[1]

நானே வலியச்சென்று அந்தப் பணியை ஏற்றுக்கொண்டதற்கு முதற்முக்கிய காரணம், வந்திருப்பவர் ஷிவ்குமார் சார் என்பதுதான். கூடுதல் காரணமாக அந்தக் குட்டிப்பெண்ணையும் சேர்த்துக்கொள்ளலாம். அதோடு அவர் பயணிக்க விரும்பியதாய்ச் சொன்ன ஸ்தலங்களும் அத்தனை அலைச்சலைக் கோராதவை. பெரும்பாலான பேராசிரியர்களைப் போல அவர் தனக்கு இன்ன வாகனம் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் எங்களைச் சிரமப்படுத்தவில்லை. ஊரிலிருந்து தன்னுடைய காரிலேயே வந்திருந்தார். உடன் சென்றுவிட்டு வந்தால் மட்டும் போதும்.

தமிழகத்தின் இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளில் கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையிலிருப்பதுதான் மிக மோசமானதாக இருக்க வேண்டும். மூன்று மணி நேரங்களுக்குள் அதே சாலையில் திரும்பிவரும்போது, அந்த சொகுசு காரிலும் எனக்குத் தண்டுவடம் சோர்வு காண ஆரம்பித்தது. சாருடைய மகள் அசதியில் ஏற்கனவே உறங்க ஆரம்பித்திருந்தாள். ஆனால் மனிதர் ஓயவில்லை, விடாமல் பேசிக்கொண்டே வந்தார்.

ஆரம்பக் கல்வி பெறுவதே தனக்குச் சவாலாக இருந்ததில் துவங்கி, குடும்ப வறுமையால் ஏற்பட்ட தடைகள், நெருக்கடிகள், துயரங்கள் என நீட்டி முழக்கி இன்றைய உயரத்தை தான் எப்படி அடைந்தேன் என்பதை விவரித்தபடி வண்டியைச் செலுத்தினார். அடைந்திருக்கும் உச்சத்தைவிட அதற்கு முன்பிருந்த இடர்ப்பாடுகளை வென்றதுதான் அவரது அதீத தன்மதிப்பிற்குக் காரணமாக இருக்கவேண்டும். அந்தக் கர்வம் தெரியாமலில்லை. கேரளத்தில் முன்பு நான் அவரிடம் பயிற்சி மாணவனாக இருந்த ஒட்டுமொத்த இரண்டு மாதங்களில் என்னிடம் அவர் இவ்வளவு பேசியதில்லை. ஒருவேளை தன் மெர்ஸிடஸ் உள்ளே வைத்து இவற்றைச் சொல்லும்போதுதான் கேட்பவனுக்கு கூடுதல் பிரமிப்பு ஏற்படுமென்று அவர் நினைத்திருக்கலாம். எனக்கும் அந்த நொடியில், இது போன்றதொரு கதையைச் சொல்லிவிடவேனும் அப்படியொரு காரை வாங்குமளவிற்கு உயர்ந்துவிட வேண்டுமெனத் தோன்றியது. கணநேர கனவுடன் அவ்விருக்கையை ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொண்டே அவரை நோக்கினேன். அவருக்கான மிடுக்கும் நயப்பாங்கும் வரவழைத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அவர் அணிந்திருக்கும் அதே நிறுவன மேற்சட்டையைத்தான் நானும் அணிந்திருந்தேன் – ஆனால் எனக்கு அச்சட்டை ஒரு மாறுவேடத்தைப் போலத்தான் பொருந்தியிருக்கும். 

அய்யம்பேட்டையைக் கடக்கும்போது கதை முற்றுப்பெற்றிருந்தது. ஒருவிதமான தொந்தரவளிக்கும் அமைதியுடன் வாகனம் போய்க்கொண்டிருந்தது. குறிப்பற்று பார்ப்பதைப் போல அவரை ஏறிட்டேன். சோகமும் பெருமிதமும் சரி விகிதத்திலிருந்த அந்தக் கண்கள் இப்போதும் நினைவிலிருக்கின்றன.

ஏதாவது பேச்சு கொடுக்கலாமென அந்த அமைதியில் குறுக்கிட்டேன்.

“மேடம ஏன் சார் கூட்டிட்டு வரல.. கோயிலெல்லாம் விசிட் பண்ற ப்ளான் இருந்துச்சுல்ல..” தமிழை நன்றாகப் புரிந்துகொள்வார். பதில்தான் மலையாள நெடியேறிய ஆங்கிலத்தில் வந்துவிழும். 

“சாலைவழி நீண்ட பயணங்கள் அவளுக்கு ஒத்துக்கொள்வதில்லை…” கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் தூரத்திற்குப் பின்னர் அசிரத்தையாக இதைச் சொன்னார். பின்னிருக்கையில் உறங்கிக்கொண்டிருந்த அவரது மகளைப் பார்த்தேன். விழித்துவிட்டிருந்தவள் பதில் சொல்லி முடித்திருந்த அப்பாவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கோபித்துக்கொண்டிருக்கும் நாட்களில் வகுப்பறையில் கள்ளத்தனமாக நீண்ட நேரம் முறைத்துப் பார்க்கும் பள்ளித் தோழியின் முகவெட்டு. அவளால் சில கணங்களேனும் என்னைப் பால்யத்தில் நிறுத்திவிட முடியும். அன்று காலை ஒரு முறை என்னை ‘அங்கிள்’ என்று விளித்திருந்தாள். என்ன ஒரு பன்னிரெண்டு வயது வித்தியாசம் இருக்குமா? அங்கிளாம்.

“உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?” இந்தக் கேள்விக்கு நான் தயாராக இருக்கவில்லை. அதுவும் அவரது மகளைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது கேட்டதால் தடுமாறிவிட்டேன்.

“இல்ல சார்.. அது.. கோர்ஸ் முடிச்சிட்டு ஒருவழியா..” மழுப்பலாகவோ உளறலாகவோ ஏதோவொன்று. அந்தப் பதிலை அவர் காதில் வாங்கினாராவெனத் தெரியவில்லை. சாலை தெளிவானதும் வேகத்தைக் கூட்டியிருந்தார். எனக்கு அசெளகர்யமாக இருந்தது.

“எதையோ நோக்கிய ஓட்டத்தில் நம் இழப்புகளையும் கோணங்கித்தனங்களையும் நாம் கடந்துவிட்டதாக நாமே நம்பிவிடுகிறோம்..” தஞ்சையை நெருங்கியபோது, திடீரென அனிச்சையாகச் சொல்லிவிட்டு அமைதியானார். அத்தனை அங்கலாய்ப்புக்குப் பின்னான இந்தத் தத்துவார்த்தமான தன்னடக்கம் கொஞ்சமும் ஒட்டாமல் நின்றது. ஒரு மாணவனுக்கு முன் மிதமிஞ்சி தற்பெருமை பேசிவிட்டதற்காக இப்படியேதோ இட்டுக்கட்டிச் சமாளிக்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால், அந்தக் குரலிலிருந்தது அசலான விரக்தியாகத்தான் பட்டது. பெரிய கோயிலுக்கு வந்து நிறுத்தும்வரை வேறு சொல் எதுவும் எங்களுக்கிடையில் இருக்கவில்லை. 

[2]

பணி நிமித்தமாக எங்கள் கல்லூரிக்கு வரும் வெளிமாநிலப் பேராசிரியர்களைக் கவனித்துக்கொள்ள முதலாம் ஆண்டு மாணவர்களிலிருந்து ஒருவரை அனுப்பிவைக்கும் செளகர்யம் எனக்கு அந்நாளில் இருந்ததுதான். நான் முதலாமாண்டில் இருந்தபோது இப்படியான கட்டாயங்களுக்கு வேண்டாவெறுப்பாக உடன்பட்டிருக்கிறேன். அதிலும் உத்தரகாண்டிலிருந்து வந்திருந்த ஒருவர், தனுஷ்கோடிக்குத் தன்னை அழைத்துச் செல்லச் சொல்லி, ஒரு நாள் நெடுக்க புகைப்படமெடுக்கும் ஊழியனாக மட்டும் நடத்திய நாளில், இந்த வேலைக்கு மட்டும் இனி ஒப்புக்கொள்ளவே கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். இரண்டரை ஆண்டுகள் தந்திரமாக அதிலிருந்து தப்பியும் இருக்கிறேன்.

பெரிய கோயிலுக்கு முன்பொரு முறை பேராசிரியர் ஒருவரை அழைத்துச் சென்றபோதுதான் அதற்கேயான பிரத்யேக ஏற்பாடுகள் சிலவற்றை அறிய வாய்த்தது. எங்களின் துறைத்தலைவர், ‘அறநிலைத் துறையிலிருந்து சிறப்பு அனுமதி பெறப்பட்டிருக்கிறது’ என்றதும், எனக்கு குழப்பமாக இருந்தது – அன்று விசேஷ நாள் எதுவுமில்லை; கூட்டம் பெரிதாக இருக்கப்போவதில்லை; எதற்கு சிறப்பு அனுமதியெல்லாம்?

அந்தப் பேராசிரியர் ஒரு வங்காளப் பெண்மணி. பெரிய கோயிலைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களை போகும் வழியில் அவரிடம் சொல்லிக்கொண்டே போனேன். வியப்பேதும் காட்டாத ஏளனத் தோரணைக்கு அத்தனை அக்கறை அவசியமில்லை என்று தோன்றியதால் நான் மேற்கொண்டு அதிகம் பேசவில்லை. 

அந்த அம்மையாரிடம் நான் சொல்லிக்கொண்டு வந்த விஷயங்களை அறநிலைத்துறை சார்பில் அனுப்பப்பட்ட வழிகாட்டி கால் மணி நேரத்திற்குள் பொய்யாக்கினார் – அந்த நந்தி ராஜராஜ சோழனின் மேற்பார்வையில் கட்டமைக்கப்பட்டது; அந்தக் கும்பம் எண்பது டன்னிலான ஒரே கல்லால் உருவானது – இவை இரண்டையும்விட, ‘கோபுரத்தின் நிழல் தரையிலேயே விழாது’ என்று நான் சொல்லியிருந்ததை, அநாதரவாக விழுந்து கிடந்த நிழலைச் சுட்டிக்காட்டி ‘இப்படியொரு முட்டாள்தனமான செய்தி வெளியே உலவுகிறது’ என்று ஒரே போடாக போட்டு காலிசெய்தார். அந்தப் பெண்மணி எந்தச் சலனமுமின்றி கேட்டுக்கொண்டு வந்ததில், முன்பு நான் காரில் சொல்லிக்கொண்டு வந்த எதையும் அவர் பொருட்படுத்தவே இல்லையோ என்று தோன்றியது. அல்லது அந்த வழிகாட்டி விவரித்தவற்றையும் அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. 

‘அவனைப் போன்ற வழிகாட்டி இன்றும் கிடைத்தால் தேவலாம்’ என்ற நினைப்புடன் ஷிவ்குமார் சாரோடு சாலையைக் கடந்து கோயிலுக்குள் நுழைந்தேன்.

[3]

“சுலைமான் சார் போனடிச்சாரு சார்.. வி.ஐ.பி. பாஸ் போட்டு வெச்சுட்டேன்..” என்ற அறநிலைத் துறை ஊழியர் இன்னொருவரை அழைத்து, “சேட்டு.. நீ போறியா? சார் மலையாளத்துக்காரரு.. பாத்து சொல்லிரு.. வெளியவந்துட்டு கூப்டு..” என்றார். உடையிலோ, உச்சரிப்பிலோ அம்மனிதரை ‘சேட்டு’ என்றழைக்க எந்த ஆதாரமும் இருக்கவில்லை. ஒருவேளை அதுவே அவரது பெயராக இருக்க வேண்டும். போனமுறை வந்திருந்த வழிகாட்டியின் பெயர் என்ன? நினைவிலில்லை. கேட்டிருக்கவே மாட்டேன்.

முழுக்க சவரம் செய்த ஒடுங்கிய முகத்திலிருந்த அந்த ஆசாமியை எங்கோ பார்த்த நினைவு. ‘உள்ளே போகலாம்’ என்பது போல கையைக் காட்டியவர், முன்னே நடக்க ஆரம்பித்தார். அணிந்திருந்த பச்சை நிற வேஷ்டியை இலேசாக உயர்த்திப் பிடித்துக்கொண்டு அவர் போகும்போதுதான் அந்த வீங்கிய இடது காலைக் கவனித்தேன்- யானைக்கால். முன்பு வந்திருந்த அதே வழிகாட்டிதான் இவர். இரண்டரை வருடங்களில் ஆள் என்னவோ போல ஆகிவிட்டார் என்ற ஆச்சர்யத்தோடு ஓர் ஆசுவாசமும் – விஷய ஞானம் உள்ளவர். நிச்சயம் ஷிவ்குமார் சாருக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் பேசிவிடுவார்.

ஓரிடத்தில் எங்களை நிற்கவைத்து கோயிலைப் பற்றிய ஒரு கோட்டுச்சித்திரத்தை விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார். எத்தனை வாயில்கள், கோபுரங்களில் எத்தனை அடுக்குகள், எந்தெந்தப் பகுதிகள் எந்தெந்தக் காலங்களில் கட்டப்பட்டன.. இத்யாதிகளை மேலோட்டமாக சொல்லிமுடித்தவர், “இப்டி வாங்க சார்.. இது கேரளாந்தகன் வாயில்.. ராஜராஜசோழன் கேரளால ராஜா ரவிவர்மன ஜெயிச்சிட்டு வந்த பெருமைக்கு அடையாளமா வெச்ச பேரு” என்று முதல் கோபுரத்தின் அருகில் நிறுத்தினார். ஷிவ்குமார் சார் என் முகத்தில் எதுவும் விஷமப் பெருமிதம் தெரிகிறதாவென அளப்பதைப் போல புன்னகைத்தார்.   

அடுத்த வாயிலின் அருகே செல்லும்போது, “உங்களுக்கு என்ன நெனப்பிருக்கா? முன்னாடி மேடம் ஒருத்தவங்கள கூட்டிட்டு வந்திருக்கேன்..” அம்மனிதரிடம் கேட்டேன். நினைவுகூர முயற்சிகூட செய்யாமல், “தெர்ல சார்..” என்றபடி நடந்துகொண்டிருந்தார்.

அடுத்தடுத்த கட்டங்களை அவர் விளக்கிக்கொண்டிருந்த விதத்தில் அவரிடம் முன்பிருந்த பொறுமையும் முனைப்பும் இப்போது இருக்கவில்லை என்பதாகத் தோன்றியது. அல்லது முந்தைய முறை வந்திருந்த பெண்மணியின் ஈடுபாடற்ற அணுகுமுறையோடு நிறுவையில் வைத்துப் பார்த்ததால் இம்மனிதர் சோபித்ததாக அப்போது தெரிந்துவிட்டதா? 

விஷயங்களை விளக்கிச் சொல்வதில் அவர் ஒரு வரிசை முறை வைத்திருப்பதாகப் பட்டது. முன்பு எங்கிருந்து துவங்கி எப்படி அழைத்துச் சென்றாரோ அதே ஒழுங்கு இம்முறையும். 

நந்தியருகில் வந்து நின்றபோது, அவருக்கு அலைபேசி அழைப்பொன்று வந்தது. எங்களிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் அப்படியே விலகிச்சென்று, “பாய்.. போனடிச்சா எடு பாய்..” என்று பேச ஆரம்பித்துவிட்டார்.

“சார்.. இந்த நந்தி ஒரே கல்லால செஞ்சது சார்.. இது ராஜராஜசோழன் கட்னது நெனப்பாங்க.. பட் இல்ல.. பின்னாடி நாயக்காஸ் ரெஜிம்ல கட்னது..” முந்தைய அவமானம் எனக்குச் சொல்லிக்கொடுத்திருந்த விஷயத்தை நான் ஷிவ்குமார் சாரிடம் விளக்க ஆரம்பித்தேன். அந்தச் சிறுமி நந்தியின் அளவில் மலைத்துப்போய் சுற்றிச் சுற்றி வந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அலைபேசியில் பேசப் போயிருந்தவர் சற்று நேரத்தில் வந்து இணைந்துகொண்டார். சிறு மன்னிப்பைக்கூட கோராமல் நந்தி மண்டபத்தைத் தாண்டி அழைத்துப் போக ஆரம்பித்தார். ஷிவ்குமார் சாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 

பிரகாரத்தைச் சுற்றி நடக்கும்போது கீழே படர்ந்து கிடந்த கும்பத்தின் நிழல் என்னைப் பரிகாசம் செய்வதைப் போலிருந்தது. சேட்டு அவ்விடத்தில் அந்தக் கட்டுக்கதை குறித்துப் பேசுவது அவரது வரிசைமுறையில் இருக்குமென எதிர்பார்த்தேன். அவர் எதுவும் சொல்லாமல் கடந்து போக, நானே ஷிவ்குமார் சாரிடம் அந்தப் பழைய கதையைச் சொன்னேன். இதே வழிகாட்டிதான் முன்பு அவ்விஷயத்தில் என்னை நாணச் செய்தார் என்பதையும் சொன்னேன். அந்தக் குட்டிப்பெண்ணும் சேர்ந்து சிரித்தாள்.

எவை சோழ காலத்தவை, எவை பின்னர் நாயக்கர் காலத்தில் சேர்ந்தவை, எவையெல்லாம் சரபோஜி மன்னர் சீரமைத்தவை என்பவற்றைத் தேமேவென சொல்லிக்கொண்டே சேட்டு முன்னே நடக்க நாங்கள் பின்தொடர்ந்தோம். சில இடங்களில் சாரும் மகளும் புகைப்படம் எடுத்துக்கொள்ள, நான் அவரது பிரசங்கத்தை நிறுத்த வேண்டியிருந்தது. ஒரு மூலையில் நின்று அவ்விடத்தின் முழு விஸ்தீரணத்தையும் தன் புகைப்படப் பேழைக்குள் அடைக்க ஷிவ்குமார் சார் போராடிக்கொண்டிருந்த வேளை, சேட்டு மீண்டும் அலைபேசியை எடுத்துக்கொண்டு ஒதுங்கினார். பேசிக்கொண்டே தூரமாகப் போய்விட்டார். 

எனக்கு எரிச்சலாக இருந்தது. சொந்த அலுவலேதும் இருந்தால் அவர் முன்னரே விலகிக்கொண்டிருக்கலாம். அந்த அறநிலைத்துறை ஆசாமியைத் தொடர்புகொண்டு வேறொரு வழிகாட்டியை அனுப்பச் சொல்லலாமாவென யோசித்தேன்.

ஷிவ்குமார் சாரிடம் அதிருப்தியேதும் தெரிகிறாற்போல இல்லை. எடுத்த புகைப்படங்களை சிறு திரையில் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது மகள் அங்கிருந்தவொரு சிற்பத்தின் தோரணையைப் பிரதிபலித்து நிற்க முயற்சித்துக்கொண்டிருந்தாள்.

[4]

வளாகத்தை முடித்துவிட்டு கருவறையின் அருகே வரும்போது, சாரையும் அப்பெண்ணையும் முன்னே விட்டுவிட்டு, அந்த ஆசாமியைப் பிடித்து நிறுத்தினேன்.

“பாஸ்.. இங்க பாருங்க.. நீங்க ஏதோ கடமைக்குப் பண்ணிட்டு இருக்கீங்க.. உங்களுக்கு எதும் வேல இருந்துச்சுன்னா கெளம்புங்க.. நான் வேற யாரயாச்சும் வரச் சொல்லிக்கிறேன்..” என்றேன்.

“சாரி சார்.. சாரி சார்.. வாங்க சார் பாத்துக்கலாம், வாங்க..” என்றவர் அவசரமாக உள்ளே நடந்தார். அந்த மன்னிப்பில் அழுத்தமே இல்லை என்பது அம்மனிதரின் பணி ஈடுபாடின்மையைவிட அதிகமாகச் சீண்டியது.

உள்ளே சென்றவர், லிங்கத்தின் சிறப்புகளை தமிழும் ஆங்கிலமுமாக சொல்ல ஆரம்பித்தார். ஷிவ்குமார் சார் புருவத்தைச் சுருக்கிவைத்து கேட்டுக்கொண்டிருந்தார். அவரது மகளின் முகத்திலும் அதே ஆர்வக்கோடுகள். கொஞ்சம் சமாதானமானேன்.

சிறப்பு அனுமதி பெறவேண்டிய அவசியத்தை இவ்விடத்தில்தான் முன்பு வந்திருந்தபோது அறிந்திருந்தேன். ‘கருவறையின் சுற்றுச்சுவருக்குள் இரண்டு தளங்களிலான உள்ளறையொன்று உண்டு. இது இடையில் வந்த அரசர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமே தெரியாது’ என்று அப்போது சேட்டு சொல்லியிருந்தார். பொது மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. அதற்குள் போவதற்குத்தான் இந்த விசேஷ சிபாரிசெல்லாம்.

வெளியிலிருந்து பார்த்து வெறும் சுவரென்று நினைத்திருந்த ஒன்றினுள் அப்படியோர் அறை இருப்பதைக் கண்ட மிரட்சி அந்த அடர் இருளிலும் ஷிவ்குமார் சார் முகத்தில் தெரிந்தது. சேட்டு அங்கிருந்த மின்சார விளக்குகளை உயிர்ப்பித்ததும், சுவரிலிருந்த ஓவியங்கள் தெரிந்தன.

“இது ப்யூர் சோழர் காலத்துப் பெயிண்ட்டிங் சார்.. நடுல நாயக்கர் காலத்துல இதுமேல சுண்ணாம்படிச்சு வேற பெயிண்ட்டிங் போட்டாங்க.. அதெல்லாம் பேத்தெடுத்து திரும்ப இத..” என்று சேட்டு விவரித்துக்கொண்டிருக்கும் போது, ஆறடி அகலமேயான அந்த உள்ளறைக்குள் அத்தனை உயரத்திற்கு வரையப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்க்க அப்பெண் தவித்துக்கொண்டிருந்தது எனக்கு வேடிக்கையாக இருந்தது.

“இந்த பெயிண்டிங் ரெண்டு லேயர்ல வரும் சார்..” என்று சேட்டு பேசிக்கொண்டிருந்த போது ஷிவ்குமார் தலையாட்டிக்கொண்டே “wet fresco” என்றார். முன்தயாரிப்புகளோடுதான் வந்திருக்கிறார் என்பது புரிந்தது. அவருடைய மிக உயர்ந்த பண்பாக நான் நினைப்பது இந்த அர்ப்பணிப்பைத்தான்.

ஏணிப்படிகளின் வழியே உள்ளறையின் மேல் தளத்திற்குச் சென்றதும் மாலை வெயிலின் சூட்டிற்கு துளியும் சம்பந்தமில்லாத குளிர்ச்சி அவ்விடத்தில் நிலவியது. 

“இங்க பரத நாட்டியத்தோட நூத்தியெட்டு கரணங்களும் செலையா செதுக்கியிருக்கு சார்.. பாத்துக்கிட்டே வாங்க லைனா.. சிவபெருமானே ஆடுற மாதிரி செதுக்கியிருக்கும்.. ஒவ்வொரு கரணத்தோட பேரும் கீழயே இருக்கும் பாருங்க..” என்றபடி சேட்டு முன்னே போக, நான் ஒவ்வொரு பெயராக வாசித்து சொல்லிக்கொண்டு வந்தேன்.

அந்தப் பெண் ரொம்பவே உற்சாகமாகத் தெரிந்தாள். தான் பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்பதாகச் சொல்லி சில கரணங்களை அதன் பக்கத்தில் நின்று பாவிக்க முயன்றாள். பூரிப்பில் கண்களை விரிக்கும்போது இன்னும் நெருக்கமாகத் தெரிந்தாள். சுற்றறையின் மூன்றாவது வரிசையின் அருகே வரும்போது சேட்டுடைய அலைபேசி மீண்டும் ஒலித்தது. 

எடுத்துப்பார்த்தவர் என்னையொரு முறை பார்த்துவிட்டு அவ்வொலியை அணைத்தார். 

“ஏன் இந்த இடங்களிலெல்லாம் எதுவுமே செதுக்கப்படவில்லை?” என்று அந்தப் பெண் அந்த வரிசைக் கற்களைக் காட்டிக் கேட்டாள்.

மீண்டும் சேட்டுடைய அலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. நிதானம் தவறி, பாக்கெட்டோடு கை வைத்து அவர் அணைக்க முயன்றபோது, எடுத்துப் பேசிவிடுமாறு நானே சொல்லிவிட்டேன். அந்தக் குறுகிய இடத்திற்குள் சிக்னல் சரியாக எடுபடவில்லையென வெளியே போய்விட்டார்.

எனக்கு அந்த செதுக்கப்படாத கற்கள் குறித்து போன முறை சேட்டு சொல்லியிருந்த தகவல் அப்படியே நினைவின் மேலடுக்கில் இருந்தது. அதன் சுவாரஸ்யம்கூட அந்த விஷயம் அப்படிப் பதிந்து போனதற்குக் காரணமாக இருக்கலாம்.

அந்தப் பெண்ணை அருகில் அழைத்து விளக்க ஆரம்பித்தேன். “இங்க 108 சிவத்தாண்டவங்கள்ல 81தான் செதுக்கிருக்காங்க.. எதுவுமே வெளில செதுக்கி இங்க கொண்டுவந்து பதிச்சது இல்ல.. கல்ல பதிச்சிட்டு இங்கேயே உள்ளுக்குள்ள இருந்தே செதுக்குனது.. ஒவ்வொன்னுக்கும் நாட்டிய மங்கைகள் வந்து போஸ் கொடுத்து அவங்க அந்தக் கரணத்துல நிக்கிறத பாத்து சிற்பிங்க செதுக்கிருக்காங்க..” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது சேட்டு வந்து சேர்ந்துவிட்டார். அவரே மேற்கொண்டு சொல்லட்டும் என்பது போல நான் நிறுத்திக்கொண்டேன்.

“இதெல்லாம் ஏன் செதுக்காம இருக்குன்னு சொல்லிட்டிருந்தேன்..” 

சேட்டு விட்டேத்தியாகச் சொன்னார்.. “அது இந்தக் கல்லெல்லாம் பதிச்சு செதுக்கிட்டிருக்கும்போது, பாதில ராஜராஜ சோழன் போருக்குப் போயிட்டதால வேலைய அப்படியே நிறுத்திட்டாங்க.. பின்னால வந்தவங்களுக்கு இந்த எடமே தெரியாததால அப்டியே கம்ப்ளீட் ஆகாம மிஸ் ஆயிருச்சு” என்றார். 

நான் குழம்பிப் போய்விட்டேன். ஷிவ்குமார் சாரைத் திரும்பிப் பார்த்தேன். முகத்தில் எப்போதுமில்லாமல் அத்தனை சாவதானம்.

சர்வ நிச்சயமாக எனக்கு நினைவிருக்கிறது. முன்பு இப்படியொன்றை சேட்டு சொல்லவேயில்லை. கடைசி இருபத்தியேழு கரணங்கள் மிகக் கடினமானவை என்றும் அவற்றைச் செதுக்கும்வரை ஆடல் மங்கை எவராலும் அந்நிலையில் அப்படியே நிற்கமுடியாது என்பதாலும் எண்பத்தியொன்றுடன் அம்முயற்சி கைவிடப்பட்டதாகவும் அவர் சொல்லியிருந்தார்.

[5]

வெளியில் வந்து சம்பிரதாயப் புகைப்படங்களெல்லாம் எடுத்துக்கொண்டிருக்கும் போதும், சிறப்பு வழிபாடுகள் செய்தபோதும் உள்ளுக்குள் அந்த நமைச்சல்தான் இருந்துகொண்டே இருந்தது – இந்த ஆள் போனமுறை வந்தவரில்லையா? நிச்சயம் அவரேதான். அதே யானைக்கால். ஏன் இத்தனை உளறல்? முன்னுக்குப் பின்னான கூற்றுகள்? ஈடுபாடின்மை? ஷிவ்குமார் சார் முகத்திலும் ஏதேதோ புதிய ரேகைகள். 

ராஜராஜ வாயிலருகில் வந்ததும், காசை வாங்கிய கையோடு சேட்டு அலைபேசியை எடுத்துக்கொண்டு அப்படியே ஒதுங்கிவிட்டார். 

சாலையைக் கடக்கும்போது ஓர் இனம்புரியாத வெறுப்பு – வாய் போகும் போக்கில் கண்டதையும் சொல்லிவைப்பார்கள் போல; காசை வாங்கும்போது துளிகூட கூச்சமே இருக்காதா?

கார் ஏசியின் உடனடி குளிர் ஒரே வினாடியில் அந்த நாளின் அத்தனை கோக்குமாக்கான சாலைகளையும் லாரிகளையும் பேருந்து ஒலிப்பான்களையும் நினைவூட்டியது. கோயிலின் எண்ணெய் வீச்சம் நாசிக்குள் மிச்சமிருந்தது. நிறைவு கிட்டாததால் உண்டாகும் ஒரு வித தோல்வியுணர்ச்சி. கார் கல்லூரியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

“அந்த உள்ளறையில் எஞ்சிய 27 சிற்பங்கள் ஏன் செதுக்கப்படவில்லை என்பதற்கு வழிகாட்டி சொல்லிய காரணத்தை நீ நம்புகிறாயா?” ஷிவ்குமார் சார் இந்தக் கேள்வியைக் கேட்டதும் எனக்குச் சுரீரென ஓர் உற்சாகம் மேலெழுந்தது. மிகச் சரியாக அந்தச் சிற்ப விவரிப்பில்தான் அந்த நாளே நொடித்துப் போய்விட்டதாக எனக்கு உள்ளுணர்வு இருந்திருக்க வேண்டும். 

“அதான் சார்.. நீங்க இதெல்லாம்பத்தி படிச்சிட்டு வந்திருந்தீங்கன்னு தெரிஞ்சுது அப்போவே.. அந்தாளுக்கு இன்னைக்கு ஏதோ இன்வால்வ்மெண்ட்டே இல்ல.. இஷ்டத்துக்கு என்னென்னமோ சொல்லிட்டு போறான்.. லாஸ்ட் டைம் நல்லா டீட்டைல்டா கரெக்ட்டா சொன்னான்..” நிறுத்தாமல் அதே ஆர்வத்தோடு, சென்ற முறை அம்மனிதர் பரதக் கரணங்கள் செதுக்கப்படாததற்கான காரணங்களாகச் சொல்லியவற்றை விவரித்துச் சொன்னேன்.

கேட்டுக்கொண்டே வந்தவரின் முகத்தில் யாதொரு பிரமிப்பும் இல்லை. “முன்பு நல்ல கலாப்பூர்வமான கட்டுக்கதையைச் சொல்லியிருக்கிறார் போல..” என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். எனக்குச் சரியாகப் புரியவில்லை. அவரே தொடர்ந்தார், “வேறேதும் கதைகள் உனக்குத் தெரியுமா?” நான் இடவலமாக தலையசைத்தேன். “அந்தக் கதை எதுவும் உண்மையில்லை; இதுவரை அவை செதுக்கப்படாததற்கான சரியான காரணம்..” உதட்டைப் பிதுக்கி தோள்களைக் குலுக்கி “ப்ச்” என்றார்.. மலையாளிகளின் பிரத்யேக அலட்சிய உடல்மொழி.    

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக அந்தக் கதையை நம்பிக்கொண்டிருந்தேனே என்பதைவிட, தாவிக்கொண்டு ஷிவ்குமார் சாரிடம் அதை இப்போது சொல்லியதுதான் ரொம்பவே அவமானமாக இருந்தது. அவர் முகத்தில் எதுவும் கேலிப் புன்னகை எஞ்சியிருக்கிறதாவெனப் பார்த்தேன். இல்லை. 

“கண்டுபிடிக்கச் சிரமமான உள்ளறைக்குள் இருந்துவிட்டதால், அந்தக் குறை பின்னாட்களிலும் சரிசெய்யப்படாமல் போய்விட்டது” ரொம்பவே கூர்மையாக இப்படிச் சொன்னார். தொய்வைக் காட்டிக்கொள்ளாமல், ஒரு போலி கவனக்குவிப்பைப் பாவனை செய்தேன்.

“அல்லது இவ்விடத்தின் ஒப்பிட முடியா பிரம்மாண்டத்தில் அந்தக் குறையை எவருமே சட்டை செய்யாமல் விட்டிருக்க வேண்டும்” – ஆமோதிப்பதைப் போல தலையசைத்தேன்.

சாலையைப் பார்த்து வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தவர், திரும்பி எண் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, “குறைகளையும் குற்றங்களையும் கசடுகளையும் மூடி மறைக்க மிக எளிதான புற பிரம்மாண்டங்களே போதுமானதாக இருக்கின்றன இல்லையா?” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினார். முகத்தில் அதே பழைய விரக்தி; கூடவே விளங்கிக்கொள்ள முடியாத ஓர் ஒப்புதலும் ஊசலாடியது.

அதுவரை தன்னுணர்வின்றி கார் இருக்கையின் மென்மையைத் தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்த என் கையை மெல்ல மடக்கி மீட்டுக்கொண்டேன்.  

2 comments

கதையின் அகமும் புறமும் | எழுத்தாளர் ஜெயமோகன் March 7, 2021 - 12:04 am

[…] சாந்தாரம்- சிறுகதை […]

கலாப்ரியா September 1, 2021 - 4:09 pm

“குறைகளையும் குற்றங்களையும் கசடுகளையும் மூடி மறைக்க மிக எளிதான புற பிரம்மாண்டங்களே போதுமானதாக இருக்கின்றன இல்லையா?”//

Comments are closed.