மார்கு வீதி கொலைகள் – எட்கர் ஆலன் போ

0 comment

பகுப்பாய்விற்கு உகந்த உளவியல் கருவிகள் என்று அறியப்படுபன அனைத்தும் சற்று பகுப்பாய்விற்கு உட்படுத்த வேண்டியவையே. விளைவுகளை வைத்தே அவற்றை நாம் புரிந்துகொள்கிறோம். பகுப்பாய்வாளர்கள் அர்ப்பணிப்புடன் அப்பணியால் ஆட்கொள்ளப்படுகையில் பெருமகிழ்வில் இருப்பதாக உணர்கின்றனர். உடல்வலிமை மிக்கோர் கடும் உடற்பயிற்சிகளைச் செய்துகாட்டி தசையாற்றலின் வல்லமையைப் பிரகடனப்படுத்திக்கொள்வதைப் போல சிக்கல்களை அவிழ்க்கும் தார்மீகச் செயல்பாட்டைச் செய்து காண்பிப்பதில் பகுப்பாய்வாளர்கள் அளவற்ற பெருமிதமடைகிறார்கள். அற்பமான செய்திகளைக்கூட கவனித்து தனது ஆய்விற்குப் பயன்படுத்திக்கொள்வதன் வழியாக அவர் பேருவகை கொள்கிறார். இயற்கைக்கு மீறியவை என்று கருதப்படும் புதிர்கள், விடுகதைகள், பழங்கால எழுத்துகள் போன்றவற்றை ஆராய்ந்து, தன் கூரிய மதியால் தீர்வுகள் காண்பது அவர்களுக்கு மிகப்பிடித்தமாது. ஒவ்வொரு படிநிலையிலும் தன் உள்ளுணர்வின் துணையுடன் ஆன்மாவின் ஆகிருதியை வெளிப்படுத்துபவையே அவர்களது தீர்வுகள்.

தீர்வு காணும் மனத்திறன் கணிதப் பயிற்சியால் இன்னும் உறுதிபெறும். குறிப்பாக, பகுப்பாய்வுப் பயிற்சி அதற்கு ஊக்கம் தரும். ஆனால், பின்விளைவுகளையே பெரிதும் ஆய்வதால் முக்கியக் கிளையாக இருக்கும் போதிலும் பகுப்பாய்விற்குப் போதிய நன்மதிப்பு கிட்டவில்லை. கணக்கீடு செய்வதைப் பகுப்பாய்வு செய்வது என்று நேரடியாகப் பொருள்கொள்ள முடியாது. நாற்கள ஆட்டக்காரர் ஒருவர் இன்னொருவர் மீது குறிவைப்பது பார்ப்பதற்கு இலகுவானதாகத் தெரிகிறது. அதன்படி நாற்கள ஆட்டம் மனத்தில் உருவாக்கும் அலைகளை வெளிப்பார்வைக்குக் குறைவாகக் காட்டுகிறது எனலாம்.

இங்கு நான் ஒரு கட்டுரை எழுத முற்படவில்லை. மாறாக, அவதானிப்புகளைச் சீரற்ற முறையில் அடுக்கி ஒரு விசித்திரமான கூற்றிற்கு முன்னுரை எழுதுகிறேன். எனவே விரிவான அற்பத்தனமான நாற்களத்தைவிட, ஆடம்பரமற்ற ’தாவல்கள்’ விளையாட்டே உயர்நிலை அறிவைப் பிரதிபலிக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் கூறிக்கொள்கிறேன். நாற்களத்தில் காய்கள் கோணல்மாணலாக வெவ்வேறு திசைகளில் இயங்குகையில், இத்தனை மதிப்புமாறல்களுக்கான வாய்ப்புகளிடையே ஒரேயொரு விசயம்தான் சிடுக்கானது. அது, எது மிகச்சரியான வாய்ப்பு என்ற தேர்வில் நிகழும் பிழை (வழக்கமான எளிய தவறுகள் அல்ல). இதில் கவனம் விளையாட்டிற்குள் தீவிரமாக அழைத்து வரப்படுகிறது. ஒரு கணத்திற்கான அறிகுறியாகட்டும், ஒரு அசட்டையாகட்டும், பின்னடைவிலோ தோல்வியிலோ முடிந்துவிடும். நகர்விற்கான நிகழ்தகவுகள் அதிகமானவை என்பதோடு அவை கடும் சிடுக்கானவை. இதில் அசட்டைகளுக்கான வாய்ப்புகள் பெருகிவிடுகின்றன. பத்தில் ஒன்பது ஆட்டங்களில் கூரிய புத்தி கொண்டோரைவிட நிலைதடுமாறாத கவனத்திறன் கொண்டவர்களே வெல்கின்றனர்.

தாவல்களத்தில் இயக்கங்கள் பெரிதும் ஒன்றுபோலவே இருந்தும் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. இங்கு கவனப்பிசகுகளுக்கான வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன. நிலைமாறா கவனத்திறனுக்கான தேவை தளர்கிறது. இதனால் இருபுறத்திலும் புத்திக்கூர்மை கூடுதலாய்க் கொண்டவருக்குச் சாதகங்கள் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. இன்னும் தெளிவாக விளக்கலாம்- தாவல்கள ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் நான்கு ராஜாக்கள் இருக்கும் நிலையை எடுத்துக்கொள்வோம். இங்கு நிச்சயம் அசட்டை நிகழ வாய்ப்பில்லை. மாறாக (இரு ஆட்டக்காரர்களும் சமநிலையில் இருப்பதால்) ஒரு கூர்மையான நகர்வே வெற்றியைத் தீர்மானிக்கும். அந்நகர்விற்கு அறிவின் வலிய துணை இருந்தேயாக வேண்டும். வழக்கமான துப்புகளும் வழிமுறைகளும் இல்லாதபோதும் பகுப்பாய்வாளர் தன் எதிரில் இருப்பவரது ஆன்மாவிற்குள் நின்று, தான் அவராகி, அடிக்கடி நுட்பமாய்ப் பார்த்தவண்ணம் இருந்தாக வேண்டும். ஒரு கணப்பார்வையிலேயே எதிராளியைப் பிழைகளையும் தவறான கணக்கீடுகளையும் நோக்கித் தள்ளிவிட முடியும். சில சமயங்களில் வெகு அபத்தமான சிறிய பிழைகளை நோக்கிக்கூட!

நெடுங்காலமாக ‘விஸ்ட்’ என்ற சீட்டாட்டம் இருந்து வருகிறது. ஆளுமைத்திறனைக் கணக்கிடும் பண்பு அதற்குண்டு. உயர்தர அறிவு கொண்டோர் அதில் தீவிர மகிழ்வைக் கொண்டாடித் திளைப்பார்கள். அவர்கள் நாற்களத்தை ஒரு அற்பமான ஆட்டம் என்று ஒதுக்கித்தள்ளுவார்கள். மனத்திறனுக்குப் பகுப்பாய்வு போலத் தீனியிடும் இன்னொன்று இல்லை என்பதில் சந்தேகமே இல்லை.

கிறித்துவ கூட்டமைப்பில் இருக்கும் மிகச்சிறந்த நாற்கள ஆட்டக்காரர் உலகின் மிகச்சிறந்த நாற்கள ஆட்டக்காரரைவிட கொஞ்சம் சிறந்து விளங்கலாம். ஆனால், விஸ்ட் ஆட்டத்தில் புலமைமிக்கவராக இருப்பதென்பது மனம் மனத்தோடு போராடும் அனைத்து வகை சந்தர்ப்பங்களையும் கடந்து வெற்றிகொள்ளும் திறன்கொண்டவர் என்று பொருள். நேர்த்தியான ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது, அதை முழுமையாகப் பயன்படுத்தி ஆட்டத்தில் பூரணத்துவத்தை ஏற்படுத்தும் திறனையே புலமை என்று இங்கு குறிப்பிடுகிறேன். இத்திறன் பன்மடங்கானவை அல்ல, மாறாக பன்படித்தானவை. இவை சாதாரண புரிதலின் விழிகளுக்குப் புலப்படாத இடுக்குகளில் கிடக்கும். கவனமாக அவதானித்தல் என்பது தனித்துவத்துவமாக நினைவில் இருத்துதல் ஆகும். ஹோயல் விதிகள் போதுமான அளவு வழிகாட்டும் வரை, புரிந்துகொள்ளத்தக்கதாக இருக்கும் வரை, கவனத்திறன் கொண்ட நாற்கள ஆட்டக்காரர் விஸ்ட்டையும் சிறப்பாகவே ஆடுவார். இப்படியாக நினைவு தக்கவைப்புத்திறன், நூலில் உள்ள விதிகளைப் பின்பற்றும் ஒழுங்கு ஆகியவை நல்ல ஆட்டத்திறமையின் பண்புகளாக பொதுவாக நிலைபெற்றுள்ளன. ஆனால் விதிகளுக்குள் அகப்படாத வெளிகளில் பகுப்பாய்வாளரின் திறன் முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் மெளனமாக ஏகப்பட்ட அவதானிப்புகளையும் அனுமானங்களையும் மேற்கொண்டவாறு இருக்கிறார். பெறப்பட்ட செய்தியின் துல்லியமும் வேறுபாடும், அனுமானங்கள் செல்லுபடியாகும் எண்ணிக்கையைவிட அவதானிப்புகளின் தரத்தைப் பொறுத்தே முன்னிற்கின்றன. இன்றியமையாத அறிவு என்பது எவற்றைக் கவனிக்க வேண்டும் என்று அறிந்திருப்பதே. ஆட்டக்காரர் தன்னைச் சுருக்கிக்கொள்வதே இல்லை. அவர் ஆட்டத்தின் வெளியே இருப்பவற்றைப் புறக்கணிப்பதையும் ஆட்டமே மையம் என்பதையும் இங்கு முக்கியமானதாக நான் தெரிவிக்கவில்லை. அவர் தன் கூட்டாளியின் வதனத்தை ஆய்வுசெய்கிறார். அதை அங்கிருக்கும் எதிராளிகளின் முகங்களுடன் ஒப்பிடுகிறார். ஒவ்வொரு கையிலும் இருக்கும் சீட்டுகளை ஊகிப்பதற்கான வழியைத் தேடுகிறார். ஒவ்வொரு துருப்புச்சீட்டாக, ஒவ்வொரு உயர்சீட்டாகக் கணிக்கிறார். சீட்டைப் பிடித்திருப்பவர்கள் ஒருவர் மற்றொருவர் மீது வீசும் பார்வைகளின் அளவைக்கொண்டு ஊகங்களை மேற்கொள்கிறார். ஆட்டம் நடந்துகொண்டிருக்கையில் ஒவ்வொரு முக அசைவையும் துல்லியமாக குறித்துக்கொள்கிறார். தீர்க்கம், வியப்பு, வெற்றி, ஏமாற்றம் போன்ற அத்தனை நிலைப்பாடுகளுக்கான விவரணைகளையும் வேறுபாடுகளையும் முகங்களின் வழியே பெற்று சேகரிக்கிறார். ஒரு தந்திர உத்தியைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு நபர் அந்தச் சீட்டை தன் சீட்டுகளுடன் தக்கவைத்துக்கொள்வாரா என்று ஊகிக்கிறார். காற்றில் எறியப்பட்டு மேசையை வந்தடையும் சீட்டின் போலித் தோரணையைப் புரிந்துகொள்ள முயல்கிறார். இயல்பாகவோ கவனக்குறைவிலோ வெளிப்படும் சொல், எதிர்பாராவிதமாக போடப்பட்ட அல்லது திருப்பப்பட்ட சீட்டு, தன் குட்டினை மறைக்கும் எத்தனத்தில் வெளிப்படுத்தப்படும் பதற்றம் அல்லது பொருட்டின்மையின் நடிப்பு, தந்திரங்களின் எண்ணிக்கை, அதன் ஒழுங்கமைவு, சங்கடம், தயக்கம், ஆர்வம், நடுக்கம் – என அனைத்தையும் வைத்து தன் உள்ளுணர்வின் திசைகாட்டலின்படி நிஜத்தைக் கண்டறிய முற்படுகிறார். முதல் இரண்டு மூன்று சுற்றுகளுக்குப்பின் ஒவ்வொரு கையிலும் இருக்கும் சீட்டுகளை முற்றிலும் அறிந்துகொள்கிறார். அதற்குப்பின் தீர்க்கமான நுட்பத்துடன் தனது சீட்டுகளை இறக்கத் தொடங்குகிறார். மற்றவர்கள் தன் சீட்டுகளின் முகம் தெரியும் வண்ணம் முன்பின்னாகத் திருப்பிக் காட்டி விளையாடுவதைப் போல ஆகிவிடுகிறது.

பகுப்பாய்வுத் திறனை மேதாவித்தனத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. பகுப்பாய்வாளர் கொஞ்ச நேரத்திற்கு முழுமையான மேதாவி. ஆனால், ஒரு மேதாவி பெரும்பாலும் கிஞ்சிற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான திறனற்றவர். மேதாவித்தனத்தைப் பொதுவாகச் சுட்டப்பயன்படும் கட்டமைப்பு ஆற்றல் அல்லது ஒருங்கிணைப்பு ஆற்றல் என்பது அடிப்படை மனத்திறன் என்றும் அவை பிறவியிலேயே ஒவ்வொரு உறுப்பிலும் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் மண்டையோட்டு அறிஞர்கள் சொல்வதுண்டு. (அவர்கள் தவறாகச் சொல்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன்). எழுத்தாளர்களுக்கு நல்லொழுக்கம் இருக்கும் என்ற குறைபட்ட பொதுக்கருத்தைப் போல அறிவுஜீவிகள் முட்டாள்தனமற்று இருப்பார்கள் என்றும் பார்க்கப்படுகிறது. மேதாவித்தனத்திற்கும் பகுப்பாய்வுத் திறனுக்கும் இடையே பகற்கனவிற்கும் கற்பனைத்திறனுக்கும் இடையில் இருப்பதைவிட பெரிய வேறுபாடுகள் உண்டு. ஆனால் குணத்தில் இரண்டும் சம அளவில் இருப்பவை. உற்று நோக்கினால் மேதாவிகள் பலரும் எப்போதும் பகற்கனவு காண்பவர்களாக இருப்பதைக் காணலாம். ஆனால் நல்ல கற்பனைத்திறன் கொண்டவர்கள் தன் முதல் தேர்வாக, பழக்கமாக பகுப்பாய்வதைக் கொண்டிருப்பார்கள்.

தொடர்ந்து வரவிருக்கும் கதையில் வாசகர் மேற்சொன்ன கூற்றுகளின் அடிப்படையில் சில விபரங்களைக் காண முடியும்.

அவ்வருடத்தின் வசந்தம் முழுவதும் கோடையின் ஒரு பகுதியும் பாரீஸில் வசித்தேன். அப்போது மேதகு அகஸ்தே தியுபினுடன் பழக நேர்ந்தது. அவர் செழிப்பான, செல்வமிகு குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆயினும் தொடர்ந்து நிகழ்ந்த துர்சம்பவங்களால் செல்வம் குன்றி ஏழ்மையடைந்துவிட்டார். அதற்கு அவருடைய ஆற்றலின் வீரியம் பலியாகிவிட்டது. உலகின் முன் தன்னைக் காட்டிக்கொள்வதை நிறுத்திவிட்ட அவர், தனது செல்வத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியையும் கைவிட்டுவிட்டார். அவருக்குக் கடனளித்தவர்களது நல்லெண்ணத்தால் அவரது தந்தைவழி சொத்துகளுள் சில எஞ்சியிருக்கின்றன. அதிலிருந்து கிட்டும் கொஞ்ச வருவாயை வைத்துக்கொண்டு பொருளாதாரத்தைத் திறம்பட கையாண்டு தன் வாழ்விற்கு அடிப்படைத் தேவைகளை வாங்கி வருகிறார். அவர் வாழ்வின் மேற்பூச்சான பகட்டுகளுக்குத் தன்னை அலட்டிக்கொள்வதில்லை. அவருடைய ஒரேயொரு சொகுசுத் தேவை நூல்கள் மட்டுமே. அவை பாரீஸில் வெகு எளிதில் கிடைப்பவை.

https://miro.medium.com/max/4212/1*0tF_DykjPyg0ICdJylEn7Q.jpeg

மாண்ட் மார்ட்ரே வீதியில் இருந்த இருண்ட நூலகத்தில்தான் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அங்கு நாங்கள் இருவருமே மிக அரிதான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியைத் தேடிக்கொண்டிருந்தோம். அந்தத் தேடல் எங்களை நெருங்கிய நட்புக்குள் ஈர்த்தது. நாங்கள் ஒருவரையொருவர் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினோம். தன்னைப் பற்றி பேசுகையில் மட்டும் எல்லா ஃபிரெஞ்சுக்காரர்களும் வெளிப்படுத்தும் கபடமற்ற தெளிந்த உரையாடல் அவரிடமிருந்தும் வெளிப்பட்டது. அவர் தனது குடும்பத்தைப் பற்றி விலாவரியாகப் பேச அதில் நான் தீவிர ஆர்வம்கொண்டேன். அவருடைய விலாசமான வாசிப்பு குறித்து அறிந்ததும் வியந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக கட்டற்ற உற்சாகம் கொண்டு துள்ளும் என் ஆன்ம மகிழ்வையும் அவருடைய கற்பனையில் இருந்த புத்துணர்ச்சியையும் பூரிப்புடன் உணர்ந்தேன். நான் பாரீஸில் வாங்கி விரும்பியவற்றில் எல்லாம் இத்தகைய நபரின் அணுக்கத்தைப் பெற்றதையே விலைமதிப்பற்றதாகக் கருதினேன். இந்த உணர்வை அவரிடம் வெளிப்படையாகவே சொன்னேன். நகரில் நான் வசிக்கும் காலத்தில் அவருடன் சேர்ந்தே வசிப்பது என்று இறுதியாயிற்று. அவருடைய உலகியல் சூழல் என்னுடையதைவிட அதிக சங்கடத்தில் இருந்ததால் என் செலவில் வாடகையைத் தருவதாக முடிவானது. அந்த இடம் எங்கள் பொது உணர்ச்சியான இருண்மையைப் பிரதிபலிக்கும் மேசை நாற்காலிகளால் நிரம்பி இருந்தது. மூடநம்பிக்கைகளால், நெடுங்காலம் புழங்காமல் காலம் அரித்த கந்தர்வகோலத்தில் அந்த அறை இருந்தது. அதுபற்றி நாங்கள் விசாரணை ஏதும் நடத்தவில்லை. ஃபாபர்க் புனித ஜெர்மன் நகரின் ஒதுக்குப்புறத்தில் தள்ளாடிவிழும் நிலையில் இருந்த கட்டடத்தில் எங்கள் அறை இருந்தது.

இந்த இடத்தில் இருக்கும் எங்களது தினசரி நடவடிக்கைகள் வெளியுலகிற்குத் தெரிந்தால், எங்களுக்கு பைத்தியக்கார – யாருக்கும் தீங்கிழைக்காத பைத்தியக்காரர்கள் என – பட்டம் சூட்டப்படும். எங்கள் தனிமை அருமையானதாக இருந்தது. நாங்கள் பார்வையாளர்கள் என யாரையும் அனுமதிக்கவில்லை. என் முந்தைய துணையர்களிடமிருந்து எங்கள் ஓய்விட விலாசத்தை மறைத்து வைத்திருந்தேன். தியுபின் பாரீஸையும் பாரீஸ் தியுபினையும் மறந்து ஏற்கனவே சில ஆண்டுகள் கடந்திருந்தது. நாங்கள் எங்களிடையே தனிமையின் துணையுடன் இருந்தோம்.

விநோதமான பல பழக்கங்களுள் ஒன்றாக குறும்புத்தனமான கற்பனைகளைக் (வேறெப்படி அதைக் குறிப்பிடுவது என தெரியவில்லை) கொண்டிருந்த நண்பரின் செய்கைகள் இருளை இன்னும் ஈர்ப்புடையதாக்கின. நான் என்னை பூரணமாகக் கைவிட்டு அந்தக் கடும் சித்தச்சலனத்திற்குள் பணிந்தேன். பழுப்பு நிற இரவுத் தேவதை எங்களோடு எப்போதும் துணை நிற்க மாட்டாள் என்றபோதும் அவள் இருப்பை நாங்கள் செயற்கையாக உருவாக்கிக்கொள்ள முடியும். காலையின் முதற்கிரணங்கள் வீழத் தொடங்கியதுமே எங்கள் பழைய கட்டிடத்தின் சரியாக மூடாத அத்தனை சாளரத்திரைகளையும் இழுத்து மூடினோம். ஆழ்நறுமணம் கொண்ட இரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றி அதிலிருந்து மெலிந்த ஒளிக்கற்றைகளை மட்டும் அப்படியே விட்டோம். இந்த அமைப்பின் உதவியால் எம் மனங்களை கனவுகளுக்குக் கடன் கொடுத்தோம். மீண்டும் நிஜ இருள் வந்துசேர்வதை கடிகாரம் அறிவிக்கும்வரை வாசிப்பு, எழுத்து, உரையாடல் என்று தொடர்ந்தோம். பிறகு கைகள் கோர்த்தபடி அன்றைய தினத்தின் செய்திகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டே வீதிகளில் அலைந்தோம். மக்கட்திரளான நகரின் விளக்கொளிகளுக்கும் நிழல்களுக்கும் இடையே நெடுந்தொலைவு நெடுநேரத்திற்கு நடைசென்றோம். மெளனமான அவதானிப்பு உருவாக்கித்தரும் மனக்கிளர்வின் முடிவின்மையில் திளைத்திருந்தோம்.

அந்த நேரங்களில் தியுபினுடைய தனித்துவமான பகுப்பாய்வு திறனைக் (அவருடைய செல்வப் பின்புலத்தில் அது சாத்தியம்தான் என்று தெரிந்தபோதும்) குறிப்பிட்டு பாராட்டிப் பேசாமல் என்னால் இருக்கவே முடியாது. அவருக்கும் அச்செயல்பாட்டினால் உருவாகும் உவகையைப் பகிர்ந்துகொள்வதில் எந்தவித தயக்கமும் இருந்ததில்லை. அவர் தன்னைப் போற்றிச் சொல்ல முனைவதாகத் தெரியவில்லை என்றபோதும் பகுப்பாய்வுச் செயல்பாட்டை அவர் மிகவும் விரும்புகிறார் என்பது புரிந்தது. அவர் தனது சிரிப்பை அடக்கியவாறு தன்னைப் பொறுத்தவரை பெரும்பாலான மனிதர்கள் தங்கள் மார்பில் சாளரங்களைச் சுமந்தவாறு திரிபவர்களே என்று சொன்னார். எனக்குத் தெரிந்து நேரடியான துணுக்குற வைக்கும் ஆதாரங்களுடன் நம்மை வியப்பில் ஆழ்த்துபவர் அவர். இத்தகைய தருணங்களில் அவரது நடத்தைகள் உறைந்து சுருக்கமானவையாக இருக்கும். அவரது விழிகள் உணர்வற்று நிலைத்திருக்கும். வழக்கமாக கணீரென்று இருக்கும் அவர் குரலோ நடுக்கத்துடன் ஏதோ சிடுசிடுப்பாகப் பேசுவதை போல இருக்கும். எனினும் அதில் தீர்க்கமும் சொல்லவந்ததைத் தெளிவாகச் சொல்லும் தொனியும் இருக்கும். இந்த உணர்வுநிலைகளில் அவரைக் கவனித்து வருகையில் இருமய ஆன்மா என்ற பழைமையான தத்துவம் நினைவில் எழும். நான், புதிர்களைப் படைப்பவர் – தீர்ப்பவர் என்ற இரட்டைத் தியுபினை எனக்குள்ளேயே கற்பனைசெய்து வியந்துகொள்வேன்.

நான் சொன்னவற்றைக் கொண்டு ஏதோ ஒரு மர்மக் கதையையோ கற்பனாவாதக் கதையையோ விவரிப்பதாக எண்ணிவிட வேண்டாம். நான் இந்த ஃபிரெஞ்சுக்காரர் பற்றி விவரித்தவை எல்லாமே உணர்ச்சிவசப்பட்டு அல்லது தன்னறிவின் போதாமையால் சீண்டப்பட்டு சொன்னவையே. ஒரு உதாரணத்தின் மூலம் எனது குறிப்புகளின் தன்மையைத் திரிபற விவரிக்கலாம்.

ராயல் மாளிகையிருந்த இடத்தருகே இருந்த நீண்ட தெருவில் இரவு நடை சென்றோம். இருவருமே சிந்தனை வயப்பட்டிருந்தமையால் குறைந்தது பதினைந்து நிமிடங்கள் வரை ஒற்றைச் சொல்கூட அங்கு மொழியப்படவில்லை. சடுதியில் தியுபின் இப்படிச் சொன்னார்- “ஆம், அவர் குள்ளம்தான். ’தே வெரெத்தே’ அரங்கில் நடித்திருந்தால் சிறப்பாகப் பொருந்தியிருப்பார்.”

எனது ஆழ்மனத்தின் மணியோசைகளை எப்படி அவர் கிரகித்தார் என்பதை உணராமலேயே “ஆம் அதில் சந்தேகமே இல்லை” என்று தன்போக்கில் பதிலளித்தேன். அதன் பிறகு உடனடியாகவே என்னை மீட்டெடுத்துக்கொண்டேன் என்றபோதும் என் திகைப்பு ஆழமானதாக இருந்தது.

“தியுபின்! இது என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. நான் திகைப்படைந்திருக்கிறேன் என்று சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. என் புலன்களையே நான் நம்புகிறேனா என்ற குழப்பம் வந்துவிட்டது. எப்படி நான் யோசித்துக்கொண்டிருந்த ஆள் …..?” உண்மையிலேயே நான் யாரைப் பற்றிச் சிந்தித்தேன் என்பதை அவர் அறிந்திருக்கிறாரா என்பதை ஐயமற அறிந்துகொள்வதற்காக பெயரைச் சொல்லாமல் நிறுத்தினேன்.

“சாண்டிலி” என்றார். “ஏன் நிறுத்திவிட்டீர்கள்? அவரது குள்ள உருவம் துயர நாடகங்களுக்கு அவரைப் பொருத்தமற்றவராக்குகிறது என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள்தானே?”

எனது எண்ணவோட்டத்தின் அடிப்படையே மிகச்சரியாக இதுதான். புனித தெனிஸ் வீதியில் முன்பு செருப்பு தைப்பவராக இருந்த சாண்டிலி, நாடகத்தின் மேல் பித்துகொண்டு கிரெபிலியான் துயர்கதையில் மகா செர்கஸாக நடித்தார். அத்தனை சிரமப்பட்டும் அவரது குள்ளத்தனத்தைப் பொது இடங்களில் கேலிசெய்தனர்.

“இந்த விசயத்தில் எப்படி என் மனத்தின் ஆழத்தை அறிய உதவிய வழிமுறையை – வழிமுறை என்று ஏதேனும் இருக்குமாயின் – தயவுசெய்து சொல்லிவிடுங்களேன்.” நான் வெளிக்காட்ட முனைவதைவிட அதிகமான துணுக்குறலில் இருந்தேன். 

“செருப்பு தைப்பவர் செர்கஸாக நடிக்கத் தகுதியற்றவர் என்ற முடிபை உங்களுக்கு ஏற்படுத்தியவர் ஒருவர். அந்தப் பழக்கூடைக்காரர்” என்றார் நண்பர்.

“பழக்கூடைக்காரரா? என்னை மேலும் மேலும் குழப்பமடையச் செய்கிறீர். எனக்கு எந்தப் பழக்கூடைக்காரரையும் தெரியாதே.”

“நாம் இந்தத் தெருவிற்குள் நுழைந்தபோது உங்களை இடித்தாரே அவர். ஒரு பதினைந்து நிமிடங்கள் இருக்கும்.”

இப்போது என் நினைவுக்கு வருகிறது. நாங்கள் முந்தைய தெருவிலிருந்து வெளியேறியபோது, ஒரு பெரிய கூடையைத் தலையில் சுமந்தபடி வந்த பழக்காரர் எதிர்பாராவிதமாக என்மேல் இடித்து கிட்டதட்ட என்னைக் கீழே தள்ளியிருப்பார். ஆனால் இதற்கும் சாண்டிலிக்கும் என்ன தொடர்பு என்று என்னால் கிஞ்சிற்றும் புரிந்துகொள்ள முடியவில்லை.

தியுபினிடம் மந்திர தந்திரம் என்று எதுவும் கிடையாது.

“எல்லாம் புரியும் வண்ணம் உங்களுக்கு விளக்குகிறேன். உங்களது மனத்தின் எண்ணவோட்டங்களைப் பின்னோக்கிப் பார்ப்போம். நான் உங்களிடம் இது குறித்து பேசிய தருணத்தில் தொடங்கி சற்றுமுன் பழக்கூடைக்காரருடன் ஏற்பட்ட சந்திப்பு வரை நினைவில் மீட்டெடுப்போம். சிந்தனைச் சங்கிலியின் முக்கிய கணுக்களில் இருப்பவை இவை. சாண்டிலி, ஓரியான், மருத்துவர் நிகோலஸ், எபிகியுரஸ், ஸ்டீரியோடமி, வீதிகற்கள், பழக்கூடைக்காரர்.” என்றார்.

வெகு சிலரே தன் வாழ்வில் ஏதோவொரு தருணத்தில் தனது மனத்தின் குறிப்பிட்ட தேர்வுகளுக்குக் காரணமானவற்றைப் பின்னோக்கிப் பார்ப்பதில் குழப்பமடைந்திருப்பார்கள். இந்த வேலை ஆர்வமூட்டுவதாக இருந்தாலும் முதல்முறை இதை அனுபவிப்பவர்கள், தொடக்கப்புள்ளிக்கும் முடிவிற்கும் இடையில் இருக்கும் அளவிட முடியாத தொலைவைக் கண்டு நிச்சயம் திகைப்படைவார்கள். எனக்கும் ஃபிரெஞ்சுக்காரர் சொன்னதைக் கேட்டதும் அத்தகைய திகைப்பு உண்டானது. அவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்பதை நான் குறிப்பிட்டு பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அவர் தொடர்ந்தார்- “என் நினைவு சரியெனில், முன்வீதியிலிருந்து வெளியேறுவதற்கு சற்று முன்னால் நாம் புரவிகளைப் பற்றிப் பேசியபடி இருந்தோம். இந்தத் தெருவிற்குள் நுழைகையில் பழக்காரர் தன் தலையில் ஒரு பெரிய கூடையுடன் வந்து நம்மேல் இடித்துக் கடந்த போது, உங்களை நடைபாதை பழுதுபார்த்தலுக்காக சேகரித்து வைக்கப்பட்டிருந்த கற்களை நோக்கித் தள்ளிவிடப் பார்த்தார். நீங்கள் அதிலிருந்த ஒரு கல்லில் கால்வைத்து வழுக்கிவிழப் பார்த்தீர்கள். உங்கள் கணுக்காலில் ஒரு சுளுக்கு ஏற்பட்டது. சினந்து பிணக்கம் கொண்டவர் போல மெளனமாய் முணுமுணுத்துவிட்டு அந்தக் கற்குவியலைப் பார்த்த நீங்கள் மீண்டும் மெளனமாய் நடையைத் தொடர்ந்தீர்கள். நான் வேண்டுமென்றே நீங்கள் செய்தவற்றை எல்லாம் அவதானித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால், என் வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கமாக கவனித்தல் இருந்து வருகிறது.

“நீங்கள் நிலத்தின் மேல் விழிகளைப் பொருத்தினீர்கள். பாதையில் இருந்த பள்ளங்களையும் துளைகளையும் கடுப்பாகப் பார்த்தீர்கள். (அதனால் நீங்கள் இன்னும் அந்தக் கற்களை நினைத்துக்கொண்டிருப்பீர்கள் என்று கருதினேன்) பிறகு லாமார்டைன் சந்தில் பரீட்சார்த்த முறையில் பின்னலாக பொருத்தப்பட்டிருந்த கற்பாதைக்கு வந்துசேர்ந்ததும் உங்கள் வதனம் மிளிரத் தொடங்கியது. அப்போது உங்கள் உதடுகள் ‘ஸ்டீரியோடமி’ என்ற பதத்தை உச்சரித்தது என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. இந்த வகை நடைபாதைகளைக் குறிப்பிடப் பயன்படும் பதம் அது. நீங்கள் ஸ்டீரியோடமி என்று சொன்னதும் அடோமி என்ற பதத்தை தனக்குள் எண்ணாமல் இருக்க முடியாது என்று ஊகித்தேன். இதனாலேயே எபிகியூரஸின் கருத்துகளும் நினைவில் எழுந்திருக்கும் என்றும் நினைத்தேன். கூடவே கொஞ்ச நாட்களுக்கு முன்பாக, பிற்காலத்தில் வந்த நெபுலார் வானியல் கருத்துகளைப் பற்றி கிரேக்க அறிஞர்கள் முன்பே தீர்க்கத்துடன் பேசியிருப்பது குறித்து விவாதித்திருக்கிறோம். வானில் மகா ஓரியன் நெபுலாவை உங்கள் கண்கள் தேடாமல் இருக்க முடியாது என்று ஊகித்து எதிர்பார்த்தேன். அவ்விதமே நீங்களும் நிமிர்ந்து பார்த்தீர்கள். அதை வைத்து இதுவரை உங்கள் மனவோட்டத்தைச் சரியாகவே கணித்து வந்திருக்கிறேன் என்ற திண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டேன். அதற்கடுத்து நேற்றைய ‘மியூசே’ கேலியேட்டில் வந்த சாண்டிலி மீதான கசப்பான வசையைப் பார்ப்போம். அதில் செருப்பு தைப்பவர் புஷ்கின் என்று பெயரை மாற்றிக்கொண்டதைக் கடுமையாகச் சாடி நாம் விவாதித்த லத்தீன் சொற்றொடரைப் பயன்படுத்தி இருந்தனர். அந்த வரி- Perdidit antiquum litera sonum. முதலெழுத்து அதன் சரியான ஒலியை இழந்துவிட்டது.

”இது ஓரியானுக்கான குறிப்பு என்பதை நான் முன்பே உம்மிடம் சொல்லியிருக்கிறேன். இந்த விளக்கத்துடன் தொடர்புடைய துர்மணத்தை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்பதை நானறிவேன். இதனால் நிச்சயம் நீங்கள் ஓரியானையும் சாண்டிலியையும் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. நீங்கள் அந்த இணைப்பைச் செய்துவிட்டீர்கள் என்பதை உங்கள் அதரங்களில் மிளிர்ந்த புன்னகையைக் கண்டு உறுதிசெய்தேன். செருப்பு தைப்பவனது ஏழ்மையையும் வலியையும் நீங்கள் சிந்தித்தீர்கள். நடையின் போது அதுவரை சற்று தோள்தளர்த்தி இருந்த நீங்கள் அப்போது உங்கள் முழு உயரத்திற்கும் நிமிர்ந்தீர்கள். அப்போது நீங்கள் சாண்டிலியின் குள்ள உருவை மனதில் வைத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெளிவானது. இந்தப் புள்ளியில்தான் உங்கள் மனவோட்டத்தை இடைமறித்து இந்தக் குறிப்பைச் சொன்னேன். உண்மையில் அந்தச் சாண்டிலி சின்ன ஆள்தான். அவர் தே வெர்தே அரங்கில் இன்னும் பொருத்தமாக இருந்திருப்பார்.”

இது நடந்த சில நாட்களில் கெஸெட் தெ டிரிபியுனாக்ஸ் இன் மாலைப் பிரதியில் இருந்த பின்வரும் பத்தி எங்கள் கவனத்தை ஈர்த்தது.

“அசாதாரண கொலைகள். இன்று காலை மூன்று மணியளவில் புனித ரோச் நகர்புறம் வசிப்பவர்கள் தொடர்ந்து கேட்ட கூச்சலால் திகைத்து துயிலெழுந்தனர். அந்தப் பேரொலி மார்கு வீதியில் இருந்த இல்லத்தின் நான்காவது மாடியில் இருந்து கேட்டது. அதில் திருமதி லிஸ்பனே, அவரது மகள் செல்வி லிஸ்பனே ஆகியோர் மட்டுமே வசித்தனர். வழமையான வழிகளில் உள்ளே நுழைவதற்குப் பலமுறை முயன்றும் இயலாததால் கடப்பாரை கொண்டு நுழைவாயிலை உடைத்து ஏழெட்டு நபர்கள் இரு துணைக்காவலர்களின் உதவியுடன் உள்நுழைந்தனர். அதற்குள் கூச்சல்கள் நின்றுவிட்டன. ஆனால் கூட்டம் படிகட்டின் முதல் வரிசையில் ஏறிக்கொண்டிருக்கையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடித்த குரல்கள் சினத்துடன் ஒலித்தபடியே வீட்டின் மேற்புறமாக வெளியேறுவது போல் கேட்டது. படிக்கட்டின் இரண்டாவது வரிசையைக் கடந்தபோது அந்த ஒலிகளும் நின்றுபோய் தீவிர மெளனம் மட்டுமே எஞ்சியிருந்தது. கூட்டம் தங்களுக்குள் பிரிந்து அறையறையாகத் தேடியது. நான்காம் தளத்தின் பின்புறமிருந்து பெரிய அறைக்கு வந்ததும் (அதன் கதவு உட்தாளிட்டு சாவி தொங்கியிருந்ததால் உடைத்துத் திறக்க வேண்டியதாயிற்று) அங்கு கண்ட காட்சி திகைப்பும் திகிலுமாக அனைவரையும் உறைய வைப்பதாக இருந்தது. 

“அந்த இல்லப்பகுதியே கடுமையாகச் சேதமுற்றிருந்தது. மேசை நாற்காலிகள் அனைத்தும் எல்லா திசைகளிலும் தூக்கி எறியப்பட்டிருந்தன. ஒரேயொரு கட்டில் இருந்தது. அதிலிருந்து மெத்தை பிடுங்கி நடுத்தரையில் எறியப்பட்டிருந்தது. நாற்காலி ஒன்றில் கூரிய சவரக்கத்தி குருதி நனைந்து கிடந்தது. அடுப்பங்கரையில் நரைத்த மனிதக் கூந்தல் சுருள்கள் வேரோடு பிடுங்கி எடுக்கப்பட்டதைப் போல ஓரத்தில் குருதித்துளிகளுடன் இருந்தன. தரையில் நான்கு நெப்போலியன்கள், தோபாஸ் பதித்த தோடும் மூன்று பெரிய வெள்ளிக் கரண்டிகள், மூன்று சின்ன அல்ஜிரிய உலோகப் பாத்திரங்கள், ஏறத்தாழ நான்காயிரம் ஃபிராங்குகள், தங்கத்தில் நிறைந்திருந்த இரண்டு பைகள் ஆகியவை இருந்தன. அறைமூலையில் இருந்த அலமாரியின் இழுப்பறைகள் திறக்கப்பட்டு அதில் இருந்தவை எல்லாம் கலைந்து கிடந்தன. ஆயினும் பெரும்பாலான பொருட்கள் அவற்றில் அப்படியே இருந்தன. மெத்தையின் கீழ் (கட்டிலின் கீழ் அல்ல) ஒரு சிறிய இரும்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. சாவி தொங்கிய நிலையில் திறந்திருந்தது. சில பழங்கடிதங்களையும் பொருட்படுத்தத் தேவையற்ற சில தாள்களையும் தவிர வேறொன்றும் அதில் இல்லை.

“திருமதி லிஸ்பனே பற்றிய எந்தத் தடயமும் இல்லை. புகைக்கரி வழக்கத்தைவிட அதிகமாக நெருப்பிடத்தில் இருந்தது. புகைப்போக்கியில் எட்டிப்பார்த்த போது (எதிர்பாராத வண்ணம் திகிலூட்டும் விதமாக!) மகளின் சடலம்! அது தலைகீழாகத் தொங்கியது. அங்கிருந்து அதை இழுத்து கீழிறக்கினர். குறுகிய ஓட்டையில் நசுக்கி அழுத்தப்பட்டிருந்தது அச்சடலம். உடலில் இன்னும் சற்று வெப்பம் எஞ்சியிருந்தது. அதை ஆய்வுசெய்ததில் நிறைய இடங்களில் தோல் உரிக்கப்பட்டிருந்தது. எத்தனை வன்மத்துடன் அது உள்ளே சொருகப்பட்டிருக்கும் என்பதையும் எத்தனை சிரமத்துடன் அது கீழிறக்கப்பட்டிருக்கும் என்பதையும் பார்த்தால் அந்தத் தோலுரிப்புகளைப் புரிந்துகொள்ள முடியும். முகத்தில் ஆழமான சிராய்ப்புகள் நிறைய இருந்தன. கழுத்தில் கருமையான கீறல்களும் நகங்கள் அழுத்தி உண்டான பள்ளங்களும் இருந்தன. இவற்றை வைத்துப் பார்த்தால் இறந்தவர் நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது.

“இல்லத்தின் அனைத்து பகுதிகளையும் முற்றிலும் ஆய்ந்தறிந்த பிறகு வேறேதும் கிடைக்காமல் கூட்டம் கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ள சிறிய உப்பரிகையை நோக்கிச் சென்றது. அங்கு முதிய பெண்மணியின் சடலம் கிடந்தது. அவளது முன்கழுத்து முற்றிலும் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததால் அச்சடலத்தைத் தூக்க முயன்ற போது தலை தனித்து கீழே விழுந்தது. தலையும் முண்டமும் பீதியூட்டும் வகையில் சிதைந்திருந்தது. அதிலும் குறிப்பாக, தலையை ஒரு மனிதத்தலைதான் என்று கருத இடமின்றிச் சிதைந்திருந்தது. இந்தக் கொடூரமான மர்மத்தில் இதுவரை ஒரு சிறிய துப்புகூட துலங்கவில்லை.”

அடுத்த நாள் செய்தித்தாளில் சில மேலதிக தகவல்கள் வெளியாகின.

“மார்கு வீதி துர்சம்பவம். இத்தகைய கொடூரமான பீதிதரும் நிகழ்வு தொடர்பாக பலரும் விசாரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எதுவும் நிகழ்வைத் தெளிவுபடுத்தும் விதத்தில் பயன்படவில்லை. சாட்சியங்களின் அறிக்கைகள் பற்றிய விபரங்களைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

“பவுலின் டுபர்க் என்ற சலவைப் பெண்மணி கடந்த மூன்றாண்டுகளாக இறந்தவர்களது துணிகளைச் சலவைசெய்து வந்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறாள். முதிய பெண்மணியும் அவரது மகளும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்து வந்திருப்பதாகத் தெரிகிறது. நல்ல செல்வத்துடன் இருந்திருக்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரம் பற்றித் தெரியவில்லை. முதியவர் குறிசொல்லி சம்பாதித்திருப்பதாக நம்பப்படுகிறது. சலவைக்குத் துணி எடுக்கையிலும் திரும்பி தரும்போதும் அங்கு ஒருபோதும் வேறொரு ஆள் இருந்ததில்லை. குற்றேவல்காரர்கள் என யாரும் நிச்சயம் இல்லை. நான்காம் தளத்தைத் தவிர வேறெங்கும் மரச்சாமான்கள் இல்லை.

“பியர் மொரே என்ற புகையிலைக்காரன் திருமதி லிஸ்பனேவுக்கு கடந்த நான்காண்டுகளாக கொஞ்சம் புகையிலையும் மூக்குப்பொடியும் தந்து வந்திருக்கிறான். அருகிலேயே பிறந்த அவன் அங்கேயே வசித்து வருகிறான். தாயும் மகளும் சடலங்களாக இருந்த இல்லத்தில் ஆறாண்டுக்கு மேலாக வசித்துவந்தனர். அதற்கு முன் ஒரு நகைக்கடைக்காரர் அதில் குடி இருந்தார். அவர் மேல் அறைகளை பலருக்கும் உள்வாடகைக்கு விட்டிருந்தார். அந்த இல்லம் திருமதி லிஸ்பனேவின் சொத்து. அவருக்கு தன் வாடகைக்காரனது செய்கையில் திருப்தி இல்லாமல் தானே குடியேறி பிறருக்கு அறைகளைத் தர மறுத்துவிட்டார். முதியவர் குழந்தைத்தனமானவர். அவரது மகளை ஆறாண்டுகளில் வெறும் நான்கைந்து முறை மட்டுமே பார்த்திருக்கிறான். செல்வத்தினால் நன்மதிப்பு பெற்றிருந்த அவர்கள் இருவரும் அமைதியாகவே வாழ்ந்தனர். அருகில் இருந்தவர்கள் மூலம் லிஸ்பனே குறிசொல்லி வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நம்பவில்லை. முதியவரையும் அவள் மகளையும் தவிர வேறு யாரும் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்ததே இல்லை. விதிவிலக்காக பாரம் சுமப்பவன் ஒருமுறையும் மருத்துவர் ஏழெட்டு முறைகளும் உள்ளே சென்றிருக்கின்றனர்.

“அருகில் வசித்த இன்னும் பலர் இதே மாதிரியான ஆதாரங்களைத் தெரிவித்தனர். அடிக்கடி வீட்டிற்கு வரும் அந்நியர் என்று யாருமே இல்லை. திருமதி லிஸ்பனேவிற்கும் அவர் மகளுக்கும் சொந்தபந்தம் என யாரும் இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. முன் சாளரங்களின் கதவுகள் வெகு அரிதாகவே திறக்கும். பின் சாளரங்கள் ஒருபோதும் திறந்ததே இல்லை. விதிவிலக்காக நான்காம் தளத்தில் உள்ள பெரிய பின்னறைச் சாளரம் மட்டும் திறந்திருக்கும். வீடு நல்ல கட்டிடம், மிகவும் பழமையானது என்று சொல்ல முடியாது.

“இசொடோர் மியுசே என்ற துணைக்காவலாளி, தனக்கு காலை சுமார் மூன்று மணியளவில் அந்த இல்லத்திற்கு வரும்படி அழைப்பு வந்ததாகவும் அங்கு வந்துசேர்கையில் இருபது முப்பது நபர்கள் நுழைவாயிலில் நின்று உள்ளே நுழைய முயன்றுகொண்டிருந்ததாகவும் வாக்குமூலம் தந்தார். துப்பாக்கிச் சுரிகையைப் பயன்படுத்தி (கடப்பாரை இல்லை) அழுத்தித் திறந்திருக்கிறார். மேலும் கீழும் உட்திருகு இருந்ததாலும் இரட்டை மடிப்புக் கதவாக இருந்ததாலும் அதைத் திறப்பதில் கொஞ்சம் போராட வேண்டியிருந்தது. கதவை உடைக்கும் வரை கேட்ட கூச்சல்கள் உடைத்துத் திறந்ததும் நின்றுபோயின. ஏதோ ஆள் அல்லது ஆட்கள் கடுமையான வேதனையில் அலறுவதைப் போல சத்தமாக, நெடுங்கதறலாக கேட்டது. நிச்சயம் குறுகிய வேகமான ஒலியாக அது இல்லை. பின் படிகளில் முதலில் சென்றார். முதல் படிகட்டு வரிசை முடிவில் சத்தமாகவும் சினந்தும் இரண்டு குரலொலிகளைக் கேட்டார். ஒன்று முரட்டுத்தனமாகவும் மற்றது கீச்சுக் குரலாகவும் இருந்தது. முன்னதின் சில சொற்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. அது ஒரு ஃபிரெஞ்சுக்காரன். நிச்சயம் பெண்ணின் குரலில்லை. ‘புனிதமானது’, ‘சாத்தானே’ போன்ற வார்த்தைகள் கேட்டன. அந்தக் கீச்சுக் குரலோ  வெளிநாட்டவனுடையது. அது ஆணா பெண்ணா என்று ஐயமறத் தெரியவில்லை. என்ன சொல் என்றும் புரியவில்லை. ஆனால் அது ஸ்பானிஷ் மொழி என்று மட்டும் தெரிகிறது. அறை, சடலங்கள் ஆகியவற்றின் நிலை பற்றி நேற்று நாம் தெரிவித்ததைப் போலவே இந்த சாட்சியும் தெரிவித்தார்.

“அண்டை வீட்டுக்காரர் ஹென்றி டுவால் ஒரு வெள்ளி வியாபாரி. அவர் கூட்டத்தில் முதலில் இல்லத்திற்குள் நுழைந்தவர்களுள் ஒருவர். அவரும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். பொதுவாக மியுசேவின் கூற்றை ஒத்துப்போகிறார். வாயிலில் நுழைந்ததுமே, வேகமாக பெருகிய கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு மீண்டும் கதவைத் தாளிட்டனர். கூட்டம் பின்னிரவு என்பதையும் பொருட்படுத்தவில்லை. கீச்சுக் குரல் இத்தாலியருடையது என்று இவர் கருதுகிறார். கண்டிப்பாக ஃபிரெஞ்சு இல்லை என்று அறுதியிடுகிறார். அது ஆணின் குரலா என்று சரிவரத் தெரியவில்லை. முதிய பெண்மணியையும் அவள் மகளையும் அறிந்திருக்கிறார். அடிக்கடி அவர்களோடு உரையாடி இருக்கிறார். அக்கீச்சுக் குரல் இறந்த இருவருடைய குரலும் அல்ல என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

“ஓடன்ஹைமர் உணவகம் வைத்திருக்கிறார். தானாக முன்வந்து சாட்சியம் அளித்திருக்கிறார். ஃபிரெஞ்சு அறியாததால் அவருக்கு மொழிபெயர்ப்பாளர் வைக்கப்பட்டது. அவர் சொந்த ஊர் ஆம்ஸ்டர்டாம். இரைச்சல் கேட்கையில் அந்த வீட்டைக் கடந்து சென்றிருக்கிறார். பல நிமிடங்கள் அது தொடர்ந்து கேட்டது, சுமார் பத்து நிமிடம் வரை. அது நீண்டு அலறலாக ஒலித்தது. கொடூரமாகவும் மனதிற்கு உளைச்சல் தருவதாகவும் இருந்தது. கட்டிடத்திற்குள் நுழைந்தவர்களுள் ஒருவர். முந்தைய ஆதாரங்கள் அனைத்தையும் உறுதிசெய்கிறார். ஒன்றைத் தவிர! கீச்சுக் குரல் ஒரு ஆணுடையது என்கிறார். அதுவும் ஃபிரெஞ்சுக்காரனுடையது என்கிறார். ஆனாலும் சொல்லப்பட்ட வார்த்தைகளைச் சுட்டமுடியவில்லை. சத்தமாகவும் விரைந்தும் அவை இருந்தன. அச்சமும் சினமும் சரிபங்கில் அக்குரலில் தெரிந்தது. கீச்சுக் குரல் என்பதைவிட கரடுமுரனான ஒலியாக இருந்தது. இன்னொரு முரட்டுக்குரல் மீண்டும் மீண்டும் ‘புனிதமான,’ ‘சாத்தான்’ என்று சொல்லியது. ஒரேயொரு முறை ‘அடக்கடவுளே!’ என்றது.

“டிலோரெயின் சாலையில் உள்ள மிக்னாட் வங்கியின் ஜூல்ஸ் மிக்னாட் வாக்குமூலம் அளித்தார். திருமதி லிஸ்பனேவிற்கு சில சொத்துகள் இருக்கின்றன. எட்டாண்டுகளுக்கு முன்பு வசந்தத்தில் இவர் வங்கியில் கணக்கு ஒன்றைத் துவங்கியுள்ளார். சின்னச் சின்ன தொகையாக அடிக்கடி வைப்பு செய்திருக்கிறார். இறப்பிற்கு மூன்று நாட்களுக்கு முன்புகூட நான்காயிரம் ஃபிரான்க்குகள் எடுத்தபோது கணக்கைச் சோதித்திருக்கிறார். இந்தத் தொகை தங்கத்தில் அவரது எழுத்தரால் இல்லத்திலேயே நேரடியாக கொண்டு சேர்க்கப்பட்டது.

“வங்கி எழுத்தர் அடோல்ஃப் லெ போன், சம்பவம் நிகழ்ந்த முந்தைய பிற்பகல், திருமதி லிஸ்பனேவுடன் அவர் வீட்டிற்கு நான்காயிரம் ஃபிரான்க் தொகைய தங்கமாக இரு பைகளில் எடுத்துச்சென்றிருக்கிறார். கதவு திறந்ததும் செல்வி லிஸ்பனே வெளிவந்து ஒரு பையைப் பெற்றுக்கொள்ள இன்னொன்றை திருமதி லிஸ்பனே வாங்கிக்கொண்டார். இவர் தலைவணங்கி அவ்விடம் நீங்கினார். அப்போது தெருவில் ஒருவரையும் இவர் பார்க்கவில்லை. அது தனித்திருக்கும் ஒரு வீதி.

“வில்லியம் பேர்ட், தையல்காரர் வீட்டிற்குள் நுழைந்தவர்களுள் ஒருவர். இவர் ஆங்கிலேயன். பாரீஸில் இரண்டாண்டுகளாக வசிக்கிறார். படிகளில் முதலில் ஏறியவர்களுள் ஒருவர். அவரும் இங்கு குறிப்பிடப்படும் குரல்களைக் கேட்டிருக்கிறார். முரட்டுக் குரல் ஃபிரெஞ்சுக்காரனுடையது. பல வார்த்தைகளைக் கேட்டிருந்தும் அனைத்தையும் தற்போது நினைவில் எடுக்க முடியவில்லை. குறிப்பாக, ‘புனிதமானது,’ ‘அடக்கடவுளே’ ஆகிய இரண்டையும் கேட்டிருக்கிறார். ஒரு தருணத்தில் பல ஆட்கள் ஒன்றுகூடி கைகலப்பு செய்வதுபோலவும் உரசிக்கொள்வது போலவும் ஒலிகேட்டது. கீச்சுக் குரல், முரட்டுக் குரலைவிட மிகச் சத்தமாக இருந்தது. அது ஆங்கிலேயனின் குரல் இல்லை என்பது நிச்சயம். ஜெர்மானியக் குரலாக இருக்கக்கூடும். பெண் குரலாகவும் இருக்கலாம். இந்த சாட்சிக்கு ஜெர்மன் மொழி தெரியாது.

“மேலே பெயர் குறிப்பிட்டவர்களுள் நால்வர் மீண்டும் அழைக்கப்பட்ட போது திருமதி லிஸ்பனேவின் சடலம் கிடந்த அறையைக் கூட்டம் சென்றடைந்த போது உட்புறமாகத் தாளிடப்பட்டிருந்தது என்று வாக்குமூலம் அளித்தனர். பூரண மெளனம் இருந்தது. முனகலோ வேறெந்த இரைச்சலோ கேட்கவில்லை. கதவை உடைத்துத் திறக்கையில் ஒரு ஆளும் அங்கில்லை. முன் பின் சாளரங்கள் எல்லாமே நேர்த்தியாக உட்தாழிடப்பட்டிருந்தன. இரு அறைகளுக்கிடையே இருந்த கதவு சாத்தி இருந்தது, பூட்டப்படவில்லை. முன்னறையிலிருந்து நடைபாதைக்குச் செல்லும் கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டு சாவி தொங்கியது. வீட்டின் முன்புறம் நான்காம் மாடியில் திறந்திருந்தது, கதவு ஒருக்களித்து இருந்தது. அறையில் நிறைய பழைய நூல்களும் பெட்டிகளும் கிடந்தன. இவை எல்லாம் கவனத்துடன் கையாளப்பட்டு தேடினர். ஒரு இன்ச் அளவுகூட கவனத்துடன் தேடப்படாமல் இல்லை. புகைப்போக்கியின் வழியே துடைப்பான்கள் உட்செலுத்தப்பட்டு பார்த்தனர். வீட்டில் ஒவ்வொரு மாடியிலும் சிறிய தனிமேலறை உண்டு. அவசரத்திற்குப் பயன்படுத்தும் கூரைக்கதவு சரியாக மூடப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக அவை திறக்கப்படவே இல்லை. சர்ச்சைக்குரிய குரல்களைக் கேட்டதற்கும் அறைக்கதவைத் திறந்ததற்கும் இடையேயான கால அளவு வெவ்வேறு விதமாக சொல்லப்பட்டது. சிலர் மூன்று நிமிடங்கள் எனச் சொல்ல வேறு சிலர் ஐந்து நிமிடங்கள் என்றனர். கதவு சிரமப்பட்டே திறக்கப்பட்டிருக்கிறது.

“அல்ஃபோன்சோ கார்சியோ, பிணப்பெட்டி செய்பவர், தான் மார்கு சாலையில் குடியிருப்பதாக வாக்குமூலம் சொன்னார். ஸ்பெயின்காரன். வீட்டிற்குள் நுழைந்தவர். ஆனால் பதற்றம் காரணமாகவும் கூட்டத்தின் தள்ளுமுள்ளு காரணமாகவும் தயங்கி படிகளில் ஏறவில்லை. சர்ச்சைக்குரிய குரல்களைக் கேட்டிருக்கிறார். முரட்டுக்குரல் ஃபிரெஞ்சுக்காரனுடையது. ஆனால் சொற்களை இனங்காண முடியவில்லை. கீச்சுக் குரல் ஆங்கிலேயனுடையது என்று உறுதியாகச் சொல்கிறார். ஆங்கிலம் தெரியாது எனும்போதும் சொல்லின் பாணியை வைத்து அப்படிச் சொல்கிறார்.

“அல்பர்டோ மாண்டனி, மிட்டாய்க் கடைக்காரர், படிகளில் முதலில் ஏறியவர்களுள் ஒருவர். குரல்களைக் கேட்டிருக்கிறார். முரட்டுக்குரல் ஃபிரெஞ்சுக்காரனுடையது. பல சொற்களைக் கேட்டிருக்கிறார். கீச்சுக் குரலின் சொற்களைக் குறிப்பிட முடியவில்லை. சமநிலையின்றியும் வேகமாகவும் பேசியது அக்குரல். ரஷ்ய மொழி என்று நினைக்கிறார். பொது சாட்சியத்துடன் பெரிதும் ஒத்துப்போகிறார். இவர் ஒரு இத்தாலியன். ஒருபோதும் ரஷ்யர் ஒருவருடன் உரையாடியதே இல்லை.

“மீள அழைக்கப்பட்ட பல சாட்சிகளும் நான்காம் தளத்தில் இருக்கும் அறைகளில் உள்ள எல்லாப் புகைப்போக்கிகளும் மனிதன் நுழையமுடியாத அளவுக்கு சிறுத்தவை. துடைப்பான் என்றால் உருளையான தூசு துடைப்பானையே சொல்கிறோம். அவை புகைப்போக்கியைச் சுத்தப்படுத்த பயன்படுபவை. ஆட்கள் மேலே ஏறுகையில் பின்புறமாக இறங்கிச்செல்ல வழியேதும் இல்லை. செல்வி லிஸ்பனேவின் உடல் நான்கைந்து பேர் சேர்ந்து வலிமை திரட்டி இழுக்கும்வரை கீழே வராத அளவிற்கு புகைப்போக்கியில் திணித்து வைக்கப்படிருந்தது.

“நாள் இடைவெளியின் போதுதான் இச்சடலங்களைப் பார்வையிட அழைக்கப்பட்டதாக மருத்துவர் பவுல் டுமாஸ் தெரிவித்தார். செல்வி லிஸ்பனே கண்டறியப்பட்ட அறையில் இரு உடல்களும் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தன. இளம்பெண்ணின் உடல் அதிக சிராய்ப்புகளையும் தோலுரிப்புகளையும் கொண்டிருந்தது. புகைப்போக்கியில் திணிக்கப்பட்டிருந்தது என்ற செய்தியே இந்தச் சிராய்ப்புகளை விளக்குவதாக இருந்தது. தொண்டை கடுமையாக தேய்க்கப்பட்டிருந்தது. தாடைக்குக் கீழ் ஆழமான தேய்ப்புகள் நிறை இருந்தன. வெண்ணீல நிறத்தில் கன்னியிருந்த கழுத்து விரல்களின் அழுத்தத்தைப் பறைசாற்றின. முகம் அச்சமூட்டும்படி நிறமாற்றம் அடைந்து விழிகள் வெளியே நீண்டிருந்தன. நாக்கு பாதி கடிபட்டிருந்தது. வயிற்றுப்பகுதியில் ஒரு பெரிய காயம் இருந்தது. அநேகமாக கால்மூட்டின் அழுத்தத்தினால் உண்டாகி இருக்கக்கூடும். டுமாஸின் மருத்துவ கருத்தின்படி செல்வி லிஸ்பனே ஒரு அல்லது சில நபர்களால் கழுத்து நெறிக்கப்பட்டு கொலையுண்டிருக்கலாம். தாயின் சடலம் கொடூரமான முறையில் சிதைந்திருந்தது. வலது கை, கால் எலும்புகள் உடைந்து சிதறியிருந்தன. வலுவான இடது கால்பட்டை எலும்பும் நெஞ்செலும்புகளும் உடைந்திருந்தன. முழு உடலும் பயங்கரமாக காயமடைந்து நிறமாறி இருந்தது. எப்படி இத்தகைய காயங்கள் உண்டாகியிருக்கும் என்று சொல்வது எளிதல்ல. பெரிய கட்டை, அகன்ற இரும்புத் துண்டம், நாற்காலி, ஏதேனும் பெரிய ஆயுதம் ஒன்றினால் இது நிகழ்ந்திருக்கலாம். அதுவும் வலிமை மிகுந்த நபரால் பிரயோகிக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய ஆயுதங்கள் வைத்திருந்தாலுமே ஒரு பெண்ணால் இதைச் செய்திருக்க முடியாது. சாட்சியங்களின்படி, இறந்தவரின் தலை துண்டாகி விழுந்து பெரிய அளவில் உடைந்து சிதறியிருந்தது. முன்கழுத்து கூரிய கருவியால் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அது சவரக்கத்தியாக இருக்கக்கூடும்.

“அறுவை மருத்துவர் அலெக்சாண்டர் எடியென், மருத்துவர் டுமாஸுடன் சேர்ந்து சடலங்களைப் பார்வையிட்டவர். அவர் டுமாஸின் கருத்துகளையும் சாட்சியத்தையும் உறுதி செய்தார்.

“இன்னும் பலரையும் விசாரித்த பின்னும் வேறெந்த முக்கிய ஆதாரமும் கிடைக்கவில்லை. இத்தனை குழப்பங்களையும் மர்மங்களையும் தன் ஓவ்வொரு நகர்விலும் கொண்டிருக்கும் இந்தச் சம்பவத்தைப் போல- இதை கொலை என்று கருதினால்- இதற்கு முன் பாரீஸில் இதுபோல ஒரு கொலை நடந்ததில்லை. இத்தகைய துர்சம்பவம் நிகழ்ந்ததை வைத்துப் பார்த்தால் காவல்துறை முற்றிலும் தவறியிருக்கிறது. இந்நிலையிலும் ஒரு சிறு துப்பிற்கான தடயமும் சிக்கவில்லை.”

செய்தித்தாளின் மாலைப் பிரதி, புனித ரோச் நகர்ப்புறத்தில் அதீத பரபரப்பு இன்னும் தொடர்கிறது என்று குறிப்பிட்டது. மீண்டும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டும் நோக்கம் ஏதும் நிறைவேறவில்லை. பின்குறிப்பில் அடோல்ஃப் லெ போன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று தெரிவித்தது. மேலே சொன்ன தகவல்களைத் தவிர வேறேதும் லெ போனைக் குற்றவாளியாகக் கருத ஆதாரமாக கிடைக்காத நிலையிலும் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/The_Purloined_Letter.jpg/1200px-The_Purloined_Letter.jpg

இந்தச் சம்பவத்தின் முன்னகர்வுகளை முழு ஆர்வத்துடன் தியுபின் கவனித்து வந்ததாகத் தெரிந்தது. அவரது நடத்தையை வைத்து நான் அப்படி நினைத்தேனே அன்றி அவர் எந்தவிதமான கருத்தும் சொல்லவில்லை. லெ போன் கைதுக்குப் பின்னரே கொலைகள் பற்றிய எனது கருத்து என்ன என்று கேட்டார்.

ஒட்டுமொத்த பாரீஸும் சொல்வதைப் போல இது தீர்க்கமுடியாத ஒரு மர்மம் என்பதையே நானும் கருத்தாகக் கொண்டிருந்தேன். கொலையாளியைக் கண்டடைவதற்கு ஏதேனும் வழிகிட்டும் என்று என்னால் சொல்ல முடியவில்லை.

“இந்த அளவிலான ஆய்வைக்கொண்டு நாம் வழிமுறைகளைத் தேடக்கூடாது” என்றார் தியுபின். “பாரீஸ் காவல்துறை புத்திக்கூர்மைக்கும் தந்திரத்திற்கும் பெயர்போனது. ஆனால் இப்போது அப்படி இல்லை. அந்த நேரத்திற்கான வழிமுறைகளைத் தவிர வேறு படிநிலைகளை அவர்கள் சிந்திப்பதே இல்லை. ஏகப்பட்ட செயல்முறைகளின் வரிசையைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் குறிப்பிட்ட வழக்கிற்கு ஏற்றவாறு பொருத்தமாக கையாளப்பட வேண்டும். இசையைக் கேட்பதற்காக ஜோர்டைன் இரவு உடையணிந்து கொள்வதைப் போல இருக்கின்றன அவை. பலன்கள் பெரும்பாலும் வியப்பூட்டுவதாக இருப்பினும் அவை எளிய அக்கறையும் செயலும் ஒன்றாகி விளைவது. இந்தப் பண்புகள் கிடைக்காத நிலையில் அவர்களது திட்டங்கள் எல்லாம் வீணாகும். உதாரணமாக விடோக், ஒரு நல்ல ஊகத்திறனும் விடாமுயற்சியும் கொண்டவர். ஆனால் கல்விப் பின்புலமற்ற சிந்தனைகளால் அவர் தொடர்ந்து தன் விசாரணைகளில் பிழைகள் செய்துவந்திருக்கிறார். பொருட்களை தன் விழிகளுக்கு மிக அண்மையில் வைத்திருப்பதாலேயே குருடாகிறார். அப்படிச் செய்வதால் ஓரிரு தனித்துவமான விசயங்களைத் தெளிவுறப் பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக விசயத்தை கோட்டைவிட நேரிடுகிறது. இப்படித்தான் மீயாழம் என்றொரு பிரச்சினை உள்ளது. உண்மை எப்போதும் கிணற்றாழத்தில் இருக்காது. அறிவின் பின்புலத்தில் வைத்துப் பார்த்தால் உண்மை எப்போதும் மேல்தளத்திலேயே கிடைக்கும். நாம் பள்ளத்தாக்கில் தேடிக்கொண்டிருக்கையில் சத்திய தேவி மலையுச்சியில் நர்த்தனமாடுவாள். வானியல் நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்க்கையில் இத்தகைய பிழைகள் அடிக்கடி நிகழும். ஒரு நட்சத்திரத்தைக் காண்கையில் ரெடினாவின் புறப்பகுதிக்கு (உட்பகுதியைவிட அதிக ஒளியுணர்தன்மை கொண்ட பகுதி) அதைக் குவிக்கிறோம். நட்சத்திரத்தைத் தனித்துவமான கோணத்தில் பார்ப்பது என்பது அதன் அழகை இன்னும் பாராட்டுவது. அதை நம் கூரிய பார்வையில் பார்ப்பது அதன் அழகைச் சற்றே மங்கலாக்கக் கூடியது. பின்னதில் அதிக எண்ணிக்கையிலான கதிர்கள் விழியின் மீது விழும், முந்தையதில் அதைப் புரிந்துணர்வதற்கான வாய்ப்பு அதிகம். அளவுகடந்த ஆழத்தில் நாம் சிந்தனையைக் குழப்பி அதை மங்கச் செய்கிறோம். வெகு நேரடியான, நெடுநேரம் செய்யும் கூரிய அவதானிப்பில் நன்கு தெரியும் வெளியே நம் கண்களை மறைத்துவிடுகின்றன.

“இந்தக் கொலைகளைப் பொறுத்தமட்டில் நாம் அவர்களைப் பற்றிப் பேசும் முன் கொஞ்சம் சுய ஆய்வு செய்ய வேண்டும். ஒரு நேரடி விசாரணை நமக்கு ஆச்சரியங்களைத் தரக்கூடும். (எனக்கு இந்தச் சொல் இங்கு பொருந்தாததைப் போல் தோன்றியது என்றாலும் நான் ஒன்றும் மறுப்பு சொல்லவில்லை) இதுதவிர லெ போன் எனக்கு ஒருமுறை சேவையளித்துள்ளார். அதற்கு நான் நன்றி மறந்தவனாக இருக்கக்கூடாது. நாம் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று கண்ணால் காண்போம். எனக்கு காவலதிகாரி திருவாளர் ’ஜி’யை நன்கு தெரியும் என்பதால் தேவையான அனுமதி பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

அனுமதி பெற்று உடனடியாக மார்கு வீதிக்குப் புறப்பட்டோம். ரிசெலியு சாலைக்கும் புனித ரோச் சாலைக்கும் இடையில் இருந்த கொடுமையான பொதுப்பாதையில் சென்றாக வேண்டும். எங்கள் வசிப்பிடத்திலிருந்து நெடுந்தொலைவு என்பதால் நாங்கள் சென்று சேர்ந்தபோது பிற்பகல் கடந்து நெடுநேரம் ஆகியிருந்தது. வீட்டைச் சீக்கிரமே கண்டடைந்தோம். சாலையின் எதிரிலிருந்து அர்த்தமற்ற ஆர்வத்துடன் மூடப்பட்டிருந்த திரைகளைப் பார்த்தவண்ணம் இருந்த நிறைய மக்களைக் காணமுடிந்தது. அது வழக்கமான பாரீஸ் வீடு. ஒரு நுழைவாயிலுடன் இருந்தது. ஒரு பக்கத்தில் இழுப்புச் சாளரம் இருக்குமிடத்தில் பளபளப்பான கடிகாரப் பெட்டி இருந்தது. அது வரவேற்பறையாக இருக்கக்கூடும். உள்ளே போகும் முன் தெருவழியே இருந்த இன்னொரு சந்தின் வழியாக கட்டிடத்தின் கொல்லைப்புறத்திற்குச் சென்றோம். இதற்கிடையில் அண்டை வீடுகளை ஆரய்ந்தபடி வந்த தியுபின் இத்தனை கவனத்துடன் எதை நோக்கினார் என்று எனக்குப் புரியவில்லை.

எங்கள் தடங்களைப் பார்த்தபடியே அந்த இல்லத்தின் முன்பகுதிக்கு வந்து அழைப்பு மணி அடித்தோம். பிறகு அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் எங்கள் அடையாளச் சான்றைக் காட்டி உள்ளே நுழைந்தோம். படியேறி செல்வி லிஸ்பனே கண்டுபிடிக்கப்பட்ட அறைக்குப் போனபோது, இறந்தவர் இருவரும் அங்கேயே இன்னும் கிடத்தப்பட்டிருந்தனர். அறையில் இன்னும் ஒழுங்கின்மை அப்படியே இருந்தது. தெ டிரிபியுனாக்ஸில் குறிப்பிட்டதைத் தாண்டி என்னால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தியுபின் அனைத்தையும் நுட்பமாய்ப் பார்த்தார். இறந்தவர்களின் சடலங்களை அங்கு நான் எதிர்பார்த்திருக்கவில்லை. பிறகு துணைக்காவலருடன் அருகிலிருந்த அறைக்கும் தளத்திற்கும் சென்றோம். மீள வீடு திரும்புகையில் வழியில் இருந்த ஒரு செய்தித்தாள் அலுவலகத்திற்குள் தியுபின் நுழைந்தார்.

நான் என் நண்பரின் திடீர் சித்தச் சலனம் பலபடித்தானது என்பதை முன்பே சொல்லியிருந்தேன். அதை நான் கையாண்டாக வேண்டியிருந்தது. அடுத்தநாள் பிற்பகல் வரை இந்தக் கொலை தொடர்பான உரையாடல்கள் அனைத்தையும் நகைச்சுவையைப் பயன்படுத்தி ஒதுக்கினார். திடீரென அவர் என்னிடம் இந்தக் கொடூர நிகழ்வு நடந்த இடத்தில் ஏதேனும் குறிப்பிடத்தக்க விசயத்தை கவனித்தேனா என்று வினவினார்.

அவர் ’குறிப்பிடத்தகுந்த’ என்று சொன்ன விதம் என்னை ஏன் இப்படிக் கேட்கிறார் என்று துணுக்குற வைத்தது. 

“அப்படியொன்றும் இல்லையே? பத்திரிகையில் நாம் பார்த்ததைவிட மேலதிகமாக ஒன்றும் இல்லையே” என்றேன்.

அவர் “இச்சம்பவத்தின் அசாதாரண பகுதிக்குள் நாளிதழ் செல்லவே இல்லை” என்று பதிலளித்தார். நாளேடின் பயனற்ற கருத்துகளை ஒதுக்கினார். “என்னைப் பொறுத்தவரை இந்த மர்மம் எதன் காரணமாக எளிதில் தீர்வு காணப்பட வேண்டுமோ அதன் காரணமாவே தீர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. அதாவது இக்கொலையின் திகைக்க வைக்கக்கூடிய அசாதாரண தன்மையை! காவல்துறை கொலைக்கான- கொலைக்கு மட்டுமின்றி கொலை செய்யப்பட்ட விதத்திற்கும்- ஊக்கக் காரணி ஏதுமில்லை என்பதிலேயே தன் தலையை முட்டிக்கொண்டிருக்கிறது. மாடியில் கொலையுண்ட செல்வி லிஸ்பனேவைத் தவிர வேறுயாரும் அவ்வறையில் இல்லை என்பதும் கூட்டத்தின் பார்வையில் படாமல் இறங்கிச் செல்வதற்கு வழியேதும் இல்லை என்பதும் சர்ச்சைக்குரிய குரல்களைப் பற்றி முன்வைக்கப்பட்ட அசாத்தியமான கூற்றுகளைப் பொருள் கொள்வது குறித்தும் இன்னும் அவர்கள் குழம்பியிருக்கிறார்கள். அறையின் கொடூரமான ஒழுங்கின்மை, தலைகீழாகத் திணிக்கப்பட்ட சடலத்தின் தோற்றம், இன்னும் இன்னும் நான் குறிப்பிட்டுக்கொண்டிருக்கத் தேவையற்ற விபரங்கள் எல்லாம் அரசாங்க அதிகாரிகளின் கூர்மையான அறிவுத்திறனை உறையவைக்கப் போதுமானவையாக இருந்திருக்கின்றன. அவர்கள் அசாதாரணத்திற்கும் மறைபொருளுக்குமான இடைவெளியில் நிகழும் பொதுவான பிழையின் வலையில் வீழ்ந்துவிட்டனர். ஆனால், வழக்கமான தளத்திலிருந்து விலகிய நிகழ்வுகள்தான் உண்மையை நோக்கிய தேடலுக்கு உதவும். நாம் பின்தொடரும் இத்தகைய விசாரணைகளில் ‘என்ன நடந்தது’ என்பதைவிட ’இதற்கு முன் நிகழாதது இங்கு என்ன நடந்திருக்கிறது’ என்ற கேள்வியே அதிகம் எழுப்பப்பட வேண்டும். உண்மையில் இம்மர்மத்தில் நான் அடைந்திருக்கும் அல்லது அடையவிருக்கும் விடையானது, காவல்துறையின் நேரடிப் பார்வையில் தீர்க்கவே முடியாதது என்று கருதப்படும் கருத்திற்கு நேர்விகிதத்திலானது” என்றார்.

மேலும் எங்கள் குடியிருப்பின் கதவினை நோக்கியபடியே தொடர்ந்து சொன்னார்- “நான் இப்போது இந்தக் குற்றத்தினைச் செய்தவர் எதோ ஒரு விதத்தில் இதோடு தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்றெண்ணிக் காத்திருக்கிறேன். குற்றங்கள் நிகழும்போது குற்றம் செய்தவர் அப்பாவியாக இருந்துவிடும் நேர்வுகள் மோசமானவை. இந்த ஊகத்தில் நான் சரியாக இருக்கவேண்டும் என்று நம்புகிறேன். ஏனெனில் அதை அடிப்படையாக வைத்தே இந்த ஒட்டுமொத்த புதிரையும் அவிழ்க்க வேண்டியுள்ளது. இந்த அறைக்கு அந்த ஆள் எந்நேரமும் வரக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன். அவன் வராமலும் போகலாம் என்றாலும் வந்துசேர்வான் என்பதற்குச் சாத்தியங்கள் அதிகம். அவன் வந்துவிட்டால் இங்கேயே பிடித்து வைக்க வேண்டியது அத்தியாவசியமாகிவிடும். இதோ கைத்துப்பாக்கி, சூழ்நிலைக்குத் தேவை எனில் இதை எப்படி பயன்படுத்துவது என்பது நம் இருவரும் தெரியும்.”

தன்னுரையாடலைப் போல தியுபின் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட நான் என்ன செய்கிறேன் எதை நம்புகிறேன் என்ற தெளிவின்றிக் கைத்துப்பாக்கியைப் பெற்றுக்கொண்டேன். இத்தகைய தருணங்களில் அவரது குழப்பமான நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அவரது சொற்கள் என்னை நோக்கி இருந்தபோதும் அவரது குரல்- பெரிதாக சத்தமின்றி இருந்தபோதும்- தொலைவில் இருப்பவரிடம் பேசும் தோரணையில் இருந்தது. அவர் விழிகள் வெற்று பாவத்துடன் சுவரை நோக்கியிருந்தது.

“கூட்டத்தில் இருந்தவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய குரல்கள் பெண்மணிகளின் குரல்கள் அல்ல என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகி உள்ளது. இதனடிப்படையில் மூதாட்டியே தன் மகளைக் கொன்று சிதைத்துவிட்டு, தான் தற்கொலை செய்திருக்கலாமோ என்ற ஊகம் முற்றிலும் அடிபட்டுவிடுகிறது. தர்க்கப் படிநிலைகளுக்காகச் சொன்னால் திருமதி லிஸ்பனேவின் உடல்வலிமையைக் கொண்டு நிச்சயம் மகளின் சடலத்தை அது புகைப்போக்கியில் திணிக்கப்பட்டிருந்த நிலைமையை ஏற்படுத்தியிருக்க முடியாது. மூதாட்டியின் மீதிருக்கும் காயங்களின் ஆழம் அவரே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருப்பார் என்ற கருத்தை தவிடுபொடி ஆக்குகிறது. எனவே வேறொருவரால் கொலை செய்யப்பட்டிருக்கிறது. அவர்களின் குரலே ஆட்களால் கேட்கப்பட்டிருக்கிறது. குரல்களைப் பற்றிய முழு சாட்சியத்தையும் ஆராயாமல் எது தனித்துவமான கூற்றாக இருக்கிறது என்று மட்டும் சொல்கிறேன். நீங்கள் அப்படி ஏதேனும் தனித்துவமான கூறைக் கண்டீர்களா?” என்றார்.

பலரும் ஒரு முரட்டுக் குரல் ஃபிரெஞ்சுக்காரனுடையது என்பதை ஒரே மாதிரி சொல்ல, கீச்சுக் குரலைப் பற்றி மட்டும் ஒவ்வொருவரும் வெவ்வேறாகச் சொன்னதையும், ஒருவர் அதைக் கரடுமுரடானது என்றும் குறிப்பிட்டார் என்பதையும் சொன்னேன். 

“அதுதான் ஆதாரமே” என்று சொன்ன தியுபின் தொடர்ந்தார்- “ஆனால் அது ஆதாரத்தின் தனித்துவம் இல்லை. நீங்கள் அதில் சிறப்பாக எதையும் காணவில்லை. அதில் கவனிப்பதற்கு முக்கியமாக ஒன்று இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டதைப் போல சாட்சியங்கள் முரட்டுக் குரல் பற்றி ஒருமனதாகச் சொல்கிறார்கள். ஆனால் கீச்சுக் குரல் பற்றி சொன்னதில் ஒரு விசித்திரம் இருக்கிறது. அவர்கள் ஒருமனதாகச் சொல்லாதது மட்டும் இல்லை. மாறாக இத்தாலி, ஆங்கிலம், ஸ்பெயின், ஹாலந்து, ஃபிரெஞ்சு என ஒவ்வொரு தேசத்தவரும் பிற தேசத்து நாட்டவனது குரலாக அதைக் குறிப்பிட்டனர். ஒவ்வொருவரும் அது தனது நாட்டவனது குரல் அல்ல என்பதில் தெளிவுடன் இருந்தனர். ஒவ்வொருவரும் தனக்கு உரையாடத் தெரியாத மொழியையே தெரிவித்தனர். ஃபிரெஞ்சுக்காரன் ஸ்பெயின் நாட்டவன் என்றான், தான் ஏற்கனவே அறிந்திருந்த சில ஸ்பெயின் சொற்களை இங்கு குறிப்பிட்டான். டச்சுக்காரன் இது ஃபிரெஞ்சு மொழி என்று சொன்னான். ஆனால் மொழிபெயர்ப்பாளர் வைத்து பேசியதால் அவருக்குப் ஃபிரெஞ்சு தெரியாது என்பதை நாம் கண்டுகொண்டோம். ஆங்கிலேயன் அதை ஜெர்மன் மொழி என்று சொன்னாலும் அவனுக்கு ஜெர்மன் மொழி தெரியவில்லை. ஸ்பெயின் தேசத்தவன் நிச்சயம் அது ஆங்கிலம்தான் என்றான், கூடவே தனக்கு ஆங்கிலம் தெரியாது என்றபோதும் அதன் தோரணையை வைத்து கண்டுபிடித்ததாகவும் சொன்னான். இத்தாலி தேசத்தவன் அது ரஷ்யனுடைய குரல் என்றும் தான் ஒருபோதும் ரஷ்ய தேசத்தவனுடன் உரையாடியதில்லை என்றும் சொன்னான். இன்னொரு ஃபிரெஞ்சுக்காரன் வேறுமாதிரி சொன்னான். இத்தனை விதமான வாக்குமூல வேறுபாடுகளைக் கிளப்பும் அளவிற்கு அந்தக் குரலுக்கு அப்படியென்ன விசித்திரத் தன்மை இருக்கக்கூடும்? ஐரோப்பாவின் ஐந்து பெரிய தேசங்களில் வாழ்வோருக்கு அப்படி பழக்கமாயிராத வழக்கு என்ற ஒன்று எப்படியிருக்கும்! நீங்கள்கூட அதுவொரு ஆசியனுடையது அல்லது ஆஃப்ரிக்கனுடையது என்று சொல்லலாம் போலிருக்கிறதே! ஆனால் ஆசியர்களோ ஆஃப்ரிக்கர்களோ பாரீஸில் வாழ்வதில்லையே? ஆனால் அனுமானங்களைத் தவிர்க்காமல் உங்களை மூன்று முக்கிய விசயங்களைக் கவனிக்க அழைக்கிறேன். ஒருவர் மட்டும் அக்குரலை ‘கீச்சு என்று சொல்வதைவிட கரடுமுரடானது எனலாம்’ எனக் குறிப்பிட்டார். வேறு இருவரால் அக்குரல் ‘விரைந்தும் சமநிலையற்றும்’ இருந்ததாகவும் சொல்லப்பட்டது. சொல் என்கிற அளவில் எந்த ஒலியும் செவியில் விழுந்ததாக ஒருவரும் குறிப்பிடவில்லை.

“இதுவரை உங்கள் புரிதலுக்கு எப்படி உதவியிருக்கிறேன் என்பதை அறியேன். ஆனால் சாட்சியத்தின் இப்பகுதியை மட்டுமே (அதாவது முரட்டுக்குரல், கீச்சுக்குரல் பற்றி) விதிகளின்படி கழித்துக்கட்டுதல் செய்தாலே போதிய சந்தேகத்தை அது உருவாக்கும். அது சுட்டும் திசையிலிருந்து மேலதிக துப்பறிதலைத் தொடர்வதே இந்த மர்ம விசாரணைக்கு நலம் பயக்கும். ‘விதிகளின்படி கழித்துக் கட்டுதல்’ என்று சொன்னேன். அதை விளக்குகிறேன். ஒற்றை முடிவை நோக்கிச் சென்றால் ஒழிய சந்தேகத்திற்கு இடமிருந்தபடியே இருக்கும். அதற்காக ஒவ்வொரு கூற்றாக கழித்துவிடும் முறையை நான் உருவாக்கி இருக்கிறேன். சந்தேகம் என்பது என்ன என்பதை இன்னும் நான் சொல்லவில்லை. அறையில் எனது விசாரணைகளை ஆமோதிக்கும் வண்ணம் மனநிலையை வைத்துக்கொள்வதே போதுமானது என்பதை நீங்கள் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். 

“நாம் இப்போது கற்பனையில் அந்த அறைக்குள் செல்வோம். நாம் முதலில் கேட்க வேண்டியது என்ன? கொலையாளிகள் வெளியேற பயன்படுத்திய பாதை. நாம் இருவருமே அமானுஷ்ய விசயங்களில் நம்பிக்கையற்றவர்கள். லிஸ்பனேகள் ஆவியால் கொல்லப்படவில்லை. வேறெப்படி? அதிர்ஷ்டவசமாக ஒரேயொரு அறிவுப்பூர்வமான யோசனை இருக்கிறது. அதன் வழியே வரையறுக்கும் முடிவிற்குச் சென்றாக வேண்டும். வெளியேறுவதற்கான சாத்தியங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்குவோம். கூட்டம் படியேறும் போது, செல்வி லிஸ்பனே கண்டெடுக்கப்பட்ட அறையில் கொலையாளிகள் இருந்திருக்கிறார்கள் என்பது திண்ணம் அல்லது அருகில் இருந்த அறையிலேனும். எனவே இந்த இரு அறைகளில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால் போதும். காவல்துறை தரை, கூரை, சுவர் என அனைத்தையும் அலசிவிட்டனர். எந்த இரகசியமும் அவர்கள் விழிகளிலிருந்து தப்பியிருக்க முடியாது. ஆயினும் அவர்களது விழியை நம்பாமல் நானே உற்றுப் பார்த்தேன். ஒரு இரகசியமும் மீதம் இல்லை. அறைகளின் இரு கதவுகளும் உட்தாழிட்டு சாவிகள் உள்ளிருக்க பாதுகாப்பாக பூட்டப்பட்டிருந்தது. புகைப்போக்கிக்கு வருவோம். நெருப்பிலிருந்து வழக்கமாக இருக்கும் எட்டு அல்லது பத்தடி உயரத்தில் பெரிய பூனையின் உடல்கூட முழுவதும் நுழைய முடியாது. இவ்வழியில் வெளியேறுவதற்கான அசாத்தியம் தீர்க்கமானது. நமக்கு சாளரங்கள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. முன் அறையிலிருந்து ஆட்களின் விழியில் படாமல் ஒருவரும் ஓடித் தப்பியிருக்க வாய்ப்பில்லை. கொலையாளிகள் பின் கதவு வழியேதான் வெளியேறி இருக்கக்கூடும். இப்படி வெளிப்படையாகக் காணமுடிந்த அசாத்தியங்களை ஒதுக்கிவைத்து தெளிவான முடிவிற்கு வந்துகொள்வோம். இத்தகைய வெளிப்படையான அசாத்தியங்கள் உண்மை என்பதை நிறுவ வேண்டியதுதான் நமக்கு எஞ்சியிருக்கும் பணி.

“அறையில் இரண்டு சாளரங்கள் இருக்கின்றன. அதிலொன்று எந்த மரப்பொருளாலும் மூடப்படாமல் முழுவதும் திறந்திருக்கிறது. இன்னொன்றின் கீழ்ப்பகுதி பார்வையை மறைக்கும்படி அதன் மீது ஒட்டி சாய்த்துவைக்கப்பட்டிருந்த கட்டிலால் மூடப்பட்டிருக்கிறது. முந்தையது பாதுகாப்பாக உட்தாழிடப்பட்டிருக்கிறது. அதைத் திறக்கப் பலரும் ஒன்றுசேர்ந்து முயன்ற போதும் அது திறக்கவில்லை.

அதன் சட்டத்தில் இடப்புறமாக பெரிய துளைப்பானால் இடப்பட்ட ஓட்டை இருக்கிறது. அதில் தலைப்பகுதியில் குண்டு ஆணி ஒன்று பொருந்தியிருக்கிறது. இந்தப் பலகணியைத் திறக்கச் செய்த முயற்சிகளும் வீணாகியிருக்கின்றன. காவல்துறை இந்த வழியில் நிச்சயம் தப்பிக்க உதவியிருக்காது என்பதில் தீர்மானமாக இருக்கின்றனர். அதனால் சம்பளத்திற்கும் அதிகமாக பணிசெய்யும் முனைப்பில் ஆணிகளைத் திருகி சாளரத்தைத் திறக்க முற்பட்டிருக்கிறார்கள்.

“என் ஆய்வு இன்னும் தனித்துவமானது. நான் இப்போது சொன்ன வெளிப்படையான அசாத்தியங்கள் நிரூபணமாக வேண்டும் என்பது முக்கியம்.”

“எனவே நான் மனக்கண்ணில் பின்னோக்கிச் செல்லுதல் முறையில் சிந்திக்கிறேன். கொலையாளிகள் இந்த இரு சாளரங்களில் ஒன்றின் வழியே தப்பியிருக்கிறார்கள். இப்படியிருக்க அவர்கள் நாம் பார்த்தவாறு கொக்கியை மீண்டும் உள்ளிருந்து பொருத்தியிருக்க முடியாது. இத்தகைய தெளிவே இவ்விசயத்தில் காவலர்கள் திருப்தியாக இது வழியாக இருக்க முடியாது என்று சிந்திக்க வைத்திருக்கிறது. இருப்பினும் கொக்கிகள் போடப்பட்டிருக்கின்றன. ஒருவேளை அவற்றிற்குத் தானாக பொருந்திக்கொள்ளும் ஆற்றல் இருந்திருக்க வேண்டும். இம்முடிவிலிருந்து வேறு மாதிரி சிந்திக்க முடியாது. மறைக்கப்படாத சாளத்திற்குச் சென்று, ஆணியைச் சிரமப்பட்டு பிடுங்கி, கொண்டியை உயர்த்தித் திறக்க முயன்றேன். என் வலிமையைப் பொருட்படுத்தாதபடி அது அப்படியே இருந்தது. எதிர்பார்த்ததுதான். மறைவான சுருள்வில் ஒன்று உள்ளே இருக்கிறது. இந்த உறுதிப்பாடு குறைந்தபட்சம்- எத்தனை மர்மத்தனம் இருந்த போதும் ஆணிகளைத் துழாவுகையில்- என் முதல்நிலை அனுமானங்கள் குறித்த எனது கருத்துகளைச் சரியென்று தெரிவிக்கிறது. கவனமான தேடல் மறைந்திருந்த சுருள்வில்லைக் காட்டியது. அதை அழுத்தினேன். என் கண்டுபிடிப்பு திருப்தி தந்தது. கொண்டியை உயர்த்தித் திறக்க முடிந்தது.

“இப்போது ஆணியை மாற்றிவிட்டு கவனத்துடன் பார்த்தேன். இந்த சாளரத்தின் வழியே கடக்கையில் ஒரு ஆள் மீள சாத்தியிருக்க முடியும், அப்போது சுருள்வில் மாட்டியிருக்கும். ஆனால் ஆணிகள் இடமாற முடியாது. முடிவு என் விசாரணைகளின் அகலத்தைக் குறைத்தது. கொலையாளிகள் அடுத்த சாளரத்தின் வழியே தப்பியிருக்கக்கூடும். அப்படியானால் கொண்டிகளில் இரண்டு ஒரே மாதிரியானவையாகவும் அநேகமாக ஆணிகளின் அமைப்பில் சிறு வேறுபாடு கொண்டும் இருக்கும். குறைந்தது அது பொருத்தப்படும் அமைப்பிலேனும் வித்தியாசம் இருக்கும். கட்டிலின் அமைப்பைப் பொறுத்தவரை, அதை இரண்டாவது சாளரத்தினருகே நின்று பார்த்தேன். தலைமாட்டின் பின்புறம் கைவிட்டுப் பார்த்தபோது உடனடியாகத் தட்டுப்பட்ட சுருள்வில்லை அழுத்தினேன். அது பக்கத்துச் சாளரத்தில் உள்ளதை ஒத்திருக்கும் என்றே கருதியிருந்தேன். அப்படியே இருந்தது. இப்போது ஆணியைப் பார்த்தேன். மற்றதைப் போலவே குண்டாகவும் பொருந்தும் விதத்தில் ஒரே மாதிரியும் இருந்தது.

“நான் குழம்பியிருப்பதாக நீங்கள் கருதக்கூடும். ஆனால் யோசித்துப் பார்த்தீர்கள் எனில் துண்டுகளின் இயல்பை நீங்கள் பிழையாகப் புரிந்துவைத்திருப்பது விளங்கும். உத்வேகத்துடன் சொல்ல வேண்டுமெனில் நான் ஒருமுறைகூட பிழை செய்ததில்லை எனலாம். நுகர்வின் சங்கிலி ஒரு கணுவிலும் அறுபடவில்லை. அதன் இறுதி முடிவை நோக்கி நான் தேடத் தொடங்கினேன். முடிவு ‘ஆணி’தான்! அடுத்த சாளரத்தில் இருப்பதைப் போலவே அதன் தோற்றம் இருந்தாலும் (இது முடிவானது என்று தோன்றக்கூடும்) நான் சொல்லவிருக்கும் விசயத்தைச் சிந்தித்தால் இந்தத் தகவல் அப்படியே தலைகீழாக மாறி துப்பு துலங்குவதைக் காணலாம். ஆணியில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அதைத் தொட்டுப் பார்த்தேன். தண்டுப் பகுதி உடைந்து துளை உள்ளேயே இருக்க கொண்டைப் பகுதி என் கையோடு வந்துவிட்டது. அந்த உடைவு பழையது. (ஓரங்கள் துருவேறி இருந்ததை வைத்தே சொல்லலாம்.) சுத்தியால் அடிக்கும் போது அரைகுறையாக அடி விழுந்து கொண்டைப் பகுதி உடைந்திருக்கிறது. இப்போது நான் எடுத்த இடத்திலேயே அதை மீண்டும் வைத்தேன். ஒரு முழு ஆணி பூரணமாக இருந்தது. உடைவு கண்ணில் தெரியவே இல்லை. சுருள்வில்லை அழுத்தி கொண்டியை சில இன்ச்சுகள் உயர்த்திப் பார்த்தேன். கொண்டைப்பகுதி அதோடு சேர்ந்தே எழுந்தது. மிச்சப்பகுதி குழியிலேயே இருந்தது. சாளரத்தை மூடினேன். உடையாத ஆணியின் முழுத்தோற்றம் மீண்டும் தெளிவுபட இருந்தது.

https://cdn.nivoli.com/adventuregamers/images/screenshots/16889/12869.jpg

”புதிர் இப்போது அவிழத் தொடங்கிவிட்டது. படுக்கையின் மேற்புறமாக இருக்கும் சாளரத்தின் வழியே கொலையாளி வெளியேறியிருக்கிறான். வெளியேற்றத்திற்குப் பின் தானாகவோ அல்லது கொலையாளியாலோ சுருள்வில் உதவியுடன் மீண்டும் கச்சிதமாகப் பொருந்தி மூடியிருக்கிறது. சுருள்வில்லின் பணியைக் கவனிக்காமல் இந்தச் சாளரம் திறக்கப்படவே இல்லை என்ற முடிவிற்கு காவல்துறையினர் வந்திருக்கின்றனர். இதனால் தொடர்விசாரணை இந்தக் கோணத்தில் தேவையற்றது என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.

“அடுத்த கேள்வி இறங்கிய விதம் என்ன என்பது. இந்த விசயத்தில் உங்களோடு கட்டிடத்தைச் சுற்றி நடந்தபோது கிடைத்ததே போதுமானது. குறிப்பிட்ட சாளரத்திலிருந்து ஐந்தரை அடி தொலைவில் ஒரு இடிதாங்கி இருக்கிறது. இதிலிருந்து எவர் ஒருவராலும் சாளரத்தை எட்டிப்பிடிக்க முடியாது என்பதால் அதில் நுழைவது வாய்ப்பே இல்லை. ஆனால் நான்காம் தளத்தின் இழுப்பு கதவுகள் பாரீஸில் மட்டுமே இருக்கும் தனித்துவமான கதவுகள். இந்நாட்களில் அரிதாகவும் லையான் போர்டே போன்ற பழைய கட்டிடங்களில் வழக்கமாகக் காணப்படுபவையாகவும் அவை இருக்கின்றன. வழக்கமான ஒற்றைக் கதவுகளைப் போல இருந்தாலும் அதன்கீழ் பாகம் வலைப்பின்னலைப் போல குறுக்கு நெடுக்கு தட்டியால் அடைக்கப்பட்டிருக்கும். அவ்விதத்தில் கைகளால் நன்கு பற்றிக்கொள்ளும் வண்ணம் இருக்கும். நம் வழக்கில் இது மூன்றடி உயரமும் அரையடி அகலமும் கொண்டது. வீட்டின் பின்புறத்திலிருந்து பார்க்கையில் அவை பாதி திறந்த நிலையில் சுவரிலிருந்து செங்குத்தான கோணத்தில் தெரிந்தது. காவலர்களும் நானும் வசிப்பிடத்தின் பின்புறத்தை ஆராய்கையில் இந்தத் தட்டியின் அகலத்தை இத்தனை அகலமாக கவனிக்காமல் இருந்திருக்கலாம் அல்லது இத்தனை களேபரத்திற்கு இடையில் பொருட்படுத்தாமலேயே விட்டிருக்கலாம். உண்மையில் வெளியேற்றத்திற்கான வாய்ப்பு இந்தப் பகுதியில் இல்லை என்று முடிவுகட்டிய பிறகு துரிதமான ஆய்வுமுறைகளுக்குச் சென்றிருக்கக்கூடும். கட்டில் இருந்த சாளரத்திற்கு வெளியே இந்தத் தட்டி திறக்கப்பட்டு சுவரையொட்டி இருக்குமேயானால் இடிதாங்கியிலிருந்து வெறும் இரண்டே அடிகளில் பற்றக்கூடிய நிலையில் இருக்கும் என்பது எனக்குத் தெளிவானது. கடுமையான செயல் ஆற்றலுடனும் தைரியத்துடனும் சாளரத்திற்குள் நுழைய இடிதாங்கியிலிருந்து ஒருவர் முயன்றிருந்தால் அது சாத்தியப்பட்டிருக்கக் கூடியதே. இப்போது இழுப்புக்கதவு முற்றிலும் திறக்கப்பட்டிருப்பதாக கருதுவோம். இரண்டரை அடிகளைக் கைநீட்டிப் பற்றி வலைப்பின்னல் தட்டியைக் கெட்டியாகப் பிடித்தபடி ஒரு திருடன் முன்னேறியிருக்கலாம். அதற்குப்பின் இடிதாங்கியில் இருந்த பிடிமானத்தைத் தளர்த்தி, தன் கால்களால் சுவரில் உந்தியெழுந்து உடலை முன்னகர்த்தி இழுப்புக் கதவை மூடுவதைப் போன்ற இயக்கத்தில் நாம் திறந்திருப்பதாக ஊகித்திருக்கும் சாளரத்தின் வழியே அறைக்குள் சென்றிருக்க முடியும். 

“செய்வதற்கரிய கடினமான வழமை மீறிய செயல்பாட்டைப் பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் மனத்தில் நிறுத்த வேண்டும் என்று நான் வேண்டுகிறேன். இந்தச் செயல் சாத்தியமானதே என்று உங்களுக்குக் காட்ட விரும்புவதே எனது நோக்கம். இரண்டாவதாக வெகு முக்கியமாக, மிகவும் அசாதாரணமான ஒன்றை, கிட்டதட்ட அமானுஷ்யமான ஒன்றைச் செய்ய எத்தனை துரிதமும் ஆற்றலும் தேவைப்படும் என்பதை உங்கள் மனதில் பதியவைப்பதே என் நோக்கம்.

“நீங்கள் சட்டத்தின் மொழிப்படி ஒரு வழக்கைச் சிந்தித்து முடிக்க, ஒருவர் தன் எண்ணங்களைக் கட்டுக்குள் வைத்து ஆராய வேண்டும் என்று சொல்ல முனையலாம். அதில் சந்தேகமே இல்லை. இது சட்டரீதியாக சரியானதாக இருக்கலாம். ஆனால் பகுப்பாய்வு செய்கையில் இது பொருந்தாது. இறுதி முடிவு சத்தியத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். அதுவே முதன்மையானது. எனது உடனடி நோக்கம் உங்களை, நாம் இப்போது பேசியது போன்றதொரு நிலைமாறு நிலையில் வைத்து, விசித்திரமான கீச்சுக் குரல் அல்லது முரட்டுக் குரல் ஒன்றை எந்த இருவரும் உறுதியாக இந்த மொழி என்று சொல்ல முடியாமல் போனதோ, பொருட்பதத்தைக் குறிப்பிட முடியாமல் போனதோ, அங்கு உங்களை அழைத்துச் சென்றாக வேண்டும். 

இந்தச் சொற்களைக் கேட்டு தியுபின் என்பதற்கான அர்த்தம் மங்கலான அரைகுறை வடிவத்தில் என் மனத்தில் மினுமினுத்தது. நான் புரிதலின் விளிம்பில் புரிந்துகொள்வதற்கான ஆற்றலின்றி நின்றேன். சில நேரங்களில் நினைவின் ஓரத்தில் நின்றபடி நினைவை மீட்டெடுக்க முடியாமல் தவிப்போமே அதுபோல. நண்பரோ தொடர்ந்து தன் சொற்பொழிவை ஆற்றியபடி இருந்தார்.

“நான் வெளியேற்றத்திற்கான பிரச்சினையிலிருந்து மெல்ல நழுவி உள்ளே எப்படி வர முடியும் என்பது பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம். இரண்டுமே ஒரே விதத்தில் ஒரே புள்ளியில் ஒரே விதமாக நடந்திருக்கிறது என்பதே நான் கூற விரும்புவது. இப்போது அறையின் உள்ளமைப்பிற்கு வருவோம். அதன் தோற்றத்தை ஆராய்வோம். அலமாரியின் இழுப்புகள் நன்கு கலைக்கப்பட்டிருந்த பின்பும் பல பொருட்கள் அப்படியே அங்கேயே இருந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு முடிவு அபத்தமானதாக இருக்கிறது. சிறுபிள்ளைத்தனமான ஊகம் அன்றி வேறில்லை. இந்த இழுப்புகளில் முன்பே இருந்த அதே பொருட்கள்தான் அப்படியே இன்னும் இருக்கின்றன என்பதை நாம் எப்படி அறிய முடியும்? திருமதி லிஸ்பனேவும் அவர் மகளும் தனிமையான வாழ்வையே வாழ்ந்தனர். அவர்களுக்கு நெருங்கியவர்கள் யாருமில்லை, எப்போதாவதுதான் வெளியே சென்றிருக்கிறார்கள். கண்டறிந்த பொருட்கள் யாவுமே இந்தப் பெண்களால் நல்ல தரத்தில் பயன்படுத்தப்பட்டவை. பழக்கங்களை மாற்றிக்கொள்வதற்கான தேவையொன்றும் பெரிதாக இருக்கவில்லை. திருடன் இவற்றைக் கண்டு ஏன் தரமானவற்றை எடுக்காமல் செல்ல வேண்டும்? ஏன் அனைத்தையுமே எடுக்காமல் செல்ல வேண்டும்? ஏன் நாலாயிரம் தங்க ஃபிராங்குகளை கைத்தறித் துணியிடையில் விட்டுச்செல்ல வேண்டும்? தங்கம் கைவிடப்பட்டிருக்கிறது. திரு. மிக்னாட் குறிப்பிட்ட தொகை முழுமையுமே தரையில் கிடந்த பையில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதைப்போன்ற (பணம் எடுக்கப்பட்டு மூன்று நாட்களில் கொலையுண்டதைப் போல) நூற்றுக்கணக்கான தற்செயல் நிகழ்வுகள் நம் தினசரி வாழ்வில் நம் கவனத்தை ஈர்க்காமலேயே நடந்தபடியே இருக்கிறது. நிகழ்தகவு கருதுகையைக் கற்றறிந்திடாத ஒருவர் குற்றத்தைப் பகுப்பாய்வு செய்யும்போது இந்தத் தற்செயல் நிகழ்வுகள் பெரும் மனத்தடையாக முன்னிற்கும். மகத்தான விளக்கங்களைத் தருவதற்காக இந்தக் கருதுகைக்கு மனித ஆய்வு செய்பவர்கள் பெரிதும் கடன்பட்டிருக்கின்றனர். இது நிச்சயம் தூண்டுக்காரணி பற்றிய எண்ணத்திற்கு உதவும். இந்த வழக்கில் வெறியாட்டத்திற்கான தூண்டுக்காரணம் தங்கம் என்று வைத்துக்கொண்டால் குற்றவாளி அந்தத் தங்கத்தையே கைவிட்டுவிட்டு தன் நோக்கத்தை மறந்துபோன அடிமுட்டாளாகக் காட்சியளிக்கிறான். 

“உங்களை கவன ஈர்ப்பு செய்வதற்காக நான் தெரிவித்த – அந்தத் தனித்துவமான குரல், வழக்கத்திற்கு மீறிய வெறியாட்டம், தூண்டுக் காரணியின்மை ஆகிய விசயங்களை மனத்தில் இருத்தியபடி இத்தகைய கொடூர கொலையை ஆய வேண்டியுள்ளது. கைவலிமையால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஒரு பெண் புகைப்போக்கியில் தலைகீழாகத் திணிக்கப்பட்டிருக்கிறாள். சாதாரண கொலையாளிகள் இத்தகைய கொலை வழியை மேற்கொள்ள மாட்டார்கள். குறைந்தபட்சம் கொல்லப்பட்டவர்களை இவ்விதத்தில் மறைத்துவைக்க மாட்டார்கள். சடலத்தைப் புகைப்போக்கியின் உள்ளே திணிக்கப்பட்ட விதத்தைப் பார்த்தால் நிச்சயம் இது வேறு மாதிரியானது என்பதை ஏற்பீர்கள். வழக்கமான மனித சேஷ்டைகளில் இன்னும் சொல்லப்போனால் மனிதர்களில் மிகவும் வழுவிய ஆட்களான நடிகர்கள்கூட இப்படி செய்யச் சிந்திக்க மாட்டார்கள். பலரும் சேர்ந்து கீழே இழுக்க சிரமப்பட்ட நிலையில் ஒரு சடலத்தை அந்நிலைக்குச் செருகி வைக்க எத்தனை வலிமை இருந்தாக வேண்டும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 

“வீரியமிக்க இந்தக் கொலையின் பிற அறிகுறிகளைப் பார்ப்போம். அடுப்பங்கரையில் தடித்த நரை முடி கொத்துகள் இருந்தன. இவை வேரோடு பிடுங்கப்பட்டவை. இருபது முப்பது முடிகளைக்கூட வேரோடு பிடுங்குவதற்கு எத்தனை ஆற்றல் தேவைப்படும் என்பதை உங்களால் கணிக்க முடியும். தலை மோதியிருந்த பூட்டுகளை என்னைப் போலவே நீங்களும் கண்டீர்கள். அதன் வேர்ப்பகுதியில் குருதித்திட்டுகள் இருந்தன. முதியவரின் கழுத்து மட்டும் வெட்டுப்படவில்லை தலைமுண்டத்திலிருந்து தனியாக அறுத்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் வெறும் சவரக்கத்தியின் துணைகொண்டு. இந்தச் செயல்களில் உள்ள மிருகத்தனத்தைக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். திருமதி லிஸ்பனேவின் உடலில் இருந்த சிராய்ப்புகளைப் பற்றி நான் பேசவில்லை. திரு டுமாஸும் திரு எடெனியும் அவை கூர்மழுங்கலான ஒரு ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டவை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். இதுவரை இவ்விரு கணவான்களும் சரியாகவே சொல்லியிருக்கின்றனர். முற்றத்திலிருந்த கற்பாதையே அந்தக் கூர்மழுங்கிய ஆயுதம். கட்டில் அருகே இருந்த சாளரத்திலிருந்து கீழே விழுந்த திருமதி லிஸ்பனேவிற்கு அங்கு ஏற்பட்ட காயம் அது. ஒன்று எத்தனை எளிமையானதாகத் தோன்றுகிறதோ அத்தனை முக்கியமானது. ஆணிகளின் விசயத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்த கொண்டியை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்ட துணிபால் சாளரம் திறந்திருக்கவே முடியாது எனும் கருத்தினை அடைந்துவிட்டனர். 

“இவை அனைத்திற்கும் மேலதிகமாக இப்போது விசித்திரமான முறையில் குலைந்திருந்த அறையைப் பற்றி முறையாகச் சொன்னீர்கள். இதுவரை பிரமிக்க வைக்கும் வெறியாட்டம், அமானுஷ்ய வலிமை, கொடூரமான மிருகத்தனம், தூண்டுக்காரணியற்ற குத்துவெட்டு, பதைபதைப்பூட்டும் திகில் இவை அனைத்தும் மனித செயல்பாட்டிற்கு அந்நியமானவையாகவே தெரிகின்றன. பல தேசத்தவரும் வெவ்வேறு மொழியைச் சுட்டியபோதும் ஒரு சொல்லைக்கூட இனம் காண முடியாத நிலை. இதிலிருந்து தொடர்ந்து எந்த முடிவுக்குச் செல்லலாம்? உங்கள் மனவோட்டத்தில் எத்தகைய பதிவை நான் உண்டாக்கி இருக்கிறேன்?”

இப்படி தியுபின் வினவியதும் என் தசையில் ஒரு வெட்டுணர்வை அறிந்தேன். “பைத்தியம்” என்று சொல்லித் தொடர்ந்தேன். “அருகில் உள்ள மெய்சன் தெ சாண்டேவிலிருந்து தப்பிவந்த ஒரு வெறிபிடித்த பைத்தியக்காரன்தான் இதைச் செய்திருக்க முடியும்.”

“ஒரு வகையில் உங்கள் கருத்து பொருத்தமற்றது. எத்தனை மோசமான நிலையிலும் ஒரு பைத்தியக்காரனின் குரல் என்பது இங்கு கேட்கப்பட்ட விசித்திரமான குரலோடு பொருந்தாது. பைத்தியக்காரர்களும் ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் வார்த்தைக் கோர்வை இல்லாமல் போனாலும் ஒலியை உச்சரிப்பு செய்யும் திறன் எப்போதும் அவர்களுக்கு இருக்கும். ஒரு பைத்தியத்தின் முடி இப்போது நான் கையில் வைத்திருக்கும் ஒன்றைப் போல இருக்காது. திருமதி லிஸ்பனேவின் இறுகப் பிடித்திருந்த கரத்திலிருந்து இந்த முடியை எடுத்தேன். இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது என்று சொல்லுங்களேன்.”

முற்றிலும் தடுமாறியவானாய் “தியுபின்! இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. நிச்சயம் இது மனித முடியே இல்லை” என்றேன்.

“நானும் மனித முடிதான் என்று முடிவுகட்டவில்லை. அதை முடிவுசெய்வதற்கு முன்பு இந்தத் தாளில் நான் கோட்டுப்படம் வரைந்திருப்பதை நீங்கள் பார்க்க வேண்டும். வாக்குமூலத்தில், செல்வி லிஸ்பனேவின் கழுத்திலுள்ள கருமையான சிராய்ப்புகள் விரல்நுனிகளால் உண்டான குழிகள் என்றும் டுமாஸ் எடினி ஆகியோரின் கூற்றுப்படி அநேகமாக விரல் அழுத்தத்தினால் ஏற்பட்ட வெளிர்நீலப் புள்ளிகள் என்றும் கூறப்பட்டதன் நகலாக இது இருக்கும்.

எங்களுக்கு முன்பிருந்த மேசையில் தாளினை விரித்து வைத்து ”இந்தப் படம் உங்களுக்கு எத்தனை இறுக்கமாகவும் தடுமாற்றமின்றியும் பிடி இருந்திருக்கிறது என்பதைக் காட்டும். ஓரிடத்திலும் சறுக்கியதற்கான தடயங்கள் இல்லை. ஒவ்வொரு விரல்களும் அநேகமாக பலியானவர் இறக்கும் வரை அச்சமூட்டும் வகையிலான பிடிமானத்தைச் செய்திருக்கின்றன. ஒரே நேரத்தில் நீங்கள் பார்க்கும் விரல்தடங்களில் உங்கள் எல்லா விரல்களையும் பொருத்திப் பாருங்கள்.”

நான் அதை முயன்றுபார்த்து தோல்வியடைந்தேன். 

“அநேகமாக நாம் இந்த வழக்கிற்குத் தகுந்த விசாரணையை மேற்கொள்ளவில்லை. தாள் சமதளத்தில் விரிக்கப்படுபவை. ஆனால் மனிதக் கழுத்து உருளை வடிவானது. இங்கு மரத்தின் பகுதி இருக்கிறது, ஏறத்தாழ மனித கழுத்தின் சுற்றளவை ஒத்தது. அதைச் சுற்றி இந்த வரைபடத்தை பொருத்தி மீண்டும் முயன்று பாருங்கள்.”

நான் அப்படியே செய்தேன். முன்பைவிட இன்னும் கடினமாக இருந்தது. “இது நிச்சயமாக மனிதக் கரங்களின் குறிகள் இல்லை.”

“இப்போது குவியர் எழுதியதிலிருந்து இந்தப் பத்தியைப் படியுங்கள்.”

அது கிழக்கிந்திய தீவுகளில் உள்ள பெரிய ஃபுல்வஸ் வகை உரங்குடான்களின் நுட்பமான உடற்கூறு விபரங்களும் பொது உடலமைப்பு விபரங்களும் அடங்கிய பத்தி. இராட்சத உருவமும் அளவற்ற வலிமையும் செயல்திறனும் வெறித்தனமான முரட்டு குணமும் இயல்பாகவே ஒருவரைப் பார்த்து பின்பற்றிச் செய்யும் பழக்கமும் கொண்டவை இவ்வகை உயிரனம் என்பது எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே. உடனடியாகவே கொலையின் ஒட்டுமொத்த பீதியின் அடிப்படையும் எனக்குத் துலங்கிவிட்டது. 

https://www.oldbookillustrations.com/wp-content/high-res/1884/murders-rue-morgue-rawscan.jpg

பத்தியின் இறுதியை வாசித்து முடிக்கையில் “விரல்கள் பற்றிய விவரணைகள் இந்தப் படத்தின் தன்மையுடன் முற்றிலும் ஒத்துப்போகின்றன. உராங்குடானின் இந்தச் சிற்றினத்தைத் தவிர வேறெந்த மிருகத்தாலும் நீங்கள் தடமெடுத்திருக்கும் இந்தத் தாளுடன் ஒத்துப்போகவே முடியாது. இந்தப் பழுப்பு மயிறும்கூட கூவியர் சொல்லும் மிருகத்தினுடையதே. ஆனால் என்னால் இந்தப் பீதியூட்டும் மர்மத்தின் பின்னணியை சற்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. அது தவிர சர்ச்சைக்குரிய இரு குரல்கள் சுட்டப்பட்டன. அதில் ஒன்று சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஃபிரெஞ்சு மொழிக்காரனுடையது.” 

“உண்மை. சாட்சியங்களால் ஒருமனதாக இந்தக் குரலைப் பற்றிய விவரணைகளின் போது ‘அடக்கடவுளே!’ என்ற வெளிப்பாடு இருந்ததாகச் சொல்லப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிலிருக்கும். குறிப்பிட்ட சூழ்நிலையில் இது ஒரு கண்டனக் குரல் அல்லது எதிர்ப்புக் குரலாகவே வெளிப்பட்டதாக மிகச்சரியான வாக்குமூலத்தை ஒரு சாட்சியம் (மோண்டனி என்ற மிட்டாய்க் கடைக்காரர்) வழங்கியது. இந்த இரு வார்த்தைகளைக் கொண்டு நான் இப்புதிரின் தீர்வை முழுவதுமாக செயல்படுத்தினேன். ஒரு ஃபிரெஞ்சுக்காரன் இந்தக் கொலையை அறிந்திருக்கிறான். இதில் நடந்த இரத்தக்களறியில் சற்றும் தொடர்பற்றவனாக அவன் இருந்திருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உராங்குடான் அவனிடமிருந்து தப்பியிருக்கக்கூடும். அவன் அதைப் பின்தொடர்ந்து கொலைச் சம்பவ அறை வரை வந்திருக்கக்கூடும். ஆனால் நடைபெற்ற வெறியாட்டத்தின் இடையே அவனால் அதை மீளக் கைபற்றி இருக்க இயலாது. இதுதான் நிகழ்ந்திருக்கும். நான் ஊகங்களைப் பின்தொடரவில்லை, அதற்கு எனக்கு உரிமையும் இல்லை. எனது சொந்த அறிவின் வழிகாட்டலில் போதிய ஆழத்திற்குச் சென்று விடையளிக்கும் வகையில் அவை இருக்கப் போவதில்லை. என்றாலும், அவை எல்லாம் கச்சிதமாகப் புரிந்துவிட்டதாக நான் நடிக்கவும் முடியாது. நாம் அவர்களை அழைத்து மென்மேலும் ஊகம் செய்து அவர்களிடம் பேசுவோம். இங்கு நாம் எதிர்பார்க்கும் ஃபிரெஞ்சுக்காரன் நான் நினைப்பதைப் போல இந்த வெறியாட்டத்தில் பங்கு கொள்ளாதவனாக இருந்தால் நேற்று நாம் வீட்டிற்குத் திரும்புகையில் ‘லெ மாண்டே’வில் (மாலுமிகளைத் தேர்வுசெய்வதற்கான பிரத்யேக செய்தித்தாள்) கொடுத்த விளம்பரம் நிச்சயம் அவனை நம் முன் கொண்டுவந்து நிறுத்தும். 

அவர் என் கையில் கொடுத்த செய்தித்தாளில் இப்படி இருந்தது.

பிடிக்கப்பட்டது- போய்ஸ் தெ பொலோனேவில் ___ அன்று விடியற்காலையில் (கொலை நடந்த காலை) ஒரு பெரிய பழுப்பு மஞ்சள் நிற போர்னீஸ் வகை உராங்குடான். அதன் உரிமையாளர் சரியான முறையில் அடையாளம் சொல்லி மீண்டும் வந்து அம்மிருகத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். அதைப் பிடித்து வைத்திருப்பதற்கான செலவினை மட்டும் பணமாகத் தந்துவிட்டு அதைப் பெற்றுக்கொள்ளலாம். கீழே தொடர்பிற்கான முகவரியும் எண்ணும் தரப்பட்டுள்ளது. 

“இது எப்படிச் சாத்தியமாகும்?” என்று கேட்டேன். ”அந்த ஆள் மால்டா நாட்டு கப்பலைச் சார்ந்த மாலுமி என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்திருக்கச் சாத்தியம்?”

”எனக்குத் தெரியாது” என்றார் தியுபின். “எனக்கு நிச்சயமாகத் தெரியாது. மாலுமிகள் நீண்ட வரிசைகளில் நிற்கையில் விரும்பி கட்டிக்கொள்ளும் ஒரு துண்டு நாடாவை வைத்து அப்படி ஊகித்தேன். அதுமட்டுமின்றி இத்தகைய முடிச்சை மால்டா மாலுமிகள் மட்டுமே போட முடியும். இந்த நாடாவை நான் இடிதாங்கியின் கீழிருந்து எடுத்தேன். இது இறந்த இருவருடையதும் அல்ல. ஒருவேளை இந்த நாடாவைப் பொருத்து இந்த ஃபிரெஞ்சுக்காரன் மால்டா மாலுமி என்று நான் போட்ட கணக்கு தவறியிருக்குமாயின், அப்போதும்கூட நான் விளம்பரம் கொடுத்ததில் எந்தப் பிழையும் இல்லை. ஒருவேளை அது பிழையாக இருந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தை நான் தவறாகப் புரிந்துகொண்டு இப்படி விளம்பரம் செய்திருக்கக்கூடும் என்று அவன் தனக்குள் நினைத்துக்கொள்வானே தவிர அதனை விசாரணை செய்யும் அளவுக்குப் பொருட்படுத்திக்கொள்ள மாட்டான். ஆனால் ஒருவேளை நான் கணித்தது சரியாக இருக்குமாயின் அது மாலாபம். கொலையில் ஈடுபடாதபோதும் அதை முற்றிலும் அறிந்தவனாகையால் இயல்பாகவே ஃபிரெஞ்சுக்காரன் விளம்பரத்திற்குப் பதில்கூற உராங்குடானை மீளப் பெறத் தயங்குவான். அவன் அநேகமாக இப்படி மனத்தில் கணக்கிடுவான்- ‘நான் அப்பாவி, ஏழை. என் உராங்குடான் அதிக மதிப்புகொண்டது, அதுவும் நானிருக்கும் நிலையில் அது என் பொக்கிஷம். அதை ஏன் ஆபத்து குறித்த அச்சத்தின் காரணமாக நான் இழக்க வேண்டும்? போய்ஸ் தெ பொலொனெவில் கண்டறியப்பட்டிருக்கிறது. கொலைச் சம்பவம் நடந்ததிலிருந்து நெடுந்தொலைவில். இந்த மிருகம் எப்படி இத்தகைய கொலையைச் செய்திருக்கும் என எவரும் கருத வாய்ப்பில்லை. காவல்துறை குருடாகி இருக்கிறது- அவர்களுக்கு கிஞ்சிற்றும் துப்பு கிடைத்தபாடில்லை. அவர்கள் ஒருவேளை இம்மிருகத்தைக் கையகப்படுத்தியிருந்தாலும் நான் கொலையை அறிந்திருக்கிறேன் என்று நிரூபிக்க முடியாது. அப்படி நிரூபித்தாலும் என்னைக் குற்றவாளியாக ஆக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக நான் நன்கு அறியப்பட்டவன். விளம்பரதாரர் என்னை மிருகத்தின் உரிமையாளராக மட்டுமே குறிப்பிடுவார். அவருக்கு என்னைப் பற்றிய அறிவு எந்தளவுக்கு இருக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை. இத்தனை மதிப்புமிக்க சொத்தை அப்படியே கைவிட்டு விடுவதா? என்னை நோக்கியோ மிருகத்தை நோக்கியோ எந்தக் கவனக்குவிப்பும் இருக்கக்கூடாது என்பதில் நான் கொள்கைமிகுந்து இருந்தாக வேண்டும். நான் விளம்பரத்திற்கு பதிலளித்துதான் ஆக வேண்டும். உராங்குடானைக் கைக்கொண்டு இந்த விசயம் பெரிதாக வெடிக்கும் வரை என்னிடமே வைத்துக்கொண்டாக வேண்டும்.’

இத்தருணத்தில் படிக்கட்டுகளில் பாதவொலி கேட்டது. 

“தயாரக இரு” என்றார் தியுபின். “கைத்துப்பாக்கியை எடுத்துக்கொள். என்னிடம் இருந்து சமிக்ஞை வரும்வரை அதைப் பயன்படுத்தி விடாதே.”

வீட்டின் முன்கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது. பார்வையாளன் அழைப்பு மணி அடிக்காமலேயே உள்நுழைந்து பல படிகள் மேலேறினான். இப்போது அவன் தயங்குவதாகத் தெரிகிறது. இப்போது அவன் கீழிறங்கிக்கொண்டிருக்கிறான். தியுபின் கதவை நோக்கி விரைந்து செல்ல, மீண்டும் அவன் மேலேறுகிறான். இரண்டாவது முறை அவன் பின்னோக்கித் திரும்பவில்லை. ஒரு முடிவுடன் எங்கள் அறைக் கதவைத் தட்டுகிறான். 

மனமார்ந்த மகிழ்வான மொழியில் “உள்ளே வாருங்கள்” என்றார் தியுபின்.

ஒரு ஆள் உள்ளே நுழைந்தான். பார்க்க நல்ல உயரம், தசைத்தடிமன், பீதியூட்டும் பேய்தனமான வதனம், பொதுவாகவே ஈர்ப்பை ஏற்படுத்தாத முகம்- சரியாக அவன் ஒரு மாலுமி! பெரிய முறுக்கு மீசையாலும் கிருதாவாலும் பாதிக்கு மேல் மறைந்திருந்த அவன் முகம் வெங்குருக்கலால் நிறைந்திருந்தது. அவனிடம் ஒரு பெரிய வளைத்தடி மட்டுமே இருந்தது. மற்றபடி வேறெந்த ஆயுதமும் அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. விகாரமான முறையில் தலைகுனிந்து, மூக்கிலிருந்து பேசுவது போன்ற பாணியில் இருந்த ஃபிரெஞ்சு வழக்கில் (அதிலிருந்தே அவன் பிறவி ஃபிரெஞ்சுகாரன் என்று கருத முடியும்) முகமன் சொன்னான்- ”மாலை வணக்கம்.” 

“அமருங்கள் நண்பரே” என்று வரவேற்றார் தியுபின்.

“உராங்குடானிற்காக வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அதன் உரிமையாளராகிய உங்களைக் கண்டு பொறாமைப்படாமல் இருக்க முடியாது. அவனுக்கு எத்தனை வயது இருக்கும்?”

மாலுமி பெருமூச்செறிந்ததிலிருந்து ஒரு தாள முடியாத சுமையை இறக்கி வைத்தது போன்ற உணர்வைக் காண முடிந்தது. பின்னர் உறுதியான தொனியில் பதிலளிக்கத் தொடங்கினான்.

“எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நான்கு அல்லது ஐந்து வயதுக்கு மேல் இருக்காது. அவனை இங்குதான் வைத்திருக்கிறீர்களா?”

“ஓ! இல்லை. அவனை இங்கு வைக்கும் அளவு இடவசதி இல்லை. தியுபோர்கு வீதியில் உள்ள மிருகக் கொட்டிலில் அவன் இருக்கிறான். அவனை காலையில் நீங்கள் பெற்றுச்செல்லலாம். உங்களது மிருகத்தை அடையாளம் சொல்ல நீங்கள் தயாராக உள்ளீரா?”

“ஆம், நிச்சயமாக.”

”அவனைப் பிரிவது குறித்து நிச்சயம் நான் வருத்தம் கொள்வேன்” என்றார் தியுபின்.

“உங்களது இத்தனை பிரச்சினைக்கும் எந்தப் பலனும் இல்லாமல் போகவிடமாட்டேன், ஐயா” என்றான் அவன். “நியாயமான முறையில் என் மிருகத்திற்காக என்ன தொகை தரவேண்டுமோ அதை வழங்கத் தயாராகவே இருக்கிறேன்.”

“அப்படியா? எல்லாம் சரிதான். நான் யோசிக்கிறேன்! நான் என்ன பெற்றுக்கொள்ள வேண்டும்? இருங்கள் சொல்கிறேன். எனக்கான தொகை இதுவாக இருக்க வேண்டும். உனக்கு என்ன விபரமெல்லாம் தெரியுமோ அவை அனைத்தையும் நீ சொல்ல வேண்டும். அதாவது மார்கு வீதியில் நடந்த கொலைகள் பற்றி!”

முற்றுச் சொற்களை மெல்லிய ஒலியிலும் நிதானத்துடனும் சொன்னார் தியுபின். சொல்லியபடியே மெதுவாக கதவு நோக்கி நடந்து அதைப் பூட்டி அதன் சாவியைத் தன் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டார். தன் மார்பிலிருந்து கைத்துப்பாக்கியை வெளியே எடுத்து, எந்தவிதப் பதற்றமும் அவசரமும் இன்றி மேசை மேல் வைத்தார். 

மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறவனைப் போல தவித்த மாலுமியின் முகம் சிவந்தது. கால் நோக்கிக் குனிந்து தன் வளைத்தடியை எடுத்தவன் அடுத்த நொடியே ஏதோ மரணத்தால் ஆட்கொள்ளப்பட்டவனைப் போல ஆடி தன் இருக்கையில் விழுந்தான். அவன் ஒரு சொல்லும் பேசவில்லை. என் இதயத்தின் ஆழத்திலிருந்து அவனுக்காக பரிதாபம் கொண்டேன். 

“நண்பரே” என்று வாஞ்சையுடன் அழைத்தார் தியுபின். ”நீர் உம்மையே தேவையில்லாதபடிக்கு வருத்திக்கொள்கிறீர். நாங்கள் உங்களுக்கு எந்தவிதத் தீங்கும் விளைவிக்க மாட்டோம். உங்களை நன்மதிப்புடன் ஒரு ஃபிரெஞ்சு கணவானாகவே நடத்த விரும்புகிறோம். உங்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. நீங்கள் மார்கு வீதிக் கொலைகளில் சற்றும் பங்கெடுக்கவில்லை என்பதை நானறிவேன். ஆனால் நீங்கள் அதில் தொடர்புடையவரே இல்லை என்று மறுக்கவும் முடியாது. நான் முன்பே குறிப்பிட்டதைப் போல இந்தச் சம்பவத்தில் ஏகப்பட்ட விபரங்களை நான் சேகரித்தே வைத்திருக்கிறேன். இப்போதைய நிலைமை இதுவே. நீங்கள் தவிர்த்திருக்கக் கூடிய எதையும் நீங்கள் செய்துவிடவில்லை. எதையும்! எனவே தெளிவாக நீங்கள் குற்றவாளி இல்லை. கொள்ளை செய்த பிழைகூட உங்கள் மீது இல்லை. ஒருவேளை கொள்ளை செய்திருப்பினும் அதற்கான தண்டனை என்பது வேறு. நீங்கள் மறைத்து வைப்பதற்கு ஒன்றுமே இல்லை. நீங்கள் மறைத்து வைப்பதற்கான தேவையும் இல்லை. மாறாக நீங்கள் அறிந்த அனைத்தையும் தவறாமல் முன்வைப்பதே அறத்தின்பால் நன்று. நீங்கள் அந்தக் குற்றவாளியைப் பற்றிச் சுட்டிக்காட்ட முடியும் எனும்போது பிழையறியா மனிதன் ஒருவன் இப்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். 

இந்தச் சொற்களை தியுபின் கூறிக்கொண்டிருக்கையில், மாலுமி தன் மனத்தை மீட்டெடுத்துக்கொண்டார். இருந்தபோதும் முன்பிருந்த தைரியம் இப்போது இல்லை. 

“கடவுளே என்னைக் கைவிடாதே” என்று சொல்லி சில நொடிகள் மெளனம் காத்தான். “இந்தச் சம்பவம் தொடர்பாக நான் அறிந்த அனைத்தையும் உங்களிடம் சொல்லிவிடுகிறேன். அதில் அரைவாசியையாவது நீங்கள் நம்பியாக வேண்டும் என்று நான் சொல்லேன். அப்படிச் சொன்னால் நான் பெருமூடன். நான் நிரபராதி. என் இதயத்தைக் கிழித்தால் அது தெரியுமெனில் அதற்காக நான் இறக்கவும் தயார்.”

அவன் சொன்னதன் சாராம்சம் இது. அவன் கிழக்கிந்தியத் தீவுகளுக்கு ஒரு பயணம் மேற்கொண்டான். அவன் இருந்த அணி போர்னியோவில் இறங்கி மகிழ்வுச் சுற்றுலா செய்ய உள்ளே சென்றது. அவனும் அவன் துணைவனும் சேர்ந்து ஓர் உராங்குடானைப் பிடித்தனர். அவன் துணைவன் இறந்து போக உராங்குடான் முழுக்க இவன் பராமரிப்பிற்கு வந்தது. அடக்க முடியாத வெறித்தனம் கொண்ட அவனது மிருகத்துடன் பல இன்னல்களுக்குப் பிறகு வீட்டை அடைந்தான். பாரீஸில் ஒரு குறிப்பிட்ட வசிப்பிடத்தில் உராங்குடானை வைத்துக்கொள்வதில் வெற்றியடைந்தான். அண்டை அயலாரின் கவனத்தை ஈர்க்காதவாறு அதைத் தனிமைப்படுத்தி வைத்துகொண்டான். கப்பலில் வரும்போது கூர்பிளவில் மாட்டி அதன் காலில் ஏற்பட்டிருந்த காயம் ஆறும்வரை அதை வைத்திருந்து பின்னர் விற்றுவிடுவதே அவனுடைய திட்டமாக இருந்தது. 

மாலுமியின் இன்பகரமான ஒரு கூத்தாட்ட இரவு அல்லது கொலை நடந்த விடியற்காலையில் வீட்டிற்குத் திரும்புகையில், (அது பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த) கழிப்பிடத்தின் வழியே கதவை உடைத்து உள்ளே நுழைந்து தனது படுக்கையில் செளகரியமாக அம்மிருகம் வீற்றிருப்பதைப் பார்த்தான். அது தன் கையில் நன்கு தீட்டப்பட்ட சவரக்கத்தியை வைத்தபடி நிலைக்கண்ணாடியின் முன்னமர்ந்து சிரைக்க முயன்றுகொண்டிருந்தது. அது கழிப்பிட அறையின் சாவி துவாரத்தின் வழியே தன் உரிமையாளர் சிரைப்பதைப் பார்த்து இதைக் கற்றுக்கொண்டிருக்கலாம். 

இத்தனை வெறித்தனமான மிருகத்தின் கையில் இத்தனை ஆபத்தான ஆயுதம் இருப்பதை- அதைப் பயன்படுத்தும் அறிவும்  கொண்டிருப்பதைப்- பார்த்ததும் பல நிமிடங்கள் செய்வதறியாது தவித்தான். வழக்கமாக அதைக் கட்டுப்படுத்த சாட்டையடியைப் பிரயோகிக்கும் அவன் இப்போதும் அந்த வழிமுறையையே கையில் எடுத்தான். அதைக் கண்ட மறுகணமே உராங்குடான் தாவிக் குதித்து அறையிலிருந்து வெளியேறி படிகளில் இறங்கலானது. துரதிருஷ்டவசமாக திறந்திருந்த சாளரத்தின் வழியே வெளியேறி தெருவை அடைந்தது. 

விரக்தியுணர்வுடன் ஃபிரெஞ்க்சுகாரன் அதைத் தொடர்ந்தான். ஆனால் குரங்கோ தன் கைகளில் சவரக்கத்தியுடன் அவ்வப்போது நின்று தன்னைத் தொடர்பவரைப் பார்த்து தோளை அசைத்து சைகை செய்து மீண்டும் முன் சென்றது. அவன் அருகே வந்ததும் மீண்டும் தள்ளிப்போனது. இப்படியே இந்தத் துரத்தல் தொடர்ந்தபடி இருந்தது. காலை மணி மூன்று என்பதால் தெருக்கள் மயான அமைதியில் இருந்தன. மார்கு வீதியில் இருந்த சந்தின் வழியே கடக்கையில் திருமதி லிஸ்பனேவின் நான்காம் மாடி அறையில் இருந்து திறந்திருந்த சாளரத்தின் வழியே வழிந்து ஈர்த்த வெளிச்சம் அந்தத் தப்பிய மிருகத்தின் கவனத்தை ஈர்த்தது. கட்டிடத்திற்கு ஓடியபோது அது இடிதாங்கியைப் பார்த்து பயன்படுத்தி நம்ப முடியாத சுறுசுறுப்புடன் தொற்றி ஏறி இழுப்புக் கதவைப் பற்றியது. அது சுவரை ஒட்டியிருக்கும் அளவு திறந்திருந்தது. அதன் அழுத்தத்தால் அசைந்த இழுப்புக் கதவு நேரே கட்டில் இருந்த சாளரத்தினை நோக்கி மூடும் விதத்தில் ஓடியது. இந்த மொத்த சம்பவமும் ஒரு நிமிடத்திற்குள் நடந்தேறிவிட்டது. உள்ளே நுழைந்தபின் உராங்குடான் மீண்டும் அந்த இழுப்புக் கதவை உதைத்து திறந்துவிட்டது. 

இந்தத் தருணத்தில் களிப்பும் குழப்பமுமாக மாலுமி இருந்தான். கொடியவனை அவனே சென்று மாட்டிக்கொண்ட பொறியின் வழியே மீள கைப்பற்ற முடியும் என்று நம்பினான். இறங்கும் போது இடிதாங்கியை மட்டும் உராங்குடானுக்குச் சாதகமாக விடாமல் இருந்தால் அவனைப் பிடித்துவிடலாம். இன்னொரு விதத்தில் அவன் இறங்கியிருக்கும் வீட்டில் என்ன குந்தகங்களை ஏற்படுத்தப் போகிறானோ என்ற பதற்றமும் இருந்தது. இந்த எண்ணம் தொடர்ந்து உராங்குடானைப் பின்தொடர்ந்து செல்லத் தூண்டியது. இடிதாங்கியில் ஏறிவிட்ட அவனால் உயரமாக இருந்த சாளரத்தை எட்ட முடியவில்லை. அவனால் உடலை நீட்டி அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை மட்டும் பார்க்கலாம் என்கிற அளவே முடிந்தது. அந்தக் கொடூரங்களின் கட்டின்மையைப் பார்த்ததும் கைதளர்ந்து அவன் கீழே விழுந்தான். இப்போதுதான் அந்த விகாரமான கீச்சிடல்கள் அவ்விரவு எழுந்திருக்கின்றன. அவையே மார்கு வீதியின் வசிப்பாளிகளை உறக்கத்திலிருந்து எழுப்பியிருக்கின்றன. தத்தம் இரவு உடைகளில் இருந்த திருமதி லிஸ்பனேவும் அவர் மகளும் இரும்புப் பெட்டியில் சில தாள்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர். அதுவே ஆய்வின் போது நடு அறைக்கு இழுத்து வரப்பட்டு அதன் உட்பொருள்கள் கொட்டிக் கிடந்ததற்கான அடிப்படை. கொலையுண்டவர்கள் சாளரத்திற்கு முதுகுகாட்டி இருந்திருக்கக்கூடும். உராங்குடான் ஏறி ஓலமிடுவதற்குள் அவர்களால் எதையும் உணர்ந்திருக்க முடியாது. இழுப்புக் கதவு மோதியதைக்கூட அவர்கள் காற்றினால் நடந்திருக்கும் என நினைத்திருப்பார்கள். 

மாலுமி உள்ளே பார்த்தபோது அந்த ராட்சத மிருகம் திருமதி லிஸ்பனேவின் கூந்தலைப் (சீவிக்கொண்டிருந்ததால் தளர்த்தப்பட்டிருந்த) பிடித்து அவள் முகத்தின் முன் நாவிதனைப் போல சவரக்கத்தியை ஆட்டிக்கொண்டிருந்தது. மகளோ பித்துபிடித்து நிலைத்து மூர்ச்சையாகி இருந்தாள். அவள் கூந்தல் கற்றைகள் பிடுங்கப்படும் போது எழுந்த முதியவளின் கதறலும் ஓலமுமே உராங்குடானுக்குத் தன் நோக்கத்திலிருந்து ஆழியளவு வேறுபாட்டை அடைந்திருக்க வேண்டும். தீர்க்கமான ஒற்றை வீச்சில் ஏறத்தாழ அவள் தலையை உடம்பிலிருந்து அறுத்துவிட்டது. குருதியைக் கண்டதும் அதன் கொலைவெறி உச்சமடைந்தது. பற்களை நறநறத்தபடி விழியில் கனல் பறக்க பெண்ணின் உடல்மேல் பாய்ந்து தன் கூர் உகிர்களை அவள் கழுத்தில் அழுத்தி அவள் இறக்கும் வரை நெறித்தது. அதன் நடமாட்டமும் அலையும் பார்வையும் தன் உரிமையாளன் மீது வீழ்ந்தபோது படுக்கை இருந்த சாளரத்தின் மேலே தோன்றிய அவனுடைய பார்வையில் இருந்த விகாரமான தோற்றத்தைக் கண்டது. மிருகவெறியின் மனத்தில் இப்போது சந்தேகமே இன்றி சாட்டையின் எண்ணம் எழ அது அச்சமாக மாறியது. தனக்குத் தண்டனை கிடைத்தே ஆகப் போகிறது என்பதை அறிந்ததும் அது தன் கோரச் செயல்பாடுகளை மறைக்க எத்தனித்தது. நரம்பு தளர்விலும் மன வேதனையிலும் அறைக்குள் குதித்தது. மரச்சாமான்களை தூக்கி எறிந்தது. அவ்வாறே படுக்கையைக் கட்டிலில் இருந்து பிடுங்கி தரையில் எறிந்தது. முடிவில் அது பெண்ணின் சடலத்தை எடுத்து புகைப்போக்கியின் வழியே மேலே அது கண்டடையப்பட்ட நிலையில் திணித்தது. பிறகு முதியவளின் சடலத்தைத் தள்ள சடுதியில் சாளரத்தின் வழியே பார்த்தது. 

தனது சிதைந்த சுமையுடன் அது சன்னலருகே வந்து நிற்பதைப் பார்த்தபோது பீதியால் திகைத்து இடிதாங்கியின் பின் குறுகி நின்றான். அதன் வழியே மேலே ஏறாமல் கீழே இறங்கி உடனடியாக வீட்டை நோக்கி ஓடினான். இந்தப் படுகொலையின் பின்விளைவுகள் குறித்த பதற்றத்தால் விதியின் கையில் உராங்குடானை விட்டுவிட்டு தன் பயங்கர மனநிலையுடன் அவ்விடம் நீங்கினான். கூட்டத்தினர் படியில் ஏறும்போது கேட்ட குரல்கள் திகைத்துப் பேசிய ஃபிரெஞ்சுக்காரனுடையது. அதோடு குழம்பிக் கலந்த முரட்டு மிருகத்தின் பைத்தியக்காரத்தனமான உளறல்கள்.

நான் என் பங்கிற்குச் சொல்ல ஏதுமில்லை. உராங்குடான் கதவை உடைத்து திறக்கும் முன் அறையிலிருந்து இடிதாங்கி வழியிறங்கி அவ்விடம் அகன்றிருக்க வேண்டும். அது வெளியேறுகையில் சாளரத்தையும் இழுத்து சாத்தியிருக்கும். இறுதியில் அதை ஜார்டின் தே பிளாண்டஸிலிருந்து பெருந்தொகை கொடுத்து அதன் உரிமையாளனே வாங்கினான். காவல்துறை அதிகாரிகள்- தியுபினின் சில கருத்துகளோடு சேர்த்து- இந்த விவரணைகளைக் கேட்டவுடன்  லெ போனை சிறையிலிருந்து விடுவித்தனர்.

https://i.pinimg.com/originals/31/fd/77/31fd77d2243dd5cb9ae49900247d402b.jpg

இந்தச் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக முடிந்த பிறகும் என் நண்பர் மீது காவல்துறையில் இருந்த சிலரால் தத்தம் பணிகளை மட்டுமே கவனிப்பது நல்லது என்கிற ரீதியில் ஓரிரு சொற்கள் உதிர்க்கப்பட்டு பகடி செய்யப்பட்டதும் நிகழ்ந்தது. இவரது செயல்களால் உருவான ஏமாற்றத்தை அவர்களால் முற்றிலும் மறைத்துவிடவும் முடியவில்லை. 

“அவர் பேசினால் பேசட்டுமே” என்றார் தியுபின். அதற்கு மறுவினை செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் கருதவில்லை. “அவர் தன் மனக்கிடக்கை வெளிப்படுத்தி தன் உள்ளத்தின் பாரத்தை இறக்கிக்கொள்ளட்டும். அவரது கோட்டையிலேயே அவரை வென்றது பற்றி நான் திருப்தியடைகிறேன். இந்த மர்மத்தைத் தீர்ப்பதில் தோல்வியடைந்தது மட்டுமின்றி ஆழமாகப் பணிசெய்ய வேண்டிய நிகழ்வில் மேலோட்டமாக கபடத்தனத்துடனும் நடந்துகொண்டிருக்கிறார் என்பதும் இருக்கிறது. அவரது அறிவு போதிய வீரியமற்றது. வெறும் தலை மட்டும் கொண்டு உடலற்ற லாவெர்ணா தெய்வத்தைப் போல அல்லது இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமெனில் தலையும் தோளும் மட்டுமே கொண்ட சேற்றுமீனைப் போன்றவர் எனலாம். ஆனால் எப்படியும் அவர் ஒரு நல்ல மனிதர்தான். ஒரேயொரு நேர்மையற்ற பிதற்றலைப் பேசி தனது மரியாதையைத் தக்க வைத்துக்கொள்ளும் நுண்மதி இருக்கிறதே அவருக்கு. அதாவது அவர் பாணி என்பது தேவையானதை ஓரங்கட்டிவிட்டு தேவையற்றதை அணுகி நுட்பமாய் ஆராய்வது மட்டுமே.”

*

ஆங்கில மூலம்: The Murders in the Rue Morgue