அரேபியப் புனைகதைக்கான பன்னாட்டு விருதுக்கு 2014-ஆம் ஆண்டின் பட்டியலில் ஈராக் நாவலாசிரியர் அகமத் சாதவி இடம்பெற்றது ஆச்சரியப்படக் கூடியது அல்ல. இளைய ஈராக் நாவலாசிரியர் அவருடைய மூன்றாவது நாவலான Frankenstein in Baghdad (2013) வெளியீட்டுக்குப் பின் திடீரென புகழின் உச்சிக்குச் சென்றுவிட்டார். அந்த நாவல் எலும்பும் தோலுமான ஒரு மனிதனின் கதையைச் சற்று நடுங்க வைக்கும் அச்சுறுத்தலோடு கூறுகிறது. அவன் 2005-ல் குடிமை யுத்தத்தால் நைந்து போன பாக்தாத் வீதிகளில் அலைந்து, ஒரு மனிதனின் சடலத்தை ஒன்றிணைக்க மனித உடல் பாகங்களைத் தேடுகிறான். அது நிறைவடைந்தவுடன், அந்த உடலைக் கட்டமைத்த உடல் பாகங்களுக்கு உரியவர்களின் சார்பாக, தைக்கப்பட்ட அந்தச் சடலம் பழிவாங்கும் பயணத்தை மேற்கொள்கிறது.
கவிஞரும் திரைக்கதை ஆசிரியருமான சாதவி, Anniversary of Bad Songs (2000) என்ற கவிதைத் தொகுப்பு, The Beautiful Country (2004), Indeed He Dreams or Plays or Dies (2008) ஆகிய இரண்டு நாவல்கள் போன்றவற்றின் ஆசிரியர்.
மேன் புக்கர் விருதை மாதிரியாகக் கொண்ட IPAF, உயர்தர அரேபியப் புனைகதையின் அங்கீகாரத்தை ஊக்கப்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வருடாந்திர இலக்கிய விருது. இந்த ஆண்டின் 156 பதிவுகளில் ஆறு வலுவான படைப்புகள் தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அபுதாபி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் ஏப்ரல் 29, 2014 அன்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். தேர்வுப்பட்டியலில் உள்ள பிற ஆளுமைகள் மற்றொரு ஈராக் எழுத்தாளர்- இனாம் கச்சாச்சி, இரண்டு மொராக்கோ நாட்டினர்- அப்தெல்ரஹீம் ராஹ்பிபி , யூசுப் ஃபாதெல், ஒரு எகிப்து நாட்டவர்- அகமது மெளரத், ஒரு சிரிய நாட்டவர்- காலெத் காலிஃபா.
விருது பெறுவதற்கு முன் சாதவியுடன் அவருடைய நாவல் பற்றியும், அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பிறகு ஈராக் தொடர்பான போக்கு பற்றியும், அதே போல ஒரு நாவலாசிரியராக அவர் மீதான அந்த விருது தரும் தாக்கம் பற்றிய அவருடைய எதிர்பார்ப்புகள் பற்றியும் அல்-முஸ்தஃபா நஜ்ஜார் உரையாடுகிறார்.
*
அல்-முஸ்தஃபா நஜ்ஜார்: “Frankenstein” ஒரு பொதுவான கரு, பிரிட்டிஷ் நாவலாசிரியர் மேரி ஷெல்லியின் நாவலை அடிப்படையாகக் கொண்டது. Frankenstein in Baghdad இந்த நாவலால் தூண்டுதல் பெற்றதா?
அகமத் சாதவி: இந்த நாவலில் ஃப்ரான்க்கென்ஸ்டைன் பற்றி இரண்டு குறிப்புகள் மட்டும் உள்ளன. ஒன்று, ஜெர்மானியப் பத்திரிகையாளருடையது, மற்றொன்று பாகிர் அல்-சாயிதியினுடையது. இந்த இரண்டு குறிப்புகளுக்கு அப்பால், இந்த நாவலில் வரும் பாக்தாத் மனிதர்கள் “அதன்–பெயர்-என்ன” (What’s-its-name) அல்லது “பெயரில்லாதவன்” என அந்நியப் பிசாசை அழைப்பது. அது ஃப்ரான்க்கென்ஸ்டைன் போலத் தோன்றுவது அல்லது அவ்வாறு இல்லாமல் இருப்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.
எவ்வாறாயினும், ஷெல்லியின் Frankenstein நாவலிலிருந்து Frankenstein in Baghdad ஒரு மாறுபட்ட கரு. இந்த நாவலில் உள்ள ஃப்ரான்க்கென்ஸ்டைன் தற்போதைய ஈராக் சிக்கல்களின் அழுத்தமான குறியீடு. திகில் பற்றிய ஃப்ரான்க்கென்ஸ்டைனியச் சூழல் நாவலால் உள்ளடக்கப்படும் காலகட்டத்தில் ஈராக்கில் வலுவாக வேரூன்றி உள்ளது.
கேள்வி: ”அதன்-பெயர்-என்ன” அல்லது “எந்தக் குறிப்பிட்ட மனிதரையோ அல்லது உயிரினத்தையோ குறிக்காத” அந்தச் சடலத்தின் பாத்திர இயல்பு பற்றியும், அதன் “உயர்ந்த நோக்கம்” பற்றிய இயல்பு பற்றியும் கூறுங்கள்.
அதன்-பெயர்-என்ன என்பது மூன்றுவித விளக்கங்களைக் கொண்டது, ஒவ்வொன்றும் மூன்று முட்டாள்களில் ஒருவரால் உருவாக்கப்பட்டது.
முதல் வாசிப்புப்படி, வேறுபட்ட ஈராக்கிய இனங்களிலிருந்தும் பிரிவுகளிலிருந்தும் எடுக்கப்பட்ட உறுப்புகளால் அது உருவாக்கப்பட்டிருப்பதால், அதன்-பெயர்-என்ன என்பது முழுமையான ஈராக் மனிதனைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அதன்-பெயர்-என்ன என்பது வார்ப்புப் பானை அடையாளங்களின் அரிதான உதாரணங்கள். ஈராக் 20-ஆம் நூற்றாண்டில் உருவானதிலிருந்து இந்த நாட்பட்ட சிக்கல்களில் பாதிக்கப்பட்டு வருகிறது. ஈராக்கிய தேசிய அடையாளச் சிக்கல் சதாம் ஹுசேன் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின் முரட்டுத்தனமாக வெடித்தெழுந்தது.
வாசிப்பின் மற்றொரு போக்கு அந்தப் பிசாசு, மீட்பரைக் குறிக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரின் சார்பாகப் பழிவாங்கும் அதன் ஆசையைத் தந்தது. இன்றைய ஈராக்கில் பெருகிவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவது என்பது அனைவருக்குமான வீடு பேறு. இங்கு ஒற்றை மனிதனிடத்தில் சாதிக்கப்பட்டு வரும் ஆற்றுதல் கருத்தியலின் மீபெளதீகப் பார்வையின் பிரதிபலிப்பை நாம் உணர்கிறோம். இந்த ஆற்றுதல் கருத்தியலை இந்த நாவல் கேள்விக்குட்படுத்துகிறது. அத்தகைய கருத்தியல் அரேபிய- மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல்ரீதியான கொடுங்கோல் ஆட்சியின் உருவாக்கத்திற்கு வழி அமைத்தது. துரதிர்ஷ்டவசமாக ஈராக்கில் இன்னமும் கொடுங்கோல் ஆட்சி தொடர்கிறது. அது சதாம் ஹுசேனின் கொடுங்கோல் ஆட்சியுடன் முடிவுக்கு வரவில்லை.
மூன்றாவது வாசிப்பு பெருந்திரள் அழிவு அத்தியாயமாக அந்தப் பிசாசைப் பார்வையிடுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அதன்-பெயர்-என்ன என்பது பனிப்பந்து விளைவின் ஒரு வகைமையுடன் வளர்ந்துவரும் அழிவின் நாடகீயப் பிரதிநிதித்துவமாக மாறுகிறது.
கேள்வி: Frankenstein in Baghdad ஒரு கேலிக்கூத்து மூலமாக ஈராக் துயரத்தை எதிர்கொள்கிறது. அது முதன்மையாக ஈராக் யுத்த இலக்கியத்திலிருந்து மாறுபட்டது. உதாரணத்திற்கு, உங்கள் நூலில், நாம் நமது தினசரி வாழ்வில் எதிர்கொள்ளாத பாத்திரங்கள் உலவுகின்றன. அதாவது “மந்திரவாதி,” “சொகுசுப் பேர்வழி”, அந்த “மூன்று முட்டாள்கள்” போல. இந்தச் சிக்கலில் நீங்கள் எதைக் கைப்பற்ற விழைகிறீர்கள்?
பத்தாவது அத்தியாயத்தில் தோன்றும், அதன்-பெயர்-என்ன என்பதால் கூறப்படும் இந்தப் பாத்திரங்கள் நிதர்சனத்தைக் காட்டிலும் குறியீடு ரீதியானவை. ஆயினும் அவை ஈராக்கில் உள்ள முக்கியமான, மையப் பாத்திரங்களின் உதாரணங்களாகச் செயல்படுகின்றன. உதாரணத்திற்கு அந்தச் சொகுசுப் பேர்வழி பாகிர் அல்-சயிதிக்கு நிகரானவன். அந்த மந்திரவாதி, நாவலில் ஈராக் அரசுக்காகப் பணியாற்றும் மாபெரும் நற்சொல்-கூறுபவனைப் போன்றவன்.
கேலிக்கூத்தின் பயன், வாசிப்பவருக்கு அதிக உற்சாகத்தை வழங்குகிறது. மேலும் அது பாரம்பரியமற்ற வழியில் மெய்மையை எதிர்கொள்ள ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது. கேலிக்கூத்தின் இந்த அம்சம் செயலுக்கு, அதன் இரக்கமற்ற செய்கையைத் தணித்தவாறு ஒரு மகிழ்ச்சியின் ஸ்பரிசத்தைக் கூட்டுகிறது.
கேள்வி: மூன்றாவது அத்தியாயம் தங்கள் சிதறிய சடலங்களைத் தேடும் தற்கொலைப் படையினரால் பாதிக்கப்பட்ட ஆன்மாக்கள் பற்றியது. அத்தகைய சித்திரங்கள் நாவலை ஈராக்கின் நிதர்சனத்திலிருந்து விலக்குகின்றன என நினைக்கிறீர்களா?
இந்த அத்தியாயம் ஒரு கட்டமைப்புச் செயலைப் பெற்றுள்ளது. ஒரு அலையும் ஆன்மா எவ்வாறு அதன்-பெயர்-என்ன என்பதன் சடலத்தினுள் நுழைகிறது என்பதைப் பற்றிக் கூறுகிறது. துண்டுகளாகச் சிதறிக் கிடக்கும் தங்கள் அன்பிற்குரியவரின் உடல்களைப் புதைக்க முடியாதவர்களின் மனதில் என்ன உள்ளது என்பதையும் பொதுவாகப் பிரதிபலிக்கிறது. தங்கள் நேசத்திற்குரியவர்களின் ஆன்மாக்கள் தங்கள் சடலங்களைத் தேடிக்கொண்டே இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். ஒரு ஆழமான தளத்தில், இந்த அத்தியாயம் குழப்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் மத்தியில், பாதுகாப்புத் தருணத்தை அறியாமல் அலையும் ஆன்மாக்கள் போல நாம் எவ்வாறு பயணிப்பது என்பதைக் காட்டுகிறது.
கேள்வி: இன்றைய ஈராக்கில் பாதிக்கப்பட்ட அனைவரின் சார்பாகப் பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஃப்ரான்க்கென்ஸ்டைனியப் பிசாசின் தேவை உள்ளதா?
நிச்சயமாக இல்லை! உண்மையில், நாவல் எதிர்நிலை பற்றி பேசுகிறது. அதன்-பெயர்-என்ன என்பது நமது தனிப்பட்ட தர நீதி, பழிச்செயல், பழிவாங்கல், தண்டனைகளைப் பிரதிபலிக்கிறது. ஒரு அணிக்கான நீதி என்பது மற்றொருவருக்கு அநீதி.
ஈராக்கிய ஃப்ரான்க்கென்ஸ்டைன் மாறுபட்ட அணிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உடல் பாகங்களால் உருவாக்கப்பட்டது. அதில் உள்ள ஒவ்வொன்றும் மற்றவரை அதன் எதிரியாகப் பாவிக்கிறது. எனவே, இந்த ஃப்ரான்க்கென்ஸ்டைன் தன்னையே கொன்றவாறு மாய்ந்து போகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அதன்-பெயர்-என்ன என்பது ஒவ்வொருவரையும் கொல்லும் ஒவ்வொருவரின் புனைவுரீதியான பிரதிநிதித்துவச் செயல். இந்தப் பாத்திரம் தீர்வுக்கு மாறாக நீண்ட நெருக்கடிகளின் பார்வைரீதியான பிரதிநிதித்துவம்.
கேள்வி: நாவல் பாத்திரங்களில் ஒன்று கூறுகிறது: “நாம் கடந்து செல்லும் அனைத்து துயரங்களும் அச்சத்தின் காரணமாக உருவானவை.” இன்றைய ஈராக் மக்களை அச்சம் எந்த அளவுக்கு தீண்டுகிறது?
அமெரிக்க ஆக்கிரமிப்பின் ஆரம்ப நாட்களிலும் சதாம் ஹுசேனின் ஆட்சிக்குப் பிறகும், பாக்தாத்தில் எந்தவிதப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தாமல் அமெரிக்க இராணுவம் அதன் இராணுவத் தளங்களிலேயே தங்கிவிட்டது. நகரத்தில் ஒரு காவல் அதிகாரிகூட இருக்கவில்லை.
அதே சமயம், அருகில் வசிக்கும் யாராவது ஒருவர் குண்டடிக்கு இரையாகிக்கொண்டிருந்தனர். சன்னி தீவிரவாதிகள் வருகிறார்கள் எனக் கூச்சலிட்டவாறு விடியும் வரை இது தொடர்ந்துகொண்டிருந்தது. இந்த வதந்திகளை ஆராய்வது பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. ஏனென்றால் ஆழ்ந்த அச்சம் அவர்களிடத்தில் ஒரு நிதர்சனத்தைக் கட்டமைத்தது.
மற்றொரு பக்கம், ஒரு சமயம் தீவிரவாதிகள் வருகிறார்கள் என்ற வதந்தி பரவியதால், மொசூலில் உள்ள ஒரு சந்தையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஆனால் ஒரு இறுதி ஊர்வலத்திற்காக துருக்கியர்கள் நடந்துகொண்டிருந்தனர்.
அச்சம் மாறுபட்ட வடிவங்களில் ஈராக்கியர்களிடம் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இது உண்மையில், 2006- 2007-ல் வெடித்த பிரிவினைவாத வன்முறையின் போது, பல ஈராக்கியர்கள் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் அஞ்சலி செலுத்த வழி அமைத்தது. அந்தச் சமயத்தில், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் நம்பிக்கையில் மதரீதியான இராணுவத்தை எதிர்ப்பது மதவாத அறிவுஜீவிகளுக்குப் பொதுவான ஒன்றாக இருந்தது.
கேள்வி: உங்கள் நாவல், பாதிக்கப்பட்டவர்கள்– குற்றவாளிகளின் உடல் பாகங்களால் உருவான அதன்-பெயர்-என்ன என்பதன் சடலம் போல, இரட்டை எதிர்நிலைகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. எதற்காக இந்த இரட்டை நிலைகளைப் பயன்படுத்தினீர்கள்?
அதன்-பெயர்-என்ன என்பதன் முரண் ஒப்பனை வழியாக, நாம் வாழும் நிதர்சனத்தை அது குறிக்கிறது. அவர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டவர்கள் என யாரும் இன்று கோரவில்லை. அவர்கள் எந்தவிதத்திலும் வன்முறைச் சூழலின் தொடர்ச்சிக்கும் பாதகச் செயல்பாட்டுக்கும் பங்களிக்கவில்லை. பாதித்தவரின் வலியில் மகிழ்ச்சி அடையும் மனிதர்கள் பற்றி பத்திரிகைகளுக்கு நான் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் ஒரு மாறுபட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.
கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருந்தால், இன்றைய ஈராக்கியர் நிலை போன்றதைத் தடுத்து நிறுத்த ஒரு அறம் சார்ந்த தருணம் இருந்தால், நாம் உண்மையாகவே பாதிக்கப்பட்டவர் அல்ல என்பதையும் ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்டவர்களை உருவாக்க நாம் அனைவரும் உதவுகிறோம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி: எந்த எழுத்து நிலைகளை Frankenstein in Baghdad கடந்துசெல்கிறது?
எழுத்துச் செயல்பாடு நான்கு ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. பெரும்பாலான நேரங்களைத் தேடுதல்களிலும், நேர்காணல்கள் காண்பதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும், விவரங்களைத் திரட்டுவதிலும் கழித்தேன். நாவலின் சுருக்கம் 2008 கோடையில் www.kikah.com வலைத்தளத்தில் வெளியானது. இரண்டு வரைவு அத்தியாயங்கள் ஏப்ரல் 2011-ல் 40 வயதிற்குக் கீழ் உள்ளவர்களின் சிறந்த அரபு எழுத்தாளர்களின் படைப்புகளின் ஒரு தொகுப்பான Bloomsbury’s Beirut 39-ல் ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் வெளியானது.
கேள்வி: உங்கள் மூன்றாவது நாவல் IPAF தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? நீங்கள் இதை எதிர்பார்த்தீர்களா?
இந்த நாவல் வாசகர் மீது சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தேன். இது உண்மையில் ஒரு நிகழ்வு. முதல் பதிப்பு IPAF தேர்வுப்பட்டியல் அறிவிப்புக்கு முன்னரே விற்றுத் தீர்ந்துவிட்டது. எனது நம்பிக்கைக்கு மாறாக, கருத்துக் கணிப்புகளை உருவாக்குவது – குறிப்பாக, அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் இந்த வருடம் இருந்த போதிலும் – மிகக் கடினமானது.
இறுதிப் பட்டியலை அடைந்த இந்த நாவல் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. அது நூலுக்கு அதிக விளம்பரத்தை ஈட்டித் தந்தது. அது [அரேபிய] புக்கரை [அதாவது IPAF] வென்றால், தனிப்பட்ட முறையிலும், பொதுவாக புதிய ஈராக் நாவலுக்கும்கூட அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது.
*
ஆங்கில மூலம்: Iraqi Author Ahmed Saadawi: ‘The Novel Implicitly Questions This Concept of Salvation’ by Al-Mustafa Najjar.