அழுமூஞ்சிப் பொட்டணத்தை எள்ளல் கைகொண்டு பிரிப்பவன்: இசையின் கவிதைகளை முன்வைத்து

2 comments

ஒரு முறை சத்தியமூர்த்தி (aka) கவிஞர் இசை சொன்னார், “விழுகுற அன்பு வந்து விழுந்தா போதும் நண்பா”. நான் துணுக்குற்றேன். அந்தச் சொல்லிணைவு என்னை வெகுவாகக் கவர்ந்தது. அன்பை ஏன் விழுதலுடன் இணைத்துச் சொன்னார்? அன்பை மழை என்று சொல்கிறாரா அல்லது மழைதான் அன்பா? தனித்தனியாக இயங்கும் போது சாதாரணமாக இருக்கும் சொற்கள், விசித்திரமான இணைவில் மிக அசாதாரணமான ஒன்றாக எழுகின்றன. “கவிதையின் அடிப்படை அலகு சொல்” – என்பதை இசையின் கவிதைகளில் அழுத்தமாகக் காணலாம். சென்ற தீபாவளிக்கு இசையின் வாழ்த்து இப்படியாக இருந்தது. “உங்கள் இல்லத்தில் குலாப் ஜாமூன் வெடிக்க”.

சத்யமூர்த்தி கவிதை எழுதும் போது இசையாக மாறுகிறார். சில நேரங்களில் சத்யமூர்த்தி இசையின் வாயால் பேசிவிடுகிறார். இசை இசையைப் பற்றி எழுதிய ஒரு மாயாஜாலக் கவிதை உண்டு. 

நல்லறம் வீற்றிருக்கும் டோக் நகர்

மதுரை மாநகரின் இச்சனிக்கிழமை நள்ளிரவில்

ஒரு டாஸ்மாக்கிலிருந்து டோக் நகர் போய்க்கொண்டிருக்கிறது

இருசக்கர வாகனமொன்று. 

இப்போதந்த வாகனத்தில் ப்ரேக் இல்லை

ஹாரன் இல்லை லைட் இல்லை 

ட்யூபும் டயரும்கூட இல்லை

ஒரு எக்ஸலேட்டர் மட்டும்

அதுகூட ஒரு உற்சாகப் புலியின் கையிலிருக்கிறது.

உற்சாகப் புலிக்கேகூட ஒரு கை மட்டுமே இருக்கிறது

தலை தொங்கிவிட்டது

எதிரே நிற்கும் கனத்த மின்கம்பத்திற்கு

புலியைக் குட்டியிலிருந்தே தெரியும்

அது கவியானதும் தெரியும் 

இன்று காலையில்தான் காப்பிய முயற்சி ஒன்றிற்கு

காப்புப்பாடல் எழுதி வைத்திருப்பதும் தெரியும்

“உ….ம்ம்ம்ம்…” எனும் கனைப்பொலி 

நெருங்கி முட்டும் கணத்தில்

ஒரு 60 டிகிரி சாய்ந்து எழுகிறது மின் கம்பம்.

காலை வணக்கம் கவிஞரே.!

“கவிதை எல்லா வகையான சொற்களையும் உதறுகிறது. நிதர்சனத்தில் திளைக்கிறது” – இது பிரமிளின் கூற்று. கவிதை என்பது சொற்களை மட்டுமே நம்பி அல்ல. கவிதை கவிதையைத்தான் நம்பியுள்ளது. முரட்டுத் தோல் சொற்களைத் தூக்கி வைப்பது மட்டுமே கவிதை ஆகிவிடாது. இந்தக் கூற்றை நிறுவ சில கவிதைகளை இங்கு முன்வைக்கலாம். 

எனக்கு யாருமில்லை

நானேகூட. (நகுலன்)

யாரையும் விரும்பவில்லை.

இனி யாரோடும் இருக்கலாம் (மனுஷ்ய புத்திரன்)

காதல் கூட அல்ல

நீ என் பதற்றம் (இசை)

இசை ஒரு நேர்காணலில் தன் கவிதை மொழிதலைக் குறித்து இப்படிக் கூறுகிறார். “குழப்பமூட்டும் சொற்களால் வசீகரிக்கப்பட்டவர்கள் குழப்பமூட்டும் வரிகளை எழுதுகிறார்கள். நான் எளிமையால் வசீகரிக்கப்பட்டவன். எனவே எளிமையாக எழுத முயல்கிறேன் ,“தெளிவுற அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல் “ என்பதுதானே நமது மகாகவியின் வாக்கும்?” 

பகடி குறித்த இரண்டு கருதுகோள்கள். என்னுடையவைதான். ஒன்று, புதிய பிரச்சினைகளைப் பழைய மொழியில் சொல்லும் போது அது தன்னளவில் பகடியைக் கொண்டுள்ளது. இன்னொன்று, பழைய மொழியில் சொல்லப்படுகிற கவிதையில் ஒரு புதிய ஆங்கிலச் சொல் கலக்கும் போது அது பகடியாக மேலெழுகிறது. “இந்த நைஸிற்குத்தான் வைகறை வாளாகிறதா?” என வினவுகையில் சிரிப்பு முட்டிக்கொள்கிறது. 

நைஸ்

எதேச்சையாகப் பட்டுவிட்டது

உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன

இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா

முனிகள் பிறழ்ந்தனரா

இதற்காகத்தான் இப்படித்

தேம்பித் தேம்பி அழுகிறார்களா

இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா

இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை எதிர்க்கிறார்களா

செங்குருதியில் மடலிடுகிறார்களா

இதுமட்டும் போதுமென்றுதான்

கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா

இந்த நைஸிற்காகத்தான்

ஆழக்குழி தோண்டி

அதில் பண்பாட்டை போட்டு மூடுகிறார்களா

இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்து

பிறன்மனைக்குள் குதிக்கிறார்களா

இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா

கைவளை நெகிழ்கிறதா

இந்த நைஸிற்காகத்தான் “வைகறை வாளாகிறதா”

இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை அன்பு செய்கிறார்களா

முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா

இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை எழுதி வைக்கிறார்களா

இதற்காகத்தான்

தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறார்களா

இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா

அந்த நைஸ் இனியில்லை என்றானதற்காக

தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு

பாவம், அதே நைஸ்தான் வேண்டுமோ.

ஒரு தருணத்தைச் சுட்டும் அல்லது ஒரு நிகழ்வைச் சுட்டும் கவிதை அதில் ஏதோ ஒன்றைச் சுட்டாமல் சுட்டி கற்பனையைத் தூண்டி அதன் எல்லையை விஸ்தரிப்பது. “மகா ரப்பர்” என்கிற கவிதையில் வரும் நாள் குறிப்பிட்ட வரலாற்று நாளைச் சுட்டி இருந்தால் கவிதை அங்கேயே சுருங்கி இருக்கும். ஆனால் அப்படி நிகழாது அது எந்த நாளாகவும் இருக்கலாம் என்ற விஸ்தரிப்பைத்தான் நாம் கவிதையின் ஆழம் என்கிறோம். இப்படிப் பல ஆழமான கவிதைகள் இசையின் கவிதைப் பரப்பில் உண்டு. 

மகா ரப்பர்

பிழையாக எழுதப்பட்ட

ஒரு வரியை

அழித்துக்கொண்டிருக்கிறான் சிறுவன்.

அதை அருகிலிருந்து பார்த்தபடியிருந்தவன்

தம்பி, இதுபோல்

14.3.2001ஐ அழிக்க முடியுமா

என்று கேட்டான்.

இது இங்க் ரப்பர்னா

எல்லாத்தையும் அழிக்கும்

என்றான் சிறுவன். 

“அந்தக் காலம் மலையேறிப்போனது” கவிதைத் தொகுப்பு இப்படி சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும். “தோழர் தங்கப்பாண்டியன், வான்ஸ் ஆகியோருக்கும் சிவா லாட்ஜின் வற்றாத கண்ணீருக்கும்”. அந்தக் குட்டி அறையில் கொந்தளிக்கும் அவ்வளவு சிரிப்புகளுக்கும் கும்மாளத்திற்கும் இடையில் சத்தமில்லாமல் சொரிந்துகொண்டிருக்கும் வற்றாத கண்ணீர் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் விரவியிருப்பதை அவரது அநேக கவிதைகளில் காணலாம். நான் உளவியல் நிபுணன் அல்ல. ஆனால் ஒரு கவிதை வாசகனாக என்னால் இதைக் கூற முடியும். மனித மனம் புறவுலகால் செய்யப்படுகிறது. அந்த மனம் இரண்டு பாகமாய் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று சந்தோஷம். மற்றொன்று துக்கம்.

இசையின் கவிதை சந்தோஷக் கூறுகளும் துக்கக் கூறுகளும் ஒரே சரடில் பிணைத்துச் சமைக்கப்பட்டிருக்கின்றன. நமது மனநிலையைப் பொறுத்து அது சந்தோஷமாகவும் துக்கமாகவும் துலங்கித் துலங்கி வருகிறது. சந்தோஷமான நேரத்தில் கவிதை முன்பக்கமாகவும் துக்கமான நேரத்தில் கவிதை கொல்லைப்புறமாகவும் திறந்து கொள்கிறது. இசையின் “கழிவிரக்கக் கவிதை” அதற்கு ஒரு சான்று.

ஒரு கழிவிரக்கக் கவிதை

கண்ணைக் கசக்கிக்கொண்டு

என் முன்னே வந்து நிற்கிறது 

அதன் மேனியெங்கும் கந்தலின் துர்நாற்றம் 

ஊசிப்போன வடையை தின்று வாழும் அதை 

கண்டாலே எரிச்சலெனக்கு 

“போய்த்தொலை சனியனே..

கண்ணெதிரே இருக்காதே..”

கடுஞ்சொல்லால் விரட்டினேன் 

காலைத் தூக்கிக்கொண்டு 

உதைக்கப் போனேன் 

அது தெருமுக்கில் நின்றுகொண்டு 

ஒருமுறை திரும்பிப் பார்த்தது

நான் ஓடோடிப் போய்க் கட்டிக்கொண்டேன்.

கவிதை எழுதுவதற்கு மட்டுமல்ல. கவிதை வாசிப்பிலும் வேறோருவராக (other) மாற வேண்டிய கட்டாயம் உண்டு. கற்பனையில் சென்று அந்தக் கவிதையை அதே இடத்தில் அதே உணர்ச்சியில் சந்திப்பது. இந்தக் கவிதையை நீங்கள் நாயாகவோ அல்லது வசைமொழிபவராகவோ மாறி வாசிக்கும் போது நிச்சயம் கண்ணீர் முட்டிக்கொள்ளும்.

கவிஞர்களின் மனப்போக்கு குறித்த சித்திரங்கள் பேச்சிலும் எழுத்திலும் கிடைக்கின்றன. தற்கொலை செய்துகொள்கிற கவிஞர்களை இந்த உலகம் கொண்டாடி மற்றவர்களையும் தூண்டிவிடுகிறதோ என நினைப்பதுண்டு. இதை ஒரு சடங்காகப் பேணி வந்திருக்கிறது தமிழ்க் கவிதையுலகு. மாறாக, “கவிதை தற்கொலையின் ஜென்ம சத்ரு” என்கிற இசையின் வரியை வாசித்த போது என்னுள்ளிருந்து விநோதமாகப் பல நல்ல உணர்வுகள் மேலெழும்பி வந்தன. கவிதை இசையைக் காப்பாற்றி இருக்கிறது. ஆமாம், உண்மை, சத்தியம். கவிதை அநேக உயிர்களைக் காப்பாற்றுகிறது. 

“அழகாயில்லாததால் நீ எனக்குத் தங்கை” – என்பது கலாப்ரியாவின் வரி. கவிதையில் துறுத்தலாக ஒட்டிக்கொண்டிருந்த அதன் மிகைகளைக் கழற்றிவிட்டு எவ்வளவு கசப்பானாலும் உண்மையைப் பேசிவிடலாம் என்று இடத்திற்கு நவீனக் கவிதை வந்திருக்கிறது. இதே போன்றதொரு தொனியிலான கவிதை நம் ஆளிடமும் உண்டு. 

பேசிக் மாடலுக்குத் திரும்புதல்

தன் ஆண்ட்ராய்டை தரையில் அடித்து

உடைத்துவிட்டு பேசிக் மாடலுக்குத் திரும்புகிறான் ஒருவன்.

பேசிக் மாடலுக்குத் திரும்புவதென்பது

மாட்டு வண்டிக்குத் திரும்புவது

நிலா சோற்றுக்குத் திரும்புவது

அணிலாடும் முன்றிலுக்குத் திரும்புவது

P.B. ஸ்ரீனிவாஸிற்குத் திரும்புவது

மீதியை வெண்திரையில் காண்க என்கிற

பாட்டுப் புத்தகத்திற்குத் திரும்புவது

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு

சூர்யா டி.விக்குத் திரும்புவது

“I love you” என்கிற ஆகப் பெரும் குழப்பத்திலிருந்து

“நான் உன்னைப் புணர விரும்புகிறேன்” என்கிற

தெள்ளத் தெளிவிற்குத் திரும்புவது. 

அய்யா இசை, உண்மையைக் காண ஒரு தூர எல்லை உண்டு. அந்த எல்லைக்குள்தான் நின்று காண வேண்டும். அப்படி உண்மையைப் பார்ப்பதில் உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. மேலும் கவிதையில் நிதர்சனமற்ற மிகையானவற்றைத்தான் கழற்றுவார்கள். இப்படி ஒட்டத் துகிலுரித்தால் எங்குட்டி நெஞ்சு தாங்காதய்யா.!

கவிதை எத்தனை வலுவான அறத்தை முன்வைக்கும் போதிலும் அதன் மாயாஜாலமே அதைக் கவிதையாக்குகிறது. அது ஆன்மீகத்தைப் பேசினாலும் அரசியலைப் பேசினாலும் அதிலிருக்கும் மாயாஜாலத்தைக் குறைத்துவிடக்கூடாது. கவிதையில் காதலை எழுதுகையில் காதலானது கவிதையை ஒருபடி கீழே இறக்கிவிடுகிறதோ என்று தோன்றுகிறது. “காதலைக் குறித்து எல்லோரும் எழுதுவதால் அப்படித் தோன்றுகிறதா? காதல் தீவிர இலக்கியத்திற்கு எதிரானதா?” என்ற கேள்விகளைக் கேட்கும் முன் காதல் கவிதைகளில் சொல்லும் பொருளும் வளமும் மொழிதலும் புதிதாயுள்ளதா என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.

நிலா, வானம், நட்சத்திரம், மழை, ரோஜா, குளம்பி, வண்ணத்துப்பூச்சி, கடல், தேநீர், இதயம்…. இப்படி பத்துப் பத்துப் பொருட்களை மடக்கி அடுக்கினால் அது ஒரு கவிதை வடிவம் பெற்றுவிடுகிறது. இன்னும் திருத்தமாகச் சொன்னால் காதல் கவிதை. “வாழ்த்து அட்டை வாங்கியவரெல்லாம் காதல் கவிஞர்கள் ஆகிவிடுகிறார்கள்” என்றார் சுஜாதா. 

கீழேயுள்ள இசையின் இரு கவிதைகளை எடுத்துக்கொள்வோம். அது நவீனக் காதலின் சிக்கலைப் பேசுகிறது. இதுவரை பேசப்படாத DP, எமோஜி எனப் புதிய சிக்கல். பொருள் புதிது. பெருந்திணை, அருவெங் கானத்திடை, உழுவை என்று சங்க இலக்கிய மொழியில் பேசுகிறது. அது நவீனக் கவிதைக்குப் புதிது. சொல் புதிது. எல்லாவற்றுக்கும் மேலே அதன் மாயாஜாலமும் குறையவில்லை.

நள்ளிரவு இரண்டு மணிக்குத் தன் காதலியின் புகைப்படத்தைத் தன் dp-ஆக வைத்து அழகு பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அது பொருந்தாக் காமம் எனச் சட்டென உறைத்தது. அவன் அஞ்சி அகற்றிவிட்டான். அதன்பின் அவன் படும் பாடு பயமும் படபடப்புமாக ஓடி முடிகிறது. ஒரு கவிதை அதுவும் காதல் கவிதை இவ்வளவு வேகமாக ஓடுமா?

முக்கால் நிமிஷம் 

நள்ளிரவு 2:00 மணிவாக்கில்

உன் புகைப்படத்தை

என் Dp- யாக வைத்தேன்

பெருந்திணை

அன்பின் புறநடையென்பதால்

உடனே

அஞ்சி அகற்றி விட்டேன்.

ஒரு முக்கால் நிமிஷம்

நீ என் உரிமையில் இருந்தாய்.

அதற்குள் யாரேனும் பார்த்திருப்பார்களா?

நடுசாமத்தில் யார் பார்க்கப்

போகிறார்கள்?

ஆனாலும்

யாரேனும் பார்க்கத்தானே வைத்தேன்.

ஒருவர் கூடவா

பார்த்திருக்க மாட்டார்கள்?

நல்லவேளை

நீ குளோசப்பில் சிரிக்கவில்லை

எனவே, 

எந்தக் கண்ணிலும் விழுந்திருக்காது

ஒரு கண்ணிலுமா விழுந்திருக்காது?

அடுத்த கவிதையில் மாயாஜாலமும் கூடிக் கலந்து எருமை எமோஜியுடன் வந்து நிற்கிறது. ஐந்து நிமிடம் பேசாமல் விட்டாலும் எருமை எமோஜிகள் பறந்து வருகின்றன. பிறகு கொடுங்காலம். எருமை வரத்துக்கு என்னவோ ஆயிற்று. பிறகு அந்த எருமையை உழுவை (புலி) மிரட்ட அது கனவுக்குள் வந்து நடுங்கி நின்றதை மாயப் புனைவுத் தன்மையுடன் எடுத்துரைக்கையில் அது எளிய காதலே ஆனாலும் கவிதையாய் நெஞ்சில் நிறைகிறது.

எரும எமோஜி

அரைமணி நேரத்துப் பிரிவுக்கு அஞ்சி

நீ அனுப்பி வைத்த எருமைகளில்

சேறும் பாலும் கமழ்ந்தன.

அதன் கொம்பிற் மின்னியதொரு வனமலர்.

பிறகு வந்ததொரு கொடுங்காலம் 

எருமை வரத்து 

கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து

அருகி ஒழிந்துவிட்டது.

என்னதான் ஆனதடி நம் எருமைகளுக்கு?

நேற்று, அவை

அருவெங் கானத்திடை

துளிநீர் வேட்கையில் மயங்கிய போழ்தில்

உழுவை சீற, உள்ளம் நடுநடுங்கி

கதவுடைத்து வந்து

என் கனவுக்குள் ஒளிந்ததடி தோழி!!

கவிதையில் இசைமை வேண்டுமா வேண்டாமா என்பது நவீனக் கவிதையில் விவாதமாக இருக்கிறது. கவிதையில் சாதாரண சொற்களும் வரிகளும் ஒரு தாளத்திலோ லயத்திலோ உயர்ந்தோ தாழ்ந்தோ இல்லாமல் சன்னமாக வந்து விழுகிற போது வாசகனுக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஒயிடான பந்துகளாகத் தோன்றுகிறது. தொடர்ந்து ஒயிடுகளைச் சந்திக்கும் வாசகன் சோர்ந்துவிடுகிறான் அல்லது பெவிலியன் திரும்பிவிடுகிறான். 

இந்த இடத்தில் இசையின் கவிதைகளில் ஒளிரும் இசைத்தன்மையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இசையின் பல கவிதைகள் சாதாரணமாகத் துவங்கி மிக மிக அசாதாரணமான இசைமை மிகுந்த வரிகளில் ஏறி முன்னே செல்கின்றன. “லூஸ் ஹேருக்கு மயங்குபவன்” என்ற கவிதை ஒரு விதச் செய்யுள் போல சமைக்கப்பட்டிருக்கிறது.

நான் எளியனில் எளியன்.

லூஸ்ஹேருக்கு மயங்குபவன்.

மனம் போன போக்கில்தான் போகிறேன்

மனம் போகிறது

அதனால் போகிறேன்.

லூஸ்ஹேரில் பரலூஸ்ஹேர் என்றொன்றில்லை.

என் உடலொரு கருவண்டுக் கூட்டம்.

ஒவ்வொரு லூஸ்ஹேரின் பின்னும்

ஒரு வண்டு பறக்கிறது.

எப்போதும் என் முன்னே ஒரு சுழித்தோடும் காட்டாறு.

காட்டாற்றைக் கடக்க உதவும் ஆல்விழுதே…

உன்னைச் சிக்கெனப் பற்றினேன்.

எனக்குத் தெரியும்.

லூஸ்ஹேரை மயிரென்றெழுதி கெக்கலித்த ஓர் அறிவிலி

கடைசியில் அதிலேயே தூக்கிட்டு மாண்ட கதை.

ஈரும் பேனும் நாறும் இடமெனத் தவநெறி முனிந்தால்,

லூஸ்ஹேரின் நுனியில்

தொங்கிச் சொட்டும் துளிநீரில்

இவ்வுலகு உய்கிறது என்பேன்.

பெருத்து வீங்கிய அழுமூஞ்சிப் பொட்டணம் ஒன்றை எள்ளல் கைகொண்டு பிரிப்பதுதான் இசையின் கவிதையுலகம். அப்படிப் பிரித்தவுடன் அதன் தீவிரம் கீழிறங்குவதைப் போலிறங்கி அதே வீச்சில் மேலெழும் மாயம் பல கவிதைகளில் நிகழ்கிறது.

இசையின் கவிதைப் பரப்பில் நிறைய அரசியல் கவிதைகள் இல்லை. சிலவே ஆனாலும் காத்திரமான அரசியல் கவிதைகள் உண்டு. காத்திரமான என்றால் சத்தமான என்ற பொருள் அல்ல. சத்தமில்லாத என்பதைத் தீவிரமற்ற என்றும் புரிந்துகொள்ளக் கூடாது. கவிதையில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதுதான் கவிதையின் சிறப்பே. ஒரு கவிதையை கவிஞர் கோபமாக அல்லது சத்தமாகத்தான் எழுதி இருக்கிறார். அவர் எப்படி வேண்டுமானாலும் எழுதட்டும். அது அவர் கவிதை. ஆனால் அந்தச் சத்தத்தால் வாசகனுக்கு என்ன கிடைத்தது என்பதுதான் நீண்டு வளைந்த பெரிய முதுகுள்ள கேள்வி.

கவிஞனின் பணி யாருக்காவும் வருந்துவதோ கண்ணீர் உகுப்பதோ அல்ல. அவன் சொல்லற்றவர்களின் சொல்லேந்துபவன். அரசியல் கவிதையில் தற்காலிகப் பிரச்சினை பேசப்பட்டாலும் அது எக்காலத்திலும் சுடர்விடும் அறத்தின் ஒளியைத் தன்னுள் கொண்டிருக்க வேண்டும்.

DEMONITIZATION என்றொரு கவிதை. கோபம் என்றொரு சிறிய உணர்வைக் கூட்டாமல் பெரும் உலுக்குதலாக மாற்றுவதால்தான் இந்தக் கவிதை சிறந்த கவிதையாகிறது. மேம்போக்கான வாசிப்பில் ஏனோதானோவெனத் தோன்றும் இந்தக் கவிதை, அதன் உள்ளொளி துலங்கி வருவதைப் பார்த்தபின் “இந்தக் கவிதையை இப்படிச் சொல்லாமல் வேறெப்படிச் சொல்லியிருந்தாலும் இப்படி இருந்திருக்காது” என்று தோன்றும். 

DEMONITIZATION 

அவள் ஜாதகத்தில் ஏதோ பிசகு

பிறந்ததிலிருந்தே அவளுக்கு ஒன்றும் கிடைத்ததில்லை

ஒழுகாத வீடு கிடைத்ததில்லை

ஒழுங்கான கல்வி கிடைத்ததில்லை

தகப்பனைக் காணவில்லை

சரியான காலத்தில் ருதுவாகவில்லை

சரியான காலத்தில் மணமாகவில்லை

புருஷன் வீடு தங்குவதில்லை

வயிற்றில் கரு தங்குவதில்லை

எனவே புத்தி ஒரு ஒழுங்கில் இல்லை

எந்த அசதியாலும் அவளைத் தூங்க வைக்க இயலவில்லை

எத்தனை அடி உயரத்திலிருந்து விழுகின்ற போதிலும்

எந்தக் கோமாளியாலும்      

அவளைச் சிரிக்க வைக்கக் கூடவில்லை

அவள் முறை வருகையில்

வெறுங்கையை நீட்டுவதுதான்

இவ்வுலகத்து வரிசைகளின் இயல்பு.

ஆனால்

அதிசயமாக அவளுக்கு ஒரு புது 500 ரூபாய் கிடைத்துவிட்டது

“சக்சஸ்….”

 என்றவள் கத்திய கத்திற்கு

 கடவுளின் இமைகளில் நீர் கோர்த்து விட்டது    

அவர் அதைச் சுண்டியெறிய,

நேற்று வெளுத்துக் கட்டிய மழை அதுதான்.

தீண்டாமை குறித்த கவிதைகள் சேரியிலிருந்தே எழுவது தனிப்பட்ட முறையில் எனக்கு ஒருவிதச் சலிப்பை உண்டு பண்ணுபவை. சாதியத் தீண்டாமை என்பது ஒரு மானுடத் தீங்கு இல்லையா? அதில் எல்லோருக்கும்தான் பங்குண்டு. அதைக் களையும் பொறுப்பு எல்லோருக்கும்தான் உண்டு. அப்படி இருக்கையில் இன்னும் எத்தனை காலம்தான் சாதி குறித்த கவிதைகள் சேரியிலிருந்து வர வேண்டும்?

சாதி ஒழிப்பில் உள்ள முக்கியமான கேடு அதில் உள்ள இரட்டை நிலைப்பாடுதான். கேட்டால் “நான் சாதி பார்ப்பதில்லை” என்று எல்லோருமே சொல்கிறார்கள். தீண்டாமை குறித்த, அதில் ஈடுபடுபவர்களின் குற்ற உணர்வைக் குறித்த கவிதைகள் ஏன் தமிழில் எழுதப்படவில்லை என்ற கேள்வி மிக முக்கியமானது. அந்த வகையில் இது முக்கியமான கவிதை. அதன் கூறுமுறையில் இசைக்கே உரிய பாங்கில் தேர்ந்த கவிதையாக மின்னுகிறது. பறை திமிருகிறது. அந்த இடத்தில் பறையாட்டம் நடக்கிறது. அந்தப் புவன இசைக்கு ஆட முடியாதவன் குற்ற உணர்வு கொள்கிறான். கவிதை விரிகிறது.

பீடி மணக்கும் உன் உதட்டிற்கு ஒரு முத்தம்.

த்துடுடுடுடும்.. டுடும்.. த்துடுடுடுடும்.. டுடும்..

திடுமு உறுமியதில் மனத்துக்கண் விழித்துக்கொண்டது.

தப்பட்டையும் பலகையும் சேர்ந்து

அணைந்து கிடந்த உயிரில் வாய்வைத்து ஊதின.

ஒரு நிமிடம் போதும் ….

காலில் சலங்கையை ஏற்றிவிட்டு

தலையில் ஒரு ஈரிலைத்துண்டை சுற்றிக்கட்ட ..

ஆனாலும் அது இயலாது

ஏனெனில் நான் ஒரு கனவான்.

ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…

ட்டுடுடுட்டும்… ட்டுடுடுட்டும்…

டுட்டூ.. ட்டு… டூ…  டுடும்..

கனவானுக்கு மறுக்கப்பட்ட களியாட்டத்தின் முன்

கால்களை இறுக்கிக்கொண்டு

நவண்டைக் கடித்த படி நிற்கிறேன்

உதறி உதறி உள்ளேயே விழுகிறேன்

அப்போது பறந்த விசிலுக்கு

அந்த உதட்டை முத்தி எடுக்கவேண்டும்.

கோடிச் சொற்களைக் கொட்டும் இரட்டைக் குச்சியை

லுங்கிக்கட்டில் செருகிக்கொண்டு போகும்

திடுமுக்காரரே …

உன் அப்பனுக்கு

சிரட்டையில் தண்ணி ஊற்றிய பாவந்தான்

நான் இப்படி

ஒற்றைச் சொல்லிற்கு நாயாய் சாகிறேன்.

நிறுத்து.. நிறுத்து.. யாரோ பேசுகிற சத்தம் கேட்கிறது. கேட்கிறதா? “நீ கலையைப் பேசு. அது மெல்ல அரசியலுக்குப் பக்கத்தில் வந்துகொண்டிருப்பதைப் பார்ப்பாய்” என்று யாரோ சொல்வது தெளிவாகக் கேட்கிறதா.? அட அவர்தான். அவர் கரங்களைச் சிக்கெனப் பற்று.!

இசையின் கவிதைகளின் புழங்குவெளி – நிலம் துலக்கமாக இல்லை. இவரின் பெரும்பாலான கவிதைகள் சாலையிலேயே நிகழ்ந்துவிடுகின்றன. பல கவிதைகள் வாகனங்களில். இசைக்குக் கவிதைகளை எழுத மேசைகள் வேண்டியதில்லை. அவை லா லாவெனப் பாடிக்கொண்டு நட்ட நடு சாலையில் இரு சக்கர வாகனத்தில் இருகூர் செல்லும் வழியிலேயே பிறந்து அக்கணமே ஒழுங்கு செய்யப்பட்டு அவருடைய வலைதளத்தில் நாசூக்காக ஏறிவிடுபவை. ஒரு நானோ கார் கேட்கும் சாரியும் அதற்குப் பதிலாக ஓட்டை டி.வி.எஸ் சொல்லும் பரவாயில்லையும் அன்றாடத் தருணங்களிலிருந்து மேலெழுந்து வந்து கவிதையாகுபவை.

சாலையில் ஒரு நாடகம்

ஒவ்வொரு மனிதனும்

தன் நெற்றியில்

பொறித்துக்கொள்ள வேண்டிய

வாசகமொன்றை

ஒரு குட்டி “nano” காரின் முதுகில் பார்த்தேன்.

“SORRY”

எனக்குக் கண்ணீர் முட்டிவிட்டது.

nano தன்னைக் கடந்து செல்கையில்

துருப்பிடித்து அனத்தும்

ஒரு ஓட்டை TVS

“பரவாயில்லை…” என்று சொல்லி

கையசைத்துப் புன்னகைப்பதைக் கண்டேன்.

வானேகக் கூடும்.

ஒரு முறை கவிஞர் இசையிடம் கேட்டேன்.

“உங்கள் கவிதைகள் பெரும்பாலும் சாலைகளிலும் வாகனங்களிலும் நிகழ்கிறதே? கவிதைகளில் நிலம் குறித்த உங்கள் பார்வையைச் சொல்ல முடியுமா.?”

“ஆம். என் கவிதைகளில் சொல்லிக்கொள்ளும்படி நிலம் இயங்குவதில்லைதான். ஆனால் என் கவிதைகளில் நிலம் உள்ளது. என் கவிதைகளின் நிலம் மொட்டைமாடி. நவீன காலப் பிரச்சினைகளைப் பேச மொட்டை மாடியைவிடச் சிறந்த நிலம் இருக்கிறதா என்ன?”

“உனக்கு நீயேதான்”, “பரோட்டா மாஸ்டரின் கானம்”, “வருக என் வாணிஸ்ரீ”, “லூஸ்ஹேருக்கு மயங்குபவன்” போன்ற இசையின் கவிதைகளுக்குத் தொன்மமாகும் வாய்ப்பு அதிகமுண்டு என்பதை இன்றே கணிக்கிறேன். அடக்கத்துடன்தான். அதாவது இந்நான்கு கவிதைகளையும் குறிப்பிடாது இசையின் கவிதையுலகைப் பேசிட முடியாது. 

இசையின் ஆரம்பகாலக் கவிதைகளில் துயரார்ந்த பகடிகளும் சமூக விமர்சனங்களும் சிடுக்கான மொழியில் முறைமையில் சொல்லப்பட்டிருந்தாலும் அது போகப் போக மிக எளிமையைக் கைக்கொண்டுவிட்டது. இந்த எளிமையைத்தான் கலையில் கை தேர்வது என்பது என்கிறோம். சமீபத்தில் இசை எழுதும் கவிதைகள் என்றென்றைக்குமான தன்மையைத் தொடுவதற்கு முயல்கின்றன. அதிலொரு கவிதைதான், “சுகந்தன்”. 

அதன் நறுநெடியோ

என்னை மூக்கைத் துளைக்கிறது.

ஆனால்

அந்த சின்னஞ்சிறு நீலமலர்

பள்ளத்தாக்கின் 

அதி ஆழத்தில் உள்ளது

எனில்

மணப்பது எதுதான்?

நான்தான்.

ஒரு முறை மகா கவி இசை வாக்கிங் போகும் போது… நான் சொல்லவில்லை தமிழின் முக்கியக் கவிஞரான சுகுமாரன் என்ன சொல்கிறார் என்று நீங்களே கேளுங்கள்.

நடை

மகா கவி இசை வாக்கிங் போகிறார்

அவர் வாக்கிங் போகும்போது

அவரைத் தாங்கும் பேறுபெற்ற

இந்த உலகமும் வாக்கிங் போகிறது

இளம் காற்றும் புலரொளியும்

புல்லும் புழுவும் புள்களும்

மீனும் நாயும் பூனைகளும்

சமயங்களில் மனிதர்களும்

வாக்கிங் போகிறார்கள்

அவ்வப்போது

பிசாசும் தெய்வமும் உடன் போகின்றன

மகாகவி வாக்கிங் முடித்துத் திரும்புகிறார்

வீடு திரும்பும்போது

கூட வந்தது பிசாசென்றால்

மகாகவி கவிதை எழுதுகிறார்

தெய்வமென்றால்

இசை சண்டை போடுகிறார்.

(கவிஞர் இசைக்கு) எதிரே நூறு நூறு லூஸ் ஹேர்கள் பறந்து வர வாக்கிங் போகும் மகாகவி இசை, திரும்பி வருகையில் ஆயிரம் ஆயிரம் பிசாசுகளுடன் திரும்பி வரட்டும் என நடுநிசியில் மண்டையோடுகள் நிரம்பிய மயனாத்தில் நிலவொளி மிளிர நிலமே அதிர பேய்க்காற்று வீச முண்டு மாடனிடம் முட்டை வைத்துச் செய்வினை செய்கிறேன்.

2 comments

பூவிதழ் உமேஷ் August 30, 2021 - 1:30 pm

நல்ல கட்டுரை – பூவிதழ் உமேஷ்

மணிகண்டன் September 15, 2021 - 1:20 pm

இசை பற்றி எழுதும் எல்லாரும் இசை போலவே எழுதுகிறார்கள்.

Comments are closed.