நாம் எதனால் வாசிப்பதில்லை?

0 comment

வாசிப்பதன் பயன்களைப் பற்றி பள்ளியிலும் கல்லூரியிலும் தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கப்பட்டாலும் நம்மால் ஏன் வாசிக்க முடியவில்லை? விரிவான ஆய்வுகள் வாசிப்பைத் தடை செய்யும் சில காரணிகளைப் பட்டியலிடுகின்றன.

குடும்பச் சூழல் – உண்மையில் பல குடும்பங்களில் வாசிப்பதற்கான சூழலே இருப்பதில்லை. வறுமை அல்லது எந்நேரமும் பூசலிடுவது அல்லது குடும்பத் தொழில் காரணமாக வாசிப்பதற்கான உளநிலைகள் அமையாமல் இருப்பது. தமிழகத்தில் இருபது சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வருவதே கடுமையான வறுமைக்கு மத்தியில்தான். சில மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்த்தால்தான் கல்வியைத் தொடர முடியும் நிலையில் உள்ளார்கள். அவர்களால், உள்ளபடியே வாசிக்க இயலாது.

பயிற்சியின்மை – நமது சூழலில் ஒரு மாணவன் அதிகபட்சம் எட்டாம் வகுப்பு வரைதான் எதையாவது வாசிக்க அனுமதிக்கப்படுகிறான். பிறகு கல்லூரியில் சேரும் வரை மதிப்பெண்களுக்கான நெருக்கடியும் டீன் ஏஜ் குழப்பங்களும் வாசிக்கவிடாமற் செய்துவிடுகின்றன. ஆகவே திடீரென்று ஒரு நூலைக் கருத்தூன்றி வாசிக்கும் பயிற்சி இல்லாமல் போய்விடுகிறது. 

ஆர்வமின்மை – பல காரணங்களால் ஆர்வமின்மை உண்டாகிவிடுகிறது. ஓர் எளிய உதாரணம் சொல்வதென்றால் இன்று தமிழகத்தில் பொறியியல் பயிலும் பெரும்பான்மை மாணவர்களுக்குத் தங்கள் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை மனச்சோர்வினை உருவாக்கியுள்ளது. ஆகவே எதைச் செய்து என்ன ஆகப்போகிறது எனும் மனநிலை நீடிக்கிறது.

https://s3.amazonaws.com/lowres.cartoonstock.com/children-school_library-lending_library-media_center-librarian-digital_books-dgrn560_low.jpg

வழிகாட்டல் இல்லை / ஊக்குவிப்பில்லை மிகப்பெரிய பிரச்சினையாக இது கருதப்படுகிறது. இன்று வாசிக்க நினைக்கும் இளைஞனின் கையில் முக்கியத்துவம் இல்லாத சலிப்பூட்டும் ஒரு நூல் சிக்கிவிட்டதென்றால் மிக எளிதாக ஆர்வம் இழந்துவிடுவான். பிறகு புத்தகங்களின் திசைக்கே திரும்ப மாட்டான். ஆகவே, எதை வாசிப்பது, எப்படி வாசிப்பது என்ற வழிகாட்டல் மிக முக்கியம். போலவே வாசிப்பை ஊக்குவிக்கும் ரிவார்டுகளும் மிக அவசியம்.

கவனச்சிதறல்கள் – இணையம், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம்- விளக்கம் தேவையில்லை.

கல்வி சார்ந்த அழுத்தங்கள் – இன்று கல்லூரிகளிலேயே ஏராளமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிலபஸ்களை முடிக்கவே நேரம் போதாத நிலையில் சில கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அன்றாடம் மாணவர்கள் விரல் ஒடியும் வண்ணம் அசைன்மெண்ட் கொடுக்கும் பேராசிரியர்களும் உண்டு. 

இதையெல்லாம் தாண்டிய ஒரு பெரிய காரணம் உண்டு. அதன் பெயர் ‘சுவாரஸ்யமின்மை’.

நமக்கு ஏன் புத்தகங்கள் சுவாரஸ்யமாக இல்லை?

பல இடங்களில் மாணவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். “சார் நான் வாசிக்கணும்னுதான் ஆரம்பிப்பேன். ரெண்டு பக்கம் வாசிச்சதும் தூக்கம் வந்துடுதான் சார்.” இன்னும் சில பேர், “எதையாவது வாசிச்சாலே கடுப்பா இருக்குது சார்” என்றார்கள். உண்மைதான். பொதுவாக வாசிப்பு செயல்பாட்டாளர்கள் காண மறுக்கும் ஓர் உண்மை இது. புத்தக வாசிப்பு குறைந்து போனதற்கு சுவாரஸ்யமின்மைதான் முதன்மையான காரணம். ஆனால் அது புத்தகங்களின் பிழை இல்லை.

அம்மா அன்றாடம் காலையில் எழுந்து அவசர அவசரமாக நமக்குக் காலை உணவை சமைத்துத் தருகிறார். அதை நாம் சாப்பிட்டு முடிப்பதற்குள் மதியம் கல்லூரியில் சாப்பிடுவதற்கான உணவையும் தயார்செய்து லஞ்ச் பாக்ஸில் அடைத்துத் தருகிறார். பெரும்பாலும் அது லெமன், தக்காளி, தயிர் சாதங்களாகவோ, கிச்சடியாகவோ, சேவையாகவோ, பிரெட் ஆம்லெட்டாகவோ, அரிசி பருப்பு சாதமாகவோ, உப்புமாவாகவோ அவசரக் கோலத்தில் தயாரிக்கப்பட்ட எளிய உணவாகத்தான் இருக்கும். மதியம் பசித்த வயிறுடன் சோற்றுப் பொட்டலத்தைத் திறக்கையில் அவசரமாகச் சமைக்கப்பட்ட வழக்கமான மெனு முகத்திலடிக்கும். 

https://glasbergen.b-cdn.net/wp-content/gallery/digilife/toon918.gif

இத்துடன் ஒப்புநோக்க பீட்ஸா கவர்ச்சியானது, வண்ணமயமானது, சூடானது, சுவையானது. ஜூஸியான அதன் சீஸ்… ஹா எழுதும்போதே என் நாக்கில் ருசி ஊறுகிறது. இரசித்து ருசித்துப் புசிக்க போதுமான அத்தனைத் தகுதிகளும் பீட்ஸாவிற்கு இருக்கிறது. இல்லையென்றால் இத்தாலியின் ஏதோ ஒரு கிராமத்தில் உருவான பண்டம் உலகம் முழுக்க குடை விரிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஊருக்கு நூறு கடைகள் எனும் வீதத்தில் பீட்ஸா கடைகள் கிளை பரப்பியுள்ளன. 

ஒரேயொரு கேள்விதான். அம்மாவின் அவசர லஞ்சுடன் ஒப்புநோக்க பீட்ஸா சுவையானதுதான். ஆனால் தொடர்ச்சியாக ஒரு நாளின் மூன்று வேளையும் பீட்ஸாவையே உணவாகக் கொண்டால் என்ன ஆவோம்? செத்துப் போவோம் என நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது. நீங்கள் நிஜ வாழ்வில் அதைத்தான் செய்கிறீர்கள். உங்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப் ஸ்டேட்டஸ் டைம்லைன்களோடு ஒப்புநோக்க புத்தகங்கள் சற்று சுவாரஸ்யம் குறைவானவைதான். ஒரு நடிகனின் சிக்ஸ்பேக் புகைப்படம், புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது, நடிகையின் மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட், விளையாட்டு வீரனின் புதிய சிகையலங்காரம், நகைச்சுவை மீம்ஸூகள், அழகிகளின் டிக்டாக்குகள், காமெடி வீடியோக்கள், கேலிகள், கிண்டல்கள், நக்கல்கள், உலகின் ஏதோ மூலையில் நிகழும் வேடிக்கை வினோதங்கள், நண்பர்களின் சுற்றுலா புகைப்படங்கள் என நொடிக்கு நொடி நுரை கொப்பளித்தபடி ‘என்னைக் கவனி, என்னைக் கவனி’ என ஒளியாகவும் ஒலியாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை ஊடகமாக்கி, தன்னைப் பண்டமாக்கி, தன்னைக் கோமாளியாக்கி, தன்னை அரசியல் நோக்கராக்கி இந்த உலகில் முன்வைத்துக்கொண்டே இருக்கிறான். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இவற்றை விடாது பார்த்துக்கொண்டே இருப்பது மூளைக்கு டோபோமைன் ஏற்றிக்கொள்வது போல. ஒரு புதிய தகவல் என்பது மூளையின் நுட்பமான பகுதியைச் சென்று தீண்டும் டோபோமைன். ஆகவேதான் சமூக ஊடகங்களில் புழங்குபவர்களுக்கு ஒரு ஆரம்பகட்ட உற்சாகம் கிடைக்கிறது. புத்துணர்ச்சி கிடைப்பதான உணர்வு ஏற்படுகிறது. தாங்கள் பிறறியாத பலவற்றையும் தெரிந்தவர்களான ஒரு மயக்கத்தையும் உண்டாக்குகிறது. அந்த மெல்லிய ஆணவம் நாள்பட நாள்பட கெட்டிப்பட்டுப் போகிறது. எதையும் ஊன்றிக் கவனிக்கவோ நுட்பமாகப் புரிந்துகொள்ளவோ இயலாத மூளைச்சோம்பல் கொண்ட நோயாளி ஆக்குகிறது. குடியைவிடவும் பெரிய பிரச்சினை இது. இப்போதே இணைய அடிமைகளுக்கான உள ஆலோசனை நிபுணர்கள் பெருகிவிட்டார்கள். எதிர்காலத்தில் நெட்டிஸன் மறுவாழ்வு மையங்கள் நிச்சயம் அமையக்கூடும். 

https://i.pinimg.com/474x/31/4a/c4/314ac4aec1717b8f06d2cd2d7dbeb489--social-media-humor-comic-strips.jpg

ஓரொரு நிமிடமும் பரபரப்பு கூட்டும் சமூக வலைதளங்களுக்குப் பழகிய ஒருவர் புத்தகங்களைப் பொறுமையாக வாசித்தல் இயலாத காரியம். அடுத்தத் தெருவில் ஆடல் பாடல் நிகழும்போது ஒருவன் வீட்டில் அமர்ந்து பாராயணம் செய்ய முடியுமா என்ன? புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும். அதற்குரிய பொறுமையையும் மரியாதையையும் நாம் புத்தகங்களுக்கு வழங்க வேண்டும். இரண்டு பக்கம் படிப்பதற்குள் போனை எடுத்து நோட்டிபிகேஷன்ஸ் பார்ப்போமானால், நமக்கு நோய் முற்றிவிட்டது என்று பொருள். நான்கைந்து பக்கங்கள் படிப்பதற்குள் எழுந்து சென்று போனை நிரடிப்பார்க்கும் ஆவலை என்னால் கட்டுப்படுத்தவே இயலவில்லை எனச் சொல்லும் நண்பர்கள் எனக்குண்டு. 

நூல்கள் அளிக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம். வாழ்நாள் முழுக்க உடன் வரக்கூடியது. வாழ்வில் உக்கிரமான தருணங்களில் மனதின் அடியாழத்திலிருந்து எழுந்து வருவது. நாம் வாழும் வாழ்க்கைக்கு மேலும் நுண்ணிய அர்த்தங்களைச் சேர்ப்பது. இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும் பெருக்கிக்கொள்வதற்கும் வழிகாட்டுவது. டிவைஸ்கள் அளிக்கும் சிற்றின்பங்கள் ஒருபோதும் இத்தகைய பேரின்ப அனுபவங்களுக்கு இணையாகாது.

டிவைஸ்களுக்கு எதிரான மனோபாவமா?

மிக மிகப் பழைய மனோபாவம் கொண்ட ஒருவனின் சொற்களாக இந்தக் கட்டுரை புரிந்துகொள்ளப்படும் அபாயம் இருக்கிறது. எகிப்து பிரமிடு ஒன்றிலிருந்து எழும்பி வந்த மம்மிக்களுள் ஒன்று பல நூற்றாண்டுகள் பழைய தொழில்நுட்பமான புத்தகங்கள், நாளிதழ்கள் என்று ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறது எனத் தோன்றலாம். ஆனால் நான் ஒருபோதும் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் அல்ல. தொழில்நுட்பத்தை எதிர்ப்பவன் முழுமூடன். தொழில்நுட்பம் ஆயிரம் பகாசுரக் கரங்களுடன் வரலாற்றை உருமாற்றிக்கொண்டிருக்கும் ஒன்று. அத்துடன் மோதி வெல்லும் வல்லமை இறைவனுக்கும் இல்லை. நான் மீண்டும் மீண்டும் இளைஞர்களிடம் வலியுறுத்திச் சொல்வது ஒன்றைத்தான். தொழில்நுட்பத்தை உங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நீங்கள் அதை உபயோகிக்கிறீர்கள் என்று பொருள். தொழில்நுட்பம் உங்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் அதன் பொருள் என்ன? நீங்கள் வெறும் கச்சாப்பொருள். அவ்வளவே. உங்களை அரைத்து துப்பிவிட்டு அது அடுத்த ஆளை நோக்கிச் சென்றுவிடும். 

டிவைஸ்களின் பயன்பாட்டைக் குறித்து எச்சரிக்கும் ஆய்வுகள் உலகெங்கும் வெளியானபடி இருக்கின்றன. அவையெல்லாம் உங்களை வந்தடைகிறதா என்பது அச்சமாக இருக்கிறது. ஒரு டைப்ரைட்டரில் டைப் அடிக்கும் வேகத்தில் காரணகாரியம் இன்றி போனில் டைப் செய்துகொண்டிருக்கும் கம்பல்சிவ் டெக்ஸ்டிங் கற்றல் குறைபாட்டினை உருவாக்குகிறது. இந்தப் பிரச்சினை ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம். காதில் கருஞ்சரடு மாட்டி கல்லூரிக்கு வருகையிலும் போகையிலும் ஹாஸ்டலிலும் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களின் காதில் பாதகம் விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில் செவி கேட்கும் திறனை இழக்கிறது. அதை மீட்டெடுக்க வைத்தியத்தில் வழியே இல்லை. காது கேட்கும் கருவிதான் மாட்ட வேண்டும். போன் அடிக்காத போதே அடிப்பது போன்ற உணர்வு அடிக்கடி எழுவது, பேட்டரி டவுண் ஆகும்போது உருவாகும் மன உளைச்சல், இரவிரவாகப் போன் பயன்படுத்துவதால் உருவாகும் தூக்கமின்மை, தூக்கமின்மையின் விளைவால் உடல் பருமன், செரிமானப் பிரச்சினை, மன அழுத்தம், மாதவிடாய்க் கோளாறு, நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள். கவனமின்மை, உடல் சோர்வு, நேரத்தை நிர்வகிக்க முடியாமல் போவது போன்ற பல உப விளைவுகள். இவற்றைப் பற்றிய கவனம் நமக்கு இருக்கிறதா?

மேற்கண்டவற்றை விடவும் அபாயகரமான இரு உளவியல் சிக்கல்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறேன். ஒன்று ‘ஷேரிங் பெருமாள்களின்’ ஆளுமைக் குறைபாடு. எப்போதும் எதையாவது நண்பர்களுடனும் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொண்டேயிருப்பது. இந்த உளநிலையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனக்கென ஒரு ஆளுமை இல்லாதவர்கள், இல்லாத ஒரு போலி பிம்பத்தை நண்பர்கள் மத்தியில் கட்டமைக்கவே ஷேரிங் பெருமாள்களாக மாறுகிறார்கள் என்கிறார்கள் உள நிபுணர்கள். நான் எப்படிப்பட்டவன் தெரியுமா? எப்படிப்பட்ட விஷயங்கள் என்னை வந்து சேர்கின்றன தெரியுமா? உங்களுக்கு இதைத் தெரியப்படுத்தி வழிநடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என ரியல் செல்ஃபுக்குப் பதிலாக ஒரு சோஷியல் செல்ஃபை உருவாக்கும் முயற்சிதான் இது. இதிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வழி இருக்கிறது. நீங்களே சிந்தித்து உருவாக்காத ஒன்றை ஒருபோதும் பரப்பாதிருப்பது. கருத்தோ, பாடலோ, டிக்டாக் வீடியோவோ, மீம்ஸோ – நீங்கள் உருவாக்கியிருந்தால் நீங்கள் ஒரு படைப்பாளி. அதை உலகத்தோடு பெருமையோடு பகிர்ந்துகொள்ளுங்கள். எவனோ உருவாக்கிய ஒன்றை அது எவ்வளவு முக்கியமானதெனினும் பரப்புவதில்லை என்பதே சரியான நிலைப்பாடு. 

இன்னொரு சிக்கல். சமூக வலைதளத்தில் நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருப்பது சக மனிதர்களின் வாழ்க்கைத் தருணங்களை. ஒருவர் வீடு வாங்கியிருக்கிறார், இன்னொருவர் புதிய காருடன் படம் போடுகிறார், போட்டியில் வென்றிருக்கிறார், விருது பெற்றிருக்கிறார், குடும்பத்தோடு வெளிநாட்டுக் கடற்கரையில் எடுத்த புகைப்படம், வெற்றி பெற்ற திரைப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டி, பணி உயர்வு, குழந்தைகள் போட்டிகளில் வென்ற செய்திகள், பண்டிகைப் பரிசுகள், குடும்பக் கொண்டாட்டங்கள், காதலியுடன் பொன்னான தருணம், அழகிய தோழியர் புடைசூழ செல்ஃபி, திருமண போட்டோ ஷூட்டுகள் எனப் பெரும்பாலும் களியாட்டுகள். நம்முடைய வாழ்வில் இத்தனை கொண்டாட்டங்கள் இல்லை. நாம் விஜயராமபுரத்திலிருந்து கிளம்பி சாத்தான்குளம் வந்து சைக்கிளை பஸ் ஸ்டாண்டில் போட்டுவிட்டு நாசரேத் பஸ் ஏறி நிறுத்தத்தில் இறங்கி காலேஜ் வரை நடந்து வகுப்பு முடிந்ததும் பழையபடி அதே வழியில் திரும்பும் அன்றாடம் உடையவர்கள். பெரிய வர்ண வேறுபாடுகளற்ற தினசரி வாழ்க்கை நம்முடையது. அடுத்தவனின் கொண்டாட்டத்தையும் வெற்றியையும் மட்டுமே சதாசர்வகாலமும் பார்த்துக்கொண்டிருப்பது உருவாக்கும் மன அழுத்தத்தைப் பற்றி நாம் யோசிப்பதே இல்லை. சாதாரணர்களின் வாழ்வில் திருமணம், வீடு, கார், பதவி உயர்வு, விருது என்பன போன்ற அசாதாரண சம்பவங்கள் நான்கைந்து தடவைதான் சாத்தியம். நாம் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா எனும் எண்ணம் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குள் எழுவது இயற்கை. நமக்கு நாமே தாழ்வுணர்ச்சியை ஏன் உருவாக்கிக்கொள்ள வேண்டும்?

https://www.exoplatform.com/blog/wp-content/uploads/2018/06/800-2.png

இந்த நூற்றாண்டின் இந்தத் தருணத்தில் இருவகை மனிதர்கள்தான் உள்ளார்கள். ஒளிரும் திரைக்கு உள்ளே இருப்பவர்கள். திரைக்கு வெளியே இருப்பவர்கள். உள்ளே இருப்பவர்கள் வென்றவர்கள். சாதனையாளர்கள். எதையாவது ஒன்றைச் செய்து காண்பித்தவர்கள். ஆகவே வெளியே நிற்கும் நாம் அவர்களை வாய்பிளந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நீ உள்ளே நிற்கப் போகிறாயா, வெளியே நிற்கப் போகிறாயா என்பதைக் கேட்டுக்கொள். உள்ளே நிற்க விரும்பினால், உலகமே உன்னைக் கவனிக்க விரும்பினால் நீ ஒருபோதும் வெளியே நிற்காதே. உன் ஆர்வம் செல்லும் திசையை நோக்கி விசையோடு செல். இன்று தன் துறையில் முழு அர்ப்பணிப்போடு செயலாற்றி தன்னை இழப்பவர்கள் மிகவும் குறைவு. கபீரின் கவிதை ஒன்று.

செய்யும் ஒன்றை முழுதாய்ச் செய்.
எல்லாம் செய்தவனாவாய்.
இருக்கும் எல்லாவற்றையும்
செய்ய நினைத்தால்
அந்த ஒன்றையும் இழந்திடுவாய்
பூக்களும் பழங்களும் தேவையெனில்

நீ நீருற்ற வேண்டியது வேருக்கே1.

நான் வீடியோ பார்க்கிறேன் போதாதா?

“சார் என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க, எனக்கு வாசிக்க மட்டும் வராது சார்” என்பார்கள் சிலர். ஏன், கண் பார்வை சரியில்லையா என்பேன் நான். “இல்ல சார், எனக்கு என்னமோ புக்ஸ் எனக்கான மீடியம் இல்லைன்னு தோணுது சார்” என்பார்கள். ஏன், எழுத்தறிவு இல்லையா என்பேன் நான். “சார், நான் வாசிக்கறதுதான் இல்லையே தவிர நிறைய வீடியோஸ் பார்ப்பேன் சார். ஆடியோ புக்ஸ்லாம் கேட்பேன் சார்” என்பவர்களிடம் சரி, நீங்கள் சமீபத்தில் கேட்ட புதிய சிந்தனையை வெளிப்படுத்தும் உரையைக் குறிப்பிடுங்கள் என்பேன். நீங்கள் கேட்ட ஆடியோ புத்தகம் ஒன்றின் மையக்கருத்தை ஒரு பத்து நிமிடம் பேசுங்கள் என்பேன். பெரும்பாலும் ஓடிவிடுவார்கள்.

https://www.gannett-cdn.com/presto/2020/04/25/PEVC/f5ddcf0a-fb11-4029-9592-b4ff0d40eeb0-94144093_2888251057918472_104666952844181504_o.jpg

வீடியோக்களும் ஆடியோக்களும் வாசிக்க இயலாத முதியவர்கள், நோயாளிகள், பார்வைத் திறனற்றவர்கள், பாமரர்கள், நெருக்கடியான பணிகளில் இருப்பவர்களுக்காக உருவானவை. அறிவுத் தேட்டம் உள்ள ஒருவன், தனது அறிதலின் ஒரு வழியாக, தான் மட்டுமே இவற்றைப் பயன்படுத்த வேண்டுமே தவிர இதைப் பெருவழிப்பாதையென கருதிவிடக்கூடாது. வீடியோ மட்டுமே பார்த்து, ஃபேஸ்புக்கில் மட்டுமே வாசித்து அறிஞர் ஆன ஒருவரை நானும் என் நண்பர்களும் கடந்த பத்தாண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சிக்கவில்லை. வீடியோக்களுக்கு நினைவில் வாழும் வீரியம் இருப்பதில்லை. சில திறன்களை மேம்படுத்திக்கொள்ள வீடியோக்கள் உதவலாம். 

ஒளிரும் திரைகளின் இன்னொரு பிரச்சினை- அவை கற்பனையை கட்டுப்படுத்துகின்றன. ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘பொன்னியின் செல்வன்’ வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் உருவாவது ஒவ்வொரு வந்தியத்தேவன். திரையில் வந்தியத்தேவனாக நடிகர் விக்ரம் நடிக்கிறார் என்று வையுங்கள். அதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்குமே அவர் ஒரே வந்தியத்தேவன்தான். கற்பனைச் சிறகு எல்லையில்லாதது. ஒரு நாவலை வாசிக்கையில் உங்கள் அகத்தில் விரியும் சித்திரம் மிக மிக விரிவானது. நீங்கள் பார்க்கும் நிலம், மனிதர்கள், தாவரங்கள், இயற்கைக் காட்சிகள், உணர்ச்சிகள் அத்தனையும் புதியது, அந்தரங்கமானது. திரைகள் தொழில்நுட்பத்தால் செறிவாக்கின ஒற்றை அனுபவத்தை மட்டும்தான் தர இயலும்.

*

குறிப்புகள்:

1நூல்: புன்னகைக்கும் பிரபஞ்சம், மொழிபெயர்ப்பு- செங்கதிர்.

“வாசிப்பது எப்படி?” நூலிலிருந்து ஒரு பகுதி.