ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் (ரஸ்கோல்நிகாவ் கதாபாத்திரத்தை முன்வைத்து) – ஹெரால்டு ப்ளூம்

by கார்குழலி
0 comment

ரஸ்கோல்நிகாவ் வருத்தமும் அதன் விளைவாக ஏற்படும் தணியாத கோபமுங்கொண்ட ஒரு மாணவன். தன்னை ஏமாற்றிய அடகுக்கடை வைத்திருக்கும் பேராசைப் பிடித்த கிழவியைக் கொல்லவேண்டுமென்ற கற்பனையை வளர்த்துக்கொள்கிறான். கிழவியை மட்டுமில்லாமல் அவளுடைய புத்திபேதலித்த மாற்றாந்தாயின் மகளையும் கொல்லும்போது அதுவரையிலும் அவனுடைய கற்பனையில் விரிந்துகொண்டிருந்த காட்சிகள் உண்மையாகிவிடுகின்றன. இந்தக் குற்றத்தை ரஸ்கோல்நிகாவ் செய்துமுடித்ததும் அவன் அடுத்தடுத்து சந்திக்கும் நாவலின் மூன்று முக்கியக் கதைமாந்தர்களால் அவன் தலைவிதி எழுதப்படுகிறது. முதலாவதான சோன்யா இளவயதினள், பக்திமிக்கவள், தேவதையைப் போன்றவள். உடன்பிறந்தோரை வாழவைப்பதற்காகத் தன்னுடைய வாழ்க்கையைத் தியாகம்செய்து விலைமகளாகிறாள். இரண்டாவதான போர்ஃபிரி பெத்ரோவிச் மதிநுட்பமிக்க காவல்துறை ஆய்வாளர். ரஸ்கோல்நிகாவுக்காகப் பொறுமையாகக் காத்திருக்கும் அவனுடைய சூழ்வினை என்றும் சொல்லலாம். மூன்றாவதான ஸ்வித்ரிகைலோவ் இவர்கள் எல்லோரையும்விட வசீகரமான குணவியல்புள்ளவன், எதிர்மறுப்புவாதத்தில் நம்பிக்கைகொண்ட தன்முனைப்புமிக்கவன், தகாத சிற்றின்ப வேட்கைகொண்டவன்.

நாவலின் நுட்பமான நகர்விலும் போக்கிலும் பயணப்படும் ரஸ்கோல்நிகாவ் சோன்யாவின்மீது  காதல்கொள்கிறான். தான் செய்த குற்றம்பற்றி போர்ஃபிரிக்குத் தெரியும் என்பதை அறிந்துகொள்கிறான். புத்திசாலியான ஸ்வித்ரிகைலோவின் படிப்படியான அழிவைப் பார்க்கும்போது தானும் அந்நிலையை அடையும் சாத்தியம் இருப்பதை உணர்ந்துகொள்கிறான். ரஸ்கோல்நிகாவுக்கு முற்றிலும் மாறுபட்ட இருவேறு பக்கங்கள் இருப்பதை வாசகர் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒரு புறம் தன் குற்றத்தை உணர்ந்து அதற்காக வருந்துபவனாக இருக்கிறான். மற்றொரு புறத்தில் தனக்குள்ளிருக்கும் நெப்போலியன் மனப்பான்மை எனப்படும் தாழ்வுமனப்பான்மையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற திடமான நம்பிக்கையும் அவனை உந்துகிறது. நுட்பமாகக் கவனித்தால் தஸ்தாயேவ்ஸ்கியே சாய்வுத்தன்மையுடையவராக இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் நாவலின் பின்னுரையில்தான் ரஸ்கோல்நிகாவ் நிலைகுலைந்துபோய் வருத்தத்தில் உழல்கிறான்.

வெளிவந்து நூற்றுமுப்பது ஆண்டுகளான பின்னரும் (இந்தக் கட்டுரையை ஹெரால்டு ப்ளூம் 2003-ஆம் ஆண்டில் எழுதினார் என்பதால் தற்போது கூடுதலாக இருபது ஆண்டுகளைக் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும்) இன்றுவரையிலும் குற்றமும் தண்டனையும் தலைசிறந்த மர்ம நாவலாக இருக்கிறது. துயரமூட்டுவதாக இருந்தாலும், ஷேக்ஸ்பியரைப் போல, நம் உணர்வுநிலையைப் புரட்டிப்போடுவதால் அதைப் படித்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் இரத்தம் பெருக்கெடுத்து ஓடும் ஷேக்ஸ்பியரின் துயர காவியங்களானஹேம்லெட், ஒத்தெல்லோ, லியர் மன்னன், மக்பெத் ஆகியவற்றில் பொதிந்திருக்கும் எதிர்மறுப்புவாதத்தை நம்மில் பலபேர் ஒத்துக்கொள்ள மறுத்தாலும் தஸ்தாயேவ்ஸ்கியின் பிரம்மாண்டமான எதிர்மறுப்புவாதிகளான ஸ்வித்ரிகைலோவ், ஸ்தாவ்ரோஜின் (பீடிக்கப்பட்டவன் அல்லது பிசாசுகள்), வயதான கரமசோவ் (கரமசோவ் சகோதரர்களில் வரும் தந்தை) ஆகியோருக்குத் தோற்றுவாயாக அவர்கள் இருப்பதில் சந்தேகமே இல்லை. ஷேக்ஸ்பியர் உண்மையில் எதை நம்பினார், எதைச் சந்தேகித்தார் என்பது நமக்குத் தெரியப் போவதேயில்லை என்றால் தஸ்தாயேவ்ஸ்கியோ நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத சமூக மாற்றத்தை விரும்பாத ஓர் எழுத்தரைப்போல இருக்கிறார். குற்றமும் தண்டனையும் நாவலைப் பொறுத்தவரையில் “கதையை நம்பு, அதைச் சொல்பவனை அல்ல,” என்ற டி.எச்.லாரன்சின் சொற்றொடரை நினைவுபடுத்திக்கொள்வது அவசியமாகிறது.

குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் சோன்யாவைப் போல, தன்முனைப்பின்றி எல்லோரின் மீதும் அன்பு செலுத்தும், அடுத்தவருக்காகத் தியாகம் புரியும், இன்னும் நடைமுறைக்கு வந்திராத கிறிஸ்துவத்தின்மீது நம்பிக்கை கொண்டிருந்தார் தஸ்தாயேவ்ஸ்கி. நமக்குத் தெரிந்தவரை அது நடப்பது மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்ட செயல் என்றாலும் அப்படியொரு கிறிஸ்துவம் தோன்றும் காலத்தில் நாவல்கள் எழுதப்படுமா? ஒருவேளை நமக்கு அவை தேவைப்படாமல் இருக்கலாம். தஸ்தாயேவ்ஸ்கி ரஷியாவின் ஹாரியட் பீச்சர் ஸ்டோவாக இருக்கவேண்டுமென்று விரும்பிய தல்ஸ்தோய், லியர் மன்னனைக் காட்டிலும் டாம் மாமாவின் குடிசையை அதிகம் மதிப்பதாகச் சொன்னார்.

துயர நாடக எழுத்தாளரான, காவியங்களில் அறவொழுக்கத்தைப் போதிப்பவரல்லாத தஸ்தாயேவ்ஸ்கி, தல்ஸ்தோயின் கூற்றை ஏற்கவில்லை. இலக்கியப் பணியை மேற்கொள்வதற்காக ரஷிய இராணுவத்தைவிட்டு தஸ்தாயேவ்ஸ்கி வெளியேறியபோது அவரது வயது இருபத்துமூன்று. ஒரு கொடுமையான கோடைக்காலத்தில் எந்தக் காரணமுமின்றி வயதான இரண்டு பெண்மணிகளை ரோடியோன் ரஸ்கோல்நிகாவ் கொலைசெய்த போது அவன் வயது இருபத்து மூன்று என்பதை நினைக்கும்போது தன்னைக் குறித்த நெப்போலியனியப் பார்வையை விரிவுபடுத்திக் கொள்வதற்காகத்தான் அதைச் செய்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. தன்னைக் குறித்த சுயமதிப்பீடுகளில் இருந்து துளியும் விலக மறுத்த ரஸ்கோல்நிகாவுக்கும் முடிவற்ற புனைவுகளை எழுதும் விழைவுகொண்டிருந்த தஸ்தாயேவ்ஸ்கிக்கும் இடையே இருந்த கண்ணுக்குப் புலப்படாத உறவும் ஒருமைப்பாடும் கரமசோவ் சகோதரர்களில் நிறைவுற்றது என்று சொல்லலாம்.

ரஸ்கோல்நிகாவ் தன்னுடைய தவறுகளுக்காக நாவலின் நம்பவியலாத பின்னுரையில் வருந்துகிறான். லாசரஸ்சைப் போல உயிர்த்தெழுந்து, இறப்பிலிருந்து வீடுபேறடைவதற்கான வழியென, மக்தலேனைப் போன்ற சோன்யாவிடம் முழுமையாகச் சரணடைவது மட்டுமே என்று நம்பினான். ஆனால் ரஸ்கோல்நிகாவின் எதையும் எதிர்க்கும் தன்மை, துயர காவியமொன்றைப் படைத்தே தீரவேண்டுமென்ற தஸ்தாயேவ்ஸ்கியின் முனைப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால் ரஸ்கோல்நிகாவ் மிகவும் தாமதமாகக் கைகொள்ளும் அடக்கமும் பணிவும் வாசகரின் மனதைத் தொடுவதில்லை. தஸ்தாயேவ்ஸ்கி துவக்கத்தைச் சிறப்பான முறையில் கையாளுகிறார், இடைப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களை வியக்கத்தக்க வகையில் வடிக்கிறார். அதுபோலவே திறமிக்க முடிவைச் சொல்லுவார் என்ற எதிர்பார்ப்போடு இருக்கையில் இறுதி அழிபாட்டினை விரும்பும் அவருடைய இயற்கையான குணத்தால் (அப்படித்தான் நினைக்கவேண்டியிருக்கிறது) முடிவு வலுவற்றதாக ஆகிவிடுகிறது.

குற்றமும் தண்டனையும் நாவலின் அனுபவ இருண்மையைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் வாசகர்கள், ரஸ்கோல்நிகாவிடம் காணப்படும் பிளவை மட்டுமல்ல, தஸ்தாயேவ்ஸ்கியிடம் இருப்பதாக அது சுட்டும் வெடிப்புகளையும் ஊன்றிக் கவனிக்கவேண்டும். அப்படிச் செய்தால் நாவலாசிரியரின் எதிர்க்கும் தன்மை ஒழுக்கமும் மதமும் சார்ந்ததல்ல, நாடகத்தன்மையுடையது என்பதால் ரஸ்கோல்நிகாவிடம் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவந்து மீட்சி பெற்றவனாகச் சித்தரிப்பதில் தயக்கம் காட்டுகிறார் என்ற முடிவுக்கு வருவார்கள். அற்புதமான எதிர்மறுப்புவாதிகளான ஸ்வித்ரிகைலோவும் இயகோவும் தோன்றும் படைப்புகளில் மகிழ்ச்சியூட்டும் முடிவுகள் ஒத்துவருவதில்லை. குற்றமும் தண்டனையும் பற்றி நான் நினைக்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் ஸ்வித்ரிகைலோவ், துப்பாக்கியின் விசையை அழுத்தித் தற்கொலை செய்துகொள்ளும் தருணத்தில் தரும் விளக்கம் தூக்கிவாரிப் போடுகிறது: “அமெரிக்காவுக்குப் போகிறேன்.” ஒரு பின் எதிர்மறுப்புவாதி இவன் (எதிர்மறுப்புவாதி என்று மட்டும் சொன்னால் போதாது) நிலைபேறுடைமை என்ற ஒன்று இருக்கிறது என்று ரஸ்கோல்நிகாவிடம் சொல்வது ரஷியாவின் கிராமப்புறத்தில் இருக்கும் சிலந்திப் பூச்சிகள் ஊரும் அழுக்கான குளியலறை போன்றது. ‘கீழிறக்கப்பட்டு வெளியேற்றப்படும்’ உருவின் மறு அவதாரமான ஸ்வித்ரிகைலோவின் உண்மையான வடிவத்தை எதிர்கொள்ளும் பாவப்பட்ட ரஸ்கோல்நிகாவ், இதைக்காட்டிலும் ஆறுதல் தரும் காட்சியைக் காண விழைவதை மன்னித்துவிடலாம்.

ஸ்வித்ரிகைலோவுக்கும் புலனின்பத் தோய்வில் நாட்டம்கொண்ட கொடூரமனம் படைத்த லியர் மன்னனில் தோன்றும் எட்மண்டுக்கும் இடையே இருப்பதைப் போலவே ரஸ்கோல்நிகாவுக்கும் கொலைகாரனான மக்பெத்துக்கும் இடையே உண்மையான குணத்தோற்ற ஒற்றுமை இருப்பதாக நினைக்கிறேன். 1821-ஆம் ஆண்டில் பிறந்தவரான தஸ்தாயேவ்ஸ்கி, மனதைத் துன்புறுத்தும் இயல்புகொண்ட ஸ்வித்ரிகைலோவை மிகவும் வெளிப்படையாகவே பைரன் பிரபுவுடன் ஒப்புமைப்படுத்துகிறார். ஷேக்ஸ்பியரின்மீது அபிமானம் கொள்வதில் தஸ்தாயேவ்ஸ்கிக்கும் துர்கனேவுக்கும் முன்னோடியாக இருந்த ரஷியாவின் தேசியக் கவியான புஷ்கின், பைரன் பிரபுவை ரஷியாவில் பிரபலமாக்கினார். வயதில் சிறிய பெண்களிடம் நாட்டம்கொள்ளும் ஸ்வித்ரிகைலோவின் சட்டத்துக்குப் புறம்பான சிற்றின்ப வேட்கை எட்மண்ட் மற்றும் பைரனின் நடத்தையைக் காட்டிலும் இழிவானதாக இருக்கிறது. இயகோ, எட்மண்ட் ஆகிய இருவரின் சரியிணையாய் மாறிவிடாமல் கொலைகாரனாகவும் பரிவுணர்ச்சி கொண்டவனாகவும் ஒரே நேரத்தில் கதாநாயகன்-வில்லன் என்ற இருவேறு இயல்புகளைக்கொண்ட மக்பெத்தைப் போலவே, ஏற்கனவே அச்சமூட்டுபவனாக இருக்கும் ரஸ்கோல்நிகாவ், ஸ்வித்ரிகைலோவைப் போல மாறுவதற்கு இன்னும் பல படிகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.

ரஸ்கோல்நிகாவின் பாத்திரப் படைப்பில், நம் சிந்தையைக் கவரும் வகையில் மக்பெத்தைப் படைத்த ஷேக்ஸ்பியரின் பாணியைப் பின்பற்றியிருக்கிறார் தஸ்தாயேவ்ஸ்கி. புதுமையான வழிகளில் முடிவேயில்லாமல் ரஸ்கோல்நிகாவைச் சித்திரவதை செய்யும் காவல்துறை ஆய்வாளரான போர்ஃபிரி, தன்னைக் கிறிஸ்துவன் என்று கூறிக்கொள்கிறார். ஆனால் ரஸ்கோல்நிகாவின் சூழ்வினையின் வடிவமான இந்தக் கதாபாத்திரம், ஏற்கனவே துயரத்தில் தத்தளிக்கும் ரஸ்கோல்நிகாவை நினைத்தவாறெல்லாம் ஆட்டுவிக்கிறது. மேலைநாட்டுப் பாதிப்புக்குள்ளான இயந்திரத்தனமான கொடுமையாளராக இந்தப் பாத்திரத்தைப் படைத்திருப்பது தஸ்தாயேவ்ஸ்கியின் மேல் வெறுப்பையே ஏற்படுத்துகிறது.

நம் கற்பனைக்கெட்டாத ஸ்வித்ரிகைலோவின் வெறுப்புற்ற தீயநிலையைப் போலவே சோன்யாவின் ஆழ்நிலைப் பரிமாணமும் வாசகருக்கு எட்டாத ஒன்றாக இருக்கிறது. மக்பெத்தோடு இணைந்து இருண்மை நிறைந்த அவன் மனதுக்குள் பயணம் செய்யவேண்டியிருப்பது போலவே ரஸ்கோல்நிகாவின் விழிப்புணர்வு நிலைக்குள் புகுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. வயதான பெண்களையோ தந்தையைப் போன்ற அரசர்களையோ நாம் கொல்லும் சாத்தியமில்லை என்றாலும் ரஸ்கோல்நிகாவ் மற்றும் மக்பெத்தின் ஒரு சிறிய பகுதி நமக்குள்ளும் இருப்பதால் குறிப்பிட்ட சூழ்நிலையில் நாம் அதைச் செய்யக்கூடும். ஷேக்ஸ்பியரைப் போலவே தஸ்தாயேவ்ஸ்கியும் அவருடைய கதாநாயக-வில்லன்களின் கொலைக்கு நம்மை உடந்தையாக்கி விடுகிறார். உண்மையான திகிலூட்டும் துயர காவியங்களான மக்பெத், குற்றமும் தண்டனையும் – இரண்டுமே நம்முடைய பரிதாப உணர்ச்சியைக் குறைக்கவோ பயத்தைப் போக்கவோ உதவுவதில்லை. அரிஸ்டாடிலின் சமூக-மருத்துவ கருத்துருவம் துயர காவியங்கள் பொதுநலத்துக்கு உதவாத உணர்ச்சிகளைக் களைந்து அகத்தூய்மையை அடைய உதவுகின்றன என்கிறது. ஆனால் ஷேக்ஸ்பியரும் தஸ்தாயேவ்ஸ்கியும் நம்மைக் கொடுமைக்குட்படுத்தும் இருண்மையான திட்டங்களை வைத்திருக்கின்றனர்.

மக்பெத்தின் அச்சமூட்டும் மேனிலையார்ந்த தன்மையை ஒத்திருக்கும் குற்றமும் தண்டனையும் நமக்கு உளச்சோர்வை ஏற்படுத்துவதைத் தாண்டி, ஒரு கெட்ட கனவைப் போல, கற்பனையில் தோன்றுவதெல்லாம் உண்மையாக நிகழும் அந்த மோசமான கோடைக்காலத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரின் வழியே நம்மை இட்டுச்செல்கிறது. நம் கண்ணில்படும் ஒவ்வொரு சுவரும் அச்சமூட்டும் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. நவீனப் பெருநகரம் ஒன்றைச் செறிவோடு சித்தரிப்பதில் பாடலேரையும் டிக்கன்ஸையும் விஞ்சிநிற்கிறது. சூனியத்தில் சிக்குண்ட மக்பெத்தின் ஸ்காட்லாந்தைப் போலவே ரஸ்கோல்நிகாவின் பீட்டர்ஸ்பர்கும் நம்மைக் கொலைசெய்யத் தூண்டிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

குற்றமும் தண்டனையும் நாவலை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற கேள்வி, விரைவிலேயே, ரஸ்கோல்நிகாவைக் கொலைகாரனாக்கியது எது என்ற கேள்வியாக உருப்பெறுகிறது. நிறைய நல்ல குணங்களைக் கொண்டவனாக இருக்கிறான். அவனுடைய உணர்ச்சித் தாக்கங்களும் பண்பார்ந்தவையாகவே, சொல்லப்போனால் மனிதாபிமானம் நிறைந்தவையாகவே இருக்கின்றன. தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்வதைவிட அடுத்தவர்களை அடக்கிக் கொடுமைப்படுத்துபவர்களான ஸ்டாலினின் அலுவலர்களின் முன்னோடிதான் ரஸ்கோல்நிகாவ் என்று சொன்ன புகழ்பெற்ற நவீன இத்தாலிய நாவலாசிரியர் ஆல்பெர்ட்டோ மொராவியோவை வியக்கிறேன்.

ரஸ்கோல்நிகாவ், தன்னுடைய மோசமான பக்கத்தின் கேலிப் படைப்பான ஸ்வித்ரிகைலோவைப் போலவே தன்னைத் தானே தண்டித்துக்கொள்ளும் இயல்புடையவன். துன்புறுவதில் இன்பம் காணும் இந்த இயல்பு அவனுடைய நெப்போலியன் மனநிலையோடு ஒத்துப்போகாமல் முரண்படுகிறது. தான் நெப்போலியனைப் போன்றவன்தானா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே ரஸ்கோல்நிகாவ் கொலை செய்கிறானென்றாலும் தான் அப்படிப்பட்டவனல்ல என்பது அவனுக்கே தெரிகிறது. அவனுடைய குற்றவுணர்வு ஆழமானதாக இருப்பதோடு குற்றங்களைச் செய்வதற்கு முன்னரே அவனுக்குள் தோன்றிவிடுகிறது. துன்புறுவதில் நாட்டம்கொண்ட சோன்யாவின் நயமற்ற படிவமே ரஸ்கோல்நிகாவ் என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.

ஸ்வித்ரிகைலோவ் மற்றவர்களை மனவேதனைக்குள்ளாக்கி அதில் இன்புறும் கொடூரத்தை “அமெரிக்காவுக்குப் போகிறேன்” அல்லது தற்கொலை செய்துகொள்கிறேன் என்பதற்கு முகமூடியாகப் பயன்படுத்துகிறான். இப்படிப்பட்டவனுடைய சாத்வீகமான இரட்டையரல்ல ரஸ்கோல்நிகாவ். புரட்சிகரமான குழுவில் இணைந்திருந்தார் என்ற காரணத்தால் தன்னுடைய இருபத்தெட்டாவது வயதில் தனிச் சிறையில் எட்டு மாதங்களுக்குச் சிறைப்பட்டிருந்த தஸ்தாயேவ்ஸ்கியிடம் இருந்து ரஸ்கோல்நிகாவைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அவரும் அவருடைய தோழர்களும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, துப்பாக்கியேந்திய வீரர்களின் முன்னால் நிற்க வைக்கப்பட்டனர். அதற்குப் பிறகுதான் மன்னிப்பு வழங்கப்பட்டது. சைபீரியாவின் கடுமையான வதைமுகாமில் நான்கு ஆண்டுகளைக் கழித்த சமயத்தில்தான் பிற்போக்கு அரசியல்வாதியாகவும் முடியாட்சி ஆதரவாளராகவும் ரஷிய பழமைவாத தேவாலயத்தைப் பின்பற்றுபவராகவும் மாறியிருந்தார் தஸ்தாயேவ்ஸ்கி.

ரஸ்கோல்நிகாவ் செய்த இரட்டைக் கொலைக்குக் குறைவான தண்டனை விதிக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகளை சைபீரியாவில் கழிக்கிறான். குற்றத்தை ஒப்புக்கொண்டதாலும் அந்தக் கொலைகளைச் செய்யும்போது அவனுக்கு மனநிலை சிறிது சரியில்லை என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டது நீதிமன்றம். திறந்த மனத்துடன் அணுகும் எந்த வாசகரும் ரஸ்கோல்நிகாவின் அத்துமீறல்கள் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டவையே என்ற திண்ணமான முடிவுக்கு எப்படி வரமுடியும் என்பது புரியவில்லை. இயகோ, எட்மண்ட் ஆகிய இந்த இருவரைப் போலவே ஸ்வித்ரிகைலோவின் மனதில் ஆழமாக வேர்கொண்டிருந்த பகைமையும் வெறுப்பும் ரஸ்கோல்நிகாவ் மற்றும் மக்பெத்தின் உள்ளங்களில் இல்லை என்பதால் அவர்களின் வீழ்ச்சி இன்னும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. ரஸ்கோல்நிகாவ் மற்றும் மக்பெத்திடம் முதல் பாவத்தின் சாயல் இருந்ததா என்று தேடுவதன் மூலம் எந்த முன்னேற்றத்தையும் அடையப் போவதில்லை. இருவருமே வருவதை முன்னரே அறிவது அல்லது தீர்க்கதரிசனம் போன்ற கற்பனைத் திறத்தால் அவதியுறுகிறார்கள். தன்னை முன்னிறுத்திக் கொள்ளக்கூடிய செயல் ஒன்று இருக்கிறது என்பது தெரிந்தவுடன் இடைவெளியை நிரப்பி அந்தக் குற்றத்தைச் செய்துமுடித்துவிட்டது போலவே உணர்ந்து அதற்கான குற்றவுணர்ச்சியையும் அனுபவிக்கிறார்கள். இத்தனை ஆற்றல்வாய்ந்த கற்பனைத் திறனும் குற்றவுணர்ச்சியைத் தூண்டும் மனசாட்சியும் இருப்பதால் உண்மையாக நிகழ்ந்த கொலை ஒரு பிரதி அல்லது மறுநிலைப்படி மட்டுமே. நிஜத்தைக் கிழிக்கும் தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் நிகழ்வு. ஒருவிதத்தில் ஏற்கனவே செய்துமுடித்த ஒன்றை மீண்டும் நிறைவுசெய்கிறது.

குற்றமும் தண்டனையும் நாவலானது வாசகரைத் தன்பால் ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடையது என்றாலும் அதன் சாய்வுத்தன்மையை ஒதுக்கிவிட முடியாது. தஸ்தாயேவ்ஸ்கியின் களங்கமென்றே அதைச் சொல்லலாம். அவர் ஒரு பிரிவினைவாதி. அவரின் தீவிரமான பார்வை எழுத்தில் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இன்மைக்கொள்கையில் இருந்தும் ஐயுறவில் இருந்தும் நம்மை லாசரஸைப் போல மேலெழுப்பி, பழமைவாதத்துக்கு மடைமாற்றம் செய்வதுதான் அவருடைய திட்டம். செகாவ், நபக்கோவ் போன்ற பெயர்பெற்ற எழுத்தாளர்களால்கூட அவருடன் ஒத்துப்போக முடியவில்லை. அவரை ஒரு கலைஞன் என்றே அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவர் வற்புறுத்தலைத் திணிக்கும் ஓர் அருட்போதகர். எனக்கே ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நாவல் ஒரு கடுஞ்சோதனையாகத் தோன்றும். மக்பெத்தே மக்பெத் நாடகத்தை எழுதியது போல அச்சமூட்டும் ஆற்றல்மிக்கது என்றாலும் பெருங்கேடு விளைவிக்கக்கூடியது.

ரஸ்கோல்நிகாவை விட்டு நம்மால் ஒதுங்கிநிற்க முடியவில்லை என்பதால் நம்மைக் காயப்படுத்துகிறான். என்னால் சோன்யாவைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை, அவளைக் கண்டு அதிர்ச்சியடைந்து பின்வாங்குகிறேன். தஸ்தாயேவ்ஸ்கியால்கூட நல்ல மனநலம்கொண்ட புனிதரைப் படைக்க முடியவில்லையே. ஆனாலும் அவர் தெளிவான இரண்டு துணைக் கதாபாத்திரங்களை நமக்கு அளித்திருப்பது அசாதாரணமானது. ஒருவர், காவல்துறை ஆய்வாளரான போர்ஃபிரி, ரஸ்கோல்நிகாவுக்கு முற்றிலும் எதிர்நிலையில் இருப்பவர். மற்றொருவர் மிகவும் நம்பகத்தன்மையூட்டும் பாத்திரப் படைப்பான ஸ்வித்ரிகைலோவ், நம்மை முடிவில்லாத வியப்பில் ஆழ்த்துகிறார்.

போர்ஃபிரி தேர்ச்சிபெற்ற ஆய்வாளர், பயனீட்டுவாதத்தில் நம்பிக்கையுடையவர், பயன்பாட்டுவாதக்காரர். நியாயமான வழியில் நிறைய பேரின் நன்மையைக் கருத்தில்கொண்டு நடக்கவேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர். எந்த வாசகரும் (நான் உட்பட) கொடூரமான ஸ்வித்ரிகைலோவுடன் உணவருந்துவதைக் காட்டிலும் போர்ஃபிரியுடன் நேரம் செலவழிக்கவே விரும்புவார்கள். ஆனால் எனக்கென்னவோ தஸ்தாயேவ்ஸ்கி ஸ்வித்ரிகைலோவைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. அழகாகச் சித்தரிக்கப்படும் ஒரு காத்திருப்பு விளையாட்டில் தன்னை எரியும் மெழுகுவர்த்தியாகவும் ரஸ்கோல்நிகாவை வட்டமிடும் பட்டுப்பூச்சியாகவும் வெளிப்படையாக வரித்துக்கொள்கிறார் போர்ஃபிரி.

“ஒரு வேளை நான் ஓடிப்போய்விட்டால்,” என்று வினோதமான புன்னகையுடன் கேட்கிறான் ரஸ்கோல்நிகாவ். 

“நீ ஓடிப்போக மாட்டாய். ஒரு குடியானவன் ஓடிப்போகலாம் அல்லது ஒரு நவீனப் புரட்சியாளன் ஓடிப்போகலாம். ஏனென்றால் அவன் வேறு யாரோ ஒருவரின் கருத்துகளைக் கேள்வி கேட்காமல் பின்தொடர்கிறான். அவனை நோக்கி ஒரு விரலை மட்டும் நீட்டினால் போதும். திருவாளர் மிட்ஷிப்மன் ஈஸியைப் போல நீ சொல்லும் எதையும் வாழ்நாளின் இறுதி வரையிலும் நம்புவான். ஆனால் நீயோ உன்னுடைய கோட்பாடுகளை நம்புவதையே நிறுத்திவிட்டாய். நீ எதற்காக ஓடிப்போகப் போகிறாய்? ஓடி ஒளிந்துகொண்டு நீ என்ன செய்யமுடியும்? உன் முதல் தேவையே தெளிவான ஒரு நிலையும் இருத்தலும் சாதகமான சூழலும்தான். தப்பியோடுபவனின் வாழ்க்கை சிக்கலும் வெறுப்பும் மிகுந்தது. அது என்ன மாதிரியான சூழலை உனக்குத் தரமுடியும்? ஓடிப்போனாலும் நீயாகவே திரும்பி வந்துவிடுவாய். நாங்கள் இல்லாமல் உன்னால் இருக்கவே முடியாது.”

துப்பறியும் கதை வரலாற்றிலேயே இதுவொரு செம்மையான தருணமாகும். போர்ஃபிரி சொல்வதாக அமைந்த “நாங்கள் இல்லாமல் உன்னால் இருக்கவே முடியாது” என்று மெழுகுவர்த்தி பட்டாம்பூச்சியிடம் சொல்வதைவிடச் சிறந்தது எதுவுமே இருக்க முடியாது. இந்த இடத்தில்தான் திறமைமிகுந்த செகாவும் தவறிவிட்டார் என்று சொல்லவேண்டும். தஸ்தாயேவ்ஸ்கியை உயர்வாகக் கருதவில்லையென்றாலும் குறைத்து எடைபோடுவது அபாயகரமானது.

இதைவிட அதிக அபாயகரமானது நீங்காமல் நினைவில் நிற்கக்கூடிய அப்பழுக்கற்ற எதிர்மறுப்புவாதியான ஸ்வித்ரிகைலோவ். பிசாசுகளில் (Demons) வரும் ஸ்டேவ்ரோகினையும் சேர்த்துக்கொண்டோமெனில் ஷேக்ஸ்பியரின் பாதையில் தஸ்தாயேவ்ஸ்கி தொட்ட எல்லை என்று இவரைச் சொல்லலாம்.

ஸ்வித்ரிகைலோவின் வலிமையான விந்தையான பாத்திரப் படைப்பினால் தஸ்தாயேவ்ஸ்கியின் சாய்வுத்தன்மை குறித்த திடமான கருத்திலிருந்து பின்வாங்க வேண்டியிருக்கிறது. தன் சகோதரி துன்யாவைப் பின்தொடரும் ஸ்வித்ரிகைலோவை எதிர்கொள்கிறான் ரஸ்கோல்நிகாவ். தன்னை அப்போதும் எப்போதும் தவிர்த்துவிடுவாள் என்ற பெண்ணைப் பற்றி ஸ்வித்ரிகைலோவ் சொல்வதைப் பாருங்கள்:

“என்மீது கொண்டிருந்த உண்மையான வெறுப்பு, என்னுடைய நிரந்தரமான துயரமுற்ற தோற்றம், அச்சுறுத்தலான தன்மை இவற்றையெல்லாம் தாண்டியும் அவ்தோத்யா ரோமனோவ்னா இறுதியில் எனக்காக வருத்தப்பட்டாள். தொலைந்துபோன ஓர் ஆன்மாவுக்காகப் பரிதாபப்பட்டாள். ஒரு பெண் ஆணுக்குக்காக வருத்தப்பட ஆரம்பிக்கிறாள் என்றால் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பது உறுதி. துவக்கத்தில் அவனைக் ‘காப்பாற்றவேண்டும்’ என்று எண்ணுவாள். அதற்கான காரணங்களை விவரிப்பாள். அவனை உயர்த்தப் பார்ப்பாள். மேன்மையான இலக்குகளைப் பற்றி எடுத்துச்சொல்வாள். புதிய வாழ்க்கையையும் செயல்களையும் அவன் கண்விழித்துப் பார்க்க வேண்டும் என்று நினைப்பாள். இதுபோன்ற சூழ்நிலையில் என்ன கனவுகளைக் காண்போம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான். பறவை தானாகவே வலையில் சிக்கிக்கொண்டது என்பதைப் புரிந்துகொண்டு என்னுடைய முறைக்காக ஆயத்தமாகத் தொடங்கினேன். ரோடியோன் ரோமனோவிச், நீ முகம்சுழிப்பது புரிகிறது. நீ அதைச் செய்யவேண்டியதில்லை. ஏனெனில் அந்த உறவு நீடிக்கவில்லை. (நாசமாகப் போகட்டும்! நான் அருந்தும் மதுவின் அளவைப் பார்) உனக்குத் தெரியுமா? உன் சகோதரி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் பிறக்கவில்லையே என்ற கவலை துவக்கத்திலேயே எனக்கு இருந்தது. அப்படி எங்கேயாவது ஆட்சியில் இருக்கும் அரசர் அல்லது மேற்கு ஆசியாவின் ஆளுநர் அல்லது ஆலோசகரின் மகளாகப் பிறந்திருந்தால் புனிதத் தியாகியாகி அமரத்துவம் பெற்றிருப்பாள். பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குறடுகளால் அவளுடைய மார்பில் சூடிழுத்திருப்பார்கள். அவளாகவே அதைத் தேடிக்கொண்டிருப்பாள். நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் பிறந்திருந்தால் எகிப்தியப் பாலைவனத்துக்குப் போய் வேர்களையும் காட்சிகளையும் பரவசங்களையும் உட்கொண்டு வாழ்ந்திருப்பாள். வேறு ஒருவருக்காகத் துன்புறுவதில் நாட்டம்கொண்டவள் அவள். அப்படியும் புனிதத்துவம் பெறமுடியவில்லை என்றால் சாளரத்தின் வழியே வெளியில் குதித்துவிடவும் செய்வாள்.”

ஸ்வித்ரிகைலோவைக் கொல்ல அவ்தோத்யா ரோமனோவ்னா (துன்யா ரஸ்கோல்நிகாவ்) மேற்கொண்ட முயற்சியில் (அவளை விரும்புவதைவிட அவளின் இந்தச் செயல் நிறைவேற வேண்டும் என்பதை அவனே தீவிரமாக விரும்புகிறான்) தோல்வி ஏற்பட்ட பிறகே ஸ்வித்ரிகைலோவ் “அமெரிக்காவுக்குப் போகிறான்” – தன்னையே சுட்டுக்கொள்கிறான். பிசாசுகளில் வரும் ஸ்டேவ்ரோகினுடையது போலவே ஸ்வித்ரிகைலோவின் விடுதலையும் முழுமையானதாக இருக்கிறது, அச்சமூட்டும் வகையில் முழுமையானதாக இருக்கிறது. பின்னுரையில் உடைந்துபோய் சோன்யாவின் புனிதத்தன்மையை ஏற்றுக்கொள்கிறான் என்றாலும் ரஸ்கோல்நிகாவ் தன் தவறுகளுக்காக வருத்தப்படுவதேயில்லை. ஸ்வித்ரிகைலோவ்தான் தஸ்தாயேவ்ஸ்கியின் முரட்டுக் கோட்பாட்டுகளிடம் இருந்து ஓடுகிறான். சொல்லப்போனால் புத்தகத்தைவிட்டே ஓடிப்போகிறான், ரஸ்கோல்நிகாவ் அல்ல. “ஸ்வித்ரிகைலோவ் வாழ்கிறான்” என்று வாசகர் தனக்குத்தானே முணுமுணுத்துக்கொள்ளலாம். ஆனால் சுரங்கப்பாதையின் சுவரில் அதைக் கிறுக்கி வைப்போம் என்பது உறுதியில்லை.

*

ஆங்கில மூலம்: Raskolnikov, from the book “How to read and why” by Harlod Bloom, Scribner, Touchtone edition (October 2001)