நிழல் இலா ஒளி (பகுதி 1)

by பாதசாரி
0 comment

1. உனக்குள் நீ உணர்ந்து உனக்கு வழங்கிக்கொள்ளும் மதிப்பை மீறி எவராலும் கூடுதலாகத் தந்துவிட முடியாது.

2. என்னிடம் கேட்டுக்கொண்டா வந்தது இவ்வுயிர், என்னிடம் சொல்லிக்கொண்டு போவதற்கு?

3. உன்னால் ஏறவே முடியா உச்சியில் இருந்து, தென்னை தன் காயை, தெங்கம்பழமாக்கித் தானே உதிர்க்கிறது. ஞானப்பழம் பறிக்கவேவொண்ணாது, தானே உதிரும் காண்.

4. தரையில் கிடந்து பாடிக்கொண்டிருக்கும் உதிர்ந்த இலைக் குவியலை, குப்பை எனச் சொல்லும் உன் மனம்தான் இயற்கையில் ஒட்டாத மட்காத குப்பை.

5. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் – எனும் குறள் எவருக்கும் துன்பம் தணிக்க வல்லது. வ.உ.சி இதை ‘இதழகல் குறள்’ என்பார். இக்குறளை வாசிக்கும் பொழுது உதடுகளும் ஒட்டுவதில்லை. உள்ளடக்கத்தை மட்டுமல்ல, உருவத்தையும் ஒட்டா நிலையில் அமைத்து,  ஒட்டுதலை நீங்கப் பேசும் வள்ளுவன் மகாகவிக்கும் மேலே மேலே.

6. முன் கணம், பின் கணம் ஏது? முற்றிலும் தற்கணம்.

7. விளைவெதற்கும் பக்கவிளைவு இயற்கையே. உணவின் பக்கவிளைவு மலமும்தான் போல உயிரின் பக்க விளைவு மரணம். இதில் எல்லாவற்றிலும் காலத்தின் மாயக் கைவரிசை உள்ளது. காலம் பற்றி இருக்காமல் யாவும் நிகழ் எனும் விழிப்பில், மனம் என ஒன்றும் இல்லை. முந்தைய கணத்தினின்றும் விடுதலை.

8. அடுக்கியதில் ஒரு சீர்மை இருந்திருந்தால், கலைந்ததிலும் ஒரு சீர்மை கண்டிருப்பாய்.

9. எப்போதுமே கதவுகளுக்கு வெளியே இருப்பவன் எனக்கு, அது பூட்டியிருந்தால் என்ன, திறந்திருந்தால் என்ன!

10. ஒன்றுமில்லையில் புகப்போகிறாய். அதற்குள் இத்தனைகளைச் சுமப்பானேன்?

11. விளையாட்டாகச் சொல்வதுண்டு- பேய் பிடித்தவள் பேயைவிட பயங்கரமாக ஆடுவாள். துக்கத்தைவிட துக்கம் பற்றிய எண்ணம் பயங்கரம்.

12. ‘சீறினால் அலை. சிந்தை ஒடுங்கினால் கடல்’ என்றேனா, ஈரம் சிரிக்கிறது!

13. எண்ணம் ஒரு திசையில் போகையில், அடங்காமல் உணர்ச்சி அதன் எதிர்திசையில் போகிறது. சுழலும் வட்டப்பாதையில் கட்டியணைக்காமலா போய்விடப் போகிறார்கள்!

14. என் கண்ணீர் அழுக்குக் கண்ணீர்தான்- எனக்காகச் சிந்தப்படுவதால்! தூய கண்ணீர் ஆவது பிறருக்காக சிந்தப்படும் போதுதான்!

15. மரத்துக்குக் கீழ் நிற்பவருக்குத் தாகம் எடுப்பதில்லை.

16. உப்புப் பெறாத விஷயம் என்கிறீர்களே? ஒரு உப்புக் கல்லுக்குள்ளும் அலையடிக்கும் கடல்.

17. அதர்மத்தை அதர்மத்தால் வெல்ல வேண்டும் என்றால், இறுதியில் அது அதர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான போர் ஆகிவிடாதா கீதாசார்யனே!

18. கட்டங்கடைசியில், பிடிசாம்பலும் தன் சொந்தக் கைப்பிடி அளவுக்கான சாம்பல் ஆகவும் வக்கில்லை எவருக்கும் என்றுடைத்து உலகு!

19. அவரவர் உண்மை அவரவர் கர்சீப் போல. அடுத்தவர் கர்சீப்பை இன்னொருவர் கேட்பது அரிது!

20. மனதின் கைத்தடி நான். அதுவும் பிணஞ்சுடு தடி.
ஊன்றி ஊன்றி நடக்கிறேன்.
தோள் அணைத்து உயிர் சொல்கிறது-
‘மனம் தானே பிரச்சினை, விடு.’
உடல் சிலிர்த்தது.

21. மனது போடும் சண்டைக்கு, அப்பாவி உடல் அடி வாங்குது. என்ன வாழ்க்கையடா!

22. சுழலுது சக்கரம்
அதில் இறந்தகாலப் புள்ளியெனச் சுட்ட ஒன்றில்லை.
எதிர்காலப் புள்ளியெனச் சுட்ட ஒன்றில்லை.
நிகழ்காலப் புள்ளி
ஒன்று மட்டுமே
பட்டும் படாமலும்
சக்கரத்தில் சுட்டப்படுகிறது
ஒற்றை மின்னல் வெட்டென
அவ் ஒரு கணமே
என் ஆயுள்.

23. உன் சொல்லே ஒரு தருணத்தில் உன்னைக் காட்டிக்கொடுக்கும்.

24. சொல்லால் அல்ல, சில சமயம் சொல்லையே கொஞ்சுவான் மனிதன்.

25. கண்ணுக்குத் தெரியாத காலனின் கெடுவுக்கு அஞ்சி, அன்றாடத்தின் காலக்கெடு செயல்களில் கவனம் பிறழ்கிறது. அடைதல் என இனி முழுசாக அது ஒன்றே என்றாயினும், அதையே நித்தம் பிச்சுப் பிச்சுத் தின்னும் குரங்கே ஓடாயோ!

26. ‘நான்’-ஐ நீங்க இயலாவிடில், பிறர் மீது நீட்டாமலாவது இருக்கலாம்.

27. குடும்ப வன்முறையில் சகிக்க முடியாதவற்றுள் ஒன்று, வீட்டுத் தொட்டியில் செடி வளர்ப்பது.

28. மனித மனம் குரங்கல்ல. குரங்கு பாவம், பிறர்க்குப் பெரிதாக என்ன கொடூரம் இழைத்துவிடப் போகிறது? மனித மனம் ஆதியிலிருந்தே ஒரு வேட்டை நாய்தான்.

29. இம்மேடையில் இவ்வளவு பிரம்மாண்ட நாடகம் நடத்தும் அந்த ராட்சச மாய இயக்குநன் எவர் கண்ணிலும் இதுவரை பட்டதில்லை! பிறந்த எவரும் இறுதி வரை, தாம் பார்த்தும் தாமே அதில் நடித்தும், ஒரு நீண்ட நாடகம் முடிந்து திரை விழுந்ததும் கண் மூடுகிறோம்.

30. நிழல் இலா ஒளி என்று காண்பேனோ?