சுஜாதாவை என்னதான் செய்வது?

8 comments

தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்த காலத்தில் முதன்முதலாகக் கற்றுக்கொண்ட ஒன்று, யாரிடமும் சுஜாதாவை எனக்குப் பிடிக்கும் என்று சொல்லக்கூடாது என்பதுதான். சுஜாதா என்ற பெயரே உச்சரிக்கக் கூடாத ஒன்று என்பது அப்போது மட்டுமல்ல, இப்போதும்தான். 

சுஜாதா ஒரு வெகுஜன எழுத்தாளர். வணிகப் பத்திரிகையில் மலினமான யுத்திகளுக்காகவும் வியாபாரப் பெருக்கத்துக்காகவும் எழுதிக் குவிப்பவர் என்றெல்லாம் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. கணையாழியின் கடைசிப் பக்கத்தில் அவர் எழுதுவதெல்லாம் அவரது மேதைமையைக் காட்டுவதற்காகவே ஒழிய உண்மையில் இலக்கியத்தின்பால் அவருக்கு அக்கறை இல்லை என்று அழுத்தமாகச் சொல்லப்பட்டது. பிரபல பத்திரிகைகளில் எழுதுவது தீவிர எழுத்தாளர்களுக்கு அழகல்ல, அவர்களின் தகுதிக்குக் குறைவானது, இழுக்கு என்பதெல்லாம் இன்று காலாவதியாகிவிட்டன.

அவரே ஒரு பத்தியில் எழுதியதுபோல, “என்னை என்ன செய்வது என்பதுதான் இவர்களது தலையாயப் பிரச்சினை”.

சுஜாதாவை என்னதான் செய்வது?

*

நான் அறிந்த பல எழுத்தாள நண்பர்களுக்கு சுஜாதாவைப் பிடிக்கும். தனிப்பட்ட உரையாடல்களில் அவரது எழுத்துகளைப் பற்றி உற்சாகத்துடன் பேசும் பல நண்பர்களுக்கும் அவற்றைப் பொதுவெளியில் ஒப்புக்கொள்ளவோ எழுத்தில் பதிவுசெய்யவோ பெரும் தயக்கம் இருந்தது. விவரிக்க முடியாத சங்கடமும். 

அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் வாசகர்களின் மத்தியிலும் தவிர்க்க முடியாத பெரும் ஆளுமையாக விளங்கிய சுஜாதாவை இப்படியொரு தீட்டு மனப்பான்மையுடன் அணுக என்ன காரணம்?

*

முதலாவதாக, சுஜாதா பிரபலமான வணிகப் பத்திரிகையின் எழுத்தாளராக மட்டுமே இருந்தது. (கணையாழியின் கடைசிப் பக்கங்களும், பிந்தைய காலத்தில் சுபமங்களாவில் விமர்சனங்களை எழுதியதும் விதிவிலக்கு). தொடர்கதைகளின் வழியாகத் தான் அடைந்த பிரபல்யத்தை அவர் எப்போதுமே விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்ததில்லை. ஒரு சமயத்தில் தமிழின் எல்லா வாரப் பத்திரிகைகளிலும் அவரது தொடர்கதைகள் இடம்பெற்றன. மாத நாவல்களிலும் அவரது எழுத்துகள் வெளியாயின. வார, மாதப் பத்திரிகைகளின் அசுரப் பசிக்கு கட்டாயமாகத் தீனி போட்டாக வேண்டிய நிர்பந்தத்தில் சிக்குண்டிருந்தார். தவிர, பிற்காலத்தில் அவர் தன்னை சினிமா பிரபலங்களோடு அடையாளப்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். இவை அனைத்துமே அவரது எழுத்துகளை அணுகுவதில் இடையூறாய் இருந்தன. 

இரண்டாவது அடிப்படையான காரணம், எழுத்தை அவர் ஒரு craft-ஆகவே அணுகினார் என்பது. தீவிர எழுத்துக்கு நேர் எதிரான அம்சம் இது. உண்மையில் அவரது இந்த எண்ணம் அவரது அறிவியல் மனப்பான்மையிலிருந்து உருவானதாகும். எழுத்து என்பது நுட்பம் மட்டுமே என்கிற தன் கருத்தில் இறுதிவரைக்கும் அவர் உறுதியாகவே இருந்தார். எழுத்தில் தொழில்நேர்த்தி ஒரு அம்சமே என்கிற நிலைக்கும், எழுத்தே செய்நேர்த்திதான் என்கிற நிலைக்கும் பாரதூரமான இடைவெளி உண்டு. 

மூன்றாவதாக, அவரது எழுத்துகள் கதைக்களங்களின் மேல்மட்ட அளவில் நின்றுவிட்டன என்பது. ஆழங்களுக்கும் தொடர்ந்த அவதானிப்புகளுக்கும் அவற்றின் மோதல்களுக்குமான நியாயமான இடத்தை அனுமதிக்காமல் பல சமயங்களில் அவரது எழுத்துகள் வெறும் தகவல் சுவாரஸ்யத்துடன் நின்றுபோயின. இதுதான் என்றில்லாமல் தான் ஆர்வம் காட்டிய எல்லா விஷயங்களைக் குறித்தும் ஆர்வத்துடனும் சுவாரஸ்யத்துடனும் அவரால் எழுத முடிந்தது. ஆனால் அவரது எழுத்தின் எல்லைகள் மேலோட்டமான தளமாக அமைந்துபோனது துரதிர்ஷ்டவசமானது. கட்டுரைகளைப் பொறுத்தமட்டில் ஓரளவுக்குச் செல்லுபடியாகும் இந்த உத்தியும் மனப்போக்கும் இலக்கியத்துக்கு வரும்போது அவரது எழுத்துகள் சார்ந்த அக்கறையின்மையை உருவாக்குகிறது. 

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருந்தார் என்பது போன்ற சித்திரம் உள்ளது. பலரும் அப்படி நம்புகிறார்கள். தொடக்கத்தில் அப்படியொரு வேகமும் வாசிப்பும் அக்கறையும் இருந்ததை மறுப்பதற்கில்லை என்றாலும் பிற்காலத்தில் அது வெறும் பிம்பமாக மட்டுமே இருந்தது. அதிகபட்சம் கொஞ்சம் கவிதைகள், சில கவிஞர்கள் என்று குறுகிப்போயிருந்தது. வயதும் சினிமாவும் அவரது மேம்பட்ட வாசிப்புக்கு இடம்தராது போயிருக்கலாம். ஆனால் அப்படியொரு பிம்பத்தை அவர் தக்கவைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. 

நல்ல சினிமாவைப் பற்றிய அக்கறை அவர் எழுத்தில் தெரிந்த அளவுக்கு சினிமா சார்ந்த அவரது செயல்பாடுகளில் தெரியவில்லை. சொல்லப்போனால் அவர் பிரபல இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றிய படங்கள் பலவும் நல்ல சினிமா சார்ந்த அவரது கருத்துக்கு நேர் எதிராகவே அமைந்திருந்தன. 

சுஜாதாவை அணுகுவதில் மனத்தடை ஏற்படுத்தும் காரணிகளை இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றையும் கடந்து சுஜாதாவைப் பொருட்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள் இவை.

  1. அவரது எழுத்தில் கொப்பளிக்கும் அங்கதம். தமிழ் இலக்கியத்தில் அரிதாகக் காணப்படும் அம்சம் இது. போகிறபோக்கில் வாக்கியங்களுக்கு நடுவே வெடிக்கும் அங்கதத்தன்மையைத் தமிழின் இன்னொரு எழுத்தாளரிடம் பார்க்க முடியவில்லை. சிறுகதைகளில் ‘குதிரை’யும் நாவல்களில் ‘ஆதலினால் காதல் செய்வீ’ரும் இந்த வகையில் முக்கியமானவை. சிரிக்கவே செய்யாத தீவிர எழுத்துக்கு மத்தியில் சுஜாதாவின் இத்தன்மை மேலும் துலக்கம் பெற்றிருக்கவேண்டும்.
  2. சிக்கனமான சொற்களில் சாத்தியமாக்கிய நேர்த்தியான காட்சிச் சித்தரிப்பு. தான் உத்தேசிக்கும் கதாபாத்திரம் ஒன்றை அவரால் சிற்சில சொற்களுக்குள் காட்சியாக உருவாக்கிக் காட்டிவிட முடியும். தொடர்கதைகளில் அவர் அடைந்த வெற்றிக்கு முதன்மையான காரணம் இதுதான். 
  3. எப்போதும் புதுமையும் இளமையும் துடிப்பும்கொண்ட தனித்துவமான நடை சுஜாதாவின் தனிச்சிறப்பு. புதுமைப்பித்தனின் தமிழ்நடை உருவாக்கிய பாதிப்புக்கு இணையான ஒரு பாதிப்பை நவீனத் தமிழ் இலக்கியத்தில் சுஜாதாவின் தமிழ்நடையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மரபும் புதுமையும் கலந்த சொல்லாட்சிகளும் இளமைக்கேயுரிய புதிய சொல் உருவாக்கங்களும் இவரது நடையின் வேகத்துக்கு அழகு சேர்த்தன. 
  4. உரையாடல் நேர்த்தி – தி.ஜானகிராமனின் உரையாடல்கள் தனித்துவம் பெற்ற அதேயளவு சுஜாதாவின் உரையாடல்களும் தனித்துவமானவை. சமகாலப் புழங்குமொழியை உறுத்தல் இல்லாமல் கையாள்கிற சுதந்திரத்தைத் தொடர்கதைகள் அவருக்கு ஏற்படுத்தித் தந்தன.
  5. தமிழில் அறிவியல் புனைகதைகளை அறிமுகப்படுத்தியதும் எதிர்காலத் தொழில்நுட்பங்களைத் தொடர்கதைகளில் (‘என் இனிய இயந்திரா’) கையாண்டதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 
  6. புனைவு இலக்கியத்துக்கு இணையாக எழுதப்பட்ட கட்டுரைகளில் பலவும் முக்கியமானவை. அறிவியல், கணிணியியல் தொடர்பான தொழில்நுட்ப ரீதியான கட்டுரைகளானாலும், தலைமைச் செயலகம் போன்ற மருத்துவக் கட்டுரைகளானாலும் புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களுக்கான உரைகளானாலும் அவரால் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுத முடிந்தது. 
  7. தமிழ் இலக்கிய உலகம் அவரைப் பொருட்படுத்தவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து அதனுடன் உரையாடிக்கொண்டிருந்தார் என்பது முக்கியமானது. ஏதேனும் ஒருவகையில் அவர் பங்களிப்பு இருந்துகொண்டேதான் இருந்தது. 

சுஜாதாவின் பலவீனங்களையெல்லாம் தாண்டி ஒரு எழுத்தாளராக மட்டுமே அவரை அணுகும்போது, தமிழின் முக்கியப் படைப்பாளிகள் என்று நாம் மதிப்பிடும் பலரையும்விட சுஜாதா முக்கியமான படைப்பாளி என்று சொல்ல முடியும். ஏற்கெனவே சொன்னது போல வாரப் பத்திரிகைகளுக்கான தொடர்கதை நிர்பந்தங்களில் அவரது பல பக்கங்கள் விரயமாகிப் போனாலும்கூட முப்பதுக்கும் மேற்பட்ட முக்கியமான சிறுகதைகளையும் பத்துக்கும் அதிகமான குறுநாவல்களையும் ஆறு நவீன நாடகங்களையும் செறிவான கட்டுரைகளையும் அவரது பங்களிப்புகளாகச் சொல்ல முடியும்.

மரபின் ஆழமும் நுட்பமும் நவீனத்தின் வேகமும் துடிப்பும் இணைந்த அவரது எழுத்துகளின் அடிப்படையில் பால்யத்தில் வளர்ந்த ஸ்ரீரங்கத்தையும் இளமையில் கழித்த டெல்லி, பெங்களூர் போன்ற மாநகரங்களையும் காண முடியும். 

இளம் எழுத்தாளர்கள் பலர் சுஜாதாவின் எழுத்துகளிலிருந்து தொழில்நுட்பம் சார்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் அவற்றை வெறும் பிரபல வணிக எழுத்து என்று புறந்தள்ளுவார்கள் என்றால் இழப்பு சுஜாதாவுக்கல்ல. 

சுஜாதா தன் நாவல்களில் கையாண்டிருந்த கணேஷ் – வஸந்த் கதாபாத்திரங்கள் வாசகப் பிரசித்தி பெற்றவை. புத்தி சாதுர்யம்மிக்க கணேஷ், இளமையும் துடிப்பும் சாகச குணமும் கொண்ட வஸந்த் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

கணேஷாக இருக்கத் தேவையான மதிநுட்பமும் மேதைமையும் சுஜாதாவுக்கு வாய்த்திருந்த போதும்கூட, அவர் தன்னியல்பில் வஸந்தாகவே வாழ்ந்திருந்தார். அதையே விரும்பியிருந்தார். அவர் எழுத்துகளில் இருக்கும் இளமையின் இரகசியம் அதுவே. சுஜாதா கணேஷாக மட்டுமே இருந்து எழுத்தில் தீவிரம் காட்டியிருந்தால் அவரும் தீவிர எழுத்தின் பக்கம் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பார். அவர் வஸந்தாகவும் இருந்த காரணத்தாலேயே விலக்கி வைக்கப்பட்டார்.

8 comments

ஆத்மார்த்தி August 30, 2021 - 7:47 am

Excellent. சுஜாதா குறித்த அழகான அலசல்.

கோபால் மனோகர் August 31, 2021 - 3:51 pm

சுஜாதாவை பல இலக்கியத் தலைகள் வெறுக்க முக்கியக் காரணம் அவருக்கு வாசகர்கள் மத்தியில் இருந்த, திரை நட்சத்திரங்களுக்கு ஈடான அமோக வரவேற்பு. அதை ஜீரணிக்க முடியாததே முக்கிய காரணம். இரண்டாவது, சுஜாதா அவர்களின் விமர்சனங்களை எள்ளளவும் பொருட்படுத்தாதது.

ramji yahoo September 3, 2021 - 9:39 am

நல்ல கட்டுரை.
சுஜாதா நினைத்து இருந்தால் ( தான் எழுதிய வணிக வார இதழ்களில் அவர்கால இலக்கிய படைப்பாளிகளை அறிமுகம் செய்து இருந்தால் )
தமிழ் இலக்கியம் இன்றைய நிலையை விட 150% உயர்ந்து இருக்கும்,
இலக்கிய பிரதிகள் 30 பிரதிகளுக்குப் பதிலாக 3000 பிரதிகள் விற்று இருக்கும்
என்று அவர்மீது சுமத்தும் குற்றச்ச்சாட்டுகள் போலியானவை.
——
இன்று ஜெமோ, சாரு, எஸ் ரா விற்கு பெருமளவு வணிக வார இதழ்களில் தொடர்பும் ஆளுமையும் உண்டு.
ஜெமோ/ எஸ்ரா வாரா வாரம் ஐ கிருத்திகா, அனோஜன் , சுஷில் குமார் குறித்து எழுதினாலும்
அவர்களின் சிறுகதை தொகுப்புகள், கவிதை தொகுப்புகள்
2022 சென்னை புத்தகக் கண்காட்சியிலும் 50 பிரதிகள் விற்பனை தாண்டாது

K P Velsamy September 3, 2021 - 5:30 pm

??

Mani Mariappan September 4, 2021 - 5:34 pm

He takes us into the
scene once you start reading. Thrill obsorbs
us immediately

S. R. Shanmugavel December 20, 2021 - 9:47 pm

சுஜாதா அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தில் “வாழ்க்கையில் சில ஏன்களுக்கு விடையே கிடைப்பதில்லை” என்ற வாசகங்களை படித்த ஞாபகம். எந்த புத்தகம் என்பது நினைவில்லை.

தங்களுக்கு தெரிந்தால் சொல்லும்படி கேட்டு கொள்கிறேன்.

Gitanjali December 20, 2021 - 11:24 pm

Well said.. I don’t have any deep thoughs about literature but am a fan of sujatha …all the prons and cons were well artibuted.. I love the humour essence in his writings.. and his writings were engrossing..

Jay December 21, 2021 - 12:41 pm

?

Comments are closed.