயலாமையுணர்வைக் கூட்டுகிறது, சார்புத்தன்மையை அதிகரிக்கிறது. வாழ்வின் உன்னதங்களுக்கு அது அழைத்துச் செல்வதில்லை. மாறாக, அது பிறழ்கையில் அறமழிய நெறி தவற அமைதி பறிபோகிறது. அதன்மூலம் அதீத விழிப்புநிலையை அடைய இயலாது. காமத்திளைப்பு மனத்தின் குருட்டுத்தனம். குறுக்குவழி. காமமும் இச்சையும் விழிப்புநிலையைப் புரிந்துகொள்வதற்கான நல்லதொரு கருவி. அதை ஊன்றிப் பார்ப்பதன்மூலம் மனத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகளை, மனம் நிகழ்த்தும் நாடகங்களை, தற்குறித்தனங்களை அறிய இயலும். ஒரு கட்டத்தில் காமம் புரிந்துகொள்ளப்படும்போது, வாழ்க்கைக்கும் அதுசார்ந்த உறவுக்கும் மேலான அர்த்தம் கிடைக்கிறது. செல்வம் வேறுவழியின்றி வீட்டார் பார்த்த பெண்ணிற்கு சம்மதித்தான். அவனுக்கான திருமண வேலைகளை நானும் நண்பர்களும் செய்தோம். சிறப்பு உடுப்புகள், காலணிகள், இத்யாதிகளை வாங்கவென ஒரு வாரமாகச் சுற்றித்திரிந்தோம். அவன் சோர்ந்துபோய் கூடவே வந்தான். அவனது திருமணத்திற்கு அவள் வரவில்லை. அப்படியே கல்பனாவுடன் உறவு நீடிக்காது போனது. திடீரென ஆராய்ச்சி நிறுவனத்தின் சில துறைகள் மூடப்பட, அவன் பெங்களூர் சென்றான். அவளுடைய தொடர்பு அற்றது. அவளும் அமைதி காத்தாள். இருவருக்குமே ஒருவித உள் விடுதலை நிகழ்ந்தது என்று புரிந்தது. அதை இருவருமே விரும்பியிருந்தனர், பரஸ்பர நன்மைக்கும் நல்லுறவுக்குமென.

1 comment

Kasturi G November 16, 2021 - 8:49 pm

Fantastic .
Looking back on the stream of thoughts penned by the writer, i get a feeling how many of the laymen readers would be able to read between the line and understand all the key message shared at random by the author.
I wish and pray that many more literarically seasoned readers should read this piece and share their observations with the novelist.
Good Luck
Thanks

Comments are closed.