ஆசை கவிதைகள்

by ஆசை
1 comment

இன்மையைச் சுண்டக் காய்ச்சுதல்

பேரண்டத்தின் பிறப்பு பற்றி
ஒரு புத்தகம் படிக்கிறாய்

அதற்கு முன் இடம் இல்லை
அதற்கு முன் காலம் இல்லை
அதற்கு முன் பிறப்பு இல்லை
அதற்கு முன் இறப்பு இல்லை
அதற்கு முன் மேல் இல்லை
அதற்கு முன் கீழ் இல்லை
அதற்கு முன்…
எவ்வளவு கவித்துவம்
எவ்வளவு ஆழம்

இன்மை
ஒரு இருத்தலைப் பிறப்பித்தது
என்ற வரியைத் தாண்ட முடியாமல்
வியந்துபோய்
அப்படியே நிற்கிறாய்

இன்மையைத் தியானிக்கிறாய்
இன்மையை ஒரு அடுப்பில் வைத்துச் சூடு பண்ணுகிறாய்
எவ்வளவு கொதிக்க வைத்தும்
உன்னால் இன்மையைச் சலனப்படுத்த முடியவில்லை
அதிலிருந்து இருத்தலைப் பிறப்பிக்க முடியவில்லை

அது உனக்கு
யாரோ தந்த இன்மை
அதனால்தான் அப்படி

உன் இன்மை எங்கேயோ
இருக்கிறது
அதைக் கண்டுபிடி

முடிந்தால்
பேரண்டம் தோன்றும்
கணத்தை
வேடிக்கைப் பார்த்துவிட்டு வா

இல்லையெனில்
பேரண்டம் இன்னும்
பிறப்பெடுக்கவே இல்லை
என்று எழுது.

*

புவிக்கோளில் காதலிக்காகக் காத்திருத்தல்

சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்
சங்கீத வகுப்புக்குப்
போயிருந்த காதலியை
எதிர்நோக்கி
இன்னும் அவளிடம் தன் காதலைச் சொல்லாத
20 வயது அவன்
காத்திருந்த தெருமுனை அது

இப்போது
40 வயது அவன்
அதே இடத்தைப் பார்க்க வந்திருக்கிறான்

சரியாக அதே நேரத்தில்
20 ஒளியாண்டுகள் தொலைவில்
மற்றுமொரு கிரகத்திலிருந்து
அதே இடத்தைத்
தொலைநோக்கியில் பார்த்துக்கொண்டிருக்கிறான்
வேறொருவன்

‘புவிக்கோளில் காதலிக்காகக் காத்திருத்தல்’
என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு
மேற்கொள்ளும் வேற்றுக்கிரகவாசி அவன்

வேற்றுக்கிரகவாசிக்குத் தெரிவது
காதலிக்காகக் காத்திருக்கும்
20 வயது அவன்

(அவன் பார்ப்பது
20 ஆண்டுகளுக்கு முன்பு
புவியிலிருந்து புறப்பட்ட ஒளி)

தன்னை வந்தடைந்த காட்சியைப்
புவிக்குத் திருப்பி அனுப்பிவிடுகிறான்
அந்த வேற்றுக்கிரகவாசி

20 ஆண்டுகள் பயணித்து
புவியில் 60 வயது அவனை
வந்தடைகிறது
அந்தக் காட்சி

60 வயது அவன்
காலமாய் மாறிய இடத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தான்

40 வயது அவன்
காலத்தைப் பிரிந்த இடத்தை
பார்த்துக்கொண்டிருந்தான்

20 வயது அவன்
இன்னும் காலமாகவும் இடமாகவும் மாறாத
தூய காதலாய்
நின்றுகொண்டிருந்தான்.

*

வெயிலுகந்த அம்மன்

‘மூணு கிலோ ருமானி மாம்பழம்
நூறு ரூபாய்’
‘மூணு கிலோ ருமானி மாம்பழம்
நூறு ரூபாய்’

சிறு ஒலிபெருக்கியில்
ஒலிக்க விட்டபடி
கைபேசியில்
ஆழ்ந்திருக்கிறான்
சாலையோரம்
பழம் விற்கும் அந்த இளைஞன்

அவன் குரல்வளைக்கு
விடுதலை கிடைத்ததும்
ஒரு புரட்சியே

தரையில் உரச் சாக்கு
அதன் மேல்
அழகாக அடுக்கப்பட்ட பழங்கள்
வெயிலின் பச்சோந்திகள்

நிழலுக்கு அவன் நட்ட குடை
காலையிலிருந்து மாலை வரை
வெயிலின் திசை நோக்கி நகரும்

ருமானியோ
வெயிலுக்குத் தன்னை
விற்றுக்கொண்டிருந்தது.

*

பாம்பின் பாதை

என் பாதையும்
பாம்பின் பாதையும்
சந்தித்துக்கொண்டபோது
ஒன்றையொன்று
நலம் விசாரித்துக்கொண்டன

இங்கேயே இருங்கள்
ஒரு அவசர வேலை
என்று போய்விட்டுத்
திரும்பி வந்து பார்த்தபோது
தன் வெள்ளைநிற அடிவயிற்றைக்
காட்டிக்கொண்டு
மல்லாக்கக் கிடந்தபடி
எதையோ யோசித்துக்கொண்டிருந்தது
பாம்பு

பாம்பின் பாதை
அதன் உடல்தான்
என்ற எளிய உண்மையை
அதன் அடிவயிற்றிலிருந்து
வாசித்துக்கொண்டிருந்தது
வானம்.

*

வெறுமை மீது இரு சக்கரத் தடம்

ஏற்கெனவே செத்துக் கிடந்ததுதான்
என்பதால்
கவலையில்லை

கடைசி நொடியில்
கவனித்ததால்
விலகிச் செல்ல முடியவில்லை

அதன் வாழ்விலும் சரி
மரணத்திலும் சரி
எனக்கு
எந்தத் தொடர்பும் இல்லை
என்பதில் சிறு நிம்மதி

ஆயினும்
அதன் மரணத்துக்குப் பிந்தைய
வெறுமையில்
எப்போதும் என் வண்டியின்
சக்கரத் தடம் பதிந்திருக்கும்
என்ற நினைப்பு
இதோ என் முன்னே
ஊர்ந்து ஊர்ந்து செல்கிறதே
(நகுலனுக்கு)

*

ஒப்பந்தம்

1
ஒருமுறை கழுவுதொட்டி வழியாக
செவிட்டுப்பாம்பு வந்திருக்கிறது

சிறு உணவுத் துணுக்கு கீழே விழுந்தாலும்
வாசனையின் கோட்டினை வரைந்தபடி
வந்துவிடும் எறும்புக் கூட்டம்

கரப்பான் பூச்சி வெளிப்படத்
தனிக் காலம் உண்டு போல

முதல் தள வீட்டின் பால்கனிக்குத்
தவளைக் குஞ்சுகள் வந்ததெப்படி?

மழை நேர இரவில் வாசல் வரை வந்த பாம்பு
ஆளைப் பார்த்ததும் திரும்பிப் போயிருக்கிறது

ஒரு கரப்பான் பூச்சி என்ன செய்துவிடும்?
ஆனாலும்
வீடும் உயிரும்
பறிபோய்விடுமோ
என்பது போன்ற
அச்சம் உங்களுக்கு எப்போதும்

வீட்டை உமதாக்க
ஒப்பந்தம் செய்துகொண்ட
ஆவணம் உண்டு

எனினும் ஒரு தவளைக் குஞ்சு
வீட்டுக்குள் வரும்போதெல்லாம்
பறிபோய்விடுகிறது வீடு

அடிக்கடி
உங்கள் வீட்டை
உங்களுக்கு இல்லாமல் ஆக்குகிறது
தொல் நினைவுகளுடன்
நீங்கள் போடத் தவறிய
ஓர் ஒப்பந்தம்

2
தொல் நினைவுகளின்
பாதையில் குடியிருக்கும்
தொல் அச்சத்தின் பிரதிநிதி நீங்கள்

இடம் தன் நினைவின் பிரதிநிதியாய்
ஏதோ ஒன்றை அனுப்புகிறது
அவ்வப்போது

அப்போதெல்லாம்
வெளிவந்துவிடுகிறான்
உங்களுக்குள் இருக்கும் குகை மனிதன்

அறிந்துகொள்ளுங்கள்
நீங்கள் அஞ்சுவதெல்லாம்
தொல் நினைவின் பிரதிநிதிகளைக் கண்டல்ல
அவை உங்களுக்குள்ளிருந்து
எழுப்பிவிடும்
குகை மனிதனைக் கண்டுதான்.

1 comment

Thayumanavan Mathikumar August 31, 2021 - 5:04 am

சிறப்பு..எளிமையின் ஆழம்

Comments are closed.