ஊருக்கு ஒதுக்குப்புறமாயிருந்தது அந்த மண்டபம். மண்டபத்துக்குள் யாரோ சில சோம்பேறிகள் ‘மங்காத்தா’ வெட்டிக்கொண்டிருந்தார்கள். வெளித் திண்ணையில் வீராசாமி உட்கார்ந்திருந்தான். வருடக்கணக்காக மழிக்கப்படாத அடர்ந்த தாடியும் மீசையும் முகத்தை மறைத்திருந்தன. நடுவே பீடித்துண்டு புகைந்துகொண்டிருந்தது. உழைத்து உரமேறிப்போன உடம்பு உருக்குலைந்து தளர்ந்து போயிருந்தது. வியர்வைத் துளிகள் பொங்கி அரும்பு கட்டி நின்றன. உச்சி வெயில் கொடுமையாக இருந்தது. எப்போதோ ஒருமுறை மண்டபத்தை வந்தடையும் காற்றும் வெப்பம் மிகுந்ததாய் வறண்டு தாக்கியது. மத்தியான நேரத்து அமைதி எங்கும் வியாபித்துக் கிடந்தது.
வீராசாமி சலிப்போடு ‘சூள்’ கொட்டினான். உள்ளத்தில் கனன்றுகொண்டிருந்த ஆவேச உணர்வுகள் காலையில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததிலிருந்தே அதிகரித்துப் போயிருந்தது. எப்போது பொழுது சாயும் என்று நேரத்தைக் கணக்கிட்டுக்கொண்டிருந்தான். மனத்தில் பொங்கும் உக்கிரமான துடிப்பும் வேகமும் காலம் மந்தகதியில் நகர்வதுபோல் உணர்த்தியது.
புகைந்துகொண்டிருந்த பீடியை வெறுப்போடு தூக்கி வீசியெறிந்தான். காரை பெயர்ந்து கிடந்த தரையில் தூசு தட்டி துண்டை விரித்துப்போட்டான். கைகள் இரண்டையும் பின்னித் தலைக்கு அணையாக வைத்தபடி கால் நீட்டி மல்லாந்து படுத்துக்கொண்டான்.
எப்படியாவது பொழுது போகவேண்டும். சாயங்காலம் வரைக்கும் இப்படியே படுத்துக்கிடக்க வேண்டியதுதான்… இன்னும் நினைவுகளின் மூழ்கலிலேயே இடுப்பைத் தடவிப் பார்த்தான். கத்தி பத்திரமாகவே இருந்தது.
மண்டபத்துக்குச் சற்றுத் தொலைவில் தேப்பாங்குளம் இருந்தது. குளத்தைச் சுற்றி வேப்பமரங்களும் அரசமரங்களும் படர்ந்து வளர்ந்திருந்தன. மேற்குப் பக்கமாயிருந்த பெரிய அரச மரத்தின் கீழ் பாம்பின் வடிவம் செதுக்கிய பெரிய கல்… நாகாத்தம்மன். பக்கத்தில் அதற்குத் துணையாக வேறு ஏதேதோ வடிவம் தாங்கிய சின்னச் சின்னக் கற்கள்… எல்லாம் மண்டபத்திலிருந்து பார்த்தாலே நன்றாகத் தெரிந்தது. வீராசாமியின் குடும்பத்துக்கு குலதெய்வம் அதுதான். வருடத்துக்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் பொங்கல் வைத்து பூசை செய்வார்கள். சேவல் அறுத்து இரத்தச் சோறு இறைப்பார்கள்.
படுத்தபடியே குளத்தங்கரை அரசமரத்துக் குலதெய்வத்தைப் பார்த்துக்கொண்டான் வீராசாமி. எண்ணெய்ப் பசைகூட காய்ந்து வறண்டு கிடந்த அந்தக் கற்கள்… பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு… அந்த வாழ்வு சோகமயமானதாக இருந்தது. இடையிடையே மகிழ்ச்சியின் ரேகைகள் பளிச்சிட்டன. குளத்தில் மூழ்கி… பொங்கல் வைத்து… இந்த மண்டபத்தில் தங்கி இளைப்பாறி… அடடா! இந்த மண்டபம்தான் எப்படிக் கெட்டுக் குட்டிச்சுவராகிவிட்டது.
அரியங்குப்பம் கிராமத்தில் பரம்பரையாகத் தச்சுவேலை பார்த்துக்கொண்டிருந்தது வீராசாமியின் குடும்பம். போதுமான அளவுக்கு வருமானமிருந்தது. விதைப்புக் காலங்களில் கலப்பைக் கட்டை செதுக்கவும் எப்போதாவது கதவு ஜன்னல்கள் சில மேசை நாற்காலிகள் செய்யவும் கிராமத்தில் ஓரளவுக்கு கிராக்கிகள் இருந்தன.
எந்நேரமும் தெருக்கொறட்டில் உட்கார்ந்து ஏதாவது வேலையில் ஈடுபட்டுக் கிடப்பான் வீராசாமி. வைரம் பாய்ந்த கொடுக்காப்புளி மரத்தில் செய்த கொட்டாப்புளியால் அவன் டங்… டங்… என்று ஓங்கி ஓங்கி அடித்து மரத்தில் துளை போடும் சத்தம் கேட்கும். அப்பா பக்கத்துத் திண்ணையில் படுத்துப் புரண்டுகொண்டிருப்பார். எப்போதாவது புரண்டு படுக்கும்போது கொஞ்சம் முனகுவதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய முடியாது. அம்மா வீராசாமி தொழிலில் தேறுவதற்கு முன்பே மண்டையைப் போட்டுவிட்டாள். வீட்டைப் பெருக்கிக் கூட்டுவதிலிருந்து சாயங்காலம் கோழியைப் பிடித்துக் கூடைக்குள் கவிழ்ப்பது வரை எல்லாம் வீராசாமிதான். வீட்டில் பெண்ணில்லாத குறை… அதுபற்றி அவன் சிந்தித்ததில்லை. அது குறையுடைய வாழ்க்கையாக அவனுக்கு எப்போதுமே தோன்றியதுமில்லை. யந்திரம் மாதிரி உழைத்திருப்பது மட்டுமே அவனுக்குத் தெரிந்திருந்தது. அவனே கஞ்சி காய்ச்சி, அப்பனையும் பராமரிப்பது சிரமமாய் இருந்தது.
‘அம்மாதான் சின்ன வயசிலேயே போயிட்டா. நீயும் வளர்ந்து ஆளாயிட்டே… வீட்டுக்குன்னு விளக்கேத்த ஒரு பொண்ணு வேணுமில்ல? காலாகாலத்துல ஒரு கலியாணத்தைப் பண்ணிப்போடு’ என்று சொல்பவர்களிடமெல்லாம் ‘அதுக்கென்னங்க இப்ப அவசரம். நம்ப கையில என்ன இருக்குது. நேரங்காலம் வந்தா தானா நடந்துட்டுப் போவுது’ என்று பதில் கொடுப்பான்.
ஆனால் ‘கண்ணிருக்கும் போதே ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பாத்துட வேண்டியதுதான். அப்புறம் நமக்கு மூச்சிருக்குதோ இல்லையோ…’ என்று வாத நோய்க்கார அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அவனாக விரும்பித்தான் செல்லக்கண்ணுவை ஏற்றுக்கொண்டான். செல்லக்கண்ணு ரொம்ப சிகப்பு இல்லை. மாநிறம்தான். அழகாக இருந்தாள். மதர்ப்பாக கவர்ச்சியாக இருந்தாள். இளமைக்கு இலக்கணம் மாதிரி இருந்தாள். நடை குதிரைக்குட்டி மாதிரி ‘டக்… டக்…’ என்று இருப்பதாக ஊரில் பேசிக்கொள்வார்கள். அவளைத் தவிர வேறு யாரும் ‘பிரெய்சரி’ போட்டு ஊரில் பார்க்கமுடியாது. அவள் அந்த ஊருக்கு ஒரு தனித்துவம் வாய்ந்தவளாகத் தோற்றமளித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
கல்யாணமும் நடந்தேறியது. ‘கட்டுமஸ்தான வாலிபன் வீராசாமிக்கு அவள் ஏற்ற ஜோடிதான்’, ‘ரொம்ப பொருத்தமாக இருக்கிறது’ என்று எத்தனையோ ஜோடிக்கண்கள் ஏக்கத்தோடு நோக்க செல்லக்கண்ணுவை வீட்டுக்குக் கூட்டிவந்தான் வீராசாமி.
பெண் வாடையேயில்லாமல் களையிழந்து சோகம் கப்பிய சூன்யமான அந்த வீட்டில் செல்லக்கண்ணு நுழைந்த பிறகு கொஞ்சம் கலகலப்பு ஏற்பட்டது. வீடு களை கட்டியிருந்தது. வேளாவேளைக்கு அவன் வேலை முடித்துப் போகும் நேரத்துக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போட ஆள் இருந்தது.
வீராசாமி இப்போதும் தெருக்கொறட்டில் எந்நேரமும் டங்… டங்… என்று அடித்துக்கொண்டுதானிருந்தான். அவனுக்கு சதா உழைத்துக்கொண்டிருப்பது சின்ன வயசிலேயே பழக்கப்பட்டுவிட்டது. கொஞ்சம் கடுமையாக உழைத்து கலியாணக் கடன்களையெல்லாம் தீர்த்துவிட்டு எங்காவது ஒரு அரைக் காணி கால்காணி நிலம் வாங்கிப் போட்டுவிட்டால் அப்புறம் அக்கடா என்று கிடக்கலாம். வாழ்க்கை ஸ்திரமாகி விடும் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்.
செல்லக்கண்ணுவுக்கு உள்ளே சமையல் வேலையைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. எல்லா வேலைகளையும் முடித்து ஓய்ந்த நேரத்தில் எல்லாம் அவன் எதிரே உட்கார்ந்து கணவனுடைய செய்திறனையே வியந்து நோக்கிக்கொண்டிருப்பாள். அவனோடு ஏதாவது பேச்சு கொடுப்பாள். ஆனால் அவளின் எந்த நடவடிக்கையிலும் கவரப்படாத அவன் ஏதோ இண்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைப் போல சொல்லிக்கொண்டிருப்பான். இதனால் அலுப்படைந்த அவள் அவனைவிட்டு அண்டை வீடு, பக்கத்து வீடு என்று வம்பளக்கக் கிளம்பி விடுவாள். பிறகு ஊர் சுற்றுவதில் சுகம் கண்டாள்.
கல்யாணம் நடந்து முழுசாக ஒரு வருஷம்கூட பூர்த்தி யாகவில்லை. தினத்துக்கு ஒரு வாயில் சேலையும், பவுடர் பளபளப்பு மங்காத முகமுமாக மைதீட்டிய விழிகளால் ஊரை நோட்டம் பார்க்க ஆரம்பித்தாள். அவளது குலுக்கு நடையின் தளுக்கில், அங்க அசைவின் கவர்ச்சியில், நெஞ்சைக் கிளுகிளுக்க வைத்து சுண்டியிழுக்கும் பார்வையின் ஒயிலில் அவளோடு அரட்டையடிக்க இளங்காளைகள் எத்தனையோ ஊரில் திரிந்தன.
ஊர் வாய் எத்தனை நாளைக்குச் சும்மாயிருக்கும்!
‘என்னப்பா உன் சம்சாரம்… தராதரமில்லாம எல்லார் கிட்டயும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்னு… அதெல்லாம் நல்லதில்ல. நம்ப தகுதிக்கு ஒகந்தவங்க கிட்டதானே பழகணும். அதிலும் கலியாணமான பொண்ணு… கண்ணியமாப் பழக வாணாவா…?’ என்று வீராசாமியிடம் நேரிடையாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
கொட்டாப்புளியால் மரத்தைச் செதுக்கியபடியே ‘அவ என்னங்க சின்னப்பிள்ளைதானே… விவரந் தெரியாத பொண்ணு… எல்லாம் போகப் போகச் சரியாயிடும். சொன்னாத் தெரிஞ்சுக்குவா…’ என்று பதில் சொல்லி அனுப்பிவிடுவான்.
உண்மையில் வீராசாமி செல்லக்கண்ணுவைப் பற்றி எந்தச் சந்தேகமும் கொள்ளவில்லை. அதை ஒன்றும் பெரிதுபடுத்திக்கொள்ளவுமில்லை.
இராத்திரி சாப்பிடும்போது, ‘ஏம்மே… நம்ப வீட்டுல ஒண்ணும் வேலையில்லன்னா பேசாம பாய எடுத்துப்போட்டு படுத்துத் தூங்கறது… நீ ஏன் வீடு வீடாப் போவணும். ஒவ்வொருத்தங்க ஒண்ணொன்னு சொல்லணும்… ம்…’ என்று தன்மையாகக் கடிந்துகொண்டான்.
‘நீ என்னாய்யா… நீ… ஊருலருக்கிற கழுதைங்க ஒண்ணொன்னு பேசிக்கிதுன்னா… அதுக்காகப் பயந்துக்னு கெடக்கச் சொல்றீயா… நம்ப மனசு சுத்தமாயிருந்தா சரிதான்…’ என்ற செல்லக்கண்ணு தன் வார்த்தைகளால் கணவனுக்கு நம்பிக்கையூட்டினாள்.
வீராசாமி அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. பேசுவதற்கும் தெரியாது. காலையில் எழுந்து பல் தேய்த்து கஞ்சி குடித்துவிட்டு, கொட்டாப்புளியைக் கையில் எடுத்தால்… அப்புறம் மத்தியானம் சாப்பாடு… இராத்திரி தூக்கம்… இப்படித்தான் அவனுக்கு வாழ்க்கை. லௌகீக ஞானங்களற்ற சம்பிரதாய ரீதியான யந்திரகதியான மாமூலான கடமைகள் கொண்ட வாழ்க்கை மட்டும்தான் அவனுக்குத் தெரியும். தெருக் கொறட்டுக்கு அப்பால் எதுவும் அவனுக்கு அவ்வளவாகத் தெரியாமலிருந்தது.
கணவனின் இந்தப் போக்கு செல்லக்கண்ணுவுக்கு வாய்ப்பாய் இருந்தது. என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே அவள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்துகொண்டிருந்தாள். செல்லக்கண்ணு அதற்குப் பிறகும் கொஞ்சம்கூட மாறியவளாய்த் தெரியவில்லை. அவள்பாட்டுக்கு எப்போதும் போலவே திரிந்துகொண்டிருந்தாள். ஊரில் எவனாவது ஒரு பையனோடு சேர்ந்துகொண்டு பக்கத்து கிராம டூரிங் டாக்கீசுக்கு சினிமாவுக்குப் போய் வருமளவுக்கு அவள் முன்னேறிப்போயிருந்தாள்.
‘லம்பாடிய மாதிரி எங்க வேணாலும் சுத்திக்கிட்டுத் திரியறவள வச்சிக்னு வாழறதும் ஒரு வாழ்க்கையா…’
‘ராத்திரி பகலுனு பாக்காம ஊரு மேயற பொண்ணை வச்சிக்னு குடும்பம் நடத்தறவனும் ஒரு ஆம்பளையா…’
‘வீட்டுல கெடக்கிற பொண்ணுக்கு தலைக்கி வாசனை எண்ணெய் ஒரு கேடா? கச்சேரி நாக்காலிலே குந்தி உத்தியோகம் பாக்கறதா நெனப்பா…’
‘ஊருலருக்கிறவன் தெனத்துக்கு ஒண்ணு எடுத்துக் குடுத்தா… ஏன் அவ புதுப்புது ரவிக்கை போடமாட்டா… அவளையும் ஒரு ஆம்பள கட்டிக் காப்பாத்துறானே… எங்கனா தூக்குப் போட்டுக்காம…’
வீராசாமியின் தெருவழியாகப் போகிறவன் அவன் வீட்டெதிரே இப்படி ஏதாவது பேசிக்கொண்டு போகத் தவறுவதில்லை. அவனுக்கு இது ஒருமாதிரியாக உறுத்த ஆரம்பித்தது.
‘பேசாம அவளைத் தள்ளி வெச்சிடு’ என்று ஒன்றிரண்டு அனுபவஸ்தர்கள் அவனுக்கு வழிகாட்ட ஆரம்பித்தார்கள். அவர்களே பஞ்சாயத்து கூட்டவும் ஏற்பாடு செய்தார்கள்.
ஊர்ப் பெரிய தனக்காரர்களும் நாட்டாமைகளும் கூடினர். வீராசாமி செல்லக்கண்ணுவைத் தள்ளி வைக்கவும் மாதம் அவளுக்கு சாப்பாட்டுக்குக் கொஞ்சம் தந்துவிடவும்… பஞ்சாயத்தில் ஏற்பாடாகியது.
இதைக் கேட்டதும் செல்லக்கண்ணு ‘கோ’ என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டாள். ‘நான் என்ன தப்பு பண்ணிட்டேன்… எனக்கு ஏன் இந்தத் தண்டனையெல்லாம்… அவரைப் பிரிஞ்சி என்னாலே தனிச்சு வாழ முடியுமா? குடும்பப் பொண்ணுக்கு அதெல்லாம் அடுக்குமா?’ என்றெல்லாம் புலம்பினாள்.
‘நீலி… என்னமாப் பொலம்பறா… எங்கேருந்துதான் கண்ணுல தண்ணி வருதோ’ என்றார்கள் கூடியிருந்த கிராமத்துப் பெண்கள்.
‘பாவம்… பரிதாபமா இருக்கு. அவ அழுது நான் பார்த்ததே இல்ல. இன்னைக்கு இப்படி அழுவுறா…’ என்று அனுதாபப்பட்டது இளைஞர்கள் வட்டம்.
பஞ்சாயத்துக்காரர்கள் செய்வதறியாமல் வீராசாமியைப் பார்த்தார்கள். வீராசாமி செல்லக்கண்ணுவைப் பார்த்தான். அவள் விடாமல் அழுதுகொண்டிருந்தாள். தேம்பித் தேம்பி அழுதாள். குழந்தை பெறாத அந்தக் கட்டுடல் தேம்பும்போது ஏற்படும் குலுங்கலில் ஒரு தனி அழகு இருப்பதாகப் பலரும் சொன்னார்கள். அவனுக்கும் அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவனுக்கு என்ன தோன்றியதோ… ‘ஏதோ கெடக்கட்டும். புள்ள தெரியாம நடந்துகிட்டா. திருந்திட்டா… இனிமே ஒழுங்கா நடந்துக்குவா…’ என்று சொல்லி அவளை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான்.
அவளைத் தேற்றி ஆசுவாசப்படுத்தி ‘தோ பார். அழாதே. நீ ஏன் அந்த மாதிரியெல்லாம் செஞ்சே… ஊருல எப்படில்லாம் பேசுறாங்க. நான் அப்பவே சொன்னனா இல்லியா…’ என்று கருணையோடு ஒரு தந்தை மாதிரி புத்தி சொன்னான். அழுகை நின்றதும் ‘போய் அடுப்பு பத்த வச்சு சோறு ஆக்கு. போ போ… இனிமே அழாதே…’ என்று சொல்லிவிட்டு, தெருக் கொறட்டுக்கு வந்து கொட்டாப்புளி எடுத்து வைத்து மாமூலான வேலையில் ஆழ்ந்துவிட்டான்.
ஒரு ரெண்டு நாள்கள் செல்லக்கண்ணு கட்டுப்பெட்டியாய் வீட்டோடு கிடந்தாள். அப்புறம் வேதாளம் முருங்கை மரம் ஏறிய மாதிரி – இல்லையில்லை முருங்கை மரமே வந்து வேதாளத்தை ஏற்றிக்கொண்டது மாதிரி – பழைய சகாக்கள் எல்லாம் வீடு தேடி வர ஆரம்பித்துவிட்டார்கள். தோட்டத்துப் பக்கமாக வந்துபோனார்கள். ‘எவனோ பக்கத்து டவுனிலிருந்து ஒரு சோப்பு கம்பெனி ஏஜெண்டாம். அவன் புதுசாக அடிக்கடி வருகிறானாம்.’ வீராசாமி அதையெல்லாம் நம்பவில்லை.
ஆனால் விஷயம் வேறு விதமாக முடிந்துவிட்டது!
ஒருநாள் அந்திமங்கி இருள் கப்பும் நேரம். வீராசாமி தெருக் கொறட்டில் கலப்பைக்குக் குச்சி கோர்த்து கொட்டாப் புளியால் அடித்துக்கொண்டிருந்தான். அதை வாங்கிக்கொண்டு போக ஊர்க்காரர்கள் ரெண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள்.
‘என்னப்பா! பொழுது போச்சு. வௌக்கு கொளுத்தலையா?’ என்றார் ஒருவர்.
‘சம்சாரம் வீட்டில் இல்லையோ என்னவோ…’ என்றார் மற்றவர்.
‘இல்லாம என்னா! உள்ள எவன்கூட கொலாவிகினுகிதோ. சாயரட்சை அந்த ஏஜண்டு பய வந்தானே…’ என்று வீராசாமியின் எதிரிலேயே கொஞ்சம்கூட இது இல்லாமல் சொல்லிவிட்டார் முதலில் பேசினவர்.
வீராசாமிக்கு சுருக்கென்றது. அவமானத்தால் ஏற்பட்ட மனக்கொதிப்போடு ‘இந்நேரம் வரைக்கும் வௌக்குகூட கொளுத்தாம என்ன செய்யறா கழுதை’ என்று முனகியபடியே எழுந்து உள்ளே சென்றான்.
உள்ளே வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. ஒரே நிசப்தமாயிருந்தது. ‘செல்லக்கண்ணு’ குரல் கொடுக்க எத்தனித்தவன் வார்த்தைகளைத் தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டான். தோட்டத்தில் வளையல்கள் கலகலக்கும் ஒலி சன்னமாகக் கேட்டது. அவனுக்கு நெஞ்சில் என்னவோ தைத்தது. புதிதாக ஒரு நிரடல். ‘இந்நேரத்தில் தோட்டத்தில் இருட்டில் இவளுக்கென்ன வேலை?’ என்று நினைத்தவனாக சந்தடியில்லாமல் மெல்ல நடந்து சென்று குளியலறைத் தட்டி ஓரம் நின்று மறைவாகப் பார்த்தான்.
புறக்கடைப் பக்கம் வைக்கோற் போருக்கு அருகில் காட்டாமணிப் புதர் ஓரம் இரண்டு உருவங்கள் நெளிந்துகொண்டிருப்பது, அணைத்துப் புரண்டுகொண்டிருப்பது மங்கிய கருக்கலில் இலேசாகத் தெரிந்தது.
அவ்வளவுதான்! வீராசாமிக்கு வெறியே வந்துவிட்டது. அவன் இதுவரை எதை நம்பாமல் அசட்டை செய்து வந்தானோ அதையே நேரில் பார்த்துவிட்ட பிறகு… இரத்தம் கொதித்தது. அவமானம் பிடுங்கித் தின்றது. ஆண்மை மேலெழுந்து நின்றது. அவனின் உணர்வுகள் குருதியோட்டத்தில் பாய்ந்து அணு அணுவாய்க் கொதித்து மூர்க்கத்தனத்தின் உச்சிக்கே கொண்டு போய்விட்டது.
நின்ற இடத்திலிருந்து ஒரே பாய்ச்சல் அந்த உருவங்களை நோக்கி… கையில் என்ன இருந்தது, யாரை எதால் அடித்தோம்? எதுவும் அவனுக்குத் தெரியாது.
மண்டையில் ஒரு போடு போட்டான்.
‘ஐயோ… அப்பா…’ என்று ஒரு அலறல்.
‘ஐயையோ… கொன்னுட்டானே… கொல… கொல… அநியாயமா கொன்னு போட்டுட்டானே…’ செல்லக்கண்ணு கதறினாள்.
வீராசாமி செல்லக்கண்ணுவின் மேல் பாய்வதற்குள்…
தெருவிலிருந்த ரெண்டு பேரும் ஏதோ விபரீதம் நேர்ந்துவிட்டது என்று அறிந்து ஓடிவந்துவிட்டார்கள். வெறி தணியாத பசித்த ஓநாய் மாதிரி கையில் கொட்டாப்புளியுடன் நின்றிருந்த வீராசாமியைப் பிடித்துக்கொண்டார்கள்.
அப்படியிருந்தும் வீராசாமி திமிறிக்கொண்டிருந்தான். செல்லக்கண்ணு அங்கிருந்து ஓடி, தெருவில் நின்று கதறிக்கொண்டிருந்தாள்.
‘ஐயையோ… அவனைப் புடியுங்களேன்… கொல பண்ண வர்றானே…’
தளர்ச்சியான இருள் கவிந்த இரவின் நுழைவாயில் போன்ற நேரத்தில் அபஸ்வரமான ஒலிகளைக் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அரிக்கேன் விளக்கும் தடிக்கம்புகளாக கூடிவிட்டார்கள்.
ஆவேசத்தில் உணர்வுகளையெல்லாம் இழந்து கட்டற்றுத் தாவிக்கொண்டிருந்த வீராசாமியை வளைத்துப் பிடித்துக்கொண்டார்கள். அரிக்கேன் விளக்கொளியில் அனல் கக்கும் அவனது சிவந்த விழிகள் பார்க்கப் பயங்கரமாயிருந்தன. கையிலிருந்த இரத்தம் தோய்ந்த கொட்டாப்புளியைக் கூட்டம் பிடுங்கிக்கொண்டது.
வைக்கோற் போருக்கு பக்கத்தில் செல்லக்கண்ணு கை காட்டினாள் பயந்து நடுங்கியபடி…
கொஞ்சம் அகலப் பரப்பிப் போட்டிருந்த வைக்கோலின் மேல் சோப்புக் கம்பெனி ஏஜெண்ட் இரத்த வெள்ளத்தில் தலை நட்டுக் கிடந்தான். மண்டை கிழிந்து போய் மூளை பிதுங்கி வெளித் தொங்கியிருந்தது. வைக்கோலெல்லாம் இரத்தம் பரவி தரையில் பாய்ந்து உறைந்து கிடந்தது.
ஊர் மணியக்காரர் வந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்தார். மூணு மாசமாய்க் கேஸ் நடந்தது. வீராசாமி ஜெயிலுக்குப் போய்விட்டான்.
ஊர் முழுக்க செல்லக்கண்ணுவைக் கரித்துக்கொட்டியது.
பொழுது சாய்ந்துவிட்டது. வீராசாமி எப்படித்தான் தூங்கினானோ தெரியாது. கண் விழித்தபோது அந்தி மங்கி லேசான இருள் கருந்திரையை விரித்துக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த தோப்புத்துரவுகளில் அடையும் பறவைகள் கிறீச்சிட்டுக்கொண்டிருந்தன. மண்டபத்துக்குள் சீட்டாடிக்கொண்டிருந்த எல்லாரும் எழுந்து போய்விட்டிருந்தார்கள். வீராசாமி எழுந்து துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு திரும்பினான். ஊரை நோக்கி நடந்தான்.
பதினான்கு ஆண்டுகள்…
இப்போது அவன் பழைய வீராசாமி இல்லை. இப்போது அவனுக்கு எல்லாம் தெரியும். சிறை வாழ்க்கை அவனைப் பொறுத்தவரைக்கும் ஒரு நல்ல பல்கலைக்கழகம் மாதிரி. எத்தனையோ விதமான அனுபவங்கள்… எத்தனையோ விதமான குற்றவாளிகள்… அவன் எவ்வளவு பேரைப் பார்த்திருக்கிறான்.
‘போயும் போயும் அநியாயமா ஒருத்தன கொன்னுட்டியே’ என்று இவன் கதையைக் கேட்டவர்கள் குறைப்பட்டுக்கொண்டார்கள்.
‘நான் அவன்னா பாத்தேன். அவளைத்தான் போடணும்னு நெனச்சேன்… படுபாவி தப்பிச்சிட்டா…’ என்பான் வீராசாமி.
‘வெளியே போனதும் மொதல்ல அவளைத் தீத்துடு! என்ன?’ தினம் அவனுக்கு இதே போதனைகள்தான். இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு அவன் நெஞ்சு உரமேறிப் போயிருந்தது.
அந்தக் கட்டான உடல். குதிரைக்குட்டி நடை. அந்த மதமதப்பு. பிரெய்சர் கவர்ச்சி. மை விழிகள். அவன் பழி தீர்க்க வேண்டிய அந்த உருவம் நெஞ்சில் மாறாது உருவகப்படுத்தப்பட்டுப் பதிந்துபோய்விட்டது. அவன் நினைவில் அந்தச் செல்லக்கண்ணுதான் சுழன்றுகொண்டிருந்தாள்.
‘அவுசாரி இன்று தொலைந்தாள்… இத்தனை ஆண்டுகளாக பொருமிக் குமைந்துகொண்டிருந்த அந்த உணர்வு விமோசனமடையும் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது… பாவி அவளால்தானே இவ்வளவும்…’
வீராசாமிக்கு நேரம் நெருங்க நெருங்க இதயம் படபடத்தது. ஊரை நெருங்குவது – பிறந்த ஊரை, வளர்ந்த ஊரை புழுதி படியப் புரண்டு விளையாடிய மண்ணை – நெருங்குவது உற்சாகமாயிருந்தது. அதில் ஒரு கிளுகிளுப்பு… இத்தனை வருஷங்களுக்குப் பிறகு அது எங்கிருந்துதான் வருகிறதோ! ஊர் ஒன்றும் மாறிவிட்ட மாதிரியோ முன்னேற்றமடைந்த மாதிரியோ தெரியவில்லை… தெருவிளக்கு மட்டும் புதிதாய்ப் போட்டிருந்தார்கள். மற்றபடி விசேஷ மாற்றம் ஒன்றும் இல்லை.
பிறந்த மண்ணில் பதிக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு சுகம்தான்… அந்தச் சுகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியின் ஒளி முகத்தில் பாயுமுன்னே, எப்போதும் தேங்கி உறைந்து போயிருக்கும் செல்லக்கண்ணுவின் நினைவு முகத்தைக் கருக்கடித்தது.
இடுப்பை ஒருமுறை வருடிப் பார்த்தபடி வீராசாமி தெருவில் நடந்துகொண்டிருந்தான். யாராவது அடையாளம் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று தலையில் கட்டியிருந்த துண்டைக் கொஞ்சம் இழுத்து விட்டுக்கொண்டான். தெருவில் வரிசையாக விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. தெருத் திண்ணைகளில் அரிக்கேன் விளக்கொளியில் ஸ்கூல் பசங்கள் பாடம் படித்துக்கொண்டிருந்தார்கள். தெரு முற்றத்தில் உட்கார்ந்து கிடந்த கிராமத்துப் பெண்கள் அவரவர் வீட்டு சமையல் பதார்த்தங்கள்… பக்கத்தூர் தியேட்டரில் ஓடும் சினிமா… இப்படி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் மின்விளக்குகள் எரிந்தன. தெருவிளக்கில் சில பிள்ளைகள் பலிச்சாங்கோடு ஆடிக்கொண்டிருந்தார்கள்.
‘கழுதை என்னைப் பற்றி எப்பவாவது நினைத்திருப்பாளா. இல்லை எதைப் பத்தியும் கவலைப்படாம எவனோடாவது கொஞ்சிக்கினு இருப்பாளா… வீட்டில இருக்கறாளோ… எங்கனா ஊர் சுத்தப் போயிருக்காளோ…’
வீராசாமி வீட்டை நெருங்கினான். தெருக்கதவு சாத்திக் கிடந்தது. மெல்ல கை வைத்துத் தள்ளினான். கதவு திறந்துகொண்டது. இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்துக்கொண்டான். கதவை முழுக்கத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்.
உள்ளே…
ஒரே இருட்டாயிருந்தது. அந்த இருள் பழைய நினைவுகளைக் கிளறிக் கொணர்ந்து முன்னே நிறுத்தியது. அதில் ஒரு ஆவேசம். ‘அவள் மட்டும் கொஞ்சம் ஒழுங்கா இருந்திருந்தால்… நான் மட்டும் அன்றைக்குக் கொஞ்சம் பொறுமையோடு இருதிருந்தால்…’ ஒரு அநாவசியமான சிந்தனை… வீராசாமி பல்லைக் கடித்துக்கொண்டான். ‘எங்காவது வெளியே போயிருப்பாள். வரட்டும்…’
அவன் கூடத்தின் மூலையில் சுவர் ஓரம் பதுங்கி நின்றுகொண்டான்.
‘பவுடர் பளபளப்பு… ஒரு கதகதப்பான சுகம் தரும் வாயில் சேலை சரசரப்பு… நடையிலே ஒரு மதர்ப்பு… அவள் இப்போது வருவாள்! அவள் இப்போது அழிவாள்!’ அவளை நினைத்து, தான் வஞ்சம் தீர்த்துக்கொள்ளப் போவதை நினைத்து, பதினான்கு ஆண்டுகள் வெறியேற்றிய வலிமையின் பயனாகப் பெறப்போகும் மகிழ்ச்சியை நனவில் துய்த்துக்கொண்டிருந்தான்.
யாரோ வரும் காலடி ஓசை, தளர்ந்த ஓசை கேட்டது. வீராசாமி சுவர் ஓரமாக ஒட்டி நின்றுகொண்டான்.
தட்டுத் தடுமாறி ஒரு உருவம் உள்ளே நுழைந்தது. எதையோ பொத்தென்று வைக்கும் ஓசை… உருவம் சுவரைத் தடவி மாடத்திலிருந்த வத்திப் பெட்டியை எடுத்து காடா விளக்கைக் கொளுத்தியது. ஒளி அறையெங்கும் மங்கலாகப் பரவத் தொடங்கியது.
விளக்குப் பக்கத்தில் நொடிசலான அரைக் கிழவி ஒருத்தி குத்துக்காலில் உட்கார்ந்தாள். அருகில் ஒரு அலுமினியக் கிண்ணத்தில் கொஞ்சம் சோறு, குழம்பு ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. கூடத்தில் கிழிந்துபோன ஒரு கோரைப் பாயைத் தவிர மூலையில் இரண்டு மூன்று சட்டிகள் மட்டுமே இருந்தன.
வீராசாமிக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இருந்தது.
மறுபடி அந்த முகத்தைப் பார்த்தான். முகமெல்லாம் அம்மைத் தழும்புகள்… ஒட்டி வற்றிப்போன சுருக்கம் விழுந்த கன்னங்கள்… நரைத்துப் பறந்து கலைந்து கிடந்த தலைமுடிகள்… நெற்றியில் ஒரு திருநீற்றுப்பட்டை. அதில் ஒரு குங்குமப் பொட்டு. காசநோய் பிடித்தமாதிரி நொடிசலான இரத்த ஓட்டமேயில்லாத நீற்றுப்போன கைகால்கள்… அவள் கிண்ணத்திலிருந்த சோற்றை கஷ்டப்பட்டு மென்று விழுங்கிவிட்டு, சட்டியிலிருந்து கொஞ்சம் தண்ணீரைக் கிண்ணத்தில் சாய்த்துக் குடித்தாள்.
வீராசாமிக்கு ஒன்றும் புரியவில்லை.
மறுபடியும் அந்த உருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அதற்கு மேல் அறையில் இருள் சூழ்ந்தது.
அந்தக் குரல்… வீராசாமிக்குப் புரிந்தது… வீராசாமியின் கையில் இருந்த கத்தி நழுவித் தரையில் விழுந்தது.
‘என்ன சத்தம்…’ பலவீனமான அந்தக் குரல் தொண்டைக் குழிக்குள்ளிருந்து வார்த்தைகள் வெளிவரும் முன்னே வீராசாமி வீட்டைவிட்டு வெளியேறி தெருவுக்கு வந்துவிட்டான். தெருவைத் தாண்டி, ஊரைத் தாண்டி நடந்துகொண்டிருந்தான். தூரத்தில் தெரிந்த தோப்புகளிலிருந்து கிருஷ்ணபட்சத்து நிலவு உதயமாகிக்கொண்டிருந்தது. மரங்களின் நுனியில் நிலவொளி பட்டு புத்துணர்வோடு காற்றில் கிளைகள் மெல்ல ஆடிக்கொண்டிருந்தன.
தேப்பங்குளத்து நீரில் நிலவு கீற்று கீற்றாக ஒளியைப் பாய்ச்சியிருந்தது. மேற்குப்பக்கம் அரசமரம் தெரிந்தது. அங்கே… அரசமரத்தடியில்… நாகாத்தம்மன் குலதெய்வத்தின் கீழே… சின்ன அகல் விளக்கொன்று காற்றில் அசைந்தாடி நிதானமாக எரிந்துகொண்டிருந்தது. கல்லைக் கழுவி, விபூதி இட்டு மஞ்சள் பூசியிருப்பது பிரகாசமாகத் தெரிந்தது. அந்தப் பிரகாசம் ஏற்பட்டது நிலவொளியாலா அகல் விளக்கொளியாலா என்பது புரியவில்லையானாலும் அது பிரகாசமாகவே இருந்தது.