தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமி படைப்புகளில் காமம் (பகுதி 3)

by மானசீகன்
0 comment

கு.அழகிரிசாமி காமத்தை அதிகம் சித்தரித்தவரில்லை என்று பொது வாசக மனம் நம்பியதற்கு சில காரணங்கள் உண்டு.

அவர் காமம் சார்ந்து மனித மனங்களின் மீதான அறுவை சிகிச்சையில் ஈடுபடுவதில்லை. காமத்தின் விசித்திரங்களைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து கடந்துவர துறவியைப் போல் வழிகாட்டுவதில்லை. காமத்தை சாக்காக வைத்துக்கொண்டு கடவுள், தத்துவம் என்று உபதேசம் செய்வதில்லை. காமம் சார்ந்த உணர்ச்சிகரமான சித்தரிப்புகளையோ நாடகீயமான தருணங்களையோ வலிந்து உருவாக்குவதில்லை. காமத்தின் இயக்கம் பெரிய அளவில் காட்சிச் சித்தரிப்பாகக்கூட நிகழ அனுமதிப்பதில்லை. காமத்தைப் பேசுகிற பாவனையில் உடல் சார்ந்த வர்ணனைகளை அதிகம் முன்வைப்பதில்லை. அவரிடம் காமம் சார்ந்து மரபான ஒழுக்கவியல் பார்வையையோ நவீன சிந்தனைகள் வழி உருவாக்கிக்கொண்ட மீறல் பார்வையையோ காண முடிவதில்லை. பெரும்பாலான கதைகளில் அவருக்கே உரிய விட்டேத்தியான பார்வையோடு ‘அந்த ஆம்பளையும் பொம்பளையும் இப்படி பண்ணிட்டாங்கப்பா’ என்று சொல்லிவிட்டு உடனே நகர்ந்துவிடுகிறார்.

பிறந்ததில் இருந்து கண்ணீரையும் துன்பத்தையும் மட்டுமே பார்த்து வளர்ந்த பஞ்சப் பராரியான பெண், தன் ஏழெட்டுப் பிள்ளைகளில் ஒருத்தனைப் பாம்பு கடித்ததைக் கேள்விப்பட்டு விசாரிக்க வந்த உறவுக்காரனிடம், ‘தோ.. இங்கதான் புதைச்சோம்’ என்று சொல்வதற்கு நிகரானவேயே அவருடைய காமம் சார்ந்த சித்தரிப்புகள். அந்தக் கதைகளை  வாசிக்கிற போது நமக்கும் அதே உணர்வுதான் ஏற்படுகிறது.

ஃபிராய்டிய விளக்கமும் அழகம்மாளும்:

பல விமர்சகர்களால் திரும்பத் திரும்ப குறிப்பிடப்படும் அவருடைய கதாபாத்திரங்களில் ஒன்று ‘அழகம்மாள்’. சில விமர்சகர்கள் அழகம்மாளைத் தூக்கிக்கொண்டு போய் வாகாக ஃபிராய்டின் மடியில் உட்கார வைத்துவிட்டனர். அழகம்மாளின் செயலுக்கு ‘ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ்’ என்று பெயர் வைத்துவிட்டால் கல்லறையிலிருக்கும் அழகிரிசாமியின் உயிரோ யூதராகப் பிறந்து யெஹோவாவைச் சரணடைந்த ஃபிராய்டின் ஆத்மாவோ புளகாங்கிதம் அடைந்துவிடும் என்று அவர்கள் நம்பியிருக்கலாம்‌‌.’ ரிஷிமூலம் ராஜாராமன் மாதிரி ஒரு பெண் கதாபாத்திரம் வேண்டும் என்றுகூட சிலர் நினைத்திருக்கலாம். கு.அழகிரிசாமியைப் பொறுத்தவரை அந்தக் காலகட்டத்தில் உருவாகிவந்த ஃபிராய்டிசம் உள்ளிட்ட இசங்களின் மைதானமாகவோ மொழி மற்றும் வடிவம் சார்ந்த பரிசோதனைக் கூடமாகவோ தன் கதைகளை அவர் கருதியதில்லை. உள்ளுணர்வு பெருக்கெடுத்துவிட்டால் திண்ணையில் உட்கார்ந்து கதை சொல்லிவிட்டு வெற்றிலை தீர்வதற்குள் வீட்டுக்குள் போய்விடுகிற முதிர்ச்சியடைந்த லௌகீக ஆசாமிதான் அவர்.

அந்தக் கதையில் கோபால் மீது அழகம்மாளுக்கு உருவாகிற உணர்வு என்ன என்கிற கேள்விக்கு ‘இதுதான்’ என்று ஒற்றைப்படையாக விடை கூறிவிட இயலாது என்பதுதான் கதையின் சிறப்பே. செம்பருத்தி நாவலைப் போல் மாதவிடாய் நின்றுவிடுகிற தருணத்தில் பெண் மனதில் நிகழ்கிற உணர்வு சார்ந்த தத்தளிப்பாகவும்கூட அவர் இந்தப் பாத்திரத்தைப் படைக்கவில்லை.‌ அவள் ஏன் இப்படி மாறுகிறாள் என்பதோ தனக்கு உண்மையில் என்னதான் வேண்டும் என்பதோ அவளுக்கே தெரியாது. மகன் கோபால் உருவத்தில் அவள் சாயல்கொண்டவன். காலம் கடந்து தன் மீதே ஏற்படுகிற சுயமோகத்தின் பிம்பமாக அவன் இருக்கிறான் என்பதே இக்கதையில் நான் உணர்ந்த தரிசனம்.

ஆனால் இந்தக் கதையில் கு.அழகிரிசாமியின் மேதைமையை உணர்த்தும் அற்புதமான இரு இடங்கள் உண்டு. அவளுடைய சேலை மோகத்தை மகன் கேள்வி கேட்கும் தருணத்தில்தான் அழகம்மாள் உடைந்து போகிறாள். அந்தக் கோபமே கிருஷ்ணக் கோனார் மீது சொல்லம்புகளாகப் பாய்கின்றன. சேலைக்காக மகனிடம் கடன் கேட்கும் அழகம்மாள், அவன் ‘என்னிடம் ஏதம்மா காசு?’ என்று மறுக்கும்போது ‘பண்ணையாரிடம் கேள்’ என்று தூண்டிவிடுகிறாள். ‘எப்போதும் எவரிடமும் கடன் வாங்கக்கூடாது’ என்று பொறுப்புடன் உபதேசிக்கும் அன்னை, வெறும் பெண்ணாக உருமாறுகிற இடம் இது. இதனை மகன் மீதான காமம் என்று குறுகலாகப் பொருள்கொள்ள வேண்டியதில்லை‌‌. காமம் எனும் காட்டாறு திடீரெனப் பெருகி ஓடுகிறபோது பேதமில்லாமல் சகலத்தையும் இழுத்துப்போகும். சமவெளிக்கு வந்து நதியான பிறகுதான் தண்ணீருக்கு நிதானம் வரும். இந்தக் கதையில் கு.அழகிரிசாமி சித்தரித்திருப்பது அந்தச் சில நிமிடப் பதற்றங்களை மட்டுமே. இந்தச் சித்தரிப்பை கண்டிப்பாக ஃபிராய்டிய கோணத்தில் அணுக இயலாது.

‘செம்பருத்தி’ நாவலில் புனிதத்தின் அடையாளமாக, பெண்மையின் உருவகமாகச் சித்தரிக்கப்படும் புவனா, நாற்பது வயதுக்கு மேல் சட்டநாதனைக் குத்திக்கிழிப்பது ‘மொனோபாஸ்’ காலத் தடுமாற்றமே என்பதை தி.ஜானகிராமன் பிரக்ஞைப்பூர்வமாக படைத்திருக்கிறார். ஆனால் அழகம்மாளை அந்தச் சிமிழுக்குள் அடைக்க கு.அழகிரிசாமி விரும்பவில்லை. ஏனென்றால், பிற தருணங்களில் அவள் வெகு இயல்பாக இருக்கிறாள். அந்தக் கதையேகூட ‘இஞ்சிச்சாறு தட்டித் தரவா?’ என்று அவள் பரிவோடு கிருஷ்ணக் கோனாரிடம் கேட்கிற சித்தரிப்பில்தான் தொடங்குகிறது. காமத்தால் நிகழும் சில நொடித் தடுமாற்றங்களை, ஒளிர்ந்து மறையும் மின்னலைப் போல் குறிப்புணர்த்திய கதையாக ‘அழகம்மாளை’ மதிப்பிட முடியுமே தவிர, இஸங்களின் சாயலை அதற்குள் தேடுவது சரியானதன்று. உண்மையில் அழகிரிசாமி அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.

காமத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்:

இந்த உலகத்தின் தீராத ஆச்சரியங்களில் ஒன்று காமம். குறிப்பிட்ட தருணத்தில் சம்பந்தப்பட்ட ஒருவர் மீது எப்படித் தோன்றுகிறது, எதனால் தோன்றுகிறது என்பதை காமுறுகிறவரே அதற்கு முந்தைய நொடிவரை உணர முடியாத ஆச்சரியம் அது. பசியும் காமமும் மனிதர்களால் நிராகரிக்க முடியாத அடிப்படை உணர்வுகள் என்றாலும் பசியிலிருந்து காமம் நுட்பமாக வேறுபடுகிற இடம் இது மட்டும்தான். பசியைப் போன்ற கால ஒழுங்கோ தர்க்கத்திற்கு உட்பட்ட இயங்கு விதிகளோ காமத்திற்கு இல்லை. அது எதனால் உருவாகிறது, எப்படி அணைந்து போகிறது என்பதை எவராலும் ஊகிக்க முடியாது. வேதாந்திகளின் கைகளுக்குள் சிக்காத பரபிரம்மத்தைப் போல, இதுவரை பேசப்பட்ட வரையறைகளுக்குள் அடங்காமல் அவரவருக்குள் கொதித்து, ஆவியாகி, குளிர்ந்து, நீராகி ஓடிக்கொண்டிருக்கும் அளக்க முடியாத பேராறுதான் காமம்.

‘சிரிக்கவில்லை’ கதையில் ராஜாராமனுக்கு பாப்பம்மாள் மீது ஏற்படும் மோகம் அத்தகையதுதான். ‘கையைப் பிடித்து இழுக்கும் போதுகூட அடுத்த நொடியில் முத்தமிடப் போகிறோம் என்பது ராஜாராமனுக்கே தெரியாது’ என்று அழகிரிசாமி அந்த மனநிலையைப் பதிவுசெய்திருக்கிறார்.

பல நாட்களாகத் திரண்டெழுந்து ஆட்கொண்ட காமம், உறவு நிகழாமலேயே திடீரென அணைந்துவிடுகிற நுட்பத்தையும் கு.அழகிரிசாமி தன் கதையில் பதிவுசெய்திருக்கிறார்.

‘குழந்தையின் தியாகம்’ கதையில் வருகிற மைனருக்கு ஆதரவில்லாமல் கைக்குழந்தையோடு வாழும் இலங்கைப் பெண்ணான ‘சின்னி’ மீது உருவான காமத்தை அழகிரிசாமி நுணுக்கமாக வர்ணித்திருக்கிறார். அவளைக் காப்பாற்றுவது போன்ற பாவனையில் தன் வீட்டு வேலைக்கு அழைத்துவரும் மைனருக்கு உள்ளூரக் கனன்றுகொண்டிருப்பது ‘அவளை அடைய வேண்டும்’ என்கிற வேட்கை மட்டுமே. பிறர் அவளைத் தன்னோடு இணைத்துப் பேசுகிற போதெல்லாம் மைனர் மனதுக்குள் ஆர்கசம் அடைகின்றான்.‌ ‘எம் பையனுக்கு பசிக்குது’ என்று சின்னி கூறும்போது அவளது திரண்ட மார்பை உற்றுப் பார்த்துக்கொண்டே ‘உன்கிட்ட இருந்தும்கூட அவனுக்கு இன்னம் பசிக்குதா?’ என்று இருபொருள்படும்படி கேட்கிறான். ‘எனக்கு வயித்து வலி’ என்று சொல்லி வேலைக்கு லீவு கேட்கும்போது ‘முதலில் வயித்த வலி வரும்.. கொஞ்சம் போனா இடுப்பு வலி வரும்’ என்று ஆபாசமாகப் பேசுகிறான்.

பலவந்தப்படுத்தாமல் அவள் தன்னை நோக்கி இயல்பாக வரவேண்டும் என்கிற நோக்கத்தோடு சொற்களின் வழி உறவு சார்ந்த அழைப்பையும் காமத்தூண்டுதலையும் மைனர் நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறான். தன் குழந்தைக்கு காய்ச்சல் என்று சொல்கிற போதுகூட அவனுடைய அஸ்திரங்கள் ஓய்வதில்லை. ஆனால் அந்தக் குழந்தையின் எதிர்பாராத மரணம் திடீரென்று மைனரின் காமத்தை வறண்டுவிடச் செய்கிறது. எந்த அறமும் இல்லாமல் காமம் கை பிடித்து அழைத்துச்செல்கிற ஒற்றையடிப் பாதையில் மை வைக்கப்பட்ட மனிதனைப் போல் பயணித்துக்கொண்டேயிருக்கிற ஒருவனுக்கு, அந்தப் பாதை திடீரென முடிவடைந்து விடுகிறபோது ஏற்படும் திகைப்பே கதையின் அழகு. இதே மாதிரியான மனமாற்றம் வேறொருவருக்கு நிகழும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. காமம் என்பது அவரவருக்கென்று விதிக்கப்பட்ட பிரத்யேகமான ஆட்ட விதிகளைக்கொண்ட விசித்திரமான சதுரங்கம் என்பதை தமிழில் எழுதிய வேறெந்த எழுத்தாளரையும்விட நன்கு புரிந்துவைத்திருந்தவர் கு.அழகிரிசாமி மட்டும்தான்.

காமமும் தியாகமும்:

‘தியாகம்’ என்கிற உணர்வின் மீது நவீனத்துவம் நிறைய கேள்விகளை முன்வைத்திருக்கிறது. சிலரின் தியாகங்களால் கட்டமைக்கப்பட்ட நம் சமூகத்தின் அடியாழத்தில் உறைந்திருக்கிற மனச்சிக்கல்களை நவீனத்துவப் படைப்பாளிகள் தம் கையிலிருக்கிற வெளிச்சம் குறைவான சிறு சுடரைக்கொண்டு அடையாளம் காண முற்பட்டிருக்கின்றனர்.

காமத்தில் நிகழும் தியாகத்தை அழகிரிசாமி மூன்று கதைகளில் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார். ‘அழகம்மாள்’ கதையை இந்தக் கோணத்திலும்கூட அணுக முடியும். சிறுவயதில் மைனராக இருந்து சொத்தையழித்து தாசி வீட்டில் மயங்கிக் கிடக்கிற கிருஷ்ணக் கோனாரை அவருடைய ஒரு கண் ஊனத்தையும் பொருட்படுத்தாமல் திருத்தி வழிக்குக் கொண்டுவர பேரழகியான அழகம்மாள் திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். ‘உறவா? பரிதாபமா? என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்துவிட்டுப் போகட்டும் என்கிற அசட்டையா?’ என்கிற கேள்விகளுக்கு ‘இதுதான் விடை’ என்று சரியாகக்  கூறமுடியாத அளவுக்கு சகலமும் கலந்த கலவையாய் அழகம்மாளின் தியாகம் அமைகிறது. ‘சம்சாரப் பாதையில் அவ்வப்போது குத்தும் முட்களை அழகம்மாள் வேதனையோடு பிடுங்கி எறிந்திருக்கிறாள்’ என்கிற வரிகளிலேயே அவர்களின் தாம்பத்ய இலட்சணத்தை, ஜன்னலைப் படாரென்று திறந்துகாட்டி நமக்கு அதிர்ச்சியூட்டி விடுகிறார் அழகிரிசாமி. கோபால் பிறந்த போதுதான் ‘அவள் திருமணத்தில் பெண் அடைகிற சந்தோஷத்தை அடைந்தாள்’ என்கிற வரிகள் தற்செயலானதன்று. நிகழப்போகும் துயரங்களுக்கான குடுகுடுப்பைக்காரனின் முன்னறிவிப்பு இது.

என்னவென்றே தெரியாமல் அவள் கயிறு பிடித்து இருள்வெளியில் அழைத்துவந்த ‘தியாகம்’ ஆட்டுக்குட்டியன்று. அது ஆளை விழுங்கக் காத்திருக்கும் சிறுத்தை என்று அவள் உணர்கிற இடத்தில்தான் கதை தொடங்குகிறது. சிறுத்தையை அவள் ஆடென்று நம்பியதற்குக் காரணம் அவளும் சிறுத்தையும் பரஸ்பரம் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருவரையும் போர்த்தியிருந்த இருள்தான். அந்த இருளைக் கிழித்து சிறுத்தையை அடையாளம் காட்டிய உதயபானுவாக அவள் வாழ்க்கையில் வளர்ந்து ஆளாகிவிட்ட கோபால் வந்துசேர்கிறான். ‘இலையுதிர் காலத்திற்குப் பின் பிறந்த வசந்தத்தின் சோபை’ என்று அவன் விடுமுறையில் வீட்டுக்கு வந்துபோகும் நாட்களைக் குறிப்பிடுகிறார். அந்த வசந்தம் கானல் நீர் மட்டுமே என்று உணர்கிறபோது அவள் கோபம், தான் செய்த தியாகத்தின் மீது திரும்புகிறது. ‘அவளால் அந்தத் தியாகத்தை தாங்க முடியவில்லை’ என்கிறார் அழகிரிசாமி. அந்தத் தியாகம் அவள் உச்சி மண்டையில் பறித்த பூவாய் அல்ல, பெயர்த்தெடுக்கப்பட்ட மலையாய் அமர்ந்திருப்பதை உணர்கிற போதுதான் அவள் தன்னியல்பு கெடுகிறாள். யாருக்காகத் தியாகம் செய்ததாகக் கருதினாலோ அவரையே சிறுத்தைக்கு உண்ணக் கொடுக்கிறாள்.

ஒருவகையில் இந்தியக் குடும்பங்களில் பதின்ம வயதுகளில் சுயவதையோடு தியாகமெனும் பலிபீடத்தில் தன்னை வைத்துப் புன்னகைக்கும் பெண்கள், நாற்பது வயதில் கணவன்மார்களுக்குத் திருப்பிச் செய்யும் முறைவாசலே அது. எந்த அளவுக்குத் தியாகம் உக்கிரமாக இருக்கிறதோ அதே அளவுக்கு பதில் மரியாதையும் பலமாக இருக்கும். ஆனால் கதையில் வெளிப்படையாக நிகழும் மீறல் வந்தேறியைப் போல் புதிதாக வந்து ஆட்கொண்ட அவளுடைய அலங்கார மோகம் மட்டும்தான். மகனுக்கு நன்றாக சாப்பாடு வைக்கச்சொல்லும் கணவனிடம், ‘நா செய்ததும் செய்யாததும் இந்த அவிஞ்ச கண்ணுக்குத் தெரியப் போகிறதா?’ என்று கேட்டு பழைய ‘தியாகத்தின்’ தேன் கூட்டைக் கலைத்து விடுகிறாள்.

தேனீக்களெல்லாம் அந்த அவிந்த கண்ணில் மொய்த்திருக்க சொற்களின் அமிர்தத்தை மட்டும் தனியாக வழித்து நக்குகிறாள் அழகம்மாள். அதைத் தாங்க இயலாமல் கிருஷ்ணக் கோனார் அழுகிற காட்சியில், ‘வாள் உரசுவது போல் அழுததாகக்’ கூறியிருப்பது அழகிரிசாமியின் அபாரமான படைப்பாற்றலுக்கான சான்றாகும்.‌ காமம் என்பது ஆண், பெண்ணுக்கிடையில் யுத்தமாக நீடித்துக்கொண்டிருப்பதை குறிப்புணர்த்தும் வரிகள் இவை. காமம் என்கிற காட்டாற்றின் முன், பலவீனமான மணல் மேடாக தியாகம் கலைந்து சரிகிற சித்திரத்தை இந்த இடத்தில் காண முடிகிறது.

‘பாலம்மாள் கதை‘ அழகிரிசாமியின் மற்றொரு நுட்பமான படைப்பு. இங்கும் தியாகம்தான்- ஆனால் இது தனித்தன்மை வாய்ந்த தியாகம் இல்லை என்பதால் இதற்குப் பெயரோ மதிப்போ இருப்பதில்லை. குடும்பத்தைக் கரை சேர்ப்பதற்காக ஆயிரம் பாடுகளுக்கிடையில் மறந்து தொலைத்துவிட்ட காமம், மீண்டும் காசு வந்துவிட்டால் வயசான காலத்தில் வேறு வடிவத்தில் எட்டிப் பார்க்கிறது. வெறுந்தட்டை உண்பது போல் பாவித்து ஏப்பம்விடும் நுட்பத்தை, எப்படியோ மனம் வழியாக காமம் நிகழ்த்திவிடுகிறது. இந்தக் கதையில் வரும் ‘கம்மல்’ அதற்கான குறியீடுதான்.‌ வறுமையிலேயே வாழ்ந்து இளமையெல்லாம் ஓய்ந்து மகன் ஆளான பின் நீண்ட நாட்களாக அடகு வைத்திருந்த கம்மலை அம்மாவுக்கு மீட்டுத்  தருகிறான். அதை அணிவதென்பது அவளைப் பொறுத்தவரை  ஒருவகையில் கடந்த காலத்தை எட்டிப்பார்ப்பதுதான். ஆனால் நம் சமூகம் எப்படியோ இந்த உணர்வை நுட்பமாக மோப்பம் பிடித்துவிடுகிறது. அதனால்தான் வயசான காலத்தில் சாதாரண கம்மலைப் போட்டதற்கே ‘தேவடியா வீட்டுப் பெண் மாதிரி இருக்கு’ என்று பெரிய வார்த்தை பேசுகிறது. அதை உணர்ந்ததும் பாலம்மாள் கம்மலைக் கழட்டி மகன் கையில் தந்துவிட்டு ‘இது உன் பொண்டாட்டிக்குத்தாம்பா’ என்று சிரமப்பட்டு புன்னகை செய்கிறாள். இதுவும் தாங்க முடியாத தியாகம்தான். ஆனால் பாரம் குறைவு என்பதால் இது பிறருக்கான சுமையாக மாறுவதில்லை. சுயவதையுடன் மட்டுமே முடிந்து போகிறது. பாலம்மாக்கள்தான் நம் சமூகத்தில் அதிகம். அழகம்மாக்கள் அபூர்வமாகவே உருவாகிறார்கள். அதனால்தான் பல பெண்களுக்கான பொது அனுபவமாக இந்தக் கதையை உருவகித்து ‘பாலம்மாள் கதை’ என்று கதைத் தலைப்பை தேர்வுசெய்திருக்கிறார் கு.அழகிரிசாமி.

காமத்தில் நிகழும் ஆண்களின் தியாகமும்கூட தெரிந்தோ தெரியாமலோ இன்னொரு பெண்ணின் தலையில் விடிவதை நுட்பமாகக் கூறிய கதை ‘இரு சகோதரர்கள்’. அந்தக் கதையின் மாந்தர்களுக்கு அவர் வைத்திருக்கிற பெயர்கள்கூட தற்செயலானவை அல்ல. லௌகீகத்தில் ஈடுபட்டு ஏழு பிள்ளை பெற்றும் இல்லறத்தின் சுமை தாளாமல் விட்டேத்தியாகத் திரிகிறவனுக்கு ‘ராமகிருஷ்ணன்’ என்றும் தன் இயலாமைக்கு அவன் ‘விதி’ என்று பெயர் வைத்து அதையே கர்மமாகக் கருதி வாழ்வதை, ஒரு மனைவியாக தானும் அப்படியே அங்கீகரித்து சகலத்தையும் உதிர்த்துவிட்டு வாழும் அவன் மனைவிக்கு ‘சாரதா’ என்றும் சூழலின் நிர்பந்தத்தால் பிரம்மச்சர்யம் என்கிற போர்வைக்குள் காமத்தை ஒளித்துவைத்திருப்பவனுக்கு ‘சுப்பிரமணியம்’ என்றும் பெயர் வைத்திருப்பது கு. அழகிரிசாமியின் நுட்பமான பார்வையை வெளிப்படுத்துகிறது.

இந்தக் கதையின் ஆரம்பத்தில் அண்ணன் ‘தியாகம்’ செய்கிறான். அந்தத் ‘தியாகம்’ தந்த குற்றவுணர்வால் தம்பியும் பதில் மரியாதை செய்கிறான். ஆரம்பத்தில் இந்தப் பதில் மரியாதைக்காக உவப்படைந்த அண்ணன், பிறகு குற்றவுணர்வு கொள்கிறான். இவர்கள் மாற்றி மாற்றி ‘தியாகம்’ என்கிற பெயரில் கூத்து நடத்திக்கொண்டிருக்க, தான் செய்துகொண்டிருப்பதற்குப் பெயர் என்ன என்பதைக்கூட அறிந்துகொள்ள விரும்பாத விட்டேத்தி மனோபாவத்துடன் சாரதா மூச்சுவிட்டு, சாப்பிட்டு, பிள்ளை பெற்று உயிரோடிருப்பதற்கான அடையாளங்களோடு மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறாள். பெருசாகிவிட்ட அண்ணன் குடும்பத்துக்காக கல்யாணம் பண்ணாமல் தியாகம் செய்த தம்பி, உள்ளிருந்து உடற்றும் காமத்தின் அழுத்தம் தாளாமல் அண்ணியைப் பெண்டாள நினைத்து, அதை அண்ணன் பார்த்துவிட்டதால் குற்றவுணர்வு கொண்டு அழும் கதையாக மட்டுமே இதைச் சுருக்கிவிட முடியாது. ‘சுப்பு இதெல்லாம் தியாகத்தின் பலன்’ என்று ராமகிருஷ்ணன் வேரைக் கண்டறிந்து நமக்கும் காட்டிவிடுகிறான். ‘இதற்குப் பரிகாரமாக ஒரு கல்யாணம் பண்ணி வைத்தாலும் அவன் இன்னொரு ராமகிருஷ்ணனாகத்தானே ஆகப்போகிறான்?’ என்று அண்ணன் யோசிக்கும் இடம் மிக முக்கியமானது.

‘சிரிக்கவில்லை’ கதையிலும்கூட கைகூடாத காதலுக்குப் பிறகும் நீடிக்கும் நேசத்தை பாப்பம்மாளின் தியாகமாக வளர விடுவதற்கு அழகிரிசாமி விரும்பவில்லை. திடீரென்று ஒருநாள் பாப்பம்மாவுக்கு எல்லாம் தெளிந்துவிடுகிறது. சின்ன வயசிலேயே தெளிவடையாவிட்டால் காமத்தின் தியாகம் மத்திய வயசில் புலியாக உருமாறி குடும்பத்தின் தலைமாட்டில் உட்கார்ந்திருப்பதையே அழகிரிசாமியின் கதைகள் உக்கிரமாகவும் அமைதியாகவும் பேசியிருக்கின்றன. காமத்தை தியாகம் செய்து வாழ்வோரின் மனநிலை இருவேறு துருவங்களில் நிலைகொள்வதை கதாபாத்திரங்களின் வழியாக அபாரமாக உணர்த்தியிருக்கிறார் அழகிரிசாமி. அழகம்மாளின் அடக்கப்பட்ட காமம் கோபமாக வெடித்துச் சிதறுகிறது. அழுகையாக பொங்கி வழிகிறது.

‘சேல தனத்தோட உன்ன
சேர்ந்திருக்க வாய்க்கலையே’

என்று நெற்றியில் வைத்த குங்குமம், வாயில் அதக்கிய வெற்றிலை ஆகியவற்றின் ஒளிரும் சிவப்போடு அவளால் உணர்வுகளில் நீந்தி பிரவாகிக்க முடிகிறது. ஆனால் சாரதா தன்னைத்தானே ஒடுக்கிக்கொண்டு மரத்துப் போகிறாள். நிறைவேறாத காமமே அவளை மரக்கட்டையாக்குகிறது. ‘சகோதரர்கள் அழுதாலும் சரி, அழுவதற்குப் பதிலாக சிரித்தாலும் சரி, அவளுக்கு இரண்டும் ஒன்றுதான்’ என்று ஆரம்பத்திலேயே அவள் குணச்சித்திரத்தை அழகிரிசாமி வரைந்து காட்டிவிடுகிறார். தங்கள் வாழ்வின் ஒரே பொருளாதார நம்பிக்கையான கேமராவை தம்பியின் படிப்புக்காக கணவன் விற்றபோதும் அவள் பதைபதைக்கவில்லை, சந்தோஷப்படவும் இல்லை’ என்கிறார் அழகிரிசாமி. அப்படியொரு சம்பவம் நிகழ்கிற போதுகூட அவள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வெறுமனே தன் கொழுந்தனைப் பார்த்துக்கொண்டேதான் உட்கார்ந்திருக்கிறாள்.‌ அவள் அவனை ஓங்கி அறைந்திருந்தால் தம்பிக்குச் சமாதானமாகியிருக்கும். கையைப் பிடித்து இழுக்கும் போது இடையில் வந்துவிட்ட கணவனிடம் ஓடிவந்து அவன் மார்பில் புதைந்து அழுது தீர்த்திருந்தாள் அண்ணன் சமாதானமாகி இருப்பான். அவளுடைய விட்டேத்தியான மௌனமே இருவருக்கும் சித்ரவதையாக இருக்கிறது. தமிழ்ச் சிறுகதை வரலாற்றிலேயே தியாகமெனும் கொடு நெருப்பால் உணர்வுகள் கருகிப் போன விசித்திரமான பாத்திரப் படைப்பாகவே சாரதாவை அடையாளம் காண முடிகிறது.

பாப்பம்மாள் எனும் விசித்திரம்:

கு.அழகிரிசாமியின் அபூர்வமான சிறுகதைகளில் ஒன்று ‘சிரிக்கவில்லை’. அந்தக் கதையில் ரயில்வே ஊழியரான ராஜாராமன் தன் தாயுடன் வசித்துவருகிறான். அந்தத் தெருவில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த பாப்பம்மாளுக்கு அவன் மேல் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது. அவனும் ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராமல் அவளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு பிறகு குற்றவுணர்வு கொள்கிறான். அந்த முத்தம் அவளுக்கு காமம் அல்லாத வேறொரு மன மகிழ்ச்சியைத் தருகிறது. மற்றொரு  பெண்ணோடு நிகழும் அவனுடைய திருமணத்திற்குக்கூட பாப்பம்மாள் ‘புதுத்துணி போட வேண்டுமே’ என்று மட்டும்தான் யோசிக்கிறாள். திருமணத்திற்குப் பிறகும்கூட அவனுக்குப் பதிலாக அவன் மனைவியோடு ஒட்டிக்கொள்கிறாள். அவன் மனைவி குழந்தை பெற்று ஊருக்கு வருகிற போதுதான் அவளுக்குள் மன மாற்றம் நிகழ்கிறது. அச்சு அசல் ராஜாராமன் சாயலில் இருக்கிற குழந்தை அவளுக்கு அவன் வாழ்வில் தன் இடம் என்ன என்கிற கேள்வியை எழுப்புகிறது. இது மிக நுட்பமான உளவியல் சித்தரிப்பு ஆகும். அதுவரை சிறுபெண்ணாகவே இருக்கும் அவள், தன் மனதளவில் காமத்தை உணர்கிற இடம் இது. அதனால்தான் ராஜாராமனைப் பார்த்ததும் சிரிக்காமல் போகிறாள். முன்பு கண்ணாடி கீழே விழுந்தபோது பயத்தில் அவள் சிரிக்காமல் போனதற்கும் இதற்கும் இடையிலான வித்தியாசம்தான் கதை. உடல்ரீதியாக ஏற்கனவே மலர்ந்திருந்தாலும் இந்த இடைவெளியில்தான் அவள் மனதளவில் வயசுக்கு வந்திருக்கிறாள் என்பதை இக்கதை நுட்பமாக உணர்த்திச்செல்கிறது.

காமம் நேரடியாகத் தன்னை நிகழ்த்திக்கொள்ள வாய்க்காத தருணங்களில் வேறொன்றாக வெளிப்படுத்திக்கொள்கிறது. பாலம்மாளின் ‘கம்மலும்’ அழகம்மாளின் ‘சேலை மோகமும்’ அப்படிப்பட்டவைதான். இந்தக் கதையில் அது கூடுதல்  நுணுக்கத்துடன் பேசப்படுகிறது.‌ அவள் தன்னையறியாமல் பிள்ளைப் பருவத்து ‘அம்மா அப்பா’ விளையாட்டு மாதிரியான பாவனையில் ராஜாராமனிடம் சிக்கிக்கொள்கிறாள். அவன் துணிகளை மடித்துப் போடுவது, தூங்கும் போது ‘ராசா’ என்று அவன் அம்மா சாயலில் பேசுவது, இரகசியக் குரலில் அவனோடு உரையாடுவது, விலகி நின்று இரசிப்பது என்று நீளும் பல்வேறு பாவனைகளை அவள் வழியாக வெளிப்படுத்தும் காமம், தன் முழு சுயரூபத்தை வெளிக்காட்டாமல் அவளுக்குள்ளேயே திரைச்சீலைக்குப் பக்கத்தில் அசையும் சிறு நெருப்பின் நாவெனப் பதுங்கியிருக்கிறது. கதையின் முதல் காட்சியிலேயே கண்ணாடி வழியாகத் தெரியும் அவன் பிம்பத்தை பாப்பம்மாள் இரசிக்கிறாள். ‘அந்தக் கண்ணாடி ஒரு பொய்க்கால் குதிரை. அதன் பின்னால் அதைத் தாங்கிக்கொண்டிருக்கும் இரும்பு வளையம் காற்றடித்தாலும் டப்பென்று படுத்துவிடும்’ என்கிற அழகிரிசாமியின் சித்தரிப்பு காமத்தின் வலிமை தெரியாமல் அவள் உருவாக்கிக்கொண்டிருக்கிற உறவின் பாவனையை குறியீட்டு ரீதியாக உணர்த்துகிறது. காற்றடித்ததும் கீழே விழுந்த கண்ணாடிப் பிம்பத்தில் அவளுக்குத் தெரிவது ‘மனைவி மீதான ராஜாராமனின் காமம்’. அதன் வழியாகவே அவள் தனக்குள் மலருகிறாள். அந்த மலர்ச்சியை அழகிரிசாமி சித்தரித்திருக்கும் விதமே அவரை மகத்தான சிறுகதையாளராக அடையாளம் காட்டுகிறது.

மனிதனெனும் பாவப்பட்ட விலங்கு:

பல்வேறு விதமான இலட்சியவாதங்களும் அறைகூவல்களும் இருபதாம் நூற்றாண்டு மனிதனைக் குறிவைத்து ‘மனிதன்! இந்தச் சொல்தான் எத்துணை மகத்துவத்தோடு ஒலிக்கிறது’ என்று பிரகடனம் செய்த காலகட்டத்தில் யதார்த்தமான பார்வையோடு மனிதனின் சகல உணர்வுகளையும் அணுகியவர் அழகிரிசாமி. அதே நேரத்தில் தன்னைப் படைத்த சக்திகளால் கைவிடப்பட்ட விநோதனாக மனிதனை ‘அந்நியமாதல்’ கோணத்தில் அணுகுகிற நவீனத்துவப் பார்வைகொண்ட படைப்பாளியாகவும் அவரைச் சுருக்கிவிட முடியாது. அவருக்குள் பெருக்கெடுக்கும் கருணை ஒரு துளி காமம்கூட வாய்க்கப்பெறாமல் கைவிடப்பட்ட மனிதனைப் பரிவுடன் அணுகுகிறது. மனிதன் தானே வலிந்து உருவாக்கிக்கொண்ட சுமைகளின் நடுவே அடிப்படை உணர்வுக்கான தீர்வுகூட சரிவரக் கிடைக்காமல் அல்லாடுவது அவருக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மிகப்பெரிய விஷயங்களைக்கூட படு அலட்சியமாக சித்தரித்துவிட்டு நகரும் படைப்பாளியான அழகிரிசாமி, ஒரு நிமிடம் நின்று கலங்கும் இடம் இது மட்டும்தான். அவருடைய பல கதைகளில் இந்தத் தவிப்பு நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுகிறது. ‘மூவரும் செய்யாது மூவராலும் உண்டான தீவினை அந்த மூவரை மாத்திரம் நெஞ்சைப் பிசைந்துகொண்டிருந்தது’ என்று ‘அழகம்மாள்’ கதையில் கூறுகிறார். காமத்தால் இயக்கப்படும் மனிதர்களின் மீதான பரிவின் வெளிப்பாடே இந்தச் சொற்கள்.

அவர் காமம் சார்ந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட மனிதர்களை மட்டும் பொறுப்பாக்குவதில்லை. ஒட்டுமொத்த உலகத்தையுமே பொறுப்பாக்கிவிடுகிறார். அவருடைய பார்வையில் காமத்தால் வழுக்கிவிழும் எவருமே குற்றவாளிகள் அல்ல. சோழியின் கருணையின்மையால் பாம்பின் வாய்க்குள் சிக்கிக்கொண்ட வெட்டுக்காயாகவே அவர்களைக் கருதி கொஞ்சம் ஏணியை நகர்த்தி வைக்கிறார்.

‘இரு சகோதரர்கள்’ கதையில் தன் மனைவியையே பெண்டாள நினைத்த தம்பியிடம், ‘சுப்பு இது உலகப் பிரச்சினை. உலகமே திரண்டுதான் இதைத் தீர்க்க வேண்டும். நீயும் நானும் இரண்டு தனி மனிதர்கள். நாம் இந்தப் பிரச்சினையை தீர்க்க முயல்வது முட்டாள்தனம்’ என்று அண்ணன் கூறுவது கருணையின் பாற்பட்ட ஏணி நகர்த்தல்தான். ஆனால் இதை அப்படியே வளர்த்துச் செல்லவும் அவர் அனுமதிப்பதில்லை. முதலில் இதை அற்பமான காரியம் என்று கருதும் அண்ணன், தம்பியை மீண்டும் இங்கு தங்க அனுமதிக்க முடியுமா என்று யோசித்தவுடன் அந்த அற்பமான தவறு பெருகி வளர்வதாகச் சித்தரித்திருக்கிறார்.‌ ஆணின் காமம் காமத்தோடு மட்டுமே நின்றுவிடாமல் மாபெரும் தன்னகங்காரமாக இந்தச் சமூகத்தால் உருமாற்றப்பட்டிருப்பதை அவர் நுட்பமாகத் திரை விலக்கிக்காட்டுகிறார். ‘தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களுக்கு பொருளும் தெரியாமல் காரணமும் தெரியாமல் அதைப் பற்றிய கவலையும் படாமல் உட்கார்ந்திருப்பவளைப் போல் அவள் இருந்தாள்’ என்று சாரதாவைச் சித்தரிக்கும் இடமும் அபாரமான ஒன்று.

சாதாரணமாக விலங்குகளுக்கு வாய்க்கும் காமம்கூட வாய்க்கப் பெறாமல் மனிதன் ஞானம், தேவலோகம், கடவுள் என்று கதையளப்பது அவருக்குள் ஆழமான கோபத்தை உருவாக்கியிருக்கிறது. ‘இங்கே ஆண் நாய் வெரட்டுது. பொட்டை நாய் கிராக்கி பண்ணுது. அங்கே பொட்டைகள் ஏங்கிச் சாகுது. நாய் பண்ற கிராக்கியைக்கூட மனுஷப் பிறவி பண்ண முடியல’ என்று ‘தேவ ஜீவனம்’ கதையில் குறிப்பிடுகிறார்.

பொருளாதார நிர்பந்தங்களின் முன்னால் மனிதன் அடிபணிந்து கிடப்பதையும் அதன் பகாசுர நடைக்குக் கீழே காமம் சிறு எறும்பென நசுங்கிக் கிடப்பதையும் அவர் கருணையோடு எதிர்கொள்கிறார். அவர் படைப்புகளின் ஆதார சுருதியே இங்கிருந்துதான் கிளம்புகிறது. பாலியல் மீறலைப் பற்றிப் பேசும் போது ‘பிணங்களுக்குள் வரன்முறை கெடுவது அவ்வளவு பயங்கரமான விஷயம் இல்லை. பிணமாக இருப்பதுதான்டா பயங்கரம்’ என்று அண்ணனைப் பேச வைத்திருக்கிறார். ‘நம் தியாகங்களுக்கும் தவறுகளுக்கும் சந்தோஷங்களுக்கும் அர்த்தமே கிடையாது. அர்த்தமுள்ளதாக நம்மிடம் இருப்பது நம் தரித்திரம் மட்டும்தான்’ என்று பேசுகிற இடத்தில் இந்தக் கோபம் எல்லை மீறி கசந்த சிரிப்பாக இந்த உலகத்தைப் பார்த்து கைகொட்டி நகைக்கிறது.

சாக்கடையில் தெரிகிற நிலவைக் கண்டு புலம்பிப் பாடும் பைத்தியக்காரனின் பாவனையிலேயே அவருடைய பெரும்பாலான கதைகள் அமைந்திருக்கின்றன. ‘அது நிலவல்ல’ என்று நன்கு  உணர்ந்தவனின் பாடல்களே அவை. காமத்தைப் பாவமாகவோ மனிதப் பிறவியின் ஒரே அர்த்தமாகவோ அவர் கருதவில்லை. ஒருவகையில் சித்தர்களுக்கு நேர் எதிர்நிலையில் நின்று சிந்தித்தவர் அவர். மனிதப் பிறவி அடைய வேண்டிய உயர் இலட்சியங்களுக்கு நடுவே காமம் குறுக்கே படுத்திருக்கும் நந்தியாக சித்தர்களுக்குத் தோற்றமளித்திருக்கிறது. அழகிரிசாமி அந்த உயர் இலட்சியங்களை அறிந்தவர்தான் எனினும், ‘அத பெறவு பார்த்துக்கலாம்.. மனுஷப் பிறவிக்கு இதுகூட ஒழுங்கா வாய்க்க மாட்டேங்குதப்பா’ என்பதுதான் அவருடைய முதன்மைக் கவலையாக இருக்கிறது. ‘இண்டர்வியூவிக்குப் போகும் மகனுக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா என்கிற கவலையை எல்லாம் போய்வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் தட்டில் இருக்கும்  நாலு இட்லியவாவது அவன் பதறாமல் உக்காந்து சாப்பிடட்டும்’ என்று ஆதங்கப்படும் தாயின் இடத்தில்தான் அவர் தன்னைப் பொருத்திக்கொள்கிறார்.

மனிதர்களின் படுக்கையறைகளுக்குள் எட்டிப் பார்ப்பவரல்ல அவர். படுக்கையறைகளிலிருந்து கசிந்து காதுக்கு வரும் வன்முறைகளை, கண்ணீர்க் காட்சிகளை, இயலாமையை, ஏக்கப் பெருமூச்சை, வக்கிரங்களை, நுட்பமான பழிவாங்கலை, தீரா வடுவை கேட்டுக் கேட்டுக் கசந்துபோய் திண்ணையில் உட்கார்ந்து புலம்பும் முதியவரின் கனிந்த சொற்களே அவர் கதைகளாகி விடுகின்றன. மன்மதனை எரித்த சாம்பலை உடலில் பூசிக்கொண்டு வந்தாலும் சக்தியிடம் தோற்றுப்போய் மருகும் சிவனுக்காகவும் உலகத்திற்குத் தெரியாமல் சடைக்குள் கண்ணீராகப் பொங்கி வழியும் கங்கா தேவிக்காகவும் பாதியாய் இருப்பதற்காக ஊரறியப் பெருமைப்பட்டாலும் உள்ளுக்குள் சுமை தாளாமல் தவிக்கும் சக்திக்காகவும் பரிந்தெழும் சுடுகாட்டு ராகங்களே அவர் கதைகளின் காமம் சார்ந்த சித்தரிப்புகளாக நம்மை மிரட்டுகின்றன. அழகம்மாளும் பாலம்மாளும் பாப்பம்மாளும் யாரோதான் என்றாலும் அழகரிசாமியின் சொற்களில் அவர்களை உணர்ந்த பிறகு அவர்கள் யாரோ அல்ல. நம் காமத்தை உற்றுப் பார்க்க அவர் ஒரு கண்ணாடியைத் தருகிறார். அதில் தெரியும் விசித்திரமான பிம்பங்களின் பின்னணியில் ஒலிக்கும் குரல் அவருடையதோ நம்முடையதோ அல்ல. சூன்யத்திலிருந்து கிளைத்த முதல் ஆண், பெண்ணின் புலம்பல். ஆதிப்புலம்பல்களே அவர் கைபட்டதும் ராகங்களாகி நம் காலங்களைக் கடந்து அகத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

-தொடரும்.

*

முந்தைய பதிவுகள்:

1.கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் பகுதி 1

2. கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் பகுதி 2