தந்தையைக் கொன்ற தனயன்: ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வியல் பார்வையில் தஸ்தாயேவ்ஸ்கி

4 comments

இலக்கியத்திற்கும் உளவியலுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு பற்றி புதிதாகச் சொல்லத் தேவையில்லை. கலைகள், குறிப்பாக இலக்கியம், மனித மனதின் எண்ணங்களுடைய சிக்கல்களை, உணர்ச்சிகளின் கொந்தளிப்பை, இவற்றின் விளைவாக அவனது நடவடிக்கைகளில் ஏற்படும் மாறுபாடுகளைப் புனைவாகவும் கவிதையாகவும் வடிக்கின்றன. மனிதனின் எண்ணம், உணர்ச்சிகள், செயல்பாடு ஆகிய மூன்றின் சமநிலைச் சீர்குலைவையே (Disorder) மனநலமும் அறிவியல்பூர்வமாக விளக்கி விடைகாண முயல்கிறது. மனம் என்பது வெறுமனே மூளையின் மின்னோட்ட இரசாயன மாற்றங்கள் மட்டுமல்ல. அதில் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட ஆளுமை, சமூகம் எனப் பல்வேறு காரணிகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதை உடல், உளவியல், சமூக மாடல் (Bio-psychosocial model) என்கிறது மனநலம். இதனாலேயே மற்ற மருத்துவத் துறைகளைவிட மனநல மருத்துவம் சமூகத்தோடு நெருங்கிய தொடர்புடையது. இதன் பொருட்டே சமூக உளவியல்துறை என்ற பிரிவு தன்னளவில் தனித்துறையாக விளங்குகிறது.

தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையேயான சமநிலைச் சீர்குலைவை ஆராயும்போது அதன் வெளிப்பாடான இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் ஆராயாமல் இருக்க முடியாது. பல இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் உளவியல் அறிஞர்கள் ஆராய்ந்திருக்கின்றனர்.

படைப்புகளை உருவாக்க மன நெருக்கடிகள் எப்படி உந்துதலாக இருக்கின்றன, உளவியல் சிக்கல்கள் எப்படி குறியீடுகளாக படைப்புகளில் வெளிப்படுகின்றன என்பதையெல்லாம் பல உளவியலாளர்கள் ஆராய்ந்திருக்கின்றனர். ஷேக்ஸ்பியரின் பல படைப்புகள், கதாபாத்திரங்கள், அவற்றின் மனநிலைகள் ஆராயப்பட்டிருக்கின்றன. குடிகாரர்கள் மனைவி மீது சந்தேகப்படும் நோய்க்கு ஒதெல்லோ சிண்ட்ரோம் (Othello syndrome) என்றே மனநல மருத்துவத்தில் பெயர். படைப்பாளியின் உளவியல் என்று பார்த்தால் ஓவியர் வான்காவைப் பல்வேறு உளவியலாளர்கள் பகுப்பாய்வு செய்திருக்கின்றனர்.

தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளிலுள்ள மன நெருக்கடியைச் சித்தரிக்கும் ஓவியம்

அந்த வகையில் மிக முக்கியமான இடம் தஸ்தாயேவ்ஸ்கிக்கு இருக்கிறது. அவரது வாழ்க்கை பல்வேறு கொந்தளிப்பான காலகட்டங்களைச் சந்தித்திருக்கிறது. அவரது வாழ்வுக்கும் அவரது புனைவுகளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அவரது ஆளுமைச் சிக்கல்கள், மன நெருக்கடிகள் போன்றவைகளை அவரது கதைமாந்தர்கள் அப்படியே பிரதிபலிப்பார்கள். நிஜத்திற்கும் புனைவுக்குமான வேறுபாடுகள் எளிதில் புலப்படாத வெளியே அவரது கதைவெளி.

அறிவியக்க காலத்துக்குப் (Age of Enlightment) பின் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உளவியல் மருத்துவம் என்பது ஒரு முறையான அறிவியல் துறையாக உருப்பெற ஆரம்பித்தது. அதற்குமுன் தத்துவவாதிகள், மத குருமார்கள் ஆகியோர்தான் மனநல பாதிப்புகளுக்குக் காரணம் கற்பித்து தீர்வு சொல்லிவந்தனர். மருத்துவத் துறை மனநலத்தைக் கண்டுகொள்ளவே இல்லை எனலாம். மூளையில் ஏற்படும் குணப்படுத்த முடியாத மாறுபாடுகள் என்ற அளவிலேயே அதன் புரிதல் இருந்தது. காப்பகங்களில் அடைத்து வைத்துக் கட்டிப்போடுதல், அமைதிப்படுத்த மருந்து கொடுத்தல் என்ற அளவிலேயே அதன் சிகிச்சை முறைகள் இருந்தன.

தனிமனிதனின் ஆளுமை, சமூகச் சிக்கல்கள் ஆகியவை காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு உளவியல் மருத்துவத்துறை உருப்பெற ஆரம்பித்தது. அந்த வகையில் உளப்பகுப்பாய்வியல் (Psychoanalysis) என்னும் முறையை உருவாக்கி ஒரு காலகட்டத்தில் மாபெரும் செல்வாக்குடன் விளங்க வைத்தவர் சிக்மண்ட் ஃபிராய்ட். ஆழ்மனதின் விழைவுகள், சிறுவயது அனுபவங்கள், பெற்றோர்- சமூகத்தின் கட்டுப்பாடுகள் இவைகளே உளவியல் சிக்கல்களாக வெளிப்படுகின்றன என்பதே இதன் ஒருவரிச் சுருக்கம் (One liner).

மனநோயின் அறிகுறிகள் மட்டுமல்ல, கனவுகளும் இந்தச் சிக்கல்களின் வெளிப்பாடே என்பது ஃபிராய்டியப் பள்ளியின் மாபெரும் கண்டுபிடிப்பு. அதுமட்டுமல்ல, ஒரு கலைஞனின் படைப்புகளும் அவனது நனவிலி மனதின் (unconscious) சிக்கல்களின் வெளிப்பாடே. சுருக்கமாகச் சொல்லப்போனால், மனநோயின் அறிகுறிகள், கனவுகள், இலக்கியப் படைப்புகள்- இவை மூன்றும் ஆழ்மன உளவியல் சிக்கல்களின் வெவ்வேறு வகையிலான குறியீடுகளே என்கிறது உளப்பகுப்பாய்வியல்.

சிக்மண்ட் ஃபிராய்ட் உளப்பகுப்பாய்வு முறையில் கொடுத்த பல விளக்கங்களுக்கு நீட்ஷே போன்ற தத்துவவாதிகள் மட்டுமின்றி இலக்கியவாதிகளின் படைப்புகளும் உந்துதலாக இருந்திருக்கின்றன. அறிவியல், தத்துவம், வரலாறு, புனைவு எனப் பல்வேறு வகையிலான துறைகளின் மாபெரும் வாசகர் ஃபிராய்ட். கிரேக்கத் துன்பியல் நாடகங்கள் அவருக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தந்திருக்கின்றன. ஷேக்ஸ்பியரிடமிருந்து மனித மனம் பற்றி அவர் கற்றுக்கொண்டது ஏராளம். ஜெர்மன் மொழியினரான ஃபிராய்டுக்கு ஜெர்மன் மொழியின் தலைசிறந்த படைப்பாளியான கதே பெரும் ஆதர்சம். புகழ்பெற்ற கதே விருது சிக்மண்ட் ஃபிராய்டுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது (1930). ஃபிராய்டின் எழுத்துகளில் பல இடங்களில் ஷேக்ஸ்பியரும் கதேவும் வருகிறார்கள். மிக்கேலேஞ்சலோவின் சிற்பங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார் ஃபிராய்ட்.

1925 வாக்கில் ஜெர்மன் மொழியில் தஸ்தாயேவ்ஸ்கியின் முழுமையான படைப்புகள், அச்சில் வராத படைப்புகள், கடிதங்கள், குறிப்புகள் என எல்லாவற்றையும் செம்பதிப்பாக வெளியிடும் பணியில் ஃபியூலாப் முல்லர் என்பவரும் எக்ஸ்டீன் என்பவரும் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தஸ்தாயேவ்ஸ்கியைப் பற்றி ஒரு கட்டுரை தருமாறு சிக்மண்ட் ஃபிராய்டைக் கேட்டுக்கொண்டனர். அந்தச் செம்பதிப்பில் கரமசோவ் சகோதரர்கள் நாவலுக்கான முன்னுரை போல் சிக்மண்ட் பிராய்ட் தஸ்தாயேவ்ஸ்கியும் “தந்தைக் கொலையும்” (Dostoevsky and Parricide) என்ற கட்டுரையை 1927ஆம் ஆண்டு எழுதி அது 1928ஆம் ஆண்டு வெளிவந்தது.

தஸ்தாயேவ்ஸ்கியும் அவரது படைப்புகளும் உளப்பகுப்பாய்வியலுக்கான அருமையான மூலப்பொருட்கள். தஸ்தாயேவ்ஸ்கி மட்டும் ஃபிராய்டின் சோபாவில் படுத்திருந்தார் என்றால் உளவியல்துறைக்கு இன்னும் பல விளக்கங்கள் கிடைத்திருக்கும். தஸ்தாயேவ்ஸ்கிக்குப் பதிலாக அவரது படைப்புகளை சோபாவில் படுக்கவைத்து ஆராய்கிறார் ஃபிராய்ட்.

உளப்பகுப்பாய்வின் முக்கியக் கருத்தாக்கம் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus Complex). சோஃபோகிள்ஸ் (Sophocles) எழுதிய கிரேக்கத் துன்பியல் நாடகத்தில் தன் தாயையே அடையாளம் தெரியாமல் அவள்மீது ஆசைப்பட்டு தந்தையைக் கொன்றுவிட்டுத் தாயை அடையும் மகனாக ஈடிபஸ் இருக்கிறார். தாய் மீது இருக்கும் ஈர்ப்பு, தந்தையைப் போல் ஆக வேண்டும் என ஆசைப்படுதல், அவர் மீது உண்டாகும் வெறுப்பு, தந்தை நம்மைத் தண்டித்துக் காயடித்து விடுவாரோ என்ற பயம் (Castration anxiety), அதே நேரம் அந்த வெறுப்பு தரும் குற்றவுணர்வு எனப் பல்வேறு கூறுகள் ஈடிபஸ் காம்ப்ளக்ஸில் கலந்திருக்கின்றன. தஸ்தாயேவ்ஸ்கியின் ஆளுமையும் அவர் படைத்த கதாபாத்திரங்களின் செயல்பாடுகளும் இந்தக் கூறுகள் உடையனவாக இருக்கின்றன.

தஸ்தாயேவ்ஸ்கியின் ஆளுமையில் நான்கு கூறுகளை ஃபிராய்டு அடையாளப்படுத்துகிறார்.

1. கற்பனைத்திறன் மிகுந்த படைப்பாளி (Creative artist)
2. ஒழுக்கவாதி (Moralist)
3. பாவி (Sinner) அல்லது கிரிமினல்
4. மனநெருக்கடி கொண்ட மனப்பதற்ற நோயாளி (Neurotic)

படைப்பாளியாக தஸ்தாயேவ்ஸ்கியின் திறமையைக் கொஞ்சம்கூட சந்தேகிக்க முடியாது என்கிறார் ஃபிராய்ட். உலகின் தலைசிறந்த நாவல் கரமசோவ் சகோதரர்கள் என்கிறார். (நான் விரும்பும் நூறு புத்தகங்கள் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தில் கரமசோவ் சகோதரர்களை வைக்கிறார் ஓஷோ).

கரமசோவ் சகோதரர்கள்

இரண்டாவதாக உள்ள ஒழுக்கவாதியை கிண்டல் செய்து விமர்சிக்கிறார் ஃபிராய்டு. உண்மையான ஒழுக்கவாதி என்பவன் எந்தத் தவறையும் செய்யமாட்டான். தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வான். தன் மனம்போன போக்கில் மிகக் கீழான செயல்களை எல்லாம் செய்துவிட்டு, பின் ஒழுக்கத்தைப் போதிப்பது, மதத்தில் அல்லது அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களிடம் சரணடைவது ஆகியவையே தஸ்தாயேவ்ஸ்கியின் இயல்பாக இருக்கின்றன. இவான் என்னும் கொடூர ரஷ்ய மன்னன்கூட (Ivan, the terrible) இப்படித்தான் நடந்துகொண்டான். ரஷ்யர்கள் பொதுவாகவே இப்படித்தான் என்கிறார் ஃபிராய்ட். தஸ்தாயேவ்ஸ்கி அதிகாரத்தை எதிர்த்து பல கேள்விகள் எழுப்புகிறார். இதைக் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் கிராண்ட் இன்க்விஸிடர் (Grand Inquisitor) பகுதியில் காணலாம். மனிதனின் மீது மத நிறுவனங்கள் நிகழ்த்திய அதிகாரங்களை எல்லாம் கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பு அது. உலக இலக்கியங்களின் உச்சகட்டங்களில் ஒன்று இப்பகுதி என்கிறார் ஃபிராய்ட். ஆனால் மதங்களின் பிடியிலிருந்தும் அதிகாரத்தின் பிடியிலிருந்தும் மனிதனை விடுவிக்கக்கூடிய பெரிய வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டியவர், தான் செய்த பாவங்களுக்கு அஞ்சி கடைசியில் ஜார் மன்னனின் குறுகிய தேசியவாதத்திடமும் கிறிஸ்தவ மதத்தின் இறுகிய நிறுவன அமைப்பிடமும் சரணாகதி அடைந்துவிட்டார் எனக் குற்றஞ்சாட்டுகிறார் ஃபிராய்ட். இந்தக் கோழைத்தனம் அவரது மனப்பதற்றத்திலிருந்து வருகிறது.

மூன்றாவதாக, தஸ்தாயேவ்ஸ்கியிடம் ஃபிராய்ட் ஆராயும் ஆளுமைக்கூறு, பாவி அல்லது கிரிமினல்தன்மை. கிரிமினல் என்பவன் இரண்டு குணங்களைக் கொண்டிருப்பவன் என்கிறார். முதல் குணமாக, பிறருக்காக வருந்தும் குணமில்லாதவனாக இருப்பதைக் குறிப்பிடுகிறார். இரண்டாவது குணம், அழிக்கும் குணம். தஸ்தாயேவ்ஸ்கியை கிரிமினல் என்றோ குற்றவாளி என்றோ பலரால் ஒத்துக்கொள்ள முடியாது. அவர் மனிதர்கள் மீது பெருங்கருணை கொண்டவர். தனது முதல் மனைவியின் காதலனைக்கூட மன்னித்தவர். (இதை நாம் தஸ்தாயேவ்ஸ்கி எழுதிய ‘The eternal husband’ என்ற குறுநாவலில் காணலாம். மனைவியின் காதலனைச் சந்தித்து நட்போடு இருக்கிறான் ஒருவன். ஆனாலும் திடீரென வெறுப்பு வந்து அவனைக் கத்தியால் குத்திவிடுகிறான். இது பற்றி ஃபிராய்ட் சொல்லவில்லை. ஆனால் வேறு சில ஆய்வாளர்கள் எழுதியிருக்கின்றனர்) ஆழ்மனதில் தஸ்தாயேவ்ஸ்கிக்கு வெறுப்பும் அழிக்கும் குணமும் இருந்திருக்கின்றது. அதே அளவுக்கு மன்னிப்பும் குற்ற உணர்வும் இருந்திருக்கிறது. ஆகவே, அவரை நிச்சயமாக கிரிமினலாகவோ சமூக விரோதியாகவோ பார்க்க முடியாது. ஆனால் அவருக்குள்ள ஆழ்மன வெறுப்பு, வன்முறை, கொல்லும் வெறி எல்லாவற்றையும் அவர் இரண்டு வழிகளில் மடைமாற்றிக்கொண்டார்.

ஒன்று, அவரது படைப்புகளில் வரும் கதாபாத்திரங்கள் பலவும் அவரைப் போன்றே தோன்றி, அவரது ஆழ்மன விளைவுகளைப் பேசிச் செயல்படுத்தி, அந்த உந்துதல்களைக் குறைக்கின்றன. இரண்டாவதாக, அவரது அடிமன வன்முறையை அவர் தன் மீதே திருப்பிக்கொண்டார். அதாவது தன்னையே அழித்துக்கொள்ளும் மேசோகிஸ்ட்டாக மாறிக்கொண்டார். கட்டுப்பாடுகளற்ற பயணங்கள், இலக்கில்லா வாழ்க்கை, சூதாட்டம் என அவர் தன்னைத்தானே அழித்துக்கொண்டார். இதுதான் அவரது ஆளுமையின் நான்காவது கூறான மனப்பதற்ற நோயாளி (Neurotic) ஆக வெளிப்படுகிறது என்கிறார் ஃபிராய்ட்.

பசி, காமம், வன்முறை போன்ற ஆழ்மன விழைவுகளை ‘இட்’ என்கிறது உளப்பகுப்பாய்வியல் (ID- Instinctual Drive). பிறந்த குழந்தை இவ்வுணர்வுகளை எந்தத் தடையும் இன்றி வெளிப்படுத்துகிறது. பசித்தால் உண்ண வேண்டும். கோபம் வந்தால் அடிக்கும். கிட்டத்தட்ட விலங்குகள் போல. கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோர், சமூகம் போடும் கட்டுப்பாடுகள் அதன் மனசாட்சியாக (Conscience) மாறுகிறது. இதை சூப்பர் ஈகோ என்கிறது உளப்பகுப்பாய்வியல். இட் என்னும் ஆழ்மன விழைவுகளுக்கும் இந்த சூப்பர் ஈகோ என்னும் மனசாட்சிக்கும் இடையே சமன்பாட்டை (Synthesis) ஏற்படுத்துவதே ஈகோ என்று அழைக்கப்படும் மனதின் ஒரு பகுதியின் செயல்பாடாகும். மேலதிகாரியைக் குத்த வேண்டும் என இட் சொல்லும். குத்துவது பெருங்குற்றம் என சூப்பர் ஈகோ சொல்லும். சரி, மேஜையைக் குத்தி உன் கோபத்தை மடைமாற்று (Displacement) என்கிறது ஈகோ .

ஆழ்மன விழைவுகளைப் பயனுள்ளதாக சமூகச் செயல்பாடுகளிலும் பக்தியிலும் மடைமாற்றுவார்கள் சிலர். படைப்பாளிகளும் தங்கள் ஆழ்மன உணர்வுகளை உன்னதமான கலைப் படைப்புகளாகவும் இசையாகவும் மாற்றுவார்கள். கற்பூரம் கரைவதைப் போன்ற இவ்வுருமாற்றத்தைப் பதங்கமாதல் என்கிறார்கள் (Sublimation). சிலசமயம் தங்கள் கதாபாத்திரங்கள் மூலமாக நேரடியாகவோ குறியீடுகளாகவோ வெளிப்படுத்துகிறார்கள் (Symbolism).

ரஸ்கோல்நிகாவை அச்சுறுத்தும் குற்றவுணர்வு

தஸ்தாயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் பலவற்றில் இதைக் காணலாம். குற்றமும் தண்டனையும் நாவலில் நாயகன் ரஸ்கோல்நிகாவ், தனது தாயின்- சகோதரியின் தயவில், அவர்கள் அனுப்பும் பணத்தில் உயிர்வாழ்கிறான். அவனுக்கு அது குறித்த குற்ற உணர்வு இருக்கிறது. அதே நேரம் அவர்கள் கடிதங்களில் மறைமுகமாக அவனைக் குறைசொல்வதைப் புரிந்துகொண்டு அவர்கள் மீது கோபமும் ஆத்திரமும் கொள்கிறான். அவர்கள் மீது செலுத்த முடியாத வன்முறையை அடகுக்கடை பெண்மணியான அல்யோனா இவனோவ்னா மீது மடைமாற்றி அவளைக் கொன்றுவிடுகிறான். இது அவன் தனது தாய், சகோதரி மீது கொண்டிருக்கும் வெறுப்பின் குறியீடே என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். ஃபிராய்ட் குற்றமும் தண்டனையும் பற்றிக் குறிப்பிடவில்லை. அவர் கரமசோவ் சகோதரர்களைப் பற்றியே பேசுகிறார்.

தஸ்தாயேவ்ஸ்கியின் தந்தை மிகுந்த கண்டிப்பானவர். அவர் மீது தஸ்தாயேவ்ஸ்கிக்கு வெறுப்பு இருந்திருக்கிறது. அந்த வெறுப்பினால் தனது தந்தை இறந்துபோக வேண்டும் என அவர் விரும்புகிறார். ஆனால் அந்த ஆசை அவருக்குக் குற்ற உணர்வையும் பயத்தையும் உண்டாக்குகிறது. தன்னைக் காயடித்துவிடுவாரோ என்ற பயம். அதனால் அவர் தன் தந்தைக்கும் தந்தையைப் போன்ற அதிகார வர்க்கத்திற்கும் அடிபணிந்து விடுகிறார். பின்னாளில் ஜார் மன்னனுக்கு அடிபணிந்ததும் இதனால்தான். புரட்சிகரமாகப் பேசியவரால் ஒரு புரட்சியாளனாக மாற முடியாமல் போனது இதன் காரணமாகத்தான் என்கிறார் ஃபிராய்ட்.

தஸ்தாயேவ்ஸ்கிக்குப் பதினெட்டு வயதாகும்போது அவரது தந்தை  இறந்துவிடுகிறார். அவரை அவரிடம் வேலை பார்த்த வேலையாள் ஒருவன் கொன்றுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். இது உண்மையல்ல, அவர் இறந்தது மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் எனச் சிலர் சொல்கின்றனர். தஸ்தாயேவ்ஸ்கியின் தந்தை இறந்த கணம் அவரது ஆழ்மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். அதுவும் ஒருவரால் கொல்லப்பட்டு இறந்தது அவருக்கு மிகுந்த மனநிறைவைத் தந்திருக்கும். அதே நேரம் அந்த மனநிறைவு கடும் குற்ற உணர்வையும் தந்திருக்கும். அவரது சூப்பர் ஈகோ அவரைப் பார்த்து ‘நீ செத்துப் போ!’ என வற்புறுத்தி இருக்கும். கொல்லும் விழைவான இட்டுக்கும் கண்டிப்பான சூப்பர் ஈகோவிற்கும் சமரசம் செய்கிறது தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்பாற்றல் ஈகோ.

தஸ்தாயேவ்ஸ்கிக்கு வலிப்பு வரத்தொடங்கியது. இது மூளையில் ஏற்படும் நோய்களால் தோன்றும் வழக்கமான வலிப்பு அல்ல. இது உணர்ச்சி மேலிடுவதால் வரும் ஹிஸ்டீரியா போன்ற வலிப்பு (Hysterical Epilepsy). மிகுந்த உணர்ச்சிக் கொதிப்பில் இருக்கும் தஸ்தாயேவ்ஸ்கியின் ஈகோ, அவரது வன்முறை விழைவுகளை உள்முகமாகத் திருப்பி, தன்னைத்தானே வருத்திக்கொள்வதன் மூலம் சூப்பர் ஈகோவைக் கொஞ்சம் திருப்திப்படுத்திக்கொள்ள முயல்கிறது. வலிப்பு வருவதற்கு முன் சில நொடிகள் இறந்துவிடுவது போன்ற ஒரு சமாதி நிலைக்குத் தான் செல்வதாகவும் அப்போது அளப்பரிய மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் திளைப்பதாகவும் தஸ்தாயேவ்ஸ்கி குறிப்பிடுகிறார். இதுபோன்று வலிப்பில் வரும் பரவச நிலையை தஸ்தாயேவ்ஸ்கியன் வலிப்பு (Dostoevskian Epilepsy) என்றே அழைக்கிறது மனநல மருத்துவம். இந்தப் பரவசத்துக்கு இரண்டு காரணங்களை ஃபிராய்ட் சொல்கிறார்.

ஒன்று, இறந்துபோவது போன்ற நிலையில் தன்னைத் தனது தகப்பனாக, குறீயீட்டு ரீதியாகக் கற்பனை செய்துகொண்டு, தகப்பன் இறந்துவிட்டதால் அடையும் மகிழ்ச்சியாக அவரது ஈகோ நினைக்கிறது. இரண்டாவதாக, அவரது சூப்பர் ஈகோவைத் திருப்திப்படுத்தவும் குற்ற உணர்வைக் குறைக்கவும் அவருக்குத் தரும் தண்டனையாக இந்தச் சாவு போன்ற நிலையை அவரது ஈகோ தருகிறது என்கிறார் ஃபிராய்ட்.

தன்னை நோக்கியே திருப்பிக்கொண்ட இந்த வன்முறையும் அழிக்கும் வெறியுமே அவரைச் சூதாடி ஆக்கியது. வாழ்வின் சகல கீழ்மைகளுக்கும் முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுக்க வைத்தது. தல்ஸ்தோய் போன்று நிதானமான மனநிலையை அடைய முடியாமல் கொந்தளிப்பிலேயே இருக்க வைத்திருக்கிறது.

கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் ட்மிட்ரி, தஸ்தாயேவ்ஸ்கியின் மனதில் இருக்கும் வக்கிரங்களின் வடிகாலாவான். தந்தையைக் கொல்ல நினைக்கிறான், வாழ்வின் படுபாதாள நிலையில் இருக்கிறான், சூதாடுகிறான், தந்தையைக் கொல்கிறான். எல்லாவற்றுக்கும் மேலாக அவனுக்கும் வலிப்பு நோய் இருக்கிறது. தந்தையைக் கொல்வதற்கான நியாயமான காரணங்கள் அவனுக்கு இருக்கின்றன. இவையெல்லாமே தஸ்தாயேவ்ஸ்கியின் ஆழ்மன விகாரங்களை, விழைவுகளைக் குறீயீடாக்கி அவரது ஈகோ தன்னைத் தீர்த்துக்கொள்வதன் வெளிப்பாடே!

சுருக்கமாகச் சொன்னால், கண்டிப்பான தந்தை மீது தஸ்தாயேவ்ஸ்கிக்கு ஆழ்மனதில் வெறுப்பும் வன்முறையும் இருக்கிறது. அதோடு குற்ற உணர்வும் பயமும் இருக்கிறது. அந்த வெறுப்பைத் தன்மீது திருப்பி சுயவதை செய்தும் கதாபாத்திரங்களில் குறியீடாக்கியும் அவரது ஈகோ திருப்தி அடைகிறது. அவரது ஈடிபஸ் காம்ப்ளக்ஸின் இரு துருவநிலை அதிகாரத்துக்கு எதிராகக் கேள்வியும் கேட்கும். அதனிடம் சரணாகதியும் அடையும்.

இதைத்தான் ஃபிராய்ட் தனது கட்டுரையில் சொல்கிறார். கட்டுரையை முடிக்கும்போது தனது சமகாலத்தவரான ஜெர்மனிய எழுத்தாளர் ஸ்டெஃபன் ஸ்வெயிக் (Stefan Zweig) எழுதிய ’24 hours in the life of a woman’ என்ற இன்னொரு கதையைப் பற்றிச் சொல்கிறார். அதில் எப்படி சூதாட்டம் என்பது அடிமனதின் ஈடிபஸ் சிக்கல்களாலும் மசோகிஸ சுயவதையின் வெளிப்பாடாகவும் அமைகிறது என்று சொல்லி கட்டுரையை முடிக்கிறார். (ஸ்டெஃபன் ஸ்வெயிக்கின் ‘ராயல் கேம்’ என்ற கதை ஒரு தவிர்க்கக்கூடாத க்ளாசிக்).

Dostoevsky and Parricide கட்டுரையை மறுவாசிப்பு செய்தபோது சிக்மண்ட் ஃபிராய்டு,  தஸ்தாயேவ்ஸ்கி ஆகிய இரு ஆளுமைகள் மீதும் பிரமிப்பு கூடுகிறது. எப்பேர்ப்பட்ட மகத்தான சிந்தனைகளைத் தந்திருக்கிறார்கள்! ஜி.நாகராஜன் சொன்னது போல் சல்லித்தனமும் மகத்துவமும் கலந்து செய்த கலவைதான் மனிதன். இரண்டும் விளையும் மண்தான் நம் மனம். அதை ஆழ்ந்து புரிந்துகொள்ளவும் இன்னும் நம்மை மேம்படுத்திக்கொள்ளவும் உளவியலும் இலக்கியமும் இதுபோல் கைகோர்த்துச் செல்ல வேண்டும். தற்கால மனநல மருத்துவம் முழுமையான அறிவியல் துறையாக மட்டுமே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. உளப்பகுப்பாய்வு சிந்தனைக் கருத்துகள் பல நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் மனநல மருத்துவம் என்பது சமுதாயத்தோடும் தனிமனித உளவியலோடும் நெருங்கிய தொடர்புடையது என்பதை வலியுறுத்த இது போன்ற முயற்சிகள் அவசியம் தேவை.

*

உதவிய கட்டுரைகள்:

1.Sigmund Freud’s “Dostoevsky and Parricide”, in Standard Edition of The Complete Psychological Works of Sigmund Freud, Translated from German by James Strachey, Vol XXI (1927-1931)

2. Pavlovic, R., & Pavlovic, A. (2012). Dostoevsky and psychoanalysis: The Eternal Husband (1870) by Fyodor Dostoevsky (1821–1881), British Journal of Psychiatry, 200(3), 181-181. doi:10.1192/bjp.bp.111.093823

4 comments

Gopalakrishnan April 26, 2021 - 8:41 am

Good
Well conceived

Anithabai April 26, 2021 - 9:45 am

Nice sir…it’s in simple language…that everyone could understand psychology…
Inspiring to read those books…

Moorthy Somasundaram April 26, 2021 - 10:04 am

Excellent Doctor.

சு. ராம்தாஸ் காந்தி April 26, 2021 - 11:41 am

நல்லது.

Comments are closed.