இந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு

0 comment

ஐம்பது பில்லியன் வளர்ச்சியுடன் இந்த ஆண்டு அதானி உலகப் பணக்காரர்களில் முதலிடத்தை எட்டிவிட்டார். இத்தனைக்கும் கடந்த இரு பத்தாண்டுகளில் மட்டும் அவர் அடைந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சி இது. கௌதம் அதானி பரம்பரைப் பணக்காரர் அல்ல. அவர் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. குஜராத்தில் வைரம் வெட்டும் தொழிலில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டு, தன் சகோதரர் நடத்திய சிறிய பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இணைந்துகொண்டார். அதன் பிறகு அங்கே இங்கே பிடித்து அரசியல் தொடர்புகளை உருவாக்கி, சிறிய ஒப்பந்தப் பணிகளை வாங்கி, அதற்கு முதலீடாக வங்கி நிர்வாகங்களைக் கையில் போட்டு நிறைய கடன் வாங்கி கடன் வாங்கி ராவோடு ராவாக ‘தொழிலதிபர்’ ஆனார். ஆனால் அவருடைய வணிகம் ஏறுமுகம் காணத் தொடங்கியது குஜராத்தில் மோடி முதல்வர் ஆன போதுதான். ஜியின் முழுமையான நம்பிக்கைக்குரிய பினாமியாக அவர் ஆன பிறகு ஒரு முக்கியச் சம்பவம் நடக்கிறது. 2002-இல் குஜராத் கலவரங்களில் ஆயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்படுகிறார்கள். கலவரங்கள் அப்போதைய முதல்வரான ஜியின் அனுமதியுடன் தேர்தல் வெற்றிக்காக நடத்தப்பட்டவை. இவற்றில் கணிசமான இஸ்லாமியர் கொல்லப்பட்டனர் என்பதைப் பல முற்போக்கு அமைப்புகளும் அம்பலப்படுத்தினர். விளைவாக, உலகம் முழுக்க மோடிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. உள்ளூரிலும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், வணிகக் கூட்டமைப்புகள் அவருக்கு எதிராக பேசின, ஜி தனிமைப்படுத்தப்பட்டார். ஜிக்கு அப்போதே பிரதமர் ஆகும் ஆசையும் தெளிவான திட்டமும் இருந்தபடியால் இந்தக் களங்கம் அவருக்குப் பெரிய தலைவலியாகியது.

அப்போது அதானி வெளிப்படையாக ஜியை ஆதரித்துப் பேசியதுடன், பாஜக ஆதரவு வணிகக் கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கிக் காட்டினார். “குஜராத் ஒளிர்கிறது” பிரச்சாரத்துக்கும் பெருமளவு பணத்தை முதலீடு செய்தார். இக்கட்டத்தில் வெளிப்படையான அரசு ஆதரவுடன் துறைமுக ஒப்பந்தப் பணிகளைப் பெற்று, வங்கிகளில் கணிசமான கடன்களையும் வாங்கி (அதை அவர் இன்னும் திரும்பச் செலுத்தவில்லை) குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தம் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பினார் அதானி. அவர் எதிர்பார்த்தது போன்றே ஜி 2014இல் பிரதமர் ஆனார். அத்துடன் அதானி கட்டற்ற, வேறு யாரும் கனவு காண முடியாத, 230% வளர்ச்சியை அடுத்தடுத்த ஆண்டுகளில் அடைகிறார். இயற்கை எரிவாயு, துறைமுகக் கட்டமைப்பு, நிலக்கரிச் சுரங்கங்கள், இராணுவத் தளவாடங்கள் என அவரது தொழில் வளர்ச்சி தன் அடிப்படையான வலிமையைக் (ஒப்பந்தத் திட்டங்கள்) கைவிடாமலேயே இன்று உலகம் முழுக்கப் பரவி உள்ளது.  இந்த ஆண்டில் மட்டுமே 50 பில்லியன் வளர்ச்சியை அதானியின் நிறுவனம் அடைந்துள்ளது. Adani Group-இன் வளர்ச்சியானது பாஜகவை இன்று உலகின் மிகப்பெரிய பணக்காரக் கட்சியாக மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில்தான் “மொத்த நாடும் பொருளாதாரச் சோர்வில் இருக்கையில் அதானிக்கு மட்டும் எப்படி பணம் கிடைக்கிறது? அவர் மட்டும் எப்படி கொழுக்கிறார்?” என ராகுல் காந்தி அண்மையில் கேள்வி எழுப்பினார். இது ஒரு தொழிலதிபரைக் கேள்விக்குட்படுத்த அல்ல – அவரது வளர்ச்சி தர்க்கப்பூர்வமாக இல்லை, இதில் எதுவோ உதைக்கிறது எனக் காட்டத்தான். இது நாட்டின் ஜனநாயக மாண்பை, சுதந்திர வாழ்வை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு போக்கு எனச் சுட்டுவதற்குத்தான் (அது எப்படி என்பதற்கு பிறகு வருகிறேன்).

https://s3-ap-northeast-1.amazonaws.com/psh-ex-ftnikkei-3937bb4/images/5/0/2/1/32221205-3-eng-GB/Cropped-1612458689G20210205%20Gautam%20Adani%20Narendra%20Modi.jpg

அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரசாங்கத்தைக் கைப்பாவையாக ஆட்டுகிற ஒரு வலிமைமிக்க கார்ப்பரேட் முதலாளியாக ராக்பெல்லர் இருந்தார். இப்போது அயல்நாட்டு சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் அதானியை “மோடியின் ராக்பெல்லர்” என்கிறார்கள். பூஜ்யத்தில் இருந்து எப்படி இருபதே ஆண்டுகளில் அதானி எலோன் மாஸ்கை விஞ்சும் உலகப் பணக்காரர் ஆனார்? அரசுப் பணம் (வங்கிக் கடன்கள்), அரசின் வளங்கள், அரசின் கட்டமைப்புப் பணிகள், அரசு ஆதரவுடன் சர்வதேச முதலீடுகளைப் பெறுவது என அனைத்து ஆயுதங்களுடனும் அவர் இந்த வளர்ச்சியை அடைந்தார். இவ்வருடத் துவக்கத்தில் பிரான்ஸின் மிகப்பெரிய கார்ப்பரேட்டான Total SA, 2.5 பில்லியன் டாலர்களை அதானியின் நிறுவனத்தில் முதலீடு செய்தது. எந்த நம்பிக்கையில்? அரசு இந்நாட்டின் மொத்த எரிசக்தி வளத்தைச் சுரண்டி வியாபாரம் செய்யும் உரிமையை அதானிக்கு மட்டுமே அளிக்கும் என அறிந்தே, அதானியிடம் பணம் கொடுப்பது அரசிடம் கொடுப்பதற்கு இணை எனத் தெரிந்தே இம்முதலீடுகள் அதானியின் உண்டியலில் நிறைகின்றன. 2019-இல் சாகர் அதானி தம் நிறுவனத்துக்கு 12 வெளிநாட்டு வங்கிகளின் முதலீடு வரப்போகிறது எனும் சேதியை ஒட்டி ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லுகிறார்: “முதலில் இந்திய வங்கிகளிடம் இருந்து முதலீட்டைப் பெற்று உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வோம். அடுத்த கட்டச் செலவுகளுக்கு நாங்கள் வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து முதலீட்டைப் பெறுவோம்.” ஆக, எதுவுமே இவர்களுடைய சொந்த முதலீடு அல்ல. 2019 நவம்பர் வரையிலான கணக்குப்படி 30 பில்லியன் கடன் தொகையை அதானியின் நிறுவனங்கள் வைத்துள்ளன. இவற்றில் கணிசமானவை இந்திய வங்கிகளின் பணம் என்றால் பாஜகவின் ஆத்ம நிர்பார் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என யோசியுங்கள். முன்பு நீரவ் மோடி, அம்பானி ஆகியோர் பயன்படுத்திய அதே தந்திரத்தைத்தான் கௌதம் அதானி அதைவிட வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறார். அதாவது கையில் இருந்து சல்லிக்காசு செலவு பண்ணாமல், முதலீட்டைச் சட்டைப் பையில் இருந்து எடுக்காமல், வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை வாங்கி பெரும் நிறுவனங்களைத் தொடங்கி வளர்வது. சரி, ஏன் இந்திய, வெளிநாட்டு வங்கிகள் பணத்தைக் கொண்டுவந்து அதானிக்குக் கொட்டுகின்றன?

இந்திய வங்கிகளைப் பொறுத்தமட்டில் அரசின் அழுத்தம் காரணம். வெளிநாட்டு வங்கிகளைப் பொறுத்தமட்டில் எந்தப் போட்டியும் தடையும் இன்றி, அதானி எனும் ஆளும் அரசின் கரத்தைக் கொண்டு இங்கு முதலீடு செய்வது பாதுகாப்பானது, இலாபமும் உறுதியானது எனும் நம்பிக்கை. 2015-இல் Credit Suisse எனும் சர்வதேச நிறுவனம் ஒன்று மிகப்பெரிய கடன் சுமையில் தத்தளிக்கிற நிறுவனங்களில் ஒன்றாக அதானியின் நிறுவனத்தை அறிவித்தது. ஆனால் அவர் மேலும் மேலும் கடன் வாங்கி தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவடையச் செய்வதற்கு எந்தத் தடையும் இதனால் ஏற்படவில்லை. இதுவே நீரவ் மோடிக்கும் அதானிக்குமான முக்கிய வித்தியாசம் – நீரவ் தனிமனிதர், ஆனால் அதானியோ மோடியின் ராக்பெல்லர். அதாவது ஜியின் பினாமி முதலீட்டாளர்.

https://www.thehindubusinessline.com/incoming/bcjqml/article33135429.ece/BINARY/bl20stressedjpg

அண்மையில், டெல்லியில் போராடும் விவாசாயிகளுக்கு ஆதரவாக கிரேட்டா தன்பெர்க் டிவீட் போட்டபோது பாஜக அரசு கொதித்துக் கிளர்ந்தெழுந்தது. ஏன் ஒரு டிவீட்டுக்குப் போய் இப்படிப் பதற்றப்பட வேண்டும் எனப் பலரும் குழம்பினார்கள். ஆனால் பாஜகவுக்கும் கிரேட்டாவுக்குமான பஞ்சாயத்து பழையது. அதானி ஆஸ்திரேலியாவில் Carmichael நிலக்கரிச் சுரங்கப் புராஜெக்ட் ஒன்றில் 16 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து பணமீட்ட முயன்ற போது, அங்கு அதற்கு எதிராக சூழலியலாளர்கள் ஒரு பெரிய போராட்டத்தை, பரப்புரையை முன்னெடுத்தார்கள். இதற்குப் பெரும் சர்வதேச சமூக கவனத்தைப் பெற்றுத் தந்தது கிரேட்டா அப்போது ‘#StopAdani’ எனும் ஹேஷ்டேக்குடன் இட்ட டிவீட்தான். அப்போது கடுப்பான அதானி இப்போது விவசாய நிலங்களை ஆட்டையப் போடலாம், விளைபொருட்களைக் கொள்ளையடித்து பெரும் இலாபத்தை ஈட்டலாம் எனக் கனவு காணும்போது மீண்டும் அதே கிரேட்டா வந்து விவசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் செய்ய பீதியாகிவிட்டார் என நினைக்கிறேன். அதனாலேயே பாஜக அரசு தனது சினிமா, விளையாட்டு செலிபிரிட்டிகள் மூலம் கண்டனத்தைத் தெரிவித்து, கிரேட்டாவுடன் தொடர்பில் இருக்கும் இந்தியப் போராளிகளைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. ஏனென்றால் கிரேட்டா எதிர்த்தது அதானியை அல்ல, பாஜகவின் சர்வதேச, உள்ளூர் முதலீடுகளையே. இன்னும் சொல்லப்போனால் அப்போதும் இப்போதும் கிரேட்டா எதிர்த்தது ஜியின் அயல்நாட்டு, உள்நாட்டு முதலீடுகளையே. அதானி மீது கை வைப்பது ஜியின் 56 அங்குல மார்பை நோக்கிச் சேறை வீசுவதற்குச் சமம். அது அவருடைய, பாஜகவின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதற்குச் சமம்.  

அதானி அளவுக்கு இல்லையென்றாலும், முகேஷ் அம்பானியும் ஒரு பாஜக பினாமிதான். இன்னொரு பக்கம், ஒரு மத்திய வர்க்கப் பின்னணியில் இருந்து (ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு நெருக்கமான குடும்பத்திலிருந்து) தோன்றி முழுக்க முழுக்க பினாமி பணத்தைக்கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளில் பிரம்மாண்ட வளர்ச்சியை அடைந்துள்ள விஜய் ஷேகர் சர்மா (Paytm நிறுவனர்) மற்றொரு சிறிய அளவிலான பினாமி. இந்தத் தொழில் வளர்ச்சியானது நல்லதுதானே, அது சமூகத்திற்குப் பயனளிக்கக் கூடியதுதானே என நீங்கள் கேட்டால் அதுதான் இல்லை. அரசு ஆதரவுடன், அரசின் பணத்துடன், அரசுக்காக பினாமியாக செயல்படும் கார்ப்பரேட்டுகள் தாராளமய சந்தைக்கு விரோதமாக செயல்பட்டு ஒரு முழுநிறை அதிகார அமைப்பாக, monopoly-ஆக செயல்படுகின்றன. இது குறித்த கசப்புகள் பிற தொழிலதிபர்களுக்கு உண்டெனினும் அதை வெளியே சொல்வதற்கான துணிச்சல்தான் இல்லை. இத்தகைய சூழல் பொருளாதாரச் சந்தையைவிட நமது ஜனநாயக அமைப்பை, தனிமனித உரிமைகளை, கருத்துரிமைகளை நாசமாக்குகிறது என்பதே மிகப்பெரிய பிரச்சினை.

https://shortpedia-images.b-cdn.net/uploads/2020/01/14/1578980614.jpg

யோசித்துப் பார்த்தால், ‘Crony capitalism’ என இப்போக்கை நாம் விமர்சித்தாலும், உண்மையில் நமது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக அதானி விசயத்தில்தான் ஒரு அரசே ஒரு பினாமியைப் பயன்படுத்தி முழுமையான கார்ப்பரேட்டாகச் செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஏனென்றால், இதன் பொருள், அதானியின் இந்த வளர்ச்சியானது மக்களின் அத்தனை செல்வங்கள், வளங்களையும் பயன்படுத்தி பாஜக மறைமுகமாக இன்று உலகின் மிகப்பெரிய பணக்காரக் கட்சியாக வளர்ந்துள்ளது என்பதே. இதற்கு முன்பு ஒரு கட்சி பல்வேறு ஊழல்கள் மூலம் தனக்கான சொத்தைப் பெருக்கிக்கொள்ளும். அச்சொத்தானது கட்சியின் தலைமையிடம் அதிகமாகவும், பல்வேறு மாநிலங்களில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்களிடம் சிறுபகுதிகளாகவும் இருக்கும். தேர்தல் சமயத்தில் இந்தப் பணத்தை மொத்தமாகத் திரட்டி பிரச்சாரத்துக்கும், கையூட்டுக்கும், பேரம் பேசுவதற்கும் பயன்படுத்துவார்கள். இது நமது முந்தைய பேரரசுகள் பயன்படுத்திய முறை – அரசுக்கு என பிரம்மாண்டமான படையை வைத்திராமல் குறுநில மன்னர்களிடம் அதைச் சிறு பகுதிகளாக வைத்து, நிர்மாணிக்க அனுமதித்து, போர் வரும்போது மட்டும் சிறு படைகளை ஒன்றாகத் திரட்டிக்கொண்டு சண்டை போடுவது. இந்த நிலையே பின்னர் சாம்ராஜ்ஜியங்களின் வீழ்ச்சிக்கு, குறிப்பாக வெள்ளையர்களின் படை நவீன ஆயுதங்களுடன் வந்தபோது, காரணமாகியது. 2012-14 காலத்தில் காங்கிரஸும் தனது முதலீடுகள், படைகள் கைவிட்டுப் போவதை, பாஜகவின் படை முன்பு அனைத்து முதலீட்டாளர்களும் சரணடைவதைக் கண்டது. ஆட்சிக்கு வந்தபிறகு, காங்கிரஸின் தோல்விக்குக் காரணமான பழைய செல்வம் குவிக்கும் பாணியை மாற்றி, ஒரு புதிய பாணியை பாஜக கொண்டுவந்தது.

நேரடி பினாமிகளைக் கொண்டு தொழில்களைத் தாமே நடத்தி, சொத்துகளையும் முதலீட்டையும் தம் கையில் வைத்துக்கொள்வதே கட்சியின் வளர்ச்சிக்குச் சாதகமானது, நாட்டின் மொத்தத் தொழில் உற்பத்தியையும் தம் கைகளில் கொண்டு வந்துவிட்டால் பின்னர் தேர்தல் பிரச்சாரத்துக்கும், கட்சிப் பணிகளுக்கும் செலவு செய்ய தமக்கிணையாக மற்றொரு கட்சி இருக்க முடியாது, எல்லாம் தம் வசம் இருக்கும் போது பணமில்லாமல் மற்ற கட்சிகள் (காங்கிரஸ் அல்லாத மாநில எதிர்க்கட்சிகள்) தம்மிடம் சரணடையும் அல்லது மெல்ல மெல்ல வயிறு வாடிச் சாகும் (காங்கிரஸேதான்) என பாஜக ஒரு புதிய செயல்திட்டத்தை வகுத்தது. இதுவே அவர்களின் ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ திட்டம். இது வெறுமனே இந்தியா முழுக்க இந்துத்துவ வசப்படுத்தும் திட்டமல்ல. அதை அத்தனை சுலபமாகச் செய்ய முடியாது என அவர்கள் அறிவார்கள். இது தேசத்தின் மொத்தப் பணத்தின், அரசு, அரசு சாரா அமைப்புகளின் உள்கட்டமைப்பு வசதிகளின் மொத்த ஆதாரத்தையும் தம்மிடம் தொடர்ந்து வைத்திருப்பதன் வழி தேர்தல் அரசியலைக் கேலிக்கூத்தாக்கி நிரந்தர ஆட்சியாளர்கள் ஆகும் திட்டம்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பல்வேறு தொழிலதிபர்கள் செழிக்க முடிந்தது. ஆனால் பாஜகவோ தமது மறைமுக முதலீடு பெற்ற ஒரு சில தொழில் நிறுவனங்கள் மட்டுமே மொத்த வளர்ச்சியையும் பெற முடியும் எனும் நிலையை ஏற்படுத்தியது. பண மதிப்பிழப்பு மூலம் ஏற்கனவே இருந்த பணமுதலைகளைப் பட்டினி போட்டுக் கொன்றது. வரலாறு காணாத வளர்ச்சியை பாஜகவின் பினாமி தொழிலதிபர்கள் பெற, அவர்களைக் கொண்டு தேர்தலுக்குப் பெருவெள்ளம் போல பணத்தை அள்ளிச் செலவழிக்க பாஜகவால் முடிந்தது. 2019 தேர்தலில் – பாஜகவுடன் ஒப்பிடுகையில் – காங்கிரஸுக்கு செலவு செய்ய சொற்பமான பணமே இருந்தது. அது மட்டுமல்ல, பெரும் முதலீடுகள் மூலமாக பெரும்பான்மையான ஊடகங்கள், தேர்தல் ஆணையம், நிதித்துறை ஆகியவற்றையும் தன் கையில் வைத்திருக்க பாஜகவால் முடிகிறது. கூடவே காங்கிரஸுக்குள் பல மூத்த தலைவர்களை விலைக்கு வாங்கி தமது கொத்தடிமைகளாக, உள்கட்சி கலவரக்காரர்களாக மாற்ற முடிகிறது. தானே அரசு, தொழில் செய்வதும் தானே, அதற்கு முதலீட்டை எந்த வரையறையும் இல்லாமல் சீனா உள்ளிட்ட வெளிநாடுகள், வங்கிகளில் இருந்து பெறுவதும் தானே, நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி தொழில் செய்வதும் தானே, அனைத்து ஒப்பந்தப் பணிகளையும் எடுத்து நடத்துவதும் தானே, இதிலிருந்து வரும் மொத்தப் பணமும் தனதே எனும்படி இன்று பாஜக அடைந்துள்ள ‘பொருளாதாரத் தன்னாட்சி நிலை’ இதுவரை இந்திய வரலாற்றில் எந்த அரசுக்கும், கட்சிக்கும் இருந்ததில்லை. 

https://bsmedia.business-standard.com/_media/bs/img/article/2019-01/17/full/1547746984-1834.jpg

இந்தப் பொருளாதாரச் சர்வாதிகார விருப்பம்தான் அவர்களுடைய “காங்கிரஸ் முக்த் பாரத்” எனும் முழக்கத்துக்குப் பின்னால் இருப்பது. ஏனென்றால் தொழில் ஆதிக்கத்தைப் பொறுத்தமட்டில் அதானிகள் படையெடுக்க இன்னும் நிறைய பகுதிகள் எஞ்சியுள்ளன. உ.தா., அரசு வங்கிகளை முழுக்க கபளீகரம் பண்ணிவிட்டு, ஒன்றுமே மிச்சமில்லை என ஆகும்போது அவற்றை மூடிவிட்டு அதானி தன்வசப்படுத்துவார். இப்போதுள்ள தனியார் வங்கிகளிலும் அப்போது தன் முதலீட்டை அதிகமாக்கி அவற்றைக் கட்டுப்படுத்துவார். நிச்சயமாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகள், கல்லூரி, பல்கலைக்கழகங்களையும் மூடி, அனைவரும் கல்விக்குத் தனியாரை நம்பியிருக்கும் நிலையை ஏற்படுத்தி, கல்வி நிலையங்களை மொத்தமாகத் தம் பினாமிகளுக்கு பாஜக கொடுத்துவிடும். இதுவே மின்வாரியம், ரயில்வே உள்ளிட்டவற்றுக்கும் நடக்கும். நம்ப முடியவில்லையா? இந்தச் செய்தியைப் பாருங்கள்: குஜராத்தில் மின்சாரச் சேவையை வழங்குவது தனியார். அதுவும் அதானியின் நிறுவனம். அவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்ட போது ஒரு குறிப்பிட்ட கட்டணத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். அதானியின் நிறுவனம் மின்சாரத்தையும் நிலக்கரியையும் பயன்படுத்தி உற்பத்தி செய்கிறார்கள். இந்த நிலக்கரியை இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி பண்ணுகிறார்கள். நிலக்கரியின் இறக்குமதி விலை அதிகமாகிவிட்டது என்பதைக் காட்டி அதானி குஜராத்தில் மின்கட்டணத்தை உயர்த்தினார். இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட, 2017-இல் உச்சநீதிமன்றம் இந்தக் கட்டண உயர்வு தவறு என அதைக் குறைக்குமாறு தீர்ப்பெழுதியது. ஆனால் அப்போது இந்தத் தீர்ப்பு நிலுவையில் வந்திருந்தால், நட்டம் ஏற்பட்டு நிறுவனம் கடனில் சரிந்திருக்கும் என்பதால், குஜராத்தில் ஆளும் பாஜக அரசு இத்தீர்ப்புக்கு எதிராக அதிகக் கட்டணம் வசூலிக்கும் அனுமதியை ஓர் ஆணை மூலம் அதானிக்கு அளித்தது. இதில் குறிப்பிடத்தக்க வினோதம் என்னவென்றால் நிலக்கரியை விற்கும் இந்தோனேஷிய நிறுவனத்தில் கணிசமான பங்குகளையும் அதானியே வைத்திருக்கிறார். அதாவது கட்டண உயர்வுக்கு அதானி தந்த காரணம் போலியானது. இப்போது அதிக மின்கட்டணம் மூலம் மக்களிடம் இருந்து பணத்தை உருவி அவர் தன் நிலக்கரி நிறுவனத்துக்கு அதிக இலாபம் பெற வழிவகை செய்கிறார். ஆனால் வெளியே பார்க்க அவரது மின் உற்பத்தி நிறுவனம் இலாபம் இன்றித் தத்தளிப்பதாகத் தெரியும். இப்படி குண்டு வைப்பதும் அவர்தான், அதை எடுப்பதும் அவர்தான். அவருடைய இலாபமானது பாஜகவின் பணமும்தான்.

அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டி அந்த இடத்தில் தனியார் நிறுவனங்களைக் கொண்டுவந்து பாஜக அரசு சாத்தியப்படுத்த உத்தேசிப்பது கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியை அல்ல, சொந்தக் கட்சியின் நிதி வளர்ச்சியைத்தான். அதானிகள் படையெடுக்கும் முன்பு இந்தப் பொது நிறுவனங்கள் தரும் இலவச அல்லது குறைந்த கட்டணச் சேவைகள் மத்திய, கீழ்மத்திய, ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் காப்பாற்றி வந்தன. உ.தா., கோவிட் தொற்று அமெரிக்காவில் பரவியபோது அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் செலவு செய்யப் பணமில்லாமல் பலரும் வீட்டிலேயே பதுங்கிக்கொண்டார்கள். ஆனால் இந்தியாவிலோ அரசு மருத்துவமனைகள் இலவசமாகவே பல கோடிப் பேரைக் காப்பாற்றியது. இல்லையென்றால் நோய்வாய்ப்பட்ட மத்திய வர்க்கத்தினர் தம் சேமிப்புத் தொகைகளைத் தனியார் மருத்துவமனைகளில் செலவழித்து பிச்சைக்காரர்கள் ஆகியிருப்பார்கள். ஆனால் இந்தப் பாதுகாப்பு வளையம் அடுத்து வரும் பத்தாண்டுகளில் இருக்காது. பாஜகவின் ‘தொலைநோக்குத் திட்டமே’ மெல்ல மெல்ல அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகளை மூடி அனைத்தையும் தனியார்மயமாக்கி அந்தப் போர்வையில் அனைத்தையும் தம் கட்சியின் சொத்தாக்கி, பினாமிகள் மூலம் மக்களின் பணத்தைச் சூறையாடுவதே. இன்று அரசு மருத்துவமனைகளை விமர்சிக்கும், இலவசங்களை வெறுக்கும் பல மத்திய வர்க்கத்தினர் அன்று உண்மையை உணர்ந்துகொள்ளும் போது எதுவுமே மிஞ்சியிருக்காது. அதானி இன்றி இந்தியாவில் ஒரு புல்கூட அசையாது எனும் நிலை ஏற்படும். இன்று போல ஒரு பெருந்தொற்று ஏற்பட்டால் மக்களால் அரசு மருத்துவமனையில் இலவசமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது. சிகிச்சை வசதிகள் இருக்காது. அமெரிக்காவில் வசதியில்லாதவர்கள் கல்லூரிக்குப் போக முடியாது. அதற்கு வங்கிக்கடன் வாங்க வேண்டும். அங்கு கீழ்மத்திய வர்க்கத்தினர் வீடற்றவர்களாக வாகனங்களிலும் தெருவோரமாகவும் வசிக்கிறார்கள். அந்நிலை அதைவிட மோசமாக இந்தியாவுக்கும் வரும் என்பதில் ஐயமில்லை. அப்போது நீங்கள் தனியாரைக் குற்றம்சாட்ட முடியாது. ஏனென்றால் மக்களுக்கு வரவேண்டிய மறைமுக நிதி உதவியை பாஜக பிடுங்கி அப்போது தனியாருக்குக் கொடுக்காது, தமது பினாமி கார்ப்பரேட்டுகள் மூலம் தனது சொந்தப் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும். ஏனென்றால், அப்போது திறந்தநிலை சந்தைப் பொருளாதாரம் இருக்காது. அதனிடத்தில் ஒற்றை கார்ப்பரேட்வாதமே இருக்கும். அந்த மொனோபொலியாக பாஜகவின் அதானிகள் இருப்பார்கள். இன்று பாஜகவை ஆதரிக்கும் நவதாராளவாதிகள் அன்று பேச்சற்றுப் போவார்கள். வணிகத்தில் இன்றுள்ள போட்டிக்களம் அன்றிருக்காது. பாஜகவே தேசம், பாஜகவைக் கேள்வி கேட்பது தேசத் துரோகம் என்பதால் மக்களும், வியாபாரிகளும் இதைக் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ள நேரும். 

https://static.theprint.in/wp-content/uploads/2020/07/Mika-Aziz-Twitter.jpeg

அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளிலும் அதானியே முதலீடு செய்து, மொத்தப் பொருளாதாரத்தையும் தன் கையில் எடுத்துக்கொள்வார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. திமுகவை அழிக்க வேண்டும் என அவர்கள் விரும்புவது அக்கட்சியின் தொழிலதிபர்களைக் காலி பண்ணி, பொருளாதார ஆற்றலை விழுங்கிக்கொள்ள வேண்டும் எனும் நோக்கிலேயே! அடுத்த 30-40 ஆண்டுகளில் இந்தியர்கள் அனைவரும் பாஜக முதலீடு கொண்ட ஏதாவது ஒரு தனியார் நிறுவனத்தில்தான் பணி செய்துகொண்டிருப்போம். யாருக்கும் சொந்தமாக ஒரு துண்டு விவசாய நிலம் இருக்காது. கடலில் மீன் பிடிக்கும் உரிமையை மீனவர்கள் பறிகொடுப்பார்கள். இதை யாருமே எதிர்க்க, விமர்சிக்க முடியாது. ஏனென்றால் பாஜகவே இந்தியத் தேசம், பாஜகவின் பினாமிகளே இந்தியா எனும் சித்திரத்தை அப்போது வலுவாக ஏற்படுத்தி நம்மை நம்ப வைத்திருப்பார்கள். நாட்டின் மொத்த நிதியும் அவர்கள் வசம் இருக்கையில் வேறு எந்தக் கட்சியாலும் தேர்தலைச் சந்திக்க முடியாமல் போகும். காங்கிரஸை முழுக்க முழுங்கிய பிறகு ஆரம்பத்தில் பெயரளவுக்கு ஒன்றிரண்டு பி, சி- டீம் கட்சிகளை வைத்திருப்பார்கள். அதன் பிறகு தேர்தல் ஒழியும்போது அவையும் தேவையிராது.

இங்கு “தாமரை மலர வேண்டும்” என பாஜக விரும்புவது இந்த வணிக நலன்களை, திட்டங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான். அதாவது, நாட்டின் மொத்தப் பொருளாதாரமும் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டில் வரும்போது, ஒவ்வொரு குடிமகனும் பாஜகவின் பினாமிகள் அளிக்கும் சம்பளத்தை வாங்கியே சோறுண்ண வேண்டும் எனும் நிலை வரும்போது, தேர்தலே தேவையிராது. அப்போது பாஜக தேர்தலை இரத்து பண்ணும், நாம் யாரும் அதை எதிர்த்துக் கேள்வி எழுப்ப மாட்டோம். ஏனென்றால், பாஜக தலைமை நமது பிக்பாஸ் ஆகிவிடும். பிக்பாஸை எதிர்த்து அவருக்குக் கீழுள்ள பங்கேற்பாளர்கள் பேச முடியுமா? முடியாது. சமூக- பொருளாதார அமைப்புகளே நமது சிந்தனையை, நம்பிக்கையை, சித்தாந்தங்களை, பண்பாட்டை, உணர்வலைகளைத் தீர்மானிக்கும் என்பதால் பாஜகவால் வாழும் மக்களும் அவர்களுக்கு இணங்கியே சிந்திப்பார்கள். சுமார் 300 ஆண்டுகள் நாம் பிரித்தானிய காலனிய அரசைத் தலைவணங்கி ஏற்றுக்கொண்டது ஏனென்றால், இதே போல, அவர்கள் நமது ஒட்டுமொத்த சமூக, பொருளதார அமைப்புகளைத் துல்லியமாகவும் கறாராகவும் கட்டுப்படுத்தினார்கள் என்பதால்தான். அடுத்த இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் விழித்துக் கொள்ளாவிடில் அதுவே இந்தியாவுக்குத் திரும்பவும் நடக்கப்போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை.

நான் நவ-காலனியவாத படையெடுப்பு என பாஜகவைக் குறிப்பிடுவது சும்மா பயமுறுத்த அல்ல. அதானி போன்றோர் மூலம் இன்று பாஜக வெளிநாடுகளில் முதலீடுகளைச் செய்கிறது. அதே போல வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐரோப்பிய வங்கிகளிடம் இருந்து நிதியைக் கடனாகப் பெற்று தொழில் தொடங்கி நடத்துகிறது. இப்போது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்த வணிக நலன்களைக் கருத்திற்கொண்டு பாஜக அரசு அந்நியச் சக்திகளை எதிர்க்கத் தயக்கம் காட்டுகிறது. விளைவாக, 38,000 சதுர அடி கிலோமீட்டர்கள் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதை வெளிப்படையாகவே அவர்கள் செய்வது, அங்கு சீன குடியிருப்புகளை ஏற்படுத்துவது, நமது பிரதமர் ஒரு வார்த்தைகூட சீனாவுக்கு எதிராகப் பேச மாட்டார் எனத் தெரிந்தேதான். குஜராத்தி பனியாக்களுக்கு பணமே கடவுள். பாஜகவின் பல இலட்சம் கோடிகள் அந்நிய மண்ணில் முதலீடு செய்யப்படும் போது, இந்தியாவில் அந்நிய முதலீடு பெற்று அவர்களின் பினாமி நிறுவனங்கள் வளம் கொழிக்கும்போது, இந்தியாவின் ஒரு சிறிய பகுதியை அவர்கள் பிடிப்பதை பாஜக கண்டுகொள்ளாது. பாஜக மூலம் ஐரோப்பிய, சீன நவகாலனிய சக்திகள் இந்தியாவை மீண்டும் ஆக்கிரமிக்கின்றன, காலனியாதிக்கம் செய்கின்றன என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை. அடுத்த நான்கைந்து நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக வென்றுவிட்டால் நமது நாட்டின் குடுமி முழுக்க அயல் சக்திகளின் கையில் இருக்கும். யார் வேண்டுமானாலும் மிரட்டுவார்கள், நாம் அமைதியாக போவோம், அவ்வப்போது பாகிஸ்தானில் உள்ள பனைமரங்கள் மீது ஏவுகணை செலுத்துவதைத் தவிர. 

https://static.theprint.in/wp-content/uploads/2020/06/Ea8-XUVU8AAb2Fd.jpeg

பாஜகவின் வளர்ச்சி என்பது பார்ப்பனிய-பனியா கூட்டணியின் வெற்றி மட்டுமே எனக் காஞ்சா இலையா சொல்வது இதன் அடிப்படையில்தான். பாசிசம் எழுச்சி பெறுவது எச்சூழலில் என ‘Fascism: What is It and How to Fight It’ எனும் தனது சிறிய முக்கியமான நூலில் அலசிய டிராட்ஸ்கி, பொருளாதார நிலையின்மை தோன்றி, அதனால் தேக்கம் ஏற்படும் போது, வணிகர்கள் ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையை ஒரு கைப்பற்றப்பட்ட வாடிக்கையாளர்களாக, தொழிலாளர்களாக மாற்றி, சூறையாட நினைக்கும். அப்போது அதற்குத் துணையாற்றும் நோக்கில் ஊடகங்கள் உள்ளிட்ட பிற அமைப்புகளின் துணையுடன் பொது எதிரிகள் – சிறுபான்மையினர் மற்றமையாக – கற்பனை பண்ணப்பட்டு தேசியவாத அலை ஏற்படுத்தப்பட்டு, ஒரு வசீகரமான ஆதிக்கவாதத் தலைவரின் கீழ் நாட்டின் பிரஜைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுவார்கள். ‘ஜனநாயக விழுமியங்கள் வளர்ச்சியைப் பரவலாக்கி, அது பண உற்பத்தியை ஒரு புள்ளியில் குவிக்கவும், மேற்தட்டுக்கும், மேல்மத்திய வர்க்கத்துக்கும் உரித்ததாக ஆக்கவிடாமல் அனைவருக்குமானதாக மாற்றிவிடுகிறதே’ என எலைட்டுகளும், எலைட்டுகளுக்கு அடுத்தபடியாய்த் தம்மைக் கருதுகிற பிற மக்களும் நினைக்க ஆரம்பிப்பதே பாசிசத்தின் துவக்கப்புள்ளி (இந்தியாவில் சமூகநல, இட ஒதுக்கீட்டு, சிறுபான்மை ஆதரவுக் கொள்கைகளைத் தொடர்ந்து சாடுகிற ஒப்பாரியாக அது இருக்கிறது). ஒரு நாட்டில் முற்போக்கு, ஜனநாயக விழுமியங்களின் ‘இடையூறுகள்’ இன்றி முதலீட்டியம் சம்பாதித்துக் குவிக்க விரும்பும் போது, அது தோற்றுவிப்பதே பாசிச அரசியல் என்கிறார் டிராட்ஸ்கி. பாசிசம் என்பதை ஒரு மேதைமை பொருந்திய, வசீகரமான, மக்கள் செல்வாக்கு மிக்க சர்வாதிகாரியின் ஆட்சிப் பாணி, வலதுசாரிச் சிந்தனையின் விளைவு, ஆதிக்கவாத அரசியல் என்றெல்லாம் பார்ப்பது நோய்க்குறியை நோயாக தவறாக அடையாளம் காண்பதே. இந்தப் பார்வைக்கு சிறந்த உதாரணம் நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லியுள்ளது போன்ற பொருளாதார மந்தநிலையில் நாடே வளர்ச்சியின்றி நிலைகுலையும் போது பெரும்பணக்காரர்களான அதானியும் அம்பானியும் கற்பனை காண முடியாத பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றிருப்பதே. ஜெர்மனியிலும், இத்தாலியிலும் மோசமான பொருளாதார மந்தநிலையின் போதே பாசிசம் எழுந்து நிலைபெற்றது. எப்படி இனவாதம், மிகையான இனப்பெருமிதம், பெரும்பான்மைவாதம், யூத வெறுப்பு, யூத அழித்தொழிப்புத் திட்டங்கள் போன்றவை மீதெல்லாம் அங்குள்ள பெரும்பணக்கார வர்க்கத்துக்கு அக்கறை இருந்ததில்லையோ, அவ்வாறே இந்து தேசியவாதம், மோடியின் சர்வாதிகாரம், மதப்பிரிவினைவாதம் போன்ற விசயங்கள் மீதெல்லாம் இந்தியப் பெரும்பணக்காரர்களுக்கு அக்கறையில்லை. இவை தம் மீது கவனம் திரும்பாதிருக்க உதவும் கதையாடல்கள் என அவர்கள் அறிவார்கள். “பாசிச பாஜக” என நாம் முழுங்கினால் அவர்கள் புன்னகையுடன் அதை வேடிக்கை பார்ப்பார்கள். நாம் உண்மையைப் புரிந்துகொள்ளும் போது அவர்கள் நாட்டைவிட்டே காலி செய்திருப்பார்கள் அல்லது மீண்டும் ஜனநாயக விழுமியங்கள் மேலெழுவதற்கான ஆதரவு நடவடிக்கைகளில் மறைமுகமாக உதவுவார்கள்.

இறுதியாக, இங்கே ஒரு முக்கியமான கேள்வியை நாம் எழுப்பலாம். இந்தியாவின் பெரும்பணக்காரர்கள் பாஜகவின் பினாமி முதலீட்டாளர்கள் எனச் சொன்னேன் அல்லவா? எனில், அவர்களும் இவர்களும் ஒன்று அல்லவா? ஆம், ஒன்றுதான். அதுதான் இன்றுள்ள அரசியல் சூழலை மிகவும் சிக்கலானதாக ஆக்குகிறது. நோய்க்குறியே நோயாக உள்ள சூழலில் இன்று வாழ்கிறோம். இந்தச் சமூகப் பொருளாதாரச் சூழலைத் தனக்கேற்ற வகையில் சுரண்டும் சந்தையாக உருமாற்ற பாஜக எனும் சுயநல முதலீட்டிய சக்தி தோன்றி, அதற்கான அரசியல் சித்தாந்த மொழியையும், கலாச்சாரச் சூழலையும் ஒரு முகமாக சூடிக்கொள்ளவும் செய்கிறது. டிராட்ஸ்கியின் காலத்தில் இருந்ததைப் போல இன்று நீங்கள் மதத்தை முதலீட்டியத்தின் கருவியாகக் காண முடியாது. மதவாத தேசியம் தன்னைத் தக்கவைக்க தனிப்பெரும் முதலீட்டிய சக்தியாகத் தன்னை மாற்றுகிறது. அதற்கு ஒருமுகமாக ஒரு சர்வாதிகாரியை உருவாக்குகிறது. இன்னொரு பக்கம், இந்தச் சுயநல முதலீட்டியம், தன்னைத் தக்கவைக்க மதவாத தேசியத்தைக் காப்பாற்றிப் பெருக்குகிறது. அது தன் முகம் ஒரு சர்வாதிகாரி என வெளிப்படையாக அறிவித்து அவரைக் கொண்டாடுகிறது. இந்தச் சர்வாதிகாரியோ தானே மதவாத தேசியவாதம், தானே முதலீட்டிய பெரும்பணத்தின் உரிமையாளன் (மோடி அதானியின் விமானத்தில் பதவியேற்கப் பறப்பது, பல இலட்சம் மதிப்பிலான ஆடைகளை அணிவது), தானே தேசம் எனக் கூச்சமில்லாமல் பறைசாற்றுகிறார். இந்தச் சூழலில் நாம் மதவாதத்தை மதப்பற்றாக, மதப்பற்றை தேசப்பற்றாக, தேசப்பற்றை பிரதமர் வழிபாடாக, சர்வாதிகாரத்தை பிரதமரின் தன்னம்பிக்கையாக, துணிச்சலாக, அதை தேசத்தின் பெருமிதமாக குழப்பிக்கொள்கிறோம். இன்று ஒருவர் பாசிசத்தைக் கண்டித்தால், அதை ஒட்டுமொத்தமாக தேசத்தின் நலன்களை ஒருவர் சாடுவதாகப் பார்க்கத் தொடங்கியுள்ளோம். இத்தனையையும் கொண்டு அதானிகளை ஆதரிப்பதை நாம் நியாயப்படுத்துகிறோம். எது எதனை உற்பத்தி பண்ணுகிறது எனச் சுலபத்தில் பிரித்தறிய முடியாத சூழலில் இருக்கிறோம்.  

ஆங்கிலேயர்களுக்கு அடுத்தபடியாக நிகழ்ந்த ஒரு மிகப்பெரிய படையெடுப்பு எதுவென்றால் அது காவிப் படைகளின் படையெடுப்பே. அது மறைமுகமாக ‘பனியாக்களின்’ படையெடுப்பே. அதுவும் மறைமுகமாக மேற்கத்திய நாடுகள், சீனா போன்ற வல்லரசுகளின் கூட்டணியுடன் நிகழும் ஒரு நவகாலனிய படையெடுப்பே. ஒரே சமயம் அது தம் கட்சியின் சர்வாதிகார நிலைப்புக்கும் உதவுவதாலேயே நாக்பூர் பார்ப்பனர்கள் அதை அனுமதிக்கிறார்கள். முக்கியமாக, இன்று பனியா-பிராமண கூட்டணி என்பது (இந்திய முதலீடுகள் அனைத்தையும் கையில் வைத்திருக்கிற உள்நாட்டு, வெளிநாட்டு) பனியாக்களே இந்துத்துவர், இந்துத்துவர்களே பனியாக்கள் என மாறியுள்ள நிலையில், நாம் பாசிசத்தில் இருந்து விடுபட, யாரிந்த பனியாக்கள் எனும் கேள்வியை இன்னும் தீவிரமாக எழுப்ப வேண்டும். இந்துத்துவரின் ஆதிக்கத்தில் குஜராத்திய பனியாக்கள் மட்டுமல்ல, சீன கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட அயல்நாட்டு பனியாக்களும் கூட்டிணைந்துள்ளதால் நாம் இதை ஒரு மார்வாரி, பார்ப்பனிய ஆதிக்கமாக மட்டும் சுருக்கி விடக்கூடாது. இது அதைவிட தேச எல்லைகள் தாண்டிய மிகப் பிரம்மாண்டமான ஆதிக்கவாத கூட்டமைப்பு. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், காந்தி உள்ளிட்ட தலைவர்களின் கீழ், வரலாற்றில் ஒரு மிகப்பெரிய கிளர்ச்சி காலனிய ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டது. அது மீண்டும் இங்கு நிகழுமா? பரங்கிகளுக்கு அடுத்தபடியாக நாம் இந்த நவகாலனிய பனியாக்களை விரட்டுவோமா?