சம்பத் ஏன் மரணத்தை ஒரு ‘இடைவெளி’ என்கிறார்?

3 comments

சம்பத்தின் “இடைவெளி” நாவல் குறித்த நிறைய விமர்சனங்கள், மதிப்புரைகள், பாராட்டுரைகளைப் படித்துள்ளேன். அவற்றில் நாவலின் போக்கை, கதைக்களனை விவரிக்கிறார்கள், நாவல் அளிக்கும் வியப்புணர்வை வர்ணிக்கிறார்கள். ஆனால் இந்நாவலின் மையப் பாத்திரமான தினகரன் ஏன் மரணத்தை ஒரு இடைவெளி எனச் சொல்கிறார் என்பதை யாரும் வினவுவதில்லை. ஜெயமோகன் “இடைவெளியை” ஒரு இருத்தலிய நாவல் எனத் தவறாக வாசித்து அக்காரணத்தாலேயே இதுவொரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மனச்சோர்வை சித்தரிக்கும் நாவல் என அடையாளப்படுத்தி நிராகரிக்கிறார் (“சம்பத்தின் ‘இடைவெளி’ பற்றி”, அக்டோபர் 12, 2018). இதைப் படிக்க சம்பத் உயிருடன் இருந்திருந்தால் அவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்திருப்பார் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஜெயமோகனின் பார்வை அவ்வளவு அபத்தமாக உள்ளது – ஏனென்றால் சம்பத் இந்நாவலில் எங்குமே இருப்பு குறித்தோ, அதன் அபத்தம், அர்த்தமின்மை பற்றியோ விசாரணை செய்வதில்லை. மாறாக சம்பத் ‘உளவாதல்’ (being) பற்றி பேசுகிறார் என்று சொல்லலாம். ஆனால் இந்த உளவாதலும் மரணத்தில் எப்படி தொழிற்படுகிறது என நாவலின் முடிவில் தொட்டுக் காட்டுகிறார். 

ஆல்பர்ட் காமுவின் நாவல்களைப் படித்தவர்கள் “இடைவெளியுடன்” அவற்றை ஒப்பிட்டால் எந்தளவுக்கு இது வித்தியாசமான படைப்பு என விளங்கும். நிச்சயமாக “இடைவெளி” ஒரு இருத்தலியல் நாவல் அல்ல, மாறாக இதுவொரு மீபொருண்மை நாவல். தத்துவ விசாரணையைப் புனைவாக்கும் ஒரு செறிவான முயற்சி. தமிழில் ஒரு முன்னோடியற்ற படைப்பு. ஜெயமோகனுக்கு இந்நாவலில் உள்ள பிரச்சினையும் இதுவொரு மீபொருண்மைவாதப் படைப்பு என்பதே. அவர் தனது அத்வைத பார்வை காரணமாக தொடர்ந்து உலகியல் வாதத்தை, வரலாற்றுவாதத்தை, அதனுள்ளும் மரபின்னுள்ளும் ஆன்மாவை, சாராம்சத்தைத் தேடும் முயற்சியை கைக்கொள்கிறார். இதைக் கலைத்துப் போடுகிற முயற்சியாக “இடைவெளி” எனும் இந்தச் சிறிய நாவல் உள்ளது என்பது அவரை எரிச்சல்படுத்துகிறது. முழுமையற்ற படைப்பு என நிராகரித்துவிடுகிறார்.

பிரச்சினை இது ஜெயமோகனின் முழுமைவாதத்தை (தனிமனிதன்- வரலாறு- மரபின் ஆன்மா- அறம்- முழுமை எனும் வழக்கமான சரடு) நிராகரிக்கிற படைப்பு என்பதுதான். ஜெயமோகன் இப்படைப்பை எழுதியிருந்தால் ஹெர்மன் ஹெஸ்ஸின் “சித்தார்த்தாவில்” வருவது போல ஒரு தனிமனிதனின் தத்துவத் தேடல் இறுதியில் அவன் தன் வாழ்க்கையில் பிரம்மத்தைக் காண்பதுடன், நமது இந்திய மரபு இத்தகைய பல முரணான பாதைகளை பிரம்மத்தை நோக்கித் திறந்து வைத்திருக்கிறது எனும் பிரச்சாரத்துடன் முடிந்திருந்திருக்கும். ஆனால் சம்பத் இதைச் செய்வதில்லை. 

சம்பத் இந்த நாவலில் எங்குமே ஒரு குறிப்பிட்ட தத்துவ மரபை (இந்திய/ஐரோப்பிய) தூக்கிப் பிடிப்பதில்லை. தத்துவத்திலோ அறிவியலிலோ ஆய்வு நூல்களைப் படிப்பதிலோ சூதாட்டம் போன்ற போதையூட்டும் விளையாட்டுகளிலோ காமத்திலோ மரணம் நிகழ்வதை உற்று கவனிப்பதிலோ எந்தப் பயனும் இல்லை என நாவல் எண்பது சதவீதம் முடியும் இடத்தில் நமக்குச் சொல்லிவிடுகிறார். (அதோடு “சித்தார்த்தா” போன்ற நாவல்களின் தேடல் எவ்வளவு பிழையானது என்றும் நமக்கு உணர்த்திவிடுகிறார்.) இந்திய மரபோ ஐரோப்பிய மரபோ அல்லது விஞ்ஞானமோ இவ்விசயத்தில் மேலானது அல்ல எனக் கூறுகிறார். எனில் எங்குதான் மரணத்தின் விடையைத் தேடுவது? வாழ்வின் உளவாதலில் என அவர் கண்டுகொள்வதுடன் நாவல் முடிவுக்கு வருகிறது – கூடவே இப்படியே தன்னை இரு கூறாக (விசாரிக்கிற- விசாரணையை வாழ்கிற ஒரே மனிதனின் இரு சுயங்கள்) பிரித்துக்கொண்டு மரணத்திற்கான விடையைத் தேட வேண்டி வருகிற நவீன மனிதனின் நெருக்கடியைச் சுட்டிக்காட்டி தினகரனுக்கு சுலபத்தில் நிம்மதி கிடைக்காது, எந்த நவீன மனிதனுக்கும் வீடுபேறு சாத்தியமில்லை என அவதானிக்கிறார். 

நான் இதுவரை எழுதியுள்ளது உங்களுக்குக் குழப்பமாக இருந்தால் நிச்சயமாக நாவலின் பிரதானமான விவாதமும் குழப்பத்தை  ஏற்படுத்தும். ஏனென்றால் இதுவொரு தத்துவ நாவல். அதனால் இதன் தத்துவப் பின்னணியைச் சுருக்கமாக – ஜெர்மானிய தத்துவ ஞானி ஹைடெக்கரின் கோட்பாட்டின்படி – விளக்குகிறேன்.

முதலில் உளவாதல் (being) என்றால் என்ன எனப் பார்ப்போம்.

கிரேக்கத் தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் உளவாதலை ஒரு பொருளின் அடிப்படையான செயலின், பண்பின் அடிப்படையில் வகுத்தார். ஒரு மலரின் உளவாதல் மலராக இருத்தல். முள்ளின் உளவாதல் முள்ளாக இருத்தல். இருத்தல் என்றால் என்ன? நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்களோ அது எப்படி உங்களை அடையாளப்படுத்தும் என்பதே உங்களுடைய இருத்தல். அரிஸ்டாட்டிலுக்குப் பிறகு பலவிதமான விவாதங்கள் இது குறித்து நிகழ்ந்தன. இருபதாம் நூற்றாண்டில் ஹைடெக்கர் ஒரு புதிய பொருளை, ஒரு விதமான திறப்பை இவ்விவாதத்துக்குள் கொண்டுவந்தார். அவர் ஒரு மனிதனின், உயிரின், பொருளின் இருப்பை அதுவாக மட்டுமே காண இயலாது, உலகில், காலத்தில் ஒரு மனிதன், ஒரு உயிர், ஒரு பொருள் என்னவாக இருக்கிறானோ, இருக்கிறதோ அதுவே அவனுடைய, அதனுடைய இருப்பு என்றார். இங்கு ஏன் மனிதன், மிருகங்கள், பறவைகள், புழு, பூச்சிகள், புல்பூண்டுகள், கல், மண் என எல்லாவற்றையும் குறிப்பிடுகிறேன் என்றால் ஹைடெக்கர் இவை அனைத்தும் ஒரே போன்றே தம் உளவாதலைக் கொள்கின்றன என்றார். அதாவது ஆறாவது அறிவு என ஒன்று இருப்பதாலேயே எனது இருப்பு ஒரு புழுவின் இருப்பைவிட மேலாக ஆவதில்லை. அது மட்டுமல்ல. ஒரு கல்லுக்கும், மணலுக்கும் உளவாதல் உண்டு. உளவாதலுக்கு மனம் முக்கியமில்லை. பிரக்ஞை, பகுத்தறிவு, உணர்வுகள் அவசியமில்லை. ஆனால் இடமும் காலமும் அவசியம். 

ஹைடெக்கர்

நான் இப்போது இதை என் தட்டச்சுப் பலகையில் ஒவ்வொரு எழுத்தாகத் தட்டி எழுதிக்கொண்டிருக்கிறேன். அது என் கணினியில் பதிவாகிறது. இந்தக் கருவிகள் மேஜை மீது வைக்கப்பட்டுள்ளன. பதிவாவது திரையில் உடனுக்குடன் தெரிகிறது. நான் அவற்றின் முன்பு ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். நானும் இந்தப் பொருட்களும் ஒரு அறைக்குள் இருக்கிறோம். நான் இருக்கும் இடத்தில் மின்விசிறி சுழல்கிறது. குழல்விளக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. நான் இதை எழுதும் போது ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ப்ளூடூத் ஹெட்போன் செல்போனுடன் தொடர்புகொண்டுள்ளது. இந்த போன் இணையத்தொடர்பு வழியாக இசையைத் தரவிறக்கம் பண்ணி என் செவிக்கு காற்றுவழி அனுப்புகிறது. என் அறையில் மின்சாரமும் இணையமும் உள்ளது. என் முன்பு மேஜையில் புத்தகங்கள், தண்ணீர்ப் போத்தல் என எல்லாம் இருக்கின்றன. நான் இவற்றைப் பயன்படுத்தவில்லை என்றாலும் இவை இருக்கின்றன. இப்போது நான் தனியாக இருந்து எழுதினாலும் நான் ‘தனியாக’ இல்லை. நான் இத்தனை விசயங்களுடனும் ஒரு வெளியின் பகுதியாக, பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறேன். ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போல. நான் எழுந்து வெளியே வந்துவிட்டால்? அப்போது நான் பல்வேறு வெளிகளின் ஊடேதான் கடந்து சென்றாக வேண்டும். வெளிக்கு அப்பால் ஒன்றுமே இல்லை. 

அதே போல காலத்துக்கு வெளியிலும் ஒன்றுமே இல்லை. ஒவ்வொரு வினாடியும் கடக்கையில் நானும் அந்தக் காலத்துளிக்குள் என்னை உணர்ந்து கொள்கிறேன். தனியாக அல்ல, இந்த வெளியுடன் இணைந்தே. காலம், நான், இந்தப் பொருட்கள், இயற்கை, கட்டிடம் எல்லாம் சேர்ந்த வெளி – இவை ஒரு முக்கோண அமைப்பாகச் சேர்கின்றன. இந்த அமைப்பையே ஹைடெக்கர் உளவாதல் (being) என்கிறார். அவர் இதை வெறுமனே உளவாதல் என்பதில்லை. Being there என்கிறார் (ஜெர்மனில் இது da sein ஆகிறது). தமிழில் “இங்கு / அங்கு உளவாதல்” எனச் சொல்லலாம். இந்த இங்கு / அங்கு முக்கியம். உலகம் என்பது ஹைடெக்கரின் தத்துவக் கட்டமைப்பில் தவிர்க்க முடியாத விசயம். நாம் பிறந்த அந்த நொடியோ உலகத்தினுள் எறியப்படுவதாக அவர் சொல்கிறார் (thrownness). இதுவே ஹைடெக்கரின் தத்துவத்தில் உள்ள இருத்தலிய அம்சம். ஆனால் இருத்தலியல்வாதிகளைப் போல அவர் இருப்பை ஒரு அர்த்தமற்ற, அவநம்பிக்கையான அனுபவமாக, உணர்தலாகக் கருதுவதில்லை. இருப்புக்கு பிரக்ஞை, அறிவு அவசியம் எனக் கருதுவதில்லை. மகிழ்ச்சியை அடைய ஒருவர் தனது மன ஊக்கத்தின்படி செயல்படுவது – தன் திறல் நிறைவெய்தல் (self-actualization) – அவசியம் என அவர் கருதவில்லை. இந்த உலகில் எப்படி இருந்தாலும் அது ‘மகிழ்ச்சியான’, ‘நிறைவான’ ஒன்றுதான், உளவாதலே முக்கியம், அதை மதிப்பிடுவதல்ல. மகிழ்ச்சியை நாம் நாடிச்செல்ல வேண்டியதில்லை – வெளியில், காலத்தில் சும்மா இருக்க முடிந்தாலே அது மகிழ்ச்சியான உளவாதல்தான். 

உளவாதலுக்கு அறிதல் என ஒன்றுண்டு. இதை அவர் பகுத்தறிவினால், உணர்வுகளால், கற்பனையாலான அறிதலாக முன்வைக்கவில்லை. உளவாதலின் ‘அறிதலுக்கு’ தியான மனநிலை, ஞானம் அவசியமில்லை. உளவாதலின் “அறிதல்” என்றால் உளவாதலுக்கு உங்களை ஆட்படுத்துவது – அவ்வளவுதான். ஒரு போத்தலில் உள்ள நீரை எடுத்து அருந்தும்போது அதைக் கையில் பற்றுகிறவராக, அதைத் தூக்கி வாயருகே கொண்டு வருகிறவராக, வாயினுள் ஊற்றுகிறவராக பல்வேறு வகைகளில் உங்களுடைய உளவாதல் இருந்தபடி, தோன்றி மறைந்தபடி இருக்கும். இதற்கு எந்தப் பிரத்யேக முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. ஹைடெக்கர் எப்படி இருக்க வேண்டும், எப்படி உளவாதலை அறிய வேண்டும் என எந்தப் பிரத்யேக அறிவுரையையும் நல்குவதில்லை. அவர் நம் வாழ்தலில், இருத்தலில், உளவாதலில் பாகுபாடுகளை உண்டு பண்ணுவதில்லை. பிரக்ஞைப்பூர்வமாக, மனப்பூர்வமாக உலகை உணர்ந்து இருத்தல் – ஜென் பௌத்தத்தில் வரும் அந்தந்த கணத்தில் முழுமையாக வாழ்தல் – பற்றி ஹைடெக்கர் பேசுவதில்லை. நீங்கள் ஒரு பைக்கை ஓட்டினாலும் அங்கு உங்களுடைய இருப்பை அறியவே செய்கிறீர்கள்.

அடுத்து நாம் காலத்தை ஹைடெக்கரின் பார்வையில் புரிந்துகொள்வோம் – இந்த விசயத்தில் ஹைடெக்கர் ஒரு கடப்புவாத (transcendental) அணுகுமுறையைக் கொண்டு வருகிறார்.

காலத்துக்குள் நாம் பிரக்ஞைப்பூர்வமாக இருப்பதாக அவர் கருதவில்லை. இதை நீங்கள் படிக்கையில் கடந்த காலத்தில் இருந்தபடி வழுக்கிக்கொண்டு நிகழுக்கும், நிகழில் இருந்தபடியே எதிர்காலத்துக்கும் செல்கிறீர்கள். இதை இதுதான் என அறியும் முன்னரே அதைக் கடந்து விடுகிறீர்கள். காதலிக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பதை உதாரணமாக எடுப்போம். அந்த முத்தத்தைப் பதிக்கும் போதே அதைக் கடந்துவிடுகிறோம். எந்த நொடியின் உணர்வையும் நாம் சாராம்சமாக அறிவதில்லை. மாறாக நாம் அதனுள் என்னவாக இருந்தோம் என அறிய முடியாதபடி ஆற்றொழுக்காக நிகழ்ந்தபடி இருக்கிறோம். முத்தத்தின் இன்பம் என்பது முத்தமிடுவதோ முத்தத்தை உணர்வதோ அல்ல, முத்தத்தை அதைத் தரும்போதே, பெறும்போதே, முழுமையான உணர்வுநிலையில் இருக்கும்போதே கடந்து செல்வதுதான்.  ஒரு இசையைக் கேட்கும் போது, சுவையான உணவை அருந்தும் போது, கோபப்படும் போது, சும்மா எதையாவது பார்க்கும் போது நமது உளவாதலானது இப்படி அந்தக் கணத்தில் இருக்கையிலேயே அதைக் கடந்து சென்றபடி இருக்கிறது. இந்தக் கடப்புநிலையில் ஒரு இன்மை உள்ளது. இந்த இன்மையை நாம் அதிகமாக உணரும் போதே அதிக மகிழ்ச்சியாக இருக்கிறோம். 

இது வெகுநுட்பமான மகிழ்ச்சி. இது களிப்பில், உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிற மகிழ்ச்சி அல்ல. மாறாக, சும்மா சாலையில் நடந்து செல்லும் போது, உட்கார்ந்திருக்கும் போது, யாரிடமோ போனில் பேசும் போது, பேசாதிருக்கும் போது, ஒரு செய்தித்தாளைப் பார்க்கும் போது, படிக்காத போது, வேலையில் இருக்கும் போது, விடுப்பில் இருக்கும் போது, கோபப்படும் போது, அன்பு காட்டும் போது, பொறாமை கொள்ளும் போது, பசிக்கும் போது, பசி தீர்ந்த பிறகு, உடலுறவின் போது, உடலுறவு கொள்ளாத போது, எதையும் உணராத போது நாம் உணர்கிற நுண்-மகிழ்ச்சி இது. உதாரணமாக, மிக மோசமான நோயாளி, ஒவ்வொரு கணமும் கடும் துன்பத்தை அனுபவிக்கிறவன், தூக்குத் தண்டனைக்குத் தயாராகக் காத்திருக்கும் கைதிகூட உணரும் நுண்-மகிழ்ச்சி இது. தூக்குக் கயிறைக் கழுத்தில் மாட்டிய நொடியில் ஒருவன் உணர்கிற மகிழ்ச்சி இது. மரணத்தில் இருந்து உதறிக்கொண்டு ஓடுகிற நம் உடல் அனுபவிக்கிற மகிழ்ச்சி இது. இது ஒவ்வொரு உயிரிடமும் உள்ளதுதான். இது உளவாதலின் மகிழ்ச்சி.

இதை விளக்க ஹைடெக்கர் நகைச்சுவையை உதாரணம் காட்டுகிறார் – எந்த ஜோக்குக்கும் ஒருவர் சிரிப்பதற்கான நிபந்தனை அதைப் புரிந்துகொள்ளக் கூடாது என்பதே. ஜோக்கைப் புரிந்துகொள்ளும் போது அது ஜோக் அல்லாமல் ஆகிறது. அது என்னவென அறிந்துகொண்டே அந்த அறிதலைக் கடந்துவிடும் நொடிதான் பயங்கரமாக நாம் சிரிப்பது நிகழ்கிறது. ஜோக் என்றால் தர்க்கத்துக்கு அப்பாலான ஒரு முரணை மனம் கண்டடைவதுதானே! அந்த முரண் மிகையாக, உச்சபட்ச அபத்தமாக ஆகும் போது அது சிரிப்பை வரவழைக்கிறது. இதே போன்று முரண் உணர்வுநிலையின் உச்சத்துக்கு சென்று உணரப்படும் போது அது கவிதையாகிறது. அதனாலேயே ஹைடெக்கர் கவிதையை ஒரு உன்னதமான கலைவெளிப்பாடாக, உளவாதலின் வெளிப்பாடாகக் கண்டார். ஜோக்கிலும், கவிதையிலும் நாம் காலத்துக்குள் நமது உளவாதலை அறிவதாக அவர் நம்பினார். 

இங்கிருந்து நாம் ஹைடெக்கர் மரணம் பற்றி என்ன சொன்னார் என்பதற்கு வரலாம்.

காலத்துக்குள் நமது இருத்தல் ஒரு கடப்புநிலையில் தோன்றுவதாகச் சொன்னேன் இல்லையா, இது மரணத்தைச் சிக்கலானதாக்குகிறது. மரணம் என்பது ஒரு முடிவு அல்லவா? காலத்தினுள்தானே மரணம் தோன்றியாக வேண்டும்? எனில் மரணம் நமது இருத்தலை முடித்து வைக்க வேண்டுமெனில் அது காலத்துக்கு வெளியே அல்லவா இருந்தாக வேண்டும்? மரணத்தை ஒரு முற்றுப்புள்ளியாகப் பார்ப்பதை ஹைடெக்கர் இதனாலேயே தவிர்க்கிறார். மரணம் முற்றுப்புள்ளி என்றால் பிறப்பே துவக்கப் புள்ளியாக வேண்டும். பிறப்பு துவக்கப் புள்ளியாக வேண்டும் எனில் அது காலத்துக்குள் நிகழ முடியாதே? பிறப்போ இறப்போ சாராம்சமாகத் தோன்றுவதில்லை, அவை இரண்டுமே காலத்தைச் சார்ந்துள்ளன என்பதே இவற்றை ஏற்பதில் உள்ள சிக்கல். 

அடுத்து உளவாதலை ஒரு வெளிக்குள், காலத்துக்குள் வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்படுவதாக, எறியப்படுவதாக ஹைடெக்கர் கருதுகிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும் – நாமாக விரும்பி திட்டமிட்டுப் பிறப்பதில்லை. தாயின் வயிற்றுக்குள் கருவாகத் தோன்றி, உயிராக மாறி வளர்ந்து, வெளியே வருவது வரை நாம் காலத்துக்குள் இருந்து திடீரென பாதியில் தோன்றி இருக்கிறோம் – அதாவது ஒரு படத்தைப் பாதியில் ஆரம்பிப்பது போல. ஒரு குழந்தைப் பிறப்பின் மகத்துவமே, அழகே, அது முன்னே இங்கே இருந்ததில்லை என்பதுதான். தாயின் வயிற்றினுள் இருந்து அது திடீரென பூமியில் அவதரிக்கிறது, இந்தக் கட்டுரையில் இருந்து ஒரு வரியை உருவி நாம் மற்றொரு சம்பந்தமில்லாத கட்டுரையில் நுழைப்பதைப் போல. “The Possibility of Experiencing the Death of Others and the Possibility of Grasping Da-sein as a Whole” எனும் கட்டுரையில் இதைப் பற்றி பேசும் ஹைடெக்கர், நம்முடைய பிறப்பு ஒரு நிலுவைத் தொகை (outstanding) என்கிறார். அதாவது நாம் செலுத்தப்படாத நிலுவைத் தொகையுடன் இப்பூமிக்கு ஒரு குழந்தையாக வருகிறோம். நிலுவையை நாம் காலத்தில் பாதியில் தோன்றுகிற அந்த முழுமையின்மையின் உருவகமாகப் பார்க்கலாம்.

பாதியில் இப்படி வரும் நாம் பாதியிலே திரும்ப நேர்கிறது என அவர் மரணமடைவது பற்றிச் சொல்கிறார். எப்படி பிறப்பில் ஒரு முழுமையின்மை உள்ளதோ அப்படியே இறப்பிலும் அதே முழுமையின்மை உள்ளது. (முழுமை என்பதை இந்த உலகில் உடலால் காலத்துக்குள் இருப்பதற்கு அப்பாலான ஒரு அசாத்திய நிலையாக அவர் பார்க்கிறார்) ஹைடெக்கர் என்னதான் சொல்ல வருகிறார்?

மரணத்தை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு ஆராய்வோம். ஒரு பெண்ணைக் கட்டியணைக்கிறீர்கள். அணைத்த அந்த நொடியே நீங்கள் அணைக்கிறவராக — ஒரு பெண்ணை, ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் அரவணைப்பவராக — இருக்கிறீர்கள். அணைப்பை உணரும் போதே அதைக் கடந்தபடி இருக்கிறீர்கள். இப்படி ‘முழுமையற்று’ அதில் இருக்கிறீர்கள். ஏன் முழுமையற்று? இருந்தபடியே காலத்தினுள் கடந்துசெல்வதால். வாழும் போதே உளவாதல் இப்படியே நிகழும் என்றால் சாகும் போது மட்டும் உங்களால் வெளியில், காலத்தில் சாவை உணர முடியுமா? (முழுமையைக்கூட விடுங்கள்) ‘அட! சாகப் போகிறேன்’ என உணரும் முன்னரே சாவு உங்களைக் காவு வாங்கிவிடும். இப்படி சாவும் ஒரு நிலுவைத் தொகைதான். ஒரு குறிப்பிட்ட நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் பூமிக்கு வரும் நாம் மீண்டும் நிலுவைத் தொகை நமக்குச் செலுத்தப்படும் முன்னரே விடைபெறுகிறோம். கீழ்வரும் மேற்கோள்களைப் பாருங்கள்.

“A constant unfinished quality thus lies in the constitution of da-sein. This lack of totality means that there is still something outstanding in one’s potentiality-for-being. However, if da-sein ‘exists’ in such a way that there is absolutely nothing more outstanding for it, it has already thus become no-longer-being-there. (…)” (219-20)

“When Da-sein reaches its wholeness in death, it simultaneously loses the being of the there. The transition to no-longer-being-there lifts Da-sein right outside the possibility of experiencing this transition and of understanding it as something experienced.” (238)

நாம் சாகும் போது நிலுவைத் தொகையான அந்த முழுமையை நோக்கி ஏகும் போது நம்முடைய உளவாதலை இழக்கிறோம் என்கிறார் ஹைடெக்கர். “ஒருபோதும் அங்கு உளவாக இயலாத நிலை” என அவர் மரணத்தை வர்ணிக்கிறார். 

எளிதாகச் சொல்வதானால் மரணம் என்பதை மனிதன் அறிவதற்கு அவன் தன் உளவாதலைக் கைவிட வேண்டும். அது அவனுக்குச் சாத்தியமில்லை என்பதால் அவனுக்கு மரணம் சம்பவிக்கிறது. ஆனால் அவன் அதை அனுபவிப்பதோ அதன் இருப்புக்குள் இருப்பதோ இல்லை. மரணத்துக்குப் பின் நாம் காலவெளியற்ற ஒரு இருட்டில் இருப்போம், ஆன்மாவாக அலைந்துகொண்டிருப்போம் என்பதெல்லாம் வெறும் கற்பனைகள். “இடைவெளி” நாவலின் துவக்கத்தில் தினகரன் இதை மிகச் சன்னமாக தன் தற்கொலை முயற்சியின் போது உணர்கிறான். அடுத்த நொடி என ஒன்று இல்லாத போது நாம் எங்குமே போக முடியாத இல்லையா? மரணமே ஒரு “இன்மை”தான், ஆனால் அது இருத்தலில் நாம் உணர்கிற கடப்புநிலையின் இன்மை அல்ல. அது ஒரு முழுமையான இன்மை. காலமற்ற இன்மை. மிச்ச நாவல் முழுக்க அவன் நாடுவது மரணத்தை அல்ல, இருத்தலில் உள்ள மரணத்தையே அவன் நாடுகிறான். அதைப் புரிந்துகொள்ளும் கடும் முயற்சிகளின் ஊடாகத் தற்செயலாக அதுவொரு “இடைவெளி” எனக் கண்டடைகிறான். இடைவெளி என்பது இங்கு ஹைடெக்கரின் மொழியில் உளவாதல் அனுபவம். உளவாதலின் ஒவ்வொரு கணத்திலும் நாம் நம்மைக் கடந்து உணரும் போது மரணத்தையும் சேர்த்தே அனுபவிக்கிறோம். இதை ஒரு நுண்-மரணம் என நான் ஒரு வசதிக்காகப் பெயரிடுகிறேன். நமது அறிதலுக்கும் அறிதலின்மைக்கும் நடுவே வரும் இடைவெளி இந்த நுண்-மரணம். 

அறிதலையும் (நிகழ்காலம்) அறிதலின்மையையும் (எதிர்காலம்) நாம் கடந்து செல்கையில் இந்த நுண்-மரணத்தை உணர்கிறோம். ‘அவ்வளவுதான்’ என அவன் அறிய வரும் போது வாழ்தலை முழுமையாக அரவணைத்துக்கொள்கிறான். கடலில் மிதந்து குளியல் போடுவது, ஆரஞ்சு பழச்சுளைகளை வாங்கி இரசித்து உண்பது, மரணம் நிகழும் போது மரணப்படுக்கையில் இருப்பவர் இழுத்துக்கொண்டே இருப்பது என நாவலின் ஒவ்வொரு முக்கியச் சம்பவமும் உளவாதலின் அபாரமான சித்தரிப்புகள்தாம்.

மரணம் என்பது வாழ்வுதான் என்பதே “இடைவெளியின்” மகத்தான கண்டுபிடிப்பு. இதையொரு கவிதைத் தொகுப்பைப் போல அவ்வளவு செறிவாக பக்கத்துக்குப் பக்கம் நுட்பமான உருவகங்கள் வழி அவர் ஒரு மெய்யியல் துப்பறியும் நாவல் போல நகர்த்தி வருவதே இதன் வாசிப்பின்பம். இதுவே “இடைவெளியை” ஒரு தன்னிகரற்ற நாவல் ஆக்குகிறது. 

3 comments

Senthil kumar April 26, 2021 - 11:30 am

ஆர். அபிலாஷ் இடைவெளி நாவல் பற்றிய விமர்சனம் அற்புதமாக இருக்கிறது.

VIGNESHKUMAR NATTUDURAI May 8, 2021 - 9:03 am

காலத்திற்கு வெளியே இருந்து தான் இறப்போ பிறப்போ வேலை செய்ய முடியும் என்ற பகுதி புரியவில்லை

j kannan June 4, 2021 - 5:02 pm

மிக அற்புதமான விளக்கம் மற்றும் விமர்சனம்

Comments are closed.