இரு சிலுவைகளின் உலகம் – தஸ்தாயேவ்ஸ்கியின் ‘அசடன்’ குறித்து

0 comment

முதல்முறையாக உலக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொள்ளும் ஒரு தமிழ் வாசகன் சந்திக்க நேரும் முதல் பெயராக தஸ்தாயேவ்ஸ்கி இருக்கக்கூடும். எந்தவொரு தமிழ் எழுத்தாளரின் படைப்புகளுக்கு இணையாகவும் அவர் படைப்புகளைப் பற்றி இங்கு எழுதப்பட்டிருக்கின்றது. அதற்கு காரணங்களில்லாமல் இல்லை. அவர் இங்கு பரவலாக அறிமுகம் செய்யப்பட்ட காலம் என்பது நவீனத்துவம் மேலோங்கி இருந்த காலம். அசோகமித்திரனும், ஜி.நாகராஜனும், ஆதவனும் செல்வாக்கு செலுத்திய காலம். இயல்பாக அவர்கள் முன்வைத்த உலகிற்கு நெருக்கமாக இருந்தது தஸ்தாயேவ்ஸ்கியின் உலகம். நற்குணங்கள் அற்றவர்களை கதைமாந்தர்களாகக் கொண்டவை அவரது படைப்புகள். வேசிகளின், திருடர்களின், குடிகாரர்களின் உலகம். மேலும் அவர் படைப்புகள் யாவும் தீவிர நாடகத் தருணங்களால் ஆனவை. வாசகனைக் கொதி நிலையிலேயே இருக்கச் செய்பவை. கைகள் நடுங்க, கண்ணீர் முட்ட அவற்றை வாசிக்க நேர்பவை. அடுத்த கணத்தை எதிர்கொள்ள முடியாத மரண அவஸ்தையில் அவருடைய பெரும்பான்மையான பாத்திரங்கள் இருக்கும். இந்தத் தீவிரம் வாசகனை நகரவிடாது. இங்கு அவர் இலக்கிய வாசகர்களிடையே பெருவாரியாகப் படிக்கப்பட இவை காரணமாக இருந்தன.

மற்ற நாவலாசிரியர்களைவிட தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புலகிற்குள் செல்ல சில முன்தயாரிப்புகள் அவசியம் என நினைக்கிறேன். முதன்மையாக அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். அவரது தனிவாழ்வும் படைப்புகளும் மிக நெருங்கிய தொடர்புகொண்டவை. தல்ஸ்தோயைப் போல அவர்சாதாரணமக்களை எழுதியவரல்ல. அவரின் உலகம் அதீத உணர்வுள்ளவர்களால் நிறைந்தவை. அனைவரும் உரக்கப் பேசுபவர்கள். எப்போதும் ஒருவகையான நாடகத்தன்மையுடன் வெளிப்படுபவர்கள். தஸ்தாயேவ்ஸ்கியும் தீவிர உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டவர்தான். ‘சாதாரணவாழ்க்கை அல்ல அவர் வாழ்ந்தது. மரணத்தை சில அடி தூரத்தில் சந்தித்து மீண்டும் வாழ்க்கைக்குள் வந்தவர். மேலும் நரம்புச் சிக்கலால் பாதிக்கப்பட்டவரும்கூட. ஆகவே உணர்வுகளின் எல்லைகளுக்கு மாறி மாறி அலைக்கழிந்தவர். அவரைப் போன்ற சாயல்களைக்கொண்ட பலர் அவர் நாவல்களில் வருவர்.

மேலும் அவரது குணாதியசமும் இரு துருவங்களைக் கொண்டது. படைப்புச்சியில் மெய்ஞானிக்கு நிகரான பல பக்கங்களை எழுதியவர். அதே சமயம் நிஜ வாழ்வில் கீழ்மை நிறைந்தவராகவும் இருந்துள்ளார். இறுதிக் காலத்தில் தன் மனைவிக்குத் தொடர்ந்து துன்பங்களை மட்டுமே தந்திருக்கிறார். இந்தத் துருவ நிலைகளை அவரது கதைமாந்தர்களிலும் நம்மால் காணமுடியும். குடிகாரர்களின் அல்லது நோயாளியின் இயல்புகளாக அவை வெளிப்படும். மற்றுமொரு முக்கியக் குறிப்பு என்பது அவரால் கடைசிவரை சூதாட்டத்திலிருந்து வெளிவர முடியவில்லை. தன் அத்தனை செல்வங்களையும் அதில் தொலைத்திருக்கிறார். அதையும் பல கதாபாத்திரங்களாக நாம் காணலாம். எப்போதும் காலில் இரும்புக் குண்டு கட்டப்பட்ட அவலத்தில் இருப்பவர்கள் அவரது பல கதாபாத்திரங்கள்.

ஒப்புநோக்க தஸ்தாயேவ்ஸ்கியின் பெரு நாவல்களில் படிக்கச் சிக்கலான நாவல் அசடன். குற்றமும் தண்டனையும் நாவலின் கூர்மைக்கும் கரமசோவ் சகோதரர்களின் முழுமைக்கும் இடையில் மாட்டிக்கொண்ட படைப்பு எனச் சொல்லலாம். இலக்கிய வாசகன் தன்னுடைய முதல் வாசிப்பாக இதை எடுக்க நேர்ந்தால் கொஞ்சம் குழம்பிக்கூட போவான். தன் மனதிற்குத் தோன்றியதை உளறலாக கதாபாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்துகிறாரோ என அவன் எண்ணக்கூடும். கதாபாத்திரங்களின் குணாதிசயத்திற்கான தர்க்கத் தொடர்ச்சி இதில் வெளிப்படையாக இல்லை. அவற்றை வாசகனே நிரப்பிக்கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல் கதாபாத்திரங்களின் ஒருமை பல சமயங்களில் சிதறடிக்கப்பட்டுள்ளது. இப்படைப்பைப் பொறுத்தவரை ஆசிரியரின் கவனம் என்பது அந்தந்த தருணங்களின் இக்கட்டுகளில்தான் உள்ளது. அதை ஏற்படுத்தும் வகையில் கதாபாத்திரங்களை கொஞ்சம் வளைத்துக்கொள்கிறார்

ஆகவே இந்த நாவலை சாராம்சப்படுத்தி தொகுத்துக்கொள்ள வேண்டுமென்றால் ஒருவகையான பொதுமைப்படுத்தல்களைச் செய்ய வேண்டியுள்ளது. வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால் கதாபாத்திரங்கள் அனைத்தும் எந்த வரையறைக்குள்ளும் அடங்காமல் சிதறியே உள்ளன. அந்தச் சிதறல்களை அப்படியே வைத்துக்கொண்டோமென்றால் நம்மால் வாசிப்பை ஒரு ஒழுங்கிற்குள் கொண்டுவர முடியாமல் உதிரிச் சம்பவங்களின் தொகுப்பாகவே அது நம்முள் நீடிக்கும். ஆகவே பெரும்பான்மையான நேரங்களில் கதைமாந்தர்களின் நடவடிக்கைகளை வைத்து நாம் அவர்களை வரையறை செய்துகொண்டால் நம்மால் இதன் மையத்திற்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு நிலைகளுக்குள்ளும் செல்ல முடியும் என நினைக்கிறேன்.

நான்கு முதன்மைக் கதாபாத்திரங்களால் ஆனது இதன் மையக் கதையோட்டம். இளவரசன் மிஷ்கினின் வருகையுடன் நாவல் துவங்குகிறது. எளிமையான, கள்ளமற்ற குணம் கொண்டவன். மன வளர்ச்சியில் குழந்தையிலேயே நின்றுவிட்டவன் எனலாம். தஸ்தாயேவ்ஸ்கி தன் பல்வேறு நாவல்களூடாக முன்வைக்கும் லட்சியப் பாத்திரம். மற்ற நாவல்களில் நாயகனின் முன்னால் அப்பாத்திரம் இருக்கும். கரமசோவ் சகோதரர்களில் ஃபாதர் ஜோஸிமா போல. குற்றமும் தண்டனையும் நாவலில் சோனியா போல. ஆனால் இந்த நாவலில் அப்பாத்திரத்தையே நாயகனாக வைத்து ஆரம்பிக்கிறார். தன் மனநிலைக் கோளாறுக்காக சிகிச்சை பெற்றுவந்த சுவிட்சர்லாந்தின் சானிட்டோரியத்திலிருந்து கிளம்பி ருஷ்யா வருகிறான் மிஷ்கின். சூதும் வஞ்சமும் சுயநலமும் இருக்கும்உண்மையான உலகிற்கு. வளர்ந்தவர்களின் உலகிற்கு என தஸ்தாயேவ்ஸ்கி அதைக் கூறுகிறார். அதன் மூலம் ஒரு வலுவான இக்கட்டிற்குள் அவனை இழுத்துச்செல்கிறார். ஆசிரியருக்கும் நமக்கும் இருக்கும் அடிப்படைக் கேள்வி ஒன்று அங்கு எழுகிறது. இந்தத் தூயவன் அத்தனை நிகழ்வுகளையும் தாண்டி அப்படியே நீடிப்பானா? கலங்கமற்ற அன்பிற்கு தீமையின் வலுவை எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளதா? இதுவே இந்த நாவல் எதிர்கொள்ளும் முக்கியக் கேள்வி. இதன் எதிர்திசையும் இக்கேள்விக்குள் இருக்கிறது. அன்றாட நிஜ மனிதர்கள் இவனை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இவனின் கலங்கமின்மை அவர்களைதேனும் வகையில் அசைக்கிறதா அல்லது தொந்தரவு செய்கிறதா? இவ்விரு கேள்விகளுடன் நாம் நாவலின் ஒவ்வொரு நிகழ்வுக்குள்ளும் செல்லும்போது நம்மால் ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்ள முடியும்.

மிஷ்கினிற்கு நேர் எதிர்பாத்திரமாக ரோகோஸின் வருகிறான். இருவரையும் சேர்த்து அறிமுகம் செய்தே நாவல் துவங்குகிறது. ஒருவன் ஒளியென்றால் மற்றொருவன் இருள். நாவல் முடிவதும் இருவரின் சேர்ந்திருக்கும் தருணத்தில்தான். இளமையின் துடிப்பும் எதிர்விசையின் வலிமையும் கொண்டவன் ரோகோஸின். தெருவில் முதல்முறை சந்திக்கும் நஸ்டாஸியாவிற்காக அவளின் அழகில் மயங்கி வீட்டில் திருடி பெரும் பணம் கொடுத்து காதணி ஒன்றை வாங்கித் தருகிறான். அதை அறிந்த தந்தையிடமிருந்து தப்பி வெளியூர் சென்றுவிட்டவன், தன் தந்தை இறந்தவிட்டதைத் தெரிந்துகொண்டு மீண்டும் பீட்டர்ஸ்பெர்க்கிற்கு வருகிறான். நஸ்டாஸியாவை மீண்டும் சந்தித்து அவளை ஆட்கொள்ள! நாவலில் அவனின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் ஒரு சித்திரத்தை உருவாக்கிக்காட்டுகிறார் தஸ்தாயேவ்ஸ்கி. எதிர்மறை குணம் கொண்டிருந்தாலும் ரோகோஸின் நேரடியானவன். தன் இயல்பை எங்கும் அப்படியே முன்வைப்பவன். பணம் ஒரு பொருட்டல்ல அவனுக்கு. தான் விரும்பியது கிடைக்க எந்த எல்லைக்கும் செல்பவன். நஸ்டாஸியாவின் விருந்துக்கு தன் கும்பலுடன் நுழைபவன் அவளை மணக்க எண்ணும் கன்யாவிடம் நூறாயிரம் ரூபிள்கள் தருவதாகக் கூறி ஒரே வீச்சில் அத்தடையை உடைக்கிறான். அவனுக்குத் தெரியும், ஒரு லௌகீக வக்கீலால் மறுக்க முடியாத தூண்டில் இரை அது. அதை ஒருகணம்கூட யோசிக்காமல் செய்கிறான். மிக இயல்பாக. அதன் மூலம் அன்றாட மனிதர்களின் மனநிலைகளுக்கு மிக மேலே இருப்பவன் அவன் என நம்மால் உணர முடிகிறது. மிஷ்கின் இருப்பதைப் போல. ஆனால் நேர் எதிர் திசையில்.

இவ்விருவருக்கும் ஊடுபுள்ளியாக இருப்பவள் நஸ்டாஸியா. ரோகோஸினின் பெண் உருவம் எனச் சொல்லலாம். ஆனால் முற்றிலும் அல்ல. அவள் ஒரு அடி மிஷ்கினை நோக்கி நகர்ந்திருப்பவள். பெண்ணாக இருப்பதாலேயே மிஷ்கினின் ஈர்ப்பை விலக்கமுடியாதவளாக இருக்கிறாள். இந்த நாவல் முழுதும் அவளது ஆதாரச் சிக்கலாகச் சித்தரிக்கப்படுவது எங்கு செல்வதென்பதுதான். மிஷ்கினை நோக்கிச் செல்லுந்தோறும் அவளது இடம் கீழிறங்குகிறது என நினைக்கிறாள். தன்னில் கனிவு சுரப்பதை தன்னுடைய நிலையழிவென்று கருதுகிறாள். அதற்காக ஒரு அபலை வேடமிட்டு அவனிடமிருந்து விலகுகிறாள். தன்னால் அவனுக்கு எத்துயரும் வந்துவிடக்கூடாது என்பதாக அதை மாற்றிக்கொள்கிறாள். தன்னை மணந்துகொண்டால் அவனுடைய வாழ்வு நரகமாகிவிடுமென்று கூறி கண்ணீர் விடுகிறாள். அதே சமயம் ரோகோஸினுடனும் அவளால் இருக்க முடிவதில்லை. ஒரே காந்தமுனைப்புலம் கொண்ட இரு உலோகங்களை இணைத்து வைப்பதைப் போலவே அவர்களின் உறவு இருக்கிறது. வெறிகொண்ட இரு மிருகங்களை ஒரு கூண்டில் அடைத்து வைப்பதைப் போல அவர்களது உறவு ரத்தக் களரியாகவே இருக்கிறது.

ரோகோஸினிடமிருந்து நஸ்டாஸியா ஒரு அடி விலகியிருப்பவள் என்றால் மிஷ்கினிடமிருந்து ஒரு அடி விலகியிருப்பவள் அக்லாயா. மிஷ்கினைப் போல அவளும் ஒரு குழந்தை மனம் கொண்டவள்தான். ஆனால் பார்ப்பனவெல்லாம் தனக்கு வேண்டுமென்று அடம்பிடிக்கும் குழந்தை. வஞ்சமற்றவள், ஆனால் பிடிவாதம் கொண்டவள். குழந்தைக்குரிய பிடிவாதம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மிஷ்கினைக் கேலி செய்கிறாள். புஷ்கினின் கவிதைகள் தெரிந்தவள். இருமுறை மிஷ்கினிடம் தன் காதலை மறைமுகமாகச் சொல்லி அது சாதகமான விளைவைத் தரவில்லை என்றவுடன் அதை விளையாட்டாக மாற்றிவிடுகிறாள். நாவலின் இறுதியில் மிஷ்கினுடன் திருமணம் முடிவாகும் சமயத்தில் கடைசி நேரத்தில் மறுத்துவிடுகிறாள். எது அவளை அப்படிச் செய்ய வைத்தது என்பது ஒரு முக்கியமான கேள்வி. அத்திசை நோக்கி வாசகனின் கற்பனையைச் செலுத்த வைக்கும் தருணம் அது. நஸ்டாசியா சந்திக்கும் அதே சிக்கல். ஆனால் இவள் வேண்டாமென உதறுவது முற்றிலும் அதற்கு எதிரான வேறொரு காரணத்தால். உலகியல் காரணத்தால். ஒரு அசடனுடனான திருமணம் தன்னை சமூகத்தில் ஒரு கேலிப் பொருளாக்கிவிடுமென நினைக்கிறாள். ஆனால் அதுவும் ஒரு பாவனைதான்.

இந்த நான்கு மனிதர்களுடனான பல்வேறு ஊடுபாவுத் தருணங்களால் ஆனது இதன் முக்கிய நாடகத் தருணங்கள். இரண்டு இடங்களை இங்கே சொல்லலாம். முதலாவது இரு ஆண்களுக்கிடையானது. முன்னரே கூறியது போல நாவல் இருவரையும் இணையாக அறிமுகப்படுத்தித்தான் ஆரம்பிக்கிறது. இருவரையும் இணையாக வளர்த்தெடுத்து ஒருகட்டத்தில் இருவரையும் மோதவிடுகிறார் தஸ்தாயேவ்ஸ்கி. நாவலின் மகத்தான இடங்களில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ரோகோஸினின் இல்லத்துக்குச் செல்கிறான் மிஷ்கின். அவன் எதிர்பார்த்தது போல இடுங்கலான சிறிய அறைகளின் தொகுப்பாக உள்ளது ரோகோஸினின் வீடு. அங்கு இறந்த கிறித்துவின் ஓவியத்தைக் கண்டு அதிர்ச்சிகொள்கிறான். அதில் எந்தத் தெய்வீக அம்சமும் இல்லை. சித்ரவதைப்பட்டு இறந்துபோன ஒரு மனிதனின் வலி மட்டுமே அதில் இருக்கிறது. அவ்வதிர்ச்சி அவனை அசைத்துவிடுகிறது. அதேபோல் மிஷ்கினின் ஆத்மார்த்தமான கருணைப் பேச்சு ரோகோஸினை சிறிதளவு நெகிழ்த்துகிறது. அச்சந்திப்பின் முடிவில் இருவரும் தங்களின் சிலுவைகளை மாற்றிக்கொள்கிறார்கள். அது ஒருவகையான அங்கீகரித்தல்தான். மிஷ்கினின் துளி ரோகோஸினுக்குள்ளும் அதேபோல் அவனின் துளி மிஷ்கினுக்குள்ளும் இருப்பதை உணரும் இடம் அது. ஆனால் அது நீடிக்காமல் அடுத்த நிகழ்விலேயே இன்னும் மூர்க்கம் கொண்டு தன் மிருக இயல்பை தக்க வைத்துக்கொள்கிறான் ரோகோஸின். எந்த நிலையிலும் கதைமாந்தர்கள் தங்கிவிடாமல் அவர்களிடையே தொடரும் இந்த ஊசலாட்டமே இந்த நாவல் நமக்குத் தரும் முக்கிய வாழ்க்கைத் தரிசனங்களில் ஒன்று.

இரண்டாவது இடம் இரு பெண்களும் சந்திக்கும் இறுதித் தருணம். மிஷ்கினை நஸ்டாஸியா வீட்டிற்கு அழைத்துச்செல்கிறாள் அக்லாயா. அங்கு ரோகோஸினும் இருக்கிறான். மிஷ்கினிற்குத் தான் உகந்தவள் இல்லை என்றும் நஸ்டாஸியாவே சரியானவள் என்றும் சொல்ல எண்ணி அங்கு செல்கிறாள். ஆனால் அங்கு சென்றவுடன் உள்ளிருந்து வேறொன்று எழுந்து வருகிறது. இங்கு குறிப்பிட வேண்டிய அம்சம் ஒன்றுள்ளது. இந்த நாவல் முழுக்கப் பெருந்தன்மை என்னும் அம்சத்தை நாம் காணமுடியாது. ஒன்றைக் கொடுப்பதற்கு எவராலும் முடியவில்லை. அதற்குப் பதிலாக தன்னை எதிர்மறையாக மாற்றிக்கொண்டு அதிலிருந்து துண்டித்துக்கொள்கிறார்கள். அக்லாயா செய்வதும் அதைத்தான். நஸ்டாஸியாவைக் கண்டதும் சண்டையிடுகிறாள். அவளைத் தூற்றுகிறாள். அதன் மூலம் அவள் உறவை வெட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறாள். விளைவாக மிஷ்கினுக்கும் நஸ்டாஸியாவிற்குமான நெருக்கம் அங்கு ஏற்படுகிறது.

இதை தஸ்தாயேவ்ஸ்கியின் தனித்தன்மை என்றே கூறலாம். மனிதர்கள் தங்கள் ஈகோவை விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. அதே சமயம் தாங்கள் எண்ணுவதைச் செய்ய இந்த அதீத உணர்ச்சிகரத்தை வழிமுறையாகக் கொண்டுள்ளனர். கோபமும் பிணக்கும்தான் மனிதர்களின் இயல்பான வெளிப்பாட்டு முறையென அவரின் கதைமாந்தர்கள் நமக்குத் தெரிவிக்கிறார்கள். அன்பும் பெருந்தன்மையும்கூட அவ்வடிவிலேயே மற்றவர்களுக்குச் சென்று சேர்கிறது.

மற்றுமொரு முக்கியமான கேள்வியாக எழுந்து வருவது மிஷ்னின் ஏற்பு சார்ந்தது. இரு பெண்களும் மிஷ்கினை ஏற்றுக்கொள்ளவில்லை. மிகக் கவனமாக ஆசிரியர் அவ்விடத்தை உருவாக்குகிறார். இவ்வகையான பெருநாவல்களின் பண்பென்பது சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களையும் உருவாக்கி வாழ்க்கையை உசாவுவது. இரு பெண்களுக்கும் வெவ்வேறு தருணங்களில் மிஷ்கினுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இறுதிக் கணத்தில் அது நிகழ்வதில்லை. ஏதோவொரு வகையில் இருவருக்குமே அவனை மணம் செய்துகொள்வதில் ஒரு இடரல் இருக்கிறது. கற்குவியலில் ஒரு முத்துமணியைக் கண்டுகொள்ளும்போது ஏற்படும் இடரல் என அதைச் சொல்லலாம். அனைத்திலும் அவன் தனியாகத் தெரிகிறான். ஒருவகையில் இங்குள்ள மண்ணுலக வாழ்க்கையில் அவனிற்கு இடமில்லை. இயேசு மனிதகுமாரனாக மாறும் வரையில்தான் அவருக்கு இங்கு இடம். அதன் பிறகு அவர் நீங்கியாக வேண்டும். இறுதியில் மிஷ்கினும் மீண்டும் சானிடோரியத்திற்கே அனுப்பப்படுகிறான்.

இந்த நான்கு முதன்மைக் கதைமாந்தர்களுக்குக் கீழ் இருப்பவர்கள் இரண்டாம் நிலைப் பாத்திரங்கள். தஸ்தாயேவ்ஸ்கியின் உலகில் வரும் சாதாரணவர்கள். அவரின் பிற படைப்புகளை வாசித்தவர்கள் இவர்களில் ஒரு பொதுத்தன்மை இருப்பதைக் கண்டுகொள்ளலாம். மூன்று வகையான மனிதர்கள் இவர்கள். முதல் தரப்பினர் குடிகாரர்கள். ஏதோவொரு இடத்தில் வாழ்க்கையின் மீது பிடிப்பிழந்து நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள். உதாரணமாக இதில் வரும் ஜெனரல் இவோல்கின் என்கிற கதாபாத்திரத்திற்கும் குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் மர்மல்தோவிற்கும் பெரிய வித்தியாசமில்லை. வாழ்க்கையில் தோற்றவர்கள். ஆனால் அதீத குடி மூலம் அதன் மேல் ஒரு போர்வையைப் போட்டு மறைக்க முயல்பவர்கள். இவோல்கினும் ஒரு தோற்ற ராணுவ அதிகாரிதான். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் உயர்ந்த நிலைக்குச் செல்ல அவர் மட்டும் அதே நிலையில் தங்கிவிட்டவர். எல்லாக் கதாபாத்திரங்களைப் போல இவரும் அதிலிருந்து விடுபட ஒரு வழியமைத்துக்கொள்கிறார். எதேச்சையாக தான் கேட்க அல்லது வாசிக்க நேரும் செய்தித் துணுக்குகளைத் தன் வாழ்க்கையுடன் இணைத்துக் கதைவிடுபவர். அதன் மூலம் தனக்கே தன் வாழ்க்கையை மாற்றிக் கூறிக்கொண்டு சமாதானமடைபவர். ஓரிடத்தில் நெப்போலியன் ருஷ்யாவைப் படையெடுத்து வருகையில் சிறுவனான தன்னைக் கண்டுகொண்டு அவரின் வாரிசாகச் சொல்லி பல அரசாங்க மதியூகத் திட்டங்களைத் தன்னிடம் சொல்வதாக ஒரு நீண்ட உணர்ச்சிகர உரையை ஆற்றுகிறார். உச்சகட்டப் பகடியுடன் கூறப்பட்ட பகுதி அது.

இரண்டாம் வகையினர் நோயாளிகள். உயிர்க்கொல்லி நோயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் சிறுவனைப் போல. இப்போலிட் என்னும் விடலைப் பையன் காச நோயால் பாதிக்கப்பட்டவன். அதை ஒரு உருவகமாகவே நாவலில் கையாள்கிறார். நிச்சயமான மரணம் வெகு அருகில் இருக்கும் கொடுமையை, அது ஏற்படுத்தும் வாதையை, அதன் மூலம் மேலெடுத்துச் செல்கிறார். மிஷ்கினின் பிறந்த நாள் விருந்தில் ஒரு நீண்ட தன்னுரையை இப்போலிட் ஆற்றுகிறான். இந்த நாவலின் உச்ச இடங்களில் ஒன்று அது. யதேச்சையாக தவறவிட்டுவிட்ட பர்ஸைத் திருப்பிக் கொடுக்கையில் அம்மனிதனின் வறுமை நிலையை உணர்ந்து உதவுகிறான் இப்போலிட். அதன் மூலம் கிடைத்த நம்பிக்கையில் தன் உளச்சோர்விலிருந்து சிறிது காலம் மீள்கிறான். அதைப் போன்று எதிர்காலத் திட்டங்களைத் தன் நண்பனுடன் தீட்டும்போது ஒரு அலையென நிஜம் அவனை வந்து அறைகிறது. எத்திட்டமும் செய்யமுடியாத வாழ்க்கை கொண்டவன் என்பதை உணர்கிறான். மற்றவர்களைப் போல் எதிர்காலத்தின் மேல் அவனால் நம்பிக்கை வைக்க முடியாது.

மேலும் ரோகோஸின் அறைக்குச் செல்லும்போது மிஷ்கின் கண்ட அதே ஓவியத்தை அவனும் காண்கிறான். அவன் ஆன்ம பலத்தை முழுதாக அழிக்கிறது அந்த ஓவியம். அந்த இருள் அவன் கனவில் ஒரு தேள் வடிவ ஜந்துவாக, கடிபட்டுச் சீழ் ஒழுகும் திரவத்தோடு காட்சியளிக்கிறது. அந்தக் கடைசி அடியிலிருந்து அவனால் மீள முடியவில்லை. சாகப் போவதாகவும் அதற்குமுன் இதை அனைவருக்கும் சொல்ல வேண்டி இவ்வுரையை வாசிப்பதாகவும் கூறுகிறான். ஆனால், அதை எவரும் நம்பவில்லை. அவர்களின் அனுதாபத்தைப் பெறவே அதைக் கூறுவதாக எண்ணுகிறார்கள். வாசகனை அசௌகரியத்தின், வெறுமையின் எல்லைக்குத் தள்ளும் பகுதி அது. சக மனிதனின் உயிர்வலியைக்கூட உணர முடியாத சூழல்கொண்ட மானுடத் திரள் நாம் என்பதும் மனிதன் எவ்வளவு தனித்து விடப்பட்டவன் என்பதுமான எண்ணங்களிலிருந்து நம்மால் விலக முடிவதில்லை.

மூன்றாம் வகையினர் புத்திஜீவிகள். அனைவரிலும் வாசகனால் வெறுக்கப்படுபவர்களாக இவர்களே இருக்கிறார்கள். இவர்களுடைய அறிவனைத்தும் சுயமைய நோக்காகவும் சந்தேகத்தை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவும் மாறிப்போகும் அவலத்தையே தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்கள் தொடர்ந்து சித்தரிக்கின்றன. இதில் அதற்கு உதாரணமாக இளவரசன் எஸ், எவ்ஜீன் என்னும் இரு கதாபாத்திரங்களைச் சொல்லலாம். சுற்றிலும் உணர்வுகள் கொந்தளித்துச் சுழிக்க எவற்றிலும் பட்டுக்கொள்ளாமல் தடித்த தோலுடையவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

தஸ்தாயேவ்ஸ்கி மட்டுமே படைத்துக் காட்டும் பகுதி ஒன்றுண்டு. உலக இலக்கியத்தில் அவருக்கு நீங்கா இடமொன்று இருக்குமானால் அது இதன் பொருட்டே என்று நான் கூறுவேன். ஒரு மேம்பட்ட கலாச்சார உலகில் வைத்துப் பார்த்தால் மேற்கூறிய அனைத்துப் பாத்திரங்களும் கீழானவர்கள், பொய்மை நிறைந்தவர்கள், குடிகாரர்கள், பொறுப்பற்றவர்கள், தன்னையே ஏமாற்றிக்கொள்பவர்கள். இவர்களை எவ்வகையிலும் ஏற்றிக் காட்டாமல் அவர்களின் இயல்புகளை அப்படியே எடுத்து நம்முன் வைக்கிறார். அவர்களின் உணர்வுகள் வழியே சென்று நாம் வெளிவருகிறோம். கூடவே பயணிக்கிறோம். நாவல் முடிகையில் ஆச்சரியமாக இவர்கள் அனைவரையும் நம்மில் ஒருவராகவே கண்டுகொள்கிறோம்

இலக்கியம் செய்யும் மாயங்களில் ஒன்று அது. நம்மில் ஒரு துளி இவோல்கினும், ஒரு துளி லெப்தேவவும் இருப்பதை உணர்ந்துகொள்கிறோம். அவர்களுக்கும் நமக்குமான தூரமொன்றும் அவ்வளவு பெரிதல்ல எனத் தெரிகிறது. அவர்களில் நம்மைக் காண்கிறோம். அதன் மூலம் மிஷ்கினின் கண்களை ஒருகணமேனும் நாம் பெறுகிறோம். உணர்வு அலைகளினூடாகச் சென்று நாம் அடையும் இம்மாற்றமே நாம் இந்த நாவல் மூலம் பெறும் மிகப்பெரிய கொடை. நம்மைச் சுற்றியுள்ள இப்போலிட்களை, எவ்ஜீன்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அது தஸ்தாயேஸ்கி என்னும் மாபெரும் கலைஞன் நமக்கு அளித்திருப்பது.

இந்த நாவலின் வெற்றிகளை குறிப்பிடும் அதே சமயம் இதன் போதாமைகளையும் சொல்ல வேண்டியுள்ளது. முதலாவது, ஏற்கனவே கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியதைப் போல கதாபாத்திர இயல்புகளின் தர்க்கத் தொடர்ச்சி, அவரின் மற்ற நாவல்களில் அமையப் பெற்றதைப் போல இதில் இயைந்து வரவில்லை. ஒருகட்டத்தில் எந்தக் கதாபாத்திரமும் எந்தத் திசையிலும் பயணிக்கலாம் என்கிற அளவு ஒரு நிலையழிதல் கதைகூறலில் நிகழ்கிறது. இதன் பின்னாலுள்ள நோக்கம் புரிகிறது. கதைச் சூழலை அனைத்துச் சாத்தியங்களுக்கும் கொண்டுசெல்ல தஸ்தாயேவ்ஸ்கி முனைகிறார். அதன் மூலம் ஒரு முழுமையான விசாரணையை அவ்வாழ்க்கைச் சூழலில் கொண்டுவர நினைக்கிறார். இருப்பினும், மற்ற இரு பெருநாவல்களில் அவர் அடைந்த கச்சிதத்தை இதில் அடையவில்லை என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டியதுள்ளது.

https://biblioklept.files.wordpress.com/2014/10/dream-of-reason.jpg

இரண்டாவது, இதில் நீண்ட உரையாடல்களாக வரும் விவாதப் பேசுபொருட்கள். முக்கியமாக மூன்று பேசுபொருட்கள் வருகின்றன. மரண தண்டனை பற்றிய மிஷ்கினின் தன்னுரை, ரயில் முதலான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வழியாக உருவாகும் ரஷ்யர்களின் வீழ்ச்சியைப் பற்றியும் ஐரோப்பியரை நகல்செய்வதைப் பற்றியும் லெப்தே ஆற்றும் உரை, கத்தோலிக்கத்தைப் பற்றிய விமர்சனமாக மிஷ்கின் கூறுவது. இதில் முதல் பேசுபொருள் மட்டும் இப்போலிட் வழியாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. மரண தண்டனையும் உயிர்க்கொல்லி நோயும் மனிதனில் நிகழ்த்தும் ஒரே வகையான விளைவுகளைக் குறித்ததாக அது வளர்ந்து செல்கிறது. மற்ற இரண்டும் அந்தந்த தருணங்களில் பேசப்பட்டு அப்படியே விடப்படுகின்றன. இங்கு மீண்டும் கரமசோவ் சகோதரர்கள் நாவலையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். அதில் பேசப்படும் விவாதப் பொருட்கள் அனைத்தும் அங்கு நடக்கும் வாழ்க்கையினூடாக அடுத்த தளத்திற்குச் செல்லும். ஸோசிமாவின் வாழ்க்கையும் இவான் கூறும்விசாரணையாளன்நாடகமும் ஒன்றையொன்று பொருள்கொள்ளச் செய்பவை. அவ்வாறான வாசிப்புக்கு இடமளிக்காததாகவே இதிலுள்ள பேசுபொருட்கள் உள்ளன.

இறுதியாக, நாவலின் முடிவுப் பகுதியைப் பற்றிக் கூறவேண்டும். ஜெயமோகன் ஓரிடத்தில் கூறுகிறார்- நாவலின் கட்டமைப்பு வில்லின் வடிவை ஒத்ததாக இருக்கும் என. மெதுவாகத் தொடங்கி கிட்டத்தட்ட நாவலின் நடுப்பகுதியில் அதன் உச்சத்தை அடைந்து அங்கிருந்து மீண்டும் கீழிறங்கி ஒருவகையான சாந்தத்தில் முடியும். மிகச் சில நாவல்களே ஆரம்பித்த இடத்திலிருந்து தொடர்ந்து மேலேறிச்சென்று முடிவில் ஒரு வெடிப்பு நிகழும். “காடுநாவல் அத்தகைய தன்மைகொண்டது. சிறுகதைக்கு இணையான இறுதி உச்சத்துடன் அந்த நாவல் முடியும். இந்த நாவலும் அத்தகைய கட்டமைப்பு கொண்டதுதான். மிஷ்கின் என்னும் தூய ஆத்மாவை அனைத்து வகையான சூழலிலும் நிறுத்தி தஸ்தாயேவ்ஸ்கி பரிசீலிக்கிறார். இறுதிப் பகுதியில் அதை அதன் உச்சகட்ட எல்லைக்கு எடுத்துச்செல்கிறார்

திருமணத்திற்குச் சற்று முந்தைய கணத்தில் ரோகோஸினுடன் வெளியேறும் நஸ்டாஸியாவைக் காண சிறிது காலம் கழித்துச் செல்கிறான் மிஷ்கின். சிறிய அலைக்கழிப்பிற்குப் பிறகு ரோகோஸினைச் சந்தித்து அவனுடன் வீட்டிற்கு நுழைகிறான். சத்தம் போடாமல் இருக்குமாறு ரோகோஸின் சொல்ல மிஷ்கினும் அதை அப்படியே செய்கிறான். ஒளிந்து விளையாடும் சிறுவர்களைப் போல அவர்களின் நடவடிக்கைகளை விவரிக்கிறார் தஸ்தாயேவ்ஸ்கி. முந்தைய நாளே ரோகோஸினால் குத்தப்பட்டு படுக்கையில் நஸ்டாஸியா பிணமாகக் கிடக்க, பெரியவர்களுக்குத் தெரியாமல் ஒளித்து வைக்கப்பட்ட பொம்மை போன்ற மனநிலையுடன் அவர்களின் உரையாடல் நிகழ்கிறது. உரையாடல்களில் அவர்கள் மாறி மாறிசகோதரரேஎன அழைத்துக்கொள்கிறார்கள். அங்கு அவர்களிடையே பேதங்கள் மறைந்துவிடுகின்றன. கடவுளும் சாத்தானும் ஒன்றாகும் தருணம் அது. மெல்ல ரோகோஸின் தன் சித்தமிழந்து உளறவும் சிரிக்கவும் செய்கிறான். அன்றைய இரவு முழுவதும் அவளின் சடலத்துடன் அவர்கள் இருவரும் தனித்து இருக்கிறார்கள். தங்களை ஆழமாக அவர்கள் உணர்ந்துகொள்ளும் இடமது. ரோகோஸின் அழும் சமயமெல்லாம் அவன் கன்னத்தைத் தன் கன்னத்தோடு சேர்த்து வைத்துக்கொள்கிறான் மிஷ்கின். கண்ணீர் இருவர் கன்னத்திலும் வழிந்து செல்கிறது. யாருடைய கண்ணீர் அது எனத் தெரியாத மர்மத்துடன் அது நிலத்தை அடைகிறது. அவன் உளறும் நேரமெல்லாம் அவனது தலையைக் கோதிவிடுகிறான் மிஷ்கின்

அங்கு அவர்கள் தங்களுக்குள் உணர்ந்துகொள்வது என்ன என்பது முழுக்க வாசகனின் கற்பனைக்கே விடப்பட்டுள்ளது. அவர்களின் செயல்கள் வழியாக நமக்கு உணர்த்தப்படுவது அவர்கள் ஒன்றின் இரு நிலைகள் என. அவர்களின் ஒரு சிட்டிகையளவுதான் அதில் வரும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் குணங்களும் என்பதை நாம் உணர்கிறோம். நீர்மையாக்கப்பட்ட மிஷ்கினும் ரோகோஸினுமாகவே இவ்வுலகில் மனிதர்களாகிய நம் இயல்பு உள்ளது. மாறி மாறி வெளிப்படும் இருவரின் கலவைதான் இங்கு மனித குணமென்பது. இருவரின் சிலுவைக்குறிகளையும் நம் கழுத்தில் அணிந்துள்ளோம். தருணத்திற்கேற்ப அதிலொன்று அசையும் ஒலியை நாம் கேட்கிறோம். இரு சிலுவைகளின் ஓயாத செயல்பாடென நம் உலகம் இயங்குகிறது. நம்மில் ரோகோஸின் வெளிப்படும் தருணமெல்லாம் மிஷ்கினின் கைகள் நீண்டு நம் தலையைக் கோதுமென்றால் மிக அரிதான ஒன்றை இந்த நாவலில் இருந்து நாம் பெற்றுக்கொள்கிறோம்.