இன்று மாலை முதலில் கிளம்பும் அலுவலகப் பேருந்திலேயே ஏறிவிட்டிருந்தேன். நீண்ட நாள் கழித்து இன்றுதான் அலுவலகத்தில் மீண்டும் சேர்ந்தேன். ஆனால் இருப்பு கொள்ளவில்லை. உடனே கிளம்ப வேண்டும் என்றிருந்தது. அடிவயிற்றில் குமட்டிக்கொண்டு வந்தது போல என்னை இந்நிலத்தில் நிலைகொள்ள விடாமல் எதுவோ செய்தது. நகர்ந்துவிட வேண்டும். நகர்ந்து நகர்ந்து எங்கோ செல்ல வேண்டும். எங்கே செல்ல? நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும், அவ்வளவுதான். கிளம்பினேன். பேருந்தில் ஏறிக்கொண்டேன். இந்திரா நகரில்தான் என் வீடு. அங்குதான் எனக்கான நிறுத்தம். பேருந்து நீலாங்கரையை நெருங்கிக்கொண்டிருந்தது. எனக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது. என்னவோ தெரியவில்லை. நீலாங்கரை நிறுத்தத்திலேயே இறங்கிக்கொண்டேன். பிரதான சாலையைக் கடந்து கடற்கரைப் பக்கம் செல்லும் சாலையில் நுழைந்தேன். ஷேர் ஆட்டோ ஒன்றைப் பிடித்துச் சென்றேன். பின்பு நடுவிலேயே ஆட்டோக்காரரை நிறுத்தச் சொல்லிவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினேன்.
எத்தனை தெருக்களைத் தாண்டி வந்தேன் என்று தெரியவில்லை. நடந்தேனா, ஓடி வந்தேனா என்பதுகூடத் தெரியவில்லை. அப்படி ஒரு களைப்பும் வியர்வையும். கடற்கரையை நெருங்கிவிட்டேன் என்று தெரிந்தது. வலப்பக்கம் பார்த்தேன். பாதை சரிந்து கடலுக்கு இட்டுச்சென்றது. உப்புக்காற்றில் வியர்வையில் நனைந்த என் முழுக்கைச் சட்டை உடலில் பட்டுப்பட்டு என் உடலைக் குளிரச்செய்தது. மாலை சூரியன் எதிர் திசையில் இறங்கிக்கொண்டிருந்தது. மேகத்துப் பிளவில் ஊடுருவி வழிந்த வெயில் ஒளியில் தகதகத்த திரைச்சீலை போல் நெளிந்துகொண்டிருந்தது கடல். தூரத்தில் ஏதோ ஒரு மீன் பிடி படகு மட்டும் கண்ணுக்குப் பட்டது. அருகில் ஆளரவம் ஏதும் இல்லை.
ஊதா நிறப் பூக்கள் கொண்ட அடம்புக் கொடிகள் கடற்கரை மணலில் படர்ந்து கரையை மொத்தமாக மூடியிருந்தது. நான் அந்த அடம்புக்கொடிகள் படர்ந்திருந்த விளிம்புவரை அவற்றைக் கால்களால் எத்தி எத்தி விளக்கிவிட்டுக்கொண்டு நடந்தேன். விளிம்பில் கரை மணலை அரித்தரித்து கடலலைகள் பெரிய பள்ளத்தை உருவாக்கியிருந்தன. அந்தச் சரிவில் மணலோடு மணலாக அமர்ந்து வழுக்கிச் சென்றேன். என் காலடியை முதல் அலை தொட்டது. தொடர்ந்து நடந்தேன். அலையடங்கும் ஆழம்வரை சென்றுவிட வேண்டும் நான். இத்தனை நேரமாய் என் நடையில் இருந்த அவசரத்தனத்தையும் வேகத்தையும் என்னைத் தன்னோடு பற்றிக்கொண்டு இழுத்த அலைகளில்தான் அறிந்துகொண்டேன். எங்கே செல்கிறேன் நான்? தெரியவில்லை. ஆனால், நான் செல்ல வேண்டும். அலையடங்கிய ஆழத்திற்கு. ஆம், அலையடங்கிய ஆழத்திற்கு.
கழுத்தளவு வரையில் உள்ள ஆழத்திற்கு வந்துவிட்டிருந்த நான் கண்களை இறுக்க மூடிக்கொண்டேன். என் கழுத்துக்குக் கீழான என் உடலில் ஏற்பட்ட தள்ளாட்டத்தின் மூலமாக மட்டுமே அப்போது அந்தக் கடல் என்கிற இருப்பை அறிந்துகொண்டிருந்தேன்.
எதையோ செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆம், அதனைச் செய்ய வேண்டும். இந்தக் கடலைக் கண்டு ஒருமுறை காரி உமிழ வேண்டும். எனக்கு வேண்டியது என் உமிழ்வை அலைகள் கரை சேர்க்காத தூரம். அது இந்த தூரம்தான். வந்தது அதற்காகத்தான். ஆம் அது மட்டும்தான் இன்னும் மிச்சமிருப்பது.
கண்களைத் திறந்தேன். மனத்தினுள் சுழன்றடித்துக்கொண்டிருந்த புழுக்கம் நின்றபாடில்லை. அடிவயிற்றில் இருந்து என் மொத்தத்தையும் உமிழ்ந்து காரி கடலின் மேல் துப்பினேன். இனி செய்வதற்கொன்றும் இல்லை. திரும்பிவிட வேண்டியதுதான். திரும்பினேன். ஒவ்வொரு அலையாய் விரட்டிக்கொண்டு கரையோரமாக ஒதுங்கிச் சென்றேன். ஒரு ஒற்றைப் பேரலையைப் பற்றிக்கொண்டு கடலால் உமிழப்பட்டவனாய் கரையறைந்து விழுந்து கிடந்தேன்.
பிறகு என்னை நானே விடுவித்துக்கொண்டு எழுந்தேன். உப்பூறிய என் உடல் ஒழுக அலை அரித்து வைத்திருந்த அந்த மணல் பள்ளத்தில் சாய்ந்து சிறிது நாழிகை அமர்ந்துகொண்டேன்.
இன்றோடு என் மகன் இறந்து பதினான்கு நாட்கள் ஆகின்றன. அவன் அந்திமக் கிரியைகளை முடித்துவிட்டு இன்றுதான் மீண்டும் அலுவலகம் சென்றேன். கடந்த சில மாதகாலமாகப் படுத்த படுக்கையாய்க் கிடந்து மிகவும் கஷ்டப்பட்டு போய்விட்டான். அவனுக்கு வரும் டிசம்பரில் ஏழு வயது ஆகப்போகிறது. அவனுக்குப் பிறந்த போதே இரைப்பை நோய் இருந்தது. அவனால் எந்த உணவையும் உட்கொள்ள முடியாது. உடனே எதிர்களிக்கும். வாந்தி எடுத்துவிடுவான். இரைப்பையில் பித்தம் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்சினை. பிறந்த போதே அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் எங்களிடம் இது பற்றிச் சொல்லியிருந்தார்கள்.
என் மனைவி பாலூட்டும் போது அளவுக்கு அதிகமாகவே கக்கினான். அப்போதுதான் எங்களுக்கு இந்த நோய்க்குறி குறித்து தெரியவந்தது. மருத்துவரும் இரண்டு வயதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் இரண்டு வயது ஆகி அவன் நடை பழகிய பிறகும் அந்தப் பிரச்சினை இருந்து வந்தது. மருத்துவர் இது கன்ஜெனிடல் சிண்ட்ரோம் என்று சொல்லிவிட்டார். தாங்கும் வரை தாங்கலாம் என்றார். உணவு ஊட்டப்பட்டு அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே அவன் அனைத்தையும் வாந்தி எடுத்துவிடுவான். நாங்கள் கொடுத்த அனைத்துமே தரையில் கிடக்கும்.
கடந்த ஏழு வருடங்களாகவே நானும் என் மனைவியும் இப்படித்தான் எங்கள் வாழ்வைக் கழித்துவருகிறோம்.
அவளாவது பரவாயில்லாமல், இருப்பதற்குப் பழகிக்கொண்டுவிட்டாள். ஆனால் என்னால் இயலவில்லை. அடுத்த கணம் என்ன நடக்குமோ என்றே கழிக்க வேண்டிய நிலை. அவன் கைக்குழந்தையாக இருக்கும் போதே அவனுக்குக் குழாய் வழி உணவுதான். என் மனைவியும் நானும் தாய்ப்பாலையேகூட அவனுக்கு அப்படித்தான் அளித்தோம். குழாய் வழியில் அவனுக்கு ஊட்டுவது வாய்வழியாக அவன் உட்கொள்வதைவிட பயன் தரும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அது பயனும் அளித்தது. எப்போதாவது அவன் தேறி வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை எனக்குள் ஆழமாகவும் இருந்தது.
அவனை நான்காவது வயதில் பள்ளியில் சேர்த்த பின்பு ஒவ்வொரு மதிய உணவு இடைவேளையிலும் பள்ளியில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்துவிடும். சில நாட்களில் நாங்களே அவனைப் பாதி நாளில் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவோம். ஒரு கட்டத்தில் அவனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதே நின்றுவிட்டது. நாங்களே முடிந்த வரை அவனுக்குச் சொல்லிக்கொடுத்தோம். அவனைப் பார்த்துக்கொள்ள ஒரு வேலைக்கார அம்மாவைப் போட்டோம். இன்று பலரும் வந்து மாறி போய்விட்டனர். அவ்வப்போது அவன் குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ச்சியாகவே குழாய் வழியாக உணவு எடுத்துக்கொள்ளும் நிலைக்குச் சென்றுவிடுவான். அந்த வியாதியின் முதிர்ச்சி அவ்வப்போது இப்படி தலைக்காட்டும் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். தொடர்ந்து மூன்று நான்கு மாதம் அவன் நாசியில் குழாய்களினோடே காணப்படுவான். அப்போதெல்லாம் வாரம் இருமுறை அவனது ஃபீடிங் ட்யூபை மாற்ற வேண்டியிருக்கும். நானும் என் மனைவியுமே அவனை ஜாக்கிரதையாக கிடத்தி மாற்றி விடுவோம். அதற்கான போதிய பயிற்சி எங்களுக்கு இருந்தது. அப்போதெல்லாம் அவனால் நிறைய பேச முடியாது.
ஒவ்வொரு முறையும் அந்த மூன்று மாத காலக்கெடு முடியும்வரை எப்படாவென்று இருக்கும்.
எங்களுக்குக் கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. சென்னை இந்திரா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி அங்கே வசித்து வருகிறோம். எனக்கும் என் மனைவிக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கபட்ட திருமணம்தான்.
திருமணம் ஆவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவளைப் பற்றி எங்கள் வீட்டுக்குத் தெரிய வந்தது. ஜாதகப் பரிவர்த்தனைக்குப் பிறகு தொலைபேசியில் ஒருவருடன் ஒருவர் பேசிப் பார்த்தோம். பிடித்திருந்தது. இருவரும் எங்கள் ஒப்புதலை வீட்டினருக்குத் தெரிவித்துவிட்டிருந்தோம். நிச்சயிப்பதற்கு முன் இரண்டு மூன்று முறை நேரிலேயே அவளை நான் சந்தித்துப் பேசியிருந்தேன். பார்ப்பதற்கு அமைதியானவளாகவும் அழகானவளாகவும் தெரிந்தாள். பிறகு வாரம் ஒரு முறை என்று எங்கள் சந்திப்பு தொடர்ந்தது.
அவளைச் சந்தித்துவிட்டு வரும் ஒவ்வொரு முறையும் நான் எண்ணிப் பார்ப்பதுண்டு. அவளிடம் எது எனக்குப் பிடித்திருக்கிறது என்று ஒவ்வொன்றாய்ப் பட்டியலிட்டு நோக்குவேன். ஆனால் நான் பட்டியலிட்டுப் பார்த்தவை எல்லாம் என் சுய சமாதானங்களே அன்றி வேறெதுவும் இல்லை. இவற்றை மீறி ஒன்று இருக்கிறது. அது எனக்குப் புலப்படவே மாட்டேன் என்றிருந்தது.
எங்களிடம் சண்டைகள் எழாமல் இல்லை. சமரசங்கள் இல்லாமல் இல்லை. எங்கள் சண்டைகளுக்கு நானே துவக்கப்புள்ளி. அவள் பொதுவாக கண்டுகொள்ள மாட்டாள். மௌனியாகவே இருந்துவிடுவாள். எப்போதாவதுதான் எதிர்வினை ஆற்றுவாள்.
ஒருமுறை இப்படிக் கேட்டாள்.
“உன்னை நீ ஏன் இவ்ளோ சலசலப்பாவே வச்சுருக்க?”
அன்றுதான் எனக்குப் புரிந்தது. அவளிடம் இருந்த இந்த ஆழ்ந்த மௌனமும் சலசலப்பற்ற தன்மையும்தான் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறது என்று.
திருமணம் ஆன பின்பும்கூட அவளது மௌனப்பாளத்தின் மீது கல்லெறிவதை நான் நிறுத்திவிடவில்லை.
“விடு. நொறுங்கட்டும் அவள்” இப்படி எத்தனைக் கணைகளை எறிந்திருப்பேன்! அத்தனையும் வீணாய்ப் போகும். நான் எறிந்தவற்றை அவள் அப்படியே உள்ளிழுத்துக் கொள்வாள். எந்த ஒரு சலசலப்பும் அவளிடம் இராது. நான் இறக்கி வைக்கும் அத்தனை பாரத்தையும் சுவடே தெரியாமல் செறித்துக்கொண்டுவிடுவாள். அவள் அதனைப் பாரமாகவே கருதவில்லையோ என்னவோ? அவளை நிலையழியச் செய்ய நான் என்ன செய்தாக வேண்டும்?
அவளது அந்த மௌனத்தை நான் இன்று இந்த நொடிவரை மொழிப்பெயர்க்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.
இதோ இங்கு என் கண்முன் பரந்து விரிந்து என்றும் ஓயாமல், “நான் இருக்கிறேன். நான் இருக்கிறேன்” என்று சலசலத்துக்கொண்டும் சலம்பிக்கொண்டும் இருக்கிறதே இக்கடல். இது போன்று இல்லை அவள். எங்கோ எந்த தூரத்து மலை உச்சியிலோ தன்னைத்தானே ஒளித்து வைத்துக்கொண்டிருக்கும் அரவமற்ற அடர் கானகத்துச் சுனை போன்றவள்.
அவளினது அந்தக் குறுகிய கரையினிலேயே நிறுத்திவைக்கப்பட்டவன் நான். அவளிடத்தில் அலைகளே எழப்போவதும் இல்லை. அதை நான் எப்போதும் அறியப்போவதும் இல்லை.
சுனை போன்றவளின் இடத்தில் சரசரக்க கிளைமுனை அகலும் சருகுகளின் பாரமும் சரிந்து விழுந்து அமிழ்கின்ற சுட்டப் பாறையின் பாரமும் ஒன்றுதான் போலும். எவற்றாலும் அதனைத் தளும்பச் செய்துவிட முடியாது. நிச்சலனத்தை நீர்த்துவிடச்செய்யாத ஏதோ ஒரு நியதி.
ச்சீ. த்தூ. கடலே. சற்று நிறுத்தேன். எப்போதும் அலையடித்து ஆர்ப்பரித்து உன்னை நீயே ஏன் இப்படிக் காட்டிக்கொண்டிருக்கிறாய்?
அங்கு பார் ஒருத்தியை. துளி தளும்பாமல் இருக்கும் ஒருத்தியை. அவளை என்னால் என்னவென்றே பொருள்கொள்ள முடியவில்லை இன்னும்.
ஆனால் அவள் என்மேல் அன்பாகவே இருப்பாள். இன்று வரை அப்படித்தான் இருக்கிறாள். ஆனால் அந்த அன்பை வைத்துக்கொண்டு அவளை அசைத்துப் பார்த்துவிட முடியாது. அதுவே எல்லை. பலமுறை தோற்றிருக்கிறேன்.
நானே சற்றும் எதிர்பாராமல் ஒரு பாரம் எங்கள் மகன் எனும் வடிவில் வந்தது. அது எங்கள் இருவரையும் சேர்த்தே அமிழ்த்தியது. அதுகூட அவளை எதுவும் செய்துவிடவில்லை.
என்னைத்தான் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.
எங்களது மூன்றாம் திருமண ஆண்டில்தான் எங்கள் மகன் கருவானான். என் மனைவி அவனை ஈன்றெடுக்கும் முன்பு வரை அலுவலகம் சென்றுகொண்டிருந்தாள். ஆனால் அவனைப் பெற்ற பிறகு வீட்டோடே ஒடுங்கிவிட்டாள். அவளிடம் பெரிதாக புகார்கள் எழுந்ததில்லை. அவள் மகனின் இத்தகைய நிலைக்குச் சுணக்கம் காட்டியதும் இல்லை. அதே வேளையில் பெரிதாக அவள் புலம்பித் தேம்பியதும் இல்லை. எப்படி அவ்வளவு இயல்பாக எடுத்துக்கொண்டுவிட்டாள் என்கிற கேள்வி அனுதினமும் என்னிடம் இல்லாமல் இல்லை. வருவது வரட்டும். நடப்பது நடக்கட்டும் என்கிற இந்த விட்டேத்தித்தனத்தை எப்படி எங்கிருந்து பெற்றுக்கொண்டாள்? இத்தனைக்கும் அவன் பிறந்து இரண்டாம் மாதமே அவனது இத்தகைய நிலை எங்களுக்குத் தெரியவந்துவிட்டது. ஆனாலும் அவள் ஏதுவாக ஏற்றுக்கொண்டுவிட்டாள். தாயானவளுக்குப் பத்து மாதகால கர்ப்பம். தந்தையானவனுக்கு ஆயுள் முழுக்க கர்ப்பம் என்று எங்கள் ஊர்ப் பாட்டிகள் சொல்வதுண்டு. அதுபடி இது எனக்கு மட்டும்தான் துயரத்தைத் தருகின்றதா என்ன?
பல நேரங்களில் இந்த எண்ணமே என்னை அலைக்கழியச் செய்யும். இதனை வைத்தே என் குரூரம் எட்டிப்பார்க்கும். கோபம் வந்து எரிச்சலாகி அவளிடம் சண்டையிடுவேன்.
ஆனால் அவன் பிறந்த போது மற்ற தாய்களிடம் இருந்த அதே தாய்மை உணர்வை நான் அவளிடம் கவனித்திருக்கிறேன். அவளிடம் இருந்து ஊறிவந்த அசைவுத் தன்மையை நான் பிரத்யேகமாக பார்த்து வந்திருக்கிறேன். அழுகின்ற என் பிள்ளையை அள்ளியெடுத்து அத்தனை துடிதுடிப்புடன் ஆசுவாசமாக முலையூட்டிய என் மனைவியையும் அவளிடம் தாய்மை பொங்கிய அந்தத் தருணங்களையும் இப்போதுகூட என்னால் நினைவில் கொள்ளமுடியும். ஆனால் அதே தன்மை இன்று வரையிலும் அவளிடம் எஞ்சியிருக்கிறதா என்ன? என்னால் அதனை உணரவே முடியவில்லை. பொருள்கொள்ளவே முடியவில்லை. வெறுமையை அவள் சூடிக்கொண்டுவிட்டது போல அவளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றுகிறது. என்ன ஜென்மம் இவள்?
என் மனைவி என் மகனின் மேல் கொண்டுள்ள இந்த விலக்கத்தை என்னால் ஊகித்துப் பார்க்க முடிகிறது. அவளைப் பொறுத்தமட்டில் அது சரியெனப்பட்டாலும் சமயத்தில் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. ஒரு குழந்தையை உந்தி வெளித்தள்ளிய தாய் அப்போதே அன்னையாகி விடுவதில்லை. அவர்களின் முலையூட்டும் நேரடி உடல் அனுபவமே அவர்களை அன்னையாக்குகிறது. என் மனைவிக்கு அது வாய்க்கவில்லை என்பதை வைத்து பின்பு புரிந்துகொண்டேன். கைக்குழந்தையாகிய என் மகன் அவளிடம் இருந்து அவள் அன்னையாவதைப் பறித்துக்கொண்டுவிட்டான். அவன் விரைவாகவே அவளது முலைப்பாலைக் கக்கிவிடுவதனால் அவளால் தொடர்ந்து முலையூட்ட முடிந்ததில்லை. மேலும் மருத்துவரின் பரிந்துரைப்படி குழாய் பொருத்தப்பட்ட என் மகனுக்கு அவள் தன் மார்பைக் கசக்கிக் கசக்கி அவளிடம் சுரந்த பாலை எடுத்து சிரிஞ்ச் வழியாக அவன் குழாய்க்குள் செலுத்திக்கொண்டிருப்பாள். அவள் பால் சுரப்பு நின்று கட்டிக்கொள்ளும் சமயங்களிலெல்லாம் முடியாமல் அலுத்து ஓய்ந்திருந்த அவளிடம் இருந்து நானே என் கைகளைக் கொண்டு அவள் மார்பைக் கசக்கிப் பிழிந்து பால் எடுத்து என் மகனைத் துளித்துளியாய் நிரப்பியிருக்கிறேன்.
என் மகன் சோகையானவனாகவே இருந்தான். பூஞ்சையான உடல் கொண்டு காணப்பட்டான். எல்லாவித சிகிச்சையும் அவனுக்கு அளிக்கப்பட்டது. கர்நாடகாவின் ஷிமோகா வரை சென்று அவனுக்கு ஆயுர்வேத சிகிச்சையும் அளிக்கப்பட்டுவிட்டது. அவன் இரைப்பையின் கசப்பை, பித்தக்கசப்பை நிறுத்திவிட முடியவில்லை. அவனை அது தீர்த்துக்கொண்டே வந்தது. ஒவ்வொரு முறை கக்கும் போதும் அவன் தன் உயிரின் ஒவ்வொரு துளியைக் கக்குவது போலத் தோன்றும்.
நகரத்துக்குள் உள்நுழைய முற்படும் எந்த வியாதியும் இவனையே பதம் பார்த்தது. அடிக்கடி காய்ச்சல் எடுக்கும். ஒரு வாரம் இரண்டு வாரம் என அவனை வாட்டி வதைத்துவிட்டுத்தான் போகும். எங்கள் இருவரிடமும் இருந்த வங்கிச் சேமிப்பும் கரைந்துகொண்டே வந்தது.
எந்தச் சத்து அவனை இவ்வளவு நாள் வாழ வைக்கிறது என்று சமயங்களில் எனக்குத் தோன்றாமல் இல்லை. ஏசிக்காற்று ஒத்துக்கொள்ளாது. உப்புக்காற்று ஒத்துக்கொள்ளாது. அவனுக்கு விளையாட்டென்பதே இல்லை. ஆனால் கதை கேட்பான். நானும் என் மனைவியும் மாறி மாறி கதை சொல்வோம். சேர்ந்து திரைப்படம் பார்ப்போம். ஆனால் வெளியில் செல்வது இல்லை. இதோ சென்னையில் இருந்தும் அருகினில் இருக்கும் எந்தக் கடற்கரைக்கும் அவனை அழைத்துக்கொண்டு சென்றது இல்லை. திருமணம் ஆன புதிதில் நாங்கள் இருவரும் என் மனைவிக்குப் பிடித்தமான பெசண்ட் நகர் பீச்சுக்கு அடிக்கடி சென்று வருவதுண்டு. ஆனால் இவன் பிறந்த பின்னர் அதுவும் நின்று போனது. அது பற்றியும் அவளுக்குப் பெரிய வருத்தம் இல்லை. அவளுக்கு உண்மையிலேயே இல்லையா அல்லது அவள் காட்டிக்கொள்வது இல்லையா? எனக்குத் தெரியவில்லை.
என் மகனுக்கு நினைவு தெரியவரும் அகவையும் எட்டியது. ஒரு கட்டத்தில் அவன் அவனது இந்த நிலைமையை நன்றாகவே புரிந்துகொண்டிருந்தான். எதையாவது உட்கொண்டுவிட்டால், “அப்பா, வயிறு கசக்குது” என்பான். சொல்லி இரண்டாம் நிமிடம் வாந்தி எடுத்துவிடுவான். சில சமயம் “வாந்தி வருது, வாந்தி வருது” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வாய் வழியாக வழிந்துவிடும். எங்கள் வீடே அவன் வாந்தியால் மொழுகப்பட்டிருந்த காலங்கள் எல்லாம் உண்டு. நானும் அவளும் அசராமல் அதனை சுத்தம் செய்வோம். இத்தனை நடந்தும் அவளிடம் எந்தவித சலனமும் சலிப்பும் இல்லை. இவள் எப்படி இப்படி மரத்துப்போனாள்?
அவனது கடைசி ஒரு வருடத்தில் அவன் நடமாட முடியாமல் போனான். அவனது கால்கள் வலுவிழந்துவிட்டன. ஊட்டச்சத்து குறைபாட்டினால் கால்களின் தசைநார்கள் சுருங்கி ஒட்டிப்போய் மெலிந்து காணப்பட்டது. அவனை அவனே தாங்கும் தகுதியை இழந்துகொண்டிருந்தான். அவனுக்கென வீல்சேர் ஒன்றை வாங்கி வைத்தோம். அதில் அவனை வீட்டிற்குள்ளேயே நகர்த்திப் பார்த்துக்கொண்டோம். ஒரு சமயத்தில் அவன் படுக்கையோடே முடங்கிப் போனான். முன்பு வரை இருந்த அவனது மூன்று மாதக் குழாய் வழி உணவு உட்கொள்ளும் காலம் மேலும் மேலுமென நீண்டு சரியாக ஏழாவது மாதத்தில் அவன் எங்களை விட்டுச் சென்றுவிட்டான். படுபாவி.
நான் இப்போது நினைத்துப்பார்க்கிறேன். எனக்கு இன்னும் நன்றாக அது நினைவிருக்கிறது. ஒரு வருடத்துக்கும் முன்னால் அவன் வீல்சேர் நாட்களுக்குப் பழகிக்கொண்டிருந்த போது அவன் நன்றாக உடல் தேறி வந்தான். கால் வலுவிழந்து காணப்பட்டாலும், அவனால் வாய் வழியாக உணவை எடுத்துக்கொள்ள முடிந்தது, எந்த ஒரு உபத்திரவமும் இல்லாமல். மருத்துவர்களிடம் காட்டிய போது, “நல்ல இம்ப்ரூவ்மெண்ட்” என்று சொல்லிவிட்டு, “அவனை இன்னும் நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். இந்த ஏழு வருடத்தில் எனக்கும் என் மனைவிக்கும் உண்மையாகவே சந்தோஷம் எட்டிப்பார்த்த காலம் அந்த நாட்கள்தான் என்று சொல்லலாம். பதினைந்து நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு அவனை வேறெங்காவது கூட்டிச்சென்று பார்த்துக்கொள்ளலாம் என்ற யோசனை தோன்றியது. மருத்துவரிடம் கேட்டுக்கொண்டதற்கு சரியென்று சொல்லிவிட்டார்.
கடலூருக்கு அருகில் அமைந்த அலைவாய்ப்புதூர்தான் எனக்குத் தந்தை வழி சொந்த ஊர். அங்கே என் தந்தைக்கென ஒரு பரம்பரை வீடு உண்டு. எங்கள் தந்தை இறந்த பின்னர் அதனைப் பண்ணை இல்லமாக ஆக்கிக்கொண்டோம். எப்போதாவது வந்தால் போனால் அங்கு தங்குவோம். ஆனால் நான் எனக்குத் திருமணமான போது சென்றதுதான். என் மகன் பிறந்த பிறகு அங்கு செல்லும் சந்தர்ப்பமே அமையவில்லை. அந்தப் பரம்பரை வீட்டைச் சுற்றி தோட்டமும் துரவும் இருந்தது. வேலை ஆட்களுக்கும் படைக்கும் பஞ்சமே இல்லை.
வடக்கே ஓடையாகவே கடல் சென்று சேரும் வன்னியாறு. கிழக்கே பண்ணையை ஒட்டியே கடற்கரை. என் சிறுவயதில் அந்தக் கடற்கரை மணலிலேயே புரண்டு கழித்திருக்கிறேன். அங்கே என் மகனையும் கூட்டிச் செல்ல வேண்டும் என்கிற ஆசை எனக்கு.
ஊருக்குக் கிளம்பும் முதல் நாள் அவனிடம், “நாளைக்கு நாம எல்லாரும் புது ஊருக்குப் போகப் போறோம்” என்றேன்.
அவன், “எங்கப்பா?” என்றான்.
“அலைவாய்ப்புதூர். உன் அப்பாவோட ஊர்.”
“நாம புது ஊர்க்குப் போறதுனால அதுக்குப் புதூர்னு பேரா?”
நான் சிரித்துக்கொண்டே, “ஹஹா.. ஆமாம்” என்றேன்.
“அப்படின்னா… முன்ன இருக்கற அலைவாய்ன்னா என்ன?”
நான் யோசித்துப் பார்த்தேன். எதுவுமே தோன்றவில்லை. இதுவரை அது பற்றி யோசித்ததே இல்லை. என் மனைவி எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
மெல்லிய புன்னகை அவளிடம் எழுந்தது.
நான் பின்பு அவனிடம் சொன்னேன். “நீ டீவிலலாம் கடல பாத்துருக்கல்ல. அதுல அலையா அடிக்கும்ல? அப்படி அலை அடிக்கிற எடத்துக்குப் பக்கத்துல இருக்குறதுனால அதுக்கு அப்படி ஒரு பேரு” என்றேன்.
நான் சரியாகச் சொல்லிவிட்டேனா? இல்லை இன்னும் ஏதாவது சொல்லாமல் விட்டுவிட்டேனா? ஆனால் மொத்த விளக்கத்தையும் சொன்னதைப் போன்று ஒரு முழுமையுணர்வு இருந்தது எனக்கு. அவன் அந்தப் பதிலை ஏற்றுக்கொண்டானா?
அடுத்த நாள், வேண்டும் என்கிற சாமான்களை ஏற்றிக்கொண்டு எங்கள் காரில் மூவரும் புறப்பட்டுச் சென்றோம். மொத்தம் பதினைந்து நாட்கள் அங்கேதான். இயல்புக்கு மாறான மாற்றம் அவனிடத்தில் தெரியவந்தது. முதல் இரு தினங்களில் அவனை அந்தப் பெரிய வீட்டை விட்டு எங்கும் அழைத்துச்செல்லவில்லை. ஆனால் அவனது வீல் சேரில் அவனாகவே வலம் வரத்தொடங்கினான். அவனையே அவன் தள்ளிக்கொள்வதற்கான வலு அவனிடத்தில் இருந்தது எங்களுக்கு ஆறுதல் அளித்தது. அவனால் நன்றாக சாப்பிட முடிந்தது. இதனைச் சாக்காக வைத்துக்கொண்டே நாங்கள் பலவிதமான உணவுகளைச் சமைத்து அவனுக்கு ஊட்டிவிட்டோம். சென்னையில் தனியாக இருந்திருந்தால்கூட என் மனைவி ஒருத்தியால் இத்தனை விதவிதமாக அவனுக்குச் சமைத்துக் கொடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அவனிடம் அவனது வழக்கத்துக்கு மாறான சிரிப்பும் வெளிப்பட்டது. நன்றாக வாய்விட்டுச் சத்தம் போட்டுப் புரையேறச் சிரித்தான்.
பின் மதிய வேளை ஒன்றில் நான் அவனாகவே தன் வண்டியைத் தள்ளிச்சென்று ஜன்னல் கதவை திறக்க முயல்வதைப் பார்த்தேன். அதன் பின்னர் அவன் படுக்கை அறையின் அந்தச் சாளரத்தை நானே திறந்துவிட்டேன். உப்பு கலந்த காற்று அவனுக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால்தான் இத்தனை நாட்களாக மூடி வைத்திருந்தேன்.
கிழக்குக் கடலில் இருந்து இதமான காற்று எங்கள் தேகத்தில் படர்ந்தது. அவனும் அதன் இதத்தை அனுபவித்தான். என்னைப் பார்த்து வேறு ஒருமுறை இனிதாய்ப் புன்னகைத்தான். கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் அவனுக்கு என் மனைவி உணவு ஊட்டினாள். நான் ஏதும் நடந்துவிடுமோ என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் அப்படியேதும் நிகழவில்லை.
நான் அவனிடம் கேட்டேன், “உனக்கு ஏதும் ஆகலயே?”
“இல்லப்பா. காத்து படப்பட நல்லா ஜாலியா இருக்குப்பா” என்றான்.
நான் அன்றிரவு முழுதும் என் மனைவியிடம் இதனைச் சொல்லிக்கொண்டேயிருந்தேன்.
அதற்கு அடுத்த நாள் மாலை வேளையில் என் மகனைக் கூட்டிக்கொண்டு எங்கள் தோப்புத் துரவைச் சுற்றி ஒரு வலம் வரலாம் என்று உத்தேசித்திருந்தேன். அதன்படி மறுநாள் எங்கள் தோட்டத்தில் அளவளாவிக்கொண்டிருந்தோம். தென்னங்காட்டுக்குள் நுழைந்தோம். அனிச்சையாக அவன் ஒரு இடத்தைத் திரும்பிப் பார்த்தான்.
தோப்பினை ஒட்டியே கடற்கரைக்குச் செல்வதற்காக தடுப்புச்சுவருக்கு மத்தியில் குறுகிய வேலிப்படல் தடுப்பு கட்டியிருந்தது. அதற்குப் பின்பக்கமாக கடல் தெரிந்தது. நான் அவன் பார்வையைப் புரிந்துகொண்டேன்.
“கண்ணா, நீ கடலயே பாத்தது இல்லல்ல. இப்ப நாம அங்க போவோமா?”
அந்த வேலிப்படலைத் திறந்து வழியை உருவாக்கினேன். அவனது வீல்சேரை தள்ளிக்கொண்டு கடற்கரைக்கு அவனை இட்டுச்சென்றேன்.
அவன் ஆர்வம் அதிகமாகிப்போய் “அப்பா, கடல்ப்பா” என்றான். பின்னர், அவன் கரங்களை வைத்து வண்டியின் சக்கரத்தை வேகமாக இயக்கினான். மணலாக இருந்ததனால் அவனது வண்டிச் சக்கரம் மணலில் புதைந்தபடி நின்ற இடத்திலேயே சுழன்றது. நான் அவன் ஆர்வத்தை இணங்கண்டு கொண்டு, “அப்பா தள்ளிவிட்றேன், இரு” என்று அவன் வண்டியைத் தள்ளிக்கொண்டு நடந்தேன்.
“அப்பா அங்கப் பாருப்பா?”
“என்ன என்ன?”
“அப்பா, அங்கப் பாருப்பா, அது நம்ம வாய் மாதிரியே இருக்குப்பா? “ என்றான் தூரத்தில் கடலலை அறைந்துகொண்டிருந்த மணல் திட்டைக் காட்டி. அகன்று திறந்த வாயுடன் அள்ளி விழுங்குவது போலிருந்த அந்த மணல் திட்டை நான் இப்போதுதான் இனங்கண்டு கொண்டிருக்கிறேன். இத்தனை நாட்களாக இப்படி எனக்குத் தோன்றியதே இல்லையே!
“அப்பா, அப்பா”, அவன் குரல் என்னை மீட்டது.
நானும் அவனும் அந்த மணல் திட்டில் ஏறினோம். முதலில் அவனை தூக்கிச்சென்று மேட்டில் அமரவைத்தேன். பின்பு இறங்கி அவன் சக்கர வண்டியைக் கொண்டு வந்தேன்.
அவனை நான் கண்டபோது அத்தனை பரவசம் அவன் முகத்தில். இந்த நேரத்தில் என் மனைவியையும் அழைத்து வந்திருக்கலாம் என்று தோன்றியது. காற்றில் அவன் உடை சடசடக்க அவன் அந்தச் சக்கர நாற்காலியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“அப்பா, என்ன கடல்கிட்ட கூட்டிட்டுப் போவியா?”
நானும் அவனும் மேட்டில் இருந்து இறங்கினோம்.
அவனை வீல்சேரில் இருந்து இறங்கச் செய்து பிடித்துக்கொண்டேன். அலைகளின் ஓயாத நுரைப்பை அவன் தனது பாதத்தில் உணர்ந்துகொண்டான். “அப்பா, அப்பிடியே சர்ர்ர்..ருன்னு புடிச்சு இழுக்குதுப்பா” என்றான்.
பின்னர், அவனை மீண்டும் அவனது சக்கர நாற்காலியில் அமரவைத்தேன். பிறகு, அவன் சக்கர நாற்காலியை முன்னும் பின்னுமாய் இழுத்து இழுத்து கடலலைகளிடம் இருந்து தப்பிச்சென்று தப்பிச்சென்று விளையாடிக்கொண்டிருந்தோம். அவன் கூச்சலிட்டுச் சிரித்தான். மகிழ்ந்திருந்தான்.
மீண்டும் அவனை மேட்டில் ஏற்றினேன். அவன் காட்டிய அந்த வாய்ப்பகுதியை தூரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த வாய்ப்பகுதியைத் தொடர்ந்து அறைந்துகொண்டிருந்த அலைகளைக் கண்டுகொண்டு, அப்போது என்னவென்று தோன்றி அவன் கேட்டானோ தெரியவில்லை.
“அப்பா, கடல் ஏம்ப்பா என்ன மாதிரியே விடாம வாமிட் பண்ணுது?”
நான் ஒரு கணம் அதிர்ந்துபோனேன். என் மெளனத்தை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை. அவன் தொடர்ந்து கேட்டான். “அதுக்கும் அதோட அடி வயித்துல எப்பவுமே கசக்குமாப்பா?”
உடலொட்டிய என் ஈர ஆடையுடன் விருட்டென்று எழுந்துகொண்டேன். அப்பியிருந்த மணற்துகள்களைக்கூடப் பொருட்படுத்தாமல் வேகவேகமாக சாலைப் பக்கமாய் நடந்தேன். தூரத்தில் நின்று திரும்பி ஒருமுறை கடலைப் பார்த்தேன். நிலத்தில் ஓயாமல் காரிக் காரித் துப்பிக்கொண்டிருந்தது கடல். அதன் காரும் சத்தத்தை இனி கேட்கக்கூடாதவன் போல முன்னால் நகர்ந்து சென்றுகொண்டிருந்தேன்.