கணக்கு வாத்தியார்களும் கரப்பான் பூச்சிகளும்: தஸ்தாயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகளில்’ இருத்தலியலின் நெருக்கடி

1 comment

ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளைத் தேதிவாரியாக வாசிப்பவர்கள் ஓர் உண்மையை உணரக்கூடும். 1864க்கு முன்பாகத் தஸ்தாயேவ்ஸ்கி தன்னை மகத்தான எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதையும் எழுதவில்லை.

1844ல் வெளிவந்த அவருடைய ‘ஏழைகள்’ என்ற நாவலும் 1862ல் அவர் சிறைக்குச் சென்றுவந்த பின் எழுதிய ‘மரண வீடும்’ விளிம்புநிலை மக்கள் படும் துயரங்களை எடுத்துச்சொல்லும் வகையில் ரஷ்ய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கற்களாக அமைந்தன. இந்த இரண்டு நாவல்களிலும் – குறிப்பாக ‘மரண வீட்டில்’ – தஸ்தாயேவ்ஸ்கியின் பாத்திரப் படைப்பாற்றல் சில மிகப் பிரகாசமான வருணனைகளாகத் துலங்கினாலும் இவ்விரண்டு நாவல்களும் ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ், ஃபிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோ ஆகியோரின் சமூக யதார்த்த நாவல்களின் எதிரொலிகள் என்றால் மிகையாகாது. 1846ல் வெளிவந்த ‘இரட்டை’, கோகோலின் ‘மூக்கு’ குறுநாவலின் சற்றே நீர்த்துப்போன சாயல். 1848ல் வெளிவந்த நெடுங்கதையான ‘வெண்ணிற இரவுகளை’ பிற்காலத் தஸ்தாயேவ்ஸ்கியின் மகத்தான ஆற்றலுக்கு ஓரளவுக்குச் சான்று சொல்லும் படைப்பாகச் சொல்லலாம்.

1864ல் ‘நிலவறைக் குறிப்புகள்’ வெளிவந்த பிறகுதான் தஸ்தாயேவ்ஸ்கிக்குப் பெரும் புகழ் பெற்றுத்தந்த படைப்புகளான ‘குற்றமும் தண்டனையும்’ (1866), ‘சூதாடி’ (1867), ‘அசடன்’ (1869), ‘நிரந்தரக் கணவன்’ (1870), ‘பிசாசுகள்’ (1872), ‘கரமசோவ் சகோதரர்கள்’ (1880) ஆகியவை வெளிவந்தன. 

தஸ்தாயேவ்ஸ்கி என்ற நல்ல எழுத்தாளன் உலக இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளியாக மாறியது ‘நிலவறைக் குறிப்புகள்’ என்ற நாவலிலிருந்துதான். தஸ்தாயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவல்களில் கொண்டாடப்படும் உளவியல் சார்ந்த வருணனைகள், ஆழமான தத்துவார்த்த விசாரணை, கதைப் போக்கை அதன் இலக்குக்கு மிகுந்த துல்லியத்தோடு நகர்த்திச் செல்லும் உரையாடல்கள் போன்ற அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளியாகவும் ஊற்றுக் கண்ணாகவும் ‘நிலவறைக் குறிப்புகள்’ குறுநாவல் விளங்கியது என்று சொல்வது மிகையில்லை.

‘நிலவறைக் குறிப்புகள்’ குறுநாவலின் கட்டமைப்பே தஸ்தாயேவ்ஸ்கி என்ற எழுத்தாளனின் வளர்ச்சியில் மெய்யியல் தத்துவமும் மனித உளவியல் குறித்த விசாரணைகளும் ஏற்படுத்தியிருந்த அசாத்தியமான மாற்றத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. காலக் கிரமமாகச் சொல்லப்பட்ட ஒரே நாவலாக இல்லாமல் ‘நிலவறைக் குறிப்புகளை’ ஒன்றுக்கொன்று தொடர்புடையை, ஆனால், இருபது வருட இடைவெளியில் நடந்தேறிய சம்பவங்களை விவரிக்கும் இரண்டு பாகங்களாகத் தஸ்தாயேவ்ஸ்கி எழுதினார். 

‘நிலவறை’ என்று பெயரிடப்பட்டிருக்கும் முதல் பகுதி 1860களில் நடைபெறுவதாகக் கதை அமைந்திருக்கிறது. அதில் அறிமுகமாகும் குறுநாவலின் பெயரிடப்படாத கதாநாயகனான ‘நிலவறை மனிதன்’ தன்னை நாற்பது வயதான ஓய்வுபெற்ற கடைநிலை அரசாங்க அதிகாரியாக அறிமுகப்படுத்திக்கொள்கிறான். குறுநாவலின் இந்தப் பாகம் முழுவதுமே சமுதாயப் படிநிலைகள், சமூகக் கட்டுப்பாடுகள், நியாய தர்மங்கள், சமூகத் தர்மங்கள் ஆகியவற்றுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் இலட்சிய சமுதாயக் கட்டமைப்புக்கு எதிராகப் பலவகையான விமர்சனங்களை நிலவறை மனிதன் வைப்பதில் கடந்து போகிறது. உலக இலக்கியங்களில் மிகப் புகழ்பெற்ற நூல் ஆரம்பங்களின் ஒன்று ‘நிலவறைக் குறிப்புகள்’ குறுநாவலின் ஆரம்ப வரிகள்:

“நான் நோயுள்ள மனிதன்… கேடு கெட்டவன். கவர்ச்சியில்லாதவன். என் ஈரல் வலிப்பதுபோல் இருக்கிறது. ஆனால் என் நோயைப் பற்றி ஓர் இழவும் எனக்குத் தெரியாது. எனக்கு என்ன நோய் என்பதுகூட எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நான் இப்போது இதற்கு எந்தச் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. எப்போதும் சிகிச்சை எடுத்துக்கொண்டதில்லை. ஆனாலும் நான் மருத்துவர்களையும் மருத்துவத்தையும் நிறையவே மதிக்கிறேன். (நான் மூடநம்பிக்கையால் பீடிக்கப்படாத அளவுக்குப் படித்திருக்கிறேன், ஆனாலும் மூடநம்பிக்கை உள்ளவன்தான்) இல்லை, ஐயா, நான் மோசமானவன் என்பதால் சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுக்கிறேன்.” (மொழிபெயர்ப்பு என்னுடையது)

நிலவறைக் குறிப்புகளின் முதல் பாகத்தில் சமூகத்தின் போலித்தனங்களுக்கும் சாரமற்ற குருட்டுக் கட்டுப்பாடுகளுக்கும் எதிராக எடுத்துவைக்கும் விமர்சனங்களோடு இந்தப் பாகம் நெடுக நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, அருவருக்கத்தக்க விதங்களில் நடந்து அவமானங்களைத் தேடிப் போவது, அப்படி ஏற்பட்ட அவமானத்தின் சின்னச் சின்ன விவரங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து வேண்டுமென்றே அவற்றைக் கற்பனையால் மிகைப்படுத்திக் காட்டி, தன்னைத்தானே வருத்திக்கொள்வது என வீம்புக்குச் செய்யும் செயல்களை நிலவறை மனிதன் குதூகலத்தோடு தற்காத்துப் பேசுகிறான். 

முதல் பாகத்தின் மிகச் சுவாரசியமான ஒரு பகுதியில் பல் வலியில் இன்பம் காண்பது பற்றிப் பேசுகிறான்:

“ஹா, ஹா, ஹா! நீ அடுத்ததாக பல் வலியில் இன்பம் காண்பதைப் பற்றிச் சொன்னாலும் சொல்வாய்!” என்று நீங்கள் சிரித்துக்கொண்டே சொல்லக்கூடும்.

“ஏன் அப்படிச் சொல்லக்கூடாது? பல் வலியிலும் சுகம் இருக்கிறது,” என்று நான் பதில் சொல்வேன்.

நிலவறை மனிதனைப் பொறுத்தவரையில் பல் வலி ஏற்படும்போது அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் வலியால் முனகி, மெல்ல மெல்லப் பல் வலி மோசமாகி, முனகல்கள் மேலும் மேலும் உக்கிரமாகி, இது இரவு பகலாகத் தொடர்ந்து, பல் வலிக்காரனைச் சுற்றியுள்ளவர்களையும் தூங்கவிடாமல் தொல்லை தருவதில்தான் பல் வலியினால் ஏற்படும் இன்பம் இருக்கிறது. 

சமுதாயமும் எல்லா அற நூல்களும் நமக்கு ஏற்படும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டியது வந்தாலும் மற்றவர்களுக்குச் சிரமத்தையோ துன்பத்தையோ ஏற்படுத்தி விடாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று போதிக்க, நிலவறை மனிதனின் கூற்று அதற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. இறுதியில் சமுதாயத்தின் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறியத் துணியும் நிலவறை மனிதன், கணக்குப் பாடத்தின் மிக ஸ்திரமான கூற்றையே தான் விரும்பினால் மறுக்கவும் தயங்க மாட்டேன் என்று அறிவிக்கிறான்:

“கொஞ்சம் நியாயமாகப் பேசு,” என்று அவர்கள் உன்னைப் பார்த்துக் கத்துவார்கள். “நீ இந்த ஒரு விஷயத்தில் கீழ்ப்படியாமல் இருக்கவே முடியாது. இரண்டும் இரண்டும் நான்கு என்பதை நீ மறுக்க முடியாது. இயற்கை விதிகள் இதற்காக உன்னிடம் சம்மதம் கேட்கத் தேவையில்லை. உன் விருப்பம் அதற்கு ஒரு பொருட்டே அல்ல. அதன் விதிகள் உனக்குப் பிடித்திருக்கிறதா என்பதைப் பற்றி அதற்குக் கவலையே இல்லை. அவற்றை நீ அப்படியே ஏற்றுத்தான் ஆக வேண்டும்… ஆண்டவனே, இரண்டும் இரண்டும் நான்கு என்பதோ இயற்கையின் விதிகளோ ஏதோ ஒரு காரணத்துக்காக எனக்குப் பிடித்தமானவையாக இல்லாமல் போனால் எனக்கு என்ன கவலை?”

கணக்கு வாத்தியார்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் இடையே அத்தனை வித்தியாசமில்லை என்று உலகத்தின் வரலாறு தொடங்கிய நாள்முதல் கோடானு கோடி மாணவர்கள் அறிந்ததுதான்.

இப்படி நிலவறை மனிதனின் கோபமும் வெறுப்பும் நிறைந்த சமூக விமர்சனத்திலும் அதற்கெதிராக அவன் செய்ய நினைக்கும் அருவருக்கத்தக்க அர்த்தமில்லாத செயல்களைப் பற்றிய விவரிப்பிலும் ‘நிலவறைக் குறிப்புகளின்’ முதல் பாகம் முடிய, ‘ஈரமான பனியைப் பற்றியது’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் நூலின் இரண்டாம் பாகம், நிலவறை மனிதன் 1840களில் இருபது வயதான இளம் அரசாங்க அதிகாரியாக இருந்த காலத்தில் நடந்த- ஒன்றுக்கொன்று தொடர்புடைய- மூன்று சம்பவங்களைப் பற்றிப் பேசுகிறது. 

முதல் சம்பவத்தில் நிலவறை மனிதன் தெருவில் தன் மீது இடித்துவிட்டுப்போன உயரதிகாரியைத் தானும் இடித்துப் பழிவாங்கத் துடிக்கிறான். அப்படி அந்த உயரதிகாரியை இடிக்கும்போது அவனுக்குத் தன்மீது மரியாதை ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தன்னிடம் பணம் இல்லாவிட்டாலும் சம்பளத்தை முன்னதாகவே கேட்டு வாங்கி விலைகூடிய உடுப்புகளைப் புதிதாக வாங்கி அணிந்துகொண்டு சில முயற்சிகளுக்குப் பின் அந்த அதிகாரியின்மீது இடிக்கிறான். ஆனால் அப்படி இடித்தும் அந்த அதிகாரி கடைநிலை அரசாங்க ஊழியனான தன்னை மதிக்கவில்லை என்பது அவனுக்குத் தீராத துன்பத்தை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது சம்பவத்தில், தனது பழைய பள்ளித் தோழனான ஸ்வெர்க்கோவுக்காக மற்ற பள்ளித் தோழர்கள் கொடுக்கும் பிரியாவிடை விருந்தில் கையில் பணமில்லாவிட்டாலும் வலியப் போய் கலந்துகொள்கிறான். வாழ்க்கையில் உயர்ந்த பதவிக்கு வந்துவிட்ட அவர்கள் அவனை வெறுத்து ஒதுக்கி அவமானப்படுத்துகிறார்கள். ஆனாலும் அவன் அவர்களை விடுவதாக இல்லை. மதுபான விருந்துக்குப் பின்னர் அவர்கள் விபச்சார விடுதிக்குப் போக முடிவுசெய்கிறார்கள். நிலவறை மனிதன் விபச்சாரியிடம் போக நண்பர்களிடமே பணம் கேட்கிறான். ஒரு நண்பன் அவனை அவமானப்படுத்தியபடி அவன் முகத்தில் பணத்தை விட்டெறிகிறான். பின்னர் அவனை மதுபான விடுதியிலேயே விட்டுவிட்டு அவர்கள் மட்டும் விபச்சார விடுதிக்குப் போகிறார்கள். இவன் கனமான ஈரப் பனிப்பொழிவில் தன் கையிலிருக்கும் மிச்சச் சில்லறைகளைத் தந்து ஒற்றைக் குதிரை வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அங்கே விரைகிறான். அவன் அங்கு சென்று சேர்வதற்குள் நண்பர்கள் அனைவரும் விபச்சாரப் பெண்களோடு தனித்தனி அறைகளுக்குப் போய்விட்டிருக்கிறார்கள்.

மூன்றாவது சம்பவத்தில் விபச்சார விடுதியில் நிலவறை மனிதன் லிஸா என்ற இளம் விபச்சாரியைச் சந்திக்கிறான். அவளோடு உறவு வைத்துக்கொள்கிறான். பின்பு இருவரும் உடலுறவு முடிந்து இருட்டில் படுத்துக்கிடக்கும் போது அவளுக்கு விபச்சாரிகளின் வாழ்க்கை எவ்வளவு துன்பகரமானது என்று உருக்கமாகப் போதிக்கிறான். அவள் அழகையும் இளமையையும் இப்போது தேடி வருகிறவர்கள் அவள் அழகும் இளமையும் மறைந்தபின் அவளைச் சீந்தவும் மாட்டார்கள் என்கிறான். அவள் கடைசியில் அநாதைப் பிணமாகப் போகக்கூடும் என்று எச்சரிக்கிறான். பின்பு குடும்ப வாழ்க்கையைப் பற்றி அதே மூர்க்கத்தோடு பேசி அவள் விரும்பினால் அவளைத் திருமணம் செய்துகொள்ளவும் தயார் என்பதுபோல் முடிக்கிறான்.  முதலில் அவன் சொல்வதை அலட்சியத்தோடு கேட்கும் லிஸா, போகப் போக அவன் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்துகொள்கிறாள். அவளிடம் தனது முகவரியைத் தந்துவிட்டு அவன் கிளம்பிப் போகிறான். ஆனால் அவள் அவனைத் தேடி வரும்போது அவன் தனது வேலைக்காரனான அப்போல்யோனோடு வாக்குவாதம் செய்வதை அவள் பார்த்துவிடுவதால் அவள்மீது கோபப்பட்டு அவளை அவமானப்படுத்துகிறான். பின்பு வருந்துகிறான். அவன் தாங்கிக்கொண்டிருக்கும் மனவேதனையை உணர்ந்துகொள்ளும் லிஸா, அவனைத் தழுவிக்கொள்கிறாள்.

*

‘நிலவறைக் குறிப்புகள்’ இலக்கியத்தின் முதல் இருத்தலியல் நாவல் என்று கொண்டாடப்படுகிறது. குறுநாவலில் இரண்டு பாகங்களுக்கும் இடையே தஸ்தாயேவ்ஸ்கி அமைத்திருக்கும் வேற்றுமைகள் அலாதியானவை, நாவல் சொல்லவரும் கருத்துக்கு உறுதுணையாக இருப்பவை. 

முதல் பாகத்தில் வயது முதிர்ந்திருக்கும் நிலவறை மனிதன் எங்கும் நகராமல் நிலவறைக்குள்ளேயே இருட்டில் வாழும் பூச்சியையும் எலிகளையும் போல் புதைந்து கிடக்கிறான். அவன் சிந்திக்கச் சிந்திக்க, சமுதாயத்தின் போலித்தனங்களும் அவற்றிற்குரிய தீர்வுகளும் மிகுந்த அர்த்தச் செறிவோடு அவனுக்குப் புலனாவதுபோல் அவனுக்குத் தோன்றுகிறது. இரண்டாம் பாகத்தில் இளமையான நிலவறை மனிதன் ஓயாமல் மிக வேகமாக அலைந்துகொண்டே இருக்கிறான். எப்படியேனும் தனது தாழ்ந்த நிலையைவிட்டு மற்றவர்கள் மதிக்கும் மனிதனாக மாற வேண்டும் என்று தவிக்கிறான். ஆனால் சமுதாயத்தின் அனைத்து விதிகளையும் நிபந்தனைகளையும் எப்படியேனும் நிறைவேற்றி, தான் இப்போது இருப்பதைவிட உயர்ந்த படிநிலையை வெளிப்புறத் தோற்றத்தின் மூலமாகவோ, நட்பின் மூலமாகவோ காதலின் மூலமாகவோ எட்டிப் பிடிக்கும் அவனுடைய ஆசை தொடர்ந்து தோற்றுக்கொண்டே வருகிறது. பதினெட்டாவது நூற்றாண்டில் ரஷ்யாவை ஆண்ட மகா பீட்டர் என்று அழைக்கப்படும் சக்கரவர்த்தி, ரஷ்ய அரசாங்கச் சேவையில் பதினான்கு படிநிலைகளை அறிமுகப்படுத்தியிருந்தார். ஒரு சில நபர்கள் உயர்ந்த பதவிகளுக்கு அவ்வப்போது முன்னேறியது உண்மைதான் என்றாலும், சர்வ ரஷ்யச் சமுதாயத்தையும் வியாபித்திருந்த இப்படிநிலைகளும் ஒவ்வொரு படிநிலைக்கும் உரிய மரியாதைகளும் சடங்கு சம்பிரதாயங்களும் பெரும்பாலான ரஷ்யர்களைப் பொறுத்தமட்டில் உடைக்கவே முடியாத கனமான இரும்புச் சங்கிலிகளாகவே இருந்தன. 

இதை உணர்ந்தே குறுநாவலின் இறுதியில் லிஸா அவனை ஆறுதலாகத் தழுவிக்கொள்ளும்போது  நிலவறை மனிதன் தன் உண்மை நிலையை உணர்ந்துகொண்டு தன்னையும் அறியாமல் கதறி அழுதபடியே “அவர்கள் என்னை அப்படி இருக்க விடமாட்டார்கள்… நான் நல்லவனாக இருக்கவே முடியாது” என்று சொல்கிறான். 

இங்கே நல்லவன் என்பதற்கு நற்செய்கைகளைச் செய்பவன் என்று பொருள் அல்ல. ‘நிலவறைக் குறிப்புகள்’ குறுநாவலின் ஆரம்ப வரிகளோடு இந்த வார்த்தையைப் பொருத்திப் பார்க்கும்போது நிலவறை மனிதனின் வரையறைப்படி சமூகத்தால் வெறுக்கப்படுவதும் கவர்ச்சியில்லாததும் மோசமானது என்றால், சமூகத்தால் விரும்பப்படுவதும் சிலாகிக்கப்படுவதும் சமூகத்தைக் கவர்வதுமே நல்லது. அப்படிப் பார்க்கப்போனால் கவர்ச்சியில்லாத மத்தியதர வர்க்கத்துக்கும் கீழுள்ள நிலையில் இருக்கும் நிலவறை மனிதனும் லிஸாவும் ‘நல்லவர்களாகவே’ முடியாது. ஆனால் குடியிலும் விபச்சாரத்திலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் அவனுடைய பழைய பள்ளி நண்பர்கள் சமூக அந்தஸ்தினாலும், கவர்ச்சியினாலும் நல்லவர்களாகவே கருதப்படுகிறார்கள்.

மேலும், கவர்ச்சியில்லாத காரணத்தால் நிலவறை மனிதனைப் போன்ற விளிம்பு நிலையில் உள்ளவர்கள் எலிகளைப் போலவும் பூச்சிகளைப் போலவும் சாக்கடைகளுக்கும், சமுதாயத்தின் பார்வைபடாத நிலவறைகளுக்கும் தள்ளப்படுகிறார்கள். 

அதே நேரத்தில் நூலின் இரண்டு பாகங்களுக்கு இடையே, ரஷ்யாவில் 1840களுக்கும் 1860களுக்கும் இடையே நடந்த ஒரு தத்துவார்த்த நகர்வையும் தஸ்தாயேவ்ஸ்கி காட்டிவிடுகிறார். 1840களில் ரஷ்ய சமுதாயம் தனிமனித உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரொமாண்டிஸிசக் கருத்துகளுக்கு முதலிடம் தந்தது. ‘உயர்வானது, அழகானது’ என்ற இரு இலக்குகளே ரொமாண்டிஸத்தின் முழக்கமாக இருந்தன. நிலவறை மனிதனும் இந்த ரொமாண்டிஸிசச் சூழலுக்கு ஏற்ப, “வீட்டிலிருந்த நேரத்தை நான் பெரும்பாலும் வாசிப்பிலும், கனவு காண்பதிலும், சின்னச் சின்னக் கேளிக்கைகளிலும்” கழித்ததாகச் சொல்கிறான். அவன் எதை வாசித்தான் என்று வரும்போது கதையின் இடையிடையே ரொமாண்டிஸத்தின் முக்கியக் கவிஞர்களான பைரன், புஷ்கின், லெர்மொன்தோவ் ஆகியோரை வாசித்ததாகக் குறிப்பிடுகிறான். அதே சமயத்தில் ஜெர்மன் மெய்யியலில், அழகியலில் உன்னதவாதத்தைப் புகுத்திய காண்ட்டையும் ஷில்லரையும் அவன் வாசித்ததாகக் குறிப்புகள் வருகின்றன. 1840களில் வாழ்ந்த படித்த ரஷ்யர்கள் யாவரும் இந்த எழுத்தாளர்களை வாசித்ததற்கான சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன.

இளமையில் நிலவறை மனிதனும் இந்த ரொமாண்டிஸச வாசிப்பில் ஊறித் திளைத்தவனாகவே சித்தரிக்கப்படுகிறான். நூலின் இறுதியில் லிஸாவோடு அவன் உடலுறவு கொண்டுவிட்ட பிறகு அவளுக்கு அவன் போதனை செய்யும்போது லிஸா அவனை இடைமறித்து, “நீ பேசுவது புத்தகத்தில் வருவது போலவே இருக்கிறது” என்கிறாள்.

ஆனால் 1860களில் தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தச் சூழல் முற்றிலும் மாறிவிட்டிருந்தது. அறிவியலின் மூலமாகவும், கூட்டு முயற்சிகளாலும் சமுதாயத்தை முன்னேற்றுவதே தனிமனிதர்களின் தலையாயப் பணியென்று அப்போது பிரச்சாரம் தொடங்கியிருந்தது. 

‘நிலவறைக் குறிப்புகள்’ வெளிவருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னால் 1863ல் ‘என்ன செய்யப்பட வேண்டும்?’ என்ற தலைப்பில் இக்கருத்தினைப் பரப்பும் வகையில் நிகோலேய் காவ்ரிலோவிச் செர்நிசெவ்ஸ்கி என்பவர் ஒரு நாவலை எழுதியிருந்தார். அந்நாவல் அறிவியலாலும், தனிமனிதர்களின் அர்ப்பணிப்புள்ள உழைப்பாலும் ஆகாத காரியம் எதுவுமில்லை என்று போதித்தது. செர்நிசெவ்ஸ்கியின் நாவலின் தலைமைக் கதாபாத்திரம் பேசும் கீழ்க்கண்ட உரையாடல் நாவலின் சாராம்சத்தை அடக்கியிருந்தது:

“ஆமாம், நான் எப்போதும் எனக்கு எது விருப்பமோ அதைத்தான் செய்வேன். எனக்கு விருப்பமில்லாத ஒன்றை அடைவதற்காக நான் எதையும் விட்டுக்கொடுக்கவோ தியாகம் செய்யவோ மாட்டேன், மிக அற்ப விஷயத்தைக்கூட. மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் செயல்களைச் செய்வதுதான் என் விருப்பம். இதை நான் முழுமனதாக விரும்புகிறேன். இதிலேதான் என் மகிழ்ச்சியும் இருக்கிறது. என் இன்பம்! ஏ, நிலவறைப் பொந்துக்குள்ளே பதுங்கி இருப்பவர்களே! இது உங்கள் காதுக்குக் கேட்கிறதா?”

சோவியத் ரஷ்யாவின் நிறுவனரான லெனின், தன்னைப் புரட்சியாளனாக மாற்றியதில் செர்நிசெவ்ஸ்கியின் நாவல் பெரும் பங்கு வகித்தது என்று பிற்காலத்தில் சொல்லியிருக்கிறார்.

‘நிலவறைக் குறிப்புகளில்’ தஸ்தாயேவ்ஸ்கி தனது நிலவறை மனிதனின் வழியாக இந்த இரண்டு கோட்பாடுகளையும் விமர்சனம் செய்கிறார். வெறும் மனித உணர்வுகளின் உன்னதத்திற்கும், கற்பனைகளுக்கும், கனவுகளுக்கும் தன்னையே அர்ப்பணித்திருக்கும் ரொமாண்டிஸிசத்தால் மனிதனால் எந்தவிதமான சுய வெளிப்பாட்டையும் எய்த முடியாது என்பது நிலவறை மனிதனின் வாதம். வாசிப்பிலும், கனவுகளிலும் கற்பனைகளிலும், உணர்ச்சியின் வெளிப்பாடுகளாகத் திகழும் களியாட்டங்களாலும் ஆக்கப்பூர்வமான செயல்களை நடத்த முடியாது. 

நூலின் ஆரம்பத்தில் நிலவறை மனிதன், தான் இளம் வயதில் அரசாங்க அதிகாரியாக இருந்த நேரத்தில், தன்னிடம் கோரிக்கைகளைக் கொடுக்க வந்த ஆட்டுமந்தை போன்ற மக்களால் தனக்கு ஏற்பட்ட சலிப்பையும் எரிச்சலையும் சொல்லிவிட்டு அவர்களிடம் தான் எரிந்து விழுந்ததையும் விவரிக்கிறான். அவர்கள் கொண்டுவந்த பணிகளைச் செய்து முடிக்க கையூட்டு பெறாவிட்டாலும் அவர்களை மிகக் கேவலமாக நடத்தினானாம். அப்படி நடத்தியதால் தனக்கு ஏற்பட்ட உணர்வுக் கொந்தளிப்புகளைச் சொல்லிவிட்டு, அதனால் தான் மோசமானவன்தான் என்றும் அதற்காக வாசகர்களிடம் தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் சொல்கிறவன், திடீரென்று மாறி, தன் சுய இயலாமையை ஒப்புக்கொள்கிறான்:

“மோசமானவனா? அப்படி ஒன்றும் இல்லை, நான் எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. நான் கெட்டவனாகவும் இல்லை, நல்லவனாகவும் இல்லை. சமூக விரோதியாகவும் நான் இல்லை, நேர்மையாளனாகவும் இல்லை. கதாநாயகனாகவும் நான் இல்லை, பூச்சியாகவும் நான் இல்லை.”

ரொமாண்டிச கோட்பாட்டின்மீது நிலவறை மனிதன் வைக்கும் விமர்சனம், 1860களில் வயது முதிர்ந்தவனாக அவன் பேசும் வேளையில், வாசிப்புக்கும் நீள்கிறது. இளவயதில் வாசிப்பில் மூழ்கியிருந்தவன் பின்னர் ‘இலக்கியம்’ என்பதையே தனக்குத் தெரிந்த மிகக் கடுமையான வசைச்சொல் என்று கூறுகிறான். இங்கு நிலவறை மனிதன் பேசுவது தஸ்தாயேவ்ஸ்கியின் கருத்துகளையே. 1862ல் ஐரோப்பாவிற்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொண்டு திரும்பிய தஸ்தாயேவ்ஸ்கி, மேற்கு ஐரோப்பாவின் மெய்யியல் தத்துவங்களின் சாரமின்மையைக் கண்டு அதிர்ந்தார். பெரும்பாலான படித்த ரஷ்யர்கள் இதே தத்துவங்களிடம் கட்டுண்டு கிடப்பதைப் பற்றி 1863ல் தனது ‘விரெம்யா’ சஞ்சிகையில் இப்படி எழுதினார்:

“நம்மிடையே இருக்கும் வளர்ச்சி, அறிவியல், கலை, பரோபகாரம், மனிதத் தன்மை, எல்லாமும், எல்லாமும் அங்கிருந்துதான் – அந்த அதியற்புதமான புண்ணிய பூமியிலிருந்துதான் – நமக்கு வந்திருக்கிறது! நம் மொத்த வாழ்க்கையும், குழந்தைப் பருவத்திலிருந்தே, ஐரோப்பியப் பாணியிலேயே அமைக்கப்படுகிறது.”

ஆனால் ரொமாண்டிஸிசக் கற்பனைக்கும் மனிதனைப் பலவீனமாக்கும் உணர்ச்சிப் பெருக்குக்கும் செர்நிசெவ்ஸ்கியின் அறிவியல் சார்ந்த கூட்டு முயற்சியும் உழைப்பும்தான் தீர்வா என்றால் அதுவும் நிலவறை மனிதனுக்கு உவப்பானதாக இல்லை. தனிமனிதர்களின் பலவித சுய வெளிப்பாடுகளையும், தனித்துவங்களையும் அடக்குமுறையால் நிராகரித்து, மனிதர்கள் எல்லோரையும் சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கும் வெறும் கருவிகளாக மாற்றுவது மிகக் கொடூரமான சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்று தஸ்தாயேவ்ஸ்கி நம்பினார். 

செர்நிசெவ்ஸ்கி மனிதர்களின் கூட்டு முயற்சிக்கான மிக உன்னதக் குறியீடாக, லண்டனில் 1851ம் ஆண்டு நடந்த உலகக் கண்காட்சியில் இரும்பாலும் கண்ணாடிகளாலும் கட்டப்பட்ட படிக மாளிகையைத் தனது நாவலில் குறிப்பிட்டிருந்தார். தனி மனிதர்களின் சுய வெளிப்பாட்டினை அடக்கி அவர்களை வெறும் உற்பத்திக் கருவிகளாக்கும் போக்கை நிராகரிக்கும் வகையில் நிலவறை மனிதன் இந்தப் படிக மாளிகையை ‘கடவுளுக்கு எதிராக இருக்கும் சாத்தானின் வெற்றி’ என்றும் ‘பயங்கரமான கட்டுமானம்’ என்றும், ‘எறும்புப் புற்றின் சாயல்’ என்றும் விவரிக்கிறான். ‘நிலவறைக் குறிப்புகளுக்கு’ ஏறத்தாழ இருபது வருடங்களுக்குப் பின் தஸ்தாயேவ்ஸ்கி எழுதிய ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலிலும் லண்டன் படிக மாளிகையின் சாத்தானிய தன்மை குறித்து, மார்க்க விசாரணை அதிகாரி ஒருவர் இயேசு கிறிஸ்துவைக் குறுக்கு விசாரணை செய்யும் மிகப் புகழ்பெற்ற பகுதி ஒன்றில், விவரிக்கப்படுகிறது.

*

எல்லா நேரத்திலும் சுதந்திரமாக, சுயச் சித்தத்துடன் செயல்படுவது இருத்தலியல் கோட்பாட்டில் தலையாயதாகும். இருத்தலியலின் தந்தை என்று அறியப்படும் சார்த்தரிடம் ‘ஒரு ஜெர்மானிய அதிகாரி நமது நெற்றிப்பொட்டில் தனது துப்பாக்கியை வைத்துச் சுடப்போகும் நேரத்தில் ஒரு இருத்தலியல்வாதி எப்படிச் சுதந்திரமாகச் செயல்பட முடியும்?” என்று இரண்டாம் உலகப் போருக்குப் பின் கேட்கப்பட்டது.

அதற்கு சார்த்தர் கொஞ்சமும் பதற்றப்படாமல் ‘இருத்தலியல்வாதி உயிர்ப்பிச்சை கேட்காமல் சாக முடிவெடுத்தால் போதும்” என்றாராம். 

அதாவது தன்னை அடிமைப்படுத்த வரும் ஒருவனிடம், தன்னைக் கொல்லும் உரிமையை விட்டுக்கொடுக்காமல், தானே சாகத் தீர்மானிப்பதன் மூலம் இருத்தலியல்வாதி தன்னைக் கொல்ல வரும் எதிரியைக்கூட தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் கருவியாக்கிக் கொள்கிறான்.

நிலவறை மனிதனும் தனது நோயைக் குணப்படுத்துவதற்காகவும் பல் வலிக்காகவும் மருத்துவரிடம் போகாத வரையிலும் தனது பலவீனங்களுக்காக மற்றவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்காதவரையிலும் தன்னை நசுக்க யத்தனிக்கும் சமூகப் படிநிலைகள், கட்டுப்பாடுகளின் மத்தியிலும் தனது தனிமனிதச் சுதந்திரத்தையும் தன்னையே வெளிப்படுத்திக்கொள்ளும் உரிமையையும் தக்கவைத்துக் கொள்கிறான். 

இது அவனது இருப்புக்குச் சமுதாயக் கட்டுப்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் விடும் அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் எதிராக நின்று தாக்குப்பிடிக்க அவனுக்கு உதவுகிறது.

This image has an empty alt attribute; its file name is Christ-in-the-Gethsemane-Garden.jpg

எவ்விதமான இக்கட்டான சூழ்நிலையிலும் தனி மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தையும் தனி மனித உரிமைகளையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதும், இந்த உரிமைகளைத் தன்னைத் தானே துன்புறுத்துவதன் வழியாகத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றால் அதுவும் நியாயமே என்பதும் நிலவறை மனிதனின் வழியாகத் தஸ்தாயேவ்ஸ்கி நம் முன்னால் எடுத்து வைக்கும் கருத்து.

இந்தக் கருத்து தஸ்தாயேவ்ஸ்கியின் சமகாலத்தவரான நீட்சேயின் ‘அதீத மனிதன்’ கோட்பாட்டிற்கு ஒப்பானதுதான். நீட்சேயின் அதீத மனிதன் சமூகத்தின் கட்டுப்பாடுகளாலும் அழுத்தங்களாலும் உருக்குலைந்து போகாமல், சமுதாயத்தின் மீது தனது விருப்பத்தைச் செலுத்தி அதை மாற்றுகிறான். 

ஆனால் ஒரு சிறு திருத்தம். நீட்சே இப்படிப்பட்ட அதீத மனிதர்கள் ஒரு தலைமுறைக்கு ஓரிருவரே தோன்றுவார்கள் என்று நம்பினார்.

ஆனால் ஆண்டவர் தனது ரூபமாகவும் சாயலாகவும் மனிதனைப் படைத்தார் என்ற கிறிஸ்துவத் தத்துவத்தில் ஊறிய தஸ்தாயேவ்ஸ்கி அப்படிக் கருதவில்லை. கடவுளின் படைப்பில் நம்மில் ஒவ்வொருவருமே அதீத மனிதர்கள்தான் என்பது தஸ்தாயேவ்ஸ்கியின் நிலைப்பாடு. 

இதே கருத்தைத்தான் ‘நிலவறைக் குறிப்புகளுக்குப்’ பிறகு எழுதப்பட்ட அவருடைய நாவல்களில் வரும் கதாபாத்திரங்களான ரஸ்கோல்நிகாவ், மிஷ்கின், கரமசோவ் சகோதரர்கள் என்று பலரும் பல்வேறு வகைகளில் வலியுறுத்தப் போகிறார்கள்.

இந்த இலக்கிய முயற்சிக்கு அடிநாதமாகவும் ஆரம்பப் புள்ளியாகவும் ‘நிலவறைக் குறிப்புகள்’ குறுநாவல் இருந்தது.

1 comment

Barathi April 26, 2021 - 12:20 pm

Lovely..! Both the perception and the perspectives..!

Comments are closed.