சப்தாவர்ணம்

6 comments

சுப்பிரமணியம் ஆசாரியின் கட்டிலில் அவரது கால்மாட்டில் தலைசாய்த்துக் கிடந்த பெரியவளின் அருகே வந்து நின்றாள் பாப்பாத்தி. மெல்ல அவளது தலைமீது கைவைத்து அழுத்தினாள். சட்டென பயந்து போனவளாய்த் திரும்பிப் பார்த்த பெரியவளின் கரிய முகமெங்கும் ஈரம். வாயோரத்தில் வழிந்த கோழையைத் துடைத்தவாறு அம்மாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவள், நிதானமாக எழுந்து கலைந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டை போட்டுக்கொண்டு அரங்கிற்குள் சென்றாள். கட்டிலின் கீழே சுருண்டு கிடந்தாள் சிறியவள். கொலுசுகளற்ற முழங்கால்களில் ஆறியும் ஆறாமலும் படர்ந்திருந்த சிரங்கு. நைந்துபோன பாவாடையைக் கைகளில் சுருட்டி மூட்டுகளுக்கிடையே சொருகி வைத்துக் கிடந்தாள். அப்பாவின் சட்டை அவளுக்கு மிகவும் இறுக்கமாக இருந்தது. அன்று மாலை வழக்கம்போல அம்மாவிடம் இரட்டைச் சடைப் பின்னல் போடச் சொல்லிக் கேட்ட போது அம்மா கோபத்தில் அறைந்துவிட பக்கத்து அத்தை வீட்டிற்கு ஓடிப்போனவள் சற்று நேரம் முன்புதான் திரும்பி வந்திருந்தாள். அம்மாவிடமோ அக்காவிடமோ எதுவும் பேசாமல் அப்பாவின் கையைப் பிடித்து சொடுக்கெடுத்துவிட்டவள் அப்படியே கிடந்து உறங்கிவிட்டாள். ஒரு கணம் அவளைப் பார்த்த பாப்பாத்திக்கு மேலாங்கோட்டு நீலியின் உருவம் மனதில் வந்துபோக, நெஞ்சில் கைவைத்து எதையோ முணுமுணுத்தவாறு அரங்கிற்குள் சென்றாள். 

“எம்மா, தாணுமாலயன்புதூர் எவ்ளோ தூரம்மா?” ஒரு மஞ்சள் பையில் எதையோ எடுத்துத் திணித்துக்கொண்டே அம்மாவிடம் கேட்டாள் பெரியவள். அவளுக்கும் அப்பாவின் சட்டை இறுக்கமாகத்தான் இருந்தது. சட்டையின் மேல் ஒரு தாவணியை சுற்றிக்கொள்வது அவளது பழக்கம். அவள் அணிந்திருந்த பாவாடையை அழுத்தி இழுத்தால் இரண்டாகக் கிழிந்துவிடும் போல இருந்தது. வாங்கியபோது அது என்ன நிறமாக இருந்திருக்கும் என்பது ஒருவேளை பாப்பாத்திக்கு நினைவிருக்கலாம்.

“தெரிலயே மக்ளே, ராவு பூரா நடக்கணும்னு நெனைக்கேன். செனம் கெளம்பு, இவள எழுப்பதுக்குள்ள விடிஞ்சிரும்.” 

“ரெண்டு சேல எடுத்துருக்கேன், போதும்லாம்மா?” 

“இரி, இரி. ஏங்குள்ள முகூர்த்த சேல இருந்துல்லா? அதயும் எடு மக்ளே.”

“நீ எங்கயாம் ஒளிச்சில்லா வச்சிருப்ப. நீயே எடு. அப்பா ஆசையா வாங்கித் தந்ததுல்லா?”

பாப்பாத்தி அசையாமல் நின்று நினைவுகளில் ஆழ்ந்தாள். இன்று மார்கழி 14. ஸ்ரீ இந்திரம் தேர்த் திருவிழா தினத்தன்று இரவில் நடைபெறும் சப்தாவர்ணம் நிகழ்ச்சிக்கு அம்மாவுடன் சென்று அடுத்த நாள் நண்பகலில்தான் திரும்புவாள். 

மூன்றாம் நாள் திருவிழாவன்று வேளிமலையிலும், கோட்டார் செட்டித்தெருவிலும், மருங்கூரிலுமிருந்து வாகனத்தில் ஆர்ப்பரித்து வந்திருந்த மக்கமார்களான முருகனும், பிள்ளையாரும், சுப்பிரமணிய சுவாமியும் அப்பா அம்மாவிடம் பிரியாவிடை பெற்றுச்செல்லும் கணத்தில் ஊரே உறைந்து நிற்கும். கோயில் வாசலில் முன்செல்வதும் பின்வருவதுமாக தயங்கியபடி ஆடியிருக்கும் சிவபெருமான் மூன்றாவது சுற்றில் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் உள்ளே ஓடும் கணத்தில், பூ அலங்காரமும் தீப்பந்த ஒளியாடலும் சேர, பின்னணியில் ஒலிக்கும் நாதஸ்வரம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒருவித சோகத்தை விதைத்து கண்கலங்கச் செய்துவிடும். ஒரு சில நிமிடங்களுக்கு சிறு சலனமுமில்லா நிசப்தம். மொத்த ஊரும் ஒரு பிறவி முடிந்து மற்றோர் பிறவியில் எழுந்துவருவது போலத் தோன்றும். மொத்தச் சனமும் அங்கேயே உறங்கி, அதிகாலை தெப்பக்குளத்தில் நீராடி, சித்திரை மண்டபத்தில் பார்வதி தேவி தன் பக்தைக்காக சிவபெருமானிடம் கோபித்துக்கொண்டு அவளது மாண்ட கணவனை மீட்டுத் தந்ததை ஆருத்ரா தரிசனமாகக் கண்டுசெல்லும். 

பாப்பாத்திக்கு ஸ்ரீ இந்திரம் கோவில்தான் பிறந்த வீடு, புகுந்த வீடு எல்லாமே. அதிகாலை நிர்மால்ய தரிசனத்திற்கு நாள் தவறாமல் வந்துவிடுபவள், கோவில் பிரகாரங்களில் கோலமிட்டு, பூசை முடிந்து பிரசாத சந்தனத்தை எடுத்துக்கொண்டு ஓடுவாள். அப்பா பட்டறைக்குக் கிளம்பும்போது சாமி படத்தின் பக்கத்தில் அந்தப் பிரசாத இலையைத் தேடுவார். பின், மகளின் கன்னத்தைப் பிய்த்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டுத்தான் கிளம்புவார். 

“மக்ளே, சப்தாவர்ணம் பாக்க குடுத்து வெச்சிருக்கணும் கேட்டியா! எத்தன சென்மம் பண்ண புண்ணியமோ என்னவோ, நமக்கு குடுத்து வச்சிருக்கு. என்ன கூட்டம் வந்து என்ன? எல்லாருக்கும் ஒரே மாதியா இருக்கும்? ஒருத்தன் மனசுல நல்லது ஓடும், ஒருத்தன் எவன கெடுக்கலாம்னு யோசிச்சிட்டு நிப்பான், செல சம்மதம் அமையும், செலது முறியும். ஆனா, அந்த சாமத்துல அப்பனயும் அம்மையயும் பிரிய முடியாம அந்த வாகனம்லாம் ஆடும் பாரு. கல்லு மனசெல்லாம் கரஞ்சே தீரும் பாத்துக்கோ. அந்த சொகத்துக்கா வேண்டிதான இவ்ளோ கூட்டம் வருகு. திர்னவேலிலந்து வரவோல்லாம் உண்டும், தெரியுமா?” என்று ஒவ்வொரு வருடமும் சொல்வார் அப்பா. 

தாணுமாலயன்புதூர் குளக்கரை வழியாகக் கடந்துசெல்லும் போது அம்மா சத்தமாக கந்தசஷ்டி கவசத்தைச் சொல்ல ஆரம்பித்தாள். பாப்பாத்தி சிரித்தவாறு பின்னாலிருந்து அம்மாவின் சடையைப் பிடித்து இழுத்தாள். 

“சும்மா வாயாம்ட்டி, நானே அரண்டு போயி வாரேன், வயித்தக் கலக்கிரும் போல. இந்தப் பாதைல ஒரு போஸ்ட் லைட்ட போட்டா என்னா? எல்லாரும் அதுக்குள்ள போய்ட்டாளா? வெறுவெறுன்னு வாட்டி.”

ஆழ்ந்த இருளில் குளத்தில் மிதந்த தாமரையிலைகளின் மீது நீர்த்துளிகள் விட்டுவிட்டு எரிந்தன. நீர்ப்பரப்பு தெரியாவண்ணம் கூந்தல் முழுதும் பூச்சூடி நிறைந்து நின்றாள் குளத்துமூலை இசக்கி. ஒவ்வொரு நாளும் அந்தக் குளத்தைக் கடக்கும்போதும் பாப்பாத்தி ஏதோ பேசிக்கொண்டே செல்வாள். யாருடன் என்றில்லாத முடிவில்லாத ஓர் உரையாடல். எப்போதும் அந்தக் குளத்தில் மல்லிகைப் பூ வாசம் அடிப்பதாக அம்மாவிடம் சொல்வாள். 

“மல்லிப்பூவா, எதாஞ் சொல்லிரப் போறம் பாத்துக்கோ. எல்லாம் வயசு பண்ணுக வேலதாம்ட்டி. அப்பாட்ட சொல்லி எதாம் பாத்துர வேண்டியதான்.” 

“நீ போம்மா. சும்மா சும்மா என்ன தள்ளி விடதேதான் ஒனக்குப் பேச்சு. ஒனக்கு இதெல்லாம் புரியாது. நீ நல்லா புளிக்கேரி வைக்கத்தான் லாயக்கு.”

“எனக்குத் தெரியாதோம்மோ? அந்த சுப்பிரமணி பய ஒரு மாதியா சுத்திட்டு வாராம்லா? எதுக்காம்?”

“யாரும்மா? எந்த சுப்பிரமணி?”

“படம் வைக்காதட்டி. காலங்காத்தால ஸ்ரீ இந்திரத்துல அவனுக்கு என்ன சோலியாம்? பயலுக்கு பக்தி ரொம்ப கூடிட்டோ?”

பாப்பாத்தி வெட்கி நின்றாள். 

“யாரும் சுடு சொல் சொல்லிரக்கூடாது பாத்துக்கோ. எம் புள்ளயப் பத்தி எனக்குத் தெரியும். ஊருக்குத் தெரியாதுல்லா? எப்படான்னுல்லா இருக்கானுகோ. எவ வீட்டுல என்னத்தக் கொளுத்திப் போடலாம்னு.”

குளம் முடியும் இடத்தில் இடப்புறமாக செல்லும் பிரதான சாலையில் அரை மணி நேரம் நடந்தால் ஸ்ரீ இந்திரம். அம்மாவும் பாப்பாத்தியும் ஓட்டமும் நடையுமாக அந்த விலக்கில் வந்து திரும்பியபோது தனது மிதிவண்டியை ஓரமாக நிறுத்தி அதன் மீது ஏறி உட்கார்ந்திருந்தான் சுப்பிரமணி. கையில் ஒரு மஞ்சள் நிறத் துணிப்பை. இவர்களைப் பார்த்ததும் விதிர்விதிர்த்துப் போய் சட்டென அந்தப் பையைத் தன் பின்னால் மறைத்தான். அம்மா வேண்டுமென்றே அவனது முகத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு கடக்க, பாப்பாத்தி தலைகுனிந்து படபடத்தவாறு தொடர்ந்தாள். 

*

“எம்மா, எம்மா. என்ன, சொப்பனத்துக்குள்ள போய்ட்டியா, எங்க வச்சிருக்க அந்த மாய முகூர்த்த சேலய?” என்று கேட்டாள் பெரியவள்.

அரங்கில் சாமி பட அடுக்கின் ஓரமாய் இருந்த டிரங்குப்பெட்டியைத் திறந்து மெல்ல ஒவ்வொரு பொருளாய் எடுத்து வெளியே வைத்தாள் பாப்பாத்தி. ஒரு புகைப்படச் சட்டம், ஒரு கறுத்த பழைய கொலுசு, ஒரு சிவப்புத்துணிப் பொட்டலம். 

“எம்மா, என்னத்த வச்சிருக்க அந்த செவப்புத் துணில? எனக்கே தெரியாம வச்சிருக்க என்னா?” 

“அது, ஓங்குள்ள தொப்புள்கொடி மக்ளே. அப்பம்லாம் அந்தப் பழக்கம் உண்டும். காஞ்சிப் போன தொப்புள்கொடிய சுருட்டி வைக்கது. எதுக்கு, என்னன்னு தெரில. ஆனா, அத தொட்டுப் பாக்கும்போ ஒருமாதியா இருக்கும் பாத்துக்கோ.”

“எம்மா, அதயும் எடுத்து வைம்மா. எனக்கு வேணும்.”

“இந்தக் கை நடுக்கம் வேற! ஒரு சோலியும் செய்ய வுட மாட்டுக்கு. சவத்த பத்து வருசம் முன்னாடியே போயிருக்க வேண்டியது” என்று சலித்துக்கொண்டே பாப்பாத்தி அந்தச் சிவப்புத்துணிப் பொட்டலத்தை எடுத்து பெரியவள் வைத்திருந்த பையின் அடியில் திணித்தாள்.

*

சரியாக பதினோரு மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வழக்கம்போல ஒவ்வொரு வீடாக மண்ணெண்ணெய் விளக்குகளும் மெழுகுவர்த்திகளும் துலக்கம் பெற்றுவந்தன. இருளடைந்திருந்த சுப்பிரமணியம் ஆசாரியின் வீட்டு வாசலில் மூன்று உருவங்கள் பதுங்கி நின்றன. அறைக் கதவைச் சத்தமில்லாமல் தாளிட்டுப் பூட்டு போட்டாள் பெரியவள். சிறியவள் இன்னும் உறக்கத்திலிருந்து வெளிவந்திருக்கவில்லை. அம்மாவின் சேலை நுனியைத் தன் விரல்களில் சுற்றிக்கொண்டே உறங்கியபடி ஆடியாடி நின்றாள். 

“எட்டி, செனம் பூட்டுட்டி. யாராம் பாத்துரப் போறா. பொறவு என்ன ஏதுன்னு சொல்லணும். செரியா வராது, பாத்துக்கோ” என்றாள் பாப்பாத்தி. 

“எம்மா, தங்கச்சிய மட்டும் விட்டுட்டுப் போயிருவோம்மா. அவளுக்கு என்ன தெரியும்? வெவரம் கெடயாதுல்லாம்மா? பாவம். நம்ம மட்டும் போவம்மா, சொன்னா கேளும்மா” என்று தழுதழுத்தாள் பெரியவள்.

எரிச்சலடைந்து அவளிடமிருந்து பையை வாங்கிக்கொண்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள் பாப்பாத்தி. அவள் கையோடு சேர்ந்து தொடர்ந்தாள் சிறியவள். 

“எம்மா… எம்மா… நில்லும்மா” என்றவாறு பின்னால் ஓடினாள் பெரியவள். 

விரைந்து நடந்து ஒழுகினசேரி பாலத்தின் அடியில் ஆரம்பிக்கும் ஒத்தையடிப் பாதையில் சென்று நின்றார்கள்.    

“கோச்சப்பிடாரம் வரைக்கும் யாரும் பாக்காமப் போய்ட்டா கொழப்பமில்ல பாத்துக்கோ. பொறவு சனம் நடமாட்டம் இருக்காது. பூச்சி பொட்டு எதாம் கெடக்கும். அது கொழப்பமில்ல” என்றவாறு தன் கையிலிருந்த துணிப்பையை ஒரு முறை தடவிப் பார்த்துக்கொண்டாள் பாப்பாத்தி. 

“எம்மா, தங்கச்சி… சொன்னாக் கேளும்மா” என்று அழ ஆரம்பித்தாள் பெரியவள்.

“மக்ளே. அம்ம சொல்லதக் கேளு மக்ளே. அது செரிப்பட்டு வராது. அவளுக்கு குண்டி கழுவக்கூடத் தெரியாதுல்லா மக்ளே. எப்பிடி தனியா விடதுக்கு? அடுத்த மார்கழி வந்தா முப்பது நெறையும். ஒரு மாத்துத்துணி கசக்கத் தெரியுமா? தெரண்டது தெரியுமா அவளுக்கு, சொல்லு? எவனாம் எதாம் பண்ணிரக் கூடாதுன்னு நா என்னல்லாம் செய்ய வேண்டியிருக்கு. பாக்கவனுக்கு அது வெறும் ஒடம்புதான மக்ளே. ஒங்கப்பா வெரலப் புடிச்சி வாய்ல வச்சிட்டு தூங்குகா. அதுக்கே எனக்கு ஒரு மாதி வரும். என்னத்தச் சொல்ல!”

பெரியவள் ஒன்றும் பதில் பேசாமல் தங்கையின் கையைப் பிடித்துக்கொண்டு முன்னால் நடக்க ஆரம்பித்தாள். பாப்பாத்தி பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு அவர்களைத் தொடர்ந்தாள். 

கோச்சப்பிடாரத் தெருக்களில் இன்னும் ஆள் அணக்கம் இருந்தது. சில வீடுகளின் முன் பெண்கள் உட்கார்ந்து கிழங்கு பப்படத்தைத் தட்டிக்கொண்டிருந்தார்கள். காய்ந்திருந்த மரவள்ளி வற்றலின் வாசம் வீசியது. வேலை மும்முரத்தில் பதுங்கிப் பதுங்கி நடந்து செல்லும் இந்த மூவரையும் கண்டுகொள்ள யாருக்கும் நேரமோ அவசியமோ இல்லை. 

“கல்யாணம் முடிஞ்சி வந்த புதுசுல இந்த வழியாத்தான் ஸ்ரீ இந்திரம் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போவா அப்பா. அவ்வோளே செஞ்சிப் போட்ட முறுக்குச் செயினும் உண்டும்லா அப்போ. அத மறச்சி, பாத்துப் பாத்துப் போறதே பெரிய கஷ்டமாக்கும். எவனாம் மறிச்சிட்டாம்னா என்ன செய்ய முடியும்? ஒங்கப்பா வேற இருக்க எடமே தெரியாத ஆளு. நா எதாம் சத்தமா சொல்லிட்டாலே சமானப்படு, சமானப்படுன்னு கெஞ்சுக ஆளு. ம்ம்… என்ன செய்ய, நம்ம கெரகம் அப்பிடி. யாருக்காம் எதாம் கெடுதல் நெனச்சிருப்பமா? நம்மட்ட இல்லாட்டாலும் யாரு வந்து என்ன கேட்டாலும் வெறுங்கையா அனுப்புனதில்லயே.”

“விடும்மா. இனி அதெல்லாம் யோசிக்கப்படாதுன்னு நீதான சொன்ன? இப்ப நீயே பொலம்புக.”

“வெப்ராளமா வருகு மக்ளே. எத்தன கொமருக கல்யாணத்துக்கு தாலி செஞ்சி போட்டுருப்பாரு ஒங்கப்பா! ஒங்களுக்குன்னு ஒன்னு செய்ய முடியல்லயே. என்ன வாழ்ந்து என்னத்துக்கு? போகாத கோயில் உண்டா? பாக்காத பரிகாரம் உண்டா? சின்னவள விடு, மண்டைக்கி வழியில்லன்னு சமானப்பட்டுருவேன். ஒனக்குன்னு ஒன்னு அமையல்லயே மக்ளே. தங்கக் கொடம்லா எம்புள்ள, எங்கையாலயே இப்பிடி செய்கேனே!” என்று சொல்லியவாறு தரையில் விழுந்தாள் பாப்பாத்தி. தன் மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்து அழுதாள். 

பெரியவள் அவளருகில் உட்கார்ந்து அவளது கைகளைப் பிடித்துத் தடுத்தாள். சிறியவள் பக்கத்தில் குத்தவைத்து உட்கார்ந்தாள். அம்மா அழுவதைச் சிறிது நேரம் சலனமின்றி பார்த்தவள் கீழே கிடந்த ஒடமர முள்ளொன்றை எடுத்து தன் உள்ளங்கையில் குத்திப் பார்த்தாள். கூச்சப்பட்டு சிரித்தவள், அந்த முள்ளால் கீழே கிடந்த ஆட்டாம்புழுக்கை ஒன்றை குத்தித் தூக்கினாள். பெரியவளை நோக்கி அதைக் காட்டி வலிச்சம் காட்டினாள். 

சற்று நேரத்தில் அழுகை அடங்க சட்டென எழுந்த பாப்பாத்தி, “நேரம் வெளுத்துராம மக்ளே. வா, போவம். வழி வேற பாத்துப் பாத்துப் போணும், புது ரோடு வேற போடுகான்னு சொன்னா” என்றாள். 

*

தாணுமாலயன்புதூர் குளத்தங்கரையில் புதிய சாலையமைக்கும் பணி இராப்பகலாக நடந்துகொண்டிருந்தது. பச்சைப் பசேல் வயல்களைத் தரையோடு அமுக்கித்தள்ளி எழுந்துகொண்டிருந்தது சிமிட்டிக் கலவையில் உறைந்த சாலை. சாலையின் நீட்சி குளத்தின் மேலாக பாலமாக வருமா, இல்லை குளத்தின் ஒரு பகுதியை மண்ணிட்டு நிரப்பிப் போடுவார்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை. மண்மூடி நிரப்பினால் சாலை விலக்கில் ஒற்றை மாடத்திற்குள் இருக்கும் இசக்கியை என்ன செய்யலாம் என்றும் பெரியவர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. 

ஆனால், மாசிலாமணிக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. தினமும் குளம் நிறைய மலரும் தாமரையும் இலைகளும் மாசிலாமணியின் பிழைப்பிற்கென ஆயின. அதிகாலைக் குளிரில் பெரிய ஈய அண்டா ஒன்றினைத் தலைமீது கவிழ்த்து வைத்து நடப்பான். இசக்கி மாடத்தின் அருகே நின்று இரண்டு பீடிகளை நிதானமாக இழுத்து முடித்து, அவளை வணங்கிவிட்டு கிழக்குப் புறமாக உள்ள படித்துறைக்குச் செல்வான். லுங்கியைக் கழற்றி, தலையில் சுற்றி, தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு ஈய அண்டாவுடன் நீரில் இறங்குவான். இடுப்பளவு ஆழம் வந்ததும் மெல்ல நீந்துவது போல அந்த அண்டாவைத் தள்ளிவிட்டு அதில் துள்ளியேறி அமர்வான். அந்தச் சிறிய படகில் இருபுறமும் தன் கைத்துடுப்பின் அசைவில் மெல்ல மெல்ல முன்னகர்ந்து தாமரைக் கூட்டத்தில் சென்றுசேர்வான். ஸ்ரீ இந்திரம் மூலவரின் தாமரைப் பூ மாலை இவன் கொண்டு சென்றால்தான். அதுபோக, பூக்கடைகளுக்கும், உணவகங்களுக்கும் தாமரை இலை வியாபாரமும் உண்டு. 

தேரூர் வந்துசேர்வதற்குள் பாப்பாத்திக்கு மூச்சிரைப்பு வந்துவிட்டது. பெரியவள் கைபிடித்து மெல்ல சாய்ந்து ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்தாள். பெரியவள் அம்மாவின் கைகளைத் தேய்த்துவிட்டாள். தன் தாவணியால் அவளது முகத்தைத் துடைத்துவிட்டு, அவளது தலையைக் கோதிவிட்டாள். அம்மா கண்ணயர, தன் துணிப்பையை எடுத்து உள்ளிருந்து எதையோ எடுத்தாள். நிலவு வெளிச்சத்தில் அந்தச் சட்டகத்தை முகத்தின் அருகே கொண்டுவந்து பார்த்தவள், அதைத் தன் மார்போடு சேர்த்து வைத்துச் சாய்ந்தாள். சிறியவள் மெல்ல வந்து அம்மாவின் அருகே படுத்தாள். அதுவரை இல்லாத மௌனம் அவளிடம் திடீரென வந்துவிட்டதைப் போலிருந்தது. 

சற்று நேரத்தில் எழுந்து அமர்ந்த சிறியவள், “எக்கா, பசிக்கிக்கா..” என்றாள். 

சுற்றுமுற்றும் பார்த்த பெரியவள் எழுந்து துணிப்பையில் கைவிட்டு ஒரு பொட்டலத்தை எடுத்து அவளிடம் நீட்டினாள். சிறியவள் வேக வேகமாக அதைப் பிரிக்க, உள்ளிருந்த பொரிகடலை தரையில் கொட்டியது. அதை மண்ணோடு மண்ணாக அள்ளி வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தாள். அருகே கிடந்த ஒரு புளியங்காயை எடுத்துக் கடித்து கண்களைச் சுருக்கிக் காட்டினாள்.

*

மாசிலாமணி அன்று சற்றுத் தாமதமாக எழுந்தான். அவசர அவசரமாக ஈய அண்டாவைத் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக விரைந்தான். புதிய சாலைப் பணியாளர்கள் கூடாரத்தின் அருகே நெருப்பு மூட்டி கட்டங்காப்பி போட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகே சென்று பேச்சுக்கொடுத்து சிறிது காப்பியைக் குடித்துவிட்டு ஓடினான். வழக்கம்போல இசக்கியோடு இரண்டு பீடிகளை அடித்து முடித்து, லுங்கியைத் தலைப்பாகையாகக் கட்டியவனுக்கு ஏதோ ஒரு விசித்திரமான சத்தம் கேட்டது. சட்டெனத் திரும்பி இசக்கி மாடத்தைப் பார்த்துக் கும்பிட்டவன் மீண்டும் சத்தம் கேட்க சுற்றிலும் பார்த்தான். சத்தம் படித்துறைப் பக்கமாக வந்ததைப் போலிருந்தது. 

“எவம்ல அங்க நிக்கது? லேய், எவம்னு கேக்கம்லா?” என்றவாறு அருகே கிடந்த ஒரு கருங்கல்லை எடுத்துக்கொண்டு படித்துறையை நெருங்கினான். ஒரு கீச்சுக் குரலாகக் கேட்ட அந்தச் சத்தம் மெல்ல மெல்ல குறைந்து பின் ஒரு அலறலாகக் கேட்க ஒரு நொடி பயந்து பின்வாங்கிவிட்டான். 

“லேய், வெளாட்டு மயிர என்ட்ட காட்டக் கூடாது பாத்துக்கோ, ஸ்ரீ இந்திரம் கோயில் ஆளாக்கும். வாகனம் தூக்கப்பட்டவனாக்கும் கேட்டியா, நம்ம தோள பாத்தா தெரியும்ல! மரியாதக்கி ஓடிரு பாத்துக்கோ, கைல சிக்குனன்னு வையி, மவன ஒங்கப்பனுக்கு பயறு போட ஆளில்லாமப் பண்ணிப் போடுவம் பாத்துக்கோ.”

அலறல், மூச்சிரைப்பாக மாறி பின் மீண்டும் அலறலாக ஒலித்தது. சற்று நின்றவன் ஏதோ புரிந்ததைப் போல வேகமாக படித்துறையை நோக்கி ஓடினான். படித்துறைக் கல் மீது ஏறிநின்று கீழே பார்த்தவன் கைகால் நடுங்க, “எம்மா, எசக்கியம்மா..” என்று அலறினான்.

* 

தாணுமாலயன்புதூர் குளத்து இசக்கி மாடத்தை மூவரும் வந்தடைந்த போது அதிகாலை மூன்று மணி இருக்கும். 

“எம்மா, எங்கம்மா இருக்கு ஒஞ் சொந்த ஊரு? காலு வலிலயே நாஞ் செத்துருவம் போலருக்க! அதாரு தாணுமாலயன்? நல்லா பேரு வச்சிருக்கானுகோ, தாணுமாலயன்புதூராம்லா!”

“அது, ஸ்ரீ இந்திர மூலவருக்க பேராக்கும். அவருக்க சொத்துல வந்த ஊருன்னு ஒரு பேச்சு உண்டும் பாத்துக்கோ. எல்லா வீட்டுலயும் ஒரு தாணு, ஒரு தாணம்ம உண்டுல்லா. ஆசாரி மாரும் பிள்ளமாரும்தான் ஒன்னுக்குள்ள ஒன்னு. இப்ப, எல்லாம் ஒன்னாதான இருக்கா, அதனால என்ன? ம்ம்.. இந்த பாததாம்ட்டி. இதே எடத்துலதான் அப்பாவ மொத தடவ பாத்தேன் கேட்டியா.”

“அப்பிடி வாம்மோ வழிக்கி. எத்தன வருசம் கழிஞ்சி வந்திருக்க, பாரு! ஏம்மா இங்க வராமலே ஆயிட்டியோ?”

“என்னெல்லாமோ நடந்துட்டுல்லா மக்ளே! அது ஒரு பெரிய கத. அந்த இசக்கிக்கி தான் வெளிச்சம். சரி விடு” என்றவாறு இசக்கி மாடத்தின் அருகே சென்று கண்மூடி நின்றாள் பாப்பாத்தி. சிறியவள் மாடத்தின் அருகே குனிந்து சென்று அங்கிருந்த இலையை எடுத்து வந்தாள். 

“அக்கா, அக்கா, பாயிசம், பாயிசம்.”

“ராவு செறப்பு எதாம் கழிஞ்சிருக்கும் மக்ளே. பிள்ள, சாப்புடு, ராவே ஒன்னும் சாப்புடலல்லா. பாவம், பசிச்சிருக்கும்” என்றாள் பாப்பாத்தி. 

இசக்கி மாடக் கல்லின் மீதிருந்த கறுத்த மையைத் தன் விரலில் எடுத்து பெரியவளுக்கும் சிறியவளுக்கும் நெற்றியில் வைத்துவிட்டு தன் கழுத்தில் வைத்தாள்.

“செரி மக்ளே, வாங்கட்டி, விடியப்போகு. செனம் போயிருவம்.”

“எம்மா, எம்மா, வேற வழியே இல்லல்லா?” என்றாள் பெரியவள். “அப்பாவ என்ன பண்ணுவாளோ!” 

பாப்பாத்தி பதிலேதும் சொல்லாமல் நடந்தாள்.

மூவரும் படித்துறையை அடைந்தார்கள். சிறியவளை படித்துறை நுழைவுக் கல்லில் உட்கார வைத்து முதல் படியில் உட்கார்ந்தாள் பாப்பாத்தி. அருகே பெரியவளை உட்காரச் சொல்லிக் கையசைத்தாள். இருவரும் சேர்ந்து துணிப்பையில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தனர். 

சிறியவள் படித்துறையின் பக்கவாட்டில் மிதந்திருந்த ஒரு தாமரை இலையைப் பிடித்துத் தூக்கினாள். இலையோடு சேர்ந்து தண்டும் வெளிவர, ஆச்சரியமாக அதைப் பிடித்து வெளியே தூக்கினாள். இலையைத் தொட்டுப் பார்த்தவள் அதன் ஈரத்தை தன் முகத்தோடு சேர்த்துத் தேய்த்தாள்.

“அக்கா, குளுருகு.”

தாமரைத் தண்டை எடுத்து இலையைத் தனியாகப் பிய்த்து எறிந்தாள். தண்டை மூக்கினருகே கொண்டுபோய் முகர்ந்து பார்த்தவள், பின் அதை மேல் தூக்கி அதன் வழியாக நிலவைப் பார்த்தாள். மகிழ்ச்சியில் முகம் மலர.

“அக்கா, அக்கா இங்கப் பாரு.”

தாமரைத்தண்டைத் தன் வாயில் வைத்து கடித்துப் பார்த்தாள். காறி உமிழ்ந்தாள். முகத்தைக் கோணிக்கொண்டு அதை இரண்டு துண்டுகளாகக் கடித்துப் பிய்த்து ஒரு துண்டினை எடுத்து தன் கையில் வைத்து அதன் வழியாக கூர்ந்து பார்த்தாள். பார்த்துக்கொண்டே இருந்தாள். வரி வரியாக, வலை வலையாக, சிலந்தியாக, இரத்த நாளங்களாக, கொடும் பாம்புகளாக, அப்பாவின் பூணூலாக, அம்மாவின் சேலை நூலாக, தாலிக் கொத்தாக.

“மக்ளே, இங்க வா. தங்கம்லா, இங்க வா மக்ளே.” அம்மா அழைப்பதைக் கேட்டுத் திரும்பினாள் சிறியவள். பெரியவள் எழுந்துவந்து அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். இரண்டாவது படியில் அவளை உட்கார வைத்தாள். 

தன் முகூர்த்த சேலையால் சிறியவளின் கைகளை முன்புறமாகச் சேர்த்துக் கட்டினாள் பாப்பாத்தி. அவளும் ஏதோ விளையாட்டிற்குத் தயாராக கைகளை நீட்டிக்கொடுத்தாள். பின், அதே சேலையை பக்கவாட்டில் இழுத்துச் சுற்றி பெரியவளின் கைகளை உடலின் பின்புறமாகச் சேர்த்துக் கட்டினாள். பெரியவள் அசைவற்று இருந்தாள். இசக்கி மாடத்தின் விளக்கு தூரத்தில் ஒரு புள்ளியாகத் தெரிந்தது. 

சேலையின் மீதமிருந்த பகுதியைச் சுருட்டி முறுக்கி தன் இடுப்பைச் சுற்றி சேர்த்துக் கட்டி பல முடிச்சுகளைப் போட்டாள். பின், அந்தப் பையிலிருந்து ஒரு கத்திரிக்கோலை எடுத்தாள். தன் கேசத்தை நிதானமாக கத்தரித்து எடுத்து நீரில் எறிந்தாள். வெள்ளி இழைகளாக அவை அந்த நீரில் மெல்ல நீந்திச் சென்றன. தாமரையிலைக் கூட்டத்தோடு சேர்ந்து கலந்தன.

ஒரு நொடி கண்களை மூடி உடல் அதிர நின்றவள், கேவிக் கேவி அழுதவாறு சிறியவளின் தலைமுடியைப் பின்னலாகக் கட்டினாள். அதைப் பெரியவளின் பின்னலோடு சேர்த்து முடிச்சிட்டாள். இருவரும் ஈருடல் ஓருயிர் போல ஒட்டியிருக்க, இசக்கி மாடத்தைக் கடைசியாகப் பார்த்துவிட்டு அவர்கள் இருவரையும் பிடித்து எழச்செய்து மெல்ல நீரில் இறங்கினாள். பெரியவளும் சிறியவளும் சேர்ந்த அந்த உடல் அம்மாவின் வழி பின்தொடர்ந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் காண விரும்பிய ஆழத்தை நோக்கிச் சென்றுகொண்டேயிருந்தாள் பாப்பாத்தி. 

*

தலைகுப்புறக் கவிழ்ந்து மிதந்த இரண்டு பெண்களின் உடல்களும் அவற்றை இழுத்துக்கொண்டு படித்துறையில் ஏறத்துடித்துக்கொண்டிருந்த மூன்றாவது பெண்ணின் மிரண்ட கண்களும் கடித்து வெட்டி இரத்தம் பீறிட்ட நாக்கும் நீரில் சிதறிக் கிடந்த முடிக்கற்றைகளும் கரையொதுங்கிய ஒற்றைத் தாமரையிலையும் என அந்தக் காட்சியை எவ்வளவு கேட்டும் விவரிக்க முடியாமல் உறைந்து நின்றான் மாசிலாமணி. 

“நீ எதுக்கு அந்த நேரத்துல அங்க போனப்போ?” என்று கேட்டார் ஒரு காக்கிச் சட்டைக்காரர். 

“சப்தாவர்ணம், வாகனம் தூக்குனேன். தாமர பறிக்கப் போனேன்.. லேட்டாயிட்டு.. கட்டங்காப்பி, எசக்கியம்ம…சப்தாவர்ணம்..” என்று அவனுக்கே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தான் மாசிலாமணி. 

“என்னவே இது? ஓரோரு திருழாக்கும் இப்பிடி ஒன்னு போயிருத வே! என்ன மாயமோ தெரில கேட்டீரா! பின்ன, சப்தாவர்ணம் பாத்தா புண்ணியம்னு வேற சொல்லுகா, என்ன புண்ணியமோ என்னமோ?”

மாசிலாமணி தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தான்.     

“சார், இது நம்ம பையன்லா, நம்ம கோயில்ல வாகனந் தூக்குவான்லா. நல்லவேள, இவன் கண்ணுல பட்டு, ஒரு உயிராது பொழச்சே..” என்றவாறு தேநீர் கொண்டு வைத்தார் ஒருவர்.

“அது பொழச்சி என்னத்துக்கு அண்ணாச்சி.. என்னத்தச் சொல்ல? அதுக்கு மண்டைக்கி வழியில்ல பாத்துக்கோங்கோ. அப்பா, அப்பான்னு சொல்லுகு, பொறவு என்னலாமோ ஒளருகு. இத வச்சி நம்ம என்ன செய்ய? எதாம் ஆஸ்ரமத்துல கொண்டோய் சேக்க வேண்டியதான். பின்ன, பேப்பர்ல பாத்துட்டு எவனாம் வாரானாம்னு பாப்பம். சரி, சரி, சோலி கெடக்கு. இன்னிக்கி திருழா ஆராட்டுல்லா? ஆருத்ரா தரிசனமாம? ஜோடி ஜோடியால்லா வருவா எல்லாரும்! பின்ன, இன்னிக்கி வந்து சாமியப் பாத்தா தாலி பாக்கியம்னு சும்மாவா சொல்லி வச்சிருக்கானுகோ? பந்தோபஸ்துக்கு வேற ஆளனுப்பனும்.”

6 comments

காசிபாண்டியன் April 23, 2021 - 2:06 am

மிக அழுத்தமான கதை. கதை நிகழ்காலம் , இறந்த காலம் என்று பயணிக்கிறது. பயணித்தாலும், கதாபாத்திரங்களின் இணைப்பு சரியாக பொருந்துகிறது. வட்டார வழக்கு நன்றாக உள்ளது. பெரும்சோகத்தோடு முடிகிறது. இரு தலைமுறை அம்மா , மகளின் உரையாடல்கள், நையாண்டிகள் சிறிதே ஆனாலும், மனதில் நிற்கிறது. கொல்லனின் வறுமையை மகளின் சட்டை, பாவாடை வைத்தே சொல்லி இருக்கும் விதம் , என்பது இதை விட வறுமையை சொல்லி விட முடியாது. மாசிலாமணி கதாபாத்திரம் தேவையா என்று தோன்றியது. சப்தாவர்ணம் இன்றும் ஏகபோகமாக சுசீந்திரம் கோவிலில் கொண்டாடப்படும் விழா. அது தந்தயை விட்டு மகள் பிரிந்து போகும் நிகழ்வு. அதை கதாசிரியர் கடைசி பத்தியில் அந்த பெண் புலம்புவது போல் வைத்து, அந்த விழாவுடன் இணைத்தது அவரின் சாமர்த்தியம் என்றாலும், கதை ஒரு பெரும் வலியை மனதில் ஏற்படுத்தி செல்கிறது. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

இஷ்ரஜ் April 24, 2021 - 12:55 am

கதை மிகவும் அருமை. எதிர்பார்த்திராத முடிவு!

மணிவண்ணன் கோவை December 25, 2021 - 3:01 pm

முடிவு….காத்திருந்தது..வீணில்லை.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருதுகள் விழா வில் இன்று உங்களின் பதில் கிடைத்தது.வாழ்த்துகள்.

Comments are closed.