மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 10): தனியாவர்த்தன மின்னல்கள்

0 comment

“Music is the language of the spirit. It opens the secret of life bringing peace, abolishing strife.” – Kahlil Gibran

சகஜமும் அந்தரங்கமும் பொங்கிப் பெருக்கெடுக்கும் குரல் உமா ரமணனுடையது. புதிய குரல்களின் தேவைக்கும் வருகைக்கும் இடையிலான தொடர்பு கவனிக்கத்தக்கது. எப்போதெல்லாம் கவன மாற்று ஒன்று அவசியமாகிறதோ அது வரையில் பெரும் செல்வாக்கு பெற்ற குரல்களே போதுமானதாக இருந்துவரும். திடீரென்று ஒரு பாடலின் சூழல் அந்தக் குறிப்பிட்ட பாடலை யாருக்கு அளிக்கலாம் என்பதில் புழக்கத்தில் இருக்கும் பழகிய குரல்கள் அனைத்தையும் மறுதலிப்பதை நிர்ப்பந்திக்கும். அப்படியான பாடல்களின் தோன்றலினூடாகத் திரையிசையில் புதிய குரல்களின் வருகையும் நிகழ்ந்துவிடும். அரிய, ஆழமான புத்தம் தன்மையோடு ஒரு பாடலை நிறுவுவதற்கான முன்னெடுப்பே இத்தகைய குரல்களை முதன்மைப்படுத்தும். அப்படி நிகழ்ந்த குரல் வருகை உமா ரமணன். அவருடைய கணவர் ஏ.வி.ரமணன் இசையில் அவரோடு இணைந்து “ஆசை இருக்குது நெஞ்சுக்குள்ளே” என்ற பாடலை நீரோட்டம் படத்துக்காகப் பாடினார் உமா. அந்த வருடம் ‘நிழல்கள்’ படத்தில் உமா தீபன் சக்கரவர்த்தியோடு இணைந்து பாடிய “பூங்கதவே தாழ் திறவாய்” பாடல் ரேடியோக்களில் தொடர்ந்து ஒலித்த அந்த வருடத்தின் ஆகப் பிரபலப் பாடலாயிற்று. இன்றளவும் தமிழில் செல்வாக்கு மிகுந்த காதல் டூயட் பாடல்களில் ஒன்றாக மெச்சப்பட்டு வருகிறது அந்தப் பாடல். பாரதிராஜா முற்றிலும் புதிய முகங்களை முதன்மைப்படுத்தி இயக்கிய படமான நிழல்கள் வணிக கவனத்தைப் பெற்று மிளிரவில்லை. அதற்கு மாற்றாக இன்றளவும் தமிழின் செவ்வியல் திரைப்பூவாக மிளிர்ந்து வருகிறது. அதன் பாடல்களின் பெருவெற்றி மற்ற எல்லாப் பாடல்களையும் தாண்டிய மென்மலர் கவனம் ஒன்றினைப் “பூங்கதவே தாழ் திறவாய்” பாடலுக்குப் பெற்றளித்தது.

இளையராஜா இசையில் அறுபதுக்குக் குறையாத பாடல்களைப் பாடியிருக்கிறார் உமா ரமணன். ஸோலோ, டூயட், இரண்டுக்கும் மேற்பட்ட குரல் குழாமில் ஒருவராக இணைந்து பாடிய கானங்கள் அவற்றில் அடக்கம். ஜேசுதாஸோடு இணைந்து ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் உமா பாடிய “பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்” பெரும் பிரபலப் பாடல். ‘தென்றலே என்னைத் தொடு’ படத்தில் இதே இணை “கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்” பாடலைப் பிரமாதப்படுத்தினார்கள். “ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்” என்ற வரியை உமா எடுத்துத் தந்த விதம் அலாதியானது. உமா ரமணனின் குரலானது பொதுவில் தனிக்காமல் அடங்கிவிடுகிற சன்ன வகை போலத் தோன்றினாலும் மிகவும் அரிதான தன்னொலித்தலோடு பெருகுவது அதன் சிறப்பம்சம். சகஜமும் அந்தரங்கமும் ஒருங்கே பெருக்கெடுக்கும் தனித்துவத்தால் பல பாடல்களுக்கு நடுவே தனித்தொலிக்கும் மந்தகாச கானங்களை உருவாக்கினார் உமா ரமணன். அவருடைய பாடல்கள் எதனோடும் சேராதவை. கூட்டத்தில் தனித்துத் தெரியும் தலை கலைந்த குழந்தை ஒன்றாகத் தனித்து மிளிர்பவை. ‘அரங்கேற்ற வேளை’ படத்தில் “ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ” என்ற பாடல் அந்த வருடத்தை ஒரு மலர் போல் கொய்து தன் கூந்தலில் சூட்டிக்கொண்டது. புதுமைப்பெண்ணில் இடம்பெற்ற “கஸ்தூரி மானே கல்யாணத் தேனே” என்ற பாட்டும் மேற்சொன்ன அதே இலட்சணங்களோடு மின்னியது. ‘மனைவி சொல்லே மந்திரம்’ படத்தில் “ஆத்தாடி அதிசயம்” என்ற பாடலிலும் இதே இணை கவர்ந்தது.

தீபன் சக்கரவர்த்தியோடு உமா ரமணன் சேர்ந்து பாடிய இன்னொரு பாடல் “செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு”. ‘கூவின பூங்குயில்’ என்று தொடங்கும் தொகையறா படம் வந்த காலத்தில் அந்தப் பாட்டின் மீது தனித்துக் குவிந்த கவனத்திற்கான காரணமாயிற்று. எத்தனை முறை ஒலித்தாலும் படத்தின் தொடக்க இசைக்கு முந்தைய தொகையறாவும் அதற்கான துளியிசையும் அலுக்கவே இல்லை என்பதுதான் வசீகரம். மெல்லிய சோகச் சாய்வை முதன்மை மெட்டாகக் கொண்டு நகரும் இந்தப் பாடலின் பொதுத் தொனியை சற்றே வேகப்படுத்தியிருப்பார் இளையராஜா. கனமான தீபனின் குரலும் மெல்லிய உமாவின் குரலுமாக மெத்தப் பொருந்தி ஒலிக்கும் கச்சிதப் பேரிசைப் பாடலாக மாறியது ‘செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு’.

இளையராஜாவும் உமாவும் இணைந்து பாடிய “செவ்வரளித் தோட்டத்துல என்ன நினைச்ச” என்ற பாட்டும் நல்ல பிரபலம்தான். ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் முத்திரைப் பாடல் இது. இப்பாடலினுள்ளே “அக்கம் பக்கம் யாருமில்ல, ஆளுங்க அரவமில்ல, சுத்தம் முத்தும் பார்க்கையில துடிப்பும் அடங்குதில்லே” எனப் பல்லவியை உமா தனித்துப் பாடிக் கடப்பது பேரழகு. பலமிகுந்த இடையிசைப் போக்கும் சரணத்தில் வந்து சேர்கையில் இளையராஜாவின் குரல் குழைந்து கலைவது இன்னுமோர் அழகு என்றால் சரணத்தின் முடிவை உமா தன் குரலால் கையாண்டது அற்புதம் எனத் தகும். இந்தப் பாடலின் நடுவே பூக்கும் உப சரணமொன்றை பாடகர் சாய்பாபா தணிந்த குரலெடுப்போடு பாடியிருந்தார். அதுவும் சேர்ந்து பாட்டைப் பரவச மலராக்கிற்று. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் இடம்பெற்ற தெம்மாங்குப் பாடலான “மேகங்கருக்கையிலே புள்ள தேகங்குளிருதடி” பாடல் இனம்புரியாத அழுத்தத்திலிருந்து இலகுவான மனவோட்டம் ஒன்றை நோக்கி நகர்ந்து செல்வதான பாடல். பின்னால் நிகழப் போகும் திருப்பங்களுக்குத் தோதான உற்சாகப் பெருக்காகவே இதன் நகர்தல் அமைந்திருந்த இந்தப் பாட்டு உமாவின் குரலில் இன்னும் ஒரு பெரும் பிரபலப் பாடலாக மிளிர்ந்தது.

“சிரிச்சா கொல்லி மலைக் குயிலு” என்ற பாட்டை யாரால் மறக்க முடியும்..? எங்கேயிருந்து தோன்றியதென்றே தெரியாமல் மனம் முழுவதும் நிரம்பி ஒலித்த பாடல் என்று இதனைச் சொல்ல முடியும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் மோகனுக்காகப் பாடிய அனேகப் பாடல்கள் பிரபலமடைந்தவை. இளையராஜா- பாலு- மோகன் கூட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் உண்டு. அவற்றில் உமா ரமணன் சேர்ந்து பாடிய மோகன் பாடல்கள் வெகு சில என்றாலும் தனித்துத் தெரிபவையே. ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘நந்தவனத் தேரு’ படத்தில் இடம்பெற்ற “வெள்ளி நிலவே” என்ற மெலடிப் பாட்டையும் எஸ்.பி.பி- உமா இணைந்து பாடினார்கள். கூட்டுப் பாடலான “தாழம் பூவே கண்ணுறங்கு” இன்று நீ நாளை நான் படத்தில் பாலு ஜானகி இருவரோடு உமாவின் குரலும் சேர்ந்தொலித்தது.

உமாவின் குரல் அபூர்வமான வகைமையில் நின்றொலிப்பது என்றாலும் தேர்ந்த பல நூறு பாடல்களைப் பாடிய எல்லாப் பாடகர்களுடைய குரலோடும் இயைந்து இணைந்து தடையறப் பயணிப்பதாகவும் இருந்தது சிறப்பே. மலேசியா வாசுதேவனுடன் மல்லுவேட்டி மைனர், அர்ச்சனைப் பூக்கள் போன்ற படங்களில் பாடினார் உமா ரமணன். இந்த இணை பாடிய இன்னொரு பெருவிருப்பப் பாடல் “அத்த மக ரத்தினமே” என்று தொடங்கும் ‘சின்ன வாத்தியார்’ படத்தில் இடம்பெற்ற செமி ஃப்யூஷன் வகைமைப் பாட்டு இது. உன்னி மேனன், உமா ரமணன் இணைந்து உருத்தந்த பாடல் “பொன் மானே கோபம் ஏனோ” என்று துவங்கும் காதல் களிப்பாட்டு. கமல்ஹாசன்- ரேவதி இணைந்து நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ என்ற படத்தில் இது இடம்கொண்டது. “இது மானோடு மயிலாடும் காடு” என்ற பாட்டு ‘எங்க தம்பி’க்காக இளையராஜா உருவாக்கியது. அருண்மொழியோடு இணைந்து பாடினார் உமா.

சோகப் பாடல்களிலும் சோலோ பாட்டுக்களிலும் சொல்லிக்கொள்ளும் பாடல்களாக உமா ரமணனுக்குக் கிடைத்த பல கானங்கள் அமைந்தன. “தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே” என்று மணிக்குயிலுக்காகப் பாடினார் உமா. ‘எனக்காகக் காத்திரு’ படத்தில் உமாவின் சோலோ பாடல் “தாகம் எடுக்கிற நேரம்” அந்த நாட்களில் அதிகம் நேயர் விரும்பிய  பாடல்களில் ஒன்று. “ஆசை ராஜா ஆராரோ” என்ற ‘மூடுபனி’ படப்பாடலும் உமாவின் புகழ்சொல்லிற்று. மறக்க முடியாத பொற்காலப் பாடலான ‘மகாநதி’ படத்தில் இடம்பெற்ற “ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்” என்ற பாட்டை மகாநதி ஷோபனா, எஸ்.பி.பி உடன் உமாவும் சேர்ந்து பாடினார். ‘எதிர் காற்று’ படத்தில் உமா பாடிய சோலோ பாடல் “இங்கு இருக்கும் காலம் வரைக்கும்” என்று தொடங்குவது.

மனோவுடன் ‘என்னருகே நீ இருந்தால்’ படத்தில் “ஓ உன்னாலே நான் பெண்ணானே” என்ற பாட்டையும் ‘பொன்விலங்கு’ படத்தில் “சந்தனக் கும்பா உடம்பிலே” என்ற பாட்டையும் உமா பாடியிருந்தார். இதே இணை பாடிய ‘வால்டர் வெற்றிவேல்’ படப்பாடலான “பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து” என்ற பாட்டும் காலங்கடந்து இன்றும் தேடிக் கேட்கும் நல்நாதகானம்தான். “உந்தனின் பாடல் என்னை எங்கோ கொண்டு செல்ல” என்று தொடங்குகிறது ‘ராக்காயி கோயிலுக்காக’ மனோவும் உமாவும் பாடி இளையராஜா இசைத்தளித்த இன்னுமோர் பாடல். கே.பாக்யராஜ் இயக்கிய ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ படத்தில் “எத்தனை நாளா உன்னைக் கண்ணு வச்சேன்” எனும் பாட்டும் வித்தியாசமான மற்றொரு உமா- மனோ இணை பாடல்தான்.

சுசீலாவோடு உமா இணைந்து பாடிய “அமுதே தமிழே” எனத் தொடங்கும் ‘கோயில்புறா’ படப்பாடல் அமைதியும் தீர்க்கமுமாய்ப் பெருகும் நற்பாடல். “ஊருறங்கும் சாமத்திலே” பாடலை ஸ்வர்ணலதாவுடன் ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி’ படத்துக்காகப் பாடிய உமா “பூச்சூடும்” என்ற பாட்டை ஆணழகனுக்காகப் பாடினார். ஷோபா சந்திரசேகர், சசிரேகா ஆகியோருடனும் உமா சேர்ந்து பாடிய பாடல்கள் உண்டு.

எண்ணிக்கையளவில் மிகக்குறைந்த பாடல்களையே பாடியிருக்கும் உமா ரமணன் பாடியதில் 90 விழுக்காடு பாடல்கள் பெருவெற்றிப் பாடல்களாக, சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது தற்செயலல்ல. குறைவும் நிறைவும் அருகமைந்த இருக்கைகளில் அமர்வதாகப் பார்த்துக்கொள்வது கலையின் குணம். அதற்கு உமாவும் உதாரணமாகிறார். அவருடைய குரலின் உலர்ந்த தன்மை எந்த ஒரு பாடகர், பாடகியோடும் மிக இயல்பாகப் பொருந்திப் போவது. இதுவே உமாவின் பாடல்கள் அதிகம் பிரபலம் அடைவதற்கான காரணமாக மட்டுமின்றி அவர் அதிகப் பாடல்களைப் பாடாத பாடகியாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாட்டுகளைப் பாடியவராகத் திகழ்வதற்கும் காரணமாகக்கூடும். உமா ரமணனின் தனித்துவமே அவரது அடையாளம். அவர் குறைவான பாடல்களையே பாடி இருந்தாலும் தமிழ்த் திரை இசையில் உமா ரமணனின் இடத்தை யாராலும் மறுக்க முடியாது. அவரது புகழ்சொல்லி ஒலிக்கும் பாடல்களின் பயண காலம் மிகமிக நெடியது.

இளையராஜாவைத் தவிர்த்து மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலெல்லாமும் சேர்த்து உமா பாடிய பாடல்கள் சில நூறுக்குள் இருக்கக்கூடும். தமிழ்ப் பாடகியரில் உமா ரமணனின் சொற்துல்லியமும் வரிகளை நேர்த்தும் சிறு இரகசிய ஸ்தாயி ஒன்றும் வேறார்க்கும் வசமாகாதவை. அவருடைய எல்லாப் பாடல்களிலுமே பல வரிகள் உமாவின் குரலாகவே நம் மனங்களில் பதிந்துவிடுவது வியப்புக்குரிய ஓர்மை. தான் புழங்கிய பெருவாரிப் பாடல் வாக்கியங்களோடு தன் குரலையும் சேர்த்தே நிலைக்கச் செய்வது அசாதாரணம் மட்டுமல்ல, அரியதும்கூட. அதனை இயல்பாகச் செய்துகாட்டியவர் உமா ரமணன். அந்த வகையில் இளையராஜா உருவாக்கிய பாடல்களில் உமா ரமணனுக்கு வழங்கப்பட்ட பல பாட்டுகள் பரவச ஒளிர்மணிக் கற்கள். நெடுங்கால நட்சத்திரங்கள். போலி செய்ய முடியாத தனியாவர்த்தன மின்னல்கள்.­­­­­

*

ராஜாவின் தன்னுலகம்

இளையராஜாவின் இசை தங்களது வாழ்வில் மகத்தான மாற்றங்களைச் செய்ததாகப் பலரும் சொல்வது உண்டு. பெரும்பாலானவர்கள் அவரது இசைக்கும் தமக்கும் இடையிலான பந்தத்தைத் தனியோர் உறவாகவே கொள்வது ரசம். அதாவது ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்திலும் தானொருவர் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பதாக அல்லது மொத்தப் பிரபஞ்சமும் தன்னால்தான் இயங்குவதாக ஒரு மனிதன் எண்ணுவதைப் போல் தன் ஒருவருக்காக மட்டுமே இசையும் பாடல்களும் பிறப்பிக்கப்படுவதாகப் பலரும் எண்ணுகின்றனர். உயிர் என்பதைப் பிரபஞ்ச விள்ளல் என்று கொண்டோமானால் மனம் என்பதை உயிரின் இருப்பு என்று சொல்ல முடியும். மனதின் உடனிருத்தலாக இந்த வாழ்வைச் சொல்லலாம் அல்லவா? அப்படி உடனிருக்கிற மனதுக்கும் தனக்குமான பரிவர்த்தனையாக எண்ணங்களை, கனவுகளைக் கொள்கிற அதே இயங்குமுறையில் இசையைப் பெற்றுக்கொள்வதைத் திருப்பி எதையும் கையளிக்க முடியாத கொடுப்பினையாக இரசிக மனம் மாற்றிக்கொள்கிறது.

இளையராஜாவின் இசையைத் தன் வாழ்வின் அந்தரங்கமான பிரத்யேகமான பகுதியாகவே மாற்றிக்கொள்வது இரசிக மனோபாவம். இசையும் பாடல்களும் இல்லாமல் போயிருந்தால் தங்கள் வாழ்வு தீதுகளால் சூழ்ந்திருக்கும், அழிவுகளால் சிதைக்கப்பட்டிருக்கும், என்ன நடந்திருக்கும் என்றே தெரியாது, நல்லவேளையாக இளையராஜாவின் இசையைப் பற்றிக்கொண்டதனால் ஒரு நல்லூழ் வந்து காத்தருளினாற் போல் தங்கள் வாழ்வு காப்பாற்றப்பட்டது என்று சொல்லுகிற பலரை அறிவேன். திரை இசை என்பதன் கட்டுக்குள்ளிருந்து ஒரு தனிச்சையான அல்லது பரந்து விரிந்த வேறொன்றாக இசையைத் தன் பாடல்களினூடாக மாற்றினார் இளையராஜா. பாடல்களைத் தன் தனித்துவமான வழங்குமுறையால் சிறப்பித்தார். இளையராஜாவின் பாடல்கள் திரை-தேவை-உருவாக்கம் என்பதைத் தாண்டிய வேறொன்றாக மாற்றம்கொண்டு வாழ்வுகளுக்குள் புகுந்து கொள்ளலாயின. இம்மாதிரியான பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள் அல்லது பெரிய-நாயக- பாடல்கள் என்பதாக மட்டுமே அமைந்திருந்தால் அவை வெறும் திரைப்பாடல்கள் என்ற அளவில் அவற்றுக்கான இயங்குதளம் முற்றுப்பெற்றிருக்கக்கூடும்.

ஆனால் ராஜாவின் பாடல்கள் நாயக-பிம்ப-கோருதல்களிலிருந்து பெரும்பாலும் வெளியே வந்தொலித்தன. ஆரம்பப் படமான அன்னக்கிளி அதிர்ஷ்டமா அமைப்பா என்பதைத் தாண்டி அதன் இயல்பைப் பார்த்தால் சிவக்குமார்- சுஜாதா இருவரும் இணைந்து நடித்த படம். தனக்கென்று தனியே நாயக பிம்பங்களேதும் கட்டிய அல்லது பராமரித்தவர்களின் வரிசையில் சிவக்குமார் என்ற பெயர் இடம்பெறாது. இப்படி யோசிக்கலாம். எம்ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி அல்லது அறியப்பட்ட- தனக்கென்று தனி இரசிக பட்டாளத்தை வைத்துக்கொண்டிருந்த எந்த ஒரு புகழ்தாங்கிய நடிகரின் படமாகவும் அன்னக்கிளி அமையாமல் அந்த வரிசையிலிருந்து விலகித் தோன்றும் சிவக்குமாரின் படமாக அமைந்தது நுட்பமாகக் கவனிக்கப்பட வேண்டியது. ராஜாவின் இசையமைப்பில் பெரிய நடிகர்கள் நடிக்காமல் பெரும் இயக்குனர்கள் இயக்காமல் புதியவர்களே பெரும்பாலும் தொடர்புற்று இளையராஜா இசையமைத்து பெரும் வெற்றி பெற்ற பல படங்கள் உண்டு.

ராஜா இசைத்த பாடல்களுக்கும் தங்களுக்குமான வாழ்வியல் தொடர்புகளை வெவ்வேறு மனிதர்கள் வேறுவேறு பாடல்களோடு தங்களைப் பிணைத்துக்கொண்டிருந்தாலும் அவர்களது உணர்தல்களுக்கு நடுவே பெரும் ஒற்றுமைகள் நிலவுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ராஜா இசைத்த தனக்கான பிரத்யேகப் பாடலை தனது உற்ற தோழமையாக, செல்லப் பிராணியாக, சக மனமாக கருதித் தன் வாழ்க்கைக்குள் அந்தப் பாடல்களுக்கு முக்கிய இடம் இருப்பதாகவே நம்புகின்றனர். குறிப்பிட்ட பாடலை தேடல், சரண் விலகல், மறுவருகை, கோபம், ஊடல், திரும்புதல் என்றெல்லாம் மனித உறவின் அத்தனை சிக்கல்களையும் தங்களுக்கும் மனம் கவர்ந்த பாடல்களுக்கும் இடையில் இருப்பதாக நம்புகிறார்கள். குறிப்பிட்ட பாடலைக் கேட்டாலே தன் மன இறுக்கங்கள் எல்லாம் தளர்ந்து புத்தம் புதிய வேறொன்றாக மனசு மலரும் என்பது பெருமளவு இரசிகர்கள் தங்கள் பின்பற்றுதலில் நடைமுறை வழக்கத்தில் இருப்பதாகக் குறிப்பிடுகிற தகவலாகிறது. தன்வாழ்வின் அபாரமான பாடல்களை எல்லோரிடமும் வெளிப்படுத்தாமல் அதனைத் தெரிவிப்பதே தன் குறித்த அந்தரங்கமான சேதி ஒன்றைப் பகிர்வது என்பதாகவே கொள்வோரும் உண்டு. யதார்த்தமாகத் தன் பெருவிருப்பப் பாடலை கேட்க வாய்க்கும் சந்தர்ப்பங்களைத் தத்தமது வாழ்வின் அதிர்ஷ்டமாகக் கொள்பவர்களை அறிவேன். இதெல்லாம் ராஜா பாட்டுகளுக்கு மட்டும்தானா என்று கேட்கலாம். அப்படி முழுவதுமாக ஓரதிகாரப்படுத்தி சொல்ல இயலாதெனினும் பெரும்பாலானவர்கள் ராஜா ரசிகர்கள், பெருவிருப்பப் பாடல்கள் பெரும்பாலும் ராஜா இசைத்த பாடல்கள்.

தன் வாழ்வோடு அப்படியான குறிப்பிட்ட பாடலுக்குத் தனிப்பட்ட இழைதல் தொடர்புண்டு என்று நம்ப விரும்புவதிலிருந்து அப்படியான பாடல்களின் கதை தொடங்குகிறது. சில சமயம் படங்களில் இடம்பெறாத பாடல்களைக்கூட அப்படிக் கூறுவோர் உண்டு. ஒரு சில படங்களில் பெரிதாக போற்றப்பட்டு பெரிதும் ஒலித்த பிரபலப் பாடலை பாடல்களைக்கூடப் பொருட்படுத்தாமல், சற்றே சன்னமாக ஒலித்த பெரிதாகக் கவனிக்கப்படவில்லை போலும் என்று எண்ணுகிற சிலவற்றை ஆராதிப்பவர்கள் வியப்பூட்டுவர். “சொல்லிவிடு வெள்ளி நிலவே” என்ற ‘அமைதிப்படை’ படப்பாடல், “புத்தம் புதுப் பூ பூத்ததோ” என்கிற ‘தளபதி’ படத்தில் இடம்பெறாத பாடல் இரு-சிறு உதாரணங்கள்.

திரையில் இளையராஜா தோன்றிய படங்களில் சில நிழல்கள், தர்மபத்தினி, சாதனை, புதுப்புது அர்த்தங்கள், கரகாட்டக்காரன், கும்பக்கரை தங்கய்யா, வில்லுப் பாட்டுக்காரன், கண்ணாத்தாள், அழகர் மலை, நாடி துடிக்குதடி ஆகியன. மை டியர் மார்த்தாண்டன், இதயம், ரிக்சா மாமா, இன்னிசை மழை, விருமாண்டி ஆகிய படங்களில் துளிப்பாடல்களை இளையராஜா பாடியுள்ளார்.

இளையராஜா எண்பதுகளின் எல்லையில் தானும் ஒரு பாடலாசிரியராக மாறினார். எழுத்தின் மீது அவருக்கு இயல்பான நாட்டம் இருந்தது. பெருவெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கையில் தீவிரமாக ஆன்மீகவாதத்தைக் கரம்பற்றிக்கொண்ட நட்சத்திரம் இளையராஜா. வெண்ணிற உடைகளை மட்டுமே அணியத் தொடங்கினார். தொடர்ச்சியாக ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். அவருடைய பக்தி நாட்டம் இசையில் ஆன்மீகம் சார்புடைய பாடல்கள் பலவற்றைப் புனைய அவருக்கு உந்துதலாக இருந்திருக்கக்கூடும். ‘தாய் மூகாம்பிகை’ உள்ளிட்ட பக்திப் படங்களுக்கு இசையமைத்த ராஜா, திரை சாராத தனி ஆல்பங்களையும் உருவாக்கினார். தமிழில் கீத வழிபாடு என்ற ஆல்பம் வெளியானது. இதில் இடம்பெற்ற 9 பாடல்களை இளையராஜா எழுதினார். கீதாஞ்சலி என்ற பக்திப் பாடற்பேழையில் இடம்பெற்ற பாடல்களை வாலியும் இளையராஜாவும் பகிர்ந்தெழுதினர். 1992ம் ஆண்டு ஹொன்னினா தெரினலி என்ற தனது முதல் கன்னட பக்தி ஆல்பத்தை வெளியிட்டார். வால்மீகி, கம்பர் இயற்றிய ராமாயணங்களின் ஒப்பாய்வுக் கூற்றுக்களின் அடிப்படையில் இளையராஜா உருவாக்கிய இசை ஆல்பம் The Secret of Ramayana, ரிக் வேத மந்திரங்கள்- புருஷஷூக்தம் ஆகியவை இடம்பெற்ற ஆல்பம் Vedic Chanting. ராஜாவின் ரமணமாலை ஸ்ரீ ரமண மகரிஷியின் மீது கொண்ட பக்தியால் இளையராஜா உருவாக்கிய பக்திப் பாமாலை. இதில் அவரது குரலில் இடம்பெற்ற “பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே” என்ற பாடல் பிற்பாடு பாலா இயக்கிய நான் கடவுள் படத்திலும் பாடலானது. குரு ரமண கீதம், அம்மா பாமாலை, பாபா புகழ்மாலை போன்ற பக்தி ஆல்பங்களை இளையராஜா உருவாக்கினார். இவற்றில் பல பாடல்களை அவரே எழுதிப் பாடவும் செய்தார்.

திருவாசகம் இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடற்பேழைகளில் ஒன்று. பரவலான கவனத்தை ஈர்த்தது. அவருடைய தனி இசை ஆல்பங்களான Nothing but wind, How to name it, India 24 hours, The music messiah போன்றவை திரை சாராத அவரது பங்களிப்புகளில் முக்கியமானவை.

இளையராஜா திரைப்படங்களைச் சாராத பக்திப் பாடல்கள் பலவற்றை எழுதியதைப் போலவே திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதினார். பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘நாடோடித் தென்றல்’ படத்தில் “சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே”, “யாரும் விளையாடும் தோட்டம்”, “ஏலமலைக் காட்டுக்குள்ளே” ஆகிய பாடல்கள் அவர் எழுதியவையே. ‘கோயில் காளை’ படத்தில் அவர் எழுதிய “தாயுண்டு தந்தை உண்டு” பாடலை கங்கை அமரன் பாடியிருக்கிறார். ரஜினி நடித்த ‘வீரா’ படத்தில் “ஆத்தில அன்னக்கிளி”, “திருமகள்” எனத் தொடங்கும் இரண்டு சிறுபாடல்களை ராஜா இயற்றினார். ‘அழகி‘ தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான படம். இதில் “ஒளியிலே தெரிவது தேவதையா” என்ற பாடல் பெருங்கவனம் கொண்ட ஒன்று. இதிலேயே “பாட்டுச்சொல்லி பாடச்சொல்லி” என்ற பாடலும் ராஜாவால் இயற்றப்பட்டதே. கமல்ஹாசன் இயக்கத்தில் ‘விருமாண்டி’ படத்தில் “கொம்புல பூவச்சுத்தி” பாடல் ராஜா எழுதிய மற்றொன்று. ‘ஹேராம்’ படத்தில் “இசையில் தொடங்குதம்மா” அஜொய் சக்கரபொர்த்தி பாடிய பாடல். இன்றளவும் விரும்பப்படுகிற ராஜா பாடல்களில் இதற்கொரு இடமுண்டு.

வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது பால் நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே, சங்கீதக் கனவுகள், ஞான கங்கா, யாருக்கு யார் எழுதுவது போன்ற நூல்களை இளையராஜா எழுதியுள்ளார். பல்வேறு பத்திரிகைகளில் தன்னிடம் கேட்கப்பட்ட வினாக்களுக்குத் தொடர்ந்து ராஜா அளித்த பதில்களும் புத்தகமாக்கம் பெற்றுள்ளன. திரைப்படம் தவிர 1991ம் ஆண்டு சுகாசினி மணிரத்னம் சென்னைத் தொலைக்காட்சிக்காக உருவாக்கிய “பெண்” எனும் தலைப்பிலான தொடருக்கும் பாரதிராஜாவின் “தெக்கத்திப் பொண்ணு” தொடருக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். உலகளாவிய வணிக பிராண்ட்கள் சிலவற்றுக்கான தொடர் விளம்பரங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இளையராஜா தானே எழுதி இசையமைத்துப் பாடிய பாடல்களில் பணக்காரன் படத்தில் “மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்”, என் உயிர்த் தோழனில் “தம்பி நீ”, பெரிய வீட்டுப் பண்ணைக்காரனில் “வந்தார வாழவைக்கும் ஊரு”, அம்மன் கோயில் திருவிழாவில் “தெய்வம் தந்த”, வண்ண வண்ணப் பூக்களில் “கண்ணம்மா காதல் எனும் கவிதை சொல்லடி”, நாடோடித் தென்றலில் “மணியே மணிக்குயிலே”, “ஒரு கணம் ஒரு யுகமாக”, கோயில் காளையில் “தாயுண்டு தந்தையுண்டு”, அரண்மனைக் கிளி படத்தில் “ராமரை நினைக்கும் அனுமாரு”, சேதுபதி ஐபிஎஸ் படத்தில் “இப்ப சாத்து நட சாத்து”, அழகி படத்தில் இடம்பெற்ற “உன் குத்தமா என் குத்தமா” போன்றவை கூறத்தக்கவை.

சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ரவீணா, பழஸிராஜா, தாரை தப்பட்டை ஆகிய படங்களுக்காக ஐந்து தேசிய விருதுகளையும் பத்ம பூஷன், பத்மவிபூஷன் ஆகிய மத்திய அரசு கௌரவ விருதுகளையும் தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதினையும் இளையராஜா பெற்றிருக்கிறார். பில்ம்பேர் விருதுகளை 5 முறையும் தமிழக அரசு விருதை 6 முறையும் கேரள அரசு விருதை 5 முறையும் ஆந்திர அரசின் நந்தி விருதை 6 முறையும் சங்கீத நாடக அகாடமியின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார்.

இளையராஜா இந்தியத் திரையிசையின் திருமுகம். தனக்கு முன்பாகத் திரையிசையில் இயங்கிய பலரது இசைக் கோட்பாடுகளையும் நன்கு உணர்ந்தவர். தனக்குப் பின்பாக உருவாகி வந்த எந்த ஒரு இசைஞரிடமும் தனது பாதிப்புகளை ஏற்படுத்தியவர். அவருடைய பாடலுருவாக்கம் இன்றளவும் கேட்புக்கான வரையறைக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது வியப்புக்குரிய விஷயம். இன்னும் விரிவாகச் சொல்வதானால் இசைக்கத் தொடங்கி நாற்பத்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இளையராஜாவின் பாடல் உருவாக்கத்தை முற்றிலும் மீறவோ கைவிடவோ தென் இந்தியத் திரைப்பாடல் நிமித்தங்களால் இயலவே இல்லை என்பது முக்கியமானது. ஒரு பாடலின் உரு, அதன் நடை, அதன் பெருக்கம், மௌனம், இறுதியாக பூர்த்தி என எல்லாவற்றிலுமே இளையராஜாவைப் பின்னொற்றியே பாடலாக்கம் நிகழ்ந்து வருகிறதென்பது கண்கூடு. இன்றைக்கும் நூற்றுக்கணக்கான இந்திய இசையமைப்பாளர்களின் புத்தம் புதிய பாடல்களில் மெட்டு தொடங்கி முழு நிறைவு வரைக்கும் பலவிதங்களில் இளையராஜா இசையின் செல்வாக்கு பல்வேறு சதவீதங்களில் பற்பல பாடல்களில் தென்படுவதைத் தனித்து நோக்க முடிகிறது. இது வேறெந்த முன்னோடி இசைஞருடையதை விடவும் அளவில் மிக அதிகமாக நிகழ்ந்து வருவதும் கூறத்தக்கது.

இன்னொரு அம்சம் இளையராஜாவின் பின்னணி இசை. அவர் இசைக்கத் தொடங்கிய காலத் துளியிலிருந்து துவங்கி இந்தக் கணம் வரைக்கும் பின்னணி இசை என்றாலே இளையராஜா என்ற பெயரைச் சொன்ன பிறகுதான் வேறாரையும் சொல்லவேண்டியிருப்பதை இசை சார்ந்த யாரும் ஒப்புக்கொள்வர். திரைப்படத்துக்கான இசைத் தேவை சார்ந்த முழுமையான இசைக் கோட்பாடு ஒன்றை ஏற்படுத்தி அதனை ஒற்றியே அந்தப் படத்துக்கான பின்னணி இசையை இளையராஜா உருவாக்குகிறார் என்பது நுட்பமாகக் கைக்கொள்ளப்பட வேண்டியது. கேரளவர்மா பழஸிராஜா போன்ற தமிழ் தவிர்த்த திரைப்படங்களுக்கு அவர் நல்கிய பின் இசை என்பது திரைப்பட இசை சரிதத்தில் தனித்து ஒளிர்வது.

மூன்றாவதாக இளையராஜா பாடகர்களோடு இயைந்து பாடலை உருவாக்குவதில் சமரசமற்ற தனித்த- முழுமையான பாடல் கொள்கை ஒன்றை உருவாக்குபவர் என்பது அவரது தனித்துவங்களில் முக்கியமானது. இளையராஜா எந்த ஒரு பாடகரின் ‘அட் தேர் பெஸ்ட்’ என்பதான அவர்களது உச்சபட்ச உள்ளீட்டை வெளிக்கொணர்வதில் வித்தகர். பாடக வாழ்வு முழுமைக்குமான பாடல்திறனை ஒழுங்குபடுத்தித் தருவதாகவும் அவரிடம் பணிபுரிந்த பிற்பாடு வேறெந்த இசைஞரிடம் வேலை பார்ப்பதெதுவும் எளிதாகிவிடும் அளவுக்குப் பாடல் குறித்த புரிதல் ஏற்பட்டு விடுவதாகவும் பல பாடற்கலைஞர்கள் தத்தம் அனுபவப் பொழிவின் போது குறிப்பிடுகிறார்கள். தமிழ் தொடங்கி இந்திய மொழிகள் பலவற்றிலும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களை இசைத்துள்ள இளையராஜா ஆயிரத்து இருநூற்றுக்கும் அதிகமான குரல்களைப் பயன்படுத்தியவர் என்பது மேலதிக சிறப்புச் சேதிதான்.

அடுத்ததாக திரை இசையை இரசிகனின் உணர்வு எல்லைக்குள் இயங்கச் செய்தவர் இளையராஜா என்பது மற்ற யாரிடமிருந்தும் அவரை விலக்கி நோக்கச் செய்கின்றது. இளையராஜாவின் தீம் இசை மற்ற இசைக் கொத்துகள் ஆகியவற்றோடும் பின்னணி இசையோடும் தம் வாழ்வைப் பிணைத்துக்கொண்ட பலரும் வேறு எந்த இசைக் கேட்பு அனுபவத்தின் போதும் ஒரு ஒப்பீட்டு மனோபாவத்தோடேயே எந்த இசையையும் அணுகுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என நான்கு முக்கியமான திரைப் பகுப்புகளைக் குறித்த தெளிந்த புரிதலும் ஆழ்ந்த ஞானமும் கொண்டவராக இளையராஜா இயங்கிவருவது அவரை மற்ற இசைஞர்களினின்றும் வேறுபடுத்திக் காட்டுகிறது. பல கலைஞர்கள் தங்கள் திரைவாழ்வின் மறக்க முடியாத திரைக்கணங்களை இசைஞானி இளையராஜாவின் இசைத்துளி ஒன்றுடன் அல்லது சிலவற்றுடன் இணைத்துக்கொண்டிருப்பதைத் தொடர்ச்சியாக அறிவதன் மூலமாக இதனைப் பதிவுசெய்ய முடிகிறது.

இளையராஜா இசைக்கு முன்னும் பின்னுமாகத் தத்தமது மனவாழ்வு இரண்டு வெவ்வேறு பயணங்களை அடைவதாக சாட்சியம் செய்வோரின் எண்ணிக்கை மிக அதிகம். தன் வருகைக்குப் பின்னதான ஒரு பெரிய காலகட்டத்தை, மாபெரிய கூட்டத்தை, மொழி- நிலம் ஆகியவற்றைத் தாண்டிய பெரும் எண்ணிக்கையிலான பாடல்களின் விளைதலை, இசை மீதான தொடர்ந்த பற்றுதலை ஏற்படுத்தியவர் இளையராஜா. தங்கள் மனத்துக்கு உகந்து தொடர்ந்து நம்புவதும் பின்பற்றுவதுமாக ஒரு வழிபாட்டில் எங்ஙனம் மக்கள் கூட்டம் இயங்கித் தொடருமோ அதே போலத்தான் இளையராஜா என்கிற பெயரின் பின்னால் தத்தம் மனங்களை அணிவகுக்க விழைகிற மாபெரிய மக்கள் திரளும் அவரைத் தொடர்கின்றது. மனித எத்தனத்தால் எளிதில் தொட முடியாத சாதனைக்குத்தான் சாகசம் என்று பெயர். இன்னொருவரால் எண்ணிப் பார்க்க முடியாத சாகசத்துக்குத்தான் அற்புதம் என்று பெயர். இரண்டாம் வருகை அற்ற அற்புதத்தை மாயம் என்று சொல்ல முடியும். இந்தியத் திரையுலகம் கண்டெடுத்த மாயவாதி இசைஞானி இளையராஜா. 

ராஜாவின் இசையுலகத்தின் உள்ளும் புறமும் பயணிப்பதற்கான வானலைதலை இத்தனை மாதங்களாக சாத்தியம் செய்து தந்த தமிழினி இணைய இதழின் ஆசிரியர் கோகுல் பிரசாத், இப்படி ஒரு தொடரை எழுதுவதற்கான உற்சாகத்தை எனக்களித்த ‘தமிழினி’ வசந்தகுமார் ஆகியோருக்கும் இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்து தங்களது கருத்துகளையும் மறுவினைகளையும் எனக்களித்த நண்பர்களுக்கும் எனக்குத் தேவையான தகவல்களை நான் சென்றடைவதற்காகப் பலவிதங்களில் உதவிபுரிந்த கவிஞர் பழநிபாரதி அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரியப்படுத்துகிறேன். இசைஞானி இளையராஜாவின் இரசிகர்களுக்கு இந்தத் தொடரை சமர்ப்பிக்கிறேன்.

வாழ்தல் இனிது!

அன்போடு
ஆத்மார்த்தி.

*

முந்தைய பகுதிகள்:

1. இளையராஜாவின் முதல் ஐந்து ஆண்டுகள்

2. ராஜா பாடிய பாடல்கள்

3. வழித்தடங்களும் வரைபடங்களும்

4. மண்ணில் விரிஞ்ஞ நிலா – இளையராஜாவின் மலையாளப் படங்கள்

5. மொழிபெயர்ந்த மழை

6. வரலாற்றில் இருவர்

7. ராஜாவின் பாடல்கள்

8. ராஜாவின் கவிஞர்கள்

9. ராஜாவின் பாடகர்கள்