In most of the cases adultery is purely accidental. அதன் பின்விளைவுகளும் விபத்தைப் போலவே நிரந்தரமாக ஒரு வலியாகவோ, ஊனமாகவோ எஞ்சிவிடுகின்றன. ஒரு தனிமனிதனின் ஆன்மாவில் அல்ல, நம்பிக்கைகுரிய ஓர் உறவின் ஆன்மாவில் ஏற்படும் உடைவே அடல்ட்ரி. ஒரு பெண், எங்காவது ஓர் ஆணை மிஞ்சிவிட முடியுமென்றால், அடல்ட்ரியின் வழியாக அவனை வீழ்த்துவதின் மூலமாகவே சாத்தியம். இந்த வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆண்கள் வன்முறையைக் கையாள்கிறார்கள். அதே சமயம் ஓர் ஆண் வகிக்கும் பாத்திரங்களிலேயே ஆகப் பரிதாபகரமானது அவன் ஒரு Cuckold-ஆக இருப்பதன்றி வேறெதுவும் அல்ல. `ஆண், ஆண்` என்று ஒலிக்கும் உடுக்கையோசையால் உருவேற்றப்பட்ட அவனது ஆளுகையின் வீழ்ச்சியே அதில் இருக்கிறது. தனது `புனித` நிலையைக் கைவிடத் துணியும் ஒரு பெண்ணின் பரிதாபத்திற்குரிய, அதே சமயம், ஆத்திரமூட்டும் ஒரு மீறலைக் காட்டிலும் தந்தை வழிச் சமூகம் அளித்திருக்கும் வானில் தொங்கும் சிம்மாசனத்திலிருந்து வீழும், அதுவும் தான் வீழ்ந்துவிட்டோமென்று அறிந்தேயிருக்கும் ஆண், தோல்விக்கு மிகத்துல்லியமான உதாரணமாகவே திரிகிறான். அவன் மீது பதியும் கண்கள் அனைத்துமே ஏளனத்தின் ஊசிகளால் அவனுடலைத் துளைத்து ஓயாது உதிரம் சுரக்கும் அவன் காயத்தின் ஊற்றுக் கண்களை அகலப்படுத்துகின்றன. 

தி.ஜானகிராமனின் அலங்காரத்தம்மாளின் கணவரும் வேதாந்த விற்பன்னரும் அவளது ஆறு குழந்தைகளில் முதல் மூன்றிற்கு மட்டுமே `உயிரியல்` தந்தையாகவும் இருக்கும் தண்டபாணியின் மீது நான் மிகுந்த கவலை கொள்கிறேன். நம்மில் ஏறக்குறைய எல்லோருமே ஏற்றுக்கொள்ள விரும்பாத ஒரு பாத்திரத்தை வகிக்கிறார் அவர். ஆனால் அவரை அலங்காரத்தம்மாள் ஞானச்சூரியன் என்கிறாள். என்னால் அதை நம்ப முடியவில்லை. காரணம் அது உண்மையல்ல, மாறாக கழுவாய் தேடிச்செல்லும் முன்பு தன்னால் ஏமாற்றப்பட்டவருக்குத் தானாக முன்வந்து அளிக்க முனைந்த சிறிய கெளரவம், பிரிவுச் சமயத்தில் ஒரு காதலன் அவனது காதலிக்கு வைர மோதிரமொன்றை அன்பளிப்பதைப் போல. ஆனால் அடல்ட்ரியில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணின் மகனது நிலையை அணுகிப் பார்க்க நமக்குத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்திருக்கும் ஒரேயொரு வாய்ப்பு தி.ஜாவின் `அம்மா வந்தாள்` மட்டுமே என்பதிலேயே ஊன்றி நிற்கின்றன அந்நாவலின் குன்றாப் பெருமையில் கொடி படர்ந்திருக்கும் பந்தற்கால்கள். 

அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு கமண்டலத்திலிருந்து வெளியேறி வந்தவளும் இந்தியாவின் பெண்பாற் பெயர் வைக்கப்பட்ட ஆறுகளில் ஒருத்தியான காவிரியின் கரையிலே கயிற்றரவுச் சிந்தனையால் பீடிக்கப்பட்டு வெகுநேரமாக இருக்கிறான் அப்பு. நாவலின் இறுதியிலும் அவன் அங்கேயே நிற்கிறான். காவிரிக்கு கங்கையைப் போல உலகப் பாவத்தையெல்லாம் போக்கும் ஒரு பணி வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த விதத்தில் அவள் உலோகாதயப் பண்புகள் மட்டுமே உடையதோர் ஆறு. சோழ நாடு சோறுடைத்துப் பெரும்பேர் பெறுவதற்கானவள், உயிர் வளர்ப்பவளாக அமைந்திருக்கிறாள். அலங்காரத்தம்மாள் அப்புவிற்குக் கங்கையென்றால் இந்து காவிரியாக வலம் வருகிறாள். அம்மாவின் தசைகளுக்கும் இதரப் பெண்களின் தசைகளுக்குமான வேறுபாடு உயிரியல் ரீதியாக ஏதுமில்லாவிட்டாலும் வழிவழியாக நமது மனதில் நின்று நிலைத்துவிட்ட அமைப்பு ரீதியான வேறுபாடுகள் நிறைய உண்டு. பிளாட்டோவிய பாணியில் சொன்னால் ‘அம்மா’ என்பவள் பெண்ணின் ஒரு மீபொருண்மை வடிவம். அந்த வடிவத்திலிருந்தே மற்ற வடிவங்கள் பிறந்திருக்கின்றன. நாம் காதலிகளை அம்மாவைப் போன்றவள் என்கிறோம். சகோதரிகளை உயர்த்திப் பிடிக்கவும் அவர்களை அம்மாவைப் போன்றவர்கள் என்கிறோம். நாம் நமது அம்மாக்களின் உதிர்ந்த இறகுகளாக அங்குமிங்கும் அலைந்து ஒவ்வொரு பெண்ணின் சிறகுகளிலும் முந்தைய வாழிடத்தின் நினைவுகளோடே நம்மைப் பொருத்திக்கொள்ள விழைகிறோம்.  ஓர் ஆண் மகப்பேறின் வழியாக ஒரு பெண்ணிற்கு அவளுடைய தாயின் இடத்தை அளித்து அதன் வழியாகவே அவன் தந்தையின் இடத்தையும் அடைகிறான். இதன் மூலம் நோவாவின் கப்பல் கரைதட்டிய நாளிலிருந்தே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்களது பெற்றோர்களின் நகல்களாவே பிறக்கிறார்கள்.  

இந்து, அலங்காரத்தம்மாளின் பார்வையில் ஒரு `பழையது`. அவளை அப்பு நாடிச்செல்கிறான் என்பதை அவள் அறிகிறாள். இந்துவிற்கோ தான் ஒருபோதும் மணமுடிக்கப்பட்டவள் அல்ல. சென்னைக்குச் சென்று திரும்பவரும் அப்புவின் கைபடும் வரை அவள் ஒரு கன்னிகை. அவள்தான் அப்புவிடம் சொல்கிறாள்- ஒரு பெண்ணின் மனதை ஆள்பவனே அவளது கணவனென்று. இதையேதான் கடற்கரையில் வெகுநேரமாக அமர்ந்து கடலைப் (அலங்காரத்தமாள் கடலே, அம்மாவும் ஒரு கடலே) பார்த்திருக்கும் அப்புவிடம் தண்டபாணியும் சொல்கிறார், ஒரு பெண்ணிற்கு ஆணென்பவன் எல்லாமுமாக இருக்க வேண்டுமென்றும், அதில் ஒன்று குறைந்தாலும் அவள் மனதை ஆள முடியாதென்றும். ஆண்களில் பலரும் ஒரு பெண்ணின் உடலை ஆள்வதிலியே தங்கள் ஆளுகை அடங்கியிருக்கிறதென்று நம்புவதோடு, அதன் வழியாகவே ஒரு பெண்ணின் அறிய முடியாததென்ற மூடாக்கைப் போர்த்தியிருக்கும் அவளது மனதை ஆளவும் முடியுமென்று நம்புகிறார்கள். ஆண்களின் பல மூடநம்பிக்கைகளில் அதுவும் ஒன்றே என உரைக்கிறாள் இந்து. ஆண்களின் தயக்கம் எங்கே தொடங்குகிறதென்றால், ஏற்கனவே தனது உடலை ஒருவனுக்கு அளித்துவிட்ட ஒரு பெண் மற்றொருவனுக்குப் பகிர்ந்தளிப்பதால் உண்டாகும் சமநிலைக் குலைவை எப்படிக் கையாள்வதென்று கற்றுக்கொள்ள இதுவரையிலும் ஒரு பயனர் கையேடு தயாரிக்கப்படவில்லை என்பதிலிருந்தே.  

இருளும், இருட்டும், அமைதியும், நிசப்தமும், ஒலிகளும் ஓசைகளுமாக மிக நுட்பமாக அப்புவின் மனதிலே நிகழும் அசைவுகளுக்கு ஓர் அற்புதமான பின்புலத்தை வழங்கியிருக்கிறார் தி.ஜா. இரவு அணுக, குருக்களின் குரலால் பாடசாலை வீட்டிற்குத் திரும்பும் அப்பு, ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியில் இந்துவைப் பார்க்கிறான். அதுவேதான் சென்னையில் பதினாறு வருடங்களுக்குப் பிறகு வீடேகி, ஒரு தீராத நிசப்தத்தின் இருளிலே குமைந்து பின்பு இந்துவின் விளக்குகளின் ஒளிக்குத் திரும்புவதும். இம்முறை கடலின் அறிய முடியாத (அம்மாவின்) ஆழ இருட்டிலிருந்து பலமுறை பார்த்தும், அணுக்கமாகவும் இருந்த நம்பத்தகுந்த ஓர் ஆற்றின் (இந்து) வெளிச்சக் கரைக்குத் திரும்புகிறான். ஆறோ, கடலோ ஆண்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியவர்கள் மட்டுமே என்கிறார் தண்டபாணி. அதுவே சமநிலைக்கான அவரது சூத்திரம். அதை நாம் சாதாரண மக்களின் மொழியில் கையாலாகாத்தனம் என்றே பொருள் கொள்வோம். ஒரு படைப்பு மனிதச் சிக்கலொன்றைச் சாதாரணப் பொருளிலிருந்து வேறொரு பொருளுக்கு நகர்த்துவதிலேயே பொருட்படுத்தத்தக்கதாக மட்டுமன்றி ஓர் இலக்கியப் படைப்பு என மெச்சத்தகுந்த அங்கீகாரத்தையும் பெறுகிறது.  

தி.ஜாவைப் பொறுத்தவரையில் ஆண்கள் கரையிலே நிற்பவர்கள், எவ்வளவு முறைகள் மூழ்கியிருந்தாலும் காவிரி ஓர் ஆச்சரியம்தான். அலங்காரத்தம்மாள் ஓர் ஆணின் முழு வடிவத்தை (தண்டபாணியின் தர்க்கத்திற்கு ஏற்ப) தேடியே சிவசுவிடம் தன்னை ஒப்படைக்கிறாள். சிவசுவிற்கு மூன்று குழந்தைகள் பெற்றுத் தருகிறாள். முதல் மூன்று குழந்தைகளுக்குப் பிறகு தண்டபாணிக்கான கதவுகளை அடைத்துவிடுகிறாள். மொட்டை மாடியில் நட்சத்திரங்களுக்குக் கீழே நிகழும் கலவி தண்டபாணிக்கென்றால், சிவசுவுடன் மதிய நேரங்கள். ஒரு நாளின் இரண்டு அங்கங்களாக பெண் இருக்கிறாள். இரவைக் கண்ட ஆண்கள் பகல் காண்பதில்லை. பகல் கண்டவர்களோ, நட்சத்திர ஒளியின் கீழே பெண்ணைக் காண்பதில்லை.  

அலங்காரத்தம்மாள் ஒரு பெண்ணாக முழுமைக்கான தேடலில் இடம்பெயர்ந்து சிவசுவை அடைய, அப்புவோ `அம்மா` எனும் முழுமையின் சரிவைக் கண்ட பிறகு இந்துவை அடைகிறான். இவ்விதத்தில் இருவரின் தேடலும் ஒரே சாயலோடிருக்கின்றன. எதிர்பாலினத்தின் முழுமையான வடிவத்திற்கான தேடலே அது. ஓர் ஆண் ஒரு பெண்ணின் முழுமையை அம்மாவிடம் காண்கிறான், ஒரு பெண் ஆணின் முழுமையைத் தந்தையிடம் அல்ல, தனது கணவனிடம் தேடுகிறாள். இந்துவிற்கு அவளுடைய கணவன் இறந்து போய், அப்புவை அடைவதற்கு ஒழுக்கம் சார் தடையை நீக்கிவிட (இந்துவின் தர்க்கத்தின்படி), அலங்காரத்தம்மாளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடுகிறது. இந்து தனது சமூகம் சார் நிலையை மீறுகிறாள் என்றால், அலங்காரத்தம்மாளோ ஒழுக்கம்சார்- அறம்சார் தடையை மீறுகிறாள். இந்துவின் மீறலைத் தவிர்க்கும் அப்பு, அலங்காரத்தம்மாளின் மீறலின் முன் அவனது தந்தையைப் போலவே ஏதும் செய்ய முடியாமல் திரும்புகிறான். இப்போது இந்துவைத் தொடும் தடை அப்புவிற்கு நீங்கிவிடுகிறது. அப்பு இந்துவிடம் முழுமையைக் காண்பதில்லை, அவன் அலங்காரத்தம்மாளின் மீறலையே அவளிடம் கண்டு தன்னை ஒப்புக்கொடுக்கிறான். ஒரு பெண்ணின் மீறலால் உறவில் இருக்கும் ஆணும் பெண்ணும் அவதியுறும் காலத்தில் அதைக் கண்ணுற்றுத் திரும்பும் அப்புவைக் காட்டிலும், சிவசு வீட்டிற்கு வந்துசென்ற பின்னும் அவன் நிழல் வீட்டிலே படிந்திருப்பதைப் பார்த்தும் சகித்துக்கொள்ளும் தண்டபாணியின் நிலை பொறியில் சிக்கியிருக்கும் எலியை ஒத்திருக்கிறது. இங்கே அவர் சிக்கியிருக்கும் பொறிக்குப் பெயர் குடும்பம்.  

அப்புவைப் போலவே அலங்காரத்தம்மாளும் ஏமாற்றமடைகிறாள். அவளுடைய கணவனான தண்டபாணியிடமோ, சிவசுவிடமோ அல்ல, அவளால் ஒரு ரிஷியாக வாயிலில் வந்து நிற்பான் என எதிர்பார்க்கப்பட்ட அவளது குழந்தைகளிலேயே தொட்டிலை நிறைத்து வளர்ந்த அப்புவிடம். அவள் சொல்கிறாள், `ஒரு ரிஷியாக வந்து நிற்பாய் என்று பார்த்தால் நீயோ அம்மா பிள்ளையாக வந்து நிற்கிறாய்` என. அப்புவிடம் கழுவாய் தேடிக்கொள்ளும் வாய்ப்பும் இல்லாது போக, அவள் கங்கைக் கரைக்குச் சென்று மனிதர்களுக்குக் கிடைத்ததிலேயே பெரிய கழுவாயான மரணம் வரைக்கும் காத்திருப்பேன் என்கிறாள். அவளன்றி ஒருநாளும் உயிர்த்திருக்க முடியாதென்று நம்பப்படும் தண்டபானியை ஒரு ஞானியின் இடத்திற்கு நகர்த்திவிட்டு, தன்னால் ஏற்கனவே `கைவிடப்பட்டவனான` ஒரு போலி முகப்பாவத்தை அவனைக் காணும்போதெல்லாம் கொண்டிருக்கிறாளோ எனச் சந்தேகிக்கும் அப்புவை மீண்டுமொருமுறை கைவிடுகிறாள். சிவசுவோ அவளிடமோ, அவள் வழியாகப் பெற்ற குழந்தைகளிடமோகூட எவ்வித உரிமையும் பாராட்டிவிட முடியாத இடத்திலே நிற்கிறான். அவனைக் கைவிடுவதில் அலங்காரத்தமாளுக்கு ஒன்றும் தயக்கமில்லை. தனது முழுமையை அனுபவமாகப் பெற்று, தான் உணர்ந்த ஓர் நிறைவு, பின்விளைவுகளின் காரணமாக இப்போது பாவமெனக் கருதத் தொடங்கிவிட்ட அலங்காரத்தம்மாளுக்கு இந்திய மரபு ஓர் கழுவாயாக கங்கையை வழங்கியிருக்கிறது. `எதை அறிந்தால் அனைத்தையுமே அறிந்ததாக`க் கருதப்படும் வேதத்தைப் பதினாறு வருடங்கள் கற்ற பின்னும் வெறும் அம்மா பிள்ளையாக வந்து நிற்கும் அப்புவிடம் அலங்காரத்தம்மாள் அடைந்த ஏமாற்றமே அவளை கங்கைக்குச் செல்லும் முடிவை எட்டச் செய்கிறது. ஒரு பெண்ணாக அடைந்த ஏமாற்றமல்ல, ஒரு தாயாக அடைந்த ஏமாற்றமே அவளது இறுகிக்காலத் துக்கமாகக் கவிந்திருக்கும்.  

ஹெலனிலிருந்து துவங்கிய அடல்ட்ரியின் இலக்கிய வரலாற்றில், கொல்லப்பட்ட, தற்கொலை செய்துகொண்ட சீமாட்டி பெளவரி, ஆன்னா காரனீனா, கணவனோடு சமரசம் செய்துகொண்ட டெய்சி- இவர்கள் யாருக்கும் இல்லாத ஒரு மீட்பை இந்திய மரபில் அலங்காரத்தம்மாள் காண்கிறாள். கங்கைக் கரைக்குச் சென்ற பின்னும் அவள் தொடர்ந்து அவளது பிள்ளைகளுக்கு குற்றமும் தாழ்வுணர்ச்சியும் கொண்ட நினைவாகவே எஞ்சியிருப்பாள். தன்னைச் சுற்றிலும் அடிக்கப்பட்டிருக்கும் குடும்ப அமைப்பின் மரப்பலகைகளில், தனது உடலையே கருவியாக்கித் துளையிட்டு வெளியே செல்லும் ஒரு பெண், அதுவும் ஒரு தாய், தனது எல்லாப் பாத்திரங்களின் ஒப்பனைகளையும் கலைத்துவிட்டு ஒரு பெண்ணாக, குறிப்பாக, தான் கொண்டிருக்கும் பெண்ணுடலின் எதன் காரணமாகவோ எழுந்துவிடும் ஒரு நெருக்கடியைத் தீர்க்கும் விதமாக, அவ்வாறு தீர்ப்பதன் மூலம் ஆதியுணர்வு ஒன்றிற்கான நீதியைச் செய்கிறாள். அலங்காரத்தம்மாள் எல்லாப் பெண்களைக் காட்டிலும் கூடுதலாகப் பெண்ணாகத் தெரிகிறாள். மரபின் பார்வையில், அவள் உள்ளே நிறைந்திருக்கும் சக்தியின் வெளிப்படையாகத் திரண்டிருக்கும் வடிவத்திலே இருக்கிறாள். அப்படியொரு பெண்ணின் வடிவத்தை எங்கோ ஒன்று குறைந்திருக்கும் தண்டபாணியால் கையாள முடியாமல் போகிறது. அடல்ட்ரிக்கு ஓர் உறவின் குறைபாடுகள் மட்டுமே நூறு சதவீதப் பொறுப்பல்ல என்பதோடு தண்டபாணியின் கடற்கரையோரத் தர்க்கத்தைக் காட்டிலும் வேறு சிலவும் இருக்கக்கூடும் என விவாதிக்க தி.ஜா நமக்கு வாய்ப்பு வழங்கியிருக்கவில்லை.  

பெண்ணுடலின் புனிதத்துவம், திருமண உறவின் புனிதத்துவம் இரண்டையுமே உடைத்தவளான அலங்காரத்தம்மாள், ஒரு பெண்ணாக மட்டுமே வாழத் துணிந்திருக்கும் இந்துவைப் போலவே, ஒரு பெண்ணாக மட்டுமே வாழ்ந்த ஒரு பெண். அப்புவோ ஒரு பெண் வகிக்கும் தாயெனும் இலட்சிய வடிவிற்கும் (கங்கை), இயல்பான வடிவிற்கும் (காவிரி)  இடையிலே கயிற்றரவுச் சிந்தனையோடு அதேயிடத்தில் நிற்கிறான், தன் மீது பொழியும் கூகையின், பறவைகளின் ஒலியிலும், இருளின், மாட விளக்குகளின் ஒளிக்கலவையின் மத்தியிலும். வாழ்வே இலட்சிய வடிவங்களின் வீழ்ச்சியும் இயல்பான வடிவங்களின் எழுச்சியும் என்றும், உறவே பல ஏமாற்றங்களின் கூட்டுத்தொகையும் சமரசங்களின் இரசாயனக் கலவையும் என நாம் முன்பே அறிந்தவர்களாக இக்குறுநாவலின் இறுதியில் நிற்கிறோம். 

*

தி.ஜாவின் நூற்றாண்டு விழாவிற்காக திரு.கல்யாணராமன் தொகுத்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரை.