“ப்பா..” என்றவாறே சின்னவன் கைகளை விரித்து, தத்தியபடி இன்னாசியின் கால்களைக் கட்டிக்கொள்ள வந்தான். அவனது அரைஞாண் கயிற்றில் முடிச்சிடப்பட்டிருந்த சேலையின் இன்னொருமுனை ஜன்னல் கம்பியில் கட்டப்பட்டிருந்தது. அம்மணமான கரிய நிறப் பிஞ்சு உடலில் வயிற்றிலும் முட்டியிலும் குறுமணல்கள் ஆபரணத்துகள்கள் போல ஒட்டியிருந்தன. இன்னாசி ..ர்ர்ரப்பென அவனது முகத்தில் அறைந்தான்.

“ஒழி சனியனே..”

இன்னாசியின் ஆடை முழுக்கக் கட்டிப்புரண்டு சண்டை போட்ட புழுதிக் கறைகள். கைலி தாறுமாறாகப் பதற்றத்தில் கட்டப்பட்டிருக்க சட்டையின் முதுகுப் பகுதியில் கூர்மையான ஏதோவொன்றால் தாக்கப்பட்டதன் அடையாளமாக ஒரு கிழிசல். அந்தக் கிழிசலின் நடுவே, கீறப்பட்டு இரத்தம் உறைந்த காயம் இருந்தது. 

அவனால் நிற்க முடியவில்லை. உடல் முழுவதும் வெடவெடவென துடி இறங்கிக்கொண்டிருப்பவனைப் போல நடுங்க, நொறுக்குத் தீனிகளுடன் தரையில் கிடந்த தட்டை மிதித்து நசுக்கினான்.

முகத்தில் வந்து உரசிய சேலைத் தொட்டிலைத் தாம்புக் கயிறோடு அறுத்து எறிந்தான். வீட்டிற்கு வெளியே கருவேல மரத்தடி நிழலில் சிலேட்டில் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தான் சோலை. அப்பாவின் கோபத்தை நடுங்கியபடி பார்த்தவாறே வாசலிலேயே நின்றுவிட்டவனை இன்னாசி பொருட்படுத்தவில்லை. எளிய பத்துக்குப் பத்து அறை கொண்ட வீட்டில் அவன் வெறியோடு கைக்குக் கிடைப்பதையெல்லாம் நொறுக்கிக்கொண்டிருந்தான். சோலையை யாரோ போலப் பார்த்த அந்தக் கண்களின் வெறுமையை இதற்குமுன் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறான்.

பனைமரக் கூட்டங்களுக்கு நடுவே வெயிலில் கருவேல மரத்தின் மீது, சிறிய கூரையைப் போல வெறுமனே ஓலைத்தட்டி போடப்பட்ட கள்ளிறக்கும் இடங்களில் பெரியப்பாவும் அப்பாவும் நீண்ட நேர போதையில் திளைத்திருக்கும் சந்தர்ப்பங்களின் போது அம்மா அனத்தி அனுப்பி வைப்பாள்.

டவுசரும் வேர்த்தொழுகும் முகமுமாக நிற்கின்ற சோலையை ஏறிடும் இன்னாசியின் கண்களில் அந்தத் தகப்பன் களை மறைந்துவிட்டிருக்கும். அருகே புளித்த வீச்சத்துடன் கிறங்கி அமர்ந்திருக்கும் அண்ணனின் தொடையைத் தட்டி “செவிட்டு முண்ட ஆள் விட்ருக்கா பாரு” என்பான். மச்சக்காளை களுக் களுக்கென வாந்தியெடுப்பதைப் போல தலைகுனிந்து சிரிப்பார். தரையில், ஓலைக்கீற்றில் பரப்பி வைக்கப்பட்டு, கலைந்து கிடக்கிற மிக்சரையோ பாதி பிய்ந்த அவித்த முட்டையையோ அவரது கைகள் முகம் பார்க்காமல் எடுத்து நீட்டும்.

வாங்கத் தயங்கியபடி, அழுதுவிடும் கண்களுடன் அப்பாவை “வாப்பா” எனக் கூறுகின்ற சோலையை “தின்னுடா” என்கிற இரக்கமில்லாத குரல் விரட்டும். பனங்காட்டிலேயே அதன் வெக்கைக்குள்ளேயே திரிந்துகொண்டிருக்கும் பழைய இன்னாசியின் குரல் அது. மச்சக்காளை அந்த இன்னாசியைப் பார்ப்பதற்கென்றே வருபவர். வெயில் தருகின்ற மூர்க்கத்திற்கும் பனைமரங்கள் உணர்த்துகின்ற அனாதைத்தனத்திற்கும் மத்தியில் வளர்ந்தவர்கள். இரத்தம் தெறிக்க மோதல்கள் நிகழ்கின்ற நாட்களில் அவர்கள் குடித்த கள்ளிலும் பிய்த்துத் தின்ற ராட்டு இறைச்சிகளிலும் அவர்களுக்குள்ளே உறங்கிக் கிடக்கின்ற துடி தெய்வங்களை அவர்களே தரிசித்ததுண்டு. அதுவே மகத்தான போதை. 

முதுகுக்குக் கீழே கருவேலம்பூக்கள் உதிர்ந்து கருகிக் கிடக்கும் சருகுகளுக்கு அடியில் நெறுநெறுவென நெளிந்து செல்கின்ற ஏதோவொன்றைத் தூக்கத்தினூடே உணர்ந்தபடி மூச்சுக்காட்டாமல் இருந்த தலைமறைவு நாட்களிலும், எப்போதாவது யாரிடமேனும் சண்டையிட்டுத் தோற்றுவிட்ட பிறகு அவர்களுக்கான மகா ஆவேசத்தையும் இந்த வெக்கை அலைகின்ற பனங்காட்டுக்குள்ளிருந்துதான் திரட்டி எடுத்திருக்கிறார்கள். 

சந்தர்ப்பமாகவோ அசந்தர்ப்பமாகவோ சாம்பாவை இன்னாசி திருமணம் செய்த பிறகு, இதுபோல் அண்ணனுடன் கள்ளு குடிக்கும் நாட்களில் தன்னிடம் வரத்தயங்கி  தூரப் பனைமரத்தூரிலேயே நிற்கின்ற ஏதோவொன்றை உணர்வால் அறிவான்.

மார்பு வரை ஏற்றிக் கட்டியிருந்த ஈரப்பாவாடையுடன் கையில் துவைத்த துணிகளைச் சுருட்டியபடி தார் ரோட்டின் ஓரமாக சாம்பா ஓடிவருவதைப் பார்த்த சோலை, “வேகமாக வா” எனும் விதமாகக் கையசைத்தான். தரையில் கிடந்து அழுதுகொண்டிருந்த சின்னவனுக்கு இன்னாசியின் உறுமல் இப்போது அதிக பயத்தைக் கொடுத்திருக்க வேண்டும். வாயை மூடியபடி விசும்பினான்.

“சாவடிக்கணும். சாவடிக்கணும்…” இன்னாசி வெறி வந்தவனைப் போலக் கத்தியவாறே ஜன்னல் கதவுகளைப் பற்றி இழுத்தான். அவை சிறியவை. அவனது தீப்பிடித்த ஆவேசத்தில் கழன்று வந்தன. இன்னுமின்னுமென உள்ளுக்குள் எதுவோ அரற்ற, மேலும் மேலும் கூவியபடி வெடுக்வெடுக்கென ஒவ்வொரு ஜன்னல் கதவாகப் பிடுங்கி எறிந்தான். வலுவாகக் கீலில் பிணைந்திருந்த ஒரு கதவை தனது சக்தியனைத்தையும் திரட்டி பற்றித் தொங்கினான். அப்போது அவனது நாக்கின் நுனி அழுத்தம் தாளாது பாம்பு வாலைப் போல வெளியே வந்து துடித்தது. விகாரம் பாய்ந்த அந்த முகத்தை சோலை பீதியுடன் பார்த்தான்.

அவர்களின் வீடு இருந்த பொட்டல் வெளியில் சுற்றிலும் குத்துச் செடிகளும் தொலைதூரப் பனை மரக்கூட்டங்களும் மட்டும்தான். இன்னாசியால் யாருடனும் இணைந்து செல்ல முடியாது என்கின்ற பண்பே பஞ்சம் பிழைக்க இங்கு வரவழைத்துவிட்டிருக்கிறது. வெகுதூர அடிவானில் கரிமூட்டம் போடுகின்ற புகையும், அதன் வெந்த விறகின் வாசமும் எப்போதும் இந்தப் பொட்டலில் அலையும். நள்ளிரவின் போதெல்லாம், வறண்டுவிட்ட கணவாய்களுக்குள் நரிகள் இறங்கி ஊளையிடும்போது வீட்டுச்சுவர் அதிரும். வீட்டுக்கு எதிரிலிருந்து கணவாய்ச் சரிவுக்குக் கீழே எப்போதும் ஒரு நரி பூட்டிய வாசலை நோக்கி அண்ணாந்து நுகர்வதைப் போல சோலை நினைத்துத் திகைப்பான்.

ஊளைச் சப்தங்களைக் கேட்டதும் தூக்கத்திலிருந்து கைகால்களை உதைத்தபடி எழ முயல்கிற சின்னவனின் வாய்க்குள் மார்புக் காம்பைத் திணிப்பாள் சாம்பா. சோலை அஞ்சியபடி அம்மாவின் மடியில் தலை வைத்தபடி விழித்துக் கிடப்பான். அருகில் பட்டையாக திமுதிமுக்கின்ற காண்டா விளக்கைத் துளிச்சொட்டு வெளிச்சமாகத் தழைப்பாள். மிக இலேசான அந்தத் தகரக் கதவை நோக்கிக் கால்நீட்டிப் படுத்தபடி, தனது கால் பெருவிரல் கதவின் கீழ்ப்பகுதியை இறுக்கித் தள்ளியபடியிருக்க கணவாய்க்குள் எழுகின்ற ஊளைகளைக் கேட்டபடி தனக்கு எதிரே காண்டா விளக்கின் வெளிச்சத்தில் இருளுக்குள் முழுவதும் புதைந்து கண்களில் மட்டும் மஞ்சளொளி பிரதிபலிக்கின்ற அவர்களை இறுக்கமான முகத்துடன் இன்னாசி பார்த்தபடியிருப்பான். ஒவ்வொரு முறை ஊளை எழும்போதும் பற்களைக் கிட்டித்தவாறே பூட்டிய கதவை ஆங்காரத்துடன் பார்க்கின்ற அவனது முகம் சோலைக்கு வந்துபோனது.

ஈரமான உள்ளங்கையொன்று சோலையின் தோளைப் பிடித்து ‘விலகு’ என்றது. சோலை திரும்பினான். சாம்பா கையிலிருந்த ஈரத்துணிகளை அப்படியே தரையில் போட்டுவிட்டு இன்னாசியிடம் ஓடினாள். அவன் இன்னமும் ஜன்னல் கதவுடன் வலுவாகத் தொங்கிக்கொண்டிருந்தான். சாம்பாவைப் பார்த்ததும், “நாறச் சிறுக்கி, அப்படியே ஒழிடி மூதேவி” எனக் கத்தியவாறே அந்த ஜன்னலையும் பிய்த்தெறிந்தான். சுட்டெரித்த வெயிலின் வெளிச்சம் வீடு முழுக்க நிறைந்தது. அந்த வெயிலுக்கு நடுவே வியர்வை பொங்கித் ததும்பும் உடலுடன் இன்னாசி எண்ணெய் பூசிய சந்தி வீரப்பசாமியைப் போல நின்றான். சற்றுமுன் அடக்கியிருந்த அழுகையைப் புதிதாக நீட்டியபடி சின்னவன் சாம்பாவிடம் தவழ்ந்தான்.

“செவிட்டுச் சிறுக்கி… நொறுக்கிக் கொன்னுருவேன் எல்லாத்தையும்” என்றவாறே சாம்பாவின் கன்னத்தில் அறைந்தான். அவள் தீப்பட்டதைப் போலத் துடித்து, ஒரு கையால் கன்னத்தைப் பொத்திக்கொண்டு இன்னொரு கையால் சின்னவனை நாய்க்குட்டியைத் தூக்குவதைப் போலத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள். அவளது கண்கள் அழுகையோடே இன்னாசியின் உதட்டசைவில் பதிந்து கிடந்தன. சோலைக்கு வீட்டிற்குள் செல்வதா வேண்டாமா என்கிற பயம் சூழ்ந்த குழப்பமேற்பட்டது.

உடைத்தெறிய ஒன்றுமில்லாதபோது இன்னாசி கொஞ்ச நேரம் அப்படியே நின்றான். பிறகு சாம்பாவின் மீதும் சின்னவன் மீதும் காறித் துப்பினான். பரண் மீது கிடந்த பீடிக்கட்டைத் துழாவுவதற்காகத் திரும்பியவனின் முதுகை சாம்பா அப்போதுதான் கவனித்தாள். அழுகையை நிறுத்திவிட்டுப் பாய்ந்தெழுந்து சட்டையின் குருதி காய்ந்த கிழிசலை விலக்கிப் பார்த்தாள். கரிய முதுகில் சதை சிவந்த வாயைப் போலப் பிளந்திருந்தது. ஈர விரல்களால் அதனைச் சுற்றித் திரண்டு கருகிவிட்ட சதைத் துணுக்குகளை வருடினாள். 

பிறகு ஓவென உரக்கக் கத்தியபடி, தலையிலடித்துக்கொண்டு புதியதாக அவள் அழ ஆரம்பிக்கவும் இன்னாசி அவளை மூர்க்கமாக அறைந்து தள்ளினான்.

“சாவுடி செவிட்டுச் சிறுக்கி. பிச்சைப் பொழப்புக்கு எங்கினயாச்சும் போய்ச் சாவுடி.”

மிக மெதுவாக கண்களில் திரள்கின்ற நீர்ப்படலத்தை மறைத்தவாறு பீடிக்கட்டை எடுத்தபடி வெளியேறுகின்ற இன்னாசியைப் பார்த்தபடி, சாம்பா சுவரோடு அழுதபடி அமர்ந்தாள். கையில் பீடியோடு வீட்டிற்கு எதிரில் இறங்குகின்ற கணவாய் சரிவுமேட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்தவாறு, வெட்டவெளியில் எரிந்தபடி அஸ்தமிக்கின்ற சூரியனை அவன் பார்க்கத் துவங்கினான்.

ஒருதுளி கண்ணீர் படர்ந்திருந்த அப்பாவின் கண்களை சோலை பார்த்தான். இதற்கு முன்பும் அதனை ஒருமுறை பார்த்திருந்தான்.

சோலைக்கு மஞ்சள் காமாலை பீடித்திருந்த கோடைகாலம் அது. பச்சிலை பிழிவதற்குத் துண்டால் தலைக்கு முக்காடு போட்டு, அகல கேரியர் சைக்கிளில் அவனை உட்கார வைத்து மஞ்சூருக்கு கூட்டி வந்தான். ஆறு வறண்டு கிடந்தது. எதிர்க்கரை குடிசைகளில் ஒன்றில் பச்சிலை பிழிவார்கள். கொதிக்கின்ற மணலுடன் புரண்டு கிடந்த ஆற்றைப் பார்த்தபடி இன்னாசி சைக்கிளை நிறுத்தினான்.

“எறங்கிக்கவாப்பா?” முக்காட்டுக்குள்ளிருந்து சோலை ஈனஸ்வரமாய் கேட்டான். இன்னாசி வேண்டாமெனத் தலையாட்டினான். தொண்டைக்குழி நீருக்கு ஏங்கி ஏறித் தாழ்ந்தது. சுற்றிலும் வீடுகளற்ற பொட்டல் பரப்பை ஆயாசமாய்ப் பார்த்தாலும் அடுத்த கணம் அதை இயல்பாக எடுத்துக்கொள்ளும் விதமாக எச்சிலைக் கூட்டி விழுங்கிக்கொண்டான். பிறகு கைலியால் முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டு சைக்கிளைக் கிளப்பினான்.

உட்கார்ந்திருந்த சோலையைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி கொதிக்கின்ற மணலுக்கு நடுவே சைக்கிளை உருட்டினான். மணலில் புதைகின்ற சைக்கிளை அவன் பெரும்பிரயாசையாய் உந்தித் தள்ளுகின்ற ஒவ்வொரு முறையும், வெக்கையோடு கூடிய உப்புவீச்சம் இன்னாசியிடம் பொங்குவதை சோலை உணர்ந்தான். 

சுடுசாம்பலின் நெகிழ்வைப் போல, இன்னாசியின் பித்த வெடிப்புப் பாதத்தைக் குறுமணல்கள் உள்ளிழுத்துக்கொண்டன. தொலைவில், வானத்தை வெறித்து நிற்கின்ற பனைமரங்களில் ஓலைகள் உரசிக்கொள்ளும் உலோக ஓசை. பாதி தூரத்திற்கு மேல் இன்னாசியால் அந்தச் சூட்டைப் பொறுக்கவே முடியவில்லை. நிற்கவும் வழியின்றி தள்ளிச்செல்லவும் இயலாமல் ஊனப்பட்ட வெறியொடு அவன் சைக்கிளை இழுத்தான். சோலை திரும்பவும், “இறங்கவாப்பா?” என்றான்.

அவனது முக்காட்டை ஒருகையால் சரிசெய்தபடி, “வேணாம்டா, வந்துட்டேன்” என்றபோது இன்னாசியின் கண்களில் வலியை மென்று விழுங்கும்போது திரள்கின்ற கண்ணீர்ப்படலம் படிந்திருந்தது. அதற்கேயுரிய குரலில் பல்லைக் கடித்தவாறே, “செருப்பு வாங்கணும்டா” என்றான். இன்னாசியின் முகத்தில் படிந்திருக்கும் இந்த மாற்றத்தை மிகக் கிட்டத்தில் சோலை பார்த்தபடியிருப்பதை உணர்ந்த இன்னாசி சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டு சைக்கிளைத் தள்ளத் துவங்கினான். 

ஜனதா வாத்தியார் ஒற்றைக் கையுடன் சைக்கிளில் வந்து  இறங்கும்போது சாயங்காலம் கவிழத் துவங்கியிருந்தது. 

பொட்டல் வெளிகளில் அந்தி இறங்கும்போது நீண்டு வெளிச்சிட்ட பரப்புகளெங்கும் பரவுகிற செவ்வொளியில் குருதிக்கடல் திரள்வதைப் போன்ற மயக்கம். மரங்களேயற்ற அவ்விடத்தில் குத்துச்செடிகள் முழுக்க மௌனமாகிவிட்ட மனிதர்களைப் போல உறைந்திருந்தன. கரி பிடித்த செம்பில் சாம்பா ஊற்றிக் கொடுத்த சாயாவை ஊதிக் குடித்தபடி ஜனதா வாத்தியார் பேசிக்கொண்டிருந்தார். அவரது வெறுமையான இடதுகை சட்டைத்துணி வெம்மையான இளங்காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. 

இன்னாசி சைக்கிள் சீட்டை பிடித்தபடி நின்றான். கலைந்து நிர்மூலமாக்கப்பட்ட வீட்டுக்குள் கிடந்த ஒன்றிரண்டு தகரச் சாமான்களைப் பழைய பொதியாக்கியபடிக் கட்டி முடித்தாள் சாம்பா. ஜனதா வாத்தியாரின் தோளைப் பிடித்தபடி எழுந்து நின்ற சின்னவனின் தலையைத் தடவிக் கொடுத்தவாறே, “காமன்கோட்டை சாயுபுகிட்ட போயிருடா. இவனுக விடமாட்டானுக இனிமே. கத்தி எடுக்கற அளவுக்கு என்ன மயிறு கோபம்டா? உனக்கும் பொறுமை பத்தாது. பிள்ளைக நிக்கறதை நினைச்சுக்கனும்டா எப்பவும்” என்றார்.

“அதுக்காக சோத்துக்கு பதிலா என்னவாச்சும் திங்கலாமா வெக்கங்கெட்டு? த்தூ. இதுக பன்னிக்கூட்டம் கணக்கா என் காலுக்கக் கீழ நிக்காட்டி இந்நேரத்துக்கு அவனுகள்ல ரெண்டு பேரு தாலியத்துட்டு நானும் மச்சக்காளையும் இந்நேரத்துக்கு பனங்காட்டுக்குள்ள ஒடிக்கிட்டிருப்பம் நைனா.”

”எலேய் பன்னிக்கூட்டங்களா” எனக் கத்திச் சிரித்தவாறே சின்னவனைத் தோளோடு சுழற்றி மடியில் கிடத்திக்கொண்டார் வாத்தியார். கையில் தூக்கிச் செல்கின்ற அளவில் இரண்டு பொதிகளை வீட்டு வாசலில் வந்து வைத்தவாறே சாம்பா சோலையிடம் கொண்டுபோய் சைக்கிளில் வைக்கச் சொன்னாள்.

“இது பொழைப்பா நைனா? சாக வேணாம்? இல்லைனா அவனுகளைப் பிய்ச்செறிய வேணாம்? இருளுக்குள் இன்னாசியின் முகம் கரைந்திருக்க, அவனது தலைமுடிகள் காற்றில் எழும்பி அடங்கின. சொம்பில் மீந்திருந்த மண்டியைக் குடித்துவிட்டு தேயிலைத் தூள்களைத் துப்பியபடி, “போடா மயிறு. வயசுக்கு ஒரு குணத்தை தீயில சுட்டுப்புடணும். இதுக வயித்துக்குத் தீயில உன் கோவத்தை சுட்டுப்போடு. போ” என்றவாறே இருளுக்குள் எழுந்து நின்று செருமிக்கொண்டார். எங்கும் கரிமூட்ட வாசனையின் வெதுவெதுப்பு பரவ சூறையாடி மூளியாக்கப்பட்ட வீட்டை விட்டு அவர்கள் கிளம்பினார்கள்.

பனைக்கூட்டங்களுக்கு நடுவே தடம் ஓடியிருந்த பாதையில் சைக்கிள் போய்க்கொண்டிருந்தது. எங்கும் இருள் நிறைந்து கிடக்க பனையோலைகளின் அரவங்களுக்கு மத்தியில் இன்னாசி வியர்வை பொங்க வேகுவேகுவென சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தான். கீழே தரையில் எதுவுமே தெரியவில்லை. முன்புற பாரில் சோலை கம்பியைப் பிடித்தபடி உட்கார்ந்திருக்க, கையில் சின்னவனை அணைத்தபடி சாம்பா இன்னாசியின் இடுப்பைச் சுற்றிப் பிடித்தவாறே தடதடக்கின்ற பாதையோட்டத்திற்கு நடுவே இலேசாகக் கண்ணயர்ந்திருந்தாள். 

வானத்திலிருந்த நீல வெளிச்சத்தைக் கண்களில் அள்ளிக்கொண்டு, இருளான பாதையில் யூகமாக மிதித்தபடியிருந்தான் இன்னாசி. சைக்கிளில் இருபுறமும் கட்டித் தொங்குகின்ற சிறிய சுமைகளோடு அவன் போராடிக்கொண்டிருந்த நள்ளிரவில் வெகுதூரத்திலிருந்து நரிகளின் ஊளை எழுந்தது. திடுக்கிட்டு விழித்த சோலை தங்களுக்குப் பின்னால் நெடுந்தொலைவிலிருந்து எழுகின்ற அந்தக் குரலை கடைசியாகக் கேட்பதைப் போலக் கவனித்தபடி அப்பாவின் முகத்தை அண்ணாந்து பார்த்தான். பொத்தான்கள் உதிர்ந்த சட்டை எதிர்க்காற்றில் படபடக்க, வியர்வை வழிகின்ற மயிரடர்ந்த நெஞ்சும் கலைந்த தலைமுடியுமாக வானத்து வெளிச்சத்தை முகம் தூக்கி ஏந்திக்கொண்டு சைக்கிள் மிதிக்கிற இன்னாசியின் முகத்தில் ஒரே ஒருமுறை அதனைப் பார்த்தான் சோலை.

4 comments

panneerselvam June 26, 2021 - 10:14 pm

அருமையான கதை.

இரு சிறுகதைகள் | எழுத்தாளர் ஜெயமோகன் June 29, 2021 - 12:05 am

[…] இரண்டாவது கதை, துடி. […]

வேஇராகி July 22, 2021 - 1:59 pm

ஒரு வார்த்தை பல அர்த்தங்கள்.

Comments are closed.