அப்பா தனது சட்டைக்காலரை ஒருமுறை தூக்கிவிட்டபடி ‘உஸ்ஸ்ஸ்’ என்றார். பளீரிட்ட வெண்மையான வேட்டி சட்டைக்குள் அவரது உடலும் முகமும் வழக்கமான துருத்தலோடிருந்தன. இயல்பாகச் செய்வதைப் போல, கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை சட்டை விளிம்புகளுக்குள்ளும், விரலிலிருந்த நவரத்தினக்கல் மோதிரத்தின் முகப்பை உள்ளங்கைக்குள் திரும்பியிருக்கும்படியும் மாற்றிக்கொண்டார். முகத்தில் அவர் கொண்டுவர நினைத்திருந்த சாதாரணத்தன்மை மெல்ல மெல்லப் பரவுவதை உணர்ந்தேன். கையிலிருந்த பொன்னிறச் சதுரமிட்ட வரவேற்பு அழைப்பிதழ்களின் பெயர்களைச் சரிபார்த்தேன். நேரம் போய்க்கொண்டிருந்தது.

“போலாம். சர்க்யூட் ஹவுஸ்ல ஜெகநாதன்கிட்ட சொல்லிருக்கேன். முன்னபின்னனாலும் சர்க்யூட் ஹவுஸ்ல போய் பார்த்துடலாம்.”

நான் ஒன்றும் பேசாமல் நின்றிருந்தேன். அப்பாவால் எதுவும் முடியும்.

வெளியே நாங்கள் வந்திருந்த செர்ரி நிறத்துக் காரை டிரைவர் மேலும் மேலும் பழமாக மாற்றிவிடுபவனைப் போலத் துடைத்து மெருகேற்றிக்கொண்டிருந்தான். அருகிலேயே அந்த வீட்டுக்காரர்கள் உபயோகப்படுத்துகிற பிஸ்தா நிற பியட் கார் மெழுகு பொம்மையைப் போல் நின்றிருக்க, அதன் வயசாளியான டிரைவர் அருகேயிருந்த பூந்தொட்டியின் விளிம்பில் சாய்ந்து நின்று பீடி புகைத்தவாறே எங்களது காரையும் டிரைவரையும் பார்த்தபடியிருந்தான்.

ராமபவனம் எனக் கேட்டால் தேனியில் யாருக்கும் தெரியாது. சாரட் வண்டி வீடு என்றால் ஆட்டோக்காரன் முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு கூட்டி வருவான். யானை உயர காம்பவுண்டுக்குள், நூறாண்டு வயசான மரங்களுக்கு நடுவே, தேக்கினாலும் மொசைக்கினாலும் செதுக்கப்பட்ட இந்த வீட்டிற்குத்தான் முதன்முதலில் மின்சாரம் வந்து, குண்டு பல்பு எரிவதைப் பார்ப்பதற்கு எல்லோரும் வண்டி கட்டி வந்திருந்தனர் ஒரு காலத்தில். ராமவிலாஸ் என்கின்ற பெயருக்குப் பின்னே உங்களுக்குத் தெரிந்த எந்த வியாபாரத்தையும் பின்னிணைப்பாகப் போட்டுக்கொண்டு தேனி எனத் தந்தி தட்டினால் மூன்றாவது நாள் உங்களுக்கு விலை நிலவரப் பட்டியல் வந்துவிடும் என்பார்கள். பெருங்காட்டிற்கு நடுவே பாய்ந்துகொண்டிருக்கும் ஒற்றைப் பேராற்றைப் போல, இங்கே பணம் என்பது நுழைகின்ற எல்லா வழிகளிலும் ராமவிலாஸ் மட்டுமே இருந்தது. 

அது ஆகிப்போயிற்று நாற்பது வருடங்கள். இப்போது இது வெறும் ராமபவனம் மட்டுமே. 

வாசலில் சைக்கிள் செயினை ரிவர்ஸில் சுற்றியபடி யாரோ வேகம் குறைத்து வருகின்ற சப்தம் கேட்டது. அப்பா, “புகழேந்தி அண்ணே” என்றார் வாட்சைப் பார்த்தபடி.

கையில் நான்காக எட்டாக மடிக்கப்பட்ட மஞ்சள்பையை நோட்டைப் போலப் பிடித்தபடி உள்ளே வந்த புகழேந்தி அண்ணனுக்கு அப்பாவைப் பார்த்தவுடன் கண்களில் ஒரு பிரகாசம். முழுக்க வெண்மையான தலைமுடியை உள்ளங்கையில் ஒதுக்கியபடி, “வா..வா. தன்ராஜு… ஏது?” எனத் திருத்தமாகச் சிரித்தார்.

அப்பா பதிலுக்கு நமஸ்கரித்தபடி அரைகுறையாக எழுந்து மீண்டும் அமர்ந்தவாறே, “நாலாவது யூனிட்டு. அதான் மொதலாளிகிட்ட ஒரு ஆசீர்வாதம் கேட்டுக்கலாம்னு” என்றார்.

அளவாகத் தலையாட்டிக் கேட்டுக்கொண்ட புகழேந்தி அண்ணன், “என்னடா புதுசா? என்னமோ கேட்டுக்கிட்டு செய்யறவன் கணக்கா? எட்டடி இல்ல, எம்பதடி பாய்ஞ்சவன் இல்ல நீ” என்றவாறே என்னைப் பார்த்து, “தெரியுமா” எனும் விதமாகச் சிரித்தார். 

எவ்வளவு இடங்களில் நான் பார்த்த சிரிப்பு இது. அப்பாவால் இன்னமும் மொடமொடப்பான ஒரு வெள்ளை நிறச் சட்டைக்குள் முழுமையாகத் தன்னை நுழைத்துக் கொள்ளமுடியாமல் திணறச் செய்கின்ற சிரிப்பு. அப்பாவைப் பார்த்தேன். விஷங்களை ஏற்கும் போதெல்லாம் அவரது கண்களில் தோன்றும் வன்மமும் உதட்டில் உறைகின்ற சிரிப்பும் மீண்டும் வந்திருந்தது.

ராமவிலாஸின் எண்ணற்ற வணிகங்களிலொன்றில் ஒரு எளிய சிறுவனாக நுழைந்து, அந்தப் பேராற்றின் இழுவிசையை மீறி, தன்னந்தனியாகக் கடலை அடைந்த வலிய மீனைப் போல, அப்பா தனி நபராக வணிகத்தில் ஜெயித்திருந்தார். அவர் மோதியதும், உடைத்து எறிந்து முன்னேறியதுமான பாதையில் புகழேந்தி போன்றவர்களின் சிறுமையே அதிகமிருந்தது. அப்பா தனக்கெதிரான இந்தச் சிறுமைகளை ஒருபோதும் நசுக்குவதில்லை. அவரால் ஒரு கூரிய பதில்மூலம் இவர்களின் தொண்டையைக் கிழிக்க முடியும். ஆனால் அவர் மூட்டைப் பூச்சிகளை, தங்களை மறந்து இரத்தம் குடித்தபடி உறங்கச் செய்கின்ற கலையைப் பயின்றவர் போல தனக்கெதிரான இந்தச் சிறுமையாளர்களை அப்படியே காலம் முழுவதும் தன்னைப்பற்றி எண்ணிக்கொண்டும் புலம்பிக்கொண்டும் எளிய குத்திக் காட்டல்களில் திருப்தியடைந்து நின்றுவிட்டிருக்கிற எளிய உயிரிகளாய் மிச்சமாக்கி விட்டிருந்தார். 

முதன்முதலில் வியாபாரம் செய்யத் துவங்கிய புதிதில் கிராமங்களில் வாங்கிய சரக்குகளைப் பிடிப்பதற்கு ஒரு சாக்கு வாங்குவதற்குக்கூட அவர் அவ்வளவு போராட வேண்டியிருந்தது. எவ்வளவு கேலிகள்! ஏறத்தாழ தாசிதான்.

”நீ யாருன்னே தெரியாது. உன்னை நம்பி எப்பிடி..?” எனத் திருடனைப் போல சந்தேகமாய்ப் பார்க்கின்ற சம்சாரிகளின் கண்களில் ஒரு ஸ்நேகம் கலந்த சிரிப்பினை உருவாக்குவதற்கு மழை பெய்கின்ற இரவுகளில் எத்தனை கிராமங்களுக்குத் தூக்கமின்றி அலைந்திருக்கிறார். முழுவதும் கசங்கிய மனிதராக அவர் வீடு திரும்புகின்ற நள்ளிரவில் ஒரு சொம்புத் தண்ணீரை அவர்முன் வைத்துவிட்டு அவரது மனக்குமுறலை எப்படி சமன்படுத்துவதெனத் தெரியாமல் எத்தனை இரவுகளில் தூக்கமிழந்த முகத்தோடு அம்மா எதிரே அமர்ந்திருக்கிறாள்.

“யானைக்கு பாகன்தான். ஆனா, யானையோட கால் உயரம்கூட நாம கிடையாதுங்கிறது பாகனோட மனசுக்குள்ள எப்பவும் இருக்கணும்.”

சிறிய சிறிய நஷ்டங்களைக் கணக்குப் பார்த்தபடி பேட்டைத் திட்டில் அப்பா கணக்கெழுதிக்கொண்டிருக்கும் போது யாராவது மூடையைத் தைத்தபடி கூறுவார்கள். அப்பா எல்லாவற்றையும் மென்று தின்றார். இந்தக் கசப்பை, ஒரு கட்டத்தில் இவனைத் தடுக்க முடியாது என எழுந்த பெருமூச்சை, பிறகு தனது அசாதாரணமான இராட்சத வளர்ச்சியில் அவர்களது இரத்தம்வரை எல்லாவற்றையும்.

ராமவிலாஸ் எனும் பெரிய மரத்திலிருந்த சின்னஞ்சிறு விதையை அப்பா இருபது வருடங்கள் அங்கே உழைத்து நசுங்கிக் கண்டுபிடித்தார். மிகச்சிறிய விதை. அப்போதுதான் சர்க்கரை நோய் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைதூக்கிக்கொண்டிருந்த பருவம். சிறுதானியங்களுக்கு மதிப்பே இல்லாத அல்லது மதிப்பு வைக்காத பருவம் அது. மழைக்கும் வெயிலுக்கும் வெளியே கிடக்கும் கல் உப்பு மூடைக்கும், வரகரிசி சிப்பத்திற்கும் எந்த இடத்திலும் வரவேற்பே கிடைத்ததில்லை. அப்பா சர்க்கரை வியாதியென்னும் சிறிய விதையைக் கண்டுபிடித்தார். கூடவே சிறுதானியங்களெனும் சீந்துவாரற்ற ஒரு அற்புத விளக்கையும். ராமவிலாஸின் எண்ணற்ற உற்பத்திப் பொருட்களுக்கு இடையே இந்தச் சிறுதானியங்களும் இருந்தன. ஆனால் அங்கே அது பத்தோடு பதினொன்று. அப்பா இந்த இருபது வருடங்களில் அதனை அரசனாக்கிக் காட்டினார். 

ராமவிலாஸின் சொத்துகளிலொன்றைத் திருடிவந்துவிட்டவரைப் போலவே கொஞ்ச நாட்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரு சிறிய வைக்கோல் நுனியில் பற்ற வைத்துக்கொண்டு வந்த நெருப்பில் அப்பா ஒரு மலையையே பற்றி எரிய வைத்தார், தனியொரு மனிதனாக.

பியட் கார் டிரைவர் சட்டென பீடியை நசுக்கிவிட்டு, காலுக்கிடையே சொருகியிருந்த வேட்டியைத் தழைத்தபடி நிமிர்ந்து நின்றான். வீட்டிற்குள்ளிருந்து காலடியோசையும் மொசைக்கின் நீர்ப்படலத்தின் மீது நிழலுருவமும் எழுந்து வந்தது. ஒரு மரியாதைக்குரிய அமைதி அங்கே நிறைந்தது. அப்பா எழுந்துகொண்டார். உடலில் ஒரு சிறிய கூனலோடு தன்னை இளக்கி நின்றார்.

நன்கு ஷேவ் செய்த முகமும் கதர் இழை பனியனும் தோளில் வெள்ளைத் துண்டுமாக பொன்கொண்ட பெருமாள் வந்தார். ஒருகாலத்தில் திடமேறி இப்போது கனியத் துவங்கிவிட்ட செந்நிற உடலெங்கும் மாம்பழத் துண்டுகளாக சதைகள் தளரத்தொடங்கியிருந்தன. நன்கு நரைத்திருந்த மயிர்களில் அழகான வாத்து மினுப்பு பிரகாசித்தது. கையில் பாதி படித்தபடி மடிக்கப்பட்டிருந்த ஹிண்டு. 

“வா வா தன்ராஜ். ஏன் இங்கியே? உள்ளார வந்திருக்கலாம்லடா?” என்றபடி சோபாவின் ஒரு முனையில் உட்கார்ந்தார். நான் மாப்பா என்றபடி அவரது பாதத்தைத் தொட்டு வணங்கிக்கொண்டேன். பேரிச்சம்பழத்தின் கனிவுடனிருந்த விரல்கள் எனது தலைமுடியை அலைந்து ஆசிகூறி விலகின. அப்பா இன்னமும் இறுக்கமாக, வைத்த வணக்கத்தைப் பிரிக்காத கரங்களுடன் நின்றார். மாப்பா என்னை ஆசீர்வதிக்கும்போது அவர் கண்களில் ஒரு தளும்பிய மகிழ்ச்சி கடந்திருக்கும் என உணர்ந்தேன். ராமவிலாஸின் பார்வைக்கே தங்களைத் தழைத்து மறைத்துக்கொண்ட அதனது வேலைக்காரனின் மகன் இன்று அவரிடம் தைரியமாக முன்னால் வந்து ஆசி வாங்குகிறான். யானையின் காலருகே நிற்கின்ற பாகன் செய்கின்ற புன்னகை அது.

மாப்பா என்பது ஒருவகையில் அம்மாவினுடைய அப்பாவை அழைக்கும் சொல். அதை அவ்வளவு சீக்கிரம் உறவற்ற ஒருவரிடம் யாரும் கூறுவதில்லை. அப்படி கூறுகிறவர்களின் தரத்தினைப் பரிசீலிக்காமல் யாரும் அதனைக் கௌரவமாக ஏற்றுக்கொள்வதுமில்லை. ஒருவகையில் அது அந்தஸ்தை சமன் செய்கின்ற வார்த்தையைப் போல.

எனது கையிலிருந்த அழைப்பிதழை அப்பாவிடம் தந்தேன். அதை அவர் பள்ளிச் சிறுவன் சிலேட்டை நீட்டுவதைப் போன்ற ஒரு அறியாமை நிறைந்த முகத்துடன் மாப்பாவிடம் தந்தார். உள்ளிருந்து நைந்து போன செக் புக்குகளில் சில்லறைச் செலவினங்களை நிரப்பிவிட்டு அதில் கையெழுத்து வாங்குவதற்காக வெளியே வந்த புகழேந்தி மாப்பாவின் தோளுக்கருகே குனிந்து எதையோ முணுமுணுத்தபடி செக் புக்கை நீட்டினார். அதனை வாங்கி கையெழுத்திட்டவாறே மாப்பா அப்பாவைப் பார்த்தார்.

“ப்ச். என்ன இன்னமும் நின்னுகிட்டு? உட்காருடா.”

சோபாவின் எதிர்முனை காலியாக இருந்தது. அப்பா அதன் நுனியில் தன்னை ஒட்டிக்கொண்டார். புகழேந்தியின் முகத்தில் அசாதாரணமான ஒரு புன்னகை கடந்து மறைந்தது. இலேசாகத் திரை விலக்கிப் பார்த்தால் ஆங்காரமாக நீண்ட பற்கள் தெரிகின்ற புன்னகை அது.

“பாளையத்திலயா? பவர் ஸ்டேஷன் குடுக்கறானுகளா?” என்றபடி அழைப்பிதழை மடியில் வைத்துக்கொண்டார். அப்பா மெல்ல தலையசைத்தார். ஆனால் அந்த பவர் ஸ்டேஷனை மில் காம்பவுண்டிற்குள் கொண்டுவருவதற்கு அவர் செய்த மல்லுக்கட்டல்களை நானே நேரில் கண்டிருக்கிறேன்.

“நம்ம குடோன் ஒன்னு அங்க ரொம்ப நாளா கெடக்குல்ல?”

“ஆமா. அது பீரியட் மாறினபிறவு கவர்மெண்ட் வாடகை சரியா தராம நாம லாக் அடிச்சிருக்கோமே?”

“ம். நல்ல விஷயம்டா தன்ராஜ். என்ன குடிக்கற?”

“இருக்கட்டும்” என அப்பா சொல்லாகக் கூறவில்லை. பவ்யமான சிரிப்பாகக் குழைந்தார். அப்பாவின் இந்தச் சிரிப்பிற்குப் பின்னாலும் ஒரு விலங்கு நின்றிருந்தது. அது பொன்கொண்ட பெருமாளின் சிறிய அதிருப்திக்காகவோ எரிச்சலுக்காகவோ முகச்சுழிப்பிற்காகவோ காத்து நின்றது. ஆனால் பத்திரிகையை வாங்கியது முதல் மாப்பாவின் முகத்தில் மென்மை ஒரு ஊதுவத்தியைப் போல அமைதியாகக் கமழ்ந்துகொண்டே இருந்தது. 

அப்பா இந்தத் தொழிலைத் தொடங்கிய பிறகு, வெகு சீக்கிரமே ராமவிலாஸ் பதித்திருந்த எல்லைகளைக் கடந்துசென்றார். இப்போது நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் உயரங்கள் ராமவிலாஸின் நான்காவது பரம்பரை வந்தாலும் எட்ட முடியாத உச்சம். அப்பா இதுவரை கடந்து வந்திருந்த பாதையை ஒருபோதும் திரும்பி நின்று இரசித்ததில்லை. ஆனால் இந்த முறை அவருக்கு ஒரு சீண்டல் தேவையாயிருந்தது. அதனால்தான் இந்த அழைப்பிதழ் வைபவம் எல்லாம்.

“வடக்கே இருப்பவனைவிட கம்மியா விக்கிறதுக்கு தவிடை எண்ணெய்யாக்கி காசாக்கின பாரு. அது நல்ல மூவ்டா” என்றார் மாப்பா.

குவித்துப் போட்டிருக்கும் திணையரிசித் தவிடுகளிலிருந்து விடிவதற்குள் கணுக்கால் உயரத்திற்கு ஊளை நாற்றமிக்க எண்ணெய்ப்படலம் கசிந்து தேங்கிவிடும். அதை என்ன செய்வதென்றே தெரியாமல் சாக்கடைக்குத் திருப்பிவிடுவார்கள். அதனை சிற்சில மறுசுழற்சிகளில் அப்பா உபயோகிக்கத் தகுந்த ஒரு எண்ணெயாக மாற்றியிருந்தார். அதுவரை தவிடு என்பது ஒரு தானியத்தை அரிசியாக அரைக்கும்போது உருவாகி வருகின்ற இழப்பு என்பது நீங்கி, அந்தத் தானியத்தின் மற்றுமொரு விலைப்பெறுமானமுள்ள உபபொருள் என மாறியது. அதனை எப்படி உருவாக்குகிறோம், எங்கே விற்கிறோம் என யாராலும் அறிய முடியாது. இந்த ஒரு கண்ணியில் இந்தத் தொழிலிலிருக்கும் எல்லா விலாசங்களும் வீழ்ந்து போயின. நாங்கள் குறைக்கின்ற விலையை அந்தத் தவிட்டெண்ணெய் ஈடு கட்டியது.

வீட்டிற்குள்ளிருந்து யாரோ – அனேகமாக பெண்ணின் சரசரப்பு – வருகையொலி கேட்டது. நினைத்தது போலவே கல்யாணி வந்தாள். அவள் கையிலிருந்த சிறிய சாப்பாட்டுக் கூடையை பியட் டிரைவர் பவ்யமாகப் பெற்றுக்கொண்டு காரை நோக்கி நடந்தான். அவளிடமிருந்து வருகின்ற மெலிதான சாண்டல் மணத்தை நுகர்ந்தபடி நான் புன்னகைத்தேன். சிறிய பார்வைத் தீண்டல்கள்தான். ஆனால் ஆழங்களிலிருந்தன. ராமவிலாஸ் டிரஸ்டின் கீழ் இயங்குகின்ற பள்ளி ஒன்றிற்கு அவள் வைஸ் பிரின்சிபலாக இருந்தாள். முன்பு முழுக்க முழுக்க ராமவிலாஸின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பள்ளி இப்போது ஜாதி சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் போய்விட்டது. கல்யாணிக்கும் சம்பளம் போட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன். எவ்வளவு பெரிய குலப்பெருமை வீழ்ச்சி அது. பள்ளியை விரிவாக்கம் செய்வதற்கான நன்கொடை திரட்டலின் போது என்னிடம் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்துக் கேட்டாள். பத்து கணிணிக்கான செலவை முன்வைத்தாள். நான் ஆய்வுக்கூடத்திற்கான முழுத்தொகையையும் எங்களது மில் சார்பாக கூடுதலாக ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தேன். பேசி முடித்தபிறகு ‘வச்சிடவா?” என்றாள். “ம்” என்றேன். அவ்வளவு சிறிய எழுத்துக்குள் அவள் மட்டுமே உணர முடிகிற சின்னஞ்சிறிய காதல் இருந்தது.

எங்களைப் பார்த்து ஒரு கணம் அதிசயித்தவள் பிறகு பொதுவாக நமஸ்கரித்துவிட்டு இலேசான புன்னகையுடன் காரை நோக்கிச் சென்றாள்.

“பிறகென்னடா? மளமளன்னு வேலையை ஆரம்பிடா. கண்டிப்பா நான் வரேன்” என்றவாறே அழைப்பிதழை சோபாவின் மீது வைத்துவிட்டு குழந்தையின் சிரிப்புடன் அப்பாவைப் பார்த்தார் மாப்பா.

“பின்ன! விட்டுருவானா? எத்தினி பேர் காலை உடைச்சிட்டு ஜம்முனு தனியாளா ஓடிட்டிருக்கான்.”

புகழேந்தி சிரித்தபடி சொல்லியவாறே செக்கில் விவரங்களைச் சரிபார்த்தார். அப்பாவின் முகத்தில் இப்போது மாமிசத்தன்மையிலான மகிழ்ச்சியின் கீற்றொன்று தென்பட்டது.

மாப்பாவின் முகத்தில் இப்போது மகத்தான இறந்த காலத்தின் சோர்வு.

“யாவாரம்னா போர்தான. காலென்ன தலை என்ன? பள்ளத்துக்குப் பக்கத்துலதான மேடுன்னு ஒன்னு உருவாகுது” என்றார். குழந்தையான சிரிப்பின் வெளிச்சம் சின்னச் சின்னச் சுடர்களாய் குறைந்துகொண்டிருக்க, “நல்ல தொழிலாளிக்கு திறமை எவ்வளவு முக்கியமோ அதை அவனோட மூளைக்குச் செல்லவிடாம தடுக்கிற சூட்சுமம் முதலாளிக்கு முக்கியம்னு அப்பா சொல்வாரு.” 

அப்பாவின் மாமிச மகிழ்ச்சி இப்போது மேலும் எச்சில் உமிழ்ந்தபடி அந்த வார்த்தைகளை உதிர்க்கின்ற இயலாமையான மனதை நெருங்கியது. புகழேந்தி வெளிப்படையான வன்மமிக்க கண்களை அப்போது அவரறியாமலே கொண்டுவந்திருந்தார்.

நீண்ட போருக்குப் பிறகு எஞ்சியிருந்த இரண்டு எதிரெதிர் சிப்பாய்களைப் போல அப்பாவும் புகழேந்தியும் மிஞ்சியிருக்க மாப்பா அசந்த குரலில், “நங்கவல்லி என்ன பண்றா உள்ளார? அம்மா கிளம்பிட்டான்னு சொல்லியாச்சா?” என்றார்.

கல்யாணி ஏறிக்கொண்ட பியட் கார் முன்னும் பின்னுமாய் தன்னை அசைத்துக் கிளம்புவதற்கான பிரயத்தனத்தில் இருக்க, வீட்டிற்குள்ளிருந்து தனது எலும்பு துருத்திய உடலும் சோடாபுட்டி கண்ணாடியுமாக நங்கவல்லி வேலைக்கார ஆச்சியின் தோளைப் பற்றியவாறே வராண்டாவிற்கு வந்தாள். வளைந்துவிட்ட கால்கள் இரண்டும் விநோத எத்தனிப்புகளுடன் எட்டு வைத்தன. நங்கவல்லி இன்னும் குளித்திருக்கவில்லை போல. சோர்வான முகமும் பிசிறு பறக்கின்ற முன்சிகை நெற்றியுமாக பியட் காரின் கண்ணாடி ஜன்னலில் கையசைத்த கல்யாணியின் முகத்தைப் பார்த்து உயிரற்ற புன்னகையுடன் கையசைத்தாள். கல்யாணி பதிலுக்கு கையசைத்தபடி ஒரே ஒரு கணம் என்னைப் பார்த்துவிட்டுச் சென்றாள்.

கல்யாணியின் கணவன், நங்கவல்லிக்கு மூன்று வயதாகியபோது அவளுக்கு நேர்ந்த இந்த உடல்குறைபாட்டை முன்வைத்து விலகிச் சென்றவன் அதன்பிறகு மீண்டும் திரும்பவேயில்லை. நங்கவல்லி இலேசாகத் தன்னைக் குறுக்கிக்கொண்டு வராண்டாவின் இளவெயிலில் அவளுக்கெனத் தயாரித்திருந்த சிறிய மர ஸ்டூலில் எங்களைப் பார்த்தபடி அமர்ந்தாள்.

மாப்பா தனது கையை நீட்டி, “பட்டுக்குட்டிக்கு இன்னும் விடியலையா?” என்றார்.

நங்கவல்லி அதே சோர்வுடன் புன்னகைத்தாள். “நீ ஏன் நேத்து நான் தூங்குனதும் ரூமைவிட்டு சொல்லாமப் போன?” நோய்மையின் வெண்மைபடிந்த உதடுகளை அளவாகப் பிரித்தபடி கேட்டாள்.

“தாத்தாக்கு மாத்திரை போடற நேரம்டா. போட்டுட்டு ஒரு நிமிசம் படிச்சேனா.. தூக்கம் சொக்கி விழுந்திட்டேன்.”

நங்கவல்லி அதைப் பொருட்படுத்தாமல் எங்களைப் பார்த்தாள். இயல்பாக அவளைப் பார்த்துச் சிரித்தேன். அவள் எதிர்கொண்ட திடுக்கிடலற்ற முதல் அறிமுகப் பார்வையாயிருக்கும் அது. அப்பாவைப் பார்த்தாள். சிரிப்பதா கை குவித்து வணங்குவதா எனத் தெரியாத குறுகலான பாவனைக்குள் சங்கடமாகப் புன்னகைத்தாள். நங்கவல்லி வந்தவுடன் மாப்பா முழுமையாக வேறொரு மனிதனாகவே மாறிவிட்டார். அப்பா எதிர்பார்த்த வேட்டையின் வாசலுக்குக்கூட வராமல் தன்பாட்டிற்கு செல்கின்ற முதிய யானையைப் போல அவர் நெகிழ்ந்திருந்தார். அதற்கு மேல் அங்கே ஒரு வினாடிகூட அமர்கின்ற பொறுமையை அப்பா முழுமையாக இழந்திருந்தார் எனத் தோன்றியது. நான் நங்கவல்லியிடம் புன்னகையுடனும் சிறிய குழந்தைத்தனத்துடனும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவளது உதடுகளில் பதில் சிரிப்பும் கண்களில் சிறிய சந்தேகமும் ஒன்றாக எழுந்தது. மாப்பா அதனை விரும்பிக்கொண்டவராக அவளிடம் மேலும் மேலும் விளையாட்டாக ஏதேதோ சொல்லியபடி சென்றார். 

புகழேந்தி சுவரில் சாய்ந்து நின்றபடி, செக் புத்தகங்களில் தீவிரமான கண்களும் நங்கவல்லியிடம் மாப்பா செய்கின்ற நகைச்சுவைக்குச் சிரிக்கின்ற உதடுகளுமாக சகஜமாகிக்கொண்டிருந்தார். நான் இறுகிக்கொண்டே சென்ற அந்தக் காலை நேரச்சூழலின் மீது வந்தமர்ந்து அதனை மெல்ல மெல்ல நெகிழச் செய்தபடியிருக்கின்ற நங்கவல்லியின் இருப்பை யோசித்தேன். அப்பா மென்மையாக எழுந்து கும்பிட்டுக்கொண்டார்.

ஒரு சின்ன குலுக்கலில் கண்விழித்தேன். பாளையம் நோக்கிய சாலையில் கார் போய்க்கொண்டிருந்தது. வெகு அண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பச்சைக் குழைவுகளுக்குள் மேகம் நீரென கமழ்ந்துகொண்டிருந்தது. சாலையின் புறமெங்கிலும் படர்ந்திருந்த புற்பரப்புகளில் காற்று வளைந்துகொண்டிருக்க, எப்போதும் மழைபெய்துவிடப் போவதற்கான முன்னறிவிப்வினைப் போலவே இளவெளிச்சம் எங்கும் அமைதியாக விரிந்திருந்தது.

திண்மையான கார் டயருக்குக் கீழே சரளைகள் நொறுங்குகின்ற நெருநெருப்பான இனிய ஓசை. லாடமிட்ட குதிரைகள் தார்ச்சாலையில் போகும்போது எழுகின்ற வசீகர சப்தத்தைப் போல இயந்திரங்களுக்கும் மானுடத்தைத் தீண்டுகிற புலன்கள் தோன்றிக் கொண்டிருப்பதைப் போலிருந்தது. ராமபவனத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த இந்த பயணத்திற்குள் சிறிய தூக்கமும் சின்னஞ்சிறு கனவினையும் கண்டுவிட்டிருந்தேன்.

ஏதோ ஒரு விசேஷ தினத்தின் மாலை. நங்கவல்லி குங்குமநிறச் சீட்டிப் பாவாடையும் ரெட்டைப்பின்னலில் பூவுமாக அதே வாசலில் அமர்ந்திருக்கிறாள். அருகிலிருக்கும் சோபாவில் கல்யாணி அமர்ந்து நீரில் நனைந்த கிளியாஞ்சட்டிகளில் மஞ்சள் குங்குமம் வைத்துக்கொண்டிருக்கிறாள். நான் வெகு தாமதமும் அதிக காதலுமாக கெஞ்சிய முகத்தோடு சிறிய ப்ரீஃப்கேஸை விட்டெறிந்தபடி அவர்களிடம் ஓடுகிறேன். கையில் வைத்து திலகமிட்டுக்கொண்டிருக்கும் மஞ்சள் அப்பிய விரல்களினூடாக கல்யாணி ஒரு அழகான கோபப் பார்வை பார்க்கிறாள். நங்கவல்லியோ அப்போதுதான் பண்டிகை துவங்குவதான புன்னகையுடன் என்னை நோக்கி கரம் நீட்டுகிறாள்.

தன்னையறியாமல் புன்னகைக்கிற என் முகத்தை டிரைவருக்கு அருகேயிருந்த கண்ணாடியில் சில வினாடிகள் யாரோ போல பார்த்து பிறகு நிதானித்து மீண்டேன். டிரைவருக்கு அருகேயான இருக்கையில் அப்பா அமர்ந்திருந்தார். சாலை தவிர்த்த இடமெல்லாம் பச்சையும் காற்றும் மழைக்கால மேகமும் போட்டிருந்த எந்தவொரு காட்சி மயக்கத்தையும் கண்ணுறாமல் நீள வெள்ளைக் கோடுகளை விழுங்கிக்கொண்டிருக்கும் காரின் முகப்பு மேலே பல்லியைப் போல அவரது பார்வை நின்றிருந்தது. அவரது மனம் அதற்கும் முன்னால் ஓடிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். அப்பாவின் மிகப்பெரிய தோல்வி இந்த மனநிலை. அவரால் வினாடியில் ஆறில் ஒரு பங்கு நேரத்திற்கு மேலாகச் சிரிக்க முடியாது. வாசனையை வைத்தே ஏழு தொலிகளுக்குக் கீழே திரண்டிருக்கும் வரகு அரிசியின் நிறத்தையும் ருசியையும் யூகித்துப் பழகிய மனதிற்கு தனது குடும்பக் கஷ்டங்களைக் கண்ணீர் மல்க கூறிக்கொண்டிருக்கும் சிப்பந்தியை, ‘இவன் எவ்வளவு கூட்டிக் கொடுத்தால் வெளியேறாமல் இருப்பான்’ எனத் தாட்சண்யமின்றி எடை போடவே இந்தத் தொழிலுலகம் பழக்கியிருந்தது. எங்களது வீட்டின் எல்லா உணர்ச்சிகரமான தருணத்திலும் கடைசியாக வந்து முதலாவதாக வெளியேறுபவராக அவரது இருப்பு இருந்தது. அம்மா அதனைப் புரிந்து அனுசரித்துக்கொண்டாள். ‘இந்த வருசம் குதிரைவாலி சீரழியும் பாரு’ என அவர் முனகிக்கொண்டிருப்பதைக் கேட்டுத் தலையாட்டிக்கொண்டே இட்லிகளை எடுத்து வைப்பாள். சட்னிக்குப் பதிலாக, ‘பின்ன உசிலம்பட்டி சொஸைட்டில கிடக்குறதெல்லாம் எடுத்துட வேண்டியதுதான’ என அவள் என்றாவது பதில் சொல்வாளாவென அப்பாவிற்குள் ஒரு ஆசை ஓடுமெனத் தோன்றும்.

சிறிய ஓய்விற்கு இடையே படிக்கலாமென நான் சில புத்தகங்களை மில்லிற்கு எடுத்துச் சென்றிருந்தேன். சார்டெக்ஸ் யூனிட்டில் நிகழ்ந்த சிறு பிழையைச் சரிசெய்துவிட்டு எங்களது சிறிய கண்ணாடித் தடுப்பு அறைக்குள் நுழையும்போது தலையில் முண்டாசும் வெற்றிலை வாயுமாக அய்யாவு அந்தப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பாவின் நீண்டகால விசுவாச சிப்பந்திகளில் முதன்மையான வயசாளி.

“படிக்கிறீங்களா?” பின்னாலிருந்து அவரது தோள்பட்டைகளைப் பற்றியபடி கேட்டேன். 

“எதுக்கு இந்த சிரிப்பாணி விசயம்லாம் நமக்கு?” உதட்டில் அன்பான கேலி வழிந்தது.

“இன்னுங் கொஞ்சம் தெரிஞ்சுக்கிறதுக்கு. இந்த உலகம் எவ்வளவு பெரிசுன்னும்.”

அதே கேலியோடு புத்தகங்களைக் கீழே போட்டார்.

“ந்தாருக்குல நம்ம உலகம்” அவர் கைகாட்டிய திசையில் நீண்ட கடப்பாக்கல் களங்களில் வரகும் சாமையும் இளவெயிலில் காய்ச்சலுக்காக விரித்து விடப்பட்டிருந்தன. வெகுதூர எங்களது மில் காம்பவுண்டிற்கு அருகே பசுஞ்செறிவான மலைத் தொடரின் விளிம்பு முத்தமிட்டபடியிருக்க, அதற்குக் கீழே படரத் துவங்கிவிட்ட குளுமையிலிருந்து காப்பதற்காக சாமையை நடுத்திட்டுக்கு ஏற்றிக் கட்டிக்கொண்டிருந்தார்கள்.

துளி கூன் விழாத திடமான தோள்களோடு ஆண்சட்டையும் பாவாடையும் அணிந்த பெண்கள் மடங்கிய கைவிரல்களைப் போன்ற இழுக்குச்சியால் திண்டுக்கு அதனை ஏற்றிக் கட்டுவதற்குப் போராடிக்கொண்டிருந்தார்கள். அய்யாவு கைநீட்டிய திசையில் வேலைv செய்துகொண்டிருந்த பெண் ஒருத்தி, வரகு தானியத்தின் காப்பிப் பொடி கறைபடிந்த முகத்தைப் புறங்கையால் துடைத்தவாறே சிரித்தாள்.

”எப்பிடி நம்ம சேடிப்பொண்ணு?” என்றவாறே இலேசாக சிரித்தார்.

“மலைக்கு அந்தப் பக்கமும் ஒரு உலகம் இருக்கு” என்றேன்.

“இருக்கட்டும். அங்கவொரு அய்யாவு நிப்பான். அவ்வளவுதான்.”

“தன்ராஜ் உருக்கி ஒட்டிவெச்ச மூளைக்கு கடிகாரம், தேதி, வரகு, தவிடு தவிர வேறென்ன தெரியும்? தப்பில்ல” கையைத் துடைத்தபடி சீட்டில் உட்கார்ந்து அய்யாவுவைப் பார்த்தேன். வாய் ஓவெனத் திறந்திருக்க, வேட்டியின் இடுப்புச் செருகலுக்குள் பொடியோ எதுவோ தேடித் துழாவிய விரல்களைப் பார்த்து குனிந்திருந்தார். எதுவோ சொல்லப் போவதற்கு முன்பான ஒத்திகை.

“இந்த எழுத்தை உடைச்சுப் பார்த்தா அதுக்குள்ள என்ன இருக்கும்னு நமக்கு தெரிஞ்சதில்ல. புத்தியும் அதுல போலேன்னு வையுங்க. ஆனா, அப்பப்ப புத்தகத்தை மூடி வெச்சுட்டு, பொறுமையா மூணாறுல வாங்குன இலைகளை நுணுக்கிப் போட்டு தானா சிரிச்சுக்கிட்டே மொதலாளி வெந்நீல ஒரு டீ போடுறீகளே.. பார்த்திருக்கேன். நல்லா சாயங்கால தூத்தல் மாதிரி முகம் குளுந்து நிக்கும். எல்லாம் எழுத்தை உடைச்சா வர்ற கிறக்கம். இல்லையா மொதலாளி?”

நான் பதில் பேசாமல் அவர் முகத்தையே பார்த்தேன். “யாவாரம் வேற சங்கதி. பழக ஆரம்பிக்கும் போது பணத்துல இருக்கும் அந்தச் சிப்பாணி. பின்ன தன் மேலேயே, தான் கத்துக்கிட்டதை நினைச்சு நினைச்சு வரும். ங்கன வாசல்ல நின்னு மேற்சரிவைப் பார்த்து நாலு நாளைக்கு மழை வெளுக்கும் அய்யாவு. ஆண்டிப்பட்டி கணவாய் முழுக்க நிக்கிற சாமை அடிவாங்கும் பாரு. கோடை இருப்பு சரக்கை எடுக்காத. சிவராத்திரிக்கு வடக்க நூறை நெருக்கி விலை வெப்பானுக பாருனு சொல்லிட்டு போனா நாலு மாசம் தாண்டுறதுக்குள்ளேயே கிலோ நூறை நெருக்கியே ஆகும். அந்த நூறு ரூபாயா போதை. செருப்பை கழுவி மாட்டுற நிமிஷத்துல அதைச் சொல்ல வைக்கிற அந்த அனுபவம் தர்ற போதைதான விசயமே?”

அவரையும் அவரது கூற்றையும் முட்டாள்தனமென எண்ணிக்கொள்பவனாக நான் புன்னகைப்பேன்.

“ராம விலாஸை சாய்ச்சு நாம வந்து நிக்குறோம். பால்குடி முடிஞ்ச குழந்தைய புடுங்கிட்டு வந்த மாதிரி வந்திருக்கோம். அப்படியே வச்சிருந்தா அது தப்பு. இந்த முப்பது வருஷத்தில தன்ராஜு அதுக்கு காலை உரமாக்கி கைய விரிச்சு தானா நடக்க வச்சிருக்கான்ல. அதுவும் குழந்தைக்கு முக்கியம்ல. இப்ப இந்த யாவாரம் கோயில் யானை மாதிரி. ராமவிலாஸ்ல மட்டும் இருந்திருந்தா இதுக இன்னமும் பத்தோட பதினொன்னு. இப்ப இந்தாபாரு.”

அய்யாவு கைகாட்டி நடந்த திசையில் நீண்ட டாரஸ் லாரிகளில் நூற்றுக்கணக்கான சிப்பங்களாக தானியங்கள் அடுக்கப்பட்டு தார்ப்பாய் போடப்பட்டுக்கொண்டிருந்தன. முழுவதும் போர்த்திய தார்ப்பாய் உடலுடன் முப்பது டன் டாரஸ் ஒன்று வடக்கு நோக்கி சரிந்து குலுங்கி மேலேறும்போது இலேசாக யானையைப் போலத்தான் இருந்தது.

எல்லாச் சமாதானங்களுக்கும் வெற்றிகளுக்கும் மேலாக அப்பாவை ஒரு வணிகனாக மிகவும் அஞ்சி மதித்தேன். ஆனால் ஒரு தகப்பனாக எந்த உணர்ச்சிகரமான தருணத்தையும் அவரோடு பிணைத்து என்னால் நினைத்துப் பார்க்க முடிந்ததேயில்லை.

கார் பாளையம் நோக்கிப் போய்க்கொண்டிருக்க, அப்பா முகப்புக் கண்ணாடிக்குக் கீழே குனிந்து வானத்தைப் பார்த்தார். இரண்டொரு நீர்த்திவலைகள் கண்ணாடிப் பரப்பில் விழத் துவங்கியிருந்தன. அப்பா டிரைவரிடம் ”வேகமா போடா. புது மில் களத்துல இந்த மழை இறங்கினா பின்ன கோடைக்கும் ஈரப்பதம் போகாது” என்றவாறே அவரது அலைபேசியில் புது மில் ஏஜெண்டிடம் களத்தில் உமி பரப்பி தார்ப்பாய் போடச் சொன்னார். ஏறக்குறைய கத்தினார். இலேசாக சாரல் விழத் துவங்கியிருந்த சாலையின் மீது எண்ணெய்ப் படலத்தைப் போல நீரை அரைத்தபடி கார் சீறிச் சென்றது.

துணுக்குற்ற உறுப்பைப் போல எனது அலைபேசி அதிர்ந்தது. புதிய எண். நான் மெதுவான குரலில் பேசினேன். புகழேந்தி அண்ணன்.

இலேசான மகிழ்ச்சியுடனும் அப்பாவைத் திருப்திப்படுத்தும் என்கிற ஆர்வத்துடனும் போனை துண்டித்துவிட்டு நிமிர்ந்தேன். அப்பா சிடுசிடுப்பான முகத்தோடு காரின் வேகத்தின் மீது ஆற்றாமையான உடலசைவுகளோடு இருந்தார்.

“அப்பா, புகழேந்தி அண்ணன் பேசினாரு”. அவர் அதைக் கேட்டது போலவே தெரியவில்லை.

“குச்சனூர் வழி இல்லாட்டி அடுதிரம் வழியா போடா” பல்லைக் கடித்தபடி எரிந்து விழுந்தார்.

நான் சொல்லலாமா வேண்டாமா எனக் குழம்பி முணுமுணுப்பான குரலில், “பாளையத்துல லாக் அடிச்சிருக்க ராமவிலாஸ் கிட்டங்கிகளை நமக்கு லீஸுக்கு விடச்சொல்லிட்டாராம் மாப்பா. புகழேந்தி அண்ணன் சொன்னார்.”

அப்பா எதிர்பார்த்த, அவரது தீ விரும்பிய எண்ணத்துளிகள் இந்தச் செய்தி. ஒட்டுமொத்தமாக ராமவிலாஸ் எங்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்து விட்டதற்கான சான்று. அப்பாவின் வெறிகொண்ட பாய்ச்சலுக்கு முன் ராமவிலாஸ் தளர்ந்த தன் கால்களை மண்டிபோட்டுவிட்ட பெருநிகழ்வும்கூட. ஏஸிக் குளிரையும், மழையின் ஜில்லிப்பையும் மீறி அப்பாவின் வலது புற நெற்றியில் இன்னமும் வியர்வை வழிந்தபடி இருந்தது. அவரது ஆவேசமான கண்கள் காருக்கு முன்பாக சாலையில் ஓடியபடி இருந்தன. சட்டென இளகியவராக, மலர்ச்சியும் கர்வமுமாக புன்னகை முகத்தோடு அப்பா என்னைத் திரும்பிப் பார்க்கும் அந்த விநாடிக்காக ஆவலோடு காத்திருந்தேன். கார் மில் வளாகத்திற்குள் நுழைந்தது. 

தீப்பற்றிக் கொண்டதைப் போல, மழைச்சாரலைக் கண்டு தார்ப்பாயும் நைந்த சாக்குகளுமாக ஆட்கள் மில் வளாகத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தனர். புதிய மில் தனது புத்தம்புதிய சிமிண்ட் உடலோடும் பச்சை நிற பெயிண்ட் அடித்த, இன்னமும் பாலித்தீன் பிரிக்கப்படாத விநோத இயந்திரக் கரங்களோடும் மழைக்குக் கீழே நின்றிருந்தது.

அட்டியல் போடப்பட்ட தானிய மூடைகளை இடம் மாற்றி வைக்க ஈரம் வழியும் உடலோடு லோடுமேன்கள் திணறிக்கொண்டிருந்தனர். முறத்தை தலைக்குத் தடுப்பாக பிடித்தபடி அய்யாவு தூரத்துக் களத்தை நோக்கித் தார்ப்பாய்களை அள்ளிச்செல்வது தெரிந்தது.

நான் கூறிய செய்திக்கு அப்பாவின் பதிலென்ன என்பதைக் கவனித்தவாறே இருந்தேன். கார் நிற்கும் முன்பு அப்பா தாவி இறங்கினார். மொடமொடப்பான அவரது வெள்ளைச் சட்டையில் விழுகின்ற மழைநீர், சட்டைத் துணிக்குக் கீழே இருந்த மூட்டை தூக்கி இறுகிய தோள்பட்டைகளின் ஆகிருதியை நீரால் மெழுகிக் காட்டியது. தன்னைக் கடந்த லோடுமேன் ஒருவனின் கையிலிருந்த மாட்டுக் கொம்பு கைப்பிடியிட்ட ஊக்கை விசுக்கெனப் பறித்துக்கொண்டு, நனையத் துவங்கியிருக்கிற தானிய மூடைகளின் திசை நோக்கி வேட்டி நுனியைத் தூக்கிப் பிடித்தவாறே ஓடத் துவங்கினார். பரபரப்பான நூறு கைகளுக்கு கால்களுக்கு நடுவே ஒருவராக மறைந்து போகின்ற அவரை நோக்கி, “அப்பா, இருங்கப்பா” எனக் கத்த முயன்றேன். 

மழைப்படலத்திற்குக் கீழே, புதிய கனவுகளோடு அப்போதுதான் பிறந்த காட்டு யானையின் குட்டியைப் போல நின்றிருந்த ஆலையின் நூறு கரங்களை நோக்கி என்னால் இவ்வளவு தன்னிச்சையாக ஒருபோதும் ஓடவியலாது எனச் சட்டென உணர்ந்தவனாக கூசி அடங்கினேன்.

13 comments

panneerselvam April 26, 2021 - 12:11 pm

nice

Manikandan V April 27, 2021 - 9:56 am

எத்தனை அடுக்குகள் கொண்ட கதை எவ்வளவு அழகு

கெளதம் April 26, 2021 - 2:27 pm

ரொம்ப நாள் அப்புறமா கதையோட்டத்தில் நானும் ஒரு ஆளாக இருந்து பாத்த மாதிரி ஒரு கதை.

விஜயன் April 27, 2021 - 11:32 am

கதைசொல்லலின் முதிர்ச்சி வியக்க வைக்கிறது.செந்தாழையின் மணம் மனதின் பெட்டிக்குள் சுழன்று கொண்டிருக்கும்.

krishna April 27, 2021 - 11:59 am

அருமையான கதை

தலையில் சுமக்கும் தார்ப்பாய்களும்
மாட்டுக் கொம்பு கைப்பிடி ஊக்குகளும்
வியர்வை வடியும் லோடுமேன்களும்

கேடயம்
கத்தி
இரத்தம் வடியும் சாமுராய்களாகவும்
அப்பா ஒரு ஆகச்சிறந்த தளபதியாக
போர்க்களத்திற்குள் புகுவது போலொருணர்வு கதையில்

மகன் அப்பாவின் அனுபவத்தோடு மளமளவென போர்க்களத்திற்கு தயாராகிவிடுவான் ….

Munavar Khan April 27, 2021 - 1:44 pm

அருமை

kumar shanmugam April 27, 2021 - 4:26 pm

கதையின் வழியே ஒரு உழைப்பும் அதன் பெருமதியும் நிழல் பெற்ற இடத்தில் நிமிர்கிற மனவலிவும்
நிறைக்கின்றது…தத்துவார்த்த வரிகள் சில அமைதியாக உரையாடலில் கலந்துவிட்டிருக்கின்றது…
அருமையான கதை …பா.திருச்செந்தாழை அண்ணாவுக்கும் அன்பும் பிரியமும் …

லெட்சுமி நாராயணன் பி April 27, 2021 - 10:39 pm

அற்புதமான கதை. மொழிநடை லாவகமாய் உள்ளிழுத்துக் கொள்கிறது.

Mari Selvam April 28, 2021 - 8:00 am

ஆஹா ஆஹா கதை முடியுமிடத்தில் விரியும் காட்சியில் நான் என்னைத் தொலைத்தேன். மூட்டைத் தூக்கி இறுகிய தோள்கள்,மாட்டுக் கொம்பு கைப்பிடியிட்ட ஊக்கு ஆஹா. நான் என் அப்பாவை அணைத்துக் கொள்கிறேன். அந்த ஊக்கைப் பிடித்து பிடித்து ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவே காய்த்துப் போகும். அப்படிக் காய்க்கிறது கதை முதல் வரியிலிருந்து கடைசிப் பத்தி வரை. கதைக்குள் என்னைத் தொலைத்தேன் நான். அருமை.

Balajawahar Ramu April 29, 2021 - 8:44 am

செம ???

Kannan April 30, 2021 - 7:37 am

பொறாமை பெருமை இவைகளின் காந்தப் புலத்தில் தன்ராஜ் ராம விலாஸ் மூலம் நம்மை சிறகடிக்க வைத்துள்ளார் செந்தாழை அருமையான விரிதல்.

ஒடியன் May 1, 2021 - 6:42 am

அற்புதம் என்று ஒற்றைவார்த்தைகளுக்குள்.முடிக்கக்கூடாது என்றுதான் நினைத்தேன்.இவ்வளவு அடுக்குகளை..மாறி மாறி.நம்மை கேரக்டர்களாக.மாற்றுகிற மகரந்த்தம் தடவிய விஸாலத்தை வேறெப்படியும் சொல்லமுடியவில்லை

Comments are closed.