தாய்ப்பாசத்தின் கற்பிதமும் உண்மையும் – ஏங்கல்ஸும் ஹைடெக்கரும்

3 comments

தமிழ்நாடு அம்மா பாசத்துக்குப் பெயர் போனது – ஒப்பிடுகையில் தாயைப் போற்றும் காட்சிகள் பழைய இந்திப் படங்களில் உண்டு. மலையாளத்திலும் உண்டு. ஆனால் தமிழ் சினிமாவிலே நீண்ட காலமாக அம்மா செண்டிமெண்ட் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. அம்மா செண்டிமெண்ட் பாடல்கள் அனேகமாக ஹிட்தான். மலையாளத்திலும் இந்தியிலும் நான் பார்த்தவரையில் அம்மா பாடல்களைவிட தாலாட்டுப் பாடல்கள் அதிகம். தந்தை-மகன் / மகள் உறவு அங்கு தாய்-மகன் உறவைவிட அதிகமாக அங்கு கொண்டாடப்படுகிறது. ராஜ்கிரண் “என் ராசாவின் மனசிலே” படத்தில் காலமான அம்மாவை நினைத்துக் கதறிப் பாடும் காட்சியில் நடித்து வருகிறார். அப்போது அந்த ஸ்பாட்டில் வேறு ஒரு படத்தில் நடித்து வரும் கவுண்டமணி அதைப் பார்த்துவிட்டு ஒரு நண்பரிடம் வேதனையுடன் கேட்கிறார்- “ஏன்யா, இவனுக்கு மட்டும்தான் அம்மாவா? நம்மளை எல்லாம் நாயா பெத்துச்சு?” இந்த அம்மா பாச மிகை தமிழ்ப் பண்பாட்டின் ஒரு சுவாரஸ்யமான அம்சம். நாம் இதை மானுடவியலைத் தொட்டு, சற்று உளவியல் சார்ந்து ஒரு பக்கமும், தத்துவார்த்தமாக இன்னொரு பக்கமும் அலசிப் பார்ப்போம்.

ஏங்கல்ஸ் தனது “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” நூலில் (லூயிஸ் மோர்கனை மேற்கோள் காட்டி) துவக்க கால குடும்ப அமைப்பில் பெற்றோர்-குழந்தை உறவானது தனிமனிதனின் சுயநலத்தின் உச்சமாக பார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். அதே நேரத்தில், நீடித்த குடும்பத்தினுள் ஒரு பொதுவுடைமைச் சொத்தாக குழந்தைகள் கருதப்பட்டனர் (ஆனால் அன்னிய குடும்பக் குழந்தைகள் அன்னியர்களே). அதாவது, அந்தச் சமூகங்களில் ஒரு குழந்தை நீடித்த குடும்பத்தின் சொத்து. தன் சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா உள்ளிட்டோரையும் அக்குழந்தை தன் பெற்றோராகவே பார்க்கிறது. அவர்களும் அப்படியே அக்குழந்தை மீது பாசம் காட்டி கவனித்துக்கொள்கிறார்கள். ‘அப்பா’, ‘அம்மா’ என்றே அவர்களை அழைக்கும் பண்பு அச்சமூகங்களிலும் நம்மைப் போன்ற இந்தியச் சமூகங்களில், குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில், உள்ளதாக ஏங்கல்ஸ் குறிப்பிடுகிறார். 

நிலப்பிரபுத்துவ காலத்தில் குடும்ப அமைப்பு உருமாறுகிறது. அப்போது இதில் ஒரு மாற்றம் வருகிறது. அப்பா, அம்மா மட்டுமே ஒரு குழந்தையின் பிரதான பொறுப்பாளர்கள் (caretakers). குடும்பம் என்றாலே பெற்றோரும் குழந்தையும், கூடவே தாத்தா, பாட்டி என ஒருமுகப்படுகிறது. சித்தப்பா, பெரியப்பாக்கள் தத்தம் குடும்பங்களை இவ்வாறு பார்த்துக்கொள்கிறார்கள். அவரவர் வருமானம், சொத்து அந்தந்த குடும்பத்தின் சொத்தாகிறது. மனிதர்கள் ஒன்றாக வாழும் ஒரு சமூக அமைப்பில் குடும்பப் பாசம் மட்டுமே பொதுநலத்தின் இடத்தில் சுயநலத்தைப் பிரதானப்படுத்துகிறது. இது ஒரு முரணைத் தோற்றுவிக்கிறது. அறம் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது – ஒரு ஊரில் உள்ள குழந்தைகள் பசியில் வாடும் போது ஒரு அன்னை தன் பிள்ளைக்கு மட்டுமே கவனமாகப் பசியாற்றுகிறாள். தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளில் தன் குழந்தையை மட்டுமே தனியாக அழைத்து வந்து உணவளிக்கிறாள். ஆம், இன்று கூட்டுக்குடும்பத்துக் குழந்தைகளுக்குச் சேர்த்து உணவளிக்கும் அன்னையர் உண்டு. ஆனால் எப்போதும் தன் குழந்தையே அவர்களுக்கு ஸ்பெஷல். இது தவறு அல்லவா? சுயநலம் அல்லவா? ஆனால் இந்த முரணில் இருந்தே தனிச்சொத்துக்கான நியாயங்களை உருவாக்கினார்கள் என ஏங்கல்ஸ் கருதுகிறார். அது வேறொரு விவாதம். நாம் தாய்ப்பாசத்துக்கு வருவோம்.

தாய்ப்பாசத்தில் அப்படி என்ன மகத்துவம்? தன் மரபணுவின் தொடர்ச்சியான குழந்தை மீது அன்னை காட்டும் பாசமானது சுயநலம்தானே? அவள் ஒன்றும் பக்கத்து வீட்டுக் குழந்தையைக் கருவறையில் சுமக்கவோ பாலூட்டவோ இல்லையே? இன்னொரு விசித்திரம்- நல்லதங்காள் கதை தெரியும் அல்லவா? அவளைப் போல தற்கொலைக்கு முயலும் தாய்மார்கள் இன்றும் தம் பிள்ளைகளைக் கொன்றுவிட்டே தம் உயிரை மாய்க்கிறார்கள். தன்னை விட்டால் தன் குழந்தைக்கு இந்த உலகில் பொறுப்பாளர்கள் இருக்க முடியாது, தத்தெடுக்கும் பெற்றோர் வந்தாலும் அவர்கள் தனக்கு இணையாக முடியாது என்றே இந்த அன்னையர் நம்புகிறார்கள். இன்னொரு பக்கம், தாய் இறந்த பின் அவளிடத்துக்கு வரும் சித்திகளின் பாரபட்சமான கவனிப்புக்காக சித்திக் கொடுமை எனும் பயன்பாடு தோன்றியது. நிறைய கதைகள், படங்கள் இதைப் பற்றி உள்ளன. அண்மையில்கூட, ஒரு சித்தி தன் கணவரின் குழந்தையைச் சிறுகச் சிறுகத் துன்புறுத்தி, கடைசியில் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற சம்பவத்தைப் பற்றி படித்தேன்.

பிறக்காத தன் குழந்தைக்கான தனிச்சொத்தை, கவனிப்பை இந்தக் குழந்தை பறித்துவிடுமோ எனும் பயமே இக்கொலையின் தூண்டுதல். இதுவொரு கடுமையான உதாரணம் என்றாலும் சித்திக் கொடுமையும், குழந்தைகள் கொல்லப்படுவதும், தாய்ப்பாசத்தின் ஒரு எதிர்மறை வெளிப்பாடாகும் என்று சொல்வேன். திருமணத்துக்கு அப்பாலுள்ள காதல் உறவுக்காக ஓடிப்போக முனையும் பெண்கள் தம் பிள்ளைகளை விஷமூட்டிக் கொன்றுவிட்டு கூலாக ஓடிப்போவதும் நடக்கிறது. தன் முந்தைய குடும்பம், அதனால் தனக்குக் கிடைத்த குழந்தை என்பதை ஒரு முற்பிறவி போல கருதும் இப்பெண்கள், அடுத்த குடும்பத்தை அமைக்கும் போது பூஜ்யத்தில் இருந்து மீண்டும் துவங்க வேண்டும், பழைய குடும்பத்தின் குழந்தை, தன் குழந்தையே ஆனாலும், தனிச்சொத்தைப் பகிர, பாசத்தைப் பகிர வந்துவிடக்கூடாது என ஆழ்மனத்தில் நினைக்கிறார்கள்.

தாய்ப்பாசத்தின் தன்னலம் இவ்வளவு சிக்கல்களைத் தன்னுள் அடக்கியது. நான் மேலே குறிப்பிட்ட மிதமிஞ்சிய எதிர்மறை நிகழ்வுகளை விதிவிலக்குகள் என நாம் எடுத்துக்கொண்டாலும், மாறிவரும் குடும்ப அமைப்பு நமது தமிழ்ச் சமூகத்தில் பெற்றோரின் பாசத்தில் உள்ள சுயநலத்தை எதிர்கொள்ளவே தாய்ப்பாசத்தைக் கொண்டாடுகிறது என எனக்குத் தோன்றுகிறது. கு.அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்” இதைத் துல்லியமாக படம்படிக்கும் கதை – தீபாவளி அன்று வீட்டுக்கு வரும் அழுக்கான ஏழைச்சிறுவனைத் தனது பிள்ளைகளில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளும் அன்னை, அவனைக் குளிப்பாட்டி அவனுக்குப் புதிய துணி அளித்து, தீபாவளியை அவனுடன் கொண்டாடுகிறாள். சமூகவுடைமையையும் சுயநலத்தையும் அன்னையின் ஊடாக ஒரு புள்ளியில் இணைக்கிற இக்கதை மிகவும் நெகிழ்ச்சியாக இருப்பது அதனால்தான். மாக்ஸிம் கார்க்கியின் “தாய்” நாவலும் இத்தகைய முயற்சியே. 

மனுஷ்யபுத்திரனின் “அம்மா இல்லாத முதல் ரம்ஜான்” அன்னை இறந்து போனபின் வரும் முதல் ரம்ஜானைப் பற்றிப் பேசுகிறது. அப்பா காலை உணவு அருந்தாமல் தொழுகைக்குச் செல்கிறார். தங்கை சம்பிரதாயத்தை மீறி எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வைக்கிறாள். சின்னக் குழந்தையான தம்பிக்கு மட்டும் வற்புறுத்தி புத்தாடை அணிவிக்கிறார்கள். உறவுகளும், அண்டை வீடுகளும் அனுப்பிய பட்சணங்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். குடும்பத்தினர் அமைதியாக ரம்ஜானைக் கொண்டாடாமல் கலகம் செய்கிறார்கள். அம்மாவுக்காகத் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். ஒரு திருவிழா அல்லது பண்டிகை வரும்போது மரணம் நேர்ந்தால் ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய ஒரு சூழலே இக்கவிதையிலும் வருகிறது. அப்போது அக்குடும்பம் தனியாக விடப்படுகிறது. சமூகம் இன்னொரு பக்கம் கொண்டாட்டத்தில், சடங்குகளில், மகிழ்ச்சித் திளைப்பில் ஈடுபடுகிறது. கடும் தனிமையில், கைவிடப்படுதலில் பிடிவாதமாகப் பண்டிகையை மறுப்பது பாசத்தை வலியுறுத்துவதாக, கசப்பான அன்பைக் கொண்டாடும் தருணமாக அக்குடும்பத்தினருக்கு மாறுகிறது.

“நானந்த

முதல் ரம்ஜானை

பத்திரமாய் வைத்திருப்பேன்

ஏனெனில் அது

அல்லாவை எதிர்த்து

அம்மாவுக்காக

கொண்டாடப்பட்ட ரம்ஜான்”

என மனுஷ்யபுத்திரன் முடிக்கிறார். இல்லாமல் போன அன்னையின் பாசத்தை சமூகத்தின் தன்னலத்துக்கு எதிரிடையாக வைக்கும் முயற்சி இது. சமூகத்தின் தன்னலம் சமூகத்திடம் அன்னையர் இருக்கிறார்கள் என்பதில் இருந்து வருகிறது. இந்த அன்னையரை நோக்கித்தான் இக்கவிதை ஒரு விதத்தில் பேசுகிறது எனலாம். அன்னையர் இப்படி மிதமிஞ்சிய தன்னலத்தின் குறியீடாக இருக்கிறார்கள்.

நமது வெகுஜன ஊடகங்களில் இந்தச் சுயநலம்-பொதுநலம் இருமையை, அதனால் தோன்றும் அறமின்மையை எதிர்கொள்ளும் நோக்கில்தான் முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட ராஜ்கிரணின் மிதமிஞ்சிய அம்மா பாசக் கதறல்களும், இன்றைய தனுஷ்களின் “அம்மா அம்மா நீ எங்கே அம்மாக்களும்” வருகின்றன. “வேலையில்லாப் பட்டதாரியில்” இந்தப் பாசத்தின் அநீதியும் பேசப்படுகிறது – தன் பெற்றோர் தன் தம்பியை அதிகம் பொருட்படுத்துவதாக, தன்னை உதாசீனப்படுத்துவதாக தனுஷின் பாத்திரமான ரகுவரன் தொடர்ந்து புகார் செய்தபடி இருக்கிறான். அடுத்து, இந்தச் சுயநலத்தைக் கடந்து போகும் நோக்கில் தாயின் மரணத்துக்கு மகன் ஒரு மறைமுகக் காரணம் எனக் காட்டப்படுகிறது. இதனால் குற்றவுணர்வு கொள்ளும் மகன் ‘திருந்துகிறான்’. வேலைக்குச் செல்கிறான். அந்த வேலையும்கூட அவனுடைய தாயின் கண்களைப் பெற்ற இளம்பெண்ணின் தகப்பனின் நிறுவனத்திலே அவனுக்கு அவளால் கிடைக்கிறது. அந்தப் பெண் தொடர்ந்து வெண்ணிற ஆடையில் ஒரு தூய ஆன்மாவைப் போலக் காட்டப்படுகிறாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குத் தன் அன்னையே நினைவுக்கு வருகிறாள். இது அவனை உருமாற்றுகிறது. அன்னை சமூகத்தையே தன் மகனாகக் காண்பதற்குப் பதிலாக சமூகமே அன்னையாக மாறுவதாகக் காட்டப்படுகிறது. இன்னொரு பக்கம் வில்லனின் மகன் தன் தந்தையுடன் அதிக அணுக்கமாக இருப்பதாக, அதனாலேயே திமிர்த்தனமாக இருப்பதாகக் காட்டுகிறார்கள். இது பழைய எம்.ஜி.ஆர் படங்களில் வரும் அதே கதையாடல்தான். அன்னையரின் பாசம் எவ்வளவு சமூக விரோதமானது, சமூகவுடைமை நோக்கிய கனவுக்கு, அறத்துக்கு எதிரானது என்பதை மறைக்கவே இவ்வகைக் கதையாடல்களை நாம் பிடித்துத் தொங்கிக்கொண்டே இருக்கிறோம். 

நமக்கு உண்மையில் அன்னையர் மீது எந்தப் பாசமும் இல்லை. ஏனென்றால் உயிருடன் இருக்கும் போது நாம் அவர்களை மதிப்பதில்லை. அப்படி என்றால் தாய்ப்பாசம் உண்மை இல்லையா? இந்தக் கேள்விக்கான விடையானது நாம் உண்மையை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்தது. உண்மை என்றால் என்ன?

உண்மையை நாம் பொதுவாக உலகப்பொதுவான விழுமியங்கள் சார்ந்து மதிப்பிடுகிறோம். தாய்ப்பாசம் என்பது ஒரு பெண் தன் உடலை, தன் ஆற்றலை, காலத்தை, மகிழ்ச்சியை ஒரு குழந்தைக்காகத் தியாகம் செய்வதற்கான சிறந்த உதாரணம். குடும்பத்துக்குள் இத்தகைய தியாகங்கள் மகத்துவமானவை என்பது ஒரு உலகப்பொதுவான விழுமியம். ஒரு தாயோ தந்தையோ தன் பிள்ளைகளிடத்து சுயநலமாக இருப்பது, இருக்கிற உணவைத் தான் மட்டுமே உண்டு பிள்ளைகளைப் பட்டினி போடுவதை நம்மால் கற்பனை பண்ணவோ, சகிக்கவோ முடியாது. ஏனென்றால் அது உலகு தழுவிய விழுமியம். அடுத்து, உண்மையை நிரூபணம் சார்ந்து பார்க்கிறோம். நிரூபிக்க முடிவதெல்லாம் உண்மை, அல்லாவிடில் பொய். மார்ட்டின் ஹைடெக்கர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை இதில் வைக்கிறார். அவர் உண்மையை இவ்வாறு மறுவரையறை செய்கிறார் – உண்மை என்பது ஒரு விழுமியத்தைச் சுமப்பதோ, நிரூபிக்கத்தக்கதோ அல்ல. ‘உண்மை’ சொல்வது என்பது பொய் சொல்லாமல் இருப்பதல்ல, மாறாக அது உலகில் தன் இருத்தலைச் சொந்தமாக (authentic) உணர்தல் மட்டுமே.

ஹைடெக்கரின் குடும்பம்

Authentic என்பதற்கு அசல் என்பதே நேரடியான பொருள். ஜெர்மனில் இது Eigentlichkeit. அதாவது போலியாக அல்லாமல் அசலாக இருப்பது. ஹைடெக்கரில் இதைச் சற்றே வேறுபட்ட ஒரு பொருளில் ‘தன்னுடையது’, ‘தனதானது’ என ஒரு மனிதன் இவ்வுலகில், காலத்துக்குள் சொந்தமான முறையில் இருத்தல் என விளக்குகிறார் – எனக்குச் சொந்தமான வீடு, எனக்கே எனக்கேயான மனைவி, குழந்தை, எனக்குச் சொந்தமான பணம், நான் எழுதுகிற நாவல், அதற்கு நான் பயன்படுத்தும் எனக்குச் சொந்தமான லேப்டாப், என்னுடைய பேனா என. நான் என் மடிக்கணினியின் தட்டச்சுப் பலகையில் கைவைத்து தட்ட ஆரம்பிக்கும் போது ‘அது என் லேப்டாப்’ எனும் தன்னுணர்வு இயல்பாக அங்கு தோன்றிவிடுகிறது. எப்படி? அந்த லேப்டாப் ஒவ்வொரு முறையும், “ஹலோ நான் உங்களுக்குச் சொந்தங்க. நான் உங்களுக்காகவே பிறந்திருக்கேங்க” எனக் கூறுமா? இல்லையே! ஆனால் அது என் அறையில், என் மேஜையில், எனக்குக் கையெட்டும் தொலைவில் உள்ளது. ஏனென்றால் அது எனக்குச் சொந்தமானது என்பது முக்கியம் அல்ல. அது என் நண்பனுடையதாகவோ, அலுவலகப் பயன்பாட்டுக்காக எனக்கு அளிக்கப்பட்டதாகவோ இருக்கட்டும், பிரச்சினை இல்லை. அது நான் எடுத்துப் பயன்படுத்தும் விதமாக உள்ளதே அதை எனது சொந்தமான இருத்தலின் (authentic being) பகுதியாக்குகிறது. நான் நாளை ஒரு தபால் பெட்டிக்குள் கடிதம் இடும்போது அந்தத் தபால் பெட்டியும் அந்தத் தருணமும் எனக்குச் “சொந்தமாகிறது”. (அந்தச் சமயம் இன்னொருவர் வந்து குறுக்கே தன் கையைவிட்டால் கோபப்பட மாட்டீர்களா? அது இந்தச் சொந்தமெனும் உணர்வாலும், அக்கணத்தைய இருத்தலாலுமே வருகிறது)

உங்கள் உலகில் ஒவ்வொன்றும் உங்கள் சொந்தமெனும் நம்பிக்கை உங்கள் அனுபவம், புரிதல், பகுத்தறிவு சார்ந்தது மட்டுமல்ல. இருத்தலைப் பொறுத்தமட்டில் அது உங்கள் செய்கையினூடே தோன்றுவது. ஒரு தாய் தன் மகனைக் காண்கையில் “இதோ என் மகன்” என யோசித்துவிட்டு “வாடா என் செல்லமே” எனச் சொல்லப் போவதில்லை. அவள் காலையில் எழுகையில், அப்போது தூங்கிக்கொண்டிருக்கும் அல்லது எழுந்து உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கும் அவளுடைய மகன் இருக்கிற உலகில்தான் அவள் எழுகிறாள். அதைப் போய் பார்க்காமலேயே அவள் அறிவாள். அவள் கட்டிலில் இருந்து கீழே கால் வைக்கும் முன்பே அங்கு தரை உள்ளது என அறிவாள். இந்த உலகில் ஒரு நாளில் அவளுடைய செயல்கள் இப்படித்தான் உள்ளன. இருத்தலைப் பொறுத்தமட்டில் இதுவே ‘உண்மை’ என ஹைடெக்கர் கூறுகிறார். 

இந்த ‘உண்மைக்கும்’ சிந்தித்து உணரும் உண்மைக்கும் என்ன வித்தியாசம்? இதை அறிய நாம் இரண்டு விசயங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்கள் வீட்டுக்கு அல்லது அறைக்கு வெளியே ஒரு எரிமலை வெடித்துக்கொண்டிருக்கிறது என நான் கூறுகிறேன். அதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏனென்றால் இதற்கு முன்பு அங்கு எரிமலையை நீங்கள் காணவில்லை. திடீரென எரிமலை அங்கு தோன்ற முடியாது. நான் மிகவும் வலியுறுத்தினால், என்னுடன் வேறு சிலரும் அதை வலியுறுத்தினால், நீங்கள் எழுந்து வெளியே போய் அது உண்மையா எனப் பார்த்து உறுதிசெய்வீர்கள். உண்மையென்பது இப்படி நம் உலகில் வெளியிலும் காலத்திலும் தோன்றுவது மட்டுமே. அது தர்க்கத்துக்கும், அனுபவத்துக்கும் உட்படுவது மட்டும் அல்ல என ஹைடெக்கர் கூறுகிறார்.

உங்கள் முகத்தில் கரி படிந்திருக்கிறது என நான் சொன்னால் அதைக் கண்ணாடியில் பார்க்காமல் உங்களால் மறுக்கவோ ஏற்கவோ முடியாது. உலகில் ஒன்று இருந்தால் மட்டுமே, அதை உங்களால் ‘சொந்தம் கொண்டாட’ முடிந்தால் மட்டுமே, அது ‘உண்மை’ ஆகிறது. இதுவே, உங்கள் காதலி உங்களிடம் “நீ என்னை நேசிக்கவில்லை. நீ என்னிடம் பொய் சொல்லுகிறாய்” எனக் கூறுகிறாள் என வையுங்கள். இல்லை என மறுக்கிறீர்கள். நீங்கள் நேசிப்பது உண்மைதான் என்பதற்கு உங்கள் நடவடிக்கைகளை அவளுக்கு நினைவுப்படுத்தி நிரூபிக்க முயல்கிறீர்கள். ஆனால் அவள் அதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. அப்போதுதான் அது காதலில் சாத்தியமில்லை என உங்களுக்குப் புரிகிறது. மனம் உடைந்து, கண்ணீர் விட்டு, தழுதழுக்கப் பேசிப் பார்க்கிறீர்கள். அவள் அதை நடிப்பென நினைக்கிறாள். அப்போதுதான் உங்களுக்குப் புரிகிறது – அவளாகவே நம்பினால் உண்டு. நீங்களாக அதை உண்மையெனப் புரிய வைக்க முடியாது. ஏனென்றால் நேசத்திற்கு இந்த ‘உலகில்’ இடமில்லை. ஒரு எரிமலையை, மழையை, வெயிலைப் போல அதைக் “காட்ட” முடியாது. அது அருவமான ஒன்று. அருவமான விசயங்களை உண்மையென நிரூபிப்பதே நம் உலகில் மிகப்பெரிய சாகசமாக, சாதனையாக மாறுகிறது. அதற்காகவே மிக அதிகமான நேரமும், சொற்களும், ஆற்றலும் செலவிடப்படுகின்றன.

இப்போது மீண்டும் தாய்ப்பாசத்துக்கு வருவோம். தாய்ப்பாசத்தைக் “காட்ட” முடியுமா? அதற்கு பொருண்மையான இருப்பு உண்டா? அதை நம் இருத்தலின் சொந்தமாகக் கருத முடியுமா? தாய்ப்பாசம் “உண்மையானதா?” இவ்விசயத்தில், ஹைடெக்கர் ராஜ் கிரணை, தனுஷை தழுவிக்கொள்வார் என நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு தாய் தன் பாசத்தை அந்தக் கணத்தில் தன் மகன் / மகளிடம் காட்டுவதே உண்மை. அதை அவள் தன் குழந்தையைக் கண்டதும் செய்கிறாள், அவளை எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அவளுடைய குழந்தை இந்த உலகில் இருக்கையில், அதே உலகை அவளும் பகிர்ந்துகொள்கையில், அவள் தானாகவே அவனை நோக்கிச் செலுத்தப்படுகிறாள் என அவர் கூறுவார். அதுவே பாசத்தின் “உண்மை”. அந்தப் பாசத்தின் பின்னால் இருந்து செலுத்துவது சுயநலமா, அவள் தன் பிள்ளையைப் போல இன்னொரு தாயின் பிள்ளையை நேசிப்பாளா, அவள் தன் பிள்ளைக்கு இணையாக இச்சமூகத்தின் எல்லாப் பிள்ளைகளையும் நேசிப்பாளா என்பது ஹைடெக்கருக்கு முக்கியம் அல்ல. (அவை நம் இருத்தலை மீறிய கேள்விகள். அக்கேள்விகளை அவர் தொழில்நுட்பத்தின் [சமூகச் சடங்குகள், அந்நியமாதலை உருவாக்கும் போக்குகள்] பகுதியாகப் பார்க்கிறார்) ஆக, ஹைடெக்கர் அன்னையரின் பக்கம்தான்.

3 comments

விஜய் மகேந்திரன் June 25, 2021 - 9:55 pm

விரிவான தரவுகளுடன் கூடிய அருமையான கட்டுரை அபிலாஷ்! வாழ்த்துக்கள்!

சந்திரமோகன் July 8, 2021 - 9:45 pm

வனத்தில் வசிக்கும் ஐந்தறிவு மிருகத்திற்கும் தாயன்பு உண்டு.நிறைமாத மானை வேட்டையாடும் சிறுத்தை ,வேட்டையாடப்படும் போது மானின் குட்டி உயிருடன் இருக்கும் நிலையில் சிறுத்தை அதை கொள்ளாது பாதுகாக்கும் காட்சி வலைதள பகிர்வில் கண்டிருக்கிறேன்.

மாதவன் இளங்கோ July 14, 2021 - 3:04 pm

தாயன்பைப் பற்றி பேசி நண்பர்களிடம் பலமுறை திட்டு வாங்கியிருக்கிறேன். தாயன்பு ஏற்கனவே சந்தையில் விற்கப்பட்டுவிட்ட பொருள்; அங்கீகரிக்கப்பட்டுவிட்ட புனிதம். ஆனால் என்னளவில் விமர்சனமே செய்யக்கூடாத புனிதம் என்று எதுவுமே இந்தப் பேரண்டத்தில் கிடையாது. அத்தகைய விமர்சனம்தான் இது. இந்த விமர்சனத்துக்காக தாய்மார்கள் என்னைக் கோபித்துக் கொள்ளலாம். ஆனால், அன்பைக் காட்டி உணர்ச்சிப்பூர்வமாக அச்சுறுத்தாமல் கருத்தை பரிசீலிக்க வேண்டுகிறேன்.

ஒரு மனிதன் தன்னை நேசிக்கும் அளவுக்கு இன்னொருவரை நேசிப்பதில்லை என்பதே உண்மை. ஆனால் தாய் மட்டுமே தன்னை நேசிக்கும் அளவுக்குத் தன் குழந்தையையும் நேசிக்கிறாள். ஆனால் அது கிட்டத்தட்ட தன்னை நேசிப்பதைப் போன்றதே. எனவே சுயநலம் நிரம்பியது. தாயன்பை பலரும் வியந்தோதுவதற்கான காரணமும் அதே சுயநலம்தான். தன்னைத் தான் நேசிப்பது போல அல்லது தன்னுடைய தாய் தன்னை நேசிக்கும் அளவிற்கு வேறு யாரும் தன்னை நேசிப்பதில்லை என்கிற சுயநலமே அதற்கும் காரணம்.

தன்னைவிட தன் குழந்தையின் மீது ஒரு தாய் அதிகம் அன்பு செலுத்துகிறாள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் உண்மையான அன்பு என்பது சுயநலமற்றது. சிற்றன்னைக் கொடுமைகளைப் பற்றி எத்தனைக் கதைகளைக் கேட்டிருக்கிறோம்; செய்திகளைக் கண்ணுற்றிருக்கிறோம். அவ்வளவு ஏன், தான் so called “உயிருக்கு உயிராக” நேசிக்கும் மகன்களின் மனைவிகளை பெரும்பாலான அன்னையர் எப்படி நடத்துகிறார்கள்? எல்லாவற்றிலும் சில விதிவிலக்குகள் இருப்பார்கள். ஆனால் ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணாதிக்கத்தை அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துவதே தாய்மார்கள்தான். அதிலும் பெண்பிள்ளைகள் இருக்கும் வீட்டிற்குச் செல்லும் மருமகள்கள் நிச்சயமாக இரண்டாம் தரக் குடிமக்கள்தாம். தாங்கள் எவற்றையெல்லாம் தங்கள் மாமியாரிடம் அனுபவித்தார்களோ அவற்றையெல்லாம் அப்படியே தங்கள் மருமகள்களிடம் திருப்பித் தர வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்படுவது ஸேடிஸம் அன்றி வேறு ஏது.

சில தாய்மார்கள் தங்கள் வேலையாட்களின் பிள்ளைகள் சாப்பிடுவதற்கென்றே தனியாக தேய்ந்து போன எவர்சில்வர், பிளாஸ்டிக் தட்டுக்கள், குவளைகளை வைத்திருப்பார்கள். தங்கள் பிள்ளைகள் மொறுமொறு தோசையை சாப்பிட்டு முடித்த பிறகு, எஞ்சிய காய்ந்து போன, தீய்ந்து போன தோசைகளை அந்தக் குழந்தைகளுக்குப் போடுவார்கள். தாயன்புதான் காரணம், வேறென்ன மக்களே! பழைய துணிகளை ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்குக் கொடுப்பதை நான் விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக புதிய துணிகளை வாங்கிக் கொடுக்கலாமே. பிறருடைய குழந்தைகளை இப்படி நடத்துவதற்கு, அந்த தீய்ந்து போன “அற வெங்காய” தோசையை செய்யாமலேயே இருக்கலாம்.

மேலும் தங்கள் குழந்தைகளின் மீது தாய்மார்கள் காட்டும் பாரபட்சம் எனக்கு எரிச்சல் தரக்கூடியது. தன் பிள்ளைகள் என்ன தவறு செய்திருந்தாலும், குற்றமிழைந்திருந்தாலும் அவர்களை கண்மூடித்தனமாக ஆதரித்துப் பேசுவார்கள். என்னுடைய மகன் தன் நண்பர்களைப் பற்றி ஏதேனும் சொன்னால், நான் உடனே அவனை ஆதரித்துப் பேசுவதில்லை. நடுவுநிலைமையோடு அவன் புறம் இருக்கும் தவறைச் சுட்டிக் காட்டுவது என் வழக்கம். இதை அவனே ஒரு நேர்காணலில் பதிவு செய்திருக்கிறான்.

ஒரு சில வீடுகளில் தாய்மார்கள் தங்கள் சொந்தக் குழந்தைகளிடம்கூட பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். தன்னைப் போலவே சிந்திக்கும் அல்லது தன் சொல் கேட்டு நடக்கும் குழந்தைகளிடம் கவனிப்பு அதிகமாக இருக்கும். மற்ற குழந்தைகள் இரண்டாம் தரக் குடிமக்கள்தாம். சில வீடுகளில் பலவீனமான குழந்தைகளை அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்வார்கள். அதை என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மையில் அதுதான் நியாயமும்கூட. ஆனால் மற்ற குழந்தைகளை அது உளவியல் ரீதியாக பாதிக்காத வண்ணம் அந்த கவனிப்பு இருக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடுகளில், ஐந்து வயதாகும் போதே ஒரு மூத்த குழந்தைகளை ஐம்பது வயதானவர்களாக்கி விடுவார்கள் தாய்மார்கள். தங்கைகளோ, தம்பிகளோ என்ன செய்தாலும், “அது சின்ன குழந்தை! பாவம்!” என்று சொல்லியே மூத்த குழந்தையை இவ்வாறு முதிர்ச்சியடைந்த மனிதனாகி விடுவார்கள். அந்தக் குழந்தைக்கும் ஐந்தோ, ஆறோ வயதுதான் ஆகிறது என்கிற பிரக்ஞையே பெரும்பாலான தாய்மார்களுக்கு இருப்பதில்லை. இது போன்ற காரணங்களால்தான் பெற்றோர்களுக்கு உளவியல் வகுப்பு அவசியம் என்று பலமுறை சொல்லி வந்திருக்கிறேன்.

உண்மையான அன்பைப் பற்றி ஒருமுறை என்னுடைய ஐயா பெருமாள் ராசுவிடம் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் ஒரு கதை சொன்னார்.

ஒரு தாயிடம் அவளுடைய அண்டைவீட்டுக்காரச் சிறுவன் ஒருவன் மூச்சிரைக்க ஓடிவந்து, “உன் மகன் ரோட்டில் அடிபட்டுக் கிடக்கிறான்.” என்று சொல்கிறான்.

உடனே அந்தத் தாய் பதறி அடித்துக்கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு ஓடுகிறாள். அங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்தவுடனேயே அவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வருகிறது. அந்த சமயம் கூட்டத்துக்கு உள்ளே இருந்து, “ஐயோ மகனே!” என்று யாரோ ஒரு பெண் கதறியழும் சத்தம் கேட்கிறது.

அதைக் கேட்டவுடன் ஓடி வந்த தாய், “அப்பாடா..” என்று தன்னுடைய வேகத்தை குறைத்துக்கொண்டு மெதுவாக கூட்டத்தை நோக்கிச் செல்கிறாள். கூட்டத்தை விலக்கிப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அங்கே தன்னுடைய மகனை மடிமீது போட்டுக்கொண்டு வேறு யாரோ ஒரு பெண் அழுதுகொண்டிருக்கிறாள். அதைப் பார்த்த அந்தக் குழந்தையின் தாய், மீண்டும் கதறி அழத் தொடங்கினாள்.

இந்தக் கதையை சொல்லிவிட்டு ஐயா கேட்டார்: “அப்பாடா” என்றவளின் அன்பு போற்றுதலுக்குரியதா, அல்லது யாரோ ஒரு குழந்தை அடிபட்டு விழுந்து கிடப்பதைப் பார்த்துக் கதறி அழுதவளின் அன்பு போற்றுதலுக்குரியதா என்று கேட்டார். இப்போது உங்களிடமும் அதே கேள்வியையே நான் கேட்கிறேன். சிந்தித்துப் பாருங்கள். விலங்குகளிடம், குறிப்பாக யானைகளிடம், அத்தகைய அன்பைப் பார்க்க முடியும். பழங்குடி மனிதனே அப்படி வாழ்ந்தவன்தான். நாகரிக மனிதன் சுயநலம் மிக்கவன். இத்தகைய அன்பைக் காட்டிலும், தங்களை வளர்ப்பவர்கள் மீது நாய்கள் காட்டும் அன்பு எந்த அளவு கீழானது என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையாகவே. நேர்மையாகவே.

பெருமாள் ராசு ஐயா என்மீது உண்மையான அன்பு செலுத்தியவர். நான் மட்டுமல்ல அவரை சுற்றியிருந்த அத்தனை பேரையும் நேசித்தார். அவரைப் போன்ற இன்னொரு மனிதரை நான் இனி என் வாழ்நாளில் சந்திக்கப் போவதே இல்லை. ஒரு புறம் புற்றுநோயால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும் தாயின் மகனிடம் கருணையோடு பேசிக்கொண்டு இருப்பார். மறுபுறம் தன் மகன் இரண்டாம் வகுப்பில் மதிப்பெண் சரியாக வாங்கவில்லை என்று வருத்தப்படும் தாயிடமும் அதே கருணையோடு ஆறுதலாகப் பேசிக்கொண்டு இருப்பார். மனித சிறுமைத்தனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு அற்புதம் அவர்.

நல்லதொரு விவாதத்தை துவக்கியிருக்கிறீர்கள், அபிலாஷ். உங்களுக்கும் தமிழினி இதழுக்கும் நன்றி. ஏனெனில் இதைப் பற்றி பலமுறை எழுத நினைத்து கைவிட்டிருக்கிறேன். இதில் என்னுடைய கருத்து இதுதான் – “தாயன்பு உண்மையாகவே போற்றுதலுக்குரிய அன்புதான். ஆனால் அது அந்தந்தத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு மட்டும்.”

Comments are closed.