மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 7): ராஜாவின் பாடல்கள்

by ஆத்மார்த்தி
1 comment

இசை என்பது தன் வடிவம், உள்ளடக்கம், வாத்தியத் தேர்வு, வழங்குமுறை, நகர்திசை, புறச்சப்தங்களின் பங்களிப்பு, அகவுணர்வுகளைப் பிறப்பிப்பதற்கான முன்னுரிமை, இருப்பு மற்றும் நீக்கம் ஆகிய இரட்டைத் தன்மைக்குள் குரல்களின் இயங்குமுறை எனப் பல கூறுகளை அடிப்படையாகக் கொண்டு காலத்திற்கேற்ப மாறிவருகிறது. இளையராஜாவுக்கு முன்னும் பின்னுமாய்த் திரை இசையை இரண்டாய்ப் பகுத்துப்பார்க்கும் போது அவருடைய முதலிசைக் காலமாக 1990ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சொல்லமுடியும். அதன் பின்னர் இளையராஜாவின் அடுத்தகால இசையை நோக்கிய தேடல் காலமாகக் கொள்ளலாம். அந்த வகையில் சில நூறு பாடல்களைப் பாடிய பாடகராகவும் எழுதிய கவிஞராகவும் இளையராஜாவின் படைப்பாற்றல் உச்சத்திலிருந்த காலத்தில் நிகழ்ந்தேறிய பாடல்கள் பலவும் இசைஞர் என்பதைத் தாண்டிய முக்கியத்துவத்தோடு விளங்குகின்றன.

இளையராஜாவின் இசையைத் தங்கள் வாழ்வின் முக்கியமான அம்சமாகக் கருதுபவர்கள் பலருண்டு. திரை இசையின் மேலான குணாதிசயம் அது. ஒரு நடிகர் மீதான அபிமானம் அதன் தொடர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லக்கூடியது. மனதுக்குப் பிடித்த படங்கள் என்று அவரவருக்கெனத் தனித்த பட்டியல்கள் இருக்கக்கூடும். இந்த இரண்டைத் தாண்டி ஒரு இசையமைப்பாளர் இசைக்கிற படங்களை எல்லாம் தேடித் தேடித் தன் மன மாலையாகத் தனக்குள் கோர்த்தெடுப்பதென்பது திரையிசை விளைவிக்கிற நுட்பமான இரசனைத் தேடல். பாடற்பேழைகள் திரைக்கு வெளியே திரையிசையைத் தருவிப்பதற்கும் சொந்தம் கொண்டாடுவதற்குமான ஆகச்சிறந்த வழிமுறையாகின்றன. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பாடற்பேழை வெளியாகிவிடுகிறது. திரைப்படம் – இரசிகன் என்கிற பெரும் பந்தத்துக்கு ஊடாகத் திரையிசை – ரசிகன் என்கிற நுட்பமான தொடர்பை நிகழ்த்துவதிலிருந்து திரைப்படம் மீதான முதல் அனுமானம் அல்லது முதல் விருப்பம் உருவாகத் துவங்குகிறது. அந்தத் தொடர்பின் நுட்பம் காலம் தாண்டி விரிவடைந்துகொண்டே செல்கிறது. இசைக்குத் தீரும் பொழுதென்பது இல்லவே இல்லை.

இளையராஜாவின் இசையை விரும்புகிற இரசிகர் கூட்டத்துக்கான மேலதிக வழங்கலாக உருவானதுதான் இளையராஜாவின் இசை தாண்டிய செயல்பாடுகள். ஆரம்பத்திலிருந்தே பாடல் உருவாக்கத்தில் இளையராஜா பாடல்களின் புனைவில் உள்ளேயும் தன் பங்களிப்புகளை நிகழ்த்தியவராகவே இருக்கிறார். பாடலை பாடலாசிரியர் முழுவதுமாக சொந்தம் கொண்டாடுவது என்பது பெரும்பாலும் இயலும் என்றாலும் சில இடங்களில் பாடலின் உருவாக்க உன்னதத்திற்காக சில வார்த்தைகள்- ஏன் சில வரிகள் வரை- அந்தப் பாடலின் தொடர்புடைய வேறு சிலருடைய உள்ளீடும் அதில் கலந்தே இருக்கும். இதனைத் தலையீடு என்றோ பிழை என்றோ வாதிடுவோரும் உண்டு என்றாலும் சினிமா என்பதன் பின்னே இருக்கிற வர்த்தக நிர்ப்பந்தங்களின் முகம் பொதுவெளியில் தோன்றுவதில்லை. அதன் உள்ளார்ந்த குரல் சிலருக்கு மாத்திரமே கேட்கவல்லது. அப்படியான மாற்றங்களைச் செய்வது சினிமா பெரும் வெற்றிபெற வேண்டும் என்பதையும் கடந்து பாடல் ஒரு உன்னதத்தை அடையவேண்டும் என்கிற கரிசனமாகத்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டியிருக்கும். அப்படியான பாடல் சொற்கள் வரிகள் மாற்றங்களை இளையராஜா தன் ஆரம்ப காலத்திலிருந்தே செய்து வந்திருப்பதாகத்தான் தெரிகிறது.

வரிகள் வார்த்தைகள் மாற்றுவது என்பது தீர்மானமாக முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டு மாற்றப்பட்டால் சரி. இதில் முரண் ஏற்படுகையிலெல்லாம் அந்த முரணின் விளைதல்கள் கடுமையாக இருக்கும். பாடலாசிரியர்களின் கவிதாசுதந்திரத்தினைக் குன்றச்செய்வதாக இதனைப் புரிந்துகொள்வோர் ஆட்சேபிப்பது நிகழும் அல்லவா.? இசையமைப்பாளரோ இயக்குநரோ ஒரு குறிப்பிட்ட பாடலின் சில சொல்லாடல்களை அல்லது ஒரு சில வரிகளில் திருத்தம் சொன்னாலும் அந்தப் பாடல் குறிப்பிட்ட அந்தப் பாடலாசிரியரின் பேரிலேயே வெளியாவதும்கூட சினிமாவின் முறைமைகளில் ஒன்றுதான். ஆனாலும், எல்லாக் காலத்திலும் எல்லாமும் ஒரே சீராய் விளைந்துவிடுவதில்லை.

திரையில் இளையராஜா தோன்றிய படங்களில் சில நிழல்கள், தர்மபத்தினி, சாதனை, புதுப்புது அர்த்தங்கள், கரகாட்டக்காரன், கும்பக்கரை தங்கய்யா, வில்லுப் பாட்டுக்காரன், கண்ணாத்தாள், அழகர் மலை, நாடி துடிக்குதடி ஆகியன. மை டியர் மார்த்தாண்டன், இதயம், ரிக்சா மாமா, இன்னிசை மழை, விருமாண்டி ஆகிய படங்களில் துளிப்பாடல்களை இளையராஜா பாடியுள்ளார்.

இரசிகனின் அடிமனத் தாகம் ஒன்றைத் தணிப்பதற்கான நீர்த்தாரைகளாகத்தான் ராஜா தன் இசையைப் படைத்தளித்தார் என்பது இரசிகர்கள் அவரது சமகால சகாக்கள் யாவரிடமிருந்தும் தனித்து நோக்குவதற்கான காரணமாயிற்று. அவரே ரமணரை விதந்தோதி எழுதிய பாடலொன்றை இப்படித் துவக்குகிறார்- காரணமின்றிக் கண்ணீர் வரும். அப்படித்தான் ராஜாவின் பாடல்கள் தம்மை நாடிக் கேட்பவர்கள் பலரது கண்ணீர்த் துளிகளைத் திறப்பித்து விடுபவை என்று இரசிகர்கள் நம்புகிறார்கள். கூட்டுப்பிரார்த்தனையின் மெய்யுருகும் தருணம் ஒன்றின் அதே பரவசத்தைப் பாடல்களினூடாகப் பெறுவதையும் அது குறித்த விவரித்தலை அசாத்தியமான அல்லது அபூர்வமான உணர்தல் என்பதைத் தாண்டி விளக்கத் தெரியாமல் திணறுவதும் பலரும் தத்தமது ஓர்மையிலிருந்து உணர்ந்து பார்த்த தனி-அனுபவ-விவரித்தலாக விளங்குகின்றன. இளையராஜாவின் குரல் அவர் இசை மீது பெரும்பற்று கொண்ட பல இரசிகர்களோடு நேரடியாகத் தொடர்புகொள்கிற இசையைவிட மேலதிகமாக அவர்களைக் கட்டுப்படுத்துகிற மாய உட்பொருளாக உருவாகத் தொடங்கியது.

ராஜா தன் குரலில் பாடிய பாடல்கள் முழுக்க அவரது இரசிகர்களுக்கும் அவருக்குமான பரிவர்த்தனைப் பண்டமாகவே கருதப்பட்டது. ராஜாவின் இசையை இரசிப்பவர்களிலிருந்து அவரது குரலை இரசிப்பவர்களின் எண்ணிக்கை தனித்துக் கிளைத்தது எண்பதுகளின் பிற்பகுதியில் என்றால், அவரது குரலை இரசிப்பவர்களிலேயே எல்லாக் குரலையும் மற்றும் அவர் குரலையும் இரசிப்பவர்கள் ஒருபுறமும் ராஜா குரலை மட்டும் இரசிப்பவர்கள் என்று தனியே மறுபுறமும் பகுபட்டனர். ராஜா இசையமைக்கிற படங்களில் அவரது சொந்தக்குரல் பங்களிப்பில் உருவாக்கப்படுகிற பாடல்களைத் தனியே தொகுத்து பாடற்பேழைகள் விதவிதமான வகைமைகளில் வரிசைகளில் சந்தைப்படுத்தப்பட்டதெல்லாமும் 90களின் பிற்பகுதி வரை தீவிரமாய்க் காணப்பட்டது.

தன்னைத் தீவிரமாய்ப் பின்தொடர்கிற இரசிகர்களுக்கு திரை-இசை-பாடல் என்பதைத் தாண்டி மேலதிகமாய்த் தனி மனதின் அத்தனை துக்கங்களிலிருந்தும் விடுவிப்பதற்கான அலசலை, மனக்கழுவலை ராஜாவின் குரலில் உருவான பாடல்கள் நிகழ்த்தத் தலைப்பட்டன. ராஜாவின் குரல் குறித்து அவர் இரசிகர்கள் மிகப் போதுமான அருகமை ஒன்றின் அதே நிம்மதியுணர்தலாக வெளிப்படுத்தினர். அவரது பாடல்கள் அவற்றின் சொற்களைத் தாண்டி இசையாகவும் குரலாகவும் சேர்த்து உருவாக்கத் தலைப்பட்ட தனித்துவ உணர்தல்களாகவே கொள்ளப்பட்டன. ராஜாவுக்கும் அவரது தீவிர இரசிகர்களுக்கும் இடையிலான பந்தம் வெறுமனே வழங்கலும் கொளலுமானதாக முற்றிடவில்லை. குருவுக்கும் பின்தொடரும் சீடர்களுக்கும் இடையிலான உறுதியான பின்தொடர்தலாகவும் உபாசித்தலாகவும் அதிகரித்து விளங்கியது. அவரது குரலில் உருவான பாடல்களை அமைதிக்கான ஒலிவில்லைகளாகத் தத்தமது இரவுகளில் ஒலிக்கவிட்டு உறங்கத் தலைப்பட்ட இரசிகன் மனத்தை ஆறுதல்படுத்துகிற மருத்துவப் பத்தியமாகவே அவரது குரலை அறிவிக்கத் தலைப்பட்டான். முன்பிருந்த இசைஞர்கள் மற்றும் பின்தொடர்ந்து வந்த கலைஞர்கள் யாவரிடமிருந்தும் இளையராஜாவை தனித்துத் தோன்ற வைக்கிற காரணிகளில் அவரது சொந்தக் குரலில் அவர் பாடிய பாடல்கள் முதன்மையாகிறது.

இளையராஜா 1990 ஆம் ஆண்டுக்கப்பால் இசையமைத்த படங்கள் சுமார் 500 இருக்கக்கூடும். அவற்றில் அவர் தன் சொந்தக் குரலில் பாடிய பாடல்களைப் பற்றிப் பேசலாம்.

டைட்டில் பாடல்கள் மற்றும் உரையாடல் தொனியில் அமைந்த பல பாடல்களை ராஜா தன் குரலில் பாடினார். அவை பெரும்பாலும் படத்தில் அறியாத முகங்கள் வாயசைப்பதற்கான பாடல்களாக அமைந்தன. பின்புலத்திலிருந்து எழுந்துவந்து பாடலைப் பாடி மறையும் கதையிலிகளுக்கான கானங்களாக அவற்றில் பல அமைந்தன. தன் குரலை முகமாக்கி அத்தகைய அறியப்படாத பாத்திரங்களின் முகங்களின் மீது அணியச் செய்தாற் போல் பாடினார். நாயகத்துவம் மிளிராத உதிரி மனிதர்களுக்காக நிறைய பாடினார். தொடர்ச்சியாக ஜனகராஜூக்கு ராஜா பாடிய பாடல்கள் பல படங்களில் இடம்பெற்றன.

இசைக்கான திரை மிகப்பெரியது என்பதை நிறுவ முனைந்தார் ராஜா. படத்தின் அளவுகளுக்குள் அப்பட்டமாகப் பொருந்திப் போகிற சொல்மீறாப் பாடல்களை அதுகாறும் சினிமா அனுமதித்த அளவீடுகள் சிறிதும் மிகாமல் படைத்தளித்துக்கொண்டிருந்த வழமையான இசை வழங்குநர்களிடம் இருந்து, தான் மட்டும் தனித்துத் தோன்றுவதற்கான வழிமாற்றச் செயல்பாடாகவும் ராஜாவின் இந்த இசைக்கான மாபெரும் கேன்வாஸ் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தன் தொடர் பிரசங்கத்துக்கான களங்களாகவே தான் இசையமைக்கும் படங்களின் பாடலிசையைப் பயன்படுத்திக்கொண்டார். அவரது பாடல்களில் வருகிற சூழல்கள் படத்தின் சூழல்கள் மாத்திரமல்ல. அவற்றைத் தாண்டி ராஜா தன் இரசிகர்களோடு நிகழ்த்துகிற தொடர் உரையாடலின் உள்ளடுக்குகளாகவே பாடல்களின் வடிவமைவு அமைந்தது.

இந்தக் காலகட்டத்தில் பாடல் என்பதை இசை+குரல்+கவிதை ஆகிய மூன்றாகப் பகுப்பதில் இசையை மையப்பொருளாகவும் குரலை அடுத்ததாகவும் கவிதையைக் கடைசியாகவும் கொண்ட பாடல்களை அளிக்கலானார். எழுபதுகளில் தொடங்கி எண்பதுகளின் இறுதி வரை கவிதை தன்னை முதலிடத்தில் இருத்தி வந்திருந்தது கவனிக்கத்தக்கது. இளையராஜா தன் குரல் இசை மட்டுமன்றி, தன் சிந்தையிலிருந்து கவிதைப்படுத்திய பாடல்களும் உருவாகலாகின.

பாடல்கள் அளவுக்கதிகமாக வார்த்தைகளின் பற்றுதலில் இல்லாமல் இசையின் கரப்பிடிக்குள் ஒடுங்குவது யதார்த்தத்தை மீறிய உறுத்தலாக மாற்றம் கொள்ளாமல் பராமரிக்கப்பட்டன. பாடலற்ற பல பாடல்களைப் பாடினார் ராஜா. அவை யாவும் அவருடைய மனமொழியாக இரசிகர்களுக்கான இடுபொருட்களாக மாற்றம் அடைந்தன. ‘எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நினைக்கிறே’ என்ற பாடல் ஒரு உதாரணம்.  கும்பக்கரை தங்கய்யா படத்தில் ‘என்னை ஒருவன் பாடச்சொன்னான் அவன் சொன்னது போல் நான் பாடுகிறேன்’, புதுப்பாட்டு படத்தில் ‘நேத்து ஒருத்தரை ஒருத்தரு பார்த்தோம்’ பாடல், ஊரு விட்டு ஊரு வந்து படத்தில் பாடிய ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா.?’, ராஜா கைய வச்சாவில் ‘மருதாணி அரைச்சேனே உனக்காக எதமா..’

ராஜாவுக்கு அமைந்த குரலானது விருப்பு வெறுப்பு ஆகிய சக மனவெளிப்பாடுகளைத் தாண்டிய ஆன்மத் தேடல் ஒன்றை நிறுவுகிற ஓர்மையுடன் பொழிந்து நுரைக்கிற அரிய வகைக் குரல். உணர்தல்களின் வரைபடத்தில் எந்தவொரு புள்ளியிலிருந்தும் அவரால் பாட முடியும். இன்னும் விவரமாய்ச் சொல்லப் பார்க்கையில் ராஜாவின் குரல் பாடகருக்கான அளவீடுகளுக்குள் இயங்குவதல்ல. அது கொஞ்சம் வேறுபட்ட குரல். அவர் பாடும் பாடல்கள் அவ்வவற்றின் சூழல், தன்மை, தேவை, காட்சி நிர்ப்பந்தம், இவற்றுக்கேற்ப சுகம், துக்கம் ஆகிய இரண்டு திசைகளிலும் எவ்வளவு வேண்டுமானாலும் பயணிக்க வல்லது. ஆனாலும் எப்போதும் மாற்றமடையாத நிரந்தர வெறுமை ஒன்றைக் கொண்டிருப்பது. நிழலற்ற மனிதன் என்பதைப் போல் அரிதினும் அரிய என்பதைத் தாண்டிய ஒன்றாகவே ராஜா பாடுகிற குரலைச் சொல்லத் தோன்றுகிறது. அது ஒரு இல்லா நிலா.

எந்த மொழியிலும் எந்த நிலத்திலும் இப்படியொரு குரல் இல்லவே இல்லை என்றெல்லாம் சொன்னால் அது பம்மாத்து. சொல்ல வருவது வேறு விஷயம். உலகெங்கிலும் இளையராஜா போன்ற அடியாழ கனமும் மென் சிறகு நுனி மலர்தலும் ஒருங்கே கொண்ட பாடகர்கள் பலரைச் சொல்ல முடியும். அவர்கள் யாவருக்கும் ராஜாவுக்குமான பெருத்த வித்யாசம் ஒன்று உண்டு. அவர்களில் பலரும் பாடகர்கள். இசையைப் பெற்றுக்கொண்டு குரலை வழங்குபவர்கள். ராஜா இசைஞர். அவரது மன-முதல்-நகர்தல் இசைத்தல் என்பதாகத்தான் பல காலமாக இருந்துவருகிறது. இசைஞரான ராஜா குரலில் இப்படியான மலர்தலையும் உலர்தலையும் சட்டுச் சட்டென்று பற்பலப் பாடல்களில் ஜாலம் நேர்த்திப் பயணிப்பதன் பின்னால் மிக உக்கிரமான இசைஞராக அவர் வலம்வந்த காலமும் அதன் ஆகப் பரபரப்பான தருணங்களும் உண்டென்பதை சேர்த்துப் பார்த்தால்தான் வியக்க வேண்டியதன் விசாலம் புரியவரும்.

ஆர்வி உதயக்குமார் எழுதிய அடியே வஞ்சிக்கொடி பாடலை பொன்னுமணி படத்தில் கார்த்திக் ராஜா இசையமைப்பில் இளையராஜா பாடினார்.  

அவதாரம் படப் பாடல்கள் தனித்துத் தோன்றியவை. இந்தப் படத்தை இயக்கி நாயகனாக நடித்தவர் நாசர். பெரும்பாலும் எதிர்நாயக- குணச்சித்திர வேடங்களை ஏற்பவராக அறியப்பட்ட நாசர், குப்புசாமி என்ற பேரில் அவதாரம் படத்தின் கதை நாயகப் பாத்திரத்தை ஏற்றார். அவருடைய பேசுங்குரலுக்கு அருகாமையில் ஒலிக்கும் வண்ணம் தன் பாடும் குரலை நிறுத்தி இந்தப் படத்தின் பாடல்கள் யாவற்றையும் பாடினார் இளையராஜா. ‘தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ‘, ஜானகியுடன் பாடிய டூயட்- காலம் வென்ற மந்திர கானமாயிற்று. இன்றளவும் காதலின் தீராத பக்கங்களைத் திறந்து கொள்ளச்செய்கிற நேசக்காற்றாக மட்டுமல்ல. காதல் புதினத்தைத் திரும்பித் திறப்பதற்கான ஞாபக புக் மார்க் என்று சொல்லத்தக்க வகையில் பலரது பெரும்பிரியப் பாடலாக மனவானெங்கும் தவழ்கிறது. தன் வாழ்வின் ஒரே ஆதுரமான பொன்னம்மாவிடம் கூத்துக்கட்டி நடிப்பதன் மீது தனக்கிருக்கக்கூடிய சமரசமற்ற பேராவலைத் தெரிவிக்கிற பாடல். அரிதாரத்தைப் பூசிக்கொள்ள ஆசை. ‘சந்திரரும் சூரியரும்’, ‘ஒரு குண்டுமணி குலுங்குதடி’ ஆகிய பாடல்களும் நல்ல பிரபல்யத்தை அடைந்தவையே. ராஜா தன்னைக் கொஞ்சமும் வெளித்தெரிவிக்காமல் கதையின் தேவை அளவுகளுக்குள் பாடிய பாடல்களின் வரிசையில் அவதாரம் படத்தின் எல்லாப் பாட்டுகளுக்கும் இடமுண்டு.

உலகின் இசைப் பற்றுதலை விரித்து நோக்குகையில் மற்ற யாவற்றையும்விட சோகத்தின் மீதான மானுட நாட்டத்தைத் தனித்து உணர முடியும். கலையின் அடிப்படைத் தன்மைகளில் ஒன்று அது. சந்தோஷத்தைப் பார்க்கச் செய்கிற அதே வேளையில் துக்கத்தை ஆய்வுசெய்கிறது. மனிதனின் துன்பத்தை அருகே சென்று நோக்குவதோடு அதனைக் கூராய்வதன் மூலமாக அனுபவத்தை அறிதல்-ஞானம் என இரண்டாய்க் கிளைக்கச் செய்ய முனைகிறது. சந்தோஷத்தில் கரம் குலுக்காதவனும் துக்கத்தில் தோள் தருவதன் பின்னால் இயங்கத் தலைப்படுகிற உளவியல் இஃது. இசை, பிற கலைகள் யாவற்றையும்விட அதிகமும் துயரத்தைக் கையாள்வது அதன் உலகளாவிய இயல்பு.

திரைப்படங்களில் சோகம், துக்கம், தோல்வி, துயரம், சவால், பிரிவாற்றாமை, ஊடல், மரணம், கண்ணீர் உதிர்தல், வெறுமை, மறு எழுச்சி எனப் பல சார்புகளுடன் பாடல்கள் திரும்பத் திரும்ப உருவாக்கப்படுகின்றன. இளையராஜாவின் குரல் பிற எந்தக் குரலை விடவும் மேற்சொன்ன அத்தனை உப வகைகளுக்கு உள்ளேயும் சென்று திரும்பக்கூடிய சிறப்புக்குரியது. அவர் பார்த்துப் பார்த்துப் பாடிய பல பாடல்கள் பொதுவாகவே சோகப் பாடல்கள் என்று பகுபடுகிறவை போலத் தோன்றினாலும் அவற்றினுள்ளே தென்படக்கூடிய உப-நுட்ப-வித்தியாசங்கள் அவர் குரலின் பரிமாணங்களைப் பேசுவதற்கான இடுபொருள்களை நல்குகின்றன.

யூகிக்க முடியாத பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார் இளையராஜா. ‘நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு’ என்ற பாடலை ஆணழகன் படத்தில் பாடினார் ராஜா. முன்னர் அதிகம் பாடியிராத உலர்ந்த சன்னமான குரலெடுப்பில் அமைந்திருந்தது இந்தப் பாடல். சோகச்செறிவுடனான ஷெனாய் இசையை இடையிசைக் கோர்வையாகக் கொண்ட இப்பாடலில் தாள இசை மிகப் பலமான இடையிசை வழங்கலோடு அமைந்திருந்தது. உடன் பாடியவர் ஸ்வர்ணலதா. ராஜா சற்றே குழந்தைமையும் அமைதியும் கலந்து பாடியிருந்தார். சரணம் நிறைந்து பல்லவியோடு கோர்க்கிற ஒவ்வோர் இழைதலும் பரவச மயக்குதலாய் நிகழ்ந்தன. இரண்டாம் சரணத்தின் செல்திசை வரைக்கும் பாடலானது யூகத்திற்கு அப்பாற்பட்டே இயங்கி நிறைந்தது.

சக்கரைத் தேவன் படத்தில் ‘நல்ல வெள்ளிக்கிழமையில’ எனத் தொடங்கும் பாடலையும் மேற்சொன்ன பாடலுக்குச் சமமான சன்னத்தூவலோடு இழைத்திருந்தார் ராஜா. ஆன்மீகச் சாய்வுடனான பாடல் இது. முழுப்பாடலும் ‘தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே‘ என்ற பெரும்புகழ்ப் பாடலின் அதே சந்தக்கட்டும் மெட்டுப் பரவலும் கொண்டமைந்த தெம்மாங்குப் பாடலான இதனை மேலும் கீழும் விலகிடாத மையமான தொனியொன்றில் முழுவதும் பாடினார் ராஜா. பின்னாட்களில் பரணி என்ற படம் பாடல்பேழை மாத்திரம் வெளியானது. படம் வந்ததாய் நினைவில்லை. அதில் பார்த்துப் பார்த்துப் பாடல்களை அமைத்திருந்தார் ராஜா. அதிலொன்று ‘தேனா ஓடும் ஓடக்கரையில்’ என்று தொடங்கிற்று. அதிகம் பரபரப்பாக ஒலிக்காத பாடல்களில் ஒன்று எனினும் இன்றைக்குக் கேட்டாலும் முற்றிலும் புதிய பரவசமொன்றின் பாடற்பூச்சி தன் உட்சிறகுகளை விரித்துப் பறக்க முனைகிறது. ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’ பாடலை முழுவதுமாக ஜேசுதாஸ் பாடினார். ராஜா பாடியது அதே பாடலின் சிறுதுண்டு. அந்தப் பாடல் படத்திலும் பாடற்பேழையிலும் இடம்பெற்று அதிகம் கேட்கவும் பட்டது.

வெறுமையிலிருந்து வசந்தம் நோக்கிய புதுவகைப் பாடல்கள் பலவற்றை எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடினார் ராஜா. என்னருகே நீ இருந்தால் அறியப்படாத முகங்களுடன் எடுக்கப்பட்ட படம். இதில் இடம்பெற்ற ‘இந்திர சுந்தரியே சொந்தம் என்று சொல்லவா’ என்ற பாடல் பாடல்பேழை வெளியானதுமே அளவற்ற பிரபலத்தை அடைந்தது. இலேசான எள்ளலும் நாடோடித் தன்மையும் பெருக்கெடுக்கும் குரல் ஆள்கையோடு இதனை எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடினார் இளையராஜா. எதிர்பாராத ஜாலி கானமாக இன்றளவும் ஒலிக்கிற பாடல்களில் ஒன்று இஃது. கண்மணி படத்தில் ‘நேற்று வந்த காற்று உன் பாட்டைக் கொண்டுவந்து தந்ததோ’ என்ற பாடல் மேற்கத்திய இசைப்புலத்தில் இசைந்த மெல்லிசை டூயட் பாடல். ஜானகியோடு சேர்ந்து ராஜா பாடிய இந்தப் பாடலும் நன்கு வரவேற்கப்பட்ட இன்னொன்றுதான். இந்தப் பாடல் முழுவதையும் ராஜா மந்திர உச்சாடனத்துக்கான மெல்லியதோர் குரலில் பாடினார். அருகிலிருக்கிற இரண்டொருவருக்கு மாத்திரமே கேட்பதற்கான சப்த அளவுகொண்ட அந்தக் குரலுக்கு இணையாக பலமான ஜானகியின் குரலும் அதைவிடப் பலமான இசைமெட்டுமாக, மேலேறிச் செல்லுகிற படிகளைப் போல், ஒன்று பின்னது அடுத்தது என்று இசையால் இயைந்தது. பல்லவியை ராஜா பாடும் போது சரணத்தின் ஸ்தாயியை விடவும் குன்றி ஒலித்தது ஈர்த்தது. பரதன் படம் இந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு தமிழில் எஸ்டி சபா இயக்கத்தில் உருவானது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘புன்னகையில் மின்சாரம்’ பாடல் வித்தியாசமான படமாக்கத்தில் காணக் கிடைத்த நடனப்பாடல். இதனை ஜானகியோடு இணைந்து பாடிய ராஜா மேற்சொன்ன மற்றவற்றிலிருந்து விலகிய காத்திரமான தொனியில் இந்தப் பாடல் முழுமையும் பாடினார். சாமி போட்ட முடிச்சு. இது படத்தின் பெயர். இதில் ‘மாதுளங்கனியே நல்ல மலர்வனக் குயிலே’ தென்றலாய் வருடும் தெம்மாங்குப் பாடல். ராஜாவும் ஜானகியும் பாடிய இன்னுமோர் மென்வருடல் கானமிது.

ஜானகியுடன் ராஜா இணைந்து பாடிய இன்னொன்று தேவதை படத்தில் நடபைரவி ராகத்தில் இடம்பெற்ற ‘ஒரு நாள் அந்த ஒருநாள்’ பாடல். மந்திரவெளியில் அலைகிற கிறக்கப் பறவையாய் வருடிச் செல்கிற ஒன்று. பலமான மைய இசையும் அழுத்தமான உபகுரல்களும் மிக மென்மையான இணைப்பிசைச் சரடுகளும் பூத்திரியாய் விரிந்தொலிக்கும் ஜானகியின் ஐஸாய் உருகும் குரலும் எல்லாம் கலக்கிற இடத்தில் மேலதிகச் சுவைகூட்டியாகவே ராஜாவின் குரல் இந்தப் பாடலில் தென்படுகிறது.

புலன் விசாரணை படத்தில் ‘இதுதான் இதுக்குத்தான்’ என ஒரு விட்டேற்றி கானம். ஒட்டுமொத்தப் பாடலுமே சிச்சிக் சிச்சிக் என்ற குரல்துளியின் பன்முறை வருகையுடன் நிகழ்ந்தேறும். பாடலின் மைய இசையும் விதவிதமான பங்குபாகங்களின் ஒட்டுத் தோரணமாக அமைந்திருக்கும். மிகப்பலமான எள்ளல் மிகுந்தொலிக்கும் தொனியில் இதனைப் பாடினார் ராஜா.

தன் ஆளுமையை மாற்றி மாற்றி வெவ்வேறு விதங்களில் அமைத்த பாடல்களைப் பாடினார் ராஜா. சோகப் பாடல்களில் எளிதில் யாராலும் தோற்றுவிக்க முடியாத இருள் நிகர் ஓர்மையைப் பிறப்பிக்க அவரது குரலால் இயன்றது. ஆவாரம்பூ அறிந்த முகங்கள் நடிக்காத படம். அதனை இயக்கியவர் மலையாள இயக்குனர் பரதன். அதன் தொடக்கப் பாட்டான ‘ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே’ என்று தொடங்குவது. மிகமிக சன்னமான துவக்கக் குழலிசை தொடர்ந்து அழுத்தமும் திருத்தமுமாய்ப் பல்லவியைத் தொடங்குவார் ராஜா. சாதாரணமாய்ப் பாடல் ஒன்றை மனத்துள் மனனம் செய்வதற்குக் குறைந்தபட்சம் சிலபல முறைகள் கேட்டாக வேண்டும் அல்லவா, இந்தப் பாடலின் சிறப்புகளில் இன்னொன்று முதல் முறை கேட்டு முடிக்கும் போதே முக்கால் வாசிப் பாடலாவது மனத்துள் உறைந்திருக்கும். எளிய சொற்களாய்த் தோற்றமளித்தாலும் தீர்க்கமான அர்த்தப் பாங்குடன் பாடலாய் விரிவது அழகு. ‘தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு’ என்ற வரி இளையராஜா தன் இரசிகர்களை நோக்கி விசிறித் தருகிற தனி-ஆதுரச் செய்தியாகவே இரசிகர்களால் ஏற்கப்பட்டது.

குணாவில் இடம்பெற்ற ‘அப்பனென்றும் அம்மையென்றும்’ பாடல் இன்னுமோர் ஞானகானம். தோன்றி வளர்ந்து அழியும் மனித வாழ்வின் சிதைவைத் தன் குரலின் தொடக்கத்திலேயே அழகுற எடுத்தொலித்தார் இளையராஜா. மொத்தப் பாடலுமே சோகம் துக்கம் என்றெல்லாம் தனித்து அறிய முடியாத தவிப்பொன்றின் கணங்களாகவே விரிந்தன. அறிதலின் வலியை, அறியாமையின் வாதையை ஒருங்கிணைக்கிற புள்ளியிலிருந்து மொத்தப் பாடலுக்குமான இசையமைப்பைச் செய்தார். படம் பார்க்கிறவர்கள் எல்லோருக்குமே கதையின் கனத்தைச் சமபங்கு பிரித்தளிக்கிற வல்லமை இந்தப் பாட்டுக்கு இருந்தது. அதைத் தன் அழுத்தமும் திருத்தமுமான குரலில் எடுத்தாண்ட வகையில் பன்மடங்கு பெருகி உணரச் செய்தார் இளையராஜா.

பணக்காரன் படத்தில் ரஜினிக்காக ராஜா பாடிய ‘மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்’ பெரிதும் அறியப்பட்ட பிரபலமான பாடல். முகமற்ற பாத்திரங்களுக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு சிறந்த கானமாக இன்றளவும் ஒலிப்பது. சோகத்தை அதிகரித்துத் தருகிற வல்லமை ராஜாவின் குரலுக்கு இருப்பதை இந்தப் பாடல் சப்த சாட்சியமாக நிறுவித் தந்தது. இந்தப் படத்தின் ஸ்டைலான- சந்தோஷமான பாடல்களுக்கு எந்த விதத்திலும் சிறு மாற்றும் குறையாத பெருங்கவனத்தை சோகப் பாடலான இதனால் ஈர்க்க முடிந்தது. பாடிய ராஜாவின் குரல், ரஜினியின் புகழ் இரண்டும் இணைகிற புள்ளியில் பன்மடங்கு பெருகியொலித்தது.

தாலாட்டு படத்தில் ‘எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும் உனக்கென நானிருப்பேன்’ என்ற பாடல் நின்று நிதானித்தொலிக்கிற நல்லதோர் சோகப் பாடல். இதனை ராஜா பாடிய விதம் உறுத்தாமல் ஒலித்தது. என் ராசாவின் மனசிலே படத்தில் ‘பெண்மனசு ஆழமென்று’ என்ற பாடலும் நின்று நிதானமாய்ப் பெருக்கெடுக்கும் மலைநதி போன்ற பாடல்தான். சேது படத்தில் ‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா’ பாடலையும் வள்ளி படத்தில் ‘என்ன என்ன கனவு கண்டாயோ’ பாடலையும் தன் குரலில் உருக்கொடுத்தார் ராஜா. கரிசக்காட்டுப் பூவே படத்தில் இடம்பெற்ற ‘வானம் பார்த்த கரிசக்காடு பூப்பூத்தது’ என்ற பாடல் எங்கோ ஆழத்தில் ஆரம்பிக்கும். அந்தப் பாடலை ‘இதுகூட காதல் விதைதானா’ என்ற இடத்தில் வேறொரு தளத்துக்கு நகர்த்துவார் ராஜா. பல்லவிக்கும் முதற்சரணத்துக்கும் இடையிலான இணைப்பிசை உயிர்ச்சவாலுடன் பயணித்து உயிர்க்கும் சாகசத்தை நினைவுறுத்தும். ‘உறவெல்லாம் தாண்டி’ என்ற சொற்கூட்டை ராஜா எடுத்தாள்வது நளினம். ‘இதுகூடக் காதல் என்றுதான் ஆகுமோ’ என்று தொடும் போது உயிர் கசியும். ராஜா தொண்ணூறுகளின் இறுதியில் பாடிய உன்னத மெல்லிசைப் பாடல்களில் ஒன்று இது.

சோகப் பாடல்களுக்கு எப்போதும் சினிமாவுக்குள்ளும் புறமும் செல்வாக்கு அதிகம். பயணங்களின் போது சோகப் பாடல்களைத் தவிர்ப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இரவுப் பயணங்களின் போது ஓட்டுநர்கள் தேடித் தேடிப் பதிவுசெய்த பாடல்களை ஒலிக்கச் செய்தபடி சாலைகளின் தருணங்களை நிரப்புவது பழக்கம். பாடல் கேட்பது என்பது ஒரே சொற்றொடர் போலத் தொனித்தாலும் அது மாபெரும் எண்ணிக்கையிலான உப-வகைமைகளைத் தன்னகத்தே கொண்டு பெருகும் இரசனைச் சுனை. யாருக்கு என்னென்ன பாடல்கள் பிடிக்கும் என்பது தீராக்கோலத்தின் எண்ணிலடங்காப் புள்ளிகளைப் போலப் பெருக்கெடுப்பவை.

சில பாடல்களைத் தமது வாழ்க்கையில் உயிர் நிகர்ப் பாடல்களாகக் கருதுகிறவர்கள் அந்தப் பாடலை அடிக்கடி கேட்க விரும்பாமல் அதனை நேசிப்பது சுவைமுரண். எந்தப் பாடலைத் தமது உயிருக்கு நிகராய் நேசிக்கிறார்களோ அது ஒலித்தால் கண்கள் கரைந்து மனத்தின் வேர்வரை கலைந்து கண்ணில் நீர் பெருகித் தளர்ந்து போவர். அப்படிப் பல நண்பர்கள் அதிகமும் சுட்டுகிற பாடல்களில் பெரும்பாலானவற்றைப் பார்த்தால் அவற்றின் பின்னே ஒரு ஒற்றுமையைக் கவனித்திருக்கிறேன். அவை இளையராஜா இசையமைத்த பாடல்களாக இருக்கும் என்பதைத் தாண்டி அவர் பாடிய பாடல்களாக இருக்கின்றன என்பதுதான் அந்த விநோதம்.

‘என் தாயெனும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே’, ‘சொல்லால் அடிச்ச சுந்தரி’, ‘வீணைக்கு வீணைக்குஞ்சு‘, ‘பெண்மனசு ஆழமென்று ஆம்பிளைக்குத் தெரியும்’, ‘அம்மான்னா சும்மா இல்லைடா’, ‘என்ன என்ன கனவு கண்டாயோ’, ‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா’ போன்ற பல பாடல்கள் ராஜாவின் பேர் சொல்லி ஒலிப்பவை. அவற்றில் பலவற்றைத்தான் உயிர் நிகர்ப் பாடல்களாகவும் கேட்கவே முடியாத கானங்களாகவும் ஒருங்கே கொண்டபடி வலம்வருகின்றனர் அவரது இரசிகர்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு சேர்ந்து பல பாடல்களைப் பாடியுள்ளார் ராஜா. இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் என்பதை உலகறியச் செய்யும் பல நேர்தல்களின் வரிசையில் இப்படியான பாடல்களும் இடம்பெறுகின்றன. ‘சோழர் குலக் குந்தவை போல்’ என்ற பாடல் உடன்பிறப்பு படத்தில் இடம்பெறுவது. பாட்டுப் பாடவா படத்தில் ‘நில் நில் நில்’ என்ற ஒன்றும் ‘வழிவிடு வழிவிடு’ பாடலும் பிரசித்தி பெற்றன.

பிற இசையமைப்பாளர்களின் படங்களில் பெரும்பாலும் இளையராஜா பாடல் பாடியதில்லை. எம்.எஸ்.விஸ்வநாதனுடன் சேர்ந்து மெல்லத் திறந்தது கதவு, இரும்புப் பூக்கள், செந்தமிழ்ப்பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கும் ராஜா, எம்.எஸ்வி இசையமைப்பில் 1985ஆம் ஆண்டு வெளியான சுகமான ராகங்கள் என்ற படத்தின் டைட்டில் பாடலான ‘ஆத்தோரம் மேட்டுமேல ஆறுமுழம் சேலைகட்டி’ என்ற பாடலைப் பாடினார். கங்கை அமரனுடன் சேர்ந்து “ஹலோ யார் பேசுறது”, “கண்ணத் தொறக்கணும் சாமி” போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கும் ராஜா, கங்கை அமரன் இசையில் குடும்பம், மண்ணுக்கேத்த பொண்ணு ஆகிய படங்களில் பாடியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசையில் உன்னைச் சரணடைந்தேன் படத்தில் வருகிற “நட்பு நட்பு” என்ற பாடலை எம்.எஸ்.வி, எஸ்.பி.பாலு ஆகிய இருவருடனும் சேர்ந்து பாடியுள்ளார். ராஜாவின் மகள் பவதாரணி இசையில் அமிர்தம் படத்தில் ராஜா பாடிய பாடல் இடம்பெற்றுள்ளது. கார்த்திக் ராஜா இசையில் உல்லாசம், காதலா காதலா, ஆல்பம், சிங்காரச் சென்னை, குடைக்குள் மழை, மாமதுரை, வாராயோ வெண்ணிலாவே, ஜமானா (கன்னடம்) ஆகிய படங்களில் பாடினார் ராஜா. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நந்தா, பட்டியல், பருத்திவீரன், கற்றது தமிழ், சிலம்பாட்டம், கோவா, சர்வம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், மாரி-2, ஹீரோ ஆகிய படங்களில் இளையராஜா பாடியிருக்கிறார்.

தமிழைத் தாண்டித் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் தன் குரலில் பாடியிருக்கிறார் இளையராஜா. இன்றும் கேட்புக்குரிய பாடகராகத் தொடர்ந்து விளங்குகிறார் இளையராஜா. சூழல், வேடங்களுக்கான பொருத்தமும் காலச்சிதைவற்ற குரல் ஓர்மையும் எல்லாப் பாடகர்களுக்குமே சவாலுக்கப்பாலான வரங்கள்தான். அவற்றை இயல்பாகக் கொண்டமைந்த குரல் இளையராஜாவினுடையது. எள்ளல், எக்காளம், சோகம், துக்கம், விட்டேற்றித்தனம், தன்னை மறத்தல், தேடல், காத்திருப்பு, தொலைதூரப் பயணம், உறவுகள் மீதான ஆழ்பரிவு, காதலின் விகசித்தல், நட்பின் மீதான பிடிப்பு, யாருமற்ற அலைதல் எனப் பலவற்றையும் பாடுவதற்கான குரல் இளையராஜாவினுடையது. பாடலை உருவாக்குவதில் அவருக்கு இருக்கிற மேதமையின் நல்விளைவாகக்கூட பிசகற்ற நேர்த்தியுடன் தன் பாடல்களைப் பாடுகிற தர முதன்மை அவருக்கு வாய்த்திருக்கக்கூடும். அவருடைய பாடல்கள் எல்லோருக்குமானவையா அல்லவா என்பதல்ல விஷயம். தன்னைப் பின்பற்றுபவர்களைக் கொண்டே அவர்களின் பின்னே காலங்காலமாய் உடைபடாத இரசிக-மனத்தொடர் சங்கிலி ஒன்றை உற்பத்தி செய்துவிடுகிற வசியவல்லமை கொண்ட இசைஞனின் இசை, குரல், கவிதை போன்றவற்றின் வாதப் பிரதிவாதங்கள் ராஜாவின் பாடல்கள்.

-தொடரலாம்.

*

முந்தைய பகுதிகள்:

1 comment

Yashodha Chinnappa February 28, 2021 - 9:11 am

//புறச்சப்தங்களின் பங்களிப்பு !//
//இருப்பு மற்றும் நீக்கம் ஆகிய இரட்டைத் தன்மைக்குள் குரல்களின் இயங்குமுறை!
அடிமனத் தாகம் ஒன்றைத் தணிப்பதற்கான நீர்த்தாரைகளாகத்தான் !//
//அறியப்படாத பாத்திரங்களின் முகங்களின் மீது அணியச் செய்தாற் போல் பாடினார். நாயகத்துவம் மிளிராத உதிரி மனிதர்களுக்காக!//
//எள்ளல், எக்காளம், சோகம், துக்கம், விட்டேற்றித்தனம், தன்னை மறத்தல், தேடல், காத்திருப்பு, தொலைதூரப் பயணம், உறவுகள் மீதான ஆழ்பரிவு, காதலின் விகசித்தல், நட்பின் மீதான பிடிப்பு, யாருமற்ற அலைதல் //
Fabulously scripted ! We could travel the timeline of Raja ! The Emperor of Music !
Timetravel made possible Aathmaarthis sir ! Phenomenal research and resonating phrases !!

Comments are closed.