“காஃபி தாகம் எடுக்குது” என்பாள் எனதொரு தங்கை. அயர்ச்சியை இதைவிட அழகாகச் சொல்ல முடியாதென்று தோன்றும் எனக்கு.

பால்யத்திலிருந்து பதினுக்கு, பதினிலிருந்து உலகுக்கு என்று பகுதிப் பகுதியாக நிகழ வேண்டியது மனித வாழ்வின் நகர்வு. இதனைச் சிதைத்து, வரம்புகளை அழித்து, வாழ்க்கை ஆனந்தை அவன் பால்யத்திலிருந்து நேராக உலகுக்குள் தள்ளிவிடுகிறது. உலகின் ஒளியிலிருந்து விலகி, தனக்கு விதிக்கப்பட்ட இருளுக்குள் சென்றவன், மீண்டு உலகுக்குள் திரும்பும்போது இருளடைத்த மங்கல் ஒளியே அவனுக்கு எஞ்சுகிறது. ஒருவனது மொத்த வாழ்க்கையில் ஒரு முக்கியமான பருவம் முழுக்கத் தொலைந்ததை இந்தத் தலைப்பைக் காட்டிலும் நேர்த்தியாகச் சொல்லிவிட முடியாது என்று இப்போது தோன்றுகிறது. மிட்டாய் பசி!

இந்த நாவல் முழுக்க ஆனந்தின் வாழ்க்கையை, அதிலும் குறிப்பாக, முப்பதாண்டுகளுக்கு உட்பட்ட வாழ்க்கையைச் சொல்வதாக இருந்தாலும், இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள் கவனம் ஈர்க்கிறார்கள். நடந்தும், ஓடியும், கடந்தும், நின்றுமாகத் தங்கள் பாதச் சுவடுகளை அவன் வாழ்வெங்கும் விட்டுவைத்திருக்கிறார்கள்.

மழை வருகிறதா என்று அவ்வப்போது வானத்தைப் பார்த்துக்கொள்கிற ஒருத்தி, வருகிறாற் போல வந்து நனைக்காமல் செல்வதை வாழ்வென்று எப்படி நம்புவாள்? “செல்லம்மா மற்றும் ஒரு பெண்ணாகத் தன் மனத்தைக் கொன்றாள்” என்பது எனக்கு மனப்பாடமாகிவிட்டது. இன்னும் கொஞ்சம் அன்பான வாழ்க்கை தனக்கு அமைந்திருக்கலாம் என்று யார்தான் நினைக்க மாட்டார்கள்? செல்லம்மா உலர்ந்த மனத்துடனேயே சகலத்தையும் அணுகுகிறாள். தன்னிடம் ஈரம் கோரி நிற்கும் கன்றுக்கு அன்பைப் பொழிய மறுக்கிறாள், தவிர்க்கிறாள். கணக்கற்று அருள்வதெல்லாம் மழையானவர்களின் வேலை, தான் வெறுக்காமல் இருப்பதே போதும் என்று நம்புகிறாள். பொறுத்துக்கொண்டு வாழ்வதன் பெயர் வாழ்வா? எங்கிருந்தோ வரும் ஈரக்காற்றை, இலேசான தயக்கத்துக்குப் பிறகு, பற்றிக்கொள்கிறாள். முந்தைய புழுக்கத்தை அப்படியே விட்டுவிட அவளுக்குச் சம்மதம் என்பதைவிட அதுவே அவள் விருப்பமாக இருக்கிறது. அவள் மூச்சுக்குக் குளிர்காற்று கிடைத்து வெளியேறவும், ஆனந்த் மூச்சுமுட்ட அடைபடவுமான அடுத்தக் காட்சியில் அவள்தான் இல்லவே இல்லையே! அவளது மின்னற்பொழுத்துக்கான மறுவருகை ஆனந்துக்கு நேர்த்திதரும் புழுக்கம் இதன் தொடர்ச்சியாகக் கச்சிதமாகவே அமைகிறது. ஆனாலும், செல்லம்மாவின் பறத்தலில் ஒரு சிறு ஆறுதல் தோன்றுவதைத் தவிர்க்கவோ புறக்கணிக்கவோ முடியவில்லை.

ஆனந்த் பார்த்தேயிராத ஜெகா அவன் பிறப்பதற்கு முன்பாகவே அவன் கதையைத் திருப்பி அமைக்கிறாள். செல்லம்மாவுக்கு, தன் வாழ்க்கை இப்படியிருக்க விதிக்கப்பட்டது என்பதைவிட இதற்குள் தான் தள்ளப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் உறுதியாக வளரக் காரணமானவள் ஜெகா. இவர்களுடைய தொடக்ககாலத் தோழமையின் நெருக்கத்தை “அவள்தான் செல்லம்மாவுடைய மனசாட்சியம்” என்று மிக இயல்பாக முன்வைக்கிறார் ஆசிரியர். ஆனால் ஜெகாவின் மனத்துக்கு சாட்சியம் ஏதுமில்லை. மார்ஸின் நண்பன் இவளையே முறைப்பதாகச் சொல்லி செல்லம்மா பேசும்போது அதை மிக இயல்பாக ஒடித்துச் செல்கிறாள் ஜெகா. அவளுடைய விருப்பு வெறுப்புகள் பற்றிய அறிவிப்புகள் ஏதுமில்லை. ஒருவேளை செல்லம்மாவுக்கும் ஜெகாவுக்குமான சினேகம் தழைத்திருந்தால், செல்லம்மாவின் உலர்வுக்கும் திலகாவின் சகதிக்கும் இடைப்பட்ட ஓர் உறுதியான சில்லிப்பை ஜெகாவே ஆனந்துக்கு அளித்திருக்கலாம். ஆனந்துக்கு அடைபட்ட திசைகளில் எதோ ஒன்றை ஜெகா இலேசாகத் திறந்திருக்கலாம், கறுப்பும் வெள்ளையுமற்ற, அவற்றைக் காட்டிலும் குழப்பமான சாம்பலுமற்ற எதோ ஒரு நிறத்தில் ஒரு மிட்டாயை அவளே ஆனந்துக்கு அருளியிருக்கலாம்.

தயாவின் அம்மாவுக்கும் அவளுடைய அண்ணிக்கும்கூட ஆனந்தின் வாழ்க்கைப் பாதையில் ஒரு கல்லைப் புரட்டும் வேலைகூட இல்லை என்று சொல்லிவிட முடியாது. “இன்னுமா சபரி இவன்கூட சேந்துட்டிருக்கே?” என்று யதார்த்தமாகவோ வேறு விதமாகவோ கேட்டு வைத்த சபரியின் அம்மா ஆனந்தின் மனவெளிக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்தித்தான் சென்றிருக்கிறாள். தளும்பத் தளும்ப லஸ்ஸியுடன் அன்பைக் கொடுத்து, முதலாளி மனைவி என்பதைக் காட்டிலும் உயர்ந்த இடத்தை அவன் மனபீடத்துக்குள் ஏற்ற “தீதி” அவன் கண்களின் தீயை ஒரு இடத்திலேனும் தணித்ததே மிட்டாய் பசியின் வலிமை. ஆசிரியர் ஆத்மார்த்தி இவ்விடத்தில் சொல்கிறார், “அரிசியும் ரொட்டியும் கடவுளின் நாமகரணங்கள்தான்”.

திலகத்தின் திகட்டும் அன்பும் செல்லம்மாவின் அழுத்தமும் இணைந்து வந்தாற்போலொரு அனுராதா. செல்லம்மாவின் மனத்திருகலுக்குச் சற்றும் குறையாத மறுதிருகலுடன் ஆனந்தை அணுகும் அனுராதாவின் அன்பும் உலர்ந்தே இருக்கிறது. அவளுக்கு உண்மைகள் மேல் காதலில்லை, அவள் காதலில் உண்மை இருந்ததா என்பதைத் தெரிந்துகொள்ளவே முடியாது.

லக்ஷ்மா ஆனந்தின் நோய்மையைப் புரிந்துகொள்கிறாள். பரிவு, பரிதாபம், ஆதுரம் என்பதையெல்லாம் தாண்டி இயல்பாக எதிர்கொள்கிறாள். மிகவும் தேவையான, வேறு வழியே இல்லை எனுமிடத்தில் அவன் பக்கத்துக்கான தன் வாதமாகவே அதனை முன்வைக்கிறாள். ஆனால் அதுவுமே ஆனந்தை அயர்த்திவிடுகிறது. ஆனந்தின் கனவில் பல்லக்கில் வந்து முகம் காட்டாமல் வளைவில் திரும்பி மறைபவள் ஒரே ஒருத்தி அல்ல!

கதை முழுக்க வரும் மனிதர்களில் யாரையாவது துணைக் கதாபாத்திரம் என்று சொல்லலாம் என்றால் மிட்டாய் பசி என்பது இதில் உலவும் கதை மாந்தர் ஒவ்வொருவருக்கும் பொருந்திப் போவதை வியப்பதில்தான் நிறைகிறது அந்த முயற்சி.

“அந்தப் பகுதியில் எதற்குக் குறையுண்டோ பசங்களுக்குக் குறையே இருக்காது. பெண்பிள்ளைகள் திண்ணைகளில் அமர்ந்து தமது ஆர்வங்களைப் பேசிப் பகிர்ந்துகொண்டிருக்கையில் பசங்கள் கூட்டம் கூட்டமாய் விளையாடுவார்கள்.” மொத்தப் பெண்பிள்ளைக் கூட்டத்துக்குமான மிட்டாய் பசியைச் சொல்ல இவ்விரண்டு வரிகள் போதும்.

மர்ஃபி ரேடியோவுடன் தலையை ஆட்டியபடிப் பேசிக்கொண்டிருந்த ஜெகாவுக்கோ, என் ஃப்ரெண்டுப்பா என்று கடைசிவரை போராடிப்பார்த்த சபரிக்கோ, எதற்காகத்தான் காத்திருக்கிறோம் என்பதோ இன்னும் சொல்லப்போனால் காத்திருக்கிறோமே என்பதோகூடப் பெரிதாகப் புரிந்துவிடாத திலகாவுக்கோ, பெரிய பெரிய சாக்லேட் பட்டைகள் கிட்டிய ராம்பிரபுவுக்கோ, ‘எசகேடான’ கடைசிக்கட்டம் கண்ட அவன் மாமா செல்லப்பாண்டிக்கோ, கடையடைக்குமுன் அவசரமாக சிகரெட்டைக் கைப்பற்றிய தயாளனுக்கோ, இன்னும் அனுராதாவுக்கோ, கிட்டுவுக்கோ, லக்ஷ்மாவுக்கோ, ஜோஷிக்கோ ஒரு மிட்டாய் பசி இல்லை என்று சொல்லிவிட முடியாது!

“தன்னை முன்னிறுத்தி ஒரு தேவையை உருவாக்கத் தெரிந்தவனே சிறந்த விலையைப் பெறுகிறான்” என்று ராஜூவைப் பற்றிச் சொல்கிறார் ஆசிரியர். தான் இருக்கும் தளத்திலேயே தனக்கு மட்டும் ஒரு மேடு வேண்டும் என்று விரும்புகிறான் ராஜு. அவன் கணக்குகளில் பலவும் பலிக்கின்றன. ஆனால் அவன் ஈட்டிய விலை மொத்தமும், அதுவரையில் அவன் கணக்கில் வைத்துக்கொண்டு தொழுதுவந்த அடிகள் மொத்தமும், ஒரு கண்ணாடி பிம்பமாகி, யாரோ எறிந்த ஒரு கல்லால் நொறுங்குகின்றன. வேறோர் இடத்தில், “தான் நிற்கிற நிலத்தின் அத்தனை துல்லியங்களையும் அறிந்த மிருகம்தான் அதனை ஆளும்” என்று கிட்டுவைச் சுட்டுகிறார். இருந்த இடத்திலேயே இருக்கிறாற் போலத் தோன்றினாலும் கிட்டுவின் ஆளுகைக்கு எந்தக் குறைவும் நேரவில்லை! எத்தனை துல்லியம்!

இந்த நாவலில் நான் எதிர்பார்த்த எந்தவோர் இடத்திலும் தென்படாமல் இன்னமும் என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு சொல் ‘முறையிடல்’. மிட்டாய் பசியில் எங்குமே ஆனந்த் முறையிடவில்லை. யாரைப் பற்றியும் குறைபாடவில்லை. கொல்லப்படவேண்டிய ஆட்களின் பட்டியலை அவ்வப்போது சரிபார்த்துத் திருத்தி அமைத்துக்கொள்கிறான். எதன் மீதும் ஆசைப்படாமல் அப்படி அப்படியே விட்டுவிட்டு அடுத்த நிழலுக்குள் புகுந்துகொள்ள அவனுக்குச் சம்மதம். ‘ஆளுக்காள் உப்பள்ளிப் போட்டாற் போலிருக்கும்’ வாழ்க்கையை எதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு, எதையாவது இட்டு நிரப்பி, கொஞ்சமேனும் சரிக்கட்ட முடியுமா என்று மட்டுமே பார்க்கிறான். அத்தனை கசப்பையும் உமிழும் வாய்ப்பு கிடைத்த இடத்திலும், ராம் பிரபுவிடம், அந்த உப்பு மலையின் ஒரு நுனியை மட்டுமே இலேசாக, மிக இலேசாக வெளிப்படுத்திவிட்டு, மீண்டும் தன் புதிய உலகுக்குள் திரும்புகிறான்.

வாழ்க்கைப் பின்னல் முழுக்க பிசிறும் விலகலுமாக வாய்த்த ஆனந்துக்கும், அதற்கு நேரெதிரான அழகிய இறுக்கமான இழைகள் ஊடாடும் வாழ்வை வாழும் ஜோஷிக்குமான பிணைப்பின் இணக்கமும், இலகுத் தன்மையும், இந்த நாவல் நிறையும் இடத்திற்கு மிகச் சரியான அடித்தளமாக அமைகின்றன. ஆனந்தின் மும்பை வாழ்க்கையில் சிக்கல் விழும்போது, “மொழி அதை அறிந்துகொள்ளாதவன் மீதான வன்மமாக மாறுகிறது” என்று அதன் மையத்தை அறிவிக்கிறார் ஆத்மார்த்தி. இந்தச் சிக்கலை வெகு இயல்பாகத் தவிர்த்த மனிதராக அறிமுகமாகிறார் ஜோஷி. தானிருக்கும் நகரின் மொழியையும் கற்றுக்கொண்டு, தன் நிலத்தின் மிடுக்கையும் விட்டுக்கொடுக்காதவர் அவர். “உன் ஊரை நான் எத்தனை அறிந்திருக்கிறேன் பார், உன் பாஷையை நான் எப்படிப் பேசுகிறேன் பார் என்று அந்த மண்ணின் மைந்தர்களிடம் எப்போதும் காண்பித்துக்கொண்டே இருப்பதில்தான் ஜோஷிக்குப் பெருமை” என்கிறார் ஆசிரியர்.

ஆனந்துக்கு, கசகசக்கும் ஃபைல் ரூமில் தொடங்கிய அழுத்தம் மிக விஸ்தீரணமான, ஒரு நகரையே அவன் கண்களுக்குள் நிறைத்துத் தரும் மொட்டைமாடியில் விலகுவது என்பது மிகச் சரியான நியாயம். “எனக்கு வாழ்ந்தாப்லயே இல்ல” என்றும் “இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம்” என்றும் அழுத்தமாகச் சொல்லும் அந்த மனிதனுக்கு அந்த நேரம் அவன் ஆசைப்படும் எதுவோ ஒரு தின்பண்டத்தைக் கொடுத்துச் சாப்பிடவைத்துக் கண்கொட்டாமல் திலகத்தையைப் போலப் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றே தோன்றியது. அது மிட்டாயாக இருந்தாலும் சரிதான்.

நாவல் நிறைவுற்றதும் வாசித்த மனத்துக்குள் அலை புரண்டு மேலெழுவது மிட்டாய்த் துண்டானாலும் சரி, அல்லது பசியானாலும் சரி, அது இந்த எழுத்துக்கான வெற்றி, ஆத்மார்த்தியின் வெற்றி. 

*

நூல்: மிட்டாய் பசி– ஆத்மார்த்தி, தமிழினி வெளியீடு.

1 comment

Govarthanan ts July 27, 2021 - 4:20 pm

திரு ஆத்மார்த்தி அவர்களின் இனிமையான படைப்பு. தமிழின் இனிமையை சுவைக்கத் தூண்டும் தித்திக்கும் தமிழ் பண்டம் தான் இந்த மிட்டாய் பசி,

Comments are closed.