‘தயவுசெய்து வேலைக்காரனிடம் எனது மதிய உணவைக் கொடுத்தனுப்பு. நான் பசியால் தவிக்கிறேன்.’
‘மணி மூன்றாகிறது. இந்நேரம் எங்கிருந்து உங்களுக்கு உணவு கிடைக்கும்?’
‘மூன்று மணியானாலென்ன – இங்குதான் நான் வாழ்கிறேன். நான் சாப்பிட வேண்டும். அனைத்திற்கும் மேலாக இந்த வீட்டில் எனக்கென்று சில உரிமைகள் வேண்டும்.’
‘ஓ, சரி. என்ன உரிமைகள்? எத்தனை உரிமைகள்?’
‘எப்போதிருந்து நீ இதுபோன்ற விஷயங்களைக் கண்காணிக்கத் தொடங்கினாய் – இவ்வாறு என்னைக் கேள்வி கேட்கிறாய்?’
‘நான் கேட்கவில்லையெனில், இந்த வீடு இத்தனை காலம் நீடித்திருக்காது.’
‘ஓ, அற்புதம்! இப்போதெனக்கு மதிய உணவு கிடைக்குமா கிடைக்காதா?’
‘இப்படி தினமும் மதியம் மூன்று மணிக்கு வந்தால், நீங்கள் மதிய உணவை மறந்துவிட வேண்டியதுதான். உணவகத்தில்கூட இந்த நேரத்தில் சப்பாத்தியும் பருப்பும் கிடைக்காது. உங்களின் பழக்கவழக்கங்கள் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.’
‘என்ன பழக்கவழக்கங்கள்?’
‘நீங்கள் மூன்று மணிக்கு வருவது. உங்களுக்காக வெட்டியாகக் காத்திருந்து நேரத்தை நான் வீணடிக்கும் வேளையில் சாப்பாடு ஆறிப்போகிறது, மஹாராஜா எங்கு ஊர் சுற்றிக்கொண்டிருந்தீர்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.’
‘சரிதான், மனுசனுக்கு வேலை இருக்காதா என்ன? எப்படி இருந்தாலும், வெறுமனே இரண்டு நாட்களாகத்தான் நான் சற்றுத் தாமதமாக வருகிறேன்.’
‘சற்றுத் தாமதமாக என்றா சொல்கிறீர்கள்? ஒரு மணிக்கெல்லாம் உணவளிக்கத்தக்க வகையில் கணவர்கள் எப்போதும் மதியமே வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அத்துடன் தனது மனைவியிடம் அடங்கிப் போகவும் வேண்டும்.’
‘ஒருவேளை அவன் வெறுமனே தங்கும் விடுதியில் அறை எடுத்துக்கொண்டு, அங்கேயே வாழ வேண்டுமோ? குறைந்தபட்சம் அங்கிருக்கும் ஊழியர்கள் அவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து சேவகம் செய்வார்கள்.’
‘அதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா என்ன? சொல்லப் போனால், என்று வேண்டுமானாலும் கிளம்பிப் போகத் திட்டமிட்டிருக்கிறீர்கள், சரியா? போகட்டும், இப்போதே, இந்த நிமிஷமே நீங்கள் கிளம்பலாம்.’
‘எனது உணவைச் சாப்பிடாமலா?’
‘உங்கள் விடுதியில் அதைச் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.’
‘ஆனால் இப்போதுதான் நீ சொன்னாய், உணவகத்தில்கூட இந்நேரம் சப்பாத்தியும் பருப்பும் கிடைக்காதென்று. எத்தனை சீக்கிரமாக மறந்துவிடுகிறாய்!’
‘ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் நானொரு பைத்தியம் அல்லது இன்னும் சொல்லப் போனால், பைத்தியம் ஆக்கப்படுகிறேன்.’
’உண்மைதான். ஆனால் யார் உனக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்கிறார்கள்?’
‘நீங்கள்தான் – வேறு யார்? எனது வாழ்க்கையை நரகமாக்கி விட்டீர்கள். பகலிலும் சரி இரவிலும் சரி, எனக்கு நிம்மதியே இல்லை.’
‘பகலை விடு, இரவில் ஏன் உனக்கு நிம்மதி இல்லை? ‘தன் எல்லாக் குதிரைகளையும் விற்றுவிட்டவனைப் போல’ எனும் சொலவடைக்கேற்ப, உலகத்தைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் நீ மரக்கட்டை போலத் தூங்குகிறாய்.’
‘தன் குதிரைகளை விற்றபின் ஒருவன் எவ்வாறு தூங்க முடியும்? என்னவொரு முட்டாள்தனமான சொலவடை?’
‘சரி, அது முட்டாள்தனமானதாகவே இருக்கட்டும். ஆனால் சில நாட்களுக்கு முன் குதிரையை மட்டுமல்ல அத்துடன் டோங்காவையும் நீ விற்றுவிட்டாய். அதன் பிறகும் இரவு முழுவதும் குறட்டை விட்டபடி நீ நன்றாகத் தூங்கினாயே?’
‘எனக்காக நீங்கள் கார் வாங்கிய பிறகு டோங்காவை வைத்துக்கொள்ளும் அவசியம் இருக்கவில்லை. இரவில் நான் குறட்டை விடுகிறேன் என்கிற குற்றச்சாட்டும் முழுக்கவே அபத்தமானது.’
‘மஹாராணி, தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது நீ குறட்டைவிடுகிறாயா இல்லையா என்பது உனக்கு எப்படித் தெரியும்? என்னை நம்பு, இரவு முழுவதும் உன்னுடைய குறட்டைகள் என்னைத் தூங்கவிடவில்லை.’
‘தவறு. முற்றிலும் தவறு. இதுவொரு கேவலமான பொய்.’
‘சரி, உனக்காக, அதைப் பொய்யென்றே வைத்துக்கொள்வோம். இப்போது எனக்கு உணவைக் கொடு.’
‘இன்றைக்குக் கிடையாது. உணவகத்துக்குப் போங்கள்… ஏன், மிச்ச வாழ்நாளுக்கும் அங்கேயே நீங்கள் தங்கிக்கொண்டாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன்.’
‘பிறகு நீ – நீ என்ன செய்வாய்?’
‘கவலைப்படாதீர்கள், நீங்கள் இல்லாமல் நான் செத்துப் போய்விட மாட்டேன்.’
‘வாயைக் கழுவு. ஆனால் சொல், நான் இல்லாமல் நீ எப்படிச் சமாளிப்பாய்?’
‘காரை விற்பேன்.’
‘அதனால் உனக்கு எவ்வளவு கிடைத்துவிடும்?’
‘குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு ஆயிரங்கள் கிடைக்கும்.’
‘எத்தனை காலத்திற்கு உனக்கும் உன் குழந்தைகளுக்கும் அது உணவளிக்கும்?’
’உங்களைப் போல் நான் ஆடம்பரமாகச் செலவுசெய்ய மாட்டேன். அதுவே என் ஆயுசுக்கும் போதும், குழந்தைகளுக்கும் எந்தக் குறையும் இருக்காது – நீங்கள் பார்ப்பீர்கள்.’
‘அப்படியானால் சரி. எனக்கும் அந்த இரகசியத்தைச் சொல்லிக் கொடு. பணத்தை இரட்டிப்பாக்கும் மந்திரத்தை நீ கண்டுபிடித்திருக்கிறாய் என நான் உறுதியாக நம்புகிறேன். உனது பணப்பையிலிருந்து சில தாள்களை வெளியிலெடுத்து அவற்றின் மீது அந்த மந்திரத்தை முணுமுணுத்தால், உடனே குபீரென்று அவை இரட்டிப்பாகிவிடும்.’
‘நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்கள். வெட்கமாயில்லை?’
‘இதைச் சற்று ஒதுக்கி வைப்போம். என்னுடைய மதியவுணவை எனக்குக் கொடு.’
‘உங்களுக்கு அது கிடைக்காது.’
‘கடவுளே, ஏன்? நான் என்ன தவறிழைத்தேன்?’
‘உங்களின் தவறுகளையும் இழிசெயல்களையும் எண்ணத் தொடங்கினால், சாகும்வரை நான் எண்ணிக்கொண்டுதான் இருப்பேன்.’
‘இதோ பார் பேகம், நீ வரம்பு மீறிப் போகிறாய். என்னுடைய சாப்பாட்டை நீ கொடுக்காவிட்டால் இந்த வீட்டை நான் எரிப்பேன். கடவுளே, நான் இங்கே பசியால் செத்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் நீ எதையோ ‘தொணதொணவென்று’ முட்டாள்தனமாகப் பேசிக்கொண்டே இருக்கிறாய். நேற்றும் இன்றும் எனக்கு செய்து முடிக்க வேண்டிய முக்கியமான வேலை இருந்தது. எனவேதான் நான் தாமதமாக வந்தேன். நீயானால் என்னமோ நான் தினமும் வீட்டிற்குத் தாமதமாக வருவதைப் போல குற்றஞ்சாட்டுகிறாய். எனது உணவைக் கொடு, இல்லையென்றால்…’
‘என்னைப் பயமுறுத்தாதீர்கள்! உங்களுக்கு உணவு கிடைக்காது.’
‘இது என்னுடைய வீடு. நான் விரும்பியபடி வருவதற்கும் போவதற்கும் எனக்கு உரிமையுண்டு. என்மீது இப்படிப்பட்ட தாங்கமுடியாத நிபந்தனைகளை விதிக்க நீ யார்? உன்னை எச்சரிக்கிறேன், உன்னுடைய இந்த மோசமான குணம் உன்னை எங்கும் கூட்டிப் போகாது.’
‘ஏதோ உங்களுடைய குணம் மட்டும் என்னை எங்கெங்கோ கூட்டிச் சென்றதைப் போல.. இடைவிடாத இந்தச் சோர்வு என்னை இப்படியொரு பாவப்பட்ட நிலைக்குக் கொண்டுவந்து தள்ளியிருக்கிறது.’
‘என்ன பெரிய பாவப்பட்ட நிலை – நீ பன்னிரண்டு பவுண்டுகள் எடை கூடியிருக்கும் அதே வேளையில், உனதிந்த எரிச்சலூட்டும் மனநிலை எனது உடல்நிலையைத்தான் பாழாக்கியிருக்கிறது.’
‘உங்கள் உடல் நலத்திற்கு என்ன கேடு?’
‘எப்போதும் நான் ஏன் சோர்வாயிருக்கிறேன் என நீ என்றேனும் கவலைப்பட்டிருக்கிறாயா? அல்லது மாடிப்படிகளில் ஏறும்போது ஏன் மேலும் கீழுமாக மூச்சு வாங்குகிறேன் என்று எண்ணியிருக்கிறாயா? வலியால் என்னுடைய தலை வெடிக்கவிருக்கும் வேளையில் எனக்குக் கொஞ்சம் பிடித்துவிடலாம் என்று எப்போதாவது உன் மனதுக்குள் உணர்ந்திருக்கிறாயா? நீயொரு விசித்திரமான வாழ்க்கைத் துணைவி. இப்படியாப்பட்ட மனைவியாக நீ இருப்பாய் என்றெனக்கு முன்பே தெரிந்திருந்தால், உன் அருகில்கூட நான் வந்திருக்க மாட்டேன்.’
‘உங்களைப் போன்றதொரு கணவனைத் தூக்கிச் சுமக்க வேண்டியிருக்குமென்பது தெரிந்திருந்தால் நானும் விஷத்தை விழுங்கி இருப்பேன்.’
‘விஷம்தானே, இப்போதுகூட நீ அதை விழுங்கலாம். கொஞ்சம் வாங்கி வரட்டுமா?’
‘ ஆமாம், புண்ணியமாகப் போகும்.’
‘ஆனால் முதலில் எனக்கு மதியவுணவைக் கொடு.’
‘இன்னும் எத்தனை முறை கேட்டாலும் சரி, இன்றைக்கு உங்களுக்கு எதுவும் கிடைக்காது.’
‘ஆனால் நாளைக்கு நிச்சயமாகக் கிடைக்கும், நாளைக்குப் பிறகான ஒவ்வொரு நாளும் நிச்சயமாகக் கிடைக்கும். ஏனென்றால் அப்போது நீ வேறொரு உலகத்தில் இருப்பாய். என்றாலும் உனக்கு விஷம் வாங்கி வருவதற்காக நான் வெறும் வயிற்றோடு வெளியில் செல்ல முடியாது. யாருக்குத் தெரியும், ஒருவேளை நான் வண்டி ஓட்டும்போதே மயக்கம் போட்டு செத்து விழலாம். சிறிதளவு உணவைப் பெற நானேதான் சுயமாக ஏதேனும் செய்ய வேண்டும் போலிருக்கிறது.’
‘என்ன செய்வீர்கள்?’
‘நான் சமையல்காரியை அழைப்பேன்.’
‘அப்படியொரு காரியத்தை நீங்கள் செய்யக்கூடாது.’
‘ஏன்?’
‘ஏனெனில் நான் அவ்வாறு சொல்வதால். வீட்டு விஷயங்களுக்குள் மூக்கை நுழைக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.’
’இதற்குமேல் பொறுக்க முடியாது. சமையல்காரியைக்கூட நான் அழைக்கக்கூடாது. தொலையட்டும், வேலைக்காரன் எங்கே?’
‘நரகத்தில் இருக்கிறான்.’
‘நானும்கூட இப்போது அங்குதான் இருக்கிறேன். ஆனால் அவனை எங்கும் பார்க்க முடியவில்லை. சற்றே நகர்ந்து கொள்ளேன், நான் அவனைத் தேடுகிறேன். யாருக்குத் தெரியும், ஒருவேளை அவனை நான் கண்டுபிடிக்கவும் செய்யலாம்.’
‘நீங்கள் அவனிடம் என்ன சொல்ல வேண்டும்?’
‘ஒன்றுமில்லை – அவனுடைய இடத்தை நான் எடுத்துக்கொள்கிறேன் என்றும் அவன் போகலாம் என்றும் சொல்ல வேண்டும்.’
‘நீங்கள் அவனுடைய இடத்தை எடுத்துக்கொள்கிறீர்களா? அத்தோடு உலகம் அழிந்துவிடாதா என்ன?’
*
‘சலாம் ஹுசூர். பேகம் சாஹிப், உணவு தயாராகிவிட்டது. ஐயாவின் உணவை மேஜையில் கொண்டு வந்து வைக்கட்டுமா?
‘இங்கிருந்து உடனடியாக விலகிப் போ.’
‘ஆனால் பேகம் சாஹிப், அதிகமானத் தீயிலிருந்ததால் இன்று காலை நீங்கள் சமைத்த நூல்கோல்கள் தீய்ந்து போயின. ஐயா தாமதமாகத்தான் வருவாரென்றும் அதனால் நான் சீக்கிரமாக வேறு உணவைத் தயார்செய்ய வேண்டுமென்றும் பிறகு நீங்கள் சொன்னீர்கள். ஆக இரண்டு மணி நேரத்தில் நான் இரு உணவு வகைகளைச் சமைத்திருக்கிறேன். இப்போது நீங்கள் விரும்பினால் நான் உணவு மேஜையை தயார்செய்வேன். இரு உணவு வகைகளும் தற்போதும் அடுப்பிலுள்ளன. இன்னும் சற்று நேரம் விட்டுவைத்தால் உங்களுடைய நூல்கோல்களைப் போல அவையும் கருகிவிடுமென்று அஞ்சுகிறேன். நான் போகிறேன். எப்போது உணவு மேஜையைத் தயார்செய்ய வேண்டுமென்பதை மட்டும் எனக்குச் சொல்லுங்கள்.’
*
‘இப்போது எனக்குப் புரிகிறது, இதற்குத்தான் இத்தனை அமளியா?’
‘என்ன அமளி? அத்தனை நேரமும் நான் அடுப்படியில் வெந்துகொண்டிருந்தேன்… உங்களுக்கு அதைப் பற்றி எந்தக் கவலையுமில்லை. நூல்கோல்கள் உங்களுக்குப் பிடிக்கும், ஆகவே உங்களுக்காக அதை நானே விசேசமாகச் சமைக்கலாமென்று முடிவு செய்தேன். சமையல் புத்தகம் என் கையில்தான் இருந்தது… ஒரேயொரு நிமிடம் சற்றுக் கண்ணயர்ந்த வேளையில் அந்தப் பாழாய்ப்போன நூல்கோல்கள் கரிக்கட்டைகளாக மாறிவிட்டன. இவையனைத்திலும் என்னுடைய தவறை எங்கு கண்டீர்கள்?’
‘நிச்சயமாக இல்லை. எந்தத் தவறும் இல்லை.’
‘அப்படியானால் சரி, இப்போது எழுந்திருங்கள். நாம் உணவருந்தலாம். என்னுடைய வயிற்றுக்குள் எலிகள் பிறாண்டுகின்றன.’
‘என்னுடையதில் முதலைகள்.’
‘உங்களுடைய கிண்டல் பேச்சை ஒருபோதும் நிறுத்த மாட்டீர்களா?’
‘கிண்டலோ என்னமோ, இங்கு வா. உனது நூல்கோல்களை நான் பார்க்கிறேன். அவை கறிக்கட்டையாக மாறியிருக்காது என்று நம்புவோம்.’
‘நாம் உணவருந்திய பிறகு அதைப் பார்ப்போம்.’
*
ஆங்கில மூலம்: Turnips by Saadat Hasan Manto