‘க்ளிங்’ என்ற ஓசையெழ வந்து நின்ற மின்னஞ்சலைத் திறந்து பார்த்த மீராவுக்கு ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது. படம் ஓடிக்கொண்டிருக்க கிடைத்த சின்ன இடைவெளியில் மொபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது இது வழக்கமாகிவிட்டது. பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வாட்ஸப்பிலோ பேஸ்புக்கிலோ ஏதாவது புதிய செய்தியோ பதிவோ வந்திருக்கிறதா என்று பார்ப்பது ஓர் அனிச்சைச் செயலைப் போல் நிகழ்கிறது. சனிக்கிழமை மதியப் பொழுது ஏதாவது படம் பார்க்கலாம் என்று பரத் வம்படியாய் இழுத்து உட்கார வைத்துவிட்டான். அச்சுக்குட்டியும் இம்முறை அவனோடு சேர்ந்துகொண்டாள். கவனம் சிதறாமல் முழுதாக ஒரு படத்தை இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்ப்பதெல்லாம் இப்போது அத்தனை எளிதாக இருப்பதில்லை. எவ்வளவுதான் சிறப்பான படமாக இருந்தாலும் ஒரே ஒரு நிமிடம் கூடுதலாக நீளும் சண்டைக் காட்சியோ படத்தோடு ஒன்றாமல் ஒலிக்கும் ஒரு பாடலோ போதும். அந்த இடைவெளியில் அவள் மொபைலை கையில் எடுத்துக்கொள்வாள். பரத் பார்த்தால் கோபித்துக்கொள்வான். பேச்சு நீளும். இருவரில் ஒருவருக்குக் கொஞ்சம் வார்த்தை பிசகினாலும் அது மற்றுமொரு பெரிய சண்டையில் போய் முடியும். அதனால் அவன் முன்னால் முடிந்த வரை மொபைலை எடுத்துப் பார்ப்பதில்லை. ஆனால், இப்போது அவளால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்த மெயிலின் தலைப்பைப் பார்த்ததுமே தலை கழன்று காற்றில் மிதக்க ஆரம்பித்துவிட்டது. பதற்றத்தையோ பரபரப்பையோ வெளிக்காட்டாமல் இயல்பாகச் செல்வதுபோல் எழுந்து பாத்ரூம் இருக்கும் திசையை நோக்கி இருவருக்கும் கண் காட்டியபடி அதனுள் நுழைந்தாள். 

கம்மோடின் மூடியை இறக்கிவிட்டு அதன் மேல் அமர்ந்துகொண்டாள். வியர்த்திருந்த உள்ளங்கைகள் இரண்டையும் நைட்டியில் ஒருமுறை இழுவி கை ரேகையால் மொபைலை உயிர்ப்பித்து ஜி-மெயிலைத் திறந்தாள். ஆடம் பீச் என்ற பெயரிலிருந்து அந்த மின்னஞ்சல் வந்திருந்தது. முன்பின் அறியாத நபர்களிடமிருந்து இதுபோன்ற மின்னஞ்சல்கள் வருவது அடிக்கடி நிகழ்வதுதான் என்றபோதும் அதன் தலைப்பாக அவளுடைய ஜிமெயிலின் பாஸ்வேர்ட் இருந்ததுதான் அவளின் இத்தனை பதற்றத்துக்கும் காரணம். நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருக்கும்பொருட்டு அதே பாஸ்வேர்டைத்தான் அவளுடைய பேஸ்புக், இன்ஸ்டா போன்ற அனைத்துச் சமூக ஊடகங்களுக்கும் வைத்திருந்தாள். ஒவ்வொன்றாக யோசிக்க யோசிக்க அவளுக்கு உடலெல்லாம் பதறியது.  

டியர் மீரா86,

நான் சுற்றி வளைக்க விரும்பவில்லை. உங்களுடைய பல இரகசியங்கள் இப்போது என் வசம் உள்ளன. தலைப்பிலிருக்கும் கடவுச்சொல் ஒன்று போதும் நான் சொல்வதை நிரூபிக்க. இது வெறும் சான்று மட்டுமே. நீங்கள் அழித்துவிட்டதாய் நம்பிக்கொண்டிருக்கும் பலரகசிய உரையாடல்கள் என்னுடைய சேமிப்பில் பத்திரமாய் இருக்கின்றன. அதுபோக நீங்கள் ஆபாச இணையதளம் ஒன்றுக்குள் சென்றபோது நான் செலுத்திய மால்வேரின் வழியே உங்களுடைய மொபைல் காமிராவினைக் கைப்பற்றி எடுத்த அன்னியோன்யமான சில புகைப்படங்களும் என்னிடம் இருக்கின்றன. 

இவை அத்தனையையும் உங்களுடைய நட்புப் பட்டியலில் இருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்புவதற்கு எனக்கு ஒரே ஒரு கிளிக் போதும். 

மேற்சொன்ன எதையும் செய்யாமலிருக்க நமக்குள் ஒரு சிறு ஒப்பந்தம் செய்துகொள்வோம். இவை எதுவும் வெளியேறாமல் இருக்க 3500 டாலர்களை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பிட்காயின் அக்கவுண்ட்டுக்கு அனுப்பி வைக்கவும். 

இந்த மின்னஞ்சல் உங்களை வந்தடைந்த 48 மணி நேரங்களுக்குள் நீங்கள் மொத்த பணத்தையும் அனுப்பாவிட்டால் துரதிர்ஷ்டவசமாக என்னிடமிருக்கும் அத்தனை தகவல்களையும் வெளியிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.  

பி.கு. : நீங்கள் இந்த மெயிலைத் திறந்தவுடன் எனக்குத் தானியங்கித் தகவல் வந்து சேர்ந்திருக்கும். இதோ இந்த நொடியிலிருந்து உங்களுக்கு இருப்பது 48 மணி நேரங்கள்.

ஆடம்.  

*

முந்தைய இரவு எப்போது தூங்கினாள் என்று அவளுக்குச் சுத்தமாக நினைவிலில்லை. விழிப்புக்கு நடுநடுவே கொஞ்சம் தூங்கியிருக்க வேண்டும். அதிகாலையில் எதிர்பாராமல் பெய்த மழையால் பரவிய குளிர்ச்சியே தூக்கத்தைக் கொண்டு வந்திருக்கக்கூடும். அதையும்கூட முழுமையாக அனுபவிக்க விடாமல் ஒரு கொடுங்கனவு. கைவிடப்பட்ட பழைய கட்டிடம் போலிருந்த அந்த அறையில் அவளைத் தவிர யாரும் இல்லை. ஈரத்தில் ஊறிய சாக்குப் பைகளின் முடை நாற்றம். சுவரெங்கும் சுண்ணாம்பு பெயர்ந்து அதில் ஈரம் பரவி நின்றது. இவளுடைய காலிலிருந்து கழுத்துவரை கயிற்றால் இறுகக் கட்டப்பட்டிருக்கிறது. அவளால் அதிலிருந்து உடலின் எந்தப் பாகத்தையும் இம்மியும் அசைக்க இயலவில்லை. அவள் முகத்தை முன் பின் அறியாத கை ஒன்று வருடுகிறது. அது பரத்துடையது அல்ல. ஆயிரமாயிரம் தொடுகையிலும் அவனுடையதை அவளால் பிரித்தறிய இயலும். திருமணமான புதிதில், எதிர்பாராத நேரத்தில் அவன் அவளைத் தொட்டு அணைக்கும் நேரங்களில் அவளுக்கு உடல் வெடவெடவத்துச் சிலிர்த்துக்கொள்ளும். முகமெல்லாம் இரத்தம் பாய்ந்து மேலுதட்டில் வியர்வை அரும்பி நிற்கும். அந்தச் சிலிர்ப்பு வெட்கத்தின் பாற்பட்டது அல்ல என்பதை மட்டும் அவள் நன்கு அறிவாள். அதன் பிறகான நாட்களில் அவனது தொடுதலுக்கு அவளுடல் மரத்துச் சோம்பிவிட்டது. தற்போதெல்லாம் கலவியின்போது அவன் முயங்கிச் சொருகும் நேரத்தில்கூட ‘அரைத்து வைத்த மாவை பிரிட்ஜில் ஏற்றியாகிவிட்டதா?’ என்றெண்ணத் தோன்றுமளவுக்கு அவளுக்கு அவனிடத்தில் இலயிப்பற்றுப் போய்விட்டது. இறுக்கிப் பிணைத்திருக்கும் கட்டினால் உடல் வியர்த்து கசகசத்தது. கால்களுக்கிடையில் ஈரம் மெல்லப் பரவியது. அதைக் கண்டு பதறி எழவும் வெளியே பெய்யும் மழை ஜன்னல்களைச் சத்தமிட்டுத் தட்டி எழுப்பவும் சரியாக இருந்தது. 

படுக்கைக்கு அருகிலிருந்த மேசையில் வைக்கப்பட்ட பாட்டில் தண்ணீரை எடுத்துக் குடித்தாள். பரத்தும் அச்சுக்குட்டியும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நினைவுக்குத் திரும்பியவளாக தனது மொபைலை எடுத்து ஜி-மெயிலைத் திறந்தாள். முக்கியம் என்று குறிக்கப்பட்ட அந்த மின்னஞ்சல் அப்படியே இருந்தது. கால் ஈரமாகியிருக்கிறதா என்று பார்த்தாள். இல்லை, அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. எது கனவு, எது நினைவு என்று குழம்பினாள். வெளியே தூறல் நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. அந்த மின்னஞ்சலைத் தவிர மற்றதெல்லாம் கனவு. மறுபடியும் அதைத் திறந்து மெதுவாக ஒவ்வொரு வரியாக வாசித்தாள். நேற்று மதியம் மூன்று பத்துக்கு மின்னஞ்சல் வந்திருக்கிறது. இப்போது நேரம் காலை ஏழு. இதற்கிடையில் பதினாறு மணி நேரம் கடந்துவிட்டது. மிச்சமிருப்பது முப்பத்திரண்டு மணி நேரம் மட்டுமே. அதற்குள் அவள் ஏதாவது செய்தாக வேண்டும். பரத்திடம் இதைப் பற்றி பேசவே முடியாது. என்ன ஏது என்று கேட்பதுக்கு முன்னால் வானத்துக்கும் பூமிக்குமாய் குதிப்பான். சமீபமாகத்தான் சமூக வலைதளங்களை அவள் பயன்படுத்துவது குறித்து அதிகமாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறான். இப்போது இதைச் சொன்னால் அவை அத்தனையையும் விட்டு வெளியேற நேரிடும். இருக்கும் கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தையும் இழக்க வேண்டியது வரும். அவன் மாற்றி மாற்றி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளாது. எல்லாவற்றுக்கும் மேல் கண நேரமென்றாலும் அவனிடத்தில் தோன்றி மறையும் இகழ்ச்சியையும் மட்டம்தட்டும் அப்பார்வையையும் அவளால் பொறுத்துக்கொள்ள முடியாது. 

அவர்களுடைய முதல் சந்திப்பில் “ஓ ஹோம் சயின்ஸா?” என்று கேட்டபோது அவனிடத்தில் வெளிப்பட்ட அந்த எக்களிப்புதான் அவனோடு இன்று வரை ஒன்றவிடாமல் தடுக்கிறது. திருமணத்துக்குப் பிறகு அவளுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற பெரிய இலட்சியமெல்லாம் எதுவுமிருக்கவில்லை. ஆனால், போகக் கூடாது என்று பரத் வீட்டில் சொல்லியபோதுதான் போயே தீர வேண்டும் என்று தோன்றியது. அப்போது அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுப்போனது எத்தனை பெரிய பிழை என்பது பின்னாளில்தான் புரிந்தது. ஆனால், அது புரிய ஆரம்பித்தபோது அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. 

பரத்தைவிட்டால் பிரியங்காவிடம் கேட்டுப் பார்க்கலாம். ஆனால், பொய் சொல்ல வேண்டும். யாரிடத்தும் இப்போதைய நிலையை விளக்கிச் சொல்லிப் புரியவைக்க முடியாது. யாரும் புரிந்துகொள்ளவும் மாட்டார்கள். அவளுக்குமே அது பெரிய தொகை. இயலாமையில் கோபம் பொங்கி வந்தது. உள்ளதை மறைக்காமல் திறந்து சொல்ல, அப்படிச் சொன்னாலும் அதைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும்படியான ஒருத்தரைக்கூட தன் வாழ்நாளில் சம்பாதிக்கவில்லை என்று நினைக்க அவளுக்கே வெட்கமாயிருந்தது.  

சுந்தர் ஆன்லைனில் இருக்கிறானா என்று பார்த்தாள். அவன் ஆன்லைனில்தான் இருந்தான். நேற்றிரவு இன்பாக்ஸில் “படம் பார்த்துட்டு இருக்கியா? ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாம்” என்று விசனப்பட்டு கடைசியாக, “குட் நைட்” என்று சொல்லி முடித்திருந்தான்.   

பரத் உடனிருக்கும் வேளைகளில் சுந்தருடனான உரையாடல்களை இன்பாக்ஸின் ‘இக்னோரி’ல் போட்டுவிடுவாள். இடையில் அவன் தகவல் அனுப்பி, பரத்தே இவள் மொபைலை எடுத்தாலும்கூட அவனுடனான உரையாடல் எதையும் பார்க்க முடியாது. இந்த மெயிலைப் பார்த்ததும் முதலில் சுந்தரின் மேல்தான் அவளுக்குச் சந்தேகம் வந்தது. அவள் இத்தனை தூரம் பதறுவதற்கு அவன் மட்டுமே காரணம். அவளைத் தவிர இந்த உண்மை தெரிந்த ஓர் ஆள் அவன் மட்டுமே என்று அந்த மின்னஞ்சல் வரும்வரை அவள் நம்பிக்கொண்டிருந்தாள். 

அவனைப் பற்றி அறிந்தவரையில் அவன் அப்படிச் செய்யும் ஆள் இல்லை. ஓரளவுக்கு வசதியுள்ள வீடு அவனுடையது. அதனால் சுந்தருக்குப் பணம் ஒரு பொருட்டில்லை. இந்த மின்னஞ்சலோ முழுக்க முழுக்கப் பணத்தை மட்டுமே குறி வைத்து அனுப்பப்பட்டிருக்கிறது. அவனுமில்லை என்றால் வேறு யாராக இருக்கக்கூடும்? அவர்கள் அத்தனை தூரம் பழகியிருந்த போதும் பொதுவெளியில் அவ்வுறவைப் பற்றித் துளியும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அப்படியிருக்க இது எப்படிச் சாத்தியம்? முந்தைய நாள் பின் மதியத்திலிருந்து அவளை இக்கேள்விகள் படுத்திக்கொண்டிருந்தன. அதன் பின் படத்தில் பார்த்த ஒரு காட்சிகூட அவள் நினைவில் இல்லை. அன்றைய நாளின் அத்தனை வேலைகளையும் முடுக்கிவிடப்பட்ட பொம்மையைப் போல் செய்து முடித்தாள். கைகள் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருக்க மனம் முழுவதும் மெயிலைச் சுற்றிக்கொண்டிருந்தது. 

பேஸ்புக்கில் நுழைந்த போதிலிருந்தே சுந்தரைத் தெரியும் என்றபோதும் அவனுடன் அவள் பழக ஆரம்பித்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. முதல் மாதத்திலேயே மெய்நிகராகச் சாத்தியமுள்ள அத்தனை எல்லைகளையும் இருவரும் கடந்துவிட்டிருந்தனர். அவளைவிட நான்கு வயது இளையவன். சுந்தர் மாநிறம். சராசரி உயரம். இவனை ஒப்பிட பரத் அழகன்.  

சுந்தருக்குச் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. பொறியியல் முடித்துவிட்டு காற்றாலை நிறுவனமொன்றில் இரண்டாண்டுகள் பணியாற்றினான். பின்பு, அங்கிருந்து வெளியேறி திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் தமிழின் முக்கியமான இயக்குநர் ஒருவரிடம் நான்கு ஆண்டுகளாக உதவி இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறான். கையில் எழுதி முடிக்கப்பட்ட நிலையில் இரண்டு திரைக்கதைகள் வைத்திருக்கிறான். மேலும் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறான். எழுத்து அவனுக்கு இயல்பாக வந்தது. திரைப்படத் துறையில் இருப்பதால் அது சம்பந்தமான தொடர்புகளும் அதிகம். அவனுடைய கல்லூரிப் படிப்பும் பின்பு பார்த்த பன்னாட்டு நிறுவன வேலையில் கற்றுக்கொண்ட மக்கள் தொடர்புக் கலையும் அவன் கொண்டிருந்த இலக்கியப் பரிச்சயமும் சமூக நடப்புகள் எல்லாவற்றின் மீதும் அவனுக்கென்று தனித்ததொரு பார்வை உருவாகக் காரணமாயிருந்தன. தேவைக்கு அதிகமாக அவனிடமிருந்து ஒரு சொல் வராது. அதன் பொருட்டே பேஸ்புக்கில் அவனுக்கென்று பெரிய இரசிகர் கூட்டம் ஒன்று இருந்தது. சமயங்களில் அவனுடைய சாதாரண ஒரு இடுகைக்கே ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிவதைக் கண்டு மீரா ஆச்சரியப்பட்டிருக்கிறாள். 

பெரிய இரசிகர் கூட்டம் உள்ள ஆள், ஏற்கனவே லைக்குகளும் ஹார்ட்டின்களும் கமெண்ட்டுகளுமாய் நிறைந்து வழியும் அவன் நிலைத்தகவல்களில் தான் இடப்போகும் ஒரு விருப்பக்குறிக்கு எந்தவித முக்கியத்துவமும் இருக்கப்போவதில்லை என்றே ஆரம்பத்தில் நினைத்தாள். அவள் அறியாமலே அவன் மேல் முதலில் ஒருவித மெல்லிய வெறுப்புதான் வளர்ந்து வந்தது. அது அவனுடைய புகழைப் பற்றிய பொறாமையில் வந்ததில்லை. அவனுக்கு முன் எந்த முக்கியத்துவமும் இன்றி தான் இருப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு பற்றும் ஒன்றின் மீது இயல்பாக எழும் விலகலே அதற்குக் காரணம் என்பதைச் சற்று நிதானித்து யோசிக்கும்போது அவள் உணர்ந்திருக்கிறாள். அப்படி விலகியிருப்பதன் வழியே அவள் தன் சுயத்தைத் தக்க வைத்துக்கொள்வதாக அவளே கற்பனை செய்துகொண்டாள்.

அது எல்லாம் பரத்துடன் ஏற்பட்ட கடும் சண்டைக்குப் பின் வரவேற்பறை சோபாவில் தனியாகப் படுத்து விழித்துக் கிடந்த அந்த ஒரு நாளில் மாறியது. அன்றைக்கு சுந்தர் தன்னுடைய பழைய காதல் தோல்வியைப் பற்றி எழுதியிருந்தான். அதிலும் குறிப்பாக ஒரே ஒரு வார்த்தைகூட அந்தப் பெண்ணைப் பற்றி கண்ணியக் குறைவாக இல்லை. இத்தனைக்கும் அவன் எழுதியிருந்ததைப் படித்த யாருக்கும் அப்பெண்ணின் மேல் கடுஞ்சினம் எழுவதே இயல்பு. அதே நேரத்தில், மற்றவர்களின் பார்வைக்காகவோ வரப்போகும் லைக்குகளுக்காவோ அவன் அதை எழுதியிருக்கவில்லை என்றும் தோன்றியது. அதில் உள்ளோடியிருந்தது உண்மையான காதல். மீராவுக்கு அப்பெண்ணின்மேல் பொறாமையாக இருந்தது. தான் அந்த இடத்தில்  இருந்திருந்தால் எப்பாடு பட்டாவது அவனுக்காகக் காத்திருந்திருப்போமே என்று நினைத்தாள். அதே நேரத்தில் அப்படியான நினைப்பிலிருந்த அபத்தத்தை எண்ணி நொந்துகொண்டாள். அவனுடைய நிலைத்தகவலுக்கு முதன் முதலாக ஹார்ட்டின் விட்டாள். அன்றே அவனுடைய பக்கத்தை தன்னுடைய முதல் பார்வையில் இருக்குமாறு மாற்றியமைத்தாள். அதன் பின் அவனுடைய ஒரு  பதிவையும் அவள் தவறவிட்டதில்லை. ஒருமுறைகூட இவளுடைய நிலைத்தகவலுக்கு அவன் விருப்பக்குறியேதும் இட்டதில்லை. இது, பேஸ்புக்கில் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலரும் செய்வதுதான் என்பதால் அவள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. 

அன்றொரு நாள் அவனிடமிருந்து எதிர்பாராததொரு தருணத்தில் இன்பாக்ஸில் குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. அதிலிருந்தே எல்லாம் தொடங்கியது.

“என்ன இன்னிக்கு ஹார்ட்டின் வரலயே!”

அவனுடைய சமீபத்திய நிலைத்தகவலுக்கு வெறும் லைக் மட்டும் இட்டுவிட்டு வந்திருந்தாள். அடுத்த நிமிடத்தில் அவனிடமிருந்து அந்தக் கேள்வி. அப்போதுதான் அவளுக்கே புரிந்தது இதுவரையிலான அவனுடைய எந்த பதிவுக்கும் வெறும் லைக் மட்டும் இட்டு நகர்ந்ததில்லை. அதே நேரத்தில் அவன் இத்தனை உன்னிப்பாக தன்னுடைய எதிர்வினைகளைக் கவனித்திருக்கிறான் என்று நினைத்தபோது உள்ளுக்குள் அவளுக்கு ஜிவ்வென்று இருந்தது. சோபாவுக்குப் பின்னாலிருந்த நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டாள்.  

இருந்தாலும் அவளுடைய ஆர்வத்தை வெளிப்படுத்திவிடாதபடி, “புரியலையே!” என்று பதில் அனுப்பினாள்.

“இல்ல எப்பவும் போஸ்ட்டுக்கெல்லாம் ஹார்ட்டின்தான் போடுவீங்க. இன்னிக்கு ஏதாவது தப்பா எழுதிட்டேனா? வெறும் லைக் மட்டும் போட்டிருக்கீங்களே?” என்று கேட்டான். வலிந்து வந்து பேசினாலும் அதில் அலட்டலோ அதீத குழைவோ இல்லை. அது அவளுக்குப் பிடித்திருந்தது. 

தகுந்த நேரத்தில் நிகழ வேண்டியதெல்லாம் தானாய்ச் சரியாக நிகழும் என்பதில் முன்பெல்லாம் அவளுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. பரத்துடனான திருமணத்தைக்கூட அவள் அப்படி எண்ணிச் சகித்துக்கொள்ள எத்தனையோ முறை முயன்றிருக்கிறாள். அவனை முழுதாகக் கெட்டவன் என்றெல்லாம் ஒதுக்கிவிட முடியாது. அவனுக்கும் அவள் மேல் ஆசை, பிரியம் எல்லாம்கூட உண்டு என்பதை அவள் அறிவாள். ஆனால், அவன் மேல் அவளுக்கு துளியும் அப்படியான உணர்வு தோன்றவேயில்லை. தன்னை வீட்டிலிருக்கும் பிரிட்ஜ், டிவி, ஏ.சி.யோடு சேர்த்து நகருமொரு ஜடப் பொருள் போன்று நடத்துகிறான் என்பதை உணர அவளுக்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை. வெளிப்படுத்தப்படாத நேசத்துக்கு என்ன மதிப்பு இருக்கப்போகிறது? அதே நேரத்தில் அவனை முறித்துக்கொண்டு வருவதற்கு வலுவான காரணமில்லை. அப்படிப்போய் நிற்பதற்கானச் சூழல் அவள் வீட்டில் இல்லை. அதற்குள் அச்சு உருவாகி அந்த எண்ணத்தையே முற்றிலுமாய் முறித்துக்கொள்ள நேரிட்டது. திருமணமான ஏழு வருடங்களில் ஒரே ஒரு முறைகூட அவனிடத்தில் அவள் ‘ஐ லவ் யூ’ என்று சொன்னதில்லை. புணர்ச்சியின் உச்சத்தில் திளைத்தபோதுகூட தவறியும் அவள் அதை உச்சரித்ததில்லை. ஒருமுறை அதைப் பற்றி அவன் கேட்டபோது வேறெங்கோ பார்த்தபடி “தோணல” என்றாள். 

சுந்தர் முதன்முதலாக இன்பாக்ஸ் வந்த அன்று அப்படித்தான் எல்லாம் சரியாக நிகழ்ந்தது. பரத் அலுவலகப் பயணமாக ஒரு வாரம் புனேவுக்குச் சென்றிருந்தான். சாதாரணமாக ஆரம்பித்த உரையாடல் தொட்டுத் தொட்டு நீண்டு நள்ளிரவு மூன்று மணி வரை சென்றது. அடுத்த ஒரு வாரம் அவள் மொபைலைக் கீழே வைக்கவில்லை. குளிக்கும் போதுகூட சோப்பு வைக்கும் திண்டில் வைத்துக்கொண்டு திரிந்தாள்.

ஏழு வருடங்களாக பரத்துடன் உணராத நெருக்கத்தை சுந்தரிடத்தில் ஏழே நாளில் அவளால் உணர முடிந்தது. அவன் அவளை உருகி அலையவிட்டான். எதையும் அவன் வலிந்து செய்யவில்லை. எல்லாமும் இயல்பாக நிகழ்ந்தது. பல ‘முதல் அடி’களை அவளே எடுத்து வைத்தாள். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது நட்பின் எல்லைகளைத் தாண்டி அவர்கள் பேச்சு நீண்டது. அவளே கேட்டாள். 

“இதெல்லாம் எதில் போய் முடியும் என்று நினைக்கிற?”

“தெரியலையே.”

“ம்ம்..”

“ஏன்? நீ என்ன நினைக்கிற?”

“மதில் மேல் பூனை”

அவன் அவளுடைய பூனை பதிலுக்கு ஹார்ட்டின்களைப் பறக்கவிட்டான்.

பூனை சரியாக அவன் பக்கமே குதித்தது. அப்போது ஆரம்பித்து ஆறு மாதங்கள் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. பொதுவாக வெளிப்படையானவள், எதையும் உடைத்துப் பேசுபவள், ஆகச் சிறிய விசயங்களில்கூட நேர்மையைக் கடைபிடிப்பது என்றிருந்தவள் முற்றிலுமாக மாறிப் போனாள். அவளையறியாமல் திருட்டுத்தனங்கள் குடிவந்தன. எல்லாவற்றுக்கும் மேல் அதிலிருந்த குறுகுறுப்பு அவளுக்குப் பிடித்திருந்தது. ஒரு கட்டத்தில் சுந்தரிடத்தில் தனக்குத் தோன்றும் ஈர்ப்பே பரத்தைப் பழிவாங்குவதற்கான ஒரு கருவிதானோ என்று யோசிப்பாள். அதே நேரத்தில் பரத்தைப் பற்றி யோசிக்கும்போதும் அவனும் அச்சுவும் கொஞ்சுவதைப் பார்க்கும்போதும் அவளுக்குக் குற்ற உணர்வு பொங்கி வரும். அன்றெல்லாம் சுந்தருடனான உரையாடலில் சுணக்கம் காட்டித் திரிவாள். மறுநாளே இயல்பாகிக் குழைந்துருகுவாள். 

இத்தனை மாதங்களுக்குப் பிறகு இப்போது அதே குற்ற உணர்வு அதீதமாய் ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது. நட்பு என்ற எல்லையைத் தாண்டாமல் இருந்திருந்தால் எங்கிருந்தோ எவனோ அனுப்பியிருக்கும் ஒரு மின்னஞ்சலுக்கு இப்படி பயந்து வெருள வேண்டியிருந்திருக்காது. இரவெல்லாம் மனம் அடித்துக்கொண்டது. பரத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. குடும்பக் கௌரவத்தைப் பெண்களின் முந்தானையில் முடிந்து வைந்திருப்பதாய் நம்பும் பிறவி. துப்பட்டா சற்று விலகினாலே கற்பில் பாதி போய்விட்டதாய் கவலைகொள்கிறவன். சுந்தருடன் நிகழ்ந்த ஒரே ஒரு இரவு உரையாடல் போதும் நேராக கோர்ட்டில் போய்தான் நிற்பான். அது, தான் இல்லை என்றோ இது போலி என்றோ நிரூபிப்பது அத்தனை சுலபமில்லை. எத்தனை செல்ஃபிகள் அனுப்பியிருக்கிறாள். நினைக்கும் போதே உடலின் மொத்த இரத்தமும் மேலேறி அவள் தலைக்குள் பாய்ந்தது. அவளை அறியாமல் கண்ணீர் பெருகி வழிந்தது. சத்தமில்லாமல் வாய்பொத்தி அழுதாள். வாழ்வில் குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாதவள், நாளை அச்சு பெரியவளாகி நிற்கும்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை ஏறிட்டுப் பார்ப்பது? அச்சு முதலாய் அம்மா வரை பரத்தைப் பற்றி இருக்கும் பிம்பமே வேறு. இவள் சொல்வதையெல்லாம் காரணமாய் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அவளுக்கே இப்போது சந்தேகம் வந்தது. தானே சுந்தருடன் பழகுவதற்காகத்தான் பரத்தைத் தேவைக்கு அதிகமாய் வெறுக்கிறேனோ என்று யோசித்தாள். அதில் உண்மையில்லாமலும் இல்லை. 

சுந்தரின் மேல் கோபம் வந்தது. அவன் ஏன்  தேவையில்லாமல் இன்பாக்ஸ் வரவேண்டும், தன்னிடம் மட்டும்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்று எப்படி நம்புவது? தான் குடும்ப சகிதமாக ஒரு படம்கூட பேஸ்புக்கில் போட்டதில்லை. அதையெல்லாம் கவனித்திருப்பானோ? தன்னுடைய பின்னணி அறிந்தே அவனும் இந்த அளவுக்கு இறங்கியிருப்பானோ? அவன் அப்படிச் செய்தால் தனக்கு எங்கே போனது புத்தி? பரத் ஒழுங்காக இருந்தால் தன் புத்தி ஏன் அப்படிப் போகிறது? தொட்டுத் தொட்டு அவளுக்கு மொத்த உலகின் மேலும் வெறுப்பு படர்ந்தது. 

மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு படுத்துக்கொண்டாள். இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும். சுந்தருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாக இருக்காது. ஒரே ஒரு படம் எடுத்துவிட்டானென்றால் அவனுடைய நிலையே வேறு. இந்தப் பிரச்சினையைத் தாண்டிவிட வேண்டும். இனியொரு முறை இப்படி நிகழவிடக் கூடாது. எல்லா சமூக வலைதளங்களிலிருந்தும் முற்றிலுமாய் வெளியேறிவிட வேண்டும். இது தனக்குச் சரியான சூடு. வேண்டும்தான் என்று நினைத்துக்கொண்டாள். அப்படி நினைப்பதே அவளுக்குச் சற்று ஆறுதலாய் இருந்தது. ஆனால், இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளியேறுவது என்பது மட்டும் புரியவில்லை. 

யோசித்துக்கொண்டே இருந்தவள் அப்படியே தூங்கிப்போனாள். அவள் எழுந்தபோது மதியமாகியிருந்தது. முகத்தைக் கழுவிவிட்டு வரவேற்பறைக்கு வந்தாள். தூங்கி எழுந்தாலும் களைப்பு தீரவில்லை. பரத் லேப்டாப்பில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தான். படத்திலிருந்து பார்வையை அகற்றாமலே, “உடம்பு ஏதாவது சரியில்லையா?” என்றான்.

“இல்லல்ல.. லைட்டா தலைவலி.”

“மாத்திரை ஏதாவது போட வேண்டியதானே?” என்றான். ‘மதியம் சமைத்துவிடுவாய்தானே?’ என்ற கேள்வியைத்தான் அவன் இடக்கரடக்கலாய் அப்படிக் கேட்கிறான் என்பதை அவள் அறிவாள்.  

“மதியம் சாப்பிட்டு போடுறேன்” என்றாள். 

பரத்தைப் பற்றி அவளுக்குத் தெரியும். அவளைக் கண்டுகொள்ளாதது போலிருப்பான். ஆனால் அவளின் ஒவ்வொரு அசைவையும் தெரிந்து வைத்திருப்பான். வந்த மெயிலின் பொருட்டெழுந்த அச்சத்தைவிட, பரத்துக்கு முன்னால் மனதின் சஞ்சலச் சுவடெதுவும் வெளித்தெரியாமல் நடிப்பதே அவளுக்கு அதிக சிரமமாயிருந்தது. அவளுக்கு அன்றைய நாள் முழுவதும் அந்த மெயிலைச் சுற்றியே கழிந்தது.

அரை மணிநேரத்துக்கு ஒருமுறை கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். மொபைலைக் கையில் எடுக்கவே அஞ்சினாள். அதிலிருந்து வந்த ஒவ்வொரு அறிவிப்பு ஓசைக்கும் மனம் அடித்துக்கொண்டது. அதே நேரத்தில் நாற்பத்தெட்டு மணி நேரம் கழித்தும் அவன் எதையும் யாருக்கும் உடனே அனுப்ப மாட்டான் என்று நினைத்தாள். அதிகபட்சம் இன்னும் ஒரு மின்னஞ்சல் மிரட்டி அனுப்புவான் என்று யூகித்தாள். அப்படிச் செய்தால் அவனை நம்பக்கூடாது. அது பொய்யாக இருக்கக்கூடும். அவன் தன் பெயரை அழைத்திருந்த முறையே சற்று உறுத்துகிறது. அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், ஒருவேளை எல்லோருக்கும் அனுப்பிவிட்டால் என்ன செய்வது? அப்படி அனுப்பினால் ஒன்றும் செய்வதற்கில்லை. ஊரில் யாரும் செய்யாத தப்பா? நேரில் பார்த்ததுகூட இல்லையே. மனதால்கூட தவறாக நினைக்காத ஒருத்தி இங்கே இருக்க முடியுமா? அப்படி ஒருத்தியோ ஒருவனோ இருந்தால் உண்மையில் அவர்களைத்தான் அதிகம் சந்தேகிக்க வேண்டும். இதுவே இயற்கை. எல்லோரும் இதை உள்ளே உணர்ந்தே இருப்பார்கள். அச்சுவுக்கும் ஒரு நாள் இது புரியும். இப்படி நினைப்பது அவளுக்கு சற்று நிம்மதியளித்தது. என்னவானாலும் சரி இன்னுமொரு நாளில் தெரிந்துவிடும். இப்போது செய்ய வேண்டியதெல்லாம் கையிலிருக்கும் இந்த ஒரு நாளைக் கடப்பது மட்டுமே.

வீட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். வேண்டுமென்றே வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள். உடலைச் சோர்வடையச் செய்து இரவையாவது சற்று தூங்கிக் கடக்கலாம் என்று நினைத்தாள். ஆனால், குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பியிருந்த அவள் அன்றிரவு ஒரு நொடிகூட கண் அசரவில்லை. உடல் சோம்பியும் கண் எரிந்தும்கூட தூங்க இயலவில்லை. பெரிதாக கடவுளை நம்புபவள் கிடையாது. ஆனால், பிராத்தனையாக முணுமுணுத்துக்கொண்டாள். இந்த ஒரு முறை தப்பிவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். 

நிமிடம் நிமிடமாய்க் கடந்தது. திங்கட்கிழமை ஆதலால் அச்சு பள்ளிக்கும் பரத் அலுவலகத்துக்கும் கிளம்ப அதுவே பெரும் ஆசுவாசமாய் இருந்தது. அன்று மதியம் மூன்று பத்தானது. கைகள்  நடுநடுங்க மொபைலை வைத்துக்கொண்டிருந்தவள் வரக்கூடிய சமிக்ஞைக்காக காத்துக்கொண்டிருந்தாள். ஆனால் அது வரவில்லை. மூன்று பத்து, நான்கு பத்து, ஐந்து பத்து என்று ஒவ்வொரு மணி நேரம் கூடக்கூட அவளுக்கு மனம் இலேசாகி மெல்ல மெல்ல உயரப் பறக்க ஆரம்பித்தது. 

திரும்பவும் ஒருமுறை அந்த மின்னஞ்சல் வந்த நேரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ஜி-மெயிலைத் திறந்தாள். அந்த மின்னஞ்சலைக் காணவில்லை. மேலும் கீழுமாய் சென்று பார்த்தாள். பின்னர், மெதுவாக நகர்த்தி ஒவ்வொரு மின்னஞ்சலாகப் பார்த்தாள். அப்படியொன்று இல்லவே இல்லை. தவறுதலாக கைபட்டு அழிந்துவிட்டதோ என்று நினைத்து ‘பின்’னில் தேடினாள். அங்குமில்லை. ‘ஆடம் பீச்’ என்று பெயரிட்டுத் தேடினாள். அப்படி ஒரு பெயரே இல்லை என்று காட்டியது. மறுபடியும் குழம்பினாள். இந்த முறை சந்தோஷக் குழப்பம். இனி எப்போதும் மின்னஞ்சல் வராது என்பது அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது. அன்றிரவு அந்தக் கனவும் வரப்போவதில்லை. இது ஒன்றுமேயில்லை. தான் தப்பித்துவிட்டோம் என்று உள்ளுணர்வு மிகத் தீவிரமாய்ச் சொன்னது.

பூதாகரமாய் நினைத்தது பெரிதாய் ஒன்றுமில்லாமல் போனது குறித்து அவளுக்கு பெரும் நிம்மதி. நன்றாகப் பசிக்க ஆரம்பித்தது. இரண்டு நாட்களாகச் சரியாகச் சாப்பிடவில்லை. சட்டென்று சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டது. படுக்கையிலிருந்து எழுந்தாள். வாய்க்கு ருசியாக ஏதாவது நல்லதாகச் சாப்பிட வேண்டும்போல் இருந்தது. பிரிட்ஜ்ஜிலிருந்த வாழைக்காயை எடுத்து அரிந்து பஜ்ஜியும் மிச்சமிருந்த இருந்த ரவையைக் கிளறி கேசரியும் செய்தாள். அடுப்பில் டீயைக் கொதிக்க வைத்தாள். இரண்டு நாட்களாய்த் தூறிக்கொண்டிருந்த வானம் வெளிறித் தெளிந்திருந்தது. பால்கனியிலிருந்து பார்த்தாள். பச்சை துளிர்த்து தெருவே புதிதாகத் தெரிந்தது. 

காற்றுக்கு கிளையாடப் பறந்து செல்லும் குருவிகள் போல மனத்தை அழுத்திய அத்தனை பிரச்சினைகளும் ஒரே நிமிடத்தில் பறந்தோடின. படுக்கையறையில் சார்ஜ் போடப்பட்டிருந்த மொபைலை எடுத்து இன்பாக்சுக்குள் நுழைந்தாள்.

2 comments

Karthik August 30, 2021 - 1:25 pm

மகிழ்ச்சி.. வாழ்த்துகள்…

Ramsamy September 1, 2021 - 12:17 am

Wow….????

Comments are closed.