Operation Finale என்றொரு படம் நெட்பிளிக்சில் உள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் பார்த்தேன். சுமாரான நாஜி வேட்டைப் படம்தான். யூதர்களை அழித்தொழிக்கும் இறுதித் தீர்வை வடிவமைப்பதில் முதன்மையானதொரு பங்காற்றிய அடால்ஃப் ஐக்மேன் (Adolf Eichmann) அர்ஜெண்டினாவில் குடும்பத்தோடு மறைந்து வாழ்ந்துகொண்டிருந்தார். மொசாடைச் சேர்ந்த யூத உளவாளிகள் அவரைக் கைப்பற்றி இசுரேலுக்குக் கடத்தி வருவதுதான் படம். மூன்று காரணங்களுக்காக அப்படம் மனதில் நின்றது. முதல் காரணம், ஐக்மேன் அவ்வளவு பெரிய அழித்தொழிப்பு குறித்த குற்றவுணர்வு அற்றவராகவே பெரும்பாலும் வருவார். தன்னைச் சிறைப்படுத்தியவரின் இழப்பைச் சுட்டிச் சீண்டியும் வலியைக் கிளறியும் பார்ப்பார். இரண்டாவது, ஐக்மேனாக நடித்திருந்தவர் பென் கிங்க்சிலி. காந்தியின் வடிவாக மனதில் தங்கிவிட்ட கிங்க்சிலியைக் குரூரத்தின் வடிவாகக் காண்பது கடினமாக இருந்தது. (சில பாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு ஏற்படும் சிக்கல் இது. பாரதியாக வந்த சாயாஜி ஷிண்டேவை தமிழில் வேறு எப்பாத்திரத்திலும் காணச் சகிக்கவில்லை) மூன்றாவது, அண்மையில் மறைந்த காந்தியத் தலைவர் க.மு.நடராசனோடு இதுகுறித்து உரையாடியது. அவர் இசுரேலில் தங்கியிருந்த போதுதான் ஐக்மேன் வழக்கு நடந்ததாகவும், உலகத்தின் கவனம் அவ்வழக்கின் மீதே குவிந்திருத்ததாகவும் கூறினார். அவர் நீதிமன்றம் சென்றதாகச் சொன்னதாகவும் எனக்கு நினைவு. இப்படித்தான் நாம் குறிப்பிடும் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுக்கும் நேரடி சாட்சியாக அவர் இருந்தார். எந்தவொரு வரலாற்று நிகழ்வையையும் ஒட்டி, தனிப்பட்ட அனுபவங்கள் எவற்றையேனும் அவரால் பகிர்ந்துகொள்ள முடிந்தது.
நீதிமன்றத்தில் நடந்த ஐக்மேனின் வழக்கு விசாரணையின் பல பகுதிகளின் நேரடி ஒளிப்பதிவும் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. உள்ளத்தை உலுக்கும் தங்கள் அனுபவங்களைப் பலர் சொல்லும்போதும் ஐக்மேனின் முகத்தில் எந்த மாறுதல்களும் வெளிப்படுவதில்லை. அசட்டையாக அமர்ந்திருப்பது போலத் தோன்றும். இறுதியில் தனது வாக்குமூலத்தின் போதும் தலைமை தனக்கு இட்ட பணியை மட்டுமே செவ்வனே செய்ததாகக் கூறுவார். ஒரு நல்ல படைவீரனாக அதைத்தானே செய்யவேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார்.
ஆர்சன் வெல்சின் படமான The Stranger, ஐக்மேன் போன்ற ஒரு பாத்திரத்தை அமெரிக்காவில் தேடிப் பிடிப்பதை அடிப்படையாகக் கொண்ட படம். 1946-ல் எடுக்கப்பட்டது. நன்றாக எடுக்கப்பட்ட விறுவிறுப்பான படம்தான். பொய்யான அடையாளத்தோடு ஓர் ஆசிரியராக இருக்கும் அந்த நாசி, தன்னைத் துப்பறிய வந்த அதிகாரியோடு உணவருந்தியபடி உரையாடும்போது ஜெர்மானியர்களை மனிதநேயமற்றவர்கள் என்று கடுமையாகச் சாடுவது போலப் பேசுவான். அந்த அதிகாரியும் ஐயம் நீங்கி, அந்த ஊரிலிருந்து சென்றுவிட முடிவு செய்வார். உறக்கத்தில் திடீரென்று உரையாடலின் ஒரு பகுதி அவருக்கு நினைவுக்கு வரும். உணவருந்தும் போது நடந்த உரையாடலில் ஜெர்மானியர்கள் மனிதநேயமற்றவர்கள் என்ற கூற்றுக்குக் கார்ல் மார்க்ஸ் விதிவிலக்கல்லவா என்ற வினா எழுந்திருக்கும். அப்போது அவன் மார்க்ஸ் ஜெர்மானியரல்லர், யூதர் என்று கூறியிருப்பான். ஒரு நாசியால்தான் கார்ல் மார்க்சை ஜெர்மானியரல்லர் என்று மறுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து புலனாய்வைத் தொடர்வார்.
கிளாட் லான்சுமேன் (Claude Lanzmann) இயக்கிய The Last of the Unjust இவ்விரண்டையும்விடப் பன்மடங்கு சிறப்பான ஆவணப்படம். பெஞ்சமின் மர்மெல்சுடைன் (Rabbi Benjamin Murmelstein) என்ற யூத ரபையிடம் எடுக்கப்பட்ட நீண்ட நேர்காணலைத் தொகுத்துத்தரும் மூன்றரை மணிநேரப் படம் இது. மர்மெல்சுடீன் ஆஸ்திரியாவின் வியன்னாவைச் சேர்ந்தவர். 1939-40ஐ ஒட்டிய காலத்தில் யூதர்களை வெளிநாடுகளில் குடியேற்றுவதை ஒருங்கிணைப்பதில் யூதத்தரப்பிலிருந்து அடால்ஃப் ஐக்மேனோடு நெருங்கிப் பணியாற்றியிருக்கிறார். தெரசியென்சுடாட் (Theresienstadt) என்ற இடத்தில் புகழ்பெற்ற பல யூதர்களுக்காக அமைக்கப்பட்டச் சிறப்பு முகாமில் இருந்தார். இறுதி ஆண்டில் யூத மூத்தோன் பொறுப்பு இவருக்கு அளிக்கப்பட்டது. இந்த முகாம் யூதர்களுக்கான மாதிரி முகாமாகவும் அவர்கள் அங்கு எல்லாக் கேளிக்கைகளுடனும் தொழில்களுடனும் நிறைவாக இருப்பதாகவும் நாசிக்களால் வெளியுலகத்துக்குக் காட்டப்பட்டது. நாசிக்களோடு சேர்ந்து இம்முகாமை மெர்மெல்சுடைன் நிர்வகித்தார். அவருக்கு முன்னர் யூத மூத்தோராக இருந்த எப்சுடைன், எடெல்சுடைன் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். போர் முடிந்த பிறகு அனைத்து முகாம்களிலிருந்தும் உயிருடன் எஞ்சியிருந்த ஒரே யூத மூத்தோன் மர்மெலசுடைன். அவர் நாசிக்களோடு ஒத்துழைத்தவராகப் பல யூதர்களால் கருதப்பட்டார். செக்கோசுலோவேக்கியாவில் அவர் சிறைப்படுத்தப்பட்டு வழக்கு நடந்தது. குற்றமெதுவும் உறுதிப்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டார். இசுரேல் செல்லாமல் இத்தாலியில் குடியேறினார். இசுரேலில் இவர்மீது முறையான வழக்குகள் நடத்தப்படும் என்ற நம்பிக்கை அவருக்கில்லை.
லான்சுமேன் 1975ல் ஒரு வார காலம் ரோமில் தங்கி இவரோடான நேர்காணலைப் பதிவுசெய்தார். ஏனோ அவரது Shoah என்ற பத்து மணிநேர நீள்படத்தில் இதைச் சேர்க்காமலிருந்துவிட்டார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தைத் தொகுத்துத் தனியே வெளியிட்டார். அச்சமயம் தெரசியென்சுடாட்டுக்கும் அது தொடர்பான பிற இடங்களுக்கும் சென்று, மர்மெல்சுடைனின் நூலிலிருந்து சில பகுதிகளை உரக்கப் படித்து, பிற நிகழ்வுகளையும் விவரித்து இப்படத்தோடு இணைத்தார். வெறிச்சோடிக் கிடக்கும் வதைமுகாம்களும் இரயில் நிலையங்களும் இரும்புமுள் வேலிகளும் சொற்களில் கடத்தமுடியாத பல கதைகளைச் சொல்கின்றன. மர்மெல்சுடைனுக்கு முன்பு யூத மூத்தோனாக இருந்த எப்சுடைனைச் சுட்டுக் கொன்றதற்கான அற்பக் காரணங்களை விவரித்து சுடப்பட்ட இடத்தைக் காண்பிக்கும் போது மனம் கனக்கிறது. அவருக்கும் முன்பாகவே எடெல்சுடைனும் ஆசுவிட்சு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு சுடப்பட்டார்.
லான்சுமேனின் பின்னணி வலுவானது. ழான் பால் சார்தரும் சிமோன் தெ பொவாவும் நடத்திய Les Temps Modernes இதழின் ஆசிரியராக இருந்தார். சிமோனின் இணையராகவும் லான்சுமேன் சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். நேர்காணலின் போது சற்றே தடுமாற்றமான ஜெர்மன் மொழியில் நிதானமாகவும் தீர்க்கமாகவும் பேசுகிறார். தொடர்ந்து புகை பிடித்தபடியே இருக்கிறார். மர்மெல்சுடைனை எந்தத் தயக்கமுமின்றி மனம்திறக்க வைக்கிறார்.
மர்மெல்சுடைனும் சொலல்வல்லன். தன் கதையையும் கருத்துகளையும் அஞ்சாமல் கூறுகிறார். உலகப்போர் முடிந்து முப்பது ஆண்டுகள் கழித்து அவரது குரல் ஒலிப்பதற்கு ஏற்ற அரங்கு அப்போதுதான் கிடைத்திருந்ததை உணர்ந்தவராகத் தெரிகிறார். அவரது மரணத்துக்கு முன் இப்படம் வெளிவந்திருந்தால் அதை அவர் வெகுவாக இரசித்திருக்கக்கூடும். அவர் தன் இனத்தவரைக் காவுகொடுத்த துரோகியா, அவர்களில் பல்லாயிரம் பேரைக் காத்த நாயகனா என்பதை முடிவுசெய்வது எளிதன்று. தெரசியென்சுடாட் முகாமைச் சிறப்பாக நிர்வாகம் செய்வதற்காக யூதர்களிடம் ஜெர்மானியர்களுக்கிணையாகவே கடுமையாக நடந்திருக்கிறார். செஞ்சிலுவை அமைப்பினர் மேற்பார்வையிட வந்தபோது அவர்களிடம் இம்முகாமுக்கு நற்சான்றிதழ் பெற நாசிக்களுடன் ஒத்துழைத்ததோடல்லாமல், அந்த வருகை சிறப்பாக அமைய அவரே முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார். அதுதான் அந்த முகாமையும் அதன் உறுப்பினர்களையும் காப்பதற்கான ஒரே வழியாக இருந்தது என்று சாதிக்கிறார். முகாமிலிருந்து பலர் அகற்றப்பட வேண்டிய அழுத்தம் வரும்போது, அகற்றப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பு யூத மூத்தோராக இருந்த இவருடையதாக இருந்திருக்கிறது.
பொதுவாக இப்பட்டியல் தயாரிப்பில் ஊழல் மலிந்திருந்ததாகவும் தான் மிகக் கறாராகச் செயல்பட்டதாகவும் கூறுகிறார். இப்பட்டியலில் இடம்பெற்றவர்கள் ஆசுவிட்சு முதலான கிழக்கிலிருந்த முகாம்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். வெகுகாலம் தெரசியென்சுடாட் யூதர்களுக்கு ஆசுவிட்சு போன்ற முகாம்களில் நடந்த நச்சுவாயுக் கொலைகளைப் பற்றித் தெரியாது. பிறகு பயாலிசுடாக் முகாமிலிருந்து (Bialystok ghetto) கொண்டுவரப்பட்ட 1200 குழந்தைகள் கிருமி நாசினிகள் தெளிக்க ஓர் அறைக்குள் அழைத்துச்செல்லப்பட்ட போது அச்சமுற்று ‘Gas, Gas” என்று அலறியதால்தான் முதன்முதலாக நச்சுவாயு பற்றிய சந்தேகங்கள் தோன்றியிருக்கின்றன. அக்குழந்தைகளும் பின்னர் ஆசுவிட்சு அனுப்பப்பட்டனர். அவர்களில் சிலர் உடல்நிலை சரியில்லாதிருந்ததால் அவர்களுக்குத் துணையாக இருக்க முன்வந்து காஃப்காவின் தங்கையான ஒட்லா காஃப்கா சென்றிருக்கிறார். மரணத்தை நோக்கிச் செல்கிறோம் என்பதை அறிந்திருக்காத அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்பதைப் பின்னர் அறிந்ததாக மர்மெல்சுடைன் கூறுகிறார்.
மர்மெல்சுடைன் தயாரித்த பட்டியலில் எவருடைய பெயரையாவது நீக்கும்படியான பரிந்துரையுடன் யாராவது வந்தால், அப்பட்டியலில் இருந்தவருக்குப் பதிலாக நீக்கக் கோருபவரின் பெயரைச் சேர்த்துக்கொள்ளவா என்று கேட்பாராம். தன்னுயிரீந்து பிறரைக் காப்பாற்றுமளவு தியாக உணர்வு எவருக்கும் இல்லை என்கிறார்.
‘வதைமுகாம்களில் இறந்தவர்கள் அனைவரும் மகான்கள் என்று முடிவுசெய்வது தவறாக இருக்கும்’ என்று ஐசக் பாசுவிஸ் சிங்கர் கூறியதாக ஒரு மேற்கோளைக் குறிப்பிட்டு, இறந்தவர்கள் அனைவரும் மகான்கள் அல்லர் – தியாகிகள் எனலாம், மகான்கள் அல்லர் என்கிறார் அழுத்தமாக.
மர்மெல்சுடைன் நினைத்திருந்தால் தெரிசுயென்சுடாட் முகாம் வராமலே தப்ப முடிந்திருக்கலாம். அவர் பிற நாட்டுத் தூதுவர்களோடு நெருங்கிப் பழகி பிற யூதர்களுக்கு விசாக்களுக்கான ஏற்பாடுகள் செய்துவந்தவர். எளிதாக வேறு நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்க முடியும் என்கிறார். ஒரு முறை மற்றவர்களை அழைத்துச்சென்று விட்டுவருவதற்காக இங்கிலாந்து சென்றுமிருக்கிறார். ஆனால் அவர்களை அங்கு விட்டவுடன் வியன்னாவுக்கே திரும்பிவிட்டார். அவரது குடும்பத்தினரை நாசிக்கள் வியன்னாவிலேயே தங்கவைத்திருந்ததும் அவர் திரும்பியதற்கு ஒரு காரணம். அவர் லண்டனிலிருந்து திரும்பும்போது போர் மூண்டுவிட்டது. எனவே, விமானத்தில் தன்னந்தனிப் பயணியாக வந்துசேர்ந்தார். தப்பிச்செல்லாததற்கு தனது சாகச உணர்வும் ஒரு காரணம் என்கிறார். தன் உதிரத்திலேயே சாகச உணர்வு கலந்திருப்பதாகக் கூறுகிறார். அந்த சாகச உணர்வால்தான் அந்த நேர்காணலுக்கே ஒப்புக்கொண்டதாகவும் சிரித்துக்கொண்டே சொல்கிறார்.
தான் செய்த வேலையை யாராவது செய்துதானே ஆகவேண்டும், அதைத் தன்னால்தான் சிறப்பாகச் செய்யமுடியும் என்றும் அவர் கருதியிருக்கிறார். தனக்கு அவ்வளவாக அனுபவமில்லாத சுகாதாரத் துறைக்குப் பொறுப்பாக தெரசியென்சுடாட்டில் அவர் நியமிக்கப்பட்ட போதும் இயன்றவரை சிறப்பாகச் செயல்பட்டதாக அவர் கூறுகையில் அவரையும் மீறிக் கொஞ்சம் தற்பெருமை வெளிப்படத்தான் செய்கிறது. தொற்றுநோய் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களைச் சுட்டு வீழ்த்தி நாசிக்கள் அதற்குத் தீர்வு கண்டிருக்கிறார்கள். இவர் பொறுப்பேற்ற போது, சுகாதாரமான சூழல், கிருமி நாசினிகளைப் பயன்படுத்துவது என்று எளிமையான தீர்வுகளைப் போராடிச் செயல்படுத்தியிருக்கிறார். நாசிக்களைச் சமாளிக்கச் சூழ்ச்சியான ஆட்டத்தையும் ஆடியிருக்கிறார். டைஃபஸ் நோய் தாக்கியபோது, டைஃபஸ் என்று பதிவுசெய்தால் அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதால் அவ்வாறு குறிப்பிடாமல் எல்லாருக்கும் வெறும் வயிற்றுப்போக்கு என்று பதிவுசெய்திருக்கிறார்.
ஐக்மேனுக்கும் மெர்மெல்சுடைனுக்குமான உறவும் சிக்கலானதாகவே தெரிகிறது. இசுரேலில் ஐக்மேன் வழக்கு சரியாக நடத்தப்படவில்லை என்கிறார் மெர்மெல்சுடைன். ஐக்மேனுக்குக் கிடைத்த தண்டனை சரியெனினும் அது வலுவான ஆதாரங்களுடன் சரியான காரணங்களுக்காக வழங்கப்படவில்லை என்கிறார். தான் சாட்சி சொல்வதற்கு வர வரும்புவதை வெளிப்படுத்திய போதும், வழக்கு விசாரணையின் போது இசுரேலுக்கு அழைக்கப்பட்டவில்லை என்கிறார். ஐக்மேன் கையில் கடப்பாறையுடன் வியன்னாவில் ஒரு யூத ஆலயத்தை இடிப்பத்தையும் பிறரை வழிநடத்தியதையும் தான் பார்த்திருப்பதாகவும், அந்த நிகழ்வு குறித்து வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை என்றும் கூறுகிறார். ஐக்மேனோடு நெருக்கமாக இருந்ததாலேயே யூதர்களின் ஐயத்துக்கு மெர்மெல்சுடைன் ஆளாகியிருக்கிறார். ஆனால் அவர்கள் நினைத்தது போல ஐக்மேனிடம் எந்தச் சலுகைகளும் பெறும் ஆற்றல் தனக்கு இருந்திருக்கவில்லை என்று தெளிவுபடுத்த முனைகிறார்.
எனினும், ‘ஐக்மேன் தன்முன் அமரவைத்த ஒரே யூதர் நானாகத்தான் இருப்பேன்’ என்றும் சொல்கிறார். ஐக்மேன் அமர்ந்திருந்து இவரை நோக்கி நீண்டநேரம் தலையுயர்த்திப் பேச வேண்டியிருந்ததால் எதிரில் நாற்காலி கொண்டுவந்து போடும்படி ஆணையிட்டாராம். அதைப் பெருமைக்காகவன்றி, தகவலுக்காகச் சொல்வதாகக் கூறினாலும் அச்சொற்களில் அருவருப்பானதொரு பெருமிதம் பொதிந்திருப்பதாகத் தோன்றி கடும் ஒவ்வாமை ஏற்படவே செய்கிறது. அப்போது நாற்காலியைக் கொண்டுவருமாறு ஐக்மேனால் ஆணையிடப்பட்ட கார்ல் ராம் என்பவர்தான் மர்மெல்சுடைன் யூத மூத்தோரான போது, தெரிசுயென்சுடாட் முகாமின் எஸ்.எஸ்.கமாண்டெண்டாக இருந்தவர். கார்ல் ராமுக்கும் தனக்குமான உறவை அந்த ஒரு நிகழ்ச்சியின் நிழலே முடிவுசெய்ததாகவும், கார்ல் ராமைப் பொறுத்தவரை தான் நாற்காலி எடுத்துவந்து அமர வைத்த யூதர் என்ற நினைவிலிருந்து விடுபடவே இயலவில்லை என்றும் கூறுகிறார்.
போருக்குப் பிறகு கார்ல் ராம் மரண தண்டனை பெற்றார். படத்தில் இடம்பெறாத இன்னொரு செய்தியும் கவனத்தை ஈர்ப்பது. கார்ல் ராமுக்கு முன்பு கமாண்டெண்டாக இருந்த ஆண்டன் பர்கர் (Anton Burger) இருமுறை பிடிபட்டபோதும் தப்பித் தலைமறைவாக வாழ்ந்து 1991ல் இயற்கை மரணமெய்தினார். பர்கர் இறந்த சில ஆண்டுகளுக்குப் பிறகே அவரது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. வில்லெம் பவெர் (Wilhelm Bauer) என்ற யூதரின் பெயரில் தன் மனைவியுடன் எஸ்ஸென் நகரில் வாழ்ந்திருந்தார். வில்லெம் பவெர் நாசிக்களோடு ஒத்துழைத்த அரை-யூதர். தெரிசுயென்சுடாட்டில் செஞ்சிலுவைச் சங்க வருகையையொட்டிய பரப்புரைப் படம் எடுக்கப்பட்ட போது அதற்கு உதவ அங்கு அனுப்பட்டிருக்கிறார். அவர் கண்ணாடி அணிந்திருந்ததை விரும்பாத பர்கர் (யூதர்களை அறிவாளிகளாகவும் பலவீனமானவர்களாகவும் அது காட்டியதால்), அவரைச் சுட்டுக்கொன்றதாகச் சொல்லப்படுகிறது. பவெரின் அடையாளத்தையே பர்கர் பின்னர் களவாடிக்கொண்டார். வரலாற்றின் போக்கு விந்தையானதுதான். அறம் எல்லாருக்கும் கூற்றாவதில்லை. சற்றே ஏமாந்திருந்தால் ஐக்மேனும் அர்ஜென்டினாவில் முதுமையைக் கழித்து இயற்கை எய்தியிருக்கக்கூடும்.
நேர்காணலின் போது மர்மெல்சுடைனின் குரலிலும் உடல்மொழியிலும் குற்றவுணர்வே தென்படுவதில்லை. தான் இட்ட பட்டியல்களில் இருந்த பல்லாயிரம் மக்கள் தன்னெதிரே மறைந்ததைக் கண்ட சுவடுகள் அவரது கண்களிலும் சொற்களிலும் கசிவதில்லை. அந்த வகையில் திரையில் ஐக்மேனின் யூதப் பிம்பமாகவே எனக்கு அவர் தென்படுகிறார். மிகச் சிறந்த நிர்வாகம் செய்ததன் மூலமாகவும் வெளி உலகத்துக்கு ஒரு மாதிரி முகாமாகக் காண்பிப்பதைத் தொடர்வதன் மூலமாகவுமே தெரசியென்சுடாட் முகாம் ஒரு கொலை முகாமாக மாற்றப்படாமல் தடுக்க முடியும் என்று அவர் நம்பியதாகவும், தடுக்க முடிந்ததாக இன்னமும் நம்புவதாகவும் கூறுகிறார். ஒருவேளை அறம் பிறழ்ந்ததான உணர்வு திரைக்குப் பின்னால் அவரை உறுத்தியிருக்கவும்கூடும். இப்படத்துக்குத் தலைப்பாக மாறிய The Last of the Unjust என்ற சொற்றொரடரை (The Last of the Just என்ற பிரெஞ்சு நாவலையொட்டி) மர்மெல்சுடைனே லான்சுமேனுக்கு எடுத்துத்தருகிறார்.
காந்தி அறிவுறித்தியபடி, நாசிக்களோடு ஒத்துழையாமை எந்த அளவுக்குப் பலன் தந்திருக்கும் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால் மர்மெல்சுடைன் முதலான யூதர்களின் ஒத்துழைப்பும் பலன் தரவில்லை என்பதைக் கண்கூடாகக் கண்டுவிட்டோம்.
லான்சுமேன் ஐக்மேனை நேர்காணல் செய்திருந்தால் அவரிடம் மிகக் கடுமையான கேள்விகளைக் கேட்டிருக்கக்கூடும். ஐக்மேனை நேர்காணல் செய்யவே மறுத்திருக்கவும் கூடும். ஹிட்லரைப் புரிந்துகொண்டு விளக்குவதே தகாதென்று லான்சுமேன் கருதியிருக்கிறார். ஆனால் மர்மெல்சுடைனின் பங்கினை இந்த நேர்காணல்களில் முழுமையாக வெளிப்படுத்துகின்ற போதும், அவரிடம் மென்மையாக நடந்துகொள்கிறார். இறுதிக்காட்சியில் ஒரு சாலையில் இருவரும் நடந்துவருகின்றனர். ஒளிப்படக் கருவியை நெருங்கியதும் மர்மெல்சுடைனின் தோள் மீது கைபோட்டு லான்சுமேன் அவரைத் திருப்புகிறார். இருவரும் பேசியபடியே நடந்து செல்கின்றனர். அவர்களது குரல்கள் திரையிலிருந்து மெல்லக் கரைகின்றன. ஒலிக்காமலே காற்றில் அழிந்துபோன பல குரல்களோடு கலந்துபோகின்றன.