மெல்லிய இடர்

2 comments

உடல் களைத்துப் போயிருந்தது. கோவிட் தொற்று ஏற்பட்ட பிறகு கொஞ்ச தூரம் இருசக்கர வாகனம் ஓட்டினாலும் இந்தக் களைப்பு வந்து பற்றிக்கொள்கிறது. இரண்டு வாரங்களாகிவிட்டன. நான் ஒரு காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டிருந்தேன். அவர் வரச்சொன்ன நாளுக்கு முந்தைய நாளே மருந்துகள் தீர்ந்துவிட்டிருந்ததால் ஒரு நாளுக்கு முன்பே அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அதற்கு ஏதும் சொல்வாரோ என்ற உறுத்தல் ஒரு பக்கம் இருந்தது. ஒரு குறுகலான தாழ்வாரமும் அதை ஒட்டியிருந்த மருந்தகமும் மருந்தகத்துக்குப் பக்கத்திலிருந்த மூடப்பட்ட சிறிய அறையும்தான் மருத்துவமனை. நகரில் இப்போது புதிய கட்டிடங்கள் அனைத்துமே ஒடுக்கமாகத்தான் இருக்கின்றன. விசாலத்தன்மை குறைந்து ஒன்றின் மீது ஒன்றென அடுக்கி ஏற்றப்படுகிறவையாகவே வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன. இடப்பற்றாக்குறை.

இரண்டு கட்டிடங்களுக்கு இடையே இருந்த இயல்பான இடைவெளியை வாங்கி அங்கு ஒரு கட்டிடத்தை முளைக்கச் செய்கின்றனர். ஆனாலும் இவ்வளவு சிறிய கட்டிடங்களும் வசதியாகத்தான் தெரிகின்றன. மருத்துவனையோ பேக்கரியோ சூப்பர் மார்க்கெட்டோ. வெண்ணிறத்தில் டைல்ஸ் பதிக்கப்பட்டு அதே கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் மேற்கூரையில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுவிடுகின்றன. நன்றாக காற்று நுழைந்து வெளியேறும் இடமென்றாமலும் கண்ணாடிக் கதவுகளும் ஜன்னல்களும் முழுமையாக அடைக்கப்பட்டு குளிர்சாதன வசதி செய்யப்பட்டுவிடுகிறது. புழுதியிலும் வெக்கையிலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வருகிறவர்களுக்கு உள்நுழைந்ததுமே இக்கட்டிடங்கள் ஒருவித ஆசுவாசத்தை அளிக்கின்றன. அவ்வளவு இரைச்சலையும் நெரிசலையும் சாலையில் அனுபவித்துவிட்டதாலேயே பணிவுடன் இன்முகம் காட்டும் ஊழியர்கள் தேவதூதர்களாகவே தெரிகின்றனர்.

அதிலும் ஏற்கனவே தேவதைத்தன்மை பூசப்பட்ட செவிலியர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். நாம் எதிர்கொள்வது முகக்கவசம் அணிந்திருக்கும் பெண் என்றாலும் கண்களே அழகைப் பிரதிபலிக்கும் செவிலிப் பெண் என்றால் உடல் சோர்வுகூட ஒரு நொடி பறந்துவிடுகிறது. ஆனால் இந்த முகக்கவசக் காலத்தில் இயல்பாகவே பெண்களின் முகங்கள் ஆண்களைவிட அதிகமும் என் மனதில் பதிவாகிறது. பத்து ஆண்களுடன் சூழ்ந்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் பிணங்களுடன் உரையாடியது போலத் தோன்றுகிறது. ஆண்கள் அகத்துக்குள் உயிரோடு பதிவாக அவர்களின் மொத்த முகமும் அவசியமாகிறது. அவர்களுடைய வாய்க்கோணல்கள், சிரிப்பு, எதிர்கொள்ளும் முறை என எல்லாமும் இணைந்துதான் ஆண்கள் பதிவாகிறார்கள். ஆனால் பெண்களுக்குக் கண்கள் போதுமானதாக இருக்கிறது. பொதுவாகவே எச்சரிக்கை கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்தாத அல்லது மிகையும் போலியுமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் பெண்களே இங்கே அதிகமென்பதால் இந்த முகக்கவசம் போலியுணர்வுகளைப் பேசும் அவர்கள் வாயை மறைத்துவிடுவது அவர்களுக்கு ஒரு அழகைக் கொடுப்பதாகவே படுகிறது. 

நான் மருத்துவமனைக்குள் நுழைந்தபோது வலப்புறச் சிறகில் இருந்த ஒரு வெள்ளை நாற்காலி தவிர மற்ற அனைத்தும் நிரம்பியிருந்தன. பேருந்திலும் எனக்கு இதுபோல நடக்கும். தேர்வுக்கு வாய்ப்பே இல்லாமல் எஞ்சி இருக்கும் இருக்கை. அதுகூடப் பரவாயில்லை. இருவர் அமரும் இருக்கையில் முதலில் சென்று அமர்ந்த பிறகு அருகே யாருமே அமராமல் தட்டழிய நேரிடும். அது இன்னொரு வகையான தத்தளிப்பைக் கொண்டுவந்து சேர்க்கும். யாருமே நான் அமர்ந்திருக்கும் இருக்கையைத் தேர்வுசெய்யாவிட்டால் நான்தான் உலகத்தின் கடைசியாக நிற்கும் மனிதனா? அதற்கு இதுபோலத் தேர்வுசெய்யப்படாத இருக்கை பரவாயில்லை என்று தோன்றியது. மருத்துவமனையின் கண்ணாடிக் கதவுகள், கோவிட் காரணமாக அறை குளிர்சாதன வசதி செய்யப்படாததால், திறந்து வைக்கப்பட்டிருந்தன. வெளிப்புறம் இருபக்கமும் சென்றுகொண்டிருந்த வாகனங்களின் ஒலி நிம்மதி அளிப்பதாக இருந்தது. மேற்கூரையை ஒட்டியிருக்கும் ஓசையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

என்னுடைய டோக்கன் எண் ஐந்து. ஓரளவு நிம்மதியாக இருந்தது. எதிரே இருந்த இருக்கையில் பச்சை நிறச் சுடிதார் அணிந்த ஒல்லிப்பெண் அவளுடைய கருப்புநிற டிஷர்ட்டும் அதே நிறத்தில் மாஸ்க்கும் அணிந்திருந்த மூன்றோ நான்கோ வயதாகும் மகளை மடியில் வைத்திருந்தாள். அக்குழந்தை அடிக்கடி முகத்திலிருந்த மாஸ்க்கை கழட்டியது.

‘அப்பம்மா வீட்டுக்குப் போலாம்’ என்று மழலைக்குரலில் அது கேட்டது எனக்குள் அளவு கடந்த எரிச்சலை நிரப்பியது. ஏதோவொரு டிக்டாக் வீடியோவில் தான் பேசுவதாக நினைத்துக்கொண்டு அங்கு தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் காணொளியின் பார்வையாளர்களாக நினைத்துக்கொண்டு அக்குழந்தை பேசுவதாக எனக்குப்பட்டது. எப்போதும் யூடியூபிலோ வேறு செயலியிலோ ஏதோவொரு காணொளியை ஒளிபரப்பித்தான் குழந்தைகளுக்குச் சோறூட்டுகிறார்கள். அவர்களும் எந்நேரமும் அதில் மூழ்கிக் கிடக்கவே விழைகிறார்கள். 

‘என்ன தவறு அதில்?’ என மனதின் இன்னொரு மூலை என்னிடமே கட்சி கட்டியது. ‘இன்று குழந்தையைப் பார்க்க தாய்களுக்கு நேரமிருப்பதில்லை. பெரும்பாலும் வேறு வேலையில் ஈடுபட வேண்டியிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு சீக்கிரம் உணவூட்ட ஏதாவது ஒரு முறையைக் கடைபிடிக்கிறார்கள். இதில் நீ எரிச்சலடைய என்ன இருக்கிறது? கண்கள் வீணாகும் என்று யோசிக்கிறாயா? இருபத்துநான்கு மணிநேரமும் திரையைப் பார்த்தாலும் கண்களுக்குக் கெடுதல் வராதவாறு தொழில்நுட்பம் வளரத்தான் போகிறது. அப்படியே பிரச்சினை வந்தாலும் அவற்றைச் சரிபண்ண மருத்துவர்களும் தொழில்நுட்பங்களும் உருவாகப் போகின்றன. உன் பிரச்சினை என்ன இதில்?’

பொதுவாக என் மனம் எனக்கு இதுபோல பாடமெடுக்கும் தருணங்களில் நானடையும் சுயவதை எனக்குப் பிடித்தமான ஒன்று. நாமே நம்மை அறைந்துகொண்டால் கன்னத்தில் உரப்பாக இருக்குமே, அது போலத்தான் நான் என்னையே எனக்கெதிராகப் பயன்படுத்தி வந்தேன். சீக்கிரமாக மருத்துவரைப் பார்த்துவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருந்ததால் இரண்டு முகக்கவசங்கள் அணிந்திருந்தேன். மூச்சுவிடவும் சிரமமாக இருந்தது. நறுமண உணர்வு போய்விட்டிருந்ததால் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளியேறும் காற்று அளிக்கும் துர்நாற்றத்தை நுகரத்தேவையற்று இருப்பது ஒரு ஆறுதல். ஆனாலும் எனக்கு என் உடலில் இருந்து வெளியேறும் மணங்கள் குறித்த பதற்றம் தோன்றியது. கழிவறைக்குச் சென்றாலும் மலநாற்றம் எஞ்சியிருக்குமோ என்று அதிகமாகத் தண்ணீரை ஊற்றுகிறேன். கூட்டமான இடம் ஒன்றுக்கு மணம் போன பிறகு முதன்முறையாக வருகிறேன். அருகே அமர்ந்திருப்பவர் சங்கடப்படுகிறாரா என்று பார்த்தேன். அவர் தன் அலைபேசியில் ஆழ்ந்திருந்தது சற்று நிம்மதியை அளித்தது.

நான் வந்த கால் மணிநேரத்தில் மருத்துவர் வந்தார். கைப்பையை உதவியாளனாக இருந்த பையனிடம் கொடுத்துவிட்டு மருத்துவருக்கான சிறிய அறைக்குள் சென்றுவிட்டார். அந்த அறை சிறியது என்றாலும் அதனுள் அவருக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இருந்தன. குறிப்பாக காது மூக்கு தொண்டைக்குழலில் செலுத்தப்படும் எண்டோஸ்கோப் கருவி. அதன் நுனியில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய கேமரா, நம்முடைய காது மூக்கினைக் குடைந்து உள்ளே சென்று படமெடுப்பதை அங்கிருக்கும் திரையில் காண்பது கிளர்ச்சி அளிப்பதாக இருக்கும். தலையை நிமிர்த்திவிடுவதால் தொண்டையைப் பார்க்க இயலாது.

மருத்துவர் அழைப்பு மணியை அடித்தார். காதருகே கணமான பாத்திரங்கள் இரண்டை தட்டுவதைப் போன்ற ஒலி அல்ல அந்த அழைப்பு மணியில் இருந்து எழுவது. மெல்ல கதவைத் தட்டுவதைப் போன்ற ஒலி. கூரிய ஒலிகூட தன்னுடைய நோயாளிகளை அச்சுறுத்தும் என்ற அவரது நுண்ணுணர்வைப் பாராட்டினேன். எனக்கு எதிரே அமர்ந்திருந்த மாநிறமான பெண் அவளுடைய கருப்பு டிஷர்ட் அணிந்த கருப்புக் குழந்தையை உள்ளே தூக்கிக்கொண்டு சென்றாள். குழந்தை உள்ளே நுழைந்ததும் எவர்சில்வர் பாத்திரங்களை ஒன்றின் மீது ஒன்றாகத் தூக்கியெறிந்தது போன்ற எரிச்சலைக் கிளப்பும் ஒலி எழுந்தது. உள்ளே தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை அப்படி அழுதது. எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அக்குழந்தை அதனுடைய அம்மாவை இருக்கையில் அமரவிடவில்லை. அப்பெண் அக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள். முகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் அவளுடைய கண்களிலிருந்தே அவள் பதற்றமுறவில்லை என்பது தெரிந்தது. அவளுடன் இரண்டு முதியவர்கள் வந்திருந்தது அவள் வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது.

அவள் மகள் ‘தாத்தாட்ட போணும், தாத்தாட்ட போணும்’ என்று அவள் உடலோடு ஒட்டி அழுதுகொண்டிருந்தாள். கண்களில் நீர் நிற்காமல் வந்துகொண்டே இருந்தது. அழுது அழுது அவள் உடல் செறுமத் தொடங்கியது. இறக்கப் போகும் முதியவர் போல மூச்சிழுத்தது. அக்குழந்தையின் அம்மா குழந்தை அணிந்திருந்த முகக்கவசத்தைக் கழட்டி கண்ணீரைத் துடைத்தாள். அது நிறுத்தாமல் அழுதுகொண்டே தாத்தாவின் மடியில் சென்று அமர்ந்துகொண்டது. அடுத்தவர் எழுவதற்கு முன்னே ஒரு வெண்ணிறப்பெண் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தாள். அக்குழந்தைக்கு இரண்டு வயது இருக்கலாம். முந்தைய குழந்தையைப் போல இது அழவில்லை. ஆனாலும் மருத்துவமனைச் சூழலை எப்படியோ உணர்ந்துகொண்டு கண்களில் பயம் நிரம்ப ஒவ்வொருவராகப் பார்த்தது. உதவியாள இளைஞன் அடுத்ததாக அப்பெண்ணை உள்ளே அனுப்பினான். அமர்ந்திருந்த அத்தனை பேரும் அதை ஏற்றுக்கொண்டனர். திருப்தியின்மையை வெளிப்படுத்திய என் முகத்தைக்கூட அங்கிருந்தவர்கள் யாரும் பார்க்காதபடிக்கு முகக்கவசம் தடுத்துவிட்டது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஒரு பெண் எங்கும் எளிதாக நுழைய முடிகிறது. குழந்தையைத் தூக்கிவரும் பெண்ணுக்கு ஏன் இவ்வளவு மரியாதை? அது அவளுடைய பொருள். எட்டு அல்லது ஒன்பது கிலோ எடை கொண்டது. அசையக்கூடியது என்பதால் தூக்குவதும் எளிது. ஆனால் அப்பொருளைத் தூக்கிவரும் பெண்ணுக்கு இங்கு அனைவரும் வழிவிட்டாக வேண்டும். என் அலுவலகத்தில் ஒரு பெண் இலட்சக்கணக்கில் பணமோசடி செய்து மாட்டிக்கொண்டாள். அவள் ஆறு மாதமே ஆன ஒரு கைக்குழந்தையை வைத்திருந்தாள். நாள் முழுக்க விசாரணை நடக்கும். அப்பெண்ணின் குழந்தைக்கு அலுவலகத்திலேயே தொட்டில் கட்டித் தூங்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

வெண்ணிறப் பெண்ணின் குழந்தை ரொம்ப அழவில்லை. கொஞ்ச நேரத்தில் வெளியேயும் வந்துவிட்டாள். மறுபடியும் கருநிறக் குழந்தையை உள்ளே தூக்கிச் செல்ல அவளது தாய் முயன்றாள். அது தாத்தாவின் தோளை இறுகப் பற்றிக்கொண்டது.

“எனக்கு காது வலிக்கல, வலிக்கல. வீட்டுக்குப் போணும். வீட்டுக்குப் போணும்” என்று திரும்ப அழத்தொடங்கியது. அக்குழந்தைக்குக் காதில் தொந்தரவு என்றதும் எனக்குப் பரிதாபமாக இருந்தது.

எனக்கு வலக்காதின் ஜவ்வுப்பாதை முன்பு வீங்கியிருந்தது. ஒவ்வொரு வாய் உணவு உண்பதற்கும் உயிர்போய் திரும்ப வரும். உண்பதில் காதின் பங்கு எனக்கு அப்போதுதான் புரிந்தது. ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் வலியினால் காய்ச்சல் வந்துவிடும். இதே மருத்துவரிடம்தான் அப்போதும் வந்திருந்தேன். முதலில் அவரால் எண்டோஸ்கோப் கருவியை என் காதுக்குள் நுழைக்கவே முடியவில்லை.

மருத்துவர், “ஜவ்வுப்பாதை நல்லா வீங்கி இருக்கு. ஏதோ ஹெவி இன்ஃபெக்ஷன். இந்த டேப்லெட்ஸ ஒரு வாரம் சாப்பிடுங்க. வீக்கம் குறையலன்னா சர்ஜரி பண்ற மாதிரி இருக்கும்” என்றார். நான் அதிர்ந்து போய்விட்டேன். காது எவ்வளவு நுண்மையான உறுப்பு என்பதும் உடல் சமநிலையைப் பேண அது எவ்வளவு முக்கியமென்றும் அந்த ஒரு வாரத்தில் எனக்குப் புரிந்தது. வலப்பக்கம் கனமாகவே இருந்தது. யாரோ தலையில் எந்நேரமும் கை வைத்திருப்பது போன்ற உணர்வு. கொஞ்ச நேரம்கூட தலையை நேராக வைத்திருக்க முடியவில்லை. எறும்பு நுழைந்துவிடக் கூடாதென யானை காதை ஆட்டிக்கொண்டிருப்பது போலத் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தேன். ஏதோ கரிய திரை என் காதில் விழுந்துவிட்டது. அந்தப் பக்கம் இருக்கும் எதையும் பார்க்க முடியவில்லை. நான் எவ்வளவு கடவுள் நம்பிக்கை கொண்டவன் என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. கடவுளிடம்தான் நம்மால் முடிவில்லாமல் கோபப்பட முடிகிறது. இங்கு நிகழ்கிறவை அனைத்துக்கும் அவரே சூத்திரதாரி. எனக்கு இப்படியானதொரு துயர் ஏற்பட்டிருப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. இத்துயருக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு காதினுள் நீர்த்துளி விழுவது போன்ற ஒலி கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஜவ்வுப்பாதையின் வீக்கம் குறைந்தது. மருத்துவர் காதினைச் சுத்தம் செய்தார். மீண்ட பிறகுதான் நான் எவ்வளவு சிக்கிக்கொண்டிருந்திருக்கிறேன் என்பதையே உணர்ந்தேன். ஒரு உறுப்பில் உபாதை தோன்றி அது சரியான பிறகு அவ்வுறுப்பை அனுபவிப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று குணமான பிறகே உணர்ந்தேன். 

சமூக இயக்கம் பற்றி எனக்கு ஏற்பட்ட திகைப்புகள் அதன்பிறகு குறையத் தொடங்கிவிட்டன. நம்முடைய உடல் எந்தவொரு நிறுவனத்தையும் தத்துவத்தையும்விட சிக்கலானது.

இரண்டாவது முறையும் அக்குழந்தை அழுதுகொண்டு வெளியே வரவே குழந்தையின் பாட்டி அதை வாங்கிக்கொண்டார். இம்முறை முதல் முறை அளவுக்கு நான் எரிச்சலடையவில்லை. 

ஆனால் அக்குழந்தை மறுபடியும் ‘வீட்டுக்குப் போணும், வீட்டுக்குப் போணும்’ என்று திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப அரற்றத் தொடங்கியது. என்னைச் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டேன். 

“நீ அழுதுட்டே இருந்தன்னா… ஒன்ன இங்கய விட்டுட்டு போயிடுவேன்” என்று அக்குழந்தையின் அம்மா சொன்னாள்.

சட்டெனப் பாட்டியின் மடியிலிருந்து குதித்து, “அம்மா போக்கூடாது, அம்மா போக்கூடாது” என்று அம்மாவின் காலில் விழுந்தது. அமர்ந்திருந்த அனைவருமே சிரித்துவிட்டனர். உண்மையில் அக்குழந்தை எங்கள் அனைவரின் நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருந்தது. அதுபற்றிய எரிச்சலே அங்கு யாரிடமும் இல்லையென்பது என்னை மேலும் எரிச்சல் கொள்ளச்செய்தது. மூன்றாவது முறை குழந்தையைத் தூக்கிக்கொண்டு அப்பெண் சென்றபோது வெண்ணிறப் பெண்ணும் உடன் சென்றாள். குழந்தை எவ்வளவோ வீறிட்ட பிறகும்கூட மருத்துவர் இம்முறை விடுவதாக இல்லை. குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெண்ணிறப்பெண் வெளியே வந்தாள். தாத்தாவிடம் அதனைக் கொடுத்தாள். ஆனால் பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் குழந்தையின் தாய் வெளியே வரவில்லை. நான் பதற்றம் கொண்டேன். குழந்தைக்கு ஏதும் பெரிய பிரச்சினையாக இருக்குமோ என்று மனம் அடித்துக்கொள்ளத் துவங்கியது. பத்து நிமிடம் கழித்து வெளியே வந்த பெண்ணின் முகக்கவசமணிந்த முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் அக்குழந்தையை அள்ளித் தூக்கிக்கொண்டாள். கண்களில் இருந்து நீர் கலங்கி வெளியானது. இந்த நோய்த்தொற்று நம்மை கண்ணை மூடிக்கொள்ளும்படிச் செய்யவில்லை. அப்படி நடந்திருந்தால் நான் பைத்தியம் பிடித்து தற்கொலை செய்திருப்பேன் என நினைக்கிறேன்.

“ம், அதான் பாத்துட்டாருல்ல? அப்புறம் ஏன் அழுவுற?” என்று குழந்தையின் பாட்டி கேட்டார்.

“இல்லம்மா, இவ்வளவு நேரம் புள்ள அழுதுட்டு இருந்தானில்லையா? என்னால தாங்கிக்கவே முடியல.”

நான் ஒரு அறிதலால் என் மனதில் நிம்மதி பரவுவதை உணர்ந்தேன். அது ஆண் குழந்தை. ஆனால் அக்குழந்தையின் அம்மா தான் அழுததற்காக சொன்ன காரணத்தை நினைத்து உடலில் மெல்லிய பகுதி சாலையில் போட்டு இழுக்கப்பட்டது போல மனம் எரிந்தது. ஏனென்று தெரியவில்லை. இல்லையென்றால் கொஞ்சம் யோசித்தால் அதைக் கண்டுபிடித்துவிடலாம்.

2 comments

Maha July 29, 2021 - 10:59 pm

Really I am scolding god that he had not blessed me like this talent not to say but it is a boon and on the other hand I thank him atleast he blessed me to read this one. My best wishes sir

சௌந்தரராஜன் September 4, 2021 - 3:16 am

கோவிட் இடரில் சிக்கித் தவிக்கும் இன்றைய நிலை, கட்டடங்களுக்கு கட்டடம் என வாழ்க்கை மாறினாலும், பிள்ளை அழுததைத் தாங்காமல் அழும் அம்மா.

Comments are closed.