“நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான். அவன் உள்ளும் புறமும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.”யோவான் 10:9

“ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்”யோவான் 10:18

[1]

“ஜூடாயா பாலைவனத்திலுள்ள ஒரு பழங்குடி இடையர் இனத்தின் எச்சில்களை உனக்காக சேகரித்து வைத்திருக்கிறேன். கிளம்பி வா” என்று ஜியாத் மகமூது அப்பாஸிடம் இருந்து எனக்குத் தந்தி வந்திருந்தது. நாங்கள் எங்களுக்குள் என்ன ஏது என்றெல்லாம் கேட்டுக்கொள்வதில்லை. அழைத்தால் சென்றுவிட வேண்டும். கல்லூரிப் பழக்கம் அல்லது எங்களை அறியாமலேயே நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் எனக் கருதலாம். அது அடுத்தத் தெருவாக இருந்தாலும் சரி, அடுத்த நாடாக இருந்தாலும் சரி. நேற்று முன்னிரவில்தான் என் வீடிருக்கும் புது டில்லியில் இருந்து இஸ்ரேலின் டெல்-அவிவுக்கு விமானம் ஏறியிருந்தேன். ஏர்போர்ட்டிலிருந்து ஏர்போர்ட் டாக்ஸியைப் பிடித்து ஜெருசலேமின் டமாஸ்கஸ் கேட்டிற்கு வந்து காத்திருந்தேன். ஜெருசலேமிலிருந்து ஜெரிக்கோ, ஜூடாயா பாலைநிலம் வழியாக, வெறும் இருபத்தைந்து கிலோமீட்டர்தான். 

ஜியாத் ஜெரிக்கோ அருகில் எங்கேயோ கூடாரமிட்டிருக்கிறான். அது பாலஸ்தீனத்தில் இருக்கிறது. அவனே டமாஸ்கஸ் கேட்டில் இருந்து என்னை அழைத்துக்கொண்டு போவதற்கு கார் அனுப்பியிருந்தான். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் எல்லைப் பிரச்சினை இருந்துகொண்டிருப்பதனால் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெருசலேம் நகரின் எல்லையான இந்த டமாஸ்கஸ் கேட்டுக்கு வந்து மாறிப்போக வேண்டியதாக இருக்கிறது.

இங்கிருந்து இஸ்ரேலியர்கள் உள்நுழைய முடியாது. அந்தப் பக்கத்தில் இருந்து அராபியர்களும் வெளியேற முடியாது. இரு பக்கத்திலிருந்தும் வாகன அனுமதி மொத்தமாக இரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனால் என்னைப் போன்ற வெளிநாட்டு பயணிகள் பாஸ்போர்ட்டைக் காண்பித்து, எல்லைப் பிராந்தியத்தை கடந்து வேறொரு வாகனத்தில் ஏறி பாலஸ்தீனத்திற்குள் நுழையலாம். இந்த எல்லையைக் கடக்கும் முறைமைகளையெல்லாம் ஜியாதே பார்த்துக்கொண்டுவிட்டான். எனக்குப் பெரிய வேலை இல்லை. சொல்கிற இடத்தில் காட்ட வேண்டியதைக் காட்டிவிட்டு அவன் அனுப்பித்தரும் காரில் சரியாக ஏறி அமர்ந்துகொண்டால் போதும்.

ஜியாத் அனுப்பியிருந்த கார் டிரைவர், காத்திருந்த என்னைக் கண்டுகொண்டு என்னிடம் வந்து கைகொடுத்தான்.

“வெல்கம் டு பாலஸ்தீன், மிஸ்டர். ப்ராங்கோ இக்னேசி” என்று ஆங்கிலத்திலேயே தன்னை அறிமுகம் செய்துகொண்டான். பரிபூரண அராபியன். அவனது ஆங்கில வார்த்தைகளில் இருந்த அராபியத் தொனி, அவனது ஆங்கில உச்சரிப்பின் மேடு பள்ளங்களை ஊடாடி நிரப்பி இசை இலயத்தோடு வெளிப்பட்டது. ஆனால் வார்த்தைகள் தெளிவாக விழுந்தன. புரிந்தன. ஜியாத் முதன்முதலாக அறிமுகமான போதும் இதே மாதிரிதான் இருந்தது. 

காரில் ஏறி பயணத்தைத் தொடர்ந்தேன். முன்னிரவிலேயே கிளம்பி வந்ததால் விமானத்திலும் ஏர்போர்ட் டாக்ஸியிலும் நன்றாக உறங்கிவிட்டிருந்தேன். இப்போதுதான் இந்த நிலத்தைக் கூர்ந்து பார்க்கும் விழிப்பு கண்கூடியிருக்கிறது. 

உச்சி ஏறிய வெயில். நிராதரவாய் நின்ற வெளி. வரள் பாலை. வெந்த மண். வானம் தன் முழுக்கண்ணோடு பார்க்கும் மணல் வரிகள் நிறைந்த திறந்த நிலம். பச்சையம் நுனிக்கு எட்டாத முட்புதர்கள். வெறுமையைக் கீறி குத்திட்டு நிற்கும் குட்டையான முள்மரங்கள். தூரத்தில் தெரிந்த பாலையில்- சூடு கிளம்பிய செம்மண்ணில்- அலையலையென எழுந்த நீர்த்திரைகள். நிலம் விரிய விரிய நகர்ந்துகொண்டிருந்தது அக்காட்சி. ஒருகணம் மகிழ்ச்சியும் ஒருகணம் மருட்சியும் மாறி மாறி எழுந்தது. 

முன்னிருந்தபடி டிரைவர் “a road down to Jericho” என்று என்னைப் பார்த்து கண்ணசைத்துச் சொன்னான். அந்த வரி ஒரு படிமம். விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் என் விவிலியப் பாடவேளைகளை நினைவுகூர்ந்தேன். இயேசு இப்படியொரு கதையைச் சொல்வதாய் வரும். வழிப்போக்கன் ஒருவன் எருசலேமிலிருந்து இறங்கி எரிக்கோவிற்கு அச்சுறுத்தும் பாலைவெளியில் பயணப்படுகிறான். வழியில் சுடும்பாலையில் ஓநாய்கள் போன்று சூழ்ந்துகொண்ட காட்டுக்கொள்ளையர்களும் கள்வர்களும் அவனைத் துகிலுரித்தும் தோலுரித்தும் குருதி வழிய கிடத்திவிட்டு அவன் உடைமைகளைக் கொண்டுசென்று விட்டனர். அவ்வழியே ஒரு யூத மதகுரு சென்றார், அவர் உதவவில்லை. ஒரு லேவிய சிப்பாய் சென்றான், அவனும் உதவவில்லை. மூன்றாவதாக தாழ்ந்த குலத்தவனான ஒரு சமாரியன் கழுதையில் வந்தான். அவன் மனம் கனிந்து அவ்வழிப்போக்கனை தன் கழுதையில் ஏற்றி அருகில் இருந்த சத்திரத்தில் சேர்த்தான்.

அவர் சொன்ன அந்தக் கதையில் வரும் அந்த அச்சுறுத்தும் பாலைவழி இதுதான் என்றபோது ஒரு திடுக்கிடலை உணர்ந்தேன். அவர் சரியாக அவ்வழிப்போக்கன் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்கு இறங்கினான் என்றிருக்கிறார். “இறங்கி” என்கிற வார்த்தைதான் என்னை ஈர்த்தது. அவ்வார்த்தை அத்தனை விதத்திலும் பொருந்திப்போவதை அந்த நிலத்தை இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் போது புரிகிறது. உடலளவாலும் உள்ளத்தளவாலும் ஒருவன் இறங்க வேண்டும். அதற்கு இத்தகைய நிலத்தையே உட்பிரதியாய் கதையில் கைக்கொண்டதை என்னவென்று சொல்ல? இயேசு ஒரு சிறந்த கதைசொல்லிதான்.

பின்பு, ஒருமுறை ஜியாத் எங்கள் வகுப்பறை அரட்டைகளில் அவன் சிறு வயதில் வளர்ந்திருந்த ஊரைப் பற்றியும் இந்த நிலவமைப்பைப் பற்றியும் புவியியல் பற்றியும் அடிக்கடி சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்தேன். 

அவன் சொன்னான். “ஜோர்டான் ஆற்றின் மேற்குக்கரை பகுதியிலும் மத்திய தரைக்கடலுக்கு கிழக்குப் பகுதியிலும்தான் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் உள்ளன. ஜோர்டான் ஆறு மவுண்ட் ஹெர்மான் என்கிற பனிச்சிகர மலைமுடியில் பிறக்கிறது. நீ கேள்விப்பட்டிருப்பாய். இயேசு அங்கிருந்துதான் தன் மனித உடலை விடுத்து பனிப்படலத்தினும் அதிதூய வெண்மையான ஒளியினைப் பெற்று தோற்ற மாற்றம் எனும் பேரதிசயத்தை நிகழ்த்தினார். ஜோர்டான் ஆறு அங்கு பிறந்து வடக்கிலிருந்து தெற்காகப் பாய்கிறது. தெற்கில் சற்று அகண்டு கலிலி கடலாக விரிகிறது. கலிலியின் அருகில் உள்ள நாசரேத்தில்தான் இயேசு வளர்ந்தார். அந்தக் கலிலி கடலின் மேல்தான் இயேசு நடந்தார். பின்னர் அந்த ஆறு மீண்டும் தெற்கு நோக்கி குறுகிய நதியாகி ஜோர்டான் பள்ளத்தாக்கில் பாய்ந்து சாக்கடலில் கலக்கிறது. சாக்கடலுக்கு (Dead Sea) வடமேற்கில்தான் ஜெரிக்கோ உள்ளது. அங்குதான் ஒரு குருடனுக்குப் பார்வையளிக்கும் அதிசயத்தை இயேசு நிகழ்த்தியிருப்பார். இந்த ஜோர்டான் ஆற்றில்தான் இயேசுவின் திருமுழுக்கு அவரது முப்பதாவது அகவையில் நடந்தேறியது. பள்ளத்தாக்கு என்று சொன்னேன் அல்லவா? அதனை “பூமியின் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு” என்கிறார்கள். அகன்ற கலிலி கடலும் சாக்கடலும் அப்பிளவுப் பள்ளத்தாக்கின் பகுதிதான். அப்பிளவு கிழக்கில் இருக்கும் அரேபியக் கண்டத்தட்டும் மேற்கில் உள்ள ஆப்பிரிக்க கண்டத்தட்டும் முட்டிக்கொள்வதனால் ஏற்படுவதன் விளைவு என்கிறார்கள். ஜோர்டான் ஆறு அந்தப் பிளவை நிரப்பிக்கொண்டு ஓடுகிறது.”

பூமியின் மேல்பரப்பில் ஏற்பட்ட காயம் போல, வடு போல, தழும்பு போல இப்பிரதேசம் இருப்பதாக நான் ஒருகணம் கற்பனை செய்து பார்த்துக்கொண்டேன். 

அவன் தொடர்ந்தான். “உலகின் மிகவும் தாழ்ந்த பகுதிகள் எனக் கருதப்படும் இடங்களில் சாக்கடலும் ஒன்று. சாக்கடலும் ஜெரிக்கோ நகரும் கடல் மட்டத்திற்கு 1400 மீட்டர் கீழே அந்தப் பிளவுப் பள்ளத்தாக்கில் உள்ளன. ஜெருசலேம் அந்தப் பிளவுப் பள்ளத்தாக்கின் மேற்கு விளிம்பில் மேட்டுப்பகுதியில் கடல் மட்டத்திற்கு 2000 மீட்டர் மேலே உயரத்தில் அமைந்துள்ளது.”

[2]

ஜியாத் மகமூது அப்பாஸ் தங்கியிருக்கும் கூடாரத்திற்கு வந்துசேர்ந்திருந்தேன். நான் நினைத்த மாதிரி கொட்டகையோ கூடாரமோ இல்லை. ஒரு பெரிய கட்டிடமாகவே எடுத்துக் கட்டியிருந்தான். பெயர்ப் பலகையோ அறிவிப்போ எதுவும் இன்னும் வைக்கவில்லை. அவனது ஆய்வுக்கூடம்கூட இந்தக் கட்டிடத்திலேயே இருப்பதாக கார் டிரைவர் என்னிடம் சொன்னான்.

முதலில் கூடாரமாகத்தான் துவங்கினானாம். பிறகு நிரந்தரமாக இருக்க முடிவுசெய்து விரிவுபடுத்திக் கட்டியிருக்கிறான். கடந்த ஆறு மாத காலமாக இங்கேயே தங்கியிருக்கிறானாம். நான் அவனது அறை என்று காண்பிக்கப்பட்ட ஒன்றை நோக்கிப் போனபோது, வாசலில் இருக்கும்போதே குரல் கேட்டது.

“யூ ப்ளடி இண்டியன் ஆஸ்-ஹோல், வெல்கம் டு மை பிளேஸ். ஹவ் ஆர் திங்க்ஸ் லைக் டெல்லி, இந்தியா அண்ட் யூ?” 

“யூ பாலஸ்தீனியன் ஷிட்” என்ற பிறகு நான் அவனைக் கட்டிப்பிடித்தேன். 

நான், “நீ பாலையின் திறந்தவெளியில் கொட்டகை அமைத்து அங்கே உறங்கிக்கொண்டிருப்பாய் என்றுதான் நினைத்தேன். இப்படி உன் அலுவலகத்தையே இங்கு அமைத்திருப்பாய் என்று நினைக்கவில்லை. மேலும் நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? இவ்வளவு செலவுசெய்து கட்டியிருக்கிறாய்! ஆனால் திறப்பு விழாவுக்கு என்னை அழைக்கவில்லை. அது சரி, இப்படியொன்றைக் கட்டியிருக்கிறேன் என்று சொன்னால்தானே அழைக்க வேண்டும்? அதையே நீ செய்யவில்லை. ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. நாய் மகனே” என்று சற்று கடிந்துகொண்டேன்.

“ஐ பெக் யுவர் பார்டன், மை ஃப்ரெண்ட்” என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினான்.

பின்னர், “இது என் தாய்வழி நிலம். இங்கிருந்து கொண்டு வேலை செய்வோமே என்று தோன்றியது. அது ஒருவகையில் என் ஆசையும்கூட. அதனால்தான் இந்த முடிவு. இங்கேயே இடம் வாங்கி கொஞ்சம் விஸ்தரித்து கட்டிக்கொண்டிருக்கிறேன். என் தாய் தந்தையர் அட்லாண்டாவில் என் தமக்கையின் வீட்டிலேயே இருப்பதாகச் சொல்லிவிட்டனர். அவர்கள் வரவில்லை. அதனால் நான் மட்டும் இங்கு வசிக்கிறேன்” என்றான்.

“சரி, சொல். என்ன விஷயம்? எதற்காக வரச்சொன்னாய்? ஏதோ இடையர் பழங்குடியின் எச்சிலைச் சேகரம் செய்து வைத்திருப்பதாக சொன்னாயே?”

“கொஞ்சம் பொறு. நீ அதிதூய மத்திய கீழைத்தேய தேனீரைப் பருகியிருக்க வாய்ப்பில்லை. போட்டுக்கொண்டு வருகிறேன் இரு. பிறகு நிதானமாகப் பேசலாம்.”

சிறிது நேரம் கழித்து ஜியாத் அவன் அலமாரியைத் திறந்து ஒரு கோப்பையை எடுத்துவந்தான். அதிலிருந்த முதல் புகைப்படத்தை எடுத்து எனக்குக் காண்பித்தான். அதில் எவரோ ஒருவரது கழுத்துப் பகுதி மட்டும் படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு தழும்பேறி ஆறிவிட்டது போன்ற தடம் தெரிந்தது.

அவன் கேட்டான்- “இது கண்டிப்பாக தழும்புதானா? இல்லை, ஏதேனும் கழுத்தின் சருமக் கோளாறினால் விளைந்த திசுப்பூச்சின் விளைவா?”

“இல்லை, இல்லை. கண்டிப்பாக தழும்புகளாய்த்தான் இருக்கும். இவை ஒருவகை கீலாய்ட் ஸ்கார்கள் என்று நான் சந்தேகிக்கிறேன். வெளிர் செந்நிறம் முதல் அடர் செந்நிறம் வரை இவை காணப்படும்.” 

“அவை எப்படித் தோன்றும்?”

“ஏதேனும் தீவிரமாக அடிபட்டிருந்தாலோ, அறுபட்டிருந்தாலோ இரணப்பட்டுப்போய், புண் இருந்த வாயைச் சுற்றி இவ்வகை திசுக்கள் அதீதமாய்ப் பெருகி காயம் ஆறிப்போகும். சிலநேரங்களில் புண்ணை மூடிய பிறகும் இதன் வளர்ச்சி அடங்காது. இன்னும் பெரிதாக வளர்ந்துவிடும். ஆனால் இவ்வகை தழும்புத் திசுக்களால் எந்தவொரு கெடுதியும் இல்லை. சருமத்தில் அவலட்சணமாக சிலருக்குப் படலாம்.”

“அதுசரி. எந்தவொரு அடியோ வெட்டோ காயமோ படாமல் இவை தோன்றுமா?”

“வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக இவருக்கு கழுத்தில் ஏதேனும் அடிபட்டிருக்க வேண்டும்.”

அவன் அதே கோப்பினை கையில் எடுத்தான். பின்னர் அதே மாதிரியான வெவ்வேறு நபர்களின் கழுத்துப் பகுதி படங்களைக் காண்பித்தான். 

நான் கேட்டேன். “இவையெல்லாம் என்ன?”

ஜியாத் சொன்னான். “இவர்கள் அனைவரும் இப்பகுதிகளில் வாழும் பழங்குடி இடையர் இனமக்கள். அவர்களின் மக்கட்தொகை ஐநூறு முதல் அறுநூறுக்குள் இருக்கும். என் பால்ய வயது முதல் நான் அவர்களைக் கண்டிருக்கிறேன். இங்கு வந்த பிறகுதான் இந்த ஒற்றைத் தன்மையைச் சந்தேகப்பட்டு ஆராயத் தொடங்கினேன்.”

அவன் மேலும் தொடர்ந்தான்.

“இவர்களின் கழுத்துப் பகுதியில், சரியாகச் சொல்ல வேண்டுமெனில், அவர்களது வலப்பக்க கழுத்துப் பகுதியில் காது மடலுக்குக் கீழிருந்து தோள்பட்டையில் இணையும் பகுதிவரை இந்தத் தழும்பு நீள்கிறது.” 

நான் மீண்டும் அந்தப் புகைப்படங்களைப் பார்த்தேன்.

“ஒவ்வொருவருக்கும் ஒன்றுபோல அதே இடத்தில் அதே மாதிரியான தழும்புகள்.”

அவன் சொன்னான்- “நூற்றில் ஐம்பது பேருக்கு இப்படி இருக்கின்றது. கழுத்தறுபட்டவர்கள் போல. அவர்களின் குலக்குறி அடையாளம் போல.”

நான் கேட்டேன், “ஹ்ம்ம்… அவர்கள் ஏதாவது நாடோடி இடையர் இனத்தவர்களா?” 

அவன் தொடர்ந்தான், “ஜூடாயா பாலைவெளியின் மானுடவியல் கோட்பாட்டாளர்களின்படி அவர்கள் பழங்குடி இனத்தவர்கள். இந்நிலத்தவர்கள். இடம்பெயர்ந்தவர்கள் அல்ல என்றே  குறிப்பிடப்படுகின்றனர்.”

“சரி.”

“அப்படியென்றால் தழும்புகள் மரபணு வழியில் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுமா?”

“ஆம், கீலாய்ட் ஸ்கார்களுக்கு அப்படியொரு தன்மை உண்டு. அவற்றுக்கு காரணமான ஜீன்கள் ஆதிக்க வகை ஜீன்கள். கடத்தத் தவறுவதற்கு வாய்ப்பளிக்காதவை இவை. பெற்றோரிடத்தில் இருந்து சிசுவுக்குக் கடத்தப்படும் வகைமையை தன்நிறப்புரி ஆதிக்கவழி கடத்தல் (Autosomal dominant inheritance) என்கிறார்கள். தாயோ தந்தையோ அவர்களில் ஒருவருக்கு இவ்வகை ஜீன்கள் இருந்தால் போதும். அவை தவறாமல் குழந்தைக்குக் கடத்தப்பட்டுவிடும். அதைத்தான் ‘dominant’ என்கிறார்கள். அதற்கு நேர்மாறாக இருக்கும் ஜீன்கள் பின்னடைவு (recessive) வகையைச் சேர்ந்தவை. அது கடத்தப்பட வேண்டுமானால் தாய் தந்தை இருவருக்குமே அந்த ஜீன்கள் இருக்கவேண்டும். அப்படியிருந்தாலும் பிள்ளைகளுக்கு கடத்தப்பட இருபத்து ஐந்து சதவிகித வாய்ப்பே இருக்கிறது. பின்னடைவு வகையில் குழந்தைகள் பாதிக்கப்படாமல் வெறும் கடத்தியாக நின்றுவிடும். ஆனால் டாமினண்ட் ஜீன்கள் அவற்றைவிட வீரியமானவை. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தாலும் அது கடத்தப்பட ஐம்பது சதவிகித வாய்ப்புண்டு. ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். ஒப்பீட்டளவில், இதுவரை பதியப்பட்ட கீலாய்ட் வழக்குகள் குடும்பங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுக்கென ஒரு பொது குணாம்சம் இன்னும் கண்டறியப்படவில்லை” என்றேன் நான்.  

“எனக்குத் தெரிந்தவரை இவ்வகை தழும்புகளுக்கு காரணமான ஜீன்கள் கடத்தப்பட்டாலும், அவை வெளிப்பட ஏதேனும் காயம் ஏற்பட வேண்டும் அல்லவா? அதெப்படி இவர்களுக்குச் சரியாக கழுத்திலேயே வருகிறது? அதே இடத்தில் அதே மாதிரி எந்தக் காயமுமே படாமல்?”

“உன் குழப்பம் நியாயமானதுதான்.”

“அதற்குத்தான் உன்னை அழைத்தேன்.”

“சரிதான். காயம்படுதல் போன்ற புறக்காரணி இருந்திருக்க வேண்டும். அது இப்பழங்குடியினரின் தலைமுறையில் முன்பு எவருக்காவது நிகழ்ந்திருக்க வேண்டும். அது அடுத்தடுத்த வாரிசுகளுக்கு கடத்தப்பட்டாலும் அதன் வெளிப்பாட்டிற்கு அவர்களுக்கு ஏதேனும் காயம்பட்டிருக்க வேண்டும்தான். அவர்கள் அனைவருக்கும் ஒன்றுபோல அதே இடத்தில் அடிபட்டிருக்கும் என்று கருதுவது நம் போன்ற அறிவியலாளர்களுக்கு அவ்வளவு அழகல்ல.”

ஜியாத் மெலிதாகச் சிரித்தான்.

[3]

மறுநாள் ஜியாத் என்னை அவனது ஆய்வுக்கூடத்துக்குள் கூட்டிச்சென்றான்.

அவன் சேகரித்து வைத்திருந்த அப்பழங்குடியினரின் எச்சிலில் இருந்து எடுக்கப்பட்ட தாடை செல்களின் பல்வேறுபட்ட சாம்பிள்களை வைத்திருந்தான். தாடை செல்கள் என்கிற ‘buccal’ செல்களில் இருந்து டி.என்.ஏ மூலக்கூறினைப் பிரித்து ஜீன் பூல் தகவுகளை அறியமுடியும். அந்தத் தகவுகளை வைத்து இனங்கண்டு கொண்டு எனது ஆய்வறிக்கையை வைத்து ஏதேனும் கண்டறிய முடியுமா என்று என்னிடம் எதிர்பார்த்தான். நான் என் ஆய்வுக்கு அந்நாள் முழுவதையும் எடுத்துக்கொண்டேன். 

அன்றிரவு உணவருந்திக்கொண்டிருந்த போது, நான் அவனிடம் சொன்னேன். 

“இன்றைய ஆய்வில் நான் கண்டறிந்தது நான் முன்பு சொன்னது போலத்தான். அவர்களின் ஜீன்கள் மாறுபட்டிருக்கின்றன. அதாவது மரபணு பிரதிமாற்றம் (genetic mutation) நடந்தேறியிருக்கிறது. அவை கீலாய்ட் ஸ்கார்களுக்கு காரணமான புரத மூலக்கூறு மாற்றங்கள்தான். நூறு சதவீதம். அதே போல, இந்தப் புதிய பிரதிகள் ‘autosomal dominance’ மூலமாக கடத்தப்படும் இயல்புடையதாகவே தெரிகின்றன. ஆனால், இந்த ஜீன்களின் தூண்டலின்றி தன்னிச்சையாக வெளிப்படும் தன்மைக்கு என்னால் எந்தவொரு பதிலையும் கண்டறிய முடியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்” என்றேன்.

“சாதாரண மரபணு, கீலாய்ட் மரபணுவானதன் மாற்றத்திற்கான காரணம் என்னவாக இருக்கலாம்?” என்று கேட்டான் ஜியாத்.

“அதற்கு ஒரு வகையில் என்னால் பதில்தர இயலும். ஒருவருக்கு ஏதேனும் காயம்பட்டு ஆறிவரும்போது அந்தத் தழும்புத் திசுக்கள் இயல்புக்கு மீறி அதிகமாகப் பெருகும் பட்சத்தில், மீண்டும் மீண்டும் நிகழும் பட்சத்தில், அதன் பெருகும் தன்மை ஒரு குணமாக ஜீன்களில் படிகின்றது. ஜீன்கள் எப்போதும் கொடுத்து மட்டும் இயங்குவதில்லை. கொண்டும் தானே இயங்குகின்றன? அதுவே காரணம். ஆனால் அந்த இயல்பை மீறிச்செல்லுதல் எதனால் நிகழ்கின்றது என்பதற்கு என்னிடம் இப்போது பதிலில்லை” என்றேன்.

நான் கேட்டேன். “இந்த இடையர் பழங்குடியினர் பற்றிய வரலாறு ஏதும் இருக்கிறதா? அவர்களின் பிறப்பு பற்றிய மானுடவியல் குறிப்புகள்? இந்தக் குலக்குறி சம்பந்தப்பட்ட வரலாற்று ஆவணங்கள் அல்லது தடயங்கள்?”

ஜியாத் சொன்னான். “கிறிஸ்து மரித்தபின் பல மாற்று வரலாறுகள் இங்கே இம்மண்ணில் எழுந்தன. ஹீப்ரூ மொழியின் நாட்டுப்புறப் பாடல்களில் அது வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால், அத்தகைய மாற்று வரலாற்றுக் கதைகளில் எது உண்மை, எது புரட்டு என்று கோடிட்டுப் பிரித்துச் சொல்லிவிட முடியாது. கிறிஸ்து ஒரு உருவகம்தான் இல்லையா? அவரைப் பற்றி பரவலாக நம்பப்படும் கதைகளும் அவர் நிகழ்த்திய அதிசயங்களும் எந்தளவுக்கு உண்மை என்று நம்மால் சொல்லிவிட முடியாது. ஆனால் அவற்றுக்கான வரலாற்றுத் தன்மைகள், வரலாற்று ஆதாரங்கள் இங்கே இந்த நிலத்தில் விரவியிருக்கின்றன. அதிலிருந்து ஒரு கிறித்தவம் உருவாகிவந்து பரவலாக்கப்பட்டிருக்கிறது.

“அதைப் போலவே இந்த மாற்று வரலாறுகளுக்கும் இடமுண்டு. வரலாற்றுத் தடயங்கள் உண்டு. இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் அவற்றை இனங்கண்டுகொள்ள முடியும். ஆனால் அதன் ஊமை விழிகள் திறக்கப்படாமலேயே இருக்கின்றன. நாம் மேற்கொள்ளும் இந்தப் பிரயத்தனம் அதற்காகத்தான். நாம் செய்துகொண்டிருக்கும் இந்த ஆய்வுமே நம் துறைசார்ந்த நிரூபணம் அதற்குண்டா என்று அறிவதற்காகத்தான். வேறெதுவுமில்லை.

“இஸ்ரேலின் பிரபல வரலாற்றாய்வாளரும் மானுடவியலாளருமான எபிரேயம் யஹோவா, இத்தகைய மாற்று வரலாறுகளைத் தொகுத்து “The Second Christians” என்கிற புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் இந்த இடையர் பழங்குடியினரின் மாற்று வரலாற்றுக் கதை பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.

இவர்கள் தங்களது இனத்து மூதாதையை கிறிஸ்து என நம்பியிருக்கிறார்கள். அது எந்தளவு உண்மையோ பொய்யோ தெரியாது. கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்தபோது இந்த இனக்குழுவின் குடி மூத்தவள், விண்ணேறிய பேரொளியின் கையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் அவர் கழுத்தில் இருந்த இந்தத் தழும்பையும் பார்த்தாளாம். இப்படியொரு மாற்று கிறிஸ்துவை அவர்கள் வணங்கினார்கள் என்பதற்குச் சான்றாதாரமாய் ஒரு ஹீப்ரு பாடல் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

“இத்தகைய மாற்று வரலாறுகளை அவர் இவ்வாறு வரையறுக்கிறார். அவை அதிகார மையமான கிறித்தவத்திற்கு எதிரானவை. ஆனால் மெய்மை நோக்குடைய மானுட கரிசனத்துக்கு வழிகோலும் கிறித்தவத்துக்கு உவப்பானவை. கிறித்தவ அதிகார மையங்களையும் ராஜ்ஜியத்தையும் இத்தகைய மாற்று வரலாறுகளை இந்நிலத்து மக்களிடம் பிரசங்கித்தும் பரப்பியுமே எதிரிகள் தகர்த்தார்கள். நிலைகுலையச் செய்தார்கள் என்கிறது அவரது குறிப்பு.”

“இது கிறிஸ்து வாழ்ந்து வளர்ந்து மரித்த பூமி. கிறித்தவம் எனும் பெருமதம் உருவான நிலம். ஆனால் இங்குள்ள கிறித்தவர்களின் எண்ணிக்கையோ மிகச் சொற்பம்” என்றேன் நான். 

மேலும், “இந்தியாவில் பெளத்தம் இப்படித்தான். பிறந்தது இந்தியாவில். செழிப்பது வேறெங்கோ. எந்த இந்தியத் தெருவிலும் ஒரு பெளத்தரைக்கூட கண்டுவிட முடியாது.”

“ஆம். இப்படி பல இனமக்கள் அவரவரின் கிறிஸ்துகளைப் படைத்துக்கொண்டால் என்னவாகும்? ‘ஒற்றை கடவுள்’ என்கிற கிறித்தவத்தின் அடிப்படைக் கருதுகோளே உடைந்துவிடும் அல்லவா? அப்படித்தான் இந்த மண்ணில் கிறித்தவம் வேறழிந்துவிட்டது என்கிற கருதுகோளையும் யஹோவா அந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.” 

நான் சொன்னேன்- “இஸ்ரேல் முழுதும் யூதர்கள்தான். பாலஸ்தீனம் முழுதும் உன்னைப் போன்ற அரேபிய இஸ்லாமிகள்தான். கிறித்தவத்திற்கு முன் இருந்த யூதமும் அதற்குப்பின் வந்த இஸ்லாமியமும் இருக்கின்றன. இடையில் தோன்றிய கிறித்தவம் காணாமல் போய்விட்டிருக்கிறது. இன்று உலகின் மற்ற இடங்களில் கிறித்தவம் கிறிஸ்துவால் தழைக்கவில்லை. அதன் பிரசங்கிகளாலும் பரப்புனர்களாலும்தான் தழைக்கிறது போலும்.”

[4]

கல்வாரிக் குன்றில் ரோமானியப் படை வீரர்கள் இயேசு அறையப்பட்ட சிலுவையைப் பள்ளத்தில் ஊன்றி நிலைநிறுத்தியிருந்தனர். இதற்கு முன்பே அங்கே இரண்டு கள்வர்கள் இரு வேறு சிலுவைகளில் வலதும் இடதுமாக அறையப்பட்டிருந்தனர்.

அவர்கள் காட்டுவிலங்கு ஒன்றினைப் போல ஓலமிட்டனர். அவர்களின் முனகல்களுக்கு மத்தியில்தான் ரோமானியப் படைவீரர்கள் இயேசுவை அவர் தாங்கிய சிலுவையிலேயே படுக்க வைத்து கைகளுக்கும் கால்களுக்கும் ஆணி அடித்திருந்தனர். அவர்களில் ஒருவன் அந்தச் சிலுவையின் மேற்புறத்தில் “நாசரேத்தின் இயேசு. யூதரினத்தின் அரசன்” என்ற அறிவிப்புப் பலகையை வைத்தான். பின்னர், ஈட்டி போன்ற ஒன்றை வைத்து இயேசுவின் நெஞ்சுக்குக் கீழாக குத்தியெடுத்தான். 

இயேசு தன் சிலுவையேற்றத்தைக் காண வந்த கூட்டத்தினரைக் கண்டார். அவர்களுள் யூதர்கள் அவரை வசைபாடிக்கொண்டே கலைந்து சென்றனர். மீதியிருந்த அனைவரின் பார்வையும் தன்மேல் படுவதை உணர்ந்தார். வலி வேதனையில் கண்கள் சொருகி தலை குனிந்தபோது அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு எளியகுடி பெண்ணின் பார்வை தனது இடப்பக்கத்தில் அறையப்பட்டிருக்கும் அந்தக் கள்வனின் மீது படிந்திருப்பதை தன்னிச்சையாக கண்டுகொண்டார். அவள் கருவுற்று இருந்தாள். இயேசு ஒரு கணம் அவளுக்காக தலையை உயர்த்தி, “பரம பிதாவே” என்று பிரார்த்தித்தார். பின்னர் தலை தாழ்த்திக்கொண்டார்.

தலை தாழ்ந்திருந்த இயேசுவை நோக்கி “நீங்கள்தான் மெஸ்ஸையாவாமே? எங்கே இப்போது உங்களையும் காப்பாற்றி எங்களையும் காப்பாற்றுங்களேன்” என்றது இயேசுவின் இடப்பக்கத்தில் இருந்து எழுந்த அந்தக் குரல்.

அதற்கு, “வாயை மூடு கீழ்மகனே. அவரை இத்தகைய இழிநிலைமையிலும் ஏய்த்துப் பேசும் நீ கெடுநரகுக்கே செல்வாய். கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? அவர் நம்மைப் போன்றவர் அல்ல. எந்தத் தவறுமே செய்யாமல் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார். நாம், நாம் செய்த பாவத்துக்காக அறையப்பட்டிருக்கிறோம். அதனை மறவாதே” என்று அவரது வலப்பக்கத்தில் இருந்து எழுந்த குரல் பதில் தந்தது. 

அவையே அவர்களின் இறுதி வாக்கியங்களாய் இருந்தன. இன்னும் சற்று நேரத்துக்குள்ளாகவே அவர்கள் இருவரது உயிரும் அவர்களை விட்டுப் பிரிந்துவிடும் என்பதை உணர்ந்தவராய் இருந்தார் இயேசு.

பின்னர் அவருக்கான அந்தத் தருணத்தை உணர்ந்துகொண்டு, “பிதாவே, இதோ முடிந்துவிட்டது” என்று தன் ஆவியை விடுத்தார். 

[5]

இருட்டில் இப்பிரபஞ்சப் பிரவாகத்தில் இன்னதென்று புரிபடாத மூலையில் மண்டியிட்டு அமர்ந்து விம்மி விசும்பி அவன் அழுதுகொண்டிருந்தான். அவன் அழுகையால் நீண்டுகொண்டே இருந்தது அந்த இருள்வெளி. கண்ணீரைத் திரட்டித் திரட்டி ஒளிகொள்ளச்செய்து ஒரு பகலினைப் படைத்துவிட முடியுமா என்ன? கண்ணீரே சூழ்ந்து இருள்வெளியென ஆகியிருக்கிறதா? அவன் கலக்கமுற்றான்.

பின்னர்தான் அவன் தன் செவிகூர்ந்தான். தன்னைச்சுற்றி ஆயிரமாயிரமானவர்களின் அழுகைகள் எழுவதை உணர்ந்தான். முதியவர்கள் முதல் பிஞ்சுக் குழந்தைகள் வரை. ஆண்கள் முதல் பெண்கள் வரை. அந்த ஓல ஒழுக்கில் அவனுடையதும் சேர்ந்து கரைந்து ஒழுகுகிறது என்று எண்ணிக்கொண்டான். கண்ணீரே ஓலத்தின் திரவ வடிவமோ என்னவோ? 

தொலைதூரத்தில் ஏதோவொரு துளி ஒளி எழுவதைக் கண்டான். முதலில் அவனுக்கு அந்தச் சிறு ஒளியே கண் கூசியது. பின்னர் அந்த ஒளி அவனை நோக்கி விரிந்து வருவதைக் கண்டான். ஒவ்வொரு கணமும் அது விரிந்தது. அப்போது தன்னைச் சூழ்ந்திருந்த ஓலங்களும் அழுகுரல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டான். 

ஒரு கட்டத்தில் அவனது ஓலம் மட்டுமே அவனுக்குக் கேட்டது. அது அவனை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது. கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டான். தன்னை எதுவும் அண்டிவிடாதவாறு தன்னையே தனக்குள் பூட்டிக்கொண்டான். அதனை மீறியும் அந்த ஒளி தனக்குமுன் நிகழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். மானுடரின் மனதறைக்குத் தாழில்லை என்பதை அவன் உணர்ந்தவனாயில்லை.

“யார்? எவர் அது?” என்றான்.

வெள்ளைநிற அங்கி உடல் வழிய, செம்மண் நிறத் தலைமயிர் தோள் வழிய, அருங்குறுந்தாடி தாடை வழிய அவர் நின்றார். அவர் கண்களில் வழிவது என்ன? அவனுக்குப் புரிபடவில்லை.

“உன் விசும்பல்தான் என்னை இங்கு அழைத்திருக்கிறது. அழாதே” என்றார்.

“என் விசும்பல் ஒலி உங்களுக்கு எப்படிக் கேட்டது?” என்றான் அவன்.

“விசும்பல் ஒலிகள் விசும்பறையும் தூரத்தில்தான் என் வானம் இருக்கிறது” என்றார் அவர்.

“அப்படியானால் யார் நீங்கள்?” என்றான் அவன்.

“இயேசு” என்றார்.

“எந்த இயேசு? ஆண்டவராகிய இயேசுவா? மனித வடிவில் மண்ணுலகம் இறங்கிய தேவகுமாரன், இன்று என் விசும்பலுக்குச் செவிமடுத்து இருளுலகமும் இறங்கினீரா? அதுசரி, இருக்கட்டும். ஒரு சந்தேகம். உங்களை அனைவரும் தேவகுமாரன் என்று ஆரூடம் கூறுகிறார்கள். அப்படியிருக்க நீங்கள் உங்களை ஏன் மனித குமாரனாகவே முன்மொழிகிறீர்கள்? என்ன பித்தலாட்டம் இது?”

அவர் எதற்குமே பதில் சொல்லவில்லை.

“அசடரே… வாயைத் திறந்து சொல்லுங்கள். என்னவென்று கேட்க வந்தீரா? இல்லை, என்னை இங்கிருந்து மீட்க வந்தீரா? ” என்று ததும்பினான் அவன். 

“பாருங்கள், என் துயரை. கல்வாரி மலையின் குகை இருட்டைவிட, இந்த இருளுலகத்தைவிட கொடியது என் துயர்“ என்று தொடர்ந்துகொண்டே போனான் அவன்.

“உன்னை உலகத்தின் உயர்ந்த இடங்களில் ஏறியிருக்கப் பண்ணுவேன் என்று நீங்கள் உங்கள் விசுவாசிகளிடம் சொல்கிறீர்கள் அல்லவா? நான் கேட்கிறேன். எது ஐயா, உயர்ந்த இடம்? உங்கள் முன் மண்டியிடுவதா? அவர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? மிஞ்சிப் போனால் ‘மண்டியிடுவது’, மீறி நின்றால் ‘சிலுவைப்பாடு’. நான் அவர்களிடம் இப்போது சொல்லுவேன். உங்கள் முன் மண்டியிடுவதைவிட சிலுவைப்பாடே மேலென.”   

அவர் என்னை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தார். 

“என்னைப் போன்ற அவிசுவாசிகளுக்கு உங்கள் அகத்தில் இடமில்லை என்பதை நான் நன்கறிவேன்” என்றான் அவன்.

“மானுட உள்ளத்தில் எழும் இதுபோன்ற எண்ணங்களின், அதன் பொருட்டு எழப்பெற்ற கூட்டுத் தருக்கங்களின் விளைவுதான் நான். என்னைப் புரிந்துகொள்ள உனக்கு இப்போது இது போதும்” என்ற இயேசு, “நீ யார்?” எனக் கேட்டார்.

“அசடரே, என்னை யாரென்று அறியாதவரா நீங்கள்? சொல்கிறேன் நான் யாரென்பதை. என்னுடைய இந்தக் குரல் உங்களுக்கு நினைவில்லையா? நேற்று கேட்டிருப்பீர்களே? உங்கள் இடப்பக்கத்தில் இருந்த சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வன் நான். என் பெயர் கெஸ்தாஸ். உங்களை என் வாழ்நாளில் எப்பவுமே பார்த்துவிடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. நேற்று உங்களுடனேயே சிலுவையில் அறையப்பட்டுவிட்டேன். இன்று உங்களோடு இப்படி இந்த இருளுலகத்தில் அரற்றிக்கொண்டிருக்கிறேன். எல்லாம் எங்கோ எழுதியிருக்கிறது.”

எதிரிலிருந்த இயேசு புருவத்தை உயர்த்தினார். 

“என்ன பார்க்கிறீர்கள்? சொல்கிறேன் கேளுங்கள். என் பாவத்திற்கு நான் வருந்தவில்லை என்றுதானே உங்கள் வலப்பக்கத்துச் சிலுவையில் அறையப்பட்டிருந்த மற்றொரு கள்வன் டிஸ்மாஸ், “கீழ்மகனே, நீ கெடுநரகுக்குச் செல்வாய்” என்றான். ஆனால் நான் சொல்கிறேன். அது என் பாவம் இல்லை. உங்களது பாவம். உங்களது பிறப்பின் பெயரால் நிகழ்ந்த பாவம். என் மொத்த வாழ்வுமே அந்தப் பாவத்தின் விளைச்சல்தான். அதற்கு நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும்? அது மட்டுமே நான் உங்கள்முன் வைக்கும் கேள்வி. எனக்கு உங்கள் மீட்பும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். ஆனால் இந்தக் கேள்விக்கான பதில் வேண்டும். 

“உங்கள் பிறப்பினால் ஏற்பட்ட இரத்தக் கறையைத் துடைப்பதற்காகவே நீங்கள் உங்கள் மொத்தப் பிறவியையும் செலவிட்டீர்கள். ஆனால் நான் என்ன தவறு செய்தேன்? அந்தப் பச்சிளம் குழந்தைகள் என்ன தவறிழைத்தன? ‘உலகத்தின் மீட்பர்’ என்று சொல்லப்படும் நீங்கள் பிறந்தபோது, “புனிதம்” பிறந்தது என்றனர். ஆனால், பாவமும் சேர்ந்தே உங்களுடன் பிறந்தது. உங்கள் பிறப்புச் சங்கதியை அறிந்த ஏரோது மன்னன் அவன் நாட்டில் அன்றிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட அத்தனை ஆண் குழந்தைகளையும் தன் வாளிற்கு இரையாக்கினானே! உங்களால் உங்களது திருப்பெயரால் வீழ்த்தப்பட்டார்களே அந்த ஆயிரமாயிரம் குழந்தைகள்? அதில் தப்பிப் பிழைத்த ஒற்றைக் குழந்தை நான்.

“பாவத்தின் தீக்கங்கு உங்கள் புனிதத்திற்கு முன்பிருந்தே கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது. ஒரு புனிதரின் பிறப்பு ஒருவரை ஏன் அப்படி கொதிப்படையச் செய்ய வேண்டும்? இதுவா புனிதம் என்பது? ஒன்றைப் புனிதமென்று பாவத்தைக்கொண்டே அறிய முடியுமா என்ன? ‘இயேசு’ புனிதம் என்றால், ஏரோது மன்னனிடம் எழுந்த ‘இயேசு என்கிற சிந்தை’ ஒரு பாவம். அந்தப் பாவத்திற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்றான் அவன்.

“உங்களைப் பிரஸ்தாபிக்க நீங்களே அரங்கேற்றிய நாடகம் அது. பாவமென்ற நாடகத்தை நடத்தி புனிதர் பட்டம் பெற்றுக்கொண்டீர்கள். உங்கள் பிறப்பு ஏன் ஒரு மொட்டு நவிழ்வது போலச் சத்தமில்லாமல் இருந்திருந்து உலகப் பாவங்களை நீங்கள் சுமந்திருக்கக் கூடாது? இதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா? ‘உங்களினால் ஏற்பட்ட அந்தக் குழந்தைகளின் இரத்தக் கறையைக் கழுவவே உங்கள் மீதி வாழ்க்கை’ என்று என்னால் நிறுவ முடியும். அதற்காகவே சிலுவை அரங்கில் ஏறினீர்கள். ஆணியறைந்த உங்கள் கைகளை முகர்ந்து பாரும் ஐயா, என் தேவனே, அந்தப் பச்சிளங் குழந்தைகளின் குருதி வீச்சம் அடிக்கும். உங்களை மீட்கவே ஒரு ஜென்மம் பத்தாது. இதில் உலக மீட்பு எப்படிச் சாத்தியம்?

“அப்படிப்பட்ட நிகழ்விலிருந்து தப்பிப் பிழைத்ததை என்னவென்று சொல்ல முடியும் என்னால்? இதோ பாருங்கள் என் கழுத்து இரணத்தை. ஏரோதின் ரோமானியப் படைவீரன் ஒருவனின் வாள் ஏற்படுத்திய இந்தக் கழுத்து இரணத்தை. எத்தனை குழந்தைகள் எனக்கு முன் அவன் வாளுக்கு இரையாகி அவனது வாளின் கூரை மழுங்கடித்ததோ?”

இயேசு அவன் காண்பித்த இரணத்தைப் பார்த்தார். வலப்பக்க கழுத்துப் பகுதியில் காது மடலுக்குக் கீழாக தோள்பட்டை வரை நீண்டிருந்தது அந்த இரணம். தழும்பேறிப்போயிருந்தது.

அவன் சொல்ல ஆரம்பித்தான். “என்னை ஒரு சூனியக்காரன்தான் வளர்த்தான். அவன்தான் என் பிறப்பைப் பற்றி என்னிடம் சொன்னான். அவன் என்னை என் ஆறாம் அகவையில் கண்டெடுத்தானாம். ஜூடாயா பாலைவனத்தில், எங்கோ சுட்ட மணலில், அவன் அலைந்து திரிந்தபோது ஓநாய்களின் ஓலத்தைக் கேட்டானாம். அருகில் ராத்தம் புதர் மரத்தின் குடைநிழலில் ஒரு ஓநாய்க் கூட்டம் ஒதுங்கி நின்றிருந்ததாம். இவன் அருகில் வருவதை உணர்ந்த ஓநாய்கள் நாற்புறமும் சிதறி ஓடியிருக்கின்றன. ஆனால் ஒரு ஓநாய் மட்டும் தடுமாறி ஓடியிருக்கிறது. அதன் ஓட்டம் சற்று பிழையானதாகத் தெரிய, அது எழுப்பும் ஓலச்சத்தமும் சற்று விசித்திரமாக இருக்க, இவன் அந்த ஒற்றை ஓநாயைத் துரத்தியிருக்கிறான். ஓடியவாறே அதன்மேல் கல்லெறிந்திருக்கிறான். அருகில் சென்று பார்த்தால் கைகளையும் காலாய் எண்ணி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன். அது வேறு எவரும் இல்லை. நான்தான்” என்றான்.

பின்னர் அவன் என்னைப் பிடித்துக்கொண்டு போய் அவனிடத்தில் வைத்து வளர்த்தான். அவன் நதியின் நீரை கைத்தலத்தில் அள்ளி நதியின் ஊற்றுமுகத்தைக் கண்டுபிடித்துவிடும் தந்திரம் தெரிந்தவனாம். அதை அவனே என்னிடம் சொன்னான். அவனே என் பிறப்பின் சங்கதியைக் கணித்துச் சொன்னான். ஏரோது மன்னன் “இயேசு” என்கிற புனிதக் குழந்தைக்குப் பயந்து, பெத்லெகேமின் சுற்றுவட்டாரத்தில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளைக் கொலை செய்தானாம். அதில் தப்பிப் பிழைத்த குழந்தை நீ என்றான்.

“ஒரு ரோமானியப் படைவீரன் உன் வீடு புகுந்து உன் பெற்றோரிடம் இருந்து உன்னைப் பிடுங்கி உன்னை ஏதோவொரு தெருவில் வீசியெறிந்து அவன் வாளுக்கு உன்னை இரையாக்கியிருக்கிறான். ஆனால், நல்லவேளை, அவனது வாள் கூர்மழுங்கி உன் கழுத்தில் சரியாக விழவில்லை. அந்த வீதியில் கழுத்தறுபட்டு உயிர் போகாமல் நீ கிடந்திருக்கிறாய். பெத்லெகெமே அன்று பச்சிளம் குழந்தைகளின் இரத்தத்தில் மிதந்தது. அன்றைய இரவு, நகரத்திலிருந்து வந்த இரத்த வாடையை முகர்ந்துகொண்டு சுற்றியிருந்த பாலைவெளிகளில் இருந்த ஓநாய்கள் ஊருக்குள் நுழைந்தன. 

“ஓநாய்கள் சிசுக்களின் சடலங்களை முகர்ந்து உடலில் வடியும் இரத்தத்தை நக்கி உறிந்துவிட்டு ஊருக்கு வெளியே பாலைவெளிக்கு இழுத்துச்சென்று கடித்துக் குதறித் தின்றும் பிற ஓநாய்களுடன் பங்கிட்டும் கொண்டன. உன்னையும் ஒரு தாய் ஓநாய் அப்படி இழுத்துச்சென்றது. நீ உயிரோடு இருந்த விஷயம் அதற்குத் தெரிந்திருந்ததோ என்னவோ? இழுத்துக்கொண்டு சென்று உன்னைத் தானும் குதறிப்போடாமல் மற்ற ஓநாயும் குதறிவைக்காமல் பாதுகாத்தது. கூடுதலாக, உன் கழுத்து இரணத்தை நாவால் நக்கி நக்கி உன்னை ஆறுதல்படுத்தியது. அதன் குட்டிகளோடு உனக்கும் சேர்த்து பால் சுரந்தது” என்றான். 

இதை அவன் என்னுடைய பதினைந்தாவது அகவையில்தான் எனக்குச் சொன்னான். அதற்கு முன்பு வரை அவன் என்னை ஒரு விலங்கு போலத்தான் தன் வீட்டில் கட்டி வைத்திருந்தான். அவன் வாழ்ந்த ஊரில் உள்ளவர்கள் அவனை “தந்திரம் செய்து ஓநாயை மனிதனாய் மாற்றி வீட்டில் கட்டி வைத்திருக்கிறான்” என்றார்கள். “சூனியக்காரன். இன்னும் எது வேண்டுமானாலும் செய்வான்” என்று தூற்றி ஒதுக்கியிருக்கிறார்கள். அதனால் வேறு வழியில்லாமல் ஊரைவிட்டு வெளியேறி ஆளரவமற்ற கொடும்பாலையில் தங்கலானான். அவனுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. என்னைக் காணும் முன்பே அவனது மனைவி இறந்துவிட்டிருந்தாள். கூடவே அதையும் தூக்கிக்கொண்டு என்னையும் இழுத்துக்கொண்டு சென்றான். அவளோடு சேர்த்தே என்னையும் வளர்த்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு இரண்டு கால்களால் நடப்பது எப்படி என்றும் நேரடியாக வாய்வைக்காமல் கையால் எடுத்துச் சாப்பிடுவது எப்படி என்றும் கற்றுக்கொடுத்தான். உடை பற்றியும் மொழி பற்றியும் பயிற்றுவித்தான். பதினைந்தாவது வயதில்தான் என்னால் ஒரு முழு மனிதன் என்கிற அந்தஸ்தைப் பெற முடிந்தது.

ஆனால் அவன் என் ஓநாய் குணத்தை தொடக்கத்திலிருந்தே சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். என்னை ஓலமிடச் சொல்லி பாலையின் வழியாகப் பயணிப்பவர்களை திசை திருப்பிவிட்டு அவர்களிடம் அடித்துப் பிடுங்கி கொள்ளையடிப்பான். அவன் சொடுக்கிற்கு இணங்கி நான் ஓநாய் போல் ஓலமிடுவேன். அப்படிச் செய்யத் தவறினால் சவுக்கால் அடித்து என்னைத் துன்புறுத்துவான். நானே பல்வேறு மனிதர்களை ஓநாய் போல் பாய்ந்து கவ்வி அவர்களைக் கிழித்துச் சாய்த்திருக்கிறேன்.   

அவன் அவ்வப்போது உங்களைப் பற்றியும் கேள்விப்படுவான். நீங்கள் மண்ணில் பிறந்த புனிதர் என்றும், உலகை இரட்சிக்கப் பிதாவினால் விண்ணுலகில் இருந்து அனுப்பப்பட்ட தேவன் என்றும் பல அதிசயங்களை நிகழ்த்துகிறீர்கள் என்றும் சொல்வான். அவனிடத்தில் உங்களுக்கான ஒரு கேள்வி இருந்தது. உங்களை எப்படியாவது பார்த்து அதனைக் கேட்டே ஆகவேண்டும் என்று சொல்லியிருக்கிறான். 

அதன் பிறகு அவன் கொஞ்ச காலம்தான் உயிரோடு இருந்தான். சாகும் போது என்னிடம் தன் பெண் குழுந்தைக்குப் பாதுகாவலாய் எப்போதும் இருக்கும்படி அவன் கேட்டுக்கொண்டான். அவன் சென்ற பிறகு எனக்கு என்ன வழியென்றே தெரியவில்லை. எப்படி பிழைப்பது? எங்கே போய் நிற்பது? ஊர்வாயிலில் சென்று நின்றால் “இவன் அந்தச் சூனியக்காரன் வளர்த்த மனித ஓநாய்” என்று வசைபாடி உமிழ்ந்தார்கள். என் மேல் கல்லெறிந்தார்கள். என் அவலட்சணம் அவர்களை அசூயை கொள்ளச்செய்தது. துரத்தினார்கள். விரட்டினார்கள். எந்தத் தெருவிலிலும் எந்த வீட்டின் முன்பும் எனக்கான ஒரு கல்குவை இருந்தது. 

ஒருகட்டத்தில் அவர்களிடமிருந்து எந்தவிதமான தயவையும் நான் எதிர்பார்க்கவில்லை. முச்சந்தியில் வெறுமனே சென்று நிற்பவனாக மட்டுமே ஆனேன். வெறும் கல்லடிகள் மட்டும்தான். ஒவ்வொரு நாளும் கல்லடிபட்ட இரணத்துடனும் சீழுடனும் குருதி வாடையுடனும் திரும்ப வந்து சூனியக்காரனின் பெண்ணோடு மூர்க்கமாகப் புணர்வேன். அப்படிப் புணரும் பொழுதுகளில்தான் கல்லடிபட்ட என் காயங்களின் வலியை உணர்வேன். என்னுள் மிருகவெறி துளிர்ப்பதை அந்த வலிகளின் கணத்தில் நான் கண்டுகொண்டேன். நான் தொலைத்த அல்லது அப்படி நான் கருதிய என் பழைய மிருக மூர்க்கத்தைப் பெறுவதற்குப் பேருதவி புரிந்தன அக்கணங்கள். முன்பு தெரியாமல் என்னிடமிருந்த மிருக மூர்க்கத்தைவிட இன்னதென்று தெரிந்து பயன்படுத்தத் தெரிந்த மிருக மூர்க்க அறிவு என்னைப் பித்துகொள்ளச் செய்தது. மீண்டும் ஓநாயாக மாறினேன். ஜூடாயா பாலைவெளியில் எனக்குத் தெரியாத இண்டு-இடுக்குகள் இப்போது இடம்பெற்றிருக்க முடியாது. பாரபட்சம் பார்க்காமல் அவ்வழியாக கடப்பவர்களைத் தாக்கினேன். பிடுங்கித் தின்றேன். கொள்ளையடித்தேன். அதையே என் அன்றாடமாக கொண்டிருந்தேன்” என்று சொல்லி முடித்தான்.

இயேசு அவனை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். அவரது வெள்ளை நிற மேலங்கியில் அவரது மார்புக்கு அருகே ஓர் உயிரசைவு தெரிந்தது. ஒரு கணம் அது அவனுக்கு அவரது இதயத் துடிப்பு என்று மருட்சியைத் தந்தது. மறுகணம் அந்த மருட்சி தன் கழுத்தை வெளியே நீட்டியது. தூய வெள்ளை நிற ஆட்டுக்குட்டி. அந்த ஆட்டுக்குட்டியின் தலையைத் தடவிக் கொடுத்தவாறே அவர் இருந்தார். 

பின்னர் கண்களை மூடிக்கொண்டு மேல் நோக்கிப் பிரார்த்தித்தார். “இது பிதாவின் ஆணை” என்று மேல்நோக்கி அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அவர் கைகளில் இருந்த அந்த ஆட்டுக்குட்டி சடாரென்று அவன் கைகளுக்குத் தாவியது. பின்னர் “நான் என்று அறியப்படுபவன் இனி நானல்ல” என்று சொல்லி, மேல்நோக்கியிருந்த அவர் வலது கை ஆள்காட்டி விரல் அவனை நோக்கிச் சுட்டவருவதைப் பார்த்தான்.

விரல் முழுவதுமாக அவனைச் சுட்ட வருவதற்குள் அவரைச் சூழ்ந்திருந்த ஒளி குன்றி மறையத் தொடங்கியது. அவர் அவன் முன்னிலிருந்து மறைந்து போனார். அவன் திடுக்கிட்டான். அப்போது அவனைச் சுற்றி ஒரு ஒளியெழுந்தது. அது பெருகியது. சூழ்ந்தது. அந்த ஒளியே அவனை விண்ணேற்றியது. அவன் தன் மடியில் இருந்த ஆட்டுக்குட்டியின் தலையை வருடிக்கொண்டே இருந்தான். அவர் விட்டுச்சென்ற வருடலின் இதம் அதன் தலையில் இன்னும் எஞ்சியிருந்ததை உணர்ந்தான். அவன் இருளுலகம் கடந்தான். பூவுலகம் கடந்தான். பூவுலகத்து மக்கள், “இயேசு உயிர்த்தெழுந்து விட்டார். இயேசு உயிர்த்தெழுந்து விட்டார்” என்று ஆர்ப்பரித்துக்கொண்டாடினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டனர். அவன் விண்ணுலகம் அடைந்துவிட்டிருந்தான்.

[6]

ஜியாத் என்னிடம் கதையைச் சொல்லி முடித்திருந்தான். என் கண்ணிமைகளில் கண்ணீர் துளிர்த்து வருவதை அவன் கவனித்துவிட்டான். 

அந்தப் பழங்குடி இனத்தவரை நான் பார்த்தே ஆகவேண்டும் என்று அவனை அவசரப்படுத்தினேன். 

“கொஞ்சம் பொறு. பொழுது போகப்போகிறது. நாளைக்கு உன்னை கூட்டிச்செல்கிறேன்” என்றான்.

“நாளைக்கு இல்லை. இன்றைக்கே சென்றாக வேண்டும். இப்பொழுதே சென்றாக வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன்.

அவனது காரிலேயே புறப்பட்டுச் சென்றோம். அவனே வண்டி ஓட்டினான். அந்த இடையர் பழங்குடியினத்தவரின் கிராமத்திற்குச் செல்ல இன்னும் ஒரு மணி நேரத்திற்குமேல் ஆகும் என்றான்.

“பரவாயில்லை, செல்லலாம்” என்றேன்.

பாலையில் மீண்டும் பயணம். வெறுமை வீரியமாக விரிந்து சென்றுகொண்டிருந்தது. என் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தவாறே ஜியாத் வண்டியை ஓட்டினான். 

நான் அந்த வெறுமையையே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தேன். என் கண்களில் ஒளியில்லை. நிறமில்லை. 

திடுமென அவன் காரை நிறுத்தினான். காரின் முன் ஒரு செம்மறி ஆட்டுமந்தை கடந்து சென்றுகொண்டிருந்தது. அவன் என்னைப் பார்த்தான். பிறகு அவன் காரின் கண்ணாடியை இறக்கி தூரத்து மணல்மேட்டில் நின்றிருந்த மந்தைக்காரனைக் கண்டுகொண்டான். நானும் அவனைக் கண்டேன். துரிதகதியில் காரை விட்டு இறங்கி, அந்த மணல்மேட்டை நோக்கி ஓடினேன். 

ஜியாத் கத்திக்கொண்டிருந்த அவ்வார்த்தைகள் என் காதுகளை வந்தடையவில்லை. கணுக்கால் வரை புதைவுகொண்ட செம்மண்ணில் வேகமாக ஓடினேன். வியர்த்து வழிந்து மூச்சடைத்துப்போய் அம்மணல்மேட்டில் நின்றிருந்த மந்தைக்காரனைக் கண்டுகொண்டேன். அவன் கையில் இருந்த தொரட்டிக் கம்பைக் கண்டேன். அவன் கழுத்துத் தழும்பைக் கண்டேன். அவனருகே சென்று அப்படியே புதைமணலில் மண்டியிட்டு இரு கைகளையும் நெஞ்சோடணைத்து தொழுது அழுதேன். மந்தையாடுகள் எங்கள் இருவரையும் சூழ்ந்து மேட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தன.

ஜியாத் காரின் அருகிலேயே நின்றுவிட்டிருந்தான். நான் புதைமணலில் விழுந்து மண்டியிட்டு அழுதபோது என்னைச் சுற்றி மந்தை ஆடுகள் கடந்து சென்றுகொண்டிருந்ததை அவன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். என் பின்னால், அந்த மேட்டுக்குப் பின்னால், அந்த நாளின் பொழுதணைவைக் கண்டுகொண்டிருந்தான்.

[7]

அடுத்த நாள் நான் பெரும்பாலும் ஜியாதிடம் பேசவேயில்லை. 

“ஃப்ராங்கோ, என்ன ஆயிற்று?” 

அதற்கும் நான் பதில் சொல்லவில்லை.

அவன் ஆய்வகத்துக்குள் நுழைந்தேன். நாள் முழுதும் அங்கேயே தனித்திருந்தேன். பித்தன் போன்று. என் பித்தை நானே கூறுபோட்டுப் பெருக்கிக்கொண்டேன். ஏற்கனவே பார்த்த மரபணுப் பிரதிகளையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். 

அந்த நாளின் இறுதியில் அவனிடம் வந்து சொன்னேன்.

“நான் அதனைக் கண்டுகொண்டுவிட்டேன்.”

“என்ன சொல்கிறாய்?” 

“ஆம். நான் அதனைக் கண்டுகொண்டு விட்டேன். எனக்குச் சுளீரென்று உறைத்தது. மீண்டும் மீண்டும் அந்த இடையரின மக்களின் மரபணுத் தொகுதியையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவற்றில் இன்று ஒன்றைப் புதிதாக கண்டுகொண்டேன். அவர்களின் மரபணு, பிரதிமாற்றம் (genetic mutation) மட்டும் அடையவில்லை. பிரதியேற்றமும் (epigenetic modification) அடைந்திருக்கிறது.”

ஜியாத் பேசாமல் நின்றுகொண்டிருந்தான். 

“பிரதிமாற்றம் போல் இது தீவிரமான நிலைமாற்றம் இல்லை. சிறிய நிலை மாற்றம்தான். முன்பு இருப்பதன் மேலேயே சிறிய கறை போல ஒட்டிக்கொண்டுள்ள மூலக்கூறுகளால் நிகழ்வது. இத்தகைய மாற்றங்கள் அகக்காரணிகளால் விளைபவை. அந்த அகக்காரணி என்ன தெரியுமா? ‘Personal trauma’ என்று சொல்லப்படும் வலி வேதனை. உடல்-உள்ளம்-வெளி எல்லாம் சேர்ந்து உண்டாக்கும் வலி வேதனை. அதுவுமே இப்படி நம் ஜீன்களில் படியும். ஆனால் அந்தப் படிவு ஜீனின் பிரதியை மாற்றுவதில்லை. ஒரு மூலக்கூறை வெறுமனே ஏற்றித்தான் வைக்கிறது. Epigenetics இப்படித்தான் அதனை விளக்குகிறது. இத்தகைய பிரதியேற்றம் இதற்கு முன்னரே நிகழ்ந்திருக்கிறது. அது பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டும் வருகிறது.

“இரண்டாம் உலகப்போரின் போர்க் கைதிகளுக்கு அது நிகழ்ந்திருக்கிறது. அவர்கள் அனுபவித்த கொடுமைகளும் வலி வேதனைகளும் அவர்களின் ஜீன்களில் ஆறாத வடுவாய் இதுபோன்று கறையாய்ப் படிந்திருக்கிறது. அந்த வலியின் வடு அவர்களது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு இருக்கிறது. அந்த ஜீன் சாம்பிள்களை வைத்தே இவர்களுடையதையும் ஆராய்ந்தேன்.”

[8]

புது டெல்லியில் இருக்கும் என் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு பின்னிரவில் காலந்தாழ்ந்துதான் வந்துசேர்ந்தேன். வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து இருட்டில் சுவிட்சைத் தேடித் துழாவிக்கொண்டிருந்த போது, எதேச்சையாகத்தான் பார்த்தேன். என் வீட்டுச் சுவரில் அறையப்பட்டிருந்த இயேசுவின் கண்ணாடிப் படத்தில், வெளியிலிருந்து அதன் மேல்பட்ட ஏதோவொரு ஒளித்தீற்றல் வெளிச்சத்தில், அவரின் மேல்நோக்கி எழுந்திருந்த வலது கை ஆள்காட்டி விரல் திசைமாறி என்னைச் சுட்டுவது போல் இருந்தது.