தொலைபேசியை வைத்துவிட்டு அச்சகத்திலிருந்து கிருஷ்ணமூர்த்தி வெளியே வந்தபோது மழை வலுத்திருந்தது. மழையில் கரையும் தெருவிளக்கின் ஒளியை உற்றுப் பார்த்தபடி ஜன்னலருகே அவன்.

“அப்பாதானே?”

அறையின் எதிர்மூலையில் பாய் மீது கிடந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு சுவரில் சாய்ந்தான் கிருஷ்ணமூர்த்தி.

“சாயங்காலத்துலேர்ந்து எத்தனாவது போன் இது?”

விரலிடுக்கில் புகைந்த சிகரெட்டின் சாம்பலைத் தட்டி உதிர்த்தான். 

“அவருக்கு இன்னும் பயம். மறுபடியும் மடத்தனமா ஏதாவது செஞ்சுக்குவேன்னு யோசிக்கறார் போல”. கண்ணீரைத் துடைக்கத் தோன்றாமல் கனத்த மழையை வெறித்திருந்தான். ஓட்டுக் கூரையில் விழுந்து தாழ்வாரத்தில் இறங்கின நீர்ச்சரடுகள். 

இடதுகை மணிக்கட்டை உயர்த்திப் பார்த்தான். சற்றே மேடிட்டுச் சிவந்த இரண்டு கோடுகள். அழுத்தினால் இப்போதும் வலிக்கிறது. புத்தம் புது டோபாஸ் பிளேடு சதையை வெட்டி உள்ளிறங்கிய சுவடுகள். தீர்ந்துபோன சிகரெட்டை நசுக்கி வெளியில் எறிந்தான். 

மூலையில் சுருண்ட பாயில் படுத்திருந்த கிருஷ்ணமூர்த்தி புத்தகத்திலிருந்து தலையை நிமிர்த்தவில்லை. மையும் மண்ணெண்ணையும் கலந்த வாடையுடன் வந்த காற்று ஜன்னல் வழியாக நழுவி அறைக்குள் புகுந்து சுழன்றது. அறைக்கு அடுத்திருந்த அச்சகத்தில் பிரஸ்ஸால் தேய்க்கும் சத்தம். கோர்த்து சட்டகத்தில் இறுக்கியிருக்கும் எழுத்துகளின் மீதிருக்கும் மையைத் தேய்த்துக் கழுவுகிறான் மணியன். இன்னும் அவனுக்கு வேலை முடியவில்லை. 

கிளிப்பில் செருகியிருந்த தாட்கள் படபடத்தன. கருப்பு மசியுடனான பேனா மூடப்படாமல் கிடந்தது. அருகிலிருந்த சிகரெட் பெட்டியை எடுத்தான். மிச்சமிருந்த ஒன்றைப் பற்றவைத்தான். தீக்குச்சி உரசலின் சத்தம்கேட்டு தலைநிமிர்ந்தான் கிருஷ்ணமூர்த்தி. 

“முடிஞ்சுதா? விடியற வரைக்கும் என்ன பண்றது?”

அவன் பதில் சொல்லாமல் அப்போதுதான் முதல் சிகரெட்டைப் புகைப்பவன் போல நிதானத்துடன் உறிஞ்சினான். 

சீராகப் பெய்துகொண்டிருந்தது மழை. தெருவிளக்கின் மங்கலான ஒளியில் சாய்கோணத்தில் விழுந்துகொண்டிருந்தன கனத்த மழைத்துளிகள். வாளியில் நீர் வழிந்து சொட்டும் சத்தம். நடமாட்டமின்றி அடங்கிக் கிடந்தது தெரு. கால்களை நீட்டிக்கொண்டான். 

“அப்பா அன்னிக்கு இன்னும் கொஞ்ச நேரங்கழிச்சு பாத்திருக்கலாம்.” 

சட்டென விளக்குகள் அணைந்தன. இருட்டு. ஓசைகள் அடங்கி மழையின் சத்தம் இன்னும் வலுத்தது. 

“கரெண்ட் போயிடுச்சு. மெழுகுவர்த்தியைப் பத்த வை. அங்கதான் இருக்கு.”

“வேண்டாம். இப்பிடியே இருக்கட்டும்.”

சிகரெட்டின் நுனியில் தீக்கங்கு ஒளிர்ந்து அடங்கியது. அச்சகத்தின் வாசலில் சிறிது வெளிச்சம். “அண்ணே, மெழுகுவர்த்தி வேணுமா?” மணியனின் குரல்.

“இல்லடா மணி. உனக்கு இன்னும் வேலை முடியலயா?”

“மெஷினைத் தொடைச்சிட்டு போலாம்னு பாத்தேன்ண்ணா. அதுக்குள்ள கரண்டு போயிடுச்சி.”

சிறிதும் சலிப்பில்லாத உற்சாகமான குரல். எப்போதும் சிரிப்புடனே இருக்கும் அவன் முகத்துக்கு வெகு பொருத்தம். 

“மழை கொறஞ்சிருச்சின்னா நீ போடா. காலையில பாத்துக்கலாம்.”

“இல்லண்ணா. முடிச்சிட்டே போயிடறேன். கொஞ்ச நேரந்தான்” அவன் மெஷினைத் துடைக்கத் தொடங்கிவிட்ட சத்தம் கேட்டது. கிருஷ்ணமூர்த்தி அச்சக வாசலில் நின்று எட்டிப் பார்த்தான். 

“காலையில ஓனர் வர்றதுக்குள்ள கல்யாணப் பத்திரிகை புரூஃபை எடுத்து டேபிள் மேல வெச்சிடணும். இடதுபக்க குத்துவிளக்கு பிளாக்கில முனை ஒடைஞ்சிருந்தது. வேற எடுத்து வெக்கணும். அப்பறமா தொழிற்சங்க அறிக்கை வேற இருக்கு. பாதிதான் கம்போஸ் பண்ணிருக்கேன். இந்த நெட்டை நாகராசனை வேற காணோம்.”

மணியன் சுறுசுறுப்பாக துடைத்துக்கொண்டிருந்தான். இடுப்புக்குக் கீழே தொங்கிய பனியனில் மை கறைகள். நிறம் தெரியாமல் டிராயரிலும் திட்டுத் திட்டாய் கறை. 

“நீ வேணா வீட்டுக்கு சைக்கிள் எடுத்துட்டு போ.”

“உனக்கு வேணாமாண்ணே” என்றவன் ஒரு நொடி சுதாரித்துக்கொண்டு அறைப் பக்கமாய் கைகாட்டி ஜாடை செய்தான். கிருஷ்ணமூர்த்தியும் ஆமோதிப்பது போலத் தலையாட்டினான். 

“மழை பெஞ்சிட்டே இருக்கணும். கரெண்ட் வரக்கூடாது. வெளிச்சமே இருக்கக்கூடாது. இந்த ராத்திரி இப்பிடியே விடியாம பெருசா இருட்டா தீராம போயிட்டே இருக்கணும். அப்பறமா எதுவுமே இருக்கக் கூடாது.” தீக்கங்கு ஒளிர்ந்து அடங்கிட காற்றில் கலைந்தது புகை. 

“எல்லாருக்கும் உன்னை மாதிரியே பைத்தியம் புடிக்கணும்?” அப்படிச் சொல்லியிருக்க வேண்டாம் என்று நினைத்தது போல உடனடியாகவே கிருஷ்ணமூர்த்தியின் குரல் அடங்கியது. 

மழையின் ஓசைக்கு நடுவே சிரிக்கும் சத்தம். 

“பைத்தியந்தான். வேலை வெட்டி இல்லாத பையன்னு அவளும் வேண்டாம்னு சொல்லிட்டா. நான்தான் இன்னும் உசுரோட இருந்து கேவலப்பட்டுட்டு இருக்கறேன். எதுக்கும் உதவாத பைத்தியந்தான்.”

அழுகிறான். இருட்டில் தைரியத்துடன் கண்ணீர் விடுகிறான். கிருஷ்ணமூர்த்தி மெழுகுவர்த்தியைத் தேடி எடுத்திருந்தான். ஆனால் ஏற்றவில்லை. காற்றில் காலண்டர் தாட்கள் படபடத்தன. அதைச் சொல்லியிருக்க வேண்டாமோ? இல்லை. என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவன் அழுதிருப்பான். இன்னும் சற்று நேரம் மின்சாரம் வராமல் மழையும் ஓயாமல் இருந்தால் அவனே நிதானத்துக்கு வந்துவிடுவான். 

கிருஷ்ணமூர்த்தி அப்படியே திண்ணையில் உட்கார்ந்தான். ஈரத்தில் தரை குளிர்ந்திருந்தது. சிகரெட் இருந்தால் இந்த வேளைக்கு இதமாக இருந்திருக்கும். காலிப்பெட்டிதான் கிடக்கிறது. மூச்சை உறிஞ்சியபடி அவன் முகத்தைத் துடைப்பது தெரிந்தது. தணிந்துவிட்டான். இப்போது பேசக்கூடாது. மீண்டும் தொற்றிக்கொள்வான். 

மழையின் சத்தம் குறைந்திருந்தது. மெல்ல கதவருகே நகர்ந்து இலேசாகத் திறந்து எட்டிப் பார்த்தான். குளிர்காற்று அவசராய் உள்ளே புகுந்தது. 

இரகசியங்களைத் திடுக்கிடச் செய்து விரட்டுவது போல மின் விளக்குகள் ஒளிர்ந்தன. 

“டீ சாப்டலாமா?” 

எதுவும் பேசாமல் எழுந்தான். லுங்கி நழுவி விழுந்தது. அவசரமின்றி நிதானமாக எடுத்து இடுப்பில் சுருட்டிக்கொண்டான். கணநேரம் உடையின்றி அவன் நின்ற கோலத்தைப் பார்த்தான் கிருஷ்ணமூர்த்தி. “கோமதீஸ்வரா…”.

“இந்த மசுரு வாழ்க்கையை வாழ்ந்து பாக்கணுமாம். வந்துட்டானுங்க.” ஆணியில் மாட்டியிருந்த சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியில் வந்தான். சாரல் முகத்தில் தெறித்தது. கதவைச் சாத்திக்கொண்டு வாசலில் இறங்கி நடந்தனர். கிருஷ்ணமூர்த்தி முதுகுக்குப் பின்னால் கையை இறுகக் கோர்த்திருந்தான். 

இஸ்திரி வண்டிக்குக் கீழே படுத்திருந்த ஜிம்மி தலைதூக்கிப் பார்த்தது. சோம்பலுடன் வாலாட்டிவிட்டு தலையைத் தரையில் நீட்டிக்கொண்டது. தெருவிளக்கின் ஒளியில் ஈர இலைகள் பளபளத்தன. வீசும் காற்றுக்கு இசைந்தது போல துளிகள் மண்ணில் விழுந்தன.

“அரியர்ஸ் வெச்சு முக்கிட்டு இருக்கற மாதிரி பண்ணிட்டீங்களேடா. அப்பிடியே விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும்”. தேங்கி நின்ற நீரை ஆத்திரத்துடன் உதைத்தான். தண்ணீர் தெறிக்கவும் கிருஷ்ணமூர்த்தி முகத்தை மூடிக்கொண்டான்.

“உனக்கென்னடா கிச்சா. பக்கத்து வீட்டுலயே அம்சமா ஒரு குட்டி. வியாழக்கிழமை பாலக்காடு பேசஞ்சர். செவ்வாய்க்கிழமை சாந்தி தியேட்டர்ல காலைக்காட்சி. அதிர்ஷ்டம் இருந்தா கோபாலபுரத்துல அஞ்சா நெம்பர் ரூம். நீ உசுரோட இருக்கறதுலயும் ஒரு அர்த்தம் இருக்கு.” அப்படியே திரும்பி நின்று வேட்டியைத் தூக்கிக்கொண்டு மூத்திரம் பெய்தான். 

“ஓரமா நின்னு போமாட்டியா? அக்கிரமம் பண்ணாதடா.”

எகத்தாளமாய்ச் சிரித்தான். “இந்த ஒலகத்தோட மூஞ்சிலயே பேயணும்னுதான் ஆத்தரம், வெறி. ஆனா…”

பக்கத்தில் வந்தவனை ஏறிட்டுப் பார்த்தான் கிருஷ்ணமூர்த்தி. “சொல்றதைக் கேளுடா. டிபன் சாப்பிட்டுட்டு மாத்திரையைப் போட்டுட்டு தூங்கு நீ. ராத்திரில நீ தூங்கறதே இல்லை.”

கைகூப்பியபடி தலைகுனிந்தான். “மாத்திரை வேணான்டா கிச்சா. ராத்திரில என்னை நீ இப்பிடியே விட்டுரு. நான் ஒன்னும் பண்ணிக்க மாட்டேன். பயப்படாம நீ தூங்கு. விடிஞ்சப்பறமா நா படுத்துக்கறேன். வெளிச்சத்துல யார் மூஞ்சியையும் பாக்க முடியலடா. புரிஞ்சுக்கடா.”

தெருமுனையில் டீக்கடையின் வெளிச்சத்தைப் பார்த்ததும் கிருஷ்ணமூர்த்திக்கு சற்றே ஆசுவாசமாயிருந்தது. டீயும் புகையும் அவனது வேகத்தைக் குறைத்துவிடும். புலம்பல் அடங்கும். இந்த மழை மறுபடி பெய்யாமாலிருக்க வேண்டும். 

“ரெண்டு டீ. வித் அவுட்” சொல்லிவிட்டு நிமிர்ந்தபோது சேச்சி சிரித்தாள். டீ மாஸ்டரைக் காணவில்லை. 

“சார் நன்னாயிட்டு உண்டல்லே…” ஆவி பறக்கும் டீத்தூளை வாளியில் கொட்டிவிட்டு புதிய தூளை நிரப்பினாள். ஆடை கட்டிய பாலின் மணம். 

இதற்குள் அவன் சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தான். நனைந்த தந்தித் தாளின் ஓரத்திலிருந்த சில்க் ஸ்மிதாவின் படத்தை உற்றுப் பார்த்தான். உதட்டில் புன்னகை. டீயை கொடுத்துவிட்டு கிருஷ்ணமூர்த்தி எட்டிப் பார்த்தான். 

“அண்ணே, ஜன்னல் திட்டுல சாவி வெச்சிருக்கேன்”. மணியன் இடதுகாலைத் தரையில் ஊன்றி சைக்கிளைச் சாய்த்து நிறுத்தினான். 

“டீ சாப்பிடறியா?”

“வேண்டான்னா. சேச்சி, ஒரு கட்டு பீடி எடுத்துக்கறேன்”. பணத்தாளை மேசையில் போட்டுவிட்டு தாவிக் குதித்து சைக்கிளில் ஏறிக்கொண்டான். 

“அவங்க அப்பாவுக்கு பச்சைகட்டு பீடிதான் பிடிக்கும்”. தெருமுனையில் திரும்பி மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணமூர்த்தி. 

“நீ வீட்டுக்கு போகலியா?” எழுந்து அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

“இனிமேல் எங்க போறது? மழை வேற” என்றவன் சேச்சியிடம் கணக்கில் எழுதிக்கொள்ளும்படி சைகை செய்தான். சிரித்தபடியே தலையாட்டியவள் எச்சில் தம்ளர்களின் மேல் தண்ணீரை ஊற்றினாள்.

இரவின் இறுக்கத்தையும் ஓசைகளையும் மட்டுப்படுத்திவிட்டு மழை ஓய்ந்திருந்தது. மெல்ல நடந்தவன் நனைந்திருந்த ‘எங்க பாட்டன் சொத்து’ போஸ்டரை நிமிர்ந்து பார்த்தான். 

“அப்பா என்னைத் தனியா விட்டுட்டு போக வேண்டான்னு சொல்லிட்டாரா?” 

தலை குனிந்திருந்த கிருஷ்ணமூர்த்தி பதில் சொல்லவில்லை.

“செத்துப் போறதுன்னு முடிவு பண்ணிட்டா யாராலயும் தடுத்து நிறுத்த முடியாது.”

“அதென்னவோ கரெக்ட்தான். உங்கம்மா செத்துப் போனப்ப உனக்கு ரெண்டரை வயசு. தெரியுமா?” எரிச்சலுடன் கேட்டான்.

செருப்பைக் கழற்றிவிட்டு கதவைத் திறக்கும்போது அச்சகத்தில் தொலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் திட்டிலிருந்து சாவியை எடுத்துத் திறக்கும்போது மணியோசை நின்றுவிட்டது.

முன்பக்கத் திண்ணையில் உட்கார்ந்தவன் சிகரெட் துண்டை சுண்டி எறிந்தான். நெடியுடன் சுழன்று கரைந்தது புகை.  வாசல் விளக்கைப் போட்டுவிட்டு அருகில் உட்கார்ந்தான் கிருஷ்ணமூர்த்தி. எதிர் பக்கத்திலிருந்த துணி அறவை இயந்திரங்கள் மின்னொளியுடன் சுழல்வதைப் பார்த்தான். 

எதிர்பார்த்தது போலவே மீண்டும் மணியொலிக்கத் தாவியோடினான்.

கதவைச் சாத்திவிட்டு வந்தபோது அவன் எழுந்து உள்ளே சென்றிருந்தான். முன்பு இருந்தது போலவே ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தான்.

“அப்பாதானே?”

“ஆமா. எப்பிடியிருக்கேன்னு கேட்டாரு.”

“வேறென்ன?”

“ஒன்னுமில்லை. சாப்பிட்டியான்னு கேட்டாரு. காலையில வர்றேன்னாரு.”

அதைக் கவனிக்காதது போல வெளியே பார்த்தான். 

“தூங்கவே மாட்டாரு கிச்சா. அந்தளவுக்கு பயம் வந்துருச்சு…” அவன் குரலில் கலக்கம். கண்ணீர் துளிர்த்தது. 

“உனக்கே தெரியுது. அப்பறமும் இப்பிடி பண்ணினா என்ன பண்றது? அதுவும் ரெண்டு தடவை. ஆஸ்பத்திரி, போலீஸ்னு அலைய வெச்சுட்டே. பயம் இருக்காதா?”

மணிக்கட்டை உயர்த்தி வெட்டுத் தழும்புகளைப் பார்த்தான். இரண்டாம் முறை சற்றே ஆழமான காயம்தான். நிறைய இரத்த சேதம். 

“யோசிச்சு பாத்தா வேடிக்கையாத்தான் இருக்கு கிச்சா. முட்டாள் மாதிரிதான் செஞ்சிருக்கேன்.”

கிருஷ்ணமூர்த்தி பாயை உதறிப் போட்டுக்கொண்டு சுவரில் சாய்ந்தான். காதோரத்தில் ரீங்கரித்தது கொசு. 

“இதையே நான் சொன்னா நீ சண்டைக்கு வருவே. உனக்கே நல்லா தெரியும். யாருக்குத்தான் எல்லாம் அமைஞ்சு வந்துருக்கு. என்னவோ நீ மட்டுந்தான் இப்பிடி தோத்துப் போயிட்டே இருக்கற மாதிரி. வந்து படு. எனக்கு தூக்கம் வருது.”

அவன் சிரித்தான். “உன்னை மாதிரி இருந்திருக்கலாம். இல்லையா, அந்த மணிப்பய மாதிரி இருந்திருக்கலாம். நான் என்னை மாதிரி இருக்கறதுதான் பிரச்சினையே. நீ தூங்குடா.”

கிருஷ்ணமூர்த்தி படபடத்துக்கொண்டிருந்த வெற்றுத் தாள்களை பார்த்தான். “ரெண்டு நாளா எழுதிக் கிழிச்சுட்டே. இப்ப புதுசா எழுதப் போறியா?”

அவன் எழுந்து உடைகளைக் களைந்தான். விரித்துப் போட்ட பாயில் சம்மணமிட்டு அமர்ந்து மடிமேல் அட்டையை எடுத்து வைத்துக்கொண்டு பேனாவைக் கையிலெடுத்தான். 

“சொல்லிட்டு செய்யுடா. இங்க நானும் இருக்கேன்ங்கறதை மறந்துடாதே”. கிருஷ்ணமூர்த்தி மறுபுறம் திரும்பினான்.

மின்விசிறி காற்றையும் மீறி கொசுக்கள் காதோரங்களில் சுற்றின. தெருவில் ஆட்டோ மிகுந்த ஓசையுடன் கடந்து போனது.

கிருஷ்ணமூர்த்தி மெல்ல திரும்பிப் பார்த்தான். தீவிரத்துடன் எழுதிக்கொண்டிருந்தான்.

“அந்த லுங்கியையாவது கட்டிக்கலாம்ல. எப்ப பார்த்தாலும் அம்மணக் கட்டையா உக்காந்துட்டுதான் எழுதறது. அப்பிடி என்ன எழுதிக் கிழிக்கறே? உருப்படியில்லாமே?”

அவன் தலைநிமிர்த்தவேயில்லை. 

“பிரஸ்ல புரூப் பாத்துக் குடுத்தாலாச்சும் தேவலை. மொதலாளிகிட்ட சொல்லி சம்பளம் போடச் சொல்லலாம்.”

ஈர நெடியுடன் கிடந்த ஈரிழைத் துண்டையெடுத்து கண்ணை மறைத்துக் கட்டிக்கொண்டு சுவர் பக்கமாய்த் திரும்பிப் படுத்தான் கிருஷ்ணமூர்த்தி. 

வெளியில் ஜிம்மி ஆக்ரோஷத்துடன் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு எழுந்தான். பாயில் அவனைக் காணவில்லை. தலைதூக்கிப் பார்த்தான். ஜன்னலருகே அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தான். இடதுகையில் புகையுடன் சிகரெட். 

அப்படியே சரிந்து படுத்தவுடன் கண்கள் அவசரமாய் மூடிக்கொண்டன.

போர்வையை இழுத்து எழுப்பியபோது வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.

“மணி நாலரையாச்சு. டீக்கடை தெறந்துருப்பாங்களா?” கையில் சிகரெட் புகைந்திருந்தது.

“மழை கொட்டறது தெரியலையா? உனக்குத்தான் தூக்கம் வர்லை. என்னையாவது சித்தநேரம் தூங்க விடேன்டா”. போர்வையை இழுத்து தலையை மூடிக்கொண்டு புரண்டவன் திடுக்கிட்டு எழுந்தான். கண்களைத் தேய்த்துக்கொண்டு நிதானமாகப் பார்த்தான்.

“என்னடா?”

இப்போதும் அவன் உடையற்றவனாகத்தான் சாய்ந்திருந்தான். எழுதிய தாள்கள் பாயில் கிடந்தன. சுவரோரமாய் எரிந்த தீக்குச்சிகளும் நசுக்கிப்போட்ட சிகரெட் துண்டுகளும். பேனா அவன் கையில் இருந்தது.

ஒன்றும் சொல்லாமல் படுத்தபோது தூக்கம் காணாமல் போயிருந்தது. ஒருகணத்துக்கு முன்பிருந்த பதற்றத்திலிருந்து மனம் விடுபட்டிருந்தது. விடிந்துவிட்டது. இனி சற்று ஆசுவாசத்துடன் இருக்கலாம். 

எழுந்து கழிவறைக்குப் போய்விட்டு வரும்போது அவன் படுத்திருந்தான். போர்வை உடலை மூடியிருந்தது. தாள்களும் மூடப்படாத பேனாவும் அப்படியே கிடந்தன.

சிகரெட் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது தேங்கிய நீரில் மங்கலான வானம். காற்றில் குளிர். தொலைவில் ஒலித்தது ஏதோவொரு பக்தி பாடல். பசித்தது. திரும்பி உள்ளே பார்த்தான். இவன் எழுவதற்குள் வீட்டுக்குப் போய்விட்டு வரலாம். சாப்பிட எதையாவது கொண்டு வரலாம். ஆனால் சைக்கிள் இல்லை. மணியன் வரவேண்டும். 

செய்தித்தாள் பையனின் சைக்கிள் மணி ஒலித்தது. வழக்கமாய் சுருட்டிய செய்தித்தாளைத் திண்ணையில் விழும்படி காற்றில் சுழற்றி எறிவான். கிருஷ்ணமூர்த்தி எழுந்து சென்று வாங்கிக்கொண்டான். மை வாடை. 

புகைத்தபடியே செய்தித்தாளைப் பிரித்தான். 

தொலைபேசி மணியடித்தது. பாவம், தூங்கியிருக்க மாட்டார். எழுந்து சென்று பேசியை எடுத்து காதில் வைத்தான். 

மணியன் வரும்போது வெயிலில் உக்கிரம் கூடியிருந்தது. சைக்கிள் சாவியை ஆணியில் மாட்டிவிட்டு சட்டையைக் கழற்றினான்.

“அப்பாக்கு எண்ணெய் போட்டு கை காலெல்லாம் தேச்சுவிட வேண்டியிருந்தது. ராத்திரி நல்ல மழைங்கறதுனால காத்தால எழுப்ப முடியலை. அதான் லேட்டாயிருச்சுண்ணா. மொதலாளி கேட்டாரா?” சுறுசுறுப்புடன் மேசையைத் துடைத்தான். 

“உங்கப்பாவுக்கு பரவால்லயாடா?” கிருஷ்ணமூர்த்தியின் விரல்கள் மிகுந்த இலாவகத்துடன் எழுத்துகளைப் பொறுக்கிச் சேர்த்து சொற்களாக்கிக்கொண்டிருந்தன. 

“இந்த எண்ணெய் போட்டு தேக்கறது கேக்குது போல. வாய்தான் இன்னும் இழுத்தா மாதிரியே இருக்கு. பேச முடியலை.”

“அவுருக்கு நீ பீடி வாங்கிட்டுப் போறே?” 

“எப்பவாச்சும் கேப்பாருண்ணா. பாவமாருக்கும். பத்த வெச்சு வாயில வெச்சா ரெண்டு மூணு தடவை உறிஞ்சுவாரு. அவ்ளோதான்.”

அவன் திண்ணையில் சாய்ந்திருந்தான். கண்ணில் துளிர்த்த நீரைத் துடைத்துக்கொண்டு சிகரெட்டை சுண்டி எறிந்தான். எழுந்து உள்ளே சென்றவன் மறுபடியும் போர்வையைத் தலையை மூடிப் போர்த்திக்கொண்டான். 

“அண்ணனை எழுப்பவா?” மணியனின் குரல் ஆழத்தில் எங்கோ ஒலிக்கிறது. தூக்கத்தின் இருட்சுழலிலிருந்து மேலெழாமல் அப்படியே மிதந்திருந்தான். 

“தூங்கறான்னா விட்டுரு பாவம். ராத்திரிதான் தூங்கவேயில்லேன்னு சொன்னில்ல…” அப்பாவின் குரலா? ஆமாம். அவர்தான். கனிவும் கருணையும் கூடவே தயக்கமும் சற்று சேர்ந்தாற்போன்று மெதுவாகப் பேசுவது வேறு யாராக இருக்க முடியும்? வீட்டிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார், இந்த வேகாத வெயிலில். இப்படித் தூக்கத்தில் கிடப்பதே அவருக்குப் பெரும் ஆறுதலாயிருக்கும். 

பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். அவருடைய அண்மையை அவனால் உணர முடிகிறது. போர்வையை விலக்காமல் அப்படியே கிடக்கிறான். மிக மெதுவாக அவன் கைகளைத் தொடுகிறார். காற்றில் ஆடி இறங்கும் இறகைப் போன்ற தொடுகை. உள்ளங்கையின் வெம்மையுடன் இலேசான நடுக்கம்.

அசையாமலே படுத்திருந்தான். 

“எழுப்புங்கப்பா, பரவால்லே”. கிருஷ்ணமூர்த்தியின் குரல் அருகில் ஒலிக்கிறது.

“இல்ல விடுப்பா. கொஞ்ச நேரம் வெளியில உக்காருவோம். அவனா எழுந்திருக்கட்டும்.”

நகர்ந்துவிட்டார்கள். அப்பா தயக்கத்துடன் காத்திருக்கிறார். எழுந்து போனால் முகம் பார்த்து பேசுவதற்குள் கண்கள் கலங்கிவிடும். அவனைக் காயப்படுத்திவிடக்கூடாது என்பது போல சொற்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து உதடுகள் நடுங்க மெல்லச் சொல்லுவார். அதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எரிசொற்களை அலட்சியமாய் உதிர்த்துவிட்டு புகையை ஊதுவான். 

போர்வையை மூடிக் கிடந்தவன் மறுபடி எழுந்தபோது கொய்யாப்பழ வாசனை. எதிர்வெயில் கண்களைக் கூசியது. வாசலில் நின்று சடவு முறித்தான். மணியன் பெல் அடித்தபடி சைக்கிளைப் பந்தலுக்கு அடியில் நிறுத்தினான். “இவ்ளோ நேரம் தாத்தா இங்கதான் உக்காந்திருந்தாரு. இப்பதான் கொண்டுபோய் பஸ் ஸ்டாப்புல வுட்டுட்டு வந்தேன்.”

முகத்தில் தண்ணீரை இறைத்துக் கழுவிவிட்டு திண்ணையில் அமர்ந்தான். சேறாகிக் கிடந்த மழை நீரில் வெயிலின் பளபளப்பு. துணி அறவை இயந்திரங்கள் அதே வேகத்தில் சுழன்றிருக்க வாசலில் நின்றவன் டீ குடித்துக்கொண்டிருந்தான்.

“சிகரெட் வாங்கிட்டு வந்தியா?” அச்சடித்த நோட்டீஸ் தாள்களை ஓரங்களில் தட்டி அடுக்கிக்கொண்டிருந்த மணியன் கழுத்தை நொடித்தான். 

திட்டுத்திட்டான மை கறையில் நிறம் இழந்திருந்த துணியில் கையைத் துடைத்தபடியே வெளியே வந்த கிருஷ்ணமூர்த்தி பையை நீட்டினான். சிறிய மஞ்சள் பை. கேள்வியுடன் வாங்கிப் பிரித்துப் பார்த்தான்.

கொய்யாப் பழங்களுக்கு நடுவில் கிடந்தன இரண்டு வில்ஸ் சிகரெட் பாக்கெட்டுகள்.

“உங்க வீட்டு பழந்தான். உனக்குப் புடிக்கும்னு தாத்தா கொண்டு வந்தாரு. எனக்கு இன்னொரு பழம் எடுத்துக்கறேன்”. மணியன் பையை வாங்கி பழத்தை எடுத்துக்கொண்டான்.

வெயில் தணிந்து பொழுது இருட்டியது. சில நிமிடங்களில் துளிகள் விழத்தொடங்கின.

தலையைக் குனிந்தபடியே பையிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து நடுங்கும் விரல்களால் உறையைப் பிரித்தான். 

2 comments

A M KHAN July 29, 2021 - 10:22 am

25=30 களில் இருக்கும் மகன்களை கொண்டு இருக்கும் அப்பாகளினா நிலை மிகவும் கடினமானது….புரிந்து கொள்ளலில் பல சிரமங்கள்… இந்த காலகட்டத்தில் உரூவகும் புரிதலே பிற்கால இருவருக்குமான உறவை தீர்மானிக்கிறதாக அமைகிறது… ..சிறப்பாக அதை வெளிக் கொண்டு வந்துள்ளார் கோபாலகிருஷ்ணன் .

Anjana murthy July 30, 2021 - 9:46 pm

Ippadi niRuththittaarE Things are happening. But they pass him by. (My Thamizh font does not function well for this I phone. Can’t find tablet). ThaRkolaikkaana savagery missing

Comments are closed.