பழங்குடிகளைப் புரிந்துகொள்வது எப்படி?

by மருதன்
0 comment

ஒருமுறை கள ஆய்வுக்காக இமயமலை சென்றிருந்தபோது, பழங்குடி கிராமமொன்றில் சில முதியோர்களைக் கண்டேன். உங்களை ஒரு படம் எடுத்துக்கொள்ளட்டுமா என்று கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். இவர்கள் மட்டுமல்ல, உலகளவில் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிய சுபத்ரா மித்ரா சன்னா. தன்னுடைய புதிய நூலில் (Anthropological Perspectives on Indian Tribes, 2020) இந்தப் புகைப்பட அச்சத்துக்குப் பின்னாலுள்ள மானுடவியல் காரணங்களை அவர் விவாதிக்கிறார்.

என்னை நீங்கள் படம் எடுக்கும்போது என் தோற்றத்தைப் பிரதியெடுக்கிறீர்கள். என்னுடைய படம் என்பது மற்றொரு நான். அந்த மற்றொரு ‘நான்’-ஐ நீங்கள் என்னிடமிருந்து உருவி எடுத்துக்கொண்டுவிடுகிறீர்கள். நீங்கள் அந்தப் படத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். நீங்கள் விரும்பியவாறு என்னை வசியப்படுத்தலாம். என்னை வீழ்த்த பில்லி, சூனியம் ஏவிவிடலாம். என் மனதுக்குள் புகுந்து என் சிந்தனைகளைக் கலைத்துப் போடலாம். என் பிரதியை யாரிடமும் அளிக்க எனக்கு விரும்பவில்லை.

பழங்குடிகள் அல்லவா? அதனால்தான் பிற்போக்குத்தனமாக இப்படிச் சிந்திக்கிறார்கள் என்றுதான் உடனே நினைக்கத் தோன்றும். ஆனால் அது உண்மையல்ல என்கிறார் சன்னா. பல நவீன பத்திரிகைகளில் வெளிவரும் ராசி பலன்களை ஆர்வத்தோடு வாசிப்பவர்களை என்னவென்று அழைப்பீர்கள்? தங்கள் வாழ்வை மாற்றியமைக்கப்போகும் பல வண்ணக் கற்களை வாங்கி அணிபவர்களை என்னவென்று சொல்வீர்கள்? பிடிக்காத எண், ராசியான சட்டை, முகராசி கொண்ட மனிதர் என்று நாகரிக சமூகம் எண்ணற்ற நம்பிக்கைகளில் திளைத்துக்கொண்டிருக்கிறது. எனில் புகைப்படம் எடுத்துக்கொள்ள அஞ்சும் பழங்குடிகளுக்கும் நமக்கும் அப்படி என்னதான் பெரிய வேறுபாடுகள் இருக்கமுடியும்? இவர்களில் யார் பிற்போக்கானவர்கள், யார் நவீனமானவர்கள்? யார் பின்தங்கியவர்கள், யார் வளர்ந்தவர்கள்? எந்த இடத்தில் அவர்கள் உலகம் நிறைவடைந்து நம் உலகம் தொடங்குகிறது?

சுபத்ரா மித்ரா சன்னாவின் புத்தகத்தை வாசிக்கும்போது இந்தக் கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன. பழங்குடி என்பவர் யார் என்பதில் தொடங்கி குடும்பம், திருமணம், உறவுமுறை, மதம், வாழ்வாதாரம், சூழலியல், மொழி, சிந்தனைமுறை, போராட்டம், அரசியல், எதிர்காலம் என்று பருந்துப் பார்வையில் பழங்குடி உலகை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் சன்னா.

சுபத்ரா மித்ரா சன்னா

பழங்குடி என்று யாரை அழைக்கமுடியும்? இந்தக் கேள்விக்கு எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விளக்கத்தை இதுவரை யாரும் அளிக்கவில்லை என்பதை ஆரம்பத்திலேயே அழுத்தமாகச் சுட்டிக்காட்டிவிடுகிறார் சன்னா. இன்னின்ன பண்புகளைக் கொண்டிருப்பவர் பழங்குடி, அத்தகைய பண்புகள் இல்லாதவர் ‘மற்றவர்’ என்று பிரித்துக் காட்டுவது சாத்தியமில்லை. அவ்வாறு செய்யத் தொடங்கினால் குழப்பங்களுக்கும் மயக்கங்களுக்கும் நாம் ஆளாக நேரிடும். ஒரு பழங்குடியின் அடையாளம் நிலையானதல்ல. காலமும் சூழலும் மாறும்போது அதற்கேற்ப அடையாளமும் தக்கமுறையில் உருமாறுகிறது. இருந்தாலும் பழங்குடி என்று நாம் சொல்லும்போது நாம் யாரைப் பேசுகிறோம் என்பது குறித்து நமக்குள் ஒரு மனச்சித்திரம் உருவாகிவிடுகிறது. அந்த மனசித்திரம் எந்த அளவுக்கு நேர்மையானது என்பதை அறிவது முக்கியம். அதைவிட முக்கியம், இப்படியொரு மனச்சித்திரத்தை நாம் எவ்வாறு உருவாக்கிக்கொண்டோம் என்பதை ஆராய்வதும்.

*

சமூகத்தின் அடிப்படை அலகு, குடும்பம் என்பதால் அங்கிருந்தே தொடங்வோம். பழங்குடிகள் எவ்வாறு தங்கள் குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள்? எவ்வாறு திருமணம் செய்துகொள்கிறார்கள்? அவர்கள் குடும்ப அமைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான இடம் இருக்கிறதா?

இந்தியப் பழங்குடிகளிடையே ஒருதார மணமே அதிகம் என்றாலும் பலதார மணமும் அரிதல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்துகொள்ளும் ஆண்கள் இருக்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்ணை மணந்துகொள்ளும் ஆணுக்குக் கூடுதலாக உழைக்கும் கரங்களும் பிள்ளைச் செல்வங்களும் வந்து சேர்வதால் இதை ஆண்கள் தெரிவு செய்கிறார்கள். வடகிழக்கு பகுதிகளில் பொருளுற்பத்தியில் பெண்கள் பங்கேற்பு அதிகமிருக்கும் குழுக்களில் பலதார முறை காணப்படுகிறது.

மனைவியின் மரணத்துக்குப் பிறகு அவர் தங்கையை மணம் செய்துகொள்வது, முதல் மனைவிக்குக் குழந்தையில்லை என்றால் அவள் சகோதரியை மணந்துகொள்வது இரண்டும் பழங்குடி மக்களிடையே வழக்கத்தில் இருக்கிறது. கணவன் இறந்தபின் அவன் சகோதரனை மணந்துகொள்ளும் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு பெண் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல ஆண்களை மணந்துகொள்ளும் வழக்கம் மத்திய இமயப் பகுதிகளில் சில இடங்களில் நிலவுகிறது.

2008ஆம் ஆண்டு சன்னா தன் கள ஆய்வின் போது இத்தகைய வழக்கத்தைக் கடைபிடிப்பவர்களோடு உரையாடியிருக்கிறார். ஏன் இந்த வழக்கம் சிறந்தது என்பதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கம் இது. ஒரே பெண்ணைச் சகோதரர்கள் மணம் செய்துகொள்ளும்போது குடும்பம் உடைவது தடுக்கப்படுகிறது. ஆண்கள் அனைவரும் வெளிவேலைக்குச் சென்றுவிட்டாலும் பெண் வீட்டில் தங்கியிருந்து பெரியோர்களையும் கால்நடைகளையும் கவனித்துக்கொள்கிறாள். ஒரு கணவன், ஒரு மனைவி என்றிருந்தால் அந்தக் குடும்பம் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றுவிடுவதற்கே வாய்ப்பு அதிகம். இது இயல்பான வழக்கமல்ல என்பதை இந்தப் பழங்குடிகள் உணர்ந்திருக்கிறார்கள். சமூகத்துக்குத் தெரியவந்தால் பரிகாசத்துக்கு உள்ளாவோம் என்பதால் இந்த வழக்கம் குறித்து அவர்கள் வெளியில் சொல்வதில்லை என்கிறார் சன்னா.

யார் எந்த முறைப்படி திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதை மணமகனோ மணமகளோ மட்டும் முடிவு செய்வதில்லை. இது அவர்களுடைய குடும்ப விவகாரம் மட்டுமேயல்ல. அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்றாற்போலவே திருமணங்கள் நடைபெறுகின்றன. குழுவின் பங்கும் இதில் கணிசமானது. தனி நபர்களின் உரிமையைவிட, அவர்களுடைய நலனைவிட அவர்கள் சார்ந்திருக்கும் குழுவின் உரிமையும் நலனும் முக்கியமானவை. தனி நபர் பிறக்கிறார், இறக்கிறார். அவர் மரணத்துக்குப் பிறகு உலகம் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. அவர் இடத்துக்கு இன்னொருவர் வருகிறார். அவர் வாழ்வை இன்னொருவர் தொடர்கிறார். அவருடைய இடைவெளி இன்னொருவரால் நிரப்பப்படுகிறது. இனக்குழு என்பது தனி நபர் போல் மறைந்து போவதில்லை. பிறப்புகள் வழியே குழு செழித்துக்கொண்டே போகிறது. எனவே குழுவுக்கேற்ற வகையில் குடும்பம் கட்டமைக்கப்படுகிறது.

ஐந்து சகோதரர்களைத் திருமணம் செய்துகொண்ட பெண்

மண வாழ்க்கை மட்டுமல்ல பழங்குடி வாழ்வின் எந்தவொரு அம்சத்தையும் அவர்களுடைய சிந்தனை முறையோடு இணைத்தே புரிந்துகொள்ள முயலவேண்டும் என்கிறார் சன்னா. பிரபஞ்சம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது தொடங்கி மனித வாழ்க்கை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பது வரை; பிறப்பு முதல் இறப்பு வரை; வானம் முதல் பூமி வரை; கடவுள் முதல் பிசாசு வரை அனைவரையும், அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்டமான உலகப் பார்வை அவர்களுக்கு இருக்கிறது. அந்தப் பார்வையின் அடிப்படையில்தான் அவர்கள் மணம் செய்துகொள்கிறார்கள், குழந்தைகளை வளர்க்கிறார்கள், துயரங்களை எதிர்கொள்கிறார்கள், மரணத்தைப் புரிந்துகொள்கிறார்கள். இறப்புக்குப் பின்பும் வாழ்கிறார்கள்.

காலனிய மானுடவியலாளர்களும் சரி; அவர்களுடைய கருவிகளையும் கோட்பாடுகளையும் அடியொற்றி இயங்கும் இந்திய மானுடவியலாளர்களும் சரி, பழங்குடிகளின் வாழ்க்கை முறையைத் தனியே வெட்டியெடுத்து மேலோட்டமாக அலசுகிறார்கள். எனவே அவர்களுடைய செய்கைகள் சுவையானவையாக, விசித்திரமானவையாக, அதிர்ச்சியூட்டுபவையாக சுருங்கிவிடுகின்றன.

*

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அளவுகோலை அவர்களுக்குப் பொருத்தி ஏதேனும் ஒரு சாக்குமூட்டைக்குள் அவர்களை மொத்தமாகத் திணிப்பதற்குப் பதில் கண்களையும் காதுகளையும் அகலமாகத் திறந்து வைத்துக்கொண்டு அவர்களை அணுகவேண்டும் என்கிறார் சன்னா. எளிமைப்படுத்தப்பட்ட சித்திரத்தை ஒருபோதும் உருவாக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

பழங்குடிகள் தாய்வழிச் சமூகமாகத் திரண்டிருக்கிறார்கள் என்றோ பாலினச் சமத்துவம் அவர்களிடையே நிலவுகிறது என்றோ எளிமைப்படுத்திச் சொல்லிவிடமுடியாது. நிச்சயம் நகரங்களில் இருப்பதைப் போன்ற அழுத்தமான வேறுபாடுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவுவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். பொதுவாகவே உடைமைகள் குறைவாக இருப்பதும் குடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே உணவு உற்பத்தியில் இணைந்து ஈடுபடுவதும் அவர்களுக்குள்ளே அழுத்தமாக வேறுபாடுகள் தோன்றுவதைக் குறைக்கின்றன. குறைக்க மட்டுமே செய்கின்றனவே ஒழிய காணாமல் ஆக்கிவிடவில்லை. எடுத்துக்காட்டுக்கு, தோடர்கள் உற்பத்திக் கருவிகளைத் தங்கள் ஆண் வாரிசுகளுக்கும் சடங்குகள், நடைமுறைகள் போன்வற்றைப் பெண் குழந்தைகளுக்கும் வழிவழியாகக் கையளிக்கிறார்கள். இந்தப் பங்கீடு நிச்சயம் சமமற்றதுதான்.

தோடர்கள்

நகரமயமாக்கலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க பாலின வேறுபாடும் அதிகரிப்பதைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டுக்கு, பழங்குடிகளின் வாழ்வில் மது இன்றியமையாதது. மது தயாரிப்பது ஆண்டாண்டு காலமாகப் பெண்களின் பொறுப்பாகவே இருந்து வந்திருக்கிறது. வீட்டுத் தயாரிப்பாக இருந்தது போய் வெளியிலிருந்து வாங்கப்படும் பண்டமாக மது மாறியதைத் தொடர்ந்து பெண்கள் அதுவரை வீட்டில் செலுத்திவந்த செல்வாக்கு சரியத் தொடங்கியிருக்கிறது. வீட்டில் மது உற்பத்தி செய்யப்பட்டபோது ஆண்கள் எவ்வளவு மது உட்கொள்ளவேண்டும் என்பதைப் பெண்களே தீர்மானித்தனர். வெளியில் சென்று குடிக்கும் வழக்கம் ஏற்பட்ட பிறகு மதுவுக்கு அடிமையாவது, சண்டையிடுவது, பொருளாதார இழப்பு என்று சிக்கல்கள் பெருகியிருக்கின்றன. மதுவுக்கு எதிரான பழங்குடிப் பெண்களின் போராட்டம் அதிகரித்திருப்பதன் பின்னணி இதுவே என்கிறார் சன்னா.

தோடர்கள் ஆண்வழிச் சமூகத்தினர். குழந்தைச் செல்வத்தை வழங்குமிடத்தில் இருப்பதால் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள். வரதட்சணை கொடுத்து பெண் எடுப்போரும் உள்ளனர். கடந்த காலங்களில் ‘மனைவியைக் கைப்பற்றும்’ வழக்கம் தோடர்களிடம் இருந்திருக்கிறது. பலமிக்க ஓர் ஆண் வேறொருவனுடன் சண்டையிட்டு அவன் மனைவியைக் கவர்ந்துவந்து குடும்பம் நடத்துவது ஏற்கத்தக்க முறையாக இருந்திருக்கிறது. பெண்ணை உடைமையாகக் கருதும் இந்தப் போக்கு பின்னர் மாற்றமடைந்தது.

வனங்களில் வசிப்பவர்களும் உற்பத்தியில் ஈடுபடாமல் உணவு சேகரிப்பவர்களும் பிற சமூகத்தினரைக் காட்டிலும் பாலினச் சமத்துவத்தை அதிகம் பேணுகிறார்கள். தென்னிந்தியாவைச் சேர்ந்த மலைப்பண்டார மக்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இவர்கள் வனங்களில் வசிப்பவர்கள். ஆண், பெண் இருவரும் ஒன்றுபோல் உணவு தேடி சேகரிக்கிறார்கள். கிடைத்ததைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள். பொதுவாக வழிபாடு, சடங்கு என்று வரும்போது ஆணுக்கு உயர்ந்த இடமும் பெண்ணுக்குத் தாழ்வான இடமும் அளிக்கப்படுவது வழக்கம். தோடர் இனப் பெண்கள் அசுத்தமானவர்களாகக் கருதப்படுவதால் சடங்குகளில் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வழிபாட்டுக்குரிய இடங்களில் பெண்கள் நடந்து செல்வதுகூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மலைப்பாண்டார மக்கள் இதிலும் மாறுபடுகிறார்கள். ஆண் ஆடையைப் பெண் அணிவதும் பெண் உடுத்தியதை ஆண் பயன்படுத்துவதும் இயல்பாக இருக்கிறது. பாலின வேறுபாடு இவர்களிடம் இல்லாததற்கு ஒரு முக்கியக் காரணம் அவ்வாறு பார்ப்பதற்கான எந்த வாய்ப்புகளும் இவர்கள் வாழ்வில் காணப்படுவதில்லை என்பதுதான். மற்றபடி, பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் செல்வாக்கு மிக்க ஓர் இனக்குழுவிடம் ஆண்வழிச் சமூகச் சிந்தனை மற்ற குழுக்களைவிடவும்  மேலோங்கியிருப்பதைக் காணலாம்.

இமயமலைப் பகுதிகளில் உள்ள போத்தியா, பக்கர்வால் போன்றோர் கால்நடைகளைத் தனியுடைமையாக வைத்துக்கொள்ளலாம். நீலகிரியைச் சேர்ந்த தோடர்களின் கால்நடைகள் குழுவுக்குச் சொந்தமானவை. தனிநபர்கள் ஆடு, மாடுகளை வீடுகளில் வைத்துக்கொண்டு பராமரிக்கலாம். ஆனால் அவை அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது. விளைச்சல் நிலம், நீர் ஆதாரம் போன்றவற்றையும் குழுவைச் சேர்ந்த பெரியோர்கள் நிர்வகிப்பார்கள்.

*

பழங்குடிகளுக்கு விதவிதமான பெயர்களை நாம் அளித்திருக்கிறோம். இவை போக அவர்களே தங்களுக்குச் சில பெயர்களைச் சூட்டிக்கொண்டுள்ளனர். அரசியல்ரீதியாகப் பட்டியல் பழங்குடி இனத்தவர் என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வியலோ ஒரு காட்டு மரம் போல் இந்த வேலிகளையெல்லாம் மறுத்து தன் கிளைகளை வெளியில் படரவிட்டுக்கொண்டிருக்கிறது. மானுடவியலாளர்கள் சில சமயம் தங்களுக்குப் பரிச்சயமான வகைப்பாடுகளுக்குள் அவர்களுடைய சில கூறுகளையாவது அடக்கிவிடவேண்டும் என்று துடிப்பார்கள். ஆனால் இயலாது.

உத்தரகாண்டில் வசிக்கும் ஜாட் போட்டியா என்போர் தங்களைக் குறிப்பிட்ட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்றல்லாமல் ஆடு மேய்ப்போர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதைத் தன் கள ஆய்வின்மூலம் கண்டறிந்திருக்கிறார் சுபத்ரா மித்ரா சன்னா. ஜாட் போட்டியா மக்கள் புழங்கும் மேய்ச்சல் நிலத்தில் சமோலி, கினார் போன்ற பிற பகுதிகளைச் சேர்ந்த ஜாட்டுகளும் வருவதுண்டு. அவர்களும் ஆடு மேய்ப்போர் என்பதால் இந்த இரு குழுவினரும் கலந்து பழகுவதோடு திருமண உறவும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இந்த அந்நியர்கள் வேறு வட்டார வழக்கில் பேசுபவர்கள், வேறு பழங்குடி மரபிலிருந்து வருபவர்கள் என்றாலும் ஆடு மேய்ப்போர் என்னும் குடையின்கீழ் இவர்கள் ஒன்றிணைகிறார்கள். நம் நம்பிக்கைகள் வேறு, வம்சாவளி வேறு, உலகப் பார்வை வேறு என்றாலும் மேய்ச்சல் நிலம் ஒரு பொதுத் தளத்தை நமக்கு உருவாக்கிக்கொடுத்திருக்கிறது. அதை ஏன் நமக்கான ஒரு புதிய உலகமாகக் கொண்டு கரம் கோர்த்து இணைந்து பிரவேசிக்கக்கூடாது? இப்படி இரு வேறு குழுக்கள் இணைந்து ஒரு பொதுவுலகை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் மானுடவியல் நெகிழ்வுத்தன்மையோடு இருந்தாக வேண்டியிருக்கிறது.

திருமண உறவு என்பது குழந்தைகளுக்காக மட்டுமே என்று ஜாட் போட்டியா மக்கள் கருதுவதில்லை. குழந்தைகள் பிறந்து வந்தால் கடவுளின் பரிசாக ஏற்று, மகிழ்கிறார்கள். இல்லாவிட்டாலும் சரிதான். குழந்தைகள் பெற்றோரின் நிழலில் வளர்வதில்லை. அனைவரும் சேர்ந்து வளர்க்கிறார்கள். ஜாட்டுகள் போலவே தோடர்களும் மேய்ச்சல் நிலத்தை மையமாகக் கொண்டு இயங்குபவர்கள்தான். ஆனால் ஜாட்டுகளின் பண்புகள் எதுவொன்றையும் தோடர்களிடம் நாம் காணமுடிவதில்லை. ஒரே சூழல் என்றாலும் ஜாட்டுகள் உருவாக்கிக்கொண்ட உலகமும் தோடர்கள் உருவாக்கிக்கொண்ட உலகமும் வெவ்வேறானவையாக இருக்கின்றன.

பெரும்பாலான பழங்குடித் திருமணங்கள் சடங்குகள் அதிகமின்றி நடைபெறுவதை மானுடவியலாளர்கள் காண்கின்றனர். ஆனால் சடங்குகளற்ற திருமண முறை என்றொரு பிரிவின்கீழ் எல்லாத் திருமணங்களையும் அவர்களால் கொண்டுவர முடியவில்லை. மத்திய இமயப் பகுதிகளில் மணமகனும் மகளும் உள்ளூர் தெய்வங்களின் அனுமதியைக் கோரி பெறவேண்டியது அவசியம். முதல் முறை விண்ணப்பிக்கும்போது அனுமதி கிட்டாவிட்டால் நிவர்த்திக் கடன்களைச் செய்து முடித்து சம்மதம் பெற்றாக வேண்டும். கடவுளிடம் அனுமதி பெறும் இந்த வழக்கம் மற்ற குழுக்களிடம் இல்லை. சில பழங்குடிகள் உள்ளூர் பூசாரியின் தலைமையில் எளிமையாகத் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்றால் இந்துக்களின் தாக்கத்துக்கு உட்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் முறையாக இந்து புரோகிதரை வரவேற்று, அவருக்கு மரியாதை செலுத்தி அவர் தலைமையில் மணம் செய்துகொள்கிறார்கள்.

வீட்டைவிட்டு வெளியேறி மணம் செய்துகொள்பவர்கள் இருக்கிறார்கள். திருமணத்தைப் புனித இணைப்பாகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். பந்தத்தை உடைத்துக்கொண்டு வெளியில் வருபவர்களை இயல்பாக எடுத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். கணவனை இழந்த பெண், குறிப்பாக இளம்பெண் மறுமணம் செய்துகொள்ளுமாறு ஒரு குழுவில் ஊக்குவிக்கப்படுகிறார். இன்னொன்றில் அவ்வாறில்லை. பழங்குடிகளிடையே குழந்தை மணம் முற்றிலும் இல்லை என்று சொல்லிவிடமுடியாது. மேற்கு வங்கத்திலுள்ள லோதாக்கள் மணமக்கள் பதின் வயதைத் தொடும்போதே திருமணம் செய்து முடித்துவிடும் போக்கைச் சமீபத்தில் தொடங்கியிருக்கிறார்கள். போண்டோ இளைஞர்கள் போரிடுவதும் மரணடைவதும் இயல்பாகிவிட்டதால் வம்சத் தொடர்ச்சியை உறுதிசெய்ய பதின் வயது பையனை பேரிளம் பெண்ணுக்கு மணம் செய்து வைக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு உகந்த ஏற்பாடு மட்டுமே இது.

*

இறப்புக்குப் பிறகு மனிதனின் உடல் மட்டுமே அழியும். ஆன்மா அவனிடமிருந்து விலகிச்சென்றுவிடும். ஆன்மா அழிவற்றது. மனிதனுக்கு மட்டும்தான் ஆன்மா உண்டு என்று சொல்லமுடியாது. விலங்குகள், தாவரங்கள், பொருள்கள் அனைத்துக்கும் ஆன்மா உள்ளது. இப்படிக் கண்ணுக்குத் தெரியும், தெரியாத எல்லாற்றிலும் ஆன்மாவைக் காணும் பழங்குடிகளின் நம்பிக்கை ஆன்ம வாதம் என்று அழைக்கப்படுகிறது. உத்தரகாசியைச் சேர்ந்த போட்டியா மக்கள் வனங்களிலுள்ள மரங்களைத் தேவர்களாகக் கருதுகிறார்கள். கல்லுக்கு உயிர் உண்டு என்பது நாகர்களின் நம்பிக்கை. வடகிழக்குப் பழங்குடிகள் சிலர் மனிதனுக்கும் விலங்குக்கும் ஒரே ஆன்மா என்று நம்புகிறார்கள். ஒரே ஆன்மாவைக் கொண்டிருப்பதால் ஒரு மனிதன் முயன்றால் விலங்காக மாறமுடியும் என்றும் விலங்கு மனிதனாக மாறுவது சாத்தியம் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.

கடவுள், மதம் குறித்த பழங்குடிகளின் பார்வை சிறுபிள்ளைத்தனமானது, எளிமையானது, வளர்ச்சியடையாதது என்னும் முடிவுக்குக் காலனிய மானுடவியலாளர்களின் வந்து சேர்ந்ததற்கு மேற்படி ஆன்ம வாதம் ஒரு முக்கியக் காரணம். மதத்தின் வளர்ச்சிப் போக்கில் ஆன்ம வாதம் மிகவும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக அவர்கள் கருதினர். இந்த எளிய நம்பிக்கைகளையெல்லாம் கடந்துதான் ஒரு பெரு மதம் உருவாகி வரும். பழங்குடிகள் பெரும்பாலும் பெரும் மதங்களை அண்டுவதில்லை என்பதால் அவர்களுடைய இறை நம்பிக்கை வெறும் மூடநம்பிக்கைகள் கொண்டாகவே இருக்கிறது என்று அவர்கள் முடித்துக்கொண்டனர். ஆனால் ஆன்ம வாத நம்பிக்கை இந்து மதம், பௌத்தம், கிறிஸ்தவம் தொடங்கி அனைத்திலும் நிறைந்திருப்பதை பின்வந்த ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். ஒடிசாவிலுள்ள டோங்ரியா கோண்டு மக்கள் நியாம்கிரி மலையைக் கடவுளாக வழிபடுவதை வைத்து அவர்கள் ஆன்ம வாத நம்பிக்கையாளர்கள், எனவே பழங்குடிகள் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம்தான். எனில், கைலாசத்தையும் கங்கையையும் யமுனையையும் நர்மதாவையும் கடவுளாக வழிபடுபவர்களை மட்டும் ஏன் பழங்குடிகள் என்றல்லாமல் இந்துக்கள் என்று அழைக்கவேண்டும்?

தவிரவும், பழங்குடி மதம், மற்றவர்களின் மதம் என்னும் பிரிவினையும்கூட அடிப்படையிலேயே பிழையானதுதான்.பட்டியல் பழங்குடிகளில் இடம்பெற்றிருப்பவர்களை எடுத்துப் பார்த்தால் அதிகாரப்பூர்வமாக பல இனக்குழுக்கள் இந்துக்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். மிசோராம், நாகாலாந்து போன்ற இடங்களில் கிறிஸ்தவப் பழங்குடிகள் அதிகம் இருக்கிறார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பழங்குடிகளும் உள்ளனர். பழங்குடிகளிடையே மதமாற்றமும் அரிதல்ல. காலனிய காலத்தில் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பில், கோண்டு, ஓரோன் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த மக்களை இந்துக்களாக அடையாளப்படுத்தும் முயற்சியில் இந்து தேசியவாதிகள் மும்முரமாக இயங்கினர். அந்த மக்களும் ஆரம்பத்தில் தங்களை இந்துக்கள் என்றே அழைத்துக்கொண்டனர். சுதந்தரத்துக்குப் பிறகு மனமாற்றம் அடைந்து மீண்டும் தங்களைப் பழங்குடிகள் என்றே அழைத்துக்கொள்ளத் தொடங்கினர்.

ஒருமுறை கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய ஒரு முதியவரை சந்தித்தபோது, இவ்வளவு வயதான நிலையில் ஏன் ஒரு புதிய மதத்துக்கு மாறினீர்கள் என்று கேட்டிருக்கிறார் சன்னா. முதியவரின் பதில் இது. ‘நான் இராணுவத்தில் பணியாற்றியவன். ஒருநாள் அங்கே தவறான எதையோ சாப்பிட்டுவிட்டேன் (அநேகமாக மாட்டிறைச்சி). என் குல தேவதைகளுக்கு என்மீது பயங்கர சினம். நான் என்ன செய்தும் அவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் பாட்டுக்கு என் அறையில் அமர்ந்திருப்பேன். கறுத்த நிறமுடைய ஓர் உருவம் ஜன்னல் வழியாக நுழைந்து என்னை அச்சுறுத்தும். எங்கு போனாலும் இந்தக் கறும்பிசாசு என்னைத் துரத்த ஆரம்பித்தது. எனக்குத் தெரிந்த சாமியார்களிடமெல்லாம் சென்று பார்த்துவிட்டேன், பலனில்லை. இறுதியில் ஈசா மசி (இயேசு நாதர்) நபர் ஒருவரிடம் சென்றபோது, அவர் அஞ்சாதே என் கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று சொன்னார். அவர் கடவுளை நான் ஏற்றுக்கொண்டால் பிசாசுகள் ஒழியுமென்றார். அதுதான் நடந்தது. ஈசா மசியை ஏற்றபிறகு எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தன. குல தேவதைகளும் அமைதியாகிவிட்டனர்.’

சாதி அவர்கள் உலகில் நுழையவில்லை என்பதும் தவறு. உத்தரகாண்டிலுள்ள போட்டியா மக்களும் மேற்கிலுள்ள கிராசியா மக்களும் இந்துக்கள் என்றல்ல, கூடுதல் அழுத்தம் கொடுத்து உயர் சாதி இந்துக்கள் என்றுதான் தங்களை அழைத்துக்கொள்கின்றனர்.

ஒடிசாவிலுள்ள சோரா மக்கள் இறந்தவர்களுக்கும் உயிரோடிருப்பவர்களுக்கும் இடையில் உரையாடல் நிகழமுடியும் என்று நம்புகிறார்கள். மரணம் யாரையும் துடைத்து அழிப்பதில்லை. மரணம் நம் வாழ்வின் ஒரு பகுதி. அது முடிவல்ல. ஒரு வேலியை அமைத்து இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கமாக மனிதர்களை கெண்டு சென்று வைக்கும் பணியை மட்டுமே மரணம் செய்கிறது. வேலிக்கு அந்தப் பக்கமிருப்பவர்களை நாம் மறக்கவேண்டியதில்லை. அவர்கள் நம்மோடு இல்லை என்று நினைக்கவேண்டியதும் இல்லை. அவர்களோடு நாம் தொடர்ந்து உரையாடலாம், சண்டையிடலாம், செய்தி பரிமாறிக்கொள்ளலாம். இதை எவ்வாறு செய்வது என்பதை சோரா மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். மணிப்பூரைச் சேர்ந்த தாங்குல் நாகர்களின் நம்பிக்கையும் இதுதான். இறந்த மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளையும்கூட இவர்களால் மீண்டும் காணமுடியும்.

*

தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு இன்று நாம் முன்னேறிய நிலையில் இருக்கிறோம் என்றும் பழங்குடி சமூகங்கள் யாவும் பிற்போக்குத்தனத்தில் உழன்றுகொண்டிருந்தன என்றும் வாதிடுவது அறிவியலுக்கு முரணானது என்பதை ஆதாரங்களோடு நிறுவுகிறார் சன்னா. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் உருவாக்கிய பூமராங்கையும் விலங்கு பொறிகளையும் இன்று நம்மால் எவ்வளவு முயன்றும் உருவாக்கமுடியாது. பழங்கற்கால மனிதன் போல் நம்மால் கற் கோடரியை உருவாக்கிவிடமுடியும் என்றா நினைக்கிறீர்கள்? இவை அனைத்தும் அவர்கள் காலத்து தொழில்நுட்பச் சாதனைகள்.

மலைப்பண்டாரத்தினர், பளியர், காட்டுநாயக்கர், இருளர், கோடர் போன்றோர் பல்லாண்டுகாலமாகப் வனப் பொருள்களைச் சேகரிப்பவர்களாக இருக்கிறார்கள். வனம்தான் அவர்கள் தாய், வனம்தான் அவர்கள் தந்தை. அனைத்தையும் வழங்குமிடத்தில் வனம் இருப்பதால் நாங்கள் அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே என்பதை அறிந்திருக்கிறோம் என்கிறார்கள் இவர்கள். ஆடை முதல் உணவு வரை; ஆயுதம் முதல் கருவி வரை அனைத்தையும் இருந்த இடத்திலிருந்தே இவர்கள் தமக்குள் உருவாக்கிக்கொள்கின்றனர். சிறிய எண்ணிக்கையில் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வருவதால் பகுத்துண்டு வாழ்கிறார்கள். ஒருவரும் பட்டினி கிடப்பதில்லை, ஒருவரிடமும் அபரிமிதமாக உணவு தங்கியிருப்பதும் இல்லை. நம் நவீன வாழ்க்கை முறை நம்மை மட்டுமின்றி நம் சூழலையும் சேர்த்தே அல்லவா சீரழித்துக்கொண்டிருக்கிறது?

இந்த மக்களின் வசிப்பிடங்களில் கள ஆய்வுக்குச் செல்லும் மானுடவியலாளர்கள் தங்கள் குழந்தைகளையும் தங்களோடு அழைத்துச்செல்வதுண்டு. அப்படியான தருணங்களில் அவர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். குழந்தைகள் குறித்து கவலைப்பட வேண்டியதேயில்லை. அங்கிருக்கும் பழங்குடிப் பெண்கள் இயல்பாகவே ஒன்றுகூடி முறை வைத்துக்கொண்டு ஆய்வாளர்களின் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வார்களாம். அவர்கள் குழந்தை, அவர்கள் பொறுப்பு என்று அவர்கள் கருதுவதில்லை. எந்தக் குழந்தையாக இருந்தாலும் கவனித்துக்கொள்ள வேண்டியது பெரியோராகிய நம் பொறுப்பு என்பதுதான் அவர்களுடைய எளிமையான புரிதல். இது எங்களை மிகவும் வியப்படைய வைத்தது என்கிறார்கள் மானுடவியலாளர்கள்.

*

வேட்டைச் சமூகம், மேய்ச்சல் நில சமூகம், வேளாண்மை, நகர்புறத் தொழில்மயச் சமூகம் என்று மனித வரலாற்றில் எல்லாக் காலகட்டங்களையும் பழங்குடிகள் கண்டிருக்கிறார்கள். எல்லாவற்றின் தாக்கத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள். அவர்கள் உலகில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் வேண்டுமானாலும் அறியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் நம்மைத் தொடர்ந்து அவதானித்து வருகிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளால் நாம் எந்தவிதப் பாதிப்பையும் அடையவில்லை. ஆனால் அவர்களோ நம்மால் பெரும் சீரழிவைச் சந்தித்திருக்கிறார்கள். இன்னமும் சந்தித்துவருகிறார்கள்.

பழங்குடி உலகைச் சிதைக்கும் ஒரு சொல்லாக வளர்ச்சி மாறியிருப்பது பெருஞ்சோகம். மத்தியப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் பகுதிவாழ் பழங்குடி மக்கள் துரித தொழில்மயமாக்கலின் பல்சக்கரங்களுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அரசு திட்டங்களும் பெருநிறுவனங்களின் ஊடுருவலும் அவர்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துக்கொண்டிருக்கின்றன. அனைத்தையும் இழந்துவிட்டு நகரங்களுக்குக் கூலித் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்து செல்லும் பழங்குடி மக்களின் எண்ணிக்கை ஒவ்வாரு நாளும் அதிகரித்து வருகிறது. வனங்களிலிருந்து வெளியேறியதன் மூலம் இழப்பு பழங்குடிகளுக்கு மட்டுமல்ல, வனங்களுக்குமேதான் என்று சுட்டிக்காட்டுகிறார் சன்னா. காடு என்றால் என்னவென்பது வேறு யாருக்கும் தெரியவில்லை. போலவே, மேய்ச்சல் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பழங்குடிகள் மட்டுமல்ல, கால்நடைகளும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

பிழைக்க வழியற்ற சிலர் இரகசியமாகக் கூலி பெற்றுக்கொண்டு மரக் கடத்தல், தடை செய்யப்பட்ட விலங்குகளை வேட்டையாடுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதும் தண்டிக்கப்படுவதும் பெரும் அவலம். வாழ்விடத்தைத் தொலைத்ததன் மூலம் தங்கள் வரலாறு, பண்பாடு, மதம், மருத்துவ அறிவு, உலகப் பார்வை உள்ளிட்ட அனைத்தையும் தொலைத்துத் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். பழங்குடிகள் மறையும்போது அவர்கள் மொழிகளும் உடன் சேர்ந்து மறைகின்றன. இது மனித குலத்தின் மாபெரும் இழப்பு என்கிறார் பண்பாட்டு ஆய்வாளரும் மொழியியலாளருமான கணேஷ் தேவி.

*

‘உன் பெயரென்ன, நீ எந்த வம்சத்தின் தொடர்ச்சி என்று வருந்தி கேட்ட பிறகும் ஒருவரும் பதிலளிக்கவில்லை. எதற்கும் பதிலளிக்க மறுக்கும் அவர்களுடைய பண்பு இயல்பானதாக எனக்குத் தோன்றவில்லை’ என்கிறார் பிரிட்டிஷ் சமூக மானுடவியலாளரான எவான்ஸ் பிரிட்சர்ட். தெற்கு சூடானைச் சேர்ந்த நூவர் பழங்குடிகளை ஆய்வு செய்தவர். இவரிடம் ஏன் பழங்குடிகள் பேச மறுத்தனர்? நூவர் பழங்குடிகளின் தவறா இது? இல்லை. எவான்ஸ் பிரிட்சர்ட் அவர்களைச் சந்தித்த நேரம்தான் தவறானது. பிரிட்டிஷ் படையினர் நூவர் பழங்குடிகளின் குடியிருப்புகளைத் தாக்கி அவர்களில் பலரைக் கைது செய்து இழுத்துச் சென்ற இரு தினங்களில் கையில் நோட்டு புத்தகத்தோடு சென்று நின்றிருக்கிறார் இவர். எதுவுமே நடக்காதது போல் ஒரு வெள்ளையருடன் இயல்பாகப் பேசமுடிந்திருக்குமா அந்தப் பழங்குடிகளால்?

பழங்குடி ஆய்வுகளில் மானுடவியல் துறை தொட்டுள்ள உயரம், அடைந்துள்ள வீழ்ச்சி இரண்டையும் விவாதிக்கிறார் சுபத்ரா மித்ரா சன்னா. கீழே நின்றுகொண்டு அண்ணாந்து பார்த்து வியப்பது, மேலே ஏறி அமர்ந்துகொண்டு குனிந்து பார்த்து முகத்தைச் சுழிப்பது. இந்த இரண்டையும் மானுடவியலாளர்கள் செய்யவேண்டியதில்லை. பழங்குடிகள் நம்மைப் போன்ற நிறை குறைகள் கொண்ட மனிதர்கள்தாம். நாம் அனைவரும் ஒரே உலகில்தான் வாழ்கிறோம். பழங்குடி, பழங்குடி அல்லாதார் என்னும் பிரிவினையே அடிப்படையிலேயே தவறானது. தாழ்ந்த சமூகத்தினரை ஆய்வு செய்ய மானுடவியல்; ஐரோப்பியர்களை ஆய்வு செய்ய சமூகவியல் என்னும் பேதம் காலனியாதிக்கத்தால் தோற்றுவிக்கப்பட்டது. இதிலிருந்து மானுடவியல் விடுதலை பெற்றாகவேண்டும். தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேறவேண்டும் என்று வலியுறுத்துகிறார் சன்னா. மானுடவியலின் தவறுகள் சமூகத்தின் தவறுகளாகவும் இருப்பதால் இது நமக்கும் பொருந்தும்.

*

குறிப்புகள்:

  1. சுபத்ரா மித்ரா சன்னா, ஓய்வுபெற்ற மானுடவியல் பேராசிரியர், ஆய்வாளர். அவரையும் அவருடைய படைப்புகளையும் பற்றிய அறிமுகம் இங்கே: http://anthro.du.ac.in/former_faculty/subhadra.html
  2. Anthropological Perspectives on Indian Tribes, 2020, Orient Blackswan
  3. A Nomad Called Thief: Reflections on Adivasi Silence, G.N. Devy, Orient Blackswan