அன்றைய ஆபிஸ் மீட்டிங் பூமர் சூயிங்கத்தைப் போல் இழுத்துக்கொண்டே போக, ஒரு வழியாக ஆறரை மணிக்கு மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன். அரைமணி நேரம் லேட். வீட்டிற்குக் கூட்டிச்செல்லும் ஆட்டோக்கார சுரேஷ் அண்ணா கீழே காத்துக்கொண்டிருந்தார். வீடு திரும்ப வேண்டும் என்கிற அவசரத்திலும்கூட லிஃப்டை நோக்கி நடந்துகொண்டே மொபைலில் ஹவுஸ் ஆப் மார்லி ஹெட்போனைச் சொருகி என்னுடைய விருப்பப் பாடல்கள் லிஸ்டை ஓடவிட்டேன். லிஃப்ட் வந்தது. உள்ளே நுழைந்தேன். காதில் “ஊத்திக்குனு கடிச்சிக்கவா, கடிச்சிக்குனு ஊத்திக்கவா” என்கிற பாடல் வரிகள் வந்து விழத்துவங்கின. சற்றே புத்துணர்ச்சி வர, பாடலை இரசிக்கலாம் என்கிற வேளையில் டர்பன் வைத்த சிங் இளைஞன் ஓடிவந்து லிஃப்டை நிறுத்தினான். திருவாளர் டர்பன்தான் மீட்டிங் இப்படி இழுவையாய் இழுத்ததற்குக் காரணம். எங்களின் ஐ.டி நிறுவனம் விற்கும் முக்கிய மென்பொருள் கம்பெனியின் சேல்ஸ் பார்ட்னர் அவன். நான் என் கம்பெனியின் மார்க்கெட்டிங் மேனேஜர். இவ்வளவு நேரமும் டர்பனோடுதான் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தோம்.

சிங் உள்ளே நுழைந்ததும் ஒரு அருமையான சின்த்தெடிக் புன்னகையை உதிர்த்தேன். ஆங்கிலத்தில் சம்பாஷணை துவங்கியது. லிஃப்ட் ஆறாவது மாடியில் இருந்து ஒவ்வொரு தளத்திலும் நின்று புறப்பட்டது. “வீட்டுக்குப் போறிங்களா?” சிங் கேட்டான். “இல்லடா, இங்கேயே தூங்கப் போறேன் உன்னால” என்று நினைத்துக்கொண்டு, “ஓ, எஸ்… வீட்டுக்குத்தான்” என்றேன். “குட்… குட்” என்றான். லிஃப்ட் ஐந்தாவது தளத்தில் வந்து நின்றது. லிஃப்ட்டில் நாங்கள் இருவர் மட்டுமே. “பாட்டு கேக்கறீங்களா?” என்று சிங் கேட்டான். “எஸ், பாட்டுதான்”. அங்கே ஒரு அதிபயங்கரமான அமைதி நிலவியது. லிஃப்ட் நான்காவது தளத்தில் வந்து நின்றது. சிங் திடீரென்று அழகாய்த் தெரிந்தான். “வானிலை இவ்ளோ சீக்கிரம் மாறிடுச்சே ஷாலுமா…” என்று இந்தப் பாழாய்ப் போன மனதை நொந்துகொண்டு அவனை மீண்டும் பார்த்தேன்.

உண்மையில் சிங் நல்ல அழகு. சினிமாவில் காட்டும் ஆஜானுபாகு வகை இல்லை சிங். சற்றே விசித்திரமாக இருந்தான். அந்த டர்பனைத் தவிர பஞ்சாபிகளுக்கான தோற்றத்தில் இருந்து அதிகம் மாறுபட்டிருந்தான். என்னைவிட கொஞ்சம் உயரம், ஒல்லியான உடல்வாகு, மெல்லிய குரல். ரொம்ப சாஃப்டான சிங். மின்னும் கண்கள். நல்ல ரோஸ் நிறம். எப்பொழுதும் கோட் சூட் அணிந்து, டர்பன் எந்த நிறமோ அதே நிறத்தில் டை அணிவது அவனது வழக்கம். இடது கையில் விலையுயர்ந்த டேக் ஹூவர் வாட்ச், வலது கையில் சீக்கிய வெள்ளிக் காப்பு. ஆக மொத்தத்தில் சிங் அழகாகச் சுற்றப்பட்ட பிறந்தநாள் கிஃப்ட் பேக் போல இருந்தான். நல்ல வசீகரம். பெயர் இன்னும் அழகு. ரஞ்சித் சிங். முழு பெயரைச் சொல்ல முடியாது. இரகசியம்.

மனது, புதிதாக மாப் போட்ட டைல்ஸில் நடப்பது போல் வழுக்கி வழுக்கி போய்க்கொண்டிருந்தது. “என்ன பாட்டு கேக்கறீங்க?” என்றான். “கசல், குலாம் அலி” என அப்பட்டமான பொய்யைச் சொன்னேன்.

“ஓ! ஹிந்தி தெரியுமா?”

“நல்லாவே ஹிந்தி பேசுவேன்” என்று ஹிந்தியிலேயே சொன்னேன்.

முன்னெச்சரிக்கையாக ஹெட்போனைப் பிடுங்கிவிட்டு மொபைலைக் கைப்பைக்குள் போட்டுக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தேன். “ஆமா, நான் நார்த் சைட் நெறைய ட்ராவல் பண்ணேன், அப்படியே ஹிந்தி கத்துக்கிட்டேன்”.

“பஞ்சாப் போய் இருக்கீங்களா? “

“எஸ், போயிருக்கேன். லவ் தட் ப்ளேஸ். அருமையான சாப்பாடு, நாட்டு நெய் சொட்டச் சொட்ட அற்புதமான ஸ்வீட்ஸ், அழகான வயல்வெளிகள், வாஷிங் மெஷின்ல போட்டுத்தர பாட்டியாலா பேக் லஸ்ஸி… ஹ்ம்ம்ம்… பஞ்சாப் பத்தி பேசிக்கிட்டே இருக்கலாம்.”

இந்த விஷயத்தில் நான் பொய் சொல்லவில்லை. எனக்கு உண்மையிலேயே பஞ்சாப் பிடிக்கும். வடக்கில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அதில் பஞ்சாப் கொஞ்சம் ஸ்பெஷல். நம்மூர் மதுரை போன்றது. எந்நேரமும் சுறுசுறுப்பாகவே இருக்கும். மக்களும் பாசத்துக்குரியவர்கள்.

சிங்கின் முகத்தில் அறுபது வாட்ஸ் பல்ப் எரிந்தது.

“வாவ்… கேக்கவே சந்தோஷமா இருக்கு. முதல் தடவையா தமிழ்க்காரங்க ஒருத்தர் ஹிந்தி பேசி கேக்குறேன். பஞ்சாப் பத்தி இவ்ளோ சொல்றிங்க. நம்பவே முடில தெரியுமா?”

ரஞ்சித்தின் கண்கள் இன்னும் அதிகமாக மின்னின. லிஃப்ட் தரை தட்டியது. வெளியே வந்தோம்.

ஏனோ தெரியவில்லை, ரஞ்சித்தை இப்பொழுது பிடித்திருந்தது. மீட்டிங்கில் இருந்தவனுக்கும் என்னோடு லிஃப்ட்டில் வந்து இறங்கியவனுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. தான் தங்கப் போகும் தி நகர் நட்சத்திர ஹோட்டலின் தகவல்களை என்னிடம் கேட்டுக்கொண்டு இன்னும் கொஞ்சம் சிறுபேச்சு கதைத்துவிட்டு ரஞ்சித் காரில் ஏறி விடைபெற்றுக்கொண்டான்.

ஆட்டோவில் ஏறி மொபைல் எடுத்து ஹெட்போனைக் காதில் மாட்டி இம்முறை உண்மையாகவே குலாம் அலியைக் காதுகளில் தவழவிட்டேன். “ஏஹ்… தில்… ஏஹ் பாகல் தில் மேரா….” குலாம் அலி குழையத் துவங்கினார். என்னைப் பொறுத்தவரை கானா பாடல் ஒரு கண் என்றால் கசல் மற்றொரு கண்.

பாடல்களைக் கேட்டுக்கொண்டே வீடு வந்துசேர்ந்தேன்.

இரவு ஒன்பது மணி இருக்கும். மொபைல் கத்தியது. ரஞ்சித்திடம் இருந்து மெஸேஜ். “இன்று மீட்டிங்கில் பேசிய ஒரு பகுதியில் சந்தேகம் இருக்கிறது. அழைக்கட்டுமா?”

“எஸ், ப்ளீஸ்.”

மொபைல் இசைத்தது. மறுமுனையில் நம் சிங்.

“ஸாரி டூ டிஸ்டர்ப் யூ ஷாலின், பேசலாமா?” 

“ஒரு பிரச்சினையும் இல்ல, நான் சும்மாதான் இருக்கேன். டின்னர் ஆச்சா? அங்க ஹோட்டல் சாப்பாடு எப்படி?”

“வீட்டு சாப்பாடு மாதிரி இல்ல. ஓகேதான். ஆக்சுவலி, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நீங்க குலாம் அலின்னு சொன்னதும் எனக்கு சந்தோஷமா ஆயிடுச்சு, நானும் குலாம் அலி ஃபேன்தான்.”

“எனக்கு கசல் ரொம்ப பிடிக்கும் ரஞ்சித். கசல் என்பது ஆன்மாவின் தாகம் தீர்க்கும் ஊற்று. கசல் வலி, கசல் குளிர்விக்கும் நிழல், கசல் கோப்பையில் நடனமாடும் கடைசிச் சொட்டு மது. அதுலேயும் குலாம் அலி பாடினா காதுல யாரோ மென் முத்தம் கொடுக்குற மாதிரியே இருக்கும்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

ரஞ்சித் சொல்ல வந்த அலுவலக விஷயத்தைத் தவிர வேறு ஏதேதோ பேசி முடிக்க இரவு பனிரெண்டு மணி ஆகிவிட்டது.

மறுநாள் ரஞ்சித் ஊருக்குக் கிளம்பிய பின்னும் பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம். இசைதான் பேச்சின் முக்கியப் புள்ளி. ரஞ்சித் தினம் ஒரு சர்ப்பிரைஸ் பாடல் அனுப்புவான், பின்பு அதைப் பற்றி சில மணி நேரம் பேச்சு. பின்பு எங்களைப் பற்றியும்…

இரண்டு வெவ்வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள், வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள், வெவ்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் மனம் ஒத்து பேசிக்கொள்ள இந்த வானத்தின் கீழ் எவ்வளவு விஷயங்கள் உள்ளன என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

ரஞ்சித்துக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது என்பதனை உணர்ந்துகொண்டேன். எனக்கு ரஞ்சித்தின் மேல் பிரியம் என்பதை ரஞ்சித்தும் புரிந்துகொண்டான். அடுத்து நேரில் பார்ப்பதற்குள் இதை வேறொரு கட்டத்திற்கு எடுத்துச்செல்வோம் என்று தோன்றியது.

பாலில் குங்குமப் பூவை ஊறவைத்து முகத்தில் தேய்த்துக்கொண்டால் தோலின் நிறம் பொலிவாகும் என்று ரஞ்சித் சொன்னதும் தட்டாமல் செய்துகொண்டேன். என்ன இருந்தாலும் பஞ்சாபி நிறத்தில் கால்வாசியாவது வர வேண்டாமா?

எல்லாம் அருமையாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் அந்தக் கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டுத் தொலைத்தேன்.

“என்ன சாப்டிங்க?”

“கடாய் பன்னீர், ரொட்டி.”

“என்ன ஒரு வாரமா நீங்க வெஜிடேரியன் மட்டும் சாப்பிடுறிங்க? நான் வெஜ் இல்லையா?”

“நாங்க நான்வெஜ் சாப்பிட மாட்டோம்.”

“ஏதாவது வேண்டுதலா?”

“இல்ல… நாங்க எப்பவுமே அசைவம் சாப்பிட மாட்டோம். எங்க சமூகப் பழக்கம்”.

தலையில் இடி விழுந்தது போல் உணர்வு. ஒரு நிமிடம் குலாம் அலி கத்தியை வைத்து காதில் குத்தியதைப் போல் இருந்தது.

‘டேய் பஞ்சாபினாலே அசைவம்னுதானடா நெனச்சிட்டு இருந்தேன்! அடப்பாவி! என்னால அசைவம் சாப்பிடமா இருக்க முடியாதேடா! இசைக்கு அப்புறம் நான் அதிகமா பேசுற விஷயமே சோறுதானே? எது ஒத்துப்போலனாலும் நாக்கு ஒத்துப்போனுமேடா? இந்தச் சிக்கன் காலு எவ்ளோ ஜூஸியா இருக்கு பாரு, அந்த மீனு என்னா வாசனை.. இப்படி ஏதும் ரொமாண்டிக்கா பேசவே முடியாதே!’

மனதைத் தேற்றிக்கொண்டு கேட்டேன். “இனிமே எப்போவாவது அசைவம் சாப்பிடுற ஐடியா?” 

“ம்ஹும் இல்ல… நோ சான்ஸ்.”

எனக்கும் இனிமேல் வேறு எதற்கும் நோ சான்ஸ் என்றே பட்டது. நாளை நான் சைவத்திற்கு மாற நிர்பந்திக்கப்பட்டால் என்னாகும் என்கிற கேள்வி துளைத்தது. தோலின் நிறத்தை மாற்றிவிடலாம், ருசி கண்ட நாக்கைப் பட்டினி போட முடியாது.

உணவு குறித்த எந்தவித அவமானத்திற்கும் நிந்தனைக்கும் நானும் எனது வீட்டாரும் உடன்படக் கூடாது என்கிற மன வைராக்கியம் பெரிதாக இருந்தது. ஏனென்றால் இந்தியாவில் உணவுப் பழக்கம் என்பது தனிமனித விருப்பத்தைத் தாண்டி உயர்வு தாழ்வு என்று பார்க்கப்படுகிறது. சைவம் உயர்வாகவும் அசைவம் அசுத்தமாகவும் கருதப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சைவப் பழக்கம் என்பது பரிசுத்தத்தின் அடிப்படையிலேயே பலரால் தொடரப்படுகிறது. உணவு என்பது இணைக்கக் கூடியதாக இருந்த காலம் மறைந்து, சக மனிதனைக் கொல்லக்கூடியதாக இங்கே மாறி இருக்கிறது. காதல் மயக்கத்தில் இந்தியாவின் நிதர்சனத்தை நாம் மறக்கக்கூடாது.

மறைமுகமாக இதை அவனுக்குப் புரியவைத்து, பின்பு இருவரின் தனிமனித நலன், குடும்ப நலன்கள் சார்ந்து எங்களின் பெர்சனல் உறவை முறித்துக்கொண்டோம்.

நாங்கள் கடைசியாகப் பேசிக்கொண்ட அன்று குலாம் அலியின் “ச்சுப்கே ச்சுப்கே ராத்து தின்” பாடலை இரவு முழுக்கக் கேட்டுக்கொண்டே இருந்தேன். ரஞ்சித்தின் பிரியமான கசல் அது. அதன் அர்த்தம், “ஒளிந்து ஒளிந்து யாருக்கும் தெரியாமல் இரவும் பகலும் நான் கண்ணீர் வடித்தது ஞாபகம் இருந்தது”.

மறுநாள் மதியம் அலுவலக லன்ச் பிரேக்கில் மவுண்ட் ரோடு புகாரி பிரியாணி, மட்டன் சுக்கா சகிதம் உள்ளே போனதும் மனதின் பாரம் குறைந்தது. எந்தவிதச் சோகத்தையும் சரி செய்யக்கூடிய அதீத ஆற்றல் கசலுக்கு மட்டுமல்ல, தரமான மட்டன் பிரியாணிக்கும் இருக்கிறது.

*

இப்படியாக டேட்டிங் காதல் கத்தரிக்காய் எதுவும் எனக்கு செட் ஆகாது என்று தெரிந்து பெற்றோர் கிறிஸ்தவ மேட்ரிமோனி தளத்தில் விவரங்களைப் பதிந்து வைத்திருந்தார்கள். இதிலும் நமக்குப் பெரிதாக எதுவும் சோபிக்கப் போவதில்லை என்று தெரிந்தும் பெருசுகளின் மனம் கோணக்கூடாதென நானும் இணையவழியில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தேன். அந்த மாப்பிள்ளை பார்க்கும் படலத்தைப் பற்றிப் பல நூறு பக்கங்கள் எழுதலாம். அவ்வளவு மேட்டர் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் அதில் முக்கியமானதும் இந்தக் கட்டுரைக்கு மிகவும் பொருந்திப் போவதுமான கதையை உங்களோடு பகிர்கிறேன்.

அமெரிக்க மாப்பிள்ளை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் எனக்குப் பிடிக்காது. எத்தனையோ முறை அப்படி வந்த வெளிநாட்டு மாப்பிளைகளைப் புறக்கணித்து விட்டாலும் ஒரே ஒருவர் விடாது தொல்லை கொடுத்துக்கொண்டிருந்ததால், ‘சரி போனால் போகுது, ஒரு சிறு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம்’ என்று உள்ளே இறங்கினேன். 

நியூயார்க்கில் இருந்தார் அவர். நியூயார்க் மாநில அரசு அலுவலகத்தில் தொழில்நுட்பப் பிரிவில் வேலை. கிட்டத்தட்ட பதினைந்து வருடமாக அமெரிக்காவில் வசித்து வருபவர். நல்ல சம்பளம். அமெரிக்காவில் சொந்த வீடு. முக்கால் அமெரிக்கர் போல பேச்சும் நடத்தையும். பேச்சில் மேட்டிமை இருந்தது. வாங்கும் சம்பளத்தின் பாதிப்பு. எதைப் பேசவும் மனது ஒட்டவில்லை. டாக்டரைப் பார்க்க கிளினிக் போனால் வெயிட்டிங் ரூமில் பக்கத்துக்கு சீட்டில் இருப்பவரிடம் எந்தளவுக்குப் பேசுவோமோ அந்தளவு ஆர்வம்கூட அந்தாளோடு வரவில்லை. நெருங்கிய தோழியிடம் சொன்னேன். “கட்டிக்கோடி.. அமெரிக்கா போய்ட்டா ஜாலியா இருக்கும். மத்ததை எல்லாம் பொறுமையா சரி பண்ணிக்கலாம்” என்கிற பதில் வந்தது. சரி, பேசித்தான் பார்ப்போமே!

அன்றைக்குப் பேச்சு ஓஹோ என்றும் சொல்ல முடியாது, மொக்கை என்றும் சொல்ல முடியாது. ஒரு மாதிரி நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. வீடு, கார், அமெரிக்காவின் சாலைகள் பற்றி எல்லாம் மனிதர் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார். கண்சொக்கி தூங்கப் போன நிலையில் திடீரென்று அந்த அதிபயங்கரமான கேள்வி என் வாயிலிருந்து வழுக்கி விழுந்தது.

“சாப்பிட்டீங்களா?”

“சாப்ட்டேனே… இன்னைக்கு ஆபிஸ்லேயே குடுத்தாங்க.”

“வாவ் செம்ம.. என்ன சாப்ட்டிங்க?”

“பீட்சாதான். உனக்குப் பீட்சா புடிக்குமா?”

” பிடிக்கும். ஆனா மத்த இத்தாலியன் சாப்பாட்டு வகைகள் பிடிக்கற அளவுக்கு பீட்சா பிடிக்காது.”

அப்பொழுதுதான் அந்த மிகக் கொடூரமான கேள்வியை அந்த மனிதன் கேட்டான்.

“இதுல இத்தாலியன் சாப்பாடு ஏன் வந்தது?”

“பின்ன? பீட்சா இத்தாலியன்தானே?”

“இல்லையே, பீட்சா அமெரிக்கன்தானே?”

ஒரு நிமிடம் அந்தாள் ஜோக்கடிக்கிறார் என்றுதான் நினைத்தேன்.

“காமெடி பண்ணாதீங்க.”

” ஐ ஆம் சீரியஸ். பீட்சா அமெரிக்கன் ஃபுட்.”

“டூட்… ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க. பீட்சாவை இத்தாலியிலதான் கண்டுபிடிச்சாங்க. நேபிள்ஸ்ங்கற ஊர்ல. அமெரிக்காவுக்கு இத்தாலியர்கள் குடிவந்த போது கூடவே பீட்சாவையும் கொண்டு வந்தாங்க. அமெரிக்கால அதிகமா பீட்சா சாப்பிட்டாலும் பீட்சா இத்தாலி உணவுதான். புலம்பெயர் இத்தாலி மக்கள், இத்தாலி மாஃபியா, டான், காட்பாதர் படம் …. ஏதாவது ஞாபகம் வருதா?”

“நோ நோ… நாட் பாசிபிள். பீட்சா அமெரிக்கன் உணவு. அமெரிக்கால இத்தனை வருஷம் இருக்கேன், எனக்குத் தெரியாதா?”

“நான் சொல்றது வரலாறு”. எரிச்சல் பொங்கிக்கொண்டு வந்தது. தெரியவில்லை என்றால்கூடப் பரவாயில்லை. ஆனால் அமெரிக்காவில் இருப்பவனுக்கு அறிவு ஜாஸ்தி என்பது போன்ற மனநிலை சகிக்கவில்லை.

“சாரி… எனக்குக் கொஞ்சம் தலை வலிக்குது. அப்புறம் கால் பண்றேன்”.

போனை கட்செய்துவிட்டு யோசித்துப் பார்த்தேன். “அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு என்ன காரியம் செய்யப் பாத்த? அந்தாளக் கட்டி இருந்தா நியூயார்க் சுதந்திர தேவி சிலைக்குக் கீழ முடிய பிடிச்சு சண்ட போட்டு ரெண்டு பேரும் உருண்டுட்டு இருந்திருப்பீங்க. நல்லவேள தப்பிச்ச”. உறுதியாகச் சொல்லிக்கொண்டேன். எந்தப் பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ சோற்றுப் பொருத்தம் அவசியம் நண்பர்களே!

உங்களுக்கு இது மிகவும் சல்லித்தனமாகத் தெரியலாம். ஆனால் இதற்கு நியாயம் கற்பிக்கக்கூடிய நூறு காரணங்கள் என்னிடம் உள்ளன.

எனக்குச் சோற்றுடன் இந்த ஆத்மார்த்த காதல் எப்பொழுது ஏற்பட்டது என்று தெரியாது. ஆனால் உணவு என்பது எனக்குக் கடவுளுக்குச் சமம். அது சார்ந்த பல உயரிய எண்ணங்கள் எனக்குண்டு. அது சார்ந்த சிந்தனைகள் எனக்கதிகம். உலகெங்கும் என்ன உணவு பிரசித்தம், எங்கே எது ருசியாக இருக்கும், எந்த ஊரில் என்ன உணவு மூலப்பொருட்கள் கிடைக்கின்றன, பல்வேறு நாடுகளிலுள்ள உணவு சார்ந்த நம்பிக்கைகள் என்னென்ன என்று என் தலையில் ஒரு சின்ன என்சைக்ளோபீடியாவை வைத்திருக்கிறேன். சாப்பிடும்போது அந்த உணவைப் பற்றி உடனிருப்பவரிடம் விவாதிக்க வேண்டும் என்பது எனக்கு முக்கியம். உட்கார்ந்தோமா, கீழே பார்த்தோமா, சாப்பிட்டோமா, முடித்தோமா என்பதெல்லாம் எனக்குச் சரிப்படாது.

ஐரோப்பா கண்டத்தில் மக்கள் கும்பலாக உட்கார்ந்து, பேசிக்கொண்டு, சிரித்துக்கொண்டு, பொறுமையாக உணவை உட்கொள்ளுவதால் அவர்களுக்கு இதய நோய்கள், இரத்த அழுத்தப் பிரச்சினைகள் மிகக் குறைவாக வருகின்றன எனச் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. எவ்வளவு உண்மை!

ஆனால் நம்மூரைப் பாருங்கள். “வாய மூடிட்டு பேசாம சாப்பிடுங்க” என்று வீட்டில் சொல்லிக் கொடுப்பார்கள். இந்தியர்களுக்கு உணவை இரசிக்கத் தெரியவில்லை என்பது என் குற்றச்சாட்டு.

ஆயிரம் சொல்லுங்கள். உணவை இரசித்து ருசித்து, அதைப் பற்றிப் பேசி விவாதித்துச் சாப்பிடும் இடங்களில் மனித உறவுகள் மேம்படுகின்றன.

யாரையாவது முதல்முறை சந்திக்கப் போகும்போது, “சாப்பிட்டுட்டே பேசலாம் வாங்க” என்று அழைக்கும் மனிதர்களிடம் உறவு பலமாகத் தொடர்கிறது என்பதே உண்மை. எழுத்து சம்பந்தமாக பிரபலமான ஒருவரை முதல்முறை சந்திக்க வேண்டி வந்தது. கிருஷ்ண விலாசத்தில் சாப்பிட்டுக்கொண்டே வேலை சார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அன்றைக்கு சூடாக திருநெல்வேலி ஹல்வா வந்தது. எனக்கு ரொம்பப் பிடித்த ஸ்வீட் என்று சொன்னபோது, அவர் “ஜெயலலிதாவுக்கு இந்த ஸ்வீட்தான் ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?” என்றார். அன்று வீட்டுக்குப் போய் ஜெயலலிதாவைப் பற்றிய ஒரு முக்கியக் கவிதையை எழுதினேன். இன்றுவரை அவருடனான நட்பு உறுதியாகவே இருக்கிறது. Food should inspire us!

இத்தகைய எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு பீட்சா அமெரிக்க உணவு என்று சண்டை போடும் மனிதனோடு எப்படித் தோழர்களே வாழ முடியும்? அன்றோடு அதுவும் முடிவுக்கு வந்தது.

மறுநாள் இந்த மோசமான உணர்வை மாற்ற நல்லதொரு பாஸ்தாவை நானே வீட்டில் செய்தேன். கூடவே நல்ல இத்தாலி வைனும் ஜோடி போட்டது. பாஸ்தா சாப்பிடுவதென்பது நமக்கு நாமே முத்தம் கொடுத்துக் கொள்வதற்கு ஒப்பானது.

என் வாழ்வின் மிக மோசமான காலகட்டத்தில் நான் எந்தத் தவறான முடிவுக்கும் தள்ளப்படாமல் இருந்ததற்கு உணவு ஒரு முக்கியக் காரணம். காதல் கைகொடுக்காத பல நேரங்களில் தனிமையைப் போக்கிக்கொள்ள உணவு சார்ந்த தேடல்கள் எனக்குள் ஆரம்பமாயின. நான் எப்பொழுதும் ஒன்று சொல்லுவேன். Good food is always better than sex, 99.9%.

இந்த இடத்தில சாரு நிவேதிதாவைப் பற்றி பேசியே ஆகவேண்டும்.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னாள் ஒரு பிரபல வெகுஜனப் பத்திரிகையின் இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. என்னோடு நல்ல நட்பில் இருந்த எழுத்தாளர் ஒருவருக்கும் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விழாவுக்கு வந்தே ஆகவேண்டும் என்று அவர் என்னைக் கேட்டுக்கொண்டதன் பேரில் அழைப்பே இல்லாத விழாவுக்குச் சென்றுவிட்டேன். நட்புக்காக. இப்பொழுதாவது நான் யார் என்று ஒரு பத்து பேருக்குத் தெரியும். அப்பொழுது நான் யார் என்று ஒரு ஜீவனுக்கும் தெரியாது. விழா அரங்கில் கூட்டத்தோடு கூட்டமாக நான் காத்திருக்க, என்னை விருது விழாவிற்கு அழைத்த அந்த எழுத்தாளர் என்னைப் பார்த்துவிட்டுத் தெரியாதது போலக் கடந்து சென்றுவிட்டார். யாரையும் தெரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தேன்.

மாலை நான்கு மணிக்குத் துவங்கிய விழா நீண்டுகொண்டே இருந்தது. பசி வயிற்றைக் கிழித்தது. அழைப்பிதழோடு வந்த மக்களுக்காவது சாப்பிடுவதற்கு ஏதோ தந்திருந்தார்கள். எனக்கு அதுவும் இல்லை. குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லாமல் தலையைச் சுற்றி கிர்ரென்று வந்தது. ஒரு மாதிரி மோசமான நிலையில் இருந்தபோது விருது ஒன்றைக் கொடுத்துவிட்டு சாரு அந்தப் பக்கம் வந்தார். என்னைப் பார்த்த சாரு, “ஓய்…. நீ இங்கதான் இருக்கியா? ஏன் பின்னாடி உக்காந்து இருக்க? மூஞ்சியெல்லாம் ஒரு மாதிரி இருக்கு, சரி வா” என்று அழைத்துக்கொண்டு தான் அமர்ந்திருந்த விஐபி பகுதிக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார். அப்பொழுது அவரிடம் சாப்பிட ஒரு பார்சல் கொடுத்திருந்தார்கள். உடனே அவர் அங்கே இருந்த ஒரு பையனை அழைத்து இன்னொரு பொட்டலம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார். அந்தப் பொட்டலத்தைக் கொடுத்து, “ரொம்ப லேட் ஆயிடுச்சு, நீ சாப்பிடு” என்று அவருக்கே உரித்தான மிளிர் தொனியில் சொன்னார். சாப்பாட்டை எடுத்து வாயில் வைக்கும்போது எனக்குக் கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது. (இதை எழுதும்போதும் வருகிறது)

வாயில் சப்பாத்தி ருசியுடன் கண்ணீரின் உப்பும் சேர்ந்துகொண்ட போது இந்த உலகின் ஆகச்சிறந்த உணவாக அது இருந்தது.

பின்பு தனக்கு அனுப்பப்பட்டிருந்த வாடகைக் காரிலேயே என்னையும் வீட்டுக்குப் பத்திரமாக அனுப்பி வைத்தார். சாருவோடு எவ்வளவோ முரண்கள் இருந்தும் சாருவை ஒரு தந்தையாய் மதிப்பதற்கு இது மிக மிக முக்கியக் காரணம். உணவை ஆத்மார்த்தமாக நேசிப்பவர்கள் மற்றவர்களைப் பட்டினியாய் இருக்க விடுவதில்லை. உணவு என்பது ஒரு உணர்வு. “சாப்பாட்டுல என்னங்க இருக்கு?” என்று யாராவது கேட்டால் சொல்லுங்கள். “சாப்பாடுலதாங்க எல்லாமே இருக்கு.”

உணவும் அதைச் சார்ந்த அரசியலும் அதன் வரலாறும் மிக மிக முக்கியம். உணவில் உப்பு இருக்கிறதோ இல்லையோ அதில் பல போராட்டங்களும் புரட்சியும் இருக்கிறது.

எனக்கு பைபிளில் இரண்டு நிகழ்வுகள் அதிகம் பிடிக்கும். ஒன்று, இயேசு ஐந்து அப்பம் இரண்டு மீன்களை திரளான மக்களுக்குக் கொடுப்பதற்காகப் பெருகச் செய்த இடம். இன்னொன்று, அவருடைய கடைசி ராபோஜனம். ஒட்டுமொத்தக் கிறிஸ்தவ மதத்தின் கோட்பாடும் இந்த இரண்டு இடங்களுக்குள் அடங்கிவிடும். பைபிளில் அதிக இடங்களில் உணவே உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படியாக, என் இணையரை முதல்முறை மெரினா கடற்கரையில் சந்தித்த போது அவருக்கு ஒரே ஒரு டெஸ்ட்தான் வைத்தேன். அங்கே மிகப் பிரபலமாக இருக்கும் குல்ஃபி தாத்தாவிடம் ஐஸ் வாங்க வேண்டும். கிட்டத்தட்ட ஐம்பது நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, சட்டை கசங்கிய நிலையில் இணையர் ஐஸ் வாங்கி வந்தார். முகத்தில் தொய்வோ எரிச்சலோ இல்லை, சிடுசிடுக்கவில்லை. அந்த குல்ஃபியைப் பற்றி மட்டுமே முப்பது நிமிடங்கள் பேசி இருப்போம். அன்றே முடிவுசெய்தேன், ‘கட்டினால் இவரைத்தானென்று.’ கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. மண வாழ்வில் ஆயிரம் மனஸ்தாபம் வந்தாலும் டைனிங் டேபிளில் வைக்கும் உணவுக்கு முன்னால் அது காணாமல் போகிறது. ஜோடியாகச் சாப்பிட உட்கார்ந்துவிட்டால் சச்சரவாது சண்டையாவது!

19 comments

Aruna Mohan June 25, 2021 - 1:45 pm

Maria shalin very true…. எப்பொழுதும் சாப்பாடு ரசனை கண்டிப்பாக வேண்டும்…..

Dhakshina Moorthy June 25, 2021 - 2:36 pm

செம்ம கட்டுரை…. ஒரே மூச்சில் படித்துவிட்டேன்….

Malar Selvi June 25, 2021 - 6:04 pm

மனதில் இருந்து வருகின்ற வார்த்தைகள்,எப்போதுமே, அழகு தான்.
மனதிற்கு நெருக்கமான உணர்வு, வந்தது,அருமை. ?

M.A.Ramamoorthy June 25, 2021 - 7:52 pm

இன்று ஒரு தகவல், குடும்ப உறவு பற்றி அனுப்பி இருந்தேன். அதை ஒட்டியே, இந்தக் கட்டுரை உள்ளது. ” மண வாழ்வில் ஆயிரம் மனஸ்தாபம் வந்தாலும் டைனிங் டேபிளில் வைக்கும் உணவுக்கு முன்னால் அது காணாமல் போகிறது. ஜோடியாகச் சாப்பிட உட்கார்ந்துவிட்டால் சச்சரவாது சண்டையாவது!”… இதுதானே உறவு.

M.A.Ramamoorthy June 25, 2021 - 7:53 pm

குடும்ப உறவு பற்றி ஒட்டியே, இந்தக் கட்டுரை உள்ளது. ” மண வாழ்வில் ஆயிரம் மனஸ்தாபம் வந்தாலும் டைனிங் டேபிளில் வைக்கும் உணவுக்கு முன்னால் அது காணாமல் போகிறது. ஜோடியாகச் சாப்பிட உட்கார்ந்துவிட்டால் சச்சரவாது சண்டையாவது!”… இதுதானே உறவு.

Gayathri R. June 26, 2021 - 8:58 am

Shalin..that’s a very cute write up. It could have been very well classified as a short story.

ராம் June 26, 2021 - 10:59 am

அருமை.. படிக்கும் போது சிறுகதை மாதிரி இருக்கு.. ஆனாலும் ஏன் கட்டுரைன்னு சொல்லறீங்கனு தெரில?

Edwin Maria Lawrence June 26, 2021 - 10:59 am

Felt like reading a short story… nice…

panneerselvam June 26, 2021 - 1:30 pm

super.

Pitchumani June 26, 2021 - 3:25 pm

அருமை. பழைய சோறில் கொதிகுழம்பு விட்டு சாப்பிட்டமாதிரி

நேயா புதுராஜா June 26, 2021 - 4:39 pm

நான் சமீபத்தில் படித்த கட்டுரைகளின் என் மனதை தொட்ட கட்டுரை/கதை இது..உணவுப்பிரியர்களுக்கு பிரத்யேகமாக பிடித்துபோகும்…இந்த எழுத்தோடு தங்களை கணெக்ட் செய்து கொள்ள முடியும்…அருமையான பதிவு…சாரு அவர்கள் முகம் பார்த்து உணவு கொடுத்த இடத்தில் அவரின் அன்பு பிடித்துப்போகிறது…அவரை இப்படி தான் என்றும் தோன்றுகிறது..உணவுப்பகிர்தலை உண்ணதம் என்போர் என் நண்பர்களே..அதை பற்றி பேசுபவர்களும்…உங்களது எழுத்து அருமை…தொடர்ந்து பறிமாறுங்கள் தோழர்…வாழ்த்துகள்

SUMATHI M June 26, 2021 - 6:11 pm

Wonderful write up.. yeah food is everything..??

anbu Alagan June 27, 2021 - 8:02 am

Amazing write up

கோபிநாத் June 27, 2021 - 9:34 pm

சாரு சொல்வது போல் ஒரு அருமையான சிறுகதையை வாசித்த உணர்வே ஏற்படுகின்றது.நமக்கு சோறு தான் முக்கியம்.

Bhuvaneswaran A S June 30, 2021 - 6:01 pm

சோற்றுக்கு வருந்தியவன் தான் அன்னச் சத்திரம் அமைப்பான். அது ஏசு கிறுத்துவோ, இராமலிங்க அடிகளோ, காமராசரோ, எம்சிஆரோ, உண்ணும் உணவிற்கு பட்ட பாட்டை கொடுத்து கல்வியைத் தந்தார்கள். பாரதியை விட உணவின் அருமை உணர்ந்தவர் யாராக இருக்க இயலும், ஆனால் அன்னச் சத்திரம் ஆயிரம் அமைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்று கூறினான்.

உணவே மருந்து என்று தான் சொல்கிறார்கள். பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்கிறார்கள். வயிற்றுக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு, ஆடி முடிஞ்சு இறங்கி வந்தா அப்புறம் தான் சோறு. என்ற சினிமா பாடல் போல் உழைப்பவனுக்கு வயிறும், உணவும் ஒரு கடைசி கடைசியாய் தேவையான ஒன்று. நட்புக்காக படத்தில் சாப்பிடறியாப்பா என்று கேட்டதும் பொசுக்கு என்று கண்ணீர் வந்து விடும். ஆகையால் சோறு என்பது ஒரு அடிப்படையே.

ஆனாலும் பல குடும்பங்களில் எழும் சிக்கல் சாப்பாட்டின் போது கிளம்பும் வாக்குவாதங்கள் தான். கணவன் – மனைவி உறவின் ஆன்மா காமத்திற்கு எத்தனை இடமிருக்கிறதோ அந்த அளவிற்கு உணவின் பக்குவத்திற்கும் இருக்கிறது. நடை நன்றாக இருக்கிறது என்றாலும், பசியின் வலியை அதிகம் உணர்ந்தவன் என்றாலும் ருசியின் பதம் பக்கத்தில் இருந்து எழுதி இருப்பதால் ஏற்க முடியவில்லை. செவிக்கு உணவில்லை எனின் ஆங்கே சிறிது வயிற்றிர்கும் ஈயப்படும் என்ற சமூகம். நான் இதை சிறுகதை என்று படிக்கத் தொடங்கி என்னடா இது ராசேசு குமார், சுசாதா கிரைம் நாவல் பாணி சொற்கள் நடைகள் என்று இறங்கி வரும் போது ஒரு இடத்தில் வரைவாளர் தன் பெயரைச் சொல்கிறார், இந்தக் கட்டுரை என்கிறார் என்ற பின் தான் நடையும் மாறுகிறது. அது சரி. அது என்ன கிளிசே புன்னகை?

இந்த கட்டுரை தகவ்ல் தொழில்நுட்பத் துறையின் தற்போதைய கருவிகள், மொழிகளை அறிய உதவியது, நன்றி. நல்ல முயற்சி. ஆனால் சோற்றின் ஆழம் புரியவைக்க எடுத்த உத்தி அதன் முக்கியத்துவத்தை குறைக்கிறது. ஒரு வேளை இது மேட்டுக்குடியின் சோற்றின் பார்வை.

Palani June 30, 2021 - 10:12 pm

சாப்பாடு எவ்வளவு முக்கியம்!! இதச்சொன்னா சோத்துக்கு செத்தவன்னு சொல்றானுங்க??

Shankar v July 3, 2021 - 12:59 pm

உணவில் இவ்வளவு உணர்வுகள் இருக்கிறது என்பதை இன்றுதான் உணர்ந்தேன்.
நன்றி ஷாவின் மரியா லாரன்ஸ்

Sivaramakrishnan July 3, 2021 - 7:49 pm

படிக்கின்ற உணர்வு ஏற்படவில்லை! ஆனால், அருகிலிருந்து நீங்கள் கதைசொல்வதுபோலவும்,நான் உம் கொட்டுவது போலவும் தோன்றியது. அருமை!வாழ்த்துகள் ?
முதல் முறையாக உங்களை வாசிக்கிறேன்.
எழுத்துக்களை நேசிக்கிறேன்

அகிலன் July 27, 2021 - 12:45 pm

ரசனைக்குகந்த சத்தியம் ததும்பும் எழுத்து. வாழ்க!

Comments are closed.