ரிதுபர்னோ கோஷின் திரையுலகம்

எங்கிருந்து தொடங்குவது என யோசித்தாலே விதிர்ப்புகொண்டு விடுகிறது உடல். ரிதுபர்னோ கோஷ் இந்தியத் திரையுலகின் பேரலை. செம்பவளங்கள் மீது நீர்த்தாரைகளை ஓயாது சொடுக்கிக்கொண்டே இருந்தவர். எனக்கோ நெளிந்தாடும் பொன்னிறத் துமிகளுள் பேரொளியில் துலங்குமொரு துமியை மட்டும் கண்டடைவது எங்ஙனம் எனும் தடுமாற்றம்.

The Last Lear படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சியை எடுத்துக்கொள்கிறேன். அந்தப் படத்தில் ப்ரீத்தி பிரபலமான நடிகை. அமிதாப் குறுங்குழுவால் மட்டுமே அறியப்பட்ட ஒரு நாடகக் கலைஞர். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தவரை இயக்குநரான அர்ஜுன் ராம்பால் தனது அடுத்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வுசெய்திருப்பார். ப்ரீத்தி ஸிந்தாவும் அமிதாப் பச்சனும் படப்பிடிப்பு இடைவேளையில் அருகருகே அமர்ந்திருப்பார்கள். த கிங் லியரின் இறுதிக் காட்சியினை மேடை ஒன்றில் நிகழ்த்திக்காட்டுவது போன்ற உணர்ச்சிகரத்துடன் அமிதாப் ஒப்புவித்துக்கொண்டிருக்க சீருடை அணிந்த மாணவர்கள் வரிசையில் நின்று ப்ரீத்தியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டிருப்பார்கள். திடீரென ஒரு மாணவன் அமிதாப்பிடமும் ஆட்டோகிராஃப் புத்தகத்தை நீட்டிவிடுவான். அமிதாப் திகைத்து புத்தகத்தையும் பேனாவையும் வாங்கிவிடுவார். அப்போது அதைக் கவனிக்கும் அர்ஜுன், ‘இவர் யார்னு உனக்குத் தெரியுமா?’ என அந்த மாணவனிடம் கேட்பார்.

‘இல்லை.’

‘அப்புறம் உனக்கு எதுக்கு அவரோட கையெழுத்து? It’s not good manners.’

அமிதாப் செய்வதறியாது தடுமாறி, கையெழுத்திடாமலேயே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார். ‘அவர் எவ்ளோ சந்தோசப்பட்டார் எனத் தெரியுமா?’ என அர்ஜுனைக் கடிந்துகொள்ளும் ப்ரீத்தியிடம், ‘எனக்கென்னமோ அவர் கோமாளி மாதிரிதான் தெரிஞ்சார்’ எனச் சொல்வார்.

சரிகளுக்கும் தவறுகளுக்கும் உண்மைக்கும் பொய்க்கும் இடையே பசையிட்டுப் பூசியது போல போக்கு காட்டும் இருண்ட பகுதி எப்போதும் உள்ளதுதான். அதை நோக்கிப் போலியாகத் திடுக்கிட்டு, பின்னர் முகம் திருப்பிக்கொண்டு ஊமைகளாகிவிடும் படைப்பாளிகளுக்கு மத்தியில் வலிப்பில் பதைபதைக்கும் சுடரை ரிதுபர்னோ பாதுகாக்க முயன்றார். சிறிதளவேனும் தன்னை இழக்காமல் ஓர் உறவைப் பேணுவது சாத்தியம்தானா என்பதை மனத்தின் வெவ்வேறு பாவனைகள் ஊடாக நெருங்கித் தோய்ந்தார். அவரவர்க்கு அவரவர் நியாயம் போன்ற சவலையான வாதம் பிறிதொன்றில்லை. குடும்ப அமைப்பில் நிகழும் குற்றங்களையும் ஒழுக்க மீறல்களையும் அப்படியே துடைத்தெறிந்துவிட்டு புதிய வாசலைத் திறப்பதற்கான சாவியும் மற்றொரு குற்றமாகவே இருக்க முடியும் என்பதுதான் யதார்த்தத்தின் குரூரம். ‘இதுதான் கடைசி தடவை’ எனப்பட்டவை ஒவ்வொரு முறையும் பல்லிளித்துவிடுகின்றன. அத்தகைய வெற்று சமாதானத்தின் சுடர் காற்றில் நடுங்கியபடி பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அது அணைத்துவிடக்கூடும். பட்டாம்பூச்சியின் மெல்லிய சிறகுகளை இரு விரல்களால் பற்றுகையில் தோன்றும் கவனமும் படபடப்பும் இவரது படங்களின் குணாம்சங்கள். அதன் வண்ணங்கள் ஒட்டிக்கொண்டபின் உண்டாகும் அசூயையும்.

திருமண உறவைத் தாண்டிய பாலியல் விழைவை அதிர்வுகளாக்காமல் அந்த மனிதர்களின் உள நோக்கம் குறித்தே ரிதுபர்னோ அக்கறை கொள்கிறார். ததும்பிப் பொங்கும் மனவெளியில் அவர் வரிசை வைக்கின்ற உணர்ச்சிகரமான முகங்களின் நேர்த்தி திகைக்கவும் நெகிழவும் வைத்திருக்கிறது. திமில் திமிலாகப் பாய்ந்து வரும் உயிர்ப்பின் கனலை அணைத்துப் பிடித்தவாறு அலைகளை திருப்பி அனுப்பும் இலாவகம். எண்ணக் கொதிப்புகள் மோதிச் சிதற வேண்டிய கணங்களில் அவற்றை மிதக்க வைக்கும் சூட்சமத்தையும் இருளில் புதைந்துவிட்ட இரணங்களை நிமிண்டி விநோதமான மௌனத்தைப் பிளக்கும் ஏவலையும் அறிந்தவர். இந்திய வங்காளத் திரையுலகில் ‘ரேவுக்கு அடுத்து ரிதுதான்’ என்பவர்கள் இருவரையுமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே சொல்லத் துணிவேன். அது ஒருவகையில் ரிதுபர்னோவிற்கு இழைக்கப்படும் அநீதியும்கூட. அவர் மலரிதழ்கள் மட்டுமின்றி அவற்றின் காம்பையும் ருசிக்கப் பறந்த கருவண்டு. விலகலின் வலி, தனிமையின் சௌகர்யம், பெருவிழைவின் ஊசலாட்டம், உறவுகளின் தகிப்பு எனச் சுளை சுளையாக மனிதனின் அந்தராத்மாவை அளக்கும் வேட்கை கொண்டவர்.

“உங்க கதையை உங்களோடு சேர்ந்து நான் படமாக எடுக்கட்டுமா?” எனக் கேட்கும் அப்புவிடம் “உன் அம்மாவும் அதில பங்கு வகிக்கனும்” எனக் கூறும் அநிகெத், சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “ஷிகாவும் இருக்கட்டும். ஆமாம், அவளும் இருக்கனும். நாம எல்லோரும் சேர்ந்ததுதானே இந்தக் கதை? எல்லோரும் சேர்ந்து இதை உருவாக்குவோம்” என்கிறார். (Abohoman) இதுவே ரிதுவின் படங்களுக்கான சாரம் எனலாம். வெவ்வேறு அபிப்ராயங்களும் நம்பிக்கைகளும் கொண்ட மனிதர்கள் செதுக்கி வைத்தே தனி மனிதன் உருவாகிறான். அதன் அத்தனைச் சிக்கல்களையும் கோணங்களையும் தழுவிக்கொண்டு போவதே திரைப்படம்.

காமமும் வன்முறையும் பேராற்றலின் வெவ்வேறு வடிவங்கள்தான் என்பதைப் பல படங்களில் சரியாகத் தொட்டிருக்கிறார். தீராப் பெருங்காமம் ஆக்கிரமித்துவிட்ட மனதில் சுய விருப்பங்கள் போடும் பேயாட்டம் செய்வனவெல்லாம் சரிதான் என்கிறது. அதுவும் வெறுமைக்கு வடிகாலாக அமையும் பாலியல் விழித்தெழல் புதைகுழியில் சிக்கிய புரவி. அப்போது இரு கதாபாத்திரங்களுக்கு இடையே விழுந்துவிடும் இறுக்கமான மௌனத்திரையை வைத்து ரிதுவினால் ஒரு போரின் பதற்றத்தை உண்டு பண்ணிவிட முடிகிறது. படம் நெடுக தன்னளவிலும் உறவுகளிடையேயும் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் அசௌகரியத்தை நாமும் உணர்ந்து நெளிகிறோம்.

இதுகாறும் வகுக்கப்பட்டிருக்கும் வரம்புக்கு உட்பட்டு விடக்கூடாது எனும் பதற்றம் அவருக்குள் விகசித்தபடியே இருந்திருக்க வேண்டும். தன்னுள் திரண்டதை எல்லாம் படையலாக்கிக்கொண்டிருந்தார். இருபதாண்டு கால கலை வாழ்வில் பேய்த்தனமாக உழைத்திருக்கிறார். ‘படைப்பு பேசட்டும். படைப்பாளி பேசக்கூடாது’ என்பது மாதிரியான மேதாவித்தன மோஸ்தர்கள் நிலவிய சூழலில் தன்னையும் தனது படைப்புகளையும் தொடர்ச்சியாக மக்கள் கவனத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். அதற்கான ஊடக வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்தினார். கலைப்படத்தின் வெற்றியையே சந்தேகத்துடன் அல்லது இளிவரலுடன் அணுகும் முதிரா மனங்களுக்கு இடையே நட்சத்திர அந்தஸ்து பெற்றவரானார். Ramp Walk கூட போனார். ‘But, my city, I know, can neither handle me nor ignore me’ எனப் புன்னகைத்தார். தாகூரின் (மகாபாரத) சித்ரங்கதாவுடன் தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொண்டார்.

சித்ரங்கதா படத்தின் கதையை வரி வரியாக எழுதப் போவதில்லை. அதன் சுருக்கம் மட்டும் போதும் என நினைக்கிறேன். ஏனெனில் கதையைவிட அது திரட்டிக்கொண்டு வந்த சிந்தனைகள்தான் விமர்சனத்தில் முக்கியமானது. ருத்ரா எனும் நாடக – நடன இயக்குநர், தன்னுள் பெண்மை விழிப்பு கொள்வதை உணரும் ஆண். அவனுக்கு ஒரு காதலனும் உண்டு. துளித்துளியாக இறங்கி இப்போது பெருமழையெனப் பெருகிச் சுழன்றடிக்கும் உணர்வுச் சீற்றம். அதைப் பால்மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் ஈடேற்ற முடியுமா என்பதைக் கரிப்புச் சுவையுடன் பிரதிபலித்திருக்கிறார்கள். அந்தக் கதையில் தன்னையே திரியாக்கிப் பற்ற வைத்திருக்கிறார் இயக்குநர். இது ரிதுபர்னோவின் சொந்த வாழ்க்கைக் கதை என நம்பித்தான் மக்கள் சாரை சாரையாகப் படம் பார்க்கக் கிளம்பி அடித்துக்கொண்டார்கள். அது உண்மையில் அப்படித்தானா என்பது குறித்து நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவரது படைப்பு மனத்தின் விசையே தீராத ஆச்சரியங்களை உள்ளடக்கியது. பழங்கதைக்குள் நவீனச் சிக்கலை தேடியலையும் களிப்பு. தாகூருக்கான காணிக்கை.

தன்னை உந்திச் செலுத்தி, தான் அறிந்திருந்த எல்லைகளைத் தகர்த்துத் தாவிச் செல்வதற்கு வலிகளைக் கொடையாகப் பாவிக்க வேண்டியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டின் உச்சத்தில் நின்றவாறு திரும்பிப் பார்க்கையில் இழந்தவை அத்தனையும் அடைந்ததற்கு ஈடாகுமா எனும் கேள்வியை தனி நபர்களிடம் அன்றி வரலாற்றிடம் கேட்க வேண்டும். கருணையே அற்ற வரலாறு அந்தக் கேள்விக்கு எப்போதும் ஆம் என்றே பதிலுரைக்கிறது. ஒன்றில் செழுமை அடைவதற்காகத் தம்மைச் சீரழித்துக்கொண்டவர்கள், மிருகத்தின் மூர்க்கத்துடன் அலைக்கழிந்தவர்கள், உள்ளத்தின் ஓயாத பெருங்கூச்சலுக்கு தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள் என நீளும் அந்தப் பட்டியலின் உயிர் குடித்தே மனித குலம் மேலெழுந்திருக்கிறது. ‘கச்சிதம் என்பது அத்தனை முக்கியமானதா என்ன?’ என்ற கேள்விக்கு ஆம் – இல்லை என இரண்டில் எந்தப் பதிலைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் குருதியின் கறை படிந்திருப்பது கொஞ்சம் விநோதமானது. இனி ருத்ராவின் வாழ்க்கை எல்லோருக்கும் சாத்தியப்படக்கூடிய அன்றாடத்திற்கு திரும்ப முடியாது என்று உறுதியாகத் தெரிந்தபின் பாரமாக இருந்தது. அகவுணர்வின் ஒட்டுமொத்த ஆற்றலையும் திரட்டி வெறிக்கூத்தாடி ஓய்ந்த பின்னரும் சன்னதத்தின் வீரியத்தை ருசி கண்ட மனம் சாதா ரணங்களை விரும்புவதில்லை!

‘விழித்துக்கொண்ட மனிதன் காண்பது விழித்துக்கொண்ட மனிதனையே தானே?’ என்பது தேவதேவனின் வரி. படம் முழுக்கக் கண்ணாடிகள். அதில் ருத்ராவின் வியக்தியை எதிரெதிர் உலகங்கள் புரிந்துகொண்ட பிரதிமுகங்கள். பல்வேறு காலங்களை ஊடறுத்து ஓடும் திரைக்கதையில் அவற்றின் இணைப்புச் சரடுகளாக முயங்கி விளையாடும் உரையாடல்களையும் பொருட்களையும் வெகுவாக இரசித்தேன். ‘அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீ எப்போது பெண் ஆவாய்?’ போன்ற அதிதீவிரக் கேள்விகள் எந்தவித திட மனதையும் அசைத்துவிடக் கூடியதுதான். உயிரும் உளமும் உடல்களின் சப்புக்கொட்டல்களுக்கு ஆட்படுவதில்லையே. அது தூண்டில் முள்ளில் சிக்கிய திமிங்கலமெனத் திமிறிக்கொண்டிருப்பது. Transgender கதைகளுக்கே உரிய பழகிய பாதையில் பயணித்து சாகசம் புரியாமல் அவர்களின் அசலான பாடுகளை முன்வைப்பதானாலேயே இது கவனிக்கத்தக்கது. படத்தில் க்ளிஷேவே இல்லையா எனக் கேட்டால் இருக்கிறது. ருத்ராவிற்கும் செவிலிக்கும் இடையேயான உரையாடல் ஓர் உதாரணம். சடசடத்து சுழிந்து நிற்கும் தருணங்கள் முன் அவை புகை போல காற்றில் கரைந்துவிடுகின்றன.

அவரது கடைசித் திரைப்படமாக அறியப்படும் சத்யன்வேஷியை சுஜோய் தான் இயக்கி முடித்தார். சித்ரங்கதா அவருடைய மணி மகுடம். Crowning wish. அதன் வாயிலாக அவர் பிரகாசமாக எரிந்ததெல்லாம் வெகு சீக்கிரம் அணைவதற்குத்தான் போலும்.

*

Nomadland (2020), Chloé Zhao

இந்த உலகம் பல நூறு கலாச்சாரங்களாகவும் பண்பாடுகளாகவும் சிதறிக் கிடக்கிறது. ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்றவாறு பல்வேறு விதமான சமூகங்கள் தோன்றி அழிந்திருக்கின்றன. வாழ்க்கையைப் பற்றின புரிதல்களும் பார்வைக் கோணங்களும் காலந்தோறும் மாறியபடியே இருந்திருக்கிறது. மாறாதது எது? ஒட்டுமொத்த மானுடத்தையும் இணைக்கும் பொதுக்கண்ணியென எதைச் சொல்வது? பசியையா? துக்கத்தையா? என்னைக் கேட்டால், எதிலும் பிடிப்பற்று சுதந்திரமாக அலைவது குறித்து உள்ளூர பெருமூச்செறியும் மனிதர்களின் ஏக்கக் கனவைத்தான் சுட்டிக்காட்டுவேன். சிந்தித்துப் பாருங்கள். பசியறியாத குடிகளைக் கொண்ட சொர்க்க ராஜ்ஜியங்கள் குறித்துகூட கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகின் எந்த மூலையிலும் நாடோடிகள் இல்லாத தேசமே இல்லை. துறவியாக, ஹிப்பியாக, பயணியாக, பரதேசியாக யாரோ எங்கோ வீட்டிலிருந்து வெளியேறியபடியே இருக்கிறார்கள். சமூக அமைப்பைப் பொறுத்தவரை அதுவொரு கலகச் செயல்பாடு. அவர்கள் விதிவிலக்குகள். ஆயினும், அவர்களைத் தன்னுடைய அங்கமாக ஏற்றுக்கொள்வதில் இந்தச் சமூகத்திற்கு எந்தத் தயக்கமும் இல்லை. காரணமென்ன? தன்னால் இயலாததை இன்னொருவர் செய்கிறார் என்பதிலுள்ள ஆச்சரியம், மதிப்பு, பொறாமை.

இப்போது உங்களைச் சுற்றிலும் பாருங்கள். நாம் இதுவரை கண்டுபிடித்திருக்கும் நவீன வசதிகள் அத்தனையுமே மனிதர்கள் சொகுசாகப் பயணிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சௌகர்யங்கள்தான். அலைபேசி- அதிலுள்ள செயலிகள், மடிக்கணினி, பேக், வாகனம், கைக்கடிகாரம், தண்ணீர் பாட்டில் என எதை நோக்கினாலும் அதில் ‘கிளம்பிச் செல்’ என்கிற மறைமுகக் கட்டளை சன்னமாக ஒலித்துக்கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இருபத்தோராம் நூற்றாண்டை மட்டும் கருத்தில் கொள்வானேன்? பண்டைய காலத்தைச் சற்று திரும்பிப் பார்ப்போம். மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு சக்கரம்தானே? உலக நாகரீக வளர்ச்சிக்கான மைய விசையாக அது இருந்தது என்பதில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா? சக்கரம் என்பது இன்றைக்கு வெறும் பருப்பொருளோ பயணத்திற்கு உதவுகிற கருவியோ மட்டுமல்ல. மெய்ஞான மரபின் முக்கிய அம்சமாக வளர்த்தெடுக்கப்பட்டு அதுவே பின்னாளில் பௌத்தத் தத்துவத்தில் தர்மச் சக்கரமாகவும் பிறப்பு இறப்பு சுழற்சிக்கான குறியீடாகவும் கிரேக்கத்தில் wheel of fortune-ஆகவும் படிம ரீதியில் எடுத்தாளப்பட்டது. சக்கரத்தை தன் கையில் ஏந்தியிருக்கும் கிருஷ்ணன், தேர்ச்சக்கரம் சகதியில் சிக்கியிருக்கும் போது அர்ஜுனனால் கொல்லப்படும் கர்ணன், “…break all the spokes and fellies from her wheel” என்றெழுதிய ஷேக்ஸ்பியர் என சக்கரத்தின் குறியீட்டு முக்கியத்துவம் பற்றி இன்னும் ஏராளமான உதாரணங்களை அல்லது மேற்கோள்களை அடுக்க முடியும். எல்லோருக்கும் உரியதல்ல என்பதால் இதிலுள்ள ஆன்மீக சாராம்சத்தை ஒதுக்கிவிடுவோம். அன்றாட வாழ்க்கை நகர்வதற்காகவேனும் சக்கரம் சுழல வேண்டாமா? கழற்றி வீசியெறியப்பட்டு மாட்டுக் கொட்டகையில் கேட்பாரற்றுக் கிடந்தால் எப்படி?

Nomadland திரைப்படத்தின் மையக் கதாபாத்திரமான ஃபெர்னுக்கு அவளுடைய அறுபதாவது வயதில்தான் இலக்கற்றுத் திரியும் யோகம் வாய்க்கிறது. அதுவும்கூட அவளுடைய கணவன் இறந்துவிட்டதாலும் பிழைப்பதற்கு வழியற்ற ஊரைவிட்டு வெளியேறியாக வேண்டிய நிர்பந்தத்தினாலும்தானே ஒழிய இலட்சிய வேட்கையினால் உந்தப்பட்டு அல்ல. அந்த வகையில், இது மற்றுமொரு சாகசப் படமல்ல என்பதாலேயே தனித்து நிற்கிறது. விசேஷ கவனிப்பைக் கோருகிறது. ஒரு பையை எடுத்துக்கொண்டு ஊர்சுற்றித் திரிகிற கதாபாத்திரத்தை சாக்காக வைத்து இயற்கைக் காட்சிகளின் பேரழகை உள்ளீடற்று நிரப்பிச் செல்கிற மாய்மாலங்கள் ஏதும் படத்தில் இல்லை. மாறாக, இப்படத்தில் காட்டப்படுகிற இயற்கையில் அச்சுறுத்தலே மேலோங்கியிருக்கிறது. தன் வாழ்க்கையின் ‘ப்ரைம் டைம்’ முழுவதையும் ஒரே இடத்தில் வாழ விதிக்கப்பட்டிருந்தவளின் முன் சட்டென மாபெரும் உலகமே திறந்துகொள்ளும் போது ஏற்படுகிற அதிர்ச்சி. அதன் பிரம்மாண்டத்தின் போர்வைக்கடியில் பதுங்கியிருக்கும் குரூரத்தைக் கண்ணுற நேர்கையில் உண்டாகிற திடுக்கிடல். பசி, குளிர், பொருளாதாரச் சிக்கல்கள் என ஒவ்வொரு இடர்ப்பாட்டையும் கடக்க ஃபெர்ன் கடுமையாக பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. இவற்றுடன் உடல் உபாதைகளும் சேர்ந்துகொண்டு அவளைத் துன்புறுத்தத் தொடங்குகின்றன. நாம் இயற்கையை நெருங்குவதற்கு முயலுந்தோறும் அது நம்மை விரட்டியடிக்கவே சீறுகிறதா? பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகே நம்மைத் தன்னுடன் சேர்த்துக்கொள்வதா வேண்டாமா என்று அது தீர்மானிக்கிறதா?

இவை எல்லாவற்றையும்விட, ஃபெர்னைத் தொந்தரவுக்குள்ளாக்கும் விஷயம் என்னவென்றால் அது அவளுடைய தனிமைதான். முதிய வயதில் மரணத்திற்கு அருகாமையிலுள்ள தனிமை. அவள் அறிந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டிருக்கையில் தனிமையின் இடம் சுருங்கிக்கொண்டே வருகிறது. ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்றபடி வெட்டவெளியைப் பார்க்கையில் நம் தனிமை அடைகிற வீச்சு இருக்கிறதல்லவா? அதைக் கடப்பது அத்தனை எளிதல்ல.

ஃபெர்ன் தன்னுடைய வட்டத்திலிருந்து வெளியேறி இன்னும் கொஞ்சம் பெரிய வட்டத்தில் வாழ்கிற தன்னைப் போன்ற நூறு நபர்களைக் கண்டுகொள்கிறாள். அவர்களது உதவியுடன் அவள் மெல்ல மெல்ல தன்னுடைய பயங்களைப் பழக்கிக்கொள்கிறாள். பழக்கப்படுத்தப்பட்ட ஒரு மிருகம் போல அவை துணை நிற்கின்றவே ஒழிய தனது பலவீனங்களை அவளால் உடனடியாக வெல்ல முடிவதில்லை. இவ்வாறு மனிதர்களின் சாரமற்ற பலவீனங்கள் மீது தெளிவுறு பார்வையைக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் எப்படியெல்லாம் பற்று உருவாகிறது என்பதையும் ஒன்றை உதறிச் செல்வதற்கு எப்பேர்ப்பட்ட மனத்திடம் அவசியப்படுகிறது என்பதையும் கண்ணாடியில் பதிந்த கைரேகை போல இப்படம் காட்டிச் செல்கிறது.

ஒரு கூரையின்கீழ் வாழக்கூடாது என முடிவெடுக்கும் ஃபெர்னுக்கு, தனக்கென சொந்தமாக எந்தப் பொருளும் இருக்கக்கூடாது என்பதில் உறுதிப்பாடு இல்லை. தன்னுடைய வாகனத்தின் மீது அவளுக்குப் பிணைப்பு இருக்கிறது. அது பழுதாகும் போதுகூட அதை விற்பதற்கு அவள் சம்மதிப்பதில்லை. அதைப் பழுது பார்ப்பதற்காகும் செலவை தன் தங்கையிடமிருந்து கடனாகப் பெற்று வருகிறாள். அதன் பொருட்டு மீண்டும் பழைய வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறாள். அவளது இடத்தில் ஓர் இந்திய மனம் இருந்திருந்தால் அது வேறு மாதிரி செயல்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இரந்துண்டு வாழ்வதை அற்பமாகக் கருதும் எண்ணமே தோன்றியிருக்காது. படத்தின் போக்கும் மாறியிருக்கும்.

‘பற்றுக பற்றற்றான் பற்றை’ எனக் கட்டளையிடுகிற வள்ளுவன்தான் ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்’ என்றும் சொல்கிறார். ஃபெர்ன் சிறிது சிறிதாக தனது உடைமைகளையும் ஆசைகளையும் இழக்கத் துணிவதை எந்தவிதமான நாடகீயமான ஆர்ப்பாட்டமுமின்றி ஆழ்ந்த நிதானத்துடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அவள் விலகுந்தோறும் எனக்குத் துக்கமாகவும் ஆசுவாசமாகவும் இருந்தது. அவளை ஆறுதல்படுத்தும் விதமாக, ‘எது உன் நினைவில் உள்ளதோ அது வாழும்’ என்றொரு கதாபாத்திரம் சொல்கிறது. நினைவும் ஒரு சுமையே என ஃபெர்ன் அறிந்துகொள்ளும் போது ஓடிக்கொண்டிருந்த சக்கரம் ஓய்ந்து நின்றுவிட்டிருக்கும்.

*

A Hidden Life (2019), Terrence Malick

அமைப்பு, அதிகாரம், ஆணவம், வரையறைகள், நெறிகள், விழுமியங்கள் உட்பட அனைத்துமே தனிமனிதரில் தொடங்கி தனியர்களில் முடிபவை. அவை ஒன்றையொன்று தொட்டணைத்து கூட்டாக வலிமை கொள்கையில் பைத்தியக்கார கோஷங்களுக்குப் பிரத்யேக மதிப்பு உண்டாகிவிடுகிறது. பெருத்து வீங்கிய களிப்பில் அவை தனித்து விலகியிருக்க விரும்புபவர்களுக்கு எதிராகத் திரும்புவதை எங்குமே பார்க்க முடியும். வெகு விரைவில் கூட்டு மனசாட்சி என்பதே எங்கோ மேலே இருந்து ஆட்டுவிப்பவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு மொத்தக் கூட்டமும் தலையாட்டி பொம்மைகளாகி ‘ஆமாம் சாமி’ சொல்லத் தொடங்கிவிடும்.

நெருக்கடி காலங்களில் முற்றதிகாரத்திற்கு அஞ்சி ஒடுங்கி அத்தனை அறங்களும் பிறழ்ந்து போகின்றன. மனம் சவக்குழியில் கிடக்கிறது. உலகமே இருளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட பின் ஒருவன் மட்டும் தன் மனச்சுடர் அணைந்துவிடாமல் பாதுகாக்கத் தவிக்கிறபோது அவனுக்கு எதிராக மக்கள்திரள் வெறிகொள்வது அச்சமூட்டுவதாக இருந்தது. அதே சமயத்தில், தன்னெஞ்சறிந்த உண்மைக்கும் உலகம் நம்ப விரும்புகிற உண்மைக்குமான அல்லாட்டத்தில் முன்னதைத் தேர்வுசெய்கிறவனின் தனிமை பீதியூட்டக்கூடியதே! அப்பேர்ப்பட்ட கடும் வாதைக்குத் தயாராகிறவனின் கர்வத்தின் முன்பு கும்பலின் தடித்தனங்கள் செல்லுபடியாவதில்லை.

இரத்தத்தில் தோய்த்தெடுத்த கைகளை அவரவர் முகங்களில் பூசிக்கொண்டு வீதி உலா வர எல்லோரும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அதில் பங்கெடுக்காதவன் துரோகி. கறைபடாத கைகளுக்குச் சொந்தக்காரனின் தலை வெட்டப்படும். இதுபோன்று கேடு காலங்களில் பரவும் கீழ்மையின் போதம் நமது வரலாறுகள் எங்கும் நிரம்பியிருக்கின்றது. அது என்றைக்கும் மாறுவதே இல்லை. வேடிக்கைப் பார்க்க ஒப்பாதவரையும் இழுத்துப்போட்டு கூட்டாளியாக்குவதில் அதற்கு அப்படியோர் ஆனந்தம். நம்மால் இயல்வதுதான் என்ன? எந்தச் சூழலிலும் நான் என்னைத் தூய்மையில் நிறுத்திக்கொண்டேனா என்பதே கடைசியில் முக்கியம். அந்தக் கடினமான காரியத்தில் நம் தலைமேல் இறங்குகிற ஒவ்வொரு முள்ளும் நம்மை கடவுளுக்கு அருகில் வைக்கின்றது.

டெரன்ஸ் மாலிக் என்னுடைய விருப்பத்திற்குரிய இயக்குநர் அல்ல. குரல் மேவலிலும் (Voice-over) கண்களை விரியச் செய்யும் அபாரமான நிலக்காட்சிகளிலும் கதையை ஒப்பேற்றிவிடுபவர் என்கிற எண்ணமே இருக்கிறது. குறிஞ்சிப்பூ காலத்திற்கு ஒருமுறை ஒரு நல்ல படம் எடுப்பவர். ஆனால் இந்தப் படத்தில் தன் பலவீனங்களை மீறி புதியதாக ஒன்றைச் சாதித்திருக்கிறார். சந்தேகமில்லாமல் ஒரு க்ளாஸிக்.

1 comment

K Chitra April 7, 2021 - 9:56 am

அப்பா கோகுல். Nomadland கதாநாயகியின் வயது தான் எனக்கும். அதே நாடோடி ஆசை 20 வயதிலிருந்து. விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகள் மீது தான் (மேத்தா தானே ) படம் எப்படியோ, உன் விளக்கம் கருத்தை விட்டு அகலவில்லை. வாழ்த்துக்கள். என் கையில் 45 வருடங்களாக இருக்கும் கரண்டிகள் என்று தான் என்னை விட்டு நீங்குமோ ?

Comments are closed.