ஒற்றை நிலைப்பாடு – இடாலோ கால்வினோ

0 comment

பால்வெளி மண்டலத் திரள்களின் வேகம் பற்றிய எட்வின் பி.ஹப்பிளின் கணக்கீடுகள் வாயிலாக, அனைத்து பிரபஞ்ச விசயங்களும் ஒரே நிலைப்பாட்டில் குவிந்திருக்கும் அந்தத் தருணத்தை, வெட்டவெளியில் அது விரிவடையத் துவங்குவதற்கு முன், எங்களால் நிறுவ முடியும்.

இயல்பாகவே, நாங்கள் அனைவரும் அங்குதான் இருந்தோம் – பழைய Qfwfq கூறியது – வேறு எங்கு நாங்கள் இருந்திருக்க முடியும்? வெட்டவெளி என்ற ஒன்று இருக்க முடியும் என்பது அப்போது எங்களில் யாருக்கும் தெரியாது அல்லது காலம் என்பது இருக்க முடியும் என்பதும். மத்தி மீன் போல அங்கு வியாபிக்கும் காலத்தால் எங்களுக்கு என்ன பயன்?

“மத்தி மீன் போல வியாபிக்கும்” என ஒரு இலக்கியப் படிமத்தைப் பயன்படுத்திக் கூறுகிறேன். உண்மையில், நாங்கள் வியாபிக்க ஒரு வெட்டவெளிகூட அங்கு இல்லை. எங்கள் ஒவ்வொருவரின் ஒவ்வொரு நிலைப்பாடும் மற்ற ஒவ்வொருவரின் ஒவ்வொரு நிலைப்பாட்டுடன் ஒற்றை நிலைப்பாட்டில் ஒரே சமயத்தில் ஒன்றிணைகிறது. நாங்கள் அனைவரும் இருந்த நிலைப்பாடு அது. உண்மையில், ஆளுமை வேறுபாடுகளுக்காக அல்லாமல், நாங்கள் மற்றவரைப் பற்றிக் கவலைப்படக்கூட இல்லை. ஏனென்றால், வெட்டவெளி என்ற ஒன்று இல்லாத போது, Mr.Pbert Pberd போல மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிற அனைத்து காலமும் அதிக எரிச்சல் தரக்கூடிய விசயம்.      

நாங்கள் எத்தனை பேர் அங்கு இருந்தோம்? ஓ, என்னால் அதைத் தோராயமாகக்கூடக் கணக்கிட முடியாமல் போனது. கணக்கிடுவதற்காக, குறைந்தபட்சம் சற்று அப்பால் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாறாக, நாங்கள் அனைவரும் அதே நிலைப்பாட்டை ஆக்கிரமித்துக்கொண்டோம். நீங்கள் நினைக்கக்கூடியதற்கு மாறாக, நட்புறவை ஊக்குவிக்கக்கூடிய ஒரு வகையான நிலைமை அல்ல அது. உதாரணமாக, மற்ற காலங்களின் சக மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அங்கு, நாங்கள் அனைவரும் சக மனிதர்களாக இருந்த காரணத்தால், காலை வணக்கமோ அல்லது மாலை வணக்கமோகூட யாருக்கும் சொல்வதில்லை.

முடிவில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நண்பர்களோடு மட்டும் இணைந்திருந்தோம். Mrs.Ph(i)Nk0, அவளுடைய நண்பர் De XuaeauX, புலம் பெயர்ந்த குடும்பத்தினரான Z’zu மற்றும் நான் சற்று முன் குறிப்பிட்ட Mr.Pbert Pberd என எனக்கு நினைவில் உள்ளது. அங்கு ஒரு மிகச் சிறிய அறை இருந்ததால் சுத்தம் செய்யும் ஒரு பெண்மணியும் அங்கு இருந்தார் – “பராமரிப்பு ஊழியர்” என அழைக்கப்பட்டார் – ஒரே ஒருவர் மட்டும், இந்த முழுப் பிரபஞ்சத்திற்கும். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், அவர் நாள் முழுவதும் செய்வதற்கு ஒன்றுமில்லை, உள்ளே தூசு படியக்கூடிய ஒரு நிலைப்பாட்டில்கூட ஒரு துளி தூசுகூட நுழைய முடியாது – எனவே அவர் அரட்டையடித்துக்கொண்டும், குறைகூறிக்கொண்டும் பொழுதைக் கழித்தார். 

நான் ஏற்கனவே பெயர் குறிப்பிட்டவர்களைச் சேர்த்து, நாங்கள் அதிக நெரிசல் மிக்கவர்களாக இருந்தோம். அத்துடன் அங்கு திணித்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தை வடிவமைக்கப் பயன்படக்கூடிய அனைத்து பொருட்களும், புவியியலுக்கு (உதாரணத்திற்கு, வாஸ்கஸ்) அல்லது வேதியியலுக்கு (குறிப்பிட்ட பெரிலிய ஐஸடோப்புகள் போல) ஒதுக்கப்பட வேண்டியதிலிருந்து வானியலின் ஒரு பகுதியாக மாறக்கூடியது பற்றி (ஆந்த்ரோமெடாவின் நெபுலா போல) உங்களால் கூற இயலாத ஒரு வழியில், இப்போது சிதைக்கப்பட்டு, செறிவாக்கப்பட்டன. அனைத்துக்கும் மேலாக, Z’zu குடும்பத்தினரின் வீட்டுச் சாமான்கள் எப்பொழுதும் நிறைந்து வழிந்தன. முகாம் படுக்கைகள், பாய் விரிப்புகள், கூடைகள். நீங்கள் எச்சரிக்கையாக இல்லை என்றால், இந்த Z’zu-க்கள், அவர்கள் ஒரு பெரிய குடும்பம் என்னும் ஒரு வேண்டுகோளுடன் அவர்கள் மட்டும் இந்த உலகத்தில் இருப்பதாகச் செயல்படத் துவங்கிவிடுவர். எங்களுடைய நிலைப்பாட்டில் அவர்களுடைய துணிகளை உலர வைக்கவும்கூட விரும்புவர்.            

ஆனால் மற்றவர்கள் அங்கு முதலிலும் Z’zu-க்கள் பின்னரும் வந்த காரணத்தால், மற்றவர்களும் Z’zu-க்களை முதலில் “புலம் பெயர்ந்தவர்கள்” என அழைப்பதன் மூலம் காயப்படுத்தினர். அது வெறும் ஆதாரமற்ற பாரபட்சம் – எனக்குத் தெளிவாகத் தோன்றுகிறது – ஏனென்றால் முன், பின் எப்போதும் அவ்வாறு இருந்ததில்லை. எந்த இடத்திலிருந்தும் புலம் பெயர்தல் என்பது அல்ல, “புலம் பெயர்தல்” எனும் கருத்தாக்கத்தை அரூபமான வெளி மற்றும் காலத்தின் புறப்பரப்பில் உள்வாங்கத் தூண்டுபவர்கள் இருந்தார்கள்.   

அது குறுகிய மனப்பாங்கு என நீங்கள் அழைக்கக்கூடியதாக இருந்தது. அந்தச் சமயத்தில் எங்கள் கண்ணோட்டம் மிகவும் முக்கியமற்றதாக இருந்தது. நாங்கள் ஒரு சூழலின் பிழையில் வளர்ந்தோம். எங்கள் அனைவருக்கும் இடையில் அடிப்படையாக உள்ள மனப்பாங்கு உங்கள் மீது கவனம் கொள்கிறது. பேருந்து நிறுத்தத்தில், திரையரங்கில், பன்னாட்டு பல் நிபுணர் மாநாட்டில் – எங்களில் இருவர் சந்திக்க நேரிட்டால், அது இன்றும்கூட வளர்ச்சியைப் பேணுகிறது – கடந்துபோன நாட்களைப் பற்றி நினைவுகூரத் துவங்கிவிடுகிறோம். யாரேனும் என்னை அடையாளம் காணும் பொழுது, நான் யாரையேனும் அடையாளம் காணும் பொழுது – நாங்கள் வணக்கம் கூறுகிறோம் – உடனடியாக எதைப்  பற்றியாவது வினவத் துவங்குகிறோம் (மற்றவர்களால் நினைவுகூரப்படும் சிலரை மட்டும் ஒவ்வொருவரும் நினைவுகூர்ந்தாலும் கூட). எனவே பழைய பூசல்கள், அவதூறுகள், களங்கம் கற்பித்தல்கள் பற்றியே மீண்டும் துவங்குகிறோம். யாரேனும் Mrs.Ph(i)Nk0 பற்றிக் குறிப்பிடும் வரை – ஒவ்வொரு உரையாடலும் இறுதியில் அவளைச் சுற்றியே நிகழ்கிறது – திடீரென முக்கியத்துவமின்மை புறந்தள்ளப்படுகிறது. நாங்கள் ஊக்கம் பெற்றவர்களாக, புளகாங்கிதமான, தன்னலமற்ற உணர்வு நிரம்பியவர்களாக உணர்கிறோம். எங்களில் யாரும் மறக்க முடியாத மற்றும் நாங்கள் அனைவரும் வருத்தம் தெரிவிக்கிற ஒரே ஒரு நபர் Mrs.Ph(i)Nk0. அவள் எந்த இடத்தில் நிலைகுலைந்து போனாள்? நான் அவளைக் காண்பதை நிறுத்திவிட்டேன். Mrs.Ph(i)Nk0-வை, அவளுடைய மார்புகளை, அவளுடைய தொடைகளை, அவளுடைய ஆரஞ்சு நிற ஆடையை – அவளை இந்தப் பால்வெளி அமைப்பில் அல்லது வேறு எங்கும் இனி நாங்கள் மீண்டும் சந்திக்க முடியாது.  

நான் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்துகிறேன். இந்தப் பிரபஞ்சம், ஓர் அரிய கட்சியின் அதீதத்தை அடைந்த பிறகு, மீண்டும் செறிவுமிக்கதாக மாறிவிடும் என்னும் கோட்பாடு என்னை உறுதியாக இணங்கச் செய்ய முடியாது. இன்னமும் எங்களில் பலர் அதைக் கணக்கிட்டு, மீண்டும் நாங்கள் அனைவரும் அங்கு இருக்கக்கூடிய காலத்திற்காகத் தொடர்ச்சியாகத் திட்டங்களை உருவாக்கி வருகிறோம். கடந்த மாதம், இங்கு தெருமுனையில் உள்ள மதுக்கூடத்திற்குச் சென்றேன். அங்கு யாரைப் பார்த்தேன்? Mr.Pbert Pberd. “என்ன விசேசம்? எதன் பொருட்டு இங்கு வந்தீர்கள்?” அவர் பாவியாவில் ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் முகவராக இருக்கிறார் என்பதை அறிந்தேன். அவருடைய வெள்ளிப் பற்களுடன், அவருடைய பகட்டான ட்ரவுசர் கொக்கிகளுடன் அவர் எப்போதும் போலவே இருந்தார். அவர் ஒரு விசும்பலுடன் என்னிடம் கூறினார், “நாங்கள் அங்கு திரும்பவும் சென்ற போது, நாங்கள் உறுதிப்படுத்த வேண்டிய விசயம், இந்த முறை, குறிப்பிட்ட மக்கள் அங்கு இல்லை… நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த Z’zu-க்கள். . .”

அவதானிப்புகளை பலர் ஒரே மாதிரியாக முன்வைத்து, “நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்… Mr.Pbert Pberd. . .” என முடிவாகக் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று கூறி அவருக்குப் பதிலளிக்க நான் விரும்பியிருக்க வேண்டும்.    

அந்த விசயத்தைத் தவிர்ப்பதற்காக, நான் மிக அவசரப்பட்டுக் கூறினேன்: “Mrs. Ph(i)Nk0 எப்படி இருக்கிறார்? நாங்கள் அவரை மீண்டும் அங்கு காண வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?”  

“ஆ, ஆம்… அவள் எல்லா விதத்திலும் மிக நன்றாக இருக்கிறாள்…” எனச் சற்று முகம் வாடிக் கூறினார்.  

எங்கள் அனைவருக்கும் அந்த நிலைப்பாட்டுக்குத் திரும்புவதற்கான நம்பிக்கை என்பது அனைத்துக்கும் மேலாக, மீண்டும் ஒரு முறை Mrs.Ph(i)Nk0 உடன் இருப்பதற்கான நம்பிக்கைதான். (இதில் நான் நம்பிக்கை கொள்ளவில்லை என்றாலும்கூட, இது எனக்கும் பொருந்தும்.) அந்த மதுக்கூடத்தில் எப்போதும் நிகழ்வது போல, அவளைப் பற்றிப் பேசுவதில் இலயித்து, பின் அங்கிருந்து அகன்றோம். இன்னமும் அந்த ஞாபக முகத்தில் Mr.Pbert Pberd அவர்களின் துயரம் மங்கலாக நிழலாடியது.    

Mrs.Ph(i)Nk0 உடைய மாபெரும் இரகசியம் என்னவெனில் அவள் எங்களுக்குள் எந்தவிதப் பொறாமையையும் தூண்டவில்லை அல்லது எந்தவிதமான வதந்திகளையும்கூடத் தூண்டவில்லை. அவள் அவருடைய நண்பர் Mr.De XuaeauX அவர்களுடன் படுக்கச் சென்றாள் என்னும் உண்மை எல்லோரும் நன்கு அறிந்ததே. ஆனால் ஒரு நிலைப்பாட்டில், அங்கு ஒரு படுக்கை இருந்தால், அது முழு நிலைப்பாட்டையும் ஆக்கிரமித்திருக்கும். எனவே அது படுக்கைக்குச் செல்லுதல் எனும் கேள்வி அல்ல. ஆனால், அங்கு இருத்தல் என்பது தான் கவனிக்கத்தக்கது. ஏனென்றால் அந்த நிலைப்பாட்டில் இருந்தவர், படுக்கையிலும் இருந்தார் என்பதுதான். அதன் தொடர்ச்சியாக, அவள் எங்கள் ஒவ்வொருவருடனும் படுக்கையில் இருந்திருக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கத்தக்கது. அவள் மற்றொருவருடன் இருந்திருந்தால், அவளைப் பற்றிக் கூறியிருக்கப்பட வேண்டிய அனைத்து விசயங்களும் கூறப்பட வேண்டியதில்லை. சுத்தம் செய்யும் பெண்மணிதான் எப்பொழுதும் அவதூறுகளைத் தொடங்குவது, மற்றவர்கள் அவளைப் போலச் செய்வதற்காகத் துண்டப்படுவதில்லை. Z’zu குடும்பத்தினரின் விசயம் பற்றி – ஒரு மாற்றத்திற்காக! – பீதியூட்டும் விசயங்களை நாங்கள் கேட்க வேண்டியிருந்தது. தந்தை, மகள்கள், சகோதரர்கள், சகோதரிகள், தாய், அத்தைமார்கள்- அதிக அதிர்ச்சியூட்டும் மறைமுகக் குறிப்புக்கு முன் யாரும் எந்தவிதமான தயக்கத்தையும் காண்பிக்கவில்லை. ஆனால் அவளுக்கு அது வித்தியாசமானது. அவளிடமிருந்து நான் நகல் செய்த மகிழ்ச்சி அவளுக்குள் மறைந்திருத்தலின் மகிழ்ச்சி, punctiform, எனக்குள் அவளைப் பாதுகாத்தலின் மகிழ்ச்சி, punctiform, அதே சமயத்தில் அது குரூரச் சிந்தனை (அவளுக்குள் உள்ள எங்களின் punctiform இணைவின் வரைமுறையின்மைக்கு நன்றி) மற்றும் கற்பும்கூட (அவளுக்குத் தந்த punctiform இருண்மை). சுருக்கமாக- மேலும் அதிகமாக நான் என்ன கேட்க முடியும்?

எனக்கு உண்மை எனத் தெரிய வந்த இவையனைத்தும், மற்ற ஒவ்வொருவருக்கும்கூட உண்மையாக இருந்தது. அவளுக்கு- அவள் பெற்றிருந்த, பெறக் கிடைத்த சம மகிழ்ச்சி, அவள் எங்களை வரவேற்றாள், நேசித்தாள், மேலும் அனைவரையும் சமமாக ஆக்கிரமித்துக்கொண்டாள். 

நாங்கள் அனைவரும் மிக நன்றாக ஒன்றிணைந்திருந்தோம், மிக நன்றாக. அசாதாரணமான ஏதோ ஒன்று நிகழ்வதற்கான வரம்பை வகுத்தது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில், அவளுக்குக் கூறுவதற்கு போதுமானதாக இருந்தது: “ஓ, எனக்கு மட்டும் ஏதாவது ஒரு அறை இருந்திருந்தால், உங்களுக்காக நூடுல்ஸ் செய்வதற்கு நான் எவ்வளவு ஆசை கொண்டிருப்பேன் சிறுவர்களே!” அந்தத் தருணத்தில், அவளுடைய வட்ட வடிவத் தோள்கள் ஆக்கிரமிக்கும் அளவுக்கு, பணக்கட்டுகளைச் சுற்றிய ஊசிகளுடன் முன்னும் பின்னும் நகர்ந்தவாறு, அவளுடைய தோள்கள் மாவை அழுத்திப் பிசைகையில், அழுத்திப் பிசைகையில், பரந்த பலகையைத் தாறுமாறாகச் சிதறடிக்கும் மாவு மற்றும் முட்டைகளின் மிகப்பெரிய மண் மேட்டில் சாய்ந்திருக்கும் வெண்மையான, பளபளப்பான அவளுடைய மார்புகளுக்கான ஒரு வெட்டவெளி பற்றி நாங்கள் அனைவரும் சிந்தித்தோம். மாவு ஆக்கிரமிக்கக்கூடிய, மாவுக்கான கோதுமை, மற்றும் கோதுமையை விளைவிக்கும் வயல்கள், மற்றும் வயல் பாசனத்திற்கான நீரோட்டத்தைத் தரும் மலைக்குன்றுகள், மற்றும் குழம்புக்காகத் தங்கள் இறைச்சியைத் தரும் பசுக்கூட்டத்திற்கான புல் நிலங்கள் பற்றிச் சிந்தித்தோம்.

கோதுமையை அறுவடை செய்ய தன் கதிர்களுடன் வருகை தரும் சூரியனுக்கான வெட்டவெளி பற்றிச் சிந்தித்தோம். வெப்ப வாயுக்களின் மேகங்களிலிருந்து செறிவாக்கும் சூரியனுக்கான வெட்டவெளி பற்றிச் சிந்தித்தோம். ஒவ்வொரு பால்வெளியையும், ஒவ்வொரு நெபுலாவையும், ஒவ்வொரு சூரியனையும், ஒவ்வொரு கோளையும் பற்றிக்கொள்ளத் தேவைப்படும் வெட்டவெளி வாயிலாக நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலங்கள் மற்றும் பறந்து திரியும் விண்மீன் திரள்களின் எண்ணிக்கை பற்றிச் சிந்தித்தோம். அதே சமயம் இந்த வெட்டவெளி தவிர்க்க முடியாத வகையில் உருவாகி வருவதைப் பற்றிச் சிந்தித்தோம்; அதே சமயம் Mrs.Ph(i)Nk0 அந்த வார்த்தைகளை “…ஆ, என்ன நூடுல்ஸ், சிறுவர்களே!” என உச்சரித்த அவளை உள்ளடக்கிய அந்த நிலைப்பாட்டைப் பற்றிச் சிந்தித்தோம். நாங்கள் அனைவரும் ஒளி ஆண்டுகளில், ஒளி-நூற்றாண்டுகளில், ஒளி-மில்லியன் ஆண்டுகளில், தொலைவின் ஒளி வட்டத்தில் விரிவடைந்து கொண்டிருந்தோம். நாங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் நான்கு மூலைகளுக்கும் வீசி எறியப்பட்டு வந்தோம் (பாவியாவுக்கான அனைத்து வழிகளிலும் Mr.Pbert Pberd), மற்றும் அவளும், எந்த வகையான ஆற்றல்-ஒளி-வெப்பம் என எனக்குத் தெரியாததில் கரைந்து போனாள், Mrs.Ph(i)Nk0, எங்களுக்கு நெருக்கமானதன் மத்தியில் இருந்தாள், சிறு உலகம் பெருந்தன்மையான தூண்டுதலுக்குத் தகுதியானதாக இருந்தது. “சிறுவர்களே, நான் உங்களுக்காகத் தயாரிக்கும் நூடுல்ஸ்”, பொதுவான அன்பின் உண்மையான எழுச்சி, அதே தருணத்தில் வெட்டவெளி, முறையான பேச்சு, வெளி மற்றும் காலம், மற்றும் பிரபஞ்ச ஈர்ப்பு, மற்றும் ஈர்க்கும் பிரபஞ்சம் பற்றிய கருத்தியலைத் தோற்றுவித்து, சாத்தியமான பில்லியன், பில்லியன் சூரியன்களை, கோள்களை, கோதுமை வயல்களை உருவாக்கி, கோள்களின் கண்டங்கள் வாயிலாகச் சிதறடித்து, மாவு நிறைந்த, எண்ணெய் பளபளப்பான, பரந்த தோள்களுடன் Mrs.Ph(i)Nk0 அந்தத் தருணத்தில் தொலைந்து போனாள்.

நாங்கள் அவளுடைய இழப்புக்காகத் துயருற்றோம்.                             

*

இடாலோ கால்வினோ: இத்தாலியப் பத்திரிகையாளர், எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இத்தாலியப் புனைகதையாளர் எனப் பெயர் பெற்றவர். கியூபாவில் 1923-ல் இத்தாலியத் தந்தைக்கும் ஸார்தீனியா தீவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர். பெற்றோர் விவசாயத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததால் கால்வினோவும் விவசாயம் சார்ந்த கல்வி பயின்றார். ஆனால் இரகசியமாக இலக்கியத்தில், குறிப்பாக பாஸிச எதிர்ப்பு இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். 

1943-ல் இத்தாலியை ஜெர்மனி கைப்பற்றியதால் அவர் படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. இராணுவத்தில் சேர வேண்டும் அல்லது மறைந்து வாழ வேண்டும் என்றொரு நிலை வந்த போது அவர் ஒரு சில மாதங்கள் மறைந்து வாழ்வதைத் தேர்ந்தெடுத்தார். 

1947-ல் தனது The Path to the Nest of Spiders என்ற முதல் நாவலை வெளியிடுகிறார். 1955 முதல் 1958 வரை தன்னைவிட வயதில் மூத்த இத்தாலிய நடிகையுடன் காதல் கொண்டார். 1960-ல் பாரிஸ் சென்ற கால்வினோ அர்ஜெண்டினியா மொழிபெயர்ப்பாளர் எஸ்தர் ஜுடித்தைச் சந்திக்கிறார். 1964-ல் ஜுடித்தைத் திருமணம் செய்துகொள்கிறார். இந்தக் கால கட்டத்தில் அர்ஜெண்டினியாப் புரட்சியாளர் சே குவேராவைச் சந்திக்கிறார். 

கால்வினோவின் மிக முக்கியமான படைப்புகள்- Invisible Cities, The Castle of Crossed Destinies, If on a Winter’s Night a Traveler. இந்தப் படைப்புகள் அவற்றின் விவரணைகளிலும் கட்டமைப்பிலும் புதுமையானவை. 1985-ல் 61-ஆம் வயதில் மரணமடைகிறார் கால்வினோ.

*

ஆங்கில மூலம்: All at One Point by Italo Calvino, The Complete Cosmicomics, Penguin Modern Classics, 2010 Edition.