கலி சுட்டும் அகம்: உருவகங்களும் அழகியலும்

0 comment

எட்டுத்தொகை நூல்களில் நாடகத்தன்மையும் காட்சியழகியலும் செறிந்த நூல் கலித்தொகை. கலிப்பாக்களில் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புகளால் இயற்றப்பட்டு நல்லந்துவனாரால் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் சிறப்பே காட்சிகளும் காட்சிகளுடனான உரையாடல்களும் ஆகும். வெறும் அகத்திணைகளும் துறைகளும் மட்டுமின்றி அறம் சார்ந்த கூற்றுகளும் இருக்கிற தொகைநூல். 

“அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்

பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்

புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தருமென

பிரி வெண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்

வருவர்கொல்.”

அரியதெனக் கருதப்படும் அறங்களை ஈட்டி அதனை உரிய தகுதிகொண்ட மக்களுக்கு அளித்திட வேண்டும். இவ்வுலகில் பெரிதெனக் கருதப்படுவது பகையாகும். எனவே பகைவரை வென்று பகைக்கு உரித்தற்றவரை அழித்திட வேண்டும். இன்பமெனக் கொள்வது விரும்பிய காதல் துணையுடன் கூடுவதாகும். இவ்வாறு இல்லாதோருக்கு அருளவும், பகைவரை வென்றிடவும், காதலில் திளைக்கவும் பொருள் தேவை. அத்தகைய பொருட்செல்வத்தை ஈட்டச் செல்கிறேனென தலைவன் சொல்லி பொருள்வயிற் பிரிவில் தலைவியை விட்டு நீங்குகிறான். 

இவ்வடிகள் பாலைக்கலியில் வருகின்றன. எந்தவொரு உருவக பாவனைகளும் நாடகத் தருணங்களுமின்றி ஏன் பொருளீட்ட வேண்டுமென உலகியல் வழக்கத்தைக் கூறும் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் இன்றைய வாழ்வியலுக்கும் பொருந்தக்கூடியது. இதை இன்னொரு நோக்கிலும் காணலாம். ஈட்டும் செல்வத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற மெய்மையைச் சுட்டுகிறது. 

இதன் தொடர்ச்சியை தேவதேவனின் வரிகளில் காணலாம். 

‘கர்ப்பிணிப் பெண்ணை

அவள் தாயிடம் சேர்ப்பதுபோல்

உன்னை ஒரு மரநிழலில்

விட்டுப்போக விழைகிறேன்’.

இந்த நவீன வரிகளானது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய பாலையின் நீட்சி. இதே வரிகளைத்தான் சங்ககாலத் தலைவனும் பாடுகிறான், “அடியே, நான் கொடுஞ்சுரப் பாதைக்குச் செல்லவிருக்கிறேன், நீ இந்நிழலில் இருந்திட விழைகிறேன்” என எல்லா தலைவரும் தம் தலைவியரை நோக்கி உரைக்கின்றனர். 

இது தலைவனின் கூற்றாக இருக்கையில் தலைவியின் கூற்று இதற்கு எதிர்செய்யுளாக அமைந்துள்ளது.

தலைவி தலைவனிடம் வேண்டுகிறாள், 

“அரும்பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப

பிரிந்துறை சூழாதி ஐய! விரும்பி நீ

என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின்

மைந்துடை மார்பில் சுணங்கும் நினைத்துக் காண்

சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;

ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்

இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்

வளமை விழைதக்கது உண்டோ? உளநாள்

ஒரௌஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை

ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை

அரிதுஅரோ

சென்ற இளமை தரற்கு”

“அரிய பொருட்கள் மீதுள்ள வேட்கை உன்னைச் சூழ்ந்துள்ளதால் என்னைப் பிரிந்து செல்லாதே ஐயனே! காதலோடு என் தோளில் நீ தீட்டிய தொய்யில் உன் மார்பில் சுணங்கிக் கலந்ததை நினைத்துப் பார்ப்பாயாக! செல்பவரெல்லாம் நீர்போல முகந்துகொண்டு வர இவ்வுலகில் பொருளும் கிடையாது. செல்வம் கொள்ளாதவர் எல்லாம் உணவின்றி இருப்பதில்லை. இளமையும் காமமும் இணைந்து பெற்றிருப்போர் விரும்பும் வளம் வேறேதும் இருக்கிறதோ? உளத்தோடு கலந்தவரை ஒரு கையால் தழுவிக்கொண்டு மற்றொரு கையால் அவிழ்ந்த ஆடைகளைப் பற்றிகொண்டு ஒன்றி வாழ்தலே சிறந்த வாழ்க்கை. இளமை அரிதினும் அரிதாகும். கடந்துவிட்டால் திரும்பாது; எனவே இளமையைத் துய்த்திடு” என்கிறாள். இப்பாடலில் முழுக்க முழுக்க இளமையும் காமமும் செல்வத்தைவிட அரியதென்றும் இன்பம் தருவதென்றும் உரைக்கப்படுகிறது. மேலும் தலைவி ஓர் அழகிய உவமையைச் சுட்டுகிறாள். உலகம் நீரால் சூழ்ந்தது. அதனால் தேடிச்சென்று அள்ளிவர செல்வமொன்றும் நீரில்லை என்கிறாள். இதை இன்னொரு சித்திரமாகவும் கொள்ளலாம். நீர் போல எளியதன்று பொருள்; எனினும் பொருளினும் அரியது இளமையும் இளமை கொள்கிற காதலும். 

பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் பிரிதலும் பிரிதல் நிகழ்வுகளும்- பொருள்வயிற்பிரிவு, பொருள் தேடச்செல்லும் தலைவனை நினைத்து அழுங்குதல், உடன்போதல் போன்ற நிகழ்வுகளை உள்ளடக்கியது. பாலைக்கலியில் உடன்போகிய தலைவி தலைவனைத் தேடிச்செல்லும் செவிலித்தாயை அந்தணர் ஒருவர் தேற்றுகிற நிகழ்வு வருகிறது. அந்தணர் தலைவன் தலைவி உடன்போக்கினை பின்வரும் உருவகங்களால் நியாயப்படுத்துகிறார். 

அருமணம் கொண்ட சந்தனம் மலையில் பிறக்கிறது. அதனால் மலைக்கு ஏதேனும் பயனுண்டோ? அதைத் தரிப்பவருக்குத்தானே பயன்? நீரினுள் முளைக்கும் வெண்முத்தினால் நீருக்கு ஏதும் பயனுண்டோ? அதை அணிபவர்தானே பெருமை கொள்கிறார்? யாழின் நரம்பிலிருந்து எழும் ஏழிசைப் பண்ணால் யாழுக்கு ஏதும் இனிமையுண்டோ? அதனை மீட்டி செவிகொள்பவருக்குத்தானே இனிமை? அதுபோலத்தான் மகளும்; அவளுடைய மாண்பின்கண் தலைவனால்தான் சிறப்பு கொள்ளமுடியும். எனவே அவளைத் திரும்பி வரவேண்டும் என எண்ண வேண்டாம். அவள் தேர்ந்தெடுத்திருக்கும் வழி சிறப்புடைய வழியே என்று அறிவுறுத்துகிறார். 

நெய்தற்கலியில் தலைவி இரங்கி துன்பத்தில் ஏங்குவதை பல்வேறு உருவகங்கள் வெளிப்படுத்துகின்றன. கோடல் மலர்கள் இதழ்வாடி குலையிலிருந்து உதிரும் நிகழ்வு, மெலிந்த கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழும் நிகழ்வோடு ஒப்புமைப்படுத்தப்படுகிறது. கொந்தளிக்கும் கடலில், ஒரு அலை மீனைக் கரையில் எறிந்திட, மறுஅலை மீட்டுக் கரை சேர்ப்பது போல, தன்னை மீட்குமாறு தலைவி தலைவனை வேண்டுகிறாள். 

இன்றும் காதலிகளோ மனைவிகளோ தங்கள் துணைவர்களின் வருகையை வாகனச் சத்தங்களின் வழியாகவோ காலடியோசை வழியாகவோ அறிந்துகொள்வது வழக்கம். சிலசமயம் யூகங்கள் தவறும். கணவருடைய காலடியோசை என எண்ணிக் கதவைத் திறந்தால் வேறு யாரேனும் நின்றுகொண்டிருக்கக்கூடும். இதே வகையான உணர்வுகளை நெய்தற்கலியில் தலைவி தலைவனைக் காண எதிர்நோக்குவதாக தோழி தலைவனிடம் வரைவு கொள்ளச்சொல்லி மொழிகிறாள். (வரைவு- திருமணம்)

அணிச்சிறை குருகின் ஒலியைத் தலைவனின் தேர்மணி ஓசை எனக் கருதி வாயிலை நோக்கும் தலைவி, பின்னர் உள்ளடங்கும் ஒலிகேட்டு கானற்பறவையின் ஒலி எனப் புலம்புகிறாள். நீரில் அவிழும் பூக்களின் மணத்தினை காற்றில் உணரும் போது தலைவனின் மார்பில் கமழும் மாலையின் மணமென எண்ணி எழுவாள். பின்னர் மாலைக் காற்றினால் கழிபூத்த மலர்களின் வாசமென உணர்ந்து மயங்கிச் சோர்வுறுகிறாள். மனையில் துயில்கொண்டு ஆழ்துயிலில் தலைவனின் தோளில் உறங்குவதாய்க் கருதி தழுவ முற்படுவாள். பின் கனவென உணர்ந்து எழுந்து கலங்குகிறாள். அவளது இளமனம் படும் பாட்டினை உணர்ந்து விரைவில் தேர் பூட்டுமாறு தலைவனை தோழி அறிவுறுத்துகின்ற காட்சியிது.

மற்றொரு பாட்டில் தலைவியின் மொழியென நல்லந்துவனார் தற்குறிப்பேற்ற அணியைக் கையாண்டுள்ளார். தலைவி கடலையும் அன்றிலையும் குழலையும் நோக்கி வினவுகிறாள். ஒலிக்கும் கடலலையைப் பார்த்து ஒலித்துக்கொண்டே இருக்கிறதே, தான் தலைவனை நினைத்து அழுங்குவது போல, கடலுக்கும் தலைவன் இருந்து பிரிந்ததால் ஓலமிடுகிறதோ? பனையில் கூடமர்ந்து கூவும் அன்றிலே! தான் செய்த உதவியை மறந்து சென்றவரை நோக்கிக் கூவுகிறதோ, அல்லேல் தன் தலைவனைத் தேடி கூவுகிறதோ? பனிவிழ பசுங்கழையில் காற்றினால் எழும் ஒலி தன் நிலைகண்டு வருந்தி துன்பத்தில் இசைக்கிறதோ? இயற்கையாக நிகழும் நிமித்தங்களெனினும் தலைவி தன் இரங்கல் நிலையினால் இவற்றைத் தன்னுடன் தொடர்புபடுத்திக்கொள்கிறாள். 

மற்றொரு நெய்தற்கலி பாடலில் தலைவியின் அழகை தலைவன், ‘துளியிடை மின்னுபோல் தோன்றி ஒருத்தி, ஒளியோடு உரு என்னைக் காட்டி’ என்று வர்ணிக்கிறான். “தலைவி மழையிடையே மின்னும் கீற்று மின்னலைப் போல ஒளிகாட்டும் உருக்கொண்டவள்” என்கிறது அடி. இப்பாட்டு கைக்கிளை திணை சார்ந்தது என்பதை இவ்வரியே உணர்த்துகிறது. தலைவியை இதுவரை அருகில் காணவில்லை, தொட்டுத் துய்க்கவில்லை, மழைப்பொழுதின் மின்தீற்றெனக் கண்டதால் அந்தக் கணத்தில் காதல்கொண்டு மடலேறப் போவதாக தலைவன் ஊராருக்கு அறிவிக்கிறான். 

கலியில் முல்லைக் கலிப்பாடல்கள் ஆயர்களின் வாழ்க்கையையும் காதலையும் ஏறுதழுவுதலையும் மையப்படுத்தியவை. ஆயர் இளமகள் ஓரிடத்தில்,

‘பல்ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளிமேல்

கொல்லேறு கொண்டான் குருதி மயக்குறப்

புல்லல் எம் தோளிற்கு அணியோ? எம் கேளே’

என்கிறாள். தயிர் கடையும்போது தன் மேனியில் தெறித்த துளிகளுடன் குருதி படிந்த தோளுடன் வரும் கணவனைத் தழுவுதல் தனக்கான அணிகலன் அல்லவோ என்று வினவுகிறாள். மற்றொரு பாடலில் ‘அளைக்கு எளியாள், வெண்ணெய்க்கும் அன்னள்’ என்றொரு அடி வருகிறது. அளை என்றால் தயிரென்றும் தழுவுதலென்றும் பொருள். தயிர்கொள்பவள் வெண்ணெய்க்கும் ஆவாளென்றும் தழுவிக் கொள்பவள் வெண்ணெய்க்கும் தானென்றும் இருபொருள்பட அகத்தன்மையுடன் பொருள் கொள்ளலாம். இதுபோன்ற நுண்ணுருவகங்கள் முல்லைக்கலி முழுக்க பரந்துள்ளன. 

மருதக்கலி பரத்தையற் பிரிவு, அதனால் கொள்ளும் ஊடல், பாணன் கூற்று முதலியவற்றை உள்ளடக்கியது. வேளாண்நிலக் காட்சிகள் விரிவாகப் பாடப்பட்டுள்ளன. 

உதாரணமாக மருதநிலப் பொலிவுக் காட்சி!

“மணிநிற மலர்ப் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்

அணிமிகு சேவலை அகல் அடை மறைத்தென

கதுமென காணாது கலங்கி அம்மடப் பெடை

மதிநிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி

துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி

பல் மலரிடைப் புகூஉம் பழனம்….” 

அல்லிகள் நிறைந்து நிற்கும் தெளிநீலத் தடாகத்தில் ஆண்- பெண் அன்னங்கள் மகிழ்ந்து ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தன. திடீரென அன்னச்சேவலைக் காணாமல் அன்னப்பெடை கலங்கி இலைகளின் இடையேவெல்லாம் தேடியது. அப்போது நிலவின் நிழலைத் தன்னுடைய இணையென எண்ணித் துரத்தியது. பெடை நிலவின் நிழலைத் துரத்தி வருவதைக் கண்ட அன்னச்சேவல் இணையை அணைக்க எதிரே வர பெடை அன்னம் நாணி மலர்களுக்கிடையில் ஒளிந்து கொள்கிற தடாகத்தைக் கொண்ட செழிப்புகொண்ட நிலம் மருதமாகும். 

மற்றொரு மருதக் கலிப்பாடலில் நீர்த்துறையில் மலர்ந்திருக்கும் வெண்தாமரை வெள்ளிக்கிண்ணத்தில் தேறல் உண்பவளின் முகம் போல மலர்ந்திருப்பதாக தலைவி பாடுகிறாள். ஊடலென்பதற்கு அப்பாற்பட்டு அழகிய இயற்கை உருவகங்களை அகக்காட்சிகளுடன் தொடர்புபடுத்தி மருதக் கலிப்பாடல்கள் அமைந்துள்ளன.

குறிஞ்சிக்கலி கூடலும் கூடல் நிமித்தமான பாடல்களையும் கொண்டது. தலைவன் தோழியிடம் ‘ஈங்கெ தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின்வேந்து கொண்டன்ன பல’ என்கிறான். அதாவது தலைவி இங்கே வந்ததற்கு ஈடாக ஏதேனும் அளித்தால் அரசனாக அவளிடம் வரி கொள்வேன் என்கிறான். 

எல்லா மொழிகளிலும் பழைய இலக்கியங்களில் காதலென்பது அரசனும் அரசியும் கொள்வதாக ஏதோவொரு வகையில் கதாபாத்திரங்களாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். தமிழின் புற இலக்கியங்களில்கூட அரசர்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். ஆனால் தமிழின் அக இலக்கியங்களில் தலைவன், தலைவி, தோழி, செவிலி, கண்டோர் எனக் குடிகளே மையப்படுத்தப்படுகின்றனர். கலித்தொகையை வாசிக்கும்போது எங்கோ சோலையில் திரிந்துகொண்டிருக்கும் இளமகளையும் களவில் காதலித்துத் திரும்பும் இளைஞனையும் நினைவுகூரலாம். எல்லோருடைய இளமையிலும் ஏதோவொரு இனிய தருணமொன்றை மீட்டி அதே நினைவில் ஆழ்த்தும் நூல் கலித்தொகையாகும்.