தீ மூட்டுதல் – வில்லியம் ஃபாக்னர்

by எஸ்.கயல்
1 comment

நீதிபதியின் அறை பாலாடைக்கட்டி வாசனையால் மணந்தது. கூட்டமாக இருந்த அறையின் பின்புறத்தில் பீப்பாயின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்த சிறுவன் தன் உடலின் மீது பாலாடையின் வாசம் வீசுவதை உணர்ந்தான். அலமாரிகளில் வரிசைப்படி நெருக்கி அடுக்கி வைக்கப்பட்டிருந்த விதவிதமான வடிவங்கள் கொண்ட குடுவைகளின் மீதிருந்த ஒரு எழுத்துகூட அவனுக்குப் புரியவில்லை. ஆனால் கருஞ்சிவப்பு நிறப் பூதங்களும் வெள்ளி வண்ண மீன்களும் கொண்ட லேபிள்களை அவன் கண்களைவிட அவனுடைய வயிறால் அடையாளம் காண முடிந்தது. தன் மீதிருந்து வந்த பாலாடைக் கட்டி வாசனையையும் அவனுடைய குடலுக்கு நன்கு பரிச்சயமான கெட்டித் தன்மையுடைய இறைச்சி வாசனையையும் அவனால் நுகர முடிந்தது. அங்கு வழக்கமாக வீசும் வாசத்தின் மீது சிறிது நேரமாக இன்னொரு வாசமும் சேர்ந்து, இடையிடையே வீசிய வேகமான காற்றில் அவையிரண்டும் மாறி மாறி அடித்தது அவனுக்குத் தெரிந்தது. இந்த வாசமும் உணர்வும் தோன்றுவதற்கு அச்சம் ஒரு சிறிய காரணமாக இருந்தாலும் அவநம்பிக்கையாலும் துயரத்தாலும் ஒருவருடைய உடலிலுள்ள இரத்தம் திடீரெனத் தீவிரமாகப் பாய்வதாலேயே பெரும்பாலும் இது நேர்கிறது. நீதிபதி அமர்ந்திருந்த மேஜை இங்கிருந்து அவனுடைய கண்களுக்குத் தெரியவில்லை. அந்த மேஜைக்கு எதிரேதான் அவனுடைய அப்பாவும், அவருடைய எதிரியும் நின்றுகொண்டிருந்தனர் (நம் எதிரி என்று அந்த அவநம்பிக்கையான நேரத்தில் நினைத்துக்கொண்டான். நம்முடைய எதிரி. எனக்கும் அவருக்கும் எதிரி. ஏனெனில் அவர் என் தந்தை!). ஆனால் அவர்கள் இருவரில் ஒருவரது குரல் மட்டுமே அவனுக்குக் கேட்டது. ஏனெனில் அவனுடைய அப்பா வாயையே திறக்கவில்லையே!

“திரு. ஹாரிஸ்! உங்களிடம் என்ன சாட்சி இருக்கிறது?”

“நான் முன்பே சொன்னதுதான். என்னுடைய தானிய வயலுக்குள் நுழைந்துவிட்ட அவனுடைய பன்றியை நான் அவனிடம் ஒருமுறை திருப்பிக் கொடுத்துவிட்டேன். அதை ஒழுங்காக அடைத்து வைக்க அவனிடம் வேலிகூட இல்லை. அவனிடம் இதைச் சொல்லி நான் எச்சரித்தேன். ஆனால் மறுமுறையும் அது நிகழ்ந்தபோது அவனுடைய பன்றியை நான் என்னுடைய தொழுவத்துக்குள் அடைத்து வைத்துவிட்டேன். அதைக் கேட்பதற்காக அவன் வந்தபோது அவனுடைய தொழுவத்தைச் செப்பனிடுவதற்குத் தேவையான கம்பியை நான் கொடுத்து அனுப்பினேன். அதற்கு அடுத்த முறை மீண்டும் என்னுடைய வயலுக்கு வந்த பன்றியை நானே வைத்துக்கொண்டேன். அவனுடைய வீட்டுக்குச் சென்று பார்த்தபோது நான் கொடுத்த கம்பியை அவன் தன்னுடைய தொழுவத்தில் ஒரு உருளையில் சுற்றி வைத்திருப்பதைப் பார்த்தேன். எனக்கு அவன் ஒரு டாலர் பணம் தந்தால்தான் அவனுடைய பன்றி அவனுக்குத் திரும்பக் கிடைக்கும் என்று சொன்னேன். அன்று மாலை ஒரு கறுப்பினத்து ஆள் ஒரு டாலர் பணத்துடன் என்னைத் தேடி வந்தான். அவனுக்குப் பன்றியைத் தந்துவிட்டேன். அவன்  விசித்திரமானவனாக இருந்தான். அவன், “சில பொருட்கள் மட்டுமே அழியாது மிஞ்சும்!’ என்று உன்னிடம் அவன் தெரிவிக்கச் சொன்னான்” என்றான். நான், “அதற்கு என்ன அர்த்தம்?” என்று புரியாமல் கேட்டேன். “உன்னிடம் அவன் இதை மட்டும்தான் சொல்லச் சொன்னான்” என்று அந்தக் கறுப்பின ஆள் கூறினான். அன்று இரவு என்னுடைய தானியக் களஞ்சியம் எரிந்து போனது. அதனுள்ளிருந்த தானியங்களை நான் வெளியே எடுத்துவிட்டேன். ஆனால் தானியக் களஞ்சியம் அழிந்துவிட்டது.”

“அந்தக் கறுப்பின ஆள் எங்கே? அவனைப் பிடித்து வைத்திருக்கிறாயா?”

“அவன் விசித்திரமானவனாக இருந்தான். அவன் எங்கே போனான் என்று எனக்குத் தெரியாது.”

“ஆனால் அது ஆதாரம் கிடையாது. அது நிச்சயமாக ஆதாரமாகாது  என்று உனக்குத் தெரியாதா?”

“அங்கிருக்கும் அந்தச் சிறுவனைக் கூப்பிடுங்கள். அவனுக்குத் தெரியும்.”

தன்னுடைய அண்ணனைத்தான் அவன் குறிப்பிடுகிறான் என்று அந்தச் சிறுவன் முதலில் நினைத்தான். ஆனால் ஹாரிசோ “அந்தக் குட்டிப் பையன். அங்கு நிற்கும் அந்தச் சிறுவனைக் கூப்பிடுங்கள்” என்று இவன் பக்கமாக கையைக் காட்டினான். அவன் தன் அப்பாவைப் போலவே குள்ளமாகவும் முறுக்கான தோற்றத்துடனும் இருந்தான். அந்த உயரத்துக்கே சிறியதாக இருந்த, சாயம் வெளுத்த ஒட்டுப்போட்ட ஜீன்ஸ் அணிந்து, வாரப்படாத கோரையான பழுப்பு நிறத் தலைமுடியுடன், கட்டுப்படுத்த முடியாத புயலின் கருஞ்சாம்பல் நிறக் கண்களுடன் காணப்பட்டான். அவன் தனக்கும் அங்கிருந்த மேஜைக்கும் இடையே இப்போது தெரிந்த கடுமையான முகங்கள் விலகுவதை உடலை வளைத்தபடி அங்கிருந்து பார்த்தான். அந்த நீளமான வரிசையின் முடிவில் நரைத்த முடியுடைய, கண்ணாடி அணிந்த, கழுத்துப் பட்டையற்ற நைந்துபோன ஆடையணிந்த நீதிபதி தன்னை அழைப்பதைப் பார்த்தான். செருப்பணியாத தன் பாதங்களுக்குக் கீழே தரையே இல்லாமல் காற்றில் மிதப்பது போல நடந்து அவனைப் பார்த்ததும் கடுமையேறிய அந்த முகங்களை நோக்கி இப்போது போய்க்கொண்டிருந்தான். வெளியே செல்கையில் வழக்கமாக அணிகிற கறுப்பு அங்கியுடனிருந்த அவனுடைய தந்தை, அவனைப் பார்க்கக்கூட இல்லை. தான் பொய் சொல்லவேண்டும் என்று தன் அப்பா எதிர்பார்க்கிறார் என அவன் மறுபடியும் அதே துயர உணர்வோடும் அவநம்பிக்கையோடும் ‘நான் இதைச் செய்தே ஆக வேண்டும்’ என்று நினைத்தான்.

நீதிபதி அவனிடம், “உன்னுடைய பெயர் என்ன?” என்று கேட்டார். “கர்னல் சர்டோரிஸ் சுனோபஸ்” என்று அந்தச் சிறுவன் முணுமுணுத்தான். “சத்தமாகப் பேசு. என்ன, கர்னல் சர்டோரிஸ் சுனோபசா? இந்த ஊரில் அந்தப் பெயர் கொண்ட யாராவது இருந்தால் அவர்களால் உண்மையை மட்டுமே பேச முடியும் என்று நான் நினைக்கிறேன். சரிதானே?”

அந்தச் சிறுவன் எதுவும் சொல்லவில்லை. ‘எதிரி! எதிரி!’ என்று நினைத்துக்கொண்டான். அவனுடைய கண்களுக்குச் சிறிது நேரம் எதுவுமே தெரியவில்லை. அந்த நீதிபதியினுடைய முகம் கருணையுடன் இருந்ததா என்று தெரிந்துகொள்வதற்காகச் சிரமப்பட்டு கூர்ந்து பார்த்தான்.

“இந்தச் சிறுவனை நான் விசாரிக்க வேண்டும் என்று நினைக்கிறாயா?” என்று ஹாரிஸ் என்ற அந்த நபரிடம் அவர் கேட்டபோது அந்தக் குரல் அவனைத் தொந்திரவு செய்தது. ஆனால் அதற்குப் பிறகு நெடிதாகத் தோன்றிய சில நொடிகளில், மக்கள் நெரிசலாகக் கூடியிருந்த அந்தச் சிறிய அறையில் ஒரு துளி சத்தமும் கேட்காத போதும் மெல்லிய மூச்சுச் சத்தம் அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கின் மீதிருந்த திராட்சைத் தோட்டத்தின் திருப்பத்தில், கனமற்ற தருணமொன்றினால் தலைப்பகுதி பிணைக்கப்பட்ட ஊஞ்சல் ஒன்று இருப்பதாகவும், வெகு நேரம் நீடிக்கிற புவியீர்ப்பு விசையால் அவன் காற்றின் எதிர் திசையில் ஆடுவது போலவும் அவனுக்குத் தோன்றியது. 

ஹாரிஸ், வன்முறை தெறிக்கும் கடுங்குரலில், “இல்லை. நரகத்துக்குப் போக! அவனை வெளியே அனுப்புங்கள்” என்றான். 

இப்போது உலகம் மறுபடி இயல்பாக இயங்கத் துவங்கியது. பாலாடைக்கட்டி, இறைச்சி வாசத்துக்கு இடையே மறுபடி அச்சம், அவநம்பிக்கை ஆகிய இரத்தத்தில் கலந்துவிட்டிருந்த துயரத்தின் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. “இந்த வழக்கு முடிந்தது. என்னால் உனக்கு எதிராக எதையும் சொல்ல முடியாது. ஆனால் உனக்கு அறிவுரை வேண்டுமானால் தரமுடியும். இந்த நாட்டை விட்டு வெளியே போய்விடு. மறுபடி இங்கு திரும்பி வராதே.”

அவனுடைய அப்பா முதல்முறையாக பேசியபோது அவருடைய குரல் கடுமையாக இருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்த்துப் பேசாமல் வெட்டவெளியை நோக்கியபடி, “நானும் இங்கிருந்து போய்விடவே விரும்புகிறேன். இப்படிப்பட்ட மக்கள் நிறைந்த நாட்டில் நான் இருக்க விரும்பவில்லை” என்றவர், அச்சிலேற்ற முடியாத சில சொற்களைப் பேசினார்.

“போதும், போதும். நிறுத்து. உன்னுடைய பாரவண்டியை எடுத்துக்கொண்டு இருட்டுவதற்கு முன் இந்த நாட்டைவிட்டு வெளியேறு. வழக்கு முடிவடைந்தது” என்றார் நீதிபதி. அவனுடைய அப்பா திரும்பி விறைப்பாக நடந்தார். இறுக்கமான கறுப்பு அங்கியணிந்த, இரும்புக் கம்பி போன்ற உறுதியான உடலுடைய அவரைப் பின்தொடர்ந்து அச்சிறுவன் சென்றான். முப்பது வருடங்களுக்கு முன் அவர் திருடிய ஒரு குதிரையின் குளம்பில் அவரைப் பிணைத்து துப்பாக்கி ஏந்திய இராணுவ அதிகாரி அவரை இழுத்துச் சென்ற சம்பவம் நடந்ததும் இதே இடத்தில்தான். அவருடைய அண்ணன் இரண்டு வரிசைகளாக நின்ற மக்கள் கூட்டத்தில் திடீரென எங்கிருந்தோ தோன்றினான். அவன் தோற்றத்தில் அவரைப் போலவே குள்ளமாக இருந்தாலும் அவரைவிடப் பருமனாக இருந்தான். புகையிலையை நன்றாக மென்றபடி கடையிலிருந்து வெளியேறி, அழுக்கான கலைக்கூடத்தின் எதிரே இருந்த படிக்கட்டுகளில் இறங்கி நாய்களும் விடலைச் சிறுவர்களுக்குமிடையே நடந்துவந்து மிதமான மே மாதத் தூசுப் படலத்தில் நின்றபடி கிசுகிசுப்பான குரலில், “தானியக் களஞ்சியத்தை எரிப்பவன்” என்றான்.

கண் முன்னே எதோ சுழல்வது போலிருந்தது. பார்க்கும் சக்தியை இப்போது அவனுடைய கண்கள் மறுபடி இழந்தன. சிகப்பான தூசுப் படலத்தினிடையே நிலவைப் போல ஒரு முகம் தெரிந்தது. முழு நிலவைவிட அது பெரிதாக இருந்தது. அந்த முகத்துக்குரியவர் அவனுடைய உருவத்தில் பாதியளவே இருந்தார். தன்னுடைய தலை பூமியின் மீது மோதியபோது ஏற்பட்ட பலமான காயத்தையோ அதிர்ச்சியையோ உணராமல் அந்தச் சிகப்பு நிறப் படலம் சூழ்ந்த முகத்தை நோக்கி அவன் பாய்ந்தான். காயத்தை உணராமல், வழிகிற இரத்தத்தைப் பொருட்படுத்தாமல், தடுமாறித் துழாவியபடி அவன் எழுந்த அதே நேரத்தில் ஒரு சிறுவன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தெறித்து ஓடுவதைப் பார்த்தான். அவனும் அதற்கான முயற்சியில் துள்ளியெழுந்தபோது அவனுடைய அப்பாவின் கைகள் அவனுடைய முதுகின் மீது கடுமையாக இயங்கியது. அன்போ வேறெந்த உணர்ச்சியோ அற்ற ஒரு குரல் அவன் தலைக்கருகே ஒலித்தது, “போய் பாரவண்டியில் ஏறு”.

அந்த வண்டி சாலையின் குறுக்கே இருந்த வெட்டுக்கிளிகளும் முசுக்கட்டை மரங்களும் நிறைந்த தோட்டத்தில் போய் நின்றது. உருக்குலைந்த அடுப்பு, அவனுடைய அம்மா வரதட்சணையாகக் கொண்டுவந்த, என்றைக்குப் பழுதடைந்தது என்றே சொல்ல முடியாத, எப்போதோ இரண்டு பதினான்கு மணியளவில் உயிரைவிட்டுவிட்ட, உட்புறம் முழுதும் கிளிஞ்சல்கள் பதித்து அழகுபடுத்தப்பட்ட ஒரு கடிகாரம், உடைந்துபோன கட்டில், மேஜைகள் ஆகிய மோசமான நிலையில் இருந்த பல பொருட்கள் அதில் இருந்தன. தங்களிடம் இருப்பதிலேயே மிகச் சிறப்பான உடையணிந்திருந்த மிகப் பருமனான தோற்றமுடைய அவனுடைய இரு அக்காக்களும், அவனுடைய அம்மாவும், வெயிலில் இருந்து பாதுகாக்க தலையைச் சுற்றி பருத்தியாலான கழுத்துப் பட்டை அணிந்திருந்த அவனுடைய அத்தையும் அந்தப் பொருட்களின் மீதும் அங்கு கிடைத்த சிறிய இடைவெளியிலும் நெருக்கி அமர்ந்திருந்தனர். 

அழுதுகொண்டிருந்த அவனுடைய அம்மா அவனைப் பார்த்ததும் பாரவண்டியிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தாள். அவனுடைய அப்பா அவளிடம், “வண்டியில் ஏறு” என்றார்.

“அவனுக்கு அடிபட்டிருக்கிறது. சிறிது தண்ணீரால் அவன் காயத்தைக் கழுவ வேண்டும்…..” 

“வண்டியில் ஏறு” என்றபடி அவனுடைய அப்பாவும் வண்டியின் பின்பக்கமாக ஏறிக்கொண்டார். சிறுவனுடைய அண்ணன் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே அவனுடைய தந்தையும் அமர்ந்துகொண்டு மெலிந்த உடல்வாகுடைய கோவேறு கழுதைகளுக்குக் காட்டுத்தனமாக இரண்டு அடி கொடுத்தார். அது உயிர்களைத் துன்புறுத்துவதில் மகிழ்ச்சி அடையும் செயல் போலக்கூட இல்லை. அவருடைய வழித் தோன்றல்கள் பிற்காலத்தில் மோட்டார் காரைக் கண்டுபிடித்த பிறகு என்ஜினை முன்னும் பின்னும் இயக்கும் அதே வகைமையைச் சேர்ந்ததாகவே அது இருந்தது. கடைகளின் அருகே நின்று சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்த ஆண்களுடைய கடுமையான முகங்கள் சாலையின் ஒரு திருப்பத்தில் மறைய பாரவண்டி தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. ‘இது முடிந்துவிட்டது. அவர் ஒரு வேளை இதனால் திருப்தியடைந்து இருக்கக்கூடும். ஏனெனில்……’ என நினைத்தவன், தனக்குள்கூட இதைச் சத்தமாகச் சொல்லக்கூடாது என்றெண்ணி தன் சிந்தனைப் போக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

அவனுடைய அம்மா அவன் தோள்களைத் தொட்டு, “வலிக்கிறதா?”  என்று கேட்டாள். அவன், “இல்லை. வலிக்கவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றான். “காயத்தின் மீதுள்ள இரத்தம் காய்வதற்கு முன் கொஞ்சமாவது அதைத் துடைத்துவிடேன்” என்றாள். “இரவானதும் கழுவிக்கொள்ளலாம். இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும். விடுங்கள்” என்றான். வண்டி போய்க்கொண்டு இருந்தது. தாங்கள் எங்கு போகிறோம் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவர்கள் யாருக்கும் தெரியாது, யாரும் இதுவரை அது பற்றிக் கேட்டதும் கிடையாது. ஏனெனில் எப்போதுமே இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு மாதிரியான ஏதாவது ஒரு இடம் எங்காவது அவர்களுக்கெனக் காத்திருக்கும். 

அவனுடைய அப்பா ‘இதைச் செய்வதற்கு’ முன்பே வேறொரு நிலத்தில் பயிர் செய்வதற்கு ஒருவேளை ஏற்பாடு செய்து வைத்திருக்கலாம்…. மறுபடி அவன் சிந்திப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று. அவனுடைய அப்பாவால் எப்போதும் அதைச் செய்ய முடியும். நரி போன்று எதையும் சார்ந்திராத அவருடைய தன்மையும் தைரியமும் எப்போதும் அந்நியர்களைக் கவர்ந்தன. கொன்று புசிக்கும் வேட்டையாடியின் இயல்பான முரட்டுத்தனத்தை அவரிடமிருந்து பெற அவர்கள் விரும்பியது போலத் தோன்றும். ஆனால் தன்னுடைய செயல்கள் தன்னைச் சார்ந்த அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று அவருக்கிருந்த அதீதமான நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. வசந்தத்தில் செழித்திருந்த கருவாலி மரங்களும் புங்க மரங்களும் கொண்ட ஒரு தோப்பில் அன்றிரவு அவர்கள் தங்கினர். இரவு குளிராக இருந்தது. பக்கத்தில் ஒரு வேலியில் இருந்து எடுத்த மரச்சட்டங்களை நீளவாக்கில் வெட்டிப்போட்டு நேர்த்தியாகவும், கஞ்சத்தனமாகவும் மிகச்சிறிய அளவில் நெருப்பு மூட்டி அமர்ந்திருந்தனர்.

உறைந்து விடுமளவுக்குக் கடும் குளிர் வீசும் காலத்திலும்கூட எப்போதும் இப்படியான சிறிய அளவு நெருப்பை மூட்டுவதுதான் அவனுடைய தந்தையின் வழக்கம். ஒருவேளை இளைஞனாக இருந்திருப்பின், ‘நெருப்பைப் பெரிதாக மூட்டாமல், ஏன் இவ்வளவு சிறிய அளவு மூட்டுகிறார்? போரால் நிகழும் வீணடிப்புகளையும் களியாட்டங்களையும் அறிந்தது மட்டுமின்றி, தனக்கு உரிமையற்ற பொருட்களுக்காகவும், தேவையற்ற பொருட்களுக்காகவும் ஆடம்பரமாகச் செலவுசெய்யும் குணத்தைத் தன் இரத்தத்திலேயே கொண்டுள்ள ஒரு நபர் கண்ணில்பட்ட அனைத்தையும் ஏன் கொளுத்தவில்லை’ என்று அந்தச் சிறுவன் யோசித்திருப்பான், அதைக் குறித்து தன் கருத்தைக் கூறியிருப்பான். இன்னும் ஒரு படி மேலே சென்று, அந்த நான்கு ஆண்டுகளாக மனச்சோர்விலிருந்தும், கவலையில் இருந்தும், அனைவருடைய கண்களில் இருந்தும் தப்பித்து (கைப்பற்றப்பட்டவை என்று அவர் குறிப்பிடும்) அத்தனை குதிரைகளையும் மறைத்து வைத்து காடுகளில் கழித்த அத்தனை இரவுகளும் அந்தக் கஞ்சத்தனமான சிறிய நெருப்பினால் விளைந்த நற்பயனே என்றும்கூட அவன் நினைத்திருக்கக்கூடும். அவன் தந்தையின் இருத்தலுக்கு ஆழமான ஒரு உந்துவிசை போல, சிலருக்கு இரும்பு அல்லது அதன் பொடியின் மூலக்கூறுகள் போல, நேர்மையைக் காப்பாற்றுதற்கென உள்ள ஒரே ஆயுதம் போல, மூச்சு விடுதல் என்பது மட்டுமே உயிர்ப்புக்கான தகுதியை எப்படித் தராதோ அது போல, நெருப்பின் கூறுகளையும் மிகுந்த மரியாதையுடனும் கவனத்துடனும் நேர்கொள்ள வேண்டும் என்று அவனுடைய அப்பா சிறிய அளவிளான நெருப்பைப் பயன்படுத்தியது குறித்து இப்படி உண்மையிலேயே ஒரு தெய்வீகமான காரணம் இருந்ததாகக்கூட அவன் தனக்கு வயதான பிறகு நினைக்கலாம்.

ஆனால் அவன் அதை இப்போது நினைக்கவில்லை. அவன் கஞ்சத்தனமான இதே சிறு நெருப்பைத் தன் வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகியவன். அமைதியாக அந்த நெருப்பின் பக்கத்தில் அமர்ந்து தன் இரவு உணவை உண்டவன், அவனுடைய தந்தை அவனைக் கூப்பிட்டபோது தன் இரும்புத் தட்டை வைத்தபடி பாதி தூக்கத்தில் இருந்தான். இரக்கமற்ற அவருடைய விறைத்த முதுகின் பின்புறமாக சரிவிலும், பிறகு நட்சத்திரங்களால் ஒளிர்ந்த சாலை வரையிலும் நொண்டிக்கொண்டே மறுபடி பின்தொடர்ந்தான். சாலையின் திருப்பத்தில் நட்சத்திரங்களின் எதிரே முகமே கண்ணுக்குத் தெரியாமல், கறுத்த தட்டையான வடிவத்தில், உணர்ச்சியற்ற ஒரு உருவமாக அவனுடைய அப்பா தெரிந்தார். இருந்தது. அவருடைய மேற்சட்டையின் இரும்பு மடிப்புகளில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட தகரத்தைப் போன்ற கரகரப்புடன் கூடிய, ஆனால் தகரத்தின் வெம்மையற்று இருந்த ஒரு குரலில், “நீ அவர்களிடம் சொல்லிவிடத் திட்டம் போட்டிருந்தாய். சிறிது நேரம் கடந்திருந்தால் சொல்லிவிட்டிருப்பாய்” என்றார். அவன் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவன் பதில் சொல்லாது நிற்பதைக் கண்டதும், கடையருகே கோவேறு கழுதைகளை அடித்தாரே, அதே போல தன் உள்ளங்கையின் தட்டையான பகுதியால் அவனுடைய தலையின் பக்கவாட்டுப் பகுதியில் பலமாக ஒரு அடி அடித்தார் அவனுடைய அப்பா. குதிரைகளைத் தொந்திரவு செய்யும் ஈக்களையும் அவர் இப்படித்தான் குச்சியால் அடித்துக்கொல்வார்.

“நீ வளர்ந்து பெரிய மனிதனாகப் போகிறாய். சில விஷயங்களை இனி நீ கற்றுக்கொள்ள வேண்டும். உன்னுடைய சொந்த இரத்தத்தை நீ காப்பாற்றவில்லை என்றால், சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உனக்கு ஆட்களே இருக்க மாட்டார்கள். இன்று காலை அங்கு நின்றிருந்த யாராவது, ஒரு ஆளாவது உன்னைச் சொந்தம் கொண்டாடுவார்கள் என்று நினைக்கிறாயா? என்னிடம் தோற்றுப்போனதால் அவர்கள் அனைவருமே என்னை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பது உனக்குத் தெரியாததா என்ன?” என்று அவனுடைய அப்பா அவனைக் கேட்டபோது அந்தக் குரல் அச்சமோ கோபமோ இன்றியே ஒலித்தது. “அவர்கள் உண்மை, நீதி ஆகியவற்றைத்தான் வேண்டினர் என்று நான் பதில் சொல்லியிருந்தால் அவர் மறுபடி என்னை அடித்திருப்பார்” என்று இருபது வருடங்களுக்குப் பிறகு அவன் தனக்குள்ளேயே பேசிக்கொள்ளக்கூடும். ஆனால் இப்போது அவன் எதுவும் பேசவில்லை. அழக்கூடச் செய்யாமல் அப்படியே  நின்றுகொண்டிருந்தான். அவனுடைய அப்பா, “பதில் சொல்” என்றார். “ஆமாம்” என்று அவன் கிசுகிசுத்தான். “போய்த் தூங்கு. நாளை காலை நாம் ஒரு இடத்துக்குப் போகிறோம்” என்றார்.

அடுத்த நாள் முன் மதிய நேரத்தில் அவர்களுடைய பாரவண்டி ஒரு வீட்டின் முன் வந்துநின்றது. இரண்டு அறைகள் கொண்ட சுண்ணம் பூசாத ஒரு வீடு அது. அந்தச் சிறுவனின் பத்து வயதிற்குள் அந்த வீட்டைப் போலவே கிட்டத்தட்ட பனிரெண்டு வீடுகளின் முன் அவர்களுடைய வண்டி இதற்கு முன் நின்றிருக்கிறது. வழக்கம் போலவே இப்போதும் அவனுடைய அம்மாவும் அத்தையும் வண்டியிலிருந்து இறங்கியதும் அதிலிருந்த பொருட்களைக் கீழே எடுத்து வைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவனுடைய அப்பாவும், அண்ணனும், இரு அக்காக்களும் சகோதரிகளும் அங்கிருந்து அசையவே இல்லை.

“இது பன்றிகளை அடைக்கப் போதுமானதாக இருக்காது என நினைக்கிறேன்” என்று அவனுடைய அக்காக்களில் ஒருத்தி சொன்னாள்.

“அது போதுமானதாகவும் இருக்கும். உன்னுடைய பேராசைக்கு ஏற்றதாகவும் இருக்கும். உனக்கு நிச்சயமாகப் பிடிக்கும். இப்போது வண்டியில் இருந்து கீழே இறங்கி பொருட்களை எடுத்து வைப்பதில் அம்மாவுக்கு உதவி செய்” என்றார் அவனுடைய அப்பா.

சதுப்புநிலப் பசுமாடுகளின் கொம்புகளில் படபடக்கும் மலிவு விலை ரிப்பன்களை அணிந்திருந்த அவனுடைய இரு அக்காக்களும் கீழே இறங்கினர். அவர்களில் ஒருத்தி பாரவண்டியில் இருந்து ஒரு பழுதடைந்த லாந்தர் விளக்கையும் இன்னொருத்தி ஒரு பழைய துடைப்பத்தையும் வெளியே எடுத்தனர். அவனுடைய அப்பா தன் கையிலிருந்த சேணத்தை மூத்த மகனின் கைகளில் தந்துவிட்டு வண்டியில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தார். “எல்லாப் பொருட்களையும் இறக்கி முடித்ததும் அவர்களைக் களஞ்சியத்திற்கு அழைத்துக்கொண்டு போய் உணவு கொடு” என்றார். பிறகு, “நீ என்னுடன் வா” என்று அவர் சொன்னபோது தன்னுடைய அண்ணனிடம்தான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார் என முதலில் நினைத்தான். “என்னையா கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டான். “ஆமாம். உன்னைத்தான்” என்றார் அவனுடைய அப்பா. “ஏப்னர்” என்று அவனுடைய அம்மா கூப்பிட்டாள். அவனுடைய அப்பா ஒரு நிமிடம் நின்று பின்னர் திரும்பிப் பார்த்தார். புதர் போலிருந்த, முரட்டுத்தனமாக நரைத்திருந்த, எளிதில் யாருக்கும் கோபமூட்டக்கூடிய புருவங்களுக்குக் கீழிருந்து அவருடைய கண்கள் அவளைக் கடுமையாக முறைத்தது தெரிந்தது.

“நாளை துவங்கி இனி வருகிற அடுத்த எட்டு மாதங்களுக்குத் தன் உடலையும் ஆன்மாவையும் என்னிடம் ஒப்படைக்கப் போகும் குறிக்கோள் கொண்ட இவனுடன் நான் சிறிது பேசியே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

அவர்கள் மறுபடி சாலையில் நடந்தார்கள். அது சென்ற வாரமாகவோ அல்லது முந்தைய நாள் இரவு நடந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவோ இருந்திருந்தால், “நாம் எங்கே போகிறோம்?” என்று அவன் கேட்டிருப்பான். ஆனால் இப்போது அவன் எதுவும் கேட்கவில்லை. அவனுடைய அப்பா இதற்கு முன் அவனை அடித்திருக்கிறார். ஆனால் அடித்த பிறகு ஏன் அடித்தார் என்பதை விளக்குவதற்காக அவர் அடிப்பதை  இதுவரை நிறுத்தியதில்லை. அந்த அடி விழும் சத்தமும் அதைத் தொடர்ந்து சினத்துடன் ஒலிக்கும் அவருடைய குரலும் இப்போதும் அவன் காதில் கேட்டது. தான் மிக இளம் பிராயத்தவனாக இருப்பதால் மட்டுமே உண்டாகும் மோசமான இடர்பாடுகளில் இருந்து அவன் தன்னைக் காத்துக்கொள்ள இயலாது என்பதை அது வெளிப்படுத்தியது. சிறுவனாக இருப்பதால் அவன் பாரம் சுமக்கிறான். அந்தப் பாரம், உலகில் சுதந்திரமாக உயரப் பறப்பதைத் தவிர்க்குமளவுக்கு மட்டுமே கனமுடையதாகவும், அவன் தன் சொந்தக் கால்களால் நிற்குமளவுக்கு வலிமையற்றதாகவும் இருந்தது. இதன் விளைவாக அந்த அடியைத் தடுக்க முடியாது என்பதுடன், அதற்குப் பின்னான நிகழ்வுகளைத் தடுப்பதற்கான முயற்சிகளையும் அவனால் செய்ய இயலாது என்பதை அந்தக் குரல் தெளிவாக்கியது.

கருவாலி மரங்களும், சிடார் மரங்களும், ஏராளமான பூ மரங்களும், புதர்களும் இருந்த தோட்டத்தை அவர்களால் இப்போது பார்க்க முடிந்தது. அந்தத் தோட்டத்துக்குள்தான் அந்த வீடு எங்கோ இருக்கிறது. ஹனிசக்குள் எனும் மஞ்சள் நிற மலர்களும், செருக்கீ ரோஜாக்களும் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த வேலிக்கருகே நடந்து இரண்டு செங்கல் தூண்களுக்கு இடையே திறந்து கிடந்த ஒரு கதவை அவர்கள் அடைந்தார்கள். வாசலுக்குப் போகும் வழியைக் கடந்து முதல்முறையாக அவன் அந்த வீட்டைப் பார்த்த தருணத்தில் அவன் தன்னுடைய அப்பாவை, தன் பயத்தை, அவநம்பிக்கையை அனைத்தையும் மறந்து போனான். மறுபடி அவனுடைய தந்தை அவனுடைய நினைவுக்கு வந்தபோதுகூட வழக்கமான அச்சமும் அவநம்பிக்கையும் திரும்ப வரவில்லை. ஏனெனில் இதுவரை பனிரெண்டு முறை இடம் பெயர்ந்தபோதும் சிறிய பண்ணைகள், வயல்கள், வீடுகள் கொண்ட எளிய கிராமத்திற்கே அவர்கள் சென்றிருந்தனர். இதுபோன்ற ஒரு வீட்டை இதற்கு முன் அவன் பார்த்ததே இல்லை. அது வழக்குமன்ற மாளிகை போல இருக்கிறது என்று அவன் தனக்குள் நினைத்தான். அவனுடைய சிறு பிராயத்தின் காரணமாக வார்த்தைகளில் விளக்க முடியாத காரணமற்ற ஒரு அமைதியும் ஆனந்தமும் அவனுக்குள் எழுந்தது. 

‘அவர்கள் இவரிடமிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள். இத்தகைய அமைதியும் கண்ணியமும் கொண்டவர்களை அவரால் எதுவும் செய்ய முடியாது. அவர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு ரீங்கரிக்கும் குளவியைப் போல சில நொடிகளுக்குக் கொட்டி வலியுண்டாக்க முடியும். அவ்வளவுதான். தமக்குச் சொந்தமான தானியக் களஞ்சியத்தையும், குதிரை லாயத்தையும், மாட்டுத் தொழுவத்தையும், அவருடைய சூழ்ச்சி மிகுந்த மிகச் சிறிய தீக்கங்குகளால் பாதிக்கப்படாமல் இந்த அமைதியும் கண்ணியமும் வசியம் செய்துவிடும்… அமைதியும் ஆனந்தமும் என்று தொடர்ந்த சிந்தனையின் எழுச்சி, இறுக்கமான கறுத்த முதுகுடன், எளிதில் தடுத்து நிறுத்த முடியாத விறைப்புடன், நொண்டியபடி செல்கிற அந்த உருவத்தை மறுபடி ஒரு நொடி பார்த்ததும் தணிந்து மட்டுப்பட்டது. தகரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட பாளம் போன்ற, உணர்வற்ற, கடுமைத் தன்மையை முன்னெப்போதையும்விட அதிகமாகக் கொண்டிருந்த அந்த உருவம், இந்தப் பெரிய வீட்டின் முன்னும்கூட சிறியதாகத் தெரியவில்லை. அமைதியான தூண்களின் பின்னணியில் சூரியனுக்குப் பக்கவாட்டில் இருப்பதால் சூரிய நிழல் படாத அந்த வீடு எந்த விதத்திலும் அவருக்கு எதிரே பெரியதாக அவனுடைய கண்ணுக்குத் தெரியவில்லை. அந்த வீட்டின் வாசலை அடைய, வழியில் எங்கும் திரும்ப வேண்டியிராதபடி தன் தந்தை தேர்ந்தெடுத்திருந்த நேரான பாதையை நினைத்துக்கொண்டே அவரை அவன் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.

வீட்டின் முன் வாசலுக்குப் போகும் அகலமான பாதையில் நின்றிருந்த ஒரு குதிரை இட்டிருந்த சாணக் குவியலின் நடுவே அவனுடைய அப்பாவின் பாதம் பதிவதைப் பார்த்தான். சற்றே எட்டி நடந்திருந்தால்கூட அதை அவர் வெகு எளிதாகத் தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்த எண்ணம் சில நொடிகள் மட்டுமே நீடித்தது. அந்த வீட்டால் வசியம் செய்யப்பட்டவன் போல, சொற்களால் விளக்க முடியாத ஒரு உணர்வுடன், துயரமோ, அவன் இதுவரை அறிந்தே இராத வேட்டைக் குணமோ, பொறாமையுடன் கூடிய சீற்றமோ இன்றி, இரும்பைப் போலிருந்த கறுப்பு நிற அங்கியைப் பின்தொடர்ந்து சென்றான். ‘ஒருவேளை அவருக்கும் இவ்வாறான உணர்வு தோன்றியிருக்கலாம். ஒருவேளை தவிர்க்க விரும்பினாலும் இயலாத வண்ணம் தன்னுடைய இயல்பாக அவர் கொண்டிருக்கிறவற்றை அது இப்போது மாற்றிவிடக்கூடும்’.

அவர்கள் முகப்பைக் கடந்தனர். மரப்பலகைகளின் மீதெழுந்த அவனுடைய அப்பாவின் அழுத்தமான காலடிச்சத்தம் சீரான வேகத்தில் அழுத்தந் திருத்தமாக அவனுக்குக் கேட்டது. அந்த உடலுக்கும் அதிலிருந்து வந்த சத்தத்திற்கும் சம்பந்தமற்ற ஓசையாக அது இருந்தது. அகலமான தொப்பியாலோ ஒரு காலத்தில் கறுப்பாக இருந்து (வீடுகளில் காணப்படும் பூச்சிகளின் பாசி நிறத்தில் இப்போது உருமாறியிருந்த) உயர் ரக அங்கியின் மிகப்பெரிய கைப்பகுதியை உயர்த்தியபடி, வெண்ணிறக் கதவின் வெளியே பறவையின் வளைந்த நகம் போலத் தன்னை நோக்கி நீண்ட கையாலோ அந்த உருவம் சிறிதாகவில்லை. சொல்லப்போனால் எவ்விதத்திலும் சிறுமை அடையாத ஒரு விதமான தன்மையைக் கொண்டிருந்ததைப் போல அந்தப் பாதங்கள் இருந்தன. லினன் மேலங்கியுடன் இருந்த ஒரு கறுப்பின ஆள் அடுத்த நொடியே கதவைத் திறந்ததை வைத்து அவர் அவ்வளவு நேரமும் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்ததை அந்தச் சிறுவன் புரிந்துகொண்டான். அந்தக் கிழவரின் பெருமளவு நரைத்த தலைமுடி சீராக வாரப்பட்டிருந்தது. அவர் கதவை மறித்து நின்றபடி, “வெள்ளைக்காரரே! உங்கள் பாதங்களைத் தூய்மையாகத் துடைத்துக்கொண்டு உள்ளே வாருங்கள். மேஜர் இப்போது வீட்டில் இல்லை” என்றார்.

“வழியை விடு” என்றபடி அவனுடைய அப்பா அந்தக் கிழவனை எட்டித் தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். அந்த கருப்பினக் கிழவரும் அவரைப் பின்தொடர்ந்து வேகமாக உள்ளே நுழைந்தார். ஈட்டித் தள்ளியதில் கதவின் ஓரத்தில் படிந்துவிட்ட அந்தப் பாதங்களின் சுவடுகளை இப்போது அந்தச் சிறுவன் பார்த்தான். தன்னைவிட இருமடங்கு பாரத்தைச் சுமந்திருக்கிற அந்தப் பாதத்தின் சுவடுகள் இப்போது அடுத்ததாக வெளிர் நிறத் தரைவிரிப்பின் மீது படிவதையும் சிறுவன் பார்த்தான். அந்தக் கிழவர் “லுலா! லுலா” என்று சத்தம் போட்டார். அந்த வீட்டின் கம்பளி போர்த்தப்பட்ட படிகள், சரவிளக்குகளில் இருந்த பளபளப்பான பதக்கங்கள், தங்க விளிம்புச் சட்டங்களின் அமைதியான தணிந்த ஒளி ஆகிய அனைத்தும் நாகரீகத்தின் இதமான பேரலை ஒன்று தன்னை இழுத்துச்செல்வதைப் போல சிறுவன் உணர்ந்தான். அப்போது வேகமான காலடியோசையுடன் ஒரு பெண் வந்தாள். அவளைப் போன்ற ஒரு பெண்ணை இதற்கு முன் அவன் பார்த்ததே இல்லை. கழுத்தருகே பூந்தையலுடைய மிருதுவான சாம்பல் நிற அங்கியுடனும் ஏப்ரனுடனும் அவள் இருந்தாள். கேக் அல்லது பிஸ்கட் செய்துகொண்டிருந்த மாவை தன்னுடைய அங்கியின் நீளமான கைப்பகுதியில் துடைத்தபடி கூடத்திற்கு வந்தவள், தன் பார்வையை அவனுடைய அப்பாவின் பக்கம் திருப்பாமல் மெல்லிய நிறமுடைய அந்தத் தரைவிரிப்பின் மீது படிந்திருந்த பாதச் சுவடுகளை மட்டுமே பார்த்தாள். தன் கண்களை நம்ப முடியாத பேரதிர்ச்சி அவள் முகத்தில் தோன்றியது.

“நான் முயன்றேன். அவரிடம் நான் சொன்னேன்…” என்று அந்தக் கறுப்பினக் கிழவர் கூவினார்.

“தயவுசெய்து வெளியே போகிறீர்களா? மேஜர் ஸ்பெயின் இப்போது வீட்டில் இல்லை. தயவுசெய்து போகிறீர்களா?” என்று அவள் நடுங்கும் குரலில் கூறினாள்.

அவனுடைய அப்பா எதுவும் பேசவில்லை. எதுவுமே பேசவில்லை. அவர் அவளைப் பார்க்கக்கூட இல்லை. தரை விரிப்பின் நடுவே நின்றபடி, தன்னுடைய தொப்பியுடன் கூழாங்கல் நிறக் கண்களின் மீது புதர் போன்ற சாம்பல் நிறப் புருவங்கள் மெலிதாகத் துடிக்க, அந்த வீட்டைச் சிறிது நேரம் விரிவாக ஆராயத் துவங்கினார். பிறகு அதே ஆராய்ச்சி நிறைந்த பார்வையுடன் திரும்பினார். நன்றாக இருந்த தன்னுடைய ஒரு காலால் தன் உறுதியான இன்னொரு  பாதத்தை நிலைப்படுத்திக்கொண்டார். பிறகு அதைத் தரை விரிப்பின் வளைவான பகுதியின் மீது வைத்து இழுத்தார். இப்போது அங்கு நீளமான ஒரு கறை ஏற்படுவதைச் சிறுவன் கவனித்தான். அவனுடைய அப்பா ஒரு முறை, ஒரே ஒரு முறைகூட தரைவிரிப்பைப் பார்க்கவில்லை. அந்தக் கறுப்பினத்தவர் கதவைத் திறந்து வைத்தபடி நின்றார். அவர் வெளியேறிய போது ஒரு பெண்ணின் பெருத்த அலறல் சத்தமும் கதவு மூடும் ஓசையும் ஒன்றிணைந்து கேட்டது. அவனுடைய அப்பா உச்சிப் படிக்கட்டின் மீது நின்றபடி தன் பாதத்தை அதன் முனையால் சுத்தமாக சுரண்டிக்கொண்டார். முன் வாசல் கதவருகே சென்றவர் மறுபடி நின்றார். உறுதியான தன் பாதத்தை அழுத்தமாக ஊன்றியபடி அந்த வீட்டை மறுபடி ஒரு முறை பார்த்தார். “வெண்ணிறமாக அழகாக இருக்கிற அந்த வீடு, கறுப்பினத்தவனின் வியர்வையால் ஆனது. அவனுக்குப் பொருத்தமான அளவுக்கு அது இன்னும் வெண்ணிறமாக மாறவில்லை. சிறிது வெள்ளை நிறத்தவரின் வியர்வை அதனுடன் கலக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான் என நினைக்கிறேன்” என்றார்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்தச் சிறுவன் வீட்டின் பின்புறம் மரம் வெட்டிக்கொண்டிருந்தான். அதற்குள் அவனுடைய அம்மாவும், அத்தையும் இரு அக்காக்களும் சமையலுக்காக அடுப்பைச் சீர் செய்துகொண்டிருந்தனர். இல்லை. அம்மாவும் அத்தையும் மட்டும்தான் வேலை செய்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஏனெனில் சூழ்ந்திருந்த சுவர்களால் மறைக்க முடியாத அளவுக்கு அந்த இரு அக்காக்களும் வெட்டியாகக் கதை பேசிக்கொண்டிருக்கும் சத்தம் அவ்வளவு தொலைவிலும் ஒலித்தது. அப்போது குதிரைகளின் குளம்பொலி கேட்டது. ஒரு அழகான பழுப்பு நிறப்பெண் குதிரையின் மீது சினம் பரவிய முகத்துடன் லினன் ஆடையணிந்த ஒருவர் வருவதைப் பார்த்த உடனே சிறுவனுக்கு அவரை அடையாளம் தெரிந்தது. அவனைப் பின்தொடர்ந்து குதிரை வண்டியொன்று சீரான இடைவெளியுடன் வந்தது. அதில் அமர்ந்திருந்த கறுப்பின இளைஞனுக்கு முன்னே ஒரு தரைவிரிப்பு சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அவனுடைய அப்பாவும் அண்ணனும் சாய்வு நாற்காலிகளில் அமர்ந்திருந்த அவர்களுடைய வீட்டின் திருப்பத்தைக் கடந்து, அந்த வண்டி இப்போது நின்றது. சில நொடிகளுக்குப் பிறகு அவன் தன் கோடாரியை வீசுவதற்கு முன் அந்தக் குதிரை துள்ளியபடி திரும்பிப் போகும் குளம்பொலி மறுபடி கேட்டது. அவனுடைய அக்காக்களில் ஒருத்தி சுருட்டப்பட்டிருந்த தரைவிரிப்பின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டு அதைத் தரையின் மீது விரித்தாள். இன்னொருத்தி அவளைப் பின்தொடர்ந்து வந்தாள். இப்போது அவர்கள் இருவரும் சமையலறையின் பின்வாசல் வழியாக வெளியே வந்தனர்.

அவனுடைய அப்பா அவனுடைய முதல் அக்காவைப் பார்த்து, “இவற்றை நீ எடுத்துக்கொண்டு போ. இல்லையென்றால் போய் வெள்ளாவிப் பாத்திரத்தைத் தயார் செய்” என்றார். முதல் அக்கா, இன்னொருத்தியைப் பார்த்து, “ஏ சார்டி! நீ போய் வெள்ளாவிப் பாத்திரத்தைத் தயார் செய்” என்றாள். அவனுடைய அப்பா கதவருகே வந்து நின்றார். அவருடைய முரட்டுத்தனத்தாலோ தான் செய்வதே சரி என்று உறுதியாக நம்புகிற தன்மையாலோ எவ்விதத்திலும் பாதிக்கப்படாத அவனுடைய அம்மாவின் முகம் அவருடைய தோளுக்குப் பின்னே தெரிந்தது. “ம்! இதை எடுங்கள்” என்றார். பருத்த தோற்றமுடைய அவர்கள் இருவரும் சோம்பலுடன் தம் உடலை வளைத்துக் குனிந்தனர். அவர்கள் அவ்வாறு வளைந்த போது அவர்களின் வெளிறிய ஆடையும், காற்றில் படபடத்த பளபளப்பான மலிவுவிலை ரிப்பன்களும் நம்பமுடியாத அளவுக்குப் பரந்து விரிந்து காட்சியளித்தன. “ஃபிரான்ஸ் போன்ற தூர தேசத்திலிருந்து ஒரு தரைவிரிப்பை வரவழைத்த நான், அது மிக முக்கியம் என்று நினைத்தால், வெளியாட்கள் வந்து அதன் மீது காலை ஊன்றும் இடத்தில் அதை வைக்க மாட்டேன்” என்றாள் முதலாமவள். அவர்கள் அதை உயர்த்திப் பிடித்தனர். அவனுடைய அம்மா, “ஏப்னர், நான் அதைத் தரையில் விரிக்கிறேன்” என்றாள். “நீ போய் இரவுச் சமையலைக் கவனி. இதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.

புழுதியின் மீது விரிக்கப்பட்ட தரை விரிப்பின் அருகே, நீர்க்குமிழ்களுடன் பொங்கிக்கொண்டிருந்த வெள்ளாவிப் பாத்திரத்தின் பக்கத்தில் அவனுடைய இரு அக்காக்களும் மிக சோம்பலாகவும் விருப்பமின்றியும் குனிந்தவாறு இருந்தனர். அவனுடைய அப்பா அவர்களுக்கு எதிரே நின்றபடி எளிதில் அமைதிப்படுத்த இயலாத கடுமையான முகத்துடன் அவர்களை வேலை செய்ய வைத்துக்கொண்டு இருந்தாலும் அவர் குரல் உயர்த்தாது இருப்பதை அச்சிறுவன் அன்று மதியம் முழுதும் பார்த்துக்கொண்டு இருந்தான். வீட்டில் தயாரிக்கப்பட்ட கடுங்கார நீரின் வாசம் அங்கு அடித்தபடி இருந்தது. அதே நொடியில் அவனுடைய அம்மா கதவருகே வந்து ஆர்வம் எனக் கூற முடியாத, அவநம்பிக்கை போன்றதான ஒரு உணர்வுடன் அவர்களைப் பார்த்தாள். அவனுடைய அப்பா திரும்பிப் பார்ப்பதையும் கோடாரியை நிலத்தில் வீசிவிட்டு அங்கிருந்து சதுர வடிவான பாறையின் உடைந்த ஒரு பகுதியை கையில் எடுத்து ஆராயந்து பார்ப்பதையும், பிறகு வெள்ளாவியிடம் திரும்புவதையும் ஓரக் கண்ணால் பார்த்தான். 

“ஏப்னர். ஏப்னர். வேண்டாம். தயவுசெய்து வேண்டாம், ஏப்னர்” என்று அவரிடம் அவனுடைய அம்மா கெஞ்சினாள். பொழுது விடிந்து, விப்பூர்வில்ஸ் பறவை பாடத் தொடங்கிவிட்டிருந்தது. மதியம் மீந்து ஆறிப்போன உணவை அவர்கள் வழக்கமாக உண்ணும் அறையிலிருந்து இப்போது காபி வாசனை அடித்தது. வீட்டுக்குள் நுழைந்த போது மறுபடி காபி மட்டும்தான் குடிக்கப்  போகிறோம் என்று அவன் நினைத்தான். ஏனெனில் கணப்பு அடுப்பில் இப்போது நெருப்பு இருந்தது. கணப்பு அடுப்பின் முன் இடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளின் மீது அந்தத் தரைவிரிப்பு பரப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன் அந்த விரிப்பில் படிந்திருந்த அவனுடைய அப்பாவின் காலடித் தடங்கள் மறைந்து அவற்றுக்குப் பதிலாக மிகச் சிறிய அளவுள்ள ஒரு இயந்திரத்திலிருந்து தண்ணீர் சிதறியது போன்ற நீர்க்கோடுகள் இப்போது அதில் தோன்றியிருந்தன. ஆறிப்போயிருந்த உணவை உண்டு அவர்கள் படுக்கைக்குப் போகும் வரையிலும் அது அங்கேயேதான் தொங்கிக்கொண்டிருந்தது.

இடத்தைப் பற்றி உரிமை கொண்டாடாமலும், அப்பாவிடமிருந்து உத்தரவுகளைப் பெறாமலும் அங்கிருந்த இரு அறைகளில் அவனுடைய அம்மா ஒரு படுக்கையிலும் அண்ணன் இன்னொரு படுக்கையிலும் படுத்திருந்தனர். சிறுவனும் அவனுடைய அத்தையும் இரு சகோதரிகளும் துப்பாக்கிக் குண்டுகளோடு சேர்ந்து இன்னொரு அறையில் தரையில் கிடந்தனர். ஆனால் அவனுடைய அப்பா படுக்கைக்கு வரவில்லை. நெருப்பு கிட்டத்தட்ட அணைந்துபோயிருந்தது. உறுதியான அந்தப் பாதம் அவனை உந்தி எழுப்பியது. அவனுடைய அப்பா, “கோவேறு கழுதையைக் கொண்டுவா” என்றார். அவன் திரும்பி வந்தபோது அவர் அந்தத் தரைவிரிப்பைத் தன்னுடைய தோளின் மீது வைத்தபடி வீட்டின் கறுப்பு நிறக் கதவருகே நின்றுகொண்டிருந்தார். “நீ வண்டியோட்டப் போவதில்லையா?” என்று கேட்டார். “இல்லை. உங்கள் பாதங்களை இங்கு வையுங்கள்” என்றான். அவன் தந்தை தன் கால் முட்டியை அவனுடைய  கையை நோக்கித் தாழ்த்தினார். உருக்குக்கம்பி போன்ற அதன் பலம் ஆச்சரியமூட்டும் வகையில் மென்மையாக அவனுள் பரவியது. அந்தப் பலத்துடன் அவன் கோவேறு கழுதையின் முதுகில் ஏறினான். இதற்கு முன்பு தங்களிடம் ஒரு சேணம் இருந்தது மட்டுமே அவனுக்கு நினைவிருந்ததே தவிர எங்கிருந்தது என்பதோ எப்போது இருந்தது என்பதோ அவனுக்கு நினைவில்லை. 

அவனுடைய அப்பா அநாயாசமாக அந்தத் தரைவிரிப்பை அவனுக்கு முன்புறமாக வீசினார். அவர்கள் மதியம் கடந்துவந்த வழியை நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் கண்டறிந்து மஞ்சள் பூக்களுடைய கொடிவகைகள் ஏராளமாகக் கிடந்த புழுதி படிந்த சாலையில் இப்போது பயணித்தார்கள். முன்பக்கக் கதவையும், இருளான தடத்தையும், அகலமான நடைபாதையையும் கடந்து விளக்குகள் ஏதும் எரியாதிருந்த அந்த வீட்டை அடைந்தனர். தரைவிரிப்பின் சொரசொரப்பான முனைகள் தன் தொடைகளின் மீது உரச அவன் கோவேறு கழுதையின் மீதே அமர்ந்திருந்தான். “நான் கீழிறங்க உதவி செய்ய மாட்டீர்களா?” என்று அவன் கிசுகிசுப்பான குரலில் கேட்டான். அவர் அதற்குப் பதில் சொல்லவில்லை. இப்போது உறுதியான அந்தப் பாதம் காலியாக இருந்த வீட்டு முகப்பின் தரையை கடிகார வட்டத்தில் தட்டுவது மறுபடி கேட்டது. அந்தச் சிறிய உடலுக்கும் அது எழுப்பிய இந்தப் பலத்த ஓசைக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. தரை விரிப்பு அவருடைய தோளில் சாய்ந்து கிடந்தது அந்த இருளிலும்கூட அவனுக்குத் தெரிந்தது. சில நொடிகளில் சுவரின் மீது சாய்வாக வைக்கப்பட்ட அந்த விரிப்பு நம்ப முடியாத அளவுக்கு இடி போன்ற ஓசையுடன் தரை மீது விழுந்தது. அதற்குப் பிறகு பூதாகரமாகத் தெரிந்த அந்தப் பாதம் அவசரமின்றி அங்கிருந்து நகர்ந்தது. உடனே வீட்டில் விளக்கு எரிந்தது. பதற்றத்துடன் அமர்ந்திருந்த சிறுவன் சீராகவும் சத்தமின்றியும் மூச்சு விட்டான். சற்றே துரிதமாக நகர்ந்தாலும் அந்தப் பாதம் வழக்கமான தன் லயம் மாறாமல் படிகளில் இறங்கி வந்தது. இப்போது அவருடைய உருவம் அவன் கண்களுக்குத் தெரிந்தது.

“இப்போது நீங்கள் வண்டியோட்ட விரும்புகிறீர்களா?” என்று கிசுகிசுத்தான். அவர், “நாம் இருவருமே ஒன்றாக வண்டியோட்டலாம்” என்றார். வீட்டில் எரிந்த விளக்கு சிறிது இடம் மாறியது. திடீரெனக் கண்ணைக் கூசும்படி தோன்றிய ஒளி பிறகு சிறிது சிறிதாகக் கீழ் நோக்கி நகரத் துவங்கியது. ‘அவன் கீழே இறங்கி வருகிறான்’ என்று சிறுவன் நினைத்தான். அவன் இதற்கு முன்பு குதிரை வண்டி மட்டுமின்றி கோவேறு கழுதையையும் ஓட்டியிருக்கிறான். அவனுடைய அப்பா அவனுக்குப் பின்னால் உட்கார்ந்து கொள்ள அவன் சேணத்தை இரட்டிப்பாக்கி கோவேறு கழுதையினுடைய கழுத்தின் குறுக்கே விளாசினான். ஆனால் அது ஓட ஆரம்பிப்பதற்கு முன் வலிமையான முடிச்சுகளுடைய ஒரு கை அவனுடைய முதுகில் இறங்கி அவனை இறங்கி நடக்க வைத்தது. சூரியனின் முதல் கதிர்கள் பூமியில் விழுந்த போது அவர்கள் கலப்பையில் கோவேறு கழுதைகளைப் பூட்டியபடி நிலத்தில் இருந்தார்கள். இந்த முறை அவர்களுடைய காதில் எந்தச் சத்தமும்  கேட்காமல் பழுப்பு நிறப் பெண் குதிரை ஒன்று அங்கு வந்துசேர்ந்தது. அதை ஓட்டிக்கொண்டு வந்தவனிடம் கழுத்துப்பட்டையோ தொப்பியோ இல்லை. அந்த வீட்டில் பார்த்த பெண்ணின் நடுங்கும் குரலில் அவன் பேசினான். குதிரையின் கழுத்துப் பகுதியில் இரும்பு வாரைப் பொருத்திக்கொண்டிருந்த அவனுடைய அப்பா மறுபடி அதை நோக்கிக் குனிவதற்கு முன் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார்.

குதிரை மீது இருந்தவன், “அந்தத் தரைவிரிப்பைப் பாழ்படுத்தி விட்டாய் என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். இங்கு பெண்கள் யாரும் இல்லையா?” என்று கேட்டு முடித்த போதுதான் அவனுடைய உடலின் நடுக்கம் நின்றது. சிறுவன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறுவனின் அண்ணன் குதிரை லாயத்தின் கதவின் மீது சாய்ந்து எதையோ மென்றபடி இலக்கில்லாமல் வெற்றிடத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். “அதன் விலை நூறு டாலர்கள். ஆனால் உன்னிடம் எப்போதுமே நூறு டாலர்கள் இருந்ததில்லை. இனியும் இருக்காது. ஆகவே நீ விளைவிக்கப் போகிற தானியத்தில் இருந்து நூற்று அறுபது கேலன்கள் நட்ட ஈடாகத் தரவேண்டும். உன்னுடைய ஒப்பந்தத்தில் இந்த வரியைச் சேர்த்துவிடுகிறேன். நீ படைப் பிரிவினரின் அங்காடிக்கு வரும்போது அதில் கையொப்பமிடு. இதனால் திரு.ஸ்பெயின் மனது சாந்தம் அடைந்துவிடாது. ஆனால் அவருடைய வீட்டுக்குள் நுழையும் முன் கால்களைத் தூய்மை செய்துகொள்ள வேண்டும் என்று உனக்கு அது கற்றுத்தரும்” என்று சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து போய்விட்டான். சிறுவன் எதுவும் பேசாமல், நிமிர்ந்துகூடப் பார்க்காமல் இப்போது குதிரையின் கழுத்தில் பூட்டப்பட்டிருந்த வாரின் தலைப்பகுதியைச் சரி செய்துகொண்டிருந்த அவனுடைய அப்பாவைப் பார்த்தான்.

“அப்பா” என்று கூப்பிட்டதும் அவர் அவனைப் பார்த்தார். எளிதில் புரிந்துகொள்ள முடியாத அந்த முகத்தின் புதர் போன்ற புருவத்துக்குக் கீழிருந்த சாம்பல் நிறக்கண்கள் வெறுப்புடன் ஒளிர்ந்தன. திடீரென சிறுவன் அவரை நோக்கி வேகமாகச் சென்றான்.

“உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்தீர்கள். அவன் அதில் திருப்தி அடையவில்லை என்றால் நாம் வேறு என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லாமலேயே அவன் ஏன் இங்கிருந்து போய்விட்டான்? அவனுக்கு நூற்று அறுபது கேலன்கள் எல்லாம் தர வேண்டாம். அவனுக்கு எதுவுமே தரக்கூடாது. நாம் அதை ஒளித்து வைப்போம். அதை நான் பத்திரமாக…..” என்று அவன் சொல்லிக்கொண்டே போன போது இடைமறித்த அவனுடைய அப்பா, “நான் சொன்னது போல வெட்டும் கருவியைக் கொண்டுபோய் மற்ற இரும்புப் பொருட்களுடன் சேர்த்து திரும்ப வைத்துவிட்டாயா?” என்று கேட்டார். “இல்லை” என்று அவன் பதில் கூறினான். “அப்படியானால் போய் அதை முதலில் செய்” என்றார்.

புதன்கிழமை. வாரம் முழுதும் சீரான வேகத்தில் வேலை செய்தான். அவனால் முடிந்த வேலைகளையும் முடியாதவற்றைப் பெருமுயற்சி எடுத்தும், யாருடைய உத்தரவும் இன்றி செய்துகொண்டிருந்தான். இதை அவன் தன்னுடைய அம்மாவிடம் இருந்து அவன் கற்றுக்கொண்டிருந்தான். இதில் அவனுக்கும் அம்மாவுக்கும் ஒரு வித்தியாசம் மட்டும் உண்டு. அவனுடைய அம்மாவும் அத்தையும் செய்து கொடுத்த சிறிய அளவு கோடரியால் மரத்தை வெட்டுவது, கிறிஸ்துமஸ் பரிசு வாங்குவதற்காகப் பணம் சேர்த்து வைப்பது எனத் தனக்குப் பிடித்த சிலவற்றையாவது அவனால் செய்ய முடிந்தது. அம்மா, அத்தை, சில சமயங்களில் தன் இரு சகோதரிகள் என இரு பெண்களுடன் சேர்ந்து வேலை செய்தான். நில உரிமையாளருடன் அவனுடைய தந்தை போட்டிருந்த ஒப்பந்தத்தின்படி தரப்பட்டிருந்த மிகச் சிறிய ‌பன்றிக் குட்டிகளுக்கும் பசுக்களுக்கும் தொழுவம் அமைத்தான். ஒரு நாள் மதியம் அவனுடைய தந்தை கோவேறு கழுதையின் மீது பயணித்து எங்கோ சென்றிருந்தபோது அவன் வயலுக்குப் போனான். அவனுடைய சகோதரன் ஏரின் நடுப்பகுதியைப் பிடித்துக்கொண்டான். சிறுவன் கடிவாளத்தின் வாரைப் பிடித்துக்கொண்டு சிரமப்பட்டு நகர்ந்த கோவேறு கழுதையின் பக்கவாட்டில் இருந்த செழிப்பான கறுத்த மண்ணின் ஈரம் தன் வெற்று கணுக்கால் மீது பட்டபடி நடந்துசென்றான்.

‘இத்தோடு முடிந்தது. அந்தத் தரைவிரிப்புக்குப் போய் நூற்றி அறுபது கேலன்கள் தருவது என்பது அவருடைய செயல்களை நிரந்தரமாகத் தடுக்காமல் அவர் எப்போதும் இருந்த அதே நிலையில் தொடர்வதற்கே உதவும்’ என்று யோசித்தபடி கனவுகண்டு கொண்டிருந்தவனிடம் கழுதைகளைக் கவனமாகப் பிடிக்குமாறு அவனுடைய அண்ணன் சத்தமிட்டான். ‘ஒருவேளை அவன் அந்த நூற்றி அறுபது கேலன்கள் வசூலிக்காமல்கூட போகலாம். ஒருவேளை தானியங்கள், தரை விரிப்பு எல்லாம் நெருப்பில் ஒரேயடியாக மறைந்தழிந்து போகலாம். அச்சம், துயரம் ஆகிய இரு உணர்வுகளும் இரு குதிரை அணிகளுக்கிடையே சிக்கிய உயிரைப் போல இழுபடலாம்’ என நினைத்தான்.

அதற்குப் பிறகு சனிக்கிழமை வந்தது. கோவேறு கழுதைக்கு சேணம் பொருத்திக்கொண்டிருந்த சிறுவன் கறுப்பு அங்கியும் தொப்பியும் அணிந்தபடி அங்கு வந்த தன் தந்தையைத் தலை நிமிர்ந்து பார்த்தான். அவர், “அது வேண்டாம். பாரவண்டியை எடுத்துக்கொள்வோம்” என்றார். பாரவண்டியின் இருக்கையில் தந்தையும் அண்ணனும் அமர சிறுவன் மெத்தை மீது அமர்ந்தபடி அதில் பயணித்தார்கள். இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு வண்டி ஒரு வளைவில் திரும்பியது. கலைக்கூடத்தின் கீழிருந்த நிறம் மங்கிய, சுண்ணம் பூசாத கடைகளின் சுவர்களின் மீதிருந்த புகையிலை, மருந்து விளம்பரங்கள் கொண்ட கந்தலான சுவரொட்டிகள், கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த பாரவண்டிகள், சேணம் பூட்டப்பட்ட விலங்குகள் ஆகியவை கண்ணுக்குப் புலப்பட்டன. தன்னுடைய தந்தையையும் அண்ணனையும் பின்தொடர்ந்து அவனும் அங்கிருந்த படிகளில் ஏறினான். அமைதியாக அவர்களைக் கவனிக்கிற வரிசையான முகங்களை அவர்கள் மறுபடி கடந்தார்கள். மூக்குக் கண்ணாடி அணிந்து மேஜையருகே அமர்ந்திருந்த கழுத்துப் பட்டை அணிந்த அந்த நபரைப் பார்த்ததுமே அவர்தான் அமைதியை நிலைநிறுத்தும் நீதிபதி என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. ஒருதலை பட்சமாக நடந்துகொள்கிற அவரைச் சீற்றத்துடனும் ஆவேசத்துடனும் பார்த்தான். அங்கிருந்த இன்னொரு நபரைத் தன் வாழ்க்கையில் இதற்கு முன்பு அவன் இரு முறை பாய்ந்தோடும் குதிரையின் மீது பார்த்திருக்கிறான்.

இப்போது அந்த நபருடைய முகத்தில் கோபத்திற்கு பதில் நம்ப முடியாத ஒரு திகைப்பு தெரிந்தது. தன் நிலத்தில் வாடகைக்குக் குடியிருக்கும் ஒருவரே தன் மீது வழக்கு கொடுக்கக்கூடிய நினைத்துப் பார்க்க முடியாத சூழலில் அவர் இருந்தது அந்தச் சிறுவனுக்குத் தெரியாது. அவன் தன் தந்தைக்கு எதிரே வந்துநின்று நீதிபதியைப் பார்த்து, “அவர் அதைச் செய்யவில்லை. அவர் அதை எரிக்கவில்லை…” என்றான். “வண்டிக்கு போ” என்றார் அவனுடைய தந்தை. “எரிந்துவிட்டதா? தரை விரிப்பும் எரிந்துவிட்டதா?” என்று கேட்டார் நீதிபதி. “இங்கு யாராவது அப்படிச் சொன்னார்களா?” என்றபடி மறுபடி சிறுவனைப் பார்த்து, “வண்டிக்குப் போ” என்றார் அவனுடைய தந்தை. ஆனால் சிறுவன் கூட்டமாக இருந்த அந்த அறையின் மூலைக்குச் சென்று அங்கேயே நின்றான். அங்கு கூடியிருந்த மக்களின் இடையே நின்றுகொண்டான். அங்கு நிகழ்ந்த உரையாடலை அவனால் கேட்க முடிந்தது.

“அந்தத் தரைவிரிப்புக்கு நேர்ந்த அலங்கோலத்துக்கு நூற்று அறுபது கேலன்கள் தானியம் நட்ட ஈடு போதுமானது என நீ நினைக்கிறாயா?”

“அவன் தரைவிரிப்பை என்னிடம் கொண்டுவந்து அதில் பதிந்திருந்த காலடிச் சுவடுகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று கேட்டான். நான் அதைத் தூய்மையாக்கி அவனிடம் திரும்பத் தந்தேன்.”

“ஆனால் நீ தரைவிரிப்பைத்  திருப்பி அளித்தபோது உன்னால் கறையாக்கப்படுவதற்கு முன்பிருந்த  பழைய நிலையில் அது இல்லை”. இதற்கு அவனுடைய தந்தை பதில் கூறவில்லை. மெல்லிய மூச்சுக் காற்றைத் தவிர வேறு எந்தச் சத்தமும் அங்கு கேட்கவில்லை. கூடியிருந்த அனைவரும் அங்கு நடப்பவற்றை உற்று கவனித்துக்கொண்டிருந்தனர். “நீ அதற்குப் பதில் கூற‌ மறுக்கிறாயா திரு.ஸ்னோபஸ்?” என்று நீதிபதி கேட்டார். இப்போதும் அவனுடைய தந்தை பதில் சொல்லவில்லை.

“திரு.ஸ்னோபஸ், நான் உனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குகிறேன். மேஜர் ஸ்பெயின் அவர்களின் தரைவிரிப்புக்கு நேர்ந்த பாதகத்திற்கு நீயே காரணம். ஆகவே அதற்கு நீதான் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன். ஆனால் உன்னுடைய நிலையில் இருக்கும் ஒருவனுக்கு நூற்று அறுபது கேலன்கள் தானியம் தண்டனைக் கட்டணம் சிறிது அதிகமாகத் தெரிகிறது. தரை விரிப்பின் விலை நூறு டாலர்கள் என்று மேஜர் ஸ்பெயின் கூறுகிறார். அக்டோபர் மாதத்தில் விளையும் தானியம் ஐம்பது செண்ட்டுகள் பெறும். தான் பணம் செலவழித்து வாங்கிய பொருளுக்கு தொண்ணூற்றி ஐந்து டாலர்கள் அளவுக்கு நட்டத்தை மேஜர் ஸ்பெயின் ஏற்றுக்கொள்ள முடியும் எனில், நீ இன்னும் சம்பாதிக்காத ஐந்து டாலர் அளவுக்கு நீ நட்டப்படலாம் என்று நான் எண்ணுகிறேன். மேஜர் ஸ்பெயினுடன் நீ இட்டுள்ள ஒப்பந்தத்தைவிட மேலதிகமாக எண்பது கேலன்கள் தானியத்தை நீ அவருக்கு அளிக்க வேண்டும். அறுவடை முடிந்த பிறகு இது தரப்பட வேண்டும் என்பதே தீர்ப்பு. வழக்குமன்றம் கலைகிறது”.

பொழுது புலர்ந்து சிறிது நேரமே ஆகியிருந்தது. மற்ற விவசாயிகள் அனைவரும் கிளம்பிவிட்டிருந்தனர். ‘நேரமாகி விட்டது. ஆகவே தாம் முதலில் வீட்டுக்குச் சென்று பிறகு அங்கிருந்து வயலுக்குப் போவோம்’ என்றே அவன் நினைத்தான். ஆனால் அவனுடைய தந்தை பாரவண்டியின் பின்பக்கமாக நடந்து தன்னைப் பின்தொடருமாறு சிறுவனுடைய அண்ணனைப் பார்த்துக் கைகளால் சைகை காட்டிவிட்டு சாலையைக் கடந்து எதிர்ப்புறம் இருந்த கொல்லனுடைய கடையை நோக்கிப் போனார். அவரை ஒட்டிக்கொண்டு நடந்து பிறகு அவரை தாண்டிச் சென்றவன், “அவனுக்கு எண்பது கேலன்கள்கூடக் கிடைக்காது. அவ்வளவு ஏன் அவனுக்கு ஒரு கேலன்கூடக் கிடைக்காது. நாம்…” என்று நைந்து போயிருந்த தொப்பியணிந்த, கடுமையும் அமைதியும் ஒருங்கே கொண்ட அவருடைய முகத்தருகே கிசுகிசுத்தான். அவர் ஒரு நொடி அவனை ஆழமாகப் பார்த்தார். அவருடைய முகம் துளியும் சலனமின்றி இருந்தது. கருணையற்ற கண்களின் மீதிருந்த புருவங்கள் சுருங்கின.

கிட்டத்தட்ட இனிமையான, கிட்டத்தட்ட இனிமையான குரலில், “நீ அப்படியா நினைக்கிறாய்? எப்படியானாலும் நாம் அக்டோபர் வரை காத்திருப்போம்” என்றார். பாரவண்டியினுடைய சக்கரங்களின் ஒன்றிரண்டு கம்பிகளைச் சீராக்கவும் டயர்களை இறுக்கமாக்கவும் அதிக நேரமாகவில்லை. கிளைகளுக்குப் பின்னாலிருந்த கடையினருகே வண்டியை நிறுத்தினான். கோவேறு கழுதைகள் அடிக்கடி தண்ணீருக்குள் தம் மூக்கை அழுத்திக்கொண்டிருந்தன. அங்கிருந்த புகை படிந்த பணிமனையைச் சரிவிலிருந்து பார்த்துக்கொண்டு, அதனுள்ளிலிருந்து எழுந்த சுத்தியல் அடிக்கும் மெல்லிய ஓசையைக் கேட்டபடி சேணத்தைக் கையில் வைத்துக்கொண்டு சிறுவன் வண்டியின் இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனுடைய தந்தை கொல்லனிடம் பேசிக்கொண்டும் கொல்லன் பேசுவதைக் கவனித்துக்கொண்டும் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஊசி இலை மரத்தண்டின் மீது அமர்ந்திருந்தார். ஈரம் சொட்டுகிற பாரவண்டியைக் கிளைகளுக்கு அப்பாலிருந்து சிறுவன் வெளியே கொண்டு வரும்வரையிலும் அவர் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தார்.

“அவற்றை நிழலில் கட்டு” என்றார். அவன் அவ்வாறே செய்துவிட்டு வந்தான். கணுக்காலில் முட்டி போட்டு அமர்ந்தபடி அவனுடைய தந்தையும், கொல்லனும் வேறொரு நபரும் பயிர்களையும் விலங்குகளையும் குறித்து அறைக்குள் பேசிக்கொண்டு இருந்தனர். அம்மோனியாவும், குளம்புகளின் முனைப் பகுதிகளும், துருவேறிய இரும்புத் துகள்களும் கொண்ட புழுதியில் சிறுவனும் அதே போல் முட்டி போட்டு அமர்ந்தான். அவனுடைய அண்ணன் பிறப்பதற்கு முன் தான் ஒரு தொழில்முறை குதிரை வியாபாரியாக  இருந்த நீண்ட கதையைத் தன்னுடைய தந்தை நிதானமாகக் கூறுவது அவனுக்குக் கேட்டது. அதற்குப் பிறகு அவர் வெளியே வந்தார். சென்ற வருடத்தில் அங்கு சர்க்கஸ் வந்தபோது ஒட்டப்பட்டு இப்போது கந்தலாகிக் கிடந்த சுவரொட்டிகளையும், அங்கிருந்த அடர் சிகப்பு நிறக் குதிரைகளையும், பகட்டான வலை போன்ற ஆடைகள், கோமாளிகளின் இறுக்கமான உடைகள், இவற்றை வாயைப் பிளந்தபடி பார்ப்பதற்காக அங்கு கூடிய கூட்டம், இவையனைத்தையும் கடையின் எதிர்திசையில் இருந்து அமைதியாகக் கூர்ந்து பார்த்தவர், “சாப்பிடும் நேரமாகிவிட்டது” என்றார்.

ஆனால் அவர்கள் வீட்டுக்குப் போகவில்லை. முன்பக்கச் சுவருக்கு எதிரே முட்டி போட்டபடி தன்னுடைய அண்ணனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன் தன் தந்தை கடையில் இருந்து வெளியே வருவதைப் பார்த்தான். ஒரு காகிதப் பொட்டலத்தில் இருந்து சிறிது பாலாடைக் கட்டியை அவர் வெளியே எடுப்பதையும், அதைத் தன்னிடமிருந்த சிறிய கத்தியைக்கொண்டு கவனமாக மூன்று பங்குகளாகப் பிரிப்பதையும், அதே பொட்டலத்தில் இருந்து சில பட்டாசுகள் வெளியே வந்ததையும் அவன் பார்த்தான். அவர்கள் படிகளின் மீதமர்ந்து எதுவும் பேசாமல் நிதானமாக சாப்பிட்டனர். பிறகு கடையில் இருந்த தகர வாளியில் இருந்து தேவதாரு, புங்க மரங்களின் வாசமடித்த வெதுவெதுப்பான நீரை அருந்தினர். அதற்குப் பிறகும் அவர்கள் வீட்டுக்குப் போகவில்லை. குதிரைகளின் மேய்ச்சல் நிலம் ஒன்றுக்குச் சென்றனர். அங்கிருந்த உயரமான கம்பித் தடுப்பின் மீது சாய்ந்தபடியும் அதன் அருகிலும் சில ஆட்கள் நின்றுகொண்டும் அமர்ந்தபடியும் இருந்தனர். ஒவ்வொரு குதிரையாக அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு சாலையின் நடுவே முன்னும் பின்னுமாக மிதமான வேகத்திலும் துள்ளலாகவும் நடக்க வைக்கப்பட்டன.  சில கொடுக்கல் வாங்கலும் நடைபெற்றன. சூரியன் மேற்கில் மறைய, அவர்கள் மூவரும் இதைக் கவனித்துக்கொண்டிருந்தனர். தவிர்க்கவே முடியாத ஒரு பொருள் போலத் தொடர்ந்து புகையிலையை மென்றபடி இருந்த அவனுடைய அண்ணனுடைய கண்களில் தூசு படிந்திருந்தது. அவன் சில விலங்குகளைப் பற்றி தனக்குத் தோன்றிய கருத்துக்களைத் இடையிடையே தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருந்தான்.

பொழுது சாய்ந்த பிறகே அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். இரவு உணவை விளக்கு வெளிச்சத்தில் உண்ட பிறகு வாசற்படி மீது அமர்ந்துகொண்டு இரவு முதிர்வதை அந்தச் சிறுவன் பார்த்தபடி இருந்தான். விப்புர்வில்ஸ் பறவைகளின் பாடலையும் தவளைகளின் சத்தத்தையும் கேட்டபடி இருந்தபோது இடையில் அவனுடைய அம்மாவின் குரல், “ஏப்னர். ஐயோ. கடவுளே!கடவுளே! ஏப்னர்” என்று ஒலித்தது. அவன் எழுந்தபோது தலை சுற்றியது. மேஜை மீதிருந்த குடுவைக்குள் எரிந்திருந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சம் கதவு வழியே தோன்றியது. தொப்பியும் அங்கியும் அணிந்தபடி அவனுடைய தந்தை ஒரு மோசமான வன்முறை நிறைந்த ஒரு சடங்குக்குத் தயாரானது போன்ற தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்தான். விளக்கில் இருந்த எண்ணெயை எடுத்து ஐந்து கேலன் மண்ணெண்ணெய் கொள்ளளவு கொண்ட குடுவைக்குள் மறுபடி ஊற்றினார். விளக்கைத் தன்னுடைய இன்னொரு கைக்கு அவர் மாற்றிப் பிடிக்கும் வரைகூட அவனுடைய அம்மா அவருடைய கைகளைப் பிடித்து இழுத்தபடி இருந்தாள். பிறகு தன்னுடைய முதுகை அழுத்தியபடி சுவரின் ‌மீது சாய்த்தாள். அவள் அவ்வாறு சரிந்ததில் கோபமோ வெறுப்போ தெரியவில்லை. அழுத்தம் மட்டுமே இருந்தது. விழுந்துவிடாமல் இருப்பதற்காக அவளுடைய கைகள் சுவரை நோக்கிச் சரிய, அவளுடைய வாய் திறந்தபடி கிடந்தது. அவள் குரலில் ஒலித்த அதே அவநம்பிக்கை அவளுடைய முகத்திலும் இருந்தது. அவனுடைய தந்தை அவன் கதவருகே நிற்பதைப் பார்த்தார்.

“தானியக் களஞ்சியத்துக்குப் போ. நாம் பாரவண்டிக்கு எண்ணெய் ஊற்றும் குடுவை அங்கிருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு வா” என்றார். சிறுவன் அசையவேயில்லை. பேசுவதற்கு அவனுக்குச் சில நொடிகள் பிடித்தன.

“என்ன? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்…?” 

“அந்த எண்ணெயைக் கொண்டு வா. போ” அவன் வீட்டைவிட்டு வெளியேறி லாயத்தை நோக்கி ஓடினான். தனக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க அனுமதியற்ற, தவிர்க்கவே முடியாது வழிவழியாகக் கையளிக்கப்பட்ட, அவனுடைய உடலில் ஓடுகிற இந்த இரத்தம் அவர்களுடைய அத்தனை தலைமுறையினரின் உடலிலும் ஓடிக்கொண்டிருக்கும் ஒன்று. (மற்றவர்களை அழித்து, தான் செழிப்பாக வாழும் ஆசையும், சீற்றமும், அடிமைப்படுத்தும் குணமும், காமமும் எங்கிருந்து அவர்களை வந்தடைந்தன?) ‘இப்படியே ஓடிப் போய்விடலாம். இங்கு திரும்பி வரவே வேண்டாம். அவருடைய முகத்தைப் பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் அது முடியாது. என்னால் அவ்வாறு செய்ய முடியாது’. இப்போது அவனுடைய கைகளில் துருப்பிடித்த சிறிய குடுவை இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்குள் ஓடியபோது அதிலிருந்த எண்ணெய் வழியெல்லாம் கொப்பளித்துத் தெறித்தது. அவனுடைய அம்மா அழும் சத்தம் அறையிலிருந்து கேட்டது. தன் தந்தையிடம் அந்தக் குடுவையைக் கொடுத்தான்.

“நீங்கள் ஒரு கறுப்பின ஆளை அனுப்பப் போவதில்லையா? இதற்கு முன் நீங்கள் ஒருவனை அனுப்பினீர்களே!” என்று சிறுவன் கூச்சலிட்டான்.

இந்த முறை அவனுடைய தந்தை அவனை அடிக்கவில்லை. அடியைவிடப் பெருவேகத்தில் அவனை நோக்கி வந்த அவருடைய கை, அவனுடைய சட்டையின் பின்புறத்தைக் கொத்தாகப் பிடித்தது. அதே கை மேஜையின் மீது மிகுந்த சலிப்புடன் அதே சமயத்தில் கவனமாகக் குடுவையை வைத்தது. துளி சத்தம் இல்லாமல், அவன் கண் இமைப்பதற்கு முன் அந்தக் கை குடுவையை விட்டு விலகியது. அவருடைய கடுமையான முகம் அவனை நோக்கிக் கோபத்துடன் குனிந்தது. பசுக்கள் அசைபோடுவது போல் நிதானமாக வாயை மென்றுகொண்டு மேஜை மீது சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்த அவனுடைய அண்ணனைப் பார்த்து உணர்ச்சியற்ற குரலில், “இந்தக் குடுவையில் உள்ளதை அங்கிருக்கும் பெரிய குடுவையில் கவிழ்த்துவிட்டுப் போ. நானும் அங்கு வந்து சேர்ந்துவிடுகிறேன்” என்றார்.

“இவனைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டிப் போடுவது நல்லது” என்றான் அவன். “நான் சொன்னதைச் செய்” என்றார் அவனுடைய தந்தை. தன் தோள் பட்டையின் மீது எலும்பு துருத்திக்கொண்டிருந்த ஒரு கை முரட்டுத்தனமாக விழுவதையும், தன் சட்டையைக் கொத்தாகப் பிடித்திழுத்து, தன் பாதங்கள் தரையைத் தேயத் தன்னை இழுத்துச் சென்றுகொண்டிருப்பதையும் இப்போது சிறுவன் உணர்ந்தான். ஒரு அறையைக் கடந்து இன்னொரு அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டான். அங்கு இரண்டு நாற்காலிகளில் அமர்ந்தபடி தம் பெருத்த குளிரான தொடைகளைக் கணப்பு அடுப்புக்கு எதிரே நீட்டிக்கொண்டிருந்த தன்னுடைய இரு சகோதரிகளையும், அருகருகே கட்டிலில் அமர்ந்திருந்த அத்தையையும் அம்மாவையும் அவன் பார்த்தான். “இவனைப் பிடியுங்கள்” என்று அவன் தந்தை சொன்னதைக் கேட்டு அவனுடைய அத்தை அதிர்ச்சியடைந்தாள்.

“உங்களிடம் நானிதைச் சொல்லவில்லை. லெனி, இவனைப் பிடித்து வை. நீ நிச்சயமாக இதைச் செய்வாய் என் நம்புகிறேன்” என்றார்.

அவன் அம்மா அவனுடைய மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டார். “இன்னும் இறுக்கமாகப் பிடி. அவனைக் கொஞ்சம் விட்டால்கூட அவன் என்ன செய்வான் என்று உனக்கு தெரியாதா? அப்படியே ஓடிப்போய் விடுவான்” என்றவர் தன்னுடைய தலையைச் சாலையைப் பார்த்தபடி அசைத்தார்.

“அவனைக் கட்டிப் போட்டுவிடுவதே நல்லது” என்றார். “நான் அவனைப் பிடித்து வைத்துக்கொள்கிறேன்” என்று கிசுகிசுப்பான குரலில் அவனுடைய அம்மா பதில் சொன்னாள்.

“இனி, அது உன்னுடைய பொறுப்பு” என்றபடி அவனுடைய அப்பா தன்னுடைய உறுதியான பலமான பாதத்தைத் தரையில் அழுத்தமாக வைத்தபடி அங்கிருந்து போய்விட்டார். உடனே அவன் அங்கிருந்து தப்பிக்கப் போராடத் துவங்கினான். அவனுடைய அம்மா அவனுடைய இரு கைகளையும் இறுக்கமாக பிடித்தாலும் இறுதியில் தான் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அதுவரை காத்திருக்க அவனுக்கு நேரமில்லை. 

“என்னைப் போக விடுங்கள். நான் உங்களைத் தள்ளிவிட்டுப் போக விரும்பவில்லை” என்றான். அவனுடைய அத்தை, “அவனைப் போக விடு. அவன் போகாவிட்டால் கடவுள் மீது ஆணையாகச் சொல்கிறேன், நானே அங்கு சென்றுவிடுவேன்” என்றாள். “அவனை அவ்வாறு விட முடியாது என்று உங்களுக்குத் தெரியாதா? சார்ட்டி சார்ட்டி! யாராவது உதவி செய்யுங்கள். லிசி!” என்று அவனுடைய அம்மா கூச்சலிட்டாள். அவன் தன்னுடைய கைகளை விடுவித்துக்கொண்டான். அவனுடைய அத்தை அவனை இறுக்கிப் பிடிக்க முயன்றாள். ஆனால் அதற்குள் அவன் அங்கிருந்து தப்பிவிட்டான். சுழன்று ஓடத் துவங்கினான். அவனுடைய அம்மா அவனைப் பிடிக்கும் முயற்சியில் இடறிக் கீழே விழுந்தாள். அவனுடைய சகோதரிகளைப் பார்த்து “அவனைப் பிடியுங்கள். அவனைப் பிடியுங்கள்” என்று கூச்சலிட்டாள். இரட்டைப் பிறவிகளான அவனுடைய இரு சகோதரிகளும் குடும்பத்தின் மற்ற எந்த இரு உறுப்பினர்களை விடவும் எடை, பருமன் ஆகிய அனைத்திலும் பெரியவர்களாக இப்போதெல்லாம் தோற்றமளிக்கிறார்கள். நம்ப இயலாத அளவு பரந்துபட்ட பெண் தன்மைகளுடைய முகம் கொண்ட அவனுடைய ஒரு அக்கா நாற்காலியில் அமர்ந்தபடி தன் தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்ப்பதும், அதில்  வியப்புணர்ச்சி இல்லாமல் மூடத்தனமான ஆர்வம் மட்டுமே தோன்றியதையும் காற்றின் வேகத்தில் ஓடியதற்கு இடையே அவன் கவனித்தான். இப்போது அவன் அறையைவிட்டு, அந்த வீட்டைவிட்டு மெல்லிய புழுதி படிந்த நட்சத்திர வெளிச்சம் கொண்ட சாலையில் ஓடிக்கொண்டிருந்தான்.

அங்கிருந்த ஹனிசக்குள் மரங்களில் இருந்து ஏராளமான மஞ்சள் நிற மலர்கள், ஓடிக்கொண்டிருந்த அவன் பாதங்களின் கீழ் வெளிறிய நிறங்கொண்ட ரிப்பன்களைப் போல மிக மெதுவாக உதிர்ந்தபடி இருந்தன. அவனுடைய நெஞ்சும் நுரையீரலும் தடதடக்க வீட்டின் முன் வாசலுக்குச் செல்லும் பாதை வழியே திரும்பி விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்த அந்த வீட்டின் முன்பக்கக் கதவை இறுதியில் அடைந்துவிட்டான். ஆனால் அவன் உடனே கதவைத் தட்டவில்லை. மூச்சிறைத்ததில் சில நொடிகளுக்கு அவனுக்குப் பேச்சே வரவில்லை. லினன் மேலங்கி அணிந்த அந்தக் கறுப்பின ஆள் அங்கு நின்றுகொண்டிருப்பதையும் அதிர்ச்சியடைந்த அவருடைய முகத்தையும் அப்போதுதான் சிறுவன் கவனித்தான். “ஸ்பெயின்!” என்றபடி மேற்கொண்டு பேச முடியாமல் மூச்சு வாங்கினான். “எங்கே….” என்ற போது வெண்ணிறக் கதவைத் திறந்தபடி ஒரு வெள்ளை இனத்தவன் கூடத்தை நோக்கி வருவது தெரிந்தது. “தானியக் களஞ்சியம்! தானியக் களஞ்சியம்” என்று மறுபடி கூவினான். “என்ன?” அந்த வெள்ளை இனத்தவன் புரியாமல் மறுபடி கேட்டான்.

“தானியக் களஞ்சியத்திற்கு என்ன?” 

“ஆமாம். தானியக் களஞ்சியம்” என்று சிறுவன் மறுபடி கூச்சலிட்டான்.

“அவனைப் பிடி” என்று அந்த வெள்ளை இனத்தவர் இப்போது கூச்சலிட்டார்.

அந்தக் கறுப்பின ஆள் சிறுவனுடைய சட்டையை எட்டிப் பிடித்தார். அடிக்கடி தோய்த்து உடுத்தியதில் நைந்து போயிருந்த சட்டையின் கைப் பகுதி முழுவதும் கறுப்பின ஆளின் பிடியோடு கழன்றுவிட, கைகளை விடுவித்துக்கொண்ட சிறுவன் கதவைக் கடந்து, மறுபடி முன் வாசலுக்குச் செல்லும் பாதையை அடைந்து ஓடவும், இந்த முறையும் அவனைப் பிடிக்க முடியவில்லை. அந்த வெள்ளை இனத்தவர் “என் குதிரையைக் கொண்டு வா” என்று கூச்சலிடுவது சிறுவனுக்குத் தன் முதுகுக்குப் பின்னால் கேட்டது. பூங்காவுக்குள் நுழைந்து அங்கிருந்த வேலியைத் தாண்டிக் குதித்து சாலையை அடையலாமா என்று சிறுவன் ஒரு கணம் யோசித்தான். ஆனால் அவனுக்குப் பூங்காவைக் குறித்தோ திராட்சைக் கொத்துகள் நிறைந்த வேலியின் உயரம் குறித்தோ சரியாகத் தெரியாததால் அவன் அதிலுள்ள ஆபத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. ஆகவே அவன் மூச்சிறைக்க முன்வாசலுக்குப் போகும் பாதை வழியாகவே மறுபடி ஆக்ரோஷத்துடன் ஓடி சாலையை அடைந்துவிட்டான். ஆனால் சாலை அவன் கண்ணுக்குப் புலப்படவில்லை. அவனுக்கு எதுவும் கேட்கவுமில்லை. பாய்ந்தோடி வரும் குதிரையின் ஓசையைக் கேட்டு அவன் விலகுவதற்குள் அது கிட்டதட்ட அவன் மீது மோதிவிட இருந்தது. செடி கொடிகள் அடைத்துக் கிடந்த தெருவோரச் சாக்கடையில் அவனை முட்டித் தள்ளி வீசியெறியும் தருணத்திற்காகக் காத்திருந்து பிறகு இடி போன்ற சத்தத்துடன் அந்தக் குதிரை அவனைக் கடந்தது.

அவன் ஓடுவதை நிறுத்தவேயில்லை. அந்தக் கோடைக்கால இரவின் நட்சத்திரங்களுக்கு எதிரே கோபமான நிழல் வடிவம் ஒன்று தோன்றியது. குதிரையின் வடிவும் அதை ஓட்டி வந்தவனுடைய உருவமும் தோன்றி மறையும் முன் சில நொடிகளுக்குள்ளாகவே சத்தமெழுப்பாது நட்சத்திரங்களை சிறிது மறைத்தபடி அவன் சாலையை நோக்கி ஓடியபடி இருந்தான். இதற்கு மேல் எந்தப் பயனும் இல்லை என்று தெரிந்தும், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டும், அவன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தான். சில நொடிகளுக்குப் பிறகு துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் ஓசை இரு முறை கேட்டது. தன்னையறியாமல் அவன் இப்போது நின்றான். தான் ஓடுவதை நிறுத்தியிருப்பதே அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. “அப்பா! அப்பா!” என்று அழுதான். ஓடுகிறோம் என்பதையே அறியாதவனாக மறுபடி ஓடத் துவங்கினான். எதன் மீதோ மோதி, தடுக்கி விழுந்து, பிறகு தடுமாறி எழுந்தான். இருளில் அவனுடைய கண்களுக்குப் புலப்படாத மரங்களின் இடையே புகுந்து மூச்சிறைக்க நிறுத்தாமல் ஓடிக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்த்தான். “அப்பா! அப்பா!” என்று தேம்பியழுதான்.

நள்ளிரவில் அவன் ஒரு மலை உச்சியின் மீது அமர்ந்திருந்தான். நள்ளிரவாகிவிட்டதோ தான் எங்கிருக்கிறான் என்பதோ அவனுக்குத் தெரியவில்லை. குளிரும் இருட்டும் நிறைந்த இடத்தில் நடுங்கிக்கொண்டு கிழிபட்டதில் எஞ்சியிருந்த தன்னுடைய நைந்துபோன சட்டையை அணைத்தபடி அவன் அங்கு அமர்ந்திருந்தான். அவனுடைய முதுகுக்குப் பின் வழக்கமாக தோன்றும் கோபமான பார்வை இப்போது இல்லை. மிகுதியான அச்ச உணர்வு ஏதுமின்றி துயரமும் அவநம்பிக்கையும் மட்டுமே இப்போது மிஞ்சியிருந்தது. குறைந்தபட்சம் நான்கு நாட்கள் அவன் வசித்த அந்த வீட்டை விட்டு விலகி, இருளாக இருந்த காட்டுப் பகுதியைப் பார்த்தபடி அவன் உட்கார்ந்திருந்தான். தன்னுடைய மூச்சு சீரானதும் அங்கு போய்விட‌ நினைத்திருந்தான்.

‘அப்பா! என் அப்பா! வீரம் மிக்கவர்’ என நினைத்தான். “அவர் போரிட்டார். ஆம், போரிட்டார். அவர் கர்ணல் சர்டோசின் குதிரைப்படையில் இருந்தார்’ என்று நினைத்தவன் திடீரென சத்தம் போட்டு அழுதான். அந்தச் சத்தம் ஒரு கிசுகிசுப்பைவிடப் பெரியதான ஓசையாக இல்லை. ஐரோப்பிய முறையில் சொல்வதென்றால் சீருடை அணியாமல், அது தரும் அதிகாரத்தை மட்டும் கைக்கொண்டு, மற்றவர்களுக்கோ, இராணுவத்துக்கோ, கொடிக்கோ விசுவாசமாக இல்லாமல், கொள்ளையடிக்கப்படுவது எதிரியின் செல்வமா சொந்த மக்களின் செல்வமா என்பதெல்லாம் ஒரு  பொருட்டே இல்லாமல் கொள்ளையடித்த மேல்ப்ரோக் போலவே அவனுடைய தந்தையும் போருக்குச் சென்றதை அவன் அறிந்திருக்கவில்லை.

குறிப்பிட்ட வடிவமுடைய விண்மீன் தொகுதியொன்று வானில் மெல்லத் தோன்றத் துவங்கியது. சிறிது நேரத்தில் விடிந்துவிடும். சூரியன் உதிக்கும். சிறிது நேரத்தில் அவனுக்குப் பசிக்க ஆரம்பிக்கும். ஆனால் அது அடுத்த நாள்தான். இப்போது அவன் குளிராக உணர்ந்தான். நடப்பது குளிரைக் குறைக்கும். இப்போது எளிதாக மூச்சுவிட முடிந்ததால் அவன் எழுந்து நடக்க முடிவுசெய்தான். தான் அசந்து தூங்கிவிட்டதையும் இரவு கிட்டத்தட்ட முடிந்து, பொழுது ஏறத்தாழ விடிந்திருப்பதையும் விப்புர்வில்ஸ் பறவைகள் பாடுவதை வைத்து உணர்ந்தான். அவன் படுத்திருந்த இடத்தின் கீழே தெரிந்த கறுத்த மரங்கள் அனைத்திலும் விப்புர்வில்ஸ் பறவைகள்  காணப்பட்டன. பொழுது நன்றாக விடியத் தொடங்கவும் ஏராளமான பறவைகள் தோன்றி, ஒன்றுக்கொன்று இடைவெளியின்றி நெருக்கமாக அமர்ந்தன. அவன் எழுந்துகொண்டான். சிறிது விறைப்பாக உணர்ந்தான். குளிரின் காரணமாக நடப்பது சிறிது சிரமமாக இருந்தாலும் விரைவில் சூரியன் எழுந்துவிடும். அவன் மலையிலிருந்து இறங்கினான். அதிவேகமாகவும் அவசரமாகவும் துடித்த வசந்தகால யாமத்தின் இதயத்தை வெள்ளி உருகி வழிவது போன்றவொரு குரலில் காட்டுக்குள் இருந்தபடி பறவைகள் தொடர்ந்து அழைத்துக்கொண்டிருந்தன. அவன் திரும்பிப் பார்க்காமல் அந்தக் காட்டை நோக்கி நடந்தான்.

*

ஆங்கில மூலம்: Barn Burning, William Faulkner, Vintage Publications, Reissue edition (31 October 1995)

1 comment

Senthil Prakash.M July 18, 2021 - 9:07 am

அருமையான கதை , உண்மையின் மீது வாஞ்சையாய் இருக்கும் ஒரு சிறுவனை அவன் பின் தொடர்ந்து அவனோடு நடந்து ஓடி மூச்சிறைக்க வைத்து , பின் காட்டுக்குள் கூட்டி செல்கிறது அற்புதமான மொழிபெயர்ப்பு! வாழ்த்துகள்

Comments are closed.