1
காப்பியக் காலத்தில் நாம் மதம், மொழி, இனம் வழியாகப் பல மையங்களைக் கட்டமைத்தோம். அதற்குப் பிறகு ‘கதை’ என்கிற விஷயம் பெரிய அளவில் வேறு வடிவம் எடுக்கவில்லை. சொல்லப்போனால், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என்கிற பெயரில் வர்ணனைகள், கேலிகள், ஆபாசம் என்கிற அளவிலேயே நம் மொழியும் கவித்துவமும் இலட்சியவாதம் கொண்ட பெருங்கற்பனைகளும் சுருங்கிப் போய்விட்டன. இன்னொரு புறத்தில் பௌராணிகர்கள் ‘கதையை’ பக்திக்கான கச்சாப்பொருளாக எடுத்துக்கொண்டு புராணங்களிலிருந்து உருவியதைச் சொந்தச் சரக்குகளோடு சேர்த்து மக்கள் கூட்டத்தை வாய்மொழியால் புளகாங்கிதம் அடையச் செய்திருந்தனர்.
‘நாவல்’ என்கிற வடிவம் தமிழுக்கு வந்தபோது,
1. காப்பியங்களின் கூடுதலான வர்ணனை பாணி
2. தனிப்பாடல்களின் அசட்டுத்தமான கேலி, கிண்டல்கள்
3. பௌராணிகர்களின் நீட்டி முழக்கும் வசன நடை
ஆகியவற்றையும் தனக்குள் இணைத்துக்கொண்டது. ஆங்கில, ரஷ்ய நாவல்களைப் போல் தமிழ் நாவல்கள் அந்தக் காலகட்டத்தில் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் நவீனமடையவில்லை.
தமிழின் முதலிரு நாவல்களான பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் ஆகியவை இதற்கான சான்றுகள். இலங்கையில் சித்திலெப்பை மரைக்காயர் எழுதிய ‘அசன்பே சரித்திரமும்’ அப்படித்தான் அமைந்திருந்தது. கமலாம்பாள் சரித்திரத்தைப் பொறுத்தவரை கதாபாத்திரங்கள், வசனங்கள், ஒன்றிரண்டு காட்சி அமைப்புகள் ஆகியவற்றிலாவது கொஞ்சம் மாற்றம் இருந்தது. ஆனால், உள்ளடக்கத்திலும் வசன நடையிலும் படைப்பாளியின் விசேஷப் பார்வை சார்ந்த அணுகுமுறையிலும் ஆரம்பகாலத் தமிழ் நாவல்களில் பெரும்பாய்ச்சலை நிகழ்த்திய நாவல் என்று ‘பத்மாவதி சரித்திரத்தை’த் துணிந்து கூறலாம்.
ஆனால், இன்றுவரை பல முன்னோடி விமர்சகர்களும் தற்கால விமர்சகர்களும் ‘கமலாம்பாள் சரித்திரத்தையே’ கூடுதலாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த நாவலின் முதற்பாகமாவது பாத்திரங்களின் சித்தரிப்பால் ஓரளவு நன்றாக இருக்கும். இரண்டாம் பாகம் முழுக்க ‘வேத விசாரம்’ என்கிற பெயரில் அதீதமான பக்ககங்களைத் தின்று செரித்திருப்பதாகவே நான் உணர்கிறேன். மிக நீண்ட தத்துவ மரபும் பக்தி சார்ந்த மொழி நெகிழ்வும் கொண்ட தமிழின் விசேஷமான மரபுகளை உள்வாங்காமல் அந்த நாவலின் இரண்டாம் பகுதி அந்தரத்தில் நின்று தத்தளிக்கிறது.
அ.மாதவையா மீதான புறக்கணிப்புக்குக் கண்டிப்பாக இலக்கிய விமர்சனப் பார்வைகள் மட்டுமே காரணமல்ல. மாதவையா என்கிற மனிதர் தன்னளவில் உண்மையான சீர்திருத்தவாதியாக இருந்ததோடன்றி, ஆழமான சுய சமூக விமர்சனம் கொண்டவராகவும் இருந்தார். தமிழில் இன்றுவரை எழுதுகிற எழுத்தாளர்களில் சுய சாதியை அந்தரங்கச் சுத்தியோடு கேள்விக்கு உட்படுத்தியவர்கள் மிகவும் குறைவே. விதிவிலக்காக அப்படிப் பேசுமிடங்களிலும்கூட கவனமான பூசி மெழுகல்களை அந்த எழுத்திலிருந்து நம்மால் உணர முடியும். தொன்மம், மரபு என்கிற பெயரில் பலரும் ஏதோவொரு வகையில் சுயசாதிப் பெருமிதங்களைத் தங்கள் படைப்புகளில் உயர்த்திப் பிடித்திருக்கின்றனர்.
மாதவையா அப்படிப்பட்டவரல்ல. அதற்கு நேர்மாறானவர். அதனால்தான் அந்தக் காலகட்டத்தில் எந்தப் பார்ப்பனரும் யோசிக்காத ஏராளமான சீர்திருத்தக் கதைகளைச் சர்வசாதாரணமாக எழுதியிருக்கிறார்.
‘சாணார்களைப்’ பார்ப்பனர்கள் இழிவாக நடத்தியதையும் ஆங்கிலேயர்களால் கிடைத்த கல்வி, கிறிஸ்தவ மதம் ஆகியவற்றின் துணைகொண்டு அந்தத் தீண்டாமையை அவர்கள் வெற்றிகொண்டதையும் ‘தந்தையும் மகனும்’ கதையில் எழுதியிருக்கிறார். துரையிடம் வேலைசெய்கிற பறையன் குப்பனிடம் பார்ப்பனர்களின் சாஸ்திர அகங்காரம் வேலை செய்யாமல் போய்விடுகிறது. அவன் அக்ரகாரத்திற்குள்ளேயே குதிரையில் வரும் காட்சியைக் ‘குதிரைக்காரக் குப்பன்’ என்கிற கதையில் எழுதியிருக்கிறார். அன்று சாதி சார்ந்த கொடுமைகள் நிலவுடைமைச் சமூகத்தால் இயல்பென்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், ஆங்கிலேயர் வருகைக்குப் பின் காவல் நிலையம், நீதிமன்றம் போன்ற ஜனநாயக அமைப்புகள் உருவெடுத்தன. சாணான் ஒதுங்காத காரணத்தால் தனக்கு முள் குத்தியதாகக் கருதிய பார்ப்பனர் ஒருவர் மறவர்களை வைத்து அவரை நையப்புடைத்து விடுகிறார். ஆனால் அந்தச் சாணார் கிறிஸ்தவராகி விட்டதால் வழக்கம் போல் ‘சாதிக் கட்டுப்பாடு’ என்கிற பெயரில் அடியை ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அந்தப் பார்ப்பானை அபராதம் கட்ட வைத்துவிடுகிறார். இந்தச் சித்திரங்களை எல்லாம் அவர் ‘ஐயோ காலம் மாறிவிட்டதே’ என்கிற அழுகுரலில் நின்று எழுதவில்லை. தர்க்கமில்லாத வெற்று ஆவேசமும் அந்தக் கதைகளில் இல்லை. ‘இதுதான் சரியான நீதி’ என்கிற படைப்பாளியின் குரல் அந்தக் கதைகளில் அழுத்தமாக வெளிப்படுகிறது. அதனால்தான் மாதவையா மிக முக்கியமானவராகிறார்.
ஆனால் வெறும் சீர்திருத்தக்காரனாக இல்லாமல் மாதவையா அசலான கலைஞனாகவும் இருக்கிறார். ஏனென்றால் தனி மனிதனின் அகத்தில் ‘சீர்திருத்தம்’ சில சமயங்களில் ‘புதுமை விரும்புதல்’ என்கிற தற்காலிக உணர்வாகவும் தோன்றி வடிந்து விடக்கூடும். இந்த உணர்வைப் பல்வேறு வகையான உரையாடல்கள் வழி வளர்த்தெடுக்காமலோ போராட்டங்கள், சமூக மாற்றங்கள் வழி கனிய வைக்காமலோ உணர்ச்சிப் பெருக்கின் வழி நின்று அந்தரத்தில் தலைகீழாகக் குதிக்க முயன்றால் என்ன நிகழும் என்பதை அவர் நுட்பமாக ஆராய்ந்த கதைதான் ‘ஏணியேற்ற நிலையம்’. அந்தக் கதையில் கிட்டத்தட்ட வ.வே.சு ஐயரின் ‘சமபந்தி ஆசிரமத்திற்கு’ நிகரான சித்திரத்தையே காண்கிறோம்.
அந்தக் கதையில் வருகிற இராமலிங்கம் சிறையிலிருந்து திரும்பி வந்தபின் அக்காலகட்டத்தில் புகழ் பெற்றிருந்த இரு புதுமைகள் குறித்து யோசிப்பார். 1.கதர் 2.சமபந்தி.
‘கதர்’ ஆடைக்காக உட்கார்ந்து நூல் நூற்பதற்கான பொறுமை தனக்கில்லை என்பதை உணர்ந்து சம்பந்தி போஜனத்துக்காக ஓர் ஆசிரமம் அமைப்பார். ‘நான் ஒரு பிராமணன். ஏணியின் உச்சத்தில் நானிருக்கிருறேன். சகலரும் இந்தச் சமபந்தியாகிய ஏணியின் வழியேறி என்னைப் போல் உச்சத்திற்கு வர வேண்டும்’ என்று தன் ஆசிரமப் பெயருக்கு தானே விளக்கம் கூறி பெருமையடைந்து கொள்வார். ஆனால், சமபந்தியின் தொடக்கத்திலேயே ஏதேதோ காரணங்கள் சொல்லி புலால் உணவு நிராகரிக்கப்பட்டுவிடும். பார்ப்பனர், முதலியார், வெள்ளாளர், பறையர் என்று சில சாதிகளைச் சேர்ந்தவர்கள் அங்கு தங்கியிருப்பார்கள். ஆரம்பத்தில் பார்ப்பனர் சமைக்கிற போது சகலரும் உணவு உண்பார்கள். பிறகு தன் கொள்கைச் சாதனைக்கு அது போதாதென்று கருதி வெள்ளாளரை சமைக்கச் சொல்லுவார். பலரும் அந்த உணவைச் சாப்பிட மாட்டார்கள். அந்த வெள்ளாளச் சமையல்காரரே ‘மற்ற சாதிக்காரன் சாப்பிட்ட மிச்சத்தைச் சாப்பிடுவதா?’ என்றெண்ணி தன் உணவைத் தானே தொடாமல் வீட்டுக்குப் போய் சாப்பிடுவான்.
இதற்கிடையில் காந்தி அந்த ஆசிரமத்துக்கு வந்து இராமலிங்கத்தைப் பாராட்டிப் பேசுவார். அன்றிரவு இராமலிங்கம் புளகாங்கிதம் அடைந்து விரைவில் கிறிஸ்தவ, முஸ்லீம்களையும் தன் தயவால் ஏணியேற்ற வேண்டும் என்கிற நினைப்பு தந்த போதையில் மகிழ்ந்து கிடப்பார். ஆனால் மறுநாளே முதலிக்கும் பிள்ளைக்கும் சாதிப்பூசல் வரும். கடைசியாய் பறையனை சமைக்கச் சொல்ல சகலரும் வெளியேறி அவர் கனவுகண்ட ஏணி மரம் முறிந்து கீழே விழும்.
சிறுகதையின் தொடக்க காலத்திலேயே மாதவையா எழுதிய அற்புதமான பகடிக் கதை இது. ஆனால் பலரும் மாதவையாவின் சிறுகதைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே தமிழ்ச் சிறுகதை வரலாற்றை வ.வே.சு. ஐயரிடமிருந்து தொடங்குகின்றனர் என்பது துரதிருஷ்டவசமானது. இந்தப் பகடியும்கூட சமூகச் சீர்திருத்தத்தைக் கேலி செய்யும் ‘எலைட் மனநிலையில்’ நிகழவில்லை என்பது மிக முக்கியமான விஷயம். பொதுவாகவே அவரது பகடிகள் எல்லை மீறுவதில்லை. அந்தப் பகடியின் வழியாக தன் மீதான விசேஷ கவனத்தைப் பெற்றுவிடுவதற்கான யத்தனிப்புகளோ, சமூக உணர்வில்லாத அராஜக மனநிலையில் இருந்தோ, அதீத அகங்காரத்தின் உச்சியில் உட்கார்ந்தபடி உலகத்தின் மீதான அலட்சியம் நிறைந்த கேலிகளாகவோ அவரது பகடிகள் அமைவதில்லை. அவை அந்தந்தத் தருணங்களின் ஊசிக் குத்தல்களாகவே நம்மை விழித்தெழ வைக்கின்றன.
இந்தக் கதையில் அவர் மூன்று விஷயங்களைப் பேசுகிறார்-
1. அவசர கோலத்தில் நிகழும் தனி மனித உணர்ச்சிகளால் எந்தச் சமூக மாற்றமும் நிகழ்ந்துவிடாது.
2. அடுத்தவருடைய போதனையாலோ வாசித்த புத்தகம் தரும் அந்த நிமிடத்துப் பரவசத்தாலோ நிஜமான சமூக மாற்றத்தின் தொடக்கம் உருவாகிவிட முடியாது.
3. மனிதர்களின் சமூகச் செயல்பாடுகளுக்குள் அவர்களே அறியாமல் ஒளிந்து கிடக்கும் ஆணவம்.
சிறுகதைகள், கட்டுரைகளில் அவர் இந்தத் தார்மீக ஆவேசத்தையே தொடர்ந்து வெளிப்படுத்தினார். அதனால்தான் ‘இந்து இதழ்’ அவரை எழுதக் கூடாதென்று நிறுத்தி வைத்தது. பிறகு அவரே ‘பஞ்சாமிர்தம்’ என்கிற பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார்.
ஆங்கிலத்தில் அவர் எழுதிய ‘கிளாரிந்தா’ மிக முக்கியமான நாவல். ஆங்கிலப் பேராசிரியர் சரோஜினி பாக்கியமுத்து அதனைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தென்னிந்தியத் திருச்சபை குறிப்புகளில்கூட போதுமான ஆதாரங்கள் இல்லாத வரலாற்றுச் செய்திகளை உள்ளுணர்வின் தடத்திலும் வாய்மொழி வரலாறுகள் வழியாகவுமே மாதவையா தேடியிருக்க முடியும். எந்தப் பார்ப்பனரும் செல்லத் துணியாத பயணம் அது. ஒரு வகையில் யோசித்தால் வேண்டாத பாதை. ஆழ்ந்து யோசித்தால் இந்த நாவல்,
1. வைதீகம் பெண்களுக்கு இழைத்த மாபெரும் கொடுமைகளைச் சொல்கிறது.
2. வைதீகர்களின் பணத்தாசையை, அதிகாரத்துடனான ஒட்டுண்ணி உறவை அடையாளம் காட்டுகிறது.
3. கிறிஸ்தவ மத மாற்றத்தை வைதீகத்தின் கொடுமைகளுக்கு எதிரான தீர்வாக முன்வைக்கிறது.
4. விதவையாகி, பின் திருமணமில்லாமல் காதல் வாழ்க்கை வாழ்ந்து, கடைசியில் புனிதராகப் புறச்சமயத்தால் போற்றப்பட்ட புனிதம் தவறிய பெண்ணின் கதையைப் பேசுகிறது.
ஆனால், மாதவையா துணிந்து இந்த வரலாறை நாவலாக்கினார். பிறந்த அன்றே பெற்றோர்களை இழந்த மராட்டிய பார்ப்பனப் பெண் கோகிலா. இவளுடைய தாத்தா பண்டித ராவ், மராட்டிய மன்னன் பிரதாப சிம்மனின் குரு ஸ்தானத்தில் இருந்தவர். இவள் மீது பரிதாபம் கொண்டு அரசன் இரண்டு கிராமங்களை இவளுக்கு எழுதி வைக்கிறான். சொத்துகளை அடைவதற்காக திவானாக இருக்கிற பார்ப்பனன் இவளை மணக்கிறான். அவன் விரைவில் இறந்து போக வைதீகக் கூட்டம் சொத்துகளைக் கைப்பற்றும் பேராவலுடன் அவளைச் சிதையில் இறக்குகிறது (1770). அவள் மற்ற பார்ப்பனப் பெண்களைப் போல் தீப்பாயும் நெருப்பைக் கணவனின் மேனியென இறுக்கித் தழுவி சொர்க்கத்தில் விழிக்க ஒத்துக்கொள்ளாமல், ‘சதி’க்கு உடன்பட மறுக்கிறாள். அவளை ‘லிட்டில்டன்’ என்கிற ஆங்கிலேய அதிகாரி மீட்டுக்கொண்டு வந்து நெல்லையில் வாழ்கிறான். அவள் கிறிஸ்தவத்துக்கு மாற விரும்பியும், திருமணமாகாமல் அவள் அந்நிய ஆணுடன் வாழ்வதை உத்தேசித்து, ஞான ஸ்நானம் செய்து வைக்க திருச்சபை மறுக்கிறது. லிட்டில்டன் பதவிக்காலம் முடிந்து வெளிநாட்டிற்குச் சென்று இறக்கிறான். தன் சொத்துகளை அவளுக்கு விட்டுச்செல்கிறான். இப்போது அவள் வெறும் விதவை என்பதால் திருச்சபை அவளுக்கு ஞான ஸ்நானம் செய்து வைக்கிறது. அவள் கல்விக்கூடங்கள், தேவாலயங்கள் கட்டி இறைப்பணியும் கல்விப்பணியும் புரிகிறாள். அவள் வெட்டிய குளம்கூட ‘பாப்பாத்தியம்மாள் கிணறு’ என்று அழைக்கப்படுகிறது. உடன்கட்டையை மறுத்த முதல் பெண், திருநெல்வேலி பகுதியில் கல்விக்கூடம் கட்டிய முதல் பெண், கிறிஸ்தவராக மதம் மாறிய முதல் தென்னிந்தியப் பெண், தேவாலயம் கட்டிய முதல் தென்னிந்தியப் பெண் என்கிற பெருமைகளைப் பெற்றாள். அவள் உருவாக்கிய சபையில் வேலைக்காரி சாராள் உள்ளிட்ட பதிமூன்று வகையான சாதிகளைச் சேர்ந்த பெண்கள் இணைந்திருந்தனர்.
ஆயிரம் காவியங்கள் இந்தத் தேசத்தில் மலிந்திருந்தும் நவீனத்தை நோக்கி நகர்ந்த தன் சமூகப் பெண்ணின் துணிச்சல் நிரம்பிய கதையையே காவியமாகக் கருதி உரைநடையில் பதிவுசெய்ய முனைந்த மாதவையாவின் அகம் முற்போக்கான, சுய விமர்சனம் கொண்ட சீர்திருத்தத்தின் குரலாகவே எப்போதும் ஒலித்ததில் வியப்பென்ன இருக்க முடியும்?
காலனி ஆட்சி குறித்த எதிர்க்குரல் எழத் தொடங்கிவிட்ட காலத்தில், திலகர் யுகம் முடிந்து காந்தி யுகம் தொடங்கிய காலத்தில், மாதவையா பார்ப்பனராக இருந்தும் இந்த வரலாற்றுச் சம்பவத்தை நாவலாக எழுதியது சாதாரண விஷயமில்லை. அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர்களிடத்தில் நிகழ்ந்த ஆங்கிலேய எதிர்ப்பு தங்கள் வேத காலத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்கிற பேராவல் நிறைந்த சுயலாபக் கற்பனைகளை உள்ளடக்கித்தான் வளர்க்கப்பட்டிருந்து. பாரதியே பல இடங்களில் ‘ஆரிய தேசம்’ என்று பெருமிதம் கொள்கிறான். ‘ஆயிரம் உண்டிங்கு ஜாதி இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?’ என்று நீளும் கவிதைகளில் நாம் இந்தக் குரலையே கேட்கிறோம். பாரதியின் கட்டுரைகளில் இன்னும் வெளிப்படையாகவே இந்தப் பார்வை முன்வைக்கப்படுகிறது.
ஆனால் பார்ப்பனரான மாதவையா நேர் எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார். அவருக்குத் தேச விடுதலையைவிட சமூக விடுதலை முக்கியமானதாக இருக்கிறது. ஆதி திராவிடர்களை ‘இவர்களே மண்ணின் மைந்தர்கள்’ என்று தயக்கமில்லாமல் கொண்டாடுகிறார். ‘தீண்டத்தகாதவர்களை மனிதரிலும் கீழாய் நடத்திக்கொண்டு நாம் ஆள்பவர்களிடம் உரிமை கேட்பது வெட்கத்திற்குரியது’ என்று கட்டுரைகளில் ஆவேசம் கொள்கிறார்.
‘எனக்கு இருக்கிற நினைவுகளின் துணைகொண்டு யோசித்துப் பார்க்கிற போது நாங்கள் இருவரும் அன்று பல்லக்கில் போனோம். மறுநாள் அவன் தனியாய் பாடையில் போனான். இதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். நான் பிறக்கும் போதே கைம்பெண்ணாகப் பிறக்கவில்லை’ என்று இளம் கைம்பெண்ணின் துக்கத்தைக் கலை நயத்தோடு ஊரறிய தூக்கிப் போடுகிறார். மாதவையாவின் இத்தகைய மனோபாவமும் தொடர் செயல்பாடுகளும் அவர் மீதான பார்ப்பனர்களின் மன விலக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம். அவருக்குப் பிந்தைய நாட்களில் காந்தியுடனோ பெரியாருடனோ அம்பேத்கருடனோ நெருக்கமான தொடர்பு இருந்ததாகவோ இவர்களின் கொள்கைகளால் நேரடியாக உத்வேகம் அடைந்தவராகவோ தெரியவில்லை. அவர் தன்னளவில் முற்போக்கான சுதந்திரச் சிந்தனையாளராகவே தோற்றமளிக்கிறார். ஆனால், பிரம்ம சமாஜிகளைப் போல, ஐரோப்பிய கல்வியால் பெற்ற பகுத்தறிவும் முற்போக்கான பார்வைகளும் அவரிடத்தில் தாக்கம் செலுத்தியிருக்கின்றன.
கூடுதலாக அவரிடத்தில் ஒரு படைப்பாளிக்கே உரிய நீதியுணர்வும் சொந்தச் சமூகம் சார்ந்த விமர்சனமும் நிறைந்திருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்ட சதிக்கு எதிரான சாரதா சட்டம், விதவை மறுமணச் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாதவையா நன்கு உணர்ந்தவராயிருந்தார். இந்தப் பின்னணியில் வைத்தே அவருடைய ‘பத்மாவதி சரித்திரம்’ நாவலை நாம் மதிப்பிட முடியும்.
2
‘பத்மாவதி சரித்திரம்’ கதை என்று பார்த்தால் மிகச் சாதாரணமான ஒன்றுதான். ஆத்திரத்தால் ஜெயிலுக்குப் போன ஒரு தகப்பனாலும் காமத்தின் பிடியில் அகப்பட்டுக்கொண்ட மற்றொரு தகப்பனாலும் இரு குடும்பங்கள் அனுபவிக்கும் துயரச் சம்பவங்களே கதை. காலங்காலமாக நம் ஞான மரபு முன் வைக்கும் காம, மோக, குரோதங்களால் மனித மனங்கள் அல்லலுறுவதையே மாதவையாவும் உரைநடையில் பதிவுசெய்திருக்கிறார். கூடுதலாக, இரண்டு ஜோடிகளின் காதலும் ஒரு இளம் விதவையின் அவலம் நிறைந்த வாழ்க்கையும் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நாவலை அதன் வசன நடையும் சமகாலத்தைப் பிரதிபலிக்கும் காட்சிகளும் நீதியின் பாற்பட்ட முற்போக்கான பார்வையுமே முக்கியமான நாவலாக மாற்றுகிறது. கதையின் தொடக்கத்தில் வரும் நீதிமன்றக் காட்சியும் சாவித்திரியை வீழ்த்துவதற்கான நாகமையரின் நுணுக்கமான செய்கைகளும் பண்ணை சேஷையரின் கல்யாணத் திருவிளையாடல்களும் இன்றளவிலும்கூட வாசிப்பு சுவாரஸ்யத்திற்குத் தீனிபோடும் காட்சிகள்தான்.
சமூக உறவுகள் சார்ந்து மேல் மட்டத்தில் இருக்கிற பார்ப்பனர்களின் சகல விதமான போலித்தனங்களையும் மாதவையா இரக்கமேயின்றி விமர்சித்திருக்கிறார். நாவலில் நாராயணன் குடும்பம் சந்திக்கும் அத்தனை அவலங்களுக்கும் அவனுடைய தந்தை சீதாபதி ஐயர் கோபத்தால் சிறைக்குச் செல்வதுதான் காரணம். ஆனால் அவருடைய குணச்சித்திரத்தை இரக்கமூட்டும் வகையில் மாதவய்யா நமக்குப் படைத்துக் காட்டவில்லை. அவரைக் ‘கள்ள சாட்சி சொல்பவர், உருட்டு புரட்டு பண்ணுபவர், கையொப்பமில்லாத மொட்டை மனுக்கள் எழுதி குற்றமில்லாரைக் குற்றப்படுத்துகிறவர், ஏழைகளைப் பயமுறுத்தி பணம் பறிப்பவர்’ என்கிற கல்யாண குணங்களுடனேயே மாதவையா அறிமுகப்படுத்துகிறார். சொல்லப்போனால், நாவலின் தொடக்கமே இந்தத் ‘திவ்யமான’ அறிமுகம்தான்.
கோர்ட்டில் பொய்சாட்சி சொல்லும் சந்தர்ப்பவாதியான சாஸ்திரிகள், தப்பும் தவறுமாக மந்திரம் சொல்லி பணத்தைப் பிடுங்க ஆளாய்ப் பறக்கும் புரோகிதர்கள், பெண்களைப் பணக்காரர்களுக்குக் கூட்டிக்கொடுத்து பொருளீட்டும் பார்ப்பனர்கள், கண்ணியமான குடும்பத்தில் பிறந்தும் காமவெறி பிடித்து அலையும் பண்ணை சேஷையர், பெண்கள் மீது எந்த மரியாதையுமின்றி அவர்களை அனுபவித்து கசக்கி எறியத் துடிக்கும் சுந்தரையர், நாகமையர், சங்கரையர் என்று கண்ணியவானான அவர் வெறுத்து ஒதுக்கும் மானுடக் கீழ்மைகளைக் கொண்ட அனைத்து கதாபாத்திரங்களையும் பார்ப்பனர்களாகவே படைத்திருக்கிறார். மிக மோசமான பெண்களாக நாவலில் காட்டப்படும் சாலா, காமாட்சியம்மாள், கமலாம்பாள் ஆகியோரும் பார்ப்பனர்களே! பண்ணை சேஷய்யரை வஞ்சனூரைச் சேர்ந்த ஒரு ஏழைப் பார்ப்பனர் குடும்பமே கூட்டுசேர்ந்து மிக மோசமாக ஏமாற்றுகிறது.
பிறப்பின் அடிப்படையிலும் குலத்தின் அடிப்படையிலும் மனிதர்களின் குணாதிசயங்களைப் பாகுபாடு செய்த பார்ப்பனியத்தை நிராகரித்து, நல்லதும் கெட்டதும் மனிதர்களின் பழக்கத்தால் ஒட்டிக்கொள்கிற விஷயங்கள் என்கிற புரிதலே மாதவையாவை அந்தக் காலகட்டத்தில் முக்கியமானவர் என்று நம்மை எண்ண வைக்கிறது.
சொந்த வாழ்க்கையில் பதினைந்து வயதில் குழந்தைத் திருமணம் செய்த மாதவையா, நாவலில் சில குழந்தைத் திருமணங்களைப் பதிவுசெய்திருக்கிறார். மாமியார் இன்னொரு குழந்தை பெற்ற தருணத்திலும் மனைவி இன்னும் ருதுவாகாமல் இருக்க, அவளுடனான சாந்தி முகூர்த்தத்திற்காக ஏக்கத்தோடு காத்திருக்கிற இளைஞர்களை மாதவய்யா சித்தரித்திருக்கிறார். ‘கமலாம்பாள் சரித்திரத்தோடு’ ஒப்பிடுகிற போது திருமணம், சாந்தி முகூர்த்தம், மரணம் ஆகியவற்றின் புறச்சடங்குகளை மாதவையா விரிவாகப் பதிவுசெய்யவில்லை. அவற்றால் கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் அகச்சிக்கல்களிலேயே அவருடைய கவனம் குவிகிறது. மனதளவில் அவர் ஐரோப்பியத் தன்மைகொண்டவர் என்பதும் இப்படிப்பட்ட சித்தரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். நாவலில் ஓர் இடத்தில், சாதாரண அரசு அதிகாரிகளுக்கு மக்கள் கூடுதலாக மரியாதை தருவதை பக்கத்தில் காணக்கிடைக்கிற சிறு தெய்வங்களுக்குக் கிடைக்கிற மரியாதை என்றும் கவர்னர், கலெக்டர் போன்ற பெருந்தெய்வங்கள் உலகை உய்வித்துவிட்டு மறைந்தே இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இது மாதிரியான அதிர்ச்சியூட்டும் உவமையைக் கூறுவதற்கு பார்ப்பனராக இருந்தும் அவருடைய ஐரோப்பிய மனதுக்குத் தடையே இல்லை. பிறப்பின் அடிப்படையில் தம் ஆளாக இருந்தும் பார்ப்பனர்கள் அவரை நெருக்கமாக உணராமல் இருப்பதற்கு அவருடைய இந்த மனோபாவமே மிக முக்கியமான காரணம்.
நாவலில் பார்ப்பன விதவைகளுக்கு நேர்கிற கொடுமை ஒரே ஒரு இடத்தில் நுணுக்கமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பேரழகியாக இருந்தும் எப்போதும் கண்ணாடி பார்ப்பதில் கவனம் செலுத்தாத, அலங்காரங்கள் செய்து தன்னை வியந்துகொள்ளாத சாவித்திரி இளம் வயதிலேயே தலை சிரைக்கப்பட்டு அலங்கோலமான நிலையில் கண்ணாடி பார்க்கையில் ஓவென்று அலறி மயங்கி விழும் சித்திரம் வழியாக அந்தச் சமூகக் கொடுமையின் அவலத்தை நமக்கு ஒரே பத்தியில் உணர்த்திவிடுகிறார்.
ஆண், பெண் உறவின் நுட்பங்களை மாதவையா நுணுக்கமாக எழுதியிருக்கிறார். தன்னைவிடப் பல மடங்கு பேரழகியான சாவித்திரியால் சுந்தரையருக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும் மனதளவில் அதைக் கடப்பதற்காகவே அவளை விதவிதமாக கொடுமைப்படுத்துவதும் நாவலில் காட்சிகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அழகே இல்லாத மறத்தியான சுடலி மீது அவருக்கு வரும் ஈடுபாட்டிற்குப் பின்னாலிருக்கிற அகக்காரணிகளை மாதவையா விரிவாகப் பேசவில்லையென்றாலும் அதன் வேர்களை யூகிக்க இயலும். காமம் என்கிற பெரும்பிசாசு இயல்பில் நல்லவராக இருக்கிற பண்ணை சேஷய்யரையும் படுமோசமான பிறவியான நாகம்மையரையும் இருவேறு விதமாக ஆட்டுவிப்பதை நாவலில் காண முடிகிறது.
சகல அவமானங்களுக்குப் பிறகும் உறவுகள் தன்னை விட்டு முழுமையாக விலகிய பிறகும் சேஷய்யர் குற்ற உணர்வின் வடுக்களை ஏந்திக்கொண்டே காமத்தின் பாதங்களில் சரணடைந்து கிடக்கிறார். ‘மருந்தீடு என்று சொல்வதெல்லாம் வீண்பேச்சு, கட்டுக்கதை என்று இதுவரை நினைத்திருந்தேன். இப்போது அது மெய்யென்றே எண்ண வேண்டியிருக்கிறது’ என்று தன் அப்பா பற்றி சாவித்திரி குறிப்பிடுகிறாள். காமம் வசிய மருந்தாகவே மனிதனை ஆட்கொள்வதற்கான உதாரணமாக பண்ணை சேஷய்யர் இருக்கிறார். இதன் மறுமுனையில் அடி வாங்கி அவமானப்படுத்தப்பட்டாலும் மருந்துக்குக்கூட எந்தவிதமான குற்ற உணர்வும் கொள்ளாத காமாந்தகனாக நாகமையர் இருக்கிறான். அவனுடைய காமம், எந்த எல்லைக்கும் செல்வதற்கான தூண்டுகோலாக நின்று அவனை இயக்கிக்கொண்டிருக்கிறது.
கோபாலின் காமம் மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோபாலும் நாராயணனும் எதிரெதிர் இயல்பு கொண்டவர்கள். நாராயணன் ஆழமானவன், கோபால் மேலோட்டமானவன். நாராயணன் வெளியில் கண்ணியவானாக இருந்தாலும் மனதிற்குள் காம எண்ணங்களால் அலைகழிக்கப்படுகிறவன். கோபால் மனைவியுடனான அனுபவங்களுக்கு முன் அது மாதிரியான குழப்பங்கள் இல்லாத சாதாரணன். நாராயணன் சங்கீதம், கலை என்கிற தேடல்கள் கொண்டவன். கோபால் வெறும் பணக்காரன். ஆனால் காலம் வைக்கிற சோதனையில் நாராயணன் காமத்தின் இழுவிசைக்குள் சிக்காமல் தப்பித்துவிடுகிறான். கோபால் தன்னையுமறியாமல் அதில் சிக்கி மீள்கிறான். தன் அக்காவிடம் தவறாக நடந்துகொள்ளத் துடிக்கும் நாகமையருக்கு புத்தி புகட்ட வேண்டும் என்பதற்காக அவன் நாகமையர் மனைவி சாலாவைக் கையைப் பிடித்து இழுத்து பயமுறுத்த நினைக்கிறான். அவளோ விளையாட்டை வினையாக்கும் தீய நோக்கில் கையை விலக்கிக்கொள்ளாமல் அவனை நெருங்கிவந்து கொஞ்சுகிறாள். அப்போதைக்கு ‘ச்சீ போ’ என்று வெறுத்து விலகினாலும் மோகம் அவன் மனதில் தீயாகப் பற்றிக்கொண்டு அவனறியாத இரகசிய இடத்தில் கொழுந்துவிட்டு வளர்ந்து, உரிய சந்தர்ப்பத்தில் அவனையே உள்ளே தள்ளி இரையாக்குகிறது.
காமம் மனிதனின் ஆழ்மனதில் இருந்து அவனுக்கே தெரியாமல் அவனை நுட்பமாக இயக்குவதற்கான மிகச்சிறந்த உதாரணமாக கோபாலைக் கொள்ளலாம். அவனுக்கு மனைவி கல்யாணியுடன் இருக்கிற உறவும் சரி, சாலாவுடன் உருவாகிற உறவும் சரி, அரைப் பின்னங்களே. இரண்டிலுமே அவன் ஒரே நேரத்தில் மூழ்கிக் களிக்கிற அதே நேரத்தில், எரிச்சலும் அடைகிறான். இந்த நிறைவின்மையே கோபாலனின் வாழ்வை ஆட்டி வைக்கிறது. நாராயணன்- பத்மி உறவு அழகானது. ஆனால் அதற்குள் சந்தேகம் என்கிற பேய் புகுந்து கெள்கிறது. தன் மனதை விலக்கி நின்று பார்த்து ஆராய்ச்சி செய்யும் நாராயணனுக்கு அந்த இயல்பே பிறரையும் அவ்வாறு தவறாகக் கருதுமிடத்திற்குக் கொண்டுசேர்க்கிறது. அவனுடைய அதீத நுண்ணுணர்வே அவன் காதலையும் கொல்கிறது. கடைசியாக, பத்மியின் நிபந்தனையற்ற பேரன்பில்தான் அவன் மீள்கிறான்.
நாராயணன் – சாவித்திரி உறவு விசித்திரமானது. அந்த உறவில் சாவித்திரிக்கு எந்தப் பங்கும் இல்லை. அவளைப் பொறுத்தவரை அவனும் தம்பி கோபாலனும் ஒன்றுதான். இது முழுக்க முழுக்க அவன் அகம் இரகசியமாகப் பெருக்கி வளர்த்துக்கொண்ட பிம்பம் மட்டுமே. உண்மையில் அவன் தன் மன ஆழத்தில் பத்மியைவிடக் கூடுதலாக அக்காளைப் போன்ற சாவித்திரியையே காதலிக்கிறான். நாகமையர் சாவித்திரிக்குப் புத்தகம் படிக்கத் தருகிறார் என்பதைக் கேள்விப்பட்டவுடன் அவனுக்குள் பரவும் பொறாமையும் சாவித்திரிக்கு அவன் எழுதிய மொட்டைக் கடிதாசியைக் கண்டு பெருகி வரும் ஆத்திரமும் அதற்கான சான்றுகள். ஆனால் உள்ளுக்குள் ‘இந்தக் காதல் தவறு ‘என்கிற புரிதலும் இருக்கிறது. ஆழ்மனதின் இரகசிய ஆசைகளுக்கும் மேல் மனதின் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் இடையில் சிக்கித் தவித்து குழப்பத்தில் உழலும் நாராயணன் பத்மியுடனான உறவுக்குப்பின் தனக்குள் எரியும் அந்தரங்கத்தின் தழலைத் தீவர்த்தியாக ஏந்தி கருவறையை அடைந்து சாவித்திரியைத் தனக்கான குலதெய்வமாக உருவகம் செய்துகொள்கிறான். திருமணமான பிறகும் வயதுக்கு வராத மனைவிக்கான காத்திருப்பில் அவன் நொடிகளைக் கொல்லும் மோகத்தைத் தீர்க்க வேசிகளை நாட யத்தனிக்கிறான். அந்தச் சூறாவளியில் சிக்கிக்கொள்ளாமல் அவனைக் காப்பாற்றுவது பத்மியுடனான காதல் அன்று, சாவித்திரி மீது வைத்திருக்கும் வழிபாடு நிறைந்த பெருங்காமம் என்பதை அவன் அகம் மட்டுமே அந்தரங்கமாக அறியும். ‘இது தெரிந்தால் சாவித்திரி நம்மோடு பேச மாட்டாள்’ என்கிற ஒற்றை எண்ணமே அவனை வேசிகளிடம் செல்லாமல் மீட்கிறது. இந்த உணர்வைச் சொல்வதற்கு அபூர்வமான படிமமொன்றை மாதவையா பயன்படுத்தியிருப்பார்.
‘விரல்களை மெதுவாய் நக்குவதில் துளித்துளியாய் ஊறும் இரத்தத்தை ருசி பார்த்துக்கொண்டு சாந்தமாய் வாலாட்டி நிற்கும் ஒரு புலிக்குட்டி, திடீரென்று கையை இழுத்துக்கொள்ளவே தனக்கு இயற்கை குணமான மூர்க்காவேசங்கொண்டு எஜமானனையே அடித்துக்கொன்று தின்னப் பாய்வது போல், தன் சுபாவத்தையும் உக்கிரத்தையும் வெளிப்படுத்தியது…’ என்கிற வரிகளில் நாம் உணர முடிகிற காட்சி அபூர்வமான ஒன்று. அவனை அடித்துக் கொன்றுவிடும் புலியாக அவள் மீதான காமத்தை உருவகம் செய்திருக்கிறார். மோகமுள்ளில் பாபு யமுனா மீது கொள்கிற விசித்திரமான உறவுக்கு முன்னோடிக் கதையாக நாராயணன் – சாவித்திரி உறவை மதிப்பிட முடியும்.
சங்கரனின் குணச்சித்திரம் அலாதியான ஒன்று. தனக்கு வாய்த்த அனுபவங்களால் அவன் பெண் குலத்தையே ‘உட்காரச் சொன்னால் படுத்துவிடும் சிகாமணிகளாக’ குறைத்து மதிப்பிடுகிறான். அதிலிருந்து விலகி அவன் ஈகோவைச் சீண்டிய பத்மியைத் துள்ளத் துடிக்கக் கதற விடுகிறான்.
தமிழ் நாவல் வளர்ச்சியின் தொடக்க காலத்திலேயே உரைநடையில் எந்த முன்னுதாரணமும் இல்லாத சூழலில் இவ்வளவு நுணுக்கமாகப் பாத்திரங்களின் குணச்சித்திரத்தை வடிவமைத்து சம்பவங்கள் வழி அவர்களை ஆராய்வது அபூர்வமான படைப்புத் திறனாகும்.
நாவலில் ‘கிறிஸ்தவம்’ குறித்து இரு விதமான சித்தரிப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். மாதவையாவுக்கு ‘பிற மத வெறுப்பு’ என்பது அறவே இல்லை. கிறிஸ்தவ மதத்தின் சேவைகளையும் ஆங்கிலேயர்களால் கிடைத்த நவீனக் கல்வியையும் அவர் இந்தத் தேசத்திற்குக் கிடைத்த வரங்களாகவே கருதுகிறார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரி ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பை வியந்து போற்றுகிறார். சென்னையில் உள்ள சாதாரண வண்டிக்காரனிடம்கூட ‘அது மில்லர் ஸ்கூல்’ என்று பதிந்து போயிருக்கிற ஒற்றைக் காட்சி வழி மில்லரின் ஆளுமையையும் கிறிஸ்தவர்களின் கல்விச் சேவையையும் நமக்குள் பதிய வைத்துவிடுகிறார். கல்விக்கூடங்களில் பைபிள் வாசிப்பதுகூட அவருக்குத் தவறாகப்படவில்லை.
“ஆகாயத்திலிருந்து பல இடங்களிலும் பொழியும் நீரெல்லாம் எவ்விதமாக கடைசியில் சமுத்திரத்தை அடைகின்றதோ, அதுபோலவே கடவுளை நாம் எந்த நாமத்திலும் ரூபத்திலும் வணங்கிய போதிலும் எல்லாவற்றையும் சர்வேசுவரனாகிய ஸ்ரீ கேசவரே ஏற்றுக்கொள்கிறார்” என்று பைபிள் வாசிக்கப்படுவதற்காக வயிறு எரிந்து சபிக்கும் பார்ப்பனர்களைச் சாந்தப்படுத்தும் நோக்கில் நாராயணனின் ஆசிரியரான ராகவைய்யர் கூறுகிறார். ஆனால், கிறிஸ்தவ மதத்தின் மதமாற்றத்தில் நிகழும் கொள்கையே இல்லாத அபத்தத்தை ஓரிடத்தில் சுட்டியிருக்கிறார். அப்பா இரண்டாம் திருமணம் செய்துகொண்டு தன் கல்யாணம் குறித்து யோசிக்காத கோபத்தில் சங்கரன் திருமண ஆசைக்காகவே கிறிஸ்தவனாக விரும்புகிறான். அவன் தேடிப்போன பாதிரிமார்கள் அவனுக்குப் புத்திசொல்லி அனுப்பி வைக்காமல் வேலை மெனக்கெட்டு ஞானஸ்நானம் பண்ணி வைப்பார்கள். “நம்முடைய தேவன் பாவிகளாகிய நம்மைக் காப்பாற்றும் பொருட்டு சிலுவையில் இறந்தார் என்று நம்புகிறீரா?” என்று அருட்தந்தை சங்கரனிடம் கேட்பார். அவனுக்குச் சிலுவை என்றால் என்னவென்றே தெரியாது. அதைப் பார்த்ததும் இல்லை. ‘சிலுவை’ என்பது இயேசுநாதர் இறந்த ஊராக இருக்கும் என்று எண்ணி அவன் ‘நம்புகிறேன்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவான். இந்த அபத்தத்தை அவர் எவ்விதமான சாய்வுகளுமின்றி மிக நுணுக்கமாகப் பகடி செய்திருக்கிறார்.
நாவலில் வரும் பல சமூகங்கள் குறித்த சித்தரிப்புகள் அன்றைய காலகட்டத்தின் நடைமுறை யதார்த்தம். வெள்ளாளர் உள்ளிட்ட சகல ஜாதிகளையும் பார்ப்பனர்கள் பகிரங்கமாக ‘சூத்திரர்’ என்றே அழைத்திருக்கின்றனர். ‘வெள்ளாலப் பயலே! என்ன கொழுந்து போய்விட்டதோ? தில்லும்முல்லும் பேசலாச்சா? பிலே, எங்கே இன்னும் ஒரு தரம் சொல்லு, உன் நாக்கை அறுத்து விடுகிறேன்’ என்று கூப்பாடு போட்டு சீதாபதி பிள்ளை ராமபிள்ளையை அறையும் சித்திரம் நாவலில் வருகிறது. முதலியார்களுக்குப் பார்ப்பனர்கள் மீதிருக்கும் கடுப்பு சுட்டப்படுகிறது. வெள்ளையர்களின் சிறை விதிகள் சமமாக இருந்தாலும் சிறை அதிகாரிகளான பார்ப்பனர்கள் சக ஜாதிக்குக் காட்டும் குறைந்தபட்ச சலுகை பேசப்பட்டிருக்கிறது. ஊரில் சகலரையும் அடக்கி ஆண்டு எதிர் கேள்விகள் இல்லாமல் திரிந்த பார்ப்பனர்களை ‘நீதிமன்றம்’ என்கிற ஜனநாயக வடிவத்தின் வழி உள்ளே நுழைந்த ஒன்றிரண்டு வெள்ளாளர்களும் முதலியார்களும் பதவிகளைப் பயன்படுத்தி பழிவாங்கும் சூழல் சொல்லப்பட்டிருக்கிறது. காமாந்தகனான முதலியார் நீதிபதி, துலுக்கப் பெண் மீது கை வைத்ததால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகி இருக்கிறது. இன்றைக்கு ஆண்ட பரம்பரையாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் ஒரு சாதியினர், ஐயரின் மாட்டு வண்டிக்குப் பின்னால் காவல் கூலிகளாக பல கிலோ மீட்டர் தூரத்திற்குத் தடிகளோடு ஓடிவரும் நிகழ்வு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த சுருக்கமான சமூகச் சித்திரத்தை இந்த நாவலில் காண முடியும்.
நாவலின் மிகப்பெரிய பலம் அதன் வசனங்களும் காலங்களைக் கடந்த நவீனத் தன்மையும்தான். கோபாலன் – கல்யாணி திருமணத்தின் போது கல்யாணிக்கு நிஜத்தில் அவன் மீது காதலென்று எதுவும் இருந்ததா என்று கூற வந்த மாதவையா, ‘கல்யாணி தன் கணவன் மேற்கொண்ட காதலில் அணிகளுக்குரியது எவ்வளவு, இயற்கை அழகாயுள்ள மேனியழகுக்குரியது எவ்வளவு, அவன் குணத்துக்கும் கல்வித் தேர்ச்சிக்குமுள்ளது எவ்வளவு, அவன் தனத்துக்கும் யௌவனத்துக்குமுள்ளது எவ்வளவு, அவன் தன் நாயகனாய் அமைந்த விதியினால் தனக்கு வேறு போக்கின்மைக்குரியது எவ்வளவு, நாள்தோறும் வளரும் பழக்கத்துக்குரியது எவ்வளவு, மற்ற காரணங்களுக்குரியது எவ்வளவு, ஆக மொத்தம் காதலே எவ்வளவு என்று பகுத்து, தொகுத்து அளவிடக்கூடிய கணித நூலை எம் ஆசிரியர் எமக்குக் கற்பித்திலர்’ என்று எழுதியிருக்கிறார்.
மாதவையாவின் பெயரை மட்டும் மறைத்து ‘இந்த வரிகள் யார் எழுதியவை?’ என்று இப்போது ஊகிக்கச் சொன்னால் பலரும் சுஜாதா என்றோ சுந்தர ராமசாமி என்றோ ஆதவன் என்றோ அவரவர்க்கு எட்டிய கைப்பிடி மணலின் ஞாபகத்தில் சொல்லக்கூடும். ‘காதல்’ என்கிற புனித வஸ்துவை நவீனத்துவ எழுத்தாளர்கள் அளவிற்கு விலகி நின்று பார்க்கிற தனித்துவம் நிறைந்தவர் மாதவையா. சீப்பின் பற்களைப் போல் மனிதர்கள் குலங்களாகவும் சாதிகளாகவும் ஓராயிரம் உடல்களில் ஒற்றை மனம் கொண்டு வாழ்ந்த காலத்திலேயே ‘மனிதர்கள் தனித்தனியான தீவுகள்’ என்று எழுதி அந்நியமாதலின் சாயலை வெளிப்படுத்திய எழுத்தாளராகவும் மாதவையா இருந்திருக்கிறார் என்பது ஆச்சர்யம்தான்.
அதே அளவுக்கு ரொமாண்டிசத் தன்மையோடும் அவரால் எழுத முடியும். சாவித்திரியின் அழகில் தன்னையிழந்து மயங்கிய நாராயணன், அவள் குரலை முதன்முதலாகக் கேட்கும் போது அடைந்த உணர்வினை, “ஒரு மூடனான சிவபக்தனை மார்கழி மாதம் திருவாதிரையன்று கண்ணைக் கட்டிக்கொண்டு போய் சிதம்பரத்தில் நடராஜ மூர்த்தி சந்நிதியில் தொண்டர் முழக்கத்துக்கு மத்தியில் கற்பூரம் ஆடும் போது திடீரென்று கண்ணைத் திறந்துவிட்டால் அத்தருணத்தில் அவன் இதயமிருக்கும் நிலைக்கு ஒருவாறு ஒப்பிட்டுக் கூறலாம்” என்று வர்ணிக்கிறார். இந்த வரிகளை எழுதியது தி.ஜானகிராமனோ வண்ணதாசனோ என்று ஒருவர் சத்தம் போட்டுச் சொன்னாலும் நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடுவோம்.
தன் மகளைவிட வயதில் குறைந்த பெண்ணைப் பணத்திமிருக்காகத் திருமணம் செய்யப்போகிற பண்ணை சேஷய்யரின் தோற்றத்தைப் பார்த்து அங்கிருப்பவர்கள் ஏடாகூடமாகப் பேசுகின்றனர். அதிலொருவர், ‘மாப்பிள்ளை வெள்ளி மயிரினால் பெண்ணுக்கு மிஞ்சி செய்யலாம்’ என்று கூறுவதாக சொற்சிக்கனமான கவித்துவத்துடன் மாதவையா எழுதுகிறார். இப்படிப் பல்வேறு விதமான எழுத்து பாணிகளுக்கான மூலகர்த்தவாக மாதவையா இருந்திருப்பதை நாவலெங்கும் உணர முடிகிறது.
நாவலின் மிக முக்கியமான பலவீனங்கள் மூன்று-
1. பெண் பாத்திரங்களின் அக உலகை அவர் ஆண் பாத்திரங்கள் அளவுக்கு யதார்த்தமாகச் சித்தரிக்கவில்லை.
2. ஆசிரியரே அடிக்கடி இடையிட்டுப் பேசி கருத்து சொல்வது நாவலின் ஓட்டத்தைத் தடைசெய்கிறது. பல இடங்களில் பாத்திரங்களின் பெயர் போட்டு நாடகப் பாணியில் எழுதியிருக்கிறார்.
3. சில இடங்களில் அவர் உதாரணமாகக் காட்டும் தமிழிலக்கிய, ஆங்கில இலக்கிய மேற்கோள்கள் நாவலோடு பொருந்தியிருந்தாலும் பல இடங்களில் அவை துருத்தி நிற்கின்றன.
உரைநடையில் முன்னோடிகளே இல்லாத காலத்தில் எழுதப்பட்ட நாவலில் இவற்றைக் குறைகளென்று கூற முடியாவிட்டாலும் அவருடைய பிற நிறைகளை வைத்துப் பார்க்கிற போது காலத்தை வைத்து அவரை மதிப்பிட முடியாது. அவர் காலம் கடந்த எழுத்தாளர். அவருடைய ஏராளமான நிறைகள் எப்படி காலம் என்கிற வரையறைக்குள் பொருந்தாமல் நிற்கின்றனவோ, அதே மாதிரிதான் குறைகளையும் விமர்சனங்களுடன் மதிப்பிட வேண்டிய தேவை இருக்கிறது.
பெண் கதாபாத்திரங்களைப் பொறுத்தவரை அவருடைய மிக முக்கியமான பிரச்சினை சமூகவெளியில் வெளிப்படுகிற அவருடைய இலட்சியவாதக் குரல் இங்கும் வெளிப்பட்டு விடுகிறது.
அவர் கற்ற ஆங்கிலக் கல்வியின் வாயிலாக,
1. விதவை மறுமணம்
2. உடன்கட்டை ஒழிப்பு
3. பால்ய விவாக நீக்கம்
4. பெண் கல்வி
ஆகிய நான்கையும் அவர் பெண்களுக்கான உரிமைகளாக வழிமொழிகிறார். குடும்பம் என்கிற தளத்தில் ஆண் வெறுமனே பாலியல் ரீதியாகப் பெண்ணைக் கையாள்வதைத் தாண்டி அவளை அறிவுப்பூர்வமான துணையாகக் கருதி இருவரும் இணைந்து அறிவுத்தேடல்களைப் பரிமாறிக்கொள்வதன் வழி உருவாகும் பாலியல் கிளர்ச்சியே உயர்ந்ததென்று கருதுகிறார்.
இந்தியக் குடும்பங்களின் பாரம்பரியமான புனித உருவகங்களான ‘அடங்கி, ஒடுங்கி, ஆக்கிப்போட்டு, புள்ளை பெத்து, குடும்பத்திற்காகத் தியாகம் செய்து, கற்பால் மோட்சம் அடைவதை’ நிராகரித்து, ‘மரபுகளின் தடைகளை வென்று, கல்வி கற்று, அறிவுத் துணையாகி, கற்பால் மிளிர வேண்டும்’ என்று மாற்றி யோசிக்கிறார்.
பெரியாரைப் போலவே வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெண்களின் நகைப்பித்து, அலங்காரப் பித்தைக் கேலி செய்கிறார். அவருடைய இலட்சிய உருவகமான நாராயணன் அந்த எண்ணங்களின் முழு வடிவமாக இருக்கிறான்.
ஆனால், பெண் ‘புனிதமானவள்’ என்கிற கட்டமைப்பை அவர் எழுத்துகள் தாண்டவில்லை. அவர் மரபின் புனிதங்களுக்கு நிகராக ஐரோப்பியத் தன்மைகொண்ட ‘நவீனப் புனிதத்தை’ பெண்ணின் மீது பூசிவிடுகிறார். அதே போல் ‘கற்பு’ என்கிற கோட்பாட்டின் மீதான தீவிர நம்பிக்கையும் அதைப் பெண்ணுக்கு அதிதீவிரமாக வலியுறுத்தும் மனோபாவமும் அவருடைய ஆளுமைக்குள் தீவிரமாகப் படிந்திருக்கின்றன. அவர் கற்ற முற்போக்கான கொள்கைகளுக்கு நேர் மாறாக, பெண்களின் அடிப்படை இயல்புகள் என்று சாஸ்திரங்களும் பழந்தமிழ் நூல்களும் டென்னிஸன் போன்ற ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் எழுதி வைத்த சிந்தனைகளும் அவர் மனதை ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த இரண்டுக்கும் இடையிலான உரசலுடன்தான் அவருடைய புனைவுலகம் பெண்களைக் கட்டமைக்கிறது.
இந்த மனோபாவத்தால்தான் ஆண் கதாபாத்திரங்களின் அக உலகை எந்தத் தடைகளுமின்றி அவர் ஆய்வுசெய்ததைப் போல் பெண்களின் உலகத்திற்குள் செல்லவில்லை அல்லது ஆழமாகச் செல்ல விரும்பவில்லை. அவர் உருவாக்குகிற பெண் கதாபாத்திரங்களின் மையக்கோடாக ‘கற்பு’ இருக்கிறது. கோட்டுக்கு இந்தப் பக்கம் இருப்பவர்களின் அக உலகை அவர் விரிவாகப் பேசுவதில்லை. சாலா, காமாட்சியம்மாள், கமலாம்பாளின் செய்கைகளை அவர் இயல்பாக வருணித்த அளவுக்கு பத்மாவதி, சாவித்திரி, கல்யாணி ஆகியோருடைய மனதின் உள்ளடுக்குகளை ஆராயவில்லை. அவர்கள் இதிகாசங்களில் வரும் புனிதக் கதாபாத்திரங்களைப் போலவே காட்சி தருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இணைகளாக வருகிற ஆண்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்திருக்கிறார்.
ஒப்பீட்டளவில் கல்யாணி கதாபாத்திரத்திரத்தின் சித்தரிப்பு கொஞ்சம் பரவாயில்லை. ‘உன் மீதும் தப்பிருக்கிறது. உன் குணாதிசயத்தால்தான் நான் சாலாவிடம் போனேன்’ என்று சொல்லும் கோபாலனிடம் அவள் கூறும் பதில் புத்திக்கூர்மை நிரம்பியது. ‘நீ செய்த இதே செயலை பத்மா செய்திருந்தால் நீயும் நாராயணனும் நல்லவளாக அவளை ஏற்றுக்கொள்வீர்களா? உன் இடத்தில் இருந்தாலும் நாராயணன் இதைச் செய்திருப்பானா?’ என்று கேட்பாள். கணவனிடம் இதைக் கூறும்போது விவரமாக தன்னை உள்ளடக்கிக் கூறாமல் பத்மாவதியை வைத்து அவனுக்குப் புரிய வைக்க முயல்கின்ற நுணுக்கம் முக்கியமானது. இந்த அளவுக்குச் சித்தரிக்கத் தெரிந்தும் சில புனிதங்களைக் கலைக்கக் கூடாது என்கிற எச்சரிக்கையுடனேயே அவர் பத்மாவதி, சாவித்திரி போன்ற கதாபாத்திரங்களைத் தட்டையாகப் படைத்துவிட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது.
சீர்திருத்தத்தின் ஆவேசமும் கலையமைதியின் நிதானமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற மாதவையா தமிழ் நாவலின் பெருமிதம் நிறைந்த முன்னோடி என்று ஏற்பதில் எனக்குத் தயக்கமே இல்லை. அடுத்த அரை நூற்றாண்டு வரை அவரைத் தாண்டுகிற நாவலாசியர்கள் தோன்றவுமில்லை. (சிறுகதைகளில் தோன்றி விட்டனர்) கவிதைகளால் சூழப்பட்ட பழங்காலக் குகையிலிருந்து பாய்ந்து வந்த உரைநடைச் சிறுத்தையின் பாய்ச்சலே இன்றைய புனைவுலகிற்கு வாய்த்த அனுகூலமாகக் கருதப்படுகிறது. அவர் படைப்பாளர் மட்டுமல்ல, அசலான சிந்தனையாளரும்கூட. ஏற்கனவே நவீனத் தமிழ் இலக்கிய உலகின் தொடக்கப் புள்ளியாக அடையாளம் காணப்பட்டிருக்கிற பாரதியின் ஆளுமையுடன் மாதவையாவை ஒப்பிட்டுத் தெளிகிற போதுதான் நாம் அவருக்கான சரியான இடத்தை வழங்க முடியும்.
*
உதவிய நூல்கள்: