பரிசுத்தத்தின் நொய்மை – ஐசக் பாஷவிஸ் சிங்கரின் புனைவுலகம்

0 comment

முதலாம் உலகப்போர் முடிவுற்ற போது ஐசக் பாஷவிஸ் சிங்கருக்கு பதினான்கு வயது. தான் சாகும்வரை சிங்கர் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது சுயசரிதையான ‘Love and Exile’ நூலிலும் இதைப் பற்றின குறிப்பு வருகிறது. பதினாறு வயது பூர்த்தியடைந்துவிட்டால் இராணுவ சேவையில் பங்களிப்பாற்ற வேண்டும் எனும் விதிமுறைக்கு பயந்துகொண்டு சிங்கர் பொய் சொல்லியிருக்கிறார் என்பதை பல பத்தாண்டுகள் கழித்தே ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினார்கள். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதை அறிந்ததும் சிங்கர் தனது கல்லறையில் புரண்டு படுத்திருப்பாரா என்பது தெரியாது. ஆனால், கண்ணாமூச்சி ஆட்டத்தின் போது ஒளிந்திருந்து எட்டிப்பார்க்கும் சிறுவனது கள்ளத்தனமான குறுகுறுப்பை அடைந்திருப்பார். இந்தச் செய்தியை அறிந்தபோது எனக்கு அதிர்ச்சியோ ஏமாற்றமோ சிங்கரின் மீதான பெருமதிப்பில் இறக்கமோ ஏற்படவில்லை. சிரிப்புதான் வந்தது. அந்தக் குசும்புக்கார கிழவனை- அவருள் ஓடியாடித் திரியும் குதூகலச் சிறுவனை நான் நன்றாகவே அறிவேன்.

பெரிய மனிதர்கள் தம்மை முழுவதும் திறந்து காட்டுவதற்காக தங்களது கடைசிக் காலத்தில் எழுதும் சுயசரிதத்தில், பொதுவாகவே பாவ மன்னிப்பு கோரும் தொனியில் இயற்றப்படும் புத்தகத்தில், பொய்யுரைக்கிற மனிதன் எப்பேர்ப்பட்ட குணவாளனாக இருப்பான்? நிச்சயமாக எழுத்தாளனாகத்தான். வயோதிகம் கூடுந்தோறும் ஆதிமனிதனின் தோற்றத்தைப் பெறுபவர்கள் ஒருவகை எனில் மனம் விரிந்த நிலையில் குழைந்தும் நெகிழ்ந்தும் பொக்கை வாய்ச் சிரிப்புடன் வலம் வருபவர்கள் இரண்டாம் வகையினர். இந்த இரண்டாம் வகை ஆட்களுடனேயே குழந்தைகள் இணக்கமாகிறார்கள். அவர்களது குழிவிழுந்த கன்னத்தில் தங்களது பூக்கைகளால் மெத்மெத்தென அறைந்து அறைந்து உவகையடைகிறார்கள். அப்போது இருவர் காணும் ஒரே உலகம் சங்கமிக்கிறது. தன்னுடைய களங்கமின்மையை இவ்வுலகம் பேணிக்கொள்கிறது.

போலந்து நாட்டில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தவர் சிங்கர். அந்தக் காலகட்டத்தில் நிலவிவந்த யூத வெறுப்பு குறித்து ஓரளவுக்கேனும் நமக்குப் பரிச்சயம் உண்டு. உயிர்த்திருக்க மட்டுமே விதிக்கப்பட்ட வாழ்வில் அவ்வப்போது கிட்டுகிற பரவசமும் எப்போதும் தொடர்கிற வேதனையும் அதனதன் உச்சகட்டங்களிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கும். தம்முடைய விருப்பக் கற்பனைகளை நிறைவேற்றிக்கொள்கிற சந்தர்ப்பங்களுக்காகவும் தனிமைச் சுதந்திரத்திற்காகவும் மனம் இடைவிடாது ஏக்கம்கொள்ளத் தொடங்கும். உள்ளுணர்வில் படர்ந்தும் செறிந்தும் பெருகுகிற துயரை நீக்கப் படாதபாடு படவேண்டியிருக்கும். அந்தச் சூழ்நிலையில் அவரவர் இயல்புக்கேற்ப தன்னலத்தின் இன்ப ஆடல்கள் ஆவேசங்கொள்கின்றன. அவற்றைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் இயலாததாகிவிடுகின்றது. உள்ளும் புறமும் ஒரே சமயத்தில் வெடித்துக்கொண்டிருந்தால் மனத்துக்கண் மாசிலனாக எப்படி வாழ்வது? முதலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதா அல்லது தன்னிலிருந்து திரிகிற தன் ஆளுமைப் பிறழ்வை சீர்செய்வதா? எதற்கு முக்கியத்தும் அளிப்பது?

புனைவிலும் சரி, நிஜ வாழ்விலும் சரி, சிங்கரிடமிருந்து வெளிப்படுகிற கசடுகள் அனைத்தையும் இந்தப் பின்னணியிலேயே நான் புரிந்துகொள்கிறேன். பிழைத்திருத்தலுக்காக மேற்கொள்ளப்படுகிற தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட செயல்களிலும் தீவினைகளிலும் கருணையின் தொடுகை இருக்கின்றது. அதனை கொச்சைப்படுத்தலாகாது. மேலும், அவரது பொய்களிலோ, வேடங்களிலோ, காமாந்தக களியாட்டங்களிலோ, சுயநல ஏற்பாட்டிலோ அவற்றை குற்றமெனக் கருதுவதற்குண்டான மன விகாரங்கள் ஏதுமில்லை. அருவியைத் தாங்குகிற ஆற்றுமடி போல, உணர்வெழுச்சியுடன் பாய்கிற நீர்மணிகள் ஒவ்வொன்றையும் ஆழ்ந்த சமநிலையுடனும் நிறைவுடனும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்தார். தன் உயிரைப் பாதுகாக்கும் சழக்குகளுடன் ஓயாது போராடிக்கொண்டிருந்தார். அவர் தன்னுடைய உண்மை முகத்தின் முரண்பாடுகளைப் பிளந்தும் சிதறடித்தும் புனைவில் ஒருங்கே குவித்தபோது நம்மால் அமைதியின் ஓசையைக் கேட்க முடிந்தது. இருளுக்குள் துழாவித் துழாவி பிரபஞ்சத்தின் முடிவிலாத் தன்மையைக் கண்டறிந்தபோது நம்முள் எண்ணற்ற நட்சத்திரங்கள் ஒளிகொண்டன. 

ஓர் எழுத்தாளனுக்குத் தேவைப்படக்கூடிய ஆசியும் சாபமுமாக அந்த அக இருள் அவருக்குள் நிரம்பியிருந்தது. ஆனால், அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், நெஞ்சில் சொடுக்கும் சாட்டை வீச்சுகளுக்கு இடையேயும் குழந்தைத்தனமான (அல்லது விஷமத்தனமான) வியப்புணர்ச்சியைப் பற்றிக்கொண்டிருந்தார் என்பதே அவரது வாழ்வு உலர்ந்துபோகாமல் அத்தனையாண்டு காலம் நீடித்ததற்கான காரணம். வியப்புணர்ச்சியை இழக்காத வரை இந்த வாழ்வு வீணாகிப் போகாது அல்லவா? பெருவெடிப்புக் கோட்பாட்டை அறிந்துகொள்வதன் மூலமாக நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் எத்தனை எத்தனை தொன்மக் கதைகள் காலாவதியாகி விடுகின்றன என்று கவலைப்பட்டவர் அவர். அறிபுனைவுக் கதைகள் திறக்கின்ற கனவின் ஊற்றை நிலவில் காலடியெடுத்து வைக்கும் மனிதனின் ஒற்றைப் புகைப்படம் கொஞ்சம் சிதைத்துவிடுகிறது என்பதுதானே நிதர்சனம்? நமக்கு எது தேவை? நம்மைக் கிளர்த்துகிற கற்பனைத் திறம்கொண்ட கதைகளா அல்லது தகவல் திரட்டா? நாம் எதைப் பெற்று எதை இழக்கிறோம் எனத் தீர்மானிப்பதில் மனிதனின் வியப்பிற்கு முக்கியப் பங்கிருக்கிறது என்றே கருதுகிறேன்.

சிங்கரின் கதைகளில் பயின்றுவரும் ஆச்சரியங்களைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, அவரது அந்தரங்க வாழ்வை முன்வைத்துப் பார்த்தோமேயானால், வேறொரு குதர்க்கமான வகையிலும் அன்னாரது வியப்பம்சத்தை அணுக முடியும். ஹிட்லரின் யூத வெறுப்பிற்கு அஞ்சி போலந்திலிருந்து அமெரிக்காவிற்குத் தப்பிச்செல்லும் முன் சிங்கருக்கு திருமணமாகிவிட்டது. ஒரு மகனும் பிறந்திருந்தான். ஆனால், மனைவியையும் மகனையும்  நிர்க்கதியாகத் தவிக்க விட்டுவிட்டு அவர் மட்டும் அமெரிக்கா செல்ல வேண்டிய அவலச்சூழல். அங்கு சென்ற பிறகு, போர்க் களேபரங்களுக்கு நடுவே, அவரால் தனது குடும்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து ஒரு ஜெர்மன் அகதியைத் திருமணம் செய்துகொள்கிறார். முன்னாள் மனைவியையும் மகனையும் கிட்டத்தட்ட மறந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இருபது வருடங்களுக்குப் பிறகு அவரது மகன்தான் சிங்கரைத் தேடி வருகிறான். பெரும் இன்னல்களைக் கடந்து அவர்கள் இருவரும் மாஸ்கோவிற்குத் தப்பிச்சென்ற கதையை அவரிடம் கூறுகிறான். தனது மகனைக் கண்டதிலோ தனது முன்னாள் மனைவி உயிர்பிழைத்துவிட்டதை அறிந்துகொண்டதிலோ சிங்கருக்கு ஆசுவாசமோ மகிழ்ச்சியோ உண்டாவதில்லை. வியப்புணர்ச்சியே மேலிடுகிறது- இவர்கள் எப்படி இன்னமும் உயிருடன் இருக்கிறார்களென!

தனது உண்மையான வயதை மறைத்தவர்தான், தனது குணக்கேடுகளை ஒளிவுமறைவின்றி பகிரங்கப்படுத்துகிறார் என்பதை கவனிக்க வேண்டும். எளிதில் தீர்ப்பெழுதிவிட முடியாத இத்தகைய பண்புகளின் ஒருங்கமைவே சிங்கரின் ஆளுமை. யூதச் சடங்குகளில் உள்ளார்ந்த பிடிப்பும் தெய்வ நம்பிக்கையும் கொண்ட பிற்போக்குவாதியாகவே வாழ்நாளெல்லாம் அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். ஆனால், யூத மரபு போதிக்கின்ற ஒழுக்கநெறிகளை முற்றாக மறுதலித்தார். உலகியல் இன்பங்களிலும் காதல் பூசல்களிலும் இடையறாது தோய்ந்து உணர்ச்சிப்பெருக்கின் அலைக்கழிப்பிலேயே வாழ்ந்து மறைந்தார். இப்போது யோசித்துப் பார்க்கையில், எல்லா நல்ல எழுத்தாளர்களையும் போலவே, தனது எழுத்துக்கான கச்சாப் பொருட்களுக்காகவே யூத மதத்தின் அமானுஷ்ய சடங்குகள் மீதும் நாட்டுப்புறக் கதைகள் மீதும் அவர் அளப்பரிய நாட்டம் கொண்டிருந்தார் என்பதை உணர முடிகிறது. இது ஏதோ இடையில் புகுந்த விஷயமல்ல. கதைகளின் மீதான ஈர்ப்பு என்பது சிங்கரின் பிள்ளைப் பிராயத்திலேயே தொடங்கிவிட்டது. அவரது குடும்பத்தில் ஏகப்பட்ட ராபிக்கள் (யூத மதகுருமார்கள்) இருந்தனர். அவர்களிடம் தங்களது துக்கங்களைப் பகிர்ந்து ஆறுதல் பெறுவதற்காக சிங்கரின் வீட்டில் எப்போதும் ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருந்தது. விவரமறியாத சிறுவயதிலிருந்தே அவர்களது செழுமையான அனுபவங்ளையும் அவர்தம் புகைமூட்டமான பழக்கவழக்கங்களையும் கேட்டுக் கேட்டு வளர்ந்தவர் அவர். அந்தச் சிறுவனின் கற்பனைப் புலத்தில் அவை ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கம் பிரம்மாண்டமானது. பல நுண்ணிய தளங்களில் பாதிப்புகளை விளைவிக்கக்கூடியது.

கதைகளைப் புசிப்பவனுக்கு என்றைக்கும் பசியாறுவதே இல்லை. எனவே, பல்வேறு நாடக பாவனைகளுள் ஒன்றாகவே அவரது மதப்பற்றும் ஊசலாடியிருக்க வேண்டும். மதச்சம்பிரதாயங்களை மூர்க்கத்துடன் கடைபிடிக்கும் கட்டுப்பெட்டித்தனமான யூத சமூகத்தாரிடேயே வாழ நேர்ந்தவருக்கு அதிலிருந்து வெளியேறுவதற்குண்டான வேறு மார்க்கம் தென்பட்டிருக்காது. இதனை மேலும் சிக்கலாக்குவதற்குப் பதிலாக, எத்தனையோ முகமூடிகளுள் ஊராருடன் ஒத்து வாழ்கிற வேடத்தையும் புனைந்துகொண்டு அனுசரித்துப் போவதென்பது நடைமுறை யதார்த்தமாகவே இருந்திருக்கும். இவற்றையெல்லாம் அவரது புனைவின் வழியாகவும் அவர் அளித்த பேட்டிகள் வழியாகவும் ஊகித்து அறிய முடிகிறது. அதற்கான இரகசியக் குறிப்புகளையும் தடயங்களையும் ஆங்காங்கே விட்டுச்செல்வதற்கு அவர் தவறவில்லை என்பதனால் இதனைத் தீர்மானமாகவே முன்வைக்கலாம். எடுத்துக்காட்டாக, தனது எழுபத்து ஐந்தாவது வயதில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றபோது சிங்கர் இவ்வாறு கூறினார்- ‘இவ்வுலகில் சாத்தியப்படக்கூடிய எல்லா இன்பங்களையும் அனுபவித்து மகிழுங்கள். அவற்றில் ஈடுபட்டவாறே கடவுளுக்கு சேவை செய்யுங்கள்’.

அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து ஆங்கிலம் கற்றுக்கொண்ட பிறகும் தன் தாய்மொழியான இட்டிஷிலேயே சிங்கர் இறுதிவரை எழுதினார். (ஷோஷா நாவலின் முதல் வரியே இட்டிஷை ‘செத்த மொழியாக’ குறிப்பிடுவதில்தான் தொடங்குகிறது). ‘இட்டிஷ் மக்களுக்கென்று ஒரு நாடு இல்லை, மாகாணம் இல்லை, தெருகூட இல்லை என்று சொல்கிறார்கள். அதற்கொரு வீடாவது இருக்க வேண்டாமா?’ என்று மனம் புழுங்கும் சிங்கர், ‘அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அதன் தனித்துவமான சொல்லாட்சிகளை என்னால் மறக்க முடியாது’ எனப் பெருமூச்செறிகிறார். அதற்கான விளக்கமாக அவர் கூறிய உதாரணத்தை நான் மிகவும் இரசித்தேன். இட்டிஷுடன் என்னை நெருக்கமாகவும் உணர்ந்தேன். ‘எங்கள் மொழியில் ‘விளக்கைப் போடு’ (turn on the light) என்கிற சொற்பிரயோகம் இல்லை. ‘ஒளியை உருவாக்கு’ (make the light) என்றே சொல்கிறோம்’.

எல்லாவற்றுக்கும் மேலாக, தாய்மொழி என்பது சிங்கரின் இளமைக்கால நினைவு. தன் புலனின்ப வேட்கைகளின் கிறக்கத்தில் கண்கள் சொருகி மிதந்துகொண்டிருந்த காலம். பசுமைப் பரப்பில் பதிந்த வெப்பத்தடம். அந்தச் சமயத்தில் தாய்மண்ணை விட்டு நீங்கி அந்நிய நாட்டில் தஞ்சமடைவதென்பது அந்தரக் காற்றில் நெளிந்தாடும் பிடிமானமற்ற வேர் போன்ற தளர்வை உண்டாக்கியிருக்கும். சகல திசைகளிலும் நெருக்கடிகள் சுழற்றியடிக்கும்போது கனத்த நெஞ்சத்தில் கையறுநிலை துளையிட்டிருக்கும். அதை மீறிச்செல்வதற்காகத்தான் அவர் மீண்டும் மீண்டும் தன் இளமைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரையில் இளமைக்குத் திரும்புதல் என்பது பரிசுத்தத்திற்குத் திரும்புதலும்கூட. மூதாதையரின் அரவணைப்பில் இளைப்பாறுகையில் விம்முகிற தழுதழுப்பு. மல்லாந்து கிடக்கையில் ஏற்படும் சுகம். கலங்கரை விளக்கம். இவர் அளவுக்கு கடந்த காலத்தை மட்டுமே எழுதிய இன்னொரு சிறந்த எழுத்தாளர் உலகப் பரப்பிலேயே இல்லை. வருங்காலத்திற்கு முதுகு காட்டியபடியே வாழ்ந்தவர் எனச் சொல்லலாம். சிலருக்கு எப்போதோ ஒரு கணத்தில், ஏதோவொரு புள்ளியில் அவர்களது கடிகாரம் அதிர்ந்து நின்றுவிடும். ஆனால், சிங்கரோ தன்னுடைய கடிகார முள்ளை இடஞ்சுழியில் திருப்பிவிட்டபடி எந்நேரமும் முடுக்கிக்கொண்டிருந்தார்.

சிங்கரின் படைப்புகளுக்குள் காலடி எடுத்து வைக்கும் முன் அவர் வாழ்வை எட்டிப்பார்க்க வேண்டிய அவசியம் எதனால் ஏற்படுகிறது எனில் அவரது பிரதான ஆண் கதாபாத்திரங்கள் அனைவருமே சிங்கரது தனிப்பட்ட வாழ்வின் நீட்சியாகவே உயிர்கொள்கிறார்கள் என்பதனால்தான். ஷோஷாவின் ஆரோனிலும், Enemies, a love story-இன் ஹெர்மனிலும் The Magician of Lublin-இன் யாஷா மசூரிலும் சிங்கரின் வலுவான தடங்கள் உண்டு. தன்னைச் சுற்றிலும்- நான்குபுறங்களிலும்- கண்ணாடிகளைச் சுமந்துகொண்டு தன் புனைவுலகில் நடமாடுபவராகவே நான் சிங்கரை கற்பனை செய்கிறேன். சில பிம்பங்கள் அவரது மறுவார்ப்பாக பிரதிபலிக்கின்றன. சில பிம்பங்கள் அவரது தலைகீழ் மறுதலிப்பாக வாழ்வை விசாரணை செய்கின்றன. அந்தப் பிரமையின் முடிவற்ற அடுக்குகளில் மாயையும் அற்புதமும் உண்மையும் பன்மடங்காகப் பெருகிப் பெருகி ஒரு maze-இன் புதிர்வழிகள் போன்று அதன் நிகழ்தகவுகள் உருமாறியவாறே படைப்பூக்கம் கொள்கின்றன. இன்னும் விவரித்துச் சொல்லவேண்டுமெனில், சிங்கரின் கதைக்களங்களை ஒரு சதுரங்க ஆட்டத்தின் காய் நகர்த்தல்களுடன் ஒப்பிடலாம். தனக்காக விளையாடுவதோடு மட்டுமின்றி தன்னை எதிர்த்தும் அவரே ஆட வேண்டும். அவரிடம் இருப்பதோ வெறும் முப்பத்தியிரண்டு காய்கள். அதன் செல்திசைகளும் ஆடுகளத்தின் எல்லையும் முன்னரே வகுக்கப்பட்டவை. ஆட்டத்தின் விதிகளை மாற்றவோ தளர்த்தவோ முடியாது. ஆனால் வெவ்வேறு விதமான நகர்த்தல்களை மேற்கொள்வதன் மூலம் அதன் சாத்தியக்கூறுகளை அதிகரித்தபடியே செல்லலாம். திரும்பத் திரும்ப ஒன்றையே செய்தாலும் புதிய புதிய விளைவுகளை உண்டாக்கலாம். சிங்கர் செய்தது அதைத்தான். அதனால்தான் யூத வரலாறை எழுதும் போதும் தன்வரலாறைப் புனையும் போதும் தன் இன மக்களின் வாழ்வையே மீள மீளச் சித்தரிக்கும்போதும் அவரது உற்பத்தித் திறனில் அசைவுகொள்ளும் கதையுலகில் சற்றும் சுணக்கமில்லை. சலிப்பு இல்லை. கற்பனை மங்கிய தேக்கம் இல்லை.

ஹிட்லரின் அட்டூழியங்கள் குறித்தோ நாஜி வெறி குறித்தோ அழுத்தமான விமர்சனங்களை சிங்கர் முன்வைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். அது உண்மையல்ல. உலகளாவிய மானுடப் பொதுத்தன்மையை நெருங்கி ஆதுரங்கொள்ளும் விழைவே அவரது கதைகளின் முதன்மை நோக்கமாக ஆட்கொண்டிருந்தது. இன்று உருவாகி நாளை அழியும் கொள்கைகளும் கோட்பாடுகளும் அல்ல. அவர் வெறுமனே ‘யூதர்களைப்’ பற்றி எழுதவில்லை. அவரது கதை மாந்தர்களும் அவருக்கு அணுக்கமாக இருந்த மனிதர்களும் யூதர்களாக இருந்தார்கள். இரண்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளதல்லவா? அவரது படைப்புகளில் அடையாளங்களைத் துறந்து விண்ணெய்திய உன்னதங்களைச் சுட்டிக்காட்ட முடியும். அதில்தான் அவரது மேதைமை அடங்கியிருக்கிறது. மேற்கூறிய விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும் சில கதைகளை சிங்கர் எழுதியுள்ளார். ‘Pigeons’ அவற்றுள் ஒன்று. ஓய்வுபெற்ற யூதப் பேராசிரியரைப் பற்றிய சிறுகதை. தினந்தோறும் சதுக்கத்திற்குச் சென்று புறாக்களுக்கு உணவளிப்பது அவரது வழக்கம். ஒருநாள் அவர்மீது திடீரென கல்லெறியப்படுகிறது. அவரது பணியாள் வந்து காப்பாற்றுவதற்குள் அவரது மண்டை பிளந்து ஆடையெல்லாம் இரத்தம். அப்போது அந்தப் பேராசிரியர் சொல்கிறார்- “நாம்” ஏன் இவ்வளவு கீழ்மையானவர்களாக உருமாறிவிட்டோம்? ஒரு கதாபாத்திரம் சாகும் தறுவாயிலும் ‘அடுத்தவர்’ என்கிற வேற்றுமையை சிங்கர் விதைப்பதில்லை. இதில் இல்லாத மேன்மையா? பேராசிரியரின் இறுதி ஊர்வலத்தின் போது நூற்றுக்கணக்கான புறாக்கள் படையெடுத்து வருகின்றன. கல்லறைத் தோட்டமெங்கும் கேவல் ஒலியெழுகிறது. அப்போது ஒருவிதமான முன்னறிவிப்பு போல அந்த நகரில் அடர்ந்த இருள் கவிகிறது. அதே சமயத்தில் பேராசிரியரின் வீட்டுச் சுவரில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைகிறார்கள். எவ்வளவு அடக்கமாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டார்?

சிங்கரிடம் தல்ஸ்தோயின் பாதிப்பு உள்ளது. அவர் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை எனினும் இருவருக்கும் இடையேயான பொதுக்கூறுகளைப் பட்டியலிட முடியும். அதுகுறித்து தனிக்கட்டுரை எழுதும் அளவுக்கு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவ்விருவருமே தங்களது அந்திமக் காலத்தில் குழந்தைகளுக்கான நீதிக்கதைகளை எழுதினார்கள். அதையே தங்களது மெய்மை நோக்கிய தேடலாகவும் புனைவின் உச்சமாகவும் கருதி செயல்பட்டார்கள். எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. தல்ஸ்தோய்க்கு அடுத்தபடியாக, சிங்கர் எழுதிய குடும்ப வரலாற்றுக் கதைகளில் தாமஸ் மன்னின் ‘Buddenbrooks’ நாவலின் தாக்கத்தைக் காண முடிகிறது. மற்றதெல்லாம் அவரது அனுபவத்தில் இருந்தும் அவரறிந்த தொன்மங்களிலிருந்தும் பிறந்தவை.

சிங்கரை ‘ஷோஷா’விலிருந்து வாசிப்பது நல்ல தொடக்கமாக இருக்கும். அவரது படைப்புலகின் சாராம்சம் மிகத் துலக்கமாக வெளிப்படும் நாவல் இது. இந்நாவல் வெளியான அதே வருடத்தில் சிங்கருக்கு நோபல் பரிசு கிடைத்துவிட்டது. அதனால் கூடுதல் விசேஷம் கொண்டது. தமிழில் வெளியாகும் சிங்கரது முதல் நாவலும் இதுவே. ஒரு விஷயத்தில் எவ்வளவு பொருத்தங்கள்? இதனை மிக அழகான தெள்ளு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் கோ.கமலக்கண்ணன். ஆங்கில மொழியாக்கத்திற்கு மாற்று குறையாத சொற்தேர்வுகள் உவகை அளித்தன. செம்மையான பணி. ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அதைச் சிறப்புறச் செய்து முடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் உழைப்பும் இன்றியமையாதது. இவையிரண்டும் கமலக்கண்ணனிடம் மிகுதியாகவே உள்ளன. 

*

ஷோஷா நாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை. தமிழினி வெளியீடு.