இருதலை மணியன்

0 comment

அதிகாலையிலேயே அருகிலிருக்கும் பாலைவனத் தேசியப் பூங்காவில் கிரேட் இந்தியன் பஸ்டார்ட் எனும் கானமயில்களைக் காண வேண்டுமென்பது எங்களின் விருப்பமாக இருந்தது. இரவிரவாகப் பெய்த மழையில் எங்கள் கார் ஒன்றின் கதவு திறக்காமல் போய்விட்டது. ஏற்பாடு செய்திருந்த வாடகை ஜீப்பும் ஈரமணலில் சக்கரம் சிக்கிக்கொள்ளும் என வர மறுத்தனர். விடிய விடிய பெய்த மழையில் நிலமெல்லாம் ஊறிக்கிடந்தது. பாலைவனத்தைப் பிரிக்கும் கனத்த தார்சாலை கறுத்த மலைப்பாம்பைப் போல நீண்டிருந்தது. சிலர் ஜீப்புகளைத் தலைதெறிக்கும் வேகத்தில் கத்தியபடியே ஓட்டிச் சென்றனர். வாகனம் கடந்த பின்னும் அவர்களது கூச்சல் டீசல் நாற்றத்துடன் சில நொடிகள் ஈரக்காற்றில் பரவி மறைந்தது. மெல்லிய தூறல் துவங்கியது. ஜெயமோகன் நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு புதர்கள் மண்டிய மணற்காட்டிற்குள் காலை நடையைத் துவக்கினார். 

காலை உணவை முடிப்பதற்குள் டிரைவர்கள் கார் பிரச்சினையைச் சரி செய்திருந்தார்கள். கானமயில் சரணாலயத்திற்கு விரைந்தோம். அனேகமாக இச்சரணலாயத்தின் அனைத்து காணுயிர்களுமே அழிவின் விளிம்பில் உள்ளவை. முன் அனுமதி இன்றி எவரும் நுழைய முடியாது. ஜெயமோகனின் நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான செங்கதிர் எங்களுக்கான அனுமதியைப் பெற்றுத் தந்திருந்தார். சூழியல் ஆர்வலரான என்னுடைய அலுவலக நண்பர் விஜய் சுகுமார் கானமயிலைப் பார்ப்பதென்பது சாதாரணமானதில்லை எனப் பயணத்திட்டமிடுதலின் போதே சொல்லியிருந்தார்.

கானமயில் இந்தியாவின் தேசியப்பறவையாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய பறவை. பஸ்டார்ட் எனும் ஆங்கிலச் சொல்லைத் தவறாக உச்சரித்தால் கேவலமாகப் போய்விடுமே என்று மயிலைத் தேசியப்பறவையாக அறிவித்தார்கள் என்று வாசித்திருக்கிறேன். கடுமையான பரிசோதனை முன்னேற்பாடுகளுக்குப் பிறகு ஒரு காட்டிலாகா அதிகாரியும் எங்களுடன் வர பயணம் துவங்கியது. இரண்டு பக்கமும் விதவிதமான பொட்டல். மண்ணில் இத்தனை நிறங்களா என ஆச்சரியமூட்டும் அளவிற்கு நிலப்பரப்பில் நிறவேறுபாடுகள். இடைக்கிடை சிறிய விவசாய நிலங்கள் குறுக்கிட்டன. அனேகமாக ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் வயலில் பாடுபடும் விவசாய முறைகள். சொற்பச் சம்பளத்தில்கூட விவசாயக் கூலிகளை அமர்த்திக்கொள்ள கட்டுப்படியாகாத பண்ணையம். தர்பூசணி அளவிற்கே விளையும் ஒருவகை வெள்ளரிக் கொடிகள் அங்கங்கே படர்ந்து விளைந்திருந்தன. 

எப்போதோ வாசித்த சங்கப்பாடலில் பாலை நிலத்து எயினர்கள் புல்லரிசி திரட்டும் சித்திரம் நினைவுக்கு வந்தது. உணவின்றி வாடும் காலத்தில் பாலையின் ‘கொலைவேல் மறவர்கள்’ வழிப்பறிகளில் ஈடுபடுகையில், மென் இயல்பினரான எயினர்கள் எறும்பு, கரையான் போன்ற சிற்றுயிர்கள் மழைக்காலத்திற்காகத் தங்கள் புற்றுகளில் சேகரித்து வைத்திருக்கும் புல்லரிசிகளைத் தோண்டியெடுத்து சமைத்து உண்பர். கோதுமையைப் போலவே தோற்றமளிக்கும் சிறு தானியம் இது. எலிகள் போன்ற சிற்றுயிர்கள் இப்பாலையிலும் உண்டு. இதுபோன்ற வழக்கம் உண்டா எனத் தெரியவில்லை. 

தேசியப் பாலைவனப் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய சரணாலயங்களுள் ஒன்று. ஏறக்குறைய 3500 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டவை. ஆனால் நிலப்பரப்பின் அமைப்பினால் பல கிலோ மீட்டர்களைக் கண்களால் கடக்க முடியும் வெறுமை கொண்டவை. செல்லும் வழியில் சிங்காரா மான்களைப் பார்த்தோம். வேறு காணுயிரிகளைப் பார்க்க வாய்க்கவில்லை. என்னதான் அந்நியர் பிரவேசிக்க முடியாதபடி இச்சரணாலாயம் வேலியிட்டுப் பாதுகாக்கப்பட்டாலும் இங்குள்ள பூர்வகுடிகள் விவசாய நிலத்தையும் கால்நடை மந்தைகளையும் பெருக்கிக்கொண்டே சென்று அனேகமாக இங்குள்ள காணுயிர்களை இல்லாமலாக்கி விட்டார்கள் என்று தோன்றியது. பெரும்பாலான பாலைப்பறவைகள் தரையில் முட்டையிடுபவை. சரணாலயம் முழுக்க நூற்றுக்கணக்கான மந்தைகள் உள்ளன. இவ்வளவு கால்நடைகள் நடமாடும் பூமியில் எதுவும் மிஞ்ச வாய்ப்பில்லை. 

காரை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்துசென்றோம். ஒரு பொந்துக்குள் பாதி உடலை நுழைத்தபடி திமிறிக்கொண்டிருந்த மண்ணுள்ளிப்பாம்பு ஒன்றினைக் கண்டோம். அனேகமாக பொந்திற்குள் பாலைவனப் பல்லியை அது (Indian spiny tailed lizard) கவ்விக்கொண்டிருக்கலாம் என்று யூகித்தோம். மண்ணுக்குள்ளே வாழ்ந்து இரை தேடிக்கொள்வதாலும், மண்புழு இனத்தைச் சேர்ந்ததாலும் மண்ணுளி எனும் உள்ளூர்ப்பெயர் உருவாகிற்று. ‘இருதலை மணியன்’ எனும் மிக அழகிய பெயரும் உண்டு. நாங்கள் பார்த்த பாம்பு பொந்துக்கு வெளியே ஒன்றரையடி நீளம் கொண்டிருந்தது. மிணுங்கும் செம்பழுப்புத் தோலின் மேற்பரப்பு அலங்காரமாய்ச் செதுக்கிய இடுப்புப்பட்டை போல அழகாக இருந்தது. மண்ணுள்ளி எய்ட்ஸூக்கு மருந்து, அதன் வெள்ளையணுக்கள் புற்றுநோயை குணப்படுத்துகிறது, ஆண்மையை அதிகரிக்கிறது, சாகாவரம் அளிப்பது, வாஸ்து பணம் கொட்டும் போன்ற மூடநம்பிக்கைகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டும் கடத்தப்பட்டும் வருகிறது. 

மண்ணுள்ளிகளைப் பற்றி பேசும்போது நாம் நினைவுகொள்ள வேண்டிய மகத்தான ஆளுமை கிறிஸ்டோஃப் சாமுவேல் ஜான். சுவிசேஷப் பணிகளுக்காக இந்தியாவிற்கு வந்து 42 ஆண்டுகள் தரங்கம்பாடியிலேயே வாழ்ந்து மறைந்த ஜெர்மன் பாதிரி. ‘புராட்டஸ்டெண்ட் மிஷினரிகளின் தொட்டில்’ என்றழைக்கப்படும் தரங்கம்படிக்குத் தமிழின் வரலாற்றில் தனித்த இடம் உண்டு. சீகன் பால்க் பாதிரி பல்வேறு எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையே இந்திய மொழிகளில் முதன்முறையாக பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து இங்குதான் அச்சிட்டார். அவரைப் போலவே ஜெர்மனியில் பிறந்து டேனிஷ் மிஷினரிக்காகத் தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தவர் ஜான். 

கல்விப்பணி, இறைப்பணி மட்டுமல்லாது இனப்பண்பாட்டியல், மொழியியல், விலங்கியல், வரலாற்றுத்துறைகளில் ஆய்வுகளை முடுக்கினார். தென்னிந்தியா முழுக்கப் பயணித்து திரட்டிய அறிவை உடனுக்குடன் சமகாலத்தைய ஆய்வாளர்களான ஜார்ஜ் ஃபாஸ்டர், மார்கஸ் ஃப்ளோஜ், வில்லியம் ரோஸ்பர்க் போன்றோருடன் பகிர்ந்துகொண்டார். ஜான் வரைந்த ஓவியங்களும், ஆய்வுக்குறிப்புகளும் மார்கஸ் எழுதிய ‘மீன்களின் வரலாறு’ நூலுக்கு அடிப்படையாக அமைந்தன. ஜான் நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கண் பார்வையையும் படிப்படியாக இழந்து வந்தார். நோயின் சுமை அவரது ஆய்வுப்பணிகளைத் தடை செய்யவில்லை. 66வது வயதில் பக்கவாதம் தாக்கி மறைந்த ஜான் பாதிரி தரங்கம்பாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார். 

அறிவியல் துறைக்கு ஜான் பாதிரி ஆற்றிய சேவைகளுக்காக ஜெர்மானிய ஆய்வறிஞர்கள் சொஸைட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. ஆய்வாளர் மார்கஸ் ஒரு மீன் இனத்திற்கு ஜானியஸ் எனும் பெயர் சூட்டினார். இந்தியாவின் முதல் பாம்பு மனிதர் எனும் புகழைப்பெற்ற நீர்- நில- ஊர்வன விலங்குகள் ஆய்வுத்துறையின் முன்னோடி பேட்ரிக் ரஸ்ஸல், மண்ணுள்ளிப் பாம்புகளுக்கு ‘எரிக்ஸ் ஜான்னி’ எனப் பெயர் சூட்டி கெளரவித்தார். ஜான் பாதிரியைப் பற்றி எழுதும்போது தோன்றுகிறது. ஆங்கிலப் பாதிரிகளின் ஆய்வுப் பங்களிப்புகள் புகழப்படும் அளவிற்கு பிற ஐரோப்பிய மிஷினரிகளின் பங்களிப்புகள் பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை என்பது ஆய்வுக்குரிய ஒன்று.

ஒட்டகம் சைவமா அசைவமா?

கானமயில் பார்க்க முடியாத சோகத்தில் சரணாலயத்தில் நெடுநேரம் நின்றுகொண்டிருந்தோம். நண்பர்கள் தொலைநோக்கியில் எதிரில் தெரிந்த மலைப்பகுதியில் துழாவிக்கொண்டிருந்தார்கள். திடீரென ஈஸூ ‘நரி, நரி’ என்றார். அவர் காட்டிய திசையில் அரியதிருவிழிக்கருவியை திருப்பினேன். நலிந்த நாய் ஒன்று சோகமாய் ஓடிக்கொண்டிருந்தது. 

பயிரிடும் வேலைகளில் ஈடுபட்டிருந்த பழங்குடிச் சிறுவர்களை அழைத்து ஜெயமோகனும் செங்கதிரும் அவர்களது கல்வி பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று இலவசக் கல்வியைப் பெற்றுக்கொண்டிருந்த சிறுவர்கள். அவர்களது தோற்றமும் வறுமையும் வாழ்க்கை நிலையும் கொண்டு அவர்கள் ராஜஸ்தானிலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஷகாரியாஸ் பழங்குடிகளாகத்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டேன். 

மதிய உணவுக்காக ஜெய்சால்மரின் ரிசார்ட் விடுதிகளில் ஒன்றுக்குச் சென்றோம். எங்களைக் கண்டதும் மதராஸிகள் வந்திருக்கிறார்கள், அரிசியை அதிகம் போடு எனச் சமையலறை நோக்கி கூவியபடி இனிய சிரித்த முகத்துடன் ரிசார்ட் அதிபர் எங்களை நெருங்கி வந்தார். இனிய தமிழில் அறிமுகம் செய்தபடி உரையாடலைத் தொடங்கினார். சென்னையில் பிறந்து வளர்ந்து தொழில்செய்து சொத்து பத்துக்களைச் சேர்த்த மார்வாடி இளைஞர். ரிசார்ட் அப்பாவினுடையது. தன்னுடைய ஓய்வுகாலத்திற்குப் பின் மகன் ஜெய்சால்மருக்கு வந்துவிட வேண்டுமெனும் அப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க சென்னையில் இருந்த தொழிலை நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டு தாய்நிலத்திற்குத் திரும்பியவர். தமிழ் சினிமாவின் தீவிர ரசிகர். ஜெயமோகன் எழுதிய அனைத்து சினிமாக்களையும் பார்த்திருந்தார். அவரது உபசரிப்பு மழையில் பயணத்தின் மிக சுவையான மதிய உணவை உண்டோம். உருண்ட முகத்தில் திரண்ட சிரிப்புடன் இருந்த அவருக்காகவே சாம் டூன்ஸுக்கு மீண்டும் ஒருமுறை வரவேண்டுமென உறுதிகொண்டேன். 

செங்கதிர் குடும்பத்தாருடன் விடைபெற்றுக்கொண்டோம். பார்மரில் இரவுத் தங்கல் என்பது திட்டம். பழுப்பிலேயே பல வர்ணங்கள் காட்டும் மணல் மேடுகளைப் பார்த்துக்கொண்டே ஆளரவமற்ற தார் சாலையில் பயணம் தொடர்ந்தது. எத்திசையிலும் எரியும் வெயில். எங்கு பார்த்தாலும் புகைமண்டிய பழைய கருப்பு வெள்ளைக் காட்சிகளைப் போன்ற நிலம். சாலைகளின் இருமருங்கிலும் முள்ளுச்செடிக் காடுகள். உற்றுப்பார்த்தால் வெளிறிய பச்சை நிற இலைகளைக் கொண்ட குட்டை மரங்கள். அதில் உயரம் தாழ்த்தி தங்கள் முதுகுகளைச் சொருகிக்கொள்ளும் ஒட்டகங்கள். சாலை முழுக்க தனித்து விடப்பட்ட ஒட்டகங்கள் காலாதீதத்தை அசைபோட்டுக்கொண்டிருந்தன. நான் கல்வெட்டாங்குழி குட்டைகளில் ஊறித்திளைக்கும் நம்மூர் எருமைக்கிழவிகளை நினைத்துக்கொண்டேன். சாலையோரங்களில் இறந்து கிடந்த சில ஒட்டகங்கள் எடுத்துப் புதைக்க நாதியின்றி அழுகி நாறி ஈச்சுழலுக்குள் கிடப்பதையும் சில இடங்களில் கண்டேன். 

தார் பாலைவனமே வாழ்வாதாரத்திற்குத் தவித்துக்கொண்டிருந்த நிலப்பகுதிதான். எழுபதுகளில் டூரிஸம் எழுந்து வந்தது. டாக்டர் நிதின் படேல் போன்றவர்கள் ஒட்டகப் பால் ஆராய்ச்சிகளின் வழியாக கிராமங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கினார்கள். ஒட்டகத்தின் பால் குழந்தைகளுக்குச் சிறந்தது. மாட்டுப் பாலைவிட கொழுப்பு மிகவும் குறைவு. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக உகந்தது. ரைகா இன மக்கள் ஒட்டகங்களை வளர்த்துப் பராமரிக்கலானார்கள். வறிய நிலையிலிருந்த கிராமங்களின் பொருளியல் உயர்ந்தது. மோடி ஒருமுறை ரான் திருவிழாவைத் துவக்கி வைத்து பேசும்போது ஒட்டகப்பால் குழந்தைகளுக்கு உகந்தது என்று சொன்னதை இந்தியாவெங்கும் கேலி செய்தார்கள். இன்று மாட்டுப் பாலைவிட ஒட்டகப்பால் இருமடங்கு அதிக விலைக்கு விற்பனை ஆகிறது. 

பல்வேறு காரணிகளால் இன்று ஒட்டக வளர்ப்பு அத்தனை இலாபகரமானதாக இல்லையென்பதால், இந்தியாவில் ஒட்டகங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. ‘குறும்பொறை உணங்கும் தகர் வெள்ளென்பு கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் கல் நடுங் கவலைய கானம் நீந்திஎனும் அகநானுற்று வரிக்கு பண்டிதர்கள் – என்பு எனும் சொல்லை எலும்பு எனக் கருதி – ஒட்டகங்கள் எலும்பு சாப்பிடும் என உரை எழுதிவிட்டார்கள். அது நாஞ்சில் நாடனின் கண்ணில் பட்டுவிட்டது. விடுவாரா? வெளுவெளுவென வெளுத்து வாங்கிய அவரது ‘ஓங்கு நிலை ஒட்டகம்’ தமிழில் ஒரு க்ளாசிக் கட்டுரை. என்பு எனும் சொல்லுக்குப் புல் எனும் பொருளும் உண்டு என்பதை அவர் கண்டடைந்தார். 

ஆனால் ‘ஒட்டகம் எலும்பு’ கதை இத்தோடு முடியவில்லை. கால்நடை மருத்துவ நோய் தீர்ப்பியல்படி, ஒட்டகம் எலும்பைத் தின்னும் என்பது உண்மை. தனது உணவின் மூலம் போதுமான அளவு பாஸ்பரஸ் தாதுச் சத்து கிடைக்காவிட்டால், ஒட்டகம் பாலைவனத்தில் கிடக்கும் எலும்புகளைத் தின்று இக்குறையையினைப் போக்கிக்கொள்ளும். ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள பல ஒட்டகங்களிடம் இந்நோயின் பாதிப்பு உண்டு என்பதைப் பிகாரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது. ஆகவே சங்கப்புலவன் பாடியதில் தவறில்லை. ஒட்டகம் சைவமோ அசைவமோ பேலியோவோ வாரியரோ, நமக்கு நாஞ்சில் நாடனிடமிருந்து ஒரு செறிவான கட்டுரை கிடைத்ததே போதாதா?!

காருக்குள் இணையத்தில் நான் தேடித் தரவிறக்கிய ராஜஸ்தான் பழங்குடி சங்கீதம் ஒலித்துக்கொண்டிருந்தது. சாலைக்கு வெளியே ஆங்காங்கே வெட்டி வைத்த மைசூர் பாகைப் போன்று மஞ்சள் நிறக் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. ராஜஸ்தான் கட்டிடக்கலைக்குத் தனித்துவமும் வர்ணமும் சேர்க்கும் அழகிய கற்கள். சீராக வெட்டியெடுத்த கற்கள் கட்டுமான வேலைகள் முடிந்த வீடுகளுக்கு அருகே கைவிடப்பட்டு கிடந்தன. சல்பரின் நிறமும் சூரிய ஒளி பட்டால் பொன்னின் ஜாலமும் காட்டக்கூடிய விலையேறின கற்கள். 

வழி மறித்து நிற்கும் பெருங்கொம்பு கொண்ட மாடுகள் மீது இடித்துவிடாமல் வாகனத்தை வளைத்து வளைத்து ஓட்டிக்கொண்டிருந்தார் டிரைவர். திடீரென ‘சன் டெம்பிள்’ எனக் கூவினார் கிருஷ்ணன். சாலைக்கு அப்பால் தெரிந்த வனப்பகுதிக்குள் காலத்தின் கறையேறிப் போன கரிய கோபுரம் ஒன்று தெரிந்தது. வாகனத்தை ஓரம் கட்டி வனத்துக்குள் இறங்கி நடந்தோம். சோலங்கிப் பாணி சிவாலயம். மரு-கூர்ஜரா பாணி என்று குறிப்பிடுவது தற்கால வழக்கம். முற்றிலும் சிதிலமடைந்த ஆலயம். தொல்லியல் துறை கோவிலின் சிதிலங்களைச் சேகரித்து ஒரு உத்தேச உருவை உருவாக்கியளித்திருக்கிறது. கிராடு ஆலயங்கள் என அழைக்கப்படும் புகழ்மிக்க 5 ஆலயங்கள் இந்தப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன. அனைத்துமே சிதிலமடைந்த நிலையில்தான் உள்ளன. மூல விக்கிரகங்கள் இல்லாத ஆலயத்தின் சுற்றுச்சுவர்களில் அழகிய சிற்பங்கள் இருந்தன. 

வெயில் குறைந்து மாலையின் தென்றல் வீசத் துவங்கியது. ஆலயத்தின் படிகளில் அமர்ந்து தொல்லியலாளர் கே.கே.முகமது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தூரத்தில் வெடியோசை கேட்டது. முதலில் யாரோ பாறையை வெடி வைத்துத் தகர்க்கிறார்கள் என நினைத்தோம். மீண்டும் வெடிச்சத்தம் அருகே கேட்டது. துப்பாக்கி. வானில் புறாக்கூட்டம் ஒன்று சடசடத்து பறந்து மறைந்தது. பறவை வேட்டை. நான் அனைவரும் தலையை குனிந்துகொள்ளுங்கள் என்று கூவினேன். Muzzle-loading gun எனும் நாட்டுத்துப்பாக்கி மிக மிக ஆபத்தானது. இவற்றில் இருப்பது தோட்டாக்கள் அல்ல. பயன்படுத்துபவர்கள் குறிபார்த்துச் சுடுபவர்களும் அல்ல. சைக்கிள் கடைகளில் கிடைக்கும் பால்ரஸ் குண்டுகளைக் கரிமருந்தில் சேர்த்து டிரிக்கர் முனைக்குக் கொண்டுவந்து உத்தேசமாகச் சுடுவார்கள். கரிமருந்து வெடித்து குறுகிய குழாய் வழியே வெளியேறும் பால்ரஸ் குண்டுகள் தூரம் செல்லச் செல்ல ஒரு வலை போல விரிந்து இலக்கைத் தாக்கக்கூடியவை. பறவை வேட்டைக்கு உகந்தவை. பத்துக்கு இரண்டில் பழுதில்லாமல் பட்டு இரை வீழ்ந்துவிடும். தாறுமாறாகப் பாயும் இந்த பால்ரஸ் வேட்டைத் துப்பாக்கியால் இன்றும் தமிழகத்தில் விபத்தும் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. கரங்களைப் பின்னந்தலையில் கோர்த்து குனிந்த வாக்கில் ஓடி ஆலயத்தை விட்டு வெளியேறினோம்.

*

பாலைநிலப் பயணம் நூலிலிருந்து ஒரு பகுதி.